Monday, August 2, 2010

சிட்டுக்கு சின்ன சிட்டுக்கு......

ஞாயிற்றுக் கிழமை, விடுமுறை நாள்.

கொஞ்சம் தாமதமாகவே எழுந்து, குளித்து, டிபன் சாப்பிட்டு, இன்னும் மடிப்புக் கலையாத ஹிண்டு பேப்பரை கையிலெடுத்து விட்டு, சோபாவில் சாய்ந்து அமர்ந்து, டீ கப்பை டீபாயில் வைத்து விட்டு பேப்பரை பிரித்தார். வீட்டுக்கு வெளியே காலையிலேயே பையன்கள் கிரிக்கெட் விளையாடும் சத்தம் கேட்டது. பேப்பரை விரித்து கண்களை ஓட விட்டவருக்கு, அந்த சத்தம் கொஞ்சம் அதிகமாகவே கேட்டது.

கீச், கீச் சென இரண்டு குருவிகள், பால்கனியின் கிரில் கம்பிகளில் அமர்வதும், விசுக்கென திரும்புவதும், ஒன்றையொன்று பார்த்துக் கொண்டு கத்துவதும், பறந்து வந்து பால்கனியில் இருந்த ஷூ ஸ்டேண்டின் கீழே அமர்ந்து, கழுத்தை சாய்த்து, ஆராய்ச்சி செய்வதும், மறுபடியும் கிரில், கீச் கீச், உடனே அடுத்த குருவி, அதே ஆராய்ச்சி, கிரில், கீச், கீச். இப்பொழுது இரண்டு குருவிகளின் பார்வையும் மேலே இருந்த வெண்டிலேட்டர் திறப்பில் பட, விர்ரென பறந்த ஒரு குருவி, அங்கும் ஆராய்ச்சி செய்து மறுபடியும் கிரில், கீச் கீச். இப்பொழுது அடுத்த குருவி, அதே ஆராய்ச்சி, கிரில் கீச் கீச்.

இரண்டையும் உன்னிப்பாக கவனித்தார் சிவராமன். ஆணும் பெண்ணுமாக வீடு கட்ட இடம் பார்க்க வந்திருக்கிறார்கள். அவைகளின் ஆராய்ச்சியையே கொஞ்சநேரம் பார்த்து விட்டு, கடவுளோட படைப்பு தான் எவ்வளவு அற்புதம் என மனசில் நினைத்தவராய் பேப்பரில் மூழ்கிப் போனார்.

அடுத்த நாள் காலை ஆபீசுக்கு போகையில் ஷூவை எடுக்க ஷூ ஸ்டேண்டுக்கு போனவர், அதை கவனித்தார். காய்ந்த புற்கள் சில ஷூ ஸ்டேண்டுக்கு அடியில். சரி கூடு கட்ட ஆரம்பித்து விட்டதோ என யோசித்து மேலே வெண்டிலேட்டர் பக்கம் பார்த்தால், ஒரு கற்றைப் புற்கள் இன்னும் வடிவம் பெறாமல் குவித்து வைக்கப் பட்டிருந்தது. சரி, வீடு கட்ட ஆரம்பிச்சுருச்சுன்னு நினைச்சுகிட்டே அன்றைய நாளை தொடங்கப் போனார்.

“ஏங்க, பெரியவள அவ ஆபீஸ்ல விட்டுட்டு போயிருங்களேன்”

“ஏன், மலரு இன்னைக்கு லேட்டா, என்னாச்சு?”

“தலைக்கு தண்ணி குளிச்சு, அவ காய வைக்கறதுக்கே ரெண்டு மணி நேரம் பண்ணுவா”

”சரி, சரி. லேட்டாக்காம வரச்சொல்லு” என்றபடியே காரின் கதவைத்திறந்து தன் பையை பின்சீட்டில் வைத்தார்.அவசர அவசரமாக செருப்பை போட்டுக் கொண்டு கைப் பையை தோளில் மாட்டிய பெரியமகள் மலர்விழி, ஒரு சாஃப்ட் வேர் கம்பெனியில் வேலை செய்கிறாள். ஈரக் கூந்தலை விரித்துப் போட்டபடியே ஓடி வந்த மகளை நோக்கி, “ஏய், மலரு, இந்தா உன் செல் போனு” என நீட்டியபடியே அம்மாவும் ஓடி வந்தாள். ஒரு நொடி நின்று செல்போனை வாங்கிக் கொண்டு கார்க்கதவைத் திறந்து, முன்சீட்டில் அமர்ந்தாள். ”போலாம்மாம்மா”, ”ம் போலாம்ப்பா” என்றவாறே, கண்ணாடி வழியாக அம்மாவுக்கு டாட்டா காட்டினாள்.

அன்று சாயந்திரம் ஆபீஸிலிருந்து வந்தவர் ஷூவை வைக்கப் போகும் போதும் பார்த்தார், இன்னும் அந்த வெண்டிலேட்டர் பக்கத்தில் புற்கள் கூடி இருந்தது. பாவம் சுவற்றில் ஒரு பிடிப்பு கிடைக்கவில்லையோ என்னவோ என எட்டிப் பார்த்தவருக்கு ஆச்சரியம். ஆணும் பெண்ணும் உடலைக் குறுக்கிக் கொண்டு அந்த வெண்டிலேட்டர் திட்டில் அமர்ந்திருந்தன. ஒரு புன்னகையுடன் உள்ளே போனவர், சின்ன மகளிடம், ”கவிதா உன் ஷூ பெட்டி ஒரு அட்டைப் பெட்டி இருந்ததே அது எங்கம்மா”
”மேல கெடக்குப்பா”

”அத எடுத்துட்டு ஒரு கத்தியும் எடுத்துட்டு வா”

பிளஸ் டூ படிக்கும் சின்ன மகள் தந்த அட்டைப் பெட்டியை வெட்டி ஒரு துவாரம் பண்ணி, ஒரு கூடு போல செய்து அதற்கு உள்ளே ஒரு சிறிய துண்டுத்துணியை மடித்து மெத்தை போல வைத்து பால்கனியில் ஷூ ஸ்டேண்டை நகர்த்தி ஒரு ஓரமாக வைத்து விட்டு, இந்த பெட்டியில் சிறிது அரிசியை போட்டு, ஒரு மூலையில் வைத்தார். இரண்டே நாட்களில் அதற்குள் வட்ட வடிவில் அளந்தெடுத்தாற்போல் புற்களால் செய்த ஒரு கூடு கட்டி கணவனும் மனைவியும் குடி வந்தார்கள்.

தினமும் கீச், கீச்சென்ற சத்தமும், கிரில் கம்பியில் உட்கார்ந்து அலகோடு அலகு உரசி ஒரே சந்தோஷக் குலாவலுமாக இருந்த அந்த தம்பதிகளை குடும்பமே நேசிக்க ஆரம்பித்தது, சின்னவள் கவிதாவுக்கு, தினமும் அந்த கூட்டுக்கு பக்கத்தில் ஒரு டப்பாவில் தண்ணீர் வைப்பதும், அரிசி வைப்பதுமே ஒரு சந்தோஷமான பொழுது போக்காகிவிட்டது. சில நாட்களில் கவிதாதான் அதை முதலில் பார்த்தாள்.

“அம்மா, கூட்டுக்குள்ள ரெண்டு முட்டை இருக்குதும்மா”

“ஏய், அந்த முட்டையை தொடாதே, பாவம் அந்த குருவிங்க”

தொடர்ந்து ஒரு குருவி அடைகாக்க ஒரு குருவி இரை கொண்டு வருவதுமாக, மாறி மாறி நிறைய வாழ்வியல் தத்துவங்களை அந்த இரண்டு பறவைகளும் இந்த குடும்பத்துக்கு போதித்துக் கொண்டிருந்தது.

ஒரு நாள் காலையில், “அம்மா, இங்க வந்து பாரேன், ரெண்டு சின்ன குஞ்சுகம்மா”

அம்மா குருவியின் வயிற்றுக்குக் கீழிருந்து இன்னமும் இறகு முளைக்காத மொட்டைத்தலையுடன் அலகுகளை விரித்த வண்ணம், ச்ச, ச்ச என்ற விநோத ஒலி யெழுப்பிக் கொண்டு அந்த இரண்டு புதிய உயிர்களும் தலையை நீட்டிக் கொண்டு நின்றது. கவிதா, பக்கத்தில் போனதும், தாய்க்குருவி குய்யோ முறையோன்னு சத்தம் போட ஆரம்பித்தது, தனது இறகுகளை விரித்து, இரண்டு குஞ்சுகளையும் இறுக்கமாக அணைத்துக் கொண்டது.

“ஏய், கவிதா, அது பக்கத்துல போகாதடி, அதுதான் பயப் படுதில்ல, போய் கொஞ்சம் அரிசி கொண்டுவந்து போடு”

அரிசியை தூரத்தில் இருந்தே போட்டதும் பக்கத்தில் விழுந்த ஒரு தானியத்தை எடுத்து, தனது சிறிய அலகால் கொத்தி, அதை பொடியாக்கி, ஒரு சிறிய துணுக்கை எடுத்து தாய்க்குருவி குஞ்சுகளுக்கு ஊட்டியது. பார்க்க பார்க்க பரவசமாயிருந்தது.

தினமும், குஞ்சுகளின் வளர்ச்சியை அளவெடுப்பது கவிதாவுக்கு தொழிலாகி விட்டது. சில நாட்களில் குஞ்சுகளும் தாய்க்குருவியைப் போல் கத்துவதும், அம்மாவின் அணைப்பிலிருந்து வெளிவந்து கூட்டுக்குள் விளையாடுவதும் பார்க்க பார்க்க கொள்ளை அழகாய் இருந்தது.

சில நாட்களில், குஞ்சுகள் இரண்டையும் தனியே விட்டு விட்டு, தாய்க் குருவியும் இரைதேட வெளியே போய் விட்டது. குஞ்சுகளுக்கும் இறகுகள் வளர்ந்து அழகாய் சிறகடிக்க ஆரம்பித்தது. இரவில் நான்கு உயிர்களும் ஒன்றாய் அந்த சிறிய புல் வட்டத்தில் உடலைக் குறுக்கி படுத்திருப்பது கண்கொள்ளாக் காட்சியாயிருக்கும்.

மலர் விழி ஆபீஸில் எதோ பார்ட்டியாம், லேட்டா வருவேன்னு போன் செய்தாள். நேரம் ஆக ஆக சகுந்தலாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை, “ஏங்க, எதுக்கும் ஒருதரம் போய் பார்த்துட்டு வந்துருங்களேன்”
”ஏம்மா, அவ என்ன சின்ன குழந்தையா, பார்ட்டி முடிஞ்சதும் அவளா வருவா” என்று சொல்வதற்கும், மலர்விழி காம்பவுண்டு கேட்டை திறந்து வருவதற்கும் சரியாய் இருந்தது. ஒரு அவசரத்தோடேயே கேட்டை பூட்டியவள், அவசரமாக செருப்பை கழட்டி விட்டு, அவசரமாகவே ரூமுக்குள் ஓடினாள். சிறிது நேரத்தில் கவிதா வந்து “அக்கா, பார்ட்டிலயே சாப்ட்டுட்டாங்களாம், சாப்பாடு வேண்டாமாம், தலைவலியா இருக்குன்னு படுத்துட்டாங்க” என்றாள்.

கொஞ்ச நாள் கழித்து, வேறு ஒரு ஞாயிற்றுக் கிழமையில், காலையில் 6 மணிக்கே வீட்டில் விசும்பல் சத்தம். சோபாவில் அமர்ந்திருந்த சகுந்தலா சேலையை சுருட்டி வாயில் வைத்தபடி விம்மிக் கொண்டிருந்தாள்.
கவிதாவின் கையில் ஒரு வெள்ளை காகிதம்.
“அப்பா,

இதை உங்களிடம் சொல்லி, அனுமதி பெற மனது துடித்தது உண்மைதான். நீங்களும் என் விருப்பத்திற்கு குறுக்கே நிறக் மாட்டீர்கள் எனும் அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆனால், நவீனின் வீட்டில் எனக்கு வாய்த்தாற்போல் புரிந்து கொள்ளும் பெற்றோர் இல்லை. ஆகவே தான் இந்த முடிவுக்கு வந்தோம்.

நவீன் நல்லவர். இருவரும் இணைய முடிவெடுத்து விட்டோம். அதற்காக உங்களை உதறிச் செல்கிறோம் என நினைக்காதீர்கள். சீக்கிரத்தில் உங்களோடு இணைய வருவோம். இணைவோம்.

கண்டிப்பாக ஆசீர்வதிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்

மலர்விழி.”

மெதுவே எழுந்து பால்கனிப் பக்கம் போய், வானத்தை வெறித்துக் கொண்டிருந்தார். அப்பா, கோபப் படுவாரோ, கத்து கத்தென கத்தித் தீர்ப்பாரோ என எதிர்பார்த்திருந்த கவிதாவுக்கு ஒன்றும் புரியவில்லை. பாதகி, இப்படிப் பண்ணீட்டாளே, இனி இருக்கிற இன்னொன்றை எப்படி கரை சேர்ப்பது என நினைத்த சகுந்தலாவின் விம்மல் பெரும் அழுகையாக வெடித்தது. எதுவுமே பேசாமல் நிற்கும் கணவனை பார்க்க ஆத்திரமாய் வந்தது.

“அப்பிடியே நிக்கறீங்களே, எதாவது பண்ணுங்களேன்”

குருவிக் கூட்டை பார்த்தார் சிவராமன், ஆண்குருவியும், பெண்குருவியும் மாத்திரம் அரிசியை கொத்திக் கொண்டு இருந்தது. குஞ்சுகளை காணவில்லை.

புரிந்தது போல சோபாவில் வந்தமர்ந்தவர் சொன்னார்,

“சகுந்தலா, குஞ்சுகளுக்கு சிறகு முளைச்சிருச்சு, அதான் வானம் பார்க்க போயிருக்கு, திரும்பவும் வரும், அதுக வீடு தேடி வரும்”