Tuesday, March 30, 2010

கொலைகாரர்கள் உருவாவது எப்படி??????


கொசுத்தொல்லை தாங்க முடியாம இருந்த ஒருத்தரு எல்லா வழியிலயும் முயற்சி பண்ணி, மனுஷன் நிம்மதியா தூங்க ஒரு வழி கிடைக்குமான்னு இருந்த சமயத்துல, ஒரு விளம்பரத்தை பார்த்திருக்காரு. கொசுவை கொல்ல சுலப வழி,,,, 100 ரூபாய் அனுப்புங்கள். நாங்கள் உங்கள் வீட்டுக்கு உபகரணங்களையும் மற்றும் செய்முறை விளக்க புத்தகத்தையும் தபாலில் அனுப்புகிறோம். 100 ரூபாய் அனுப்பிவிட்டு, மனுஷன் வெயிட்டிங்ல இருந்திருக்காரு….., அந்த பார்சலும் வந்துச்சு. பிரிச்சுப் பார்த்தா, ஒரு ரெண்டங்குல கனத்துல மரக்கட்டை ஒண்ணு, ஒரு ஆணி, அப்புறம் ஒரு சுத்தியல். மனுஷனுக்கு ஒண்ணும் புரியாம செய்முறை விளக்கப் புத்தகம் எங்கடான்னு தேடுனா, ஒரு வெள்ளைப் பேப்பர்ல கையால் எழுதியிருந்துச்சாம்.

மரக் கட்டையை மேடுபள்ளமில்லாத சம தளத்தில் வைக்கவும்.


உங்களுக்கு வலது புறத்தில் சுத்தியலையும் இடது புறத்தில் ஆணியையும் வைக்கவும்.


ஒரு கொசுவை பிடித்து அந்த மரக் கட்டையின் மீது வைத்து விட்டு, பறந்து விடாமலிருக்க அதன் கால்களை உங்கள் வலது கை விரல்களால் அழுத்திக் கொள்ளவும்.


இப்பொழுது இடது கையால் ஆணியை எடுத்து சரியாக கொசுவின் தலைமீது வைத்து அழுத்திப் பிடித்துக் கொள்ளவும்.


இப்பொழுது மெதுவே உங்கள் வலது கையை கொசுவின் கால்களிலிருந்து விடுவித்து, சுத்தியலை எடுத்து, ஆணியின் மீது மெதுவே ஒரு தட்டு தட்டுங்கள்.


ஆணி கொசுவின் தலையில் ஆழமாக இறங்கி, கொசு இறந்து போயிருக்கும்.


இந்த உபகரணம் ஆபத்தான ரசாயன புகை எழுப்பும் மற்ற உபகரணங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதை இப்பொழுது புரிந்து கொண்டிருப்பீர்கள்.

இந்த உபகரணத்தை கண்டு பிடித்தவனை கணக்கு தீர்க்க ஒரு கொலைகாரன் ரெடி.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

சும்மா தட்டுல போட்டு வெச்சா அதை அப்பிடியே சாப்டறது தானா, எப்படி இருக்கு என்ன ஏதுன்னு ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா?

ம்.., நல்லாருக்கு.

இந்த ஒரு வார்த்தைதானா, இந்த கேரட் அல்வா கிண்டும்போது கொஞ்சம் நெய் ஊத்தலாம்னு நெனச்சு, நெய் டப்பாவைத் திறந்தா முழுசும் காலியாயிருக்கு, அப்பத்தான் புரிஞ்சுது இந்த மாசம் மளிகை லிஸ்ட்ல நெய் வாங்க சொல்லியிருந்தும் நீங்க மறந்துட்டு வந்தது, சரி அப்புறம் வாங்கிக்கலாம்னு நெனச்சு நானும் மறந்துட்டேன். உடனே அடுப்புல இருக்கற கேரட்டை எடுத்து கீழ வெச்சுட்டு, பக்கத்து கடையில போயி கொஞ்சமா நெய் வாங்கிட்டு வந்தேன். ஆனா அதுக்குள்ள சூடான சட்டியில இருந்ததுனால கேரட் கருகிடுச்சோன்னு ஒரு பயம் வந்துருச்சு. அப்பிடி ஏதும் இல்லதான?

ஓஹோ, அதான் கொஞ்சம் தீஞ்ச வாசனை வருதோ?

ஆமா, ஒருத்தி இவ்வளவு கஷ்டப்பட்டு நமக்காக இத செஞ்சு வெச்சுருக்காளே, பேசாம சாப்புடுவோம்னு எப்பவுமே தோணாதே, எதைச் செஞ்சாலும் அதுல இது நொட்டை, அது நொள்ளைன்னு சொல்லலைன்னா, அது வயித்துள்ளயே இறங்காதே, எல்லாம் நான் வாங்கிட்டு வந்த வரம் அப்பிடி, யாரைச்சொல்லி என்ன பண்றது… @#$%^&*!, @#$%%^^&&*

அந்த கல்யாண புரோக்கரை கொல்ல ஒரு கொலைகாரன் ரெடி……

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இப்படியா வழவழன்னு ஆறு பக்கத்துக்கு ஒரு ரிப்போர்ட் போடுவாங்க, “கண்டேன் சீதையை” ங்கற மாதிரி கச்சிதமா, சுருக்கி எழுதி கொண்டு வாப்பா,

ஆறு பக்க ரிப்போர்ட், ரெண்டு பக்கமானவுடன்,

“ஏம்ப்பா, வெச்சா குடுமி, செரச்சா மொட்டைன்னுதான் வேலை செய்வீங்களா, கொஞ்சம் சின்னது பண்ணுன்னா, உடனே எல்லாத்தயும் தூக்கீடுவயா, எதெது வேணுமோ அதெல்லாம் கண்டிப்பா இருக்கணும்பா, ரிப்போர்ட் எவ்வளவு பெருசானாலும் பரவால்ல, ஆரம்பத்துல இருந்து எல்லா டீடெய்லயும் எழுதி கொண்டுவா”

ரெண்டு பக்க ரிப்போர்ட் இப்பொழுது எட்டு பக்கமானவுடன்,

“எனக்கு இருக்கற டென்ஷன்ல, ஏம்ப்பா இப்படி படுத்தறீங்க, உனக்கு ரிப்போர்ட் எழுத சொல்லிக் குடுக்கறதுக்குள்ள எனக்கு நாக்கு தள்ளீரும்னு நெனைக்கறேன். ஆமா, நீ காலைல இருந்து எந்த ரிப்போர்டை கொண்டு வந்து காமிச்சுகிட்டு இருக்கே, நான் இதையவா சொன்னேன். மார்ச்சு மாசம் 30ம் தேதி ஆச்சு, இன்வாயஸ் டீடெய்ல் எல்லாம் இருக்குமே,,,, அதை எடுத்துட்டு………….!!!!!!!#######

இவனை பாஸ் ஆகும்படி புரமோஷன் கொடுத்தவனை கொலை பண்ண ஒரு கொலைகாரன் ரெடி…….



Wednesday, March 24, 2010

வா, என் கண்மணி மறுபடி போவோம்.




பேருந்தில் பயணம்,
ஒரே இருக்கை,
என் தோளில் நீ,
உன் மடியில் நான்
நெருக்கம் இனித்தது.

பேருந்து பயணம்,
நேர விரயம்,
தனிமையின் காவு,
பயணம் கசந்தது.

பைக்கில் பயணம்,
முதுகில் முட்டல்கள்,
காதருகே சுவாசங்கள்,
செல்ல சீண்டல்கள்,
வாழ்க்கை இனித்தது.

இனித்தது இயங்கியது,
இன்னொரு உயிராய்,
இருவரின் இடையில்,
அதே பைக்கில்
அங்குலத்தில் இடைவெளி.

பைக்கும் மாறியது.
காருக்குள் மூவர்.
அதே சாலை, அதே பூமரம்
அதே காலை, அதே சூரியன்
ஆனால் அங்குலம் அடிகளாகிவிட்டதடி.
நீ அருகிலிருந்தும் துருவ தூரத்தில்.

இந்த வசதிகள் நமக்குள்
வரப்புகள் வரைந்தது,
சொகுசுகள் எல்லாம்
சுகங்களின் விலையில்.
வீணைகள் வாங்க
விரலையா விற்பது?

வா, என் கண்மணி
மறுபடி போவோம்,
பைக்கில் பயணம்,
முதுகில் முட்டல்கள்,
காதருகே சுவாசங்கள்,
செல்ல சீண்டல்கள்,
இனிக்கும் வாழ்க்கை
இன்னொரு முறை வாழ்வோம்.

Wednesday, March 17, 2010

என்னத்தச் சொல்ல.....



இந்த மின்னஞ்சல் அனுப்பறது ரொம்ப சௌகரியமா இருந்தாலும், சுகங்கள் என்றுமே ஆபத்தானவைதானே. எங்கள் நட்பு வட்டாரத்தில், மகாபாரதத்தைப் பற்றி சுற்றில் விடப்பட்ட ஒரு மின்னஞ்சலை எனக்கு ஒரு நண்பர் ஃபார்வேர்டு (இதற்கு யாராவது சரியான தமிழ் வார்த்தை சொல்லுங்களேன்) செய்ய, அதை நான் மற்றவர்களுக்கு அனுப்ப, மற்றவர்கள் அவர்களுக்கு தெரிந்தவர்கள் என அனுப்ப, அந்த சங்கிலி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறதோ அல்லது முடிந்து விட்டதோ தெரியவில்லை. ஆனால், வில்லங்கமே இந்த மாதிரி தொடர் மின்னஞ்சல்களில்தான் ஆரம்பிக்கிறது. நமக்கு அனுப்பியவர்களின் முகவரியோடு கூட நாம் அதை மற்றவர்களுக்கு அனுப்பி விடுகிறோம். அது நமது நண்பர்கள் வட்டத்தை விட்டு, பல வட்டங்களில் போய், பல நாடுகளில் சுற்றும் பொழுது, எத்தனையோ முகவரிகள் இணைந்து விடுகிறது. இப்படி பல முகவரிகளை பார்த்த ஒரு வக்கிர மனிதன், அதிலிருக்கும் பெண்முகவரிகளை பொறுக்கிஎடுத்து, அவர்களுக்கு வக்கிர மெயில்களை அனுப்ப ஆரம்பித்தவுடன், அவர்களுக்கெல்லாம் அதிர்ச்சி. இந்த இம்சை தொடர்ந்து நடைபெறவே, ஒரு சில மென்பொருள் துறை பெண்கள், எங்கிருந்து இது ஆரம்பித்தது என துப்புத்துலக்கி அவனை பிடித்தும் விட்டார்கள். அதற்கு முன் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பும் அனைத்து ஆண்களையும் அவர்கள் சந்தேகப்பட்டது தான் மனதை நோகடித்து விட்டது. அவன் ஐரோப்பாவில் இருக்குமொரு தமிழன்.(வெட்கக் கேடு). பிறகு என்ன, பொது மன்னிப்பு, நான் இதை விளையாட்டுக்குத்தான் செய்தேன். இதை பெருந்தன்மையுடன் எடுத்துக் கொள்வார்கள் என நினைத்தேன்.(ங்கொய்யால கையில கிடைச்சா உனக்கு இருக்குடி) இவ்வளவு வீரியமடையும் என நான் நினைக்கவில்லை என்பது போன்ற வழக்கமான வழிதல்களுடன் அவன் நண்பர்கள் வட்டத்திற்கு வெளியே தூக்கி எறியப் பட்டிருக்கிறான். இப்பொழுதெல்லாம் பொது மின்னஞ்சல்களை முகவரிகளையெல்லாம் அழித்து விட்டு, BCC ல் முகவரி இட்டு அனுப்புகிறேன். ஆனால் இதையும் கண்டு பிடிக்க உத்திகள் இருக்கிறதோ என்னவோ, என்னைப் போன்ற ஞான சூன்யங்களுக்கு தெரியவில்லை. அவன் எங்கள் நட்பு வட்டத்தில் இல்லவே இல்லை. ஆனால் இந்த மின்னஞ்சல் என்பது எவ்வளவு ஒரு சக்தி வாய்ந்த தகவல் தொடர்பு சாதனமாயிருக்கிறதோ, அதிலும் நம்மை அறியாமலே நாம் ஒரு சில வக்கிர ஆசாமிகளின் வலைக்குள் இழுக்கப்படுகிறோம் என்பதை அறியும் போது என்னத்தைச் சொல்ல.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஒரு வழியாக நித்தியானந்தாக்கள் சகாப்தம் அமைதியாகி, மக்கள் வேறு பிரச்சனைகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள். இனி அடுத்த சாமியாரோ, பாஸ்டரோ அல்லது மௌலாவோ கிடைக்கும் வரை அமைதி காக்க வேண்டியதுதான். ஊடகங்களும் அலைந்து திரிந்து, எப்படியாவது அடுத்தவரை வெகு சீக்கிரத்தில் நம்முன் கொண்டு வந்து நிறுத்தி விடும். அப்புறமென்ன கொஞ்சம் அடித்துக்கொள்ளுவோம், அடுத்தவன் சுதந்திரம், அப்பள மந்திரம், ஊடக தந்திரம் என்று பலரும் குமுறுவோம். அமைதியாகிவிடுவோம். இந்த சாமியார்களுடன் தொடர்புகொண்ட நமக்குத்தெரிந்த நபர் இருப்பின் அவரை பார்த்து கொஞ்சமும் கூசாமல் விரல்களை நீட்டி, “சே, இவுரு ரொம்ப நல்லவர்னு நினைச்சேன். இவுருமா அப்படி, என்னால நம்பவே முடியல” ன்னு சொல்லி நமது நடுநிலைமையை நிலை நாட்டிக் கொள்வோம். என்னத்தச் சொல்ல…..

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

பகுஜன் சமாஜ் கட்சி என்ற ஒரு அரசியல் கட்சி, தனதி 25வது பிறந்த நாளை கொண்டாடியது. அதற்காக லக்னௌ நகரமே நீல வர்ணம் பூசிக் கொண்டு விழாக் கோலம் பூண்டது. தனது ஆடம்பரங்களுக்கு பெயர் போன இன்றைய உத்தர பிரதேச முதலமைச்சரான மாண்புமிகு (ஹூக்கும்), மாயாவதி அவர்களுக்கு, அவரது கட்சியின் ஏழைத் தொண்டர்கள் எல்லாம் தங்களது எளிய வருமானத்திலிருந்து ஒரு மாலையை உருவாக்கி பரிசளித்தார்கள். கர்நாடகாவிலிருந்து இதற்கெனவே சிறப்பாக அழைத்துச் செல்லப்பட்ட மாலை தயாரிப்பாளர்களின் மூன்று மாத கடின உழைப்பில் உருவானதுதான் இந்த சர்ச்சைக்குரிய மாலை. என்னன்னு கேக்கறீங்களா, பூவைக் கோத்து மாலை போட்ட எவன்யா கேக்கப்போறான், இவுங்க கோத்ததெல்லாம் 1000 ரூவா நோட்டு, மொத்தம் எத்தனை நோட்டு தெரியுமா, இருவத்தி ரெண்டரை கோடி ரூபாயாம். இந்த கட்சியின் ஏழைத்தொண்டர்கள் கொடுத்த பணத்திலிருந்து 200 கோடி ரூபாய் செலவு பண்ணி ஒரு விழா, அதுல கட்சியின் தலைவிக்கு இருவத்திரெண்டரை கோடியில ஒரு மாலை, யப்பா, தலைவருங்களா, எங்கியோ போயிட்டீங்க, என்னத்தச் சொல்ல….

Tuesday, March 2, 2010

சச்சினின் சாதனை விரைவில் முறியடிக்கப்படும்.

வரலாற்று ஆதாரங்கள் எத்தனையோ கொடுக்க முடியும். கிரிக்கெட் அங்கு தோன்றியது, இங்கு வளர்ந்தது, இப்படி நிமிர்ந்தது, அப்படி நடந்தது, அழகாய் அமர்ந்தது, ஜோதியாய் ஜொலிக்கிறது என வர்ணிக்கவும் முடியும். ஆனால், ஒரு சில வெள்ளைக்கார வாலிபர்களுக்கு இளவேனிற்காலத்தில் வெய்யிலின் கதகதப்பில் நாள் முழுதும் நின்று, தங்களது தோல் நிறத்தை மாற்றி மெருகேற்ற தேவைப்பட்ட பொழுது போக்கின் பரிணாம வளர்ச்சிதான் இந்த விளையாட்டு என்பதுதான் உண்மை.

இந்தியா கிரிக்கெட்டில் உலகக்கோப்பை வென்று வரும் வரை ஹாக்கியும், மல்யுத்தமும் இந்தியா முழுக்க பரவலாகவும், கால்பந்து என்பது மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும், மற்றும் போர்ச்சுகீசிய தடயம் இன்னும் மிச்சமிருக்கும் கோவா பிராந்தியத்திலும் விளையாடப் பட்டது என்றாலும், இந்த விளையாட்டுகள் கிரிக்கெட்டுக்கு முன்பாக தனது முக்கியத்துவத்தை இழந்து இன்று பரிதாபமாக நிற்கிறதே, அந்த நிலைக்கு முழுமையாக தள்ளப் படவில்லை.

ஆனால் குறுகிய காலத்திற்குள், இந்த எல்லா விளையாட்டுகளையும் பின்தள்ளி விட்டு, கிரிக்கெட் என்பது மாத்திரம் எப்படி இவ்வளவு தூரம் ஒவ்வொரு இந்தியனையும் ஆக்கிரமித்திருக்கிறது என்பது ஒரு விந்தையாக தோன்றினாலும், இந்த ஆளுமைக்குப் பின் இருக்கும் உலகளாவிய தில்லாலங்கடிகள் மலைக்க வைக்கிறது.

முக்கியமாக தொலைக்காட்சி என்னும் ஊடகம் இந்த விளையாட்டை வளர்த்தெடுத்து நிலை நிறுத்தியதில் முக்கிய பங்காற்றியது. கால்பந்து, ஹாக்கி, கைப்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கும், கிரிக்கெட்டுக்கும் அதன் இயல்பிலுள்ள ஒரு மிகப் பெரிய வித்தியாசமே கிரிக்கெட்டை மாத்திரம் தூக்கி நிறுத்த ஒரு மிகப் பெரிய காரணமாகி விட்டது.

கால்பந்தில் போட்டி ஆரம்பிக்கும் நொடி முதல் 45 நிமிடங்களுக்கு கேமராவை வேறு எங்கும் திருப்ப முடியாது, பந்து போகும் இடங்களையும், ஆட்டக் காரர்களின் கால்களின் லாவகத்தையும் மட்டுமே காட்ட வேண்டியிருக்கும். ஹாக்கியும், கைப்பந்தும், கூடைப் பந்தும் கூட இப்படித்தான், ஆட்டத்தின் துவக்கத்திலிருந்து இறுதி வரை விளையாட்டைத்தவிர வேறு எதையுமே உங்களால் தொலைக் காட்சியில் காட்ட முடியாது. ஆனால் கிரிக்கெட் அப்படியல்ல, ஒரு ஓவருக்கும் இன்னொரு ஓவருக்குமான இடைவெளியில் குறைந்த பட்சம் மூன்று விளம்பரங்களை காட்டலாம். தொலைக்காட்சியின் கணக்குப் படி பார்த்தீர்களானால், ஒவ்வொரு ஐந்து அல்லது ஆறு நிமிடத்திற்கொருமுறை, குறைந்த பட்சம் இரண்டு நிமிடங்கள் விளம்பரங்களுக்கான நேரம் கிடைக்கும். இதில் ஆட்டக்காரருக்கு அதிகம் வியர்த்து வடிந்தால், அவர் தண்ணீர் குடித்தால், அவரது பேண்ட் கிழிந்தால், அவருக்கு கால் வலித்தால், தும்மல் வந்தால், பந்து பழையதானால் என எத்தனையோ காரணங்களுக்காக முழு ஆட்டத்தையும் நிறுத்தி விட்டு, விளம்பரம் காண்பிக்க முடியும். அவர் நான்கு ரன்களோ, ஆறு ரன்னோ அடித்தால், பந்து பவுண்டரி லைனை தொட்டால் அந்த கோட்டில் கூட ஒரு விளம்பரம், விளம்பரத் தட்டிகள் வைத்து இந்த தட்டியின் மீது அடித்தால் இத்தனை ரூபாய் என சொல்ல முடியும். ஸ்டம்பில் படும் பந்தை காண்பித்தால் ஸ்டம்பிலும் விளம்பரம், பேட்ஸ்மேனின் பேட்டில், அவரது சட்டையில் என் திரும்பிய பக்கமெல்லாம் விளம்பரப்படுத்த முடியும். ஆனால் கால்பந்திலே 45 நிமிடங்களுக்கு விளையாட்டைத்தவிர தவிர வேறு எதுவும் காட்ட முடியாது என்பதாலேயே, எந்த தொலைக்காட்சியும் அந்த விளையாட்டுகளில் விருப்பம் கொள்வதில்லை.

மேலும் கால்பந்தாகட்டும், மற்ற விளையாட்டுகளாகட்டும், வெறும் ஒன்றரை அல்லது இரண்டு மணி நேரங்களில் முடிந்து விடும். அப்படியே விளம்பரம் காட்டப்பட்டாலும் இந்த இரண்டு மணி நேரத்தில் இரண்டு முறைதான் காட்ட முடியும். ஆனால் கிரிக்கெட்டில் அப்படியல்ல, ஒவ்வொரு 7 நிமிடத்திற்கொரு முறையும், தொடர்ந்து 8 லிருந்து 9 மணி நேரம் வரை உங்களால் விளம்பரம் செய்ய முடியும். அப்படியானால் இந்த விளம்பர வருமானத்தை கணக்கெடுத்துப் பாருங்கள். இந்த விளம்பர உத்தியை சரியாக பயன் படுத்திக் கொண்ட விளம்பரதாரர்கள், தொலைக்காட்சி நிறுவனத்தார்களை மொய்த்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். இதில் வரும் பிரம்மாண்ட வருமானத்தின் வண்ணக் கனவுகள், தொலைக்காட்சி நிறுவனங்களை கிரிக்கெட் விளையாட்டை மட்டும் காதலிக்க நிர்பந்தித்தது.

இவர்களும் இந்திய கிரிக்கெட் வாரியத்தை நோக்கி படையெடுக்க, வாரியம் ஒரு பணம் காய்க்கும் மரமாகிப் போனது. ஜக்மோகன் டால்மியாக்களும், சரத்பவாரும் வாரியத்தலைவர் பதவிக்கென குடுமிபிடி சண்டை போட காரணம், இந்த விளையாட்டில் விளம்பரங்கள் மூலமாக வரும் அளவிட முடியா பணம் மாத்திரமே. ஆக வாரியமும் வீரர்களை அதிக போட்டிகளில் விளையாட நிர்பந்திக்க ஆரம்பித்தது. அதிக போட்டிகள் – அதிக விளம்பரம் – வீரர்களுக்கு அதிக சம்பளம் – வாரியத்துக்கு அதிக பணம் என எனக்கு உனக்கு என அனைவரும் அள்ள ஆரம்பித்தனர். இன்னமும் அள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த களேபரத்தில், ஐரோப்பிய கால்பந்தாட்ட வீரர்களுக்கு சற்றும் குறைவில்லாத திறமை கொண்டிருந்த கேரள போலீஸ்காரரான விஜயனாகட்டும், கண்ணிமைக்கும் நேரத்தில் பந்தை பல மட்டைகளுக்கு நடுவிலிருந்து அன்னப் பறவை பாலைப் பிரித்தெடுக்கும் லாவகத்துடன் பிரித்தெடுத்து, கோல் அடிக்கும் தன்ராஜ் பிள்ளையாகட்டும், புள்ளிமானாய் துள்ளி ஓடி ஹாக்கியில் முன் வரிசை ஆட்டக்காரராக இருந்த பர்கத் சிங் ஆகட்டும் இந்த திருவிழா கூட்டத்தில் சந்தடியில்லாமல் காணாமல் போய்விட்டார்கள். ஏனெனில் அவர்கள் விளையாடிய விளையாட்டுகளை நேசிக்க விளம்பரதாரர்கள் யாருமில்லை.

இப்படி கிரிக்கெட் தன் இயல்பிலேயே விளம்பரங்களுக்கென பிறந்த விளையாட்டாகிப் போனதால், அதில் ஆடும் வீரர்களும் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தார்கள். இங்கிலாந்தில் ஒரு அரங்கத்தில் அமர்ந்து ஒரு போட்டியை ரசித்துக் கொண்டிருந்த சர் சோபர்ஸ் தனது கால கிரிக்கெட் விளையாட்டை நினைவு கூறும் பொழுது இப்படியாக கூறினார். “ எங்களுக்கெல்லாம் கிரிக்கெட்டில் அதிக பட்சமாக கிடைத்த பரிசு ஒரு சைக்கிள்தான்” என்றார். ஆனால், இன்றைய வீரர்களை விலையுயர்ந்த ஆடம்பர கார், மற்றும் லட்சக்கணக்கான ரூபாய்களை பரிசளித்து களத்தில் நிறுத்தி வைக்க வேண்டியுள்ளது. இவர்கள் இல்லையேல் கிரிக்கெட் உலகமும் இல்லை, விளம்பரங்களும் இல்லை என ஆகிவிடும்.

வரும் காலத்தில் விளம்பரங்களுக்கு வளைந்து கொடுக்கும் வண்ணமாக இந்த பணம் காய்க்கும் விளையாட்டுக்கு புதிய பரிமாணங்கள் கொடுக்கப்படும். இப்பொழுது T 20 என்ற புதிய வடிவம் எல்லோரையும் கவர்ந்து வருகிறது. இனி வரும் காலங்களில் இதையும் சுருக்கியோ, நீட்டியோ வேறொரு வடிவம் தரப்படலாம். இப்பொழுதே இந்தியாவில் நடக்கிற ஹாக்கி உலகக் கோப்பையாகட்டும், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளாகட்டும், இந்தியாவுக்கு சர்வதேச விளையாட்டு அரங்கில் ஒரு முக்கியத்துவம் தர சகல தகுதிகளையும் கொண்ட இந்த போட்டிகளுக்கான விளம்பரங்கள், பண பலம் படைத்த IPL 20 போட்டிகளின் விளம்பரங்களுக்கு முன் நிற்க முடியாமல் தவிடு பொடியாகி விட்டது.

இப்படிப்பட்ட பண வலைகள் விரிக்கப் படும்வரை, கிரிக்கெட் என்னும் விளையாட்டு பணம் தரும் இயந்திரமாக இருக்கும்வரை சச்சினைப் போன்றவர்கள் தினம் தினம் புதிய சாதனைகளை நிகழ்த்த நிர்பந்திக்கப் படுவார்கள். பண பலத்தால் நிறைய வாய்ப்புகள் அவர்களுக்கு அளிக்கப்படும். அவர்கள் நிகழ்த்தும் சாதனைகளை முறியடிக்க இன்னும் நிறைய சச்சின்கள் பிறப்பார்கள்.

சாதனை படைத்த சச்சினுக்கு வாழ்த்துக்கள். அவரது தனிப்பட்ட விளையாட்டுத்திறமை பாராட்டப்பட வேண்டிய ஒன்று என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது. ஆனால் இந்த சாதனையும் சீக்கிரத்தில் முறியடிக்கப்படும். விளையாட்டுத் திறமை அந்த சாதனையை முன்னெடுத்துச் செல்வதை விட, சாதனையை வைத்து பணம் பண்ணும் வித்தைகள் தான் சாதனையாளர்களை உருவாக்கும்.