Thursday, July 29, 2010

தங்க மணிக்கு மறுபடியும் பத்து கேள்விகள்

எப்ப உங்க ஊருக்கு வந்தாலும், தூங்கிகிட்டிருக்கற மனுஷனை எழுப்பி உக்காரவெச்சு, அப்புறம் மாப்ள வட நாட்ல இருக்கீகளோ, அங்கெல்லாம் வறவறன்னு சப்பாத்திதான் சாப்புடுவாக என்ன? அவுகெல்லாம் ஹிந்திதான் பேசுவாக என்னன்னு அறிவு பூர்வமான கேள்வி கேட்டு மனுஷனுக்கு காதுல கழுத்துலயெல்லாம் ரத்தம் வந்தாலும் விடாம குறைந்தது நாலு மணி நேரம் அறுக்கறதுக்குன்னே ஒரு நாலு பெருசுகளை காசு (காபி) குடுத்து செட்டப் பண்ணி வெச்சிருக்கீங்களே, இது ஏன்???

கரெக்டா நான் உங்க வீட்டுக்கு வந்தவுடனே, உங்க அக்கா பையனுக்கு ட்ரிகிணாமெட்ரில, அல்ஜீப்ராவுல எல்லாம் உலகத்துலயே யாருக்கும் வராத சந்தேகம் வருதே, அது ஏன்?? அப்பிடி வரலைன்னா கூட சித்தப்பா கிட்ட கேட்டு எல்லாத்தையும் படிச்சுக்கோன்னு அவனை உசுப்பி விடறீங்களே, நான் கணக்குல புலின்னு என்னைக்காச்சும் சொன்னனா? ஏன் இந்த வன்முறை???

நீங்க பிரியாணி செஞ்சா சூப்பரா இருக்குதும்மான்னு மனசார பாராட்டிட்டு நாங்க சாப்படறமே, அதே மாதிரி நாங்க சிக்கன் செஞ்சா அருமையா இருக்குன்னு மனசு சொன்னாலும் அதை வெளிக்காட்டிக்காம, சட்டில ஒட்டிகிட்டு இருக்கற கடைசி துளியையும் வழிச்சு சாப்பிட்டுட்டு, மல்லித்தூள் ஜாஸ்தி, மஞ்சள் தூள் கம்மின்னு ஒரு இருபது குறை சொல்றீங்களே, உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா???

ஸ்கூல்ல பேரண்ட்ஸ் டே க்கு போகும் போது வீட்டிலிருந்து ஒண்ணா கார்ல வர்ற நீங்க, பாப்பாவோட மிஸ் கிட்ட போகும் போது மாத்திரம் நீ கார்லயே இருன்னு என்னை விட்டுட்டு தனியா போறீங்களே, எம்பொண்ணு எப்பிடி படிக்கறான்னு நான் மிஸ்ஸூகிட்ட டீடெய்லா கேட்டு தெரிஞ்சுக்க வேண்டாமா???

உங்க ஆபீஸ் பார்ட்டிக்கு எங்களை கூட்டிட்டு போகும் போது, ஷேவ் பண்ணு, முடி வெட்டு, வெள்ளை சட்டைய போடு, ஏன் இப்பிடி சர்க்கஸ் கோமாளியாட்டம் சட்டைய பேண்ட்ல துணிச்சு வெச்சிருக்க, ஒழுக்கமா இன் பண்ணுன்னு ஆயிரம் கண்டிஷன் போடறீங்களே, அதே எங்க ஆபீஸ் பார்டிக்கு போகும் போது மட்டும் இந்திய தேசியக் கொடியாட்டம் சம்பந்த மில்லாத கலர்லயெல்லாம் சுடிதார், துப்பட்டானெல்லாம் போட்டு ஏன் எங்க மானத்த வாங்கறீங்க????

உங்க பார்ட்டில என்னமோ நீங்க இல்லைன்னா இந்த உலகமே சுத்தறத நிறுத்திரும்கற மாதிரி, கடைசி கிளாஸை கழுவி வைக்கற வரைக்கும் இருந்து, (உங்களுக்கும் அதுக்கும் சம்பந்த மில்லா விட்டாலும் கூட, என்னை வெறுப்பேத்தறதுக்காகவே), பார்ட்டி ஆர்கனைஸர் கிட்ட போய் எல்லாம் ஓ கே தான, நான் போகட்டுமான்னு கேட்டு, அவசியமே இல்லாம சீன் போடற நீங்க, என் ஆபீஸ் பார்ட்டில நான் ஆர்கனைஸரா இருந்தாலும், பார்ட்டி ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே தலைவலிக்குது சீக்கிரம் போலாம்னு வெறுப்பேத்தறீங்களே அது ஏன்???

உங்க சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு போனா, இவுரு இந்த ஆர்ட் வொர்கெல்லாம் நல்லா பண்ணுவாருங்கன்னு சொல்லி கோத்துவுட்டுட்டு, அந்த மணவறை ஜோடிக்கற ஆளுக்கு (அவுரு எதோ தோட்டா தரணி ரேஞ்சுக்கு அலப்பறை உடறாரு) எடுபிடியா என்னை ராத்திரி முழுக்க நிக்க வெச்சீங்களே, ஏன் இந்தக் கொலை வெறி?

நீங்க உடைச்சா மண்பானை, நாங்க உடைச்சா அது தங்கப் பானையா? போனமாசம் நீங்க உடைச்சது 7000 ரூபாய் மீன் தொட்டி, போன வாரம் நான் உடைச்சது, 25 ரூபாய் கண்ணாடி கிளாஸ். ஆனா கிளாஸ் உடைச்சதுக்கு மட்டும் வீடே உடைஞ்ச மாதிரி எஃபக்ட் குடுத்தீங்களே ஏன், இல்லை ஏன்னு கேக்கறேன்???

நாங்க கடல்லயே போய் மீன் புடிச்சுட்டு வந்தாலும், உங்களுக்கு மாத்திரம் அது ஏன் பழைய மீனாவே தெரியுது? நான் செடில பறிச்சுட்டு வந்த வெண்டைக்காய் கூட முத்துனதாவே தெரியற சோகக் கதையை எங்க போய் சொல்ல???

நாங்க ஆபீஸ்ல இருந்து போன் பண்ணா அரை மணி நேரம் கழிச்சு எடுக்கற நீங்க, உங்க ஃபிரண்ட் பேசுனா மட்டும் உடனே எடுக்கறீங்களே அது ஏன்?


Friday, July 9, 2010

பெண்ணியம் பேசுவோம் வாருங்கள்.



சகோதரி யமுனா ராகவன் எழுதிய இந்தப் பதிவை வாசித்துப் பார்த்தேன். ஒரு பெண்ணின் பிரச்சனைகளை மிக மிக துல்லியமாகவும் எதார்த்தம் நிறைந்த வார்த்தைகளாலும் எழுத்தில் வடித்து விட்டார்.

நேற்றைய நாளை தொலைத்து விட்டு, வரும் நாளைய நாளின் துன்பங்களை எதிர் நோக்கி நொந்து பயந்து, இதோ இப்பொழுது கடக்கும் இந்த விநாடியிலும் தான் சந்திக்கும் ஒவ்வொரு ஆணாலும் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் பெண்ணின் இழிநிலையை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் அற்புத காவியமிது. தன் வீட்டினுள் எந்தவொரு நொடிப் பொழுதிலும் அன்பு என்பதையே இம்மியளவும் அனுபவிக்காமல், சூரியன் உதித்து, சூரியன் மறையும் வரை, ஏன் சூரியன் மறைந்த பின்பும் கதறக் கதற சித்திரவதைப் படுத்தப் படுவதே வாழ்கை நியதியாகிவிட்ட நடுத்தர வர்க்க பெண் தெய்வங்களின் ஒட்டு மொத்த மனக் குமுறலையும் ஒரே மூச்சில் குமுறியிருக்கிறார்.

வாழ்த்துக்கள் சகோதரி.

ஒரு மானுட உயிருக்கான வாழ்க்கை எனும் பந்தயத்தில் முதலிடம் பெறுவது மட்டுமல்ல, முழு ஓட்டத்தையும் ஓடி முடிப்பதே ஒரு மாபெரும் சாதனைதான். இதில் பாலின பேதமின்றி எந்த ஒரு உயிரினத்திற்கும் தன்னம்பிக்கை என்ற ஒரு சக்தி இருந்தால் மாத்திரமே அது சாத்தியம். தடைகளை எளிதாய் தாண்டி முதலிடம் எனும் சிறப்பு பெற தைரியம்/துணிவு உள்ளிட்ட பல சிறப்புகளினால் நெஞ்சு நிறைந்த உயிரினம் மட்டுமே உயர்வை அடைய முடியும்.

ஆனால், எனக்கு முன்னே பாழ்நிலம் இருந்தது, என் பாதையெங்கும் முட்கள் முளைத்திருக்கிறது, என் ஓட்டப் பாதையில் சிகரங்களை செதுக்கி வைத்து விட்டார்கள் என பாசாங்குத் தனமான சாக்குப் போக்கு சொல்வோமெனில் நாமும் பத்தோடு பதினொன்றாய் தடம் மாறி ஓடிக்கொண்டிருக்கலாம்.

உங்கள் எண்ணங்களின் வெளிப்பாடுகளிலிருந்து நீங்கள் முன்வைக்கும் குற்றச் சாட்டுகள் :

உலகில் பிறந்த ஒவ்வொரு ஆண்மகனும் பெண்ணினத்தை மனதளவில் சிறுமைப் படுத்த கிடைக்கும் எந்தவொரு தருணத்தையும் தவறவிடாது உபயோகிக்கிறான்.
மூலைக் கடையில் சிகரெட் பிடித்து , பெண்ணைக் கண்டதும் முகத்தில் ஊதுகிறான்.
காலையில் எழுந்தவுடன் தன் மனைவியை தேடிப் பிடித்து அவளை வசவுகளால் கதறக் கதற குதறிவிட்டு, அவள் படும் வேதனைகளை பார்த்து உள்ளூர மகிழ்கிறான்.
பெண்கள் பயணிக்கும் ஒவ்வொரு பஸ்ஸிலும் இப்படி காலையில் சாட்டையால் அடிக்கப்பட்ட பெண்ணை தேடி வந்து அவர்களின் உடலில் தன் ஆணுறுப்பை உரசி மகிழவென்றே பயணிக்கிறான். அல்லது அப்படி உரசும் பொழுது அந்த பெண் படும் வேதனைகளை கண்டு மனம் மகிழ்கிறான்.
உங்கள் மொழியில் சொல்வதென்றால், பஸ்ஸிலிருந்து இறங்கியவுடன் “மாம்ஸ் இன்னைக்கு பஸ்ஸூல ஒரு Aunty செமயா Company குடுத்தாடா” என சொல்லி சந்தோஷமடைகிறான்.
நீங்கள் வெண்டைக்காயோ தக்காளியோ வாங்குவதில் முனைப்பாய் இருக்க, உங்களின் இடுப்பையோ, பிட்டத்தையோ அல்லது சேலைத் தலைப்பு விலகியிருக்கும் மார்பையோ பார்ப்பதில் இன்பம் கொள்கிறான்.
அலுவலகத்தில் நீங்கள் உங்கள் சுய திறமையினால் செய்யும் எந்தவொரு வேலையின் வெற்றியையும், நீங்கள் உடல்காட்டி ஜெயித்தீர்கள் என சொல்லியே உங்களை காயப் படுத்துகிறான்.
நீங்கள் சந்தித்த 90 % ஆண்கள் உங்கள் மார்பை பார்த்தே பேசியிருக்கிறார்கள். மீதி பத்து சதவீதம் பேர் பார்க்கவில்லை என நீங்கள் சொல்லவில்லை, ஆனால், அவர்கள் பார்த்ததை நீங்கள் பார்க்கவில்லை என சொல்கிறீர்கள், அப்படியானால் நீங்கள் சந்தித்த அல்லது உங்களை பார்த்த ஒரு ஆண்மகன் கூட யோக்கியன் இல்லை, எல்லாரும் உங்கள் ஆடையை அவிழ்த்து அம்மணமாக்கி, உங்கள் நிர்வாணத்தை அணு அணுவாய் ரசிக்கும் காமுக வக்கிரர்களாகவே இருக்கிறார்கள்.

புள்ளி விவரங்கள் தருகிறீர்கள், எத்தனை பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள் என்று. வாருங்கள், இன்னொரு புள்ளி விவரம் பார்ப்போம், இன்றைய தேதியில் தொடுக்கப்படும் பாதுகாப்பு கோரும் வழக்குகளில் 62 % வழக்குகள் ஆண்களால் தொடுக்கப்படுகிறது. (வாசியுங்கள்). இந்த வழக்குகள் எதற்காக தொடுக்கப்படுகிறது என்றால் தன் மனைவியிடமிருந்து தனக்கு பாதுகாப்பு கோரி தொடுக்கப்படுகிறது. பெண்களால் தொடுக்கப்படும் 97% வரதட்சணை வழக்குகள் பொய்யானவை என தினமும் ஒவ்வொரு நீதிமன்றத்தாலும் கண்டிக்கப்படுகிறது. இப்பொழுது சொல்லுங்கள், அல்லது உங்கள் மொழியிலே சொன்னால் எப்பொழுதும் உங்களை காமத் தினவெடுத்துப் பார்க்கும் உங்களைச் சுற்றியுள்ள ஆண்களில் 62 பேர் பெண்களைப் பற்றிய பயத்திலேயே வாழ்கிறார்கள். 97 பேர் பொய் வழக்குகளினால் தங்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டு, செய்யாத குற்றத்திற்காய் போலீசாலும் சமுதாயத்தாலும் அவமானப் படுத்தப் பட்டு, சிறுகி குறுகி, நடைபிணங்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்பொழுது நான் சொல்லட்டுமா, நான் சந்திக்கும் பெண்கள் அனைவருமே, பெண் எனும் போர்வையில் ஒழிந்துகொண்டு என்னை எப்படி எல்லாம் சித்திரவதைப் படுத்தலாம் என 24 மணி நேரம் கணக்குப் போடும் மனநிலை பிறழ்ந்த சைக்கோத் தனமானவர்கள் என்று.

அல்ல, அப்படியல்ல தோழி.

Physical Abuse and Verbal Abuse என தினமும் ஒவ்வொரு பெண்ணும் தன் சொந்தக் குடும்பத்திற்குள் கொடுமைப் படுத்தப் படுகிறாள் என குமுறி யிருக்கிறீர்கள். எனது பார்வையில் இந்த சுதந்திரத்திற்கு மாத்திரம் குடும்பம் எனும் அமைப்பில் ஒரு எல்லையே இருக்க முடியாது. (May be it sounds absurd, but practically this is the truth ). வாதத்திற்காக பல எதிர்மறை கருத்துகளை சொல்லி இதுதான் எல்லை என நீங்கள் வண்ணமும் தீட்டி விடலாம், ஆனால் எல்லைகள் வரைந்தபின் குடும்பம் என்ற ஒன்றை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

மனைவி மஞ்சள் கலர் புடவை கட்டியிருக்கும்பொழுது, கணவன் “அந்த ரோஸ் கலர் புடவைல தாம்மா நீ அம்சமா இருக்க” என சொன்னால், இதை உங்கள் கோணத்திலிருந்து பார்த்தால், ஆண் தன் விருப்பத்தை பெண்மீது திணிக்கிறான், அவளது உடை விஷயத்தில் கூட தனது ஆதிக்கத்தை நிலைப்படுத்துகிறான். ஆனால் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டுவது வெளித் தெரியாமலிருக்க மென்மையான வார்த்தைகளில் அன்பொழுக பேசி, ஒன்றும் அறியா அப்பாவி பெண் மனதை தன் வசப் படுத்துகிறான். உண்மைதானே சகோதரி, இதுதானே உங்கள் வாதம். இங்கு தானே எல்லை தேவைப் படுகிறது என்று உரக்கச் சொல்கிறீர்கள்?

இப்படியும் யோசித்துப் பாருங்கள், தன் உயிரில் பாதியான தன் மனைவியிடம் தன் விருப்பத்தை வெளிப்படுத்துவதும் கூட ஆதிக்க வெளிப்பாடா? விருப்பம் எனபது உடல், உள்ளம், உணர்வு இன்னும் எதையெல்லாம் சொல்ல முடியுமோ, அத்தனைமீதும் ஆண் தன் விருப்பத்தை வெளிப்படுத்தினால், அதுவும் Abuse தானா?

ஒவ்வொரு கணவனும் தன் துணையின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு தினமும் அவளை வன்புணர்கிறான். அந்த கலவி வேளையிலும் கூட பெண்ணின் ஒழுக்கத்தை கேலி செய்தே புணர்கிறான் என்கிறீர்களே, இது ஒரு அதீத கற்பனையாக தெரியவில்லையா தோழி? அல்லது எதாவது குற்றம் சொல்ல வேண்டுமே என்பதற்காக புனைந்து தெளிக்கிறீர்களா? தன் உடல் தேவையை தீர்த்துக் கொள்ள கணவன் யாரிடம் செல்வான்? அல்லது பெண்களுக்கு உடல் தேவையே என்றும் இருந்ததில்லையா?

மற்றபடி நீங்கள் சொல்லும் Financial Abuse மற்றும் Alpha Male ஐப் பற்றி என்னால் யோசிக்கவும் முடியவில்லை. ஏனெனில் உங்கள் உணர்வுகளின் வெளிப்பாடு என் கற்பனை எல்லைக்கு அப்பால் இருக்கிறது. இந்த தலைப்பில் நீங்கள் சொன்ன கருத்துக்கள் எல்லாம் என்னவோ ஒவ்வொரு ஆணும் தனது மனைவியின் உடலை விற்று சம்பாதிக்கும் மாமா பயல்கள் என்கிறீர்களோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. ஆமாம், வேசி உடலை விற்க கட்டாயப் படுத்தப் படுகிறாள், நீங்கள் சொல்லும் ஒவ்வொரு பெண்ணும் தன் திறமைகளை விற்க கணவனால் கட்டாயப் படுத்தப் படுகிறாள். பெரிதான வித்தியாசம் ஒன்றும் இல்லை. நான் ஏன் நான் மட்டும், கண்டிப்பாக நீங்களும் கூடத்தான் இத்தகைய ஒரு சமூகத்தில் வாழ்வதில்லையாதலால் என்னால் இதை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

வருகிற கோபத்தில், யாரையாவது கொல்ல வேண்டும் என்ற ஆத்திரத்தில், கண்ணை மூடிக் கொண்டு அம்பெய்கிறீர்கள் தோழி, உங்கள் மார்பை மட்டுமே பார்த்துப் பேசிய 100 சதவீத ஆண்களில் உங்கள் ரத்த உறவுகள் யாரும் இல்லையா? அல்லது அவர்களையும் சேர்த்துத்தான் சாட்டையால் அடிக்கிறீர்களா? உங்கள் நந்த வனத்தில் புகுந்த ஒரு சில ஓநாய்களுக்காக, ஒட்டு மொத்த விலங்குகளையும் பட்டயக் கருக்கில் வெட்டிக் கொல்லத் துணியாதீர்கள். அப்படிச் செய்தால் உங்கள் நந்தவனம் புள்ளிமான்களின் பிணக்காடாகி விடும்.

பஸ்ஸில் உங்களை உரசி நிறகும் மிருகப் பயலை ஏன் சகித்துக் கொள்கிறீர்கள்? அவன் தாடையைப் பெயர்த்து விடுங்கள். அலுவலகத்தில் புறம் பேசும் கையாலாகாத ஆண்சிங்கங்களுக்கு தக்க பதிலடி கொடுங்கள்.

பெண்மை என்பது வெறும் மென்மை மாத்திரமல்ல, அவசியப்பட்டால் அடித்து நொறுக்கும் வன்மையும் கூடத்தான் என புரிய வையுங்கள்.
பெண் என்பவள் சிரித்து நிற்பது மட்டுமல்ல, சிலிர்த்து சீறவும் வேண்டும் தோழி.

இதை விடுத்து கண்ணில் பட்ட ஆண்களுக்கெல்லாம் மிருக வேஷம் கட்டாதீர்கள். அப்படியானால் மிருகங்களுக்கு மத்தியில் வாழ்வது கிடக்கட்டும், மூச்சு விடுவதே சிரமமாகி விடும்.

பகிர்தலும், புரிதலும் கொண்டு உங்களை போலவே என்னையும் நடத்த வேண்டும் என்பதே நான் இறுதியில் முன்வைக்கும் ஒன்று என்று சொல்லுகிறீர்கள்

இங்கு நீங்கள் உன்னை முழுதும் பகிர்ந்து கொள், என்னை முழுதும் புரிந்து கொள் என சொல்லியிருந்தால் மிகவும் சந்தோஷப் பட்டிருப்பேன். ஆனால், இங்கு பகிர்தலுக்கும் புரிதலுக்கும் விகித அளவுகளை முன்வைக்கிறீர்களே, இது எவ்வகையில் சாத்தியம்?

எனக்கான சுதந்திரத்தை நீங்கள் கொடுக்கவேண்டாம். என்னிடம் இருந்து பிடுங்காது இருந்தால் போதும் என்கிறீர்கள்.

இந்தப் புரிதலில்தான் வாழ்வின் மொத்த சூட்சுமமும் அடங்கியிருக்கிறது. எனது சுதந்திரம் என எல்லை வகுக்காதீர்கள். நமது சுதந்திரம் என உரத்துச் சொல்லுங்கள். எங்கு எனது மறைந்து நமது வருகிறதோ அந்த உலகமே ஒரு உல்லாச புரியாயிருக்கும். வாழ்த்துக்கள். வளமையோடு, வல்லமையோடு வாழுங்கள்.

Thursday, July 1, 2010

மல்லிகைப் பூவும், குல்ஃபி ஐஸும்

போன ஞயிற்றுக் கிழமை மதியம், லீவு நாளாச்சேன்னு கொஞ்சம் மெதுவா எந்திரிச்சு, மெதுவா சாப்பிட்டு, மத்தியானம் ஒரு குட்டித் தூக்கம் போட்டுட்டு இருந்தப்ப, திடீர்னு போன். நல்ல தூக்கத்துல யாராவது இப்படி போன் போட்டா நமக்கு ஒரு ஃபீலிங்க்ஸ் வரும் பாருங்க, அதே ஃபீலிங்ஸோட போனை எடுத்தேன்.

“ஹலோ, சார், மண்டையப் பிச்சுகிட்டிருக்கேன் சார்”

“ஏன், என்னாச்சு”

“சார், பொம்பளைங்க மல்லிகைப் பூ ஏன் சார் வைக்கறாங்க”

(ஆஹா, இந்தப் பாண்டிய மன்னனுக்கு இப்படி ஒரு சந்தேகமா, இனி நான் எந்த மடத்துக்கு போய், யாருகிட்ட பாட்டு எழுதி வாங்கிட்டு வர்றது??)

“ஏம்பா அது நல்ல வாசமாயிருக்கும், மேலும் கரிய அடர்ந்த நீள கூந்தல் இருக்கறவங்க வெள்ளையான இந்த மல்லிகைப் பூவை அடர்த்தியா கட்டி, கூந்தல்ல வெச்சுகிட்டாங்கன்னா, அது அவங்க கூந்தலுக்கே ஒரு தனி அழகு கூட்டும். அதுக்காகத்தான் வெச்சுக்கறாங்க”

“சார், அது இல்ல சார், வேற என்னவோ காரணம் இருக்குது சார்”

“ஏம்பா, உனக்கு இந்த விபரீத ஆராய்ச்சியெல்லாம்???”

“இல்ல சார், நான் தினமும் சென்னைல பார்க்கறேன், பூக்கார அம்மாவெல்லாம் கூடை கூடையா வெச்சு விக்கறாங்க, அது கொஞ்ச நேரத்துலயே தீர்ந்து போகுதே சார், அப்பிடி தினமும் வாங்கி தலைல வெச்சுட்டா, அதனால என்னதான் உபயோகம்??”

(டேய், இதெல்லாம் கொஞ்சம் ஓவரு)

“சரிப்பா, விடு, பூஜைக்கு வாங்கிட்டு போவாங்களா இருக்கும்”

“சார், அங்க பூ வாங்க வர்றவங்களையெல்லாம் பார்த்தா பூஜைக்கு வாங்கிட்டு போறவங்க மாதிரியா இருக்காங்க??”

“சரி, அப்ப நீயும் ஒரு முழம் வாங்கி வெச்சுட்டு, என்ன மாதிரி இருக்குன்னு சொல்லு”

“ சார் நானென்ன பொட்டப் புள்ளயா, என்ன மாதிரி தனிக் கட்டைங்கெல்லாம் பூ வாங்குனா வேற மாதிரி நெனச்சுக்குவாங்க சார், ஆமா நீங்க இந்த மாதிரி பூவெல்லாம் வாங்கிட்டு போனதில்லையா ??”

(டேய், நீ எங்க வ்ர்றேன்னு தெரியுது, சரி டாபிக்கை மாத்துவோம்)

“அப்புறம், எப்பிடிப்பா இருக்க, வேலையெல்லாம் எப்பிடி பரவால்லையா??”

“சார் அப்புறம், இன்னொண்ணு, ரொம்ப நாளா உங்க கிட்ட ஒண்ணு கேக்கணும்னுட்டு இருந்தேன்”

(டேய், நீ இன்னும் அடங்கலையா)

“இந்த குல்ஃபி ஐஸ் விக்கறவங்க நாள் முழுதும் எங்க இருக்காங்கன்னே தெரியல, ஆனா, ராத்திரி பத்துமணிக்கு மேல கிணிகிணி ன்னு மணி அடிச்சுட்டு விக்கறாங்களே அது ஏன் சார்??”

(டேய், உனக்கு ஏண்டா புத்தி இப்பிடியெல்லாம் வேலை செய்யுது)

“அது ராத்திரி சாப்பாட்டுக்கு அப்புறம் குல்ஃபி ஐஸ் சாப்பிட்டா நல்லா ஜீரணம் ஆகும் அப்பிடீங்கற ஒரு ஐதீகம் எதாவது இருக்கும், ஆமா, சென்னைல ஆராய்ச்சி பண்றதுக்கு எத்தனையோ விஷயம் இருக்கும் போது, நீ ஏண்டா இதையெல்லாம் ஆராய்ச்சி பண்ற??”

“அதில்ல சார், இந்த குல்ஃபி ஐஸுக்கு வேற எதோ பவர் இருக்குதாம்மே??”

(டேய், நான் உனக்கு என்ன துரோகம்டா பண்ணுனேன், தூங்கிட்டிருந்தவனை எழுப்பி ஏண்டா இப்பிடி ஆராய்ச்சி கட்டுரையெல்லாம் படிச்சு காமிக்கறீங்க)

“என்ன பவருப்பா?’

“பாருங்களே, எவனாவது என்னை மாதிரி தனியா திரியறவனுங்க அதை சாப்படறாங்களா, எல்லாம் ராத்திரி சாப்பாடு முடிஞ்சதுக்கப்புறம் காலார ஒரு ரவுண்டு நடந்துட்டு வருவோம்னு நடக்கற ஜோடிங்கதான் சாப்புடுது, அதையும் ராத்திரில ஏன் சாப்படறாங்க??”

(டேய், நல்லதா எதாவது சொல்லீரப் போறேன், இப்பவே தெரிச்சு ஓடிப் போயிரு)

“இல்ல சார், இன்னும் பாத்தீங்கன்னா குல்ஃபி ஐஸ் விக்கறதும் கூட இந்த பஸ்ஸ்டேண்டுல, மார்க்கெட்டுலெல்லாம் விக்க மாட்டேங்கறான், இந்த குடும்பங்க இருக்கற ஏரியாவா பாத்து விக்கறான், இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு என்ன தோணுதுன்னா…….”

“டேய், ங்கொய்யால போனை வெய்டா”

அடச்சே, நிம்மதியா தூங்கிட்டிருந்த மனுஷனை எப்பிடியெல்லாம் வறுத்தெடுக்கறானுகப்பா…..

அப்ப என்னவோ அவனை திட்டீட்டு போனை வெச்சுட்டாலும், ஒரு மூணு நாளா எனக்கும் இந்த சந்தேகம் வந்திடுச்சு, நெஜமாவே மல்லிகைப் பூவுக்கும் குல்ஃபி ஐஸுக்கும் எதாவது பவர் இருக்குதா???

ஹலோ, ஹலோ, அப்பிடி எல்லாம் பார்க்க கூடாது…, நோ, நோ பேட் வேர்ட்ஸ் பிளீஸ்………..