Saturday, December 20, 2008

ஆபத்துக் காலத்தில் - பாகம் 3

முந்தைய இரண்டு பதிவுகளையும் படிக்காதவர்களுக்கு ,


ஆபத்துக் காலத்தில் !!!!



ஆபத்துக் காலத்தில் - பாகம் 2


தனி மனித பாதுகாப்பில் அரசாங்கத்துக்கு பங்கில்லையா என நீங்கள் கேள்வி கேட்பது புரிகிறது.

அரசாங்கம் எப்படி எல்லாம் பங்காற்ற வேண்டும் என நினைக்கவோ எழுதவோ ஆரம்பித்தால் அது ஒரு சிந்துபாத் கதையை போல் முடிவில்லா பதிவாகி விடும்.

எனினும் ஒருசிலவற்றை குறிப்பிட்டே ஆக வேண்டும்.

1. கோவில்கள், மசூதிகள், சர்ச்கள் மற்றும் அனைத்து வழிபாட்டு தலங்களும் சரியாக தணிக்கை செய்யப்படவேண்டும். மனித நடமாட்டத்துக்கு இடையூறாக இருக்கும், அல்லது இப்படிச் சொல்லலாம், நெருக்கடி ஏற்படுத்துமாறு அடையாளம் காணப்படும் சிலைகள், கட்டுமானங்கள் ஆகியவற்றை முடிந்தவரை அப்புறப்படுத்தி, மனித நடமாட்டத்திற்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.

2. அக்னி வழிபாடு என்பது ந்மது வழிபாட்டு முறைகளில் இன்றியமையாத ஒன்றாக கலந்து விட்டதாகையால், இந்த வழிபாட்டு தலங்களில் தீயணைப்பு கருவிகள் வைக்கப்பட வேண்டும்.

3. கோவில் ஊழியர்களில் ஒரு சிலருக்கேனும் தீயணைப்பு முறைகளைப் பற்றிய பயிற்சியும், தீயணைப்பு கருவிகளை உபயோகிக்கும் முறை பற்றிய விழிப்புணர்வும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

4. பேரிடர் சமயங்களில் துரிதமாக செயல்பட்டு அழிவுகளில் இருந்து மக்களை தடுக்கும் முறைகள் (Disaster Management) பற்றிய பயிற்சிகள் இவர்களுக்கு அளிக்கப்படுவது அவசிய்ம்.

(உதாரணத்துக்கு சென்னை வடபழனி முருகன் கோவிலை எடுத்துக் கொள்ளுங்கள், எனக்குத்தெரிந்து நல்ல முகூர்ர்த்த நாட்களில், குறைந்தது ஒரு நூறு திருமணங்களாவது அங்கு நடை பெறுகின்றன. ஒரு திருமணத்திற்கு 10 பேர் வருகிறார்கள் என்று எடுத்துக் கொண்டாலும் அங்கு ஆயிரம் பேர் குழுமியிருப்பார்கள். ஒரு சிறு பொறி போதும், அங்கு அனைவரையும் பொலி போட்டு விடும்.)

5. மக்கள் குழுமும் இடங்களில் பாதையோரக் கடைகள், அல்லது வாகன நெரிசல்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்வது இன்றியமையாதது. குறைந்த பட்சம், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள் ஆகியவை எளிதில் நுழைந்து வெளியேறும் வண்ணம் வழித்தடங்கள் அமைக்கப்பட வேண்டியது அவசியம்.

6. கல்யாண மண்டபங்கள், மற்றும் வணிக வளாகங்களில் பேரிடர் பாதுகாப்பு முறைகள் அமல் படுத்தப்படவேண்டும். ஊழியர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினர் இந்தத் துறையில் பயிற்சி பெற்றவர்களாய் இருத்தல் கட்டாயமாக்கப்பட வேண்டும். அவசர கால வழிகளைப்பற்றிய விரிவான பெயர்பலகைகள், வரைபடங்கள் ஆகியவை அதிக இடங்களில் பொதுமக்கள் பார்வைக்கென ஒட்டி வைக்கப்பட வேண்டும். (எத்தனை கல்யாண மண்டபங்களில் Fire Hydrant என்ற தண்ணீர் குழாய்கள் இருக்கின்றனவோ தெரியவில்லை).

7. மின்சார சாதனங்கள் குறுகிய கால இடைவெளிகளில் தணிக்கைக்குட்படுத்தப்படவேண்டும்.

8. வாகன நிறுத்தங்கள் முறையாக திட்டமிடப்பட்டு, பராமரிக்கப்பட்டு, மக்களின் நடமாட்டத்திற்கு இடையூறாக இல்லாத வகையில் நிர்வகிக்கப்படவேண்டும்.

9. பேரிடர் பாதுகாப்பு வழிமுறைகளைப் பற்றிய விழிப்புணர்வு அரசின் மக்கள் தொடர்புத் துறையினரால் திட்டமிடப்பட்டு, பொருள்காட்சிகள் போன்றவற்றில் செயல் முறை விளக்கங்களுடன் செய்து காண்பிக்கப்பட வேண்டும். மக்கள் தொடர்புத்துறை ஊடகங்கள் வெறும் வியாபார நோக்குடன் விளம்பரங்களை மாத்திரமே ஒளிபரப்பி கல்லாவை நிரப்புவதை விட்டு, மக்களுக்கு உபயோகமான பேரிடர் பாதுகாப்பு விழிப்புணர்வு படங்களை ஒரு சில விநாடிகளேனும் ஒளி பரப்பலாம்.

10. அச்சு ஊடகங்கள் நடிகைகளின் உடல் அளவுக்கும், சினிமாக்காரர்கள் மற்றும் அரசியல் வாதிகளின் அந்தரங்கங்களுக்கும் தரும் முக்கியத்துவத்தில் ஒரு சதவீதத்தையாவது பேரிடர் விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்கு கொடுக்கலாம். இதை நாட்டை ஆளும் மாண்பு மிகுக்கள் சட்டம் இயற்றி கட்டாயமாக்கலாம்.

11. பள்ளிக் குழந்தைகளிடத்தில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மிகவும் தாக்கம் நிறைந்ததாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். என் ஆசிரியர் என் பள்ளிக் காலத்தில் நீரில் மூழ்கியவரை காப்பாற்றும் முறை மற்றும் முதலுதவி பற்றி சொல்லித்தந்தது இன்றுவரை என் நினைவில் உள்ளது. மாண்புமிகுக்கள் இதை கட்டாய பாடமாக்கலாம்.

போதும் அதிகம் சொல்லிவிட்டேன் என நினைக்கிறேன். ஆட்டோ வராது என்ற தைரியமுள்ளவர்கள் இன்னும் அதிக ஐடியாக்களை பின்னூட்டங்களில் அள்ளித் தெளியுங்கள்.

2 comments:

கபீஷ் said...

நல்லா எழுதியிருக்கீங்க! ஆட்டோ பயம் இல்ல, ஆனா இப்போ எதுவும் உருப்படியா தோணலை, வழக்கம்போல.

தராசு said...

வந்ததுக்கு நன்றி கபீஷ்,

தோணறப்போ கண்டிப்பா எழுதுங்க.