Wednesday, September 16, 2009

ஜுகல்பந்தி – 16 – 09 – 2009 - நீளும் கம்யூனிச கரங்கள்

நகரம்

குவாலியர் – கோட்டைகளின் நகரம்

புழுதி பறக்க விரையும் குதிரைகளின் குழம்பொலி, உருவிய வாள், முறுக்கிய மீசை, நிமிர்ந்து நிற்கும் கோட்டைகள், வாரிசு சண்டைகள், உருண்டு ஓடிய தலைகளிலிருந்து பிரிந்து சிதறிய மகுடங்கள், பொன்னாசை பிடித்த ஆப்கானியர்களின் ஊடுருவல்கள் என எப்பொழுதும் ஒரு அரசியல் சூறாவளிகளுக்கு நடுவிலேயே வாழ்ந்த ஒரு நகரம். இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியிலும், முகலாயச் சக்கரவர்த்தியின் அவையை அலங்கரித்த நவரத்தினங்களில் ஒருவரான தான்சேன் இங்கு வந்தும் போவதுமாக இருந்ததால், இசையும், நாட்டியமும் இன்ன பிற கலைகளும் கூட அதன் போக்கில் தன் பல பரிமாணங்களை இந்த நகரத்தில் விட்டுச் சென்றிருக்கிறது.

முதன்முதலில் இந்த மலை நகரத்தை கண்ணெடுத்து பார்த்து அதை ஆக்ரமித்து தனதாக்க வேண்டும் என்ற வேட்கை கொண்டவர்கள், சூரியவம்சத்தை சேர்ந்த பத்குஜ்ஜர் ராஜபுத்திர வம்சத்தின் குல விளக்குகள் தான். எந்தப் போரிலும் முன்னணியில் நின்று நெஞ்சை நிமிர்த்தி போரிடும் வீரமும், துணிவும், பெருமையும் கொண்ட குஜ்ஜர் எனப்படும் இந்த ராஜபுத்திர வம்சம், அரசியல் சூழ்நிலையில் அடிபட்டு இன்று தங்களது இருப்பியல் வசதிகளுக்காக அரசியல்வாதிகளிடம் கையேந்தி நிற்பது வேதனைதான். இந்த வம்சத்து மக்கள் இங்கு கோட்டை கட்டப் போய், அதன் பிறகு வந்தவர்கள், இங்கு பல கோட்டைகளைக் கட்டி இந்த நகரத்துக்கு கோட்டைகளின் நகரம் என பெயர் கொடுக்கும் அளவிற்கு பெருமை சேர்த்து விட்டார்கள்.

தோமர் வம்சத்து மன்னர்கள் ஆண்ட காலத்தில் ராஜா மான்சிங் தோமர் என்பவரால் கட்டப்பட்ட குவாலியர் கோட்டையானது இன்றளவும் பிரசித்தமானது. இதை சுற்றிப் பார்ப்பதற்கே பல நாட்களாகும். இதற்குப் பின் இந்த நகரம், கச்வாஹா ராஜ புத்திரர்கள், அடிமை வம்சத்து அரசனான குத்புதின் ஐபெக், அதற்குப்பின் மராட்டிய வீரரான மாதவ்ராவ்ஜி ஷிண்டே என பலரது கைக்கு மாறி, சிப்பாக் கலகத்தில் பெரும்பங்கெடுத்து, பின் ஆங்கிலேயர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஆட்சி புரிந்த சிந்தியா மகாராஜாக்களின் கைகளில் இந்தியா சுதந்திரம் பெறும் வரை இருந்திருக்கிறது.

குவாலியர் கோட்டையின் அழகையும் பெருமையையும் கண்ட முகலாய மன்னர் பாபர், இதில் லயித்துப் போய் இந்தியர்களால் கட்டப்பட்ட மாளிகைச் சரங்களில் இது ஒரு விலைமதிக்க முடியாத முத்து என்றாராம்.

இன்னும் இந்நகரம் அமைந்திருக்கும் பிராந்தியமான புந்தேல்கண்ட் பகுதியில் பிரசித்தி பெற்ற நடனங்களான ஆஹிரி, பரேதி, சஹரியா, லூர், லாங்கி, துல் துல் கோரி போன்ற நடனங்களின் எச்சத்தையும் மிச்சத்தையும், திருமணங்களிலும் விழாக்களிலும் காணலாம்.

இசை மேதை தான்சேனுக்கு வருடத்திற்கொருமுறை தான்சேன் இசைவிழா நடத்தி பெருமை சேர்க்கிறார்கள்.

ஒரு முறையாவது இந்தக் கோட்டைகளை போய் பார்த்து விட்டு பெரு மூச்சு விட்டு விட்டு வாருங்கள்.

நாட்டு நடப்புகள் : நீளும் கம்யூனிச கரங்கள்

சீனா, அருணாசல பிரதேசத்தை ஆக்கிரமிக்க நினைக்கிறது, ராணுவ நடவடிக்கைகளை தீவிரப் படுத்தியுள்ளது, எப்பொழுதும் சீண்டிப் பார்க்கிறது, திபெத்தில் அழிச்சாட்டியம் பண்ணுகிறது என்றெல்லாம் பொழுது போகாத நேரத்தில், ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் ஜெனரல்களும், பியூட்டி பார்லரில் போய் முகம் முழுவதும் கண்ட கண்ராவிகளையெல்லாம் பூசிக்கொண்டு வந்து, தனது வயதை மறைக்க பிரம்மப் பிரயத்தனப் படும் ஊடக அம்மணிகளுமாக கத்தித் தொலைத்துக் கொண்டிருந்தார்கள், இருக்கிறார்கள். அதற்கெல்லாம் மேலாக நேற்று ஒரு புதிய விஷயம் கிடைத்திருக்கிறது, நேபாளத்தில் உள்ள இமயமலை அடிவாரங்களில் சீனா மூன்று குகைகளில் தனது ராணுவ நடவடிக்கையை ஆரம்பித்திருக்கிறதாம். மாவோ ஆட்சி நேபாளத்தில் அமைந்த நாளிலிருந்தே அங்கு சீனத்தின் சினேகப் பார்வை விழுந்து, அது காதலாகி கனிந்துருகி, இப்பொழுது இந்தியாவில் உளவு வேலை பார்க்க நிர்பந்திக்கும் அளவுக்கு நேபாளத்தில் சீனா காலூன்றியிருக்கிறது. நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் உள்ள நல்லுறவினால், எல்லையில் யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் வந்து போகலாம் என்ற மாமன், மச்சான் உறவு முறை இருக்கிற நேரத்தில், சப்பை மூக்கும், மஞ்சள் நிறமும், இடுங்கிய கண்களுமாக இருக்கும் நேப்பாளிகளோடு உருவத்தில் ஒத்துப் போகும் சீனர்கள், இந்த மாமன் மச்சான் வழியில் இந்தியாவுக்குள் ஊடுருவி நாசம் பண்ணாமலிருந்தால் சரி.

பதிவர் வட்டம் :

சிறுகதை பட்டறை நல்ல முறையில் நடந்து முடிந்திருக்கிறது. அண்ணன் சிவராமனுக்கும், குருஜிக்கும் நன்றிகள். பதிவர்கள் உற்சாகத்துடன் அதை வர்ணித்ததே அதற்கு சாட்சி. பதிவுலகம் போலித் தொந்தரவுகளிலிருந்து என்றுதான் மீண்டு வருமோ தெரியவில்லை. யாரோ ஒருவர் இந்த தேன்கூட்டில் கை வைக்கப் போய், இப்பொழுது நிறைய தேனீக்கள், வாளெடுத்துக்கொண்டு களம் புகுந்துள்ளன. தேனெடுக்கும் தேனீக்கள் வாளெடுக்கலாமா?????

ஆண்டாள் பாசுரங்களைப் பற்றி ஒரு எழுத்தர் பேசப் போக, கலாச்சாரக் காவலர்கள் அவரைப் பிடித்து பிழிந்து, கசக்கி, காயப் போட்டு விட்டார்கள். என்னமோ போங்க சாண்டில்யன் கூடத்தான் தான் எழுதிய ஜலதீபத்தில் ஆண்டாளைப் பற்றி எழுதினார். அப்பொழுதெல்லாம் ஏன்தான் இந்த பிரளயம் கிளம்ப வில்லையோ தெரியவில்லை.

எப்படி கேள்விகள் பத்து, பிடித்தது பத்து, படித்தது பத்து, உன்னைப் பற்றி 32, A to Z, ஆறு தன் வரலாறு கூறுதல், விருது கொடுத்தல் போன்ற தொடர்பதிவுகள் எப்பொழுதும் வலையுலகை ஆக்கிரமித்து நிற்கிறதோ, அப்படியே வகை வகையான போட்டிகளும், (புகைப் படப் போட்டி, கவிதைப் போட்டி, மொக்கைப் போட்டி, இன்னும் பல) பதிவுலகை ஆக்கிரமித்து இருக்க வேண்டும் என இந்த ஏழை அடியேன் விரும்புகிறேன்.

ங்கொய்யால பக்கங்கள்

சீறத் தெரியலைன்னா அது சிங்கமில்ல,

பாயத் தெரியலைன்னா அது புலியுமில்ல,

பாடத் தெரியலைன்னா அது குயிலுமில்ல,

ஆடத் தெரியலைன்னா அது மயிலுமில்ல,

நீந்தத் தெரியலைன்ன அது மீனுமில்ல,

ங்கொய்யால,

நல்ல நண்பன் இல்லைன்னா நீ மனுசனேயில்ல.

7 comments:

நாஞ்சில் நாதம் said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இது புள்ள. இப்படி முழுசா எழுதுனாத்தான் ஜுகல்பந்தி

ஜுகல்பந்தி நல்லாயிருக்கு தல

Raju said...

என்று தனியும் உங்கள் ஊடக் கோபம் தலைவா..?
:-)

தராசு said...

வாங்க நாஞ்சில்,

டேங்சு.

தராசு said...

ஊடக கோபமெல்லாம் இல்லப்பா,

அப்பப்ப மனசுல தோணறத எழுதிப்புடறோம், அதுக்குத்தான இங்க கடையே தொறந்திருக்கோம்

Cable சங்கர் said...

ங்கொய்யால.. நிசமாவே சூப்பர்..

Thamira said...

பாதிக்கப்புறம் படிச்சுட்டேன். செம்ம.!

கார்க்கிபவா said...

ங்கொய்யாலாவில் கடைசி வரி இப்படி இருக்குமோன்னு பயந்தேன்..

“ங்கொய்யால பின்னூட்டம் போடலைன்னா நீ பதிவரே இல்லை”