Wednesday, April 29, 2009

ஜுகல்பந்தி 29 /4/2009

காக்டெய்ல், அவியல், கொத்துபுரோட்டா, கதம்பம், சுண்டல், தம்பியின் டைரிக் குறிப்பு இது போன்ற வரிசைகளில் ஜுகல்பந்தியும் ஒன்று.

இந்த ஜுகல்பந்தின்னா இன்னான்னா........, வேணாம், நீங்களே எதாவது அர்த்தம் தேடிக்கோங்க.

நகரம்:

சண்டிகர் என்ற நகரத்தைப்பற்றி எல்லோரும் கேள்விப்பட்டிருப்பீர்கள், மிகவும் திட்டமிட்டு கட்டப்பட்ட ஒரு நகரம். காளி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூவரின் உருவமான "சண்டி" தேவியின் கோட்டை என்று பொருள்படும்படியாய் இது சண்டிகர் என்று அழைக்கப்படுகிறது. இந்த தேவிக்கான கோவில் நகரத்தை அடுத்து அமைந்துள்ள ஹரியானாவின் "பஞ்ச்குலா" மாவட்டத்தில் அமைந்துள்ளது. "சண்டி மாதா மந்திர்" என்பது இதன் பெயர். இந்த நகரத்தின் மொத்த பரப்பளவான 114 சதுர கிலோமீட்டர்களில், மொத்தம் 46 செக்டர்களாக இந்த நகரம் விரிந்துள்ளது. செக்டர் 1 முதல் செக்டர் 47 வரை உள்ள ஒவ்வொரு செக்டரின் பரப்பளவும் மிக நேர்த்தியாக 800 மீட்டர் x 1200 மீட்டராக கேக் வெட்டியதைப் போல கன கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. (மொத்தம் 46 செக்டருன்னா, 47 எப்டி வந்துதுன்னு கேக்கறீங்களா, இங்க 13வது செக்டரே இல்லீங்கோ, அத்து ரொம்ப பேஜார் புட்ச நம்பருன்னு அல்லாரும் நம்பறதுன்னால அத்த கடாசிட்டாங்கோ). இந்தியாவின் நகரங்களிலேயே அதிக தனி நபர் வருமானம் உள்ள நகரம் என்பதால் (சராசரியாக ஒருநபரின் வருமானம் 90 ஆயிரத்துக்கும் மேல்) இது இந்தியாவின் பணக்கார நகரம் என்று அழைக்கப் படுகிறது. பாறைகளாலும், உடைந்த வீட்டு உபயோகப்பொருள்களாலும் சிலைகள் வடிக்கப்பட்ட "ராக் கார்டன்", விதவிதமான ரோஜாப் பூக்கள் பூத்துக்குலுங்கும் "ரோஸ் கார்டன்" என எங்கு நோக்கினும் தோட்டங்களாகவே உள்ளது. நான் சமீபத்தில் போயிருந்த பொழுது, ஒரே செடியில் ஒரு கிளையில் சிவப்பும், இன்னொன்றில் மஞ்சளும், இன்னொன்றில் வெள்ளையுமாக விதவிதமாக ரோஜா பூக்களை காண முடிந்தது. துடைத்து விட்டாற்போன்ற சாலைகளும், கோதுமை நிற பஞ்சாபி பெண்களும், விலையுயர்ந்த கார்களும், அதற்கு நேர்மாறாக சைக்கிள் ரிக்ஷாக்களுமாக இந்நகரம் ஒரு கதம்பம் தான்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

நாட்டு நடப்புகள்

நேற்று எங்கள் அலுவலகத்தில் ஒரு மின்னஞ்சல் சுற்றிக் கொண்டிருநதது. நிர்வாகம் மெக்சிகோ நாட்டுக்கு யாரும் செல்ல வேண்டாமென எச்சரித்திருந்தது. போச்சா, இங்கயும் குண்டு வைக்க ஆரம்பிச்சுட்டாய்ங்களாவென மெக்சிகோவில் இருக்கும் நண்பர்களை தொடர்பு கொண்டேன். "ஸ்வைன் இன்ஃபூளயன்ஸா" ன்னு எதொ ஒரு வியாதியாம். பன்றிகளிடமிருந்து பரவுதாம். ஏறக்குறைய 3400 பேர் பாதிக்கப்ப்ட்டிருக்காங்களாம். இது மனிதனிலிருந்து மனிதனுக்கு பரவாதாம், ஆனா பன்றியிலிருந்து மனிதனுக்கு பரவுமாம். மெக்சிகோவில இப்பல்லாம், போலீசே முக மூடி கொள்ளைகாரனைப் போல், முகமூடி போட்டுகிட்டுத்தான் போறாங்களாம். இந்த நோயின் அறிகுறிகள் இன்னான்னு, நம்ப கம்பவுண்டர் கனகவேலுகிட்ட கேட்டா, தலைவலி, குளிருகாய்ச்சலு, தொண்டை வலி, கை காலெல்லாம் எதோ பிசையறாப்புல வலி, இருமலு, வாந்தி, ஒரு மாதிரி ஏப்பம் வர்றது, உடம்பு சோம்பலு, பசிக்காம இருக்கறது (ஏயப்பா, போதும், கம்பவுண்டர், இத்தோட நிறுத்திக்க) இதெல்லாம் அல்லது எதாவது ஒண்ணு இருந்தாலும் அது இந்த வியாதியின் அறிகுறிங்கறான். ங்கொய்யால, இதுல எதுனா ஒண்ணு கூட இல்லாத இந்தியன் எவண்டா?????? எதுக்கும் உஷாரா வாட்ச்சிங்ல இரு நைனா!!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

தென் ஆப்பிரிக்காவுல மறுபடியும் "ஆப்பிரிக்கன் நேஷனல் காங்கிரஸ்" ங்கற கட்சி தேர்தல்ல மிகப் பெரும்பான்மை பெற்று வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. ஜேக்கப் ஜூமா என்பவர் அதிபராக பொறுப்பேற்க்கவுள்ளார். இந்திய காங்கிரஸின் அரசியல் கவிழ்ப்பு நாடகங்களுக்கு சற்றும் சளைக்காத கவிழ்ப்பு நாடகங்களை நடத்தி, இதற்கு முந்திய அதிபராயிருந்த தபோ ம்பேக்கி என்பவரை ஒரே இரவில் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, தனது கைப்பாவையான கலீமா முட்லாண்டே என்பவரை அதிபர் ஆசனத்தில் அமர வைத்தவர் தான் இந்த ஜூமா. இந்த முட்லாண்டே தான் IPL கமிஷனர் லலித் மோதியுடன் அமர்ந்து கேப் டவுன் மைதானத்தில் குலாவிக் கொண்டிருந்தவர்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கடைசியா ஒரு IPL மேட்டரு,

ராஜஸ்தான் ராயல் அணிக்கும், கல்கத்தா நைட் ரைடருக்கும் நடந்த ஆட்டத்திற்கு முன் ஷாரூக் கானை மந்திரா பேடி பேட்டி எடுக்கிறார்.

"ஷாருக், உங்கள் அணி ஷில்பா ஷெட்டியின் அணிக்கு எதிராக விளையாடுகிறது, சினிமாவில் நீங்கள் இணந்து நடித்திருக்கிறீர்கள், இப்பொழுது அணியினராக எதிரும் புதிருமாக இருப்பது எப்படி இருக்கிறது?"

ஷாருக்கின் பதில் " மந்திரா, உன்னையும் சரி, ஷில்பாவையும் சரி, நாந்தானே முதலில் திரையில் இறக்கினேன்"

அந்த கேள்விக்கும் இந்த பதிலுக்கும் இன்னா கனிக்ஷன் இக்குதுன்னு யாருன்னா சொல்லுங்கப்பா....

Monday, April 20, 2009

IPL போட்டிகள் - இந்திய அரசுக்கு செருப்படி.

மேல்தட்டு வர்க்க குழந்தைகள் இந்திய அரசைப் பார்த்து எள்ளி நகையாடிவிட்டு, எங்கள் ஆட்டம்தான் எங்களுக்கு பெருசு என்று சென்றுவிட்டன. என்னிடம் பணம் இருக்கிறது, "என் வீட்டு விஷேஷத்துக்கு காவலாளியாய் வந்து நில்" என்று சொல்லி ஒரு இறையாண்மை மிக்க அரசை மிரட்ட முடிகிறது. அரசும் "அப்படி இல்லப்பா, கொஞ்சம் பொறுத்துக்குங்களேன், எங்கள் கோட்டையில் கொடியேற்றி விட்டு வருகிறோம்" என்று சொன்னவுடன், "டேய், மரியாதையா நான் சொன்ன நேரத்துக்கு சொன்ன இடத்துல வந்து நில்லு, நிக்கல நடக்கறதே வேற" என்று பேட்டை ரவுடியைப் போல் மிரட்ட முடிகிறது. "எங்க வூட்டு விஷேஷத்துக்கு வெளியூர் மாப்பிள்ளைகள் எல்லாம் வராங்க, அவுங்க காலை கழுவுறதுல இருந்து, அவுங்களுக்கு படுக்கறதுக்கு பாய் போட்டு, தூங்கும் போது கால் அமுக்கி விட்டு,கண்விழிச்சா வெந்நி வெச்சு, பசியெடுத்தா பந்தி வெச்சு சேவுகம் பண்ண முடியுமா முடியாதா" என உலகின் மிகப் பெரிய மக்களாட்ச்சியை பார்த்து கொக்கரிக்க முடிகிறது. முடியாது போல
தோணுதுப்பா என்றவுடன், இரு உன்னை என்ன செய்கிறேன் பார் என்று சொல்லி "அய்யோ உலகமே இந்த அநியாயத்தை கேக்க மாட்டிங்களா, எங்க வீட்ல எனக்கே பாதுகாப்பில்லைங்கும் போது நான் இங்க எதுக்கு இருக்கணும்" அப்படின்னு கூவிவிட்டு, பக்கத்து வீட்டைப்பார்த்து" ஏனுங்க, நம்மூட்ல கொஞ்ச எடம் இருக்குதுங்களா, நாளைக்கு மாப்பளேக வர்ராங்கங்க, அவிய அப்பிடி இப்பிடின்னு ஆடோணுங்களாமா, அவிய ஆட்டத்தைப் பாக்கறதுக்கு எங்கூட்ல கேடு கெட்ட இளிச்சவாயனுக இருக்கறாங்க, ஆனா மாப்ளேகளுக்குத்தேன் ஆடறதுக்கு எடமில்லீங்களாமா, கொஞ்சம் உங்கூட்டு வாசல்ல ஆடீட்டு போகுட்டுமுங்க, ஏனுங்க, சரிதானுங்களா" என்று அடுத்த வீட்டுக்காரனையும், என்னிடம் பணம் இருக்கிறது பார், என்ன சொல்ற என்று கால் மேல் கால் போட்டுக் கொண்டு திமிராய் கேட்க முடிகிறது.

வேதனை என்னவென்றால், இதை அனைத்தையும் செய்வது சமுதாயப் பொறுப்புள்ள இந்தியக் குடிமகன்கள்தான். என் இந்தியத்திருநாட்டில் ஒரு படத்தில் நடித்து விட்டாலே அவர் வருங்கால பிரதமராகும் கனவு காணும் உரிமையை பெற்று விடுகிறார். அப்படிப்பட்ட சினிமா கும்பல் தங்களது கும்மாளத்திற்கென ஒரு சூதாட்டத்தை உருவாக்கி, அதை சர்வதேச அளவில் பிரபலபடுத்தி இருக்கிறது என்றால் இதில் வரும் வருமானம் எவ்வளவு என்று பாருங்கள்.

எனது நாட்டில் தேர்தல் வருகிறது, நான் இங்கு இருந்து எனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் துளியும் மனதிலில்லாமல், என் பொழப்பு தான் எனக்குப் பெருசு, வேணுன்னா, எங்க வீட்டு திருவிழா முடிஞ்சதுக்கப்புறம் நீ கொடியேத்து என்று ஒரு அரசின் இறையாண்மையை எதிர்த்து கேவலப்படுத்தும் அளவுக்கு, ஜனநாயகமும், பணமும் இந்த திமிர் பிடித்த அணி உரிமையாளர்களுக்கும், போட்டி நிறுவனத்தாருக்கும் தைரியம் கொடுத்துள்ளதா?????

ஒரு நாட்டின் மிகச்சிறந்த விருது அளிக்கப் பட்டாலும், (எத்தனையோ தகுதியுள்ள வீரர்களுக்கு இன்னும் இந்த விருதுகள் ஒரு கனவுதான்) அந்த விருது வழங்கும் விழாவுக்கு அரசு தானாக முன்வந்து அப்பா, ராசா , வரமாட்டேன்னு மாத்திரம் சொல்லாதடா, வந்து வாங்கிக்கடா என்று கெஞ்சினாலும், தளபதியைப் போல " "ஏய், சைலன்ஸ், நான் விளையாண்டுட்டு இருக்கன்ல" என்று ஒதுக்கித்தள்ளும் தைரியத்தை எது தருகிறது????

தென் ஆப்பிரிக்காவில் தேர்தல் இல்லையா, அவர்கள் நாட்டிலும் இதோ இப்பொழுதுதான் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அப்படி இருப்பினும் "என்னால் உங்கள் மாப்பிள்ளைகளுக்கு வாசலில் விளையாட இடம் தர முடியும், நீ வா" என்று சொல்லி எப்படி அழைக்க முடிகிறது?????

எல்லாம் என்னால் தானா? ராத்திரி பன்னிரண்டு மணி ஆனாலும் கண்முழித்து மாப்பிள்ளைகள் ஆடுவதை பார்க்கிறேனே, அதனால் தானா??? அவன் எங்க போனா என்ன, யாரை அவமானப்படுத்துனா என்ன, நான் பாக்கறத பார்த்துட்டேதான் இருப்பேன் என சொரணை கெட்ட ஜென்மமா வாழ்றனே, அதனால்தானா???

நிறைய சொல்லணும்னு தோணுதுபா, ஆனா சொன்னா எல்லாரும் திட்றாய்ங்க, அதுனால சொ.செ.சூ. நஹி.

Thursday, April 16, 2009

உண்மையாலுமே உண்மை இதுதானா????

டிஸ்கி : ஆணி அதிகமிருப்பதால் ஒரு மீள்பதிவு


அழகிய கிராமம், பச்சை மரங்கள், கோலம் போட்ட வாசல்கள், ஊரைத் தொட்டபடி ஓடும் ஆறு, அம்மன் கோவில் மற்றும் அய்யனார் கோவில், சைக்கிளில் பால் கேன்கள் சுமக்கும் பால்காரன், தாவணி கட்டிய பெண்கள் (இந்த காலத்திலுமா!!!!!????), வயல் வெளிகள், திருவிழா கூட்டங்கள், மீசை வைத்த பெரிசுகள், அரச மரத்தடி பஞ்சாயத்துகள், கடுக்கன் தொங்கும் கிழவிகள், மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு முன்னே நிற்கும் மீசை அரும்பா விடலைகள், கற்க கசடற என்று குறள் எழுதப்பட்ட பள்ளிக்கூட சுவர்கள், காவல் நிலையத்தின் முன் அவசரமாக சைக்கிளை நிறுத்திச் செல்லும் ஏட்டையா, இருக்கிற ஒரே வங்கிக் கிளைக்கு மடிப்புக் கலையாத சட்டையோடும் நெற்றியில் பூசிய திருநீருமாய் வந்து கம்பீரமாய் அமர்ந்து நோட்டெண்ணும் கேஷியர், வழியில் ம்மாஆஆ என்று கத்திக்கொண்டு போகும் மாடுகள், மளிகைக்கடை வைத்திருக்கும் செட்டியார், டீக்கடையில் அமர்ந்து தினத்தந்தி படித்து நாட்டின் அரசியலை நிர்ணயிக்கும் நியாய மூர்த்திகள், உழவு உழுக கலப்பை செய்த காலம் போய், டிராக்டர் ஓட்டும் மெக்கானிக் உழவர்கள், தலைவர் நடித்த படங்களுக்கு கொடிகள் ஒட்டும் ரசிகர் மன்ற உறுப்பினர்கள், பரட்டைத்தலையும், வாயில் புகையும் சிகரெட்டும், தூக்கிக் கட்டிய லுங்கியுமாய் ஊருக்குள் ரகளை செய்யவே காத்திருக்கும் சண்டியர்கள் இப்படி ஒரு கிராமத்திற்கான அத்தனை முகவரிகளையும் காமிராவிற்குள் பிடித்தாகி விட்டது. இனி கதையை தேடுவோம் வாருங்கள்.

ஒரு சண்டியராகத் திரியும் இளைஞன், இவனுக்கு கண்டிப்பாக பரட்டை முடியும், சிகரெட் புகையும் வாயும், சாராய பாட்டிலின் மூடியை வாயால் கடித்துத் திறந்து அனாயசயமாக அதை துப்பி விட்டு அதை அப்படியே முழுதும் குடித்து முடிக்கும் குணமும் அவசியம் இருந்தாக வேண்டும். ரெட்டை சடை போட்ட தாவணி கட்டிய பள்ளி மாணவி, கண்டிப்பாக டவுன் பஸ்ஸிலோ அல்லது சைக்கிளிலோ பள்ளிக்கு செல்பவளாகத்தான் இருக்கவேண்டும். இவள் பள்ளிக்குப் போகும் வழியில் தான் அந்த தறுதலை கதாநாயகன் சிகரெட் குடித்துக்கொண்டோ அல்லது சாராயம் குடித்துக்கொண்டோ இருக்க வேண்டும். இவள் தினமும் பள்ளிக்குப் போகும் பொழுதும் வரும் பொழுதும் இந்த பரட்டைத்தலை சண்டியரைப் பார்த்து கோபம் கொண்ட அல்லது மோகம் கொண்ட ஒரு பார்வையை வீசிய படி செல்லவேண்டும். நியதிப் படி கண்டிப்பாக இந்த பள்ளி மாணவி ஊர் பெரிய கவுண்டரின் மகளாகவோ அல்லது பணக்கார வீட்டுப் பெண்ணாகவோ இருக்கவேண்டும். ஆனால் இப்பொழுதெல்லாம் அவள் வாத்தியார் மகளாகவோ அல்லது ஏட்டையா மகளாகவோ அல்லது ஒரு வங்கிக் கேஷியர் மகளாகவோ இருந்தால் கூட போதும். ஆனால் அரசியல் வாதி மகளாக இருந்து விட்டால் சாலப் பொருத்தம்.என்ன!!!! வாசித்துக்கொண்டே போகிறீர்களே, இன்னும் புரியவில்லையா, கிராமிய மணம் கமழும் ஒரு எதார்த்தமான படம் எடுக்கப் போகிறேன்.

ஊர்த்திருவிழாவில் பெரிய கவுண்டரிடம் சண்டியர் குடி போதையில் டாவடிக்க, வெட்டுக்குத்து வரை போய் நிற்கும் இந்தத்திருவிழா ரகளையில் சண்டியர் கைதாக (முன்னே பார்த்தோமே, சைக்கிளை நிறுத்திவிட்டு போனாரே அதே ஏட்டையா தான் விலங்கு மாட்டுவது), பெரிய கவுண்டரின் ரத்த சொந்தமான ஒருத்தர், (தம்பியாக இருக்கலாம், அல்லது பங்காளியாய் இருக்கலாம்) பெரிய கவுண்டருடனான முன்விரோதத்தின் காரணமாக சண்டியரை ஜாமீனில் வெளியிலெடுத்து கவுண்டருக்கு எதிராக கொம்பு சீவி விட்டு, கவுண்டர் சின்னவீட்டோடு குலாவிக்கொண்டிருக்கும் பொழுது அவரை தீர்த்துக் கட்டிவிட ஐடியா கொடுக்க வேண்டும். அவரைக் கொல்லும் பொழுது ஒரே அடியில் கொல்லுவதோ அல்லது வெடிகுண்டு வைத்து கொல்லுவதோ கூடாது குறைந்தது இருபது முறையாவது அவரை வெட்ட வேண்டும், ஒவ்வொரு முறை வெட்டும் போதும் கவுண்டரின் உடம்பிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்து சண்டியரின் பரட்டை முடி, முகம், கை, கால், அழுக்கு லுங்கி என ஒவ்வொரு இடத்திலும் தவணை முறையில் படவேண்டும். இந்தக்கொலையை ஒரு கால் நடக்கமுடியாமல் முடமான ஒரு சின்னப் பையன் பார்த்து விட்டு அதைப் போய் தாவணி அணிந்து கனவில் சண்டியருடன் டூயட் பாடிக் கொண்டிருக்கும் கதாநாயகியிடம் சொல்ல, கதாநாயகி வந்து நாயகனுக்கு தன் சித்தப்பாவின் சூழ்ச்சியை அழுதுகொண்டே விளக்குவார். குறைந்தது ஒரு பதினைந்து நிமிடமாவது இந்தக்காட்சியில் கதாநாயகி அழுது கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பார். இந்த நேரத்தில் சண்டியருக்கு கை நரம்புகள் புடைக்கலாம், நெற்றியில் ஒரு சுருக்கம் வந்து போகலாம், குடித்துக் கொண்டிருந்த பீடியையோ அல்லது சிகரெட்டையோ தரையில் போட்டு காலால் மிதிக்கலாம், அல்லது சாராயம் குடித்துக் கொண்டிருப்பாரெனில் மிகவும் வசதியாய் போயிற்று, அந்த பாட்டிலை அப்படியே பாறை மீது வீசி எறிந்து உடைக்கலாம்.இதற்குப்பின் அவர் எப்படி பழிக்குப்பழி வாங்குகிறாரென்றும் எப்படி தாவணியை கை பிடிக்கிறாரென்றும் திரையில் பாருங்கள்.

இப்படித்தான் இன்றைய கிராமிய மணம் கமழும் படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆச்சர்யம் என்னவென்றால் அவை வெகு ஜன வரவேற்பைப் பெற்று வெற்றிப்படங்களென ஊடகங்களாலும் வர்ணிக்கப்படுகின்றன. இந்தப் படங்கள் நம் முன்னே கிராமங்களைப்பற்றி வைக்கும் பிம்பங்கள் என்ன?

கிராமங்கள் என்றாலே, அங்கு அழுக்கும் நாற்றமும், கோவணம் கட்டிய மனிதர்களும், மூக்கில் சளி ஒழுக நிற்கும் குழந்தைகளும், குடிகார கணவர்களும், வைப்பாட்டி வைத்திருக்கும் பண்ணையார்களும், சுரண்டிப் பிழைக்கும் கந்து வட்டிக்காரர்களும், ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளும், மாணவிகளை கற்பழிக்கும் வாத்தியார்களும் என ஒரு எதிர்மறை எண்ணங்கள் மாத்திரமல்ல, மிகையாகத் திரிக்கப்பட்ட வக்கிரமான பொய் பிம்பங்களைத்தான் திரைப்படங்கள் முன் வைக்கின்றன
இப்படி ஒரு பொய்யை கதையாக வாசிப்பதற்கே அருவருப்பாக இருக்கிறதென்றால் அதற்கு திரை வடிவம் கொடுத்து தைரியமாக மக்கள் முன்னே படைக்கிறார்கள் என்றால், எவ்வளவு வக்கிரம் நிறைந்த ஒரு சிலரின் கைகளில் திரையுலகம் என்னும் ஒரு மாபெரும் மக்கள் தொடர்பு ஊடகம் சிக்கித் தவிக்கிறதென்று நினைத்துப் பார்க்கவே பயமாய் உள்ளது.

இந்தக் கதாசிரியர்களுக்கும், இயக்குனர்களுக்கும், வர்ணிப்பாளர்களுக்கும் ஒரு சில கேள்விகள்:

1. கிராமங்களைப்பற்றிய உங்களது படத்திற்கான மூலக்கருத்து எங்கிருந்து கிடைத்தது? நான் தான் படைத்தேன், உருவாக்கினேன் என்றல்லாம் பினாத்தாதீர்கள். பிரபஞ்சத்தில் ஒன்றிலிருந்து வேறொன்றுக்கு ஒரு பொருளையோ அல்லது கருத்தையோ மாற்றும் வித்தைதான் மனிதனிடத்தில் உள்ளதே தவிர, உருவாக்கும் திறமை யாரிடத்திலும் இல்லை.

2. நீங்கள் முன்வைக்கும் கருத்துகளுக்கெல்லாம் ஒரு மேற்கோள் காட்டுகிறீர்களே "தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும், தர்மம் வெல்லும்" என்று, இந்த தர்மம் எப்படி வெல்கிறது என்று நீங்கள் முன்வைக்கும் மாதிரிகளில் எவ்வளவு வன்ம மற்றும் வக்கிர உணர்வுகளை பொய்யாய் புனைகிறீர்கள் என எப்பொழுதாவது யோசித்ததுண்டா? பருத்தி வீரனாகட்டும், சுப்பிரமணியபுர வாசிகளாகட்டும், அரிவாள் இல்லாமல் வசனமே பேச மாட்டார்களா?

3. கதாநாயகர்களாக சித்தரிக்கப்படும் இவர்களிடம் சாராயம் குடிப்பது, சண்டை போடுவது, பெண்ணின் பின்னால் சுற்றுவது, அரிவாள் எடுத்து அடுத்தவனை ரத்தம் பீய்ச்ச வெட்டுவது அல்லது வெட்டுப்படுவது போன்ற குணங்களைத்தவிர வேறு குணங்களையே உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிவதில்லையா?

4. கிராமத்து இளைய சமுதாயத்திடம் எழுந்து நிற்கும் அறிவுக் கூர்மையும் மதி நுட்பமும், இன்றைய நகர்ப் புற சமுதாயத்திற்கு சற்றும் சளைத்ததல்ல என்ற உண்மை உங்களுக்கு புலப்படாமல் போனது ஏன்? இன்று மென்பொருள் துறையிலாகட்டும், கட்டுமானத்துறையிலாகட்டும், இன்னும் எந்தத் துறையை வேண்டுமானாலும் சொல்லுங்கள், அந்தத் துறையிலும் கோலோச்சி நிற்கும் பெரும்பான்மை கிராம இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் எல்லாம் உங்கள் கண்களில் படுவதேயில்லையா?

5. சிறுதொழில் செய்து முன்னேறுபவர்கள், சாதிக்கொடுமையை எதிர்த்துப் போராடுபவர்கள், படிப்பில் முதன்மை வகிப்பவர்கள், சேவை மனப்பான்மையோடு பணிபுரியும் ஆசிரியர்கள், மாலை வேளையில் பள்ளிக்கூடம் முடிந்ததும் அதற்கென காத்திருந்து, மாணவர்களுக்கு கால்பந்து கற்றுத்தந்து, அவர்களோடு விளையாடும் காவல்துறையினர், மாணவிகளுக்கு தையல் கற்றுத்தந்து ஊக்குவிக்கும் ஆசிரியைகள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் என வகை வகையாக அடுக்கிக் கொண்டே போகலாமே, இவர்கள் யாருமே உங்கள் கண்களில் தெரிவதில்லையா? அல்லது உங்கள் கற்பனை உலகத்தின் எல்லைக்கு அப்பால் இருக்கிறார்களா?6. இன்னும் இந்திய கிராமங்களை ஒரு சாபத்தின் குறியீடாகவே ஏன் பார்க்கிறீர்கள்? அல்லது ஒரு அருவருப்புகளின் நிகழ்விடங்களாகவே ஏன் சித்தரிக்கிரீர்கள்?

7. கிராமத்து திருவிழாக்களில் கூட உங்களுக்கு இன்னும் ஆடப்படும் காவடி ஆட்டத்தின் நளினமோ, ஒயிலாட்டம், மயிலாட்டத்தின் அசைவுகளோ தெரிவதில்லை. தப்பட்டை அடித்து ஒரு கருத்தினை மையமாக வைத்து மணிக்கணக்காக சுருதி மாறாமல் ஆடி, இது வரை கண்டிராத மற்றும் கேட்டிராத சேதி சொல்லும் அந்த நாட்டிய நாடகங்கள் உங்கள் கண்களில் படாமல் போனதேன்? மாறாக கரகாட்டக்காரிக்கும் குட்டைப் பாவடை அணிவித்து, அவளது ரவிக்கையின் அளவை சுருக்கி, மார்பின் பிளவுகள் மற்றும் அளவுகளை வெளிக்காட்டவும், இடுப்பு மடிப்புகளில் இருந்து, தொடையின் நிறம் தெரியும் வரை காமிரா கோணங்கள் அமைக்கவும் பெரும் பாடு பட்டு கலைச்சேவை செய்கிறீர்களே, இது வக்கிரத்தின் வெளிப்பாடில்லாமல் வேறென்ன?

8. கிராமத்தில் ஒழுக்கம் நிறைந்த பண்ணையார்களே இல்லையா? பண்ணையார் என்று இருந்தால் அவர் வைப்பாட்டி வைத்திருப்பவராகத்தான் இருக்க வேண்டுமா?

9. கிராமங்களில் நிகழும் அனுதின நிகழ்வுகளைத்தான் நாங்கள் படம் பிடித்துக் காட்டுகிறோம் என்றும், கிராமத்திற்கென்றே உரிய பிரச்ச்னைகளைத்தான் நாங்கள் முன்வைக்கிறோம் என்றும் தயவு செய்து பாசாங்கு பதில்களை சொல்லாதீர்கள். கிராமத்துப் பிரச்சனைகளின் மீது இவ்வளவு அக்கறை கொண்ட நீங்கள் எத்தனை முறை பாப்பாப்பட்டி மற்றும் கீரிப்பட்டி பிரச்சனைகளை, அந்த பிரச்சனைகளுக்கே உள்ள வீரியத்தோடும், ஆழத்தோடும் பிரதிபலித்திருப்பீர்கள்? என் இனிய தமிழ் மக்களே என்று பாசம் பொழிபவர்கள் கூட சப்பாணியையும் பரட்டையையும் ஒரு பெண்ணின் பின்னே அலைபவர்களாகக் காட்டித்தான் கைதட்டல் வாங்குகிறார்கள். ஒரு பெண்ணுக்கான சண்டையையும், மண்ணுக்கான சண்டையையும், திமிர் பிடித்த பண்ணையாரை எதிர் கொள்ளும் கூலிக்கார கதாநாயகனையும் தவிர, உங்கள் கேமராக்கள் வேறு கோணங்களில் பயணிக்க மறுப்பதேன்?

10. கிராமத்து வாலிபப் பெண்களை நீங்கள் பார்க்கும் பார்வை என்றுதான் மாறுமோ தெரியவில்லை. ஊர்த்திருவிழாவில் மாமன் வாங்கித்தரும் சடைக் குஞ்சத்துக்கும், ரப்பர் வளையலுக்கும், கலர் ரிப்பனுக்கும் மயங்கி மாமனுக்கு முத்தம் கொடுத்து, எப்ப மூணு முடிச்சு போடுவே மாமா என ஏங்கிக் கிடந்த காலங்கள் மலையேறிப் போனது. இன்று விடுமுறை நாட்களில் காலையில் காட்டில் களை எடுத்து விட்டு, மாலையில் கம்ப்யூட்டர் படிக்கப் போகிறார்கள் பெண்கள். அப்பனும் ஆத்தாளும் காட்டிய பையனுக்கு கழுத்தை நீட்டிய காலம் போய், வாழ்க்கைத்துணையை தானே தேர்ந்தெடுக்கும் சுய அறிவுள்ளவர்களாக மாத்திரமல்ல, சுதந்திரம் உள்ளவர்களாகவும் மாறியிருக்கிறார்கள். எதிர்காலத்தைக் குறித்த தெளிவான சிந்தனைகள் எங்கள் கிராமத்து இளம் பெண்களிடம் வெகுவாக இருக்கிறது. வீட்டுக்காரர் ஆசையாய் வாங்கிக் கொடுத்த பச்சைக்கலர் பட்டுப்புடவை, அண்ணன் காட்டில் நெல் விளைந்து அமோக அறுவடை ஆனதும் தங்கச்சிமேல் பாசம் மாறாமல், குலதெய்வத்துக்கு பொங்கல் வைக்கப்போனபொழுது ஆசையாய் கொடுத்த ஒரு பவுன் சங்கிலி என்ற மனதை நெகிழ வைக்கிற பழைய கால சமாச்சாரங்கள் இன்னும் எங்கள் பெண்களிடையே உண்டு. ஆனால் அதே சமயத்தில் எப்பொழுது குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் எத்தனை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற தெளிவான சிந்தனையும் உண்டு. பெற்ற மக்களை எப்படி வளர்ப்பது, என்னவாய் உருவாக்குவது போன்ற எதிர்கால திட்டங்களில் எங்கள் கிராமத்துப் பெண்கள் வெகுவாக முன்னேறியிருக்கிறார்கள். பணத்தைக் கையாள்வதிலும், எதிர்காலத்திற்கான சேமிப்பிலும், குடும்ப நிர்வாகத்திலும், சமூக மேம்பாட்டிலும் என சொல்ல எத்தனையோ சிறப்புகள் இருக்கிறது, அத்தனை துறையிலும் எங்கள் கிராமத்துப் பெண்கள் முன்மாதிரியாய் நிற்கிறார்கள்.
ஏன் இந்த முன்னேற்றங்களோ, நல்ல விஷயங்களோ உங்கள் கண்களில் படுவதில்லை ????????

மாறாக நீங்கள் கிராமத்துப் பெண்களாகக் காட்டுபவர்களில் ஒருத்தி (பருத்தி வீரன் நாயகி) சொல்லுகிறாள் " என் உடம்பை அம்மணமா காட்டறதுண்ணா அது உனக்குத்தான்னு அந்த சாமிகிட்டயே சத்தியம் பண்ணி கொடுத்திருக்கேண்டா" " எனக்கு கல்யாணம் பண்ணிவெச்சா வேற எவங்கூடயாவது படுத்து புள்ளை பெத்துக்குவன்னு மாத்திரம் நினைக்காதீங்க", மற்றும் காதலுக்கு சோதனை வந்த நேரத்தில் " ஏண்டா, நீ பேசாம எங்கூட படுத்து எனக்கு ஒரு புள்ளைய குடுத்துரேண்டா"!!!!!!!!!!! கேட்பதற்கு காது கூசும், அல்லது ஒழுக்கம் கெட்டு, காசுக்கு உடலை விற்கும் ஒரு விலை மாது கூட பேச வெட்கப்படும் வார்த்தைகளை ஒரு கிராமத்துப் வாலிபப் பெண் சர்வ சாதரணமாய் பேசுவது போல யோசிக்க உங்களால் எப்படி ஐயா முடிகிறது?

எந்நேரமும் (சுப்பிரமணிய புரத்தில்) தன் வீட்டின் முன் அமர்ந்து சிகரட் குடித்துக் கொண்டும், அடுத்தவனை ஏமாற்றி சாராயம் குடித்துக் கொண்டும், வயதான விதவைத்தாயின் உழைப்பில் சோறு சாப்பிட்டு, ஊருக்குள் சண்டையிட்டுக்கொண்டும் இருக்கும் ஒரு இளைஞனை பார்த்து எந்தப்பெண்ணுக்காவது காதல் பொத்துக் கொண்டு வந்து, அந்த இளைஞனுக்காய் அந்தப் பெண் ஏங்கவும் அழுகவும் செய்கிறாள் என்றால் நிச்சயமாய் அந்தப் பெண்ணின் மன நிலையை சோதித்துப் பார்க்க வேண்டும். ஏனெனில், இன்றைய இந்திய கிராமத்துப் பெண்கள், நான் முன்பே கூறியது போல வாழ்கைத்துணையை தேடுவதிலும், தெரிந்தெடுப்பதிலும் வெகு ஜாக்கிரதையாய் இருக்கிறார்கள்.

எத்தனை தொலைக்காட்சிகள் வந்தாலும், எத்தனை நவீனத்துவம் கிராமத்து வாழ்க்கையை ஆட்கொள்ள முயற்ச்சித்தாலும், எங்கள் இந்திய கிராமம் என்பது என்றுமே நீங்கள் வர்ணித்தது போல் பருத்தி வீரன்களாலும், சுப்பிரமணியபுர அரிவாள் மற்றும் அரசியல் கோஷ்டிகளாலும் சூழப்பட்டதில்லை. எங்கள் பெண்கள் தரக்குறைவான வார்த்தைகளை பேசி காதலர்களுடன் கொஞ்சி மகிழ்ந்ததில்லை.

தத்ரூபம் என்ற பெயரில் அபத்தங்களையோ, வக்கிரங்களையோ, அப்பட்டமான பொய்களையோ சொல்லி, கிராமம் என்றால் இப்படித்தான் என்ற ஒரு பிழையான பிம்பத்தை நிகழ்கால சந்ததிக்கு தருவதோடு மட்டுமல்லாமல் எதிர்கால சந்ததிக்கும் வைத்துப் போகாதீர்கள்.நீங்கள் தத்ரூபம் என கற்பனை செய்து, உங்கள் வக்கிர எண்ணங்களுக்கெல்லாம் கிராமத்து எதார்த்தம் என்ற பொய்யான வண்ணம் பூச நினைப்பதையெல்லாம் பார்க்கும் பொழுது ஒரே ஒரு கேள்வி தான் மனதில் எழுகிறது.

உண்மையாலுமே உண்மை இதுதானா ?

Monday, April 13, 2009

நானும் அதத்தான் சொன்னேன்.

முதல்ல பாலாஜி தான் ஆரம்பித்தான். " மச்சி, நேத்து சேகர் இந்த நம்பர் குடுத்தாண்டா, நம்பகமான பார்ட்டியாம், செம கட்டயாம். ஒரு பிரச்சனையுமில்லைண்ணு சொன்னாண்டா".

குடித்துக் கொண்டிருந்த பியர் கிளாசை கீழே வைத்துவிட்டு பிரசன்னா கேட்டான் " அவன் போயிட்டு வந்தானான்னு விசாரிச்சயா?"

"ஆமாண்டா, அவன் அப்படித்தான் சொன்னான்".

ஒரு இனம்புரியா சங்கடத்துடன் பீட்டர் " டேய், இதெல்லாம் நமக்கு வேண்டாண்டா, கடைசியில கழுத்தறுத்துறுவாளுகடா, எனக்கென்னமோ இது சரின்னு படல"

"டேய், இவன் எப்பவுமே இப்படித்தாண்டா, எதுக்குடுத்தாலும் நெகட்டிவ்வாவே பேசிட்டிருப்பான். நாம என்னடா உடனே சரின்னு சொல்லிரப் போறமா, போனைப் போட்டுப் பாப்பமே, என்னதான் சொல்றான்னு" என்று சொல்லியபடியே பாலாஜி செல்போன் எடுத்து நம்பர் அழுத்தப் போனான்.

அவன் கையைப்பிடித்து தடுத்த பிரசன்னா " அறிவிருக்காடா உனக்கு, இந்த மேட்டரையெல்லாம் செல்லுலயா பேசுவாங்க, ஒரு ரூபா போன் எதுக்குடா இருக்கு?"

அதுவும் சரிதான் என்பதுபோல் மூவரும், பியரை உறிஞ்ச ஆரம்பித்தார்கள். முடிந்ததும், பில் செட்டில் பண்ணிவிட்டு, வெளியே வந்து அவனவன் பைக்கை எடுக்கப் போனபோது, சல்யூட் அடித்த செக்யூரிட்டிக்கு ஒரு ஐந்து ரூபாய் கொடுத்து விட்டு, " இங்க ஒரு ருபா போன் எங்க இருக்கு?" என்றான் பிரசன்னா. கையில செல்போன் வெச்சுகிட்டு ஒரு ரூபா போனா என விநோதமாக பார்த்த செக்யூரிட்டியும் வாங்கிய ஐந்து ரூபாய்க்கு விசுவாசமாக, "அதோ அந்த பொட்டிக்கடையில இருக்கு சார்" என்றார்.

"மச்சி, பைக் இங்கயே இருக்கட்டும், பேசிட்டு வந்துடலாம்" என்றவுடன் பாலாஜியும், பிரசன்னாவும் முன்னால் நடக்க வேண்டா வெறுப்பாய் பின்னால் பீட்டர் நடந்தான். அதைப் பார்த்து சூடான பாலாஜி
" டேய், மச்சி, உனக்கு இதுல விருப்பமில்லைனா நீ முதல்லயே கழண்டுக்க, சும்மா மூஞ்சிய தூக்கி வெச்சுட்டு வெறுப்பேத்தாத"

"டேய், ஏண்டா மச்சான் டென்ஷன் ஆகற, அவன் அப்படித்தான் விடு, இப்ப அவகிட்ட என்ன, எப்படி பேசப் போறேன்னு மட்டும் யோசி"

"என்னது, நாஆஆன் பேசப் போறேனாஆஆஅ"

"ஆமாம், நீ தாண்டா, இதெல்லாம் நல்லா செய்வே"

" ஆமாண்டா, இதுல எனக்கு பத்து வருஷ எக்ஸ்பீரியன்ஸூ இருக்கற மாதிரியல்ல சொல்ற"

" சரிடா, மச்சி பேசுடா"

அதற்குள் பெட்டிக்கடை வந்துவிடவே, "சார், ஒரு ரூபா காயின் இருக்குதா?,

பெட்டிக்கடைக்காரரும் "எத்தனை வேணும் சார்?"

"ஒரு அஞ்சு குடுங்க" என ஐந்து ரூபாயை நீட்டி, சில்லரை வாங்கி செல்போனில் நம்பர் பார்த்து டயல் செய்தவனை பெட்டிக்கடைக்காரரும் வினோதமாகத் தான் பார்த்தார்.

"ஹலோ",

"ஹலோ, சொல்லுங்க" குரலைக் கேட்டதும் பாலாஜிக்கு உடலில் ஒரு இனம் புரியா கிளர்ச்சியும் நடுக்கமும்.

"என் பிரண்டுதான் இந்த நம்பரைக் குடுத்தான். அ...அது...... அது வந்துங்க"

"சரி, எப்ப வர்றீங்க?" இதை சற்றும் எதிர்பாராததால் நிலை குலைந்து போய், ரிசீவரின் வாயைப் பொத்திக் கொண்டு " டேய், எப்ப வர்றீங்கன்னு கேக்கறாடா" என கிசுகிசுத்தான். அவனும் இதை எதிர்பார்க்காததால், ஒரு அரை விநாடி யோசித்து விட்டு, "நாளைக்குன்னு சொல்லு",

"அ, ஹ, ஹ, ஹலோ, நாளைக்கு வ்ர்றோம்"

"வர்றோம்னா, எவ்வளவு பேரு"

"மூணு பேரு" என்றவுடன், பீட்டர் சைகையில் நான் இல்லை என்க, அவனை பார்வையாலேயே அடக்கிய பிரசன்னா, "இரு, அவன் பேசட்டும்".

அங்கு மறு முனையிலிருந்து "மூணு பேரா, ஓ.கே, எத்தனை மணிக்கு"

"ஈவ்னிங் ஏழு மணிக்கு வர்றோம்"

"ஓ.கே, அப்ப அப்பாயிண்ட்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணீரட்டா"

"ஓ.கே. ஓ.கே"

" நாளைக்கு ஈவ்னிங் ஒரு அஞ்சு மணிக்கு கால் பண்ணுங்க"

"எதுக்குங்க?"

"மத்த விஷயத்தையெல்லாம் நாளைக்கு நீங்க கால் பண்ணும்போது சொல்றேன் டார்லிங்"

"ஓ,கே"

"ஓ,கே, பைய்ய்ய், சீ, யு டுமாரோ டார்லிங்"

போனை வைத்ததுமே எதோ ஒரு சாதனை நிகழ்த்தியது போல ஒரு மதப்பில்"சார், ஒரு கிங்ஸ் குடுங்க" என்று வாங்கி பற்ற வைத்தவனை, மற்ற இருவரும் ஆவலுடன் பார்த்தனர். புகையை உள்ளுக்கிழுத்தவாறே, பெட்டிக்கடையை விட்டு சற்று தள்ளி வந்து, " மச்சி, நான் சொன்னனில்லையாடா, இவ மத்தவுளுக மாதிரி இல்லடா, என்ன போல்டா பேசறா தெரியுமா, எடுத்த எடுப்புலயே எப்ப வர்றேன்னு கேக்கறாள்னா அவ எவ்வளவு ஓப்பன் மைண்ட்டடா இருக்காள்னு பாத்துக்கோயேன்"

"ம், சரி, இப்ப என்ன பண்றது?"

"என்ன பண்றதா, ஒரு கையால பூமியை சீக்கிரமா சுத்திவுட்டு நாளைக்கு அஞ்சு மணி ஆக்கிடு"

"கடிக்காதடா, என்ன ரேட்டு, எங்க வரணும்னு கேட்டுருக்கலாம்ல"

"ஆமாடா, இப்ப சொல்லு இதெல்லாம், அங்க ரிசீவரோட வாய பொத்திகினு கேட்டப்ப எல்லாம் பொத்திகினு இருந்தீங்க, சரி, சரி, விடு, அதான் நாளைக்கு கூப்படச் சொல்லீருக்காள்ல, அப்ப பேசிக்குவோம்"

"டேய், இவன் ஏண்டா, மந்திரிச்சு வுட்டவன மாதிரி மூஞ்சிய வெச்சுருக்கறான், பீட்டர் மச்சான், மறுபடியும் சொல்றேன், வேணான்னா நின்னுக்கோடா"

"அதில்ல, மச்சான், இதெல்லாம் தப்பில்லையா, கல்யாணத்துக்கு முன்னால இதெல்லாம்........"

"ஐயா, பாதிரியாரே, பைபிளை எடுத்துட்டு அப்படி ஓரமா போயிருங்களேன், எங்க வழியில ஏன் வர்றிங்க"

"டேய், விடுங்கடா, நாளைக்கு என்ன பண்ணப்போறோம்கறத யோசிங்கடா"

"நாளைக்கா, மச்சி நாளைக்குத்தான்...!!!! வேணாண்டா எனக்கு ஒரே வெக்கமா இருக்குது"

ஹெல்மெட்டை மாட்டிவிட்டு " பை டா" என்று ஹெல்மெட்டின் கண்ணாடிக்குள்ளேயே சொல்லிக்கொண்டு, கண்ணாடியை தூக்கிவிட்டு "மச்சான் பீட்டரு, கடவுள் கிட்ட இதெல்லாம் ஒளிவு மறைவில்லாம நாளைக்கு சொல்லீட்டு வா, ஏன்னா அடுத்த நாள் போய் மன்னிப்பு கேட்கணும் பாரு" ன்னவனை முறைத்தபடியே பீட்டர் வண்டியை கிளப்பினான்.

நாளைக்கு,,,,.....,,,,

காலையிலிருந்தே மூவருக்கும் ஒரு இனம் புரியா பரபரப்பு, மூணு மணிக்கே பிரசன்னா சொன்னான், " மச்சி, இப்பவே பேசலாண்டா"

"அடங்குடா, அதான் அவ அஞ்சு மணிக்குனு சொன்னாள்ல"

அந்த அஞ்சு மணிக்கு, இன்னொரு பெட்டிக்கடையிலிருந்து,

"ஹலோ"

தேனொழுகும் குரலில்"ஹலோ, சொல்லுங்க"

படபடப்புடன், மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு பாலாஜி "நாந்தாங்க, நேத்து பேசுனனே, நீங்க அஞ்சு மணிக்கு பேசச் சொன்னீங்க"

"ஓ, அந்த மூணு பேரு குரூப்பா?"

"ஆமா"

"உங்களுக்கு ஒரு பிரண்டு நம்பர் குடுத்தார்னு சொன்னீங்களே, அவர் எல்லா டீடைலும் சொன்னாரா?"

"இல்லீங்களே, போன் பண்ணி பேச சொன்னாரு, மத்த விஷயத்தையெல்லாம் உங்க கிட்ட பேசிக்க சொன்னாரு"

"அவர் பேர் என்ன சொன்னீங்க?"

"சேகர்"

""சரி, இப்ப எங்க இருக்கீங்க?"

"நான் இப்ப நுங்கம்பாக்கத்திலிருந்து பேசுறேன், இன்கம் டேக்ஸ் ஆபீசுக்கு பக்கத்துல இருக்கேன்"

"சரி, நான் சொல்றத கவனமா கேட்டுக்குங்க, நான் செலக்டட் கஸ்டமருக்குத்தான் சர்வீஸ் பண்றேன். நீங்க என்ன ஐ.டி.யா?

"இல்லீங்க, வேற ஒரு எம்.என்.சி" (மனதுக்குள் இதெல்லாம் அவசியமா)

"சரி, நான் சொல்ற இடத்துல பணத்தோட வந்து நில்லுங்க."

"................................................."

"என்ன சத்தத்தையே காணோம், ஏமாத்திருவனோன்னு பயமா, அப்படி நம்பிக்கை இல்லாம இருந்தா வேண்டாம்"

"அப்படி இல்லீங்க, அது ..... வந்து... எத்தனைன்னு சொல்லவே இல்லியே"

"பத்தாயிரம்"

"பத்தா, டூ மச்"

"நான் வந்து பேரம் பேசற ரோட் சைட் பார்ட்டி இல்லை, தேவையில்லன்னா போன கட் பண்ணுங்க"

"அதில்லைங்க, வந்து..... அது, ....ஒரு செகண்ட் ஹோல்ட் பண்ணுங்க"

ரிசீவரின் வாயை பொத்திக்கொண்டு, "மச்சி, பத்து கேக்கறாடா" பீட்டரின் வாய் பிளந்த படியே நின்று போக, பிரசன்னா ஒரு முடிவோடு சொன்னான், "சரி எங்க கொண்டு வர்றதுன்னு கேளு"

"சரி நாங்க வந்து பணத்தை குடுக்கறோம்"

"ஹா, ஹா, ஹா, பணத்தை நான் வாங்கறது இல்லை, எங்க மேனேஜர் வருவாரு அவுரு கிட்ட குடுங்க"

"அதில்லை, பணத்தை நாங்க உங்க இடத்துக்கு கொண்டு வந்து குடுத்தற்ரோம்"

"நம்பிக்கையில்லையா, அப்ப சரி, வெச்சுடறேன்.

" அதில்லைங்க, எப்படி இருந்தாலும் உங்க கிட்டதான வரப்போறோம், அங்கயே குடுத்தரலாம்னுட்டுத்தான்"

"சிஸ்டம் அப்படி இல்லைங்க, மேனேஜர் தான் பணத்தை வாங்குவாரு"

"சரிங்க"

"பணத்தோட நுங்கம்பாக்கம் பார்க் ஹோட்டலுக்கு பின்னால இருக்கற பார்சன் காம்ப்ளெக்ஸ்க்கு வந்துட்டு கால் பண்ணுங்க, பைய்ய்ய்"

அடுத்த பத்து நிமிடத்தில்,

"ஹலோ, பணத்தோட வந்துட்டங்க"

"சரி, காம்ப்ளெக்சுக்கு பின்னால பவித்ரானு ஒரு ஹோட்டல் இருக்கும். அங்க வெயிட் பண்ணுங்க ஒரு ஃபாஸ்ட் டிராக் கால் டேக்சி வரும், அந்த டிரைவர் கிட்ட பணத்த குடுத்துருங்க, பணம் அவர் கைக்கு போனதும் நான் கூப்பிடறேன்"

"ஹலோ, அவுரு தான் உங்க ஆளுன்னு நாங்க எப்படி நம்புறது?"

"பரவாயில்லையே, ரொம்ப உஷாரா இருக்கீங்க, கண்ணா, இந்த தொழில்ல நம்பிக்கை தான் முக்கியம். இருந்தாலும் உனக்கு ஒரு க்ளு குடுக்கறேன், அந்த டிரைவர் கிட்ட "டால்ஃபினுக்கு மீசை முளைச்சுருச்சான்னு கேளுங்க, அவரு கடல் தண்ணி இன்னும் வத்தலைன்னு" சொல்வாரு,அவுரு பதில் சொன்னா மாத்திரம் குடுங்க சரியா"

"சரி, அவர வரச் சொல்லுங்க "

பீட்டர் கலவரத்துடன் " மச்சி போதுண்டா, இதோட நிறுத்திக்கலாண்டா" என்றதும், அவனை கையெடுத்துக்கும்பிட்டு " பாதர், நீங்க சர்ச்சுக்கு போங்க பாதர்" என்று சொல்லிவிட்டு ஒரு கிங்ஸ் வாங்கி பாலாஜி பற்ற வைத்தான், மூவருக்கும் மனதுக்குள் ஒரு கிளுகிளுப்பாக இருந்தாலும் பயமாகவும் இருந்தது. யாரும் யாருடனும் பேசவில்லை, சிகரெட் முடிந்ததும் பாலாஜி அதை கீழே போட்டு மிதிக்கும் பொழுது அந்த பாஸ்ட் டிராக் எட்டிப் பார்த்...., பாலாஜி கேள்வி கேட்...... டிரைவர் பதில் சொல்......., பணம் கை மாற.............கார் கடந்து சென்றது.

"டேய், என்னடா, இன்னும் போனையே காணோம்", பீட்டர் கேட்க, அவனை கொலைவெறியோடு பார்த்த பாலாஜியின் செல் துடித்தது.

"ஹலோ"

"ஹலோ, என்ன கண்ணா, ரொம்ப நேரமா வெயிட் பண்ண வெச்சுட்டனா, சாரிமா, இந்த ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் இந்த தொழில்ல அவசியம்ப்பா, சரி, நான் சொல்றத கவனமா கேளு, எனக்கு கோல்ட் ஃப்ளேக் கிங்ஸ்தான் பிடிக்கும், ஒரு பாக்கெட் எனக்குனு வாங்கிட்டு வந்துரு"

"எங்க வரணும்?"

"கே.கே. நகர் தெரியுமில்ல, அங்க பாண்டிச்சேரி ஹவுஸ்னு ஒரு பில்டிங் இருக்கும் அதுக்கு எக்ஸாட்டா பின்னால ராஜேஷ்வரி அபார்ட்மெண்டுனு ஒரு அபார்ட்மெண்ட் இருக்கும், அதுல ஹவுஸ் நம்பர் 27, அதுல தான் இந்த ராணி அந்த ராஜாவுக்காக வெயிட் ப்ண்றேன், சீக்கிரம் வாங்கடா என் ராஜாக்களா"

"அங்க வாட்ச்மேன் தொந்தரவு எதாவது?????"

"ஒண்ணும் கவலைப்படாத, அங்க யாரும் இருக்க மாட்டாங்க, நீங்க தாராளமா வரலாம், இது டீசண்டான இடம் கண்ணா, யாரும் இருக்க மாட்டாங்க"

"சரி இன்னும் ஹாஃபனவர்ல அங்க இருப்போம்"

"சீ யூ, உம்ம்ம்ம்மாஆஆஆ"

அந்த உம்மாவில் அதிர்ச்சியடைந்தாலும், ஆவல் மிகுதியில் "மச்சி ரெண்டு பாக்கெட் கிங்ஸ் வாங்கிக்கோடா" என்று சொல்லி விட்டு, பைக்கை நோக்கி நடந்தான் பாலாஜி.

கே.கே. நகர், பாண்டிச்சேரி ஹவுஸ், ராஜலட்சுமி அபார்ட்மெண்ட், வாட்ச்மேன்.

"சார், யாருங்க"

"27 - ம் நம்பர் வீட்டுக்கு போகணும்"

வாட்ச்மேன் ஒரு புன்னகையுடன் மூவரையும் ஏற் இறங்க பார்த்துவிட்டு, "நம்மளை எதாவது கவனியுங்க சார்"

ஒரு தாளை கைமாற்றி விட்டு, பதட்டத்துடனும் அவசரத்துடனும் 27ம் வீட்டை அடைந்தால், வீடு பூட்டி இருக்கிறதா, திறந்திருக்கிறதான்னே தெரியாமல் அப்படி கதவிலேயே பதித்த ஒரு பூட்டு,
பாலாஜி கதவை லேசாக இரண்டு முறை தட்டினான், மனதுக்குள் மத்தாப்பு.முகத்தில் ஒரு புன்னகை. மற்ற இருவரும் யாராவது தங்களை கவனிக்கிறார்களா என்று பார்த்தார்கள்.

இரண்டாவது முறை சற்று பலமாக தட்டினான், முகத்தில் கலவரம், இன்னும் பலமாக தட்டி, அப்புறம் பலபலபலமாக தட்டி, முகத்தில் கொலைவெறியோடு, ஃபோனை எடுத்து "ஹலோ, என்ன விளையாடறீங்களா, 27 ம் நம்பர் வீட்டுல யாரும் இல்லையே"

" கூல் டவுன் கண்ணா, நானும் அதத்தான சொன்னேன் 27ம் நம்பர் வீட்டுக்கு வாங்க அங்க யாரும் இருக்க மாட்டாங்கன்னு, அங்க யாரும் இல்லையா, பெஸ்ட் ஆப் லக் நெக்ஸ்ட் டைம்"

"ஹலோ, ஹலோ, ஹலோ"

இப்பொழுது பீட்டரின் கண்ணில் கொலைவெறி.

Wednesday, April 8, 2009

இத்த இன்னாண்ணு சொல்றது

ஒரு நாளைக்கு ஒரு முறையாவது

உன் விழிச்சாட்டை அடிகள்

என் மீது வீசப்படாவிட்டால் - என்

மனக் குதிரை மண்டியிட்டுக் கொள்கிறது.என் வீட்டுக் கண்ணாடியில் என்ன

வகை மாயம் செய்தாய்,

என்னைத் தேடினால், சந்தோஷமாய்

வேறு எவனோ ஒருவன்.பூக்களின் முகத்தை அனைவரும்

காணுவர். ஆனால் இன்றுதான்

கண்டேன், ஒரு பூவின் பின்னால்

ஒரு முழம் மல்லிகைப் பூ.கவிஞர்களாலா கவிதை உருவானது

இல்லை, இல்லை, - இதோ

ஒரு கவிதை ஒரு கவிஞனை

உருவாக்குகிறது.

Monday, April 6, 2009

தமிழ்மணம் கால் சென்டர்

டிஸ்கி : இது முழுவதும், மறுபடியும் நகைச்சுவைக்காகவே எழுதப்பட்ட பதிவு, யாருடைய மனதையும் புண்படுத்தவோ, படைப்புகளை ஏளனம் செய்யவோ அல்ல. அப்படி யாரையாவது புண்படுத்துமானால் தயவு செய்து பொறுத்தருள்வீர்.

சரி இனி மேட்டருக்கு வருவோம்.இப்பொழுதெல்லாம் எந்த ஒரு சேவைக்காகவும் ஒரு நிறுவனத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டால், நொந்து நூலாகிப்போகுமளவிற்கு பதிவு செய்யப்பட்ட வர்ணனைகள், அல்லது எதாவது ஒரு சேவைக்காக காத்திருக்கச் சொல்லிவிட்டு எதாவது ஒரு பாடலைப் போட்டு மணிக்கணக்கில் ஓடவிடுகிறார்கள். முடிவில் ஒரு அரை மணி நேரம் கழித்து மறுபடியும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து நிற்போம்.

இப்படி தமிழ்மணத்திற்கென ஒரு அழைப்பு மையம் (Call Center) இருந்தால் எப்படி இருக்கும் :

அழைப்பு மையத்தை தொடர்பு கொள்ள வேண்டுமானால் முதல் நிபந்தனை நீங்கள் கைபேசியில் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும்.

"வணக்கம், தமிழ்மண வலைதிரட்டியின் அழைப்பு மைய சேவைக்கு வந்திருக்கும் உங்களை வரவேற்கிறோம். தமிழில் தொடர 1ஐ அழுத்தவும். திருநெல்வேலி தமிழில் கேட்க இரண்டை அழுத்தவும். மதுரை தமிழில் கேட்க 3 ஐ அழுத்தவும். கோவைத்தமிழில் கேட்க 4 ஐ அழுத்தவும். சென்னைத்தமிழில் கேட்க 5ஐ அழுத்தவும்."

நீங்கள் 5 ஐ அழுத்த,

மறுபடியும் பதிவு செய்யப்பட்ட குரல்,

"அல்லாரும் எயிதிக்கறதை லுக் வுடறதுக்கு வந்துக்குறீங்கோ, வந்ததுக்கு டேங்சு. நான் சொல்றதை கரீக்டா கேட்டுனு, அத்தே மாதிரி அயித்திகினே இருங்கோ, அல்லாம் கரீக்டா தெரியும், எதுனா தப்பு பண்ணிகினு, இன்னாட நம்ப ஒண்ணு கேக்க, அத்து இன்னாவோ டபாய்க்குதேன்னு நீங்களா மெர்சலாயினிருந்தா, அது எந்தப்பு கடியாது"

தமிள்மணத்துல ஆளாளுக்கு இன்னா இன்னாவோ எளுதுனிக்குறாங்கோ, அது அல்லாத்தையும் பட்சினிருந்தா, நீ டரியல் ஆயிருவே மாமு, அதுனால நாங்களா அத்த பிர்ச்சு வெச்சுக்கறொம். நாங்க சொல்ல சொல்ல உனக்கு இன்னா படிகணுமோ, அத்த டைப் அட்சுகினே இரு, அதுவா வரும். இப்ப ஸ்டார்ட் மீஜிக்"

அந்த காலத்துல எந்த ராஜா எந்த ராணியோட எப்படி குஜால் பண்ணாரு, கல்யாணமே பண்ணிக்காம இருந்த கவிஞருங்கோ லேடீஸை பத்தி இன்னா இன்னா கனவு கண்டாங்கோ, ஒரு பொம்பிளிய தலையிலிருந்து கால்வரைக்கும் எப்படியில்லாம் எளுத்துலயே டாவு உட்டாங்கோ, இந்த மாதிரி மேட்டரெல்லாம் தெரியணுமா, " யாவரும் கேளிர்"னு டைப் அடிங்கோ, "பதிவுலக கம்பர்"னு ஒருத்தர் வருவாரு, அவருகிட்ட அந்தப் பனை ஓலைல எழுதுன மேட்டரெல்லாம் பேசுங்க. சும்மா அவுத்து உட்டுகுனே இருப்பாரு. ஆனா, இரு, இரு இரு வர்றேன், திடீர் திடீர்னு இவுரு திருடன் போலீஸ் கத எல்லாம் எழுதினிருப்பாரு, அத்த எல்லாம் நீயா பட்சுகினு, நீயா புரிஞ்சுக்கோ,

அப்பாலிக்கா, எந்நேரமும் வூட்டுக்காரியாண்ட டாவு உட்டுகுனே ஒருத்தர் இருப்பாரு, இப்ப திடீர்னு பேரெல்லாம் மாத்திகினிக்கறாரு, அவுரு கடக்கி போனியான தங்கமணி, ரங்கமணினு இன்னா இன்னாவோ எளுதியிருப்பாரு, அத்த பட்சா நீ பேஜாராயிடுவ, அத்து இன்னாண்னா, டிவி பொட்டியில எப்பவுமே ஒரு எலியும் பூனையுமா ஒரு பிலிம் காட்னிக்குறாங்க பாரு, அதுல பூனை எப்பவுமே எலியை அட்சுகினே இர்க்கும், திடீர்னு எலி ஒரு தபா திர்ப்பி அடிக்கும் பாரு, பூனை அவ்வ்வ்வ்வ்வ்னு கத்திகினு ஆஃப் ஆயிரும். அதான் மேட்டரே, இந்த மேட்டர ஒரு குஜால சொல்லீருப்பாரு. பட்சிகினே இர்க்கலாம், அப்பாலிக்கா முதுகு வழியா நெஞ்ச தொடற மாதிரி டச்சிங்கா நெறய மேட்டர் எழுதீக்கறாரு, அத்த பட்சதுக்கப்புறம், கவுஜ, அவுரு புடுங்கற ஆணினு இன்னாஇன்னாவோ எழுதீக்கறாருப்பா, ஆனா அவுரு கடைக்கு பேரு மாத்திரம் "புலம்பல்கள்" னு வெச்சிக்கறாரு, சரி, சரி லூசுல வுடு, பேருக்கும் அவுருக்கும் இன்னா கனிக்ஷனெல்லாம் யோசிச்சு மெர்சலாவாத.

அப்பிடியே கடை கடையா லுக் வுட்டுகுனே போனியானா, திடீர்னு சினிமா பத்தின அத்தினி மேட்டரும் உள்ள ஒரு கடை வரும். ஷோக்கா குட்டிங்க படமெல்லாம் போட்டு, அப்பாலிக்கா இன்னாவோ கட்டங்கட்டமா போட்டு, அதுக்குள்ளாற நெறய கலர் கலரான மேட்டரெல்லாம் ஒரே பீட்டரா உட்டுனு, நாளைக்கு ரிலீஸாகற பிலிமுக்கு இன்னைக்கே கமெண்ட்ரி குட்த்துகுனு ஒரு கடை இர்க்கும், அதை பாத்து அப்பிடியே வாயப் பொளந்துனு நிக்காத, அது வேற யாருமில்ல, நம்ப கேபிள் அண்ணந்தான். அவுரு எங்க போய் ஒருதபா கொத்து பரோட்டா சாப்டாரோ தெரியல, அதெ மாதிரி ஒரு ஐட்டம் வெச்சிக்கறாரு,அதுல பாருப்பா, கடேசில ஒரு செக்ஸ் மேட்டரை தொட்டுக்கறதுக்குனு குடுப்பார் பாரு, ஆஹா, சூப்பர்பா!!!!

அப்பாலிக்கா, ஒரு கட வரும்பாரு, ஒரே பத்து பத்தா இருக்கும், இந்த கடைக்கு போகணும்னாலே படகு உட்டுகுனுதான் போவணும். அவுரு கேள்வி கேட்டா பத்து, புத்தகம் பட்சா பத்து, அல்லாமே பத்துதான், எங்க போய் வாங்கி கட்டிகினு, அத்துக்காக பத்து போட்னுகுறாரோ, ஆனா ஷோக்கா எயிதினுக்கறார்பா, அவியல்னு ஒரு ஐட்டம் வெச்சினிக்றாரு, சும்மா கம கமனு ஒரே டேஸ்டாக்குது. ஒரு வாரத்துக்கு நெறயா தபா எதுனா சரக்குள்ள மேட்டரா இறக்குவாரு, நம்ம பனியன், அண்ட்ராயர் எல்லாம் பண்ற கம்பெனிங்க நெறய இக்கற ஊர் இல்லை, அத்துல தான் இவுரும் இர்க்காராம்.

எல்லாம் பட்ச்சு, பட்ச்சு ஒரு மாதிரி நிக்கறயே, இன்னா மேட்டரு, இன்னாது புச்சா எதுனா படிக்கணுமா, ஆங், அப்டி வா, இந்த புச்சா எழுத்றேன், புச்சா எழுத்றேன்னுட்டு ஒரு கும்பலா கிளம்பியிருக்கங்கபா, இன்னா எழுதுறாங்கன்னு அவுங்களுக்கு புரியிதோ இல்லியோ, உன்னோட மூளைய வறுத்து உன்கே சர்விங் ப்ண்ற பார்டிங்களா ஒரு சில கடயில குந்தினுக்குறாங்கோ, "மொழி விளையாட்டு"னு ஒரு கடை இர்க்கும் பாரு, கவுஜயா 83 தரம் இன்னதுதான்னு இல்லாத எல்லா மேட்டரையும் எள்தீக்கறாரு, இன்னாடான்னு பாத்தா "விடுபட்ட வரிகள் காணாமலே போனது, ஆறு ஓடிச் சேருமிடம் கடல்" ங்கறாரு, இன்னா, எதுனா தெர்தா, இல்ல எதுனா தெர்தானு கேக்கறேன். அதான், அதான், அத்தேதான், எல்லாம் புர்ஞ்ச மாதிரி கமுக்கமா போய்கினே இரு. இதுக்கு இன்னா மீனிங்னு கேட்டியனா, ங்கொய்யால, இத்து கூட தெரியாம இன்னாத்துக்குடா கவுஜ படிக்க வர்றீங்க? கைநாட்டு கம்னாட்டிங்களா!!!!!!!

அப்பாலிக்கா "ஒண்ணுமில்ல ச்சும்மா" னு ஒரு கட இர்க்கும். அந்தக் கடக்காரரு புதுக்கோட்டக் காரரு, சிங்கப்பூரு, துபாய்னு பொசுக்கு, பொசுக்குனு போய்கினும் வந்திகினுமே இர்ப்பாரு, எந்தக் கடையவாவது எனிமீஸ் அட்டாக் பண்ணிக்கறாங்களா, கடைங்களுக்குள்ள எதுனா மேட்டர் பிகுருஸலா ஆயினுக்குதானெல்லாம் அப்பப்ப வானிலை அரிக்கை மாதிரி எள்திக்கினே இர்ப்பாரு, எல்லா கடையிலும் பூந்து அண்ணே, அண்ணே னு எதினா கும்மிக்கிட்டிருப்பாரு, ஆனா, ஆளு மாத்திரம் தங்கம்ப்பா!!!!!!!!!!!!!!????, பளசு, புச்சுனு சிங்கப்பூரைப்பத்தி எதோ எள்தறதுக்கு ஒரு மூணு மாசம் முன்னாடி ஸ்டார்டிங் பண்ணாரு, அது இன்னாவோ அனுமார் வால் கணக்கா, தமிழ் சீரியல் கணக்கா போய்கினேக்குது, ம்ஹூம், பாப்போம், எத்தினி ஃபாஸ்டா போனாலும் தண்டவாளம் இருக்கறவரையும் தான ரயிலு போவும்.

அட இன்னாபா, எல்லாத்தையும், நானே சொல்னிக்குறேன், வெறுங்கொடலோட எத்தினி அவுரு பேசினிக்கறது, கொஞ்சம் தொண்டைய கூல் பண்ணிக்கறேன். அது வரை நீ 3 ஆம் நம்பரை அமுக்கு, மதுரைக்கார பார்ட்டி லைன்ல வரும், அது கைல மத்த கடைங்களை பத்தி கேட்டுக்க...., இன்னா வர்ட்டா!!!!!

Friday, April 3, 2009

தயவு செய்து உதவுங்கள்

கோடை காலம் வந்தாச்சு, தர்பூசணிப் பழங்கள், குளிர்ச்சி தரும் காய் கறிகள், வெய்யிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க வழிகள், உடல் சூட்டை தணிக்க உணவு வகைகள் என்று என்னென்னவோ திட்டமிட்டிருப்போம்.

ஆனால் வாருங்கள், நம்மை அண்டிப் பிழைக்கும் ஜீவன்களுக்கும் சிறிதே கருணை காட்டுவோம்.


ஆயிரம் முறை சிறகடித்தாவது ஒரு சொட்டுத்தண்ணீரை குடிக்கத்துடிக்கும் இந்தக் குருவியை பாருங்கள். அடுத்த சொட்டு தண்ணீருக்காக வரிசையில் இன்னொரு குருவி. (கார்க்கி, நான் சொல்றது படத்துல தெரியற குருவியை).

இந்தக் கோடையில் ஒரு முடிவெடுப்போம்.

நாம் எந்த வகையான வீட்டில் வசித்தாலும் சரி, ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் மொண்டு திறந்த வெளியில் தினமும் வையுங்கள். தாகமெடுத்த ஒரு பறவையாவது தண்ணீர் பருகட்டும்.