Sunday, December 28, 2008

யார் முதலில் கல் எறிவது???

என் நண்பர் ஒருத்தர் அடிக்கடி சொல்லிகிட்டே இருக்கார். " எல்லா பயலும் வேஸ்ட் சார், படிக்கற வரைக்கும் இந்தியா வேணும், இவுனுங்க படிச்சு முடிச்சுட்டு உடனே அமெரிக்கா பறந்துருவானுங்க, அங்கிருந்துட்டு இந்தியாவை பார்த்து " what a rubbish country" னு சொல்வானுங்க, ஆனா கல்யாணம் பண்ணனும்னா உடனே இந்தியாவிலிருக்கிற சொந்த பந்தங்களுக்கு சொல்லி விடுவானுங்க, நல்ல குடும்பப்பாங்கான, சமைக்கத்தெரிந்த ஆனா அதே சமயத்தில் நல்லா இங்கிலீஷ் பேசத்தெரிந்த, எதையும் அட்ஜஸ்ட் பண்ணீட்டு போகத்தெரிந்த பொண்ணாப் பாருங்கம்பானுங்க, கல்யாணம் பண்ணீட்டு அந்தப்பொண்ணையும் கூட்டிகிட்டு போயிட்டனுங்கன்னா, அவ்வளவுதான், அவுனுங்களுக்கு இந்தியான்னாலே எளக்காரமா இருக்கும். தான் ப்டிச்ச நாடாச்சே, தனக்கு தொழில் சொல்லிக்கொடுத்த நாடச்சேன்னு கொஞ்சமும் ஒரு நன்றியுணர்வு கூட இல்லாத நாய்ங்க இவுனுங்க." " ஏன் பொண்ணு பாக்கும்போதுமட்டும் நல்ல குடும்பப் பாங்கான பொண்ணா அமெரிக்காவுலயே பார்க்க வேண்டியதுதானே, அப்ப மட்டும் என்ன தாய்நாட்டுப் பாசம் வழியுது "

இப்படியாய் அவர் சொல்வதெல்லாம் கேட்கும்பொழுது தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்க்கிறாரோ என நினைப்பேன்.
ஆனால் உண்மையில் ஒரு வெளி நாடுவாழ் இந்தியனின் கண்ணோட்டத்தில் இந்தியாவைத் திரும்பிப் பார்த்தால், நிச்சயமாக வெளிநாடு வாழ் இந்தியர்களின் பார்வையில் நியாயம் இருப்பதாகத் தோன்றும்.
நம்மில் அநேகர் அந்த வழக்கமான அறிவுரையை கூறுவார்கள். " நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்பதற்கு முன், நீ நாட்டுக்கு என்ன செய்தாய் என யோசித்துப்பார்" என்பார்கள். நானும் இருக்கிற கொஞ்ச நஞ்ச மூளையை கசக்கி யோசித்துப் பார்த்தேன்.

நான் நாட்டுக்கு செய்யத் தயாராய் இருப்பது :
1. இந்த நாட்டிலிருந்து நான் பெற்ற செல்வங்கள் அனைத்தையும் அது கல்வியாகட்டும், செல்வமாகட்டும், என் திறமையாகட்டும், எனது எதுவாக வேண்டுமானாலும் ஆகட்டும், அதை அனைத்தையும் என் தாய்த் திருநாட்டின் வளமைக்கென அர்ப்பணிக்க நான் ஆர்வமுடனும் ஆவலுடனும் உள்ளேன்.

2. நான் பெற்ற திறமைகள் என்னோடு அழிந்து விடாதபடி, அதனால் மற்றவர்களும் பயன் பெறும் வண்ணம் அதை எனக்குப் பின் வரும் சந்ததிகளுக்கும் கற்றுத்தர ஆவலாய் உள்ளேன்.
3. என் தாய்த் திருநாட்டில் வியாபித்திருக்கும் வளங்கள் யாவற்றையும், அது கனிம வளங்களாகட்டும், தாவர வளங்களாகட்டும், அடர்ந்து வளர்ந்த காடுகளாகட்டும், நீர் நிலைகளாகட்டும், யாதொன்றையும் மாசு படுத்தும் பணியிலோ, அல்லது அழித்தொழிக்கும் பணியிலோ என் சுவாசம் உள்ளளவும் ஈடுபடமாட்டேன் என உறுதி கூறுகிறேன்.
4. இன்னும் இறையாண்மைக்குக் கட்டுப்பட்டவனாக, சட்டம் ஒழுங்கை மதிப்பவனாக, அப்படியாக, இப்படியாக, எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென கூறுகிறீர்களோ, அப்படியே வாழ்வதாக உறுதி கூறுகிறேன்.

ஆனால், நான் மதிக்கும் இந்த நாடு என்னையும் மதிக்கும் என நம்புகிறேன். என் நாடு என்னை மதிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதற்கு எனக்கு சகலவிதமான உரிமையும் உள்ளது.

நான் இந்த நாட்டிடமிருந்து எதிர்பார்ப்பது.
1. எனக்கு உலகத்தின் அனைத்து செல்வங்களும் தேவையில்லை. மனித உயிர் ஆரோக்கியமாய் வாழ அடைப்படைத்தேவையான சுத்தமான காற்றைத் தாருங்கள்.

2. எனக்குத் தாகமெடுத்த போது பருகவும், நான் குளிக்கவும் எனக்கு அமுதினும் இனிய பாலும் தேனும் ஓடும் நதிகள் வேண்டாம். ஆனால் சுத்தமான நீரை தங்கு தடையில்லாமல் தாருங்கள். (ஐக்கிய முன்னணி அரசு பதவி ஏற்றவுடன், முதல் பட்ஜெட்டில் ப. சிதம்பரம், மிகவும் பெருமையுடன் அறிவித்தார்: சென்னையில் கடல் நீரை குடி நீராக்கும் திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் என்றார். இன்னும் எந்தக் கடல் நீரை குடிநீராக்குவது என்று கடலைத் தேடி அலைகிறார்கள் போலும். சௌதி அரேபியாவில் அந்த நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு குடிநீர் வினியோகத்துக்கென கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் அமல் படுத்தப்பட்டு செயலிலும் உள்ளது. ஆனால் என் தாய்த்திரு நாட்டில் வெறும் ஒரு நகரத்தின் குடிநீர்த் தேவையை பூர்த்தியாக்க ஆயிரம் கோடி ரூபாயை கையில் வைத்துக் கொண்டு எங்கள் மாண்பு மிகுக்கள், ஐந்தாண்டுகளாக கடலைத்தேடி அலைகிறார்கள்). ஐயா, நான் கேட்பது என் வீட்டு நீச்சல் குளத்தில் நானும் என் குடும்பத்தினரும் நீந்தி மகிழ அனுதினமும் சுத்தமான தண்ணீர் தாருங்கள் என்றல்ல, நானும் என் சந்ததியும் தொண்டை நனைக்க தினமும் சிறிது தண்ணீர் தாருங்கள் என்றுதான். நான் என் நாட்டில் படித்துவிட்டு வெளி நாட்டில் சென்று வேலை செய்வதால் என்னைத் தூற்றுகிற என் அன்பர்களே, எனக்கு சிறிதே சுத்தமான தண்ணீர் தாருங்கள்.
3. நான் வசிப்பதற்கு மேடு பள்ளமில்லாத ஒரு இடம் தாருங்கள். மேடு பள்ளமில்லாத என்று சொன்னால், நான் இங்கு நல்ல வடிகால் வசதியுடன் என்று அர்த்தம். எனக்கு ஏரிகளையும், குளங்களையும் வசிப்பிடங்களாக்கித் தராதீர்கள். மழை பெய்தால் அந்த நீர் வழிந்தோட வாய்க்கால் வசதியுடன் கூடிய ஒரு சிறு நிலப்பரப்பை எனக்குத் தாருங்கள்.

4. நான் நடந்து செல்ல சமன் படுத்தப்பட்ட ஒரு மண்பாதையாவது தாருங்கள். குழிகளும், குப்பையும் குவிக்கப்பட்டிருக்கும் நிலப்பரப்பையெல்லாம் சாலைகள் என்று தயவு செய்து சொல்லாதீர்கள். என் வீட்டின் முன்னாலிருக்கும் சாலையின் அழகை புகைப்படமாக்கித் தந்துள்ளேன். கண்டு களியுங்கள்.கடந்த மழையில் மழைத்தண்ணீர் வெளியேற கால்வாய்கள் எதுவும் இங்கு இல்லையாதலால், வீடுகளுக்குள் தண்ணீர் சென்று குளமானது வேறு விஷயம். அதற்கு ஒரு கால்வாய் வெட்டி, தண்ணீர் வெளியேற வழி செய்யுங்கள் என்று மக்கள் அனைவரும் சாலைமறியலில் ஈடுபட, ( அடிப்படை உரிமைகளை பெறுவதற்கு அல்ல, பேசுவதற்கு கூட என் தாய் திரு நாட்டில் சாலைமறியல் அவசியம், வாழ்க ஜனநாயகம்) அதிகாரிகள் வந்து பேசி, சாலைமறியலை கைவிட வைத்தார்கள். அதன் பிறகு எந்த அதிகாரிக்கு ஞானோதயம் வந்ததோ தெரியவில்லை, கட்டிடத்தின் இடிக்கப்பட்ட கழிவுகளை பாதையில் கொட்டி, பள்ளங்களை சமன் செய்கிறார்களாம். இப்படி கற்களை கொட்டி வைத்து அந்தப்பகுதியில் எந்த வாகனப் போக்குவரத்தும் இல்லாமல் ஒரு வாரத்தை கழித்தோம். ஒரு வாரத்துக்குப்பின் இரண்டு ஆட்கள் வந்து ஒரு அரை மணி நேரம் சம்மட்டியால் அடித்து ஒரு கல்லை இரண்டு பெருங்கற்களாக்கி விட்டு போய் விட்டனர். இந்த கற்குவியலின் மீதுதான் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறோம். வண்டி எதுவும் உள்ளே வர முடியாதாகையால், ஒரு பிரசவ வலி கண்ட நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணை மற்றவர் குறைந்தது அரை கிலோமீட்டர் தூரம் தூக்கிச்சென்றுதான் பிறகு வண்டியில் அமர்த்தி மருத்துவ மனையில் சேர்த்தார்கள். இதுவரை இந்த கற்குவியலில் விளையாடும் பொழுது தவறி விழுந்து இரண்டு சிறுவர்கள் கை உடைந்து மாவுக்கட்டுடன் இருக்கிறார்கள்.

இந்த கற்குவியல் கிரீன்வேஸ் சாலையிலோ அல்லது கோபாலபுரம் சாலைகளிலோ அல்லது போயஸ் தோட்ட சாலைகளிலோ சாலையை செப்பனிடுவதற்கென குவிக்கப்படுமா??

தினமும் இந்த அவல நிலையைக்குறித்து அரசு அதிகாரிகளிடம் முறையிட்டுக்கொண்டுதான் இருக்கிறோம், ஆனால் எதோ பிச்சைக்காரர்களிடம் நடந்து கொள்வதைப் போல்தான் எங்களிடம் நடந்து கொள்கிறார்கள். ஆனால் எங்கள் வார்டு கவுன்சிலர் மாத்திரம் வந்து வெள்ள நிவாரண நிதியை வாங்கிச் செல்லுங்கள் என மறக்காமல் அறிவித்துச் செல்கிறார். அவரிடம், ஐயா எங்களுக்கு நிவாரண நிதி வேண்டாம், அந்தப்பணத்தை வைத்து ஒரு நல்ல சாலை அமைத்துக் கொடுங்களேன் என்று சொன்னோம், எங்களை பார்த்து பிழைக்கத் தெரியாதவர்களாய் இருக்கிறீர்களே என்பது போல் பார்த்துவிட்டு சென்று விட்டார். தினமும் வேலைக்கு செல்வதற்காய் அரை கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று விட்டு அங்கிருந்து ஆட்டோவில் செல்கிறேன். ஏனெனில் எனது காரை எடுக்க முடியாது. எடுத்தால் இந்த கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி அது வெறும் துண்டுகளாகத்தான் கிடைக்கும். குறைந்த பட்சம் கார் சக்கரத்தை விட சிறிய கற்கள் இருந்தால் கூட அதன் மேல் காரை ஒரு தரமாவது ஓட்டி வெளியே கொண்டு வந்து விடலாம் தான், ஆனால் அந்த நாள் எப்பொழுது வாய்க்குமோ தெரியவில்லை.

இனியும் சொல்லுங்கள், நான் என் தாய் திரு நாட்டிற்காக என்ன செய்ய வேண்டும்??

5. எனக்கு ஒரு சுத்தமான வசிப்பிடம் தர முடியுமா உங்களால்? என் நகரத்தின் ஒரு பிரதானமானதும், அதிக மக்கள் போக்குவரத்து நிறைந்ததுமான ஓர் சாலையைப் பாருங்கள்,இந்த சாலையின் ஒரு பக்கம் முழுவதும் இப்படித்தான் குப்பை கொட்டி வைக்கப்பட்டிருக்கிறது. உடனே நீங்கள் கேட்கலாம் "உன்னை யார் ரோட்டில் குப்பை கொட்டச் சொன்னது, நீங்களே இப்படி பண்ணிட்டு, நிர்வாகத்து மேல குற்றம் சொல்லலாமா?" அட அட நில்லுங்க சார், இது நாங்க கொட்டுனது இல்ல சார், எங்க தெருவிலிருந்து வாரி எடுத்துட்டுப் போய் நிர்வாகத்தினர் தான் இப்படி கொட்டி வைத்துள்ளார்கள். இது எதுக்குனு எங்களை கேட்காதீங்க, இதிலிருந்து வரும் புழுக்களும் பூச்சிகளும் தினமும் எங்கள் வீட்டு விருந்தாளிகள்தான். இந்த துர்நாற்றம் எங்களுக்கு பழகிப் போய் விட்டதால், எங்கள் பகுதியில் மல்லிகைப் பூ வாசமெல்லாம் எங்களுக்கு மறந்து போய் விட்டது.

நான் கேட்பதெல்லாம் எனக்கு ஒரு உல்லாச புரி வேண்டும் என்று அல்ல, ஒரு மனித உயிருக்கு தேவையான அடிப்படை வசதிகளை மட்டுமே கேட்கிறேன். இந்த அடிப்படை வசதிகளை தருவதற்கான குறைந்த பட்ச உத்திரவாதத்தை யாரால் தர முடியுமோ, அவர் மாத்திரம் என் மீது கல்லெறியட்டும்.

Saturday, December 20, 2008

ஆபத்துக் காலத்தில் - பாகம் 3

முந்தைய இரண்டு பதிவுகளையும் படிக்காதவர்களுக்கு ,


ஆபத்துக் காலத்தில் !!!!ஆபத்துக் காலத்தில் - பாகம் 2


தனி மனித பாதுகாப்பில் அரசாங்கத்துக்கு பங்கில்லையா என நீங்கள் கேள்வி கேட்பது புரிகிறது.

அரசாங்கம் எப்படி எல்லாம் பங்காற்ற வேண்டும் என நினைக்கவோ எழுதவோ ஆரம்பித்தால் அது ஒரு சிந்துபாத் கதையை போல் முடிவில்லா பதிவாகி விடும்.

எனினும் ஒருசிலவற்றை குறிப்பிட்டே ஆக வேண்டும்.

1. கோவில்கள், மசூதிகள், சர்ச்கள் மற்றும் அனைத்து வழிபாட்டு தலங்களும் சரியாக தணிக்கை செய்யப்படவேண்டும். மனித நடமாட்டத்துக்கு இடையூறாக இருக்கும், அல்லது இப்படிச் சொல்லலாம், நெருக்கடி ஏற்படுத்துமாறு அடையாளம் காணப்படும் சிலைகள், கட்டுமானங்கள் ஆகியவற்றை முடிந்தவரை அப்புறப்படுத்தி, மனித நடமாட்டத்திற்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.

2. அக்னி வழிபாடு என்பது ந்மது வழிபாட்டு முறைகளில் இன்றியமையாத ஒன்றாக கலந்து விட்டதாகையால், இந்த வழிபாட்டு தலங்களில் தீயணைப்பு கருவிகள் வைக்கப்பட வேண்டும்.

3. கோவில் ஊழியர்களில் ஒரு சிலருக்கேனும் தீயணைப்பு முறைகளைப் பற்றிய பயிற்சியும், தீயணைப்பு கருவிகளை உபயோகிக்கும் முறை பற்றிய விழிப்புணர்வும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

4. பேரிடர் சமயங்களில் துரிதமாக செயல்பட்டு அழிவுகளில் இருந்து மக்களை தடுக்கும் முறைகள் (Disaster Management) பற்றிய பயிற்சிகள் இவர்களுக்கு அளிக்கப்படுவது அவசிய்ம்.

(உதாரணத்துக்கு சென்னை வடபழனி முருகன் கோவிலை எடுத்துக் கொள்ளுங்கள், எனக்குத்தெரிந்து நல்ல முகூர்ர்த்த நாட்களில், குறைந்தது ஒரு நூறு திருமணங்களாவது அங்கு நடை பெறுகின்றன. ஒரு திருமணத்திற்கு 10 பேர் வருகிறார்கள் என்று எடுத்துக் கொண்டாலும் அங்கு ஆயிரம் பேர் குழுமியிருப்பார்கள். ஒரு சிறு பொறி போதும், அங்கு அனைவரையும் பொலி போட்டு விடும்.)

5. மக்கள் குழுமும் இடங்களில் பாதையோரக் கடைகள், அல்லது வாகன நெரிசல்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்வது இன்றியமையாதது. குறைந்த பட்சம், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள் ஆகியவை எளிதில் நுழைந்து வெளியேறும் வண்ணம் வழித்தடங்கள் அமைக்கப்பட வேண்டியது அவசியம்.

6. கல்யாண மண்டபங்கள், மற்றும் வணிக வளாகங்களில் பேரிடர் பாதுகாப்பு முறைகள் அமல் படுத்தப்படவேண்டும். ஊழியர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினர் இந்தத் துறையில் பயிற்சி பெற்றவர்களாய் இருத்தல் கட்டாயமாக்கப்பட வேண்டும். அவசர கால வழிகளைப்பற்றிய விரிவான பெயர்பலகைகள், வரைபடங்கள் ஆகியவை அதிக இடங்களில் பொதுமக்கள் பார்வைக்கென ஒட்டி வைக்கப்பட வேண்டும். (எத்தனை கல்யாண மண்டபங்களில் Fire Hydrant என்ற தண்ணீர் குழாய்கள் இருக்கின்றனவோ தெரியவில்லை).

7. மின்சார சாதனங்கள் குறுகிய கால இடைவெளிகளில் தணிக்கைக்குட்படுத்தப்படவேண்டும்.

8. வாகன நிறுத்தங்கள் முறையாக திட்டமிடப்பட்டு, பராமரிக்கப்பட்டு, மக்களின் நடமாட்டத்திற்கு இடையூறாக இல்லாத வகையில் நிர்வகிக்கப்படவேண்டும்.

9. பேரிடர் பாதுகாப்பு வழிமுறைகளைப் பற்றிய விழிப்புணர்வு அரசின் மக்கள் தொடர்புத் துறையினரால் திட்டமிடப்பட்டு, பொருள்காட்சிகள் போன்றவற்றில் செயல் முறை விளக்கங்களுடன் செய்து காண்பிக்கப்பட வேண்டும். மக்கள் தொடர்புத்துறை ஊடகங்கள் வெறும் வியாபார நோக்குடன் விளம்பரங்களை மாத்திரமே ஒளிபரப்பி கல்லாவை நிரப்புவதை விட்டு, மக்களுக்கு உபயோகமான பேரிடர் பாதுகாப்பு விழிப்புணர்வு படங்களை ஒரு சில விநாடிகளேனும் ஒளி பரப்பலாம்.

10. அச்சு ஊடகங்கள் நடிகைகளின் உடல் அளவுக்கும், சினிமாக்காரர்கள் மற்றும் அரசியல் வாதிகளின் அந்தரங்கங்களுக்கும் தரும் முக்கியத்துவத்தில் ஒரு சதவீதத்தையாவது பேரிடர் விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்கு கொடுக்கலாம். இதை நாட்டை ஆளும் மாண்பு மிகுக்கள் சட்டம் இயற்றி கட்டாயமாக்கலாம்.

11. பள்ளிக் குழந்தைகளிடத்தில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மிகவும் தாக்கம் நிறைந்ததாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். என் ஆசிரியர் என் பள்ளிக் காலத்தில் நீரில் மூழ்கியவரை காப்பாற்றும் முறை மற்றும் முதலுதவி பற்றி சொல்லித்தந்தது இன்றுவரை என் நினைவில் உள்ளது. மாண்புமிகுக்கள் இதை கட்டாய பாடமாக்கலாம்.

போதும் அதிகம் சொல்லிவிட்டேன் என நினைக்கிறேன். ஆட்டோ வராது என்ற தைரியமுள்ளவர்கள் இன்னும் அதிக ஐடியாக்களை பின்னூட்டங்களில் அள்ளித் தெளியுங்கள்.

Saturday, December 13, 2008

ஆபத்துக் காலத்தில் - பாகம் 2

அதிக மக்கள் கூடும் இடங்களில் ஏற்படும் நெருக்கடிச் சாவுகளை தவிர்க்க நிறுவன உரிமையாளர்கள் என்ன செய்ய வேண்டுமென எனது முந்தைய பதிவில் எழுதியிருந்தேன்.

தொடர்ச்சியாக,

பொதுமக்கள் செய்ய வேண்டியது.

அதிக மக்கள் கூடும் இடங்களில் சென்று நிற்கவோ, அமரவோ அல்லது காத்திருக்கவோ நேரிடும் பொழுது, நடை பாதைகள், படிக்கட்டுகள் ஆகியவைகளில் அமராமல், அமர்வதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் மாத்திரமே அமருங்கள். பாதைகள் எல்லாம் வெறும் நடப்பதற்கு மட்டும் பயன்படட்டும்.

அவசியப்பட்டாலொழிய அந்த கட்டடத்தைப் பற்றியோ, அல்லது பொது மக்கள் அமர்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும் இருக்கை அமைப்புகள் குறித்த உங்களது அபிப்ராயங்களை அருகில் அமர்ந்திருக்கும் அறிமுகமில்லா நபருடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். நீங்கள் ஒன்று சொல்லப்போய், அதை அவர் வேறு விதமாக புரிந்து கொண்டு மற்றவரிடம் சொல்ல, கண்ணிமைக்கும் நேரத்துக்குள் ஒரு பயம் கிளப்பும் வதந்தி அந்த இடத்தில் உருவாகி விடும். ரசிக்கும் படியாக உள்ளவற்றையும் சரி, முகம் சுளிக்க வைப்பவற்றையும் சரி உங்களுக்குள்ளேயே வைத்திருத்தல் உத்தமம்.

நிகழ்ச்சி நடக்கும் கட்டடத்துக்கு உள்ளே நுழைந்த சிறிது நேரத்தில், வெறும் மின் விசிறியின் கீழிருக்கும் இருக்கையை தேடுவதோடு நிறுத்தி விடாமல், ஆபத்துக்கால வழி எங்கிருக்கிறது, நாம் அதற்கு எவ்வளவு தூரத்தில் அமர்ந்திருக்கிறோம், இடது புறமா, அல்லது வலது புறமா என பார்த்து வைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தினருக்கும் இதை ஒரு முக்கிய கடமையாகவே உணர்த்தி விடுங்கள்.
நிகழ்ச்சி நடக்கும் நேரம் இரவு நேரமானால், கையில் கண்டிப்பாக எப்பொழுதும் ஒரு டார்ச்சு (இதுக்கு தமிழ் வார்த்தை சொல்லுங்களேன்) எடுத்து செல்லுங்கள். திடீரென்று மின்விளக்குகள் அணைந்தால் மிகவும் உதவியாயிருக்கும்.

இப்பொழுது எல்லா கூடுமிடங்களிலும் பிளாஸ்டிக் வகை நாற்காலிகளையே பயன் படுத்துகிறார்கள். தயவு செய்து எந்த ஒரு நாற்காலி வரிசையையும் மாற்றி அமைக்காதீர்கள். ஒரு சிலர் குடும்பமாக அமர்ந்து நிகழ்ச்சியை ரசிக்க வேண்டுமென்பதற்காக, நாற்காலிகளை இங்குமங்குமாக நகர்த்தி ஒரு ஒழுங்கில்லா வரிசையை உருவாக்கி விடுவார்கள். அவசர காலத்தில் இதுவே "சக்ர வியூகம்" ஆகி விடும்.
ஏதாவது விபத்து ஏற்பட்டால், முதலாவது நீங்கள் இருக்கும் இடம் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளது என்பதை துரிதமாக முடிவு செய்யுங்கள். ஒரு வேளை அதிக ஆபத்தில்லாமல் இருக்கும் பட்சத்தில், அடுத்தவர்கள் வெளியேற வழி விடுங்கள். தீயில் சிக்கி இறந்தவர்களை விட, ஒருவர் மேது ஒருவர் இடித்துக்கொண்டு வெளியேற முயற்சித்து, இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களே அதிகம். ஆகவே முடியும் என்கிற பட்சத்தில் சற்று பொறுமை காப்பது நலம்.
நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கவனத்திற்கு :
இந்த வருட தீபாவளியை தென் ஆப்பிரிக்காவில் தான் கழித்தேன். இங்குள்ள இந்தியர்கள் இணைந்து தீபாவளி நிகழ்ச்சி நடத்தினார்கள். (சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு).என்னை மிகவும் கவர்ந்தது மாலையில் நடந்த வாண வேடிக்கையும் கலை நிகச்சியும் தான். கடைசி இரண்டு புகைப்படங்களைப் பாருங்கள். மாலையில் நடந்த கலைநிகழ்ச்சியின்போது மழைவரலாம் என்ற எதிர்பார்ப்பில் ஒரு விளையாட்டு மைதானத்தில் கூடாரம் அமைத்திருந்தார்கள். கூடாரத்தினுள் ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக ஒரு 600 பேர் கூடியிருப்பார்கள். நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு முன், கூடாரம் அமைத்த ஒப்பந்தக்காரரின் பிரதிநிதி வந்து நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசிவிட்டு, கூடாரத்தின் அமைப்பைப் பற்றியும், அதில் அமைக்கப்பட்டிருக்கும் அவசரகால வழிகளைப்பற்றியும், தீயணைப்பு கருவிகள் எங்கு வைக்கப்பட்டுள்ளது, நெருக்கடி நேரத்தில் எந்த வழியாக வெளியேற வேண்டும் என ஒரு தெளிவான உரை நிகழ்த்திய பின்பே இறைவணக்கம் பாடினார்கள்.
மேலும் மனதை ஈர்த்த ஒன்று யாதெனில், கடைசி புகைப்படத்தை பாருங்கள். "Disastaer Management" என்பதில் பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் அநேகம் பேரை அங்கு காண முடிந்தது. இது வெறும் ஒரு 600 பேர் கூடிய ஒரு சிறு கூட்டம்தான். ஆனால் நம் தலைவர்கள் மாநாடுகள் நடத்துகிறார்களே, ஆயிரமாயிரமாய் தொண்டர்களை அழைத்து, அவர்கள் எவ்வளவு முன் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டுமென நினைத்துப்பாருங்கள்.
நிகழ்ச்சி நடத்துபவர்கள், நிகழ்ச்சியின் எந்த ஒரு நேரத்திலும் நடை பாதைகள் ஆக்கிரமிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நடை பாதைகள் அகலமாயும் வாசல்களுக்கு நேராயும் அமைக்கப்பட வேண்டும்.
வந்திருக்கும் அனைவருக்கும் தாங்கள் அமர்ந்திருக்கும் இடத்டிலிருக்கும் வழிகள் மற்றும் வசதிகள் பற்றிய ஒரு சிறிய அறிமுகமாவது நிகழ்ச்சியின் ஆரம்பத்திலும், தாமத தங்கசாமிகளுக்காக நிகழ்ச்சியின் இடையிலும் சொல்லப்பட வேண்டும்.
வாகன நிறுத்தங்களுக்காக கட்டணம் மட்டும் வசூலித்தால் போதாது, அங்கு நிறுத்துவதற்கான வசதியும் செய்து தர வேண்டியது நிர்வாகிகளின் பொறுப்பாகும். (ஒவ்வொரு முறையும் சென்னை புத்தகக்கண்காட்சிக்கு சென்று அங்கு கட்டணம் வசூலிப்பவரிடம் ஏளனப் பேச்சு கேட்பதென்பது எனது வாடிக்கை. பிச்சைக்காரனை விட கேவலமாகத்தான் நம்மை நடத்துவார்கள். ஒவ்வொரு முறையும் காரில் ஏதாவது ஒன்று நிகழும். பம்பரோ, கண்ணாடியோ சேதமாவது உறுதி). St.George பள்ளி மைதானம் பெரிய பரப்பளவு கொண்டது, அதில் முறையான வசதிகள் மாத்திரம் செய்யப்பட்டால் அதிக வாகனங்களை நிறுத்த முடியும்.
எல்லாவற்றிற்கும் மேலாக பேரிடர் சமயங்களில் முன்னின்று வழி நடத்த விசேஷ பயிற்ச்சி பெற்ற பணியாளர்கள் நியமிக்கப்படுவது அவசியம்.
இன்னும் வரும் >>>>>>>>>>>>


கொஞ்சமாவது யோசிக்கறாய்ங்களா????

சனிக்கிழமை யாராவது கடை தெறந்து வெச்சிருந்தா, உள்ள பூந்து கொஞ்சம் கும்மியடிக்கலாம்னு பார்த்தா,

ஒருத்தர் துபாய்க்கு போறேன்னுட்டு ஜூட் வுட்டுட்டாரு, இன்னொருத்தரு ஆபீஸ்ல மண்டகப்படின்னுட்டு கம்னுக்கிறாரு, அந்த மகிழுந்துசாவி காதல், காதல்னு மீள்பதிவா போட்டு தாக்கிட்டு, இத படிக்காதீங்கோன்றாரு, சரி, இவுங்கெல்லாம் தான் காணாம போயிட்டாங்கோ, மத்தவங்க என்ன பண்றாங்கன்னு வேற கடைகளுக்குப்போனா, நிறைய கடைகள்ல ஐ.நா. சபை மாதிரி ஏதோ சமரசம் பண்ண முயற்சி நடக்குது,

யாராவது யோசிக்கறாய்ங்களா, பாவம் ஒருசிலர் வந்து கடைகளுக்குள்ள போய் கும்மியடிக்க முடியாம ஏமாந்து போவங்களே, அவுங்களுக்காகவே நம்ம ஏதாவது சரக்கு வைக்கணும்னு கொஞ்சமாவது நினைக்கறாய்ங்களா??
இவுங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?

Saturday, December 6, 2008

ஆபத்துக் காலத்தில் !!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் வழிபாட்டு ஸ்தலத்தில் நடந்த நெருக்கடியில் சிக்கி பலர் மரணம் - செய்தி.ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோவிலில் வழிபாட்டு ஸ்தலத்தில் நடந்த நெருக்கடியில் சிக்கி பலர் மரணம் - செய்தி.இன்னும் கும்பகோணம் பள்ளி விபத்து, திருச்சியில் ஒரு திருமண வீட்டில் நடந்த தீ விபத்து இவை எல்லாவற்றிலும் விபத்தில் நேரடியாக சிக்கி இறந்தவர்க்ளை விட, நெரிசல் ஏற்பட்டு நெரிசலில் சிக்கி இறந்தவர்கள் தான் அதிகம்.

நமது நாட்டில் இருக்கிற மக்கள் தொகைக்கு எந்த ஒரு சின்ன விபத்திலும் நூற்றுக்கணக்கில் உயிர் போவதென்பது நிச்சயமான ஒன்று. ஆனால் இதை தவிர்க்கவஎ முடியாதா? முடியும் நம்மால் மட்டுமே முடியும்.

வ்ழக்கம் போல அரசாங்கம் தடுப்பு நடவடிக்கை எடுக்க தவறி விட்டது, அந்த இன்ஸ்பெக்டர் பணம் வாங்கிட்டு சான்றிதழ் கொடுத்துட்டார், இவர் இப்பிடி பண்ணீட்டார்னு கையை நீட்டுறதற்கு முன், எதனால் நிகழ்கிறது, எப்படி தடுக்கலாம் என் பார்ப்போம்.

எதனால் நிகழ்கிறது:

எனக்கு தெரிந்தவரை ஒருசில காரணங்களை பட்டியலிட முயன்றுள்ளேன், உங்களுக்கு தெரிந்த காரணங்களையும் சேர்த்துவிடுங்கள்.

1. அதிகம் மக்கள் கூடும் இடங்களில், ஆபத்துக்கால வழி இல்லாதது.
2. போதுமான விபத்து தடுப்பு உபகரணங்கள் இல்லாமல் கட்டடங்கள் பராமரிக்கப்படுவது.
3. மின்சார உபகரணங்கள், மற்றும் மின்சாரம் சார்ந்த அனைத்து இணைப்புகளும் முறையாக வருடத்திற்கொருமுறையேனும் தணிக்கைக்குட்படுத்தாதது.
4. தீ அணைக்கும் உபகரணங்கள் இருந்த போதிலும் அதை பயன் படுத்த தெரியாதது.
5. அதிக மக்கள் கூடும் இடங்களில் அவசர காலத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என முறையான விளக்கங்கள் சொல்லாதது.

இன்னும் நிறைய சொல்லலாம்.

ஒருமுறை ஆஸ்த்ரேலியாவுக்கு வேலை விஷயமாக சென்று இருந்தேன். கெய்ன்ஸ் நகரின் அருகில் உள்ள ஒரு அலுமினா சுரங்கத்தில் ஒரு ரிப்பேர் வேலைக்காக சென்றிருந்தேன். நான் அந்த தொழிற்சாலைக்கு உள்ளே செல்லுமுன் பாதுகாப்பு பணியாளர்கள் அந்த தொழிற்சாலையைப் பற்றிய ஒரு அறிமுக வகுப்பு நடத்தினார்கள். இன்றும் இந்தியாவிலும் இத்தகைய அறிமுக வகுப்புகள் ஒருசில (!!!!????) நிறுவனங்களில் நடத்தப்படுகிறது. அந்த தொழிசாலையை பற்றிய முழு விவரமும் சொல்லிக்காட்டப்படும். அவசர காலங்களில் பின்பற்றவேண்டிய முறைகள், எந்த நிற விளக்கு எரிந்தால் அதற்கு என்ன அர்த்தம், எந்த இடங்களில் தீயணைப்பு உபகரணங்கள் உள்ளன, அவசர கால அழைப்பை கட்டவுடன் எங்கு கோடவேண்டும் என்று ஒரு தெளிவான வகுப்பு எடுத்து, அந்த வகுப்பில் சொல்லப்பட்டதை நீங்கள் எந்த அளவு புரிந்து கொண்டீர்கள் என்பதை ஒரு குறுந்தேர்வு வைத்து உறுதி செய்து கொண்டு அந்த தேர்வில் நீங்கள் தேறியிருந்தால் மாத்திரமே உள்ளே அனுமதிக்கப்படுவீர்கள். இப்படியாக உங்கள் பாதுகாப்பிற்கு முழு உத்திரவாதம் உறுதி செய்யப்பட்ட பின்னரே நீங்கள் உள்ளே அனுமதிக்கப்படுவீர்கள். இது ஒரு நல்ல படிப்பினையாகும்.

ஆனால் நமது நாட்டில் நிலைமையை நினைத்துப்பார்த்தால் பயமாகத்தான் உள்ளது. மக்கள் அதிகம் வந்து போகும் இடங்களை கவனித்துப்பாருங்கள்.

கல்யாண மண்டபங்கள் - எத்தனை கல்யாண மண்டபங்களில் அவசர கால வழிகள் இருக்கின்றன? கல்யாண மண்டப சமையல் கட்டுகளில் கூட சரியான புகை போக்கிகள் இருப்பதில்லை. நம்மூரில் சாதரண கல்யாணங்களில் கூட ஒரு 100 பேராவது கோடி விடுவோம். பல கல்யாண மண்டபங்களில் மேலே ஒரு தளம், கீழே ஒரு தளமென கட்டி, குறுகலான படிக்கட்டுகள் அமைத்திருக்கிறார்கள். அவசர காலங்களில் இந்த படிகள் மிகவும் ஆபத்தானவைகள்.
  • அவசர காலவழிகள் அமைக்கப்படவேண்டியது அவசியம்.
  • முக்கியமாக மின்சார இணைப்புகள் ஒவ்வொரு முறையும் பரிசோதனைக்குட்படுத்தப்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட வேண்டும். இதை ஏதொ ஒரு அரசாங்க விதிகளின் கட்டுப்பாட்டுக்காக மண்டப உரிமையாளர்கள் செய்யாமல், மண்டபத்தில் கூடும் மக்களின் ந்லனை மனதில் கொண்டு செய்யவேண்டும்.
  • சமையல் கூடத்தில் போதிய காற்று வசதி இருப்பதற்கான அனைத்து உபாயங்களையும் செய்வதுடன், தீயணைப்பு உபகரணங்கள் அடுப்புக்கு வெகு அருகில் இருக்க வேண்டும்.
  • மண்டப ஊழியர்களுக்கு தீயணைக்கும் முறை பற்றிய அடிப்படை அறிவாவது இருக்க வேண்டும். (பெரும்பாலான மண்டபங்களில், திருமண சமயத்தில் மண்டப ஊழியர்களை காண்பதே மிக அரிதாயிருக்கும்).
  • மண்டபத்தில் நடக்கும் திருமணங்களில் உருவாக்கப்படும் ஹோமத்தீயின் அளவு கட்டுப்படுத்தப்படவேண்டும். தீயணைப்பு கருவிகள் இங்கும் வைக்கப்பட வேண்டும். (திருச்சியோ அல்லது திருரங்கமோ, ஒரு கல்யாணத்தில் தீ ஹோம குண்டத்தில் இருந்து பரவியதாக எனக்கு ஞாபகம்)
  • எல்லாவற்றிற்கும் மேலாக திருமணமோ அல்லது எந்த ஒரு நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு முன், இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைப்பற்றிய அறிவிப்பு கலந்துகொள்ளும் எல்லோருக்கும் அறிவிக்கப்படவேண்டும்.
  • அடுத்த முறை நம் வீட்டுத்திருமணத்திற்கென மண்டப முன்பதிவு செய்யப் போகும் பொழுது, இந்த விதிகளெல்லாம் பின்பற்றப்படுகின்றனவா எனப் பாருங்கள். ஒரு மண்டபம் கூட தேறாது என நினைக்கிறேன்.

வர்த்தக வளாகங்கள்:

நம்மூரிலிருக்கும் எல்லா வணிக வளாகங்களிலும் அவசர கால வழிகள் கட்டாயமாக்கப்படவேண்டும். ஸ்பென்ஸர் பிளாசாவையே எடுத்துக்குள்ளுங்கள். எத்தனை பேருக்கு அதன் அவசர கால வழிகளைப் பற்றி தெரியும். மிகவும் குறுகலான நடை பாதைகளை அமைத்திருக்கிறார்கள். இரு கடைகளுக்கு மத்தியில் இருக்கும் நடைபாதை என்னவோ விதிகளின் படி சரியான அகலத்தில் தான் இருக்கும் என்று நினைக்கிறேன், ஆனால் வரும் கூட்டத்தைப்பார்த்தால், இது போல் இரு மடங்கு அகலத்துடன் நடை பாதை வைத்தாலும் நெரிசல் குறையாது. ஒரு வளாகத்திலிருந்து இன்னொரு வளாகத்திற்கு செல்லும் பாதைகள் மிகவும் குறுகலாகவே எனக்குத் தெரிகிறது.

ஒருமுறை பாண்டி பஜாரிலிருக்கும் ரத்னா ஸ்டோரின் பாத்திரக்கடைக்கு போகும் பாக்கியம் கிடைத்தது. அப்பப்பா, வாழ்வில் இது போன்றதொரு தவறை இனிமேல் செய்யக்கூடாதென முடிவு செய்தேன். 4 அல்லது 5 தளங்களைக் கொண்ட பாத்திரக்கடை அது. கீழ்தளத்தில் முழுவதும் பாத்திரங்களை அடுக்கி, மேலும் அடுக்கி, மேமேமேமேல்ல்ல்லும் அடுக்கி வைத்திருக்கிறார்கள். கூரையிலும் தொங்க விட்டிருக்கிறார்கள். சிறிது உடல் பெருத்த ஆசாமிகள் உள்ளே நுழைந்து எந்தப்பாத்திரத்திலும் மோதாமல் வந்து விட்டால் அவருக்கு பரிசே தரலாம். அனைத்து தளங்களுக்கும் செல்ல மின் தூக்கி உள்ளது, ஆனால் மின் தூக்கியின் கதவு வரை செல்ல வேண்டுமென்றால் தட கள விளையாட்டுகளில் ஒரு சிலவாவது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். குனிந்து நிமிர்ந்து ஒரு லாங் ஜம்ப், மற்றும் ஹை ஜம்ப் எல்லாம் செய்தபின்னால் நீங்கள் கதவருகில் சென்று சேரலாம். நானும் மனைவியும் இந்த வம்பே வேண்டாம் என்று சொல்லி படிகளில் ஏறப்போனோம். மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. படிகளில் முழுவதும் பாத்திரங்களாய் அடுக்கி ஒரு கால் வைக்கும் அளவிற்கு மட்டும் இடம் விட்டிருக்கிறார்கள். முதலில் வெளியே போலாம் வாவென மனைவியை இழுத்து வந்து விட்டேன்.

ஏன் ஒரு குறைந்த பட்ச பாது காப்பு விதிகளை கூட நம்மவர்கள் பின்பற்ற மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை. ரங்கநாதன் தெருவிலிருக்கும் எந்த கடையில் வேண்டுமானாலும் போங்கள், குறைந்த பட்ச பாதுகாப்பு என்பது கூட மருந்துக்கும் கிடையாது.

இதற்கெல்லாம் அரசை குற்றம் சொல்லி ஒரு உபயோகமும் இல்லை. வளாக உரிமையாளர்களாவே முன்வந்து, வாடிக்கையாளர்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழலை தர வேண்டும் என எப்பொழுது யோசிக்கிறார்க்ளோ அப்பொழுது தான் மனித உயிர்கள் மதிக்கப்படும்.

இந்தப் பதிவு இன்னும் தொடரும்>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

Thursday, December 4, 2008

ஏன், எதற்கு, எப்படி???

பத்து கேள்விகள்:

1. எல்லா அரசு அலுவலகங்களிலும் எத்தனை நவீனப்படுத்தப்பட்டிருந்தாலும், சிலந்தி வலை மாத்திரம் தொங்குவது எப்படி?

2. ஆண்களின் செருப்புகளில் குதிகால் பக்கத்தில் தட்டையாகவே த்க்கப்படும் பொழுது, பெண்களின் செருப்புகள் மட்டும் குதிகாலை உயர்த்தி தைப்பது ஏன்?

3. அலுவலகத்துக்கு செல்லும் பெண்களின் கைப்பைகள் ஃபேஷனாயிருப்பதப் போலல்லாமல், அரசுப்பள்ளிகளில் பெண் ஆசிரியர்கள் மாத்திரம் ஏன் ஒரு நீண்ட பையை வைத்துக்கொள்கிறார்கள்?

4. சென்னையில் போக்குவரத்து காவல் துறையில் பணிபுரியும் பெரும்பாலான காவலர்கள் கருப்பாகவே இருக்கிறார்களே ஏன்?

5. மாலையில் வீடு திரும்பும் கணவன்மார் மனைவிக்கு மல்லிகைப்பூ வாங்கி விட்டு கூடவே அல்வாவும் வாங்கிப் போகிறார்களே அது ஏன்?

6. மளிகைக் கடை வைத்திருப்பவர்களெல்லாம் பெரும்பாலும் நாடார்களாகவே இருக்கிறார்களே அது ஏன்?

7. ரவிக்கை தைப்பதற்கு மட்டும் பெண் டைலர்களிடத்திலும் கூட பெண்கள் அளவு ரவிக்கையையே கொடுக்கிறார்களே, பெண்ணுக்கு பெண் ஏன் அளவு எடுத்துக்கொள்வதில்லை?

8. பெண்களின் அழகு நிலையங்கள் மாத்திரம் கருப்பு கண்ணாடி அமைத்து மறைத்து இருக்கிறார்களே, ஆண்கள் தனது 10வயது மகளை அழைத்து வர சென்றாலும் வெளியே நிற்க வைத்து எதொ ஒரு காமுகன் வந்ததைப் போல எல்லா பெண்களும் பார்க்கிறார்களே, உள்ளே பெண்கள் எல்லாம் நிர்வாணமாக அமர்ந்து இருப்பார்களா,,, எப்படி?

9. கல்யாணத்திலே மாப்பிள்ளை மாத்திரம் முதலில் வருவது ஏன்? மணமக்கள் இருவரும் ஒன்றாக மேடைக்கு வராதது ஏன்?

10. எல்லா போஸ்ட் ஆபீஸிலும் கவர் ஒட்டுவதற்கு ஒரு பசை வைத்திருக்கிறார்களே, கவரை ஒட்டியபின் கை துடைப்பதற்கு ஒரு துணி கூட வைக்காதது ஏன்?

உண்மையிலேயே பாதிக்கப்பட்டது யாரு???

பத்து பதினஞ்சு வருசத்துக்கு முன்னாடி, மெட்ராசுக்குள்ள ஒரு 4000 ரூபா சம்பளம் வாங்கிகினு, வாரமான ஒரு படம் பார்த்தமா, பிரியாணி தின்னமா, வீட்ல தூங்குனமான்னு அல்லாரும் நல்லாதான் போய்கினு இருந்தாங்க,
இஞ்சினீரிங் படிச்சுகினு, உள்நாடிலயே வேலை செஞ்சுகினு, பத்துதோ இல்லியோ கிடைக்கிற சம்பளத்தை வாங்கிகினு, அதிகமா ஆசைப்படாம, அதிகமா கவலையும் பட்டமதான் நம்ம பசங்களும் வாழ்ந்தாங்க. ஏதோ அப்பப்ப எவனா ஒருத்தன் திடீர்னு ஏணில ரெண்டு மூணு படிய ஒரே தாவல்ல தாவி ஏறணுமுன்னு ஆசைப்படுவான், அவன் எங்கினா துபாய்கு, இல்லைனா அந்த பாலைவன நாடுகள்ல எதுனா ஒரு மண்ணை பார்த்துட்டு ஒரு ரெண்டு வருசத்துல ஏயெப்பா ஆளை வுடுங்கடா சாமினு ஓடி வருவான். மறுபடியும் அதே சம்பளம், அதே சினிமா, அதே வேலைனு பொழுது போயிரும். எல்லாம் நல்லாதங்க இருந்திச்சு.

திடீர்னு எங்கிருந்தோ ஒரு ஈசல் பூச்சி கணக்கா வந்தாங்க, Y2Kனாங்க, நல்லா படிச்சிகினு இருந்த பசங்களையெல்லாம் சும்மா இன்னாவோ ஒரு சொர்கத்துக்கு இட்னு போறாப்புல பில்ட் அப் குடுத்தாங்க, நீ ஆறு மாசம் இந்த கோர்ஸை படி அப்புறம் இன்னா நீ ராஜாதான், உன்னை யாரும் புடிச்சுக்க முடியாது, அமெரிக்காகாரன் உன்னை அள்ளிகினு போவான், லட்சலட்சமா சம்பளம், அமெரிக்காவுலயே வூடு வாசல்ல்னு செட்டில் ஆயிர்லாம்னு எல்லாம் படம் காமிச்சாங்க, பசங்க நல்ல வேலையிலிருந்தவனெல்லாம் வேலைய விட்டுட்டு கடன் வாங்கி அந்த கோர்ஸை படிச்சான், அதுல முழிச்சுகினவன் எல்லாம் எதோ போட்ட காசை எடுத்தான், ஒரு சிலர் நல்லாவும் செட்டில் ஆயிட்டான். ஆனா, நெறய பேரு உள்ள வேலையையும் விட்டுட்டு முன்னாலயும் போக முடியாம, பின்னாலயும் வர முடியாம பைத்திய காரனானதுதான் மிச்சம்.

அப்புறமா இந்த தனியா பஸ் உட்டுகுனு ஆளுங்கள அவுங்களே இட்னு போயிட்டு கூட்டியார கம்பனிங்களா வந்தாங்க, ஒவ்வொருத்தனும் ஆயிரம் பேர் இரண்டாயிரம் பேர்னு ஆளெடுத்தாங்க, நேத்து வரைக்கும் மெட்ராசுக்கு வர்ரதப்பத்தி யோசிக்காதவனெல்லாம், இப்ப மெட்ராசுல ஐம்பதாயிரம், அறுபதாயிரம்னு சம்பளம் வாங்கிகினு, கழுத்துல கம்பனி கட்டுன தாலிய கட்டிகினு, (அந்த தாலிய பாத்தா மாங்கல்யத்துல இவனோட போட்டோ வேற) எந்நேரமும் செல் போன்ல பீட்டர் உட்டுகுனு ஒரே பந்தா பண்ணிகினு இருந்தாங்க. சும்மா 1500 ரூவாய்க்கு வாடகைக்கு கெடச்ச வீடு கூட 6000 ரூவய்க்கு போயிடுச்சி, இடையில தரகர்னு சொல்ற படுபாவிங்க அவுனுங்களுக்கு கமிஷன் கிடைக்கணும்கறதுக்காக இஷ்டத்துக்கு வாடகையை ஏத்தி வுட்டானுங்க, வீட்டுக்காரனும் வாடகை ஜாஸ்த்தியா கிடைக்கும்னு நெனைச்சுகிட்டு, நல்லா குழந்தை குட்டியோட குடியிருந்து ஒழுக்கமா வாடகை குடுத்துட்டு, பிரச்சனை பண்ணாம இருந்த நல்ல குடும்பஸ்த்தனையெல்லாம் காலி பண்ண வெச்சு தெருவுல நிறுத்துனாங்க, அவிங்களோட வயித்தெரிச்சலோ இல்லை சாபமோ தெரியல, திடீர்னு அல்லாம் அங்கங்க அப்படியே நின்னு போச்சு,

தரமணிக்கு அப்பால சிறுசேரி வரைக்கும் கட்டுன கட்டடமெல்லாம் அப்படியே சிமெண்டு கறையோட கம்பிய நீட்டிகுனு பல்லை இளிச்சுட்டு நிக்குது. நல்லவங்களை காலி பண்ணவெச்ச வீட்டுக்காரனெல்லாம் இப்ப ஆள் தேடிகினு அலையறாங்க, பந்தா பண்ண பார்ட்டியெல்லாம் எங்க போச்சுனே தெரியல, லட்ச லட்சமா வரதட்சணை குடுத்து இந்த பந்தா பார்டிகளுக்கு பொண்ணு குடுத்தவங்க கையை பெசஞ்சுகிட்டு கடவுளை வேண்டிகினு இருக்கறாங்க. பார்த்தா ஒரு பக்கம் பாவமாதான் இருக்குது, எப்படி இருந்தவங்க இப்படி ஆயிட்டாங்களேனு,

ஆனா, ஒண்ணு மாத்திரம் மனுஷன் புரிஞ்சுக்கணும், நீ நெனைக்காத ஒண்ணு உங்கிட்ட வேகமா வந்துதுன்னா அது வந்த வேகத்துலயே போயிரும், நீ விரும்பற ஒண்ணு உங்கிட்ட மெதுவா வந்துதுண்ணா அது ரொம்ப நாள் உங்கிட்டயே இருக்கும்.

எனக்குதெரிஞ்சு நெறய பேர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இதுனால பாதிக்கப்பட்டிருக்கிறாங்க, அதெல்லாம் யாருன்னு சொல்லுங்களேன்.

Monday, December 1, 2008

வணக்கம்

டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி, எனக்கும் தோணிடுச்சு, இனி பதிவு எழுத ஆரம்பிச்சுட வேண்டியதுதான்னு.

நான் கொஞ்சம் வெவகாரமான ஆளுன்னு எல்லாரும் சொல்லுவாங்க, எதுக்கெடுத்தாலும் கேள்வி கேட்டுட்டே இருப்பேனாம், அடுத்தவங்களை நக்கல் உட்டுகிட்டே இருப்பேனாம், எல்லாரும் சொல்லுவாங்க. ஆனா, இங்க நான் அப்படிஎல்லாம் இருக்க மாட்டேன், நல்ல பையனா நடந்துக்குவேன்.

தமிழ் மணத்தில் உங்கள் பதிவு ஹிட் ஆக வேண்டுமா?

சுலபமான 10 வழிகள்:
1. தீவிரவாதத்தைக்குறித்து தெரிகிறதோ இல்லையோ, ஒருமுறையாவது, எழுதிவிடுங்கள். "இவுனுங்க நாய்க்கு பொறந்தவனுங்க, அந்த மதத்தை சேர்ந்தவனுங்க, இந்த மதத்தை சேர்ந்தவனுங்க, இவுனுங்க அம்மா இவுனுங்களுக்கு பால் ஊட்டுனாளா இல்லை நாய் தான் பால் ஊட்டுச்சா" என்பது போன்ற கண்ணியமிக்க வார்த்தைகளை அள்ளித்தெளித்து விடுங்கள்.


2. ஒருமுறையாவது பார்பனர்களைப்பற்றியோ, கிறிஸ்தவர்களைப்பற்றியோ, இஸ்லாமியர்களைப்பற்றியோ ஒரு பதிவு எழுதிவிடுங்கள். இவுனுங்களால நாட்டுக்கு என்ன லாபம் போன்ற நியாயமான கேள்விகளை அடுக்கி வைக்கலாம்.


3. சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்களைப்பற்றி எழுதுங்கள். எல்லாமே அபத்தமென்றும், டைரக்டர் என்ன படம்பார்க்கறவனையெல்லாம் கேனையன்னு நினைச்சுட்டானா என்பது போன்ற உரிமையுடன் கூடிய கேள்விகள் அவசியம்.4. மதம்,மொழி,சாதி,இனம் போன்றவற்றில் பற்றுக்கொண்டிருந்தபோதிலும் ஒரு நடுநிலையாளாராக காட்டிக்கொள்ளுங்கள்.


5. இந்துவின் பெயரில் பதிவை ஆரம்பித்துவிட்டு இந்துத்துவத்தைபற்றி கேவலமாக எழுதுங்கள். சிலைவழிபாடுகள், நாட்டார் தெய்வங்கள், வருணாசிரமகொள்கைகள், மனுதர்மம், இன்னும் எதையெல்லாம் சொன்னால் ஒரு சர்ச்சை கிளம்பி குறைந்த பட்சம் ஒரு 70 பின்னூட்டமாவது கிடைக்குமோ அந்த வார்த்தைகளையெல்லாம் தேடிப்பிடித்து பதிவிடுங்கள்.


6. அல்லது எல்லா பதிவர்களின் பதிவிலும் புகுந்து "அண்ணே, சூப்பரண்ணே" என்று சொல்லலாம். அமைதியாக அல்லது மிக முதிர்ந்த பின்னூட்டாளரைப்போல் காண்பித்துக்கொள்ள வேண்டுமெனில் "அருமை, ஆழ்ந்த கருத்துக்கள், என்னை மிகவும் யோசிக்க வைத்துவிட்டீர்கள்" என்பது போல் எழுதலாம்.7. கிறிஸ்தவர்களை தாக்கி பதிவிடுங்கள். மதமாற்றங்கள், வெளிநாட்டுப்பணம், சர்ச்சுகளுக்குள் ஆபாசம் போன்ற தலைப்புகள் அதிகம் கவனிக்கப்படும்.


8. குறிப்பாக எதாவது ஒரு குழுவில் சேர்ந்து விடுங்கள். முதுபெரும் எழுத்தாளர்களான லக்கிலுக்,புதுகை அப்துல்லா, டோண்டு, கார்க்கி,அப்புறம் இன்னும் ஒருவர் தங்கமணி, ரங்கமணி என எழுதுவார், வெண்பூ, இன்னும் எத்தனையோ அறிவு ஜீவிகள் பதிவுலகத்தில் வலம் வருகிறார்கள், இவர்களுக்கு ஜால்ரா தட்டிவிட்டு, மேலும் மீ த ஃபர்ஷ்டூ என்று வேறு சொன்னீர்களானால் உங்கள் பதிவு அதிகம் கவனிக்கப்படும்.


9. பெண்களைப்பற்றி உயர்வாக எழுதுங்கள். ஏதோ நீங்கள் பெண்களை எல்லாம் தெய்வங்களைப்போல் ஆராதிப்பது போலவும், பெண்களுக்கௌ எதிரான கொடுமைகளுக்கு உரத்து குரல் கொடுப்பது போலவும் எழுதுங்கள். உங்கள் பதிவு அதிகம் கவனிக்கப்படும்.10. தெரிந்த தமிழ் வார்த்தைகளையெல்லாம் ஒவ்வொன்றாக சிறுசிறு துண்டு சீட்டுகளில் எழுதிக்கொள்ளுங்கள். அவற்றையெல்லாம் சுருள்சுருளாக சுருட்டி ஒரு ஜாடியில் போட்டு நன்றாக குலுக்குங்கள். உங்கள் குழந்தையை அழைத்து " என் செல்லமில்ல, ஒவ்வொரு சீட்டா எடுத்து எங்கையில குடுடா செல்லம்" என்று சொல்லுங்கள். குழந்தை எடுக்க எடுக்க அதே வரிசைப்படி ஒரு வரிக்கு நான்கு வார்த்தைகளாக எழுதிக்கொண்டு வந்தீர்களானால் இதொ ஒரு புதிய பின் நவீனத்துவ கவிஞராகி விட்டீர்கள். அப்படியே பிரசுரிக்க வேண்டியதுதானே, அதில தப்பித்தவறி எதாவது அர்த்தம் இருந்து அதை வாசிக்கறவன் புரிஞ்சுகிட்டு பின்னூட்டமிட்டால் அது அவன் தலைவிதி.