Monday, October 26, 2009

நமக்கெதுக்குங்க இந்த வம்பு??????

ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தேன். மூன்று நடுவர்கள், ஒரு தொகுப்பாளினி என்ஆட்டம் நன்றாகத்தான் களை கட்டுகிறது. ஆனால், நிகழ்ச்சியில் பேசப் படும் மொழியை கேட்டால் அருவருப்பாக இருக்கிறது. தமிழ் பாடல்கள் பாடப் படுகின்றன. சித்ரா என்னும் நடுவர், முடிந்தவரை தமிழில் பேசுகிறார். அவர் வேறு மொழிக்காரர் என்பதால் அதை பொறுத்துக் கொள்ளலாம். மனோ என்பவர் தமிழில் பேசுகிறார், ஆனால் கொஞ்சமாவது ஆங்கில கலப்படம் இல்லாமல் பேச திணறுகிறார். மூன்றாவதாக ஒரு நடுவர், அவர் பேசுவது என்ன மொழியென்றெ தெரியவில்லை, ஒரு பாடல் என்றால் அதில் சரணம், அனுபல்லவி, பல்லவி என்பவை இருக்கும். ஆனால் இவர் ச்ச்சரணம் என்று கஷ்டப்பட்டு உச்சரிக்கிறார். அதிகமாக புரியாத ஒரு மொழியில் பேசுகிறார். “ நீங்க நன்னா பாடினேள், அந்த top ல போறச்சே, உங்க voice வந்து flatter ஆகாம, steady ஆ இருக்கறது, அந்த ச்ச்ச்சரணத்தோட third word ஐ pronounce பண்ணும் போது ஒரு குட்டி jerk வர்றது. You will have to take note of these குட்டி குட்டி things.” என்று ஒரு புரியாத மொழியில் பேசுகிறார். சீய் தூ என்று துப்ப வேண்டும் போல் உள்ளது.

ஒரு பெண்குழந்தை போட்டியில் தோற்று விட்டதாக நடுவர்கள் தீர்ப்பு சொன்னதும், குழந்தைக்கே உரிய ஏமாற்றங்களுடன் அந்தக் குழந்தை கண்ணீர் வடிக்க, தொகுப்பாளினி அந்தக் குழந்தைக்கு ஆறுதல் சொல்கிறாராம். “அய்யய்யோ இதுக்கெல்லாமா அழுவாங்க, பாருங்க உங்க beautiful cheeks ல tears எல்லாம் roll ஆகி உங்க make up எல்லாம் வந்து spoil ஆகுது பாருங்க” மறுபடியும் காறி தூ தூ தூ

எது எப்படியோ தொலைக்காட்சி காரங்களுக்கு பணம் வந்தா சரிதானே, நமக்கெதுக்குங்க வம்பு?????

***********************************************************************************
இன்று மறுபடியும் இந்திய ஊடகத்தின் மற்றொரு அதிகப் பிரசங்கித்தனமான லொள்ளு:

அமெரிக்க ராணுவத்துடன் ஒரு கூட்டுப் பயிற்சியில் இந்திய ராணுவத்தினர் ஈடு பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தின் புந்தேல்கண்ட் பிராந்தியத்தில் உள்ள ஜான்சி நகரின் வெளிப்புறங்களில் ஒரு காடும் மலையும் சார்ந்த பகுதியை தேடிப் பிடித்து பயிற்சி நடக்கிறது. இந்த பயிற்சியை நேரடியாக தொலைக் காட்சிகள் ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது. ஒரு இந்திய தலைவரையோ, அல்லது விருந்தினராக வந்துள்ள வெளிநாட்டு அரசாங்க முக்கிய மனிதரையோ, சீருந்தில் போகும் பொழுது, திடீரென தீவிர வாதிகள் தாக்கி விட்டால் அவர்களை எப்படி முறியடிப்பது என்பது இன்றைய நாளின் பயிற்சி. தொலைக்காட்சியின் நேர்முக வர்ணனை, இதோ முக்கிய விருந்தினர் வந்து கொண்டிருக்கிறார். அவரது சீருந்தை நோக்கி தீவிரவாதிகள் போகிறார்கள், தாக்குகிறார்கள், திடீரென ஒரு ஹெலிகாப்டர் வருகிறது, அதிலிருந்து அதிரடிப் படையினர் குதிக்கிறார்கள், அவர்கள் தீவிர வாதிகளை பதிலுக்கு தாக்க எப்படி வியூகம் அமைக்கிறார்கள் என நீங்கள் இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இதோ துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம், தீவிர வாதிகளை நோக்கி அலை அலையாக அதிரடிப் படையினர் முன்னேறுகின்றனர். கடைசியில் விருந்தினர் மீட்கப் பட்டார்.

அடேய் வெண்ணைகளா, மும்பை உல்லாச ஹோட்டலில் நீங்கள் நடத்திய அருவருப்பான நாடகத்தினால் எத்தனை வீரர்களை நாம் இழந்தோம் தெரியுமா, அதைப் பற்றிய குற்ற உணர்ச்சி ஒரு அணுவளவாவது இருக்கிறதா உங்களுக்கு? இப்பொழுது மறுபடியும் ஒரு ராணுவ நடவடிக்கையை படம் பிடித்து உங்கள் கஜானாவை நிரப்ப கிளம்பியிருக்கிறீர்களே, இந்தக் காட்சியை அந்த தீவிர வாதிகளும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றிய கவலை கொஞ்சமும் இல்லையா உங்களுக்கு??? ச்சீய், தூ தூ, தூ, எப்படா திருந்துவீங்க நீங்கெல்லாம். ??????

அதிகமா பேசுனா ஆட்டோ வந்துருமோ, நமக்கெதுக்குங்க இந்த வம்பு????

***********************************************************************************
சமீபத்தில் நடந்து முடிந்த மூன்று மாநில சட்ட சபை தேர்தல்களிலும் வித்தியாசமான செய்தியை மக்கள் அரசியல்வியாதிகளுக்கு சொல்லியிருக்கிறார்கள். எல்லா இடங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று மதர்ப்பில் திரிகிறார்ப் போல் தெரிகிறது. ராகுல் காந்தியின் இளமைக் கவர்ச்சி கொஞ்சம் கை கொடுக்கிறதோ, அல்லது உண்மையாலுமே மக்கள் காங்கிரஸ் கட்சியை நம்ப ஆரம்பித்து விட்டார்களோ தெரியவில்லை. ஆமாம், காங்கிரஸ் ஜெயித்துக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் சந்தடி சாக்கில், மகாராஷ்டிர மக்கள் ராஜ் தாக்கரே என்ற ஒரு பாம்புக்கும் பால் வார்த்திருக்கிறார்கள். எப்படி திராவிடம் பேசியே தங்கள் குடும்பத்தை வளர்க்க தென்னாட்டில் ஒரு கும்பல் உண்டோ, அப்படியே மண்ணின் மைந்தர்கள் என்ற ஒரு பிரிவினை வாதம் பேசி அரசியல் செய்ய ஒரு நச்சுப் பாம்பு கிளம்பியிருக்கிறது. இன உணர்வுகளை தூண்டி விட்டு தீப்பொறி பறக்க பேசி 15 இடங்களில் இந்தப் பாம்பு படமெடுத்திருக்கிறது. என்ன ஆகப் போகுதோ???????

அரசியல்னா அப்பிடி இப்படி இருக்கத்தானுங்க செய்யும். பாத்துட்டு ஒரு ரெண்டு நிமிஷம் புலம்பிட்டு போக வேண்டியது தான். நமக்கெதுக்குங்க இந்த வம்பு??????

************************************************************************************

Wednesday, October 21, 2009

ஜுகல்பந்தி – 21 – 10 – 2009 - விகாரங்களின் திருவிழா

நகரம் – புஷ்கர் – பிரம்மனின் நகரம்.

ராஜஸ்தானிய பாலைவன நகரங்களில் ஒன்று. ஜெய்ப்பூரிலிருந்து அஜ்மீர் சென்று அங்கிருந்து இன்னும் 11 கிலோமீட்டரில் இந்த மணல் பரப்பில் கால் பதித்து விடலாம். ஏரிகள், ஆலயங்கள், கடைகள், கலைகளின் வெவ்வேறு வடிவங்கள், இழுத்து சுருட்டப் பட்ட மீசை, ஒரு புடவையை விட நீளமான துணியில் தலைப் பாகை, அத்தனை வண்ணங்களையும் கலந்து ஒரே துணியில் தைத்து, மார்பை மட்டும் மறைத்து விட்டு முதுகு திறந்து நடமாடும் பெண்கள், மணல், மணல். மற்றும் மணல் என ஒரு குதூகலக் கலவை தான் இந்த நகரம்.

வருடத்திற்கு ஒரு முறை மாத்திரமே களைகட்டும் விலங்குச் சந்தையில் ஒட்டகங்கள் முக்கிய பங்கு வகிக்கும். ஆயிரக் கணக்கான ஒட்டகங்கள், கழுதைகள், ஆடு மாடுகள், பறவைகள் என எல்லாம் விற்பனைக்கே. இவை அனைத்தும் சேர்ந்து ஒரு சேர கத்துவதில் ஒரு ஜுகல் பந்தி உருவாகும் பாருங்கள், ஆஹா, கேட்க காது கோடி வேண்டும்.

பிரம்மனுக்கு என ஒரு கோவில் உண்டென்றால் அது இங்குதான். பிரம்மனுக்கு மற்றும் சில கோவில்கள் இந்தோனேசியாவின் பாலித்தீவிலும், இன்னும் உத்தரப் பிரதேசத்திலும் உண்டென்றாலும், புஷ்கரில் எழுந்தருளியிருக்கும் பிரம்மன் விஷேசமானவனே. பிரம்மன் ராதாகிருஷ்ணனின் தரிசனம் வேண்டி அறுபது ஆயிரம் வருடங்கள் இங்கு காத்திருந்ததாக கதை சொல்லப்படுகிறது.

விசுவாமித்திரர் தவமிருந்த இடமென்றும், தேவலோக அப்சராவான மேனகை குளித்த ஏரியென்றும், மகாபாரத அவதார புருஷனான தரும ராஜா, இந்த ஊர் வழியாகத்தான் சிந்து நதியின் சமவெளி பிரதேசத்துக்கு கடந்து போனாரென்றும், வாமன புராணத்து கதைகளின் படி, பிரகலாதன் இங்கு வாழ்ந்தானென்றும் இன்னும் எத்தனையோ கதைகள் உள்ளன.

இத்தனை புராதனங்கள் நாடி நரம்புகளிலெல்லாம் ஓடி ஊடுருவினாலும், இன்று இந்த நகரமும் நவீன மயமாக்கலின் தாக்கத்திலிருந்து விடுபடவில்லை. ஒருபுறம் வெள்ளி ஜரிகைகளாலும், வண்ண போர்வைகளாலும் அலங்கரிக்கப்பட்ட ஒட்டகங்களின் பவனி, திருவிழா நாட்களில் வெப்பக் காற்று பலூனில் ஆகாயத்தில் மனிதர்கள், நீண்ட மீசையை சுருட்டி முகமெங்கும் படரவிட்டு முண்டாசுகளுடன் பெருசுகள், நீண்ட மீசை யாருக்கு என போட்டிகள், ஒட்டகங்களின் ஓட்டப் பந்தயங்கள் என ஊரே ஒரு பதினைந்து நாட்களுக்கு திமிலோகப் பட்டுக் கொண்டிருக்கிறது. கிரிக்கெட் இந்த ஊரையும் விட்டு வைக்கவில்லை, பிராந்திய புஷ்கர் கிரிக்கெட் அணிக்கும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வெள்ளைத்தோல் அணிக்கும் இடையே இந்த மணற்பரப்பில் நடக்கும் கிரிக்கெட் போட்டி மிகவும் பிரபலம். (வா, ராசா, லலித் மோடி, எங்கப்பா போயிட்ட நீ, கிரிக்கெட்டை வைத்து பணம் பண்ண இதோ இன்னொரு ஐடியா தயார். அடுத்து பாலைவன கிரிக்கெட்னு ஒண்ணு ஆரம்பிச்சு, சந்தோஷமா வாழ்க்கை நடத்தற அரேபிய நாடுகளையும் வளைச்சுப் போட்டு, அவங்க நிம்மதியையும் கெடுத்துரு ராசா, இது இன்னும் உங்கண்ணுக்கு ஏன்தான் தெரியலயோ)

இந்த களேபரங்களுக்கு மத்தியில் வெளிநாட்டவரை கவர்வதற்கெனவே, இந்த மணற்பரப்பில், ஆடல் பாடல், கேளிக்கைகள், விபச்சாரம், போதை வஸ்து என எல்லா கண்றாவிகளும் இருள் கவிந்ததும் நடக்கும்.

கார்த்திகை மாதத்து பௌர்ணமிக்கு முன்னாலும் பின்னாலுமென ஒரு 15 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவை, ஒரு முறையேனும் பார்த்து விட்டு, பிரம்மனின் அருள் பெற்று, பௌர்ணமியன்று பிரம்மனின் கரம் பட்ட ஏரிகளில் குளித்து, உங்களுக்கு எந்த விளைவு ஏற்பட்டாலும் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.

ஹாலோவீன் – விகாரங்களின் திருவிழா.

ஐரோப்பிய தேசங்களில் கோடைகாலம் முடிந்து குளிர்கால தொடக்கத்திற்கு அறிகுறியாக, தங்கள் விளைநிலங்களின் பலன்களை முன்னோர்களுக்கு அர்ப்பணித்து மகிழ்ந்த விவசாயிகளுக்கு அசுத்த ஆவிகளின் பரிச்சயம் எங்கு ஏற்பட்டதோ தெரியவில்லை. கெட்ட ஆவிகளை விரட்டியடிக்க விகாரமான முக மூடிகளை அணிந்து கொண்டு விழாவெடுக்க ஆரம்பித்தனர். இதற்கிடையில் மதவாதிகள் உள்ளே புகுந்து முன்னோர்களின் ஆவிகளுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற ஒரு சடங்கை புகுத்தி, அதை இயேசு கிறிஸ்துவின் திருப் பெயரால் கட்டாயப் படுத்தி “All Saints Day” என்ற ஒரு தத்துவத்தை மக்களின் மீது திணித்து விட்டார்கள். இந்த புனிதர்களின் திருநாள் தான் பெயர் மருவி, நோக்கம் மருவி, குணம் மருவி, இன்னும் என்னென்னமெல்லாமோ மருவி விகாரங்களின் நாளாகி விட்டது.

1840களில், முற்றிலும் விவசாய தேசங்களான, அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து நாடுகளில் ஏற்பட்ட பஞ்சத்தில் அடிபட்ட விவசாயிகள், தங்கள் பரம்பரை பழக்கங்களோடு அமெரிக்க மண்ணில் பஞ்சம் பிழைக்க தஞ்சம் புக, இந்த ஆவிகளோடு பேசும், பழகும் பழக்கம் ஒரு புது பரிமாணம் எடுத்தது. சூனியக் காரர்கள், கண்கட்டு வித்தை செய்பவர்கள், மந்திரவாதிகள், எலுமிச்சைப் பழத்தில் ஊசி குத்தி ரத்தம் வரவழைக்கும் மோடி மஸ்தான்கள், ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள் என்னும் அறிவு ஜீவிகள் என எல்லோருக்கும் இந்த நாள் ஒரு விழா நாளாக மாறிவிட்டது. உடம்பில் விகார உருவங்களை பச்சை குத்திக் கொண்டு, எலும்பில்லாத இடங்களிலெல்லாம் துளையிட்டு வளையங்களை மாட்டிக் கொண்டு, ஆணும் பெண்ணும் மறைக்க வேண்டிய உடல் உறுப்புகளை திறந்து காட்டி, அசுத்த ஆவிகளை பயமுறுத்துகிறோம் என்ற போர்வையில் அருவருப்பான் முக மூடிகளுடன் ஊர்வலம் போகிறார்கள்.

அக்டோபர் மாதத்தின் கடைசி நாளில் நியூயார்க நகர வீதிகளில் இந்த விகார முகமூடி ஊர்வலங்கள் நாள் முழுவதும் நடக்கும்.

பதிவர் வட்ட தீபாவளி

எல்லாரும் எல்லாருக்கும் வாழ்த்துச் சொல்லி, நான் டவுசர் போட்டிருந்த பொழுது, நாங்கள் பாவாடை சட்டையில் உலாத்திய பொழுது தீபாவளி எப்படி நல்லா இருந்துச்சு தெரியுமா என காலச் சக்கரத்தை பின்னோக்கி இழுத்து, பதிவுலக வன்முறைகளுக்கு கண்டனம் சொல்லி, காயப் பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லி, காயப் படுத்தியவர்களுக்கு கொம்பு சீவி விட்டு, சினிமாக்களை பிரித்து மேய்ந்து, காமன் மேனை கவிழ்த்துப் போட்டு என பதிவுலகில் இந்த தீபாவளியிலும் பட்டாசு நன்றாகத்தான் வெடித்தது. என்ன ஒரே ஒரு குறை, வேட்டைக்காரன் வந்திருந்தான்னா, அவன வெச்சு கொஞ்சம் மத்தாப்பு கொளுத்தி இருப்போம், ஆனா அவுரு என்னமோ இப்பத்தான் அம்பு செதுக்காறாரு போல இருக்குது, ஏன்னா வில்லு தான் வெளங்காம போயிடுச்சே, இனி வேட்டைக்காரன் எதுல அம்பு விடுவாரோ தெரியல.

ங்கொய்யால பக்கங்கள்


அப்பாவுக்கு புதுக் கண்ணாடி,

அம்மாவுக்கு புது புடவை,

ஆத்துக்காரிக்கு புதுப் பட்டு,

தங்கச்சிக்கு தங்கச் செயினு,

தம்பிக்கு டிஜிட்டல் கேமரா,

வாரிசுகளுக்கு புதுத்துணி, பட்டாசு,

வந்தவங்களுக்கு வழிச்செலவு,

பக்கத்து வீட்டுக்கு ஒரு தட்டு பலகாரம்,

ஒரு வழியா தீவாளி முடிஞ்சுது,

ங்கொய்யால,

இப்போதைக்கு இதெ வெச்சு ஓட்டு,

அடுத்த தீவாளிக்கு புதுச்செருப்பு வாங்கலாம்.

Tuesday, October 20, 2009

மூச்சு முட்ட முப்பது நாட்கள்

பன்னாட்டு நிறுவனமாம்,
பல மொழிகள் பேசுவார்களாம்,
பளபளக்கும் மேசைகளும்,
உடல் சிறுத்த கணிணிகளும்,
கண்ணாடி அறைகளுக்குள்
கைதிகளாய் மனிதர்களும்.

வாடகைக்கு உடல்கள் இங்கு
வரிசையாய் நிற்பதுண்டு.
மூளையை முடக்கி வைத்த
முண்டங்கள் முக்கியங்கள்.
சொல்வதை செய்து விடு
சொல்ல நினைத்ததை மறந்து விடு.

சுயம்புகள் தூரப் போங்கள்,
சிந்திப்பவர் ஒழுக்கம் கெட்டவர்,
ஆமாம் சாமி தாரக மந்திரம்,
சாப்பிட மட்டும் வாயைத்திற,
குலுக்க மட்டுமே கையை உயர்த்து,
அவசியப்பட்டால் அசைந்து கொள்.

கைநாட்டு போட வேண்டாம்,
கழுத்திலொரு பட்டை தருவோம்.
புவியின் சுழற்சி முப்பது முடிந்தபின்
முடிந்து தருவோம் முடிப்பு ஒன்று,
மூச்சு விடாமல் வாங்கிக் கொள்.

Thursday, October 15, 2009

அதாவது என்ன சொல்ல வ்ர்றேண்ணா.....

அதாவது என்ன சொல்ல வ்ர்றேண்ணா, ஒரு கோடு, அது நேரா இருக்குதாண்ணு சொல்றதுக்கு ஒரு கோணயான கோடு பக்கத்துல இருக்கணுமில்லையா, அதாவது கோணையான கோட்டைப் போல இல்லாததுனால இது நேரான கோடா தெரியுது. ஆனா உண்மையா அது நேரா இருக்குதா இல்லயாண்ணு எதை வெச்சு சொல்றது. எனக்கு நேரா தெரியறது உங்களுக்கு கோணலா தெரியுது.

இப்படித்தாங்க இருளும் வெளிச்சமும்னு ஒருத்தர் பேசுனாரு, அய்யா வெளிச்சம் எவ்வளவு இருக்குதுன்னு சொல்லீரலாம், ஆனா இருள் எவ்வளவு இருக்குதுன்னு சொல்ல முடியுமா, ஏன்னா இருள் என்னைக்குமே இருக்கறது, வெளிச்சம்தான் கொஞ்சங் கொஞ்சமா உருவாகி அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சு போகுது, ஆக, வெளிச்சம்னு ஒண்ணை சொல்லணும்னா, இருளின் இல்லாமைதான் வெளிச்சம்னு சொல்லலாமா???

அப்புறம் நல்லவன் கெட்டவன்னு சொல்றாங்க, எவன் நல்லவனோ அவன் முழுசா நல்லவனான்னு எப்படி சொல்றது, அதாவது ஒரு கெட்டவனப் போல இல்லாததுனால அவன் நல்லவனா தெரியறான், ஆனா நல்லவன்னா இன்னான்னா, யாரும் சொல்ல மாட்டேங்கறாங்க, ஆனா, இதுலயும் பாருங்க, ஒரு கெட்டவனப் போல அவன் இல்லாததால அவன் நல்லவனா, இல்ல நிஜமாவே நல்லவனா இருக்குறதுனால அவன் நல்லவனா?????

இதெல்லாம் எதுக்கு சொல்ல வர்றேண்ணா, அதாவது உலகத்துல, அதாங்க நாம வாழற பிரபஞ்சத்துல, தினமும் பாருங்க, அதுக்காக எங்கன்னு திரும்பி பாக்காதீங்க, நேராவே பாருங்க, ஆங், என்ன சொன்னேன், இதை எதுக்கு சொல்றேண்ணா, அதாவது…………………………………….

அட விடுங்க சாமி, போய் புள்ள குட்டிகளோட தீபாவளி கொண்டாடறதப் பாருங்க, நாந்தான் எதோ எழுதிகிட்டே போறேன்னா, நீங்களும் சும்மா வெட்டியா உக்காந்து இதையெல்லாம் படிச்சுகிட்டு……………..

தீபாவளி வாழ்த்துக்கள்.

Wednesday, October 7, 2009

அப்பாவும், ஈ மெயிலும்

இந்தாப்பா, உனக்கு புதுசா நோட்டுப்புத்தகம் வாங்கி வந்திருக்கேன். பத்திரமா கிழியாம வெச்சுக்கணும்.

அப்பா உங்களுக்குன்னு ஒரு ஈ மெயில் ஐடி ஓப்பன் பண்ணீட்டம்பா, பாஸ்வேர்ட கரெக்டா மறக்காம ஞாபகம் வெச்சுக்கோங்க.

நோட்டுப் புத்தகத்துல முதல் பக்கத்துல உன் பேரையும், வகுப்பையும் எழுதுடா.

முதல்ல ஜி மெயில் டாட் காம்னு டைப் பண்ணி என்டர்னு ஒரு பட்டன் இருக்குமே அத தட்டுங்கப்பா.

வலது கையில பேனாவை பிடிச்சு, நிப்பை அழுத்தாம மெல்லமா தேய்ச்ச மாதிரி எழுதுடா.

அப்பா, வலது கையில மௌஸ பிடிச்சுகிட்டு, ஆள்காட்டி விரல் இடது பட்டன்லயும், நடு விரல வலது பட்டன் மேலயும் வெச்சுக்கங்கப்பா

நோட்ட நேரா திருப்பி உங்கைக்கு வாகா வசதியா வெச்சுகிட்டு எழுதுப்பா, நோட்டு மேல படுத்த மாதிரி உக்காரத.

அப்பா, மானிட்டர்ல இருக்கற ஒவ்வொரு பட்டனயும் நல்லா பாருங்கப்பா, உங்களுக்கு கிட்டப் பார்வை இருக்கறதுன்னால சரியா தெரியலண்ணா கொஞ்சம் பின்னால தள்ளி உக்கார்ந்து பாருங்க.

முதல்ல நீ என்ன எழுதப் போறீங்கறதுக்கான தலைப்பை முதல் பக்கத்துல நடுவுல எழுது.

அப்பா, இப்ப மௌஸ தள்ளினீங்கண்ணா மானிட்டர்ல ஒரு அம்புக்குறி தெரியுமே, அத கம்போஸ் மெயில்னு ஒரு பட்டன் இருக்கும் பாருங்க, அது மேல வெச்சு, மௌஸோட இடது பட்டனை ஒரு தரம் அமுத்துங்கப்பா.

அனுப்புனர்னு முதல் வரில எழுதீட்டு, இரண்டாவது வரியிலிருந்து உன்னோட முகவரிய எழுதுப்பா.

இப்ப உங்க முன்னால ஒரு மெயில் ஓப்பன் ஆயிருக்கும் பாருங்கப்பா.

அனுப்புனர் முகவரிய எழுதி முடிச்சதுக்கப்புறம் கீழ ஒரு வரிய விட்டுட்டு பெறுநர்னு எழுதி, நீ யாருக்கு இந்தக் கடிதத்தை எழுதறயோ அவுங்க முகவரிய எழுது. எழுத்துப் பிழை இல்லாம சரியா எழுது. முகவரியோட ஒவ்வொரு வரிக்கும் கடைசியில கமா போட்டுட்டு, கடைசி வரியில முற்றுப் புள்ளி வை.

இப்ப To ஒரு வரி இருக்குமே அதுல நான் உங்களுக்கு நோட்டு புத்தகத்துல அக்காவோட மெயில் ஐடிய எழுதிக்குடுத்துருக்கன்ல, அத அப்படியே அடிங்கப்பா. கீ போர்டுல இருக்கற ஒவ்வொரு பட்டனா பாத்து தப்பில்லாம அடிங்க. அந்த @ எழுத்த அடிக்கறதுக்கு Shift னு ஒரு பட்டன் இருக்கும் பாருங்க அதை அழுத்திகிட்டு 2 ம் நம்பர் பட்டனை அழுத்துங்க.

இப்ப ஒரு வரி விட்டுட்டு, இடது பக்கமிருந்து ஒரு வார்த்தையளவு இடைவெளி விட்டுட்டு பொருள் அப்படீன்னு எழுதி, ஒரு விகிதப் புள்ளி வெச்சுட்டு எங்கள் ஊர் திரு விழான்னு எழுதிட்டு பொருள்ல ஆரம்பிச்சு எல்லாத்துக்கும் சேர்த்து அடியில் ஒரு கோடு போடு.

இப்ப அந்த To ங்கற லைனுக்கு கீழ CC ன்னு ஒரு லைன் இருக்கும், அத விட்டுடுங்க, அதுக்கும் கீழ Sub னு எழுதி ஒரு காலியிடம் இருக்கும் பாருங்க, அந்த இடத்துக்கு மௌஸ மூவ் பண்ணி அம்புக் குறிய கொண்டு வாங்கப்பா, இப்ப மௌஸுல இருக்கற இடது பக்க பட்டன தட்டுனீங்கன்னா ஒரு கோடு வந்து வந்து போகும், அங்க அப்பாவின் கடிதம்னு டைப் அடிங்க.

நல்லா பிழை இல்லாம பொறுத்து நிதானமா எழுதுப்பா, ஒவ்வொரு எழுத்தா எழுது, அந்த சுழி, கூட்டெழுத்தெல்லாம் தெளிவா இருக்கணும்.

நீங்க எப்படி தமிழ்ல எழுதுவீங்களோ அப்படியே டைப் அடிங்கப்பா, கஷ்டமா இருந்துதுன்னா, நான் ஒவ்வொரு தமிழ் எழுத்துக்கும் சரியான ஆங்கில எழுத்தை எழுதி வெச்சிருக்கன்ல, அந்த நோட்டை பக்கத்துல வெச்சு பாத்து டைப் அடிங்க.

இப்ப அந்த பொருள்ங்கற வரிக்கு கீழ ஒரு வரி விட்டுட்டு, இப்ப உங்க ஆசிரியருக்கு நீ எழுதறீன்னா மதிப்பிற்குரிய வகுப்பாசிரியர் அவர்களுக்கு அப்படீன்னு எழுது. பேனாவை கொஞ்சம் சாச்சுப் பிடி, அதை ஏன் அப்பிடி நெட்டுக் குத்தலா ஆணி புடிச்ச மாதிரி புடிச்சிருக்க.

இப்ப அந்த வரிக்கும் கீழ ஒரு காலியிடம் கட்டம் போட்டு இருக்குமல்லப்பா, அங்க அம்புக்குறிய கொண்டு வந்து மறுபடியும் மௌஸோட இடது பக்க பட்டனை தட்டுங்க, இப்ப அந்த இடத்துலயும் ஒரு கோடு வந்து வந்து போகுதா, அங்க அன்புள்ள மகளுக்குன்னு டைப் அடிங்க, கீ போர்டுல இருக்கற பட்டனையெல்லாம் மெதுவா அழுத்துங்க, ஏன் இப்படி டக்கு டக்குனு டைப் ரைட்டராட்டம் அடிக்கறீங்க.

இப்ப உங்க வாத்தியாருக்கு நம்ம ஊர்ல நடந்த திரு விழாவுல நீ என்னெல்லாம் பார்த்தியோ, அத அப்படியே நிதானமா யோசிச்சு ஒரு கடிதம் மாதிரி எழுது. அவசரப் படாம நிதானமா எழுது.

இப்ப அக்காவுக்கு நம்ம ஊர் திரு விழாவுல நடந்த ஒவ்வொண்ணையும் ஒரு விஷயம் விடாமா, நிதானமா யோசிச்சு எழுதுங்க.

எழுதீட்டயா, எல்லாத்தையும் ஒரு தடவைக்கு ரெண்டு தரமா படிச்சு பாத்துக்க, எதும் தப்பு இருந்தா திருத்திக்க, கடைசில இப்படிக்கு தங்கள் கீழ்ப்படிதலுள்ள அப்படீன்னு எழுதீட்டு, அதுக்கு கீழ உன் பேர எழுது.

கடைசியில அன்புள்ள அப்பான்னு எழுதி முடிச்சிருப்பீங்களே, எதுக்கும் ஒரு தரம் நீங்க எழுதுனத படிச்சு பாத்துக்குங்க. இப்ப மறுபடியும் மௌஸ நகர்த்தி அம்புக்குறிய அந்த இடது மூலைல Send அப்படீன்னு ஒரு பட்டன் இருக்கும் பாருங்க, அதுக்கு நேரா வெச்சு, ஒரு தரம் இடது பட்டனை அமுக்குங்க

அவ்வளவுதாண்டா, சபாஷ், உங்க வாத்தியாருக்கு நீ ஒரு கடிதம் எழுதீட்ட பாத்தயா

அவ்வளவு தான்ப்பா, நீங்களும் அக்காவுக்கு ஈ மெயில் அனுப்பீட்டீங்க பாத்தீங்களா.


பின் குறிப்பு : இந்த பதிவுக்கான முன்னோடி நம்ம கார்ப்பரேட் கம்பர் எழுதுன இந்த பதிவு.