Wednesday, June 24, 2009

ஜுகல்பந்தி 24/06/2009 - பத்த வெச்சுட்டாரைய்யா!!!!!!!!

நகரம் - ஜெய்சல்மீர் - (தங்க நகரம்).

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தார் பாலைவனத்தின் மத்தியில் உள்ள பழம்பெரும் நகரங்களில் ஒன்று. கோட்டைகளும், மதில்சுவர்களும், குறுகிய வீதிகளுமாய், செல்வச் செருக்கோடு வாழ்ந்த ராஜபுத்திர மன்னர்களின் பெருமையை சொல்லும் தங்க நகரம். இதை நிர்மாணித்த ராஜபுத்திர மன்னன் ஜெய்சல் என்பவரது மலைக்கோட்டை என்று பொருள்படும்படியாக இதற்கு ஜெய்சல்மீர் என்று பெயர் வந்தது. சுற்றிலும் இருக்கும் மணல் மேடுகள் தங்க நிறத்தில் காட்சியளிப்பதால் இது தங்க நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.

ராஜபுத்திரர்களின் நுண்ணிய கட்டிடக் கலையை பறை சாற்றும் அநேக நினைவுச்சின்னங்கள் இன்னும் இருந்த போதிலும், ஜைன மத தாக்கமும் வெகுவாக இருந்ததற்கு சாட்சியாக ஜைனக் கோவில்கள் மூலைக்கு மூலை நிறைந்திருக்கின்றன. ராஜபுத்திரர்களில் ப(ஹ)ட்டி என்ற இனத்தவர்கள் இதை சிறப்பாக ஆண்டு கொண்டிருந்த பொழுதுதான்,ம்ஹூம், சும்மா ஆண்டு கொண்டேஇருந்திருக்கலாம், அப்படியில்லாமல், ஆப்கானிய அலாவுதின் கில்ஜியின் சரக்கு வாகனங்கள் இவர்கள் நாட்டுக்கு அருகில் கடந்து போக, அதை அப்ப்டியே கோழி அமுக்கு அமுக்கி விட்டர்கள். சும்மா இருப்பாரா கில்ஜி, கி.பி. 1293 ல், ராஜபுத்திரர்கள் அந்தப்புரத்து அழகிகளிடம் மயங்கிக் கிடந்த வேளையில், இந்த அழகிய ஊருக்குள் புகுந்து சூறையாடி, வேட்டையாடி, வெறியாட்டம் ஆடி, இன்னும் என்னென்னவெல்லமோ ஆடி தீர்த்து விட்டான். இந்த சமயத்தில் இங்கிருந்து தப்பியோடிய ராஜபுத்திர ப(ஹ)ட்டி வம்சத்தினர், இன்றைய பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்திலிருக்கும் நன்கான சாஹிப் என்ற பிராந்தியங்களிலும், சிந்து மாகாணத்திலிருக்கும் லர்கானா பகுதியிலும் போய் தஞ்சம் புகுந்து விட்டார்கள். இவர்கள் தான் பின்னாளில் ப(ஹ)ட்டி என்ற பெயரிலிருந்து பூட்டோவாக மாறியவர்கள். பாகிஸ்தானில் பூட்டோக்கள் பட்ட பாடு உங்களுக்கே தெரியும்.

கில்ஜி இந்த பிரதேசத்தை ஆண்டு, பிறகு முகலாய சக்கரவர்த்தி ஷாஜகான் கொஞ்ச காலம் பொழுது போக்குக்காக ஆண்டு என ஆண்டுகள் பல கடந்த பின், ஒரு வழியாக மறுபடியும் ராஜ புத்திரர்கள தலைஎடுக்கலாம் என நினைத்தால், அதற்குள்ளாக ஆங்கிலேயர்களின் கை இந்தியாவில் ஓங்கத்துவங்கி, ராஜ புத்திரர்கள் இவர்களின் கடைக்கண் பார்வையிலேயே வாழ வேண்டியதாகிவிட்டது. ராஜ புத்திரர்கள் ஆண்ட நாட்களிலெல்லாம், ஆட்சி செய்தார்களோ இல்லையோ, சின்ன சின்ன சில்லரை விஷயத்துக்கெல்லாம் வாளை உருவிக் கொண்டு "ஆஆஆஆஆக்ரமண்" என்று கத்தி விட்டு குதிரையின் வயிற்றில் உதைத்து, போர்க்களம் புகுந்திருக்கிறார்கள். மற்ற இரண்டு ராஜபுத்திர ராஜ்யங்களாயிருந்த ஜோத்பூர், மற்றும் பிகானேருடன் இவர்கள் நல்லுறவு கொண்டிருந்ததாக சரித்திரமே இல்லை. மண், பெண், மற்றும் பொன்னுக்காக எப்பொழுதும் அடித்துக் கொண்டே இருந்தார்கள். ஒரு சில சமயங்களில் ஒரு சிறிய நீரூற்றுக்காகவும் இந்த பாலைவன மண்ணில் தலைகள் சீவப்பட்டிருக்கிறது.

இன்றைய நாளைப்போலவே அன்றும் இந்த ராஜபுத்திர பெண்கள் தங்கப் பதுமைகளாகவே இருந்திருப்பார்களோ என்னவோ, முகலாய சக்கரவர்த்தி அக்பரும் தன் மனதை பறி கொடுத்தது ஒரு ஜெய்சல்மீர் அழகியிடம்தான்.

இங்கு சென்று இதன் அழகை கண்டு களிக்க ஏற்ற நாட்கள், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள்தான். இந்த மாதங்களில் நடக்கும் "பாலைவன விழாவில்" கல்பேலியா நடனங்கள், நாட்டுப்புற இசை, மற்றும் ராஜபுத்திரர்களின் வீரத்தை கட்டியம் கூறும் நாட்டுப்புற பாடல்கள் என பாலைவனமே களைகட்டியிருக்கும்.

சொந்த செலவில் சூனியம். (பிரஞ்சு அதிபர் சர்கோஸி)


ஐந்து மில்லியன் முகமதிய ஜனத்தொகையை கொண்ட, மேற்கு ஐரோப்பிய நாடுகளில் சிறிது வலியதும், ஐரோப்பிய நாடுகளுக்குள் ஒரு நாட்டாமை ரேஞ்சுக்கு இருப்பதும், கொஞ்சம் துட்டு பார்ட்டியுமான பிரான்சு நாட்டின் அதிபர் நேற்று அதன் பாராளுமன்றத்தின் இரண்டு சபைகளும் கூடி இருக்கும் பொழுது ஒரு விவகாரமான விஷயத்தில் திருவாய் மலர்ந்துள்ளார். " முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதை பிரான்சு நாடு அனுமதிக்காது, பெண்கள் ஒரு திரைக்குப் பின்னே இருப்பதால் தங்களது மதிப்பை இழந்து இரண்டாந்தரமாக்கப் படுகின்றனர். பிரஞ்சுக் குடியரசில் பெண்கள் இப்படி இரண்டாந்தரமாக்கப் படுவதை அனுமதியோம். புர்கா என்பது ஒரு மத அடையாளமல்ல, அது பெண்ணை கீழ்படுத்தும் ஒரு சின்னம்" என்று சொல்லி விட்டார். உடனே எப்படா இந்த மாதிரி ஒரு மேட்டர் கிடைக்கும், நாமும் போட்டுத் தாக்கலாம் என எதிர்பார்த்திருந்த, உலக மீடியாக்கள் அனைத்துக்கும் சூடு பிடித்துக் கொண்டது. இந்தியாவில் ஒரு படி மேலே போய் பெண்ணிய வாதிகள் "ஒரு பெண்ணை எது அணிய வேண்டும் எது அணியக் கூடாது" என்று சொல்வதற்கு இவர் யார் என்ற ரீதியில் நேற்று முழுவதும் கத்தித் தீர்த்தனர்.

அட, மடையர்களா, அவர் யாரோ ஒரு இரண்டாவது குறுக்குத் தெருவில் வசிக்கும் ரங்கசாமியோ அல்லது குப்புசாமியோ அல்ல. சர்கோஸி பிரான்சு நாட்டின் அதிபர். அவர் அவரது குடிமக்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். அவ்வளவுதான், அதற்காக கேமரா என் முகத்தை காட்டுகிறது என்பதற்காக இந்திய தொலைக்காட்சிகளில் இப்படியா புர்கா அணியாத பெண்கள் கூவுவது. படுகேவலமாக இருக்கிறது. இப்படி கூவும் கலாச்சார காவலர்களில் எத்தனை பேர் சூடானின் டார்போர் பகுதியில் அவர்களது நாட்டு மண்ணின் மைந்தர்களாலேயே கற்பழிக்கப்படும் குழந்தைகளுக்காகவோ, தாலிபான்களால் ஆப்கானிய பெண்கள் அடக்கி ஆளப்பட்டபொழுது அவர்களுக்காகவோ எத்தனை முறை குரல் கொடுத்தார்களோ தெரியவில்லை.

எது எப்படியோ, பத்த வெச்சுட்டாருய்யா சர்கோஸி.

கவுஜ

நான் இறந்த பின் எனக்கு

தாஜ்மகால் வேண்டாம் ஷாஜகானே.

நான் இருக்கும் போதே

ஒரு குடிசை கொடு, போதும்.

Wednesday, June 17, 2009

ஜுகல்பந்தி 17/06/2009, ஒரு கப்ஸா, சில கேள்விகள்

போன மாதம் நடந்த சம்பவத்தை அடுத்து தொடர்ந்து ஜுகல்பந்தி எழுத முடியல. இப்பத்தான் கொஞ்சம் எல்லாம் சீரடைந்து வண்டி ஒரு சீரான நிலமைக்கு வந்திருக்குது. அதனால ஸ்டார்ட் மீஜிக்.
நகரம்: போபால், (ஏரிகளின் நகரம்).

மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகரம். நகரத்தை சுற்றியும் ஏரிகள் நிறைந்திருப்பதால் இதை ஏரிகளின் நகரம் என்று அழைக்கிறார்கள். மலைகள், கோட்டைகள், மசூதிகள், கோவில்கள், ராணுவ முகாம்கள், இந்திய அரசின் முக்கிய ஆராய்ச்சி மையங்கள் என்று பலவகையில் ஒரு அழகிய நகரத்துக்கான சிறப்புகளுடன் திகழ்கிறது.

பதினோராம் நூற்றாண்டில் 55 வருடங்களாக (ஏ யப்பா, நம்மாளுங்களுக்கு 5 வருஷம் முடிக்கறதுக்குள்ள நாக்கு தள்ளிப் போகுது) நல்லாட்சி புரிந்த போஜராஜனின் நினைவாக இதற்கு போபால் என்று பெயர் வந்தது. இந்த மன்னனுக்கு மரியாதை செய்யும் வண்ணம் அவரது பெயரின் போஜையும், அவர் ஏரிகளை உருவாக்குவதற்காக கட்டிய அணையின்(பால்) நினைவாகவும் இந்நகரம் முதலில் "போஜ்பால்" என்றழைக்கப்பட்டு, நாளடைவில் போபாலாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானத்திலிருக்கும் "ஒர்கஸாய்" வம்சத்திலிருந்து (இதுக்கும் இப்ப இருக்கற நாட்டாமை "அமிர் கஸாய்"க்கும் இன்னா கனிக்ஷன் அப்டீன்னெல்லாம் கேக்கப்படாது) வந்த தோஸ்த் முகம்மது கான் என்ற அரசன், (இந்தியாவில் முகலாய சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த ஔரங்கசீப்பின் மறைவுக்குப் பிறகு) கி.பி. 1707 ல் ஒரு முழு முகலாய சிற்றரசை போபாலை தலைநகராகக் கொண்டு துவக்கினார். அதற்குள் போஜராசனனின் வாரிசுகள் சிவலோக பிராப்தி அடைந்திருந்தார்கள். நம்ம தோஸ்த் கான் துவக்கிய அரசின் சிறப்பம்சம் என்னவென்றால், சற்றேறக் குறைய ஒரு நூறு வருஷ காலம் இந்த சிற்றரசு பெண்களால் ஆளப்பட்டிருக்கிறது. எப்படி அரசனுக்கடுத்து இளவரன் அரசனாவது வழக்கமோ, அப்படி ராணிக்கு அடுத்ததாக இளவரசிகள் ராணிகளாகியிருக்கிறார்கள். கி.பி. 1819 லிருந்து 1926 வரை ஆண்ட இந்த அம்மணிகளின் ஆட்சிக்காலம் தான் போபாலின் சரித்திரத்தில் பொற்காலம் என்று வர்ணிக்கப்படுகிறது. இந்த அம்மணிகள அனைவரும் முகம்மதிய பேகம்கள் என்பது இதன் சிறப்பு. இந்த சிற்றரசின் எல்லைகளுக்குட்பட்டிருந்த நீர் வளத்தை சரியாக நிர்வகித்தது, ரயில் வழித்தடங்களை அமைத்தது, முறையான அஞ்சல் துறையை நிர்வகித்தது என அம்மணிகள் கலக்கியிருக்கிறார்கள். (அம்மணிகளை உட்டா என்னைக்குமே இப்படித்தான் கலக்குவாங்களோ). 1947 க்கு அப்புறம் இந்தியாவுடன் தன்னை இணைத்துக்கொண்ட கடைசி சிற்றரசுகளில் இதுவும் ஒன்று.


1984 - ல் கார்பைடு தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷ வாயு கசிவினால் நிகழ்ந்த உயிரிழப்புகளின் வடு ஒருபக்கம் இருந்த போதிலும், இந்நகரம் புது பொலிவுடன், அகன்ற சாலைகள், வண்ணப் பூங்காக்கள், புராதன கோட்டைகள், நவீன அடுக்கு மாடி குடியிருப்புகள், முகலாயர்களின் கட்டிடக்கலைக்கு கட்டியம் கூறும் பழங்கால மசூதிகள், இந்திய வான்வெளி ஆராய்ச்சி கழகத்தின் முக்கிய செயற்கை கோள் கட்டுப்பாட்டு அறை, புது தில்லிக்கு அடுத்தபடியாக ஆரம்பிக்கப்பட்ட "All India Institute of Medical Science" என்ற பல சிறப்புகளுடன் திகழ்கிறது.


இதன் பழமையை, அதன் சிறப்பை, ஏரிகளை அதன் அழகு கெடுவதற்கு முன் ஒருமுறை அவசியம் பார்ப்பது கண்ணுக்கு, மூக்குக்கு, நுரையீரலுக்கு, சிறுகுடல், பெருங்குடல் மற்றும் உடலின் எல்லா பாகங்களுக்கும் நல்லதுன்னு கருத்து கந்தசாமி சொல்றாரு.


நாட்டு நடப்புகள்.


போன வாரத்திலிருந்து ஒரு இ மெயில் எல்லாரையும் கலக்கீட்டிருக்குது.

சமீபத்துல பிரேசில் நாட்டுல தொலஞ்சுபோன பிரான்சு நாட்டு விமானத்தின் கடைசி நேர காட்சிகள்னு ரெண்டு போட்டோவை எல்லாருக்கும் நலம் விரும்பிகள் அனுப்பிகிட்டிருக்காய்ங்க . இது தான் அந்த போட்டோ.
இத்துடன் அவுங்க விடுற கப்ஸா இன்னான்னா:
 1. இதை எடுத்த பயணியின் பெயர் பவுலோ முல்லர். ஒரு குழந்தைகளுக்கான நாடக நடிகர்.
 2. பிரான்சு நாட்டு விமானம் ரியோ டி ஜெனீரோ விலிருந்து வானில் சென்ற சிறிது நேரத்தில் வேறோரு விமானத்துடன் மோதியது.பிறகு கட்டுப்பாட்டை இழந்து கடலில் மூழ்கியது.
 3. இநத படங்களை எடுத்தவர் விமான மோதலுக்குப்பின் இவைகளை எடுத்து இருக்கிறார்.
 4. கேமரா உடைந்து விட்டது, ஆனால் அதற்குள் இருந்த மெமொரி சிப் கடலுக்கடியில் கண்டு பிடிக்கப்பட்டது. அதிலிருந்த புகைப்படங்கள் தான் இவை.
 5. விமானத்தின் பின் பகுதி மோதலில் கழன்று போய் ஒரு பயணி காற்றில் இழுக்கப்படுவதை இரண்டாவது படத்தில் பார்க்கலாம்.
 6. பிரான்சு விமானத்துடன் மோதிய விமானம் பத்திரமாக அமேசான் காடுகளுக்குள் இருக்கும் ஒரு விமான தளத்தில் இறங்கிவிட்டது.
இத்தனை கப்ஸாவை கேட்டதுக்கப்புறம், வழக்கம் போல மல்லாக்க படுத்து யோசிச்சப்ப, (மறுபடியுமா)

 1. முதல் படத்துல எல்லாரும் அந்த ஆக்சிஜன் மாஸ்க் வெச்சிருக்காங்களே, அப்ப விமானத்துக்குள் குறைந்த காற்றழுத்தம் உருவானதா?
 2. முதல் படத்துல இடது பக்கத்துல உக்காந்திருக்கற பொம்பளயோட கையில விலங்கு மாட்டி இருக்குதே அது இன்னாத்துக்கு?
 3. விமானம் மோதியதற்குப் பின், தன் கட்டுப் பாட்டை இழந்து விட்ட நிலையில், ஒரு மனிதன் தன் இருக்கையை விட்டு எழுந்து, தன் பையை திறந்து கேமராவை எடுத்து, சக பயணி விமானத்தை விட்டு இழுக்கப்படும்வரை புகைப்படமெடுத்து தள்ளியிருக்கிறாரே, அப்படியென்றால் விமானி இந்த இடைப்பட்ட நேரத்தில் கட்டுப்பாடு அறையை தொடர்பு கொள்ளாதது ஏன்?
 4. எப்பொழுதும் ஒரு விமானம் வான்வெளியில் பறக்கிறதென்றால், தனக்கு அருகில் ஒரு விமானம் வந்து விட்டால் உடனே எச்சரிக்கை செய்யுமே, அந்த எச்சரிக்கை மணி மோதிய இரு விமானங்களிலுமே வேலை செய்யவில்லையா?
 5. அமேசான் காடுகளுக்குள் பத்திரமாக தரையிறங்கிய விமானி உடனடியாக விமான கட்டுப்பாடிற்க்கு தொடர்பு கொண்டு நான் வேறொரு விமானத்தை போட்டுத்தள்ளி விட்டேன் என்று இன்று வரை தகவல் சொல்லாதது ஏன்?
 6. இந்த போட்டோக்கள் பதிவான மெமொரி சிப் கிடைக்க வேண்டுமென்றால், அட்லாண்டிக் பெருங்கடலின் அடிமட்டத்தில் உள்ள கல்லும் மண்ணும் சல்லடை இட்டு சலிக்கப்பட்டதா?
மல்லாக்கப் படுத்தா இப்படி என்னெனமோ கேள்வியெல்லாம் வந்ததினால், இணையத்தில் சல்லடை போட்டு சலித்ததில், இந்த கப்ஸா வுடற போட்டோவைப் பத்தின மேட்டர் கிடைச்சுது.

அது இன்னான்னா,

இது நம்ம ஊர் தொலைக்கட்ட்சிகளில் வர்ற அறிவு பூர்வமான தொடர்களைப் போன்ற ஒரு சீரியல்தான். "Lost" னு பேரு. அதுல வர்ற கதாநாயகிதான் "இவாஞ்சலின் லில்லி" தான் அந்த கைவிலங்கு அம்மணி. கதைப்படி கைதியான அவளை அமெரிக்காவிற்கு அழைத்து வரும் கடமை மிகு அதிகாரிதான் அவுளுக்கு பக்கத்தில் இருக்கிற "எட்வர்ட் மார்ஸ்". இந்த புகைப் படங்கள் உள்ள வீடியோ காட்சிகளை பார்க்கணும்னா இங்கே பாருங்கள்.

இந்த இ மெயில் அனுப்பற ஆளுங்களையெல்லம் ஒரு கேள்வி கேக்கறேன், "ஏண்டா என்னை பாத்தா கேனப் பயலாட்டமே தெரியுதாடா?"

Tuesday, June 16, 2009

மல்லாக்கப் படுத்து யோசிச்சப்போ !!!!!!!

நண்பர் ஒருத்தரு ஒரு இ மெயில் அனுப்பி இருந்தாரு. (என்னது ஒரு ஊர்ல ஒரு ராஜாங்கற மாதிரி இருக்கா, இருங்கையா, சொல்லி முடிக்கறதுக்குள்ளா நொய் நொய்ன்னுட்டு),

அதாவது, ATM ல பணம் எடுக்கும் பொழுது,

 1. யாராவது உங்களை பயமுறுத்தி பணம் பிடுங்க பார்த்தாலோ,
 2. துப்பாக்கி கொண்டு பயமுறுத்தி, உங்களின் தனி அடையாள எண்ணை உங்களிடமிருந்து பெற முயற்சித்தாலோ,
 3. உங்கள் கார்டை பலவந்தமாக உங்களிடமிருந்து பறித்தாலோ,
 4. வில்லு பட CD ஐ காட்டி பயமுறுத்தினாலோ,

இன்னும் நிறைய லோ, லோ, லோ,

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். உங்கள் தனிநபர் அடையாள எண்ணை பின்புற வரிசையில் அழுத்துங்கள். அதாவது உங்கள் எண் 1234 என்று இருந்தால், நீங்கள் 4321 என்று அழுத்தி விடுங்கள். அப்பொழுது ATM இயந்திரத்திலிருந்து பணம் வெளியே வருமாம். ஆனால் பாதியில் சிக்கி நின்றுவிடுமாம். அது மட்டுமில்லாமல் அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு மின்னல் வேகத்தில் தானாகவே " எங்கள் வாடிக்கையாளர், இந்த நகரத்தின், இத்தானாவது தெருவில், இத்தனாவது ATM இயந்திரத்தின் அறைக்குள் சமூக விரோதிகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளார்" என்று செய்தி அனுப்பி விடுமாம். இதத்தான் அந்த இ மெயில்ல எழுதி இருந்தாரு.

மல்லாக்கப்படுத்து இதை இப்படியே கற்பனை பண்ணிப் பாத்தா,

 1. எனக்கு நம்பரு 1234 ன்னு இருந்தா, வேற யாருக்காவது 4321 ன்னு இருக்காதா, அப்ப நான் 4321ன்னு அமுத்துனா, நம்பரை சரியா அடிடா பேமானின்னு ATM திட்டாதா?
 2. பணம் பாதி வெளில வந்து சிக்கிக்கிடுச்சுன்னா, எந்தலையில துப்பாக்கி வெச்சிருக்கற அன்பு சகோதரர் கபாலி, "சரிடா இது இவன் தப்பில்ல, மெஷினோட தப்பு"ன்னுட்டு, என் கூட கை குலுக்கிட்டு போயிருவாரா?
 3. எத்தனை காவல் நிலையங்கள் அருகிலிருக்கும் ATM இயந்திரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன?
 4. எனது நண்பரான (அதாங்க காவலர் உங்கள் நண்பன்) உடனே கிளம்பி வந்து "டாய் எவண்டாவன் என் சக சகோதரனை துன்பப்படுத்துவது" அப்பிடீன்னு கேப்பாரா?
 5. எத்தன போலீஸ் டேசன்ல இருக்கற காவலர்களுக்கு அவசர அழைப்புகளுக்கு எப்படி இயங்க வேண்டும் என்று தெரியும்?

ஆனா பாருங்க மல்லாக்க படுத்து யோசிக்கறப்போ இன்னும் எத்தனையோ இந்த மாதிரி கேள்விகள் வருது.

Monday, June 15, 2009

அப்பா, நான் பாஸாயிட்டம்பா!!!!!

பத்தாவது வகுப்பு ரிசல்ட் வரும் நேரம். மணியண்ணன் டீக்கடையில் மத்தியானம் மூணு மணிக்கெல்லாம் மாலை முரசு பேப்பர் வந்துரும். கண்ணன், நானு, சண்முகம், கனகவல்லி, உமா மகேஸ்வரி எல்லாரும் பத்தாவது பரிட்சை எழுதீட்டு ரிசல்டுக்காக எதிர்பார்த்துகிட்டிருக்கோம். காலையிலிருந்தே மனசுக்குள்ள இன்னதுன்னு சொல்ல முடியாத ஒரு இதுவா இருக்குது. பெரியக்கா காலைலயே சொல்லிட்டாங்க, " எனக்குத் தெரியும். நீ, பாஸாயிருவ, எவ்வளவு மார்க்கு வாங்கறேங்கறது தான் முக்கியம்". சின்னக்கா சொன்னாங்க " மொதல்ல பாஸாகறானான்னு பாரு, ". அப்பா மாத்திரம் சேர்லயே உக்கார்ந்துகிட்டு ஒண்ணுமே சொல்லாம இருக்காரு, மனசுக்குள்ள என்னமோ சரியில்லைங்கற மாதிரி தோணுச்சு, ஆனா ரிசல்ட் ஆர்வத்துல அதையெல்லாம் கண்டுக்கல.

பத்து மணிக்கெல்லாம் மணியண்ணன் டீக்கடைக்கு ஒருதரம் போய் அவருகிட்ட சொல்லிட்டு வந்துட்டேன். " அண்ணா, பேப்பர் வந்தா, கொஞ்சம் எடுத்து வைங்கண்ணா, இன்னைக்கு ரிசல்ட் வருது", அவரும் சிரித்துக்கொண்டே "தெரியும்டா, உங்க பூளவாக்கெல்லாம் இன்னைக்குத் தெரிஞ்சுரும்"ன்னாரு.

ஒரு மணிக்கே மணியண்ணன் கடைக்கு போயிட்டோம். சண்முகம் மாத்திரம் கொஞ்சம் கவலைப்பட்ட மாதிரி இருந்தது. நானும் கண்ணனும் கவலையே இல்லாம இருந்தோம். இதா வருது, அதா வருதுன்னு, மூணரை மணிக்கு வர்ற பழனியப்பா பஸ்ஸில தான் பேப்பர்கட்டு வந்துது. பஸ் தூரத்துல வரும் போதே, நாங்க மூணு பேரும் ரோட்டை தாண்டி போய் நின்னுட்டோம். பஸ் வந்ததும், டிரைவர் அண்ணே பேப்பர் கட்ட எங்ககிட்ட குடுங்கன்னு பஸ்ஸை சுத்திவந்து, டிரைவரோட பக்கத்துல நின்னு கேட்டோம். டிரைவர் அங்கிருந்தே மணி அண்ணனை பார்த்தாரு, மணி அண்ணனும் கை காமிக்க, டிரைவர் பேப்பர் கட்ட குடுத்தாரு. காக்கி கலர்ல ஒரு கவர் பேப்பர் சுத்தி அதுக்கும் மேல ஒரு டொயின் கவுறு கட்டி, மேல மாலை முரசுன்னு எழுதுன ஒரு வெள்ளைப் பேப்பர் ஒட்டி, அதுல மணி டீ ஸ்டால்னு கையில எழுதியிருக்கற அந்த கட்ட வாங்குனப்ப, லேசா மனசுக்குள்ள ஒரு பயமும் வந்துச்சு.

பேப்பர் கட்ட கீழ வெக்கறதுக்கு முன்னாலயே சண்முகம் அதை கட்டியிருக்கற டொயின் கயிற இழுத்து அத்தற பாத்தான், மணியண்ணன் "பேப்பர கிழிச்சராதீங்கடா"ன்னு சொல்லிகிட்டு, அந்த கட்டிலிருந்த முடிச்ச நிதானமா அவுத்து அந்தக் டொயின் கவுத்த தினமும் சேத்தி ஒரு பந்து மாதிரி சுத்தி வெச்சிருப்பாரு, அதுல சுத்திகிட்டாரு. அப்புறமா ஒரே ஒரு பேப்பரை எடுத்து எங்க கிட்ட குடுத்து, "பேப்பர் கிழியாம பாக்கணும்"னு குடுத்தாரு. எல்லாருக்கும் அவசரம், டேய், மூணாவது பக்கத்துல பாருடா, இல்லடா நம்மளது அஞ்சாவது பக்கத்துல இருக்குண்டா. ஒரு வழியா நம்பரக் கண்டு பிடிச்சு, நம்ம நம்பரு இருக்குதுன்னு தெரிஞ்ச உடனே வந்த சந்தோஷம் இருக்குது பாருங்க, உடனே டேய், கண்ணா உன்னோடது சண்முகத்துது, எல்லாம் இருக்குதுடா,.கனகாவுதையும், உமாவுதையும் பார்த்து இருக்குதுன்னு சொன்னவுடனே, அப்படியே வானத்துல நடக்கற மாதிரி ஒரு நெனப்பு. நம்மூர்ல பத்தாவது எழுதுனவுங்க அத்தனை பேரும் பாஸுடான்னு கத்தீட்டு, மணியண்ணங்கிட்ட "இதைக்கொண்டு போய் எங்க அப்பாகிட்ட காமிச்சுட்டு வந்தர்றண்ணா"ன்னு மூணு பேரும் ஒண்ணா கேக்க, அவரும் சிரிச்சுகிட்டே, "சரி, சரி, கசங்காம கொண்டு வாங்கன்னு சொன்னாரு, உடனே புல்லட் வேகத்துல பேப்பர தூக்கிகிட்டு ஓடுனோம்."

வீட்டுல வாசப்படிய ஒரே தாவல்ல தாவி அப்பாகிட்ட " , நான் பாஸாயிட்டம்பா"ன்னு பெருமையா பேப்பரை குடுத்தா, அவுரு அந்த மரக்கலர் பிரேம் போட்ட கண்ணாடி வழியா தீர்க்கமா என்னை ஒரு பார்வை பாத்துட்டு, "அப்பிடியா, சரி" ன்னு மாத்திரம் சொன்னாரு. சப்புனு ஆயிருச்சு எனக்கு, அப்பா முதுகையாவது தட்டி குடுத்து, சந்தோஷமா என் நம்பரை பாப்பாருன்னு நெனச்சேன். ஆனா அவுரு இதையும் எதோ ஒரு காலாணாவுக்காகாத விசயத்தை கேக்கற மாதிரி கேட்டதும் எனக்கு என்னமோ போல இருந்துச்சு. அம்மாவுக்கு புரிஞ்சிருக்கும் போல, அவுங்க வந்து என்னை கட்டி புடிச்சுகிட்டு, " பாஸாயிட்டதை சந்தோஷமா சொல்றான், நீங்க என்னமோ எழவு சேதி கேட்ட மாதிரியில்ல மூஞ்சிய வெச்சுக்கறீங்கன்னு" திட்டுனாங்க, அப்பா அம்மாவையும் அதே பார்வை பாத்துட்டு கண்ணை திருப்பிகிட்டாரு. அம்மா முகத்துல ஒரு வினாடி என்னமோ தெரிஞ்சுது, கண்ணுல கூட தண்ணி கட்டுனாப்புல இருந்துது, ஆனா சமாளிச்சுகிட்டு “என் ராசா, எங்க போனாலும் ஜெயிட்டுத்தாண்டா வருவேன்”னு கட்டி புடுச்சுகிட்டாங்க. "இண்ணைக்கு அம்மா வடை சுட்டிருக்கேன் சாப்புடுறா ராசா"ன்னு சமையல் ரூமுக்கு கூட்டிகிட்டு போயிட்டாங்க, அப்பா என்னை ஒரு தரம் திரும்பி பாத்த மாதிரி இருந்திச்சு, பாத்தாரோ என்னவோ.

அதுக்கப்புறம், மார்க் ஷீட் குடுத்தாங்க, எங்கூர்ல அஞ்சு பேர்ல நாந்தான் 432 மார்க் வாங்கி பர்ஷ்ட்டா இருந்தேன். கோயமுத்தூர்ல தான் ஹைஸ்கூலு இருக்குது, இனிமே அங்க தான் பையன பதினொண்ணாப்பு சேர்த்தணும்னு கண்ணனோட அப்பா வந்து எங்க அப்பா கிட்ட பேசிகிட்டிருந்தப்போ, பொன்னையனை என்ன பண்ணப்போறீங்கன்னு கேட்டாரு, அப்பா அவரையும் அதே பார்வை பாத்துட்டு, கொஞ்ச நேரம் யோசிச்சுட்டு, "அவனையும் அங்க தான் சேத்தணும்"னு சொன்னாரு, இதைக் கேட்டதும் மனசு குஷியாயிருச்சு, அய், இனிமே பேண்ட் போட்டுட்டு போலாம் , தினமும் டவுனப் பாக்கலாம்னு என்னென்னமோ நெனப்பு மனசுல.

பழைய நோட்டுல இருந்த எழுதாத பக்கத்தையெல்லாம் கிழிச்சு ஒரு புது நோட்டு பண்ணி, அக்காவை தெச்சு குடுக்க சொல்லி, மணியண்ணங்கிட்டிருந்து பேப்பர்ல சுத்தி வர்ற காக்கி பேப்பர வாங்கிட்டு வந்து, அந்த நோட்டுக்கு அட்டை போட்டு, ஒரு வெள்ளை பேப்பரை லேபிள் மாதிரி கிழிச்சு, அரிசிச் சோறெடுத்து அதுல தடவி நோட்டுல ஒட்டி, அந்த லேபிள்ல பேர் எழுதி, வகுப்பு : XI Standard, அப்டீன்னு இங்கிலீஷுல எழுதி அதை நூறு தரமாவது வாசிச்சு பாத்து மனசுக்குள்ள பெருமை பட்டுகிட்டே பள்ளிக்கூடம் எண்ணைக்குத் திறக்கும்னு காத்திருந்தேன். ஸ்கூல் தெறக்க ரெண்டு நாள் இருக்கும்போது அப்பா கூப்பிட்டாரு, ஒவ்வொரு வருஷமும் ஸ்கூலு தெறக்கறதுக்கு மூணு நாளைக்கு முன்னால அப்பா இப்படித்தான் கூப்புட்டு " போய் சிவாலிங்க செட்டியாரு கடயில சட்டைக்கும் டவுசருக்கும் அளவு குடுத்துட்டு வாடா"ன்னு சொல்லுவாரு, இந்த தரம் நான் ஹைஸ்கூலுக்கு போறனல்லப்பா, எனக்கு பேண்ட்தான் வேணும்னு சொல்லலாம்னு நெனச்சுகிட்டே போனா, அப்பா தன்னோட கையை பாத்துகிட்டே சொன்னாரு " சாயந்திரமா போயி ரத்தினசாமி ஐயாவோட பையனை பாத்துட்டு வா, அவுரு என்னமோ உன்னய பாக்கணும்னு சொன்னாராமா".

ரத்தின சாமி ஐயாவோட மகன் கதிர்வேல் எங்கூர்ல இருந்த சிமெண்ட் கம்பெனில இஞ்ஜினீயரா இருக்கறாரு. ஜாவா பைக்குல தான் போவாரு வருவாரு, நல்ல அண்ணன், எப்ப பாத்தாலும் என்னப்பா நல்லா படிக்கறயான்னு கேப்பாரு, நாமுளும் ஒரு காலத்துல இன்ஞ்ஜினியராகி இந்த மாதிரி பைக்குல போகணும்னு நெறயதடவ நெனச்சிருக்கேன். ஆனா எதுக்கு அவுரப் போயி பாக்கச் சொல்றாருன்னு புரியல. ஆனா அப்பா கிட்ட எதுக்குப்பான்னு கேக்கற தைரியம் வர்ல, அந்த மாதிரி அப்பாகிட்ட எதிர் கேள்வி கேட்டு வழக்கமும் இல்ல, இதை எங்கிட்ட சொல்லும்போது அப்பாவோட குரல்ல வழக்கமா இருக்குற கம்பீரமும் கண்டிப்பும் இல்ல. என்னமோ வித்தியாசமா நடக்குதுன்னு தோணுது.

அப்புறமா கதிர்வேல் அண்ணனை பாத்தது, அவுரு என்னை சிமெண்ட் கம்பெனில வேலைக்கு வரச்சொன்னது, மத்திய பிரதேசத்துக்கு என்னை ட்ரையினிங்க்கு அனுப்பறேன்னு சொன்னதெல்லாம் என்னமோ ஒரு ஏராப்பிளான் போற மாதிரி வேகமா நடந்து முடிஞ்சு போச்சு, மத்தியப் பிரதேசத்துக்கு போறதுக்கு கோயமுத்தூர்ல இருந்து ரயிலேறணுமாம். ரயில்வே டேசனுக்கு வந்தாச்சு, அப்பா இப்பவும் எங்கூட சரியா முகங்குடுத்து பேச மாட்டேங்கறாரு, அம்மாவுக்கும் அக்காக்களுக்கும் எதோ புரிஞ்ச மாதிரி இருக்குது, அவுங்க நொடிக்கொரு தரம் என்னை மாத்தி மாத்தி ஆளாளுக்கு கட்டிப்புடிச்சுகிட்டு புத்தி சொல்றாங்க, அழுகறாங்க, எதுக்கு அழுகறாங்கன்னு தெரியல, கடைசியா ரயிலுக்கு விசில் ஊதுனதுக்கப்புறம் அப்பா என்கையில ஒரு பதினைஞ்சு ரூவா குடுத்துட்டு எங்கையப் புடுச்சுகிட்டு, "நீ நிறைய படிப்பயப்பா, எங்க போனாலும் நல்லா இருப்பியப்பா, பத்திரமா பாத்து போயிட்டு கடுதாசி போடுப்பா"ன்னு சொன்னாரு, ரயிலு நகந்தப்ப அப்பாவை பாத்தேன், தோள்ல கெடந்த துண்ட எடுத்து கண்ண தொடச்ச மாதிரி தெரிஞ்சுது. அக்காக்களும் அம்மாவும் முந்தானைய எடுத்து கண்ணை தொடச்சுகிட்டாங்க,பதினொண்ணாப்பு கனவெல்லாம் அதோட போயிருச்சு.

ட்ரெயினிங்கு முடிஞ்சு, சிமெண்ட் கம்பெனில வெல்டிங் வேலைக்கு வந்து, மாசாமாசம் அப்பாவுக்கு தவறாம சம்பளப் பணத்தை அனுப்புனேன், நான் வேலைக்கு வந்து ரெண்டு வருஷத்துல மொத அக்காவுக்கு கல்யாணம் நடந்துச்சு, அக்காவை கட்னூட்டுக்கு அனுப்பும் போது அப்பா கால்ல விழுந்து அழுதவ, என்ன கட்டி பிடுச்சுகிட்டு ரொம்ப நேரம் அழுதா, எனக்கும் அழுகையா வந்துச்சு, அப்புறமா மூணு வருஷங் கழிச்சு சின்னக்காவுக்கு கல்யாணம் நடந்துச்சு, அவள அனுப்பும்போதும் அதே மாதிரி கட்டிப்புடிச்சுட்டு அழுதா, அவ என்னைக் கட்டிப்புடுச்சுட்டு அழுகறதப் பாத்து எங்கப்பாவும் துண்டெடுத்து கண்ணை தொடச்சுகிட்டாரு.

அடுத்த வருஷம், கூட வேல செய்யற மகேஷ் " டேய், அஞ்சு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் ஆயிட்டா, அப்புறமா டவுனுக்கு போய், காலேஜுல டிப்ளமா படிக்கலாம்டா"ன்னு சொன்னான். அதுக்காக அலஞ்சு, எல்லா பார்ம்மும் குடுத்து, முதல் ஷிப்ட்டுல வேலைக்கு போய், தூங்கியும் தூங்காமலும், சாயந்திர நேரத்துல காலேஜுக்கு போய் டிப்ளமா மூணு வருஷம் கஷ்டப்பட்டு படிச்சாச்சு, இதா அந்த ரிசல்டும் வந்திருச்சு, நானு 73 பர்செண்ட் மார்க் வாங்கி பாஸாயிட்டேன், கோயமுத்தூர்ல டவுன்ல இருந்து ரிசல்ட பாத்துட்டு வரும்போது, நெல்லை லாலா ஸ்வீட் கடையில ஒரு கிலோ ஸ்வீட் வாங்கிட்டு மொத மொதல்ல அப்பாவுக்குத்தான் குடுக்கணும்னு ஆசையா வந்து ஸ்வீட்ட குடுத்தேன். அவுரு அப்பவும் அதே சேர்ல உக்காந்து அதே மரக்கலர் பிரேம்போட்ட கண்ணாடி போட்டுகிட்டு புத்தகம் படிச்சுகிட்டு இருந்தாரு.

அப்பா நான் பாஸாயிட்டம்பான்னு ஸ்வீட் பாக்கெட்ட தெறந்து அப்பா முன்னால நீட்டுனேன். என்கையிலெல்லாம் அஞ்சு வருஷமா வெல்டிங் பண்றப்ப பட்ட தீக்காயத்தோட தளும்பு. அப்பா ஸ்வீட்டைப் பாத்தாரு, அப்புறம் என்னைய அன்னைக்குப் பாத்த அதே பார்வை பாத்தாரு, கொஞ்சம் நேரம் பாத்துட்டு, கண்ணுல தண்ணி வர லேசா விசும்பிகிட்டே முகத்தை திருப்பிகிட்டாரு. என்னன்னே புரியல. மறுபடியும் சொன்னேன் " அப்பா, நான் பாஸாயிட்டம்பா". அவுரு அழுகைய நிறுத்தல.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.

Monday, June 8, 2009

வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாதவனா இந்தியன்?????

ஹைதராபாத்தில் 3 பேருக்கு பன்றிக் காய்ச்சல் (Swine Flu) இருப்பதாக செய்தி, இந்த மூவரும் அமெரிக்காவிலிருந்து வந்தவர்கள்.
இன்னும் இந்தியாவின் பல பாகங்களில் இந்தவகை நோய் அடிக்கடி கண்டறியப்பட்டுள்ளது. எல்லா இடங்களிலும் இந்த நோயை கொண்டு வருபவர்கள் வெளி நாட்டுப் பயணிகளே, குறிப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு பயணம் சென்று வரும் பயணிகளே ஆவர்.

சற்றே காலச் சக்கரத்தை பின்னே உருட்டினோமென்றால், 1994 ம் ஆண்டு குஜராத்தின் சூரத் நகரம் "பிளேக்" என்னும் நோயினால் பாதிக்கப்பட்டது. எலிகளின் மூலம் பரவும் இந்த நோயால் மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்தார்கள். மருத்துவமனைகள் நிரம்ம்ம்ம்பி வழிந்தன. மத்திய, மாநில அரசுகள் பம்பர வேகத்தில் சுழன்று நோயின் விளைவுகளை கட்டுக்குள் கொண்டு வந்தன. சூரத் நகரமே சுத்தப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த சமயத்தில் உலக நாடுகள் நடந்து கொண்ட விதம் ஒவ்வொரு இந்தியன் மீதும் சாட்டையடிகளாய் விழுந்து கூனிக் குறுகி நின்றோம்.

இங்கிலாந்து : (1994 ல் )ஏர் இந்தியா விமானம், மும்பையிலிருந்து லண்டனுக்கு சென்றபொழுது, விமானத்தை விமான நிலையத்தின் கடைசி மூலையில் நிற்கவைத்து, அதை சுற்றிலும் ஒரு பெரிய பாதுகாப்பு வளையம் அமைத்து, இறங்கிய ஒவ்வொரு பயணியையும் எதோ ஒரு விரும்பத்தகாத அருவருப்பான ஜந்துவை பரிசோதிப்பதுபோல் சோதித்து எவ்வளவு அவமானப் படுத்த முடியுமோ அவ்வளவையும் செய்தனர்.

அமெரிக்கா: இந்திய கப்பல்கள் அமெரிக்க துறைமுகங்களில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. கடலுக்குள் தொலை தூரத்தில் கப்பல்கள் நிறுத்தப்பட்டு, பல்வேறு சுகாதார சோதனைகள் என்ற பெயரில் மாலுமிகளும், கப்பல் ஊழியர்களும் அவமானப்படுத்தப்பட்டு, சரக்குகளை அங்கிருந்தே சிறிய சரக்கு கப்பல்களில் மாற்றி எடுத்து சென்றனர். மாலுமிகள் ஓய்வு எடுப்பதற்காக வழக்கம்போல் கரைக்கு வர அனுமதி மறுக்கப் பட்டது.

ஆனால், கடந்த வருடங்களில் வாய்புண் நோயால் (Foot and Mouth Disease) இங்கிலாந்தின் பெரும்பாலான கால்நடைகள் பாதிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களாலேயே அவை கொல்லப்பட்டு, கனரக இயந்திரங்களைக் கொண்டு ஆழமான குழிகள் பறித்து, அதில் ஒட்டு மொத்தமாக இந்த விலங்குகளை தள்ளி மூடினார்கள். இந்த வாய்புண்ணை உருவாக்கும் கிருமி மாமிச உணவின் மூலம் பரவக் கூடிய அபாயம் இருந்த போதும், நமது நாட்டு விமான நிலையங்களில், இங்கிலாந்து விமானங்களை சர்வ சாதாரணமாக அனுமதித்தோம். எந்த இங்கிலாந்து பயணியும் சுகாதார சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. ஏன், ஏன், ஏன் வெள்ளைக்காரன் என்றால் அவன் மூலம் கிருமிகள் பரவாதா?????

பறவைக் காய்ச்சல் வந்த பொழுது, அமெரிக்க நாடுகளில் அதன் தாக்கம் பரவலாக இருந்த பொழுதும், அமெரிக்க கப்பல்கள் சர்வ சாதாரணமாக இந்திய துறைமுகங்களில் வந்து போய்க்கொண்டு தான் இருந்தன. தான் ஒரு இந்தியன் என்ற ஒரே காரணத்துக்காக பிளேக் வந்த சமயத்தில், இந்தியாவில் ஆறு மாதங்களாக வசிக்காமலிருந்த பொழுதிலும், லண்டனின் விரைவு ரயிலில் பயணம் செய்த பொழுது, காவலர்களாலும் இன்னும் ஆங்கிலேயர்களாலும் பெண் என்றும் பாராமல் அநாகரீகமாக சோதனைக்குட்படுத்தப் பட்டதையும், அவமானப்படுத்தப் பட்டதையும் அழுது கொண்டே என் ஒரு தோழி கூறியபொழுது அவருக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை.

இந்தியனுக்கு மாத்திரம் தான் இந்த சூடு சொரணையில்லா தன்மையிருப்பது ஏன் என்று தெரியவில்லை?

ஆஸ்திரேலியாவில் அடிக்கிறார்களா, அடிவாங்குவோம். அதை அந்த நாட்டு அரசு பட்டவர்த்தனமாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் மறைக்கிறது. இந்த அடிதடிஎல்லாம் யாரையும் குறிவைத்து நடப்பதல்ல, எதோ இரண்டு பேட்டை ரவுடிகள், பிளேடு பக்கிரிகள் அடித்துக் கொள்கிறார்களென ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமர் உலகின் முன் தைரியமாக பொய் சொல்கிறார். அதை கேட்டு விட்டு நமது மக்கள் அடுத்த சீரியல் எத்தனை மணிக்கு என்பது போன்ற கவலையில் ஆழ்ந்து விடுகிறோம். நமது மாண்புமிகுக்கள் அடுத்த கூட்டணி யாருடன் என்று கவலைப்பட போய் விடுகிறார்கள்.

அடேய், இந்தியனே, என் நண்பனே,

வருமுன் காப்போமென சுவற்றில் எழுதி வைத்தால் மட்டும் போதாது, கொஞ்சம் செயலில் காட்டு. அமெரிக்க மற்றும் இங்கிலாந்து விமானங்களையும் கப்பல்களையும் முற்றிலும் சுத்தம் செய்தபின் நம்து மண்ணில் அனுமதி, இல்லையேல் இந்த கொடிய வியாதியால் அவன் நாட்டில் ஒரு சதவீதம் செத்தால், சில ஆயிரம் பேர் சாகலாம். உனது நாட்டில் ஒரு சதவீதம் செத்தாலும் ஒரு கோடிப்பேர் சாவார்களே, கொஞ்சமாவது உணர்வு கொள்.

ஆஸ்திரேலியாவில் அடிபடும் எங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லையேல் எங்கள் கைகளும் பூப்பறித்துக் கொண்டிருக்காது நண்பா என்று ஒரு முறையாவது அவர்களது அரசாங்கத்துக்கு சொல்.

ஈழப் படுகொலையில் எப்படி கண்மூடித் திரிந்தாயோ அப்படியே இப்பொழுதும் திரியாதே, உன் கண் விழிக்கும் முன் எத்தனையோ மாணவச் செல்வங்கள் கடைசி முறையாக சுவாசித்திருப்பார்கள், இன வெறி என்பது அவ்வளவு கொடூரமானது, விழித்திடு, இந்தியனே, இந்த ஒரு முறையாவது விழித்து வீறுகொள்.

Thursday, June 4, 2009

கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு

தோன்றித்தொலைவது ஒளியின் அழகு.

தோன்றாமல் நிலைப்பது இருளின் அழகு.அளவுள் அடங்குவது ஒளியின் வலிமை.

அளக்க முடியாதது இருளின் பெருமை.


ஒளியின் உருவத்துக்கு ஒரு நூறு வர்ணம்.

அழிவிலா இருளுக்கு ஒரே ஒரு வர்ணம்.


பொய்யாய் மின்னுவது ஒளியின் குணம்.

உண்மையை உணர்த்துவது இருளின் மணம்.


பொய்யாய் உறவுகள் சிரித்திடும் ஒளியில்.

இல்லறம் கலந்து இனிப்பது இருளில்.


ஒளியினைப் போற்றிடும் ஆறறிவு மானிடா

இருளுக்கு இத்தனை சிறப்புண்டு கேளடா