Sunday, December 28, 2008

யார் முதலில் கல் எறிவது???

என் நண்பர் ஒருத்தர் அடிக்கடி சொல்லிகிட்டே இருக்கார். " எல்லா பயலும் வேஸ்ட் சார், படிக்கற வரைக்கும் இந்தியா வேணும், இவுனுங்க படிச்சு முடிச்சுட்டு உடனே அமெரிக்கா பறந்துருவானுங்க, அங்கிருந்துட்டு இந்தியாவை பார்த்து " what a rubbish country" னு சொல்வானுங்க, ஆனா கல்யாணம் பண்ணனும்னா உடனே இந்தியாவிலிருக்கிற சொந்த பந்தங்களுக்கு சொல்லி விடுவானுங்க, நல்ல குடும்பப்பாங்கான, சமைக்கத்தெரிந்த ஆனா அதே சமயத்தில் நல்லா இங்கிலீஷ் பேசத்தெரிந்த, எதையும் அட்ஜஸ்ட் பண்ணீட்டு போகத்தெரிந்த பொண்ணாப் பாருங்கம்பானுங்க, கல்யாணம் பண்ணீட்டு அந்தப்பொண்ணையும் கூட்டிகிட்டு போயிட்டனுங்கன்னா, அவ்வளவுதான், அவுனுங்களுக்கு இந்தியான்னாலே எளக்காரமா இருக்கும். தான் ப்டிச்ச நாடாச்சே, தனக்கு தொழில் சொல்லிக்கொடுத்த நாடச்சேன்னு கொஞ்சமும் ஒரு நன்றியுணர்வு கூட இல்லாத நாய்ங்க இவுனுங்க." " ஏன் பொண்ணு பாக்கும்போதுமட்டும் நல்ல குடும்பப் பாங்கான பொண்ணா அமெரிக்காவுலயே பார்க்க வேண்டியதுதானே, அப்ப மட்டும் என்ன தாய்நாட்டுப் பாசம் வழியுது "

இப்படியாய் அவர் சொல்வதெல்லாம் கேட்கும்பொழுது தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்க்கிறாரோ என நினைப்பேன்.
ஆனால் உண்மையில் ஒரு வெளி நாடுவாழ் இந்தியனின் கண்ணோட்டத்தில் இந்தியாவைத் திரும்பிப் பார்த்தால், நிச்சயமாக வெளிநாடு வாழ் இந்தியர்களின் பார்வையில் நியாயம் இருப்பதாகத் தோன்றும்.
நம்மில் அநேகர் அந்த வழக்கமான அறிவுரையை கூறுவார்கள். " நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்பதற்கு முன், நீ நாட்டுக்கு என்ன செய்தாய் என யோசித்துப்பார்" என்பார்கள். நானும் இருக்கிற கொஞ்ச நஞ்ச மூளையை கசக்கி யோசித்துப் பார்த்தேன்.

நான் நாட்டுக்கு செய்யத் தயாராய் இருப்பது :
1. இந்த நாட்டிலிருந்து நான் பெற்ற செல்வங்கள் அனைத்தையும் அது கல்வியாகட்டும், செல்வமாகட்டும், என் திறமையாகட்டும், எனது எதுவாக வேண்டுமானாலும் ஆகட்டும், அதை அனைத்தையும் என் தாய்த் திருநாட்டின் வளமைக்கென அர்ப்பணிக்க நான் ஆர்வமுடனும் ஆவலுடனும் உள்ளேன்.

2. நான் பெற்ற திறமைகள் என்னோடு அழிந்து விடாதபடி, அதனால் மற்றவர்களும் பயன் பெறும் வண்ணம் அதை எனக்குப் பின் வரும் சந்ததிகளுக்கும் கற்றுத்தர ஆவலாய் உள்ளேன்.
3. என் தாய்த் திருநாட்டில் வியாபித்திருக்கும் வளங்கள் யாவற்றையும், அது கனிம வளங்களாகட்டும், தாவர வளங்களாகட்டும், அடர்ந்து வளர்ந்த காடுகளாகட்டும், நீர் நிலைகளாகட்டும், யாதொன்றையும் மாசு படுத்தும் பணியிலோ, அல்லது அழித்தொழிக்கும் பணியிலோ என் சுவாசம் உள்ளளவும் ஈடுபடமாட்டேன் என உறுதி கூறுகிறேன்.
4. இன்னும் இறையாண்மைக்குக் கட்டுப்பட்டவனாக, சட்டம் ஒழுங்கை மதிப்பவனாக, அப்படியாக, இப்படியாக, எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென கூறுகிறீர்களோ, அப்படியே வாழ்வதாக உறுதி கூறுகிறேன்.

ஆனால், நான் மதிக்கும் இந்த நாடு என்னையும் மதிக்கும் என நம்புகிறேன். என் நாடு என்னை மதிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதற்கு எனக்கு சகலவிதமான உரிமையும் உள்ளது.

நான் இந்த நாட்டிடமிருந்து எதிர்பார்ப்பது.
1. எனக்கு உலகத்தின் அனைத்து செல்வங்களும் தேவையில்லை. மனித உயிர் ஆரோக்கியமாய் வாழ அடைப்படைத்தேவையான சுத்தமான காற்றைத் தாருங்கள்.

2. எனக்குத் தாகமெடுத்த போது பருகவும், நான் குளிக்கவும் எனக்கு அமுதினும் இனிய பாலும் தேனும் ஓடும் நதிகள் வேண்டாம். ஆனால் சுத்தமான நீரை தங்கு தடையில்லாமல் தாருங்கள். (ஐக்கிய முன்னணி அரசு பதவி ஏற்றவுடன், முதல் பட்ஜெட்டில் ப. சிதம்பரம், மிகவும் பெருமையுடன் அறிவித்தார்: சென்னையில் கடல் நீரை குடி நீராக்கும் திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் என்றார். இன்னும் எந்தக் கடல் நீரை குடிநீராக்குவது என்று கடலைத் தேடி அலைகிறார்கள் போலும். சௌதி அரேபியாவில் அந்த நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு குடிநீர் வினியோகத்துக்கென கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் அமல் படுத்தப்பட்டு செயலிலும் உள்ளது. ஆனால் என் தாய்த்திரு நாட்டில் வெறும் ஒரு நகரத்தின் குடிநீர்த் தேவையை பூர்த்தியாக்க ஆயிரம் கோடி ரூபாயை கையில் வைத்துக் கொண்டு எங்கள் மாண்பு மிகுக்கள், ஐந்தாண்டுகளாக கடலைத்தேடி அலைகிறார்கள்). ஐயா, நான் கேட்பது என் வீட்டு நீச்சல் குளத்தில் நானும் என் குடும்பத்தினரும் நீந்தி மகிழ அனுதினமும் சுத்தமான தண்ணீர் தாருங்கள் என்றல்ல, நானும் என் சந்ததியும் தொண்டை நனைக்க தினமும் சிறிது தண்ணீர் தாருங்கள் என்றுதான். நான் என் நாட்டில் படித்துவிட்டு வெளி நாட்டில் சென்று வேலை செய்வதால் என்னைத் தூற்றுகிற என் அன்பர்களே, எனக்கு சிறிதே சுத்தமான தண்ணீர் தாருங்கள்.
3. நான் வசிப்பதற்கு மேடு பள்ளமில்லாத ஒரு இடம் தாருங்கள். மேடு பள்ளமில்லாத என்று சொன்னால், நான் இங்கு நல்ல வடிகால் வசதியுடன் என்று அர்த்தம். எனக்கு ஏரிகளையும், குளங்களையும் வசிப்பிடங்களாக்கித் தராதீர்கள். மழை பெய்தால் அந்த நீர் வழிந்தோட வாய்க்கால் வசதியுடன் கூடிய ஒரு சிறு நிலப்பரப்பை எனக்குத் தாருங்கள்.

4. நான் நடந்து செல்ல சமன் படுத்தப்பட்ட ஒரு மண்பாதையாவது தாருங்கள். குழிகளும், குப்பையும் குவிக்கப்பட்டிருக்கும் நிலப்பரப்பையெல்லாம் சாலைகள் என்று தயவு செய்து சொல்லாதீர்கள். என் வீட்டின் முன்னாலிருக்கும் சாலையின் அழகை புகைப்படமாக்கித் தந்துள்ளேன். கண்டு களியுங்கள்.



கடந்த மழையில் மழைத்தண்ணீர் வெளியேற கால்வாய்கள் எதுவும் இங்கு இல்லையாதலால், வீடுகளுக்குள் தண்ணீர் சென்று குளமானது வேறு விஷயம். அதற்கு ஒரு கால்வாய் வெட்டி, தண்ணீர் வெளியேற வழி செய்யுங்கள் என்று மக்கள் அனைவரும் சாலைமறியலில் ஈடுபட, ( அடிப்படை உரிமைகளை பெறுவதற்கு அல்ல, பேசுவதற்கு கூட என் தாய் திரு நாட்டில் சாலைமறியல் அவசியம், வாழ்க ஜனநாயகம்) அதிகாரிகள் வந்து பேசி, சாலைமறியலை கைவிட வைத்தார்கள். அதன் பிறகு எந்த அதிகாரிக்கு ஞானோதயம் வந்ததோ தெரியவில்லை, கட்டிடத்தின் இடிக்கப்பட்ட கழிவுகளை பாதையில் கொட்டி, பள்ளங்களை சமன் செய்கிறார்களாம். இப்படி கற்களை கொட்டி வைத்து அந்தப்பகுதியில் எந்த வாகனப் போக்குவரத்தும் இல்லாமல் ஒரு வாரத்தை கழித்தோம். ஒரு வாரத்துக்குப்பின் இரண்டு ஆட்கள் வந்து ஒரு அரை மணி நேரம் சம்மட்டியால் அடித்து ஒரு கல்லை இரண்டு பெருங்கற்களாக்கி விட்டு போய் விட்டனர். இந்த கற்குவியலின் மீதுதான் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறோம். வண்டி எதுவும் உள்ளே வர முடியாதாகையால், ஒரு பிரசவ வலி கண்ட நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணை மற்றவர் குறைந்தது அரை கிலோமீட்டர் தூரம் தூக்கிச்சென்றுதான் பிறகு வண்டியில் அமர்த்தி மருத்துவ மனையில் சேர்த்தார்கள். இதுவரை இந்த கற்குவியலில் விளையாடும் பொழுது தவறி விழுந்து இரண்டு சிறுவர்கள் கை உடைந்து மாவுக்கட்டுடன் இருக்கிறார்கள்.

இந்த கற்குவியல் கிரீன்வேஸ் சாலையிலோ அல்லது கோபாலபுரம் சாலைகளிலோ அல்லது போயஸ் தோட்ட சாலைகளிலோ சாலையை செப்பனிடுவதற்கென குவிக்கப்படுமா??

தினமும் இந்த அவல நிலையைக்குறித்து அரசு அதிகாரிகளிடம் முறையிட்டுக்கொண்டுதான் இருக்கிறோம், ஆனால் எதோ பிச்சைக்காரர்களிடம் நடந்து கொள்வதைப் போல்தான் எங்களிடம் நடந்து கொள்கிறார்கள். ஆனால் எங்கள் வார்டு கவுன்சிலர் மாத்திரம் வந்து வெள்ள நிவாரண நிதியை வாங்கிச் செல்லுங்கள் என மறக்காமல் அறிவித்துச் செல்கிறார். அவரிடம், ஐயா எங்களுக்கு நிவாரண நிதி வேண்டாம், அந்தப்பணத்தை வைத்து ஒரு நல்ல சாலை அமைத்துக் கொடுங்களேன் என்று சொன்னோம், எங்களை பார்த்து பிழைக்கத் தெரியாதவர்களாய் இருக்கிறீர்களே என்பது போல் பார்த்துவிட்டு சென்று விட்டார். தினமும் வேலைக்கு செல்வதற்காய் அரை கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று விட்டு அங்கிருந்து ஆட்டோவில் செல்கிறேன். ஏனெனில் எனது காரை எடுக்க முடியாது. எடுத்தால் இந்த கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி அது வெறும் துண்டுகளாகத்தான் கிடைக்கும். குறைந்த பட்சம் கார் சக்கரத்தை விட சிறிய கற்கள் இருந்தால் கூட அதன் மேல் காரை ஒரு தரமாவது ஓட்டி வெளியே கொண்டு வந்து விடலாம் தான், ஆனால் அந்த நாள் எப்பொழுது வாய்க்குமோ தெரியவில்லை.

இனியும் சொல்லுங்கள், நான் என் தாய் திரு நாட்டிற்காக என்ன செய்ய வேண்டும்??

5. எனக்கு ஒரு சுத்தமான வசிப்பிடம் தர முடியுமா உங்களால்? என் நகரத்தின் ஒரு பிரதானமானதும், அதிக மக்கள் போக்குவரத்து நிறைந்ததுமான ஓர் சாலையைப் பாருங்கள்,



இந்த சாலையின் ஒரு பக்கம் முழுவதும் இப்படித்தான் குப்பை கொட்டி வைக்கப்பட்டிருக்கிறது. உடனே நீங்கள் கேட்கலாம் "உன்னை யார் ரோட்டில் குப்பை கொட்டச் சொன்னது, நீங்களே இப்படி பண்ணிட்டு, நிர்வாகத்து மேல குற்றம் சொல்லலாமா?" அட அட நில்லுங்க சார், இது நாங்க கொட்டுனது இல்ல சார், எங்க தெருவிலிருந்து வாரி எடுத்துட்டுப் போய் நிர்வாகத்தினர் தான் இப்படி கொட்டி வைத்துள்ளார்கள். இது எதுக்குனு எங்களை கேட்காதீங்க, இதிலிருந்து வரும் புழுக்களும் பூச்சிகளும் தினமும் எங்கள் வீட்டு விருந்தாளிகள்தான். இந்த துர்நாற்றம் எங்களுக்கு பழகிப் போய் விட்டதால், எங்கள் பகுதியில் மல்லிகைப் பூ வாசமெல்லாம் எங்களுக்கு மறந்து போய் விட்டது.

நான் கேட்பதெல்லாம் எனக்கு ஒரு உல்லாச புரி வேண்டும் என்று அல்ல, ஒரு மனித உயிருக்கு தேவையான அடிப்படை வசதிகளை மட்டுமே கேட்கிறேன். இந்த அடிப்படை வசதிகளை தருவதற்கான குறைந்த பட்ச உத்திரவாதத்தை யாரால் தர முடியுமோ, அவர் மாத்திரம் என் மீது கல்லெறியட்டும்.

10 comments:

SurveySan said...

beautiful post.

//என் வீட்டின் முன்னாலிருக்கும் சாலையின் அழகை புகைப்படமாக்கித் தந்துள்ளேன். கண்டு களியுங்கள்//

:(

//யார் முதலில் கல் எறிவது???//

well, if you want to see changes, you have to start first :)
take two or three of your neighbors and ask questions to your local government officials.

Ask them to do their duty.
Ask them everyday, until you see some changes.

its tough, but we have to start somewhere.

தராசு said...

வருகைக்கு நன்றி சர்வேசன்,

மக்களைத்திரட்டி அதிகாரிகளை கேள்வி கேட்க நினைத்தோம். ஆனால் வீட்டுக்கு ஆட்டோ வருமோவென பயமாய் உள்ளது.

குடும்பத்தையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, லுங்கியை மடித்துக்கட்டிக்கொண்டு, சட்டை கைகளை தோள்வரை தூக்கி விட்டுக்கொண்டு, வாயில் புகையும் பீடியுடன் அதிகாரிகளிடம் பேசச் சென்றால் ஒருவேளை மரியாதை கிடைக்குமோ என்னவோ????

சதங்கா (Sathanga) said...

//ஒரு மனித உயிருக்கு தேவையான அடிப்படை வசதிகளை மட்டுமே கேட்கிறேன். //

அதே ! அதே !!

இது இருந்தா நம்ம நாடு எங்கேயோ போயிரும்.

DHANS said...

oru 50 varudangal kalithu muyandru parungal.. ungalukku athrstamirunthaal nadalkkalaam

illai endraal oru manthiriyai ungal veetirku arugil kudi amartthungal...

தராசு said...

//அதே ! அதே !!

இது இருந்தா நம்ம நாடு எங்கேயோ போயிரும்.



வருகைக்கு நன்றி சதங்கா,//

தராசு said...

வருகைக்கு நன்றி தன்ஸ்.

மந்திரியை என் வீட்டின் அருகில் குடிவைப்பது நடக்காத காரியம். ஆனால் நான் 50 வருடங்கள் காத்திருக்கத் தயார். அதற்கப்புறமாவது எனது நாடு என் குறைந்த பட்ச தேவைகளை நிறைவேற்றுமா?

Anonymous said...

இருக்கறத வெச்சு திருப்தியாகிக்கோ சார். முதல்ல அடிப்படை வசதிம்ப, அப்புறம் அவசிய வசதிம்ப, அப்புறம் அந்த வசதி, இந்த வசதி, இதெல்லாம் நடக்கிற காரியமா?

தராசு said...

அனானி,

பிரச்சினை எதில் திருப்தியாவது என்பது அல்ல, திருப்தியாவதற்கெண்று எதுவுமே இல்லை என்பது தான்.

புதுகை.அப்துல்லா said...

படித்து முடித்ததும் நான் முதன் முதலில் வேலைக்குச் சென்றதே வெளிநாட்டில்தான். அங்கு சென்றபின் தான் தெரிந்தது என் தாய்நாடு என்னோடு எந்த அளவிற்கு இரண்டறக் கலந்து இருக்குன்னு. பத்தே மாதத்தில் இந்தியா திரும்பி வெளிநாட்டு சம்பளத்தில் 5 ல் ஒரு பங்கு மட்டுமே பெற்று இங்கேயே இருந்துவிட்டேன். நான் தாய்நாட்டிற்கா உழைக்கிறேனா என்று தெரியவில்லை. ஆனால் எனக்காக என் நாட்டில் உழைக்கிறேன் :)

தராசு said...

வருகைக்கு நன்றி அப்துல்லா.

யார் சொன்னார்கள் எனக்கு என் தாய் நாட்டின் மீது பற்று இல்லை என்று. நானும் என் தாய் திரு நாட்டிற்காக உயிர் உள்ளளவும் பாடுபட விரும்புகிறேன்.

ஆனால் என்னை என் நாடு ஒரு மனிதனாகவாவது மதிக்கவில்லையே என்பதுதான் என் ஆதங்கம்.