Thursday, September 3, 2009

மனதைத் திற, மகிழ்ச்சி வரட்டும் - 3

எங்க மேனேஜர் எம்மேல காண்டா இருக்கான்பா. என்ன செஞ்சாலும் ஒரு குத்தம் கண்டு பிடிக்கறான்.

நான் என்னதான் சரியா செஞ்சாலும் இன்னும் உங்கிட்ட இருந்து ரொம்ப எதிர்பார்க்கிறேன்னு முதலாளி சொல்றாருப்பா.

அந்த பொம்பள எனக்கு மேலதிகாரியா வந்தப்பவே நெனச்சேன். புருஷன விட்டுட்டு தனியா இருக்கறவளாச்சா, முழு ஆண் வர்க்கத்து மேலயும் காண்டு அவுளுக்கு, அதான் எந்நேரமும் ஆம்பளங்கள கண்டா எரிஞ்சு விழறா!!!!!! அவ புருஷன் மேல இருக்கற கோபத்தையெல்லாம் நம்ம கிட்ட பழி தீத்துக்கறா, எல்லா நம்ம நேரண்டா!!!!!!!

அந்த பெருசு சரியான ஜொள்ளு பார்ட்டிப்பா, எப்ப போனாலும் முந்தானைக்கு உள்ள பாக்கறதும், பல்ல இளிக்கறதும், கைய தொட்டு பேசறதும், டபுள் மீனிங்ல பேசறதும் தாங்க முடியல.

இப்ப வந்திருக்கானே அவன் ………………… ஜாதிக்காரன்யா, அதான் மத்தவனையெல்லாம் ஒழிக்கணும்னு இருக்கான். எல்லா நம்ம நேரம்…….. தணிஞ்சு தான் போக வேண்டியிருக்கு.

அதென்னமோடா, வட நாட்டுக்காரன்னா நம்மாளு தூக்கி தூக்கி குடுக்கறார்ரா, ஆனா அதே சமயத்துல நம்மாளுங்க வயத்துல ஏன் அடிக்கறார்ன்னு தெரியல.

வர்றவன் எல்லாம் பதவி உயர்வு வாங்கறான், கம்ப்யூட்டர்ல நாலு கலர்ல படம் போட்டுட்டா அவன் பெரிய ஆளா?? நேத்து பொறந்த பசங்க எல்லாம் நமக்கு மேனேஜர் ஆகறாங்கப்பா!!!!

இது போன்ற புலம்பல்களை எல்லா வகையான அலுவலகங்களிலும் கேட்க முடியும். இப்படி புலம்பும் நம் எல்லாருக்குள்ளும் ஒரே ஒரு கேள்வி , நான் என்ன தப்பு பண்ணுகிறேன், ஏன் எனக்கு மட்டும் இப்படி ஆகிறது. கொஞ்சம் இப்படி வாங்க, இந்த புண்ணிய வானை பாருங்க


ராபெர்ட்டோ கொயிசூட்டா


க்யூபா தேசத்தை அறியாதவர்கள் இருக்க முடியாது. சுருட்டு குடிச்சுகிட்டே போட்டோவுக்கெல்லாம் போஸ் குடுப்பாரே, அவரேதான் ஃபிடல் காஸ்ட்ரோ என்ற போராளி, வெறும் தீவாய் இருந்த ஒரு பிரதேசத்தை வளம் கொழிக்கும் நாடாக இவர் மாற்றிய வித்தை எல்லோருக்கும் தெரியும். (தெரியலேண்ணா அதப் பத்தி படிச்சு தெரிஞ்சுக்கோங்க). அந்த தீவில் உள்ள ஹவானா என்ற இடத்தில் பிறந்தவர் தான், மேலே கொட்டை எழுத்தில் எழுதப் பட்டிருக்கும் ராபர்ட்டோ கொயிசா, இல்ல கொயாசீ, அடச்சீ விடுங்கப்பா, வெறும் ராபர்ட்டோனே வெச்சுக்கலாம். இவரின் தாத்தாவுக்கு ஒரு சர்க்கரை ஆலை இருந்தது. முதலாளி வர்க்கத்தில் பிறந்ததால், செல்வச் செழிப்புடனேயே வளர்ந்த ராபர்ட்டோ அண்ணாச்சி, கியூபாவில் படித்தார், பிறகு அமெரிக்காவில் படித்தார், அங்கு படித்தார் , இங்கு படித்தார், என்னென்னவெல்லமோ படித்தார். இறுதியில் கொக்க கோலா கம்பெனியில் ஒரு பானம் நிரப்பும் பிரிவில் பணிக்கு சேர்ந்தார். எப்பவுமே துறு துறுன்னு இருக்கும் இவர், குறுகிய காலத்தில் ஐந்து ஆலைகளுக்கு மேலாளராக பதவி உயர்வு செய்யப் பட்டார். சீக்கிரத்திலேயே கொக்க கோலாவின் தலைமையகமான அமெரிக்காவிலுள்ள ஜியார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டாவுக்கு மாற்றப் பட்டார். அங்கிருந்து பிடித்த ஏறுமுகம் இந்த மனிதரை நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு மிகக் குறுகிய காலத்தில் இட்டுச் சென்றது.

இவர் தலைமைப் பொறுப்பை ஏற்ற நேரம் குளிர் பானக் கம்பெனிகளில் பெப்ஸி இவர்களுக்கு பெரிய தலைவலியாயிருந்தது. பெப்ஸி ஆறு பாட்டில் விற்றால் கோலா ஒரு பாட்டில் விற்பதற்குள் நாக்குத் தள்ளியது. மக்களும் பெப்ஸியை விரும்பி குடித்தனர். கோலாவின் விற்பனை பிரிவிலுள்ள மேலாளர்கள் சிண்டைப் பிய்த்துக் கொண்டிருந்தார்கள். என்னென்னவோ கருத்துக் கணிப்புகள், விதவிதமான விளம்பரங்கள், ஒன்று வாங்கினால் மூன்று இலவசம் போன்ற கவர்ச்சித் திட்டங்கள் என எதுவும் வேலைக்காக வில்லை. மக்கள் பெப்ஸியை குடித்துக் கொண்டிருந்தார்கள். எதைத் தின்னால் பித்தம் தெளியும் என கோலாக்காரர்கள் காத்திருந்த வேளையில் தான் நமது நாயகன் ராபர்ட்டோ தலைமைப் பொறுப்பேற்றார். அனைத்து விற்பனை பிரிவு ஆட்களையும் உங்களிடமுள்ள சந்தையை பற்றிய கருத்து கணிப்புகள், நமது விற்பனை உத்திகளைப் பற்றிய விவரங்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு நாளை வாருங்கள் சந்திப்போம் எனக் கூறினார்.

அந்த நாளையும் வந்தது. எப்பொழுதும் சிகரெட் குடிக்கும் பழக்கம் கொண்டிருந்த ராபர்ட்டோவும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு புகையை ஊதியவாறே அந்த அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். அந்த அறையின் மௌனத்தை கலைத்தது அவரது காலணி அரவம் மட்டுமே. அமர்ந்திருந்த விற்பனைப் பிரிவு குப்புசாமிகளுக்கு என்ன நடக்கப் போகிறதோவென்ற பயத்தில் பில்டிங் ஸ்ட்ராங்காயும், பேஸ்மெண்டில் ஆட்டத்துடனும் இருந்தனர். இரண்டு மூன்று சிகரெட்டுகளுக்குப் பிறகு தொண்டையை செருமிக்கொண்டு கேட்டார்,

“சரி இப்ப என்ன பிரச்சனைன்னு எல்லாரும் நொந்து போயிருக்கீங்க?”

“சார், நம்ம ஐட்டத்தை விக்கறதுக்காக வானத்தை வளைத்தோம், பூமியை புரட்டினோம், காற்றை கட்டினோம், மலையை பெயர்த்தோம், கடலை கவிழ்த்தோம், ஒண்ணும் நடக்கல”

“சரி, பிரச்சனை எங்கன்னு பார்த்தீங்களா?”

“ஆமாம் சார், பிரச்சனையே இந்த பெப்ஸிக்காரந்தான் சார், அவனுது ஆறு வித்தா, நம்ம ஐட்டம் ஒண்ணுதான் சார் விக்குது”

“அதுதான் பிரச்சனையா?”

“ஆமா சார்”

“இல்லை அதுவல்ல பிரச்சனை” அனைத்து புருவங்களும் ஆச்சரியத்தில் விரிந்தன.

“சரி இந்தப் பிரச்சனையை வேறொரு கோணத்தில் அணுகுவோம், ஒரு சராசரி அமெரிக்கன் ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் திரவம் குடிக்கிறான்?”

பட்டென பதில் வந்தது “ 14 அவுன்ஸ் சார்”

“அதில் எவ்வளவு கொக்க கோலா குடிக்கிறான்?”

“2 அவுன்ஸ் சார்”

“இப்ப புரிஞ்சுதா, பிரச்சனை எங்க இருக்குன்னு, மீதி 12 அவுன்ஸ் அவுனுக்கு வேற ஐட்டம் கிடைக்குது, அதனால அவன் மத்ததெல்லாம் குடிக்கிறான். அப்ப நம்ம போட்டி பெப்ஸியோட அல்ல, இந்த 12 அவுன்ஸோடதான். இந்த 12 அவுன்ஸும் கொக்க கோலாவா இருக்க நாம என்ன செய்யணும்னு யோசிங்க, ஒவ்வொரு அமெரிக்கனும் எப்பவெல்லாம் எதாவது குடிக்கணும்னு யோசிக்கறானோ, அப்ப அவன் கொக்க கோலாவைத்தான் குடிக்கணும். ஒவ்வொரு அமெரிக்கனுக்கும் கைக்கு எட்டற தூரத்துல கோலாவை கொண்டு போய் வைங்க”

எல்லார் மூளையிலும் பல்பு எரிந்தது, அமெரிக்காவின் மூலை முடுக்குகளிலெல்லாம் தானியங்கி பானம் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப் பட்டன, ஒரே வருடத்தில் கோலாவின் விற்பனை அசுர வளர்ச்சி கண்டது. அன்றிலிருந்து இன்று வரை அதன் வளர்ச்சி பிரமிப்பூட்டுவதாய் உள்ளது. இங்கு ராபர்ட்டோவின் அணுகு முறையை கவனியுங்கள்.

எதிரி என்பது மனிதர்களோ நிறுவனமோ அல்ல, நமது எண்ணங்களும், நம்மை சுற்றி நாமே எழுப்பியிருக்கும் மாய பிம்பங்களும் தான்.

பெப்ஸிதான் முழு எதிரி அல்ல எதிரிகளுள் அவர்கள் ஒருவர் மாத்திரமே.

நமது திறமை என்னவோ அதை மூலதனமாகக் கொண்டு போராடுவோம். பெப்ஸி கடையில் விற்கிறான், நாம் மனிதன் நடக்கும் இடத்திலெல்லாம் விற்போம்.

அப்படியே நம்மோடு அல்லது நமக்கு மேலாளராக வேலை செய்யும் எந்த சுப்பு சாமியும் நமக்கு எதிரிகளல்ல.

நமது அடுத்த வீட்டில் வாழும் பங்கஜா மாமி நமக்கு எதிரி அல்ல.

நமது முதல் எதிரி, நம்மிடம் உள்ள குறைகள் தான். அந்த குறைகளை கண்டுபிடி. தினமும் அந்த குறைகளை நிவர்த்தி செய்வது நமது இலக்காயிருக்கட்டும். 12 அவுன்ஸ் திரவம் என்னவென்று கண்டு பிடிக்காததுதான் நமது குறை. அந்த 12 அவுன்ஸ் தெரிந்த பின் அதை எப்படி ஆட்கொள்வது என முயற்சிப்போம்.

குறை கண்டுபிடிக்கும் மேலாளர் ஒரு குறையாகவே தெரிய மாட்டார், அதிகம் எதிர்பார்க்கும் முதலாளி ஒரு பொருட்டாகவே தெரிய மாட்டார். ஜொள்ளுவிடும் பெருசு கால் தூசாய் மாறிப் போகும். ஆம்பிளையை வெறுக்கும் பெண் அதிகாரி நண்பியாகி விடுவார். ஜாதி வெறி பிடித்த அதிகாரி சக தோழனாகி விடுவார்.

எதிரியோடு போராடுவதை விட, எதிரியாய் தோன்றி புலம்ப வைக்கும் சூழ்நிலையோடு போராடு, வெற்றி நிச்சயம்.

மனதைத் திற, மகிழ்ச்சி வரட்டும்.

13 comments:

Anonymous said...

நல்லா இருக்கு அரசு.

தன்னம்பிக்கையூட்டும் பதிவு.

//
எதிரியோடு போராடுவதை விட, எதிரியாய் தோன்றி புலம்ப வைக்கும் சூழ்நிலையோடு போராடு, வெற்றி நிச்சயம்.//

பொருத்தமான வரிகள்.

யாசவி said...

nice

:-)

தராசு said...

//@வடகரை வேலன் said...,

தன்னம்பிக்கையூட்டும் பதிவு.

பொருத்தமான வரிகள்.//

அண்ணாச்சி, நன்றி.

தராசு said...

நன்றி யாசவி

எம்.எம்.அப்துல்லா said...

ஒரு பிரச்சனையோடு இருந்தேன். தெளிவு பிறந்தது.

நன்றிண்ணா.

ghost said...

ரொம்ப நல்லா இருக்கு

//எதிரியோடு போராடுவதை விட, எதிரியாய் தோன்றி புலம்ப வைக்கும் சூழ்நிலையோடு போராடு, வெற்றி நிச்சயம்.//

உண்மையான வரிகள்

தராசு said...

//@எம்.எம்.அப்துல்லா said...
ஒரு பிரச்சனையோடு இருந்தேன். தெளிவு பிறந்தது.

நன்றிண்ணா.//

அண்ணே, இந்த அடியேனால் உங்களுக்கு இம்மியளவாவது பிரயோஜனமாயிருக்குதுங்கறத நினைக்கும்போது சந்தோஷம்ணே.

தராசு said...

//@ ghost said...
ரொம்ப நல்லா இருக்கு

//எதிரியோடு போராடுவதை விட, எதிரியாய் தோன்றி புலம்ப வைக்கும் சூழ்நிலையோடு போராடு, வெற்றி நிச்சயம்.//

உண்மையான வரிகள்//

வாங்க கோஸ்ட், வந்ததுக்கு டேங்சு.

ஆதிமூலகிருஷ்ணன் said...

அண்ணே வரவர ஒரு பெரிய ஞானியாகிட்டு வர்றீங்க.. ஹிஹி.

(இதுமாதிரியும் நம்ப செட்ல ஒரு இருக்கீங்கலே, மகிழ்ச்சிண்ணே. நல்ல பதிவு)

பட்டிக்காட்டான்.. said...

எப்படித்தான் யோசிக்கிறாய்ங்களோ..??!!

அத்திரி said...

அண்ணாச்சி நல்ல விசயம் சொன்னீங்க

நாஞ்சில் நாதம் said...

நல்லா இருக்கு தன்னம்பிக்கையூட்டும் பதிவு.

Anonymous said...

Wow. Beautiful writing. Good flow.
-Vibin