Friday, July 31, 2009

ரக்க்ஷா பந்தன் - சகோதரத்துவத்தின் உன்னதம்.

உறவுகளில் உள்ள உன்னத உறவான சகோதர உறவை கொண்டாடும் ஒரு பண்டிகை இது.

ஒரே கருவறையில் உறங்கி, ஒரே தொப்புள் கொடியில் இணைந்து, ஒரே மார்பில் அமுதுண்டு, ஒரே தொட்டிலில் உறங்கி, ஒரே தட்டில் உணவுண்டு, ஒரே பாயில் தூங்கி என இணைந்திருப்பதற்காகவே பிறந்தது போல் இருக்கும் சகோதரனுக்கும் சகோதரிக்கும் உள்ள பாசப் பிணைப்பை புனிதமாக மதித்து, அதை கொண்டாடும் ஒரு நன்னாள்.

இந்த பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது என்பதைக் குறித்த பல அனுமானங்கள் இருக்கிறது.

மகாபலி என்னும் அசுரன் விஷ்ணுவின் தீவிர பக்தனாயிருந்ததால், அவரும் வந்து "பக்தா என்ன வரம் வேண்டும் கேள்" என்று சொன்னதும், அவன் "என் நாட்டுக்கு காவல் காரனாயிரு" என்று சொன்னவுடன், அவர் வைகுண்டத்தை விட்டுவிட்டு, மகாபலியின் நாட்டுக்கு வாட்ச்மேன் வேலைக்கு போய்விட்டார். எத்தனை நாள்தான் லக்ஷ்மி தேவியும் தனிமையில் நாட்களை கழிப்பது. ஒரு நாள் "எங்கே போனாய் என் நாதா" என தேடிக்கொண்டே வந்து மகாபலியின் நாட்டில் நாதனைக் கண்டதும், அவர் இருந்த கோலத்தைப் பார்த்து, வேதனைப்பட்டு, ஒரு துன்புறும் பிராமிணப் பெண்ணாக வேடம் போட்டு, மகாபலியின் அரண்மனையில் ஐக்கியமாகிவிட்டார்.

இந்த ஆடி மாதத்து (ஹிந்தியில் ஷ்ராவண மாதம்) பௌர்ணமி தினத்தன்று, மகாபலியின் கையில் ஒரு சிறு கயிறைக் கட்டி, தான் யாரென்று வெளிப்படுத்தி, னது நாதனை தன்னோடு அனுப்ப வேண்டுமென கேட்கவே, மகாபலியும் சரி, விஷ்ணு, இனி நீ போகலாம் என சொல்லிவிட்டாராம். விஷ்ணுவும் தனது மனைவியுடன் வைகுண்டத்துக்கு சென்று விட்டாராம்.

இங்கு லக்ஷ்மி தேவி மகாபலியின் கையில் கட்டினாரே ஒரு கயிறு, அது தான் இன்றளவும் ராக்கி என்று எல்லோராலும் கட்டப்படுகிறதாம். ஆனால் இன்னொரு சுவையான கதையும் உண்டு.

டெல்லியை ஹுமாயூன் ஆண்ட காலமது. சித்தூர்கட் மகாராஜாவின் விதவை மனைவி ராணி கர்ணாவதி ஹுமாயூனுக்கு ஒரு ராக்கி அனுப்பி அத்துடன் ஒரு செய்தியும் அனுப்பினார். குஜராத்தின் ராஜாவான பகதூர் ஷா என்னை அதிகம் சீண்டிப்பார்க்கிறான், நீங்க எனக்கு அண்ணன் மாதிரித்தானே, கொஞ்சம் என்னன்னு கேளுங்களேன் என்று சொன்னதும், ஒரு இஸ்லாமியனான தனக்கு, ஒரு இந்து அரசப் பெண்ணிடமிருந்து வந்த சகோதர பாசத்திற்கான அழைப்பிற்கு மதிப்பளித்து, ஹுமாயூன் பகதூர்ஷாவை ஒரு தட்டு தட்டி வைத்தாராம். அன்றிலிருந்து ராக்கி என்பது சகோதர, சகோதரி உறவின் ஒரு உன்னத அடையாள சின்னமாகிவிட்டது.

இன்னும் கிருஷ்ணனுக்கும் திரௌபதிக்கும் இருந்த சகோதர பந்தம் போன்ற நிறைய கதைகள் இருந்தாலும், இன்றுவரை ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே எந்த எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு உறவு இந்த சகோதர சகோதரி உறவு தான்.

இந்த நாளில் சகோதரி தனது சகோதரனின் தீர்க்காயுளுக்காக இறைவனை வேண்டுகிறாள். சகோதரனுக்கென தனது கையால் இனிப்புகள் செய்து, சகோதரனை ஆரத்தி எடுத்து முத்தம் செய்து வாழ்த்தி, அவனுக்கு இனிப்பூட்டுகிறாள். அவனது கையில் தனது அன்பின் கயிறாகிய ராக்கியை கட்டி, நீ எனது சகோதரன், எனது அன்பிற்குரியவன், என்னை நேசிப்பவன், எனது பாதுகாவலன் என்பதை உணர்த்துகிறாள். சகோதரனும், தனது சகோதரியை கட்டியணைத்து, முத்தம் செய்து, என் வாழ்நாள் முழுக்க நான் உனக்கு பாதுகாவலனாயிருப்பேன் என உறுதியளிக்கிறான். சகோதரி அவனுக்கு இனிப்பு ஊட்டுகிறாள். சகோதரன் அவளுக்கு அன்பளிப்புகளை கொடுக்கிறான்.

நினைத்துப் பாருங்கள். எவ்வளவு அற்புதமான உறவு இது. இந்த உறவின் மேன்மையை தான் "கார்ப்பரேட் கம்பர்" தனது இந்தப் பதிவில் சொல்லியிருப்பார். வாசித்துப்பாருங்கள். அதில் அவர் எழுதிய " அவளின் திருமணத்திற்கு பிறகு எப்பொழுதாவது வீட்டிற்கு வரும்பொழுது.."சன் டிவி எத்தனாவது சேனல்டா?" என்ற வினாவில் அவள் இப்பொழுது "விருந்தாளி" என புரியவைத்து விடும்.'' கண்ணில் நீரை வரவழைக்கும் வரிகள். இந்த உறவின் உன்னதத்தை சொல்லியிருப்பார்.

இதுவரை எனக்கும் எத்தனையோ பெண்கள் ராக்கி கட்டியிருக்கிறார்கள் என்றாலும், எனது நெஞ்சைத் தொட்டவள் மறைந்த என் தங்கை பார்வதிதான். மராட்டிய போலீஸாயிருந்த அவளை, நான் மகாராஷ்டிர மாநிலத்தில் சந்தித்தேன். எப்படி அவளுக்கு அண்ணனானேன் என இன்று வரை புரியவில்லை. இன்றும் காக்கி அணிந்து நிற்கும் ஒவ்வொரு காவல் பெண்ணிலும் என் தங்கையை காண்கிறேன். அவளுக்கு இந்த ரக்க்ஷா பந்தன் பதிவு சமர்ப்பணம்.

இந்த பதிவை வாசிக்கும் நீங்களும் இந்த வருட ரக்க்ஷா பந்தன் நாளில் (ஆகஸ்ட் 5 ம் தேதி) உங்கள் சகோதரிகளிடம் உங்கள் அன்பை வித்தியாசமாக வெளிப்படுத்துங்களேன். ஐடியாக்கள் பின்னூட்டத்தில வரவேற்கப்படுகின்றன.

Wednesday, July 29, 2009

ஜுகல்பந்தி - 29 ஜூலை 2009 - கலியுக மனுநீதி சோழன்




நகரம் - புவனேஷ்வர் - கோவில்களின் நகரம்.

இந்தியாவின் கிழக்குப் பகுதியில், 2000 வருடங்களுக்கு மேலாக இருக்கும் பழம்பெரும் நகரம். கிழக்குப் பகுதியின் தங்க முக்கோணம் என்று சொல்லப்படும் ஜெகநாதர் எழுந்தருளியுள்ள பூரி நகரமும், சூரிய தேவன் தேரில் ஏறி காட்சி தரும் கோனார்க் நகரமும், லிங்க ராஜ் ஆலயத்தில் சிவனும் விஷ்ணுவும் அருகருகே காட்சி தரும் புவனேஷ்வர் நகரமும் கலிங்கத்து கட்டிடக் கலைக்கு ஒரு உயர்ந்த சாட்சிகள்.

கலிங்க வம்சத்தில் வந்த கரவேல மன்னன் தான் இந்த பேரரசை நிர்மாணித்து, மாதம் மும்மாரி பொழிந்து, எல்லைகள் விஸ்தரிக்கப்பட்டு, செழித்து, தழைத்து, வளர்ந்து, நிமிர்ந்து, கொழித்து என ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார் இந்த கரவேலன். வடக்கே கங்கையிலிருந்து தெற்கே காவிரி வரை தன் எல்லையை விஸ்தீரணம் செய்த இந்த மாமன்னன், சும்மா சங்கம் வைத்து தமிழ் வளர்த்துக் கொண்டிருந்த பாண்டிய மன்னனையும் வம்புக்கிழுத்திருக்கிறார். மௌரிய வம்சத்து பேரரசரான அசோகருடன் நடந்த கலிங்கத்துப் போர் வரை இந்த கலிங்க மன்னன் கலக்கியிருக்கிறான். ஆனால் இந்த மாமன்னன் வாழ்ந்த காலத்தை கேட்கப் போனால், எல்லா வரலாற்று ஆசிரியர்களும், சும்மா காற்றில் கையை ஆட்டுகிறார்களே தவிர, இதுதான் என்று யாரும் சொலவதில்லை. ஒரு சிலர், கிறிஸ்துவுக்கு முந்தைய முதலாம் நூற்றாண்டு எனவும், சிலர் கிறிஸ்துவுக்கு பிந்தைய முதலாம் நூற்றாண்டு எனவும் குழப்புகிறார்கள். கலிங்கத்து வரலாற்றில் பழம்தின்னு கொட்டை போட்ட ஆர்.பி. மகாபத்ரா என்ற சரித்திர ஆய்வாளர் கூட ஆள விடுங்கடா சாமி என்கிறார். எது எப்படியோ, கற்குவியல்களை சிற்பங்களாய் மாற்றி இன்றும் நமது கண்ணுக்கு விருந்தாய் வைத்தவர்கள் இந்த கலிங்கர்கள்.

புவனேஷ்வர் நகரத்தில் உள்ள லிங்க ராஜ் ஆலயத்தில், சிவனும் விஷ்ணுவும் ஆளுக்கு ஒரு பாகத்தில் காட்சி தருகிறார்கள். முக்கிய ஆலயம், யக்ஞ சாலை, போக மண்டபம், நாட்டிய சாலை என நான்கு பிரிவுகளாய் பிரிந்திருக்கும் இந்த கோவிலில், கற்களை இத்தனை நுட்பமாக குடைவதற்கு எத்தனை வகை உளிகளை உபயோகித்தார்களோ தெரியவில்லை. எங்கும் சிற்பங்கள், நுண்ணிய வேலைப்பாடுகள் என பிரமிக்க வைக்கிறார்கள்.

புதிய புவனேஷ்வர நகரம் ஓட்டோ கொனிக்ஸ்பெர்கர் என்ற ஜெர்மானிய நகர வடிவமைப்பாளரால் வடிவமைக்கப்பட்டது. ஆனால் பின்னாளில் துணை நகரங்கள் தோன்ற ஆரம்பித்த உடனேயே இது மற்ற இந்திய நகரங்களைப் போலவே மாறி விட்டது. ஆனால் பசுமையை இன்னும் பாதுகாத்து வரும் புவனேஷ்வரர்கள் போற்றத்தகுந்தவர்களே. கற்கள் பேசும் கதைகள் கேட்க ஒரு முறையேனும் இந்த தங்க முக்கோணத்தில் மூழ்கி விட்டு வாருங்கள்.


நாட்டு நடப்புகள் - கலியுக மனு நீதிச் சோழன் - பரூக் அப்துல்லா.

2006 ம் ஆண்டில் தீவிரவாதிகள் காஷ்மீரில் வைக்கும் வெடி குண்டுகளை விட ஒரு பெரிய வெடி குண்டு வெடித்தது. ஆனால் இந்த குண்டில் அகப்பட்டது திருவாளர் பொது ஜனம் அல்ல. சிவப்பு விளக்கு காரில் பவனி வரும் மாண்பு மிகுக்கள், உயிரையும் துச்சமாக மதித்து எல்லையில் காவல் புரியும் வீர தீர எல்லைக் காவல் படை பிரிவின் தலைமை அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள், வியாபார காந்தங்கள் என இதன் தொடர் நீண்டு கொண்டே போகிறது. மத்திய புலனாய்வுத்துறை களத்தில் குதித்திருக்கிறது.

சபீனா என்ற ஒரு புதுமைப்பெண் வறுமையில் இருக்கும் ஏழை சிறுமிகளை இந்த அதிகார வர்க்கத்தின் காமப் பசிக்கு இரையாக்கி பணம் சம்பாதித்திருக்கிறார். ஒரு சில சிறுமிகளை வைத்து தொழிலை ஆரம்பித்த சபீனாவுக்கு இந்த தொழிலில் இருக்கும் சுலபப்பணமும், வியாபார காந்தங்கள், அரசியல் வாதிகள், அரசாங்க உயர் பதவியினரின் நெருக்கம் என ஒரு முடிவில்லா சாம்ராஜ்யக் கனவே தோன்றியிருக்கிறது. அவர் சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபடுத்தி அதை வீடியோ படமெடுத்து, அதை வைத்து மிரட்டி மிரட்டியே மேலும் மேலும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சிறுமிகளை விருந்தாக்கியிருக்கிறார். இந்த தொழிலில் இருக்கும் சுலபப்பணத்தை கண்டு கொண்ட கேமராமேன்கள் ரியாஸ் லங்கூவும், நஸீரும், சபீனா அக்கா ஒரு சிடி கேட்டால் இரண்டாக பிரிண்ட் எடுத்து ஒன்றை அக்காவுக்கும் மற்றொன்றை மார்க்கெட்டில் நல்ல விலைக்கும் விற்று காசு பார்த்திருக்கிறார்கள். நாளடைவில் ஸ்ரீநகரின் முக்கிய கடைகளில் கூட இத்தகைய சி.டி.க்கள் குறைந்த விலையில் சிறந்த முறையில் கிடைக்க, அரசல் புரசலாக விஷயம் வெளியே கசிந்திருக்கிறது. இந்த சி.டி.க்களை வாங்கி கமுக்கமாக பார்த்து அனுபவிக்கலாம் என கிளம்பிய ஒரு கும்பலுக்கு, அதில் தனது ரத்த சம்பந்தங்களே வேறொரு ஆடவன் முன் நிர்வாணமாகி, அவனது காமப்பசிக்கு இரையாவது படமாக்கப்பட்டிருப்பது தெரிந்ததும் வெகுண்டு போயிருக்கிறார்கள். உடனே ஸ்ரீநகரின் மையப் பகுதியிலுள்ள ஷஹீத் கஞ்ச் காவல் நிலையத்தில் இரண்டு சி.டி.க்களை ஆதாரமாகக் கொண்டு முதல் புகார் செய்யப் பட்டிருக்கிறது. அங்கிருந்து நூல் பிடித்த போலீஸ், விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்து மூர்ச்சையானது தான் மிச்சம். 43 சிறுமிகள் பாழ்படுத்தப் பட்டிருப்பதும், இதன் தொடர்பு சட்டசபை உறுப்பினர்களையும் விட்டு வைக்காததையும் கண்டு, விஷயம் மத்திய புலனாய்வுத்துறைக்கு மாற்றப்பட்டது. ஆளும் கட்சி, எதிர்கட்சி என்ற பேதமேதுமில்லாமல் எல்லோரும் சம்பந்தப் பட்டிருப்பதால், அவரவர் சவுகரியத்துக்கு சேற்றை வாரி வீசிக் கொண்டனர். இதெல்லாம் நடந்து முடிந்தது 2006 ஆம் ஆண்டில்.

பிறகு, சூரியன் மறைந்து, மறுபடி உதித்து, மழை பெய்து, வெயிலடித்து என காலங்கள் மாறிக் கொண்டே போனதே ஒழிய குற்றவாளிகள் யாருக்கும் ஒரு இம்மியளவுக்கு கூட எந்த தீங்கும் ஏற்படவில்லை. அவர்கள் தைரியமாக இன்னொரு அக்காவை தேடிக் கொண்டார்கள் போலிருக்கிறது. விஷயம் இப்படியிருக்க, கடந்த திங்கள் கிழமை சட்ட சபையில் காஷ்மீரத்து பெண்சிங்கமான மஹபூபா சயீத், சபாநாயகரின் மைக்கை உடைத்தெறிந்து ரகளை செய்து, இந்த பிரச்சனையில் எண்ணை ஊற்றினார். செவ்வாய்கிழமை மஹபூபா சயீத்தின் கட்சிக்காரரான முஸாபர் உசைன் பேக் என்பவர் மத்திய புலனாய்வுத்துறை சமர்ப்பித்த அறிக்கையின்படி, தற்போதைய முதலமைச்சரான ஓமர் அப்துல்லாவுக்கும் கூட இந்த சிறுமிகள் பிரச்சனையில் தொடர்பு இருக்கிறது என ஒரு குண்டை தூக்கிபோட, உணர்ச்சி வசப்பட்ட ஓமர் அப்துல்லா உடனடியாக தான் பதவி விலகுவதாக அறிவித்து கடிதத்தையும் உடனே கவர்னரிடம் கொடுத்து விட, ஊடகங்களுக்கு ஒரு அருமையான தீனி கிடைத்து விட்டது.

உடனே NDTV ன் காஷ்மீரத்து விவகாரங்களுக்கான நாட்டாமை மனுஷி பர்க்கா தத் தனது பரி வாரங்களுடன் பரூக் அப்துல்லாவையும், முஸாபர் உசைன் பேக்கையும் மோத விட்டு வேடிக்கை காட்டினார். பதவி விலகுவதாக அதிரடியாக அறிவித்த ஓமர் அப்துல்லாவின் தகப்பன் பரூக் அப்துல்லா தான் மனுநீதிச் சோழன் ரேஞ்சுக்கு சவால் விட்டார். "எனது மகன் குற்றவாளி என நீரூபிக்கப் பட்டால், அவனை சட்டம் தண்டிக்கத் தேவையில்லை, நானே தூக்கிலிடுகிறேன்" என ஆவேசத்துடன் கூவினார். இப்படி மோத விட்டு விஷயத்தை சிறுமிகளின் வேதனை, பெரிய மனிதர்களின் சமூகக் குற்றம், அரசாங்க அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகம் போன்ற கோணங்களிலிருந்து முழுவதுமாய் திசை திருப்பி இதை ஆளும் கட்சி, எதிர்கட்சி பிரச்சனையாக்கி அரசியல் முலாம் பூசி விட்டதன் முழு பெருமையையும் பர்க்கா தத் போன்ற நாட்டாமை அம்மணிகள் தேடிக் கொண்டனர். ஊடகங்கள்?????!!!!!!! மறுபடியும் ஜெய் ஹோ !!!!!!!!!!!!!!!!

ஐயா, நீங்க தூக்கு மாட்டிட்டு சாகுங்க, ஆனா மலர வேண்டிய மொட்டுகளை, வேரோட சாய்க்கற அந்த பாவிகளையும் தூக்குல போட்டுட்டு சாகுங்கைய்யா, உங்களுக்கு புண்ணியமாப் போகும்.

ங்கொய்யால பக்கங்கள்

மீசை அரும்புனவுடனே லுக் வுட்டா
முளைச்சு மூணு எல உடலே
அதுக்குள்ள திமிரப் பாருங்கறீங்க,

காலேஜ் வயசுல லுக் வுட்டா
படிக்கற வயசுல திமரப் பாருங்கறீங்க,

வேலைக்கு போய், ஆபீஸ்ல லுக் வுட்டா
இன்னும் ஆபீஸ்ல காலே வெக்கல
அதுக்குள்ள திமிரப் பாரூங்கறீங்க,

கல்யாண வயசுல லுக் வுட்டா
பொறுப்பா வேலையப் பாக்கறத வுட்டுட்டு
அலையுது பாருங்கறீங்க

கல்யாணம் பண்ணீட்டு லுக் வுட்டா,
கல்யாணம் ஆகியும் அடங்குதா பாருங்கறீங்க

குழந்தை பெத்துகிட்டு லுக் வுட்டா
முடி நரைக்கர வயசாகியும்
திமிரு அடங்குதா பாருங்கறீங்க,

குழந்தைக பெருசானதுக்கப்புறம் லுக் வுட்டா
கட்டைல போற வயசாச்சு,
திமிர் அடங்குதானு பாருங்கன்றீங்க

இப்படியே போனா ங்கொய்யால
நாங்க எப்பத்தாண்டா
ஃபிகர்கள லுக் வுடறது.

Wednesday, July 22, 2009

ஜுகல்பந்தி - 22 - 07 - 2009,





நகரம் - பரோடா - நாகரீகத்தின் நகரம்.

பரோடா, வடோத்ரா, சாயாஜி நகரி, சன்ஸ்கரி நகரி என பல பெயர்களால் அழைக்கப்படும் இந்த நகரமும் ஒரு நதிக்கரையில் தான் அமந்துள்ளது. மனிதன் நாடோடி வாழ்வு வாழ்ந்து அலுத்து, இனி அலைந்தது போதும், ஒரு வீடு, நிலம் என்று எதையாவது சொந்தமாக்கி நிரந்தரமாக ஒரு இடத்தில் தங்கி விடலாம் என யோசித்த பொழுது, எல்லாவற்றிற்கும் வசதியான இடங்களாக கண்ணில் பட்டது நதிக்கரைகள் தான் போலும். அப்படி நதிக்கரைகளில் தங்கியதால் தான் இன்றும் மிகச்சிறந்த நாகரிகங்கள் ஆற்றங்கரையில் தோன்றியவையாகவே காணப் படுகின்றன. அப்படி அமைதியாகவும், அழகாகவும், பருவப் பெண்ணின் இடுப்பு வளைவுகளைப் போல் வளைந்தும் நெளிந்துமென இன்றைய குஜராத்தில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நதி தான் விசுவாமித்திர நதி. இதற்கு விசுவாமித்திர நதி என ஏன் பெயர் வந்தது என்று கேட்பீர்களானால் பரோடாவை விட்டு வெகு தூரம் செல்ல வேண்டியிருக்கும், இப்போதைக்கு இது விசுவாமித்திர முனிவரின் ஞாபகார்த்தமாக பெயரிடப்பட்டது என்ற ஒரு தகவல் மாத்திரம் போதும். இந்த நதியின் கரையில் தான் பரோடா நகரமும் ஆதி மனிதனால் நிர்மாணிக்கப்பட்டது,

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த விசுவாமித்திர நதியின் மேற்குக்கரையில் இருந்த ஒரு சிறிய பட்டணத்திற்கு அங்கோட்டக் என்று பெயர். (இது இன்று அகோட்டா என அழைக்கப்படுகிறது). மனிதன் இந்த பூமியை சகல சௌகர்யங்களும் நிறைந்தது என்றுகண்டு அங்கு குடியேறி பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்ந்து வந்தான். கி.பி. 600 - ம் ஆண்டு இந்த விசுவாமித்திர நதியில் வந்த ஒரு வெள்ளம் இந்த அங்கோட்டக் நகரை வெகுவாக பாதித்தது. இப்பொழுது மாதிரி வெள்ள நிவாரண நிதியும், வெள்ளம் நிறைந்த பகுதிகளில் தலைவர்களின் படத்துடன் கூடிய டிஜிட்டல் பேனர் கட்டிய பிரியாணி வழங்கும் மையங்கள் எதுவும் இல்லாததால், மனிதன் பாதுகாப்பான பகுதியை நாடிப் போன பொழுது நதியின் கிழக்குக் கரையில் "வடபத்ரகா" என்ற ஒரு கிராமத்தை கண்டு பிடித்தான். (வடபத்ரகா என்றால் ஆலமர இலை என்று அர்த்தம், ஆனால் சமஸ்கிருதத்தில் ஆலமர இதயம் என்றும் பொருள் உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, ஒரு வேளை கன்னா பின்னாவென்று ஆலமரங்கள் எழுந்து நின்றிருந்ததோ என்னவோ) இந்த கிராமம் நதியின் கரையை விட கொஞ்சம் உயரமான இடத்தில் இருக்கவே, வெள்ளம் வந்தாலும் பாதகமில்லை என இங்கு குடியேறி, மறுபடியும் பதினாறும் பெற்று, பெரு வாழ்வு வாழ்ந்தான். இந்த வடபத்ரகா தான், நாளடைவில், வடோத்ராவாக மாறி பரோடாவாகிவிட்டது.

வளம் கொழிக்க ஆரம்பித்தாலே ஆள்வதற்கென்று அரசியல்வாதிகளும், மன்னர்களும் முளைத்து விடுவார்களே. இந்த சூத்திரத்திலிருந்து சற்றும் மாறாமல், வடக்கே இருந்த ராஜபுத்திர மன்னர்கள் இந்த நகரத்தையும் ஆண்டிருக்கிறார்கள். அவர்களில் இருந்த ராஜா சந்தன் என்பவரின் நினைவாக இது மிக சொற்ப காலத்துக்கு சந்தனாவதி என்றும் அதற்குப் பின் சிறிது நாட்கள் ராஜபுத்திர வீரர்களின் புகழ்பாடும்படி வீர்ஷேத்திரா அல்லது வீர்வாடி என்றும் அழைக்கப்பட்டது. பிறகு என்னவோ இந்த ஆலமர மேட்டரை மட்டும் விட்டுக் கொடுக்க விரும்பாத மக்கள், மறுபடியும் வடபத்ரகாவுக்கே மாறி, பின் ஆங்கிலேயர்களால் பரோடா என அழைக்கப்பட்டு, கடைசியில் 1974 ஆம் ஆண்டு இறுதியாக இந்திய அரசால் வடோத்ரா என பெயரிடப் பட்டது.

இந்த நகரை, ராஜபுத்திரர்களிடமிருந்து கைப்பற்றி, டெல்லி சுல்தான்கள் ஆண்டிருக்கிறார்கள்.பிற்பாடு முகலாய சக்கரவர்த்தியின் ஆட்சியின் கீழ் இருந்த இந்த நகரத்தை, கி.பி. 1732 ஆம் ஆண்டு முகலாயர்களிடம் இருந்து மராட்டிய கெய்க்வாட் வம்சத்தினர் கைப்பற்றியிருக்கிறார்கள். 1734 ம் வருடத்திலிருந்து 1948 வரை இந்த ராஜ்ஜியம் கெய்க்வாட் மன்னர்களின் கைகளிலேயே இருந்து பின்னர் சுதந்திர இந்தியாவில் இணைந்து விட்டது. இதில் இன்றும் போற்றப்படும் மன்னரான மகாராஜா மூன்றாவது சாயாஜி ராவ் கெய்க்வாட் என்பவரின் காலத்தில் தான் (1875 - 1939)கட்டாய ஆரம்பக்கல்வி,பல்கலைக் கழகம், நூலகம், என கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மருத்துவதுறை, துணி தயாரிப்பு, கல் குவாரிகள் என தன் ஆட்சிக்காலத்தில் நிஜமாகவே ஒரு பொற்காலத்தை வழங்கியிருக்கிறார் சிவாஜிராவ். இவரது ஆட்சிக்காலத்தை பற்றி அதிகம் படிக்க அன்பர் முகில் எழுதி வரும் " அகம், புறம், அந்தப்புரம்" படிக்கவும். இவர் கட்டிய அரண்மனைகள், லக்ஷ்மி விலாஸ், பிரதாப் விலாஸ், நஸர்பாக் மற்றும் மகர்புரா அரண்மனைகள் இவரது கலை நயத்தை ரசனையை பறை சாற்றுபவை.

இந்நாளில் பரோடாவில் இந்தியாவின் தொழில் நிறுவனங்களான ரிலையன்ஸ், IPCL, GAIL, ONGC போன்ற துட்டு பார்ட்டிகள் இங்கு தொழில் புரிகிறார்கள்.

நாட்டு நடப்புகள் - இந்தோனேஷியா.

ஜூலை 17 ம் தேதி, காலையில் இந்தோனேஷிய தலைநகரான ஜகார்த்தாவில் மெகா குனிங்கன் என்ற பகுதியில் உள்ள மேரியட் ஹோட்டலின் உள்ளே இருந்து ஒரு வெடிச்சத்தம் கேட்கிறது. அதே போல வெடிச்சத்தம் அந்த ஹோட்டலின் முன்னால் உள்ள ரிட்ஸ் கார்ல்டன் என்ற நட்சத்திர ஹோட்டலையும் தாக்குகிறது. கடைசியில் சாவு எண்ணிக்கை 7 என்றும், காயமடைந்தோர் 50 க்கும் மேல் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த மேரியட் ஹோட்டலில் தான் 2004 ம் ஆண்டில் ஒரு ஐந்து மாதம் தங்கியிருந்தேன். ஒரு ஈ, காக்கை கூட அங்கு அத்து மீறி நுழைந்து விட முடியாது. அவ்வளவு பாதுகாப்பு சோதனைகள் இருக்கும். அதையும் மீறி உள்ளே குண்டு வைத்திருக்கிறார்களென்றால் எதோ ஒரு மூன்றாந்தர ரவுடிக் கும்பல் செய்த வேலையாயிருக்காது. உடனே ஊடகங்கள் வழக்கம் போல தங்கள் ஊகங்களை கிளப்பி, இது ஜமா இஸ்லாமியாவா என்றபடி விரல்களை நீட்ட, வேறொரு ஊடக கும்பல் இது அவர்களல்ல, நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் கடுப்படைந்த லோக்கல் அரசியல்வாதிகள் மலேசிய தீவிரவாதியான நூருத்தின் முகம்மதுவோடு இணைந்து அல்லது அவன் கூட்டளிகளோடு இணைந்துதான் இந்த ஆட்டம் ஆடியிருக்கிறார்கள் என கிளப்பி விட்டுள்ளார்கள். சரி அது யாரோ, பா. ராகவன் பின்னொரு நாளில் இதைப் பற்றி எழுதுவார் என நம்புகிறேன்.

இந்த வெடிகுண்டு தாக்குதலில் எனது ஒரு நல்ல நண்பரும் உயிரிழந்தார். தீமோத்தேயு மெக்கேய் என்ற (எல்லோரும் அவரை "டிம்" என்று செல்லமாக அழைப்பார்கள்) ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் உயர் அதிகாரி, (நான் இந்தோனேஷியாவில் இந்த நிறுவனத்தின் கட்டுமான பணிகளுக்காகத்தான் சென்றிருந்தேன்). மிகவும் அமைதியான குணமுடைய இந்த ஐரோப்பியர், அன்றும் வழக்கம் போல மேரியட் ஹோட்டலின் நுழைவாயிலுக்கு நேர் மேலிருக்கும் அறையில் தங்கியிருந்திருக்கிறார். நான் அங்கிருந்த நாட்களில் இருவரும் பலமுறை இரவு உணவை ஒன்றாகவே உண்டிருக்கிறோம். நுழைவாயிலுக்கு மேலே உள்ள அறையில் தங்கியிருக்கிறீர்களே, எவ்வளவுதான் தடித்த திரைகள் இருந்தாலும், இரவில் கார் வரும் பொழுதெல்லாம் கார் விளக்குகளின் ஒளி அறைக்குள் விழுந்து தொந்தரவு செய்யுமே என்று கேட்டதற்கு, எனது முக்கிய பொழுது போக்கே வருவோர் போவோரை பார்த்துக் கொண்டிருப்பதுதான் என் சிரித்துக் கொண்டே சொன்னார். அந்த பொழுது போக்குதான் அவருக்கு எமனாயிருக்கிறது. ஹோட்டலின் முன் பாகம் தான் சேதமடைந்திருக்கிறது, பின் பாகத்தில் உள்ளவர்களுக்கு கொஞ்ச நேரம் கழித்து தான் குண்டு வெடித்ததே தெரியுமாம்.

எப்படியோ தீவிரவாதம் மறுபடியும் ஒரு முறை தன் கோரப் பற்களைக் காட்டி சிரித்திருக்கிறது.

ங்கொய்யால பகுதி:

நீ மொக்கை போட்டா அது டிஸ்கஷன்
நான் பேசுனா அது மொக்கைங்கற

நீ நெட் பாத்தா அது கம்பெனி வேலை
நான் நெட் பாத்தா அது பர்சனல்லுங்கற

நீ லேட்டா வந்தா, நீ பிஸிங்கற
நான் லேட்டா வந்தா ஒழுக்கமில்லைங்கற

நீ ஒரு ஃபிகர்கிட்ட பேசுனா அது கம்பெனி மேட்டருங்கற
அதே நான் பேசுனா அது கடலைங்கற

ங்கொய்யால,
உன்னையெல்லாம் எவண்டா பாஸ்ஸுன்னு சொன்னது.

Monday, July 20, 2009

உண்மை சொல், ஒரு கோடி வெல்.

சமீபத்தில் இந்திய தொலைக்காட்சிகளில் ஒரு தொடர் "டெரர்" ஆக ஆரம்பித்துள்ளது. ஆங்கில தொலைக்காட்சிகளில் " Moment of Truth" என்ற தொடரின் கொள்கைகள் அனைத்தையும் கொண்ட ஒரு தொடர் "ஸ்டார் ப்ளஸ்" சேனலில் ஹிந்தியில் "சச் கா சாம்னா" என்ற பெயரில் ஆரம்பித்துள்ளது.

திடுக்கிடும் கேள்விகள், மனிதர்களின் படுக்கையறை நிகழ்வுகளை சுற்றியே அமைக்கப்பட்டிருக்கும் வினா வடிவங்கள், அடுத்தவர் அந்தரங்கத்தை சற்றும் கூசாது வெளிக்கொணரும் வக்கிரங்கள், முறையற்ற உறவுகளை நியாயப் படுத்தும் வண்ணமாக சர்வ அலட்சியமாக "ஆம், அப்படித்தான், இப்ப என்ன பண்ணுவே" என்பது போன்ற பதில்கள், நான்கு சுவர்களுக்குள் உறவுகள் ஒருவர் மீது ஒருவர் கொட்ட முடியாத வெறுப்பு, கோபம் ஆகியவற்றை நாற்பது கோடி பேர் முன்னால் உன்னை நாக்க புடுங்கற மாதிரி நாலு கேள்வி கேக்கறேன் பார் என்ற பழி வாங்கல் என ஆட்டம் களை கட்டியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு நீங்கள் விண்ணப்பித்தீர்களென்றால், முதல், இரண்டு, மூன்று என்று மூன்று கட்டங்களாக ரவுண்டு கட்டி உங்களிடத்தில் நேர்முக தேர்வு நடத்தப் படுகிறது. உங்களது பின்புலம், குடும்பம், குடும்ப உறுப்பினர்களுக்கும் உங்களுக்கும் உள்ள உறவு முறையின் உண்மைத்தன்மை, ஸ்திரத்தன்மை ஆகியவை புரிந்து கொள்ளப்பட்டபின், 50 கேள்விகள் தயாரிக்கப்படுகின்றன. இந்தக் கேள்விகளுக்கு உங்களிடம் " Polygraph Test" என்ற சோதனை முறையில் பதில்கள் பெறப் படுகின்றன. இந்த முறையில் நீங்கள் எந்த கேள்விக்கு என்ன பதில் சொன்னீர்கள் என்று உங்களுக்கு நினைவில் இருப்பது மிகவும் கடினம். எல்லா கேள்விகளுக்கும் விடை ஆம் அல்லது இல்லை என்பது தான். உதாரணத்திற்கு " உங்கள் மகளது திருமணத்திற்கு பின்பும், நீங்கள் அவளது தனிப்பட்ட வாழ்வின் விஷயங்களை தீர்மானிப்பது சரி என நினைக்கிறீர்களா?" என்பது போன்ற கேள்விகள் கேட்பதிலிருந்து கேமராவின் முன் ஆட்டம் ஆரம்பிக்கிறது. இதில் 24 கேள்விகளுக்கு மனசாட்சியுடன் சரியான பதில் சொல்லி விட்டால் நீங்கள் ஒரு கோடி ரூபாய் ஜெயிக்கலாம்.

முதலில் வெகு எளிமையான கேள்விகள், மற்றவர்களை சிரிக்க வைக்கும் கேள்விகள் கேட்கப் படுகிறது. ஒரு பெண்ணைப் பார்த்து "நீங்கள் ஒரு வாரம் குளிக்காமல் இருந்திருக்கிறீர்களா??" என்ற கேள்விக்கு அரங்கமே அதிர சிரிப்பொலி கேட்கிறது. இந்த தந்திரம் பதில் சொல்பவரை தான் ஒரு தேர்வில் அமர்ந்திருக்கிறோம் என்ற பதட்டத்தை மாற்றி சகஜ நிலைக்கு கொண்டு வர உதவும் ஒரு உத்திதான். அந்தப் பெண்ணும் இதற்கு ஆம் என பதில் அளிக்க, முன்னே "Polygraphic Test" இதே கேள்வி கேட்கப்பட்டு அதற்கு இந்த அம்மணி என்ன பதில் சொன்னார்கள் என்பது சரி பார்க்கப்பட்டு பணம் பரிசாக அளிக்கப்படுகிறது. இப்படியாக விளையாட்டுத்தனத்துடன் ஆரம்பிக்கும் இந்த கேள்விகள் போகப் போக முழுவதும் அந்தரங்கத்தைப் பற்றியதாக மாறுகிறது. கடந்த வாரத்தில் காண்பிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியில், ஒரு 72 வயது மனிதர், அவருக்கு மூன்று மனைவிகள் இருந்திருக்கிறார்கள், நான்காவதாக வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். அவரது மகளுக்கு 40 வயதிருக்கலாம். அவரது, தம்பி, ஒரு மனைவி, 40 வயது மகள் மற்றும் இப்பொழுது அவருடன் வாழ்ந்து வரும் பெண் ஆகிய இத்தனை பேர் முன்னிலையில் அவரிடத்தில் கேட்கப்படும் கேள்விகள் :

நீங்கள் ஹோட்டல்களில் தங்கிய பொழுது அங்கிருந்து பெட்ஷீட்டுகளை திருடிக் கொண்டு வந்திருக்க்கிறீர்களா?
உங்கள் மகளின் வயதை விட குறைந்த வயதுடைய பெண்ணுடன் உடல் உறவு கொண்டிருக்கிறீர்களா?
உங்கள் உறவுக்கார பெண்களுடன் மனைவிக்கு தெரியாமல் உடலுறவு கொண்டீர்களா?
இதுவரை விபசாரிகளுடன் உடலுறவு கொண்டிருக்கிறீர்களா?
உங்களுக்கு ரகசியமாகப் பிறந்த குழந்தைகள் இருக்கிறார்களா?
உங்கள் மனைவி (அங்கு அமர்ந்திருப்பவர்) வெறும் பணத்துக்காகத்தான் உங்களுடன் உறவு வைத்திருந்தார்களா?


இந்தக் கேள்விகளை மற்றுமொருமுறை வாசித்துப் பாருங்கள். வயிற்றைக் கலக்குகிறதா? ஆச்சரியப் படாதீர்கள் அன்பர்களே, இந்த வக்கிரங்களை ஒருவேளை நேற்று வரை நீங்கள் வீதிக்கு வெளியில், தெரு முனையில், டீக்கடைகளில், அலுவலகத்தில், அல்லது புரளி பேசப்படும் இடங்களில் கேட்டிருக்கலாம் அல்லது பார்த்துமிருக்கலாம். ஆனால் இப்பொழுது இந்த வக்கிரங்கள், இதோ உங்கள் வீட்டு வரவேற்பறையில் வைத்திருக்கிறீர்களே ஒரு சின்னத்திரை, அதன் மூலம் உங்கள் அருகிலேயே வந்து விட்டது. ஒரு பெண்ணிடம் கேட்கப் பட்ட கேள்வி " கணவனைத் தவிர இன்னொருவருடன் தொடர்ந்து உடல் உறவு கொள்வதும், அது கணவருக்குத் தெரியாமல் இருக்கும் வரை சரி என்றும் நினைக்கிறீர்களா??" என்ற கேள்விக்கு அந்தப் பெண் இல்லை என்று அழுத்தம் திருத்தமாக பதில் சொல்ல, உண்மை அறியும் சோதனையில் அதற்கு ஆமாம் என்று பதில் சொன்னது வெளியாக, அந்தக் பெண்ணின் கணவர் தன் தலையை பிடித்துக் கொண்டு கதறுகிறார். அந்தப் பெண்ணின் அம்மா, கண்ணீரை அடக்க மாட்டாமல் விம்முவதும் இந்த நிகழ்ச்சியின் வெற்றிகள்.

இதன் தொகுப்பாளரான ராஜீவ் கண்டேல்வால் என்பவரை அனத்து தொலைக்காட்சிகளும் நமது சமூக காவலர்கள் என்ற போர்வையில் இருக்கும் பலரோடுகூட சேர்ந்து பேட்டி மேல் பேட்டியாக எடுத்து ஒளி பரப்புகிறார்கள். எல்லோராலும் வைக்கப்படுகிற வாதங்களுக்கு ராஜீவின் ஒரே பதில், உண்மை பேசுவது தவறா??

ஆமாம் நானும் கேட்கிறேன், உண்மை பேசுவது தவறா? அது அடுத்தவர் படுக்கையறை விஷயங்களாகட்டும், ஒரு பெண்ணின் அந்தரங்கமாகட்டும், ஒரு விளையாட்டு வீரனின் கதையாகட்டும், (வினோத் காம்பிளி சர்ச்சையில் சிக்கியது இந்த பாடாவதி உண்மை பேசியதால் தான்), கணவன் மனைவியின் உறவாகட்டும், தாய், மகள் உறவாகட்டும், என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், உங்கள் வாயிலிருந்து புறப்படும் உண்மைகள் ஒரு பரபரப்பை உண்டு பண்ண வேண்டும், குறிப்பாக ஆண் பெண் உடல் உறவை பற்றிய உண்மைகள், நீங்கள் யார் யாருடன் உடல் உறவு கொண்டீர்கள என்ற உண்மைகள், உங்கள் மேலதிகாரி தன் இச்சைக்கு இணங்கும்படி உங்களை வற்புறுத்தினாரா என்பது போன்ற உண்மைகள், உங்கள் நண்பர்கள் உங்களுக்கு துரோகம் செய்தார்களா என்பது போன்ற உண்மைகள்( உங்கள் நன்பரும் நீங்களும் ஒரு பிரபல புள்ளிகளாய் இருக்கும் பட்சத்தில் மட்டுமே இந்த விவரங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்), இது போன்ற உண்மைகளை தாராளமாக பேசுங்கள். அப்பொழுது தான் நாங்களும் இதை விளம்பரங்களுக்கு மத்தியில் ஒரு பரபரப்பு காட்சியாக காண்பித்து நாலு காசு பார்க்கமுடியும். இந்த உண்மை பேசுவதினால் யார் குடும்பமோ எக்கேடோ கெட்டு நாசமாய் போனால் எனக்கென்ன கேடு, என் சேனலுக்கு பணம் வருகிறதல்லவா, அது போதும்.

அடேய், ஊடக வெண்ணைகளா, அமெரிக்காவில் மனிதனுடைய வாழ்வில் மிகச்சில வேடங்களே உள்ளது. ஒன்று அவனுடைய குடும்பம் (அப்படி ஒன்று தப்பித் தவறி இருந்தால்) அடுத்தது அவனது வேலை. அங்கு சமூக வாழ்க்கை என்பது வெறும் சொல்லிலும் பேச்சிலும் தான். நம்மைப்போல் அண்டை வீட்டுக்காரர்களோ, ஒண்டுக்குடித்தனங்களோ மிகவும் அரிது. அவர்கள் அவர்களது அந்தரங்கங்களைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், செய்யலாம். யாரும் கவலைப் பட மாட்டார்கள். ஆனால், இங்குள்ள நாம் ஒரு சமூகமாக வாழ்ந்து வருகிறோம். சமூகத்தில் இத்தகைய நச்சுக்களை சுதந்திரமாக உலா விடுவீர்களெனில், உண்மை பேசி ஒரு கோடி ரூபாய் பரிசு பெறலாம், ஆனால், நீயும் நானும் குடும்பம் என்ற கட்டுக் கோப்புக்குள் வாழுவோமா என்பது சந்தேகமே.

வாய்மையே வெல்லும், ஆனால் இங்கு அதன் விலை ஒரு கோடி ரூபாய், என்ன கொடுமை சார் இது??????

Thursday, July 16, 2009

அசத்தும் ஆதி மூல கிருஷ்ணன்!!!!!!!!


பதிவர் வட்டத்தில் நகைச்சுவையுடனும், அசத்தும் நயத்துடனும், உருக்கும் உணர்வு பூர்வ பதிவுகளாலும், குறிப்பாக துறை சார்ந்த பதிவுகளாலும் நம் நெஞ்சில் நிறைந்திருப்பவர், தாமிரா என்றறியப்பட்ட, ஆதி என்கிற ஆதிமூல கிருஷ்ணன்.

இவர் சமீபத்தில் தனது வலைப்பூ வடிவத்தை மாற்றி, சில கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளார். இவரது சமீபத்திய பதிவில் ஒரு அன்பர் இட்ட பின்னூட்டம்:

வாழவந்தான் said...
side bar voting-ல் துறை சார்ந்த பதிவுகள் option இல்லை. (இதை குறிப்பிட காரணம் நடந்து முடிந்த univ exam-ல் six sigma and S5 பதிவுகளால் தப்பித்தேன்... நன்றி...)



இந்த பின்னூட்டத்தை படிக்கும்பொழுது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நாம் எழுதும் பதிவுகள் ரசிக்கப்படுகிறதா என்பதில் அதிக கவனம் செலுத்தும் என்னைப் போன்றவர்கள், அது வாசிப்பவருக்கு பிரயோஜனமுள்ளதாய் இருக்கிறதா என அதிகம் யோசிப்பதில்லை. பிரபலமடையவேண்டும் என்ற வேட்கை எனக்குள்ளதே தவிர பிரயோஜனமாயிருக்க வேண்டும் என்ற தாகம் உள்ளதா என்றால், Honestly Speaking இல்லை என்றே சொல்லுவேன்.

மொக்கை பதிவுகள், சர்ச்சைக்குரிய பதிவுகள், வாசகனை வேறு தளத்துக்கு அழைத்துச் செல்ல முயலும் பதிவுகள் என வலையுலகில் பதிக்கப்படும் பதிவுகளை வகைபடுத்த எத்தனையோ வார்த்தைகள் இருந்தாலும், அடுத்தவருக்கு உபயோகமுள்ள பதிவுகள் என ஒரு சிலவற்றையே சொல்ல முடியும். அந்த வகையில் ஒரு மாணவனின் வாழ்க்கையில் அவரது முக்கியமான கட்டமான பல்கலைக்கழக தேர்வுக்கு உதவும் தரத்திற்கு உங்கள் பதிவுகள் உள்ளது என நினைக்கையில் பெருமையாயிருக்கிறது அன்பரே.

பதிவர்களுக்கு ஒரு முன்மாதிரியை வைத்துள்ளீர்கள், வாழ்த்துக்கள் நண்பனே.

இன்னும் அதிகம் எழுது, இன்னும் அனேகருக்கு உன் எழுத்துக்கள் உதவிக்கரங்களாய் இருக்கட்டும், ஒரு சிறந்த முன் மாதிரியாய் இருக்கட்டும்.

மனம் நிறைய பெருமையுடன்

தராசு

Wednesday, July 15, 2009

ஜுகல்பந்தி 15 ஜூலை 2009 - இந்திய ஊடகங்கள் - ஜெய் ஹோ.

ஜுகல்பந்தியில் எழுதப்படும் நகரங்களின் தகவல்கள் குறித்து, ஆரம்பத்தில் வரவேற்பு கொஞ்சம் கூட இல்லாதிருந்த போதும், நாளடைவில் இதையும் படித்து தொலைக்க வேண்டியிருக்கிறதே என்ற எண்ணமோ என்னவோ கொஞ்சம் கொஞ்சமாக ஆதரவு கூட ஆரம்பித்திருக்கிறது. இதன் முக்கிய நோக்கமே, நம் உள்ளூரில் இருக்கும் சிறப்புகளை நாம் முழுதும் அறிய வேண்டும் என்பதுதான். பல வெளிநாட்டு நகரங்களையும் அதன் நவீனத்தையும் கண்டு பிரமித்து நிற்கிற அதே வேளையில் நமது நகரங்களும் புராதனச் சிறப்பில் அவற்றிற்கு சற்றும் சளைத்தவை அல்ல என்பதை உணர்த்தத்தான் இந்த தகவல்கள். சரி சரி பில்டப்பு ஓவரா ஆயிருச்சு, மேட்டருக்கு வருவோம்.


நகரம் - லக்னௌ - நவாபுகளின் நகரம்.


அவத் சாம்ராஜ்யத்தின் நினைவுச் சின்னங்களில் ஒன்று. இந்த அவத் சாம்ராஜ்யத்தைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை மிகவும் சிரமப் பட்டு தேட வேண்டி இருக்கிறது. எது எப்படியோ இந்த சாம்ராஜ்யத்தில் அயோத்தியாவை (அய்யய்யோ, பேரைக் கேட்டது மாத்திரம் போதும், அப்படியே ஓரமா வந்துரு நைனா, வம்பே வேண்டாம்) தலைநகராகக் கொண்டு கிறிஸ்துவுக்கு முந்தைய காலத்தில் இருந்தே இந்தப் பகுதி செழிப்புடன் இருந்ததாக, கி.மு. ஆறாம் நூற்றாண்டு வரலாற்றுக் குறிப்புகள் சொல்லுகின்றன. கங்கைக்கும் யமுனைக்கும் நடுவில் இருந்த சமவெளிப் பகுதியில் நீர்வளம் செழித்திருக்க, நிலத்தைப் பண்படுத்தியவுடன், சிந்திய வியர்வைக்கு வஞ்சகமில்லாமல் விளைந்து தள்ளியிருக்கிறது. கோசல வம்சத்து மன்னர்கள் இந்த பகுதியின் பூகோள சிறப்பையும், செழிப்பையும் கண்டு ஆளத் தொடங்கிவிட்டனர். பின்னாளில் இந்த சமவெளிப்பகுதி வளர்ச்சி பெற்று, ஆட்சியாளர்கள் ஆடிய கண்ணாமூச்சி ஆட்டத்தில் இது கடைசியில் முகலாயர்களின் ஆட்சியின் கீழ் சிறிது காலம் தனிப்பெருமை பெற்றிருக்கிறது. புத்தர் இந்த கோசல வம்சத்தை சேர்ந்தவர்தான் என இந்நாளில் ஜாதிச் சான்றிதழ் தருகிறார்கள். 24 காவது தீர்த்தங்கரராக ஜைன மதத்தவரால் மதிக்கப்படும் மகாவீரரும் இந்த பிராந்தியங்களில் தான் போதனையை ஆரம்பித்திருக்கிறார்.


கி.பி. 1350 க்குப் பிறகு இந்த வளம் கொழிக்கும் பகுதி, முதலில், டெல்லி சுல்தானாலும், பிறகு முகலாய சக்கரவர்த்தியாலும், அதன் பின், அவத வம்சத்து நவாபுகளாலும், பிறகு கிழக்கிந்திய கம்பெனியாரலும், முடிவாக பிரிட்டிஷின் நேரடி ஆட்சியின் கீழுமென எத்தனையோ ஆட்சி மாற்றங்களை சந்தித்திருக்கிறது. முதல் இந்திய சுதந்திர போராட்டத்திற்கான மைய கேந்திரமாகவும் இருந்திருக்கிறது.


முகமதியர்களின் சியா பிரிவு நவாபுகளால் ஆளப்பட்டதால், சியா பிரிவினரின் பெரும்பான்மையை இந்நகரில் இன்றும் காணமுடியும். விவசாயத்தில் செழித்து வந்ததால், வடக்கே முகலாயர்கள், தெற்கே மராட்டியர்கள் மற்றும் கிழக்கில் பிரிட்டிஷார்கள் என்ற மும்முனை பயம் இருந்த போதிலும், கையில் துட்டு இருந்ததால் நவாப்கள் இந்த மும்முனை ஆபத்துகளில் இருந்தும் எப்பொழுதும் தங்களை காத்துக் கொண்டே இருந்தனர். நவாப் அஸப் - உத் - தௌலா என்பவரது ஆட்சிக்காலத்தில் லக்னௌ பெரும் பொலிவு பெற்று, பாரா இமாம்பாரா, சோட்டா இமாம்பாரா, ரூமி தர்வாஜா போன்ற இன்றும் நிமிர்ந்து நிற்கும் கட்டிடங்கள் கட்டப்பட்டன. இதில் இந்த பாரா இமாம்பாரா என்ற கட்டிடம் சியா பிரிவினரின் புலம்பல் (ஆதியின் அல்ல) பாடல்கள் இயற்றப் படவும், பாடப்படவும் உபயோகப்படும் ஒரு கட்டிடமாகக் கட்டப்பட்டது. இதைக் கட்டிடத்தை கட்டிய விதம் முக சுவையானது.


அஸப் - உத் - தௌலாவின் காலத்தில் கி.பி.1783 ம் வருடத்தில் இந்த சமவெளியிலும் பஞ்சம் வந்திருக்கிறது. வந்த பஞ்சம் கொஞ்ச நஞ்ச பஞ்சமல்ல, (அடேயப்பா, என்னா ஞ்ச ஞ்ச ஞ்ச). பத்து வருடங்கள் நீடித்த இந்த பஞ்சத்தில் மக்கள் நொந்து நூலாகிப்போனார்கள். அப்பொழுது வேலை வாய்ப்பை உருவாக்குவதற்காக, இந்த கட்டிடத்தை கட்டியிருக்கிறார்கள். அப்பொழுதும் இந்த பெரிய தனக்காரர்கள் புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என முறுக்கிக் கொண்டு கட்டிட வேலை செய்ய மாட்டோம் என வறட்டு கௌரவத்தில் இருந்த பொழுது, பஞ்சம் அடித்த அடியில் நிலை குலைந்து போனார்கள். அரசனிடம் சென்று எங்கள் கௌரவத்திற்கு இழுக்கு வராத வகையில் ஒரு வேலை கொடுங்கள் மன்னா என சொல்ல, மன்னரும் தனது மீசைக்குள் புன்னகைத்தவாறே, சரி சரி, பகல் வேளையில் கட்டிட காரர்கள் கட்டி முடிப்பார்கள். இரவில் வந்து நீங்கள் அதை உடைத்து விடுங்கள் என்றாராம். இப்படி பத்து வருடங்கள் தொடர்ந்து கட்டுவதும் இடிப்பதுமாகவே இருந்து கட்டப்பட்டது தான் இந்த பாரா இமாம்பாரா.


பின்னாளில், அந்த அரசர், இந்த பேரரசர், பின் பிரிட்டிஷார் என இந்த சமவெளியை பலர் கூறு போட்டுக்கொண்டும், பின் சக்திக்கு தகுந்தபடி விஸ்தரித்துக் கொண்டுமென ஆண்டிருக்கிறார்கள். ஆனால் இத்தனை மாற்றங்களுக்கும் இங்கிருக்கும் கலைக்கு எந்த சேதத்தையும் விளைவிக்கவில்லை. இன்றும் அதே ஆடலும் பாடலும், பட்டம் விடும் திருவிழாவும், தேனொழுகும் மொழியும் மாறாமலிருக்கிறது. லக்னௌ மக்கள் மாத்திரம் யாரையாவது திட்ட வேண்டுமென்றால் கூட " உங்களுக்கிருக்கிற திமிர் இருக்கிறதே, அதை அடிச்சுக்கவே முடியாதுங்க" என்று மென்மையாகவே பேசுகிறார்கள். இன்னும் நாவாபி உணவு வகைகளான கபாப், மற்றும் கொஃப்தா, போன்றவைகளுக்கு லக்னௌவின் ருசியே தனி ருசிதான்.


நாட்டு நடப்புகள்: அட்றா சக்கை, சச்சின், காம்பிளி


அரை டவுசர் போட்டு பள்ளிகூடம் போன நாட்களிலிருந்து இருவரும் நண்பர்கள். இருவரும் கிரிக்கெட் விளையாட பழகினார்கள். ரஞ்சி போட்டிகளிலும் இருவரும் வெளுத்து வாங்கியவர்கள். இன்று வரை நல்ல நண்பர்கள். ஒருவர் இந்திய கிரிக்கெட் அணியில் நிலையான இடம் பிடித்து விட்டார், இன்னொருவர், கொஞ்ச நாள் கூடவே பயணித்தவர், பிறகு விலகி விட்டார், அவர் விலகி விட்டாரா அல்லது விலக்கப் பட்டாரா என்பது நாடறிந்த விஷயம். ஆனால் பாருங்கள் இந்த காம்பிளி கொஞ்சம் சின்னத்திரை பக்கம் தலையை காட்ட ஆரம்பித்து, நடிகைகளுடன் நடனமாடி, கொஞ்சம் சிரிக்க வைத்து, காமெடி ஷோக்கள் செய்து என ஜாலியாக் பொழுதை போக்க ஆரம்பித்தார். மறுபடியும் ஊடகத்தின் கண்களில் பட்டுத் தொலைத்தார். யாருக்கு சிண்டு முடியலாம் என காத்துக் கிடந்து வெறு வாயை மென்று கொண்டிருந்த ஊடகத்தாருக்கு காம்பிளி மாட்டினார் வகையாக.


இவர் ஒரு ரியலிட்டி ஷோ செய்யப்போக, அதில் வேண்டுமென்றே சச்சினைப் பற்றிய கேள்வி கேட்கப்பட்டு, "சச்சின் உங்களுக்கு நிறைய உதவி செய்திருக்கலாமே" என்பது போன்ற விவகாரமான் கேள்வி கேட்கப் பட்டு, விரித்திருக்கும் வலை எத்தனை பேரின் போதைக்கு ஊறுகாய் ஆகப் போகிறது என்பது தெரியாமலே காம்பிளி வாய் சொல்லை விட்டுவிட, இன்று கிரிக்கெட் போர்டு இனவெறி கொண்டதாகவும், காம்பிளி ஒரு பின்தங்கிய வகுப்பினர் என்பதால் அவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகவும், சச்சின் அவருக்கு உதவி செய்ய முடிந்தும் செய்யாமல் விட்டது கூட இந்த இனவெறியால் தானா என்றும், கவாஸ்கர் மேல்ஜாதி என்பதால் சச்சினை மட்டுமே உயர்த்தி பேசுகிறார், இன்று வரை பல வெற்றிகளை பெற்ற தோனியை கூட அவர் அங்கீகரிக்கவில்லை என்றும், அப்பப்பா, போதுமடா சாமி, ஒன்றுமில்லாத விஷயத்தை ஊதிப் பெரிதாக்கி, அதை அரை மணி நேரத்திற்கு ஒரு முறை " Breaking News" என்றும் " Flash News" என்றும், ஆஹாஹாஹாஹா, என்னே இந்திய ஊடக தர்மம். ஜெய் ஹோ.


ங்கொய்யால பக்கங்கள்


சென்ற வார ஜுகல்பந்தியில் எழுதியிருந்த கவுஜய படிச்சுட்டு, வடகரை வேலன் அண்ணன், ங்கொய்யால பகுதின்னே ஒண்ணு ஆரம்பிச்சுருண்ணு சொன்னாரு, பெரியவங்க பேச்சுக்கு மதிப்பு குடுத்து, இதா அடுத்த ங்கொய்யால,

தோல்ல வரி இருந்தா அது வரிக்குதிரை,
தோல்ல புள்ளி இருந்தா அது புள்ளி மான்,
தோல்ல முள் இருந்தா அது முள்ளம்பன்றி,
தோல் கருப்பா இருந்தா அது கருஞ்சிறுத்தை,
ஆனா,
தோல் கருப்போ, வெள்ளையோ, சிவப்போ,மஞ்சளோ
ங்கொய்யால, நல்ல மனசு இருந்தாதாண்டா அவன் மனுசன்.

Tuesday, July 14, 2009

விழுந்தது டெல்லியில் பாலம் - ஊடகங்களின் நாடகங்கள்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை, வழக்கம் போலவே டெல்லி வாசிகளுக்கும் அது ஒரு விடுமுறை நாளாகத்தான் விடிந்தது. ஆனால் பெங்களூரில் இருந்த, டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டுமான பணிகளுக்கான உயர் அதிகாரி ஸ்ரீதரனுக்கு அது தூக்கத்தை கலைத்து மனதை உருக்கிய காலையாக இருந்தது.

டெல்லி நகரில் கட்டப்பட்டு வரும் ஒரு ரயில் பாலத்தில் இரும்பு பாலம் ஒன்றை தூக்கி இணைக்கும் பொழுது அது தவறி விழுந்ததில் 5 பேர் இறந்தார்கள், நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தார்கள். கட்டுமானத்துறையின் வரலாற்றில் இது ஒரு கருப்புப் புள்ளி.

அடியேனும் கட்டுமானத்துறையிலேயே இருப்பதால் எனக்குள்ளும் ஒரு தோல்வி உணர்வு தொற்றிக்கொண்டது. நடந்தது சந்தேகமில்லாமல் ஒரு விபத்து. தவிர்க்கப் பட்டிருக்க வேண்டிய ஒன்று. ஒப்பந்தக் காரரும் சரி, டெல்லி மெட்ரோ அதிகாரிகளும் சரி, பாதுகாப்பு நடவடிக்கையில் கவனம் அதிகம் செலுத்தியிருக்க வேண்டும். பொருள் சேதம் ஈடுகட்டப் படக் கூடிய ஒன்று என்றாலும், உயிர் சேதங்கள் வேதனையளிக்கிறது.

இனி, நமது மகா கனம் பொருந்திய ஊடகங்கள் இதில் நடத்திய நாடகங்களை பார்ப்போம்.

சரியாக ஞயிறு காலை 10 : 00 மணி,

டெல்லி மெட்ரோவின் அதிகாரி பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். மிகவும் ஒழுங்கான முறையில் தெள்ளத்தெளிவான புள்ளிவிவரங்களுடன் அவர் தனது அறிக்கையை சமர்ப்பிக்கிறார். பத்திரிக்கையாளர்கள் அவரை வறுத்தெடுக்கிறார்கள். அவரது அறிக்கையின் விவரங்கள் :

தூக்கப்பட்ட இரும்பு பாலம் எவ்வளவு எடை உடையது?
அதை தூக்குமுன்பு எத்தகைய பாதுகாப்பு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டது?
எத்தனை பேர் இறந்தார்கள்?
காயமடைந்தவர்கள் எந்தெந்த மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள்?
மேலும் விவரங்களுக்கான ஹெல்ப் லைன் எண் எது?
அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

மிக பிரமாதமான அர்த்தமுள்ள பத்திரிக்கையாளர் சந்திப்பு. ஆனால், நமது பத்திரிக்கையாளர்கள் அங்கு நடந்து கொண்ட விதம் ச்சீய், அருவருப்பாக இருக்கிறது. ஊடகத்தாரின் கேள்விகள்:

கேள்வி : இது ஒப்பந்தக்காரரின் கவனக் குறைவா?

பதில் : விசாரித்து வருகிறோம்.

கேள்வி : இதற்கு பொறுப்பு யார்?

பதில் : விசாரணையின் முடிவில் தான் தெரியும்.

கேள்வி : இத்ற்கு முக்கிய காரணமென்று நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?

பதில் : விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டிருக்கிறது, அவர்களது விசாரணை ரிப்போர்ட் வந்த பின் தான் சொல்ல முடியும்.

கேள்வி : தரக்குறைவான பொருள்களினால் இது ஏற்பட்டிருக்குமா?

பதில் : விசாரணையில் பொருள்களின் தரமும் பரிசோதனை செய்யப்படும்.

கேள்வி : இது வடிவமைக்கப் பட்டதில் (Design) குறைபாடுள்ளதா?

பதில் : விசாரணைக்கு பிறகு தான் தெரியும்.

பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்த இடத்திலிருந்து சில ஆயிரம் மைல்களுக்கப்பால் அமர்ந்திருந்த எனக்கே ரத்தம் கொதித்துக் கொண்டிருந்ததென்றால், அங்கு அமர்ந்து பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்த அந்த அதிகாரிக்கு எப்படி இருந்திருக்கும்.

அடேய் ,வெண்ணைகளா, உங்களுக்கு என்ன வேண்டும் அதையாவது சொல்லித் தொலைங்களேன். ஆமாம், இது முழுமையும் ஊழலினால் நடந்தது, இந்த மந்திரி இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார், பல்லாயிரம் கோடி பணம் ஸ்வாஹா ஆயிருக்கிறது என்பது போன்ற ஒரு பொய்யான அறிக்கை வேண்டுமா? அல்லது ஒரு விபத்து நடந்த மூன்று மணி நேரத்தில் அந்த விபத்து ப்ற்றிய அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டு, திருவாளர் ஊடகத்துக்கு வெளிப்படுத்தப் பட வேண்டுமா, அதை எடுத்து தங்களின் சேனலில் போட்டு, முழுவிவரங்களையும் தருகிற ஒரே சேனல் நாங்கள் தான் என்று மார்தட்டிக் கொள்ள பார்க்கிறீர்களா? இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இறந்துபோன 5 பேருக்காகவும் அல்லது காயமடைந்த அனைவருக்காகவும் பத்திரிக்கையாளர்கள் தரப்பில் இருந்து ஊசிமுனையளவும் அனுதாபம் தெரிவிக்கப்படவில்லை. மேலும் யாராவது ஒருவர் மேல் பழியைப் போட்டு, விஷயத்தின் வீரியத்தை திசை திருப்ப இவர்கள் எடுத்துக் கொள்ளும் பிரம்மப் பிரயத்தனத்தின் ஒரு சதவீதத்தைக் கூட, இவர்கள் இறந்து போனவர்களின் விஷயத்தில் அக்கறை காட்டுவதில் எடுத்துக் கொள்ளவில்லை.

அடுத்த சில மணி நேரங்களில், ஊடகங்கள் எல்லாவகையான அருவருக்கத்தக்க யூகங்களை மக்கள்முன் வைக்க சிறிதும் தயங்கவில்லை. 2010 - ல் நடைபெறப் போகும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் முழுதும் தடை பட்டுப் போகும் அபாயம் இருக்கிறது, இதனால் அரசுக்கு ப்ல்லாயிரக்கணக்கான கோடிகள் இழப்பு, டெல்லி மக்களின் அனுதின வாழ்க்கையோடு அரசாங்கம் விளையாடுகிறது என்பது போன்ற யூகங்கள் கொஞ்சமும் வெட்கம், மானம் இல்லாமல் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

இந்திய ஊடகங்களுக்கு கடிவாளமிட வரும் அவதார புருஷன், சீக்கிரத்தில் அவதரிக்க பிரார்த்திக்கிறேன்.

Thursday, July 9, 2009

ஜுகல்பந்தி - 09 - ஜூலை - 2009 - சிவப்புக் கொடியில் சிதறிய ரத்தம்!!!!!!!




நகரம் - பாடலிபுத்திரம்

கங்கையின் தெற்குக் கரையில் அமைந்திருக்கும் இந்த அழகிய நகரம், பரந்து விரிந்திருந்த பாரத மண் பரப்பின் மீதுள்ள பழம் பெருமை வாய்ந்த நகரங்களில் ஒன்று. மகத வம்ச வழி வந்த ஹரியங்கா, நந்தா, மௌர்யா,சுங்கா,குப்தா, பாலா மற்றும் சூரி என்ற ஏழு (கார்க்கியின் ஏழு அல்ல) பேரரச வம்சங்கள் இந்த மண்ணை ஆண்டிருக்கின்றன. கல்விக்கும், கலைகளுக்கும் பெயர் பெற்ற ஒரு நகரமாக பண்டைய காலத்தில் இது விளங்கியிருக்கிறது. உலகிலேயே மனிதன் காலடி வைத்து வாழ்வதற்கு ஏற்ற இடமென்று கண்டு, வாழும் முறைகளை தெரிந்தெடுத்து, நெறிகள் உருவாக்கி, இயற்கையை புரிந்து கொண்டு, அதனுடன் இணைந்து கொண்டு பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்ந்தது பூமிபந்தின் மேல் உள்ள நீர்மூடா நிலப் பரப்பில் சில இடங்களில் தான். அப்படி துவங்கியதுதான் பழமை பெற்ற நாகரிகமாக வரலாற்று பக்கங்களில் காணப்படும் மெசபடோமியா நாகரிகம். இதுவும் யூப்ரடிஸ், டிக்ரீஸ் (இன்றைய ஈராக்கிலுள்ள) என்ற இரு நதிக்கரைகளில் தான் முதல் முதலாக நாகரிகம் தோன்றியதாம். அதற்கு சற்றும் குறையாத நாகரிக செருக்கு இந்த கங்கை நதிக்கரை பட்டணமான பாடலிபுத்திரத்திலும் இருந்திருக்கிறது. கிறிஸ்துவுக்கு முந்தைய காலங்களில் வந்த கிரேக்க வரலாற்று ஆசிரியரான மெக்தென்னிஸ்ஸின் வர்லாற்று குறிப்புகளிலும், சீன பிரயாணியான ஃபா ஹெயின் என்பவரது பிரயாண குறிப்புகளிலும் பாடலிபுத்திரத்தின் சிறப்புகள் ஓஹோவென புகழப்படுகிறது.

இந்து, புத்த,ஜைன மதங்களுக்கான புண்ணிய பூமியாக இது இன்றும் திகழ்கிறது. சீக்கியர்களின் மதகுருவும், கல்ஸா இயக்கத்தின் தலைவரும், இன்றும் சீக்கியர்களால் போற்றி வழிபடப்படுபவருமான குரு கோவிந்த் சிங் பிறந்தது இந்த பாடலிபுத்திரத்தில் தான். பாடலிபுத்திரத்தில் இவரது நினைவாக கட்டப்பட்ட குருத்வாரா ஸ்ரீ தக்த் பட்னா சாஹிப், மகாராஜா ரஞ்சித் சிங் என்பவரால் கட்டப்பட்டது.

இப்படி கலாச்சார செருக்கும், வரலாற்று சிறப்பும், கல்வியில் மேன்மையும் பெற்றதாலோ என்னவோ, இந்த பாடலி புத்திரத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பகுதிகளில் இந்நாளிலும் வாழும் மக்கள் அதே தெய்வ பக்தியும், கலாச்சாரத்தின் எச்சங்களுடனும், வரலாற்றின் மிச்சங்களுடனும், கல்வியின் சொச்சங்களுடனும் வாழ்கிறார்கள். கூட்டுக்குடும்பங்கள் இன்னும் அழியாமல் இருக்கிறது. இருபது நபர்களைக் கொண்ட குடும்பத்தை சர்வ சாதாரணமாக காண முடிகிறது. எத்தனை தான் நவீனம் இந்தியனை ஆட்கொண்டாலும் இந்த புண்ணிய மண்ணின் புனிதம் இன்னும் கெடாமல் இருக்கிறது. பழமையின் இனிமைக்கு கட்டியம் கூறும் போஜ்பூரி மொழியில் பாடப்படும் இதிகாச பாடல்களும், அந்த மொழியின் இனிமையும், புரிகிறதோ, புரியவில்லையோ கேட்போரை ஆனந்தப்படுத்தும்

ஆனால் பல்வேறு அரசியல் மாற்றங்களுக்குட்பட்ட இந்த புராதன நகரம் இன்று சொல்லிக்கொள்ளும்படியான முக்கியத்துவத்தை இழந்து விட்டது. ஊழலும், ஜாதிப்பித்தும், அரசியல் கட்சிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியும் இந்த பிராந்தியத்தை அதன் பழம் பெருமைகளை குலைத்துப் போட்டு தினமும் சண்டையும் சச்சரவும் நிறைந்த ரத்த பூமியாக்கி விட்டது.

ஆனால் வாழ்வில் ஒரு முறையேனும் இந்த பழைய பூமியை, அதன் சிறப்பை, நாகரிக செருக்கை, வெவ்வேறு மத நம்பிக்கைகளின் பிறப்பிடத்தை, வந்தாரை வாழ வைக்கும் இந்த பிராந்திய மக்களின் அன்பை ருசித்து உணர வேண்டும்.


நாட்டு நடப்புகள் : சிவப்புக் கொடியில் சிதறிய ரத்தம்

துருக்கிய பழங்குடியினரின் இனமான உக்ஹ்யூர் என்ற ஒரு இனம் நாடு விட்டு நாடு மாறி இன்றைய கஜகிஸ்தான், கைர்கிஸ்தான்,உஸ்பெகிஸ்தான், தஜகிஸ்தான் (அப்பா, எத்தனை இஸ்தான், இஸ்தான்) ம்ற்றும் இன்றைய ரஷ்யா, ஏன் நம்ம பக்கத்து வீடான பாகிஸ்தானிலும் கூட வசிக்கிறார்கள். சீனாவின் வட மேற்கு பகுதியான ஜின் ஜியாங் உக்ஹ்யூர் என்ற தன்னாட்சி பெற்ற பிரதேசத்திலும் வசிக்கிறார்கள். பெருவாரியான முஸ்லிம் மக்களைக் கொண்ட இந்தப் பிரதேசத்தில் முஸ்லிம்கள் அமைதியுடனும் செழிப்புடனும் வாழ்வது சிவப்புக் கொடி நாடான சீனாவின் கண்களை வெகுவாக உறுத்தி வருகிறது. துரதிஷ்டவசமாக இந்த பிராந்தியத்தில் எண்ணைக்கிணறுகள் வேறு இருந்து தொலைத்து விட, இந்த மக்களை ஒழித்தலொழிய இந்த எண்ணைய்ப் பணம் நம் கைக்கு வராது என சீனா நினைக்கிறதோ என்னவோ. கம்யூனிஸ சித்தாந்தங்களை அவர்கள் மீது ஏவியும், திணித்தும் எப்பொழுதும் அவர்களை சீண்டிக் கொண்டிருப்பது சீனாவின் பொழுது போக்கு. முஸ்லிம்களின் விழாக்காலங்களிலும், நோன்பு நாட்களிலும் அவர்களை வெறுப்பேற்றுவதை ஒரு பாரம்பரியமாகவே சீனா செய்து வந்திருக்கிறது. அவர்களும் பொருளாதார ரீதியாக சீனாவை சார்ந்திருக்க வேண்டியிருக்கிறதே என்ற ஒரு பாவத்திற்காக பல்லைக்கடித்தபடி பொறுத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். பொறுத்துப் போகிறவர்களை சீண்டிப் பார்ப்பதில் சீனாவுக்கு நிகர் வேறு யாருமே உலகில் இருக்க முடியாதென நினைக்கிறேன். 2008 ம் ஆண்டில் திபெத்தில் நடத்திய வெறியாட்டத்திலும் சரி, அவ்வப்பொழுது அருணாச்சல பிரதேச எல்லையில் இந்தியாவுக்கு குடைச்சல் கொடுப்பதிலும் சரி, தைவான் மக்களுடைய அனுதின வாழ்வியல் நெறிகளில் குறுக்கிடுவதிலும் சரி, சீனா எப்பொழுதுமே தன்னை ஒரு அரை பிளேடு பக்கிரி போன்ற பிராந்திய ரவுடியாகவே அடையாளம் காட்டியிருக்கிறது. இந்த ரவுடித்தனங்களால் ஏற்பட்ட வெறுப்பும் கோபமும் உக்ஹ்யூர் மக்களின் மனதில் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த வேளையில் தான், ஒரு சிறு பொறி சென்ற ஜூன் மாதத்தில் கிளம்பியது.

சீனாவின் க்வாங்டாங் மாநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த இரண்டு உக்ஹ்யூர் இன ஆண்கள் ஒரு சீன பெண்மணியை கற்பழித்தி விட்டார்கள என்ற வதந்தி கிளம்பியது. பிற்பாடு வதந்தி பரப்பிய புண்ணிய வானை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். வதந்தி பரவுவதற்கு நேரம் பிடிக்குமா என்ன, முதலிலேயே இந்த வேற்று இன மக்கள் மீது வெறுப்பிலிருந்த சீன மக்கள், அந்த இருவரையும் பிடித்து தகுந்த மரியாதைகளுடன் சிவலோக பிராப்தி அடைய வைத்தார்கள். இந்த அநியாயத்துக்கு கண்டனம் தெரிவித்து, உக்ஹ்யூர் மக்கள் வீதிக்கு வந்து போராட, இதை ஒரு காரணமாக வைத்து சீனர்களும், சீன காவல்துறையும் ஒரு பேயாட்டம் ஆடிவிட்டார்கள். நூற்றுக்கணக்கில் இறந்துபோய், நூற்றுக்கணக்கில் சிறை பிடிக்கப்பட்டுமென உக்ஹ்யூர் மக்கள் இன்னும் பதட்டத்தில் தான் இருக்கிறார்கள்.

மறுபடியும் ஒருமுறை தன் ரவுடித்தனத்தால் தன் சிவப்புக் கொடியில் ரத்தத்தை சீனா பூசிக் கொண்டது.

பதிவர் வட்டம் :

இந்த திங்கள் கிழமை ஒரு சிறிய மொக்கைப் பதிவை போட்டுவிட, பதிவுலகில் இருக்கும் மொக்கை சாமிகள் அனைவரும் அவர்களது குழுமத்திற்கு அழைத்து கும்மு கும்மென கும்மி விட்டார்கள். காலேஜ்ல கூட இப்படி எல்லாம் ராகிங் பண்ணுவாங்களான்னு தெரியல. அப்புறமா நம்ம ஒரு பின்நவீனத்துவ கவிதைய எடுத்து விட்டதுக்கப்புறமா தான் அடங்குனாங்க. வாழ்க மொக்கைச் சாமிகள்.

இந்த குழுமத்துக்கு என்னை அழைத்துச் (இழுத்துச்) சென்ற என் நலம் விரும்பி, அன்பர் கார்க்கிக்கு , ஹூக்கும் நல்லா இருங்க சாமி.

கவுஜ :

எலியின் தலையில் இரு விரல்கள்,
எலியின் ஆணைக்கு காத்திருக்கும் அம்பு,
எலியின் தலையில் இடது புறமாய்
விரலால் போட்டேன் பொளேரென,
அம்பு பாய்ந்தது திரையில் எழுத்தினூடே,
முன்னே விரிந்தது பதிவுலகம்,
ங்கொய்யால, அதுல தான் நீங்க படிக்கற
இந்த மொக்கையே இருக்குது.

Monday, July 6, 2009

ஆதி, அப்துல்லா, நர்சிம் கம்பைன்ஸ் வழங்கும்......!!!!!!!!!!!!!

கடந்த ஏப்ரல் 2009 - ல் ஆதி, அப்துல்லா, மற்றும் நர்சிம் மூவரும் இணைந்து வழங்கிய, கார்க்கி கதாநாயகனாக நடித்த "நீ எங்கே?" என்ற படத்தின் அடுத்த பாகமாக தயாரிக்கப்படும் "ங்கொய்யால, நான் இங்கே" என்ற படத்தின் கதை டிஸ்கஷன் நடக்கிறது. கூடியிருப்போர், ஆதி, அப்துல்லா, நர்சிம், கார்க்கி, கேபிள் சங்கர், முரளி கண்ணன் ஆகியோர்.

தல நர்சிம் மொபைலில் பிஸி. கேபிள் சங்கரும் முரளியும் சினிமா அரட்டையில் பிஸி. ஆதி விட்டத்தை பார்த்தபடி அமர்ந்திருக்க, கார்க்கி வழக்கம் போல் "கொர், கொர்"

அப்துல்லா : அண்ணே, இப்படியே எல்லாரும் உக்காந்திருந்தா எப்பிடி, கதையை ஆரம்பிங்கண்ணே.

ஆதி : இங்க பாருங்க, இந்த முறை கொஞ்சம் வெயிட் உள்ள கதையா குடுங்க, பத்து நிமிசத்துக்கு மேட்டர் தேத்தறதுக்கே நாக்கு தள்ளிப் போகுது.

கேபிள் : அப்பிடி எல்லாம் விட்ருவமா, நாங்க எதுக்கு இருக்கோம். ஒரு புது தீம் கொண்டு வந்திருக்கம்ல.

நர்சிம் : (செல்போனை காதில் இருந்து எடுத்தவாறே), ம்..., சரி ... சரி... சொல்லுங்க.

கேபிள் : அதாவது, ஒரு வயசான பாட்டி........,,,,,,

கார்க்கி : (தூக்கத்திலிருந்து திடீரென முழித்து), என்னது ஒரு வயசுலயே பாட்டி ஆயிட்டாங்களா?????

அப்துல்லா: அடிங்ங், டேய் அடங்குடா, கதை என்னவார்ந்தாலும் நீ நடிக்கற, இப்போதைக்கு அடங்கு.

கேபிள் : இந்த பாட்டிய முதல் ஃபிரேம்ல காண்பிக்கும் போதே அப்படியே கேமரா மேல போய் வானத்துல சூரியன் மறையறத காமிக்குது. அதாவது இந்த பாட்டியின் முகத்தில் இருக்கும் சுருக்கங்களுக்கு ஒரு விளக்கம். இது வந்து அஸ்தமிக்கப் போகும் ஒரு சுடரின் கதைங்கறத முதல் ஃப்ரேமுலயே சொல்லீர்றம்.

ஆதி : (மனதுக்குள்), ம்..... விளங்குனாப்புலதான். இன்னும் ஆரம்பிக்கவே இல்லை, அதுக்குள்ள அஸ்தமனமா??????

நர்சிம் : தல, தொடங்கும்போதே ஒரு முடிவை ஏன் காமிக்கணும், ஒரு பூ மொட்டிலிருந்து விரியற மாதிரியோ, அல்லது சூரிய உதயத்தையோ காண்பிங்களேன்.

முரளி : அதாவது எண்பதுகள்ல எடுக்கப்பட்ட படங்களை எல்லாம் பாத்தீங்கண்ணா, பாரதி ராஜாவாகட்டும், பால சந்தர் ஆகட்டும் எல்லாரும் ஒரு பாசிட்டிவ் விஷயங்களதான் துவக்கமா காமிச்சுருப்பாங்க.

கார்க்கி : ஆமா, ஒரு மரச்சேரை காமிச்சு, கேமிரா அதையே சுத்தி சுத்தி வர்ற மாதிரி எடுத்துட்டு, என் இனிய தமிழ் மக்களேன்னு சொன்னா அது பாசிட்டிவ்வா?

அப்துல்லா : அண்ணே, எது பாசிட்டிவ் அப்டீங்கறதாண்ணே இப்ப மேட்டரு, கதைக்கு வாங்கண்ணே.

கேபிள் : (கார்க்கியை முறைத்தவாறே) கதாநாயகனும் இந்த பாட்டியுந்தாங்க படத்துல மெயின் ரோல்ல இருப்பாங்க.

கார்க்கி : தல, இந்த வெளயாட்டுக்கு நான் வர்ல, ஹீரோயின் இல்லண்ணா கூட பரவாயில்ல, ஒரு பாட்டி கூடவெல்லாம் எப்படி தல!!!

அப்துல்லா : சொல்றத முழுசா கேளுப்பா, அதுக்குள்ள ஏண்டா குதிக்கற?

கார்க்கி : இல்ல, இதுல எதோ ஒரு உள்குத்து இருக்கு,

ஆதி : இப்ப நீ அடங்கலீன்னா, உம் மூஞ்சி மேல ஒரு வெளிகுத்து இருக்கும்,

(கார்க்கி அவ்வ்வ்வ்வ்வ்வ்வுனு அடங்க, கேபிளார் தொடர்கிறார்.)

கேபிள் : அதாவதுண்ணே, வைரமுத்துவோட கருவாச்சி காவியம் படிச்சிருக்கீங்களா, அதுல வர்ற கதாநாயகியாட்டம், நம்ம பாட்டி வாழ்க்கையில எப்பவுமே கஷ்டத்தை மாத்திரம் அனுபவிச்சு மேல வந்தவங்க.

நர்சிம் : ஏண்ணே, இது ஒரு நாவலைத்தழுவுற மாதிரி இருக்காது!!!!!

கார்க்கி : மொதல்ல ஒரு ஹீரோயின தழுவற சீன் வைய்ங்கப்பா, அப்புறமா நாவலை தழுவலாம்.

இப்ப நர்சிம்மும் சேர்ந்து முறைக்க, கார்க்கி மறுபடியும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்,

முரளி : நாவல்களை தழுவி எடுக்கப்பட்ட நிறைய படங்கள் வெற்றி அடைஞ்சிருக்குங்க நர்சிம், குறிப்பா பாத்தீங்கண்ணா........

அப்துல்லா : அய்யய்யோ, அண்ணே, அண்ணே கொஞ்சம் பொறுங்கண்ணே, இங்க கதையே என்னன்னு தெரியல.

முரளி அமைதியாக, கேபிள் ஆரம்பிக்கிறார்.

கேபிள் : அதாவதுண்ணே, இந்த பாட்டி ஒரு வடை சுட்ற கடை வெச்சிருக்காங்க,

ஆதி : இந்த கேசட்ட எங்கியோ கேட்ட மாதிரி இருக்குதே, இதுதான் கதைன்னா காக்காய்க்கு எங்க போறது?

கேபிள் : இப்படி வாய தொறக்கறதுக்கு முன்னால கமெண்ட் அடிச்சா எப்படிண்ணே,

அப்துல்லா : இங்க பாருங்கண்ணே, எல்லாருக்கும் ஒரு பேப்பரும் பேனாவும் குடுத்துர்றேன். கேபிள் அண்ணன் சொல்லி முடிக்கற வரைக்கும் யாரும் ஒண்ணும் பேசக்கூடாது. வேண்ணா எங்ககெங்கெல்லாம் டவுட் வருதோ அங்க குறிச்சு வெச்சுக்கங்க, அப்புறமா பேசலாம், கேபிள் அண்ணே, ஸ்டார்ட் ம்யூஜிக்.

கார்க்கி : இன்னும் பேப்பரே குடுக்கல அதுக்குள்ள ஸ்டார்ட் ம்யூஜிக்கா? எனக்கு பேப்பரெல்லாம் பத்தாது, ஒரு பெரிய லெட்ஜர் புக்கே குடுங்க.

அப்துல்லா ஓடிப்போய் ஒரு ரெஜிஸ்டரை எடுத்து வந்து கார்க்கியின் கையில் கொடுத்து, தன் பேனாவையும் தந்து : இப்ப அடங்குவியா, மவனே இனிமே எதாவது பேசுன, அப்புறம் டயலாக் பேசறதுக்கு வாயே இருக்காது, சொல்லீட்டேன்.

ஆதி கார்க்கியைப் பார்த்து ஒரு நமுட்டு சிரிப்பு சிரிக்க,

நர்சிம் : ஏம்பா, அவுரு எவ்வளவு சீரியஸா கதை சொல்லிட்டிருக்காரு, அவரைப்போயி இப்படி காமெடி பண்றீங்களேப்பா,!!!!!!!!!!!!!! சரி, தல சொல்லுங்க தல,

கேபிள் கொஞ்சம் நிம்மதி அடைந்தவராக : அதாவதுண்ணே, ஒரு நல்ல கிராமத்து வீதியில இந்த பாட்டி வடை சுட்ற கடை இருக்கு, அந்த கடையில பாட்டி கொதிக்கற எண்ணையில வடையை தட்டி போட்டு, அந்த எண்ணை அப்பிடியே சொய்ய்ய்ங்ங்ங்க்குண்ணு பொங்கி வரும் பாருங்க, அந்த எண்ணையின் நுரையிலிருந்து க்ளோசப்புல கேமராவை வெச்சு அப்பிடியே லாங் ஷாட்ல எடுத்துட்டு போறோம். பாட்டியினுடைய பிற்கால வாழ்க்கையில...........!!!!!!!!!!!!!

கார்க்கி : (மனதுக்குள்) கொதிக்கற எண்ணையில கேமராவ வெச்சா அது கருகி போயிருமேன்னு யோசிச்சு, அந்த சந்தேகத்தை எழுத நோட்டைத்திறக்க, ஆதி இவனுக்கு இப்பவே சந்தேகம் வந்துருச்சான்னு எட்டிப்பார்க்க, இவர்கள் ரெண்டு பேரும் என்னவோ கண்ணாலயே பேசிக்கறாங்களேன்னு முரளியும் எட்டிப் பார்க்க, அப்துல்லா அங்க என்ன சைடுல ஒரு தனி டிராக் ஓடிட்டிருக்கேன்னு திரும்பி பார்க்க, நர்சிம் அவரது மொபைலை பார்க்க,

கேபிள் : பாட்டி எவ்வளவு வசதியான் வீட்ல இருந்தாங்கன்றத காமிக்க காரைக்கால் பக்கத்துல இருக்கற ஒரு செட்டிநாடு ஸ்டைல் வீட்டை காமிக்..............,,,,,,,, என்னண்ணே இது மறுபடியும் எல்லாரும் காமெடி பண்றீங்க,..,,,,,,,,,,,

இதைக்கேட்டு எல்லோரும் அடக்கி வைத்திருந்த சிரிப்பை அடக்க முடியாமல் ஓஹோஹோவென சிரித்து விடுகின்றனர். கேபிளாரும் சேர்ந்து சிரிக்க,

அப்துல்லா : அண்ணே, விடுங்கண்ணே, எனக்கு பசிக்குது, நம்ம எல்லாரும் சாப்பிட்டுட்டு வந்து மறுபடியும் ஆரம்பிக்கலாம், எங்கண்ணே போலாம் சாப்பிட????

ஆளாளுக்கு ஒரு இடத்தை சொல்ல, அவை கலைகிறது.

டிஸ்கி : சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக இந்தப்பதிவு சுருக்கப்படுகிறது. நீக்கப்பட்ட பகுதியைக் குறித்த பின்னூட்டங்களும் என்னால் அழிக்கப்படுகின்றன.
பின்னூட்டங்களிட்ட பதிவர்கள் தயவு செய்து என்னை தவறாக நினைக்க வேண்டாம். என்னோடு மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.

Saturday, July 4, 2009

இந்த போட்டோவில் இருப்பவரை காணவில்லை!!!!!







இந்த போட்டோவில் இருப்பவரை காணவில்லை.



தம்பியின் டைரிக்குறிப்புகள்னு ஒரு பதிவை கடந்த ஜூன் மாதம் 19ம் தேதி எழுதியிருக்கிறார்.



காணாம போறதுக்கு முன்னாலவரைக்கும் நல்லாத்தானுங்க இருந்தாரு, எல்லார் கடையிலயும் போய், அண்ணே, அண்ணேன்னு கும்மிகிட்டிருந்தாரு.



இது சின்ன வயசுல எடுத்த படமாம், அவுருதான் சொன்னாரு, இப்ப இந்த பச்ச மண்ணு எங்க இருக்குதோ, என்ன நிலமையில இருக்குதோ.



நல்லா கவிதையெல்லாம் எழுதுமுங்க இந்த தம்பி. யாருக்கும் எதாவது ஒண்ணுன்னா முதல் ஆளா வந்து முன்னால நிக்கும்.



சீக்கிரம் வாங்கப்பு, நீங்க இல்லாம ஒரே போரடிக்குது.

Wednesday, July 1, 2009

ஜுகல்பந்தி - 1/07/2009 - ரத்தம் ஒரே நிறம்.



நகரம் - கான்பூர்

கங்கைக் கரையில் அமர்ந்து, இந்திய அரசியலின் பல நிகழ்வுகளுக்கு சாட்சி சொல்லும் ஒரு அழகிய நகரம். இதற்கு கான்பூர் என்று பெயர் வந்ததற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. ஒன்று கன்னையாபூர் என்று கிருஷ்ணனின் பெயரால் அழைக்கப்பட்டு, பிறகு கான்பூராக மருவியதாகவும், இன்னொன்று துரியோதனன் தனது நண்பனான கர்ணனுக்கு இந்த ஊரை அன்பளிப்பாக அளித்ததனால் இது கர்ணபூர் என்று அழைக்கப்பட்டு பிறகு கான்பூர் ஆனதாகவும் கதைகள் உண்டு. (இந்தியாவுல மட்டும் ஒரு ஊருக்கு பெயர் வைப்பதென்றால் எத்தனை வில்லங்கம் இருக்குது பாருங்க). இந்த ஊர் எப்போது தோன்றியது என்று அடித்துச் சொல்ல வரலாற்றில் ஆதாரங்கள் இல்லை என்றபோதும், கங்கையின் வழித்தடத்திலிருக்கும் வாழத்தகுந்த பட்டணங்களாயிருந்த ஜஜ்மு மற்றும் பித்தோர் என்ற இரு சிறு ஊர்களுக்கு நடுவில் அமைந்த ஒரு நிலப்பரப்பு என்பதால், மனிதன் இங்கு கால்வைத்திருக்கக்கூடும்.

உலகத்தை படைத்துவிட்டு ஸ்ஸ் அப்பாடா கண்ணைக்கட்டுதே என பிரம்மன் ஓய்ந்திருந்த பொழுது ஒரு அசுவமேத யாகம் ஒன்றை நடத்தியது இந்த பித்தோர் என்ற ஊரில் தானாம். ராமாயணத்தை எழுதி இன்றைய நாளின் தேர்தல் பிரச்சனைகளுக்கெல்லாம் வித்திட்ட வால்மீகி முனிவரின் ஆசிரமம் இந்த பித்தோரில் தான் உள்ளது. சீதா பிராட்டியார் ராமனால் தள்ளி வைக்கப்பட்டபின் தனது மகன்களான லவ்(அந்த லவ் இல்லீங்க) மற்றும் குசா வை பெற்று, வளர்த்தெடுத்தது இந்த ஆசிரமத்தில் தானாம்.

ஜஜ்முவில், பிரம்ம தேவனின் வழித்தோன்றலான சந்திரவம்சி வம்சத்தின் யயாதி என்னும் அரசனுக்கு சொந்தமான ஒரு கோட்டை உள்ளதாம்.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியான சிப்பாய்க் கலகத்தில், கான்பூரில் நிகழ்ந்த அவலங்கள், இன்று வரை வரலாற்றின் பக்கங்களில் இந்தியாவின் மீது ஒரு கறையாகவே படிந்துள்ளது. பீபிகர் என்று சொல்லப்படும் சிறிய வீட்டினுள் அடைக்கப்பட்ட 200 ஆங்கிலேய பெண்கள் மற்றும் குழந்தைகளை இந்திய சிப்பாய்கள் ஈவிரக்கமில்லாமல் துண்டு துண்டாக வெட்டி அங்கிருந்த கிணற்றில் வீசினார்கள். இது திட்டமிட்டு நடத்தப்பட்டதா அல்லது திடீரென நிகழ்த்தா என்ற விவாதம் இன்று வரை வரலாற்றின் பக்கங்களில் உண்டு. இந்த சம்பவத்தை சுஜாதா "ரத்தம் ஒரே நிறம்" என்ற கதையில், கொஞ்சம் கற்பனையுடனும், நிறைய நிஜங்களுடனும் எழுதியிருப்பார். இந்த கலவரத்துக்கு மத்தியில், மக்கின்ஸி என்ற ஆங்கிலேய ராணுவ வீரனை கொல்லத் தேடி அலையும் முத்துக்குமரன் என்ற தமிழனையும், இந்த தமிழனை காதலித்து அவன் பின்னே அலையும் பூஞ்சோலை என்ற நாடோடி வித்தைக் கார பெண்ணையும் சர்வ சாதாரணமாக உலாவ விட்டிருப்பார். வாசித்துப் பாருங்கள்.

மற்றபடி, கான்பூர் இந்தியாவின் மான்ஸெஸ்டர் என்று அழைக்கப் படுமளவிற்கு தொழில் துறையில் வளர்ச்சி அடைந்துள்ளது. இரும்பு, தோல், துணி என்று எந்த தொழிலை எடுத்தாலும் வளர்ந்து நிற்கிறது இந்த நகரம். அநேக கல்விக் கூடங்கள், IIT, விவசாய பல்கலைக்கழகம் என ஒரு பெருநகரத்துக்கு சற்றும் குறியாத சிறப்புகளுடன் கங்கைக் கரையில் இருப்பது இதன் சிறப்பு அம்சம்.

நாட்டு நடப்புகள் - பதிவர் வட்டம்

எதுக்குத்தான் பைத்தியக்காரன் சாருவைப்பத்தி பேச ஆரம்பித்தாரோ தெரியவில்லை. பதிவுலகமே அதிர்ந்து கொண்டிருக்கிறது. ஜ்யோவ்ராம் சுந்தர், லக்கிலுக், நர்சிம் என எல்லா ஜாம்பவான்களும் களத்தில் குதித்து விட்டார்கள். அதிஷா அவர் பங்குக்கு ஒரு பதிவே போட்டு விட்டார். நல்லா இருங்க சாமி.

அப்துல்லா அண்ணன் கடந்த 19ம் தேதி ஒரு டைரிக்குறிப்பு எழுதுனதோட சரி. என்ன ஆச்சுன்னே தெரியல, பரிசலின் அவியலையும் காணவில்லை. கொடைக்கானலுக்கு போயிட்டு வந்து கேபிள் அண்ணன் வழக்கம் போல தனது பணியை தொடங்கிட்டாரு. தலைவர் ஆதியின் பக்கத்துல இன்னும் அந்த Page Alignment பிரச்சனை சரியாக மாட்டேங்குது. யாரோ ஒரு கணேஷ்ங்கற புண்ணியவான் பின்னூட்டத்தில், எல்லா பதிவரையும் பின்னங்கால் பிடரியில் பட ஓடுமாறு செய்கிறார். வினவு பக்கங்களில் கடந்த இரண்டு பதிவுகளாக ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளாகவே காண முடிகிறது. கேரள பாதிரிகளை சாடிய இவர், ஜீயர்கள் சமூகத்தையும் விட்டு வைக்கவில்லை. உரையாடல் - சிறுகதைப் போட்டிக்கு கதை அனுப்ப கடைசி நாள் முடிந்து விட்டது. இனி நடுவர்கள் கதைகளை தேர்ந்தெடுப்பார்கள். அப்பா சாமிகளா, நல்ல முடிவா சொல்லுங்கப்பா.