Monday, November 7, 2011

மேனகாவை அடக்கி வையுங்கள் !!!!!

பொறி வைத்து பிடிப்பது என கேள்விப் பட்டிருக்கிறீர்களா?? ஒரு எலியை கொல்ல என்ன செய்வோம்??? ஒரு எலிப் பொறி வாங்கி வந்து அதற்குள் ஒரு துண்டு பழத்தையோ அல்லது எலியின் நாக்கில் எச்சில் ஊறவைக்கும் எதாவது ஒரு விஷயத்தை தொங்க விடுவோம். தனது உயிருக்கே ஆபத்து இருக்கிறது என்பதை கொஞ்சமும் அறியாத எலி, அந்த பழத் துண்டின் மீதுள்ள ஆசையில் வந்து, பழத்தை பிடித்து இழுத்தவுடன், அந்த பொறிக்கான கதவு அடைபட்டு, எலி மாட்டிக் கொள்ளும். அப்பொழுது நமக்கு வரும் ஆனந்தம் இருக்கிறதே ஆஹா, உடனே அந்த எலியை பிடித்து ஊசியால் குத்தி, அதன் தலையில் அடித்து என எல்லா வகை சித்திரவதைகளையும் செய்து அது துடி துடித்து சாகும் வரை பொறுத்திருந்து ரசித்து நமது குரூர வன்மங்களை எல்லாம் தீர்த்த பின் அதை வெளியே வீசி எறிந்து, அதை ஒரு காக்கை கொத்திக் கொண்டு போனால் மட்டுமே நமது மனம் திருப்திப் படும். இதே போன்ற பொறி வைக்கும் முறைகளைத்தான் தொல்லை செய்யும் புலி, சிறுத்தை போன்ற வற்றை பிடிப்பதற்கும், மற்றும் தோட்டத்தில் புகுந்த யானைகளை பிடிப்பதற்கும் பயன் படுத்துவார்கள்.

ஆனால், விலங்குகளை பிடிப்பதில் இன்னொரு முறை இருக்கிறது, அதுதான் வேட்டையாடுவது. அதாவது அந்த விலங்கிடம் நேரடியாக மோதி அழிப்பது, சீறும் சிறுத்தையையோ, அல்லது பாய்ந்தோடும் மானையோ அதன் வேகத்திற்கு ஈடுகொடுத்து அழிப்பது என்பது ஒரு வீர விளையாட்டு.

முந்தைய வகை கொலை என்பது, விலங்கிற்கு தீனி வைப்பது போல் வைத்து அதைக் கொல்வதாகும், அதாவது வஞ்சித்து, ஏமாற்றி, அந்த விலங்கின் பலவீனத்தை முழுவதுமாக உபயோகித்து கொல்வதாகும். இரண்டாவது வகை அதன் பலத்தோடு முழுவதும் மோதி, தன் உயிரை பணயம் வைத்து ஜெயிப்பதாகும். முதல்வகை கோழைகளின் விளையாட்டு, இரண்டாவது வகை வீர விளையாட்டு.

இப்படி ஒரு கோழைத்தனமான அருவருப்பான கேவல விளையாட்டைத்தான் வெள்ளைக்கார நிற வெறி ஊடகங்கள் மற்றுமொருமுறை ஆடித் தீர்த்திருக்கின்றன. அதாவது பொறி வைப்பது தப்பில்லை எனவும், பொறியில் சிக்குவதுதான் தவறு எனவும் சித்தரித்திருக்கிறார்கள். பலியானதென்னவோ பாவம் பாகிஸ்தானியர்கள்.


News of the World என்ற ஒரு வெள்ளைக்கார நிற வெறி ஊடகம். இங்கிலாந்தை தலைமையகமாகக் கொண்டு உலகின் சில நாடுகளில் கால் பதித்திருந்த இந்த ஊடகம், மக்களுக்கு பயன் தரும் நல்ல செய்திகளை என்றுமே அச்சில் வார்த்ததில்லை. 1843 ம் ஆண்டு தனது செய்தி தரும் சேவையை துவக்கிய இந்த செய்தி நிறுவனம், அரசின் நலத்திட்டங்களையோ, அல்லது தனி மனிதர்களின் சாதனைகளையோ, அறிவியல் கண்டு பிடிப்புகளையோ, மக்களின் ஆழ்மனக் கிடக்கைகளையோ எப்பொழுதுமே சேகரித்ததில்லை. மாறாக, தனி மனித அந்தரங்கங்களை, காம விளையாட்டுகளை, படுக்கையறை ரகசியங்களை மட்டுமே விற்று, பரபரப்பு செய்திகளை தந்து, ஊடகத்துக்கே உரிய கிளுகிளுப்பு மாயையை மட்டுமே காசாக்கிக் கொண்டு இருந்திருக்கிறது.

நடிகைகளின் அந்தரங்ககள், வியாபார புள்ளிகளின் காம லீலைகள், அரசாங்க அதிகாரிகளிடம் பெண்களை அனுப்பி, ரகசியங்களை கறந்த பின், இந்த கேவலமான அரசியல் வாதியை பாரீர், இப்படி ஒரு பெண்ணைப் பார்த்து ஜொள் விடும் ஆசாமியிடம் தான் நாட்டின் மிக முக்கியமான துறை சிக்கியிருக்கிறது என பல செய்திகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி தனது விற்பனையை பெருக்கி வந்திருக்கிறது. அந்த பெண்ணை அவனிடம் அனுப்பும் கேவலமான மாமா வேலையை நான் தான் செய்தேன் எனவும் அந்த ஊடகம் பரபரப்புக்கு மத்தியில் ஒப்புக்கு ஒரு வாக்கியமாக சொல்லியது, ஆனால் அரசியல்வாதியின் பலவீனம் ஊதிப் பெரிதாக்கப் படும் பொழுது, இந்த மாமா வேலையின் கேவலத்தன்மை அடி பட்டுப் போகும்.

2010 – ம் ஆண்டில் இங்கிலாந்தையே உலுக்கிய தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சிக்கிய இந்தப் பத்திரிக்கையின் முதலாளி, அப்போதைய இங்கிலாந்துப் பிரதமரான கார்டன் பிரௌனையும், அவரது தொழிலாளர் கட்சி உறுப்பினர்களையும், இந்த ஒட்டுக் கேட்பு வழக்கிலிருந்து விலகிக் கொள்ளும்படி மிரட்டியிருக்கிறார்.

இப்படி பரபரப்புக்கு பெயர் போன இந்த பத்திரிகைக்கு மஜர் மொகம்மது என்ற ஒரு தெருப் பொருக்கி மனப் பான்மை கொண்ட ஒருவன் 20 வருடங்களுக்கு மேல் நிருபராக வேலை செய்துள்ளான். தனது 18 வது வயதிலேயே, தனது தந்தையின் நம்பிக்கைகுரிய குடும்ப நண்பர்களின் வியாபாரத்தை, திருட்டு சி.டி. விற்பனை என்று சொல்லி அம்பலப் படுத்தி வெளிச்சத்துக்கு வந்தவன் தான் இந்த கேவலப் பிறவி. எல்லா இடங்களிலும் தன்னை ஒரு அரேபிய ஷேக்கு போல் காண்பித்துக் கொள்ளும் இவன் பல இடங்களில் பல பெயர்களில் ஊடுருவியிருக்கிறான்.

பலமுறை தவறான செய்திகளை பிரசுரித்து, அரசின் கண்டனத்தையும் பெற்றிருக்கிறான். 2004 – ம் ஆண்டில் ஒரு இஸ்லாமிய தீவிரவாத குழு அணு ஆயுதம் தயாரிக்க மூலப் பொருள் வாங்கியதாகவும், அந்த பரிமாற்றத்திற்கான முழு ஆதாரமும் தன்னிடம் உள்ளது எனவும், இந்த மூன்று நபர்கள் தான் அந்த தீவிர வாத குழுவை சேர்ந்தவர்கள் என ஒரு மூன்று பேரை இவன் அடையாளம் காட்ட, தீவிரவாதத்தால் கதி கலங்கிப் போயிருந்த இங்கிலாந்து உடனே அவர்களை கைது செய்து விசாரணை செய்ததில் அவர்கள் அப்பாவிகள் எனவும், இந்த மஜர் மொகம்மது தான் பரபரப்புக்காக ஒரு புரளியை கிளப்பியுள்ளான் எனவும் தெரிய வந்தது. இப்படி பல விஷயங்களில் இங்கிலாந்து பாராளுமன்றத்தையே அதிர வைக்கும் அளவுக்கு இவனது புரளிகள் இருந்துள்ளன.

2003 –ம் ஆண்டில் இங்கிலாந்தின் மாடலிங், இசை, மற்றும் பல வியாபாரத்துறைகளில் கோலோச்சிக் கொண்டிருந்தவரும், கவர்ச்சிக் கட்டழகியாக வலம் வந்தவரும், புகழ்பெற்ற இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்காமின் மனைவியுமாகிய விக்டோரியாவை கடத்தப் போகிறார்கள். அந்த கடத்தல் திட்டத்திற்கான முழு ஆதாரமும் என்னிடம் உள்ளது என செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினான். கடத்தல் காரர்களாக அவன் அடையாளம் காட்டிய நபர்களை பிடித்து தீவிரமாக விசாரித்ததில் அப்படியொரு திட்டம் இருந்ததற்கான சாத்தியங்களே இல்லை என காவல் துறை கண்டறிந்தது.

இப்படி ஒரு கேவல பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த இந்த மஜர் மொகம்மதுக்கு, பாகிஸ்தானிய கிரிக்கெட் அணியுடன் ஒரு தனி விளையாட்டு விளையாடி பார்க்கும் விபரீத ஆசை திடீரென உதித்தது. இதற்கு தகுந்தாற்போல் கடந்த வருடத்தில் பாகிஸ்தான் அணியும் ஒரு டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றது. அப்பொழுது ஒரு கிரிக்கெட் சூதாட்ட வித்தகனான மஜர் மஜீத் என்பவனுடன் கூட்டணி அமைத்து பாகிஸ்தான் ஆட்டக்காரர்களுக்கு பொறி வைத்தார்கள். இதில் சிக்கிய ஏழு பாகிஸ்தானியர்களில், மூன்று பேர் மீது குற்றம் நிரூபணமாகி, அவர்களது எதிர்காலம் முழுவதும் பாழாகி இன்று சிறையில் கம்பி எண்ண வேண்டிய அவல நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறார்கள்.

இங்கு கவனிக்க வேண்டியது, இந்த விளையாட்டு வீரர்கள் பணத்தாசை பிடித்து அலைந்தவர்கள் போலவும், பணத்துக்காக தனது ஒட்டு மொத்த விளையாட்டுத் திறனையும், தனது நாட்டின் புகழையும் விற்கத் துணிந்த கேவல பிறவிகள் போலவும் சித்தரிக்கப் படுகிறார்கள். ஆனால், இதற்குப் பின்னால் உள்ள ஊடக தகிடு தத்தங்கள் சகல சௌகர்யங்களுடன் மறைக்கப் பட்டு, பரிதாபமான விளையாட்டு வீரர்கள் தான் தேச துரோகிகள் என அடையாளம் காட்டப் படுகிறார்கள். இந்த புனித பணியை செய்த மஜர் மொகம்மது ஒரு பெரிய உத்தமன் போல் உலாவி வருகிறான். மேலும் கிரிக்கெட் எனும் புனித விளையாட்டை சூதாட்டத்தின் கோரப் பிடியிலிருந்து காப்பாற்ற வந்த பாரமாத்மாவின் மறு உருவமாகவே மஜர் மொகம்மது அவதாரமெடுத்திருக்கிறான்.

இங்கு சில கேள்விகள் :

1. பாகிஸ்தானின் குக்கிராமங்களில் இருந்து தனது திறமையை மட்டுமே மூலதனமாக வைத்து விளையாட வரும், இந்த சிறுவர்களுக்கு, இந்த பணம் கொழிக்கும் விளையாட்டின் அனைத்து பரிமாணங்களும், அந்தபரிமாணங்களுக்குப் பின்னே ஒளிந்திருக்கும் விபரீதங்களைப் பற்றிய பால பாடங்களும் எப்பொழுதாவது சொல்லிக் கொடுக்கப் பட்டதா??
2. ஒரு வெளி நாட்டு மண்ணில் விளையாடப் போகும் பொழுது, அவர்கள் யாருடன் பேச வேண்டும், அல்லது குறிப்பாக யாருடன் பேசக் கூடாது என்பது போன்ற வரையறைகள் சொல்லித் தரப் பட்டதா??
3. அப்படியே சொல்லித் தரப் பட்டிருந்தாலும், ஒரு விளையாட்டு வீரனின் தொடர்புகளை, அவனுடன் பேசும் நபர்களை, அல்லது அவனை சந்திக்கும் பத்திரிகையாளர்களை அந்த நாட்டு விளையாட்டு குழுவின் தலைமை, இம்மியளவேனும் கண்டுகொள்ளாமலிருக்குமா??
4. அப்படியே பணத்திற்கு ஆசைப்பட்டு, இந்த வீரர்கள் தங்களது திறமையையும், தன் மானத்தையும் அடகு வைக்க முன்வந்து, தப்பாட்டம் ஆடுகிறார்கள் என்பதை ஒத்துக் கொண்டாலும், அவர்களை தப்பாட்டம் ஆட வைத்தவர்களையும் குற்றவாளிகளாக்காமல், அவலங்களை துகிலுரிக்க வந்த மகாத்மா போல சித்தரிப்பது ஏன்??
5. லஞ்சம் வாங்குவது குற்றமென்றால், லஞ்சம் கொடுப்பது தார்மீக செயலா??
6. ஊடகம் என்றால் எந்த ஒரு தரம் தாழ்ந்த செயலையும் செய்யலாம், ஆனால், பலியாடுகள் பரிசுத்தவான்களாய் இருக்க வேண்டுமென்பது எவ்வகை நியாயம்??
7. பாகிஸ்தானியர்களுடன் இந்த அருவருப்பான விளையாட்டை ஆடிய வெள்ளைக்கார நிறவெறி ஊடகங்கள், தனது நாட்டு வீரர்களையும் இப்படி பரீட்சித்துப் பார்க்க தயாரா??
8. இன்று கருப்பர்களான பாகிஸ்தானிய வீரர்கள் மீது விசாரணை நடத்தி உடனடி தீர்ப்பு வழங்கும் சர்வதேச கிரிக்கெட் சங்கமாகட்டும், இங்கிலாந்தின் நீதிமன்றமாகட்டும், வெள்ளைக்கார தென் ஆப்பிரிக்க வீரன் ஹர்ஷெல் கிப்ஸ் மீதும் சூதாட்ட குற்றச் சாட்டு உள்ளதே அதை விசாரிக்காதது ஏன்??
9. அவன் வெள்ளைத்தோல் என்பதால், அவனை விசாரிப்பது அவசியமில்லையா??

ஊடகப் போர்வையில் உலா வரும் கேவலப் பிறவிகளே, இங்கு மேனகைகள் தொடை தெரிய ஆடையணிந்து, இடுப்பின் வளைவுகளை எடுப்பாய் காட்டி, மார்பு குலுங்க நடனமாடுவார்களாம், ஆனால், விசுவாமித்திரன் மட்டும் தன் தவத்தில் நிலைத்திருக்க வேண்டுமா??? எந்த ஊர் நியாயமிது??

மேனகாவை அடக்கி வையுங்கள். எங்கள் விசுவாமித்திரர்கள் தவத்தில் நிலைத்திருக்கட்டும்.

Friday, October 28, 2011

எப்படி கொல்வது ?????

உங்கள் நாட்டில் எண்ணெய் இருக்கிறதா???? நீ என் நண்பன். உனக்கு புது தொழில் நுட்பம் கற்றுத் தருகிறேன். உன் குடிமக்களுக்கு உல்லாச புரிகள் கட்டித் தருகிறேன். உன் குழந்தைகளுக்கு உலகின் முதல் தர கல்வி கற்றுத் தருகிறேன். உன் பாரம்பரியமெல்லாம் உதவாக்கரை சமாச்சாரங்கள், அவைகளையெல்லாம் உதறிவிட்டு வெளியே வா, தினமும் மதுவைக் குடி, கண்ணில் கண்ட பெண்ணின் இடுப்பிலெல்லாம் கைகளால் விளையாடி இன்பத்தில் திளைத்திரு, ஒரு புதிய உலகம் காண்பிக்கிறேன் வா….

பதிலுக்கு என் நாட்டு எண்ணெய் கம்பெனிகள் உன் நாட்டில் கொடி நாட்டட்டும், தினமும் என் நாட்டு எண்ணெய் கப்பல்கள் உன் துறைமுகத்தில் வலம் வரும். மறுபேச்சு பேசாமல் அவைகளின் அனைத்து இடுக்குகளையும் உன் எண்ணை வளத்தால் நிறைத்து அனுப்பு…… என்னது பணமா, ம், அதுவும் வேண்டுமா உனக்கு,,, சரி சரி,,, உலகச் சந்தையில் நான் வைத்திருக்கும் விலையை விட ஒரு ரூபாய் அதிகம் தருகிறேன். வாங்கிக் கொண்டு வாயை மூடிக் கொண்டிரு. எல்லா நாட்டுத் தலைவர்கள் நடுவிலும் உனக்கும் ஒரு நாற்காலி போட்டு, உலகில் இருக்கும் உதவாக்கரை விருதுகள் அத்தனையும் தருகிறேன். பல்லை இளித்து விட்டு பரிசு வாங்கிக் கொண்டு போ. என்னது…. காது கேக்கலை கொஞ்சம் சத்தமா சொல்லு, என்னது, உன் நாட்டு மக்களா, அவுங்கள விடுய்யா, அவுங்களா உனக்கு சோறு போடறாய்ங்க, உன் நாட்டு எண்ணெய் தான சோறு போடுது… அதை எப்பிடி வியாபாரம் பண்றதுன்னு பாரு. உனக்கும் உன் குழந்தைகளுக்கும் உலகின் சிறந்த நகரங்களில், கேளிக்கை விடுதிகள் கட்டித் தருகிறோம்…. அழகா உக்கார்ந்து சீமைச் சரக்கை உறிஞ்சுகிட்டே, முன்னால இடுப்பை வளைச்சு ஆடுற அழகுப் பெண்ணை அனுபவிச்சுகிட்டு சுகமா இருங்கப்பா, நாட்டு மக்கள் இருந்தாங்க, இருக்கறாங்க, இன்னமும் இருப்பாங்க, அவுங்களைப் பத்தியெல்லாம் கவலைப் படாத கண்ணு. அவுங்க மேட்டரை நான் கவுனுச்சுக்கறேன்.

என்னது, இதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டியா, அப்ப எண்ணெய் தர மாட்டியா…. இப்ப பாருடா, என் சுய ரூபத்தை…… ங்கொய்யால… உன் நாட்டில் மனித உரிமை மீறப்படுகிறது. நீ மனித இனத்துக்கு எதிரான நியூக்ளியர் குண்டுகள் தயாரிக்கிறாய். ஐ.நா அமைப்பு உன்னை சோதிக்க வேண்டும், எப்ப பார்த்தாலும் குண்டு தயாரிப்பதிலேயே நீ உன் பணத்தை செலவிடுகிறாய், உன் நாட்டு மக்கள் ஒரு துண்டு ரொட்டிக்கும், ஒரு வேளை சோத்துக்கும் வழியில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் பொழுது நீ மட்டும் மாட மாளிகைகளில் வாழ்கிறாய், எங்கள் நாட்டு ஊடகங்கள் இனி உன் மீது படையெடுக்கும், அழுக்கு நிறைந்த வீதிகளும், விபச்சாரம் செய்யும் பெண்களும், சோத்துக்கில்லாத குழந்தைகளும் படம் பிடிக்கப்பட்டு, உனது நாடு என்றாலே இப்படி சிங்கியடிக்கும் கூட்டம் தான் என பிரச்சாரம் செய்வோம், நேட்டோ படைகள், ஐ.நாவின் கூட்டு படைகள், இன்னும் எங்கள் நாட்டு சொந்தப் படைகளெல்லாம் உன் நாட்டில் முகாமிட்டாலொழிய உன் நாடு உருப்படாமல் போகும், உலகத்தையே ரட்சிக்க அவதாரமெடுத்திருக்கும் நான், ஐ.நா என்ற பெயரில், நேட்டோ என்ற பெயரில் இன்னும் என்ன பெயர் வேண்டுமானாலும் சொல்லிக் கொள், அந்த எல்லா பெயரிலும் உன்னை கண்காணிப்பது அவசியம். பாவம், உன் நாட்டு மக்கள், உன்னைப் போன்ற அரக்கனின் கையில் சிக்கி, தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

யாரங்கே…. ஐ.நா. சபையின் செயலரா, தலைவரா, தலையாரியா, பூசாரியா…., என்ன எழவோ, கூப்பிடுயா அந்த ஆளை, யோவ், உடனே அறிக்கை ஒண்ணு ரெடி பண்ணு, நான் சொல்றத அப்பிடியே எழுது. நான் சொன்ன பேச்சுக்கு அடங்காமல் அழிச்சாட்டியம் பண்ணும் அவன் நாட்டில் வறுமை, மனித உரிமை மீறல், தினம் தினம் பட்டினிச் சாவு, உலகத்தையே அச்சுறுத்தும் அணுகுண்டுகள் தயாரிப்பு, ஆட்சியாளர்களின் சுக போக வாழ்வால் மக்கள் நலப் பணிகள் பாதிப்பு என்று ஒரு அறிக்கை தயார் செய்து உடனே வாசித்து விடு. அந்த நாட்டின் வளங்கள் பாதுகாக்கப் பட வேண்டியது அவசியம் என மறக்காமல் பல முறை சொல்லு…..
அப்புறம், யாருப்பா அது, நம்ம கைத்தடிகளெல்லாம் எங்கடா ஒழிஞ்சீங்க, சீக்கிரம் வாங்கடா, இங்க பாரு, இவன் நமக்கு எண்ணெய் குடுக்க மாட்டிங்கறான், நம்ம சொன்ன பேச்சை கேக்க மாட்டிங்கறான், ஒண்ணு பண்ணுங்க, அவன் ஊர்ல இருக்கற தெருப் பொறிக்கிகளை எல்லாம் ஒண்ணு சேருங்க ”புரட்சிகர மனித நேய புனித இதிகாச தேசிய விடுதலை இளைஞர் முன்னணி” இந்த வார்த்தைகளையெல்லாம் முன்னால பின்னால எப்பிடி வேண்ணாலும் மாத்தி மாத்தி போட்டு ஒப்புக்கு ஒரு பெயர் வைத்து ஒரு கட்சியை தயார் பண்ணுங்க, கொடுங்கோல் ஆட்சிக்கெதிராக ஒரு வீரிய புரட்சின்னு ஃபிளக்ஸ் பேனர் கட்டுங்க, அவுங்களுக்கு துப்பாக்கி, பீரங்கி, வெடி குண்டு இன்னும் என்ன குண்டெல்லம் வேணுமோ எல்லாத்தையும் குடுங்க, மத ரீதியான உணர்வை தூண்டி விடுங்க, தினமும் எங்கயாவது ஒரு இடத்துல குண்டு வைக்க சொல்லிக் குடுங்க. தினமும் எத்தனை பொண்ணுங்களை கற்பழிக்க முடியுமோ அத்தனையும் செய்யச் சொல்லுங்க, புரட்சின்னு வந்துட்டா, இதெல்லாம் சகஜம் தானே, அப்புறம் கண்ணுல பட்டவனையெல்லாம் குருவி சுடற மாதிரி சுடச் சொல்லுங்க. என்னது பணம் வேணுமா, நம்ம மரப் பீரோவுல அடுக்கி வெச்சிருக்குது பாருப்பா, ஒரு பத்து இருபது கட்டுகளை எடுத்து விசுறுங்க, எல்ல பேட்டை ரவுடியும் நம்ம கிட்ட வாலாட்டுவான், அப்புறம் பார்க்கலாம் அவங்க நாட்டாமை எங்க போறான்னு, ங்கொய்யால …. தனி ஆவர்த்தனமா பண்ற,, இப்ப வெக்கறண்டா ஆப்பு உனக்கு…… எப்பூடி….

எங்கு பார்த்தாலும் மணல் குவிந்த பாலைவனம், ஒப்புக்கு ஒரு சில இடங்களில் மாத்திரம் அரிதாக காணப் படும் நீரூற்றுகள், மிகக் குறைந்த அளவில் விவசாயம் என பாலைவன நாடுகளுக்கே உரிய எல்லா அழகுடனும் அவஸ்தைகளுடனும்தான் லிபியாவின் மக்களும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். வெய்யில் காலத்தில் 57 டிகிரி வெய்யிலோடு இலவச இணைப்பாக மணற்புயலும் அடிக்கும். குளிர் காலத்திலோ எலும்புக்குள் ஊசியேற்றி குசலம் விசாரிக்கும் பயங்கரக் குளிர், தண்ணீர் என்பதே ஒரு அதிசய காட்சிப் பொருள்தான். இப்படி வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்கு தென் லிபியாவில் கிடைத்த அற்புத சுரங்கம்தான் அவர்களது வாழ்வாதாரத்தையே மாற்றிப் போட்டது. ஆம், 1953 ம் ஆண்டின் ஒரு சுபயோக சுப தினத்தில், எல்லா ராசிகளும் ஒன்று கூடி ஒரே கோணத்தில் பார்க்க, சுக்கிரன் திசை மட்டும் உக்கிரமாய் இருக்க, எண்ணய் கிடைக்குமா என பூமியை தோண்டப் போக அங்கு ஒரு அதிசய சுரங்கமே கிடைத்தது. பாலைவனத்தில் தெளிந்த தண்ணீர் ஊற்றைவிட பெரிய அதிசய சுரங்கம் வேறென்ன இருக்க முடியும். ஆமாம், தோண்டத் தோண்ட நிறைய இடங்களில் தண்ணீர் கிடைத்தது. போதாதா, மக்கள் குதூகலித்தார்கள். உலகத்தின் எட்டாவது அதிசயமாக ஒரு செயற்கை நதியையே உருவாக்கினார்கள். தெற்கில் இருந்த தண்ணீரை வடக்கு, கிழக்கு மேற்கு இன்னும் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் தங்கு தடையின்றி எடுத்துப் போனார்கள். நாட்டில் எல்லோரும் தலைமுழுகி ஆனந்தமாக குளிக்க ஆரம்பித்ததே இந்த தண்ணீர் வந்த பின்தான் போலுள்ளது. உலகின் ஒரே ஒரு செயற்கை நதி என பெயரிட்டார்கள்.

சரி, தாகத்துக்கு தண்ணீர் வந்தாயிற்று, அடுத்தது என்ன என யோசித்தார், அப்போதைய ஆட்சியாளர் கடாபி. அடுத்தது இருக்கிற எண்ணை வளத்தை வைத்து தன்னிறைவடைவோம் என ஒரு உயரிய நோக்குடன் தனது எண்ணை வியாபாரத்தை பல மடங்கு பெருக்கினார். யார் வேண்டுமானாலும் வாருங்கள், எவ்வளவு வேண்டுமானாலும் அள்ளுங்கள், ஆனால் விலை நான் சொல்வதுதான். ஒழுக்கமாக கையில காசு, வாயில தோசைங்கற கொள்கையில் வியாபாரம் பண்ணுங்கள் என கறாராக சொல்லி விட்டார். வேறு வழியில்லை, ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். காடாபியிடம் இருப்பது உயர்தர சரக்கு, அந்த மனிதனை பகைத்துக் கொண்டால், சரக்கு கிடைக்காமல் போனாலும் போய்விடும். ஆக, கடாபிக்கு வணக்கம் சொல்லுங்கள், எண்ணெயை அள்ளுங்கள் என பல்லைக் கடித்துக் கொண்டு உலக நாட்டாமைகள் எண்ணெய் அள்ளின.

சிறுகச் சிறுக கடாபியின் கஜானா நிரம்பலாயிற்று. முதலில் என் மக்களுக்கு படிப்பறிவு வேண்டும் என பள்ளிகளை திறந்தார். தொடர்ச்சியாக, கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் என வளர்ந்து கொண்டே போய், கல்வி கட்டாயமாக்கப் பட்டு, இப்போதைய கணக்குப் படி லிபியாவில் 82 சதவீதம் பேர் கல்வியறிவுள்ளவர்களாய் உள்ளனர்.
எல்லோருக்கும் வீடு என்ற தனது கனவை நனவாக்கினார் கடாபி. லிபியாவின் குடிமக்களுக்கு அரசாங்கமே வீடு கட்டிக் கொடுத்தது. எந்த நாட்டிடமும், அல்லது உலக வங்கி, அல்லது எந்த நிதி நிறுவனத்திடமும் தனது நாட்டின் வளர்ச்சிக்காக கடாபி கையேந்த வில்லை. முற்றிலும் சுய உழைப்பு, சுய சம்பாத்தியம் அதன் மூலம் தன்னிறைவு என்பது கடாபின் கொள்கையாயிருந்தது. அதன் மூலம் வெற்றியும் கண்டார். ஆனால் எண்ணெய் விவகாரத்தில் மாத்திரம் மூக்கை நுழைக்க முயன்ற உலக நாட்டாமைகளை அப்படியே விரட்டி அடித்தார். ஆப்பிரிக்கா மீது தீராத காதல் கொண்டிருந்த இந்த தொப்பிக்கார முரட்டு மனிதர் ஒருங்கிணைந்த ஆப்பிரிக்கா, ஆப்பிரிக்காவின் வளங்களெல்லாம் ஆப்பிரிக்க மண்ணின் மைந்தர்கள் அனுபவிக்கவே இறைவன் படைத்தான், இதை வெளிநாட்டு சக்திகள் கொள்ளை கொண்டு போக வேண்டாம் என ஒரு பரந்த கனவை கொள்கையாக வைத்து அதற்கென அயராது பாடு பட்டார். சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஒருங்கிணைந்த ஆப்பிரிக்கா என உரத்த சத்தமிட்டார். “ஆப்பிரிக்கர்களே ஒன்று கூடுங்கள், நமது வளங்களை நாம் பங்கிடுவோம், நாம் உழைப்போம், தன்னிறைவடைவோம்” என அறைகூவல் விடுத்தார். ஏகாதிபத்தியத்தின் மரு உருவமான மேற்கு நாடுகளின் அனைத்து கொள்கைகளையும் தன் கால் தூசுக்கும் கூட மதிக்காமல் எதிர்குரல் கொடுத்தார்.
இது போதுமே, உலக நாட்டாமை என தன்னை சுய பிரகடனப் படுத்திக் கொண்டு முக மூடி அணிந்த ஓநாயான அமெரிக்காவுக்கு மூக்கு மட்டுமல்ல, உடலின் எல்லா பாகங்களிலும் வேர்த்தது. கடாபியை கண்காணியுங்கள். எந்த ஒரு நாடும் எங்களிடம் கையேந்திக் கொண்டு, ஆமாம் சாமி போட்டு தலையாட்டிக் கொண்டிருக்கிற வரை நாமும் நல்லுறவு என்ற போர்வையில் அவர்களுடன் கைகுலுக்கி போட்டோவுக்கு போஸ் கொடுக்கலாம். ஆனால் இவன், ஆப்பிரிக்க ஒருங்கிணைப்பு என்கிறான், ஆப்பிரிக்க வளங்களை பற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டான். இவனை வளர விட்டால் ஆப்பிரிக்கா என்ற அட்சய பாத்திரத்தில் நாம் அள்ள முடியாது. இவனை தனிமைப் படுத்துங்கள் என்ற உயர்ந்த நோக்கத்தோடு பொருளாதார தடைகள், அவ்வப்பொழுது லிபியாவிலிருக்கும் பொறுக்கிகளுக்கு கொம்பு சீவி விடுதல் என தன் தகிடு தத்தங்களை முடிந்த வரை ஆடிப் பார்த்தார்கள். ஆனால் கடாபி அசரவில்லை. அவர்கள் ஒரு அடி பாய்வதற்குள், இவர் நான்கு அடி பாய்ந்தார். பொறுத்து பொறுத்து பார்த்தார்கள். கடாபி இனி எண்ணெய் வர்த்தகம் டாலர் , யூரோ போன்ற மதிப்பிழந்த பணங்களில் இல்லை, நான் சொல்லும் பணத்தில் தான் பேரம் நடக்க வேண்டுமென்றார். ஆஹா, இனியும் விட்டால் இவன் எங்க போய் நிப்பானோ தெரியாதுடா என்றார்கள். ரைட்டு ஆரம்பிச்சுரு, அடிங்கடா அவனை, மனித உரிமை மீறல்கள், ரசாயன ஆயுதங்கள் இன்னும் என்ன வேணுமானாலும் சொல்லு. ஆனால் அவனை ஒழிச்சுக் கட்டு, அதோட விடாதே அங்க நமக்கு ஆமாம் சாமி போடற ஒருத்தனை ஆட்சியில வை…… அடித்தார்கள்.

ஒரு பைசா கடன் வாங்காத அந்த கடாபியை அடித்தார்கள், தன்னிறைவு என்றால் அது கடின உழைப்பினால் மாத்திரமே சாத்தியம் என்ற கடாபியை அடித்தார்கள், ஒரு சில நீரூற்றுகளை ஒட்டு மொத்த தேசத்துக்கும் வழங்கி, பாலைவனத்தில் சோலைகளை ஏற்படுத்திய கடாபியை, ஒன்று பட்ட ஆப்பிரிக்கா என்ற உயர்ந்த கனவை வாயிலாவது உச்சரித்த கடாபியை, எழுத்தறிவில்லா தேசத்தின் குடிமக்களுக்கு, பட்டப்படிப்பையும் இலவசமாக வழங்கிய கடாபியை, ஆப்பிரிக்க வளங்களெல்லாம் மண்ணின் மைந்தர்களுக்கே என முழங்கிய கடாபியை, என் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் சொந்த வீட்டில்தான் வாழ வேண்டும் என எல்லாருக்கும் வீடு கட்டிக் கொடுத்த கடாபியை, பெண்கள் முன்னேற வேண்டும் என பாடுபட்ட கடாபியை, உலக நாட்டாமைகளின் கண்களில் விரல்விட்டு ஆட்டிய கடாபியை, எங்கெல்லாம் நட்பின் பெயரில் சுரண்டல்கள் நடந்ததோ, அதற்கு எதிராக குரல் கொடுத்த கடாபியை, பிச்சைக் காரர்களே இல்லாத ஒரு தேசத்தை உருவாக்கிய கடாபியை ஒரு சில தெருப் பொறுக்கிகள் சேர்ந்து நாயை அடிப்பது போல் அடித்து அவரது ரத்தம் வழியும் உடலை தெருவில் இழுத்துக் கொண்டு போய் அவமானப் படுத்தினார்கள்.

ஆமாம், கடாபி கொஞ்சம் கோக்கு மாக்கான ஆசாமிதான், பகட்டு உடைகள் அணிவது பிடிக்கும், பள பள நகைகள் அணிவது பிடிக்கும், எப்போதும் அழகிய பெண்கள் சூழ நடப்பது பிடிக்கும், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை வித விதமான உடைகள் அணிவது பிடிக்கும், ஆன்மீகம் பேச பிடிக்கும், எந்த எதிர் விளைவுகளையும் யோசிக்காமல் மனதில் பட்டதை அப்படியே பேசப் பிடிக்கும், தனது அரசியல் விரோதிகளுக்கு மேலோக பதவி அளித்து கௌரவிப்பது பிடிக்கும், முக்கியமாக தன்னிறைவு, அகண்ட சாம்ராஜ்யம் போன்ற கனவுகள் காண்பது பிடிக்கும். ஆனால், அவர் அழித்தொழிக்கப் பட வேண்டிய ஆபத்தான மனிதன் அல்ல, அவ்வப்பொழுது பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்தான், ஆனால் அதுவும் இஸ்ரேலியர்களின் அத்து மீறல்களுக்கெதிரான எதிர்ப்புக் குரலாகவே இருந்தது. தீவிரவாதத்தை அவர் என்றுமே ஏற்றுக் கொண்டதில்லை. மாறாக தன் மக்கள், தன் நாடு, தன் வளங்கள் என்று சதா சிந்தித்துக் கொண்டிருந்தவர். அரசியல் சதுரங்கத்தில் அவரும் பல காய்களை வெட்டியவர்தான் இல்லை என சொல்லவில்லை, ஆனால், அவைகளுக்கென பிரத்யேக காரணங்கள் இருந்ததோ என்னவோ, யாருக்குத் தெரியும். பொதுவில் அவரை ஒரு சர்வாதிகாரியாக, மத வெறியனாக, ஸ்த்ரீ லோலனாக இன்னும் எப்படியெல்லாம் திரித்துக் கூற முடியுமோ அப்படியெல்லாம் மேற்கத்திய ஊடகங்கள் திரித்துக் கூறினாலும், தனது நாட்டு மக்களின் மேம்பாட்டிற்கென உடல் பொருள் ஆவியை கொடுத்து உழைத்தவர் என்பதில் சந்தேகமில்லை.

இப்படி இருந்த ஒரு மனிதனை ஒரு தெரு நாயைப் போல சுட்டு, ரத்தம் தோய்ந்த ஆடையில்லா உடல் தெருக்களில் இழுத்துச் செல்லப் பட்டு சித்திரவதை செய்து கொல்வது தான் நீதி என்றால், இப்பொழுது ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும், ஒரு காலத்தில் வியட்நாமிலும் இன்னும் உலகின் பல நாடுகளிலும் தினமும் பெண்களை கற்பழித்துக் கொண்டும், எண்ணெய் வளங்களை சுரண்டிக் கொண்டுமிருக்கிற உலக நாட்டாமைக் காரர்களை எப்படிக் கொல்வது??????

Tuesday, August 9, 2011

நிறவெறி - நிதர்சனம்


இங்கிலாந்து தேசத்தின் லண்டன் நகரம். ஒரு காலத்தில் மனித வர்க்கத்தின் சொர்க்க புரி, ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள், துடைத்து விடப்பட்ட சாலைகள், பூக்களைச் சொறியும் நந்தவனங்கள், பூமியிலிருந்து திடீரெனக் கிளம்பி வானத்தை நோக்கி பீறிட்டுக் கிளம்பும் செயற்கை நீரூற்றுகள், கம்பீரம் நிறைந்த இங்கிலாந்து அரச குடும்பத்து அரண்மனை, உலகின் மூலை முடுக்கெல்லாம் கோலோச்சிய இங்கிலாந்தின் ராஜ குடும்பத்தினரின் தனிப்பட்ட உல்லாச மாளிகைகள், நவீனத்தின் உச்சமாக எங்கு நோக்கினும் மினுக்கும் ஆடம்பரம், சுரங்கத்தில் ஓடும் ரயில் வண்டிகள் என ஒரு உல்லாசபுரியின் அனைத்து முகவரிகளையும் இந்த நகரத்தில் காணலாம்.

ஆனால் இதற்கெல்லாம் திருஷ்டிப் பொட்டு வைத்த விதமாக, இங்கிலாந்து பாதம்பதித்து, காலால் மிதித்து அரசாண்ட நாடுகளின் ஒருசில வெள்ளையரல்லாத வர்க்கத்தினருக்கான குடியிருப்புகளை லண்டன் நகரத்தின் வெளிப்புறப் பகுதிகளில் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இந்த வெள்ளையரல்லாத மக்கள், தங்கள்சொந்த நாட்டிலிருந்து (இங்கிலாந்தின் தொழில் துறௌ முன்னேற்றத்துக்கென வியர்வை சிந்துவதற்காகவே) அழைத்து வரப்பட்டு, இங்கிலாந்தின் கௌரவ குடிமக்களாக அங்கீகரிக்கப்பட்டு, இங்கிலாந்தில் குடியுரிமை வழங்கப்பட்டாலும், எந்த ஒரு வெள்ளையனும் வேறு நிறத்தவனை அவனது அண்டை வீட்டுக்காரனாக இன்றுவரை அங்கீகரிக்கவில்லை. மிகக் கவனமாக அவனுக்கு ஒரு நவீன அடிமையின் முகவரி கொடுத்து நகரத்தின் ஒதுக்குப் புறத்தில் வைத்திருக்கிறார்கள். (இந்தியர்களும் இதற்கு விதி விலக்கல்ல)

வெள்ளையர்களின் தெருவுகளுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் மேன்மை தங்கிய அரசால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களில் பத்தில் ஒரு பங்கு கூட இந்த அடிமைகளின் பிராந்தியங்களுக்கென செயல்படுத்தப் படுவதில்லை. எப்பொழுதும் ஒரு மூன்றாந்தர தெரு நாய்களைப் போலத்தான் இவர்கள் நடத்தப் படுகிறார்கள். ஆனால் இவர்களின் உடல் உழைப்பை உறிஞ்சுவதில் வெள்ளைத் தோல்களுக்கு என்றுமே சிறிதும் தயக்கம் இருந்ததில்லை. அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவது போல் நடித்து அவர்களின் ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப் பூச்சிகளாகத்தான் கட்சி வேறுபாடின்றி ஒவ்வொரு அரசாங்கமும் இருந்திருக்கின்றது.

லண்டன் நகர வாசியான ரிச்சர்ட் ரோஸ் இப்படியாக எழுதுகிறார் “ நான் முப்பது வருடத்திற்கு முன், லண்டன் நகரின் டாட்டன்ஹாம் பகுதிக்கு குடி வந்தேன். (டாட்டன் ஹாம் என்பது வடக்கு லண்டனில் உள்ள கருப்பர்கள் மட்டுமே வாழும் பகுதி). அப்பொழுதெல்லாம் இது ஒரு உழைக்கும் வர்க்கத்தின் சொர்க்க புரியாகத் திகழ்ந்தது. எங்கு நோக்கினும் திறமை மிகுந்த வாலிபர்கள் தங்களின் உழைப்பினால் பொருளீட்டினார்கள். மாலை நேரங்கள் விளையாட்டிலும் ஆடல் பாடலிலும் கழியும். ஞாயிற்றுக் கிழமைகளில் தேவாலய ஆராதனைகளில் இன வேறுபாடின்றி கூட்டம் நிரம்பி வழியும். எல்லாம் கிரமமாயும் ஒழுங்காகவும்தான் போய்க் கொண்டிருந்தது” என்கிறார்.

உழைக்கும் மக்கள் நிறைந்த பகுதியாதலால், பணப் புழக்கம் அதிகமிருந்தது. இந்த பணப் பெருக்கத்தைக் கண்டு அரசாங்கம் பயந்ததோ என்னவோ, தெரியவில்லை, 80 களில் பதவியேற்ற பிரதமரான மார்கரெட் தாட்சரின் ஆட்சியிலிருந்து ஆரம்பித்து, ஜான் மேஜர், டோனி பிளேர் மற்றும் இப்போதைய காட்டன் பிரௌன் வரையிலான எல்லா ஆட்சியாளர்களுமே இந்த வாலிபர்களின் திறமை மிகு எழுச்சியை, அவர்கள் வியர்வை சிந்தி சம்பாதித்த பணத்தின் சக்தியை, இங்கிலாந்துக்கு எதிரான ஒரு எழுச்சியாகவே உணர்ந்தனர். தங்களது சொந்த மண்ணில் வேறொரு இனம் செழிப்பதா என நினைத்தார்களோ என்னவோ, 80 களின் ஆரம்பத்தில் இருந்தே கருப்பர்களை புறக்கணிப்பது மறைமுகமாக அரங்கேற ஆரம்பித்தது. (இந்த மார்கரெட் தாட்சர், இரண்டாம் உலகப் போர் சமயத்தில், ஐரோப்பிய நாடுகளில் யூதர்களுக்கெதிராக நடந்த வன்முறையில் தப்பிப் பிழைத்து இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்த ஒரு யூத குடும்பத்துப் பெண்மணி, யூதர்களுக்குள் உறைந்து கிடக்கும் நிற வெறியைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன???? தனது பிரதமர் பதவியை பயன்படுத்தி கருப்பர்களின் புறக்கணிப்பு என்பதை ஒரு அரசியல் நிலைப்பாடாக உருவாக்கிய புண்ணியம் இந்த புரட்சிப் பெண்மணியையே சாரும்)

இந்த அதிகார பூர்வ புறக்கணிப்பினால் கருப்பு இன மக்கள் வெகுண்டு எழுந்ததின் விளைவாக, இளம் வாலிபர்கள் அரசுக்கு எதிராக குழுக்களாக திரண்டனர். ஒரு தகுதியும் இல்லாத வெள்ளை வாலிபர்கள் வெறும் வெள்ளை நிறத்தவர்கள் என்ற ஒரே தகுதிக்காக அரசாங்கத்தால் உயர்த்திப் பிடிக்கப்படுவதும், அனைத்து தகுதிகளும் தன்னிடம் இருந்தும், இங்கிலாந்தின் இறையாண்மையை முழுவதும் மதிக்கும் ஒரு குடிமகனாக தான் வாழ முற்பட்டாலும், கருப்பு நிறத்தவன் என்ற ஒரே காரணத்துக்காக தான் புறக்கணிக்கப்படுவதும் ஒவ்வொரு கருப்பு இன வாலிபனின் நெஞ்சிலும் வஞ்சத்தை விதைத்தது. இதை எதிர்பார்த்தது போலவே அரசாங்கமும் இவர்களை சர்வ சௌகர்யத்துடன் சமூக விரோத கும்பல் என்று முத்திரை குத்தி, தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவ்வப்பொழுது வேட்டையாடி வந்திருக்கிறது.

இந்த வேட்டையாடலின் ஒரு பகுதியாகத்தான் கடந்த வார இறுதியில் போலீஸாரால் திட்டமிட்டு நடத்தப் பட்ட ஒரு படுகொலை. மார்க் துக்கன் என்ற 29 வயது வாலிபனை தெரு நாயை சுடுவது போல சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள். அதற்கு கண்டனம் தெரிவித்து, கருப்பர்களால் நடத்தப்பட்ட ஒரு அமைதி ஊர்வலத்தில் வெள்ளை போலீஸ் காவலர்களால் திட்டமிட்டு வன்முறை அரங்கேற்றப் பட்டு, வெள்ளை முகமூடி அணிந்த ஊடகங்களின் காமிராக்களில் கறுப்பர்களின் வெறியாட்டம் மட்டுமே படம்பிடிக்கப்பட்டு, கறுப்பர்களின் ஈனத்தனத்தைப் பாரீர் என உலக அரங்கில் வெட்கமில்லாமல் ஒளிபரப்பும் அளவுக்கு நிற வெறியானது வெள்ளையர்களையும், அவர்களது ஊடகங்களையும் ஆட்கொண்டுள்ளது. மார்க் துக்கன் ஒரு தீவிரவாதியாகவும், போதைப் பொருள் விற்பவனாகவும் வெள்ளைய ஊடகங்களால் அடையாளம் காட்டப் படுகிறார்.

உண்மையில், பொருளாதார ரீதியாக மிகவும் கேவலமான நிலைமைக்கு சீரழிந்து ஆட்டம் காணும் இங்கிலாந்து, சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் கருப்பர்களை அணுஅணுவாக சித்திரவதை செய்து வருகிறது. இந்த சிக்கன நடவடிக்கைகளால் அரசின் உதவித்திட்டங்கள் மற்றும் அரசின் இயல்பான மக்கள் நலப் பணிகள் கூட சிக்கனம் என்ற பெயரில் கருப்பர்களுக்கு மறுக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த சிக்கன நடவடிக்கைகளால் எந்த ஒரு வெள்ளையனும் பாதிக்கப்படவில்லை என்பது வேலை இல்லாத் திண்டாட்டத்தின் விகிதங்களைக் காணும் பொழுது தெளிவாகிறது. (முழுத்திறமையும் தகுதியும் உள்ள கருப்பர்களில் 30 சதவீதம் பேருக்கு வேலை இல்லை எனும் பொழுது, ஒரு தகுதியும் இல்லாத வெள்ளைய இளைஞர்களில் வெறும் 4 சதவீதமே வேலையற்றிருக்கிறார்கள்)
மார்க் துக்கனின் மரணம் ஒரு பிரளயத்தையே கிளப்பி, அதற்கு அடுத்தாற்போல் கருப்பர்களின் மீது ஏவி விடப்பட்ட வன்முறையால் லண்டன் நகரின் சில பாகங்கள் உண்மையிலேயே பற்றி எரியத் தொடங்கியிருக்கிறது. சரி, அது அவர்கள் நாட்டு பிரச்சனை என முகத்தைத் திருப்பிக் கொண்டு இந்தியா இருக்கவேண்டுமா???

•காமன்வெல்த் போட்டிகளுக்கான ஆயத்த கட்டுமான நடவடிக்கைகளின் போது, இன்னும் இந்தியா இந்தப் போட்டிகளுக்காக தயாராகவில்லை, இதுக்குத்தான் இந்தியா மாதிரி பன்னாடை பரதேசி நாடுகளிலெல்லாம் இந்த விளையாட்டை நடத்தாதீர்கள் என்று எத்தனை தரம் சொன்னோம் என வெள்ளைய ஊடகங்கள் முழங்கியது (ஆனால், அவர்கள் படம் பிடித்துக் காட்டியதெல்லாம், டெல்லி நகரத்தின் இயல்பான கட்டுமான பணிகளைத்தான், காமன்வெல்த் கிராமத்தின் பணிகளை அல்ல)

•அதே போல இந்தியாவும் இப்பொழுது 2012 ஒலிம்பிக் போட்டிகளுக்கு தனது வீளையாட்டு வீரர்களை அனுப்புவதை மறு பரிசீலனை செய்ய வேண்டும். நிறவெறி வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் லண்டன் நகரம் இந்திய வீரர்களுக்கு பாதுகாப்பானதா என ஒரு உயர் மட்டக் குழுவை அனுப்பி ஆய்வு செய்து வர வேண்டும்.

•தற்சமயம் இங்கிலாந்தில் விளையாடிக் கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணியினரை, வன்முறையிலும் வறுமையிலும் சிக்கித்தவிக்கும் இங்கிலாந்தின் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் விளையாட அனுமதிக்காமல் உடனடியாக திரும்ப அழைக்க வேண்டும்.

•இங்கிலாந்தில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரிகளை வன்முறை முடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பும்வரை இந்தியா திரும்ப அழத்துக் கொள்ள வேண்டும்.

•வன்முறை ஒழிந்து, இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை, இந்திய விமானங்களும், கப்பல்களும் இங்கிலாந்திற்கு செல்வதை தடை செய்ய வேண்டும்.

•இந்தியாவிற்கு வரும் இங்கிலாந்து குடிமகன்கள் எல்லோரும், கடினமான பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்பட்டு, தங்களது பின்னணி வரலாறின் குற்றமற்ற தன்மை நீரூபிக்கபட்ட பின்னரே, இந்திய மண்ணில் காலடி வைக்க அனுமதிக்கப்பட வேண்டும்.

வெள்ளையனின் காலணியைக் கூட (அது வெள்ளையனுடையது என்ற ஒரே காரணத்துக்காக) பூஜித்துப் போற்றும் இந்தியா இதை செய்யுமா???

Monday, August 1, 2011

படைப்பவனை பார்த்தோம்





புஷ்கர் என்றொரு நகரம், முறுக்கிய மீசைகளும், உருட்டிச் சுற்றிய தலைப்பாகைகளும், உறையில் உறங்கும் வாளும், நிமிர்த்திய நெஞ்சில் உறையும் வீரமும், உலர்ந்து கிடக்கும் மஞ்சள் நிற மண்ணின் ஒவ்வொரு துகளிலும் ஒவ்வொரு கதை புதைந்து கிடக்கிறது.

எந்த லக்கினத்தில், எந்த நட்சத்திரத்தில், எந்த சுபயோக சுப தினத்தில் என்று தெரியவில்லை, படைப்பின் தெய்வமான பிரம்மனுக்கு திடீரென ஒரு விபரீத ஆசை வந்ததாம். பூமியில் ஒரு யாகம் செய்ய வேண்டுமென தீராத ஒரு தாகம் ஏற்பட, எங்கு வைக்கலாம் யாகத்தை என ஒரு சர்வே நடத்திக் கொண்டிருந்தாராம். அப்பொழுதுதான் பூமியின் ஒரு மூலையில் இருந்து கடும் அபயக் கூக்குரல் எழ, என்ன விஷயமென அறிந்து வாருங்கள், என தன் துர, ரத, கஜ பதாதிகளை பணித்து விட்டார். அவர்களும் வந்து தீர விசாரித்து பார்த்ததில், இந்த மலைகளும் வனமும் சூழ்ந்த அழகிய இடத்தில் வஜ்ரநாசன் என்ற ஒரு அசுரன் மக்களை கொன்று குவித்து, அவர்களின் வளங்களையெல்லாம் சூறையாடிக் கொண்டிருக்கிறான் என்ற துக்க செய்தி கிடைத்தது. நான் படைத்த மனுக்குலத்திற்கொரு துன்பம் வர, நான் அமைதி காப்பதா என்ற ஒரு ஆதங்கம் அடக்க முடியாமல் எழ, பிரம்மன் போருக்கு கிளம்பினான். வஜ்ர நாசன் சுவடு தெரியாத படி வதம் செய்யப்பட்டான். இந்த யுத்தத்தில் கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று செய்குவோம் என்ற கொள்கை அடிப்படையில் மிக சுலபமாய் அசுரன் நசுக்கப்பட்டான்.
ஒரு தாமரை மலரில் வதம் செய்யும் மந்திரம் அடைக்கப்பட்டு, பூவுக்குள் இருக்கும் பூகம்பம் என்னவென தெரியாமலே அசுரனின் கரங்களில் மலரைக் கொடுத்துவிட, அவனும் தன் அசுரத்தனத்தில் பூவை பிரித்துப் பார்க்க, உள்ளே ஒளிந்திருந்த மந்திரம் வேலை செய்தது. அசுரன் அழிந்தான். (நம்புங்கள், இதுதான் தல புராணம், ஹலோ நான் சொல்றது அஜீத் புராணம் அல்ல, அந்த தலத்தின் புராணம்). எல்லாம் முடிந்து, பிரம்மன் யாகம் தொடங்கப் போகும் போது ஒரு சக்களத்தி சண்டை வேறு. (அதான கேட்டேன், ஒரு விஷயம் ஒழுக்கமா போயிகிட்டிருந்தா நடுவுல ஹீரோயின் புகுந்து அதைக் கெடுக்கலைன்னா கதை களை கட்டாதே).
பிரம்மனின் சகதர்மிணியான சரஸ்வதி, அன்றைய தினத்தில் அவசர வேலையாய் கலைச்சேவை செய்ய வெளிநாடு சென்றுவிட்ட காரணத்தால், யாகம் ஆரம்பிக்க வேண்டிய சுப தருணம் கைநழுவிப் போகிறதே என பிரம்மன் கவலை கொண்டான். எல்லாவற்றிற்கும் ஒரு பரிகாரம் உண்டல்லவா, அவள் இல்லையானால் என்ன இவளை வைத்து யாகம் நடத்து என ஒரு குர்ஜர் இனப் பெண்ணை பிரம்மன் முன் நிறுத்த, தனது படைப்பை கண்டு தானே வியந்து போய், பிரம்மனும் அந்த அழகிய அஸ்திரத்தால் விழுந்து போனான். அந்த அம்புதான் காயத்திரி. அவளை மணந்து, யாகம் முடித்து, நிம்மதிப் பெருமூச்சு விட்ட பிரம்மனுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. வெளிநாட்டில் கலைச்சேவை முடிந்து தன் நாதனைத் தேடி வந்த சரஸ்வதி, பிரம்மன் வேறொரு பெண்ணுடன் குடித்தனம் நடத்துவதைக் கண்டு, நெற்றிக்கண் திறந்தாள். ஒரு ரௌத்ர தாண்டவம் ஆடி விட்டு, பிரம்மனுக்கு ஒரு சாபமும் கொடுத்தாள். (பிரம்மனுக்கேவா….ஹூம், இந்த பொம்பளைங்க ஒரு ஆள விட்டு வைச்சாங்களா, என்னமோ போங்க). பிரம்மனைப் பார்த்து கடும் கோபத்தில் சொன்னாள் “ஏ பிரம்மா, நீ எனக்கு சக்களத்தி கொண்டு வந்த காரணத்தால், உனக்கு இந்த புஷ்கர் நகரைத்தவிர உலகில் எங்குமே கோவில்கள் இருக்காது, யாரும் உன்னை பூஜிக்க மாட்டார்கள்” என சபித்து விட்டாளாம். அதனால் தான் இந்தியாவில் புஷ்கரில் மாத்திரமே பிரம்மனுக்கு ஆலயம் உள்ளது.
ஆனால், இந்தோனேஷியாவின் பாலி தீவிலும், ஒரு பிரம்மன் கோவிலை கண்டிருக்கிறேன். அப்படியானால் பாலியில் இருக்கும் பிரம்மன் யார் என கேட்காதீர்கள். அவரது கதை இன்னும் கொஞ்சம் நீளமானது.
ராஜஸ்தானின் அஜ்மீர் நகரின் எல்லைக் கோடாய் விரிந்து நிமிர்ந்து நிற்கும் ஆரவல்லி மலைகளின் மீதேறி இறங்கினால், முதலில் நம்மை வரவேற்கிறது மானசரோவர் ஏரி. இந்த ஏரியில் உள்ள படித்துறைகளை மொத்தம் 52 பாகங்களாக பிரித்து ஒவ்வொரு சாதியினரும் தனது முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக கைங்கர்யம் செய்து கொள்ள வசதி செய்து பணம் பண்ணுகிறார்கள். குறைந்த பட்சம் 50 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கூட இங்கு ஆத்ம சாந்தி கிடைக்கிறது.


(ஆரவல்லி மலைத் தொடர்கள்)

மலைகளில் வளைந்து நெளிந்து செல்லும் பாதையெங்கும் புஷ்கர் நகரத்தின் ஹோட்டல் பெயர்கள் நம்மை வரவேற்கின்றன. மலைகளின் உச்சியில் ஒரு இடத்தில் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், உங்களை மக்காச்சோளம் சாப்பிட வைத்தே அனுப்புகிறார்கள். நீங்கள் செல்லும் காரை ஓட்டும் டிரைவருக்கு ஓசியில் மக்காச்சோளம் சாப்பிட வேண்டுமென்றால், நீங்கள் கண்டிப்பாக சாப்பிட்டாக வேண்டும்.




(மக்காச் சோளம், ரொம்ப முக்கியம்)


புஷ்கரின் உள்ளே நுழைந்தவுடன் நம்மை வலுக்கட்டாயமாக வரவேற்க சாலையில் திரியும் மாடுகள் காத்திருக்கின்றன. அவைகளுக்கு எல்லா வசதியும் செய்து கொடுக்கும் நகர நிர்வாகம், ஒரு இலவச கழிப்பிட வசதியும் செய்து கொடுத்தால் நலமாயிருக்கும். பல இடங்களில் ஹை ஜம்ப், லாங் ஜம்ப் – எல்லாம் செய்துதான் பிரம்மனை தரிசிக்க செல்ல வேண்டியுள்ளது. சற்றேரக் குறைய ஒரு கிலோமீட்டர் நீளத்துக்கு ராஜஸ்தானிய கைவினைப் பொருள்களின் கடைகளின் அணிவகுப்பை பார்வையிட்டபடி (மிக கவனமாய் எந்த பொருள்களையும் வாங்காதபடி) சென்றால், பரந்து விரிந்த மானசரோவர் ஏரி நம்மை வரவேற்கிறது.



(மானசரோவர் ஏரியும், பசுத்துறையும்)

நீங்கள் எந்த சாதி என எந்த மொழியில் வேண்டுமானாலும் சொல்லுங்கள், உங்கள் சாதிக்கென ஒரு பிராமணர் உங்கள் முன் உடனே தரிசனம் தருவார். உங்களை ஏரியின் பல துறைகளுக்கு அழைத்துச் செல்வார். இங்குதான் உங்கள் முன்னோர்களுக்கென நீங்கள் வேண்டுதல் செய்ய வேண்டும் என கண்டிப்பாய் கட்டளை இடுவதுடன், நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே ஒரு மக்கிப் போன மாவில் செய்த துர்நாற்றமடிக்கும் குருணை போன்ற வெள்ளை வஸ்துவை பிரசாதம் என்ற பெயரில் ஒரு பிளாஸ்டிக் பாக்கெட்டில் நிரப்பி, கூடவே ஒரு தேங்காய், கொஞ்சம் மஞ்சள், குங்குமம் என ஆத்ம சாந்திக்கான அனைத்து பொருள்களையும் குறைந்த விலையில் சிறந்த முறையில் உங்கள் கைகளில் திணித்திருப்பார். ஆயிரம் ரூபாயிலிருந்து ஆரம்பிக்கும் பேரம், உங்கள் திறமையை பொறுத்து ஏதாவது ஒரு ரூபாயில் வந்து நிற்கும். ஆனால், ஐம்பது ரூபாய்க்கு கீழே இங்கு ஆத்ம சாந்தி கிடைப்பதில்லை.

அதற்குப் பின் உங்களை அழைத்துச் செல்லும் பிராமணர், நீங்கள் எவ்வளவு ரூபாய் கொடுத்தீர்களோ அதற்கு தகுந்தாற்போல் சுலோகங்கள் சொல்லுகிறார். ஐம்பது ரூபாய்க்கு ஓரிரு நிமிடங்களில் முடிந்து விடும் சடங்கு, ஆயிரம் ரூபாய்க்கு அரை மணி நேரம் வரை கூட நீளுகிறது. நீங்கள் எந்த சாதி என உங்களுக்கே தெரியவில்லையென்றால், இருக்கவே இருக்கிறது பசுத்துறை. இதன் படிக்கட்டுகளில் அமர்ந்து அல்லது, உங்களுக்கு தைரியமிருந்தால், இந்த நீரில் முழுகி உங்கள் பாவங்களை போக்கிக் கொள்ளலாம். இந்த சடங்குக்கு இங்கிலாந்தின் ராணியும் விதிவிலக்கல்ல


இதற்குப்பின், பிரம்மனை தரிசிக்க நீங்கள் இன்னமும் விரும்பினால், அங்கு வேண்டுதல்கள் ஏறெடுத்து காவடி தூக்கி வரும் பக்த கோடிகளிடம் இருந்து தப்பித்து, எப்படியாவது கோவில் முகப்பிற்கு சென்று விடுங்கள்.




கோவில் முகப்பிலேயே நம்மை முகம் சுழிக்க வைக்க, அத்தனை வியாபாரிகளும் கடும் தவமிருக்கிறார்கள். கோவிலுக்குள் செருப்பு அணிந்து செல்லக் கூடாது. ஆமாம், நல்ல விஷயம்தான். ஆனால், கோவில் பிரகாரம் நாம் கால் வைக்குமளவு சுத்தமாயிருக்கிறதாவென்றால், அருவருப்புதான் மிஞ்சுகிறது. அத்தனை அசுத்தங்களுக்கு நடுவில்தான் பிரம்மனே வீற்றிருக்கிறார். அப்ப இந்த செருப்பை என்ன பண்ணலாம் என நீங்கள் யோசிக்கும்போதே, எங்க கடையில் விட்டுட்டுப் போங்க சார் என அன்பொழுக ஒரு சேர அழைக்கிறார்கள் பூஜை பொருள் வியாபாரிகள். அங்கு செருப்பை விட்டுவிட்டு நகர்ந்து போனால், நம்மை கெட்ட வார்த்தை சொல்லி திட்டுகிறார்கள். பூஜை பொருள்களை வாங்காமல் எதுக்குடா இங்க செருப்பை விட்ட, பன்னாடை, பரதேசி என இன்னும் அசிங்கமான வார்த்தை பிரயோகங்கள். ஒருவேளை எனக்கு ஹிந்தி தெரியாது என நினைத்தார்களோ தெரியவில்லை. ஒருவழியாய் அவர்களை சமாளித்து, பல படிகளை கடந்து மேலே ஏறிச் சென்றால், ஒரு சிறிய கர்ப்ப கிருகம். அதற்குள் காட்சி தருகிறார் இந்த படைப்பின் பிதா. அவரை காண்பதற்குள் பூசாரிகள் பிடித்து, நம்மை ஒரு தள்ளு தள்ள, அந்த படிக்கட்டுகளில் உருண்டு விழுந்து விடாமல், பத்திரமாக மீண்டும் இறங்கி விடுவது என்பது ஒரு இமாலய சாதனைதான். ஆனால், எல்லாருக்கும் முன்னால் வந்து நின்று கொண்டு ஒரு ஆயிரம் ரூபாய் தாளை மடித்து பூசாரி கையில் வைத்தால், பிரம்மனின் திவ்ய தரிசனம் நிச்சயமாகிறது.

ஆலயத்திற்குள் புகைப்படம் எடுக்கக் கூடாதாம், அதனால் ஏரிக்கரையில் பசுமாட்டின் துணையுடன் சும்மா அமர்ந்திருக்கும் இந்த பிரம்மனை கண்குளிர தரிசித்தோம்.






இது போக புஷ்கர் நகரத்தில் ஒட்டகசந்தை மிக பிரசித்தமாம். நாங்கள் சென்ற பொழுது ஒரு சில ஒட்டகங்களே அசை போட்டவண்ணம் படுத்திருந்தன.





(ஒட்டகங்களின் அருகில் நம் அமெரிக்க நண்பர்)

உணவு உண்ண ஒரு நல்ல ஹோட்டலாவது இருக்காதா என தேடி களைத்து விட்டு மறுபடியும் அஜ்மீர் வந்தே சாப்பிட்டோம்.

முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலோ அல்லது, நீங்கள் எப்பொழுதாவது வாழ்க்கையில் பாவம் செய்து விட்டோமோவென ஒரு சந்தேகம் வந்தாலோ, இந்த மானசரோவர் ஏரிக்கு வந்து ஒரு முறை பூஜை செய்து விட்டு வாருங்கள். உங்களுக்கு அருகிலேயே உங்களுடன் வாழ்ந்து வரும் பல வித உயிர்களின் படைப்பை பற்றிய சந்தேகங்கள் வரும் பொழுதெல்லாம், இங்கு வந்து இந்த பிரம்மனிடம் “ஏண்டாப்பா, நான் என்ன பாவம் பண்ணினேன், என்னை மாத்திரம் இந்த ஜென்மங்களுக்கு நடுவுல படைச்சுட்டயே” என முறையிட்டுச் செல்லுங்கள்.

Friday, May 27, 2011

புலிகளும் புள்ளிமான்களும்

எங்கிருந்து ஆரம்பிப்பது எனத் தெரியவில்லை. நீண்ட நாட்களாக நான் தொடர்ந்து வரும் பல பதிவர்களின் பதிவுகளை படிக்க முடியவில்லை. (நம்புங்க, ஆணி அதிகம்). இன்று தான் நேரம் கிடைத்து படித்தேன். நான் எப்பொழுதும் தொடரும் ஒரு பதிவர், ஏப்ரல் மாதத்தில் ஒரு பதிவை எழுதியிருக்கிறார். தான் ஒரு கல்லூரியில் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில், அங்கு தான் கண்ட ஆண் பெண் உறவுகளை விவரித்து, அந்த உறவுகளைக் குறித்த தனது விமர்சனங்களையும் முன் வைத்திருக்கிறார். புலிகள் என்றும் சைவமாவதில்லை என மிக எளிதாக ஒரு பாலரை நோக்கி விரல் நீட்டியிருப்பது அதிர்ச்சியளிப்பது மட்டுமல்லாமல் வேதனை தருவதாகவும் உள்ளது. To be Honest, அவர்களது பதிவுகளில் உள்ள முதிர்ச்சியையும், தெளிவையும் கண்டு எப்பொழுதும் மகிழ்ந்திருந்த நான் இத்தகைய ஒரு ஒருதலைப் பட்சமான குரூர குற்றச்சாட்டைக் கண்டு அதிர்ச்சியுற்றேன். ”ஆண்கள் விரிக்கும் வலையில்” என ஒற்றைவரியில், ஒரு சில வார்த்தைகளில் ஒட்டு மொத்த ஆண் வர்க்கமும் நயவஞ்சக நம்பிக்கை துரோகிகள், இரு வேடமிடும் வேஷதாரிகள் என ஒரு குடையின் கீழ் கொண்டு வந்திருப்பது இம்மியளவும் பொறுத்துக் கொள்ள முடியாதது சகோதரி.

கூடவே இன்னொரு பெண்பதிவரின் பதிவையும் படித்தேன். தமிழ்கவிஞர் ஒருவர் சொன்ன வெகுளித்தனம் என்ற ஒரு வார்த்தைக்காக ஒட்டு மொத்த ஆண் சமூகத்தையும் சாட்டையால் வெளுத்து வாங்கியிருக்கிறார். ஏன்? ஏன்? இங்கு அந்த கவிஞர் என்ன சொன்னார்? அது எப்படி புரிந்து கொள்ளப் பட்டது என்பதை விவாதிக்க நான் விரும்பவில்லை. ஆனால், ஒட்டு மொத்த ஆண் வர்க்கத்தின் மீதும் ஏன் இப்படி அபாண்டப் பழி சுமத்தப் படுகிறது என தெரியவில்லை. சமீபத்தில் ரயிலில் பயணம் செய்தேன். அதில் ரயில் பெட்டியில் சில பாதுகாப்பு விதிகளை ரயில்வே நிர்வாகத்தார் எழுதி ஒட்டி வைத்துள்ளனர். புகை பிடிக்காதீர்கள், மது அருந்தாதீர்கள் என்ற விதிகளோடு கூட பெண்களை தொந்தரவு செய்யாதீர்கள் எனவும் எழுதி, அதில பெண்கள் மீதான தொந்தரவு என்னென்ன என தெளிவாக ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் விவரித்திருந்தார்கள். அதில் குற்றங்கள் என வகைப்படுத்தியிருந்தவற்றை வாசித்தால் வயிற்றைக் கலக்குகிறது. ”பெண்களை உற்றுப்பார்ப்பது (stareing), அவர்கள் அருகில் சத்தமாக பேசுவது, பாட்டுப் பாடுவது”….. இப்படியாக அந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. எல்லா ஆண்களின் பார்வைகளுமே பெண்களை துகிலுரிந்து அம்மணம் ரசிக்கும் அருவருப்பு நிறைந்ததுதானா?? எப்பொழுதுமே ஒரு ஆண்பிறவி என்பது வக்கிரம் பிடித்த காமுகனாகத்தான் சித்தரிக்கப்படும் கேவலமான சமூகத்திலா வாழ்கிறோம்??? இந்த முரணான குற்றச்சாட்டுகளுக்கு பதிவுலகமும் விதிவிலக்கல்ல என பார்க்கும் பொழுது வேதனைதான் மிஞ்சுகிறது.

ஒருவேளை பதிவுலகமும், இணையமும் தரும் முகமறியா சுதந்திரம் தான் இந்த கொடூர குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளிக்கும் சௌகர்யத்தையும், உரிமையையும் தருகிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

என் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவம் :
நான் பணி செய்யும் இடத்தில் உள்ள ஒரு நண்பி, எனக்கு நன்கு பரிச்சயமானவர், அவ்வப்பொழுது பணி நிமித்தமான உரையாடல்கள், மரியாதை நிமித்தமான சம்பிரதாயமான நலம் விசாரிப்புகள் என எனது உரையாடல்கள் அவர்களுடன் நிகழும். சில சமயம் பணி சம்பந்தப்பட்ட விளக்கங்கள் கேட்பார், என்னால் முடிந்தவரை உதவி செய்வதுண்டு. அவரை வேறு துறைக்கு மாற்றியவுடன் எப்பொழுதாவது சந்திக்கும் பொழுது வெறும் நலம் விசாரிப்புகளோடும், பண்டிகை தின வாழ்த்துகள் என Skype chat – லும் பேசிக் கொள்வோம். அப்படியான உரையாடலின் ஒரு பகுதியின் தமிழாக்கம்.

வணக்கம் சார், எப்படி இருக்கீங்க???

நல்லாருக்கேன், நீங்க எப்பிடி இருக்கீங்க???

நலம். அப்புறம் என்ன சார் விசேஷம்???

ஒண்ணும் இல்லை. அப்பிடியே போயிட்டிருக்கு.

ஆமா, சார் உங்க டிபார்ட்மெண்ட்ல புதுசா யாரோ வந்திருக்காங்களாமே???

ஆமாம், நேத்துத்தான் வேலையில் சேர்ந்தாங்க.

ஆளு எப்பிடி சார்???

எப்பிடி இருந்தா என்னங்க, நம்ம கம்பெனில ஒருத்தர இண்டர்வியூ பண்ணி வேலைக்கு சேர்த்தாங்கன்னா, அவுங்க நல்லா வேலை செய்வாங்கன்னு தெரிஞ்சதுனால தான வேலைக்கு எடுக்கறாங்க, அப்புறம் எதுக்கு இந்த கேள்வி???

அய்யோ, அதையா கேட்டேன், ஆளு பாக்கறதுக்கு எப்பிடி சார், சூப்பர் ஃபிகரா???

ஹலோ, இந்த கேள்வி தேவையில்லாதது. என் பார்வையில உலகத்துல இருக்கற எல்லாருமே அழகானவங்கதான்.

அடாடடா, என்னா ஒரு தத்துவம், என்னா தத்துவம்.. உங்க கிட்ட படிச்சுக்க வேண்டியது நிறைய இருக்கு சார்..

சரி, அப்புறம் பேசுவோம், இப்ப கொஞ்சம் வேலை இருக்கு.

இந்த உரையாடல் முடிந்து சில நாட்கள் கழிந்தபின், நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். வேறு பெண்ணும் இன்னொரு ஆண் நண்பரிடம் ஒரு மூன்றாவது பெண்ணைப் பற்றி ஒரு கமெண்ட் அடிக்க, அதை ஆமோதிப்பது போல் இந்த ஆண் நண்பரும் எதையோ உளறி வைக்க, அது அந்த பெண்ணைப் பற்றி அவர் வலியப் போய் வக்கிரமாய் கமெண்ட் அடித்ததாய் திரிக்கப்பட்டு, கடைசியில் அவர் வேலையை விட்டு தூக்கி எறியப் பட்டார். இதைக் கேட்டவுடன் பகீரென்றது எனக்கு.

ஒன்று அல்லது இரண்டு பெண்கள் இப்படி வம்பு பேசுவதும், கதை திரிப்பதுமாக சுற்றித் திரிகிறார்கள் என்றால், உடனே எல்லா பெண்களையும் பார்த்து விரல் நீட்டுவது எவ்வளவு அபத்தமோ, அப்படியே எதோ ஓரிரு காமுகர்கள் உள்ளனர் என்பதற்காய், ஒட்டு மொத்த ஆண் உலகத்தையும் பார்த்து வெகு சுலபமாக ஓநாய் கூட்டம் எனச் சொல்லி கேவலப்படுத்துவதும் அபத்தம் தான்.

மனைவி சமைப்பதில் தலையிடுவது ஆணாதிக்கம், கணவன் ” இன்னைக்கு சப்பாத்தி சாப்பிட வேண்டும் போலுள்ளது, அந்த சுண்டக்கடலைல தேங்காய் போட்டு அம்சமா ஒரு குருமா வைப்பயே அதையும் செய்யும்மா” என்று மனைவியிடம் கேட்டால் கூட அது ஆணாதிக்கம்தான். என்ன சமைக்கணும்னு நீ எப்படி ஒருதலைப் பட்சமாக முடிவு செய்யலாம்?? இதெல்லாம் உன் ஆதிக்கத்திமிர் இல்லாம் வேறென்ன?? ” நீ அந்த மயில் கழுத்துக் கலர் புடவையில் ஜம்முனு இருக்க செல்லம்” என்று தன் மனைவியிடம் கணவன் சொன்னால், அது கூட அடக்கு முறைதான், ஏனெனில் ஒரு பெண்ணின் உடை அணியும் சுதந்திரத்தில் கூட ஆண் தனது கட்டுப்பாடுகளை விதிக்கிறான். இங்கு தனது ஆதிக்கத்தை வன்மையாக அல்ல, மிகவும் நாசூக்காக, நலம் விரும்பி போல் நடித்து தனது ஆளுமையை நிலை நாட்டுகிறான். யமுனா ராகவன் சொல்வது போல, ஆண் எப்பொழுதும் தன் மனைவியுடன் உறவு கொள்ளும் பொழுது கூட கேவலமாக அவளை கேலி செய்து கொண்டே புணர்கிறான், உடல் உறவு என்பது வெறும் ஆண்களின் உடல்பசி தீர்க்கும் ஒரு செயல் அவ்வளவே, அல்லது பெண்ணுக்கு உடல் பசி என்ற ஒரு உணர்வே கிடையாது. ஒவ்வொரு முறையும் தம்பதிகளுக்குள் உடல் உறவு நிகழ்வதும் கூட ஆணின் வேட்கை நிறைவு பெறவே அன்றி, பெண்ணுக்கு அதில் எள்ளளவும் வேட்கை என்ற பேச்சுக்கே இடமில்லை.

இதுதானா, பெண்ணுரிமைக்கான கூக்குரல், அல்லது இதுதான் நீங்கள் குறிப்பிடும் ஆணாதிக்கமா????

இரண்டே இரண்டு வினாக்கள்:

முளைத்திருக்கும் ஓரிரு விழலுக்காக ஒட்டு மொத்த வயலையும் தீக்கொளுத்துவதுதான் பெண்ணுரிமையா???

ஆணின் செய்கைகள் அனைத்துக்கும் ஆணாதிக்கம் என்ற ஒரே சாயம் பூசும் நீங்களே, உங்கள் பார்வையில் ஆணாதிக்க திமிரில்லாத ஒரு ஆண் எப்படி இருக்க வேண்டும் என வரையறை வகுத்து கொடுங்களேன்.

அடியேனின் இந்தப் பதிவில் இன்றைய பெண்களைக் குறித்த எனது பார்வையையும் சற்று வாசித்துப் பார்த்து விட்டு, இனிமேலாவது கல்லெறிவதற்கு முன், கூட்டத்தில் எறியாமல், குறி வைத்து எறியுங்கள் நண்பிகளே.

Tuesday, May 24, 2011

பரமண்டலங்களிலிருக்கும் எங்கள் பிதாவே - 24 மே 2011

சமச்சீர் கல்வித்திட்டம் எதற்காக கொண்டு வரப் பட்டதோ தெரியவில்லை பிதாவே. மக்களின் ஆங்கில மோகத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு ஆங்கில வழியில் கல்வி கற்றுத் தருகிறோம் என கவர்ச்சி விளம்பரம் செய்து மக்களின் பணத்தை கொள்ளை அடிப்பதோடு, எங்கேயோ குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்து, நரைத்த தலையும் தடித்த கண்ணாடியும் அணிந்த அறிவு ஜீவிகள் என அறியப்பட்ட இரண்டு மூன்று பேர் தெரிவு செய்யும் பாடத்திட்டங்கள்தான் இந்தியாவின் தலை சிறந்த கல்விப் பாடம் என சொல்லி, விற்பனை செய்யும் மெட்ரிகுலேசன் பள்ளிகளிலிருந்து எங்கள் குழந்தைகளை காத்தருள்வீர் பிதாவே.
இதை ஒழித்து விட்டு பயனுள்ள பாடங்களை மக்கள் பயில வேண்டும் என்ற சீரிய நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வித்திட்டத்திலும் தங்களின் சுய புராணங்களை புகுத்தி, எந்த நோக்கத்திற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கத்தையே கேலி செய்யும் அரசியல் வாதிகள் என்னும் கேவலமான அற்பப் பதர்களின் கொடிய பிடியிலிருந்து கல்வியை மீட்டுத் தாருங்கள் பிதாவே.
ஆனால், அதற்கும் ஒரு படி மேலே போய், பழைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்ற ஒரே காரணத்துக்காக அந்த திட்டத்தில் ஆயிரம் நன்மைகள் இருந்தாலும் அதை அப்படியே அழித்தொழிப்போம், எங்களின் அழித்தொழிப்பு நடவடிக்கைகள் முடியும் வரை மாணவர்கள் காத்திருக்கவும் என ஆணையிட்டு, பல கோடி மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடும் அயோக்கிய அரசியல் வியாதிகளிடமிருந்தும் எங்களை காத்தருள்வீர் பிதாவே.

சென்னையின் சிறப்பு என்று சொல்வது போல் ஒரு அரிய பெரிய நூலகம் “அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்” என்ற பெயரில் போன ஆட்சியில் ஒரு அருமையான நூலகம் அமைத்தார்கள் பிதாவே. உலகில் காணப்படும் பல அரிய நூல்களை சேகரித்து, வாசக தளங்களை விரிவு படுத்தி, பட்டதாரி மாணவர்களுக்கென ஒரு பெரிய பொக்கிஷத்தை வைத்துப் போயிருக்கிறார்கள். குறிப்பாக மருத்துவம், மற்றும் பொறியியல் மாணவர்களின் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத பல சர்வதேச புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன. அங்கு வந்து போகும் ஒவ்வொரு மாணவனும், இந்த அரிய பெரிய இமாலய முயற்சிக்காகவும், அதை சாத்தியமாக்கி இளம் மாணவ சமுதாயத்தினரின் பயனுக்காக இலவசமாக அர்ப்பணித்ததையும் பாராட்டி பாராட்டி புகழாரம் சூட்டி விட்டு போகிறார்கள்.

ஆனால் வழக்கம் போல காழ்ப்புணர்ச்சி கொண்ட ஒரு புதிய அரசும் அதன் மக்கள் விரோத கொள்கைகளும், உழவர் சந்தைகளை மூடி, சட்டசபை கட்டிடத்தை வெறுத்து ஒதுக்கி என வெறுப்பை உமிழும் அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் இந்த அறிவுக்களஞ்சியமான நூலகத்தை அண்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள் பிதாவே.

இந்த நாசா விஞ்ஞானிகள் எனும் மனநிலை பிறழ்ந்த பைத்தியக்கார கும்பல்களின் பிதற்றல்களுக்கும் உளறல்களுக்கும் ஒரு முடிவு கட்டுங்கள் பிதாவே.
சில இந்திய புராணங்களிலும் இதிகாசங்களிலும் அவதார புருஷனாக சித்தரிக்கப்பட்டும், இந்தியாவில் அதிகமாகவும் இன்னும் உலகின் சில பாகங்களிலும் தெய்வமாக வணங்கப்பட்டும் வருகிற இராமன் கட்டிய பாலம் இதுதான் என திடீரென ஒரு புகைப்படத்தை நாசா விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளார்கள் என மின்னஞ்சல்கள் பறந்து பரபரப்பை ஏற்படுத்தின. அதற்கு அடுத்ததாக, சொர்க்கம் என்றால் இதுதான் என்பதை கூட இந்த விஞ்ஞானிகள் செயற்கை கோள்களின் மூலமும் வான ஆராய்ச்சி மூலமும் கண்டு பிடித்து விட்டதாக கதை விட்டார்கள். நல்லவேளை அவர்கள் அப்படி கண்டு பிடித்த சொர்க்கத்துக்கு நேரடி விமான சேவையை துவக்கவில்லை. இப்பொழுது புதிதாக ஒரு சூரியப் புயல் உலகத்தை 2012 ல் தாக்கப் போவதாகவும், இதன் தாக்கம் 100 மில்லியன் ஹைட்ரஜன் குண்டுகளை விட அதிகமாக இருக்குமாம். அதனால் 2012 ல் உலகத்தின் பெரும் பகுதியோ அல்லது உலகம் முழுவதுமோ அழிந்து விடும் என புதிதாக கதை கட்டுகிறார்கள்.

உலகத்தின் அழிவிலிருந்தல்ல, இந்த பைத்தியக் காரர்களின் உளறல்களிலிருந்து எங்களை பாதுகாத்தருளும் பிதாவே.

Thursday, May 12, 2011

வெள்ளிக்கிழமை – 13 ம் தேதி – மூட நம்பிக்கை.




பதிமூன்று என்ற எண் பலராலும் ஒரு துரதிஷ்டவசமான எண்ணாகவே எண்ணப்பட்டு வந்திருக்கிறது. பண்டைய கால மன்னராட்சிகளில், மேலை நாடுகளிலும் சரி, கீழை நாடுகளிலும் சரி, இந்த எண் முடிந்த வரை தவிர்க்கப் பட்டிருக்கிறது. தங்கும் விடுதிகளில் 13ம் எண் அறை இருக்காது. வீதிகளை அல்லது வீடுகளை வரிசைப் படுத்தும் பொழுது கூட 13ம் எண் வீதியோ, வீடோ இருந்ததில்லை. அதிலும் மாதத்தின் பதிமூன்றாம் நாள் வெள்ளிக் கிழமையாக இருந்து விட்டால், அது மிகவும் துரதிஷ்டம் கொண்ட நாளாக கருதப் படுகிறது. முற்போக்கு சிந்தனைகளில் நாங்கள் எல்லோரையும் முந்தியவர்கள் என மார்தட்டிக் கொள்ளும் மேலை நாடுகளில் கூட இந்த மூடப் பழக்கத்தின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் ஏணியின் கீழே நடப்பது, வீட்டில் கண்ணாடி உடைவது போன்றவை இன்னும் ஒரு துரதிஷ்டவசமான நிகழ்வாகவே இங்கு கருதப் படுகிறது.

கணக்கியலின் படி பன்னிரண்டு என்பது ஒரு முழுமையான எண்ணாகவே இதுவரை கருதப் படுகிறது. உலக நாகரிகமே இங்கிருந்து தான் தோன்றியது என சொல்லப்படும் மெசபொடோமிய சமவெளிகளில் தோன்றிய கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்த நம்பிக்கை தொடர்கிறது. இஸ்ரவேலர்களின் அதாவது யூதர்களின் பன்னிரண்டு கோத்திரங்கள், இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு சீடர்கள், ஒரு கடிகாரத்தில் பன்னிரண்டு மணிக்கான சுழற்சி முறைகள், கிரக்க கடவுளர் பன்னிரண்டு பேர் என பட்டியலிட ஏராளம் தகவல்கள் உள்ளன. பதிமூன்று என்பது பன்னிரண்டிலிருக்கும் சமவிகித வகுபடும் தன்மையை குலைக்கும் ஒரு எண் என்பதால் இயல்பாகவே இது கணக்கியலாளர்களால் வெறுக்கப்பட்டது.

இந்தியாவில் இந்த வெள்ளிக்கிழமை பதிமூன்றாம் தேதி ஒரு அபசகுனமாக கருதப் படுவதில்லை எனவே நான் நினைக்கிறேன். ஆனாலும் நாம் பெருவாரியாக பின்பற்றும் கிரிகோரியன் காலண்டரின் படி, ஞாயிற்றுக் கிழமைகளில் ஆரம்பிக்கும் ஒவ்வொரு மாதத்திலும் 13ம் தேதி வெள்ளிக் கிழமைதான் வரும். ஒரு சில வருடங்களில் இப்படி இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கூட வருவதுண்டு. ஆனால், பெருவாரியாக வருடத்தில் ஒரு மாதம் கண்டிப்பாக வெள்ளிக் கிழமை பதிமூன்றாவது தேதியாக இருக்கும்.
இந்த மூட நம்பிக்கை எவ்வாறு வளர்ந்தது என்று ஆராய்ந்தால் பல சுவராஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன.

முதல் நூற்றாண்டில், இயேசு கிறிஸ்துவின் கடைசி விருந்து இதற்கு ஒரு காரணமாக அமைந்தது என்கிறார்கள். இன்றும் இந்த கடைசி விருந்தின் படங்களில் பார்த்தீர்களென்றால், இயேகிறிஸ்துவோடு சேர்ந்து பன்னிரண்டு சீடர்களுமாக பதிமூன்று பேர் அமர்ந்திருப்பார்கள். அப்படி அமர்ந்து அவர்கள் சாப்பிட்டது ஒரு வியாழக்கிழமை இரவு. இப்படி பதிமூன்று பேர் ஒன்று கூடி சாப்பிட்டபின், அடுத்த நாளான வெள்ளிக்கிழமையன்று பதிமூன்றாவது நபரான இயேசு கிறிஸ்து சிலுவையிலறையப் பட்டார் என்பதினால் இதை துரதிஷ்டமாக கருதி வந்திருக்கிறார்கள்.

காலச் சக்கரத்தை கொஞ்சம் டாப் கியரில் போட்டு ஒரு பத்து நூற்றாண்டுகள் கடந்து வந்தோமெனில், பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் கிறிஸ்தவ மதம் எனும் ஆன்மீக தத்துவம் ஐரோப்பிய உலகத்தின் ஆன்மீக பசிக்கு சுவையான தீனியாகிப் போன பொழுது, புனிதர்களின் அணிவகுப்புகள் ஐரோப்பாவெங்கும் தொடங்கியது, இயேசு கிறிஸ்துவின் சீடர்களோ அல்லது கிறிஸ்தவ மதத்தின் பெயரால் சமுதாயத்தில் நற்பெயரெடுக்கும் எந்த மனிதனும் புனிதனாக கருதப்பட்டான். கிரேக்க கடவுளர்களின் பழைய புராணங்களையே கேட்டு காது புளித்துப் போன ஐரோப்பியர்களுக்கு, இந்த புது வரவு ஒரு கவர்ச்சியை கொடுத்தது. எப்பொழுதுமே புனிதர்கள் என்றால் அவர்களுக்கென ஒரு தல புராணம் இருக்க வேண்டுமல்லவா, அப்படி ரிஷி மூலம் பார்த்ததில், பெருவாரியான புனிதர்கள் பிறந்த எபிரேய பூமி, (இன்றைய எருசலேமும் அதை சுற்றியுள்ள பகுதிகளும்) ஒரு புனித தலம் எனும் அந்தஸ்த்தை பெற்றது.

அவ்வளவுதான், எம்பெருமானின் திருவருளால் புனித யாத்திரைகள் தொடங்கி விட்டன. முதலில் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியமான இந்த யாத்திரைகள், பிற்பாடு ஒரு கௌரவ சின்னமாக பரிணாம வளர்ச்சி பெற்று விட்டது. இப்படி வந்த யாத்ரீகர்களிடத்தில் காணப்பட்ட பணமும் நகையும் கொள்ளைக்காரர்களின் கண்களில் பட, சுலப வேட்டையாக வழிப்பறியும், அதற்கான கொலை ஒரு இலவச இணைப்பாகவும், அதற்கடுத்த கற்பழிப்பு ஒரு கிளுகிளு அன்பளிப்பாகவும் மாறிப்போனது. இந்த தொந்தரவுகளினால் புனித தலங்களிலும் , யாத்ரீகர்களின் வழியெங்கும் தேங்காயும், சூடமும், திருநீறும் விற்ற புனித வியாபாரிகளின் வியாபாரம் படுத்து விடவே, அவர்கள் இதற்கென ஒரு பாதுகாப்பு படையை உருவாக்கினார்கள். இந்தப் படையிலிருந்த வீரப் பெருந்தகைகள் (Knights Templer என்பதற்கு கூகிளாண்டவர் இந்த தமிழ்ப் பெயரைத்தான் தருகிறார்) யாத்ரீகர்களுக்கு வழிப்பறியிலிருந்து பாதுகாப்பு கொடுப்பதில் பெருமளவு வெற்றி பெற்றார்கள்.

காலப் போக்கில் இந்த பெருந்தகைகள் ஒவ்வொரு நாட்டிலும் தங்கள் அலுவலகங்களை திறந்து, யாத்ரீகர்கள் அந்தந்த நாட்டில் தங்கள் சொத்துக்களை இவர்களிடம் ஒப்படைத்து விட்டு அதற்கான பிரமாண பத்திரங்களுடன் தங்கள் யாத்திரையை தொடங்கலாமென்றும், வழியில் செலவுக்கு வேண்டுமென்கிற இடத்தில் இந்த பத்திரங்களை காட்டி அதற்கென உள்ள அலுவலகங்களில் காட்டி பணம் பெற்றுக் கொள்ளலாமென்றும் ஒரு ப்ரீ பெய்டு சிஸ்டம் உருவாகினார்கள். மடியில் கனமில்லாமல் யாத்திரை செல்ல இது ஒரு சிறந்த வழியாயிருக்கவே, மக்களின் அமோக ஆதரவு இவர்களுக்கு கிடைத்தது. ஆனால் யாத்திரை போனவர்களில் பலர் திரும்பாமல் போனதினாலும், திரும்பி வந்த பலரின் சொத்துக்களுக்கு பராமரிப்பு செலவு என கணிசமான தொகை வசூலித்ததாலும், பெருந்தகைகள் பணத்தால் கொழுத்தார்கள். குளித்தார்கள்.

இந்த பெருந்தகைகளின் வீரமிகு செயல்களால் பல அரசர்களும் இவர்களை தங்களுக்கென உபயோகித்தது ஒரு கிளைக்கதை. பதினாலாம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் பரம வைரியாய் இருந்து நாளொரு சண்டையும் பொழுதொரு பஞ்சாயத்துமாக அரசாண்ட பிரஞ்சு மன்னன் நான்காம் பிலிப்பு, இவர்களுக்கு ஏடாகூடமாக கடன் பாக்கி செலுத்த வேண்டியுருந்தது. ஒரு பக்கம் பெருந்தகைகள் பணத்துக்காக நெருக்கடி தர, மறுபக்கம் திறமையில்லாத ஆட்சியாலும் திட்டங்களில்லாத போர்களாலும் நாட்டின் பொருளாதாரம் பாதாளத்துக்கு போய் விட, நான்காம் பிலிப்பு ஒரு வஞ்சக திட்டம் தீட்டினான். இந்த பெருந்தகைகளையெல்லாம் சுவடில்லாமல் துடைத்து விட்டால் தன் சுமை பெருமளவில் குறையும் என்பதற்காக, அப்போதைய போப் ஆண்டவர் ஐந்தாம் கிளமெண்டையும் சரிக்கட்டினான். பெருந்தகைகள் மதம் மற்றும் தேச துரோகிகள் என குற்றம் சாட்டி அனைவரையும் கழுவிலேற்றி, தீயிலிட்டு என பல வகைகளிலும் கொல்லும்படி போப்பின் முத்திரை பெற்ற கடிதங்களை வெளியிட்டான். பெருந்தகைகள் பணத்திமிரில் சிலுவையின் மேல் துப்பினார்கள், சிலுவையை மிதித்தார்கள், ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதோடல்லாமல் இளைஞர்களை இந்த பழக்கத்திற்கு அடிமையாக்குகிறார்கள், கிறிஸ்துவை இகழ்கிறார்கள் என பல பொய்குற்றங்களையும் அதற்கான பொய் சாட்சிகளையும் மிக கவனமாக ஏற்படுத்தினான்.

குற்றம் (பொய்) சாட்சியோடு நிரூபிக்கப்படவே மக்களும் நடுநிலை வகித்து விட்டார்கள். பெருந்தகைகளுக்கு ஆதரவில்லாமல் போனதால், அவர்களை தீயிலிட்டுக் கொளுத்துவது எளிதாகப் போயிற்று. பின்னாளில் மன்னனின் வஞ்சக திட்டம் வெளிப்பட்டதென்பது வேறு கதை. இப்படி இந்த பெருந்தகைகளை அழிக்கும் ஆணை வெளியிடப்பட்டது 1307 ம் ஆண்டு அக்டோபர் மாதம் பதிமூன்றாம் தேதி, வெள்ளிக்கிழமை. பின்னாளில் பெருந்தகைகளின் தயாள குணமும், வீரமும், மன்னனின் வஞ்சகமும் மக்களுக்கு தெரிய வந்தபின் அவர்களது மரணத்தை தியாகமெனவும், அந்த அழித்தொழிப்பு நாளை துக்கமும் துயரமும், துரதிஷ்ட வசமான நாளாகவும் கருத ஆரம்பித்ததின் விளைவே இந்த வெள்ளிக்கிழமை பதிமூன்றாம் தேதி, அபசகுனமெனும் மூட நம்பிக்கை. இன்னும் இதற்கு பலம் சேர்க்கும் பல நம்பிக்கைக்கள் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கால கட்டத்திலும் நிகழ்ந்தது, நிகழ்கிறது, நிகழப் போகிறது….

இதோ தமிழ்நாட்டிலும் நாளை ஒரு வெள்ளிக்கிழமை, பதிமூன்றாம் தேதி, மிகவும் துரதிஷ்டவசமான நாளாக இருக்கப் போகிறது, ஆமாம் நாளைக்குத்தான் தேர்தல் முடிவுகள் வரப் போகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எந்த கும்பல் நம்மை கொள்ளையடிக்கப் போகிறது, என்னென்ன இலவசங்களால் மக்கள் வரிப்பணம் வீணாக்கப்பட்டு, மறுபடியும் ஒரு முறை இலவசங்களுக்காக கையேந்தி பிச்சைக்காரர்களாகப் போகிறோமோ தெரியவில்லை,

ஐயா, பெருந்தகைகளே எங்கே போனீர்கள், விரைந்து வாருங்கள், அரக்கர்கள் அழிந்து விட்டால், அசோகவனத்தில் அனுமன் கூட அழகு பருக மட்டுமே வருவான். அழிய வேண்டியது அரக்கர்கள் தான், அசோக வனமல்ல.

Monday, May 9, 2011

பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே.... 9/5/2011

மனித இனத்திற்கு விரோதியாக, மதத்தின் பெயரால் அப்பாவி மக்களை கொன்று குவிப்பதும் ஒரு தெய்வீக செயலே என நியாயங்கள் கற்பித்து, தான் பிறந்து வளர்ந்த மண்ணின் மேம்பாட்டுக்கென பாடுபட்டு வியர்வை சிந்த வேண்டிய இளசுகளின் மொத்த மன மற்றும் மனித வளத்தை தீவிர வாத நோக்கத்துக்காக திசை திருப்பி ரத்த ஆறு ஓட வைத்த மகானுபாவர்களின் மரணம் கூட மாபெரும் தியாகமாக திரிக்கப்படும் அவலத்திலிருந்து எங்களை காப்பாற்றுங்கள் பிதாவே. அப்படியானால் அவனை கொன்றவன் யோக்கியனா என்ற விவாதத்திற்கு சொம்பு தூக்கிக் கொண்டு வரும் புள்ளி விவர புலிகளிடமிருந்தும் எங்களை காப்பாற்றுங்கள் பிதாவே.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

டாஸ்மாக் என்னும் சுனையிலிருந்து பெருக்கெடுத்து ஓடும் நதிப் பிரவாகத்தில் குளித்து, திளைத்து நீந்திக் கரையேறி, இலவச தொலைக்காட்சி பார்த்து விட்டு, ஒரு ரூபாய் அரிசியில் பொங்கித்தின்று, பொங்கலுக்கும் தீபாவளிக்கும் இலவச சேலையும், வேட்டியும் வாங்கி உடுத்தி மகிழ்ந்து, மாதம் மும்மாரி வேண்டாம், பெய்கிற ஒரே மாரியில் வெள்ளக் காடுகளுக்குள் தீவு வாழ்க்கை வாழ்வதைக் கண்டு, மனம் இளகி ஆளும் ஆண்டவக் குடும்பம் தரும் வெள்ள நிவாரண நிதிகளுக்கென கையேந்தி நின்று என நாங்கள் வாழும் பிச்சைக்கார வாழ்க்கை போதும் பிதாவே. வரும் 13ம் தேதிக்கு மேல் புதிதாக வரும் ஆட்சியாளர்களாவது மேலும் இலவசங்கள் தந்து எங்களை மேலும் பிச்சைக்காரர்களாக்காமல் காத்தருளுங்கள் பிதாவே. வெள்ள நிவாரணம் தருவதை விட வெள்ளத்தை வடிந்தோடச் செய்ய ஒரு நிரந்தர வடிகாலாவது கட்டச்சொல்லுங்கள் பிதாவே.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


ஆமாம், ஒவ்வொரு வருடம் போலவே இந்த வருடமும் வெய்யில் கொடுமை உக்கிரமாக உள்ளது. ஆனால், ஒவ்வொரு கோடை காலத்திலும், ”கோடையில் குளுகுளுவென இருப்பது எப்படி??” என ஒவ்வொரு ஊடகத்திலும் தொடை தெரிய உடையணிந்து ” நான் வெள்ளரி பழத்தில் உள்ளாடை அணிவேன், தர்ப்பூசணியை தலையில் கவிழ்ப்பேன், பசலைக்கீரையை பால் போல் குடிப்பேன், பச்சை மிளகாயால் பல் விளக்குவேன் ” என அருவருக்கும் பேட்டி கொடுக்கும் நடிகைகளிடம் இருந்து எங்களை பாதுகாத்தருளும் பிதாவே.

இது போதாதென்று “ வெய்யிலின் கொடுமையிலிருந்து தப்பிப்பது எப்படி??” என கேள்வி மட்டும் கேட்பதோடு நிற்காமல் அதற்கு பதிலாக, ஒரு நாளைக்கு முப்பது லிட்டர் தண்ணீர் குடியுங்கள், நாற்பது முறை தலைக்கு குளியுங்கள், கண்ணை மூடிக்கொண்டு சாலையில் நடவுங்கள், காதின் வழியாக சுவாசம் செய்யுங்கள், வாழைநாரில் ஆடை அணியுங்கள், புளியம் பூவின் பொரியல் சாப்பிடுங்கள் என சகட்டு மேனிக்கு அறிவுரை சொல்லி ஈ மெயில் அனுப்பும் நாதாரி நண்பர்களிடமிருந்து எங்களை காத்தருள்வீர் பிதாவே …

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


ஒவ்வொரு வருடமும் தவறாது வருகைதரும் வைகாசித் திருவிழாப் போல, ஒவ்வொரு முறையும் பெருவாரி இந்தியனின் நேரத்தையும் பணத்தையும் கொள்ளையடித்து, எங்களையெல்லாம் கூத்தாடிகளாக்க கங்கணம் கட்டிக் கொண்டு எங்களை ஆக்கிரமித்து நிற்கும் இந்த IPL என்னும் கொடிய நோயின் வீரியத்திலிருந்து எங்களை உடனடியாக காப்பாற்றுங்கள் பிதாவே…

Wednesday, April 13, 2011

தேர்தல் ஆணையத்தின் தகிடுதத்தம்


இன்று வாக்களிக்க சென்றிருந்தேன். வாக்குச் சாவடிக்கு செல்வதற்கே பல தடைகளை தாண்டி செல்ல வேண்டியிருந்தது. வழியிலேயே தடுத்த கட்சிக்காரர்கள் மாம்பழத்தை கையில் வைத்திருந்தனர். சார், மாம்பழத்துக்கு ஓட்டுப் போட்டுட்டு வந்து மாம்பழம் வாங்கிக்கோங்க என்றனர். அதற்கு சற்றுப் பக்கத்தில், சுத்தியல் அரிவாள் சின்னத்தினர், நல்ல வேளை இவர்கள் அரிவாள் எதுவும் காண்பிக்கவில்லை, அல்லது ஓட்டுப் போட்டுவிட்டு வந்து அரிவாள் வாங்கிக் கொள் என சொல்லவில்லை.


ஓட்டுச்சாவடியில் நுழைய முடியவில்லை. எங்கு பார்த்தாலும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி மக்கள் செய்த அட்டூழியம் தாங்க முடியவில்லை. பணியிலிருந்த போலீஸாரின் நிலை பரிதாபமாயிருந்தது. கொளுத்தும் வெய்யிலில் அவர்கள் ஒரு வாய் தண்ணீருக்காக தவித்துக் கொண்டிருந்தார்கள்.


வாக்குச்சாவடி விவரங்கள், மற்றும் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னங்கள் ஆகியவை மிக மிக தெளிவாக மக்கள் பார்வையில் படும்படி வைக்கப் பட்டிருந்தன. மின்னணு வாக்கு இயந்திரத்தை எப்படி உபயோகிப்பது என்பதையும் தெளிவாகவே எழுதி அங்கங்கே ஒட்டி இருந்தனர். மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று.




பணியிலிருந்த தேர்தல் பணியாளர்கள் அனைவரும் மிகவும் கனிவாக பேசினார்கள். பாவம் முந்தைய நாள் இரவே அவர்களை அந்த பள்ளியில் தங்கச் சொல்லி விட்டார்களோ என்னவோ, இரவில் அவர்கள் பட்ட அவஸ்தைகளான கொசுக்கடியும், குளிக்க/குடிக்க தண்ணீர் இல்லாமை போன்ற குறைகளை ஒரு மேற்பார்வை அதிகாரியிடம் ஆவேசத்தோடு உரத்த குரலில் ஒருவர் கொட்டிக் கொண்டிருந்தார். ஆனால் வாக்களிக்க வந்த மக்களிடம் மிகவும் கனிவோடு நடந்து கொண்டனர்.


வாக்குச் சாவடியில் நுழைந்ததும் நம் அடையாள அட்டையை ஒருவர் சரி பார்க்கிறார். பின் அந்த அடையாள அட்டையுடன் தொடர்புடைய எதோ ஒரு கூறிப்பிட்ட எண்ணை உரத்துச் சொல்கிறார். இவர் இப்படி சொன்னவுடன் இந்த அலுவலர்களுக்கு பின்னே அமர்ந்திருக்கும் கட்சிப் பிரதிநிதிகள் அந்த எண்ணை குறித்து வைத்துக் கொள்கின்றனர், இன்னொரு அலுவலர் ஒரு குறியீட்டு எண்ணுடன் நமது பெயரை எழுதிக் கொண்டு, நம்மிடம் கையெழுத்து வாங்குகின்றனர். பிறகு கை விரலில் மை வைக்கின்றனர். மை வைத்து விட்டு அதே மை வைக்கும் நபர் ஒரு துண்டு சீட்டை நம் கையில் கொடுக்கிறார். அதில் என்ன எழுதி இருக்கிறது என பார்க்கும் முன்பே அதை நம் கையில் இருந்து ஒருவர் பிடுங்கிக் கொண்டு தன் முன்னே வைக்கப் பட்டிருக்கும் ஒரு இயந்திரத்தில் ஒரு பொத்தானை அழுத்துகிறார். அழுத்தி விட்டு அந்த மறைவிடத்தில் இருக்கும் இயந்திரத்தில் உங்கள் வாக்கை பதிவு செய்யுங்கள் என சொல்கிறார். இங்கு தான் வில்லங்கம் ஆரம்பமாகியது.


நான் எனக்கு 49 O வில் எனது வாக்கை பதிவு செய்ய வேண்டுமென்றும், இங்கு காண்பிக்கப்பட்டிருக்கும் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்றும் சொன்னேன். அங்கு அமர்ந்திருந்த அத்தனை பேருடைய முகமும் “பொன்னியின் செல்வனி”ல் குறிப்பிடப்பட்டிருக்கும் ”இடும்பன் காரி” யின் முகத்தைப் போல ஒரு விகார முகமாயிற்று. “டேய், வந்தமா, கையில மை வெச்சமா, எதாவது ஒரு பொத்தனை அழுத்தனமா, ஓட்டுப் போட்டமான்னு, போயிட்டே இருக்காம, அது என்னடா புதுசா 49 O, அது இதுன்னு எத்தனை பேர்டா இப்பிடி கிளம்பி இருக்கீங்க” என்பது போல் அந்த அலுவலர்கள் அனைவரும் பார்த்தனர். அதற்கும் மேலாக அந்த கட்சிப் பிரதிநிதிகள் அனைவரும் தங்களிடம் இருந்த பேப்பரில் என் புகைப்படம் முகவரி ஆகியவற்றை தனியாக வட்டமிட்டு வைத்துக் கொண்டனர். ”ஆஹா, 49 O வா, வாடா மகனே வா, நாளைக்கு ஜெயிக்கப் போறது எங்க அண்ணந்தான், அப்பறம் வருவயில்ல, சார் அது வேணும், சார் இது வேணும்னு வருவயில்ல, அப்ப வெச்சுக்கறம்டா, இப்ப 49 O போட்டுட்டு போ” என ஒரு ஏளனத்துடன் பார்த்தனர்.


அப்புறம் அந்த தேர்தல் அதிகாரி என் பெயரும் அதற்கு நேராக எழுதி இருந்த எதோ ஒரு குறியீட்டு எண்ணுக்கு பக்கத்திலேயே “ Refused to Vote” என ஆங்கிலத்தில் எழுதி இதில் கையெழுத்திடுங்கள் என்றார். ஆனால், நான் விதிகளின் படி நீங்கள் எனக்கு படிவம் 17 A தர வேண்டுமே, அதை தாருங்கள் என கேட்டாலும், “சார் இதுல கையெழுத்து போடறதுன்னா போடுங்க, இல்லைன்னா இப்பிடியே போயிட்டிருங்க” என்பது போல் பேசினர். வேறு வழியில்லாமல், அவர்களுடன் மேலும் வாதம் செய்ய விரும்பாமல் அதில் கையெழுத்திட்டு விட்டு வந்தேன்.


தேர்தல் ஆணையத்திற்கு என் கேள்விகள்:


1. வாக்குப் பதிவு எந்திரத்தில் வாக்கு எப்படி பதிவு செய்வது என்பதை சுவரொட்டியின் மூலமாக விளக்கும் நீங்கள், ஒருவேளை வாக்குப் பதிவு செய்ய விரும்பாத பட்சத்தில் ஒரு குடிமகன் என்ன செய்ய வேண்டும் என சொல்லாதது ஏன்?


2. இப்படி நீங்கள் சொல்லாமலிருப்பது மக்களுக்கு இந்த 49 O விதி பற்றிய விழிப்புணர்வு சிறிதும் ஏற்பட்டு விடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காகத்தானே? அப்படி இல்லாவிடில் தைரியமாக 49 O வைப் பற்றியும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தாதது ஏன்?



3. தேர்தல் அலுவலர்கள் 49 O விற்கென விண்ணப்பிக்கும் ஒரு நபரிடம் அதற்கான படிவங்களை தர மறுப்பதுடன், அத்தகைய நபர்களை உடனே வாக்குச் சாவடியிலிருந்து வெளியேற்றுவதில் ஏன் அவசரம் காட்டுகிறார்கள்? அத்தோடு மட்டுமல்லாது எந்த விதத்திலும் ஆவணப்படுத்த முடியாத காகிதங்களில் ஏமாற்றி ஏன் கையெழுத்து வாங்குகிறார்கள்?


4. இப்படி செய்வதினால், எனது கூற்றுப்படி கொஞ்சமும் தகுதியில்லாத கறைபடிந்த வேட்பாளர்களுக்கு துணை போவதுடன், இந்திய இறையாண்மைக்கு எதிராக தனது அதிகாரத்தை பயன்படுத்தி குற்றம் செய்கிறீர்கள் என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா? அதாவது ஒரு குடிமகனுக்கு வாக்களிக்க விருப்பமின்மை என்னும் உரிமையை பல அர்த்தமற்ற காகிதங்களில் கையெழுத்து வாங்கி விட்டு பொய் சொல்வதன் மூலம் உங்களது அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு சராசரி குடிமகனது உரிமையை நிராகரிக்கிறீர்கள் என ஒத்துக் கொள்கிறீர்களா?


5. வாக்குச்சாவடியில் உங்களது நாற்காலிகளுக்குப் பின்னே கட்சிப் பிரதிநிதிகள் என்ற பெயரில் அமர வைக்கப் பட்டிருக்கும் நபர்களை அனுமதிப்பதும், யார் யார் வாக்களிக்கிறார்கள், அவர்கள் எந்த விதமான வாக்களிக்கிறார்கள் என அவர்களுக்கு தெரிய வைப்பதும், ஒரு தனி மனித உரிமைக்கு விரோதமான செயல் என்பதை தெரிந்தே தான் செய்கிறீர்களா?


இத்தனை கேள்விகளோடு நானும் வாக்குச்சாவடியிலிருந்து வெளியேறினேன்.


கடைசியில் கையில் கறை பட்டதுதான் மிச்சம். விளம்பரங்களில் வரும் கறை நல்லதோ கெட்டதோ, இந்த கறை ஏன் என் விரலில் பட்டதோ என இன்னும் நொந்து கொண்டிருக்கிறேன்.

Tuesday, April 12, 2011

ஜுகல் பந்தி 12–4-2011 - குண்டுக்கு தெரியுமோ குருதியின் நிறம்??

குண்டுக்கு தெரியுமோ குருதியின் நிறம்??

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரம், வசதி வாய்ந்தவர்கள் சொற்பமாயும், நடுத்தர வர்க்கத்தின் சொர்க்கமாகவும், தென் அமெரிக்க நாடுகளுக்கென ஒரு தனி முகவரி தாங்கிய கேளிக்கை நகரம். முற்றும் திறந்த குலுங்கும் மார்புகளும், இடுப்புக்கு கீழே ஒரு சாண் துணியும் அணிந்து, இந்நகரத்து வீதிகளில் நடக்கும் கார்னிவல் எனும் விழா ஊர்வலங்களில் குதித்துக் கும்மாளமிடும் தென் அமெரிக்க கோதுமை நிற அழகிகளை பல படங்களில் பார்த்திருப்பீர்கள். கால்பந்தாட்ட ரசிகர்களல்ல, வெறியர்கள் நிறைந்த நகரம்.

கடந்த 7ம் தேதி இந்நகரத்தில் சூரியன் சோம்பல் முறித்து கிரணம் பாய்ச்ச தலை நீட்டிய பொழுது, இந்நகரத்தின் உயர்ந்த மலையின் மீது தன் இரு கரங்களையும் விரித்து கால்கடுக்க நின்றபடியே உள்ள இயேசுகிறிஸ்துவை சூழ்ந்திருந்த பனிப்படலம் பின்னங்கால் பிடறியில் பட விலகி ஓடியது. சரியாய் காலை 8 மணிக்கு இந்நகரத்தின் மத்திய தர மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்த ஒரு பள்ளிக்கு அதன் முன்னாள் மாணவனான வெலிங்டன் மெனோசிஸ் வந்தான். பள்ளியின் 40 வது ஆண்டு விழாவை ஒட்டி முன்னாள் மாணவனான தான் அங்கு மாணவர்களுக்கென சிறப்புரையாற்றப் போவதாக பொய் சொல்லி விட்டு வாயில் காப்போனை கடந்து உள்ளே சென்றான்.

சென்றவன் உள்ளே நுழைந்து பாடம் கேட்பதில் ஆர்வமாயிருந்த மாணவர்களிடம், “கைகளை தூக்கி நில்லுங்கள்” என கத்தவும் மிரண்ட அந்த பச்சிளம் பாலகர்கள் நடப்பது என்ன என உணரும் முன்பே கண்மூடித்தனமாக சுட்டு விட்டான். நான் சுடப்பட்டேன் என உணரும் முன்பே அந்த மொட்டுகள் சுருண்டு விழுந்து கருகி விட்டன. ஒரு வகுப்பில் தன் கோரத்தனத்தை காட்டிய இவன், இன்னொரு வகுப்பிற்கும் சென்று இப்படி செய்திருக்கிறான். பக்கத்து வகுப்புகளில் கேட்ட துப்பாக்கி சத்தமும், குழந்தைகளின் மரண ஓலமும் அடுத்திருந்த வகுப்புகளின் ஆசிரியைகளுக்கு ஏதோ விபரீதம் நடப்பதை உணர்த்தவே அவர்கள் தங்கள் வகுப்புகளின் கதவுகளை பூட்டி விட்டனர். இப்பொழுது எங்கு நுழைவது என கொலைகாரன் குழம்பி நின்றிருந்த வேளையில் சடுதியில் அங்கு நுழைந்த போலீஸ் அதிகாரி மார்க்கோஸ் இந்த மனித மிருகத்தின் காலில் சுட்டு அவனை கீழே விழத் தள்ளியிருக்கிறார். தன்னால் இனி நகர முடியாது என்பதை உணர்ந்தவுடனே தன் கையிலிருந்த துப்பாக்கியால் தன்னையே சுட்டுக் கொண்டு அந்தக் குரூர ஆத்மா அடங்கியிருக்கிறது.

இறந்த 12 குழந்தைகளில் 10 பேர் மாணவிகள். இன்னும் இந்த அதிர்ச்சியிலிருந்து மொத்த பிரேசில் நாடே வெளிவரவில்லை. அதற்குள் நெதர் லாண்டிலும் இப்படிப்பட்ட ஒரு சம்பவம், அதே போல் துப்பாக்கி ஏந்திய இன்னொரு மனித மிருகம், ஒரு வணிக வளாகத்திற்குள் நுழைந்து 6 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்று விட்டு தன்னையும் சுட்டுக் கொண்டது. இந்த சம்பவங்கள் சொல்வது என்ன?
1. ஆயுதம் கிடைப்பது எளிதாகி விட்டதா???

2. மனித மனதில் வக்கிரங்கள் நிறைந்து விட்டதா???

3. சினிமாவில் நாயகன் ஒரே கைத்துப்பாக்கியை கொண்டு பல பேரை சுட்டு வீழ்த்துகிறானே, இத்தகைய சாகசங்களை இளைய தலைமுறை விரும்ப ஆரம்பித்து விட்டதா????

எதுவாயிருந்தாலும், தொலைக்காட்சியும் சினிமாவும் இந்தளவுக்கு மனித மனத்தில் தன் இனத்தையே வேரறுக்கும் விஷ விதைகளை தூவுகிறதோ என பயப்பட வேண்டியுள்ளது.

வருது வருது, அட விலகு விலகு

அட அவுங்களை விட இவுங்க பரவால்லப்பா, ஆமா இவிங்க மாத்திரம் என்ன கிழிச்சாங்க, அப்ப, அங்க குடும்பம் சொத்து சேர்த்தலைங்கறயா, சரி இங்க மட்டும் என்ன வாழுது, இங்கயும் ஒரு குடும்பம்தான் ஆட்டிப் படைக்குது, சரி அங்க கூட்டணி பலமா இருக்குன்றீங்க, அப்ப இங்க மட்டும் என்ன சொத்தையா போயிடுச்சா, போன தரம் அவிங்க ஜெயிச்சா, இந்த தரம் இவிங்க ஜெயிக்கணும்னு ரூல்ஸ் இருக்கா என்ன, ஆனா என்ன இருந்தாலும் இந்தப்பக்கம்தான் இள ரத்தமா இருக்குப்பா, ஆனா அங்கயும் நாங்க இளசுகளை இறக்கியிருக்கம்ல, நீங்க இலவசமா எதைக் குடுத்தாலும் நாங்களும் அதுக்கு டபுளா குடுக்கறம்ல, ஏ யப்பா டேய் நிறுத்துங்கடா, கேட்டுக் கேட்டு புளிச்சுப் போச்சுடா, நீங்கெல்லாம் எப்படா சாவீங்க, நாங்க கொஞ்சம் நிம்மதியா வாழணும்டா, தேர்தல் வருதாம், நாசமாப் போக.

ங்கொய்யால பக்கங்கள்.

வீதி முழுக்க விளம்பர தோரணம்,

காது கிழிய கொள்கை பாட்டு,

செவுத்துல எல்லாம் சிரிக்கற போஸ்டரு,

மேடைல ஏறி கெட்ட வார்த்தை

ராத்திரி முழுக்க தலைவர் கூட்டம்

வீட்டுக்கு வீடு இலவச லஞ்சம்,

எதுவுமேயில்ல, ஆனாலும் தேர்தலாம்

ங்கொய்யால,

இதுக்கு பேர்தான் எலெக்ஷன் கமிஷனா??

Wednesday, February 9, 2011

ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!! - (பாகம் 1)


ஒரு கல்லூரியில் என் மேற்படிப்புக்காக விண்ணப்பித்தேன். உங்களின் எல்லா சான்றிதழகளையும் பார்க்க வேண்டும் என்றார்கள். என் ஜாதகம் தவிர மற்ற அனைத்தையும் எடுத்துக் கொண்டு போனேன்.

“சார், எல்லாம் வெச்சிருக்கறீங்க, ஜாதி சர்டிபிகேட் இல்லையே சார்??”
“சார், ஜாதியெல்லாம் நான் பார்க்கறதில்லை சார்”
“அது சரிதான் சார், ஆனா, அரசாங்கம் கேக்குதே?”
“சார், என் பள்ளி மற்றுச் சான்றிதழ்ல ஜாதி போட்டிருக்குதே சார், அது போதாதா?”
இப்பொழுது, பேசிக் கொண்டிருந்த கல்லூரிப் பணியாளரின் குரல் கொஞ்சம் மாறுபடுகிறது...
“இங்க பாருங்க சார், ஜாதி சர்டிபிகேட் கொண்டு வந்தா, உங்களுக்கு அட்மிஷன் கிடைக்கும், இல்லைன்னா இல்லை, அவ்வளவுதான், இடத்தை காலி பண்ணுங்க”
ஒரு சமத்துவ விரும்பியை சோதித்துப் பார்ப்பதில் சமுதாயத்திற்கு இவ்வளவு ஆனந்தமா என யோசித்து விட்டு நடையைக் கட்டினேன். இனி ஜாதி சர்டிபிகேட் வாங்குவது எப்படி என்ற ஒரு பெரிய கேள்விக்கு யார் பதிலளிப்பார்கள் என்று கிட்னியை கசக்கி சாரி, சாரி, மூளையை கசக்கி யோசித்ததற்கு கை மேல் பலன் கிட்டியது. நமது மாண்புமிகு வார்டு கவுன்சிலரை கேட்கலாம் என நினைத்து அவருக்கு தொலை பேசியதும் மிகவும் கனிவாக பதிலளித்தார்.
“ஜாதி சர்டிபிகேட் தான சார், அது ஒண்ணும் பிரச்சனையில்லை சார். நீங்க உங்க ரேசன் கார்டு காப்பி ஒண்ணு, உங்க பள்ளி சான்றிதழ் காப்பி ஒண்ணு எடுத்துட்டு, கூடவே ஒரு விண்ணப்பமும் எழுதி எடுத்துகிட்டு, கிராம நிர்வாக அலுவலர் ஆபீஸூக்கு போய், அவர் கிட்ட ஒரு கையெழுத்து வாங்கிக்கிட்டு, அப்புறமா, ரெவின்யூ இன்ஸ்பெக்டர் கிட்ட ஒரு கையெழுத்து வாங்கிட்டு, அப்பிடியே தாலூக்கா ஆபீஸுக்கு போனீங்கன்னா அங்க அப்ளிகேஷனை வாங்கி வெச்சுட்டு என்னைக்கு வரணும்னு சொல்லுவாங்க, அப்ப போய் சர்டிபிகேட் வாங்கிக்கங்க” என ஒரே மூச்சில் சொல்லி முடித்தார். இப்படி சென்னை நகரம் முழுவதையும் கிரிவலம் வந்து இந்த மூன்று மூர்த்திகள் கையொப்பம் இட்டு நான் இன்ன ஜாதியை சேர்ந்தவன் என்று சொன்னால் தான் நான் மேல் படிப்பு படிக்க முடியும் என நினைத்தால் இந்த படிப்பு அவசியமாவென யோசிக்க தோன்றியது.
இருப்பினும் விதி வலியது அல்லவா? கொஞ்சம் கிரிவலம் வருவோமேவென கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் சென்றேன். ஒரு பத்துக்கு பத்து அறைக்கு இரண்டு ஜன்னல்கள் வைத்து, ஒரு பக்கத்தில் ஒரு இரும்பு கதவில் அரதப் பழசான ஒரு பூட்டுடன், கிராம நிர்வாக அலுவலகம் என்ற பெயர்ப் பலகையை தலையில் தாங்கியவண்ணம் இருந்த அந்த அலுவலக அறையை பார்த்தாலே கிராம நிர்வாகம் எப்படி இருக்கிறதென்று சொல்லி விடலாம். காலை ஒன்பது மணிக்கும் பூட்டு தொங்கிய அலுவலகத்தை பார்த்ததும் இன்னும் விடியவில்லையோ என சந்தேகம் வர, யாரிடமாவது கேட்கலாம் என நினைத்து அங்கு விசாரித்ததில் “ வழக்கமா 10 மணிக்கெல்லாம் திறந்துருவாங்க சார்” என பதில் கிடைத்தது. காத்திருந்து, காத்திருந்து, காத்திருந்......, ஆ யாரோ பூட்டைத் திறக்கிறார்கள். ஒரு 20 வயது மதிக்கத்தக்க வருங்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒன்று கதவைத் திறந்து விட்டு, உள்ளே இருந்த மேஜைகளில் இருந்த காகிதங்களை ஒழுங்காக அடுக்க ஆரம்பித்தார்.
”சார், வணக்கம்” என்றேன்.
தன் வேலையில் சற்றும் கவனம் பிசகாமல் எங்கும் திரும்பாமல், எனக்கு முதுகை காண்பித்தபடியே, “வோட்டர் ஐ.டி. யெல்லாம் இங்க பாக்கறதில்லை சார், எந்த டீச்சர் வந்து உங்க வீட்ல பேர் எழ்துனாங்களோ, அங்கியே போய் பேசுங்க”
“சார் அதில்லை சார், நான் வேற விஷயத்துக்காக வந்தேன்”
“அப்ப வீ.ஓ வரங்காட்டியும் வெளீல வெயிட் பண்ணுங்க”.
இன்னும் அவரது முக தரிசனமே கிடைக்காத ஏமாற்றத்தில் நான் வெளீல வெயிட்டினேன். சிரிது நேரத்தில் ஒரு ஒல்லியான தேகத்துடன் ஒருவர் சைக்கிளில் வந்து இறங்கி, அந்த சைக்கிளை அலுவலக சுவரோரம் நிறுத்தி விட்டு, கவனமாக பூட்டினார். ஒருவேளை இவர்தான் அவரோ என ஒரு வினாடி நினைத்துவிட்டு, சே, இவரா இருக்காதுப்பா, என நினைத்துக் கொண்டு, இவர் யார் என பார்த்தால் அவர் எழுத்தராம். என்ன எழுதுவாரோ தெரியவில்லை.
அவருக்கும் ஒரு வணக்கம் சொல்லிவிட்டு நான் வந்த நோக்கத்தை சொன்னவுடன், என்னை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, என் கையிலிருந்த காகிதங்களை வாங்கினார். முதல் பக்கத்தை பார்த்தவுடன் முகத்தில் அப்படி ஒரு கோபம் கொப்பளிக்க, “இது யார் எள்துனது???” என கேட்டார்.
”சார், நான் நா நானேதான் எழுதினேன்”
“உன்க்கு எள்த தெர்ஞ்சா, நீயே எள்தீர்வையா? இன்னா எள்தணும்னு உன்கு தெரிமா??, இதெல்லாம் வேலைக்காவாது, அதா அந்த பொட்டிக்கடைல, ஜாதி சர்டிபிகேட்டுக்குனு ஒரு ஃபார்ம் குடுப்பாங்க, அத்த வாங்கினு வா, நீயெல்லாம் எள்த கூடாது, அதுக்குதான் நாங்க இர்க்கறோம், தெர்தா”
நான் அந்த அதா,அந்த பொட்டிக்கடைக்கு போய் பத்து ரூபாய் கொடுத்து, ஒரு ஃபார்ம் வாங்கி, அதை அந்த எள்த தெரிஞ்சவரிடத்தில் கொடுத்து விட்டு அடுத்த கட்டளைக்காக கால் கடுக்க நின்றேன். என்னை நிமிர்ந்து பார்த்து விட்டு என் சான்றிதழ்களை கேட்டவர், ஃபார்ம்மில் என் பெயரை எழுதிவிட்டு
“இன்னா ஜாதி??” என்று கேட்டவுடன் தான் அந்த பயங்கரம் நிகழ்ந்தது. எங்கிருந்தோ பறந்து வந்த இரண்டு வாக்காளர் அட்டைகள் அவரது தலையில் மோதி மேஜையில் விழுந்தன. இந்த ஏவுகணைகளை ஏவியது யார் என அவர் நிமிர்ந்து பார்த்ததும், ரௌத்திரம் நிரம்பிய பார்வையுடன் ஒரு தாய்க்குலம்....
“நீ, இன்னா நென்ச்சுனுக்கற, இல்லா இன்னா நெனச்சுனுக்கறேன்னு கேக்கறேன்??”
”ஏம்மா, இன்னா பிரச்சனை உன்க்கு??”
“இன்னா பிரச்சனையா, பண்றதெல்லாம் பண்ணிட்டு இன்னா பிரச்சனைன்னா கேக்கற நீ, மருவாதி கெட்டுப் போயிரும், சொல்லீட்டன்” அவருக்கு வந்த கோபத்தில் மூச்சு வாங்கியது.
அட்டைகளை திருப்பி பார்த்தபடியே “ இந்தா, இன்னான்னு சொல்லு, சும்மா நீ பாட்டுக்கு பேசினே போனியானா, எனக்கு இன்னா தெர்யும்??”
”இன்னும் இன்னா தெரியணும் உனக்கு? அத்துல இன்னா பேர் போட்டுக்கற நீ ??”
”த்தாம்மா, இது உம் பேர்தான??”
“அத்தெல்லாம் எம் பேர்தான், அதுக்கு கீழ யார் பேரு போட்டுக்குது??”
“யேன், உன் ஊட்டுக்கார் பேர் போட்டுக்குது, அதுக்கு இன்னா இப்ப??”
“அத்து என் வூட்டு ஆம்பளை பேரா, உன்க்கு தெரிமா, என் வூட்டு ஆம்பள பேர் இன்னான்னு தெரிமா??’
”பின்ன இத்து யார் பேரு, இன்னா வோணும் உன்க்கு??”
“மேல எம்பேர் போட்டுனு, புருஷன் பேர்ல பக்கத்து வூட்டுக்காரன் பேர் போட்டுக்கறயே, முட்ச்சவிக்கி, நீயெல்லாம் நல்லார்ப்பயா நீ, முட்ச்சவிக்கி, என் வாய்ல நல்லா வர்து ஆமாம்”
இப்பொழுதுதான் பிரச்சனையின் முழு பரிமாணத்தையும் புரிந்து கொண்ட அவர், “ஏம்மா, இதுக்கு நான் இன்னா பண்றது??, யாரு உங்க வூட்டாண்ட வந்து பேர் எள்தினு போனாங்களோ அவுங்க கைல் போய் கேளுமா, எங்கிட்ட இன்னா வீரங்காட்டற நீ??”
”அவுங்கள இன்னா கேக்கறது, கார்டு நீதான் குட்க்கற, அப்ப யார் பேரு எங்க எள்தீக்குதுன்னு பாக்க வேண்டா நீ, உன்கெல்லாம் கவுர்மெண்ட்ல இன்னாத்துக்கு சம்பளம் குட்க்கறாங்க??”
“த்தா, அந்த பையன் கைல ஒரு கம்ப்ளெயிண்ட் எள்தி குட்த்துட்டு போ, அப்பாலிக்கா கரெக்‌ஷன் ஆகி வந்தா வந்து வாங்கிக்க”
“த்தா, அத்த எள்தறதெல்லாம் இருக்கட்டும், இப்ப என் வூட்டு ஆம்பள என்ன சந்தேகப் பட்டுனுக்கறான், அதுக்கு இன்னான்ற??”
“அதுக்கு நான் இன்னாம்மா பண்றது, யாரோ தப்பு பண்ணாக்கா, நீ இங்க வந்து சவுண்ட் உட்டுனுக்கற, எள்துனவுங்களை போய் கேளு போ”
பிரச்சனையின் தீவிரத்தை புரிந்து கொண்ட அந்த பூட்டைத் திறந்த பையன் அந்தப் பெண்மணியை சமாதானப் படுத்தி வேறு பக்கமாக நகர்த்திக் கொண்டு போனார்.
எழுத்தர் இந்த அதிர்ச்சியிலிருந்து விடுபட்டு, என்பக்கம் திரும்பி “ சார் நீங்க என்ன ஜாதின்னு சொன்னீ........”
“ஏம்பா, அந்த சேலை குடுக்கறேன்னு சொன்னாங்களே, எங்க குடுக்கறாங்க??” என்றபடி ஒரு வயதான அம்மாள் வந்தார்.
“அம்மா, சேலை எல்லாம் இப்ப குடுக்கறதில்லைமா, மத்தியானத்துக்கு மேல வா”
“யேன், இப்ப குட்தா இன்னாவாம், கவுர்மெண்ட் குடுக்கறதை எட்து குடுக்க உன்க்கு கஷ்டமாக்குதா”
“எனக்கு வேற வேலைக்குதும்மா, நீ மத்தியானம் வாம்மா”
“எத்தினி மணிக்கு வர்றது???”
“ஒரு மூணு மணிக்கா வாம்மா, இப்ப எட்த்த காலி பண்ணு”
“அப்ப மூணு மனி வரைக்கும் என்ன குளிக்காத இர்க்க சொல்றியா, நீ எப்ப சீலை குடுக்கறது, நான் எப்ப குளிச்சுகுனு கட்றது??”
என்னை பரிதாபமாக பார்த்தவர், “சார், நீங்க ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க சார்” என சொல்லி விட்டு அந்தம்மாவுக்கு சேலையை எடுத்து கொடுத்து விட்டு, கை ரேகையை பதிவு செய்து விட்டு, வந்து மறுபடியும் “சார், நீங்க என்னா ஜாதி...........??”
இப்பொழுது கோரஸாக ஒரு மூன்று பெண்களின் குரல், “இந்த எலெக்‌ஷன் கார்டு எங்க குடுக்கறாங்க” என கேட்க, இவர் என் பக்கம் திரும்பி “ சார் நீங்க என்ன ஜாதியானாலும் சரி, இதுல நீங்களே எள்தினு வந்திருங்க சார்” என்றார்.
“சார், நீங்கதான் இதுல யாரும் எளுத கூடாதுன்னு சொன்னீங்களே???”
”அதெல்லாம், எளுத படிக்க தெரியாதவங்களுக்கு சார், பட்ச்சவங்க நீங்க என் நிலைமைய புரிஞ்சுக்கங்க சார்” என என் கையில் மொத்த காகிதங்களையும் திணித்தார்.
(இன்னும் வரும்)


Monday, January 3, 2011

கிடா வெட்டி கிறிஸ்மஸு


அது என்னமோ தெரியல, எல்லாருக்கும் கிறிஸ்மஸுன்னாலே கேக் ஞாபகம்தான் வருது. எப்படி இஸ்லாமியர்களுக்கு மட்டுமே பிரியாணி செய்யத் தெரியும்னு ஒரு மூட நம்பிக்கை இருக்குதோ, அது மாதிரி கிறிஸ்தவங்க எல்லாருமே கேக் செஞ்சுதான் கிறிஸ்மஸ் கொண்டாடுவாங்கன்னு ஒரு அதி மூட நம்பிக்கை மக்கள் மனசுல இருக்குது. (தெரிந்தோ, தெரியாமலோ, புரிந்தோ புரியாமலோ, அறிந்தோ அறியாமலோ, நான் கொஞ்சம் கூட விரும்பாத பட்சத்திலும், எந்தையும் தாயும் எனக்கீந்த பெயர் காரணத்தினால் கிறிஸ்தவன் என்ற முத்திரை என்மீது குத்தப் பட்டிருப்பது ஒரு தவிர்க்க முடியாத வேதனையான விஷயமே). கிறிஸ்மஸ் வந்தாலும் வந்துச்சு, கேக் எங்க, கேக் எங்கன்னு எல்லாரும் பிச்சு குதறி எடுத்துட்டாங்க. ஆனா, நாங்க கேக் வெட்டற கிறிஸ்தவங்க இல்லை, கிடா வெட்டற கிறிஸ்தவங்கன்னு எத்தனை பேருக்கு சொல்லறது.....

இதுல இன்னொரு கொடுமை என்னான்னா, நம்ம தமிழ் கூறும் நல்லுலகத்தில், பண்டிகைன்னு ஒன்னு வந்துட்டா, பக்கத்து வீட்டுக்கு எல்லாம் பலகாரம் குடுக்கணுமாம். தீபாவளிக்கு, பொங்கலுக்கு எல்லாம் பக்கத்து வீடுகளில் இருந்து பலகாரம் வந்துருச்சு, நம்ம கிறிஸ்மஸுக்கு குடுக்கலைன்னா அவுங்க தப்பா நினைச்சுக்குவாங்க என்ற ஒரு நன்றி கலந்த கடமை உணர்ச்சி வேற நம்ம சகதர்மிணிக்கு பொங்கி வழிய, பலகாரம் போடற வேலைல ஏறக் குறைய எல்லா வேலையும் நம்ம தலைல விழுந்து தொலைத்தது.

இந்த வருடம் கிறிஸ்மஸுக்கு முறுக்கு சுடலாம் என்ற விபரீத ஆசை எங்க மேலிடத்துக்கு முறுக்கிக் கொண்டு வர, வீட்டுல இருக்கற அத்தனை பேரோட வாழ்க்கையும் எத்தனையோ முறுக்குகளை சந்திக்க வேண்டி இருந்தது. முதல்ல அதற்கான பால பாடங்கள் வீட்டில் இருக்கும் அத்தனை பேருக்கும் புகட்டப் பட்டு, அதற்கான ஆயத்தங்கள் எதோ அடுத்த ஏவுகணை ஏவப்போகும் விஞ்ஞானியின் கட்டளைகள் போல புறப்பட்டு வந்தது. யாரங்கே, வீட்டுக்கு வெளியே விறகு அடுப்பு மூட்டுங்கள் என விறகு சுமக்க வைத்தார்கள். முறுக்கு பிழிய தனியே ஒரு ஆசனம், அதை வாணலியில் எடுத்து இடுவதற்கென ஒரு தனி ஆயுதம், அடுப்பில் எரியும் விறகு சரியான முறையில் எரிகிறதா என பார்த்து அதை சரியாய் எரிய வைக்க ஒரு குழந்தை தொழிலாளி, முறுக்கு பிழிவதற்கென ஒரு அடிமை என சகல ஆயத்தங்களுடன் இந்த முறுக்கு பிழியும் படலம் ஆரம்பமாகியது. ஒன்றுக்குள் ஒன்றை நுழைந்து இடையில் இருக்கும் மாவை, அடியில் இருக்கும் அச்சின் வடிவத்தில் வெளிக்கொணர அசுர பலத்தில் அந்த முறுக்கு சுட்டியை அழுத்த வேண்டியதாயிற்று. இப்படி அழுத்தியபின் வெளிவரும் நூலிழை போன்ற மாவுக்கு ஒரு வடிவம் கொடுப்பதில் தான் பிரச்சனையே ஆரம்பமாகியது. முறுக்கு என்ற வஸ்து வட்ட வடிவத்தில் தான் இருக்க வேண்டும் என்பது எந்த நாட்டின் விதியோ தெரியவில்லை. இந்த அடிமை அழுத்திய முறுக்குகளெல்லாம் எம். எஃப். ஹுசேனின் மாடர்ன் ஆர்ட் போன்ற வடிவங்களில் வெளிவர, வட்டமாக சுற்றத் தெரியாத நீயெல்லாம்... ம்ஹூம்.... என்பது போன்ற ஏளனப் பார்வைகளை சகித்துக் கொள்ள வேண்டிய அவலநிலைக்கு அந்த அடிமை தள்ளப்பட்டான். (கடைசியில் அந்த ஏவுகணை விஞ்ஞானியும் பல முறை முயன்றும் முறுக்கை ஒரு முறை கூட வட்டமாக சுற்றவில்லை என்பது வேறு விஷயம்).

இப்படியாய் ஒரு நான்கு மணிநேர ரணகள போராட்டங்களுக்குப் பிறகு, முறுக்கு சுற்றும் படலம் இனிதே (ஹூக்கும்... இதுல இனிதே வேற) நிறைவுக்கு வந்தது. அடுத்தது பலரது வேண்டுகோளுக்கிணங்க, ரசிகப் பெருமக்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெறும் வண்ணமாக கேக் செய்யும் கோக்கு மாக்கான ஐடியா எதாவது மேலிடத்தாருக்கு உதித்து விடுமோ என பயந்து கொண்டிருந்தவனுக்கு, கேக்கை வெளியிலயே வாங்கிடலாம்னு சொன்னவுடனே வயிற்றில் பீர் வார்த்த்து,,,,, சாரி, பால் வார்த்தது மாதிரி இருந்தது.

அடுத்ததாக, கிறிஸ்மஸ் அன்று, பிரியாணி செஞ்சாத்தான் அது கிறிஸ்மஸ் மாதிரி இருக்குமாம். அதனால நல்ல கிடாக் கறியாக வாங்கி வருமாறு அடியேன் பணிக்கப் பட்டேன். இப்ப கறிக்கடைக்குப் போய் இதுல பெண்ணாட்டுக் கறி வேண்டாம், ஆணாட்டுக் கறி தான் வேண்டும் சொன்னால் உடனே என்னை ஆணாதிக்க வாதி என்று சொல்லி விடுவார்களோ என்ற பயம் வேறு தனியாய் வதைத்தது. அங்கு தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல், மற்ற எதுவும் இல்லாமல் தொங்கும் சதைப் பிண்டங்களில், ஆணாடு எது, பெண்ணாடு எது என எப்படி கண்டு பிடிப்பது என்பது ஒரு பெரும் போராட்டமாக இருந்தது. வாசகர்கள் விவகாரமாக எதையும் நினைக்க வேண்டாம், அந்த அங்க அடையாளங்களெல்லாம் முற்றிலும் அழித்தொழிக்கப்பட்டுத்தான் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் காதர் பாயின் கறிக் கடையில் ஆடுகளின் உடல்களை தொங்க விட்டிருப்பார்கள். எது எப்படியோ போகட்டும், வதைக்கப் படுவது எப்பொழுதுமே ஆணாடு தானே என்ற தைரியத்தில் கிடைத்த கறியை வாங்கி வந்தேன். இருந்தாலும், இது கிடாக் கறிதானே என வீட்டில் வீசப்பட்ட கேள்விக்கு பலியாடு போல தலையாட்டி வைத்தேன். ஒரு சில தர பரிசோதனைகளுக்குப் பிறகு அது கிடாக் கறிதான் என மேலிடம் சான்றிதழ் அளித்ததும் மறுபடியும் வயிற்றில் பீர்...., சாரி சாரி.....பால்.

மறுபடியும் பிரியாணி செய்யவும் அதே போன்ற ஏவுகணை ஆயத்தங்கள், சராமாரியான கட்டளைகள், சமையலறையே ஒரு போர்க்களம் போல் கோலம் கொண்டு, வீட்டில் இருக்கும் ஒரே ஒரு குழந்தை தொழிலாளியில் ஆரம்பித்து, இருக்கிற ஒரே ஒரு அடிமை வரை எல்லோருடைய முதுகெலும்பையும் முறித்தெடுத்து, கடைசியில் அந்த பிரியாணி என்ற வஸ்து தயாரானதை நினைத்துப் பார்த்தால், பாவிகளை ரட்சிக்க பூவுலகில் மனிதனாய் அவதரித்த கிறிஸ்துவே, ஒவ்வொரு வருடமும் எங்களை இந்த முறுக்குப் பிழியும் மற்றும் பிரியாணி செய்யும் கொடுமையில் இருந்து ரட்சிக்க இன்னொரு முறை பிறக்க மாட்டாயா என வேண்ட வேண்டும் போல இருந்தது.