Sunday, March 22, 2009

எல்லாரும் என்னதான் நெனச்சுகிட்டிருக்கீங்க????

யோவ், எல்லாரும் என்னதான் நெனச்சுகிட்டிருக்கீங்க,

எங்க போனாலும் என்னை சீனியர் சிட்டிசன் ஆக்கி உக்கார வெக்கறீங்க??
இன்னா தான் பண்றது??

ஆதி எதோ ஒரு மோகம், தாகம்னு பதிவு போட்டார், அதுல நம்ம கருத்தைச் சொன்னோம், உடனே இந்த யூத்துக தொல்லை தாங்கலங்கறாங்க,

நாங்களும் யூத்துதான்யா!!!!

உடனே அந்த கார்க்கி வந்து அருமை அண்ணன் அனுஜன்யாவுடன் கோத்திவிட்டாரு. ஆனா அனுஜன்யா அண்ணன் அடிச்சாரு பாருங்க ஒரு அடி, நல்லா சொன்னேள் போங்கோ.

(கார்க்கி : தராசு, உங்களைவிட இரண்டு வருஷம் மூத்தவர் அனுஜன்யானு ஒருத்தர் இருக்கார்.

அனுஜன்யாவின் பதில்: அப்ப தராசுக்கு வயசு இருபத்தி மூணா)


சரி, இதயெல்லாம் போகட்டும்னு விட்டா, இப்ப அத்திரி ஒரு பதிவு போட்டாரு, அதுல போய் ஒரு பின்னூட்டமிட்டால், அவுரும் சீனியர் உங்களுக்கே இப்படின்னா, நாங்கெல்லம் எங்க போகன்னு புலம்பறார்.

எல்லாரும் என்னதான் நெனச்சுகிட்டிருக்கீங்க!!!!!

யோவ் எல்லாரும் பாத்துக்குங்க, நானும் யூத்து தான்யா, யேய் இங்க கவனி, நானும் யூத்து தான்யா!!!!

யேய், சைலன்ஸ், பேசிட்டிருக்கன்ல (கார்க்கி இல்லைங்கற தைரியத்துல தான் இந்த கடைசி வரி)

Friday, March 13, 2009

தங்கம் விலை ஏறிடுச்சா???? பாகம் 2

தென் ஆப்பிரிக்காவிலிருந்து நான் திரும்பி வரும்பொழுது நடந்த கொடுமையையெல்லாம் இந்தப் பதிவுல சொல்லியிருப்பேன்.அப்புறம்::::------சரியா 9:00 மணிக்கு சென்னையில் இறங்கி, கடுகடுவென முகத்தை வைத்துக்கொண்டிருக்கும் குடியுரிமை சோதனை அதிகாரிகளிடம் இருந்து கடந்து வந்து, பெட்டி வருவதற்காக கன்வேயரில் நின்றால், ஆடி அசைந்து கடைசியில் வந்தது என் பெட்டிகள்.

பயந்த மனதுடன் வீட்டுக்கு வந்தேன். வீடு என்னமோ அமைதியாகத்தான் இருந்தது. அப்பா, அம்மா எல்லோரும் நார்மலாத்தான் இருந்தாங்க. என் மறுபாதியும் அப்நார்மல் புன்னகையுடன் இருந்தாள். (டேய், இப்பவே எல்லோரும் இருக்கும்போதெ உண்மையை சொல்லிடு, அதுதான் உனக்கு சேஃப்னு உள்மனசுல ஒரு பட்சி அடி அடின்னு கிடந்து அடிச்சுக்குது) அது என்னமோ நமக்கு அப்பல்லாம் தைரியம் வரல.

அடுத்ததா வழக்கம்போல என் பொண்ணு லக்கேஜ் இன்ஸ்பெக்ஷன் நடத்துனா, (டேய், இப்பவாவ்து சொல்லீற்ரா, எதொ கொஞ்ச நஞ்ச டேமேஜோட மேட்டர் முடிஞ்சுரும்னு மறுபடியும் பட்சி), ம்ஹூம் , செய்வமா நாங்க. இப்பத்தான சிங்கமாட்ட இருப்போம்.

வழக்கமா என் பொண்ணு பையையெல்லாம் பரிசோதனை ப்ண்ணுனா, அதுல எதெல்லாம் அவளுக்கு புடிச்சிருக்குதோ அதெல்லாம் ரைட் ராயலாக பறிமுதல் செய்து விடுவாள். புது பேனாக்கள், ரைட்டிங் பேட்கள், நண்பர்களுக்குனு எதாவது கிஃப்ட் வாங்கிட்டு வந்தா, அது என் பொண்ணு விட்டு வைச்சாத்தான் நண்பனுக்கு போய் சேரும். ஆனா, இந்தத்தரம் அவ எதோ ஒரு பொருளை குறிவெச்சே சோதனை நடத்தற மாதிரி தெரிஞ்சுது.

" பாப்பா, இங்க பாரும்மா, நீ சொன்னியே, அந்த கங்காரு பொம்மை"

"ம், சரி, அதை வையுங்க , நான் அப்புறமா எடுத்துக்குறேன்"

" அட, இங்க பார்றா, நீ கேட்ட சாக்லேட்டு"

முக்கியமான எதிர் திசையில் இருந்து மௌனம். இந்த மௌனம் வரப்போகும் சுனாமிக்கு அறிகுறியோ என பயந்திருந்த பொழுதுதான், பாப்பா முழு பரிசோதனையை முடித்துவிட்டு ஒரு தினுசா உதட்டை பிதுக்கினாள். அங்க கண்களிலேயே இல்லையா என்ற கேள்வியும், அதற்கு கண்சாடையிலேயே இல்லை என்ற பதிலும். ஆஹா, இனி தாமதிக்கறதுல பிரயோசனம் இல்லடா, ஒழுக்கமா சொல்லிப்புடுன்னு பட்சி சொன்னதுக்கப்புறம் மெதுவாக ஆரம்பித்தேன்.

"பாப்பா, என்னம்மா தேடறே"

"அம்மா, ஒரு பொருளை வாங்கிட்டு வரச் சொன்னாங்களே, வாங்கினீங்களா?

"அது வந்தும்மா, துபாயில வந்து......"

நேர்முனைத்தாக்குதல் ஆரம்பம். " அப்ப வாங்கிட்டு வரலை, அப்படித்தானே.."

" வாங்கிட்டு வரக்கூடாதுன்னு இல்லை, என்ன நடந்துதுன்னா......"

"உங்க அண்ணாவுக்கு மாத்திரம் Rayban கண்ணாடி வாங்கிட்டு வந்திருக்கீங்க"

" அது வந்தும்மா, அது துபாய்ல வாங்கல்ல, தென் ஆப்பிரிக்காவுலயே வாங்கிட்டேன்"

"அப்ப உங்க ஃபிரண்டு கேட்டார்னு Johny Walker - Red Label வாங்கிட்டு வந்திருக்கீங்க, அது மட்டும் முடிஞ்சுதா" ( இந்த ஒரு விஷயத்துல மாத்திரம் என் ஃபிரண்டே நாந்தான்னு உனக்கு இன்னும் தெரியாதா).

"இல்லமா, அது துபாய்ல தங்க நகை கடைக்கு போக...."

"எல்லாருக்கும் அவங்க கேட்டதெல்லாம் வாங்கிட்டு வரத்தெரியுது, நான் சொன்னால் மட்டும் முடியாதா"

"ஏய், நான் சொல்றதக் கேளு, துபாய்ல...."

"ம், துபாய்ல....,"

"ஃபிளைட் வரும்போதே லேட்டு"

"தெரியும் 14 மணி நேரம், உக்காந்து யோசிச்சிருப்பீங்க, வித்தியாசமா எதாவது ஒரு சாக்குச் சொல்லலாமுனு"

"அப்படியில்லமா, நான் சொல்றதத்தான் கொஞ்சம் கேளேன்"

"தெரியும், தங்கம் விலை கன்னா பின்னானு ஏறிடுச்சு, இப்ப வாங்குனா அது ஒரு அர்த்தமுள்ள இன்வெஸ்ட்மெண்டா இருக்காதேன்னு நெனைச்சுத்தான நீங்க வாங்கல"

(ஆஹா, இப்படி ஒரு ஐடியா இருக்குதுன்னு தெரியாமயேவா ராத்திரி பூரா முழிச்சிருந்தோம்)

"ஆ, ஆ, ஆமா, ஆமா, அது எப்படிம்மா கரெக்டா சொல்லிபுட்டே"

"எனக்குத்தெரியும், நீங்க இப்படியெல்லாம் யோசிப்பீங்கன்னு" (ஆஹா, உலகம் நம்மை எவ்வளவு அறிவாளினு நெனச்சிருக்கு, உனக்குத்தாண்டா உன்னோட அருமையே தெரியல, கேடு கெட்ட பயலே).

"ஆமா, அதுதான் நாங்க வாங்கிட்டு வர மாட்டம்னு தெரியுதுல்ல, அப்புறம் எதுக்கு இந்த இண்டு இடுக்குலெல்லாம் புகுந்து சோதனை"

" வாங்கிட்டு வான்னு சொல்லீட்டேன், எதோ வீட்டுக்காரி கேட்டுட்டாளேன்னு வெலையும் பாக்காம ஒரு மண்ணும் பாக்காம, எங்க நீங்க வாங்கிட்டு வந்துட்டீங்களோன்னு பயந்து போய்தான் நாங்க சோதனை போட்டோம், நல்ல வேளை நீங்க வாங்கிட்டு வரலை"

அடிப்பாவிகளா, மனுஷன் எதெதுக்கெல்லாம் பயப்பட வேண்டியிருக்கு.

ஆனா மனசுக்குள்ள மாத்திரம், துபாய் விமானி வாழ்க, அந்த பனிமூட்டம் வாழ்கனு ஒரே கூச்சல் போங்க.

Tuesday, March 10, 2009

தங்கம் விலை ஏறிடுச்சா??

ஒருவழியா தென் ஆப்பிரிக்கா வாசம் முடிந்து தாய்நாடு திரும்பி விட்டேன். இரண்டரை வருட தென் ஆப்பிரிக்க வாழ்க்கை ஒரு மறக்க முடியாத சகாப்தம் தான். வெவ்வேறு நிற மனிதர்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெளிப்பார்வைக்கு ஒன்றாக சிரித்துப்பழகினாலும், உள்ளுக்குள் இன்னும் நிறவித்தியாசத்தை மனதுக்குள் பதுக்கிக்கொண்டிருக்கும் வெள்ளையர்களும் கருப்பினரும், பின் இவர்களுக்குள்ளாகவே இருக்கும் உட்பிரிவுகளும், எதிலும் சேராத கலப்பின மக்களும், இந்தியக் கலாச்சாரத்தை தொலைத்து விட்ட இந்தியர்களும், சிவன் கோவிலும், தைப்பூசத்துக்கு அலகு குத்தி, காவடி எடுத்து, "அரோகரா" என்ற ஒரே தமிழ் வார்த்தையை உச்சரிக்கும் முருக பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் என தென் ஆப்பிரிக்க வாழ்க்கை எனக்குக் க்ற்றுத் தந்த பாடம் நிறையவே உள்ளது. அதை ஒரு தனி தொடராக எழுதும் எண்ணம் உள்ளது. முடிந்தால் வரும் நாட்களில் பதிவிடுகிறேன்.

தென் ஆப்பிரிக்காவில் இருந்த கடைசி நாட்களில் வீட்டுக்குப் போகும் தேதி தெரிந்தவுடன், தொலை பேசியில் மகிழ்ச்சியோடு என் மறுபாதியிடம்:

" டிக்கட் புக் பண்ணியாச்சும்மா, நாளன்னைக்கு கிளம்பறேன்".

"உண்மையாத்தானா, நிஜம்மா சொல்றீங்களா இல்லை, வழக்கம் போல அந்த ஸ்டார் மார்கெல்லாம் போட்டுட்டு சொல்றீங்களா " (* கடைசி நேர மாறுதல்களுக்குட்பட்டது).

"இல்லை, இந்த தரம் கண்டிப்பா வந்துருவேன்"

"சரி, எதுக்கும் உங்க ஆபீஸ்ல விசாரிச்சு கன்ஃபர்ம் பண்ணிக்கறேன்" ( அடிப்பாவி, நான் சொல்றதை ஒரு தரமாவது நம்பமாட்டியா).

"சரி எந்த வழியா வர்ரீங்க" ( இவ்வளவு கரிசனமா, உங்கிட்டிருந்தா, எங்கேயோ பிசிறடிக்குதே)

"Durban - Johannesburg - Dubai - Chennai"

" துபாய்ல எத்தனை மணி நேரம் இருப்பீங்க?" (எனக்குள் ஒரு சந்தேக மணி, எங்கியோ ஒரு பாம் வெடிக்கப் போகுது)

" இரண்டரை மணி நேரம், ஆனா ஏர்போர்டை விட்டு நான் வெளிய போக மாட்டேன்" ( இப்படியாவது குண்டு வெடிக்காம போயிறாதா)

" நீங்க எங்கயும் போக வேண்டாம், நானும் உங்கள போக சொல்லலை, ஏர்போர்ட்டுக்குள்ளேயே அந்த கோல்ட் ஷாப் இருக்குதுல்ல, (அடிப்பாவி, எங்க வர்ரீன்னு தெரியுது), என்ன சத்தத்தையே காணோம், நான் சொல்றது காதுல விழுதா" ( எம்மண்டை மேல அடியா விழுது)

"ம், சொல்லு" (கேக்கறதுக்குத்தான வாழ்க்கைப்பட்டிருக்கோம்)

" இப்பவே நல்லா கேட்டுக்குங்க, அப்புறமா மொபைல் லைனுல எதோ டிஸ்டர்பன்ஸ், நீ சொன்னது சரியா காதுல விழலைன்னெல்லாம் கதை விடக் கூடாது" (சரி, இந்த தரம் புதுசா எதாவது முயற்சி பண்றேன், ஆண்டவா உனக்கு கருணையே இல்லியா, இந்த நேரத்துல அடுப்புல வெச்சிருக்கற பால பொங்கி வழிய விடமாட்டியா, இல்லை எம்பொண்ணு ரிமோட்டை எடுத்து டி.வி சத்தத்தை கூட்ட மாட்டாளா, அல்லது பக்கத்து வீட்டுக்காரங்க எதுவும் இரவல் வாங்க வரமாட்டாங்களா)

"அங்க பாப்பாவுக்குனு ஒரு 19 இன்ச் கோல்டு செயின் வாங்கிட்டு வாங்க". (ஆமா, 19 இன்ச் செயின் போட்டா நம்ம பாப்பாவுக்கு முழங்கால் அளவுக்கு வருமே, ஒருவேளை இந்த மூணு மாசத்துல தமிழ்நாட்டுல ஃபேஷன் மாறிடுச்சா, அல்லது மூணு மாசத்துக்குள்ள பாப்பாவுக்கு அதீத வளர்ச்சியா)

" என்ன நான் சொல்றது, சத்தத்தையே காணோம்"

"ம், சரி, சரி முடிஞ்சா பாக்கறேன்"

" அதெல்லாம் முடியும், கண்டிப்பா வாங்கிட்டு வாங்க"

என் போதாத காலம், எமிரேட்ஸ் விமானம் Johannesburg - ல் கிளம்பும் போதே முக்கால் மணி நேரம் தாமதம். துபாயில் இறங்க வந்தால் ஒரே பனி மூட்டம்னு சொல்லி இறங்கறதுக்கு முன்னாடி துபாய்க்கு மேலேயே ஒரு அரை மணி நேரம் பறந்துட்டு, அதுக்கு மன்னிப்பு கேட்டுட்டு, மெதுவா இறங்கி, எதோ துபாய் சிட்டிக்குள்ளேயே ஓட்டிட்டு போற மாதிரி ஏர்போர்ட்டின் மெயின் டெர்மினலை விட்டு எவ்வளவு தூரம் தள்ளி நிறுத்த முடியுமோ அவ்வளவு தூரம் தள்ளி நிறுத்தி விட்டு, கொஞ்சம் கூட வஞ்சகமில்லாம வாழ்த்துச்சொல்லி விமானி அனுப்பி வைத்தார். (பாவம் அவரை குத்தஞ்சொல்லி என்ன ஆகப்போகுது, அவருக்கு என்னோட தங்க(மணி) பிரச்சினை தெரிய வாய்பில்லை இல்லையா?)

அப்புறமா ஒரு பஸ்ஸில ஏத்தி துபாய் ஏர்போர்ட்டையே ஒரு சுத்து சுத்திக்காமிச்சு, ஒரு வழியா இறக்கி விட்டாங்க, அப்புறமா பெல்டை கழட்டு, ஷூவை கழட்டுனு ஒரு பாதுகாப்பு சோ(வே)தனையெல்லாம் முடிச்சு, எங்க இருக்கறம்னு பாத்தா, தங்க கடைக்கும் நம்ம நிற்கற இடத்துக்கும் எத்தனையோ கிலோமீட்டர் நடக்கணும் போல இருக்குது, சரி, ரொம்ப கிட்னிய கசக்கி யோசிச், சாரி, சாரி மூளைய கசக்கி யோசிச்சேன், நம்ம இறங்கும்போது பனி மூட்டம்னாங்களே, அப்படித்தான அடுத்ததா புறப்படுற விமானமும் தாமதமா கிளம்பும்னு யோசிச்சுட்டு அறிவிப்பு பலகையை பார்த்தா, சென்னைக்கு போற விமானம் மாத்திரம் சரியான சமயத்துக்கு கிளம்புதாம். அதுல வேற விமானம் புறப்படும் நேரத்துக்கு 30 நிமிடம் முன்கூட்டியே போகாவிடில் நீங்கள் இறக்கிவிடப்படுவீர்கள் என்ற பயமுறுத்தல் வேறு. நம்ம தாமதமா போய், அந்த ஸ்டார் குறி சமாச்சாரத்தை உண்மையாக்கணுமான்னு ஒரு தரம் யோசிச்சுட்டு, தங்கம் வாங்கும் யோசனையை தற்காலிகமாக தள்ளிப்போட்டுவிட்டு சென்னை விமான கவுண்டர் நோக்கி நடந்தேன். ஒரு வழியா விமானத்துல ஏறி அமர்ந்ததுக்கப்புறம்தான், ரொம்ப சாதாரணமா விமானி சொல்றாரு, பனி மூட்டம் காரணமாக Air Traffic Control - ல இருந்து விமானம் கிளம்ப அனுமதி தர தாமதமாகுதாம். (அய்யா, இந்த விமானம் தாமதம்னு வெளியில இருக்கும்போதே சொல்லீருந்தா, இந்த ஏழைக்கு உதவி பண்ணுன புண்ணியமாவது கிடைச்சிருக்குமேயா? ஏய்யா, இப்படி இயற்கையோட சேர்ந்துட்டு மனுஷர்களுமா ஒட்டுமொத்தமா எனக்கு எதிரா கிளம்பிருக்கீங்க)

வழக்கமா துபாய்ல விமானத்துல உக்கார்ந்து தூங்க ஆரம்பிச்சா, சென்னயில் தரைய்றங்கப்போறோம்கற அறிவிப்பை கேட்டுத்தான் கண்முழிப்பேன். ஆனா, இப்ப வீட்டுல என்ன சொல்லி சமாளிக்கலாம்ங்கற நெனப்புல இமைகள் மூட மறுத்தன. (ஆஹா, கவிதை மாதிரியே இருக்குல்ல). கொட்டக் கொட்ட முழிச்சுட்டே உக்கார்ந்து வந்தேன். கலக்கலா ஒரு ஐடியா மனசுல உதிச்சுது, ஆனா எல்லாத்தையும் ஒத்திகை பார்த்த இந்தப் பாவி இந்த ஐடியவோட பக்க விளைவுகளையும் கொஞ்சம் யோசிச்சிருக்கணும். விதி யாரைத்தான் விட்டது.

(தொடரும்)---------

Friday, March 6, 2009

எனக்கு ஒரே இதுவா இருக்குதுங்க!!!!

முதல்முதலா தமிழ்மண வலைதிரட்டிக்கு வந்தப்பவே எனக்கு ஒரு இதுவாதான் இருந்துச்சு. அப்புறம் நிறைய பதிவர்களோட இதுவையெல்லாம் படிச்சதுக்கப்புறம், எனக்குத் தோணுன இதுவே போயிடுச்சுன்னு வெச்சுக்கோங்களேன். நான் என்னுடைய கடை தனியா தொறக்கணும்ங்கற ஒரு இதுவே ரொம்ப நாளா தோணல. தமிழ்மணத்துல வந்து சும்மா எல்லா கடைக்கும் போய் ஒரு இது பண்றதோட நிறுத்திகிட்டிருந்தேன். ஆனா நிறைய கடைகளையெல்லாம் பார்த்ததுக்கப்புறம் எப்படியும் ஒரு இது ஆரம்பிச்சே ஆகணும்கற ஒரு இது வந்துருச்சு. இந்த இது வந்ததுக்கப்புறம் நெறய நாள் ராத்திரி பகலா மனசுல ஒரு இதுவாவே இருந்துச்சு, அப்புறம் முடிவா ஒரு இது எடுத்ததுக்கப்புறம், ஒரு நல்ல நாளா பார்த்து ஒரு இது ஆரம்பிச்சுட்டேன்.

ஆனா பாருங்க, ஆரம்பத்துல நம்ம இது பக்கம் ஒருத்தர் கூட வரலீங்க. கொஞ்சம் கொஞ்சமா ஒவ்வொருத்தர் கடையிலயும் உள்ள புகுந்து ஒரு இது பண்ணதுக்கப்புறம்தான், நம்ம கடைப்பக்கமா ஒரு சிலர் இது பண்ண ஆரம்பிச்சாங்க.

திடீர் திடீர்னு நம்ம ஆபீஸ்ல வேற நம்மள நாடு கடத்தீற்ராங்களா, நம்மனால ஒரு இதுவாவே எழுத முடியறதில்லீங்க. இருந்தாலும் அப்பப்போ நேரம் கிடைக்கும் போதெல்லாம் இது பண்ணலாம்னு முயற்சி பண்ணீட்டுதான் இருக்கேன்.

ஆனா இதெயெல்லாம் உங்ககிட்ட சொல்லும்போது எனக்கு ஒரு இதுவாத்தான் இருக்கு. ஆனா நீங்க தயவு செஞ்சு எந்த இதுவும் நெனச்சுக்காதீங்க. ஆனா உங்களோட இதையெல்லாம் பார்க்கும் போது நான் இன்னும் இது பண்ண வேண்டிய நிறைய இது இருக்குதுங்க, நான் கொஞ்சம் கொஞ்சமா என்னை இது பண்ணிக்கறேன். நீங்க வழக்கம் போல என்னோட இதுக்கு வந்திட்டும் போயிட்டும் இருங்க.

ரொம்ப டேங்சுங்க, உங்களுக்கு டேங்சு சொல்லும்போது கூட எனக்கு ஒரே இதுவாதான் இருக்கு, இருந்தாலும் ரொம்ப ரொம்ப டேங்சுங்க.

Thursday, March 5, 2009

நீ கர்ப்பமாயிருக்கிறாயா??

என் அலுவலக சக நண்பர் ஒருவர் சமீபத்தில் தொலை பேசியில் கார சாரமாக பேசிக்கொண்டிருந்தார். அவரது குரலின் சத்தம் அதிகரிக்கவே நாங்கள் பயந்து போய் விட்டோம். என்ன ஏது என்று விசாரிப்பதற்குள் அவர் எதிர் முனையிலிருந்த பெண்ணிடம் " நீ, கர்ப்பமாயிருக்கிறாயா, இல்லையா சொல்" என ஆங்கிலத்தில் வற்புறுத்திக் கொண்டிருந்தார்.

ஒரு வழியாக அவரை சாந்தப்படுத்தியவுடன் என்ன நடந்தது என விசாரித்தேன். ஒரு பெண்ணிடம் இப்படி பேசுவது நாகரிகமில்லையே என கேட்டேன். அவர் கூறிய பதிலில் அவர் எவ்வளவு நொந்து போயிருக்கிறார் என தெரிந்தது.

அவர் இரண்டு வருடத்துக்கு முன் ஹைதராபாத்திலுள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்திருக்கிறார். அங்கு ஒரு வீடு வாங்குவதற்காக ஒரு வங்கியில் வீட்டுக்கடன் வாங்கியிருக்கிறார். மாதாமாதம் அவருடைய சம்பளத்திலிருந்து ஒழுங்காகத்தான் தவணை கட்டிவந்திருக்கிறார். அவரது சேமிப்பு கணக்கு இருந்த அதே வங்கியில் கடனும் வாங்கியதால் சம்பளத்திலிருந்து நேரடியாக வீட்டுக்கடனுக்கு தவணைப்பணம் சென்று வந்திருக்கிறது. இவர் சென்னையில் உள்ள எங்கள் நிறுவனத்தில் சேர்ந்த பின்னும் ஒவ்வொரு மாதமும் சரியாக ஹைதராபத்தில் உள்ள வங்கிக் கிளைக்கு தவணைப்பணத்தை காசோலை மூலம் செலுத்தி வந்திருக்கிறார்.

ஆனால் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப்பிரிவில் நாங்கள் வேலை செய்வதால், திடீரென ஏதாவது மூலை முடுக்கில் இருக்கும் நாட்டுக்கெல்லாம் பயணம் செய்ய நேரிடுவதால் ஒவ்வொரு மாதமும் சரியாக தவணைப்பணத்தை ஹைதராபாத் வங்கிக் கிளையில் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க நண்பர் அந்த வங்கியின் சென்னை கிளையை அணுகி உள்ளார். என் வீட்டுக்கடன் கணக்கை சென்னையில் உள்ள வங்கிக் கிளைக்கு மாற்ற முடியுமா எனக் கேட்டிருக்கிறார். வங்கியின் வாடிக்கையாளர் சேவையில் இருந்த பெண்மணி, கண்டிப்பாக முடியும், இந்த சான்றுகளையெல்லாம் கொண்டு வாருங்கள் என்று சொல்லி ஒரு பெரிய பட்டியலை கொடுத்துள்ளார். அந்த பட்டியலை வாசித்தால் இவர், இவரது மனைவி, பெற்றோர், மற்றும் குழந்தைகளின் ஜாதகங்களைத்தவிர மற்ற எல்லா ஆவணங்களையும் கேட்டிருக்கிறார்கள். நண்பர் ஹைதராபாத்துக்கு சென்று அனைத்து ஆவணங்களையும் திரட்டி கொண்டு வந்து (நொந்து நூலாகி) வங்கியில் கொடுக்கும் பொழுது அங்கிருந்த பெண்மணியிடம் கணக்கை மாற்ற எவ்வளவு நாளாகும் என்று கேட்டிருக்கிறார். அவரும் புன்முறுவலுடன் 15 பணி நாட்கள் என்று சொல்லி அனுப்பி விட்டார்.

இந்த பதினைந்து நாட்களுக்குள் நண்பரை அல்ஜீரியா நாட்டுக்கு அனுப்பி விட்டார்கள். அங்கிருந்து இரண்டு மாதங்கள் கழித்து வந்து வங்கியில் சென்று விசாரித்தால், உங்களிடமிருந்து ஆவணங்களை வாங்கிய அந்தப் பெண் பிரசவ விடுப்பில் சென்றுவிட்டார், அவர் ஆவணங்களை என்ன செய்தார் என்று தெரியவில்லை, எதற்கும் இன்னொரு முறை ஆவணங்களை சமர்ப்பியுங்கள், சீக்கிரத்தில் மாற்றி விடுகிறோம் என்று பொறுப்பாக பதில் சொல்லியுள்ளார்கள். மறுபடியும் நொந்து நூலாகி அனைத்து கத்தை காகிதங்களுடன் போனால், இப்பொழுதும் அதே பதினைந்து பணி நாட்களுக்குள் என்ற பல்லவியை பாடியிருக்கிறார்கள். இந்த பதினைந்து நாட்களுக்குள் இவர் சீனா செல்ல வேண்டியாகிவிட்டது. அங்கிருந்து இரண்டு மாதங்களுக்குப்பிறகு வந்து கேட்டால், உங்களிடமிருந்து ஆவணங்களை வாங்கிய பெண் பிரசவ விடுப்பில் சென்று விட்டார், தற்பொழுது உங்கள் கோரிக்கை எந்தளவில் இருக்கிறது என்பதை நாளை சொல்கிறோம் என்று சொல்லி விட்டார்கள்.

இவரும் நொந்து போய் வந்து அமர்ந்திருக்கும் வேளையில் தான் ஒரு பெண் தொலைபேசியில் தேனொழுகும் குரலுடன் "சார், உங்களின் ஆவணங்கள் கிடைக்கவில்லை, நீங்கள் மறுபடியும் ஒரு முறை சான்றுகளை கொடுத்து விடுங்கள், நாங்கள் ஆவன செய்கிறோம்" . என்று சொல்லியிருக்கிறார். நண்பரின் முகத்தில் கொலைவெறி.

இனி அந்த தொலைபேசி உரையாடல்:

" ஹலோ, சார், காலை வணக்கம், நான் ................. உடன் தான் பேசுகிறேனா?"

" ஆமாம், சொல்லுங்கள்"

" சார், நான் .............. வங்கியிலிருந்து பேசுகிறேன். உங்கள் சான்றுகள் கிடைக்கவில்லை, நீங்கள் மறுபடியும் ஒருமுறை எல்லா நகல்களையும் சமர்ப்பித்து விடுங்கள், பதினைந்து பணி நாட்களுக்குள் உங்கள் கணக்கை ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு மாற்றி விடுகிறோம்"

" நீ கர்ப்பமாயிருக்கிறாயா??"

மறுமுனையில் அதிர்ச்சியுடன் " What??"

" நீ கர்ப்பமாயிருக்கிறாயா??"

" சார், அதற்கும் உங்கள் காகிதங்களுக்கும் என்ன சம்பந்தம்"??

" நிறைய தொடர்பிருக்கிறது, நீ கர்ப்பமாயிருக்கிறாயா?"

" சார் எனக்கு இன்னும் கல்யாணமாகவில்லை"

" பிரச்சனை உன் கல்யாணத்தைப் பற்றியல்ல, நீ கர்ப்பமாயிருக்கிறாயா??"

மறு முனையில் தொலைபேசி டொக்!!!!!!!!!!!!!

இப்பொழுது சொல்லுங்கள் என் நண்பர் கேட்டது சரிதானே!!!!!

Tuesday, March 3, 2009

வாருங்கள், விஷத்தின் வேரறுப்போம்!!!

இலங்கை கிரிக்கெட் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, தீவிர வாதிகள் அட்டகாசம்.

மும்பையின் ரயில் நிலையத்தில் அப்பாவி மக்கள் மீது தீவிரவாதிகளீன் கண்மூடித்தனமான துப்பாக்கி சூடு.

சகோதரர்களே, மேற்சொன்ன செய்திகளெல்லாம் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன?தீவிரவாதம் எனும் நச்சு, நமது சமூகத்தை இன, மொழி, மத பாகுபாடின்றி எல்லோரையும் பாதித்திருக்கிறது.அமர்நாத் யாத்திரைக்கு சென்ற இந்துக்களுக்கு தங்க இடம் மறுக்கப்பட்டு, காஷ்மீரில் ரத்த ஆறு ஓடியவுடன், ஊடகங்களில் ஒரு சாரார் அநியாயத்தைப் பாருங்கள், இந்திய நாட்டில் இந்துக்களுக்கே உரிமை மறுக்கப்படுகிறது, இதுதான் மதச் சார்பின்மையா? என குமுறித் தீர்த்தார்கள்.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப்பிறகு, குஜராத்தில் நடந்தேறிய கலவரங்களைக் கண்டு இன்னொரு சாரார், சிறு பான்மையினர் நசுக்கப்படுகிறார்கள், அரசாங்கம் தன் அனைத்து இயந்திரங்களையும் பயன் படுத்தி வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது என ஊடகங்களில் கூக்குரலிட்டார்கள்.

ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டவுடனும், அந்த வன்முறைத் தீ நாட்டின் பல பாகங்களுக்கும் பரவி கிறிஸ்தவர்களின் வீடுகள், தேவாலயங்கள் ஆகியவை சேதப்படுத்தப்பட்ட பொழுதும் மதச் சார்பின்மைக்கு முழு விலாசம் சொல்லுவதாக பாசாங்கு செய்யும் ஒரு சாரார் அதை சர்வதேச ஊடகங்களின் கவனம் திரும்பும் அளவுக்கு ஊதிப் பெரிதாக்கினார்கள்.

இந்த கூக்குரலும், குமுறலும், பஞ்சாயத்தும், பேச்சு வார்த்தையும் அந்த எரியும் தணல் புகையும் வரை மட்டுமே. புகை அடங்கியவுடன், ஊடகங்கள் வழக்கம் போல யாருக்கு சிண்டு முடிந்து விட்டு பரபரப்பை உண்டாக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்து விடுகின்றன. இதன் மூலம் தங்களது வர்த்தகத்தை எவ்வளவு பெருக்கலாம் என்ற கேவலமும் அருவருப்புமான கணக்குப் போடுவதிலேயே நேரம் செலவிடுகின்றனர்.

போலி மதச் சார்பின்மை வாதிகள் அடுத்த கலவரம் எப்பொழுது உண்டாகும், நாம் விவாதம் செய்து பேட்டி கொடுத்து, நாமும் குழம்பி, அடுத்தவரையும் குழப்பி, பிரச்சனையின் வீரியத்தை எவ்வளவு திசை திருப்ப முடியுமோ, அவ்வளவு திசை திருப்பலாம் என காத்து காத்து தவம் கிடக்கிறார்கள்.மத வாதிகளோ, அடுத்து எங்கிருந்து தொடங்கலாம் என யோசிக்க ஆரம்பித்து, அடுத்த பிரச்சனைக்கான தொடக்கம் கிடைப்பதற்கு அரும்பாடு படுகிறார்கள். யோசித்துப் பாருங்கள், ஒரு கவர்ச்சி நடிகை நீதிமன்றத்துக்கு வரும் போது என்ன உடை அணியலாம் அல்லது அணியக் கூடாது என்பது கூட மதவாத கோட்பாடுகளால் நிர்ணயிக்கப்பட வேண்டிய விஷயமாகிறது என்றால், மதம் எனும் பித்து நம்மை எவ்வளவாக பீடித்து இருக்கிறது என்று பாருங்கள்.

ஆனால் இருவர் மட்டுமே தங்களது கொள்கையில் பிடிவாதமாக மற்றும் நிலையாக முன்னறிச் செல்கிறார்கள்.ஒருவர் திருவாளர் தீவிரவாதி, மற்றொருவர் திருவாளர் பொது ஜனம்.தீவிரவாதி அடுத்த தாக்குதலுக்கு ஏற்ற இடம் எது என முதலில் வெடித்த குண்டுச் சத்தம் அடங்குவதற்கு முன்பே யோசிக்க ஆரம்பித்து விடுகிறார். நமது இல்லத்தரசிகள் சொல்வார்களே " இந்த தீபாவளிக்கு லட்டு சுடும் பொழுது, பூந்தி இன்னும் கொஞ்சம் சின்னதா இருந்திருந்தா நல்லாயிருந்திருக்குமோ? எதுக்கும் அடுத்த தீபாவளிக்கு கொஞ்சம் சின்ன கண்ணு வெச்ச அரிகரண்டி வாங்கி பூந்தி செஞ்சு பாக்கணும்" என்பது போல, "அடுத்த முறை குண்டு வைக்கும் பொழுது கொஞ்சம் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள இடமா பாத்து வைக்கணும், பய புள்ளைக ஒரு முன்னூறு பேராவது சாவாங்கன்னு பாத்தா, வெறும் நூறு பேருதான் செத்திருக்காங்க, அடுத்த தரம் நம்ம பசங்க கிட்டச் சொல்லி கொஞ்சம் பவர் கூடுதலான குண்டா செய்யச் சொல்லணும்" என்பது போன்ற எதிர்காலத்திட்டத்தில் மூழ்கிப் போகின்றனர்.

திருவாளர் பொதுஜனமோ, யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன, எங்க வீட்ல அடுப்பு எரிஞ்சுதா, எங்க புள்ளைங்க பள்ளிக்கூடம் போயிட்டு சரியா திரும்பி வந்தாங்களா, சின்னத்திரை சீரியல ஒரு நாள் கூட விடாம பார்த்தாச்சா, சரி நாள் முடிஞ்சது, படுத்து தூங்கு. நாளைய பாட்டை நாளைக்கு காலைல பார்த்துக்கலாம் என்ற கடமையற்ற சுய நலத்துடன் அவரும் முன்னேறிச் செல்கிறார்.

நேற்று வரை பூக்கள் பூத்த இந்த நந்த வனங்களில் முட்களை விதைத்தது யார்?
நேற்று வரை தென்றல் வீசிய எங்கள் தெருக்களில் இன்று சூறாவளிகள் ஏன்?
அணைக்க மட்டுமே விரிந்த கரங்கள் இன்று அரிவாள் தூக்க துடிப்பது ஏன்?

ஏனைனில் நேற்று வரை எங்கள் நந்த வனங்களில் முட்களைக் கண்டவுடன் அதை இருவராய் இணைந்து வேரறுத்தோம். ஆனால் இன்று, அந்த முட்கள் என் பாதத்தை பதம் பார்க்காதவரை அது பூவனால் என்ன, முள்ளானால் என்னவென்று சுயநல கூட்டிற்குள் சுருங்கி விட்டோம். சமூகத்தை பீடிக்கும் நச்சுக்கள் என் இல்லத்து கதவை தட்டாதவரை எனக்கு அதனால் ஒரு தொல்லையுமில்லை என்று சுயநலத்தோடு முடிவெடுத்து விட்டோம். ஆனால், அன்பரே, சமூகம் என்பதே நாம் தானே. நம் சமூகத்தை தன் கோரப்பிடிக்குள் வைத்திருக்கும் தீவிரவாதத்திற்கு குண்டு வெடித்து கொலை செய்யும் ஒருமுகம்தான் உள்ளது என பொய்யாய் கற்பனை செய்யாதீர்கள். அதன் முகத்திற்கு சினிமா, சின்னத்திரை, சுயநலம், அரசியல், மிதமிஞ்சிய பண ஆசை, ஜாதி, லஞ்சம், போலியான ஆன்மீகம், வக்கிரம் என பல முகங்கள் உண்டு. இத்தனை முகங்களில் ஏதாவது ஒன்றினை முகமூடியாய் அணிந்து கொண்டுதான் நானும் நீங்களும் போலியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.அடாடாடா, ஒரு பெண்துறவி குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு விட்டார் என்றவுடன், இணைய ஊடகத்திலும் சரி, தொலைக்காட்சி ஊடகத்திலும் சரி, பதிவர் வட்டத்திலும் சரி எத்தனை கொக்கரிப்புகள், ஆகா, இதற்காகத்தானே காத்திருந்தேன் , வாருங்கள் துரியோதனர்களே, துச்சாதனர்களே, இன்று இந்த திரௌபதி உங்களை துகிலுரிக்க தருணம் வாய்த்தது என எத்தனை ஏளனங்கள், எத்தனை தீர்க்கதரிசனங்கள், எனக்கு இது எல்லாமும் முன்னாலேயே தெரியும் என்றும், இந்துத்துவாவின் கோர முகத்தைப் பாரீர் என்றும், யார் தீவிர வாதிகள் என்ற விவாதங்களும் அப்பப்பா, வாசிக்க வாசிக்க மூச்சு முட்டுகிறது.சகோதரர்களே!

ஒருவருக்கு நேராய் ஒருவர் விரல் நீட்டிவிட்டு ஒதுங்கி விடுவதால் இந்த தீவிரவாதம் எனும் துர்குணம் நம்மை விட்டு நீங்கி விடுவதில்லை. நான் மாற்றி நீ, நீ மாற்றி நான் என்று போட்டி போட்டுக்கொண்டு குற்றம் சுமத்துவதால், இந்த தீவிரவாதம் எனும் பீடை நம் சமூகத்தை விட்டு விலகிப் போய் விடுவதில்லை. முதலில் இதற்கு மதச்சாயம் பூசுவதை நிறுத்துங்கள். தீவிர வாதத்தில் அது என்ன இந்து தீவிர வாதம், கிறிஸ்தவ தீவிரவாதம் மற்றும் முஸ்லிம் தீவிரவாதம்? எல்லா வாதங்களும் நம்மை அழிவுக்கு இட்டுச் செல்பவையே. சுட்டிக்காட்ட நீட்டிய விரல்களை சுருக்கி மடக்குங்கள்.

எந்தக் கடலை கடைந்தெடுத்து இந்த விஷத்திற்கு மருந்திடுவோம் என சிந்திப்போம், அனுப்புங்கள் ஆயிரம் அனுமார்களை, இந்த வியாதிக்கான மூலிகை தளைப்பது ஆயிரம் மலைகளிலானாலும் அப்படியே பெயர்த்துவர ஆணையிடுங்கள். இந்த விஷத்தின் வேரை நாமே அறுத்தெறிவோம், நம் குழந்தைகளாவது வருங்காலத்தில் அமுதம் மட்டுமே விளையும் பூமியில் வாழட்டும்.