Tuesday, September 8, 2009

பூஜைக்கேத்த பூ இது!!!!!!!!!!



ஊன்று கோலுடன் நடக்கும் பத்து வயது கலைச் செல்வி, அவள் நடக்கும் பொழுது சூம்பிப் போன வலது கால் காற்றில் ஆடியது. இரண்டு கண் இமையும் ஒரு பள்ளத்தை மூடியிருக்க, கைகளை விரித்தபடி மெதுவாக அடியெடுத்து வைக்கும் தென்னரசு, இரண்டு கையுமில்லாததால் சட்டையில் தைக்கப்பட்ட கைகள் காற்றில் ஆடியபடி இன்னொரு பையன், சாடையில் பேசும் மகேஸ்வரி, துருத்திய பற்களின் நடுவே நீண்டிருந்த நாக்கை சுழற்றி வழியும் எச்சையை உள்ளுக்கிளுக்கும் முஸ்தஃபா, இப்படி திரும்பிய பக்கமெல்லாம் ஊனம், இயற்கை இவர்கள் வாழ்வில் எழுதிய சோக வரலாற்றின் கோர தாண்டவம்.

இவர்களிடம் என்ன பேசுவது, எப்படி பேசுவது என்ற குழப்பத்தில் மூவரும் அமர்ந்திருக்க சுரேஷ் தான் அமைதியை கலைத்தான். “பாப்பா, இங்க வா, உன் பேரென்ன?” என்று கேட்டதும் அங்கிருந்த பதினைந்து குழந்தைகளும் அவர்களின் தயக்கத்தை உதறிவிட்டு, ஒரு வேகத்துடன் வந்து இவர்களிடம் ஒட்டிக் கொண்டனர். “அண்ணா, உங்க பேரென்ன?” “இடு எண்ன, உங்க கலுதில டொங்கறது?” என அதிசயத்துடன் ஒரு குழந்தை அடையாள அட்டையை இழுக்க, “அண்ணா, நீங்க பெரிய ஆபீஸரா?” என கலைச் செல்வி கேட்டாள். குழந்தைகள் சகஜமாக பேச ஆரம்பித்ததும் அவர்களின் குறைகள் மறைய ஆரம்பித்து அவர்களுடன் விளையாட ஆரம்பித்தார்கள். எங்கும் சிரிப்பு, மனது நிறைய சந்தோஷம், அவர்களுக்கென வாங்கி வந்த சாக்லெட்டெல்லாம் கொடுத்து, மதியம் வரை அவர்கள் தோளில் ஏறியதையும் தொடையில் அமர்ந்ததையும் முழுதுமாக அனுபவித்து விட்டு, கேட்டரிங் சர்வீஸில் சொல்லியிருந்த சாப்பாடு வந்ததும் அவர்களுக்கு ஊட்டி விட்டார்கள். கொஞ்சம் சாப்பிட்டார்கள். அவர்களிடம் இருந்து விடைபெற்று வரும் பொழுது கையில் கொடுத்த செக்கை வாங்கிக் கொண்ட அந்த காப்பக கண்காளிப்பாளர் நிர்மலா ஒரு நன்றியுடைய புன்னகையுடன் வழியனுப்பி வைத்தார்.

கடற்கரையில் அமர்ந்திருக்கும் பொழுது மனது மிகவும் லேசானதைப் போல் உணர்ந்தார்கள். எதையோ சாதித்ததைப் போன்ற பெருமிதம் மனதில் நிறைந்திருந்தது.

“மாப்ள, இனிமே ஒவ்வொரு சண்டேயும் அங்க போரம்டா” என பீட்டர் கூற “ஆமாண்டா” என்றான் கதிர்.

அப்புறம் வாரா வாரம் அங்கு போக ஆரம்பித்ததும், கல்யாணம் செய்தால் ஒரு ஊனமுள்ள பெண்ணைத்தான் கல்யாணம் செய்வது என்று முடிவெடுத்ததும், அப்படியே மூன்று வருடங்களுக்கு முன் கண்ணில்லாத வளர்மதியை சுரேஷ் கல்யாணம் செய்ததுயும், வாய் பேச முடியாத மீனாவை கதிர் கல்யாணம் செய்ததும் இதோ இப்போது நடந்தது போல் இருக்கிறது. இன்று பீட்டருக்கு கல்யாணம்,

சுரேஷ்.வளர்மதியை கையைப் பிடித்து அழைத்து வந்து சர்ச்சின் முதல் வரிசையில் அமர வைத்து விட்டு, குழந்தையை அவள் கையில் கொடுத்து விட்டு கதிருக்காக காத்திருந்தான். சிலுவையில் தொங்கிய இயேசு கிறிஸ்துவின் சிலைக்கு கீழே கம்பங்களைப் போல் எழுந்திருந்த மெழுகு வர்த்திகளை வெள்ளை உடையணிந்த பாதிரி ஒருவர் வந்து கொளுத்தி வைத்து விட்டு, வந்திருக்கும் கூட்டத்தை ஒரு பார்வை பார்த்து விட்டு மறைந்து போனார்.

பீட்டர் நீல கலர் கோட் அணிந்து மகிழ்ச்சியில் சிரித்துக் கொண்டிருந்தான். பாடகர் குழுவினர் வந்து இசைக் கருவிகளை தட்டி சரி பார்க்க, இனி திருமணம் ஆரம்பிக்கிறது என்பது தெரிந்தும், கதிர் வராததால் சுரேஷ் பொறுமையிழந்து வாசலை பார்த்த படியே இருந்தான்.

“பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே உங்களுக்கு சந்தோஷமும் சமாதானமும் உண்டாவதாக. ஆமென்” என்ற குரலை கேட்டு முன்புறம் திரும்பினான். திருமணம் ஆரம்பித்திருந்தது, இன்னமும் இந்த கதிரையும் காணவில்லை, கல்யாண பெண்ணையும் காணவில்லை. கல்யாண பெண் எப்படி இருக்காங்கடா என்று போனில் கேட்டதுக்கு, “நீங்களே வந்து பார்த்துக்குங்க, அது வரைக்கும் சஸ்பென்ஸ்” என்று பீட்டர் போனில் சொல்லியிருந்தான்.

“நாமெல்லாரும் எழுந்திருந்து நமது கையிலிருக்கும் பாட்டுத்தாளில் உள்ள முதல் பாடலான ஏதேனில் ஆதி மணம் உண்டான நாளிலே எனற பாடலை பாடுவோம், அது சமயம் மண மகள் நம்மத்தியிலே வருவார்” என பாதிரி சொல்ல, மொத்த கூட்டமும் எழுந்து நிற்க இசைக்குழுவினர் பாட ஆரம்பித்தனர். மணப்பெண் வரும் பரபரப்பு வாசலில் தெரிந்தது. சுரேஷ் முழுவதும் திரும்பி மணப்பெண்ணை கண்கொட்டாமல் பார்த்தான். நல்ல சிவப்பாயில்லவிட்டாலும் எடுப்பான நிறம், இடது கையில் மணப்பெண்ணுக்குரிய மலர்கொத்தை பிடித்திருந்தாள். வலக்கையில் சுற்றி மடக்கிய கைக்குட்டை, பியூட்டி பார்லரில் அலங்கரிக்கப்பட்ட முகம், வசீகரிக்கும் கண்கள் என்று சொல்ல முடியாது, ஆனால் பழுதில்லாத கண்கள், இரண்டு கால்களும் சரியாக இருக்க நெற்றியில் இருந்து வழிந்தோடிய மெல்லிய வெள்ளை வலைத்துணி பின்னால் புரள, ரோஸ்கலர் பட்டுப் புடவையில் கம்பீரமாக வந்து கொண்டிருந்தாள் மணப்பெண். சுரேஷுக்குள் ஒரு சின்ன ஏமாற்றமும் குழப்பமும் வந்து வந்து போனது. பீட்டர் மாறி விட்டனோ, அல்லது கதிரைப்போல் வாய் பேசாத…..

“ஜெமிமா ராணியாகிய நீ, உன் அருகிலிருக்கும் சார்லஸ் பீட்டரை உன் வாழ்கைத் துணையாக ஏற்றுக் கொண்டு, இன்பத்திலும், துன்பத்திலும், வாழ்விலும், தாழ்விலும், மரணம் உங்களை பிரிக்கும் வரைக்கும் இவருக்கு மனைவியாயிருக்க, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் முன்னிலையிலும், இங்கு கூடியிருக்கும் அனைவரின் முன்னிலையிலும் வாக்கு கொடுக்கிறாயா?” என்று பாதிரியார் கேட்டதற்கு “வாக்குக் கொடுக்கிறேன்” என்று கணீரென பதில் சொன்ன ஜெமிமாவின் குரலை கேட்டதும் சே இப்படி மாறிப் போயிட்டானே, பேசாம எழுந்து போய்விடலாமா என சுரேஷ் கொதித்துக் கொண்டிருந்தான்.

தோளில் யாரோ தட்டவே, திரும்பினால் கதிர். “சாரிடா, டிராஃபிக்ல மாட்டிட்டோம்” என்று முன்னால் நடக்கும் திருமணத்தை பார்த்துக் கொண்டே சிரித்தான். அவங்க எங்கடா என கிசுகிசுப்பாய் கேட்க, அதோ என கண்ணாலேயே காண்பித்தான். சிநேகமாய் மீனா கைகளை குவித்து வாய் நிறைய புன்னகையுடன் வணக்கம் சொன்னாள். பதிலுக்கு வணக்கம் சொல்லும்போதுதான் கவனித்தான், என்னதான் பட்டு புடவையின் முந்தானையை இழுத்து தோள் வழியே போர்த்த முயற்சித்தாலும், மேடிட்டிருந்த வயிறு விஷேசம் என்று சொன்னது. அவன் பார்வை போன இடத்தை பார்த்த கதிர் சிரிக்க, விஷேசமா என புருவத்தை குவித்து கண்களாலேயே கேட்க, வெட்கத்துடன் கதிர் ஆமாம் என தலையசைத்தான். அவனை தோளோடு தோள் சேர்த்து அணைத்துக் கொண்டு முன்னால் பார்க்க, மணமக்கள் கையெழுத்திட்டுக் கொண்டிருந்தார்கள். மீனா வந்து, சுரேஷின் தோளை தட்டி, குழந்தை எங்கே என சைகையில் கேட்க, வளர்மதி அமர்ந்திருந்த இடத்தை கையால் காட்டினான். மீனா எழுந்து போய் அவள் அருகில் அமர்ந்து குழந்தையை தூக்க முயல, கைகளை தட்டி விட்டு குழந்தையை இறுக பற்றினாள் வளர்மதி. சுரேஷ் ஓடிவந்து மீனா என காதில் சொல்லவும், சிரித்துக் கொண்டே குழந்தையை நீட்டினாள். அவங்க விஷேசமா இருக்காங்க என்று காதில் சொன்னதும் முகம் முழுவதும் சந்தோஷத்துடன் மீனாவின் பக்கம் திரும்பி தடவி தடவி கரங்களை தேடி பற்றினாள்.

“தேவன் இணைத்த இவர்களை எந்த மனிதனும் பிரிக்காதிருப்பானாக, ஆமென்” என கடைசியாக பாதிரியார் ஆசீர்வதித்ததும், மணமக்கள் வெளியே வந்ததும், புல்வெளியில் இட்டிருந்த மேடையில் வரவேற்பு வைபவம் ஆரம்பமானது. எல்லோரும் சிரித்துக் கொண்டே வீடியோவுக்கு போஸ் கொடுத்து விட்டு போய் மிச்சம் ஒரு சிலரே இருந்த நேரத்தில், கடைசியாக பீட்டர் ஜெமிமாவை அழைத்துக் கொண்டு இவர்கள் இருவரிடமும் வந்தான். நண்பர்கள் இருவருக்கும் புது மனைவியை அறிமுகப் படுத்திவிட்டு அவர்களின் மனைவிகளையும் அறிமுகப் படுத்தினான். இருவர் முகத்திலும் இருந்த வெறுப்பை கண்டு கொள்ளாதவனாக, மீனாவிடத்தில் போய் அவளது வயிறை காட்டி, சிரித்துக் கொண்டே கை குலுக்கினான். வெட்கத்துடன் மீனாவும் கைகுலுக்க, பையனா, பொண்ணா என சைகையில் கேட்டு கலாய்த்தான்.

பிறகு நண்பர்கள் இருவரையும் பார்த்து புன்னகைத்து கொஞ்சம் தள்ளி அழைத்து வந்து, “தெரியும் நீங்க ரெண்டு பேரும் என்ன நினைக்கறீங்கன்னு தெரியும், ஒரு குறையும் இல்லாத ஒரு பொண்ணா ஜெமிமா இருக்காளேன்னு பாக்கறீங்களா, நான் நம்ம மூணு பேரும் எடுத்துகிட்ட உறுதி மொழிய மீறிட்டேன்னு நினைக்கறீங்களா”, ஒரு புன்னகை முகத்தில் தவழ சொன்னான் “வளர்மதினால பார்க்க முடியாது, மீனானால பேசவோ கேட்கவோ முடியாது, ஜெமிமானால எல்லாம் முடியும், ஆனா ...................”
பீட்டர் சொல்லச் சொல்ல நண்பர்கள் இருவரும் அவனை கட்டி அணைப்பதைப் பார்த்து ஜெமிமா தலைகுனிய, மீனா புரியாமல் பார்த்தாள். வளர்மதி கையிலிருந்த குழந்தை சிரித்தது.

Monday, September 7, 2009

புண்ணாக்கு, வெளக்கெண்ணை, பருப்பு, வெங்காயம்

போடா புண்ணாக்கு, டேய் வெளக்கெண்ணை, இன்னா, நீ பெரிய பருப்பா, போடா வெண்ணை, டேய் வெங்காயம், ஆமா இவுரு பெரிய பன்னு, சுத்த பழம் மாதிரி இருக்காண்டா, அவன் ஒரு தயிர் வடைடா,

இப்படி எல்லாம் ஒவ்வொருத்தருக்கும் ஒரு பெயர் வெச்சு கூப்பிடறதை கேட்டிருப்பீங்க, அதுக்கு உண்மையிலயே இன்னா மீனிங்னு மல்லாக்க படுத்து யோசிச்சப்ப……….,,,,,,,

புண்ணாக்கு : எல்லாமே தெரிஞ்ச மாதிரி பேசறவன், ஆனா உண்மையில ஒரு சரக்கும் இருக்காது. சந்திராயன் எரிபொருள் என்னாங்கறதுல இருந்து சந்திரமுகி படத்தின் கேமரா ஏங்கிள் வரை எல்லாத்தையும் மணிக்கணக்கா பேசுவான்.

வெளக்கெண்ணை : எதப் பத்தி பேசறமோ அதத் தவிர மத்ததெல்லாம் பேசறவன். கண்ணுல தூசி விழுந்துடுச்சுடான்னா கால் வலிக்கு மருந்து சொல்றவன்.

பருப்பு : எதுக்கெடுத்தாலும் ஓவரா சீன் காட்டறவன். எங்கிட்ட மட்டும் அவன் இந்த வார்த்தையை சொல்லீருந்தா, நடக்கறதே வேறன்னு டயலாக் உடறவன். ஆனா உண்மையிலயே இவருக்கு பேஸ்மெண்ட் வீக்.

வெண்ணை : எப்ப பார்த்தாலும் பெரிய நடுநிலைவாதி மாதிரி, நீதி, நேர்மை நியாயம்னு பேசறவன். என்ன இருந்தாலும் ஒசாமா பின் லேடனும் ஒரு மனிதன் தானே, அவரை எப்படி ஒரு ஓநாய் போலவெல்லாம் கார்ட்டூன் போடலாம்னு பேசுவான்.

பன்னு : ரொம்ப மென்மையானவனாகவும், இளகிய மனசுள்ளவனாகவும் காமிச்சுக்கறவன். ஏண்டா, ஒரு பொண்ண இப்பிடி எல்லாமா கலாய்ப்பாங்க, பாவண்டா, அது அழுதுறுமோன்னு பயந்துட்டேன்னு சொல்வான், ஆனா மனசுல மட்டும் என்னடா இதோட நிறுத்திட்டீங்களேன்னு சலிச்சுக்குவான்.

பழம் : வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் இருப்பது போல் காமிச்சுக்கறவன். டேய், அங்க பாரேன், காத்து அடிக்கும்போது அந்த குல்மோஹர் பூவெல்லாம் என்ன அருமையா தலை ஆட்டுதுன்னு பாரேன்னு சொல்லுவான், ஆனா, உண்மையில அந்த குல்மோஹர் பூவுக்கு பின்னால இருக்கற பால்கனியில துணி காயப் போடற ஆண்ட்டிய லுக் உட்டுட்டிருப்பான்.

தயிர்வடை : எப்பவுமே எதாவது ஒரு பிரச்சனையில இருப்பதாகவே கற்பனை பண்ணிக்கறவன். ரயில் டிரைவர் தூங்காம வண்டி ஓட்டி அவரு கண்ணு ஒரு மாதிரி இருக்கறத பார்த்துட்டு, டேய் எனக்கு இஞ்சினுக்கு அடுத்த கோச்சுடா, அந்தாளு கண்ணப் பாரேன், ஒரு ஃபுல் அடிச்ச மாதிரி இருக்காண்டா, ஒழுக்கமா ரயில ஓட்டுவானான்னு கவலைப் படுவான்.

ஆனா பாருங்க, இந்த எல்லா பட்டப் பெயர்களுமே ஒரு சாப்பிடற பொருளை மையமா வெச்சுத்தான் உருவாக்கியிருக்காய்ங்க, அது ஏன்னு தெரிஞ்சவங்க சொல்லுங்க.

Friday, September 4, 2009

நவீன குருகுலங்கள்


என் மறுபாதி, சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் பணி புரிகிறார் என்பதினால், என் வாரிசையும் அதே பள்ளியில் சேர்க்க வேண்டிய கட்டாயத்திற்காளானேன். கடந்த சில நாட்களாக ஆணி புடுங்குவதிலிருந்து விடுப்பு என்பதால், இவர்கள் இருவரையும் பள்ளிக்கு அழைத்துச் செல்வதும், திரும்ப அழைத்து வருவதும் அடியேன் தலையில் விதிக்கப்பட்டது என்பதை விட திணிக்கப்பட்டது என்று சொல்லலாம். பள்ளி முடிவதற்கு சிறிது நேரம் முன்னாலேயே சென்று பள்ளியின் முன் காத்திருந்து நம்மவர்களை அழைத்து வரலாம் என ஒரு கால் மணி நேரம் முன்னாலேயே சென்றிருந்தேன். மிகவும் மேல்தட்டு ரக மக்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளியாதலால், பள்ளிக்கு அருகில் செல்லவே நமக்கு கூசுகிறது. எனது துணைவி அங்கு பணி புரிகிறாரே என்ற ஒரே காரணத்துக்காக என் குழந்தையையும் அங்கு சேர்க்க வேண்டிய கட்டாயத்திலிருப்பதால், இந்த கூச்சத்தையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. சென்னை நகரத்தை விட்டு சற்றே ஒதுக்குப் புறத்தில் பள்ளி வளாகம், கட்டிடப் பணி இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. அவசர கதியில் கட்டிய, இன்னும் ஒரு பள்ளிக்கான எந்த லட்சணங்களையும் கொண்டிராத நான்கு சுவர்களுக்குள் பத்தாம் வகுப்பு வரை பாடம் நடத்துகிறார்கள். மாதத்திற்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கிறார்கள். பள்ளி அமைந்திருப்பது ஒரு கிராமத்தில் என்பதால் போக வர சாலை வசதிகள் இன்னும் நூறு ஆண்டுகளுக்குள் எப்படியும் ஏற்படுத்தப் படும் என நம்புவோம்.

இந்தியாவின் அனைத்து விலையுயர்ந்த கார்களையும் அதன் பணக்காரத்தன முகங்களையும் பார்க்க முடிந்தது. சிறிய கார்களில் வந்திருக்கும் அப்பாக்கள், குழந்தைகளை அழைத்துப் போக வந்திருக்கும் அம்மாக்களை சைட் அடித்தபடியே ஒதுங்கி நின்று மொபைல் போனில் பேசுகிறார்கள். பணக்கார படகு கார்களை ஓட்டி வந்திருக்கும் டிரைவர்கள், இன்னும் பத்து நிமிஷம் இருக்கல்ல, ஒரு தம் போட்டு விட்டு வருவோம் என பள்ளிக்கு முன்னே இருக்கும் செடி கொடிகளின் பக்கத்தில் ஒதுங்குகிறார்கள். ஒரு படகு காரில் இருந்து இறங்கிய பெண்மணி, காவலாளியிடம் “ எத்தின் மன்க்கி ஸ்கூல் ஃபினிஷ் ஆகும்” என சுத்தத் தமிழில் கேட்டுக் கொண்டிருந்தார்.

பள்ளிக்கு உள்ளே சென்றேன். தோளில் தொங்கிய லேப்டாப்பை இறுகப் பிடித்த படியே பிரின்ஸிபால் போல் தோன்றிய ஒரு பெண்மணி அவசர கதியில் ஆணைகள் பிறப்பித்துக் கொண்டிருந்தார். குழந்தைகளின் வகுப்பு ஆசிரியரைக் காண வந்திருந்த பெற்றோர்களிடம் இருந்த பணக்காரத்தனம் எனக்கு ஒரு ஒவ்வாமையாய் தோன்றியது.

இன்று வாத்தியாரிடம் சென்று வாதிடும் பெற்றோர்கள் அதிகமாகி விட்டனர். என் மனைவியின் வகுப்பில் பெற்றோர் தினத்தன்று கேட்கப்படும் சில கேள்விகள் :

என் பையனுக்கு உங்க ஸ்கூல் சிலபஸ்ல ஒரு இன்ட்ரஸ்டே இல்ல, நீங்க இத மாத்தறதுக்கு முயற்சி எடுங்களேன்.

அவனை தமிழ் படிக்க சொல்லி அதிகம் கட்டாயப் படுத்தறீங்களாமே, அவன் தமிழ் படிச்சு என்ன பண்ணப் போறான்?

இந்த பெற்றோர்களை நினைத்தால் சிரிப்பும் வேதனையுமே வருகிறது.

முதலாவது எத்தனை பெற்றோர்கள் தங்கள் குழந்தையுடன் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது செலவு செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அப்படியே செலவு செய்தாலும் தன் மகனின் பேச்சைக் கேட்க எத்தனை பேருக்கு பொறுமை இருக்கிறது?

எல்லா பெற்றோருக்கும் தன் மகன் முதல் ரேங்க் வாங்க வேண்டும், அடுத்த சச்சின் டெண்டுல்கராய் திகழ வேண்டும், பெற்றோருக்கு பெருமை சேர்க்கிறவனாய் இருக்க வேண்டும் என விரும்பத் தோன்றுகிறதே தவிர, இப்படியெல்லாம் ஆவதற்கு பெற்றோராகிய நமது பங்களிப்பு அதிகம் தேவை என்ற அடிப்படை உண்மையை சௌகரியமாக மறந்து விட்டு, பணத்தை விசிறியடித்தவுடன் என் மகன் ஒரு சிறந்தவனாக மாற வேண்டும் என ஆசைப் படுகிறார்கள். அப்படி நடக்காத பட்சத்தில், கூசாமல் பள்ளிகளை குறை கூறவும் இவர்கள் தயங்குவதில்லை. வேணும்னா இன்னும் ஒரு தௌஸண்ட் ருப்பீஸ் ஃபீஸ் வாங்கிக்குங்க, ஆனா என் பையன் தான் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கணும் என்ற ஒரு அவுட் சோர்சிங் மனப் பான்மை பெற்றோர்களிடத்தில் அதிகம் வளர்ந்திருக்கிறது. குழந்தை வளர்ப்பிலும், படிப்பிலும் பெற்றோராகிய தங்களுக்கும் சம பங்கு உண்டு என்பது தெரிந்தாலும், அதை வேலைப்பளு என்ற பாசாங்குத்தனமான காரணம் சொல்லி தட்டிக் கழிக்கிறார்கள். ஆனால் தனது தோழியிடம் மணிக் கணக்கில் மொபைலில் பேச நேரம் இருக்கிறது.

பள்ளி விட்டு குழந்தைகள் வெளியே வருகிறார்கள். ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் அந்த பணக்கார திமிரை பார்க்க முடிகிறது. பெருவாரியானவர்கள் கையில் எதாவது ஒரு சிப்ஸ் பாக்கெட் இருக்கிறது. பள்ளிக்கு உள்ளேயே ஒரு கேண்டீன் வைத்திருக்கிறார்களாம். பிஸ்ஸாவிலிருந்து அனைத்து குளிரூட்டப் பட்ட பானங்கள் வரை விற்கிறார்கள். எல்லா வகையான ஜங்க் ஃபுட் எனப்படும் துரித வகை பண்டங்கள் கிடைக்கிறது. வெளியே வரும் குழந்தைகளை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். நிறைய குழந்தைகள் அளவுக்கு மீறிய உடல் எடை கொண்டுள்ளனர். ஊளைச்சதை உடம்பு எங்கும் பிதுங்கித் தொங்குகிறது. தன் பையை வாங்கும் கார் டிரைவரை ஒரு பத்து வயது பையனும் ஒரு முதலாளித்துவ திமிரிலேயே பார்க்கிறான். அங்க வெயிட் பண்ணு, நான் வரேன் என ஏதோ ஒரு பிஸியான முதலாளி ஆணையிடுவதுபோல் ஆணையிடுகிறான்.

எத்தனை ஆயிரம் செலவானாலும் சரி, ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம் போன்ற கல்வி நிறுவனங்களில் என் குழந்தைகள் படிக்கப் போக வேண்டும் என பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புகிறார்கள். அவர்களின் பண முடிப்புகளுக்கென கவர்ச்சிகரமான பாடத்திட்டங்களை காண்பித்தே பள்ளிகள் பணம் பண்ணுகின்றன. ஏழு வயது பெண்ணுக்கும் கூட பள்ளியில் பரத நாட்டியம் கற்றுத்தரப்பட்டு, அதற்கென தனி பணம் வசூலிக்கப் படுகிறது. தனி மனித ஒழுக்கம், பெரியவர்களிடத்தில் மரியாதை போன்றவை கிலோ என்ன விலை என இந்த மேல்தட்டு குழந்தைகள் கேட்கிறார்கள். ஏனெனில் இவை இந்த பள்ளிகளில் உள்ள பாடத்திட்டத்தில் கிடையாது. பாடங்களை மனப்பாடம் செய்து, தேர்வில் வாந்தியெடுக்கும் மனித இயந்திரங்கள்தான் இங்கு உருவாக்கப் படுகிறார்களே தவிர, நல்ல அறிவுச் செல்வங்களை இந்த நவீன குருகுலங்கள் உருவாக்குவதில்லை.

Thursday, September 3, 2009

மனதைத் திற, மகிழ்ச்சி வரட்டும் - 3

எங்க மேனேஜர் எம்மேல காண்டா இருக்கான்பா. என்ன செஞ்சாலும் ஒரு குத்தம் கண்டு பிடிக்கறான்.

நான் என்னதான் சரியா செஞ்சாலும் இன்னும் உங்கிட்ட இருந்து ரொம்ப எதிர்பார்க்கிறேன்னு முதலாளி சொல்றாருப்பா.

அந்த பொம்பள எனக்கு மேலதிகாரியா வந்தப்பவே நெனச்சேன். புருஷன விட்டுட்டு தனியா இருக்கறவளாச்சா, முழு ஆண் வர்க்கத்து மேலயும் காண்டு அவுளுக்கு, அதான் எந்நேரமும் ஆம்பளங்கள கண்டா எரிஞ்சு விழறா!!!!!! அவ புருஷன் மேல இருக்கற கோபத்தையெல்லாம் நம்ம கிட்ட பழி தீத்துக்கறா, எல்லா நம்ம நேரண்டா!!!!!!!

அந்த பெருசு சரியான ஜொள்ளு பார்ட்டிப்பா, எப்ப போனாலும் முந்தானைக்கு உள்ள பாக்கறதும், பல்ல இளிக்கறதும், கைய தொட்டு பேசறதும், டபுள் மீனிங்ல பேசறதும் தாங்க முடியல.

இப்ப வந்திருக்கானே அவன் ………………… ஜாதிக்காரன்யா, அதான் மத்தவனையெல்லாம் ஒழிக்கணும்னு இருக்கான். எல்லா நம்ம நேரம்…….. தணிஞ்சு தான் போக வேண்டியிருக்கு.

அதென்னமோடா, வட நாட்டுக்காரன்னா நம்மாளு தூக்கி தூக்கி குடுக்கறார்ரா, ஆனா அதே சமயத்துல நம்மாளுங்க வயத்துல ஏன் அடிக்கறார்ன்னு தெரியல.

வர்றவன் எல்லாம் பதவி உயர்வு வாங்கறான், கம்ப்யூட்டர்ல நாலு கலர்ல படம் போட்டுட்டா அவன் பெரிய ஆளா?? நேத்து பொறந்த பசங்க எல்லாம் நமக்கு மேனேஜர் ஆகறாங்கப்பா!!!!

இது போன்ற புலம்பல்களை எல்லா வகையான அலுவலகங்களிலும் கேட்க முடியும். இப்படி புலம்பும் நம் எல்லாருக்குள்ளும் ஒரே ஒரு கேள்வி , நான் என்ன தப்பு பண்ணுகிறேன், ஏன் எனக்கு மட்டும் இப்படி ஆகிறது. கொஞ்சம் இப்படி வாங்க, இந்த புண்ணிய வானை பாருங்க


ராபெர்ட்டோ கொயிசூட்டா


க்யூபா தேசத்தை அறியாதவர்கள் இருக்க முடியாது. சுருட்டு குடிச்சுகிட்டே போட்டோவுக்கெல்லாம் போஸ் குடுப்பாரே, அவரேதான் ஃபிடல் காஸ்ட்ரோ என்ற போராளி, வெறும் தீவாய் இருந்த ஒரு பிரதேசத்தை வளம் கொழிக்கும் நாடாக இவர் மாற்றிய வித்தை எல்லோருக்கும் தெரியும். (தெரியலேண்ணா அதப் பத்தி படிச்சு தெரிஞ்சுக்கோங்க). அந்த தீவில் உள்ள ஹவானா என்ற இடத்தில் பிறந்தவர் தான், மேலே கொட்டை எழுத்தில் எழுதப் பட்டிருக்கும் ராபர்ட்டோ கொயிசா, இல்ல கொயாசீ, அடச்சீ விடுங்கப்பா, வெறும் ராபர்ட்டோனே வெச்சுக்கலாம். இவரின் தாத்தாவுக்கு ஒரு சர்க்கரை ஆலை இருந்தது. முதலாளி வர்க்கத்தில் பிறந்ததால், செல்வச் செழிப்புடனேயே வளர்ந்த ராபர்ட்டோ அண்ணாச்சி, கியூபாவில் படித்தார், பிறகு அமெரிக்காவில் படித்தார், அங்கு படித்தார் , இங்கு படித்தார், என்னென்னவெல்லமோ படித்தார். இறுதியில் கொக்க கோலா கம்பெனியில் ஒரு பானம் நிரப்பும் பிரிவில் பணிக்கு சேர்ந்தார். எப்பவுமே துறு துறுன்னு இருக்கும் இவர், குறுகிய காலத்தில் ஐந்து ஆலைகளுக்கு மேலாளராக பதவி உயர்வு செய்யப் பட்டார். சீக்கிரத்திலேயே கொக்க கோலாவின் தலைமையகமான அமெரிக்காவிலுள்ள ஜியார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டாவுக்கு மாற்றப் பட்டார். அங்கிருந்து பிடித்த ஏறுமுகம் இந்த மனிதரை நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு மிகக் குறுகிய காலத்தில் இட்டுச் சென்றது.

இவர் தலைமைப் பொறுப்பை ஏற்ற நேரம் குளிர் பானக் கம்பெனிகளில் பெப்ஸி இவர்களுக்கு பெரிய தலைவலியாயிருந்தது. பெப்ஸி ஆறு பாட்டில் விற்றால் கோலா ஒரு பாட்டில் விற்பதற்குள் நாக்குத் தள்ளியது. மக்களும் பெப்ஸியை விரும்பி குடித்தனர். கோலாவின் விற்பனை பிரிவிலுள்ள மேலாளர்கள் சிண்டைப் பிய்த்துக் கொண்டிருந்தார்கள். என்னென்னவோ கருத்துக் கணிப்புகள், விதவிதமான விளம்பரங்கள், ஒன்று வாங்கினால் மூன்று இலவசம் போன்ற கவர்ச்சித் திட்டங்கள் என எதுவும் வேலைக்காக வில்லை. மக்கள் பெப்ஸியை குடித்துக் கொண்டிருந்தார்கள். எதைத் தின்னால் பித்தம் தெளியும் என கோலாக்காரர்கள் காத்திருந்த வேளையில் தான் நமது நாயகன் ராபர்ட்டோ தலைமைப் பொறுப்பேற்றார். அனைத்து விற்பனை பிரிவு ஆட்களையும் உங்களிடமுள்ள சந்தையை பற்றிய கருத்து கணிப்புகள், நமது விற்பனை உத்திகளைப் பற்றிய விவரங்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு நாளை வாருங்கள் சந்திப்போம் எனக் கூறினார்.

அந்த நாளையும் வந்தது. எப்பொழுதும் சிகரெட் குடிக்கும் பழக்கம் கொண்டிருந்த ராபர்ட்டோவும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு புகையை ஊதியவாறே அந்த அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். அந்த அறையின் மௌனத்தை கலைத்தது அவரது காலணி அரவம் மட்டுமே. அமர்ந்திருந்த விற்பனைப் பிரிவு குப்புசாமிகளுக்கு என்ன நடக்கப் போகிறதோவென்ற பயத்தில் பில்டிங் ஸ்ட்ராங்காயும், பேஸ்மெண்டில் ஆட்டத்துடனும் இருந்தனர். இரண்டு மூன்று சிகரெட்டுகளுக்குப் பிறகு தொண்டையை செருமிக்கொண்டு கேட்டார்,

“சரி இப்ப என்ன பிரச்சனைன்னு எல்லாரும் நொந்து போயிருக்கீங்க?”

“சார், நம்ம ஐட்டத்தை விக்கறதுக்காக வானத்தை வளைத்தோம், பூமியை புரட்டினோம், காற்றை கட்டினோம், மலையை பெயர்த்தோம், கடலை கவிழ்த்தோம், ஒண்ணும் நடக்கல”

“சரி, பிரச்சனை எங்கன்னு பார்த்தீங்களா?”

“ஆமாம் சார், பிரச்சனையே இந்த பெப்ஸிக்காரந்தான் சார், அவனுது ஆறு வித்தா, நம்ம ஐட்டம் ஒண்ணுதான் சார் விக்குது”

“அதுதான் பிரச்சனையா?”

“ஆமா சார்”

“இல்லை அதுவல்ல பிரச்சனை” அனைத்து புருவங்களும் ஆச்சரியத்தில் விரிந்தன.

“சரி இந்தப் பிரச்சனையை வேறொரு கோணத்தில் அணுகுவோம், ஒரு சராசரி அமெரிக்கன் ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் திரவம் குடிக்கிறான்?”

பட்டென பதில் வந்தது “ 14 அவுன்ஸ் சார்”

“அதில் எவ்வளவு கொக்க கோலா குடிக்கிறான்?”

“2 அவுன்ஸ் சார்”

“இப்ப புரிஞ்சுதா, பிரச்சனை எங்க இருக்குன்னு, மீதி 12 அவுன்ஸ் அவுனுக்கு வேற ஐட்டம் கிடைக்குது, அதனால அவன் மத்ததெல்லாம் குடிக்கிறான். அப்ப நம்ம போட்டி பெப்ஸியோட அல்ல, இந்த 12 அவுன்ஸோடதான். இந்த 12 அவுன்ஸும் கொக்க கோலாவா இருக்க நாம என்ன செய்யணும்னு யோசிங்க, ஒவ்வொரு அமெரிக்கனும் எப்பவெல்லாம் எதாவது குடிக்கணும்னு யோசிக்கறானோ, அப்ப அவன் கொக்க கோலாவைத்தான் குடிக்கணும். ஒவ்வொரு அமெரிக்கனுக்கும் கைக்கு எட்டற தூரத்துல கோலாவை கொண்டு போய் வைங்க”

எல்லார் மூளையிலும் பல்பு எரிந்தது, அமெரிக்காவின் மூலை முடுக்குகளிலெல்லாம் தானியங்கி பானம் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப் பட்டன, ஒரே வருடத்தில் கோலாவின் விற்பனை அசுர வளர்ச்சி கண்டது. அன்றிலிருந்து இன்று வரை அதன் வளர்ச்சி பிரமிப்பூட்டுவதாய் உள்ளது. இங்கு ராபர்ட்டோவின் அணுகு முறையை கவனியுங்கள்.

எதிரி என்பது மனிதர்களோ நிறுவனமோ அல்ல, நமது எண்ணங்களும், நம்மை சுற்றி நாமே எழுப்பியிருக்கும் மாய பிம்பங்களும் தான்.

பெப்ஸிதான் முழு எதிரி அல்ல எதிரிகளுள் அவர்கள் ஒருவர் மாத்திரமே.

நமது திறமை என்னவோ அதை மூலதனமாகக் கொண்டு போராடுவோம். பெப்ஸி கடையில் விற்கிறான், நாம் மனிதன் நடக்கும் இடத்திலெல்லாம் விற்போம்.

அப்படியே நம்மோடு அல்லது நமக்கு மேலாளராக வேலை செய்யும் எந்த சுப்பு சாமியும் நமக்கு எதிரிகளல்ல.

நமது அடுத்த வீட்டில் வாழும் பங்கஜா மாமி நமக்கு எதிரி அல்ல.

நமது முதல் எதிரி, நம்மிடம் உள்ள குறைகள் தான். அந்த குறைகளை கண்டுபிடி. தினமும் அந்த குறைகளை நிவர்த்தி செய்வது நமது இலக்காயிருக்கட்டும். 12 அவுன்ஸ் திரவம் என்னவென்று கண்டு பிடிக்காததுதான் நமது குறை. அந்த 12 அவுன்ஸ் தெரிந்த பின் அதை எப்படி ஆட்கொள்வது என முயற்சிப்போம்.

குறை கண்டுபிடிக்கும் மேலாளர் ஒரு குறையாகவே தெரிய மாட்டார், அதிகம் எதிர்பார்க்கும் முதலாளி ஒரு பொருட்டாகவே தெரிய மாட்டார். ஜொள்ளுவிடும் பெருசு கால் தூசாய் மாறிப் போகும். ஆம்பிளையை வெறுக்கும் பெண் அதிகாரி நண்பியாகி விடுவார். ஜாதி வெறி பிடித்த அதிகாரி சக தோழனாகி விடுவார்.

எதிரியோடு போராடுவதை விட, எதிரியாய் தோன்றி புலம்ப வைக்கும் சூழ்நிலையோடு போராடு, வெற்றி நிச்சயம்.

மனதைத் திற, மகிழ்ச்சி வரட்டும்.

Wednesday, September 2, 2009

ஜுகல்பந்தி - 2 - 09 - 2009, துருவங்களான தொப்புள் கொடி உறவு

நகரம் - நாக்பூர் – மத்திய நகரம்.

இந்திய வரைபடத்தின் மத்தியிலுள்ள நகரம். இங்கிருக்கும் பூஜ்ஜிய மைல் கல்லிலிருந்து இந்தியாவின் அனைத்து பாகங்களுக்குமான தொலைவு கணக்கிடப்படுகிறது. இந்தியாவிலேயே உள்ள அனைத்து விமான கட்டுப்பாடுடு அறைகளிலும் மிகவும் பரபரப்புடனும் சுறு சுறுப்புடனும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை நாக்பூரிலுள்ளது. தெற்கு வடக்காகவும், கிழக்கு மேற்காகவும் செல்லும் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு விமானங்கள் இங்கு நாக்பூரில் கைநாட்டு போட்டு விட்டுத்தான் செல்ல வேண்டும். மேலும் ரயிலாகட்டும், தரை வழிப் போக்குவரத்தாகட்டும் எல்லோரும் நாக்பூரின் வழியாகத்தான் செல்ல வேண்டிய கட்டாயத்திலிருப்பதால் இந்த நகரத்திற்கான் முக்கியத்துவம் அதிகம் அதிகரித்திருக்கிறது.

வரலாற்று ரீதியாக இந்த நகரத்தின் பெருமை 3000 வருடங்கள் நம்மை பின்னோக்கி இழுத்துச் செல்கிறது. நாக்பூரின் நடுவில் ஓடும் ஒரு நதி பாம்பு போல் வளைந்து வளைந்து செல்வதால், இதை நாக் நதி (நாகப் பாம்பின் நினைவாக) என அழைக்க ஆரம்பித்து, அந்த நதியை சுற்றி கட்டப்பட்ட பட்டணத்துக்கு நாக்பூர் என்று பெயரிட்டு விட்டார்கள். இன்றும் இதன் நினைவாக நாக்பூர் நகராட்சியின் அதிகார முத்திரையில் படமெடுத்து நிற்கும் நாகப் பாம்பினை காணலாம். மத்திய நகரம் என்பதாலோ, அல்லது நதிக்கரையில் அமைந்து வளம் கொழித்துக் கொண்டிருந்ததாலோ என்னவோ தெரியவில்லை, இந்த சமவெளிப் பரப்பில் தோன்றிய அனைத்து ஆட்சியாளர்களுக்கும் இந்த நகரத்தை தன்னகத்தே வைத்திருப்பது ஒரு பெருமைக்குரிய விஷயமாயிருந்தது. கி.மு 8 ம் நூற்றாண்டுக்கு இழுத்துச் செல்லும் வரலாற்று குறிப்புகள் நமக்கு இந்த நகரத்தையும் அதைச் சுற்றியுள்ள விந்திய பிரதேசங்களையும் ஆண்ட மகத அரசர்களின் அறிமுகத்தை தருகின்றன. அடுத்து இது 4 – ம் நூற்றாண்டில் குப்த பேரரசுடன் நல்லுறவு கொண்டிருந்த வாகடக வம்சத்தை சேர்ந்த முதலாம் பிருத்வி சேனா அரசனின் கீழ் நல்லாட்சி பெற்றிருக்கிறது.

பிறகு போன்ஸ்லே வம்சத்தின் ரகோஜி, ஜனோஜி, முதோஜி மற்றும் இரண்டாம் ரகோஜி என ஏகப்பட்ட ஜி ஜி க்களே இந்த பிரதேசத்தை ஆண்டிருக்கிறார்கள். அவரவர் பலத்திற்கு தகுந்தாற்போல் இந்த நகரம், மராத்தியர்கள், குஜராத்திகள், ராஜபுத்திரர்கள், குப்தர்கள் என பலர் கையிலும் மாறி மாறி வளர்ந்தும் செழித்துமிருக்கிறது. பிறகு ஆங்கிலேயர்களின் கைக்கு மாறியபின் இந்த போன்ஸ்லே வம்சத்திலிருந்த எள்ளு கொள்ளு பேரன்களில் ஒருவரான இன்னொரு ரகோஜியை பொம்மை அரசராக நியமித்துவிட்டு, நாட்டாமை பண்ணினார்கள். இந்திய வியாபார காந்தமான டாடா குடும்பத்தின் முதல் துணி தொழிற்சாலை இங்குதான் தொடங்கப் பட்டது. 1877 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இங்கிலாந்து மகாராணி விக்டோரியா இந்தியப் பேரரசியாக அறிவிக்கப்பட்டதை தொடந்து, தங்களது ஆங்கிலேய விசுவாசத்தை காண்பிக்கும் படியாக இந்தியாவின் முதல் துணி தொழிற்சாலைக்கு “எம்ப்ரஸ் மில்” என பெயரிட்டு, எங்க தொழில்ல குறுக்க வராதீங்க ராணி என சொல்லாமல் சொல்லி விட்டார்கள்.

இந்திய தேசிய காங்கிரஸின் மாநாடுகள் நடக்கும் இடமாகவும், ஒத்துழையாமை இயக்கத்தின் முக்கிய கேந்திரமாகவும் செயல்பட்ட இந்த நகரத்தில் தான் 1923 ஆம் ஆண்டு நடந்த இந்து முஸ்லிம் மோதல்களினால் வீறுகொண்டெழுந்த கே.பி. ஹெட்கேவார் என்பவர் 1925 ல் ஆர். எஸ். எஸ் ஐ துவக்கி வைத்தார். 1927 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 4 ம் தேதி, லக்ஷ்மி பூஜை தினத்தன்று, நடந்த ஒரு இந்து முஸ்லிம் கலவரம் ஆர்.எஸ். எஸ் க்கு ஒரு தேசிய அங்கீகாரத்தை அளித்ததும் இந்த நகரத்தில் தான். 1956 ல் அம்பேத்கார் தலைமையில் தலித் இனத்தவர்கள் புத்த மதத்திற்கு மாறி, ஒரு புது இயக்கத்துக்கு பிள்ளையார் சுழி போட்டதும் இந்த நாக்பூரில் தான். எது எப்படியோ, அதிகம் ஆரஞ்சுத் தோட்டங்கள் இந்த நகரத்தை சுற்றிலும் காணப் படுவதால் இதற்கு ஆரஞ்சு நகரம் என்ற பெருமையும் உண்டு.

நாட்டு நடப்புகள் : துருவங்களான தொப்புள் கொடி உறவு

ஏமென் நாட்டில் தேமேவென ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞனுக்கு திடீரென ஒரு தொழில் சாம்ராஜ்யக் கனவு உருவாகிறது. எப்படியாகிலும் ஒரு தொழிலதிபர் ஆகி விட வேண்டுமென்று முடிவெடுத்து விட்டு தாயகம் திரும்புகிறார். கையிலிருக்கும் முதலீடுகளை வைத்து தொழில் துவங்கி இன்று தொண்ணூறு ஆயிரம் கோடிக்கு (எவ்வளவு பூஜ்ஜியங்கள் என தலை சுற்றுகிறதா, ஒரு கிளாஸ் தண்ணீர் குடியுங்கள்) மேலான சொத்துக்களுடன் வியாபித்து நிற்கும் சாம்ராஜ்யத்திற்கு அடிக்கோலிட்டவர் தான் தீரு பாய் அம்பானி. இவருக்கும் கோகிலா பென் என்ற இவரது மனைவிக்கும் பிறந்தவர்கள் தான் முகேஷ், அனில் என இரு ஆண்பிள்ளைகள். இதில் முகேஷ் சமர்த்தாக அப்பாவின் தகிடு தத்தங்களை படிப்பதில் நேரம் செலவிட, அனில் பதினாறடி பாய்ந்து, அரசியல் வியாதிகளுடன் கை குலுக்கினார், சினிமா காரர்களுடன் சிரித்துக் கொண்டிருந்தார், பேஷன் ஷோக்களுக்கு போய் வந்தார். ஆக அண்ணனுக்கும் தம்பிக்குமான ரசனையில் ஆரம்பித்த இடைவெளி, இப்பொழுது தந்தையின் மறைவிற்குப் பின் இரு துருவங்களாகி நிற்கும் அளவுக்கு தள்ளி வைத்துள்ளது. தீருபாய் உயிரோடிருந்த காலத்தில் தனது குழந்தைகளுக்கு என சொத்துக்களை பிரித்து வைத்திருந்தாரானால், ஒரு வேளை இந்த விரிசல் பெரிதாகி இருக்காதோ என்னவோ, இருவருக்கும் உள்ள தொழில் போட்டி இப்பொழுது வீதிக்கு வந்து சண்டையிடும் பரிதாபமான நிலைமைக்கு தள்ளி விட்டிருக்கிறது. தொலைத்தொடர்பு, கட்டுமானம், வர்த்தகம், கேளிக்கை, மின் உற்பத்தி என தனது எல்லைகளை விரிவு படுத்தி தம்பியானவன் தனியாவர்த்தனமாட, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற ஒரே குடையின் கீழ் அண்ணன் அடக்கி வாசிக்கிறார். பெட்ரோலியம், மற்றும் பெட்ரோலியம் சார்ந்த எல்லா கண்றாவி வேதிப் பொருள்கள், துணி மில்கள், மற்றும் சில்லறை வர்த்தகம், இன்னும் என்னென்னமோ எழவு துறைகள் என அண்ணனுக்கும் பல துறைகள் உண்டு. அண்ணனின் பெட்ரோலியத்துறை ஆந்திராவின் கிருஷ்ணா கோதாவரி பகுதியில் இயற்கை எரிவாயு இருப்பதை மோப்பம் பிடித்து, தனது கூடாரத்தை போட்டு இந்த வருட ஏப்ரல் மாதத்திலிருந்து பணம் அள்ள ஆரம்பித்தது. இதைக் கண்ட தம்பி, நான் முதலிலேயே அண்ணனுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறேன், அண்ணன் எனக்கும் இந்த எரிவாயுவில் பங்கு தர வேண்டுமென நீதிமன்றத்தின் கதவைத் தட்ட, அம்பானி விவகாரம் பூதாகாரமாக வெடித்து விட்டது. பங்குச்சந்தையின் பிதாமகர்களான இவர்களால், தினமும் ஏற்றமும், இறக்கமும் சர்வ சாதாரணமாக நிகழ்ந்தது. இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் தம்பியானவன் இந்த அழுகுணி ஆட்டத்துக்கு இப்பொழுது ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசும் துணை போகிறது என ஒரு குண்டை தூக்கி போட்டுவிட்டார். பெட்ரோலிய துறை அமைச்சரான முரளி தியோராவிலிருந்து, மன்மோகன் சிங் வரை எல்லோருக்கும் திருகு வலி கண்டிருக்கிறது. அனிலின் நண்பரும் சமாஜ் வாதி கட்சி தலைவரும், அரசியல் அரங்கில் ஆவேச சகுனியுமான அமர்சிங் இப்பொழுது சிங்கப்பூரிலுள்ள ஒரு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ளார். அவர் திரும்பி வந்ததும் இந்தப் பிரச்சனை எத்தனை வீரியம் பெறுமோவென டெல்லியில் அரசியல் தலைகள் குழம்பி தவிக்கின்றன. எது எப்படியோ, ஒரே கொடியில் பூத்த இரு மலர்களை பணம் இரு துருவங்களுக்குமுள்ள தூரத்துக்கு பிரித்து வைத்து விட்டது.


ங்கொய்யால பக்கங்கள் :

பணம் இருக்கற வரைக்கும் மதிக்கறது சொந்த பந்த உறவு,
குணம் இருக்கறவரைக்கும் மதிக்கறது தாலிக்கொடி உறவு,
உதவி செய்யற வரைக்கும் மதிக்கறது உனக்குப் பொறந்த உறவு,
ங்கொய்யால,
உலகம் இருக்கற வரைக்கும் மதிக்கறது தாண்டா நட்புங்கற உறவு.

Tuesday, September 1, 2009

பதிவுலக சொர்க்கம்

ஹாய் ஹாய் ஹாய்,

கொஞ்சம் லீவுல போயிருந்தேன். தாய் நாட்டிற்கு வந்து விட்டு திரும்பி வந்துட்டேன். சென்னை வந்தா சந்திப்போம்னு அப்துல்லா அண்ணனும், கேபிள் அண்ணனும் சொல்லியிருந்தாங்க. ஆனா, இங்க இருக்கறது ஆணின்னா, வீட்டுல இருக்கறது கடப்பாரைகளும், அத விட பெரிய கம்பங்களா இருக்குதண்ணே. அதயெல்லாம் புடுங்கி, ஒரு நிம்மதிப் பெரு மூச்சு விடுறதுக்குள்ள லீவு முடிஞ்சு போச்சுண்ணே. தயவு செஞ்சு கோவிச்சுக்காதீங்க. அப்துல்லா அண்ணன் போன் பண்ணாரு. கேரளாவுல ஒரு கல்யாணத்துல இருந்தப்ப கூப்பிட்டிருந்தாரு. சென்னைக்கு வந்து கூப்புடறேன்னு சொன்னேன். ஆனா, முடியலண்ணே. மன்னிச்சுக்கோங்க. எவ்வளவு தான் ஆணியிருந்தாலும், நம்மள இன்னும் உடன் பிறவா சொந்தங்களோட இணைத்து வைத்திருக்கும் பதிவுலகத்தை விட்டு தூரம் போயிட முடியுமா? அப்பப்ப நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து போயிட்டிருந்தேன்.

சிங்கை பதிவர் செந்தில் நாதனுக்காக பதிவர்கள் செய்த உதவி மனதை நெகிழ வைத்தது. இந்த மாதிரி மனித நேயமிக்க ஒரு கூட்டத்தில் தான் நானும் இருக்கிறேன் என்று நினைக்கும் பொழுது, மிகவும் பெருமையாய் உணர்கிறேன். செந்தில் நாதனுக்கு அறுவை சிகிச்சை முடிந்து விட்டது என்று தெரிகிறது. சீக்கிரம் நலம் பெற வாழ்த்துகிறோம். நர்சிம் தல எடுத்த முயற்சிகளின் மூலம் அவர் தான் யார் என்று இன்னுமொரு முறை நிரூபித்து விட்டார். தலை வணங்குகிறேன் தல.

பதிவுலகம் மந்தமாகவே இருக்கிறது. முரளி கண்ணன் திரும்பி வந்து வழக்கம் போல கலக்கறாரு. கேபிள் அண்ணனோட சினிமா வியாபாரம் பயங்கரமா சூடு பிடிச்சுருக்கு. அண்ணே, நிறைய பேர திரும்பி பார்க்க வைக்கறீங்க. கலக்குங்க. ஆதி மாதிரியே அத்திரியும் ஓட்டுப்பெட்டியெல்லாம் வெச்சாரு, ஒரு பய சீந்த மாட்டேங்கறானேன்னு காண்டுல இருக்காரு போல. அப்புறம் நம்ம ஆதி அண்ணன் இன்னொரு குறும்படம் எடுத்து எல்லாரையும் பாடா படுத்திகிட்டிருக்காரு. நர்சிம் தல சாருவுக்கு எதிர்வினை அனுப்பி ஒரு வெடிய கொளுத்திப் போட்டாரு, எதிர்பார்த்த அளவுக்கு வெடிக்கல போலிருக்கு. கந்தசாமிய பார்த்து நொந்த சாமிகள் ஒரு பாட்டம் அழுது தீர்த்தாங்க.
பதிவுலகில் இருந்து கொஞ்ச காலத்துக்கு வடை பெறுகிறேன்னு சொல்லீட்டு போன அப்துல்லா அண்ணன் திரும்பி வந்திருக்காரு. பரிசல் அண்ணன் வழக்கம் போல கலக்கிகிட்டிருக்காரு. பதிவுலகத்தின் வருங்கால மாப்பிள்ளை கார்க்கி கொஞ்சம் கொஞ்சமா காதல், கனவுன்னு டிராக் மாறிகிட்டிருக்காரு.

எல்லாருடைய எதிர்பார்ப்புகளையும் கோக்கு மாக்கா ஏத்தி விட்டிருக்கிற சிறுகதைப் பட்டறை நிறைய பேரை கனவு காண வெச்சுருக்குது. குருஜிக்கும், பைத்தியகாரன் அண்ணாச்சிக்கும் ரொம்ப ரொம்ப டேங்சு.

ஆக மொத்தம் பதிவுலகம் என்ற சொர்க்கம் அதே சுகங்களுடன், அதே குறும்புகளுடன், அதே நக்கலுடன், அதே மொக்கைகளுடன் இப்படியே எப்பவும் இருக்கணும்னு வேண்டிக்கறேன்.

Friday, August 7, 2009

மனதை திற - மகிழ்ச்சி வரட்டும் - 2

ஆமையும் மொசலும் ஓட்டப்பந்தயம் வெச்சுட்டு, பாதி வழில மொசலு தூங்கி, ஆமை தூங்காம ஸ்ட்ரெய்ட்டா போய் கெலிச்சு, கடசியில ஸ்லோவார்ந்தாலும் ஸ்டெடியாக்கறவன் தான் ஜெயிப்பான்னு சொல்லுச்சுன்னு கேள்விப்பட்டுக்கறோம். ஆனா அதுக்கு அப்பாலிக்கா இன்னா நடந்துதுன்னா,

மொசலுக்கு ஒரே ஃபீலிங்க்ஸ் ஆயிடுச்சு, ”சே, இத்தினி தெறம இருந்தும் ஜஸ்ட் மிஸ் ஆயிருச்சேடா, எங்க ராங் ஆச்சு” ன்னு ரோசன பண்ணிகினே, ”இன்னொரு தபா ரேஸ் உட்லாம், வரியா” ன்னு ஆமை கைல கேட்டுச்சாம். ஆமையும் சரின்னு சொல்ல, இந்த தபா, ஸ்டார்டிங்லர்ந்து சுகுர்றா ஒரே மூச்சுல ஓடி ஜெயிச்சதுக்கப்புறம் தான் மொசலு திரும்பி லுக் உட்டுச்சாம். அங்க என்னடான்னா, ஆமை அசைஞ்சு ஆடி மெதுவா வந்து மூச்சு வாங்கிகிட்டிருந்துச்சாம்.

இதுலர்ந்து இன்னா தெர்துன்னா நிதானமா இக்கறது நல்லதுதான், ஆனா நிதானமா இர்க்க சொல்லோ, ஸ்பீடா, கரீக்டா வரிஞ்சிருக்கற கோட்டு மேலயே ஓடின்னுக்கணும், அப்பத்தான் ஜெயிக்க முடியும் னு மொசலு சிரிச்சுச்சாம்.

இப்ப ஆமைக்கு பேஜாரா பூடுச்சி, என்னதான் ட்ரை பண்ணாலும் இவனை ஜெயிக்க முடியாதுடான்னு நெனச்சுகுனு, எப்டியாவது ஜெயிக்கணுமே இன்னா பண்லாம்னு மல்லாக்கப் படுத்து ரோசனை பண்ணுச்சாம், கம்னு இருந்தா சரிப்படாது, இதுக்கு வேற ஐடியாத்தான் பண்ணனும்னு முடிவு எட்துகுனு ”மாப்ள, இன்னொரு ரவுண்டு போலாம், ஆனா நான் சொல்ற ரூட்ல தான் போவணும்” னு சொல்லுச்சாம். அதுக்கு மொசலு, ”ஹூம், நீயெல்லாம் எனக்கு ஜூஜூபிடா, எந்த ரூட் வேணா சொல்லு, நா ரெடி” ன்னுச்சாம்.

ரெடி ஸ்டார்ட்னு ஆரம்பிக்க சொல்ல, மொசலு எந்த ரூட்னாலும் நம்ம ஸ்பீடுக்கு வாடா பாக்கலாம்னுட்டு ஓடிக்கினே இருக்க சொல்லோ, கொஞ்ச தூரம் போயி அந்த ரூட்டை பாத்து பேஜாராயிடுச்சாம். மேட்டர் இன்னானா, ஆமை சொன்ன ரூட்ல ஒரு ஆறு ஓடின்னுக்குது. இத்த எப்பட்றா கிராஸிங் பண்றதுன்னு மொசலு பஞ்சரான லாரி கணக்கா நின்னுனு இருக்க சொல்லோ, ஆமை மொசல கிராஸ் பண்ணி, அதும்பாட்டுக்கு நீந்தி போயி ”நாந்தாண்டா வின்னிங்” னுச்சாம்.

இப்ப மொசலு மெர்சலாயிடுச்சு, இன்னாடா இத்தினி ஸ்பீடா வந்தும் அவன் வின்னிங் ஆயிட்டானேன்னு ஒரே கவல.

இதுலர்ந்து இன்னா தெர்துன்னா, உங்கையில இன்னா மேட்டர் சாலிடா இக்குதோ, அதுல பூந்து அடிச்சு ஆடு நைனா, சும்மா ”பில்லா” ஓடிச்சேன்னு ”வில்லு” வும் மைதானத்துக்கு வந்தா அப்புறம் மொசலுக்கு அடிச்ச அதே ஆப்புதான்.

மொசலு இத்தோட விட்டுச்சா, அதான் இங்க மேட்டரே, இத்தினி தபா ரேஸ் உட்டுகுனே இருக்க சொல்ல, மொசலும் ஆமையும் தோஸ்த் ஆயினுக்குறாங்கோ, இப்ப ஒரு ரேஸ் வெச்சு ரெண்டு பேரும் ஜெயிக்கணும், இன்னா பண்றதுன்னு ஒரு மீட்டிங் போட்டு, உன் திறமை என்னுது, என் திறமை உன்னுதுன்னு ஒரு உலக மகா அக்ரிமெண்ட் போட்டுகுனாங்கோ, நிலத்துல ஓட சொல்லோ மொசலு மேல ஆமை ஏறிகிச்சு, ஆத்துல போக சொல்லோ ஆமை மேல மொசலு ஏறிகிச்சு, ரெண்டு பேரும் கரீக்டா ஒரே டயத்துக்கு வின்னிங் ஆயிட்டாங்கோ.

இதுலர்ந்து இன்னா தெரியுதுன்னா,

தோத்து போனாலும், ஆமையாகட்டும், மொசலாகட்டும், ஜெயிக்கணுங்கற வெறிய கொறச்சுக்கல.
ரெண்டு பேரும் ஏனோ தானோன்னு இல்லாம முழு திறமையும் வெச்சு முயற்சி பண்ணுனாங்கோ.
அப்பவும் ஜெயிக்க முடியலயா, ஆமை கணக்கா ரூட்ட மாத்து, ஏன்னாக்கா, பிரச்சனை உங்கிட்ட இல்ல, நீ போற ரூட்லதான் .

அப்பாலிக்கா, இன்னொண்ண கண்டுக்கினியா,

நீ தனியா ஓடுனா உன்னால எத்தினி தூரம் முடியுதோ அத்தினி தூரந்தான் ஓடுவே,ஆனா அல்லாரோடயும் சேர்ந்து ஓடுனா, அல்லாராலும் எத்தினி தூரம் போக முடியுமோ அத்தினி தூரம் போவ.

கடசியா ஒண்ணு,

உன்னால ஒண்ணு முடியலயா,முடியறவனோட சேர்ந்துக்கோ,

மனச தொறந்தீனாத்தான் மகிழ்ச்சி.

Thursday, August 6, 2009

சகதியில் அகதிகள் - நிற வெறியின் உச்சகட்டம்.

குஜராத்தின் வடமேற்குக் கரைப் பகுதியான கட்ச் மாவட்டத்தின் பாலைவனப் பகுதிகளில் 1995 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்து வருடங்கள் வாழ்ந்திருக்கிறேன். தரிசு நிலமாயும், பாலைவன மணல் பிரதேசமாயும் இருந்தாலும், ஆங்காங்கே நீரூற்றுகள் இருக்கத்தான் செய்கிறது. இந்த மண்ணில் எல்லை பாதுகாப்பு படை (BSF), கடலோர காவல் படை ( Coast Guard), சிறப்பு பாதுகாப்பு துறை ( Special Security Bearu), இந்திய உளவுத் துறையான RAW என எல்லா கோஷ்டிகளும், அவரவர் சீருடையில் வலம் வருகிறார்கள்.

இதில் விசேஷம் என்னவென்றால், கட்ச் வளைகுடாவின் மூக்கு போலிருக்கும் நிலப் பரப்பான நாராயண சரோவர் என்னும் சிவன் கோவில் உள்ள ஒரு இடம், பாகிஸ்தானுக்கு வெகு அருகில் உள்ளது. ஒரு மீன்பிடி படகு, அதில் ஓரிரு பெண்கள், தையல் இயந்திரம், ஆட்டுக்குட்டி, ஒரு குடும்பத்தலைவன், ஓரிரு குழந்தைகள், மற்றும் வாலிபர்கள் என ஒரு கூட்டுக் குடும்பம் தனது வீட்டின் தட்டு முட்டு சாமன்களோடு ஒரு மீன்பிடி படகில் ஏறி, அந்த அரபிக் கடலோரம் என பாட்டு பாடிக் கொண்டு, கராச்சியிலிருந்து ஒரு மூன்று மணி நேரம் துடுப்பு வலித்தார்களெனில், இந்திய கடல் எல்லைக்குள் சர்வ சாதரணமாக நுழைய முடியும். நுழைந்தவுடன் அநேகமாக எல்லா சமயங்களிலும், நமது கடலோரக் காவல் படையினர் வந்து அந்த மீன்பிடி படகை கட்டி இழுத்துக்கொண்டு வந்து ராஜ உபசாரங்களுடன் காவல் துறையில் ஒப்படைத்து விடுவார்கள். தப்பித்தவறி இந்தப் படகு சீந்துவாரில்லாமல் கடலில் நிற்குமானால், படகில் அமர்ந்திருக்கும் பெண்கள் முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்து, நல்ல வெய்யிலில் அதை கரையை நோக்கி காண்பிப்பார்கள். கண்ணாடியின் வெளிச்சம் கரையிலிருக்கும் காவல் படையினரின் கண்களை கூச வைக்கும். உடனே இங்கிருந்து மோட்டார் படகுகள் விரைந்து சென்று அந்த படகை கட்டி இழுத்து வரும். துடுப்பு வலிக்கும் கஷ்டமெல்லாம் அவர்களுக்கு இருக்கக் கூடாது என்ற நல்லெண்ணமோ என்னவோ. காவல் துறையும் அவர்களை (பாகிஸ்தானியர்களை) அகதிகள் பட்டியலில் பெயரெழுதிவிட்டு, அங்கிருக்கும் அகதிகள் முகாமில் சேர்த்து விடுவார்கள், அல்லது, அந்த படகிலிருந்து எவ்வளவு பணம் தேறுகிறதோ அதற்கு தகுந்தாற்போல் அவர்கள் நடத்தப்படுவார்கள். கராச்சியிலிருந்தால் ஒரு வேளை சோற்றுக்கும், அடுத்த மணி நேர பாதுகாப்புக்கும் உத்தரவாதமில்லாத ஒரு வெளிநாட்டவனுக்கு என் பாரத மண்ணில் மூன்று வேளை சோறும், பயமில்லாத வாழ்வும் வெறும் ஒரு சில ரூபாய் நோட்டுகளை அவன் காண்பித்து விட்டானெனில், இலவசமாய் அளிக்கப் படுகிறது.

பங்களாதேஷின் ஜிகர்கச்சா, ராஜ்ஷாஹி, சதிரா போன்ற மேற்கு பகுதி சிறு நகரங்களிலிருந்து இந்தியாவுக்குள், தினமும் நுழைய முற்படுவோர் அநேகர். அதிலும் தாங்கள் பங்களாதேஷிகள் என்ற அடையாளத்துடன் நுழைய வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாயிருக்கும். அப்பொழுதுதான் இந்திய அரசாங்கம் அவர்களுக்கு அகதிகள் என்ற அந்தஸ்தை கொடுத்து எல்லா ராஜ மரியாதையும் செய்யும். மேற்கு வங்கத்தின் நகரமான ஹல்தி பாரி என்ற வயல்வெளிப் பிரதேசத்தில், பங்களாதேஷிலிருந்து நெல் அறுவடை காலத்தில் கூலி வேலை செய்ய சர்வ சாதாரணமாக பங்களாதேஷி தொழிலாளிகள் வந்து போகிறார்கள். இவர்கள் வருவதும் போவதும் இந்திய எல்லை பாதுகாப்பு படையின் மூக்குக்கு கீழே என்பதுதான் கவனிக்க வேண்டிய ஒன்று. அப்படி வருபவர்களில் பலர் இங்கேயே தங்கி விடுவதும் உண்டு. அவர்கள் பங்களாதேஷிகள் என அடையாளம் காணப்பட்டாலும் மாண்பு மிகு இந்திய அரசு அவர்களை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாக தெரியவில்லை.

இன்னும் நேபாளத்திலிருந்து, திபெத்திலிருந்து என்று தினமும் மக்கள் வருகிறார்கள். அவர்கள் அகதிகள் என்ற பெயரில் மட்டுமே இந்தியா வர ஆசைப்படுகிறார்கள். அந்த பெயர் கிடைத்தால் தான் இந்திய அரசின் அனைத்து சலுகைகளும் கிடைக்கும். ஒரு திபெத்திய அகதிக்குழு, சர்வ சுதந்திரமாக இந்திய பெரு நகரங்களில் குளிர்கால உடைகள் விற்கும் கண்காட்சி நடத்த முடியும். அவர்களது விளம்பரங்களையும் பாருங்கள், தாங்கள் அகதிகள் என்ற அந்தஸ்தை கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். கர்நாடக மாநில அரசு ஒரு படி மேலே போய் அவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்து, குழந்தைகளுக்கு கல்வி வசதி கொடுத்து இன்னும் என்னென்னவெல்லாமோ கொடுத்து அழகு பார்க்கிறது.

ஆனால், வார்த்த்தைக்கு வார்த்தை எனது தொப்புள் கொடி உறவு என கவிதை பாடிக் கொண்டு, மூன்று மணி நேரம் உண்ணாவிரதத்திலேயே ஒரு இன அழிப்பு போராட்டத்தை நிறுத்தி விட்டோம் என மார்தட்டிக் கொள்ளும் நம் அஞ்சா நெஞ்சன்கள் ஆளும் நாட்டில், ஈழத்திலிருந்து தன் தாய் மண்ணிற்கு அகதியாய் வந்து தஞ்சம் புகுந்திருக்கும் என் தமிழ் சகோதர சகோதரிகளின் நிலையை பாருங்கள். விலங்குகள் கூட வாழ விரும்பாத அசுத்தமான இடத்தில் தான் முகாம், அவர்கள் கூலி வேலை செய்ய முகாமை விட்டு வெளியேறினாலும், மாலையில் குறித்த நேரத்துக்கு திரும்ப வேண்டும். இல்லையேல் அவர்கள் மீது தீவிர வாதி என முத்திரை குத்தப்பட்டு விடலாம். காலைக் கடன்களை கழிக்க ஒரு வசதியில்லை. இங்கு வாழும் ஈழத்து தமிழ்பெண்கள் உடம்பு முழுவதும் சோப்பு போட்டு ஆசைதீர தண்ணீர் மொண்டு ஊற்றி குளித்து எத்தனை நாளயிருக்குமோ தெரியவில்லை, ஏறக்குறைய திறந்த வெளியில் தான் அவர்கள் குளிக்கிறார்கள். மின்சார வசதியில்லை. வெளியிலிருந்து உண்பதற்காக வாங்கி வரும் பொருள்களையும் சோதனை என்ற பெயரில் அபகரிக்க மனித நேய மிக்க கண்ணிய காக்கி சட்டைகள் தயங்குவதில்லை. எப்பொழுது பார்த்தாலும் ஏச்சுக்களும் பேச்சுக்களும் சராமாரியாய் அவர்கள் மீது ஏவப்படுவதால், மனதளவில் மிகவும் மரத்துப் போன நிலை. வெளியில் தமிழனுக்கு 100 ரூபாய் கூலியென்றால், ஈழத்தமிழனுக்கு வெறும் 70 ரூபாய் தான். இதுதான் தொப்புள் கொடி உறவின் நிலை.

என் பாரத நாட்டில், ஒரு பாகிஸ்தானியும், பங்களாதேஷியும், நேபாளியும், திபெத்தியனும் (கவனிக்கவும், இவர்களுக்கும் பாரத மண்ணுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை) தகுந்த பாதுகாப்புகளுடனும், ராஜ மரியாதையுடனும் சர்வ சாதாரணமாக என் வரிப்பணத்தில் சாப்பிடலாம், ஆனால் என் தாய் நாட்டை சேர்ந்த எனது சகோதரன், சக தமிழன் நாயை விட கேவலமாகத்தான் நடத்தப் படுவான். என் சகோதரி அகதி முகாம் என்ற பெயரில் இருக்கும் விசித்திர சிறைக்கதவுக்குள் கூட்டுப் புழுவாய் சுருங்கி வாழ வேண்டும். என்னே இந்திய இறையாண்மை,,,,,,,,, ஜெய் ஹோ, ஜெய் ஹோ,,,,,,


இது தமிழனுக்காக உலகின் மிகப்பெரிய மக்களாட்சியின் இறையாண்மையால் எழுதப்பட்ட நிறவெறிக் கொள்கை இல்லாமல் வேறென்ன?????


பரிசலின் மனதை தைக்கும் வரிகள் மற்றுமொரு முறை :



அங்கே அந்தச் சகோதரியின் உடையைக் கிழித்தார்கள்

பொறுத்துக் கொண்டாள்.

அவர்கள் புரிதலில்லாதவர்கள் என்று.



இங்கே அதே சகோதரிக்கு கிழிந்த உடை

தருகிறீர்கள், அழுகிறாள்.

நீங்களும் புரிந்து கொள்ளவில்லையே என்று.

Wednesday, August 5, 2009

ஜுகல்பந்தி 5 ஆகஸ்ட் 2009 - இப்படியும் ஒரு வாரம்

பட்டியாலா - பிரபலங்களின் நகரம்.

வீரத்துக்கு பெயர் போன பஞ்சாப் மாநிலத்தின் பிரதான நகரங்களில் ஒன்று. நிலத்தின் மீது ஓடும் ஐந்து நதிகளினால் செழித்து வளர்ந்திருக்கும் பஞ்சாப் மாநிலத்தின் ராஜ குடும்பங்கள் இந்த ஊரிலிருந்துதான் தோன்றின. வெள்ளந்தி மனிதர்கள், உழைப்பை மட்டும் நம்புவர்கள், நட்புக்காக உயிரையும் கொடுப்பவர்கள், நாக்கில் நீர் சுரக்க வைக்கும் உணவு வகைகள், பசுமை நிறைந்திருக்கும் வயல் வெளிகள், இடுப்பில் கத்தியுடன் இன்றும் வாழும் சீக்கியர்கள், ஆணின் வீரத்திற்கு சற்றும் சளைக்காத பெண்கள் என இந்தப் பிராந்தியமே ஒரு மனமகிழ்ச்சியின் நிலப்பகுதி. பட்டியாலாவின் சீக்கியர்கள கட்டும் தலைப்பாகைக்கு என உலகெங்கிலும் ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. அந்த நேர்த்தியை பார்த்ததும் சொல்லி விடலாம் இவர் பட்டியாலா சர்தார்ஜி என்று. உதாரணத்திற்கு, மன்மோகன் சிங்கிற்கும், கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள். சித்து பட்டியாலாகாரர். அவரது தலைப்பாகையில் இருக்கும் நேர்த்தி, அந்த மடிப்புகளின் வரிசை, அந்த படகு வடிவ அமைப்பு ஆகியவை மன்மோகன் சிங்கிடம் இருக்காது. (கை காரர்கள், கை ஓங்க வேண்டாம், தலைப் பாகையை மட்டும் தான் சொன்னேன்).

இந்த ராஜ வம்சத்தின் துவக்கம் ஒன்றும் அவ்வளவு சுவராசியமானதாக இல்லை. சீக்கிய குருவான குரு ஹர்கோவிந்த் என்பவரது சீடர் மோகன் சிங் என்பவர் முதன் முதலாக 1627 ம் ஆண்டு இதற்கு அஸ்திவாரமிட்டதாக தெரிகிறது. இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்த ஒரே ஒரு தரை வழிப் பாதை என்பதால், சும்மா பொழுது போக்குவதற்காக அடித்துப் பிடுங்க வரும் ஆப்கானிய அரசர்கள் என்ற போர்வையில் திருடர்களின் தொல்லை ஒரு பக்கம், எப்பொழுதும் தங்களுக்குள் அடித்துக் கொண்டேயிருந்த ராஜபுத்திரர்கள் அண்டை வீட்டுக்காரர்களாகிப் போனது ஒரு பக்கம், இந்தியாவில் காலூன்ற நினைத்து வலுவாக அடித்தளம் அமைத்துக் கொண்டிருந்த முகலாய அரசர்கள் ஒருபக்கமென இருந்த பல்வேறு தொல்லைகளுக்கு மத்தியில், சீக்கியர்களுக்கென ஒரு தனி ராஜ்யத்தை நிறுவுவதற்க்கு மோகன் சிங் பெரும் பாடு பட வேண்டியதாயிற்று. முன்பொருமுறை ஜெய்சல்மீரில் இருந்த பட்டி இன ராஜ புத்திரர்களைப் பார்த்தோமே, அவர்கள் தான் அதிகம் தொல்லை கொடுத்தார்களாம்.

இதற்குப் பின் வந்து, மீசையை முறுக்கி தாடியை நீவி விட்டுக் கொண்ட எல்லா சர்தார்ஜிகளும், போர்க்களத்திலேயே தங்களது நாட்களை கழித்திருக்கிறார்கள். கடைசியாக, வடக்கிலிருந்து வந்த ஆப்கானியர்கள், உள்நாட்டிலேயே உள் குத்து வேலைகள் செய்யும் முகலாயர்கள், தெற்கிலிருந்து சீறி வரும் மராட்டியர்கள் ஆகிய மூவருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய சீக்கிய வீரர் பாபா அலா சிங் என்பவர்தான் இந்த சாம்ராஜயக் கனவை நனவாக்கும் பொருட்டு பர்னாலா என்ற நகருக்கு அடிக்கல் நாட்டினார். (பின்னாளில் இது பட்டியாலாவாக மாறியிருக்கக் கூடும்). மூன்றாவது பானிப்பட் யுத்தத்தில் வீரமுடன் போரிட்ட மராட்டியர்களை மண்ணைக் கவ்வ வைத்த ஆப்கானிய தளபதி அப்தாலி, இந்த சீக்கிய பாபா சிங்கை பாட்டியாலா சமஸ்தானத்திற்கு ராஜாவாக அபிஷேகித்து விட்டு சென்று விட்டார். இவர் கட்டியதுதான் 9 வரவேற்பு துவாரகங்களைக் கொண்ட கீலா முபாரக் என்ற கோட்டை.

இவருக்கு பின்பு வந்த ராஜ வம்சத்தில் ராஜா புபேந்தர் சிங் என்பவர், வாழ்க்கையின் ஒவ்வொரு நொடிகளையும் ஆனந்தத்தில் அனுபவித்தவர். இவரைப் பற்றி வாசிக்க அன்பர் முகில் எழுதும் அகம் - புறம் - அந்தப்புரம் வாசிக்கவும்., விளையாட்டில் அதிகம் பிரியம் கொண்டவர் இவர். ஆங்கிலேயர்களுடன் விருந்துகளில் சல்லாபிப்பது, விடுமுறைகளை கழிக்க வெளிநாடு செல்வது என உண்மையாகவே ராஜ வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்.

பட்டியாலாவிலிருந்து வந்த பிரபலங்கள் : விங் கமாண்டர் ராகேஷ் சர்மா, விண்வெளிக்கு சென்று வந்த முதல் இந்தியன், கிரிக்கெட் வீரர்கள் நவ்ஜோத் சிங் சித்து, மொகிந்தர் அமர்நாத், மற்றும் ஹிந்தி திரைப் பட உலகின் மார்க்கண்டேயன் ஓம் பூரி, ஜெட் ஏர் வேஸ் நிறுவன அதிபர் நரேஷ் கோயல், பஞ்சாபி பாப் பாடகர்கள் குருதாஸ் மான், தலேர் மெஹந்தி இன்னும் பலர்.

இன்றும் அதன் துணி தொழிற்சாலைகளின் சிறப்புகளோடு விளங்கும் இந்நகரில் பார்க்கவேண்டியவை : கீலா முபாரக், மோதி பாக் அரண்மனை, ராஜேந்திர கோதி போன்றவை.

நாட்டு நடப்புகள் - இப்படியும் ஒரு வாரம்

ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து எட்டாம் தேதி வரை தாய்ப்பால் வாரமாம். என்ன கொடுமை சார் இது????
பெத்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு ஒரு வாரம் கொண்டாட வேண்டுமா?? எல்லா தாய்மார்களிடமும் மருத்துவர்கள் கூறும் அறிவுரை, தயவு செய்து தாய்ப்பால் கொடுங்கள் என்பதுதான். ஆனால், உறவுகளை மறந்துவிட்ட மனித இனத்துக்கு அதன் முக்கியத்துவத்தை நினைவு படுத்தும் வகையில் ஒரு நாளை தாய்மார் தினம் எனவும், இன்னொரு நாளை தந்தையர் தினமெனவும், நண்பர்களுக்கு நட்பின் அவசியத்தை உணர்த்த நண்பர்கள் தினமெனவும், காதலர்களுக்கு காதலர் தினமெனவும் கொண்டாடுவதன் அவசியமிருக்கும்பொழுது, இயற்கையாக நிகழ வேண்டிய தாய்ப்பாலூட்டும் நிகழ்வை, அன்பின் வெளிப்பாட்டை, தாய்மையின் மேன்மையை, அமுதத்தின் சுரப்பை வலியுறுத்தி அதை ஒரு வாரமாக கொண்டாட வேண்டிய பரிதாபத்திற்கு இன்றைய பெண்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். மேனியழகின் பைத்தியம், அழகுச்சாதனங்களின் மோகம் ஆகியவை இன்றைய தாய்களுக்கு தனது தொப்புள் கொடியில் இணைந்து கிடந்த சிசுவுக்கு பாலூட்ட வேண்டும் என்பதை உணர்த்த ஒரு விழிப்புணர்வு வாரம் கொண்டாட வேண்டிய அவலத்திற்கு தள்ளிச் சென்றிருக்கிறது.

போதும்யா, இதுக்கு மேல பேசுனா பெண்ணிய வாதிகள் பின்னி பெடலெடுத்துருவாங்க.

பதிவர் வட்டம்

பதிவர்கள் கூட பேசி வெச்சுகிட்டு வாரம் கொண்டாடறாங்களோ என்னமோ தெரியல,

குருஜிக்கு இது குமார்ஜி வாரம், கார்க்கி, டக்ளஸ், பரிசலுக்கு இது கவிதை வாரம், புலம்பலுக்கு இது கருத்து கணிப்பு வாரம், அதிசயமா கார்ப்பரேட் கம்பருக்கு இது மொக்கை வாரம், நையாண்டி நைனாவுக்கு எதிர் பதிவு வாரம், அப்புறம் அப்துல்லாவுக்கு மற்றும் முரளி கண்ணனுக்கு காணாமல் போகும் வாரம்.

எது எப்படியோ நல்லா இருங்க சாமி, இந்த காணமல் போன ஆசாமிகள கொஞ்சம் பார்த்தா பதிவுலகம் தேடுதுன்னு சொல்லுங்க.

ங்கொய்யால பக்கம்:

கரிசனமா பாக்கறது பெத்தவங்கடா,

ஒரு ரத்தமா பாக்கறது கூடப் பொறந்தவண்டா,

கட்டுனவ பாக்குறது ரெண்டு உசிரு ஒரு உடல்றா

ஆனா, ங்கொய்யால,

உம்மனசுதான் எம்மனசுங்கறது நண்பன் மட்டும்தாண்டா.

Tuesday, August 4, 2009

மனதைத் திற - மகிழ்ச்சி வரட்டும் - 1

நேற்று நமது நண்பர்களுக்கு நண்பர்கள் தின வாழ்த்துச் சொல்லி குறுஞ்செய்தி அனுப்பினேன். மின்னலென பதில் அனுப்பினார்கள் அனைவரும். அதில் நமது பரிசல் அண்ணா மாத்திரம் வித்தியாசமாக பதில் அனுப்பினார். " Happy our's day" என பதில் அனுப்பினார். நெஞ்சைத்தொடும்படியாய் சில வார்த்தைகளில் தன் அன்பை நட்பை புரியவைத்தார். நன்றி தல.

நம் மனதுக்குள் எத்தனை விஷயங்களை பூட்டி வைத்து விடுகிறோம். தினசரி தண்ணீர் ஊற்றி, மொட்டை மாடியின் பூந்தொட்டியில் மலர்ந்து விரிந்திருக்கும் ஒரு புத்தம் புது பூவை நமது குழந்தை ரசித்து தடவும் பொழுது, அந்த குழந்தையின் சந்தோஷமும் நம்மை தொற்றிக் கொள்கிறது, குழந்தையிடம் அன்பாய் ஒரு வார்த்தை " பூ எவ்வளவு அழகாருக்கல்ல" என்று கேட்டு வையுங்கள். நம்ம அம்மாவும்/அப்பாவும் நம்மள மாதிரியே ரசனை உள்ளவர்கள் தான்னு அந்த பிஞ்சு மனம் பூரிக்கும்.

மனைவி செய்யும் சமையல் வாசனை தூக்கலாய் நாசியை துளைக்க, அந்த பண்டம் அடுப்பில் கொதிக்கும் போதே கமகமக்கும் மணம் உங்களை அதன் சுவையை கற்பனை செய்து நாவில் நீர் வரச் செய்து அலைக்கழிக்கும். அந்த வாசனையை முழுதுமாய் அனுபவித்துக் கொண்டு சோபாவில் அமர்ந்து எதாவது ஒரு புத்தகத்திலோ அல்லது டி.வி.யிலோ மூழ்கி இருப்பீர்கள். எழுந்து சென்று மனைவியிடம் ஒரு வார்த்தை சொல்லி வாருங்கள் " என்னது, இவ்வளவு கலக்கலா இருக்கு, அப்படி என்னம்மா பண்ற" இது போதும், அங்கு அனைத்து சுவைகளும் ஒரு சேர, ஒரு புன்னகை பூக்கும்.

கணவர் வாங்கி வந்த புடவை/ அல்லது குழந்தைகளுக்கான துணி உங்களுக்குப் பிடித்திருக்கிறது, வெறும் நல்லாருக்கு என ஒற்றை வார்த்தையில் ஒதுங்கிக் கொள்வதை விட, " நீ எதைச் செஞ்சாலும் ஒரு ஸ்டைலாத்தான்யா செய்யற". ஒரு சிறு பாராட்டு.

குழந்தை கிரேயானில் வரைந்த ஓவியம், அப்பா அடுக்கி வைத்த புத்தக அலமாரி, அம்மா பேத்திக்கு பின்னி விட்ட தலை அலங்காரம், அண்ணா வாங்கி வந்த கைக்கடிகாரம், அப்பாவுக்காக குழந்தை கொடுத்த சின்ன அன்பளிப்பு என எங்கெல்லாம் உங்கள் மகிழ்ச்சியை வார்த்தைகளாலும், செயல்களாலும் வெளிப்படுத்த முடியுமோ, கண்டிப்பாக செய்யுங்கள்.

பகிர்வதினால் மகிழ்ச்சி பன்மடங்கடையும். பரிசல் அண்ணன் சொன்ன மாதிரி " Happy our's day" என உங்கள் நட்பாகட்டும் அல்லது அன்பாகட்டும், மனதை திறந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

மனதை திறவுங்கள், மகிழ்ச்சி வரட்டும்.