Wednesday, September 9, 2009

ஜுகல்பந்தி - 09 - 09 - 09 - நாட்டு நடப்புகள்

 

ஜுகல் பந்தியில் எதாவது ஒரு நகரத்தை பற்றி எழுதி வந்ததால், ஒரு சிலர் எதுக்கு இப்ப வரலாற்று பாடம் எடுக்கறீங்கன்னு கேட்டதால், நகரங்களைப் பற்றிய குறிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் படுகிறது.

அதனால இந்த வாரம் நாட்டு நடப்புகள்:

கழுதையும் அஜிர்பைஜானும்

பதிவர்கள் பிரச்சனைல மாட்டிக்கறது நம்ம நாட்ல மட்டும் இல்ல. உலகத்தின் பல பாகத்துலயும் பதிவர்கள் எதையாவது பண்ணப் போக அங்கங்க மாட்டிக்கறாங்க. அஜீர்பைஜான் அப்டீன்னு ஒரு நாடு, அதிகமாக துருக்கிய இஸ்லாமியர்களான சியா பிரிவினர் வாழும் நாடு. ஐந்து முறை தொழுகையும், ரமலான் நோன்புகளும், கொஞ்சம் ஐரோப்பியத்தனங்களும், வயிற்றைக் குலுக்கி அரைகுறை ஆடையில் வெள்ளைத் தோல் அம்மணிகள் ஆடும் Belly Dance என்ற நடனம் நிறைந்த மது சாலைகளும் என ஒரு கலவையான தேசம். இஸ்லாமியர்கள் அதிகம் நிறைந்திருந்தாலும் இது ஒரு மத சார்பற்ற நாடாகத்தான் இன்று வரை இருக்கிறது. ஏன், அதிகம் இஸ்லாமியர்கள் நிறைந்திருந்த போதிலும் கூட, ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து ஒழுங்கு மரியாதையாக தேர்தல்கள் நடத்தி, ஆளுங்கட்சி, எதிர்கட்சி, மற்றும் 132 வது வட்டத்தின் இணை துணை பொது செயலாளருக்கெல்லாம் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி அஜீர்பெய்ஜானின் விடிவு காலமே, சரித்திரத்தின் சங்க நாதமே, தேசீயத்தின் அடையாளமே என ஃபிளெக்ஸ் பேனர் வைக்கும் ஒரு நாடாகத்தான் இருக்கிறது.

  அங்கு இருக்கும் அரசாங்கத்தை விமர்சித்து இரண்டு பதிவர்கள் ஒரு வீடியோ உருவக்கினார்கள். அதாவது அரசாங்கம் கழுதைகளுக்கு கொடுக்கும் மதிப்பை விட படித்த இளைஞர்களுக்கு கொடுக்கும் வேலை வாய்ப்பும் மரியாதையும் குறைவாய் இருக்கிறது என்பதை கிண்டலாக ஒரு வீடியோ எடுத்தார்கள். அதை You Tube ல போட்டுவிட்டு, ஹாய்யாக அமர்ந்து ஒரு அஜீர்பெய்ஜானின் டாஸ்மாக்கில் பீர் குடித்துக் கொண்டிருக்கும்பொழுது , திடீரென்று அரசாங்க அதிகாரிகளும் போலீஸாரும் வந்தார்கள், அவர்களை கைது செய்து 5 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்கள். இப்பொழுது இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கை என அநேக அமைப்புகள் கொடி பிடித்து வீதியில் தொண்டை கிழிய கத்திக் கொண்டிருக்கின்றன. ஆக பதிவர்களே, ஆட்டோ வீட்டுக்கு வருவது சென்னையில் மட்டுமல்ல, உலகமெங்கிலும் இப்படித்தான் போலுள்ளது.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

பதிவர் வட்டம்

பதிவர்கள் விமர்சனம் எழுதுவதால் சினிமாக்களின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப் படுகிறது என்ற ஒரு கருத்து பல இடங்களிலும் உலா வருவதாக செய்திகள் வருகின்றன. பதிவுலகிலும் இது பற்றிய விவாதம் சூடு பிடித்துள்ளது. படம் நல்லா இருந்தா எல்லாரும் நல்லாருக்குன்னு தான் சொல்லுவாங்க. அதாங்காட்டியும் நீ எப்படி சொல்லப் போச்சுன்னு கையை மடிச்சு விட்டா, எப்படிங்க??

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இப்படியும் மனிதர்கள்

பொய் வழக்குப் போடும் மனைவிகள்னு ஒரு தளம், அதுல இந்த போலி வரதட்சணை வழக்கு விவகாரங்களை ஒரு அன்பர் எழுதி வருகிறார். அவ்வப்பொழுது அதை வாசித்ததுண்டு. அப்பவெல்லாம் கொஞ்சம் மிகைப் படுத்தி எழுதறாரோன்னு தோணும். ஆனா, சமீபத்துல என்னுடைய ஒரு நண்பரும் இதற்கு பலியாகி போகவே, மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டேன். நண்பருக்கு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மேலாளர் வேலை. அரவிந்த சாமி மாதிரி ஒரு பர்சனாலிட்டி. கல்யாணம் ஆகி தாம்பத்யம் நல்லாத்தான் போயிட்டிருந்துச்சு. ஒரு ஐந்து மாதம் கழித்து ஆசை மனைவி, முகம் சிவக்க அந்த நல்ல விஷயத்தை சொல்ல, தலைவர் சந்தோஷத்தில் ஆகாயத்தில் மிதந்து கொண்டிருந்தார். ஆனா, கொஞ்ச நாள்லயே நொந்து நூலாகிப் போனார். ஏன்னா, மனைவிகிட்டேருந்து எந்நேரமும் புகார்தான், நான் வயத்துல புள்ளயோட இருக்கேன்ற கவலை உனக்கு கொஞ்சமாச்சும் இருக்கான்னு ஒரே டார்ச்சர். ஒரு நாள் வெளிநாட்டு பிரதிநிதிகளுடன், நம்மாளு ஒரு சீரியஸான மீட்டிங்ல இருக்கற நேரம், வீட்டிலிருந்து போன்.

இப்ப உடனே கிளம்பி வா,

இல்லம்மா, நான் மீட்டிங்ல இருக்கேன். ரொம்ப முக்கியமான மீட்டிங்.

அப்ப வயித்துல புள்ளயோட இருக்கற நான் முக்கியமில்லையா, உனக்கு மீட்டிங் தான் முக்கியமா?? இப்ப நீ வரலைன்னா, நான் மாடியில இருந்து குதிச்சுருவேன்.

விரக்தியின் எல்லையில் இருந்த நண்பர் " சரி அதை செய் முதல்ல" ன்னுட்டு லைனை கட் பண்ணிவிட்டு, மீட்டிங்கில் சொதப்பியதற்காக மேலிடத்திலும் வாங்கிக் கட்டிக் கொண்டார்.

மாலையில் மனதை சாந்தப் படுத்திக் கொண்டு வீட்டிற்கு போனால், வீட்டில் யாருமில்லை. மனைவியின் வீட்டிற்கு போனைப் போட்டால், மாமியார் மாத்திரம் போனை எடுத்து, அவ உங்க கூட பேச விரும்பலன்னு சொல்லீட்டாங்க.

இரண்டு மாதம் கழித்து இப்பொழுது எதிர் தரப்பு குழந்தை பிறந்ததும் இவர் மீது வரதட்சிணை வழக்கு பதிவதற்கான அனைத்து முயற்சிகளிலும் இறங்கியிருப்பதாக கேள்விப்பட்டு, இதற்கு முன் ஜாமீனாக எதாவது செய்ய முடியுமா என பல பணம் புடுங்கும் வக்கீல்களுக்கு சம்பளத்தை அழுது கொண்டிருக்கிறார்.

என்ன சட்டமோ, என்ன மக்களோ போங்க.

இந்த வாரம் ங்கொய்யால எழுதற மூடே இல்ல.

10 comments:

Anonymous said...

//என்ன சட்டமோ, என்ன மக்களோ போங்க.//

சகுனிகள் எல்லா மக்களிலும் இருக்கிறார்கள். சில பெண்களும் இதற்கு விதிவிலக்கில்லை.
உங்கள் நண்பருக்கு நியாயமும் நிம்மதியும் கிடைக்கட்டும்.

எம்.எம்.அப்துல்லா said...

//என்ன சட்டமோ, என்ன மக்களோ போங்க.//

//

இதே ங்கொய்யாலதானே.

எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர் ஒருபைசாகூட பெறாது திருமணம் செய்து எனக்கு முன்மாதிரியாக விளங்கியவர். வேறு ஏதோ கருத்து மாறுபாடில் அவரைப்பிரிந்த மனைவி அவர் மேல் வரதட்சணைப் புகார்தான் குடுத்தார்.இன்னும் நாய்போல கோர்ட்டுக்கு அலைகின்றார்.இப்போதெல்லாம் திருமணம் செய்யப்போகும் தனக்குத் தெரிந்தவர்களிடம் தயவு செய்து முடிந்தவரை வரதட்சணை வாங்குங்கள் என்கின்றார். அப்படியெல்லாம் பேசாதீர்கள் என்று ஒருநாள் சொன்னேன். போடா ங்கொய்யால உனக்கு எங்க தெரியும் என் வலி என்று விரக்த்தியோடு புலம்புகின்றார்.

Raju said...

ங்கொய்யால வ இருட்டடிப்பு செஞ்சுட்டீங்களே தலைவரே..!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நீங்கள் சொல்வது போல் ஒன்றிரண்டு கேஸ்கள் இருக்கலாம். ஆனால் அதையே காரணம் காட்டி இந்தச் சட்டமே வேண்டாம் என்ற அளவிற்கு இழுத்துச் செல்லக் கூடாது.

கார்க்கிபவா said...

சுந்தர்ஜி சொல்வதுதான் என் வாதமும்..

ங்கொய்யால, ங்கொய்யால எங்க?

நர்சிம் said...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...
நீங்கள் சொல்வது போல் ஒன்றிரண்டு கேஸ்கள் இருக்கலாம். ஆனால் அதையே காரணம் காட்டி இந்தச் சட்டமே வேண்டாம் என்ற அளவிற்கு இழுத்துச் செல்லக் கூடாது.
//

அஃதே.

Cable சங்கர் said...

பதிவர்கள்னாலே பராப்ளம்தானோ..?

Thamira said...

மூணாவது பகுதி படிச்சதும் கடுப்பா இருக்குது.. சை.!

நாஞ்சில் நாதம் said...

மூணாவது பகுதி படிச்சதும் கடுப்பா இருக்குது

ஜுகல் பந்தியில் தலயும் இல்ல வாலும் இல்ல (நகரமும், ங்கொய்யாலவும்)

அதனால

சரி வேண்டாம் விடுங்க.....

க. தங்கமணி பிரபு said...

இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து

http://www.srilankacampaign.org/form.htm



அல்லது

http://www.srilankacampaign.org/takeaction.htm



என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!
அப்படியே இந்த புணிதச்செயலில் உங்கள் நண்பர்களையும் ஈடுபடுத்துங்கள்!! நன்றி!!