Wednesday, June 30, 2010

ஜுகல்பந்தி – 30 ஜூன் 2010 – சத்தாயிஸி


சத்தாயிஸி

ஜோசியர்கள் குழந்தை பிறந்த நேரத்தை வைத்து அந்த குழந்தையின் எதிர்காலத்தை கணித்து சொல்வதை கேட்டிருப்பீர்கள். ஆனால், அந்த குழந்தை இந்த நேரத்தில் பிறந்ததால் குழந்தையின் அப்பனுக்கு கிரகம் பிடித்து ஆட்டுவதாக புரளி கிளப்பி அதற்கு பரிகாரம் செய்து, துட்டு வசூலிக்கும் ஒரு வினோத பழக்கம் இருக்கிறது.

இதற்கு சத்தாயிஸியில் பிறந்த குழந்தை என்று சொல்லுகிறார்கள். (சத்தாயிஸ் = இருபத்தி ஏழு). இந்த குழந்தையை அதன் தகப்பன் 27 நாட்களுக்கு பார்க்கக் கூடாதாம். பார்த்தால் தகப்பனுக்கு ஏழரை ஆரம்பிச்சுருமாம். இந்த 27 நாளும் அவன் விரதம் இருக்கணும், கட்டிங், சேவிங்கெல்லாம் பண்ணக் கூடாது. டாஸ்மாக், மிலிட்டரி ஹோட்டல் சமாச்சாரமெல்லாம் தொடவே கூடாது. அவன் மனைவி பக்கத்துலயே போகக் கூடாது, (அங்கதான் குழந்தை படுத்திருக்குமே). அப்படீன்னா அவன் மனைவியையும் பார்க்கக் கூடாது. ஒரு சோகத்தோடயே தாடி வளர்த்துகிட்டு அவன் திரியணும்.

அந்த 27வது நாள்தான் அவன் மனைவி முகத்தை பார்க்க முடியும். அப்புறமா ஒரு பூஜைல ரெண்டு பேர்த்தையும் உக்கார வெச்சு, அவங்களுக்கு முன்னால ஒரு கண்ணாடிய வெச்சுருவாங்க. அந்த கண்ணாடிக்கு முன்னால ஒரு பெரிய அகலமான தட்டுல கடுகு எண்ணையை ஊத்தி வெச்சிருப்பாங்க. ஜோஸியர் சொல்ற நேரத்துக்கு கரெக்டா குழந்தையை கொண்டு வந்து இவங்களுக்கு பின்னால நின்னு முகத்தை மாத்திரம் திருப்பி கண்ணாடில காமிப்பாங்க, அந்த கண்ணாடில படும் பிம்பம் முன்னால இருக்கற கடுகு எண்ணைல தெரியும். குழந்தைக்கு அப்பனானவன், முதல்ல அந்த கடுகு எண்ணைல தான் குழந்தையோட முகத்தை பார்க்கணும் அப்புறம் தான், நேருக்கு நேர் பார்க்கணும்.

இப்பிடி இந்த 27 வது நாள் அவனால வீட்டுல இருக்க முடியாம எதாவது வேலையா வெளிய போயிட்டான்னா, தொலைஞ்சான். அடுத்ததா 54 வது நாள்தான், அதுவும் முடியலைன்னா 108 வது நாள். இத்தனை நாளும் முடிவெட்டாம ஷேவிங் பண்ணாம இருக்கற ஒருத்தனை ஒரு பச்சைக் குழந்தை பாத்துச்சுன்னா எப்பிடிங்க இருக்கும்………

இந்த நம்பிக்கையும் சடங்கும் இன்னும் மத்தியப் பிரதேசத்தின் கிழக்கு மாவட்டங்களிலும், சத்தீஸ் கட், ஜார்கண்ட், பீகார் மாநிலத்தின் தெற்கு மாவட்டங்களிலும் நிறைய வீடுகளில் கடைப் பிடிக்கப் படுகிறது. அதனால் அடுத்த முறை இந்த பிராந்தியாங்களில் யாராவது தாடி மீசையுடன் மந்திரிச்சு விட்ட மாதிரி சோகமா திரிஞ்சா, அவரு ஒருவேளை இந்த சத்தாயிஸி குழந்தைக்கு அப்பனா கூட இருக்கலாம். என்ன கொடுமை சார் இது?????

நாட்டு நடப்புகள் : மறுபடியும் மாவோக்கள்

நேற்றும் ஒரு முறை ரத்தத்தில் ஹோலி விளையாடி இருக்கிறார்கள் இந்த மண்ணின் மைந்தர்கள்.இதில் அதிகம் பங்கேற்றது பெண் மாவோ வாதிகள்தான்.மாவோவாதிகளுக்கெதிராக அரசாங்கம் அமைத்திருக்கும் படையின் தலைவரான ராம் நிவாஸ் கூறுகையில் அவர்களிடம் இருக்கும் ஆயுதங்களைப் பார்த்தால் பிரமிக்க வைக்கிறது என்று கூறுகிறார்.

பன்னாட்டு பண முதலைகளுக்கு, கனிம வளங்களை தாரைவார்த்து கொடுத்து, மண்ணின் மைந்தர்களின் வாழ்வாதாரங்களை சிதைத்து, அவர்களின் உணவுக்கும் உணர்வுக்கும் கேடு விளைவிக்க மத்திய அரசு வரிந்து கட்டிக் கொண்டு களம் இறங்கியிருக்கிறது என்ற வாதம் ஒரு நிதர்சனமான உண்மை என்ற போதிலும், அதை எதிர்க்கிறோம் என ரயில் பாதைகளில் குண்டு வைத்து பொது மக்களை கொல்வதும், காக்கையை சுடுவது போல் பாதுகாப்பு படையினரை சுடுவதும் மேலும் வன்மம் வளர்க்கும் ஒரு செய்கையே தவிர, தீர்வுக்கு அடி கோலாது என்பது ஏனோ மாவோ வாதிகளுக்கு தெரிவதில்லை.

ஒரு கேள்வி : பாதுகாப்பு படையினர் கொல்லப்படும் போதெல்லாம் கேமராவை தூக்கிக் கொண்டு போய் அவர்களின் சடலங்களையும், அவர்கள் குடும்பத்தினரின் கண்ணீரையும் படம் பிடித்து சில்லரை சேர்க்கும் கேவலப் பிறவிகளான ஊடக ஓநாய்கள், இருபுறமும் சமரசம் செய்து வைக்கும் நாட்டாமை பணியை ஏன் செய்யக் கூடாது.??? அடச் சே, விடுங்கய்யா.. பணத்துக்காக தரம் தாழ்ந்து கிடக்கும் ஊடக கும்பலுக்கு என்ன யோக்கிதை இருக்கிறதென்று நாட்டாமை பண்ண அழைப்பது.????

ங்கொய்யால பக்கங்கள்

கட்சி மாநாடு நடக்கறதில்லை
காசு பண்ண வழியில்லை

வெள்ள நிவாரணம் வாங்கலாம்னா
மழை வர்றதுக்கு வழியில்லை

முதியோர் பென்ஷன் வாங்கலாம்னா
வயசு கொஞ்சம் பத்தாதுதான்

ங்கொய்யால,

ஒரு தேர்தல் வந்தா காசு வந்துரும்,
அரசியல்ல எவனும் சாக மாட்டேங்கறானே

Tuesday, June 29, 2010

ஆமாம், இரவு வரட்டும்.

எத்தனைதான் உதறினாலும்
என் காலை விட்டு போவதில்லை அது
உயரமாயும் ஒல்லியாவும் என்னை
தொட்டுக் கொண்டே தொடர்கிறது.

தொல்லை தருவதில்லை ஆனால்
தொலைந்தும் போவதில்லை
என் உடலில் உடையில் வர்ணங்கள்
இருப்பினும் அது மட்டும் ஒரே வண்ணத்தில்.

எப்படியாவது என்னை எனக்குக் காட்டும்
அதை ஒழித்து விட வேண்டும்.
ஒளியில் என்னோடு தினமும் வரும் அது
இரவில் ஒளிந்து விடுமாம்.

ஆமாம், இரவு வரட்டும்.

Wednesday, June 23, 2010

ஜுகல் பந்தி 23 – ஜூன்- 2010, மருமகன்களுக்கு மரியாதை


ஜமாய் சஷ்டி :

மாமியார் மருமகள் உறவுக் கதைகள், சண்டைக்கதைகள், சிரிப்புகள் என எல்லாத்தையும் கேட்டிருப்போம். ஆனால் மருமகனை கும்பிட்டு, அவருக்கு விருந்து வைக்கறதுக்குன்னே ஒரு விழா கொண்டாடறதை கேள்விப் பட்டிருக்கீங்களா, ஆமான்னாலும் சரி, இல்லைன்னாலும் சரி, இதைப் படியுங்கள்.

ஒரு பேராசை பிடித்த பெண் இருந்தாளாம். (ஹலோ, இந்த பெண்ணிய வாதிகள் உடனே தாரை தப்பட்டையெல்லாம் எடுத்துட்டு கிளம்பக் கூடாது,கதைல அப்படித்தான் சொல்றாங்க), வீட்டுக்கு கடைசி மருமகளா இருந்த அவள் தன் வீட்டிலுள்ளதையெல்லாம் எடுத்து சாப்பிட்டு விட்டு, தின்பண்டம் காணாமல் போய் விட்டதே என வீட்டார் கேட்டால், பூனை திருடி விட்டது என பொய் சொல்லுவாளாம். அவுங்க வீட்டுக்கு வழக்கமா வந்துட்டு போற பூனைக்கு இது ரொம்ப ரொம்ப அவமானமா போய் விடவே, அது சஷ்டி தேவி கிட்ட போய் கண்ணை கசக்கீட்டு நின்னுச்சாம். சஷ்டி தேவியும் சரி சரி மேட்டர எங்கிட்ட விடு நான் இத ஒரு புது விதமா டீல் பண்றேன்னு சொன்னாங்களாம்.

இந்த மருமகளுக்கு ஏழு பசங்களும் ஒரு பொட்டப் புள்ளயும் பொறந்தாங்களாம். (ஏயப்பா, எத்தனை, ஒண்ணா ரெண்டா). ஒருநாள் அத்தனை குழந்தைகளும் காணாமப் போயிட்டாங்களாம். தன் குழந்தைகளைத் தேடி அலைந்து களைத்துப் போய் கண்ணீரோடு இவள் காட்டுக்குள் திரிந்து கொண்டிருக்கும் பொழுது, சஷ்டி தேவி வந்து “என்னம்மா சங்கதி, ஏன் அழுகறே”ன்னு கேக்க, ஓ ன்னு ஒப்பாரி வெச்சுட்டு “என் குழந்தைகள காணோம்”னு இவ சொன்னாளாம். அப்ப தேவியம்மா என்னா பண்ணாங்கன்னா, “அப்பிடி வா வழிக்கு, நீ திருட்டு வேலை பண்ணீட்டு ஒண்ணுமே தெரியாத பூனைக்கு திருட்டு பட்டம் கட்டுனயே, அப்ப அந்த பூனைக்கு எப்படி வலிச்சிருக்கும்”னு கேக்க, “அய்யோ, தாயே நான் பண்ணதெல்லாம் தப்பு, எம் புள்ளங்கள கண்டு பிடிச்சுக் குடு” ன்னு இவ கதறுனாளாம். அப்பத்தான் சஷ்டி தேவி , “இந்தா உம் புள்ளங்களையெல்லாம் எடுத்துட்டு போ, இவுங்களுக்கு நல்லா சோறு ஆக்கிப் போடு” ன்னு சொன்னாங்களாம். அந்த நாள்தான் இந்த ஜூன் மாசம் 17ம் தேதி ஜமாய் சஷ்டி.

இது வெறும் பெங்காலிங்க மாத்திரம் கொண்டாடும் ஒரு பண்டிகை. (நம்மூருல மருமகன்களை யாரு மதிக்கறா, அத விடுங்க). இந்த நாள்ல மருமகன் மாமனார் வீட்டுக்கு வந்தவுடன், வீட்டு நுழை வாயிலில் இருந்து சடங்குகள் ஆரம்பமாகும். ஆறு பழங்கள் நிறைந்த தட்டுடன் மருமகனுக்கு ஆரத்தி எடுக்கும் மாமியார், ஆரத்தி முடிந்ததும் தட்டில் இருக்கும் தானியம் மற்றும் புல் வகைகளை மருமகனின் தலைக்கு மேலே தூவி அவரை ஆசீர்வதிக்கிறார். பிறகு அவரது கையில் புத்தம் புதிதாய் மஞ்சள் பூசப்பட்ட ஒரு கயிறைக் கட்டி, நீ எங்க வீட்டு மருமகனாக்கும் என சொல்லாமல் சொல்லி அவருக்கு இனிப்பு ஊட்டி விடுவார். இது முடிந்ததும் வீட்டுக்கு உள்ளே அழைத்து வரப்படும் மருமகனுக்கு 15 வகையான பதார்த்தங்கள் கொண்ட ஒரு விருந்து அளிக்கப்படும். பெரும்பாலானவை மீன் கலந்த பண்டங்களாயிருப்பினும், வழக்கமான குழம்பு, அவியல் பொறியலோடு, மீன் பலவகையிலும் சமைக்கப் பட்டிருக்கும். இதையெல்லாம் ஒரு பிடி பிடித்தபின் மருமகனுக்கு இனிப்பு கொடுப்பது மாமியாரின் கடமை. இந்த இனிப்பு வைபவத்தில் ரசகுல்லா கண்டிப்பாக இடம் பெற வேண்டும். இப்படியாக ஜமாய் சஷ்டி நிறைவு பெறுகிறது.

(அடச்சே, மொதல்லயே தெரியாமப் போச்சே, தெரிஞ்சிருந்தா பெங்கால்ல போய் பொண்ணு எடுத்திருப்பனே, என்ன பண்றது, உங் குடுமி இங்க நம்மூரு தங்கமணி கைலதாண்டின்னு எம்பெருமான் என்னைக்கோ எழுதி வெச்சிட்டாரு, அதை யாரால மாத்த முடியும்)

நாட்டு நடப்புகள் : எங்க ஊர் பஞ்சாயத்து

ஒரு வெளியூர் விவசாயி ஒரு நாள் எங்கூருக்கு வந்தாரு. எங்கூர்ல எங்க பாத்தாலும் பச்சைப் பசேல்னு வயலு வெளஞ்சு கிடக்குது, குடியானவனெல்லாம் சந்தோஷமா விவசாயம் பண்ணி, அறுவடை பண்ணிகிட்டிருக்கான். வெளியூர் விவசாயி பாத்தான், ஆகா, தங்கச் சொரங்கமடா இது, அள்ள அள்ள தீராதுன்னு கணக்குப் போட்டுட்டு நாட்டாமை கிட்ட போனான். “ஐயா, எனக்கு வடக்கால ஒரு கையகல இடம் குடுங்கைய்யா, நானும் கொஞ்சம் விவசாயம் பண்ணிக்கறேன்”னு சொன்னான். நாட்டாமைக்கு அவன் யாரு, அவன் என்ன பண்ணப் போறான்னு தெரியுமோ தெரியலயோ, சரிப்பா, நீயும் பொழச்சுப் போன்னு சொல்லீட்டாரு. அவனும் விவசாயத்தை ஆரம்பிச்சான்.

அவன் நிலத்துல கண்ட மருந்தையும் போட்டான், கண்ட விதையையும் போட்டான், என்னென்னமோ மிசுனுகள வெச்சு வித்தை காமிச்சான். பக்கத்து நிலத்துக் காரன் அய்யோ, பாழாகுதேன்னு கத்துனான், அப்ப நாட்டாமை சொன்னாரு அட வுடுப்பா, எங்கிருந்தோ பஞ்சம் பொழைக்க வந்தவன் அவன், பொழச்சுப் போகட்டும் விடுன்னாரு.

ஒரு நாள் ராத்திரி, நாட்டாமை வீட்டுல திடீர்னு கதவு தட்டற சத்தம், என்னடான்னா, நம்ம வெளியூர் விவசாயி, அய்யா, தப்பு நடந்து போச்சுங்கைய்யா, நான் வெச்சிருந்த மிசின்ல ஒண்ணு வெடிச்சுப் போச்சுங்கைய்யான்னு அழுதான். சரி பரவால்ல விடுப்பா, நான் பாத்துக்கறேன்னாரு நாட்டாமை.

அய்யா, அந்த மிசுன்ல இருந்து எல்லா பவுடரும் கொட்டி நிலம் கொஞ்சம் சேதாரமாயிருச்சுங்கைய்யா,
அப்படியா, சரி போனா போகுது வுடு, எல்லாம் நம்மாளுகள விட்டு சரி பண்ணிப் போடலாம்.

அய்யா, இன்னொண்ணும் நடந்து போச்சுங்கைய்யா, மெசுனு வெடிச்சதுல ஊர்காரங்க கொஞ்சம் பேரு செத்துப் போய்டாங்கைய்யா, அவுங்கெல்லாம் என்ன அடிக்க வாராங்கைய்யா

அப்பிடியா சேதி, சரி சரி அதா நிக்குது பாரு வண்டி, அதுல ரெண்டு மாட்டைப் பூட்டிட்டு விடியறதுக்குள்ள இந்த ஊரை விட்டுப் போயிரு, ஊர்க்காரங்கள நான் பாத்துக்கறேன்னு சொல்லி நாட்டாமை வண்டி, மாடு இன்னும் வழிச்செலவுக்கு பணமெல்லாம் குடுத்தாரோ என்னமோ தெரியல. அவன் மாயமா மறைஞ்சிட்டான்.

ஊர்க்காரங்க ஒண்ணு சேந்து நாட்டாமைகிட்ட போய் கத்துனாங்க, செத்தவங்க இன்னமும் செத்தாங்க, கத்துனவங்க இன்னும் கத்துனாங்க, அய்யா, நெலமெல்லாம் பாழாப் போச்சேய்யா, புள்ள குட்டியெல்லாம் செத்துப் போச்சேய்யா, இப்ப என்னய்யா பண்ணுவோம்னு கதறுனாங்க.
இப்படி வருசக்கணக்கா கத்தி கத்தி ஒரு புண்ணாகும் ஆகலன்னதும்
நாட்டாமை பஞ்சாயத்தக் கூட்டு, இப்ப எங்களுக்கு வழி சொல்லுன்னு விடலைப் பசங்கெல்லாம் ஒரு தினுசா பேசுனாங்க. நாட்டாமை தீர்ப்புச் சொல்லுன்னு காது படவே கத்த ஆரம்பிச்சிட்டாங்க.

நாட்டாமையும் பாத்தாரு, இவுனுகளோட பெரிய ரோதனையாப் போச்சே, தீர்ப்பு சொல்லலைன்னா ஒரு வேளை நம்ம நாட்டாமை பதவிக்கே ஆப்பு வெச்சுருவானுகளோன்னு நெனச்சுகிட்டு, எல்லாம் ஆலமரத்தடிக்கு வாங்கடான்னாரு…

எல்லாப் பயலுகளும் வாந்தாங்க, நாட்டாமை ஒரு பெரிய தீர்ப்பா சொல்லப் போறாருடான்னு பாத்துகிட்டே இருந்தாங்க, கடைசியா நாட்டாமை சொன்னாரு,

சரிடா, சாகாதவனெல்லாம் செத்தவனுங்களுக்கு பணம் குடுங்கடானு தீர்ப்பு சொல்லீட்டாரு. எல்லாரும் ஆடிப் போயிட்டாங்க, நாட்டாமை நிலத்தைக் கெடுத்து, மெசின வெடிச்சு, உயிரக் குடிச்சது வெளியூர்க்காரன், நாங்க எதுக்கு பணம் குடுக்கணும்னு கேட்டாங்க.

நாட்டாமை சொன்னாரு “ டேய், நான் ஒரு தரம் தீர்ப்பு சொன்னா சொன்னதுதான், சொன்னபடி செய்யுங்க”

நாங்களும் செய்யறோம். எங்க வயித்தக் கட்டி வாயக் கட்டி நாங்க சம்பாரிச்சதையெல்லாம் எங்க ஊர்சனங்களுக்கு குடுத்தற்றோம்.

அதுனால எந்த நாதாரிப் பயலுக்கு அவங்கூர்ல எதை செய்யக் கூடாதுன்னு சட்டம் சொல்லுதோ, ஆனா அதை செஞ்சு பார்க்க ஆசையிருந்தா, அவிங்கெல்லாம் எங்கூருக்கு வாங்க, எங்க நாட்டாமை உங்களுக்கு இடம் குடுப்பாரு. நீங்க உங்க இஷ்டத்துக்கு என்ன வேண்ணா செய்யலாம், எதை வேண்ணா அழிக்கலாம், எதை வேண்ணா உருக்கலாம், கெடுக்கலாம். எத்தனை பேரை வேண்ணாலும் கொல்லலாம், யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. எதாவது தப்புத்தாண்டா ஆச்சுன்னா வண்டியும் மாடும் குடுத்து நாட்டாமை தப்பிக்க வைப்பாரு. அதையும் மீறி எதாவதுண்ணா, எங்க கிட்டயே பணம் வாங்கி, அங்க செத்தவனுக்கெல்லாம் குடுத்துருவாரு.

எப்பூடி எங்க பஞ்சாயத்து???????

நான் வெறும் கதைதான் சொன்னேன், இதையும் போபால் மேட்டரையும் ஒண்ணா நினைச்சுகிட்டீங்கண்ணா அதுக்கு கம்பெனி பொறுப்பாகாது.

வீட்டு நடப்புகள் : பல்பு குடுத்தம்ல….

ஒரு ஃபர்னிச்சர் கடையில்.

சார், ஒரு டீபாய் வேணும்.

வாங்க சார், இது கிளாஸ் டாப், இது சன் மைக்கா டாப், இது அதுல டாப்பு, அது இதுல டாப்புன்னு அவுரும் சொல்லிகிட்டே போறாரு. மேலிடம் அமைதிகாக்குது, அப்பவே நமக்குள்ள பட்சி சொல்லுது “டேய், அடக்கி வாசி, அங்க என்னமோ மாஸ்டர் பிளான் உருவாகிட்டிருக்குதுடா, அமைதியா இரு” நம்மளும் அமைதி காக்க, எதிர் முனைல ஒரு சின்ன குழப்பம்.

சில நிமிட அமைதிக்குப் பின் “ சரி எதை எடுக்கலாம்னு சொல்லுங்க”

“நீ பாத்து செலக்ட் பண்ணும்மா”ன்னு நம்ம சொன்னவுடன், என்ன எனக்கு தெரியாதுன்னு நெனச்சிட்டியா இப்ப பாருன்னு ஒரு அலட்சியப் பார்வை என் மீது வீசப்பட்டது, சாரி சாரி பார்க்கப் பட்டது.

மேலிடம் களத்துல இறங்கி சார், இந்த மாடல் காமிங்க, அந்த மாடல் காமிங்கன்னு சொல்லச் சொல்ல சேல்ஸ் மேனுக்கு நாக்குத் தள்ளீருச்சு, ஆஹா, புடவைக் கடைக்கு போறவங்க தெரியாம இங்க வந்துட்டாங்களோன்னு பரிதாபமா பாக்க, நான் இங்க நடக்கறதுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லைன்னு ஒரு ஓரத்துல நிக்க, கடைசியா இந்த ரெண்டுல எதை எடுக்கலாம்னு சொல்லுங்கன்னு ஒரு குரல் கேட்டுச்சு, ஓ நம்மளத்தான் கூப்புடறாங்களோன்னு நான் போய், “உனக்கு எது பிடிக்குதோ அதை எடுத்துக்கோ” ன்னு சொல்ல, குரல் ஒரு கட்டை மேல போய் “அதெல்லாம் சரி, எது வேணுன்னு சொல்லுங்க” ன்னவுடன் பார்த்தால், ஒரு கிளாஸ் டாப்பு, ஒரு சன்மைக்கா டாப்புன்னு ரெண்டும் முன்னால இருந்துச்சு. ரெண்டும் என்ன ரேட்டாகுது சார்னு விலையை கேட்டுட்டு, அப்புறம் ஒரு சின்ன தில்லாலங்கடி கணக்கு போட்டுட்டு, சன் மைக்கா டாப் சரியாயிருக்கும்னு சொல்ல சரி அதைவே பேக் பண்ணி வீட்டுக்கு அனுப்புங்கன்னு சொல்லீட்டாங்க. அப்பவே எனக்கு இது சரியா படல, இவ்வளவு சீக்கிரமா மேட்டர் செட்டிலாகுதுன்னா என்னமோ இருக்குதுடான்னு நெனச்சுகிட்டு சரி, நம்ம பிளான் வொர்க் அவுட் ஆகும் போலன்னு நெனச்சுகிட்டே காசு குடுத்துட்டு வந்துட்டேன்.

அடுத்த நாள் மத்தியானம் பொண்ணுகிட்டேருந்து போன், “அப்பா டீபாய் வந்திருச்சுப்பா, அந்த கடைக்கார அங்கிள் அதை அசெம்பிள் பண்றாங்க”

“என்ன டீபாய்மா அது?”

“அதாம்பா, அந்த கண்ணாடி போட்டு பளபளான்னு இருக்குமே அதுதான்”

ஆஹா, நெனச்சது நடந்திருச்சுன்னு நெனச்சுகிட்டு வீட்டுக்கு வந்து, வீட்ல டீபாய் வந்ததையே கவனிக்காத மாதிரி பவ்யமா உக்காந்திருந்தா,

“டீபாய் வந்திருச்சே பாக்கலியா”

“பாத்தேன், அருமையா இருக்கு, நான் என்ன வேணும்னு நெனச்சனோ அதே மாதிரி அமைஞ்சிருக்கு”

“இல்லையே நீங்க சன்மைக்கா டாப் தான சொன்னீங்க”

“ஆமா, எனக்கு கிளாஸ் டாப்தான் புடிச்சிருந்திச்சு, ஆனா கடைல இது புடிச்சிருக்குன்னு சொன்னா அது வராதுன்னு தெரியும், அதனால தான் பிடிக்காததை பிடிச்சதுன்னு சொன்னேன். இப்ப பிடிச்சது வந்திருச்சுல்ல.”

எதிர் முனையில் பல முக குறியீடுகள், பெரு மூச்சுகள், மனதுக்குள் பல ஜூலு மொழி வார்த்தைகள், இன்னும் பெயர் தெரியாத சங்கேதங்கள், கண் காது போன்ற உறுப்புகளிலிருந்து புகை வெளியாவது போல ஒரு தோற்றம்.

ஏ ஹைய்யா, ஏ ஹைய்யா, ஏ கும்தலக்கடி கும்மா, ஏ ஐத்தலக்கடி அம்மா

எப்பூடி, நாங்களும் பல்பு குடுப்பம்ல.

ங்கொய்யால பக்கங்கள்

கருப்பு கலர்ல சட்டை போட்டா
ஓ அந்த தாடிக்காரரு குரூப்பாங்கறாய்ங்க

சிவப்பு கலர்ல சட்டை போட்டா,
என்ன தம்பி வினவறீங்களாங்கறாய்ங்க

பச்சை கலர்ல போட்டா
அட, அம்மாவுக்கு புடிச்ச கலர்ங்கறாய்ங்க

மஞ்சள் கலர்ல போட்டா
ஓகோ, ஐயாவோட துண்டு கலருங்கறாய்ங்க

கெடக்குது கெரகம்னு வெள்ளை கலர்ல போட்டா
ஓ, அந்த சென்ட்ரல் பார்ட்டியாங்கறாய்ங்க

இப்பிடி எல்லா கலருக்கும் எதாவது சொன்னா
ங்கொய்யால
எந்த கலர்லதான் சட்டை போடறது



Tuesday, June 15, 2010

செவலக் காளை

பொழியில மொளை அடிச்சுக் கட்டியிருந்த கவுத்த அவுத்துகிட்டு, அடுத்த வயல்ல மேயப் போன செவலக் காளய பாத்து,

ஹோய், த்தா, த்தா, ஊச், போ அந்தள்ளைல என தூரத்துல நின்னே அதட்டுனா தாயம்மா கெளவி, அப்படியும் கேக்காம பக்கத்துக் காட்டுல வெளஞ்சிருந்த தட்டப் பயத்துச் செடிய மேயப் போனதும், வந்த கோவத்துல கையிலிருந்த அருவாளை வீசியூட்டா பாருங்க, அது காத்துல எதோ சங்குச் சக்கரம் சுத்தறாப்புல சுத்தீட்டு வந்து சரியா பின்னந்தொடைக்கு மேல ஒரு கீறு கீறீட்டு கீழ உளுந்துது. மாட்டுத் தோல் கிளிஞ்சு பொல பொலன்னு ரத்தம் வரவும், மாடு மிரண்டு போய் திரும்பி வந்து பொழி மேல நின்னுட்டு ரத்தம் வந்த இடத்துல வாலை சொழட்டி சொழட்டி அடிச்சுது. வால் மசுறுலெல்லாம் ரத்தம் பட ஆரம்பிச்சுது. தாயம்மா ஓடி வந்து, சனியனே, இங்க இத்தனை இருக்குதே இதைத் திண்ணேன், அடுத்தவிய வெள்ளாமைல போய் ஏன் வாய வெக்கறேன்னு திட்டி கிட்டே, மண்ணை எடுத்து காயத்துமேல அப்பியுட்டா, கொஞ்ச நேரத்துல ரத்தம் வர்றது நின்னு போச்சு, தாயம்மாளுக்கும் கொஞ்சம் மனசு நெகுந்தாப்புல இருந்துச்சு, பாவம் வாயில்லா சீவனுக்கு என்ன தெரியும், இப்புடி பண்ணிப் போட்டமேன்னு, மாட்டை கொஞ்சம் தடவிக்குடுத்தா, வெட்டுப்பட்ட காயம் தந்த வலி, தாயம்மாளோட இதமான தடவல்னு மாட்டுக்கு ஒண்ணும் புரியாம தலையை சிலுப்பீட்டு பொழி மேலயா நின்னுச்சு. மொளைல கட்டீருந்த கவுத்த அவுத்துட்டு மாட்டைக் கூட்டி வந்து சாளையோரமா இருந்த தென்னை மரத்துல கட்டி ,அதுக்கு தண்ணி வெச்சுட்டு, சாளைல இருந்த கயித்துக் கட்டல்ல உக்கார்ந்து, தான் செஞ்சத நினைச்சு வருத்தப் பட்டுகிட்டா, சுத்திக் கட்டீருந்த முந்தானையை அவுத்து வேர்வையை தொடச்சுகிட்டே செவலக் காளையவே பாத்துகிட்டு சித்த நேரம் உக்கார்ந்திருந்தா.

தாயம்மா—

அந்த கந்தம் பாளையத்துக்கு அவ கல்யாணமாயி வந்த நாள்ல இருந்து அவளை எல்லாரும் தாயம்மான்னு தான் கூப்புடறாங்க. அவிய அப்பனாத்தா வெச்ச கொழந்தைம்மாங்கற பேரு யாருக்குமே வாயில வர்றதில்லை. செங்கோட கவுண்டரு தாலி கட்டி கூட்டியாந்த நாள்ல இருந்து இன்னைக்கு வரைக்கும் தாயம்மா சீரும் செனத்தியுமாத்தான் வாழறா. செங்கோட கவுண்டருக்கு பாகத்துல வந்த எட்டு ஏக்கர் நெலம், அவுருக்கு வாழ்க்கைப் பட்டதுக்கு மூணு பொம்பளைப் புள்ளயும் ஒரு ஆம்பளையுமா நாலு கொழந்தைகன்னு நல்லாத்தான் போயிட்டிருந்தது.

கோடாலிக் கொண்டையும், கழுத்துல தொங்கற அட்டியும், அரை வெரல் மொந்தத்துல தாலிக் கொடியும் போட்டுட்டு, பின்னால கொசுவம் வெச்சு கட்டுன சீலையோட முந்தானைய சும்மாடு கட்டி, தலைல வெச்சு அதுல ஈர்க்கூடைல சாப்பாட்டுப் பாத்திரமும் வெச்சு தாயம்மா செங்கோட கவுண்டருக்கு சாப்பாடு கொண்டு போறதை பாக்கறதுக்கு ஊர்வழித் தோட்டத்தோரமா ஊர்ச்சனமே கூடி நிக்கும். இல்லைன்னு வந்த ஒருத்தரையும் வெறுங்கையோட அனுப்பவே மாட்டா, ஒரு வள்ளம் அரிசின்னாலும், ஒரு வேளை சோறுன்னாலும் அவிய போதும்னு சொல்ற வரைக்கும் குடுத்துத்தான் அனுப்புவா, தோட்டத்துல வேலை செய்யற கூலிக்காரங்க ஏழை பாழைக வீட்டுல விஷேஷம்னா எதோ இவிய ஊட்டு விசேஷமாட்ட அத்தனையும் செய்வா தாயம்மா. நெல்லு நாத்து நடவுக்கு சீலைய தூக்கி கட்டீட்டு சேத்துல இறங்குனா, மளமளன்னு நட்டுகிட்டே வருவா, நாலாளு வேலைய ஒரே ஆளா செஞ்சுபோட்டு சளைக்காம நடப்பா.

மொதல்ல பொறந்தவ கனகா, சாலைத்தோட்டத்து முருகையனுக்கு கட்டிக் குடுத்துறுக்குது. ரெண்டாவதா லட்சுமி, மிசுனுதறிக் கவுண்டர் பையனுக்கு குடுத்துது. மூணாவதா மரகதம், பழனிக் கவுண்டர் பையனுக்கு குடுத்தது. நாலாவதா பொறந்தவந்தான் தங்கவேலு. மகனுக்கு சீமையெல்லாம் பொண்ணு பாத்து கடைசியில பக்கத்தூரு வாரப்பட்டியிலயே பொண்ணெடுத்தாச்சு. மருமகளும் ஒரு யோக லட்சுமிதான். பொறுப்பா இருந்து பண்ணயம் பாத்து பழகீட்டா, அவுளுக்கு பொறந்தது ஒரு பையனும் புள்ளயும். புள்ள பெரீவளாயிட்டு, பன்னெண்டாவது படிக்கறா, பையன் இப்பத்தான் பத்தாவது படிக்கறான்.

நாளும் பொழுதுமா செங்கோட கவுண்டரும் போயிட்டாரு, தங்கவேலனுக்கு சீக்கு வந்து அவுனும் அவுங்கப்பன் போன எடத்துக்கே போயிட்டான். மாமியாரும் மருமகளும் வெள்ளைச் சேல கட்டீட்டு ஒரே ஊட்லதான் இருக்கறாங்க.

மாட்டுக்கு ரெண்டு கை வைக்கப்புல்ல அள்ளிப் போட்டுட்டு, தாயம்மாளும் மாட்டையே பாத்துட்டு உக்காந்துட்டா, ஒருபக்கம் இத்தன கோவம் எதுக்குத்தான் வருதோ கருமம்னு நெனச்சாலும், இன்னொரு பக்கம், ஒருக்கா போட்டாத்தான் இதுக்கெல்லாம் புத்திவரும்னு நெனச்சுகிட்டா. கவுண்டரு இருந்தப்ப அடிக்கடி சொல்வாரு, தாயம்மா, உன்ர மூக்குத்திய கழட்டு, அதுல மூக்கணாங்கவுறு போடறேன். அந்தக் கவுறு இருந்தாத்தேன் உண்ணய கையில புடிக்க முடியும்பாரு.

கவுண்டர் நெனப்பு வந்தொடனயே தாயம்மா கண்ணு லேசா நீர்கட்டுனாப்புல ஆயிருச்சு. எப்புடி இருந்த மனுஷன், மசையன்னா மசையந்தான். தூணு கணக்கா காலும், மைதானமாட்டா நெஞ்சும், வண்டி நொகமாட்ட கையும், கன்னம் நிறைய முறுக்கு மீசை வெச்சுட்டு, ஆளு உருமாலை கட்டீட்டு வந்தாருன்னா, காத்து கூட கொஞ்சம் தள்ளி நின்னுதான் போகும். ஒரு சூது வாது தெரியாது, ஒருத்தருகிட்ட ஒரு வம்பு தும்புக்கு போக மாட்டாரு. எந்நேரமும் தோட்டமுண்டு, தானுண்டுன்னுதான் இருப்பாரு. மனுஷன் ஏர்ப்புடிச்சா அந்தக் கொனைலிருந்து இந்தக் கொனைவரைக்கும் நூலு கட்டுனாப்புல ஒரே கோடாப் போகும். அதென்னமோ, செங்கோட கவுண்டரு சாமி கும்புட்டுட்டு ஒழவு ஓட்டுனாருன்னா, அந்த போகம் சும்மா வெள்ளாமை கிண்ணுன்னு வெளயும். பங்காளிக பசங்கெல்லாம் வந்து, ஒழவு ஓட்டறண்ணைக்கு அவிய தோட்டத்துல இவரத்தான் மொத ஏர் புடிக்கச் சொல்லுவானுக. இவுரும் சித்த நேரம் ஓட்டிக் குடுத்துட்டு, இனி நீங்க ஓட்டுங்கடான்னுட்டு வருவாரு.

கொஞ்ச நாளாவே கவுண்டரு ஒரு போக்காத்தான் போயிகிட்டிருந்தாரு, தாயம்மா கருவாடும், கத்திரிக்காயும் போட்டு கொளம்பு வெச்சா வட்டலைக் கூட சுத்தமா நக்கீட்டு திங்கற ஆளு, இப்பல்லாம் சோத்துக்கு நேரத்துக்கு வர்றதில்லை. வந்தாலும் பேருக்கு இத்தனே திண்ணுட்டு திண்ணைல படுக்கறாரு, எத்தனை சண்டை வந்தாலும் அதெல்லாம் பொழுது சாயற வரைக்குந்தான், ராத்திரிக்கு தாயம்மாளும் கவுண்டரும் தனிய படுத்தது கிடையாது. ஒரு சில நாளைக்கு தக்காளிச் செடிக்கோ, வெண்டைக்காய்க்கோ ராத்திரில தண்ணி உடோணுமின்னாலும், கவுண்டர் ராத்திரி சோத்துக்கப்புறம் போயிட்டு நடு ராத்திரின்னாலும் திரும்பி வந்து ஊட்லதான் தூங்குவாரு, இப்பல்லாம் தோட்டத்து சாளைல தூங்கறாரு. ரெண்டு மாசமா பால் சொசைட்டிலிருந்து பால் காசு வேற வர்ல, ஒரு நாளு தாயம்மா போயி கேட்டதுக்கு அதெல்லாம் கவுண்டர் வாங்கீட்டுப் போயிட்டாருன்னாங்க, கவுண்டர்கிட்ட கேட்டா செலவாயிடுச்சுன்னு சொன்னாரு, தாயம்மாளுக்கு பொறி தட்டீருச்சு. கள்ளுக் குடிக்கற பழக்கமிருக்குதுன்னாலும் அதெல்லாம் சோட்டுக் காரங்களோட, தென்னந்தோப்புலதான் குடிப்பாரு, கடைக்குப் போற வழக்கமில்லை. எங்கியாவது சீட்டாடப் பழகீட்டாரோன்னு தாயம்மாளுக்கு ஒரு கவலை வந்துது.

மாரியாத்தா கோயில்ல நோம்பி சாட்டி, கொடி மரம் கட்டீட்டாங்கோ. ஊரே திருவிழா கோலத்துல முசுவா இருக்குது. இன்னைக்கு ராத்திரி “பவளக் கொடி” நாடகம் போடறதுக்கு டவுனுல இருந்து ஆளுங்கெல்லாம் வந்துட்டாங்கம்மான்னு தங்கவேலான் சொல்லீட்டு ஓட்டமா ஓடறான். பெரிய புள்ள கனகாவும் மாப்பிள்ளயும் நோம்பிக்கி வந்துருக்கறாங்க. அப்ப அவுளுக்கு மட்டுந்தான் கலியாணம் ஆயிருக்குது. சின்னவுளுக ரெண்டு பேரும் அப்பத்தான் தாவணி போடற வயசு. தங்கவேலு ஆறாவது படிக்கறான். மாப்பளைக்கு புது வேட்டி சட்டை வாங்கியாறென்னுட்டு சிவாலிங்க செட்டியாரு கடைக்கு போனவரு ஆள இன்னமும் காணமேன்னு தாயம்மா தவிக்கறா. கனகா மாப்புளயும் கனகாவும், தங்கச்சிகளொட சேந்து நாடகம் பாக்கப் போயிட்டாங்க. தங்கவேலான் அவிய கூட்டுப் பசங்களோட போயிட்டான். தாயம்மா மாத்திரம் தனியா இருந்தா, திடீர்னு ஒரு நெனப்பு வந்து செட்டியார் கடைல போயி கேட்டா, செட்டியாரு சந்தனப் பொட்டு வெச்சுட்டு கடையில இருந்தவரு,

“என்ன தாயம்மா, பெரிய மகளும் மாப்பளயும் நோம்பிக்கு வந்தாங்களாக்கும்”

“ஆமாங்கையா, கவுண்டரு துணி எடுக்கறேன்னுட்டு வந்தாருங்களே”

“மருமகனுக்கு வேட்டி துண்டு எடுத்திருக்காரு, உங்களுக்கும் சீல வாங்கிட்டு அப்பளயே போனாரே”

சரின்னுட்டு வந்தவளுக்கு, மனசுக்குள்ள கருக்குன்னுச்சு, எனக்கு சீல வாங்கறத சொல்லவே இல்லயே, என்ன மனுஷன் இவுருன்னு ரோசன பண்ணீட்டு போகயில, நட்ராசு குறுக்க வந்தான். “என்ன தாயம்மா, கருக்கல்ல எங்க போறீங்க, ஊரே நோம்பி கும்புடுது, நீங்க எங்க இந்நேரத்துல”

“நட்ராசு, பெரீப்பன பாத்தியா”

“ஆமா, துணிக்கடை பைய கக்கத்துல இடுக்கீட்டு, கெழக்க போனாரு, சரி, காலைலயே சாணான் தென்னங்கள்ளு எறக்குனானே, செட்டுக்காரங்கெல்லாம் தென்னந்தோப்புல உக்காந்து இன்னைக்கு ரெண்டு பானையும் முடிச்சுட்டுதான் கோயலுக்கு வருவாங்களோன்னு நெனச்சேன்”

“அப்பிடியா செரி செரி நீ போ”ன்னுட்டு நேரா தோப்புக்கு போனா, அங்க அப்பிடி எதுவும் நடக்கல, அப்புறம் எங்க போனாருன்னுட்டு திலும்பனப்போ, தோட்டத்து சாளைல லேசா ஒரு வெளிச்சம். கதவு தெறந்து மூடுனாப்புல இருந்துது. தாயம்மாளுக்கு அது சரியாப்படுல. மெல்ல சத்தமில்லாம சாளைப் பக்கத்துல போனா, முன்னால வழியா போகாம, கெணத்தைச் சுத்தீட்டு பின்னால வழியா போனா, உள்ள ராந்தலு வெளிச்சம் இருக்கறது கண்ணுக்குத் தெரியுது. பேச்சுச் சத்தம் கேக்குது. கூடவே வளையல் சத்தமும். யாருன்னு பாக்கோணுமின்னு சத்தமில்லாம பின்னால வந்து செவுத்துல பாதி ஒசரத்துக்கு ரெண்டு கூடையப் போட்டு அதுமேல ஏறி, வெட்டுக்கை சந்துல பாத்தா.

கவுண்டரு கயித்துக் கட்டல்ல மல்லாக்க படுத்திருக்க, அவுரு நெஞ்சுமேல பால்கார சிவகாமி ஏடாகூடமா பரவிப் படுத்திருந்தா. பகீர்னுச்சு தாயம்மாளுக்கு, இப்பவே அவீயல ரெண்டு பேர்த்தையும் வகுந்தறலாமான்னு கோவம் வந்துச்சு. சத்தமில்லாம இறங்குனா, மனசுல ஒரு முடிவு எடுத்துட்டு, மறுபடியும் கெணத்தச் சுத்தி வந்து கூடை எங்க இருந்ததோ அங்கயே வெச்சுட்டு இருட்டுல உக்காந்திருந்தா. கொஞ்ச நேரங் கழிச்சு சிவகாமி மாத்திரம் முந்தானையை இழுத்துச் சொருகீட்டு போறதப் பாத்தா, அவ கையில புதுச் சேலை. அப்புறமா கவுண்டரு வந்தாரு…….

பவளக் கொடி நாடகம் படு தமாஷா நடந்துச்சு. பொம்பள வேஷம் போட்டவன் நெஞ்சுல ரெண்டு லப்பர் பந்தை வெச்சுட்டு வந்தான். ஊரே உக்காந்து சிரிக்குது. தாயம்மாளும் வந்து புள்ளைக பக்கத்துல உக்காந்துட்டா. நாடகம் பாக்கற முசுவுல அம்மா வந்ததயே புள்ளைக கவனிக்கல. அத்தன சிரிப்புக்கு நடுவுல திடீர்னு திரும்புன கனகா, தாயம்மாளப் பாத்து எப்பம்மா வந்தேன்னு கேக்க, நானு அப்பவே வந்துட்டேன், நீங்கதான் என்னை கவனிக்கலேன்னு சொன்னா, நாடக தமாஷுல மனசு ஒட்டி இருந்ததாலயும், அங்க மேடைல மட்டுந்தான் வெளிச்சம் இருந்ததாலயும், அந்த கொற வெளிச்சத்துல தாயம்மா மொகம் இறுகிப் போயிருந்ததை கனகா கவனிக்கல.கொஞ்ச நேரத்துல தாயம்மா கனகாகிட்ட, கனகு அய்யாவை பாத்தியான்னு கேட்டா, இல்லம்மா அய்யா எங்கியாவது உக்காந்திருப்பாரு பாருன்னு சொன்னா, அன்னைக்கு பொழுதன்னக்கும் நாடகம் நடந்துச்சி. கோழி கூப்படறதுக்கு சித்த முன்ன எல்லாரும் ஊட்டுக்கு போனாங்க. அப்பவும் கவுண்டரு ஊட்டுக்கு வரல. புள்ளைக எல்லாம் படுத்து தூங்கீட்டாங்க, தாயம்மாளும் தூங்கப் போனா, ஆனா மனசுக்குள்ள அந்த நெனப்பே வந்து தூக்கத்தை தொரத்துது….

காலைல வெளிச்சுனு ஆன ஒடனே, நடராசு ஓடியாந்தான், தாயம்மோவ், தாயம்மோவ்னு மூச்சு வாங்குனான்,

என்ன நட்ராசு, சொல்லு, சொல்லுப்பா

பெரீப்பன், பெரீப்பனங்கே கிணத்து மேட்டுலன்னுட்டு அழுதான்.

அய்யோ என்னாச்சு உங்க பெரீப்பனுக்குன்னுட்டு தாயம்மா, கனகா எல்லாரும் ஒரே பாய்ச்சலா ஓடுனாங்க, அங்க கெணத்து மேட்டுல குத்துக்கல்லுல தல பட்டு செங்கோட கவுண்டரு குப்புறக் கெடந்தாரு. அவுரு தலயிலிருந்து ரத்தம் வழிஞ்சு மண்ணை நனைச்சுருக்குது. கொஞ்ச தூரந்தள்ளி அந்தள்ளைல மருமகனுக்கு வாங்குன வேட்டியும் சட்டையும் மஞ்சப் பைக்குள்ள கெடந்தது.

அன்னைக்கு வெள்ளச் சீல கட்டுனவதான் தாயம்மா, இதா இப்பவும் அப்பிடியே அந்த கெணத்து மேட்டப் பாத்துட்டு உக்காந்திருக்கா,

பேரன் சின்னக் கண்ணான் வந்து “ஆத்தா, ஏன் மத்தியான சோத்துக்கு வல்லியாமா, அம்மா கேட்டுது”ன்னு சொல்லீட்டு, மாட்டைப் பாத்தான்.

“ஆத்தா, அதென்னாத்தா செவலக் காளைக்கு தொடையில வெட்டுக் காயம்??”

“அது பக்கத்து தோட்டத்துல வாய் வெச்சுது, அருவாள வீசிப் போட்டுட்டேன் சின்னக் கண்ணா, அத அவுத்துட்டு வா, ஊட்டுக்குப் போலாம்”னு சொல்லீட்டு, நாலு பருத்திமார எடுத்து ஒரு செமையாக் கட்டி தலைல வெச்சுட்டு முன்னால நடந்தா.

நடக்கைல மாட்டோட காயத்தைப் பாத்துட்டு மனசு கேக்காம பேரன் கேட்டான்.

“ஏனாத்தா, அது வாயில்லா சீவன், அதுக்கென்ன தெரியும், அதப் போயி அருவால்ல வெட்டீட்டியே, பாவம்”

தாயம்மா, நின்னு திரும்பி பாத்து நிதானமா சொன்னா “பேராண்டி, ஒண்ணு மாத்திரம் நல்லா கெவனம் வெச்சுக்கோ, அடுத்தவிய ஊட்டுல வாய வெச்சா, அது மாடாருந்தாலுஞ் செரி, மனுஷனாருந்தாலுஞ் செரி, அப்பவே தீத்துப் போடோணுமுடோய்”

செவலைக் காளைக்கு என்னமோ புரிந்தது போல் தலய தலய ஆட்டுது.




Thursday, June 10, 2010

தங்க மணிக்கு பத்து கேள்விகள்


உங்க கைப்பையில அப்படி என்ன குப்பையைத்தான் வெச்சிருப்பீங்க, அதுல இருக்கற அந்த 32 ஜிப்புகளை எப்ப திறந்தாலும், எது தேவையோ அதைத் தவிர மத்ததெல்லாம் எடுக்கறீங்களே?

ரூபா நோட்டை ரெண்டா மடிச்சு பிடிக்கத் தெரியாதா? அது ஏன் எல்லாத் தங்கமணியும் ஒவ்வொரு நோட்டையும் சுருட்டி உருட்டி 24 மடிப்பு மடிச்சு பிடிக்கறீங்க?

அரைச்ச சட்னில ரெண்டு மொளகாய ஜாஸ்தியா போட்டுட்டு, அவனவன் கண்ணுல தண்ணிவர அவஸ்தைப்பட்டா, “கொஞ்சம் காரமா இருந்தா விரும்பி சாப்பிடுவீங்களேன்னுதான் வெச்சேன்” னு எப்படி மனசாட்சி இல்லாம சொல்ல முடியுது? (ஆனா உண்மையில அளவு தெரியாம போட்டதை எங்க போய்ச் சொல்ல)

பேஸ்கெட்பால் விளையாடு, டிராயிங் கிளாஸ் போ, இன்டர்நெட் பழகு, ஹேரி பாட்டர் படி, பரத நாட்டியம் பழகுன்னு அந்த பச்ச மண்ண இந்தப் பாடு படுத்தறீங்களே, அவ வயசுல நீங்க அ,ஆ,இ, ஈ ஒழுக்கமா எழுத பழகீருப்பீங்களா?

குழந்தைக்கு யூனிஃபார்ம் தான் வாங்கப் போறோம், அப்பவும் எதுக்கு மத்த துணியெல்லாம் பாத்துட்டு அப்புறமா யூனிஃபார்ம் வாங்கறீங்க?

எங்க சொந்தக்காரங்க கிட்ட நாங்க ஃபோன்ல பேசும் போது மட்டுமே ஏன் நீங்க மிக்ஸில மசால் அரைக்கறீங்க?

உங்களுக்கு புடவை வாங்கணும்னா நீங்க ரெண்டு மணி நேரம் வேண்ணாலும் நின்னு வாங்கிக்கங்க, ஆனா நீங்க பாக்கற 237 புடவையையும் நானும் பாக்கணும்னா, இதெல்லாம் அராஜகமாத் தோணலயா?

எங்க வெளீல கெளம்புனாலும் நாங்க கிளம்பி ஒரு கால் மணி நேரம் கழிச்சுதான் நீங்க ரெடியாகணும்கறது ஒரு சடங்காவே வெச்சிருக்கீங்களா? (அந்த கால் மணி நேரத்துல கேஸ் ஆஃப் பண்ணு, சன்னலை சாத்து, சாம்பாரை ஃபிரிட்ஜுல வைன்னு ஒரு 34 வேலைகள லிஸ்ட் போட்டு செய்ய வெக்கறீங்களே அது ஏன்)

பாத்ரூம் ஷெல்ஃபுல போதை வஸ்துக்கள் மாதிரி ஒரு 25 டப்பால கலர் கலரா கடந்த ஒரு நூற்றாண்டா என்னென்னமோ இருக்குதே, இதுல ஒரு ஐட்டத்தையாவது கடந்த மூன்று மாதங்கள்ல ஒருதரமாவது யூஸ் பண்ணீருக்கீங்களா?

எந்த கடை முன்னால காரை நிறுத்த முடியாதோ, கண்டிப்பா அந்த கடைல தான் மளிகை சாமான் நல்லா இருக்கும்னு எப்படி கண்டு பிடிக்கறீங்க?