Saturday, December 13, 2008

ஆபத்துக் காலத்தில் - பாகம் 2

அதிக மக்கள் கூடும் இடங்களில் ஏற்படும் நெருக்கடிச் சாவுகளை தவிர்க்க நிறுவன உரிமையாளர்கள் என்ன செய்ய வேண்டுமென எனது முந்தைய பதிவில் எழுதியிருந்தேன்.

தொடர்ச்சியாக,

பொதுமக்கள் செய்ய வேண்டியது.

அதிக மக்கள் கூடும் இடங்களில் சென்று நிற்கவோ, அமரவோ அல்லது காத்திருக்கவோ நேரிடும் பொழுது, நடை பாதைகள், படிக்கட்டுகள் ஆகியவைகளில் அமராமல், அமர்வதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் மாத்திரமே அமருங்கள். பாதைகள் எல்லாம் வெறும் நடப்பதற்கு மட்டும் பயன்படட்டும்.

அவசியப்பட்டாலொழிய அந்த கட்டடத்தைப் பற்றியோ, அல்லது பொது மக்கள் அமர்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும் இருக்கை அமைப்புகள் குறித்த உங்களது அபிப்ராயங்களை அருகில் அமர்ந்திருக்கும் அறிமுகமில்லா நபருடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். நீங்கள் ஒன்று சொல்லப்போய், அதை அவர் வேறு விதமாக புரிந்து கொண்டு மற்றவரிடம் சொல்ல, கண்ணிமைக்கும் நேரத்துக்குள் ஒரு பயம் கிளப்பும் வதந்தி அந்த இடத்தில் உருவாகி விடும். ரசிக்கும் படியாக உள்ளவற்றையும் சரி, முகம் சுளிக்க வைப்பவற்றையும் சரி உங்களுக்குள்ளேயே வைத்திருத்தல் உத்தமம்.

நிகழ்ச்சி நடக்கும் கட்டடத்துக்கு உள்ளே நுழைந்த சிறிது நேரத்தில், வெறும் மின் விசிறியின் கீழிருக்கும் இருக்கையை தேடுவதோடு நிறுத்தி விடாமல், ஆபத்துக்கால வழி எங்கிருக்கிறது, நாம் அதற்கு எவ்வளவு தூரத்தில் அமர்ந்திருக்கிறோம், இடது புறமா, அல்லது வலது புறமா என பார்த்து வைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தினருக்கும் இதை ஒரு முக்கிய கடமையாகவே உணர்த்தி விடுங்கள்.
நிகழ்ச்சி நடக்கும் நேரம் இரவு நேரமானால், கையில் கண்டிப்பாக எப்பொழுதும் ஒரு டார்ச்சு (இதுக்கு தமிழ் வார்த்தை சொல்லுங்களேன்) எடுத்து செல்லுங்கள். திடீரென்று மின்விளக்குகள் அணைந்தால் மிகவும் உதவியாயிருக்கும்.

இப்பொழுது எல்லா கூடுமிடங்களிலும் பிளாஸ்டிக் வகை நாற்காலிகளையே பயன் படுத்துகிறார்கள். தயவு செய்து எந்த ஒரு நாற்காலி வரிசையையும் மாற்றி அமைக்காதீர்கள். ஒரு சிலர் குடும்பமாக அமர்ந்து நிகழ்ச்சியை ரசிக்க வேண்டுமென்பதற்காக, நாற்காலிகளை இங்குமங்குமாக நகர்த்தி ஒரு ஒழுங்கில்லா வரிசையை உருவாக்கி விடுவார்கள். அவசர காலத்தில் இதுவே "சக்ர வியூகம்" ஆகி விடும்.
ஏதாவது விபத்து ஏற்பட்டால், முதலாவது நீங்கள் இருக்கும் இடம் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளது என்பதை துரிதமாக முடிவு செய்யுங்கள். ஒரு வேளை அதிக ஆபத்தில்லாமல் இருக்கும் பட்சத்தில், அடுத்தவர்கள் வெளியேற வழி விடுங்கள். தீயில் சிக்கி இறந்தவர்களை விட, ஒருவர் மேது ஒருவர் இடித்துக்கொண்டு வெளியேற முயற்சித்து, இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களே அதிகம். ஆகவே முடியும் என்கிற பட்சத்தில் சற்று பொறுமை காப்பது நலம்.
நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கவனத்திற்கு :
இந்த வருட தீபாவளியை தென் ஆப்பிரிக்காவில் தான் கழித்தேன். இங்குள்ள இந்தியர்கள் இணைந்து தீபாவளி நிகழ்ச்சி நடத்தினார்கள். (சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு).என்னை மிகவும் கவர்ந்தது மாலையில் நடந்த வாண வேடிக்கையும் கலை நிகச்சியும் தான். கடைசி இரண்டு புகைப்படங்களைப் பாருங்கள். மாலையில் நடந்த கலைநிகழ்ச்சியின்போது மழைவரலாம் என்ற எதிர்பார்ப்பில் ஒரு விளையாட்டு மைதானத்தில் கூடாரம் அமைத்திருந்தார்கள். கூடாரத்தினுள் ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக ஒரு 600 பேர் கூடியிருப்பார்கள். நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு முன், கூடாரம் அமைத்த ஒப்பந்தக்காரரின் பிரதிநிதி வந்து நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசிவிட்டு, கூடாரத்தின் அமைப்பைப் பற்றியும், அதில் அமைக்கப்பட்டிருக்கும் அவசரகால வழிகளைப்பற்றியும், தீயணைப்பு கருவிகள் எங்கு வைக்கப்பட்டுள்ளது, நெருக்கடி நேரத்தில் எந்த வழியாக வெளியேற வேண்டும் என ஒரு தெளிவான உரை நிகழ்த்திய பின்பே இறைவணக்கம் பாடினார்கள்.
மேலும் மனதை ஈர்த்த ஒன்று யாதெனில், கடைசி புகைப்படத்தை பாருங்கள். "Disastaer Management" என்பதில் பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் அநேகம் பேரை அங்கு காண முடிந்தது. இது வெறும் ஒரு 600 பேர் கூடிய ஒரு சிறு கூட்டம்தான். ஆனால் நம் தலைவர்கள் மாநாடுகள் நடத்துகிறார்களே, ஆயிரமாயிரமாய் தொண்டர்களை அழைத்து, அவர்கள் எவ்வளவு முன் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டுமென நினைத்துப்பாருங்கள்.
நிகழ்ச்சி நடத்துபவர்கள், நிகழ்ச்சியின் எந்த ஒரு நேரத்திலும் நடை பாதைகள் ஆக்கிரமிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நடை பாதைகள் அகலமாயும் வாசல்களுக்கு நேராயும் அமைக்கப்பட வேண்டும்.
வந்திருக்கும் அனைவருக்கும் தாங்கள் அமர்ந்திருக்கும் இடத்டிலிருக்கும் வழிகள் மற்றும் வசதிகள் பற்றிய ஒரு சிறிய அறிமுகமாவது நிகழ்ச்சியின் ஆரம்பத்திலும், தாமத தங்கசாமிகளுக்காக நிகழ்ச்சியின் இடையிலும் சொல்லப்பட வேண்டும்.
வாகன நிறுத்தங்களுக்காக கட்டணம் மட்டும் வசூலித்தால் போதாது, அங்கு நிறுத்துவதற்கான வசதியும் செய்து தர வேண்டியது நிர்வாகிகளின் பொறுப்பாகும். (ஒவ்வொரு முறையும் சென்னை புத்தகக்கண்காட்சிக்கு சென்று அங்கு கட்டணம் வசூலிப்பவரிடம் ஏளனப் பேச்சு கேட்பதென்பது எனது வாடிக்கை. பிச்சைக்காரனை விட கேவலமாகத்தான் நம்மை நடத்துவார்கள். ஒவ்வொரு முறையும் காரில் ஏதாவது ஒன்று நிகழும். பம்பரோ, கண்ணாடியோ சேதமாவது உறுதி). St.George பள்ளி மைதானம் பெரிய பரப்பளவு கொண்டது, அதில் முறையான வசதிகள் மாத்திரம் செய்யப்பட்டால் அதிக வாகனங்களை நிறுத்த முடியும்.
எல்லாவற்றிற்கும் மேலாக பேரிடர் சமயங்களில் முன்னின்று வழி நடத்த விசேஷ பயிற்ச்சி பெற்ற பணியாளர்கள் நியமிக்கப்படுவது அவசியம்.
இன்னும் வரும் >>>>>>>>>>>>


6 comments:

கபீஷ் said...

Good one like the previous part!!!!!

தராசு said...

நன்றி கபீஷ்,

வருகைக்கு நன்றி.

DHANS said...

நல்ல பதிவு...

வாழ்த்துக்கள்

தராசு said...

வாங்க தன்ஸ்,

வருகைக்கு நன்றி

அதிரை ஜமால் said...

\\ரசிக்கும் படியாக உள்ளவற்றையும் சரி, \\

பல நேரங்களில் ஆம்

\\முகம் சுளிக்க வைப்பவற்றையும் சரி உங்களுக்குள்ளேயே வைத்திருத்தல் உத்தமம்.\\

எல்லா நேரங்களிலும் ஆம்

புதுகை.அப்துல்லா said...

இடர் மேலாண்மையில் நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் எவ்வளவோ உள்ளது. கும்பகோணம் பள்ளி நிகழ்ச்சிக்குப் பின்பு அத்தனை பள்ளிகளும் ஆய்வு செய்யப்பட்டது. பல பள்ளிகளுக்கு நோட்டீஸ் எல்லாம் குடுத்தாங்க. அதன் பின்னும் அந்தப் பள்ளிகள் அப்படியேதான் உள்ளன. நமக்கு நாமே உணர்ந்து அக்கறை ஆனால்தான்....நீங்கள் சொல்வது போல.