Monday, October 1, 2012

குருவுக்கு தானம் – குர்காவ்ன் - பாகம் - 1


கடந்த சில மாதங்களாக ஹரியானா மாநிலத்தின் குர்காவ்னில் அடியேன் வசித்து வருகிறேன். சென்னையை துறந்து குர்காவ்னில் குடியேற்றம். ஓங்கி நிமிர்ந்த அடுக்கு மாடி குடியிருப்புகள், பளபளக்கும் கண்ணாடி சுவர் கொண்ட அலுவலக வளாகங்கள், பலமொழி பேசும் மக்கள், மொத்தத்தில் இது ஒரு கான்கிரீட் காடு. உலகின் அனைத்து காடுகளிலுமிருந்து வந்த மனித மிருகங்கள் இங்கு சர்வ சாதரணமாய் நுனி நாக்கு ஆங்கிலமும், அரை குறை ஆடையுடனும் மால்களில் சுற்றி பிட்சா தின்று கோக் குடித்தவாறே இல்லாததை தொலைத்து, கிடைக்காததை தேடி என வரையறை இல்லா வாழ்வு வாழும் ஒரு மணற்பரப்பு இது. என்னதான் மேற்குல போர்வை போர்த்தி பொய் அழகு காண்பித்தாலும் தல புராணம் என்ற ஒன்று இல்லாமலா போய்விடும். தோண்டத் தொடங்கினால்  மிகவும் சுவராஸ்யமான ஒரு வரலாறு இது. வாசியுங்கள்.

குருவுக்கு தானம் – குர்காவ்ன் - பாகம் - 1
************************************************************************************
அவர்கள் அமைதியாக அமர்ந்திருந்தனர். கூந்தல் விரித்த ஏந்திழை ஒருத்தி ஐவர் முகத்தையும் அடுத்தடுத்து நோக்க அவர்கள் அமைதியாக அமர்ந்திருந்தனர். அம்பறாத்தூணியில் அடுக்கிய அம்புகளும், முறுக்கி முடங்கிய வில்லின் நாணும், புஜபலம் திமிறிய தினவெடுத்த தோளுமாய், கதாயுதத்தை கைக்குள் அடக்கி, கண்கள் அனைத்தும் தரையை நோக்க .அவர்கள் அமைதியாக அமர்ந்திருந்தனர். சுழலும் பூமி சுற்றிவர, சூரியன் தனது பாதுகை மாற்ற, குழம்பிய மனதை ஒரு நிலைப்படுத்தும் பிரயத்தனங்களில் தொடர்ந்து தோற்றார்கள். அவர்கள் அமைதியாக அமர்ந்திருந்தனர்.
************************************************************************************
பசுமை நிறத்துக்கு இலக்கணம் கூற படைத்தவன் படைப்பில் அது ஒரு அற்புத பூமி. ஓங்கி உயர்ந்த சிகரங்கள், பூத்துக் குலுங்கும் சோலை வனங்கள், தாழ்ந்து மிளிரும் பள்ளத்தாக்குகள், நெளிந்து வளைந்து குலுங்கி சிரித்து விழுந்து எழுந்து பாய்ந்து ஓடும் ஆறுகள் என அது ஒரு சொர்க்க பூமி. பூமிப்பந்தின் மேற்பரப்பில் இன்றும் கண்ணைக் கவரும் டேராதூன் நகரம். கிறிஸ்துவுக்கு முன்னே 9,000 ஆண்டுகளாம். அப்படியென்றால் இன்றைய தேதிக்கு சற்றேறக் குறைய 11,000 ஆண்டுகள் எனக் கொள்ளுங்களேன். (ஏயப்பா, எத்தனை.....) அத்தனை ஆண்டுகளுக்கு முன் நாம் மேற்கூறிய சொர்க்க பூமியில் பரத்வாஜ முனிவர் என முற்றும் துறந்த முனிவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். வாழ்ந்தவர் அப்படியே வாழ்ந்திருக்கலாம். திடீரென ஒரு நாள் கங்கைக் கரையில் அக்னிஹோத்திரம் செய்ய வேண்டும் என்ற கோக்கு மாக்கான ஆசை உதிக்க, மனுஷனுக்கு நிலை கொள்ளவில்லை. குடுமி வைத்து தாடி வளர்த்த அனைத்து ரிஷிகளும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என ஒரு அவசர ஈ மெயில் அனுப்பி விட்டு, அவர் பாட்டுக்கு நடக்க ஆரம்பித்தார். காடு கடந்து மலை வந்தது, மலையை தாண்டினால் ஆறு வந்தது. ஆற்றைத் தாண்டினால் அது வந்தது, அதை தாண்டினால் இது வந்தது,, இப்படி வந்தது அனைத்தையும் தாண்டி பரத்வாஜர் கங்கைக் கரைக்கு வந்து சேர்ந்தார். இவ்வளவு கஷ்டப்பட்டு ஹை ஜம்ப், லாங் ஜம்ப் என எல்லா ஜம்ப்பும் பண்ணி வந்த பரத்வாஜ பிராமிணனை கவிழ்ப்பதற்கென்றே கங்கைக் கரையில் அது காத்து நின்றது. அக்னிஹோத்திரம் செய்து தனது ஆசையை நிறைவேற்ற வந்த அந்த அந்தணப் பெருமானை அது புரட்டிப் போட்டது. இது என்ன இது புயல் கடலில் இருந்தல்லவா வரும், ஆனால் நதியிலிருந்தும் புயலா என குடுமி வைத்த கோமகன்கள் குழம்பி நிற்க அந்த புயல் நதியின் ஆழத்திலிருந்து வெளிப்பட்டது. பரத்வாஜர் பரமனை மறந்தார். சுவாசம் நின்றது. மானுடம் வென்றது.

**************************************************************************************
அவர்கள் அமைதியாக அமர்ந்திருந்தனர். கூந்தல் விரித்த ஏந்திழை ஒருத்தி ஐவர் முகத்தையும் அடுத்தடுத்து நோக்க அவர்கள் அமைதியாக அமர்ந்திருந்தனர். மூத்தவன் பேசட்டும் என இளையவன் இளைத்திருந்தான். புஜபலமும் கதாயுதமும் முன்மொழியட்டும், இளயவன் நான் வழிமொழிந்தால் போதாதா என கடையவன் கண் தாழ்ந்திருக்க அவர்கள் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். கூந்தல் விரித்த ஏந்திழை ஒருத்தி ஐவர் முகத்தையும் அடுத்தடுத்து நோக்க அவர்கள் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

************************************************************************************
பரத்வாஜர் பரமனை மறந்தார். நதியில் குளித்து தலை முடிந்த அந்த புயல், சுண்டக்காய்ச்சிய பாலின் மேலே ஒரு மென்மையான ஆவி எழுமே, அதே மென்மையில் ஒரு வெள்ளைத் துணியுடுத்தி, அங்கத்தின் மேடுகளும், கிறக்கம் தரும் லாவண்யங்களும், இறங்கி எழுந்த பள்ளங்களும் அப்பட்டமாகத் தெரிய அன்ன நடை நடந்தது. கமண்டலங்களும், நூற்றிஎட்டு ருத்திராட்ச கொட்டைகள் கோர்த்த ஜபமாலைகளும் தாங்கிய அந்த அந்தணனின் கரங்கள் வாழ்வில் முதல் முறையாக நடுக்கம் கண்டது. இமைகளை யாரோ இழுத்து வைத்து தைத்து விட்டது போல் நைனங்கள் இமைக்க மறந்து தொலைத்தான் பரத்வாஜன். தேவ லோகத்தில் இருந்து இறங்கி வந்து கங்கையில் நீராடிய கிரிதாட்ச்சி என்னும் அப்சரா அவன் முன்னே அன்ன நடை நடந்து தொலைக்க, வீசிய காற்று விஷமம் செய்து அப்சரசின் மேலிருந்த பாலாவி போன்ற மேலாடையையும் கவர்ந்து செல்ல பிறந்த மேனியாய் அப்சரா நின்றாள். பரத்வாஜன் துறவம் துறந்தான். அங்கத்தின் அனைத்து சுரப்பிகளும் சுரக்க, அணைத்து வைத்திருந்த ஆண்மை விழித்தெழ, அப்சரசின் ஒரே ஒரு கண்ணசைவில் பாவம் அந்த அந்தணனின் அனைத்து தவ வலிமையையும் தவிடு பொடியானது. அவனுக்குள் இருந்த ஆண் கிளர்த்தெழுந்தான். கணப்பொழுதில் காம தலைக்கேற அவனுக்குள் இருந்து அது வெளியேறியது. விபரீதம் புரிந்ததும் வெளியேறிய ஆணின் அடையாளத்தை அவன் ஒரு கலயத்தில் ஏந்தி நின்றான். (இந்த நிகழ்வு எனது ஆபாச கற்பனையல்ல. மகாபாரதத்தின் சம்பவ பர்வ பாகத்தில் முப்பத்தியொன்றாவது அத்தியாயத்தில் துரோணாச்சாரியரின் பிறப்பின் மர்மத்தை இப்படித்தான் விளக்குகிறார்கள்).

கர்ப்பத்தில் உறையாமல், நவமாசம் துயிலாமல், பெண்ணின் சினை சேராமல் கலயத்தில் உதித்தவன்தான் துரோணாச்சாரியன். பின்னாளில் குருஷேத்திர யுத்தத்தில் மிகப் பெரிய பங்காற்றிய துரோணன் இப்படி மனித கற்பனைக்கு சற்றும் எட்டாத விதத்தில் கலயத்தில் பிறந்தான்.
************************************************************************************
அவர்கள் அமைதியாக அமர்ந்திருந்தனர். கூந்தல் விரித்த ஏந்திழை ஒருத்தி ஐவர் முகத்தையும் அடுத்தடுத்து நோக்க அவர்கள் அமைதியாக அமர்ந்திருந்தனர். வலியோன் வாய் திறக்கட்டும் என இளையோன் எண்ணிக் கொள்ள, இளையோன் தான் சொல்லட்டுமே என வலியோன் வாளாவிருக்க, அமைதி அங்கு ஐந்து எரிமலைகள் அமைதிப் போர்வை போர்த்தியபடியே நாடகம் நடித்தன.

************************************************************************************

(தானம் பெற்ற ஊரைப் பற்றி இன்னும் வரும்)

1 comment:

Raju N said...

அண்ணே, இது உங்களுக்கே உங்களுக்கான Plot..சுவாரசியம்!

அடிச்சு ஆடுங்க..