Friday, September 4, 2009

நவீன குருகுலங்கள்


என் மறுபாதி, சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் பணி புரிகிறார் என்பதினால், என் வாரிசையும் அதே பள்ளியில் சேர்க்க வேண்டிய கட்டாயத்திற்காளானேன். கடந்த சில நாட்களாக ஆணி புடுங்குவதிலிருந்து விடுப்பு என்பதால், இவர்கள் இருவரையும் பள்ளிக்கு அழைத்துச் செல்வதும், திரும்ப அழைத்து வருவதும் அடியேன் தலையில் விதிக்கப்பட்டது என்பதை விட திணிக்கப்பட்டது என்று சொல்லலாம். பள்ளி முடிவதற்கு சிறிது நேரம் முன்னாலேயே சென்று பள்ளியின் முன் காத்திருந்து நம்மவர்களை அழைத்து வரலாம் என ஒரு கால் மணி நேரம் முன்னாலேயே சென்றிருந்தேன். மிகவும் மேல்தட்டு ரக மக்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளியாதலால், பள்ளிக்கு அருகில் செல்லவே நமக்கு கூசுகிறது. எனது துணைவி அங்கு பணி புரிகிறாரே என்ற ஒரே காரணத்துக்காக என் குழந்தையையும் அங்கு சேர்க்க வேண்டிய கட்டாயத்திலிருப்பதால், இந்த கூச்சத்தையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. சென்னை நகரத்தை விட்டு சற்றே ஒதுக்குப் புறத்தில் பள்ளி வளாகம், கட்டிடப் பணி இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. அவசர கதியில் கட்டிய, இன்னும் ஒரு பள்ளிக்கான எந்த லட்சணங்களையும் கொண்டிராத நான்கு சுவர்களுக்குள் பத்தாம் வகுப்பு வரை பாடம் நடத்துகிறார்கள். மாதத்திற்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கிறார்கள். பள்ளி அமைந்திருப்பது ஒரு கிராமத்தில் என்பதால் போக வர சாலை வசதிகள் இன்னும் நூறு ஆண்டுகளுக்குள் எப்படியும் ஏற்படுத்தப் படும் என நம்புவோம்.

இந்தியாவின் அனைத்து விலையுயர்ந்த கார்களையும் அதன் பணக்காரத்தன முகங்களையும் பார்க்க முடிந்தது. சிறிய கார்களில் வந்திருக்கும் அப்பாக்கள், குழந்தைகளை அழைத்துப் போக வந்திருக்கும் அம்மாக்களை சைட் அடித்தபடியே ஒதுங்கி நின்று மொபைல் போனில் பேசுகிறார்கள். பணக்கார படகு கார்களை ஓட்டி வந்திருக்கும் டிரைவர்கள், இன்னும் பத்து நிமிஷம் இருக்கல்ல, ஒரு தம் போட்டு விட்டு வருவோம் என பள்ளிக்கு முன்னே இருக்கும் செடி கொடிகளின் பக்கத்தில் ஒதுங்குகிறார்கள். ஒரு படகு காரில் இருந்து இறங்கிய பெண்மணி, காவலாளியிடம் “ எத்தின் மன்க்கி ஸ்கூல் ஃபினிஷ் ஆகும்” என சுத்தத் தமிழில் கேட்டுக் கொண்டிருந்தார்.

பள்ளிக்கு உள்ளே சென்றேன். தோளில் தொங்கிய லேப்டாப்பை இறுகப் பிடித்த படியே பிரின்ஸிபால் போல் தோன்றிய ஒரு பெண்மணி அவசர கதியில் ஆணைகள் பிறப்பித்துக் கொண்டிருந்தார். குழந்தைகளின் வகுப்பு ஆசிரியரைக் காண வந்திருந்த பெற்றோர்களிடம் இருந்த பணக்காரத்தனம் எனக்கு ஒரு ஒவ்வாமையாய் தோன்றியது.

இன்று வாத்தியாரிடம் சென்று வாதிடும் பெற்றோர்கள் அதிகமாகி விட்டனர். என் மனைவியின் வகுப்பில் பெற்றோர் தினத்தன்று கேட்கப்படும் சில கேள்விகள் :

என் பையனுக்கு உங்க ஸ்கூல் சிலபஸ்ல ஒரு இன்ட்ரஸ்டே இல்ல, நீங்க இத மாத்தறதுக்கு முயற்சி எடுங்களேன்.

அவனை தமிழ் படிக்க சொல்லி அதிகம் கட்டாயப் படுத்தறீங்களாமே, அவன் தமிழ் படிச்சு என்ன பண்ணப் போறான்?

இந்த பெற்றோர்களை நினைத்தால் சிரிப்பும் வேதனையுமே வருகிறது.

முதலாவது எத்தனை பெற்றோர்கள் தங்கள் குழந்தையுடன் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது செலவு செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அப்படியே செலவு செய்தாலும் தன் மகனின் பேச்சைக் கேட்க எத்தனை பேருக்கு பொறுமை இருக்கிறது?

எல்லா பெற்றோருக்கும் தன் மகன் முதல் ரேங்க் வாங்க வேண்டும், அடுத்த சச்சின் டெண்டுல்கராய் திகழ வேண்டும், பெற்றோருக்கு பெருமை சேர்க்கிறவனாய் இருக்க வேண்டும் என விரும்பத் தோன்றுகிறதே தவிர, இப்படியெல்லாம் ஆவதற்கு பெற்றோராகிய நமது பங்களிப்பு அதிகம் தேவை என்ற அடிப்படை உண்மையை சௌகரியமாக மறந்து விட்டு, பணத்தை விசிறியடித்தவுடன் என் மகன் ஒரு சிறந்தவனாக மாற வேண்டும் என ஆசைப் படுகிறார்கள். அப்படி நடக்காத பட்சத்தில், கூசாமல் பள்ளிகளை குறை கூறவும் இவர்கள் தயங்குவதில்லை. வேணும்னா இன்னும் ஒரு தௌஸண்ட் ருப்பீஸ் ஃபீஸ் வாங்கிக்குங்க, ஆனா என் பையன் தான் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கணும் என்ற ஒரு அவுட் சோர்சிங் மனப் பான்மை பெற்றோர்களிடத்தில் அதிகம் வளர்ந்திருக்கிறது. குழந்தை வளர்ப்பிலும், படிப்பிலும் பெற்றோராகிய தங்களுக்கும் சம பங்கு உண்டு என்பது தெரிந்தாலும், அதை வேலைப்பளு என்ற பாசாங்குத்தனமான காரணம் சொல்லி தட்டிக் கழிக்கிறார்கள். ஆனால் தனது தோழியிடம் மணிக் கணக்கில் மொபைலில் பேச நேரம் இருக்கிறது.

பள்ளி விட்டு குழந்தைகள் வெளியே வருகிறார்கள். ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் அந்த பணக்கார திமிரை பார்க்க முடிகிறது. பெருவாரியானவர்கள் கையில் எதாவது ஒரு சிப்ஸ் பாக்கெட் இருக்கிறது. பள்ளிக்கு உள்ளேயே ஒரு கேண்டீன் வைத்திருக்கிறார்களாம். பிஸ்ஸாவிலிருந்து அனைத்து குளிரூட்டப் பட்ட பானங்கள் வரை விற்கிறார்கள். எல்லா வகையான ஜங்க் ஃபுட் எனப்படும் துரித வகை பண்டங்கள் கிடைக்கிறது. வெளியே வரும் குழந்தைகளை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். நிறைய குழந்தைகள் அளவுக்கு மீறிய உடல் எடை கொண்டுள்ளனர். ஊளைச்சதை உடம்பு எங்கும் பிதுங்கித் தொங்குகிறது. தன் பையை வாங்கும் கார் டிரைவரை ஒரு பத்து வயது பையனும் ஒரு முதலாளித்துவ திமிரிலேயே பார்க்கிறான். அங்க வெயிட் பண்ணு, நான் வரேன் என ஏதோ ஒரு பிஸியான முதலாளி ஆணையிடுவதுபோல் ஆணையிடுகிறான்.

எத்தனை ஆயிரம் செலவானாலும் சரி, ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம் போன்ற கல்வி நிறுவனங்களில் என் குழந்தைகள் படிக்கப் போக வேண்டும் என பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புகிறார்கள். அவர்களின் பண முடிப்புகளுக்கென கவர்ச்சிகரமான பாடத்திட்டங்களை காண்பித்தே பள்ளிகள் பணம் பண்ணுகின்றன. ஏழு வயது பெண்ணுக்கும் கூட பள்ளியில் பரத நாட்டியம் கற்றுத்தரப்பட்டு, அதற்கென தனி பணம் வசூலிக்கப் படுகிறது. தனி மனித ஒழுக்கம், பெரியவர்களிடத்தில் மரியாதை போன்றவை கிலோ என்ன விலை என இந்த மேல்தட்டு குழந்தைகள் கேட்கிறார்கள். ஏனெனில் இவை இந்த பள்ளிகளில் உள்ள பாடத்திட்டத்தில் கிடையாது. பாடங்களை மனப்பாடம் செய்து, தேர்வில் வாந்தியெடுக்கும் மனித இயந்திரங்கள்தான் இங்கு உருவாக்கப் படுகிறார்களே தவிர, நல்ல அறிவுச் செல்வங்களை இந்த நவீன குருகுலங்கள் உருவாக்குவதில்லை.

30 comments:

Cable Sankar said...

அருமை தலைவரே..

முக்கியமா ஒத்துக்க வேண்டிய விஷயம் ஒண்ணு இருக்கு. உங்க பதிவுல.. கூப்பிட வர்ற அம்மாக்களை சைட் அடிக்கும் அப்பாக்கள்.. ஹி..ஹி.. ரொம்பவே ரியாலிட்டிங்க..

வெங்கிராஜா said...

எந்த ஏரியா? எந்த ஸ்கூல்?
கொஞ்சம் அதிகப்படியாகத் தோன்றினாலும், சொல்லும் அநேக பாயிண்டுகளுகளை ஒத்துக்கொள்கிறேன்.
//எல்லா வகையான ஜங்க் ஃபுட் எனப்படும் துரித வகை பண்டங்கள் கிடைக்கிறது. வெளியே வரும் குழந்தைகளை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். நிறைய குழந்தைகள் அளவுக்கு மீறிய உடல் எடை கொண்டுள்ளனர்.//
எனக்குத் தெரிந்து பல அலுவலக கேண்டீன்களிலும், ஃபுட் கோர்ட்களிலும் இல்லாத எதையும் இவர்கள் விற்பது போலத் தெரியவில்லை. மேலும், கார்பனேட்டட் பானங்களையும் கல்வி வளாகங்களில் தடை செய்துள்ளனர் என்று நினைக்கிறேன்.

//மாதத்திற்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கிறார்கள்//
இந்தக் கொடுமை எல்லா இடங்களிலும் இருக்கிறது.. டெர்ம் ஃபீஸ், மன்த்லி ஃபீஸ், புக் ஃபீஸ், கோ-கர்ரிகுலர் ஃபீஸ், எக்ஸாம் ஃபீஸ்...பில்டிங் டொனேஷன் என்று புடுங்கு புடுங்கு என்று புடுங்கிவிடுகிறார்கள்.

எந்த மாதிரியான கல்வித்திட்டம் வேண்டும் என்கிறீரகள்? அதைப் பற்றியும் விலாவரியாக எழுதுங்களேன்.

ராஜு.. said...

அடப்பாவிகளா..!
இப்பவே ஆயிரம்னா..,எம்புள்ள படிக்கும் போது மாசம் பத்தாயிரம் இருக்குமோ..!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

மாசம் ஆயிரம் ரூபாய் ரொம்பக் கம்மிங்க. சாதாரண தெரு முனைப் பள்ளிக்கூடத்தில் கூட 4ம் வகுப்பிற்கு வருடத்திற்கு 15,000 வாங்குகிறார்கள் :(

க.பாலாஜி said...

//முதலாவது எத்தனை பெற்றோர்கள் தங்கள் குழந்தையுடன் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது செலவு செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அப்படியே செலவு செய்தாலும் தன் மகனின் பேச்சைக் கேட்க எத்தனை பேருக்கு பொறுமை இருக்கிறது?//

இது நறுக்கான கேள்வி...

நல்ல சிந்தனை தலைவரே...உங்களின் பதிவில்...

Anonymous said...

very good observation.
i am happy to have become a follower of your blog

தராசு said...

// Cable Sankar said...
அருமை தலைவரே..

முக்கியமா ஒத்துக்க வேண்டிய விஷயம் ஒண்ணு இருக்கு. உங்க பதிவுல.. கூப்பிட வர்ற அம்மாக்களை சைட் அடிக்கும் அப்பாக்கள்.. ஹி..ஹி.. ரொம்பவே ரியாலிட்டிங்க..//

எத்தனை நல்லத எழுதுனாலும் உங்களுக்கு இந்த மேட்டர் தான் கண்ணுல படுமா? என்ன கொடுமை அண்ணே இது?

தண்டோரா ...... said...

அறிவை போதிக்கிறார்கள்..அனுபவத்தை கற்று தருவதில்லை

1000ரூ கம்மிதானே...பல்லாவரம் அருகில் உள்ள பள்ளியா?

தண்டோரா ...... said...

/முக்கியமா ஒத்துக்க வேண்டிய விஷயம் ஒண்ணு இருக்கு. உங்க பதிவுல.. கூப்பிட வர்ற அம்மாக்களை சைட் அடிக்கும் அப்பாக்கள்.. ஹி..ஹி.. ரொம்பவே ரியாலிட்டிங்க..////

கேபிள் அவர் பசங்களை கூப்பிட போனப்ப பாத்துட்டீகளா?

தராசு said...

@ வெங்கிராஜா said...

//எந்த ஏரியா? எந்த ஸ்கூல்?//

தனி மடலில் வாருங்கள், சொல்கிறேன்.

//கொஞ்சம் அதிகப்படியாகத் தோன்றினாலும், சொல்லும் அநேக பாயிண்டுகளுகளை ஒத்துக்கொள்கிறேன்//

எது அதிகமாகத் தோண்றுகிறது வெங்கி???

//எனக்குத் தெரிந்து பல அலுவலக கேண்டீன்களிலும், ஃபுட் கோர்ட்களிலும் இல்லாத எதையும் இவர்கள் விற்பது போலத் தெரியவில்லை. மேலும், கார்பனேட்டட் பானங்களையும் கல்வி வளாகங்களில் தடை செய்துள்ளனர் என்று நினைக்கிறேன்.//

இங்கு எல்லாம் கிடைக்கிறது வெங்கி.

// எந்த மாதிரியான கல்வித்திட்டம் வேண்டும் என்கிறீரகள்? அதைப் பற்றியும் விலாவரியாக எழுதுங்களேன்.//

விரைவில் எழுதுகிறேன்.

தராசு said...

// ராஜு.. said...
அடப்பாவிகளா..!
இப்பவே ஆயிரம்னா..,எம்புள்ள படிக்கும் போது மாசம் பத்தாயிரம் இருக்குமோ..!//

தம்பி, இதெல்லாம் கல்யாணம்னு ஒண்ணு ஆகும்ங்கற நம்பிக்கை உள்ளவங்க பட வேண்டிய கவலை, நீ ஏன்பா வீணா மனச போட்டு குழப்பிக்கற????

தராசு said...

//@ ஜ்யோவ்ராம் சுந்தர் said...
மாசம் ஆயிரம் ரூபாய் ரொம்பக் கம்மிங்க. சாதாரண தெரு முனைப் பள்ளிக்கூடத்தில் கூட 4ம் வகுப்பிற்கு வருடத்திற்கு 15,000 வாங்குகிறார்கள் :(//

வந்ததுக்கு நன்றி குருஜி.

எனக்கு தொகை சரியா தெரியாததுனால ஆயிரத்துக்கு மேல்னுதான் எழுதியிருக்கிறேன்.

தராசு said...

//@ க.பாலாஜி said...
இது நறுக்கான கேள்வி...

நல்ல சிந்தனை தலைவரே...உங்களின் பதிவில்...//

வந்ததுக்கு நன்றி பாலாஜி.

தராசு said...

//@ shirdi.saidasan@gmail.com said...
very good observation.
i am happy to have become a follower of your blog//

வந்ததுக்கு நன்றி சாய்தாசன்.

தராசு said...

//@ தண்டோரா ...... said...
அறிவை போதிக்கிறார்கள்..அனுபவத்தை கற்று தருவதில்லை

1000ரூ கம்மிதானே...பல்லாவரம் அருகில் உள்ள பள்ளியா?//

வந்ததுக்கு நன்றி அண்ணே,

தராசு said...

//@ தண்டோரா ...... said...
/முக்கியமா ஒத்துக்க வேண்டிய விஷயம் ஒண்ணு இருக்கு. உங்க பதிவுல.. கூப்பிட வர்ற அம்மாக்களை சைட் அடிக்கும் அப்பாக்கள்.. ஹி..ஹி.. ரொம்பவே ரியாலிட்டிங்க..////

கேபிள் அவர் பசங்களை கூப்பிட போனப்ப பாத்துட்டீகளா?//

அவரெல்லாம் ஸ்கூலுக்கு எப்ப போனாரு?

நாஞ்சில் நாதம் said...

//இந்த பள்ளிகளில் உள்ள பாடத்திட்டத்தில் கிடையாது. பாடங்களை மனப்பாடம் செய்து, தேர்வில் வாந்தியெடுக்கும் மனித இயந்திரங்கள்தான் இங்கு உருவாக்கப் படுகிறார்களே தவிர, நல்ல அறிவுச் செல்வங்களை இந்த நவீன குருகுலங்கள் உருவாக்குவதில்லை.//

மனித இயந்திரங்கள் அப்படின்னு வாசிக்கும்போது ஒருவித பயம் உருவானதை உணர்ந்தேன். இந்த குழந்தைகள் தான் வருங்கால இந்தியாவின் சிறப்பிகள்

எனத்த சொல்ல?

தராசு said...

//@ நாஞ்சில் நாதம் said...

மனித இயந்திரங்கள் அப்படின்னு வாசிக்கும்போது ஒருவித பயம் உருவானதை உணர்ந்தேன். இந்த குழந்தைகள் தான் வருங்கால இந்தியாவின் சிறப்பிகள்

எனத்த சொல்ல?//

வாங்க நாஞ்சில். நன்றி

ghost said...

////பாடங்களை மனப்பாடம் செய்து, தேர்வில் வாந்தியெடுக்கும் மனித இயந்திரங்கள்தான் இங்கு உருவாக்கப் படுகிறார்களே தவிர, நல்ல அறிவுச் செல்வங்களை இந்த நவீன குருகுலங்கள் உருவாக்குவதில்லை./////


100% பர்சன்ட் உண்மை

ஆதிமூலகிருஷ்ணன் said...

தோழி அருணாவும் இதுதொடர்பான ஒரு பதிவு இன்று எழுதியிருக்கிறார்.

பதிவைப்படித்து நிறைய அதிர்ந்தேன்.

நாம் பள்ளிகல்லூரிகளில் அரைவேக்காடாக கண்ட மாணவமாணவிகள்தான் இன்றைய பெற்றோர். அடுத்த தலைமுறை இன்னும் மோசமாக இருக்குமா? பயமாக இருக்கிறது.

//வேணும்னா இன்னும் ஒரு தௌஸண்ட் ருப்பீஸ் ஃபீஸ் வாங்கிக்குங்க, ஆனா என் பையன் தான் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கணும்// என்னன்னு சொல்றது.? பேஸ்த்தடிச்சுப்போய் இருக்கிறேன்.

தராசு said...

வாங்க கோஸ்ட்,

வந்ததுக்கு நன்றி.

தராசு said...

//@ ஆதிமூலகிருஷ்ணன் said...

நாம் பள்ளிகல்லூரிகளில் அரைவேக்காடாக கண்ட மாணவமாணவிகள்தான் இன்றைய பெற்றோர். அடுத்த தலைமுறை இன்னும் மோசமாக இருக்குமா? பயமாக இருக்கிறது.//

இந்த அரை வேக்காடுகள் கையில் இன்று பணம் என்னும் சக்தி இருக்கிறது. பணத்தை வைத்து நாம் நமது பிள்ளைகளை சொர்க்கபுரிக்கு அழைத்துப் போக முடியும் என கனவு காண்கிறார்கள்.

ராஜு.. said...

\\தம்பி, இதெல்லாம் கல்யாணம்னு ஒண்ணு ஆகும்ங்கற நம்பிக்கை உள்ளவங்க பட வேண்டிய கவலை, நீ ஏன்பா வீணா மனச போட்டு குழப்பிக்கற????\\

அண்ணே, குழந்தை பெத்துக்குறதுக்கு கல்யாணம் பண்ணனுமா..?
என்ன கொடுமை அண்ணே இது.
:-)

எம்.எம்.அப்துல்லா said...

//நாம் பள்ளிகல்லூரிகளில் அரைவேக்காடாக கண்ட மாணவமாணவிகள்தான் இன்றைய பெற்றோர். அடுத்த தலைமுறை இன்னும் மோசமாக இருக்குமா? பயமாக இருக்கிறது.

//

பழைய அரைவேக்காடுகள்தான் நம்முடைய பெற்றோர்.டோண்ட் ஓர்ரி.

எம்.எம்.அப்துல்லா said...

கல்வி வணிகமாவது உண்மையில் கொடுமையிலும் கொடுமை. படித்தவன் சூது செய்தால் அய்யோவென்று போவான் என்ற பாரதியின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றது.

Kiruthikan Kumarasamy said...

எங்கட ஊரில ‘வசதிகள் சேவைகள் கட்டணம்' என்று ஒரு தவணைக்கு 20 ரூபாப் படி, 3 தவணைக்கு 60 ரூபா வாங்குவினம். மற்றபடி வருசா வருசம் இலவச சீருடை தருவினம், இலவச புத்தகங்கள் (கிடைப்பது முந்தும், பிந்தும்) தருவினம். பள்ளிக்கூடத்தில படிப்புக்கெண்டு வருசத்துக்கு 500 ரூபாய் காணும், நான் பள்ளி படித்து முடித்தது 2004ம் ஆண்டில்.. அப்போதும் பள்ளிக்கூடத்துக்கு இவ்வளவுமே காணுமாக இருந்தது... நீங்கள் ஒரு வருசம் உங்கட பிள்ளைக்குக் கட்டிற 12000 ரூபாவின் கால்வாசி (1 இந்திய ரூபாய் கிட்டத்தட்ட 2 இலங்கை ரூபாய்) எங்கட 13 வருசப் படிப்புக்குக் காணும் (1ம் வகுப்பு-13ம் வகுப்பு)

பட்டிக்காட்டான்.. said...

அருமை..

//.. ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் அந்த பணக்கார திமிரை பார்க்க முடிகிறது. ..//

ரொம்ப நோகடிச்சுட்டாங்களோ..??!!

தராசு said...

// எம்.எம்.அப்துல்லா said...
கல்வி வணிகமாவது உண்மையில் கொடுமையிலும் கொடுமை. படித்தவன் சூது செய்தால் அய்யோவென்று போவான் என்ற பாரதியின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றது.//

வந்ததுக்கு நன்றிண்ணே.

தராசு said...

வாங்க குமாரசாமி,

இந்த மாதிரித்தான் எங்க ஊர்லயும் இருந்தது. ஆனா அந்தக் காலமெல்லாம் மலையேறிப் போச்சு.

வந்ததுக்கு நன்றி.

தராசு said...

//@ பட்டிக்காட்டான்.. said...
அருமை..

//.. ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் அந்த பணக்கார திமிரை பார்க்க முடிகிறது. ..//

ரொம்ப நோகடிச்சுட்டாங்களோ..??!!//

வாங்க நண்பரே, வந்ததுக்கு நன்றி.