Friday, August 7, 2009

மனதை திற - மகிழ்ச்சி வரட்டும் - 2

ஆமையும் மொசலும் ஓட்டப்பந்தயம் வெச்சுட்டு, பாதி வழில மொசலு தூங்கி, ஆமை தூங்காம ஸ்ட்ரெய்ட்டா போய் கெலிச்சு, கடசியில ஸ்லோவார்ந்தாலும் ஸ்டெடியாக்கறவன் தான் ஜெயிப்பான்னு சொல்லுச்சுன்னு கேள்விப்பட்டுக்கறோம். ஆனா அதுக்கு அப்பாலிக்கா இன்னா நடந்துதுன்னா,

மொசலுக்கு ஒரே ஃபீலிங்க்ஸ் ஆயிடுச்சு, ”சே, இத்தினி தெறம இருந்தும் ஜஸ்ட் மிஸ் ஆயிருச்சேடா, எங்க ராங் ஆச்சு” ன்னு ரோசன பண்ணிகினே, ”இன்னொரு தபா ரேஸ் உட்லாம், வரியா” ன்னு ஆமை கைல கேட்டுச்சாம். ஆமையும் சரின்னு சொல்ல, இந்த தபா, ஸ்டார்டிங்லர்ந்து சுகுர்றா ஒரே மூச்சுல ஓடி ஜெயிச்சதுக்கப்புறம் தான் மொசலு திரும்பி லுக் உட்டுச்சாம். அங்க என்னடான்னா, ஆமை அசைஞ்சு ஆடி மெதுவா வந்து மூச்சு வாங்கிகிட்டிருந்துச்சாம்.

இதுலர்ந்து இன்னா தெர்துன்னா நிதானமா இக்கறது நல்லதுதான், ஆனா நிதானமா இர்க்க சொல்லோ, ஸ்பீடா, கரீக்டா வரிஞ்சிருக்கற கோட்டு மேலயே ஓடின்னுக்கணும், அப்பத்தான் ஜெயிக்க முடியும் னு மொசலு சிரிச்சுச்சாம்.

இப்ப ஆமைக்கு பேஜாரா பூடுச்சி, என்னதான் ட்ரை பண்ணாலும் இவனை ஜெயிக்க முடியாதுடான்னு நெனச்சுகுனு, எப்டியாவது ஜெயிக்கணுமே இன்னா பண்லாம்னு மல்லாக்கப் படுத்து ரோசனை பண்ணுச்சாம், கம்னு இருந்தா சரிப்படாது, இதுக்கு வேற ஐடியாத்தான் பண்ணனும்னு முடிவு எட்துகுனு ”மாப்ள, இன்னொரு ரவுண்டு போலாம், ஆனா நான் சொல்ற ரூட்ல தான் போவணும்” னு சொல்லுச்சாம். அதுக்கு மொசலு, ”ஹூம், நீயெல்லாம் எனக்கு ஜூஜூபிடா, எந்த ரூட் வேணா சொல்லு, நா ரெடி” ன்னுச்சாம்.

ரெடி ஸ்டார்ட்னு ஆரம்பிக்க சொல்ல, மொசலு எந்த ரூட்னாலும் நம்ம ஸ்பீடுக்கு வாடா பாக்கலாம்னுட்டு ஓடிக்கினே இருக்க சொல்லோ, கொஞ்ச தூரம் போயி அந்த ரூட்டை பாத்து பேஜாராயிடுச்சாம். மேட்டர் இன்னானா, ஆமை சொன்ன ரூட்ல ஒரு ஆறு ஓடின்னுக்குது. இத்த எப்பட்றா கிராஸிங் பண்றதுன்னு மொசலு பஞ்சரான லாரி கணக்கா நின்னுனு இருக்க சொல்லோ, ஆமை மொசல கிராஸ் பண்ணி, அதும்பாட்டுக்கு நீந்தி போயி ”நாந்தாண்டா வின்னிங்” னுச்சாம்.

இப்ப மொசலு மெர்சலாயிடுச்சு, இன்னாடா இத்தினி ஸ்பீடா வந்தும் அவன் வின்னிங் ஆயிட்டானேன்னு ஒரே கவல.

இதுலர்ந்து இன்னா தெர்துன்னா, உங்கையில இன்னா மேட்டர் சாலிடா இக்குதோ, அதுல பூந்து அடிச்சு ஆடு நைனா, சும்மா ”பில்லா” ஓடிச்சேன்னு ”வில்லு” வும் மைதானத்துக்கு வந்தா அப்புறம் மொசலுக்கு அடிச்ச அதே ஆப்புதான்.

மொசலு இத்தோட விட்டுச்சா, அதான் இங்க மேட்டரே, இத்தினி தபா ரேஸ் உட்டுகுனே இருக்க சொல்ல, மொசலும் ஆமையும் தோஸ்த் ஆயினுக்குறாங்கோ, இப்ப ஒரு ரேஸ் வெச்சு ரெண்டு பேரும் ஜெயிக்கணும், இன்னா பண்றதுன்னு ஒரு மீட்டிங் போட்டு, உன் திறமை என்னுது, என் திறமை உன்னுதுன்னு ஒரு உலக மகா அக்ரிமெண்ட் போட்டுகுனாங்கோ, நிலத்துல ஓட சொல்லோ மொசலு மேல ஆமை ஏறிகிச்சு, ஆத்துல போக சொல்லோ ஆமை மேல மொசலு ஏறிகிச்சு, ரெண்டு பேரும் கரீக்டா ஒரே டயத்துக்கு வின்னிங் ஆயிட்டாங்கோ.

இதுலர்ந்து இன்னா தெரியுதுன்னா,

தோத்து போனாலும், ஆமையாகட்டும், மொசலாகட்டும், ஜெயிக்கணுங்கற வெறிய கொறச்சுக்கல.
ரெண்டு பேரும் ஏனோ தானோன்னு இல்லாம முழு திறமையும் வெச்சு முயற்சி பண்ணுனாங்கோ.
அப்பவும் ஜெயிக்க முடியலயா, ஆமை கணக்கா ரூட்ட மாத்து, ஏன்னாக்கா, பிரச்சனை உங்கிட்ட இல்ல, நீ போற ரூட்லதான் .

அப்பாலிக்கா, இன்னொண்ண கண்டுக்கினியா,

நீ தனியா ஓடுனா உன்னால எத்தினி தூரம் முடியுதோ அத்தினி தூரந்தான் ஓடுவே,ஆனா அல்லாரோடயும் சேர்ந்து ஓடுனா, அல்லாராலும் எத்தினி தூரம் போக முடியுமோ அத்தினி தூரம் போவ.

கடசியா ஒண்ணு,

உன்னால ஒண்ணு முடியலயா,முடியறவனோட சேர்ந்துக்கோ,

மனச தொறந்தீனாத்தான் மகிழ்ச்சி.

Thursday, August 6, 2009

சகதியில் அகதிகள் - நிற வெறியின் உச்சகட்டம்.

குஜராத்தின் வடமேற்குக் கரைப் பகுதியான கட்ச் மாவட்டத்தின் பாலைவனப் பகுதிகளில் 1995 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்து வருடங்கள் வாழ்ந்திருக்கிறேன். தரிசு நிலமாயும், பாலைவன மணல் பிரதேசமாயும் இருந்தாலும், ஆங்காங்கே நீரூற்றுகள் இருக்கத்தான் செய்கிறது. இந்த மண்ணில் எல்லை பாதுகாப்பு படை (BSF), கடலோர காவல் படை ( Coast Guard), சிறப்பு பாதுகாப்பு துறை ( Special Security Bearu), இந்திய உளவுத் துறையான RAW என எல்லா கோஷ்டிகளும், அவரவர் சீருடையில் வலம் வருகிறார்கள்.

இதில் விசேஷம் என்னவென்றால், கட்ச் வளைகுடாவின் மூக்கு போலிருக்கும் நிலப் பரப்பான நாராயண சரோவர் என்னும் சிவன் கோவில் உள்ள ஒரு இடம், பாகிஸ்தானுக்கு வெகு அருகில் உள்ளது. ஒரு மீன்பிடி படகு, அதில் ஓரிரு பெண்கள், தையல் இயந்திரம், ஆட்டுக்குட்டி, ஒரு குடும்பத்தலைவன், ஓரிரு குழந்தைகள், மற்றும் வாலிபர்கள் என ஒரு கூட்டுக் குடும்பம் தனது வீட்டின் தட்டு முட்டு சாமன்களோடு ஒரு மீன்பிடி படகில் ஏறி, அந்த அரபிக் கடலோரம் என பாட்டு பாடிக் கொண்டு, கராச்சியிலிருந்து ஒரு மூன்று மணி நேரம் துடுப்பு வலித்தார்களெனில், இந்திய கடல் எல்லைக்குள் சர்வ சாதரணமாக நுழைய முடியும். நுழைந்தவுடன் அநேகமாக எல்லா சமயங்களிலும், நமது கடலோரக் காவல் படையினர் வந்து அந்த மீன்பிடி படகை கட்டி இழுத்துக்கொண்டு வந்து ராஜ உபசாரங்களுடன் காவல் துறையில் ஒப்படைத்து விடுவார்கள். தப்பித்தவறி இந்தப் படகு சீந்துவாரில்லாமல் கடலில் நிற்குமானால், படகில் அமர்ந்திருக்கும் பெண்கள் முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்து, நல்ல வெய்யிலில் அதை கரையை நோக்கி காண்பிப்பார்கள். கண்ணாடியின் வெளிச்சம் கரையிலிருக்கும் காவல் படையினரின் கண்களை கூச வைக்கும். உடனே இங்கிருந்து மோட்டார் படகுகள் விரைந்து சென்று அந்த படகை கட்டி இழுத்து வரும். துடுப்பு வலிக்கும் கஷ்டமெல்லாம் அவர்களுக்கு இருக்கக் கூடாது என்ற நல்லெண்ணமோ என்னவோ. காவல் துறையும் அவர்களை (பாகிஸ்தானியர்களை) அகதிகள் பட்டியலில் பெயரெழுதிவிட்டு, அங்கிருக்கும் அகதிகள் முகாமில் சேர்த்து விடுவார்கள், அல்லது, அந்த படகிலிருந்து எவ்வளவு பணம் தேறுகிறதோ அதற்கு தகுந்தாற்போல் அவர்கள் நடத்தப்படுவார்கள். கராச்சியிலிருந்தால் ஒரு வேளை சோற்றுக்கும், அடுத்த மணி நேர பாதுகாப்புக்கும் உத்தரவாதமில்லாத ஒரு வெளிநாட்டவனுக்கு என் பாரத மண்ணில் மூன்று வேளை சோறும், பயமில்லாத வாழ்வும் வெறும் ஒரு சில ரூபாய் நோட்டுகளை அவன் காண்பித்து விட்டானெனில், இலவசமாய் அளிக்கப் படுகிறது.

பங்களாதேஷின் ஜிகர்கச்சா, ராஜ்ஷாஹி, சதிரா போன்ற மேற்கு பகுதி சிறு நகரங்களிலிருந்து இந்தியாவுக்குள், தினமும் நுழைய முற்படுவோர் அநேகர். அதிலும் தாங்கள் பங்களாதேஷிகள் என்ற அடையாளத்துடன் நுழைய வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாயிருக்கும். அப்பொழுதுதான் இந்திய அரசாங்கம் அவர்களுக்கு அகதிகள் என்ற அந்தஸ்தை கொடுத்து எல்லா ராஜ மரியாதையும் செய்யும். மேற்கு வங்கத்தின் நகரமான ஹல்தி பாரி என்ற வயல்வெளிப் பிரதேசத்தில், பங்களாதேஷிலிருந்து நெல் அறுவடை காலத்தில் கூலி வேலை செய்ய சர்வ சாதாரணமாக பங்களாதேஷி தொழிலாளிகள் வந்து போகிறார்கள். இவர்கள் வருவதும் போவதும் இந்திய எல்லை பாதுகாப்பு படையின் மூக்குக்கு கீழே என்பதுதான் கவனிக்க வேண்டிய ஒன்று. அப்படி வருபவர்களில் பலர் இங்கேயே தங்கி விடுவதும் உண்டு. அவர்கள் பங்களாதேஷிகள் என அடையாளம் காணப்பட்டாலும் மாண்பு மிகு இந்திய அரசு அவர்களை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாக தெரியவில்லை.

இன்னும் நேபாளத்திலிருந்து, திபெத்திலிருந்து என்று தினமும் மக்கள் வருகிறார்கள். அவர்கள் அகதிகள் என்ற பெயரில் மட்டுமே இந்தியா வர ஆசைப்படுகிறார்கள். அந்த பெயர் கிடைத்தால் தான் இந்திய அரசின் அனைத்து சலுகைகளும் கிடைக்கும். ஒரு திபெத்திய அகதிக்குழு, சர்வ சுதந்திரமாக இந்திய பெரு நகரங்களில் குளிர்கால உடைகள் விற்கும் கண்காட்சி நடத்த முடியும். அவர்களது விளம்பரங்களையும் பாருங்கள், தாங்கள் அகதிகள் என்ற அந்தஸ்தை கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். கர்நாடக மாநில அரசு ஒரு படி மேலே போய் அவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்து, குழந்தைகளுக்கு கல்வி வசதி கொடுத்து இன்னும் என்னென்னவெல்லாமோ கொடுத்து அழகு பார்க்கிறது.

ஆனால், வார்த்த்தைக்கு வார்த்தை எனது தொப்புள் கொடி உறவு என கவிதை பாடிக் கொண்டு, மூன்று மணி நேரம் உண்ணாவிரதத்திலேயே ஒரு இன அழிப்பு போராட்டத்தை நிறுத்தி விட்டோம் என மார்தட்டிக் கொள்ளும் நம் அஞ்சா நெஞ்சன்கள் ஆளும் நாட்டில், ஈழத்திலிருந்து தன் தாய் மண்ணிற்கு அகதியாய் வந்து தஞ்சம் புகுந்திருக்கும் என் தமிழ் சகோதர சகோதரிகளின் நிலையை பாருங்கள். விலங்குகள் கூட வாழ விரும்பாத அசுத்தமான இடத்தில் தான் முகாம், அவர்கள் கூலி வேலை செய்ய முகாமை விட்டு வெளியேறினாலும், மாலையில் குறித்த நேரத்துக்கு திரும்ப வேண்டும். இல்லையேல் அவர்கள் மீது தீவிர வாதி என முத்திரை குத்தப்பட்டு விடலாம். காலைக் கடன்களை கழிக்க ஒரு வசதியில்லை. இங்கு வாழும் ஈழத்து தமிழ்பெண்கள் உடம்பு முழுவதும் சோப்பு போட்டு ஆசைதீர தண்ணீர் மொண்டு ஊற்றி குளித்து எத்தனை நாளயிருக்குமோ தெரியவில்லை, ஏறக்குறைய திறந்த வெளியில் தான் அவர்கள் குளிக்கிறார்கள். மின்சார வசதியில்லை. வெளியிலிருந்து உண்பதற்காக வாங்கி வரும் பொருள்களையும் சோதனை என்ற பெயரில் அபகரிக்க மனித நேய மிக்க கண்ணிய காக்கி சட்டைகள் தயங்குவதில்லை. எப்பொழுது பார்த்தாலும் ஏச்சுக்களும் பேச்சுக்களும் சராமாரியாய் அவர்கள் மீது ஏவப்படுவதால், மனதளவில் மிகவும் மரத்துப் போன நிலை. வெளியில் தமிழனுக்கு 100 ரூபாய் கூலியென்றால், ஈழத்தமிழனுக்கு வெறும் 70 ரூபாய் தான். இதுதான் தொப்புள் கொடி உறவின் நிலை.

என் பாரத நாட்டில், ஒரு பாகிஸ்தானியும், பங்களாதேஷியும், நேபாளியும், திபெத்தியனும் (கவனிக்கவும், இவர்களுக்கும் பாரத மண்ணுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை) தகுந்த பாதுகாப்புகளுடனும், ராஜ மரியாதையுடனும் சர்வ சாதாரணமாக என் வரிப்பணத்தில் சாப்பிடலாம், ஆனால் என் தாய் நாட்டை சேர்ந்த எனது சகோதரன், சக தமிழன் நாயை விட கேவலமாகத்தான் நடத்தப் படுவான். என் சகோதரி அகதி முகாம் என்ற பெயரில் இருக்கும் விசித்திர சிறைக்கதவுக்குள் கூட்டுப் புழுவாய் சுருங்கி வாழ வேண்டும். என்னே இந்திய இறையாண்மை,,,,,,,,, ஜெய் ஹோ, ஜெய் ஹோ,,,,,,


இது தமிழனுக்காக உலகின் மிகப்பெரிய மக்களாட்சியின் இறையாண்மையால் எழுதப்பட்ட நிறவெறிக் கொள்கை இல்லாமல் வேறென்ன?????


பரிசலின் மனதை தைக்கும் வரிகள் மற்றுமொரு முறை :அங்கே அந்தச் சகோதரியின் உடையைக் கிழித்தார்கள்

பொறுத்துக் கொண்டாள்.

அவர்கள் புரிதலில்லாதவர்கள் என்று.இங்கே அதே சகோதரிக்கு கிழிந்த உடை

தருகிறீர்கள், அழுகிறாள்.

நீங்களும் புரிந்து கொள்ளவில்லையே என்று.

Wednesday, August 5, 2009

ஜுகல்பந்தி 5 ஆகஸ்ட் 2009 - இப்படியும் ஒரு வாரம்

பட்டியாலா - பிரபலங்களின் நகரம்.

வீரத்துக்கு பெயர் போன பஞ்சாப் மாநிலத்தின் பிரதான நகரங்களில் ஒன்று. நிலத்தின் மீது ஓடும் ஐந்து நதிகளினால் செழித்து வளர்ந்திருக்கும் பஞ்சாப் மாநிலத்தின் ராஜ குடும்பங்கள் இந்த ஊரிலிருந்துதான் தோன்றின. வெள்ளந்தி மனிதர்கள், உழைப்பை மட்டும் நம்புவர்கள், நட்புக்காக உயிரையும் கொடுப்பவர்கள், நாக்கில் நீர் சுரக்க வைக்கும் உணவு வகைகள், பசுமை நிறைந்திருக்கும் வயல் வெளிகள், இடுப்பில் கத்தியுடன் இன்றும் வாழும் சீக்கியர்கள், ஆணின் வீரத்திற்கு சற்றும் சளைக்காத பெண்கள் என இந்தப் பிராந்தியமே ஒரு மனமகிழ்ச்சியின் நிலப்பகுதி. பட்டியாலாவின் சீக்கியர்கள கட்டும் தலைப்பாகைக்கு என உலகெங்கிலும் ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. அந்த நேர்த்தியை பார்த்ததும் சொல்லி விடலாம் இவர் பட்டியாலா சர்தார்ஜி என்று. உதாரணத்திற்கு, மன்மோகன் சிங்கிற்கும், கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள். சித்து பட்டியாலாகாரர். அவரது தலைப்பாகையில் இருக்கும் நேர்த்தி, அந்த மடிப்புகளின் வரிசை, அந்த படகு வடிவ அமைப்பு ஆகியவை மன்மோகன் சிங்கிடம் இருக்காது. (கை காரர்கள், கை ஓங்க வேண்டாம், தலைப் பாகையை மட்டும் தான் சொன்னேன்).

இந்த ராஜ வம்சத்தின் துவக்கம் ஒன்றும் அவ்வளவு சுவராசியமானதாக இல்லை. சீக்கிய குருவான குரு ஹர்கோவிந்த் என்பவரது சீடர் மோகன் சிங் என்பவர் முதன் முதலாக 1627 ம் ஆண்டு இதற்கு அஸ்திவாரமிட்டதாக தெரிகிறது. இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்த ஒரே ஒரு தரை வழிப் பாதை என்பதால், சும்மா பொழுது போக்குவதற்காக அடித்துப் பிடுங்க வரும் ஆப்கானிய அரசர்கள் என்ற போர்வையில் திருடர்களின் தொல்லை ஒரு பக்கம், எப்பொழுதும் தங்களுக்குள் அடித்துக் கொண்டேயிருந்த ராஜபுத்திரர்கள் அண்டை வீட்டுக்காரர்களாகிப் போனது ஒரு பக்கம், இந்தியாவில் காலூன்ற நினைத்து வலுவாக அடித்தளம் அமைத்துக் கொண்டிருந்த முகலாய அரசர்கள் ஒருபக்கமென இருந்த பல்வேறு தொல்லைகளுக்கு மத்தியில், சீக்கியர்களுக்கென ஒரு தனி ராஜ்யத்தை நிறுவுவதற்க்கு மோகன் சிங் பெரும் பாடு பட வேண்டியதாயிற்று. முன்பொருமுறை ஜெய்சல்மீரில் இருந்த பட்டி இன ராஜ புத்திரர்களைப் பார்த்தோமே, அவர்கள் தான் அதிகம் தொல்லை கொடுத்தார்களாம்.

இதற்குப் பின் வந்து, மீசையை முறுக்கி தாடியை நீவி விட்டுக் கொண்ட எல்லா சர்தார்ஜிகளும், போர்க்களத்திலேயே தங்களது நாட்களை கழித்திருக்கிறார்கள். கடைசியாக, வடக்கிலிருந்து வந்த ஆப்கானியர்கள், உள்நாட்டிலேயே உள் குத்து வேலைகள் செய்யும் முகலாயர்கள், தெற்கிலிருந்து சீறி வரும் மராட்டியர்கள் ஆகிய மூவருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய சீக்கிய வீரர் பாபா அலா சிங் என்பவர்தான் இந்த சாம்ராஜயக் கனவை நனவாக்கும் பொருட்டு பர்னாலா என்ற நகருக்கு அடிக்கல் நாட்டினார். (பின்னாளில் இது பட்டியாலாவாக மாறியிருக்கக் கூடும்). மூன்றாவது பானிப்பட் யுத்தத்தில் வீரமுடன் போரிட்ட மராட்டியர்களை மண்ணைக் கவ்வ வைத்த ஆப்கானிய தளபதி அப்தாலி, இந்த சீக்கிய பாபா சிங்கை பாட்டியாலா சமஸ்தானத்திற்கு ராஜாவாக அபிஷேகித்து விட்டு சென்று விட்டார். இவர் கட்டியதுதான் 9 வரவேற்பு துவாரகங்களைக் கொண்ட கீலா முபாரக் என்ற கோட்டை.

இவருக்கு பின்பு வந்த ராஜ வம்சத்தில் ராஜா புபேந்தர் சிங் என்பவர், வாழ்க்கையின் ஒவ்வொரு நொடிகளையும் ஆனந்தத்தில் அனுபவித்தவர். இவரைப் பற்றி வாசிக்க அன்பர் முகில் எழுதும் அகம் - புறம் - அந்தப்புரம் வாசிக்கவும்., விளையாட்டில் அதிகம் பிரியம் கொண்டவர் இவர். ஆங்கிலேயர்களுடன் விருந்துகளில் சல்லாபிப்பது, விடுமுறைகளை கழிக்க வெளிநாடு செல்வது என உண்மையாகவே ராஜ வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்.

பட்டியாலாவிலிருந்து வந்த பிரபலங்கள் : விங் கமாண்டர் ராகேஷ் சர்மா, விண்வெளிக்கு சென்று வந்த முதல் இந்தியன், கிரிக்கெட் வீரர்கள் நவ்ஜோத் சிங் சித்து, மொகிந்தர் அமர்நாத், மற்றும் ஹிந்தி திரைப் பட உலகின் மார்க்கண்டேயன் ஓம் பூரி, ஜெட் ஏர் வேஸ் நிறுவன அதிபர் நரேஷ் கோயல், பஞ்சாபி பாப் பாடகர்கள் குருதாஸ் மான், தலேர் மெஹந்தி இன்னும் பலர்.

இன்றும் அதன் துணி தொழிற்சாலைகளின் சிறப்புகளோடு விளங்கும் இந்நகரில் பார்க்கவேண்டியவை : கீலா முபாரக், மோதி பாக் அரண்மனை, ராஜேந்திர கோதி போன்றவை.

நாட்டு நடப்புகள் - இப்படியும் ஒரு வாரம்

ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து எட்டாம் தேதி வரை தாய்ப்பால் வாரமாம். என்ன கொடுமை சார் இது????
பெத்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு ஒரு வாரம் கொண்டாட வேண்டுமா?? எல்லா தாய்மார்களிடமும் மருத்துவர்கள் கூறும் அறிவுரை, தயவு செய்து தாய்ப்பால் கொடுங்கள் என்பதுதான். ஆனால், உறவுகளை மறந்துவிட்ட மனித இனத்துக்கு அதன் முக்கியத்துவத்தை நினைவு படுத்தும் வகையில் ஒரு நாளை தாய்மார் தினம் எனவும், இன்னொரு நாளை தந்தையர் தினமெனவும், நண்பர்களுக்கு நட்பின் அவசியத்தை உணர்த்த நண்பர்கள் தினமெனவும், காதலர்களுக்கு காதலர் தினமெனவும் கொண்டாடுவதன் அவசியமிருக்கும்பொழுது, இயற்கையாக நிகழ வேண்டிய தாய்ப்பாலூட்டும் நிகழ்வை, அன்பின் வெளிப்பாட்டை, தாய்மையின் மேன்மையை, அமுதத்தின் சுரப்பை வலியுறுத்தி அதை ஒரு வாரமாக கொண்டாட வேண்டிய பரிதாபத்திற்கு இன்றைய பெண்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். மேனியழகின் பைத்தியம், அழகுச்சாதனங்களின் மோகம் ஆகியவை இன்றைய தாய்களுக்கு தனது தொப்புள் கொடியில் இணைந்து கிடந்த சிசுவுக்கு பாலூட்ட வேண்டும் என்பதை உணர்த்த ஒரு விழிப்புணர்வு வாரம் கொண்டாட வேண்டிய அவலத்திற்கு தள்ளிச் சென்றிருக்கிறது.

போதும்யா, இதுக்கு மேல பேசுனா பெண்ணிய வாதிகள் பின்னி பெடலெடுத்துருவாங்க.

பதிவர் வட்டம்

பதிவர்கள் கூட பேசி வெச்சுகிட்டு வாரம் கொண்டாடறாங்களோ என்னமோ தெரியல,

குருஜிக்கு இது குமார்ஜி வாரம், கார்க்கி, டக்ளஸ், பரிசலுக்கு இது கவிதை வாரம், புலம்பலுக்கு இது கருத்து கணிப்பு வாரம், அதிசயமா கார்ப்பரேட் கம்பருக்கு இது மொக்கை வாரம், நையாண்டி நைனாவுக்கு எதிர் பதிவு வாரம், அப்புறம் அப்துல்லாவுக்கு மற்றும் முரளி கண்ணனுக்கு காணாமல் போகும் வாரம்.

எது எப்படியோ நல்லா இருங்க சாமி, இந்த காணமல் போன ஆசாமிகள கொஞ்சம் பார்த்தா பதிவுலகம் தேடுதுன்னு சொல்லுங்க.

ங்கொய்யால பக்கம்:

கரிசனமா பாக்கறது பெத்தவங்கடா,

ஒரு ரத்தமா பாக்கறது கூடப் பொறந்தவண்டா,

கட்டுனவ பாக்குறது ரெண்டு உசிரு ஒரு உடல்றா

ஆனா, ங்கொய்யால,

உம்மனசுதான் எம்மனசுங்கறது நண்பன் மட்டும்தாண்டா.

Tuesday, August 4, 2009

மனதைத் திற - மகிழ்ச்சி வரட்டும் - 1

நேற்று நமது நண்பர்களுக்கு நண்பர்கள் தின வாழ்த்துச் சொல்லி குறுஞ்செய்தி அனுப்பினேன். மின்னலென பதில் அனுப்பினார்கள் அனைவரும். அதில் நமது பரிசல் அண்ணா மாத்திரம் வித்தியாசமாக பதில் அனுப்பினார். " Happy our's day" என பதில் அனுப்பினார். நெஞ்சைத்தொடும்படியாய் சில வார்த்தைகளில் தன் அன்பை நட்பை புரியவைத்தார். நன்றி தல.

நம் மனதுக்குள் எத்தனை விஷயங்களை பூட்டி வைத்து விடுகிறோம். தினசரி தண்ணீர் ஊற்றி, மொட்டை மாடியின் பூந்தொட்டியில் மலர்ந்து விரிந்திருக்கும் ஒரு புத்தம் புது பூவை நமது குழந்தை ரசித்து தடவும் பொழுது, அந்த குழந்தையின் சந்தோஷமும் நம்மை தொற்றிக் கொள்கிறது, குழந்தையிடம் அன்பாய் ஒரு வார்த்தை " பூ எவ்வளவு அழகாருக்கல்ல" என்று கேட்டு வையுங்கள். நம்ம அம்மாவும்/அப்பாவும் நம்மள மாதிரியே ரசனை உள்ளவர்கள் தான்னு அந்த பிஞ்சு மனம் பூரிக்கும்.

மனைவி செய்யும் சமையல் வாசனை தூக்கலாய் நாசியை துளைக்க, அந்த பண்டம் அடுப்பில் கொதிக்கும் போதே கமகமக்கும் மணம் உங்களை அதன் சுவையை கற்பனை செய்து நாவில் நீர் வரச் செய்து அலைக்கழிக்கும். அந்த வாசனையை முழுதுமாய் அனுபவித்துக் கொண்டு சோபாவில் அமர்ந்து எதாவது ஒரு புத்தகத்திலோ அல்லது டி.வி.யிலோ மூழ்கி இருப்பீர்கள். எழுந்து சென்று மனைவியிடம் ஒரு வார்த்தை சொல்லி வாருங்கள் " என்னது, இவ்வளவு கலக்கலா இருக்கு, அப்படி என்னம்மா பண்ற" இது போதும், அங்கு அனைத்து சுவைகளும் ஒரு சேர, ஒரு புன்னகை பூக்கும்.

கணவர் வாங்கி வந்த புடவை/ அல்லது குழந்தைகளுக்கான துணி உங்களுக்குப் பிடித்திருக்கிறது, வெறும் நல்லாருக்கு என ஒற்றை வார்த்தையில் ஒதுங்கிக் கொள்வதை விட, " நீ எதைச் செஞ்சாலும் ஒரு ஸ்டைலாத்தான்யா செய்யற". ஒரு சிறு பாராட்டு.

குழந்தை கிரேயானில் வரைந்த ஓவியம், அப்பா அடுக்கி வைத்த புத்தக அலமாரி, அம்மா பேத்திக்கு பின்னி விட்ட தலை அலங்காரம், அண்ணா வாங்கி வந்த கைக்கடிகாரம், அப்பாவுக்காக குழந்தை கொடுத்த சின்ன அன்பளிப்பு என எங்கெல்லாம் உங்கள் மகிழ்ச்சியை வார்த்தைகளாலும், செயல்களாலும் வெளிப்படுத்த முடியுமோ, கண்டிப்பாக செய்யுங்கள்.

பகிர்வதினால் மகிழ்ச்சி பன்மடங்கடையும். பரிசல் அண்ணன் சொன்ன மாதிரி " Happy our's day" என உங்கள் நட்பாகட்டும் அல்லது அன்பாகட்டும், மனதை திறந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

மனதை திறவுங்கள், மகிழ்ச்சி வரட்டும்.