Thursday, January 28, 2010

ஆமாடா, ரூல்ஸ் எல்லாம் எங்களுக்குத்தானா??????

கடந்த 25ம் தேதி, பங்களாதேஷுடன் டெஸ்ட் போட்டியில் ஆடிக் கொண்டிருந்த இந்திய அணியில், கொஞ்சம் உணர்ச்சி வசப்படும் வீரரான ஹர்பஜன் சிங்கின் ஒரு செய்கை உலக கிரிக்கெட் கவுன்சிலின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தது. ஹர்பஜன் சிங் மன்னிப்பு கேட்டார் என ஊடகங்கள் கத்தித் தீர்த்து நிம்மதியடைந்தது. இந்திய கிரிக்கெட் வீரர்களிலேயே கொஞ்சம் அதீத உணர்ச்சி வசப் படுபவர் இந்த ஹர்பஜன். அவர் ஒரு விக்கெட் வீழ்த்தியவுடன் செய்யும் ஆரவாரமாகட்டும், ஸ்ரீசாந்த்தை பளாரென அறைந்ததாகட்டும், 25ம் தேதி பங்களாதேஷில், தன்னைக் கடந்து பவுண்டரி லைனுக்கு போன பந்தைக் கண்டு வெறுப்புற்று, விளம்பரப் பலகையை எட்டி உதைத்ததாகட்டும், இவர் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதால் வம்பை விலைக்கு வாங்கும் நபராகவே திகழ்கிறார்.

சரி, கோபப்பட்டு, எட்டி உதைத்து, அது நடுவரின் கண்களில் பட்டு, அதற்காக மன்னிப்பும் கேட்டு விட்டார். ஆனால் ஊடகங்கள் அதை விடுவதாயில்லை, குறிப்பாக மேற்கத்திய வெள்ளைத்தோல் ஊடகங்கள் “இங்க பார்றா, இவுருக்கெல்லாம் கோபம் வருதாம், கோபம்” என்ற உள்குத்து நக்கலுடனேயே இதை வர்ணித்து வருகின்றன. புது விதமான ஆங்கில வார்த்தையில் “ Harbhajan reprimanded for kicking the board” என்ற ரீதியில் இதை எழுதி வருகிறர்கள்.

உலக கிரிக்கெட் வரலாற்றிலும் சரி, இன்னும் எந்த விளையாட்டு வடிவத்திலும் சரி, நிறவெறி என்பது இன்னும் முற்றிலும் ஒழிந்து விடவில்லை. இம்ரான் கான் பாகிஸ்தான் அணித்தலைவராயிருந்து 1992 – ல் உலகக் கோப்பை வென்ற போது, எதிரணியில் விளையாடி தோற்ற இங்கிலாந்து அணித்தலைவர் கிரகாம் கூச் ஒரு மரியாதைக்கு கூட இம்ரான் கானுடன் கைகுலுக்க வரவில்லை. கடைசியில் வேண்டா வெறுப்பாய் ஒரு முறை கையை தொட்டு விட்டு சென்றார். இதை போட்டியில் தோற்றதால் ஏற்படும் விரக்தியாக என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. இப்படியாக ஒவ்வொரு முறையும் வெள்ளையரல்லாத ஒரு வீரர் எந்த வெற்றிகளை அடைந்தாலும் அதை கறுப்பர்களுக்கு கிடைத்த வெற்றியாகத்தான் வெள்ளையர் உலகம் பார்க்கிறதே தவிர, தேர்ந்த விளையாட்டு வீரன் வெற்றி பெற்றான் என்ற மனப் பான்மை இன்னமும் வரவில்லை.

டென்னிஸில் ஜான் மெக்கென்ரோ விம்பிள்டன்னின் மைய அரங்கில் காறித்துப்பலாம். ஆண்ட்ரூ ஃபிளின்டாஃப், யுவராஜ் சிங்கை வெளிப்படையாக திட்டலாம். ஆண்டி ரோடிக் என்ற அமெரிக்க சுள்ளான், டென்னிஸ் மட்டையை ஓங்கி வீசிவிட்டு அந்த நான்கெழுத்து வார்த்தையை சொல்லி கத்தலாம். ஷேன் வார்ன் பந்தை எப்படி வேண்டுமானாலும் எறியலாம். இல்லிங்வொர்த் என்ற இங்கிலாந்து சுழல் பந்து வீச்சாளைரின் கையசைப்பிலேயே தெரியும் அவர் பந்தை வீசுகிறாரா அல்லது எறிகிறாரா என்று, இன்னும், தென் ஆப்பிரிக்க வெள்ளையரான பேட் சிம்காக்ஸ் சுழல் பந்து வீசுவது லகான் படத்தில் அமீர்கானின் அணி வீரர்கள் பந்தை எறிவார்களே அப்படித்தான் இருக்கும். ஆனால் இதைக் குறித்து விமரிசனங்கள் எழும் பொழுதெல்லாம் ஊடகங்கள், குறிப்பாக மேற்கத்திய ஊடகங்கள் அவர்களது முதுகு தடவி, சரி சரி லூசுல விடுப்பா என வேதம் ஓதும்.

அதே சமயத்தில் முத்தையா முரளிதரன் அதிக விக்கெட் எடுக்க ஆரம்பித்தவுடன், எல்லா வெள்ளைத் தோல்களும் ஒருசேரக் கத்தும், அது எப்படி ஒரு கறுப்பன் பந்து வீச்சில் பிரகாசிக்கலாம், பிடியுங்கள் அவனை. அவன் பந்தை எறிகிறான். சர்வதேச பந்து வீச்சு நிபுணர்கள் அவனை சோதிக்க வேண்டும் என்பார்கள். பாகிஸ்தானின் ஷாக்குலின் முஷ்தாக் “தூஸ்ரா” விசினார் என்றால், அவன் எப்படி புது முறையை கண்டுபிடிக்கலாம், அது முற்றிலும் தவறு, உடனே ஷாக்குலின் சோதிக்கப் படவேண்டும் என்பார்கள். ஹர்பஜன் சிங் சுழலில் சுழட்டி எடுத்தவுடன், ஹர்பஜனுக்கு பந்து வீசவே தெரியவில்லை, உடனே சோதியுங்கள் என கூக்குரல் எழுந்தது.

இந்திய வீரர்களை எந்த வெள்ளைத்தோல் வீரனும், முறைக்கலாம், காறித்துப்பலாம், திட்டலாம், என்ன வேண்டுமானலும் செய்யலாம், இதெல்லாம் விளையாட்டில் சகஜமப்பா என்பார்கள். ஆனால், ஸ்ரீசாந்த் ஒருமுறை மேத்யூ ஹெய்டனை முறைத்து விட்டால், இவன் எப்படி முறைக்கலாம் என புருவங்கள் உயரும்.

இந்த நிறவெறி கல்லும் மண்ணும், நீரும் நிலமும், காற்றும் வானும், நிறமும் உள்ளவரை அப்படியேதான் இருக்குமோ???

டிஸ்கி : இதற்காக ஹர்பஜனின் அச்சு பிச்சுகளையோ, ஸ்ரீசாந்தின் அதிகப் பிரசங்கத்தனத்தையோ அடியேன் ஆதரிக்கவில்லைங்கோ.......

Wednesday, January 20, 2010

மழை - கேபிள், தண்டோரா பார்வையில்

மழையைப் பற்றி பேசாத மனிதர்கள் இருப்பது அபூர்வம். எல்லா மொழிகளிலும் மழையை வர்ணித்து ஒரு கவிதையாவது கண்டிப்பாய் இருக்கும். இங்கு தமிழில் சில கவிஞர்கள் மழையை வர்ணித்தால் எப்படி இருக்கும் என ஒரு பார்வை:

சிலப்பதிகாரத்தில் மழை

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற் கவனளி போல்
மேனின்று தான் சுரத்தலான்

(மழை பொழிகையில் எல்லாருக்கும் பெய்யும். இரண்டு பேர் மழையில் இருந்தால் இருவருக்கும் ஒரே மழைதான். அதுபோல அரசனுடைய கொடையும், நீதி நியாயங்களும் அனைவருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது மறைபொருள்.)

வைரமுத்துவின் வார்த்தை விளையாட்டில் மழை :

யாரங்கே?
வாருங்கள்

விண்ணுக்கும் மண்ணுக்கும்
தண்ணீர்ப்பாலம் பாருங்கள்

திரவ முத்துக்கள்
தெறிப்பது பாருங்கள்

யாசித்த பூமிக்கு
அந்த வானம்
வைரக் காசுகள்
வீசுவது பாருங்கள்

மழை மழை
மழைமழை
மழை மழை

மண்ணின் அதிசயம் மழை


சேவியர் அண்ணாவின் செதுக்கிய வார்த்தைகளில் :

மழை

மழைத் துளியல்ல,

சோர்வின் வடுக்களை

அழுத்தித் துடைக்க

மேகப் பருத்தி நெய்து

இறக்கும்

மழைத் துணி

எங்கள் நிரந்தர யூத் கவிஞர் அனுஜன்யாவின் பார்வையில்:

நீ புறப்பட்டு விட்டது தெரிந்த
மனது சொல்லியது
அடுத்த சாலையில்
நீ வந்துகொண்டிருப்பதை ;
பரபரக்கும் அந்தக் கணங்கள்
மிகத் துல்லியமான தருணங்கள்.
புரியவில்லையா? இதைக் கேள்!
மழைக்கு முன் சோதனை முயற்சியாய்
இலேசான தூறல் விழும் -
மண்வாசனையைப் பூசிக் கொண்டு;
அதற்கு முந்தைய தருணத்தை
யோசித்திருக்கிறாயா கண்ணே !

இருளத் துவங்கும் முன் வானம்
கடைசியாய் ஒரு முறை பிரகாசிக்கும்
எங்கிருந்தோ தென்றலும் சேர்ந்து
ஓரிரு மின்னல்களுடனான இடியும் கலந்து
ஒரு அரிய இசைக் கச்சேரியின்
அனைத்து ஆயத்தங்களும்
அதில் புலப்படும்.
சொற்ப காலமே எனினும்
அரிய, துல்லிய தருணங்கள்.
தூரலில் நீ வேகமாய் வந்ததும்
பிறகு நாம் மழையை கொண்டாடியதும்
காதலின் உன்னதம் எனினும்
முன் சொல்லிய துல்லிய தருணங்களுக்கு
எதுவுமே ஈடாகாது -
பெருமழை மற்றும்
உன்னையும் சேர்த்து


இனி இதே மழையைப் பற்றி எங்கள் என்டர் மன்னன் கேபிள் அண்ணன் எழுதினால்:

வானத்தின் முலைகள்
வெள்ளை மேகங்கள்
விம்மிப் புடைத்தன
நிறம் மாறி கருத்தன

கசமுசா செய்ய
காற்று வந்தது.
கரங்களினாலே
கசக்கிப் பிழிந்தது.
பொழிந்தது மேகம்
தணிந்தது தாகம்
நிறம் மாறி நிலத்தில்
ஓடுது வெள்ளம்.

இதே மழையைப் பற்றி எங்கள் பின் நவீனத்துவ விமர்சகர் தண்டோரா எழுதினால்:

பூமியை வானம் புணர்ந்ததின் உச்சம்
உச்சத்தின் எச்சத்தில்
நிறமில்லா மச்சம்………
மழைத்துளி.

Friday, January 8, 2010

நூற்றைம்பது ரூபாயில் சூனியம்

வருடத்தின் முதல் நாள். உருப்படியா எதாவது செய்யணும்னு நெனச்சு, என்ன பண்ணலாம்னு கிட்னிய கசக்கி, சே, மூளைய கசக்கி யோசிச்சு யோசிச்சே நேரம் போயிட்டிருந்தது. அதுக்குள்ள வீட்ல இருந்து அதிகார மையத்தார் ஒரு பெரிய லிஸ்டே போட ஆரம்பிச்சதுனால, அதுல இருக்கற வேலைகளை எல்லாம் செய்து முடிக்கறதுக்குள்ள 2012 ம் வருடம் வந்து உலகம் அழிந்து விடக் கூடிய சாத்தியங்கள் அதிகமிருப்பதால், எப்படியும் இந்த வன்முறைக்கு ஒரு முடிவு கட்டணும்டா முனியாண்டின்னு முடிவு எடுத்துட்டு, புத்தகக் கண்காட்சி போலாம்னு என் மசோதாவை தாக்கல் செய்தேன்.

அதிகார மையத்திடமிருந்து “கண்ணி வைக்காமலே வேங்கை வீழ்கிறதே, ஆச்சரியக்குறி” என்ற கவிதை கலந்த பார்வை வந்தவுடனேயே, ரூட்ட மாத்தியிருக்கலாம். ஆனா, நாம போன வருஷத்துல பண்ணுன பாவத்துக்கெல்லாம், இந்த வருஷ முதல் நாளிலிருந்தே தண்டனை அனுபவிக்கணும்னு எம்பெருமான் எழுதி வெச்சுட்டாரோ என்னவோ, விதி யாரை விட்டது.

புத்தாண்டு கொண்டாட்டங்களில் களைத்துப் போயிருந்த சென்னை நகரம் சற்றே துயிலெழுந்து கொட்டாவி விட்ட மாலை நேரம். சாலைகள் வெறித்திருக்காவிடினும், நெரித்துத்தள்ளவில்லை. ஒரு வழியா கண்காட்சி மைதானத்துக்கு போகும்போது மாலை 6 மணி. இந்த முறை கார் நிறுத்துவதற்கு நல்ல ஏற்பாடுகள் இருந்தது. அல்லது 1 ம் தேதி குறைவான கார்களே இருந்ததோ என்னவோ, சீக்கிரத்தில் நிறுத்தி விட்டு பிளக்ஸ் பேனர்களில் சிரித்துக் கொண்டிருந்த எழுத்தாளர்களை எல்லாம் வரிசையாக பார்த்துக் கொண்டே நடந்தோம். நுழை வாயிலிலேயே மகள் பாப் கார்ன் வாங்கிக் கொண்டாள். அனுமதிச்சீட்டு வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்ததும் எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதில் குழப்பம். நம்ம என்னைக்கு நேர் வழியில போயிருக்கறோம், வழக்கம் போல கடைசியில இருந்தே ஆரம்பிப்போம் என ஆரம்பித்தோம்.

என்ன புத்தகம் வாங்கவேண்டும் என ஒரு பட்டியலே போட்டுக் கொண்டு போனேன். ஆனால், நாம ஒண்ணு நினைக்க தெய்வம் வேற ஒண்ணுதான நினைக்கும். கடைசியில இருந்து அப்படியே ஊர்ந்துகிட்டே போய் நாம எதிர்பார்த்தது கிடைக்கல. சரி இருக்கறத எதிர்பார்ப்போம்னு இன்னும் நடந்துகிட்டே இருக்கும்போது தான் அந்தப் பதிப்பகம் கண்ணுல பட்டுது. இதுக்குள்ள போய் பார்க்கலாமேன்னு போனப்பதான் அதன் உரிமையாளர் கடைக்கு வெளியில சக்கர நாற்காலில அமர்ந்து கைபேசியில சிரித்து சிரித்து பேசிகிட்டிருந்தாரு. அடடே, அந்த பிரபல எழுத்தாளரோட புத்தகமெல்லாம் இருக்குதேன்னு பார்த்துட்டு இருக்கறப்போ, “இது யாரு இது, காதுல வளையமெல்லாம் போட்டுகிட்டு, இப்படி ஆம்பளைங்க ஒரு காதுல வளையம் போட்டுகிட்டா என்ன அர்த்தம் தெரியுமில்ல” னு என் மறுபாதி கேட்பதற்கும், அந்தக் குரல் கேட்டு அந்த காதுல வளையம் ஆசாமி திரும்பிப் பார்ப்பதற்கும் சரியாய் இருந்தது. அவருக்கு இவுங்க சொன்னது சரியா கேட்டுச்சோ இல்லையோ தெரியல, ஆனா அவுரு பார்த்த பார்வையிலயே கேட்டிருக்குமோன்னு ஒரு சந்தேகம் வந்துச்சு. சரி எதுக்கும் இருக்கட்டுமேன்னு “புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்”னு நான் கையை நீட்டிவிடவும். என்பக்கம் திரும்பினார் அவர். அப்பொழுது தான் கவனித்தேன் ஆஹா, அவரா, இவுருன்னு கிலியடிச்ச மாதிரி நின்னுட்டேன். கணப் பொழுதில் சுதாரித்துக் கொண்டு, நானும் ஒரு பதிவர் தான், உங்க எழுத்தையெல்லாம் படிச்சிருக்கேன்னு சொன்னேன். அப்படியான்னு முகத்தில் எந்த வித மாற்றமுமில்லாமல் உணர்ச்சியே இல்லாதவரைப் போல கேட்டாரு. வேற யாராவது பதிவர்களைப் பார்த்தீங்களான்னு கேட்டேன். ஆமாம், லக்கியும் டாக்டர் புரூனோவும் வந்திருக்காங்கன்னு சொன்னாரு. உடனே அவுருகிட்ட கையெழுத்து வாங்கறதுக்காக ஒருத்தர் வந்தாரு. அவருக்கு கையெழுத்து போட்டுகிட்டிருக்கும்போதே, நானும் இந்த பிரபலத்துகிட்ட கையெழுத்து வாங்கலாமேங்கற நப்பாசையில அவர் எழுதுன புத்தகம் எதாவது இருக்குதான்னு பார்த்தா, அந்த பூஜ்ஜியக் கோணம் இருந்துது. டக்குனு அதை எடுத்து, இதுல கையெழுத்து போட்டுக் குடுங்க சார்னு சொன்னவுடனே, உங்க பேரென்னன்னு கேட்டாரு, சொன்னதும் என் அன்பு நண்பர்…………… அவர்களுக்குன்னு எழுதி அவர் பெயரையும் எழுதி குடுத்தாரு.

மனுஷன் அநியாயத்துக்கு அன்பு பாராட்டறாரேன்னு பார்த்துட்டு, அந்த கடையிலயே இன்னமும் கொஞ்சம் தேடினப்பதான், அந்த ஆச்சரியம் காத்திருந்தது. இந்த காதுல வளையம் பார்ட்டி, யாரை பரம்பரை எதிரி மாதிரி திட்டுவாரோ அவர் எழுதின புத்தகங்கள் நேர் எதிர் வரிசையில் இருந்தது. இது என்னடா, “இம்மியளவு இடைவெளியில் இரண்டு துருவங்களா, ஆச்சரியக் குறி” (என்னமா கவிதை பாருங்க) அப்படீன்னு மனசுல நெனச்சுகிட்டு, அதுலயும் ஒண்ணை வாங்கிட்டு சரி போலாம் ரைட்னு இன்னும் தேடலை ஆரம்பித்தோம்.

கிழக்கு பக்கமா போயி அந்த அரசர்களெல்லாம் குஜால் பண்ணதப் பத்தி தலையணை சைஸ்ல ஒருத்தர் எழுதுன புத்தகம் இருக்கான்னு கேட்டா, இன்னும் வரலீங்க, வர்றதுக்கு ரெண்டு நாளாகும்னு சொல்லீட்டாங்க. ஒரே ஏமாற்றம். அதுக்காக விடுவமா, இன்னும் மூணு மாசம் கழிச்சுத்தான் தமிழ்நாட்டுப் பக்கமே வரப் போறோம், அதுவரைக்கும் தாக்குப் பிடிக்கணுமேன்னு, மூணு மாசத்துக்கான சரக்கை தேத்திக்கிட்டு, அப்படி இப்படீன்னு மகளுக்கு கொஞ்சம், அப்புறம் அதிகார மையத்துக்கு கொஞ்சம்னு கைநிறைய புத்தகங்களை வாங்கிகிட்டு வீட்டுக்கு வந்துட்டோம்.

வீட்டுல வந்து அந்த பூஜ்ஜியக் கோணத்தை திறந்து படிக்க உக்கார்ந்தா, ரெண்டு பக்கம்தான் படிச்சிருப்பேன், உவ்வே, வ்வே, வ்வ்வ்வ்வ்வ்வே, த்தூ, த்தூ. வாந்தி, வாந்தியா வருது. கஷ்டப்பட்டு வாந்தி எடுத்து முடிச்சிட்டு, அந்த அதிர்ச்சியிலிருந்து வெளியில வர்றதுக்கு ஆறு நாள் ஆச்சு. ஆறு நாளைக்கப்புறம் கணினியைத் திறந்தா, இன்னொரு மனிதனின் குமுறல் வேற.

மனசுக்குள்ள ஒரு குறுகுறுப்பு, இந்த வருட முதல் நாள்லயே கைக்காசை செலவு பண்ணி வாந்தியெடுக்கறதுக்காக ஒரு புத்தகம் வாங்கி, அதுல கையெழுத்து வேற வாங்கிட்டு வந்துட்டமே, இதைத்தான் சொந்த செலவுல சூனியம்ங்கறதா?????

Wednesday, January 6, 2010

மறுபடியும் ஆணி புடுங்க ஆரம்பிச்சாச்சு

அய்யாமாருங்களே, அம்மாமாருங்களே, அண்ணன்களே, அவர்களே, இவர்களே எல்லாரும் நல்லாருக்கீங்களா? புதுவருஷம் பூத்து குலுங்குது, எல்லாரும் இந்த புது வருஷத்துல ஒரு இதுவா இருக்கணும்னு வேண்டிக்கறேன்.

அப்பப்பா, என்னா டென்ஷன், என்னா டென்ஷன்…, வேலை செய்யற இடத்துல கிறிஸ்மஸூக்கு லீவுல போறேன்னு சொன்னா, அது டிசம்பர் 25ம் தேதி தானே, நீ ஏன் 22ம் தேதியே போறேன்னு கழுத்தறுத்தாங்க. ங்கொய்யால, நீங்கெல்லாம் சாப்பாடு தொண்டைல விக்குனதுக்கு அப்புறம்தான் தண்ணிக்குடம் எடுத்து கிணத்துக்கு போவீங்களாடான்னு வாய்வரை வந்த கவிதையை ஒலி வடிவத்துல மாத்தாம, மனசுக்குள்ளயே மடிச்சு வெச்சுட்டு, லீவு சொல்லி, விமானம் பிடித்து, சென்னை விமான நிலைய ஓடுதளத்தை விமானம் தொட்டவுடனே ஒரு ஃபீலிங்கஸ் மனசுக்குள்ள வரும் பாருங்க, ஆஹா, அத்த இன்னான்னு சொல்றது.

இந்த வருஷம் நமக்கு அதிகம் வேலை வெக்காம, தங்கமணியே கிறிஸ்மஸ் மரம் வெச்சு, ஸ்டார் கட்டி, அப்படி இப்படின்னு எல்லா வேலையும் முடிச்சுட்டாங்க. அதனால நமக்கு கொஞ்சம் வேலை கம்மி. இல்லைன்னா ஒவ்வொரு வேலைக்கும் பல்பு வாங்கியே கிறிஸ்மஸ் மறந்து போயிருக்கும்.

இந்த லீவுல வண்டி எடுத்து என்ஜின் கதறக் கதற ஒரு 3240 கிலோ மீட்டர் சுத்துனோம். சொந்த மண்ணான கொங்குநாடு, அப்புறம் த்ங்கமணிக்காக கேரளா, அப்புறம் அங்க இங்கன்னு ஒரே யாத்திரைதான். நிறைய சபரிமலை பக்தர்களை பார்க்க முடிந்தது. அவுங்க போற வர்ற வழியிலெல்லாம், அவுங்களுக்குன்னு கவர்ச்சி விளம்பரம் கொடுத்து துட்டு பார்க்கற வியாபாரிகள் கலக்கறாங்க. அதுவும் கம்பம், குமுளி, தேக்கடியிலெல்லாம் கடைகள் இரவு பகல்னு பார்க்காம திறந்திருக்கு. குமுளி மசாலா பொருள்கள் விளையும் இடம்கறதால, மசாலாங்கற பேர்ல என்னத்த வெச்சாலும் சாமிகள் கூட்டம் அள்ளீட்டுப் போகுது. அந்த காட்டுல கிடைக்கற மஞ்சியையெல்லாம் அள்ளிகிட்டு வந்து, அதை கொண்டையில ஒரு பந்து வைப்பாங்களே அந்த சைஸ்ல தட்டையா உருட்டி, பிளாஸ்டிக் காகிதத்துல அடைச்சுட்டாங்கன்னா அதுதான் மூலிகை மஞ்சியாம். அதை உடம்புல தேச்சு குளிச்சா சருமத்துக்கு நல்லதுங்கறாங்க. குமுளில விளையறதென்னமோ மிளகு, ஏலக்காய், கிராம்பு, பட்டை இந்த மாதிரி பொருள்கள்தான். ஆனா சோம்பு, கொத்தமல்லின்னு மதுரையிலிருந்து வாங்கிட்டு வந்து பாக்கெட்டுல போட்டு, அதை மதுரையிலிருந்து வர்ற சாமிக்கே விக்கறாங்க. அதையும் மதுரைக்கார சாமி பேரம் பேசி ரொம்ப மலிவா இருக்குன்னு வாங்கிட்டு போறார்.

பெரிய பிரியாணி சட்டியில எவ்வளவு கொள்ளுமோ அந்த அளவுக்கு மைதா மாவு, அதுல தோராயமா சர்க்கரை சேர்த்து, கொஞ்சம் முந்திரியையும் திராட்ச்சையும் போட்டு, அடுப்புல வெச்சு, தீய நல்லா எரிய விட்டு கலக்கு கலக்குன்னு கலக்கறது.சர்க்கரைப் பாகு இளகி, மாவோட கலநது கெட்டியாகற நேரத்துல, பச்சையோ, மஞ்சளோ, சிவப்போ எதாவது ஒரு கலர்பொடிய போட்டு இறக்கி வெச்சா அதுதான் அல்வாவாம்.

நம்மளுக்கு வேண்டப்பட்டவங்களும் நேந்திரங்காய் சிப்ஸ் கடை போட்டிருந்ததால கொஞ்ச நேரம் இந்த கூத்தையெல்லாம் பார்க்க முடிஞ்சுது. இந்த தரம் அங்கிருக்கற மலையாள மக்கள் பண்ணுனதுதான் ரொம்ப சூப்பரா இருந்துது.

மலையிலிருந்து திரும்பி வர்ற ஒரு கர்நாடகா சாமிகள் கும்பல். குமுளியில நின்னு மசாலாவெல்லாம் வாங்கிகிட்டிருந்தாங்க. அப்ப அங்க ரோட்டோரக் கடை வெச்சிருக்கற ஒரு நாலைஞ்சு சேட்டன்கள் ஒரு கன்னட சாமியப் புடிச்சு உங்க உருவப் படம் வரைஞ்சு குடுக்கறேன்னு சொல்லி அதுக்கு நூறு ரூவா ஆகும்னு சொல்ல, அவரும் எதோ மகாராஜா ஸ்டைல்ல உக்கார்ந்துட்டாரு. ஒரு பென்சிலும் பேப்பரும் எடுத்த ஒரு சேட்டன் ஒரு பதினைஞ்சு நிமிசத்துல மனித உருவம் மாதிரியே தெரியற ஒரு படத்தை வரைஞ்சு, இதுதான் நீங்கன்னாங்க. கன்னட சாமி டென்ஷனாயிருச்சு. இதுக்கும் எனக்கும் சம்பந்தமேயில்லன்னு அவரு கன்னடத்துல கத்த, அதுக்கு இவுங்க சொன்ன பதிலைக்கேட்டு சாமி டரியலாயிட்டாரு. ஒரு சேட்டன் சொன்னாரு, “சாமி, இவட நோக்கு, ஈ படத்துல தாடியும் மீசையும் உண்டோ, இல்லல்லோ, பக்ஷே சாமி மலைக்கு போயதைக் கொண்டு தாடியும் மீசையும் வெச்சுட்டுண்டு, பெங்களூரில் போயி, சாமி ஷேவிங் கட்டிங் ஒக்க செய்துட்டு, பின்ன ஈ படத்த நோக்கு. ஷெரிக்கு இது போலத்தன்ன காணும்”னு சொன்னவுடனே சாமிக்கு திடீர்னு அட ஆமாம்ல, பய புள்ளக சரியாத்தான் சொல்லுதுகளோன்னு ஒரு சந்தேகம் வந்து, படத்தை எல்லா ஏங்கிள்லயும் பார்க்க, கடைசியில அம்பது ரூவாய்க்கு அந்த படத்த சாமிதலையில கட்டி விட்டுட்டாங்க. சாமியும் நூறு ரூவாய்னு சொல்லி அம்பதுக்கு வாங்கீட்டம்ல, எப்பூடீன்னு ஒரு வெற்றிக் களிப்போட போனாரு.

புது வருஷம் சூப்பரா இருந்துச்சு. நண்பர் அதிஷா கூப்பிட்டு வாழ்த்து சொன்னாரு. திண்டுக்கல் பக்கத்துல எதோ வேலையா போயிருக்காராம். அப்புறம் எல்லாருக்கும் குறுஞ்செய்தி அனுப்பி, எனக்கு அனுப்புனவுங்களுக்கு டேங்ஸ் சொல்லி அனுப்பின்னு புத்தாண்டு தினம் போயிருச்சு. குறுஞ்செய்திக்கு அண்ணன் ஆதி அனுப்புன பதில்தான் டெரரா இருந்துச்சு. “ Happy New Year, Be careful from other Duplicate wishers, I am tha only authorized ISO 9001 – 2009 certified distributor of New Year Wishes” னு பதில் அனுப்புனாரு. புது வருஷத்துல ஆரம்பமே இப்படியா நல்லா இருங்கப்பு.

அப்துல்லா அண்ணனும், கேபிள் அண்ணனும் சென்னைக்கு வந்தா கண்டிப்பா சந்திக்கணும்னு சொன்னாங்க. ஆனா முடியல. அதுக்காக அவுங்க ஆள் வெச்சு அடிப்பாங்களோன்னு பயமா இருக்கு.

அப்புறமா, புத்தக கண்காட்சி போயிருந்தேன். அங்க தாங்க வருஷத்தின் முதல் நாள்லயே டரியலாக்கும் அந்த மேட்டர் நடந்தது. என்னான்னு கேக்கறீங்களா, அடுத்த பதிவுல சொல்றேனே.

மறுபடியும் ஆணி புடுங்க மத்தியப் பிரதேசம் வந்தாச்சு.