Wednesday, June 24, 2009

ஜுகல்பந்தி 24/06/2009 - பத்த வெச்சுட்டாரைய்யா!!!!!!!!

நகரம் - ஜெய்சல்மீர் - (தங்க நகரம்).

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தார் பாலைவனத்தின் மத்தியில் உள்ள பழம்பெரும் நகரங்களில் ஒன்று. கோட்டைகளும், மதில்சுவர்களும், குறுகிய வீதிகளுமாய், செல்வச் செருக்கோடு வாழ்ந்த ராஜபுத்திர மன்னர்களின் பெருமையை சொல்லும் தங்க நகரம். இதை நிர்மாணித்த ராஜபுத்திர மன்னன் ஜெய்சல் என்பவரது மலைக்கோட்டை என்று பொருள்படும்படியாக இதற்கு ஜெய்சல்மீர் என்று பெயர் வந்தது. சுற்றிலும் இருக்கும் மணல் மேடுகள் தங்க நிறத்தில் காட்சியளிப்பதால் இது தங்க நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.

ராஜபுத்திரர்களின் நுண்ணிய கட்டிடக் கலையை பறை சாற்றும் அநேக நினைவுச்சின்னங்கள் இன்னும் இருந்த போதிலும், ஜைன மத தாக்கமும் வெகுவாக இருந்ததற்கு சாட்சியாக ஜைனக் கோவில்கள் மூலைக்கு மூலை நிறைந்திருக்கின்றன. ராஜபுத்திரர்களில் ப(ஹ)ட்டி என்ற இனத்தவர்கள் இதை சிறப்பாக ஆண்டு கொண்டிருந்த பொழுதுதான்,ம்ஹூம், சும்மா ஆண்டு கொண்டேஇருந்திருக்கலாம், அப்படியில்லாமல், ஆப்கானிய அலாவுதின் கில்ஜியின் சரக்கு வாகனங்கள் இவர்கள் நாட்டுக்கு அருகில் கடந்து போக, அதை அப்ப்டியே கோழி அமுக்கு அமுக்கி விட்டர்கள். சும்மா இருப்பாரா கில்ஜி, கி.பி. 1293 ல், ராஜபுத்திரர்கள் அந்தப்புரத்து அழகிகளிடம் மயங்கிக் கிடந்த வேளையில், இந்த அழகிய ஊருக்குள் புகுந்து சூறையாடி, வேட்டையாடி, வெறியாட்டம் ஆடி, இன்னும் என்னென்னவெல்லமோ ஆடி தீர்த்து விட்டான். இந்த சமயத்தில் இங்கிருந்து தப்பியோடிய ராஜபுத்திர ப(ஹ)ட்டி வம்சத்தினர், இன்றைய பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்திலிருக்கும் நன்கான சாஹிப் என்ற பிராந்தியங்களிலும், சிந்து மாகாணத்திலிருக்கும் லர்கானா பகுதியிலும் போய் தஞ்சம் புகுந்து விட்டார்கள். இவர்கள் தான் பின்னாளில் ப(ஹ)ட்டி என்ற பெயரிலிருந்து பூட்டோவாக மாறியவர்கள். பாகிஸ்தானில் பூட்டோக்கள் பட்ட பாடு உங்களுக்கே தெரியும்.

கில்ஜி இந்த பிரதேசத்தை ஆண்டு, பிறகு முகலாய சக்கரவர்த்தி ஷாஜகான் கொஞ்ச காலம் பொழுது போக்குக்காக ஆண்டு என ஆண்டுகள் பல கடந்த பின், ஒரு வழியாக மறுபடியும் ராஜ புத்திரர்கள தலைஎடுக்கலாம் என நினைத்தால், அதற்குள்ளாக ஆங்கிலேயர்களின் கை இந்தியாவில் ஓங்கத்துவங்கி, ராஜ புத்திரர்கள் இவர்களின் கடைக்கண் பார்வையிலேயே வாழ வேண்டியதாகிவிட்டது. ராஜ புத்திரர்கள் ஆண்ட நாட்களிலெல்லாம், ஆட்சி செய்தார்களோ இல்லையோ, சின்ன சின்ன சில்லரை விஷயத்துக்கெல்லாம் வாளை உருவிக் கொண்டு "ஆஆஆஆஆக்ரமண்" என்று கத்தி விட்டு குதிரையின் வயிற்றில் உதைத்து, போர்க்களம் புகுந்திருக்கிறார்கள். மற்ற இரண்டு ராஜபுத்திர ராஜ்யங்களாயிருந்த ஜோத்பூர், மற்றும் பிகானேருடன் இவர்கள் நல்லுறவு கொண்டிருந்ததாக சரித்திரமே இல்லை. மண், பெண், மற்றும் பொன்னுக்காக எப்பொழுதும் அடித்துக் கொண்டே இருந்தார்கள். ஒரு சில சமயங்களில் ஒரு சிறிய நீரூற்றுக்காகவும் இந்த பாலைவன மண்ணில் தலைகள் சீவப்பட்டிருக்கிறது.

இன்றைய நாளைப்போலவே அன்றும் இந்த ராஜபுத்திர பெண்கள் தங்கப் பதுமைகளாகவே இருந்திருப்பார்களோ என்னவோ, முகலாய சக்கரவர்த்தி அக்பரும் தன் மனதை பறி கொடுத்தது ஒரு ஜெய்சல்மீர் அழகியிடம்தான்.

இங்கு சென்று இதன் அழகை கண்டு களிக்க ஏற்ற நாட்கள், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள்தான். இந்த மாதங்களில் நடக்கும் "பாலைவன விழாவில்" கல்பேலியா நடனங்கள், நாட்டுப்புற இசை, மற்றும் ராஜபுத்திரர்களின் வீரத்தை கட்டியம் கூறும் நாட்டுப்புற பாடல்கள் என பாலைவனமே களைகட்டியிருக்கும்.

சொந்த செலவில் சூனியம். (பிரஞ்சு அதிபர் சர்கோஸி)


ஐந்து மில்லியன் முகமதிய ஜனத்தொகையை கொண்ட, மேற்கு ஐரோப்பிய நாடுகளில் சிறிது வலியதும், ஐரோப்பிய நாடுகளுக்குள் ஒரு நாட்டாமை ரேஞ்சுக்கு இருப்பதும், கொஞ்சம் துட்டு பார்ட்டியுமான பிரான்சு நாட்டின் அதிபர் நேற்று அதன் பாராளுமன்றத்தின் இரண்டு சபைகளும் கூடி இருக்கும் பொழுது ஒரு விவகாரமான விஷயத்தில் திருவாய் மலர்ந்துள்ளார். " முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதை பிரான்சு நாடு அனுமதிக்காது, பெண்கள் ஒரு திரைக்குப் பின்னே இருப்பதால் தங்களது மதிப்பை இழந்து இரண்டாந்தரமாக்கப் படுகின்றனர். பிரஞ்சுக் குடியரசில் பெண்கள் இப்படி இரண்டாந்தரமாக்கப் படுவதை அனுமதியோம். புர்கா என்பது ஒரு மத அடையாளமல்ல, அது பெண்ணை கீழ்படுத்தும் ஒரு சின்னம்" என்று சொல்லி விட்டார். உடனே எப்படா இந்த மாதிரி ஒரு மேட்டர் கிடைக்கும், நாமும் போட்டுத் தாக்கலாம் என எதிர்பார்த்திருந்த, உலக மீடியாக்கள் அனைத்துக்கும் சூடு பிடித்துக் கொண்டது. இந்தியாவில் ஒரு படி மேலே போய் பெண்ணிய வாதிகள் "ஒரு பெண்ணை எது அணிய வேண்டும் எது அணியக் கூடாது" என்று சொல்வதற்கு இவர் யார் என்ற ரீதியில் நேற்று முழுவதும் கத்தித் தீர்த்தனர்.

அட, மடையர்களா, அவர் யாரோ ஒரு இரண்டாவது குறுக்குத் தெருவில் வசிக்கும் ரங்கசாமியோ அல்லது குப்புசாமியோ அல்ல. சர்கோஸி பிரான்சு நாட்டின் அதிபர். அவர் அவரது குடிமக்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். அவ்வளவுதான், அதற்காக கேமரா என் முகத்தை காட்டுகிறது என்பதற்காக இந்திய தொலைக்காட்சிகளில் இப்படியா புர்கா அணியாத பெண்கள் கூவுவது. படுகேவலமாக இருக்கிறது. இப்படி கூவும் கலாச்சார காவலர்களில் எத்தனை பேர் சூடானின் டார்போர் பகுதியில் அவர்களது நாட்டு மண்ணின் மைந்தர்களாலேயே கற்பழிக்கப்படும் குழந்தைகளுக்காகவோ, தாலிபான்களால் ஆப்கானிய பெண்கள் அடக்கி ஆளப்பட்டபொழுது அவர்களுக்காகவோ எத்தனை முறை குரல் கொடுத்தார்களோ தெரியவில்லை.

எது எப்படியோ, பத்த வெச்சுட்டாருய்யா சர்கோஸி.

கவுஜ

நான் இறந்த பின் எனக்கு

தாஜ்மகால் வேண்டாம் ஷாஜகானே.

நான் இருக்கும் போதே

ஒரு குடிசை கொடு, போதும்.

6 comments:

கார்க்கிபவா said...

//நான் இறந்த பின் எனக்கு

தாஜ்மகால் வேண்டாம் ஷாஜகானே.

நான் இருக்கும் போதே

ஒரு குடிசை கொடு, போது/

கிகிகி.. யாரு நீங்க எழுதியதா தல?

தராசு said...

தெரியல

Raju said...

நீங்க எழுதுனதான்னு கேட்டாக்கா,
கவிஞர் மாதிரியே தெரியலன்னு பதில் சொல்லுது தல...!
அப்போ இது உங்க கவுஜதான..?

தராசு said...

கரீக்டு டக்ளஸு

Vetirmagal said...

ராஜஸ்தான் - ஜெய்சல்மீர் பார்த்திருக்கிறேன். அழகு!

உங்கள் பார்வை வித்யாசமாக உள்ளது. தகவல்கள், இன்னும் தெரிந்து கொள்ள துண்டுகின்றன.

நன்றி.

தராசு said...

வாங்க வெற்றி,

முதல்தரமா வந்திருக்கறீங்க, டேங்சு.