Wednesday, May 20, 2009

உன் சுவடுகள் அனைத்தும் சரித்திரம் தான்.

இந்த வாரம் ஜுகல்பந்தி எழுதவில்லை. மற்ற பதிவுகளையும் அதிகம் படிக்க முடியவில்லை.

1921 ம் ஆண்டு இவ்வுலகில் தோன்றிய ஒரு மனிதன், கடந்த மே மாதம் 14 ம் தேதி கடைசியாக சுவாசித்தான். விவசாயி, முன்னாள் ராணுவ வீரன், போதகன் என்ற பல்வேறு முகவரிகளில் இவ்வுலகம் இவனை வாசித்து வந்தது. அவனது செயல்களை, எண்ணங்களை, பேச்சுகளை ஒரு கூட்டம் நேசித்து வந்தது.

என் வாழ்விலும் இவன் அனுதினமும் குறுக்கிட்டான். அருகிலிருந்தான், அடித்து போதித்தான், அரவணைத்து முத்தமிட்டான், ஆனந்தத்தில் சிரித்தான், அன்பாய் வருடி விட்டான், தடைகளை தாவி வியக்க வைத்தான். இன்பத்தில் ஆர்ப்பரிக்கவில்லை இவன். துன்பத்தில் துவண்டு விடவில்லை இவன்.

எனக்கு எல்லாவற்றிலும் எல்லாமுமாய் இருந்த என்னைப் பெற்ற என் தகப்பன் 14ம் தேதி மாலை 5 மணியளவில், என் கரங்களில் அவனை நான் ஏந்தியிருக்க புன்னகையுடன் விடைபெற்றான்.

சென்னையிலிருந்து கொங்குநாட்டிற்கு அவனை சுமந்து சென்றேன். "எனக்கு மண்படுக்கை நான் பிறந்த மண்ணில் இருக்கட்டுமென" அவன் எனக்கு ஆணையிட்டதால், கடந்த‌ 15 ம் தேதி, அவன் தன் வாழ்வில் சேற்றில் கால்வைத்து முதன்முதலில் ஏர்பிடித்த அதே மண்ணில் உறங்க வைத்தோம்.

அன்பனே, என் அப்பனே,

உன்னை கிறிஸ்தவ போதகனென்று உலகம் சொல்லியது.
ஆனால் எனக்கு வாழ்க்கையை போதித்தவன் நீ.

மண் உன் சதையைத் தின்னலாம்.
ஆனால் உன் சுவடுகள் அனைத்தும் சரித்திரம் தான்.

Wednesday, May 6, 2009

ஜுகல்பந்தி - 6/5/09

நகரம்



கவ்ஹாத்தி - (GAWAHATI).



பிரம்மபுத்திரா நதிக்கரையோரம் அமர்ந்திருக்கும் ஒரு அழகான நிலப்பரப்பு. வடகிழக்கு இந்தியாவுக்கு முகவரி தரும் ஒரு நகரம். அஸ்ஸாமிய மொழியில் "க்குவா" (GUWA) என்றால் பாக்கு என்றும், "ஹாட்டி" என்றால் சந்தை என்றும் பொருள். பாக்குச்சந்தையின் நகரமாக திகழ்ந்ததால் இதை "க்குவாஹாட்டி" என அழைக்க ஆரம்பித்து பின்னர் பெயர் மருவி இன்று கவ்ஹாத்தி என அழைக்கப்படுகிறது. இதற்குக் சாட்சியம் கூறும் வண்ணம் நகரத்தின் வெளிப் புறங்களில் உயர்ந்து நிற்கும் பாக்குத் தோப்புகள் உண்டு. பச்சைக் கம்பளம் விரித்தாற்போல் காணப்படும் தேயிலைத் தோட்டங்கள் அநேகர் வீட்டின் அடுப்பெரிய ஒரு காரணமாயிருந்தாலும், இதே தோட்டங்கள் தான் கல்கத்தாவின் முதலாளி வர்க்கத்தை வளர்த்தெடுக்கவும், அதைக் கண்டு உள்ளுக்குள் குமுறிய மண்ணின் மைந்தர்களை ஆயுதம் தூக்கவும் வைக்கிறது. மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்திய நகரங்களில் 5 ல் ஒன்றாகவும், மிக வேகமாக வளரும் உலக நகரங்களில் 100 ல் ஒன்றாகவும் இது உள்ளது. தான் இருக்கும் மாநிலத்தின் தலைநகரத்தையே தன்னுள் கொண்ட ஒரு நகரமிது. யுவான் சுவாங் என்ற சீனரின் டைரிக் குறிப்புகளை ( அப்துல்லா அண்ணனின் தம்பியின் டைரிக் குறிப்புகள் அல்ல) தூசி தட்டி விட்டுப் பார்த்தால், 7ம் நூற்றாண்டில் இந்த பிரதேசத்தை ஆண்ட பாஸ்கரவர்ம மன்னனின் கால்த்தில் 30,000 போர் படகுகளுடன் ஒரு மாபெரும் கடற்படையே வைத்திருந்தாராம். இப்படி பழம் பெருமைகள் நிறைய இருந்தாலும் அநேக புதுமைகளுடன் தினமும் வளர்ந்து வரும் ஒரு நகரம் இது.

இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் IIT போன்ற கல்லூரிகள் ஒருபுறம் இருந்தாலும் மிகவும் பிரசித்தி பெற்ற நூறு வருட புரதானமான " Cotton College" என்ற ஒரு கல்லூரியும் இங்கு உள்ளது. பெயரைக் கேட்டதும் எதோ பஞ்சு சம்பந்தப்பட்ட மேட்டர்னு நினைக்காதீர்கள். இதை ஆரம்பித்தவர் பெயர் "Sir Henry Cotton". நகரத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் இருக்கும் கோவில்களில் எம்பெருமான் உமாநந்தனென்றும், சுக்ரேஷ்வரென்றும், ருத்ரேஷ்வரென்றும் பல ரூபங்களில், பல கோணங்களில் வியாபித்திருக்கிறார். இந்திய கலாச்சாரங்களிலிருந்தும், ஆச்சாரங்களிலிருந்தும் முற்றிலும் வேறுபட்ட ஆனால் ரசிக்கத்தகுந்த ஒரு வாழ்வியல் முறைகளுடன் அஸ்ஸாமி, திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து மக்கள் கலந்து வாழும் ஒரு நகரம். கலைகளுக்கும் நடனத்துக்கும் பேர் போன ஒரு நகரம் இது. ஒரு முறை குடும்பத்தினருடன் சென்று காண வேண்டிய ஒரு நகரம்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நாட்டு நடப்புகள்

நேபாளத்தில் அமைதி திரும்பி விட்டது. இனி வெள்ளைப் புறாக்கள் மட்டுமே பறக்கும் என நினைத்திருந்த அத்தனை பேரின் எண்ணங்களிலும், மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறது சமீபத்தில் அங்கு இரு தனி மனிதர்களுக்குள் ஏற்பட்ட மோதல். துரதிஷ்ட வசமாக இந்த இரு பிரகஸ்பதிகளும் ஆளும் வர்க்கத்தில் இருந்து தொலைத்தது விட்டார்கள்.

படைத்தளபதியான ரூக்மங்கத் கட்டாவால் என்பவரை நீக்க பிரதம மந்திரி பிரசந்தா இட்ட உத்தரவை, நேபாள ஜனாதிபதி ராம் பரன் யாதவ் ரத்து செய்து விட, ஏற்கனவே உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த நெருப்பு பற்றிக்கொண்டது. பிரதம மந்திரி ராஜினாமா செய்து விட்டார். இந்த தளபதி கட்டாவால், மாவோயிச தீவிர வாதிகளை ராணுவத்தில் சேர்க்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து இந்த நாடகம் அரங்கேறி இருக்கிறது. ஜனநாயகம் என்பது அவ்வளவு லேசான விஷயமல்ல என்பதை நேபாள மக்கள் உணர ஆரம்பித்திருக்கிறார்கள்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
சொந்த செலவில் சூனியம்

போன வாரம் என் நண்பி ஒருவர் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். இது 2008 ம் ஆண்டில் அதிக பெண்களால் விரும்பி ரசிக்கப்பட்ட ஒரு மின்னஞ்சலாம்.

ஒரு கணவன் தன் மனைவி வீட்டோடு தானே இருக்கிறாள், அவள் என்ன பெருசா வேலை செய்யறா, நான் ஆபீசுக்கு போய் எவ்வளவு கஷ்டப் படறேன்னு மனசுல நெனச்சுட்டு, கடவுள் கிட்ட ஆண்டவா ஒரு நாளைக்கு என்னை அவளாகவும், அவளை நானாகவும் மாற்றிவிடு, அவள் ஒரு நாளாவது ஆபீஸுக்கு போய் ஆணி புடுங்கி பார்க்கட்டும், நான் என்ன நாய் படாத பாடு படுகிறேன் என உணரட்டும் என வேண்டினானாம். பரம்பொருளும் தாதாஸ்து என கூறிவிட, காலையில் அவன் அவளாகவும், அவள் அவனாகவும் கண்விழித்தார்கள். அவனான அவள் அலுவலகம் போய் விட, அவளான அவன், குழந்தைகளை குளிப்பாட்டி, பள்ளிக்கு அனுப்பி, சமைத்து, துணி துவைத்து, வீடு கூட்டி, இன்னும் அது, அப்புறம் இது, அப்புறம் அதுஅது, அப்புறம் இதுஇது எல்லாம் செஞ்சு முடுச்சு, குழந்தைகளை கூட்டிட்டு வந்து சோறு குடுத்து, தூங்க வைத்து, கணவனுக்கு சோறு குடுத்து எல்லாத்தையும் ஏறக்கட்டிட்டு படுக்கையில் வந்து அக்கடான்னு விழுந்தா, அவனாயிருக்கிற அவள் அவளாயிருக்கிற அவன் மேல வந்து விழுந்து, ...........வேண்டாம் நீங்களே புரிஞ்சுக்கோங்க. எல்லாம் முடிஞ்சதுக்கப்புறம் அவளாயிருக்கற அவன் கடவுள்கிட்ட வேண்டினானாம், ஆண்டவா ஒரு நாளுக்கே நான் டரியலாகிட்டேன், என்ன மறுபடியும் ஆம்பளையாவே மாத்திரு எம்பெருமானேன்னா, அவ்ரு சொன்னாராம், இப்ப ரெண்டு பேரும் கசமுசா பண்ணீங்களே, அதுல நீ கர்ப்பமாயிட்ட, அதுனால இன்னும் பத்து மாசத்துக்கு முடியாதுன்னுட்டாராம்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இந்த மாதிரி பதிவு எழுதுனாலே கடைசியில ஒரு கவிதை எழுதணுமாமே, அதுனால

" பரம்பொருளின் புதல்வர்களே,
ஒருவன் உங்கள் மீது கல்லை எறிந்தால்,
அவன் மீது பூவை எறியுங்கள்,
இறையன்பை உணரட்டும்.

அவன் மறுபடியும் கல்லை எறிந்தால்
இந்த முறை பூ ஜாடியையே எறியுங்கள்
ங்கொய்யால சாகட்டும்"

Tuesday, May 5, 2009

பாலபாரதி அண்ணன் கோவிச்சுக்க கூடாது!!!!!!

நேற்று இரவு 9 மணியளவில் NDTV 24 X 7 - ல் தேர்தல் நிலவரத்தைக் குறித்த பிரணாய் ராயின் பேட்டியை காணும் பாக்கியம் (அய்யோ, அய்யோ) கிடைத்தது.

என்னவோ புரியவில்லை, ஊடகத்தில் பணிபுரிவோர், பத்திரிகையாளர் இன்னும் இந்த பேட்டி எடுக்குற ஆசாமிங்க எல்லாம் நாங்க யாரை வேண்ணா அவமதிப்போம், தாய் நாட்ட எவ்வளவு தூரம் அவமதிக்க முடியுமோ, அவ்வளவு தூரம் கேவலப்படுத்துவோம், பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நுழைந்து, எவ்வளவு தூரம் அவர்களை கூனிக்குறுகி நிற்க வைக்க முடியுமோ அவ்வளவும் செய்வோம், எவனும் எங்களை ஒண்ணும் கேக்க கூடாது, மீறி எதாவது கேட்டியானா, மவனே நாங்கெல்லாம் பத்திரிகைக்காரங்க, வகுந்துடுவேன், தில் இருந்தா பேசுடா பார்க்கலாம் என சவால் விடும் அரை பிளேடு பக்கிரிகளாக ஏன் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

நேற்று, பிரணாய் ராய் சொன்ன தகவல்கள் :

பொது ஜனங்களே இந்தியாவின் நிலையைப் பாருங்கள்.

  1. ஏழ்மையில் இந்தியா இலங்கை, பாகிஸ்தான் ம்ற்றும் பங்களாதேஷை விட தரம் தாழ்ந்து போயுள்ளது.
  2. மனித வள மேம்பாட்டில் ஆப்பிரிக்க நாடான காங்கோவை விட இந்தியா பின் தங்கியுள்ளது.
  3. ஆப்பிரிக்காவின் சகாரா பாலைவன நாடுகளில் பசியால் வாடி மடியும் மக்களை விட அதிகமானோர் இந்தியாவில் பசியால் சாகிறார்கள்.
  4. MalNutrition - சத்தான உணவில்லாமல் இந்தியாவில் பிறக்கும் 50 சதவீத குழந்தைகள் இறந்து விடுகின்றன.
  5. 77 % இந்தியர்களின் தினசரி வருமானம் 20 ரூபாய்க்கு கீழ் தான்.
  6. வறுமை கோட்டுக்கு கீழே 300 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள்.
  7. 230 மில்லியன் மக்களுக்கு சரியான உணவு இல்லை.

இந்த செய்திகள் ஒரு 30 வினாடிக்கு ஒருமுறை இந்த தலைப்புகள் அனத்தும் திரையில் பளிச்சென்று வந்து போகும், பின்னர் இந்த பிரகஸ்பதி யாராவது இரண்டு அல்லது மூன்று அரசியல்வியாதிகளிடம் கேள்வி கேட்பார். அவர்களும் எங்க கட்சி ஆட்சியில் இருந்த பொழுது, மாதம் மும்மாரி பொழிந்தது, இந்த கேப்மாறி ஆட்சிக்கு வந்ததும் தான் எல்லம் நின்னு போச்சுன்னு சத்தியம் பண்றாங்க. இதை ஒரு நிகழ்ச்சின்னு ஒளி பரப்பறாங்க,

பிரணாய் ராய்க்கு மாத்திரமல்ல, ஒட்டு மொத்த ஊடகங்களுக்குமே எனது சில கேள்விகள்:

இந்தியாவின் எந்த ஒரு சிறப்புமே உங்கள் கண்களில் தெரிவதில்லையா?

ஒரே விண்கலத்தில் பத்து செயற்கைகோள்களை வைத்து வானவெளியில் அனாயசமாக உலவ விட்டார்களே, உலகம் முழுவதும் மூக்கின் மேல் விரலை வைத்து, பிறகு எடுக்க மறந்து வியந்து போனதே, இதை எத்தனை ஊடகவியலாளர்கள் பாராட்டினீர்கள், கள்ளிக்குப்பத்தில் கள்ளக்காதல் எதிரொலியால் வெட்டிக்கொல்லப்பட்ட வள்ளியப்பனைப் பற்றிய செய்திக்கு தரப்படும் முக்கியத்துவத்தை கூட இந்த சாதனைக்கு தந்தீர்களா என்பது சந்தேகமே!!!

அரசியல்வாதியாகட்டும் அல்லது சினிமா பிரபலமாகட்டும் அல்லது விளையாடு வீரராகட்டும், இவர்களது தனிப் பட்ட வாழ்க்கை என்பது உங்களுக்கு கிள்ளுக்கீரையா? ஒவ்வொரு வருடமும் செய்திகளை உடனுக்குடன், சுடச்சுட, பரபரப்பாக தருவதற்கு விருதுகள் வாங்கிக் குவிக்கும் "ஆஜ் தக்" என்ற ஹிந்தி தொலைக்காட்சியில், இந்தியா டுடே நிறுவனத்தின் தலைமை எடிட்டராக பணி புரியும் பிரபு சாவ்லா என்பவர், ஹிந்தி திரைப்படதுறையின் பிரபல பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கரை பேட்டி எடுக்கிறார்.

கேள்வி : லதாஜி, நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை, (ஒரு 60 வயது பெண்ணைப் பார்த்து இந்தக் கேள்வி அவசியமா)

பதில் : (மௌனம், ஒரு சிறிய புன்னகை)

கேள்வி : இல்லை, உங்களை திருமணம் செய்ய விடாமல் தடுத்தது எது?

பதில் : எதுவுமில்லை

கேள்வி : நீங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லையா?

பதில் : (புன்னகை).

கேள்வி : உங்களுக்கு திருமணத்தின் மீது நாட்டமில்லாமல் போனதா??????, அல்லது திருமணத்திற்கான வாய்ப்புகள் இல்லாமல் போனதா??????,

பொளேர் என்று அவனை அறைந்து விட்டு, காமிராவின் முன்னேயே அவனை அம்மணமாக்கிவிட்டிருக்க வேண்டும். என்ன தைரியம் இருந்தால் ஒரு பெண்ணைப் பார்த்து அதுவும் பலரால் அறியப்படும் ஒரு பெண்ணைப் பார்த்து இந்தக் கயவர்களால் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை கேள்வி கேட்க முடியும்??

26/11 ல் இந்த மீடியாக்காரர்கள் ஆடிய கேவலமான ஆட்டத்தை பார்த்து தெருநாய் கூட காறித்துப்பியது. ஆனால் அதற்காக ஒரு முறையாவது இவர்கள் வருத்தப்ப்ட்டதாகவோ, அல்லது மன்னிப்பு கோரியதாகவோ தெரியவில்லை.

முஷாரஃப்புடன் நடந்த ஆக்ரா உச்சி மாநாட்டின் போக்கை அரை வேக்காட்டுத்தன அறிக்கைகளால் முற்றிலும் திசைதிருப்பி விட்டது, 26/11 ல் இறந்த மேஜர் சந்தீப்பின் வீட்டாருடைய துக்கம் நிறைந்த தருணங்களைக்கூட கடைச்சரக்காக்கி விற்று காசு பார்த்தது என்று இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்த ஊடகங்களின் கோரப்பிடியில் இந்திய மக்கள் சிக்கித் தவிக்க வேண்டுமோ தெரியவில்லை.

பிரணாய் ராயின் புள்ளி விவரங்களின் படி பார்த்தால்:

இன்னும் சில வருடங்களில் நாம் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானிடம் பிச்சைப் பாத்திரம் ஏந்தி செல்ல வேண்டி வரும். இந்த வறியவர்களால் உருவாகும் அரசால் தான், ஆப்கானிஸ்தானின் புனரமைப்புக்கு தனது பங்களிப்பை செய்ய முடிகிறது. ஐ.நா வின் பாதுகாப்பு படையாக சென்று பல ஆப்பிரிக்க நாடுகளில் அமைதியை நிலை நாட்ட முடிகிறது.

ஆப்பிரிக்க நாடுகளான காங்கோவில் ஒரு டாலர் நோட்டுக்காக கழுத்து சீவப்பட்டவர்கள் ஏராளம். இதை விட கேவலமான ஒரு சமுதாயத்தில் தான் பிரணாய் ராய் வாழ்ந்து கொண்டிருக்கிறாரா? அல்லது இத்தகைய சமுதாயத்தில் இருந்து வந்த இந்த மனித வளம்தான் உலகத்தின் மென்பொருள் துறையையே கபளீகரம் செய்து விட்டதா???

சத்தான உணவில்லாததால் 50 சதவீத குழந்தைகள் இறக்கின்றனவென்றால் இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியாவின் ஜனத்தொகை பாதிக்கும் மேலாக குறைந்துவிடுமா???

77 சத வீத இந்தியர்கள் 20 ரூபாய்க்கு கீழான தினசரி வருமானத்தில் வாழ்கிறார்களென்றால் 56 சதவீத மக்கள் செல்போன் வைத்திருக்கிறார்களே, 20 ரூபாய்க்கு கீழே சம்பாதிப்பவன் எப்படி செல்போன் வைத்திருக்க்கிறான்??

வறுமை கோட்டுக்கு கீழும், சரியான உணவில்லாமலும் இத்தனை கோடிப்பேர் வாழ்கிறார்களே, அவர்களுக்கு ஒரு சராசரி இந்தியனாக நீ ஒரு துரும்பையாவது நகர்த்தி இருப்பாயா? தங்க நாற்கர சாலைகளாகட்டும், வானுயர்ந்து நிற்கும் கட்டிடங்களாகட்டும், புதிதாய் முளைக்கும் நகரங்களாகட்டும், வறுமை கோட்டுக்கு கீழேயும், சோத்துக்கு வழியில்லாதவனும் எப்படி இவைகளை நிர்மாணிக்கிறான்????

இந்தியாவுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் காவல் பலப்படுத்தப் படுகிறது. ஆனால், உள்நாட்டு அதிதீவிரவாதிகளான கடிவாளமில்லாமல் திரியும் இந்த மீடியா காரர்களிடமிருந்து யார் காப்பாற்றுவது??

இறைவா, எங்களை நண்பர்களிடமிருந்து காப்பாற்று, எதிரிகளை நாங்கள் வெல்ல முடியும்.

டிஸ்கி : பால பாரதி அண்ணன் தலைப்பை மறுபடியும் படிக்கவும்.

Saturday, May 2, 2009

நாட்டாமை பாட்டைப் போடு

என் தம்பி சினிமாவுல பாடியிருக்கான்னு தென்றல் அக்கா ஒரு பதிவு போட்டு பூவெல்லாம் குடுத்தாக.

கேபிள் அண்ணன் வாழ்த்துச் சொன்னாக, அவுக வாழ்த்துனாக, இவுக வாழ்த்துனாக, இன்னும் பதிவுலகத்துல இருக்கற எல்லாரும் வாழ்த்துனாக.

அப்துல்லா அண்ணன்கிட்ட "அண்ணே, தொலைதூர தேசத்துல இருக்கற நாங்க எப்பண்ணே பாட்டு கேக்கறது"ன்னு கேட்டாக்க " நீ ஒண்ணியும் மெர்சலாவாத, தென்றல் அக்கா நாளைக்கு பாட்டை பதிவுல போடுவாங்க"ன்னு சொன்னாரு.

நானும் கடை கடையா ஏறி எறங்கி எங்கடா பாட்டுனு பாத்தா ம்ஹூம், ஒண்ணியும் காணோம்.


"நாட்டாமை பாட்டைப் போடு"