Monday, January 2, 2012

பரமண்டலங்களில் இருக்கும் எங்கள் பிதாவே 2/01/2012

விடுமுறை முடிந்து விட்டது. மறுபடியும் ஆணி புடுங்க வந்து விட்டோம். யார் சொன்னது மாற்றம் மட்டுமே மாறாது என்று. இன்னும் இந்த நித்தம் சுழலும் புண்ணிய பூமியில் எத்தனையோ விஷயங்கள் மாறவே இல்லை பிதாவே. சலிக்கும் வரை ஆருடங்கள், சகிக்க முடியா சனிப் பெயர்ச்சி பலன்கள், உலக அழிவை பற்றிய தீர்க்க தரிசனங்கள், மாயன் காலண்டரின் மர்ம முடிச்சுகள், முல்லைப் பெரியாரின் அருவருப்பு அரசியல் நாடகங்கள், தானே புயலின் கோர தாண்டவங்கள், கூடங்குளத்தின் அணு உலை அரசியல்கள், சச்சின் டெண்டுல்கர் என்னும் இந்திய கடவுள் சாதனை படைக்க சிறப்பு வேண்டுதல்கள், உலக அழகி குழந்தை பெற்றுக் கொண்டதற்காய் இனிப்பு பரிமாறும் கவரப் பேட்டை கந்தசாமிகள், புதிய ஆண்டிலே இந்தியர்களை மட்டும் ஆசீர்வதிக்க வித விதமான போஸ்டர்களில் அவதரித்திருக்கும் இயேசு கிறிஸ்து, பெய்த ஓரிரு மழைக்கே சவக்குழி தோண்டும் எங்கள் ஊர் சாலைகள், புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி அரிவாள் தூக்கிய கதாநாயகன் போட்டோவில் அந்த கழிசடையின் காலடியில் தன் போட்டோவைப் போட்டு, இப்படிக்கு “கரடிப்பட்டி டெரர் பாய்ஸ்” என தனக்குத்தானே முடி சூட்டிக்கொண்டு வாழ்த்துச் சொல்லும் வருங்கால தூண்களின் பிளக்ஸ் பேனர்கள் என எதுவுமே மாறவில்லை பிதாவே. இவைகளெல்லாம் என்று அழிந்து ஒழியுமோ அன்றுதான் மாற்றம் மட்டுமே மாறாதது என்று சொல்ல முடியும் பிதாவே.


கிறிஸ்மஸுக்கு மாய்ந்து மாய்ந்து வாழ்த்து அனுப்பி, முருக்கு தின்று, கேக் வெட்டி என்று எல்லா ஜனநாயக கடமைகளையும் முடித்து விட்டு, அக்கடா என அயர்ந்து அமர்ந்தால், புது வருடம் வந்து விட்டதாம். புது வருட வாழ்த்துக்களையெல்லாம் வாங்கி, கொடுக்க வேண்டியவற்றை கொடுத்து கொஞ்சம் சலித்து உட்கார்ந்தால் உடனே இனிய பொங்கல் வாழ்த்துக்கள்னு மெயில் அனுப்பறாங்க பிதாவே…. நலம் விரும்பிகளின் அன்புத்தொல்லைக்கு ஒரு அளவே இல்லாம போயிருச்சு பிதாவே…..

புத்தாண்டின் புனித வாக்கு


நாங்கள் வாழும் பூமியின் மேற்பரப்பில் ஒரு திருச்சபையில் புத்தாண்டு இரவு கொண்டாட்டங்களில் ஒரு வினோத வழக்கம் உள்ளதாம் பிதாவே. கைக்கு அடக்கமாக சாதாரண புத்தக அளவுகளில் இருக்கும் பைபிளை விட கொஞ்சம் பெரிய அளவில் ஒரு பைபிள் இருக்கிறது. புத்தாண்டு துவங்கும் இரவு நடக்கும் வழிபாடுகளின் இறுதியில் இந்த பைபிளிலிருந்து ஒரு வசனத்தை அங்கு வந்திருக்கும் ஒவ்வொருவரும் தெரிவு செய்வார்கள். அந்த வசனத்தில் இருக்கும் வாக்குறுதி தான் அவர்களின் பரமபிதா அவர்களுக்கு அந்த வருடம் பூராவும் தரும் வாக்குறுதியாக நம்புகிறார்கள்.


ஆனால், பரமபிதாவின் பரிசுத்த விசுவாசிகள் தனக்குப் பிடித்த வசனத்தை தெரிவு செய்ய முடியாது. அங்குதான் இருக்கிறது இந்த மொத்த நாடகத்தின் சுவராஸ்யமே. பைபிள் செங்குத்தாக வைக்கப்பட்டிருக்கும். வாக்குத்தத்தம் வேண்டிச்செல்லும் பக்த கோடிகளின் கையில் ஒரு பட்டு நூல் கொடுக்கப்படும். இவர்கள் கண்களை மூடிய வண்ணம் அந்த பட்டு நூலை பைபிளின் ஏதாவது ஒரு பக்கங்களுக்கு நடுவில் சொருக வேண்டும். உடனே பைபிள் திறக்கப்பட்டு அந்த பக்கங்கள் விரித்து வைக்கப்படும். இப்பொழுது இந்த வாக்குத்தத்தம் வேண்டி நிற்கும் பக்த கோடி கண்களை மூடிக் கொண்டு அந்த பக்கங்களில் தன் விரலால் ஒரு வசனத்தை சுட்டிக் காட்டுவார். உடனே அங்கு இருக்கும் ஒரு குழந்தை அந்த வசனத்தை வாசிக்கும். அந்த வசனம்தான் அவருக்கு புத்தாண்டின் புனித வாக்கு என அர்த்தம் கொள்ளப்படும்.


இப்படி நடந்த புனித வாக்கு படலத்தில் ஒருவர் ஒரு வசனத்தை மிகுந்த பய பக்தியுடன் தேர்வு செய்ய, அந்த வசனத்தின் விபரீதம் புரியாமல் அதை வாசித்த குழந்தையும் வாசித்து விட்டது. அந்த வசனம் “யூதாஸ் நாண்டு கொண்டு செத்தான்” என்ற புனித வாக்கு. பதறிப் போன பக்த கோடி, அய்யோவென அதிர்ந்து போய், மற்றுமொருமுறை பட்டு நூலை சொருகி, வசனத்தில் விரல் வைக்க, இப்பொழுது வந்த வசனம், ”நீயும் போய் அப்படியே செய்”. இப்படி புனித வாக்குகள் அருளும் பரம பிதாக்களிடமிருந்து எங்களை இந்த புதிய ஆண்டில் இரட்சித்துக் காத்தருளும் பிதாவே.