Monday, June 15, 2009

அப்பா, நான் பாஸாயிட்டம்பா!!!!!

பத்தாவது வகுப்பு ரிசல்ட் வரும் நேரம். மணியண்ணன் டீக்கடையில் மத்தியானம் மூணு மணிக்கெல்லாம் மாலை முரசு பேப்பர் வந்துரும். கண்ணன், நானு, சண்முகம், கனகவல்லி, உமா மகேஸ்வரி எல்லாரும் பத்தாவது பரிட்சை எழுதீட்டு ரிசல்டுக்காக எதிர்பார்த்துகிட்டிருக்கோம். காலையிலிருந்தே மனசுக்குள்ள இன்னதுன்னு சொல்ல முடியாத ஒரு இதுவா இருக்குது. பெரியக்கா காலைலயே சொல்லிட்டாங்க, " எனக்குத் தெரியும். நீ, பாஸாயிருவ, எவ்வளவு மார்க்கு வாங்கறேங்கறது தான் முக்கியம்". சின்னக்கா சொன்னாங்க " மொதல்ல பாஸாகறானான்னு பாரு, ". அப்பா மாத்திரம் சேர்லயே உக்கார்ந்துகிட்டு ஒண்ணுமே சொல்லாம இருக்காரு, மனசுக்குள்ள என்னமோ சரியில்லைங்கற மாதிரி தோணுச்சு, ஆனா ரிசல்ட் ஆர்வத்துல அதையெல்லாம் கண்டுக்கல.

பத்து மணிக்கெல்லாம் மணியண்ணன் டீக்கடைக்கு ஒருதரம் போய் அவருகிட்ட சொல்லிட்டு வந்துட்டேன். " அண்ணா, பேப்பர் வந்தா, கொஞ்சம் எடுத்து வைங்கண்ணா, இன்னைக்கு ரிசல்ட் வருது", அவரும் சிரித்துக்கொண்டே "தெரியும்டா, உங்க பூளவாக்கெல்லாம் இன்னைக்குத் தெரிஞ்சுரும்"ன்னாரு.

ஒரு மணிக்கே மணியண்ணன் கடைக்கு போயிட்டோம். சண்முகம் மாத்திரம் கொஞ்சம் கவலைப்பட்ட மாதிரி இருந்தது. நானும் கண்ணனும் கவலையே இல்லாம இருந்தோம். இதா வருது, அதா வருதுன்னு, மூணரை மணிக்கு வர்ற பழனியப்பா பஸ்ஸில தான் பேப்பர்கட்டு வந்துது. பஸ் தூரத்துல வரும் போதே, நாங்க மூணு பேரும் ரோட்டை தாண்டி போய் நின்னுட்டோம். பஸ் வந்ததும், டிரைவர் அண்ணே பேப்பர் கட்ட எங்ககிட்ட குடுங்கன்னு பஸ்ஸை சுத்திவந்து, டிரைவரோட பக்கத்துல நின்னு கேட்டோம். டிரைவர் அங்கிருந்தே மணி அண்ணனை பார்த்தாரு, மணி அண்ணனும் கை காமிக்க, டிரைவர் பேப்பர் கட்ட குடுத்தாரு. காக்கி கலர்ல ஒரு கவர் பேப்பர் சுத்தி அதுக்கும் மேல ஒரு டொயின் கவுறு கட்டி, மேல மாலை முரசுன்னு எழுதுன ஒரு வெள்ளைப் பேப்பர் ஒட்டி, அதுல மணி டீ ஸ்டால்னு கையில எழுதியிருக்கற அந்த கட்ட வாங்குனப்ப, லேசா மனசுக்குள்ள ஒரு பயமும் வந்துச்சு.

பேப்பர் கட்ட கீழ வெக்கறதுக்கு முன்னாலயே சண்முகம் அதை கட்டியிருக்கற டொயின் கயிற இழுத்து அத்தற பாத்தான், மணியண்ணன் "பேப்பர கிழிச்சராதீங்கடா"ன்னு சொல்லிகிட்டு, அந்த கட்டிலிருந்த முடிச்ச நிதானமா அவுத்து அந்தக் டொயின் கவுத்த தினமும் சேத்தி ஒரு பந்து மாதிரி சுத்தி வெச்சிருப்பாரு, அதுல சுத்திகிட்டாரு. அப்புறமா ஒரே ஒரு பேப்பரை எடுத்து எங்க கிட்ட குடுத்து, "பேப்பர் கிழியாம பாக்கணும்"னு குடுத்தாரு. எல்லாருக்கும் அவசரம், டேய், மூணாவது பக்கத்துல பாருடா, இல்லடா நம்மளது அஞ்சாவது பக்கத்துல இருக்குண்டா. ஒரு வழியா நம்பரக் கண்டு பிடிச்சு, நம்ம நம்பரு இருக்குதுன்னு தெரிஞ்ச உடனே வந்த சந்தோஷம் இருக்குது பாருங்க, உடனே டேய், கண்ணா உன்னோடது சண்முகத்துது, எல்லாம் இருக்குதுடா,.கனகாவுதையும், உமாவுதையும் பார்த்து இருக்குதுன்னு சொன்னவுடனே, அப்படியே வானத்துல நடக்கற மாதிரி ஒரு நெனப்பு. நம்மூர்ல பத்தாவது எழுதுனவுங்க அத்தனை பேரும் பாஸுடான்னு கத்தீட்டு, மணியண்ணங்கிட்ட "இதைக்கொண்டு போய் எங்க அப்பாகிட்ட காமிச்சுட்டு வந்தர்றண்ணா"ன்னு மூணு பேரும் ஒண்ணா கேக்க, அவரும் சிரிச்சுகிட்டே, "சரி, சரி, கசங்காம கொண்டு வாங்கன்னு சொன்னாரு, உடனே புல்லட் வேகத்துல பேப்பர தூக்கிகிட்டு ஓடுனோம்."

வீட்டுல வாசப்படிய ஒரே தாவல்ல தாவி அப்பாகிட்ட " , நான் பாஸாயிட்டம்பா"ன்னு பெருமையா பேப்பரை குடுத்தா, அவுரு அந்த மரக்கலர் பிரேம் போட்ட கண்ணாடி வழியா தீர்க்கமா என்னை ஒரு பார்வை பாத்துட்டு, "அப்பிடியா, சரி" ன்னு மாத்திரம் சொன்னாரு. சப்புனு ஆயிருச்சு எனக்கு, அப்பா முதுகையாவது தட்டி குடுத்து, சந்தோஷமா என் நம்பரை பாப்பாருன்னு நெனச்சேன். ஆனா அவுரு இதையும் எதோ ஒரு காலாணாவுக்காகாத விசயத்தை கேக்கற மாதிரி கேட்டதும் எனக்கு என்னமோ போல இருந்துச்சு. அம்மாவுக்கு புரிஞ்சிருக்கும் போல, அவுங்க வந்து என்னை கட்டி புடிச்சுகிட்டு, " பாஸாயிட்டதை சந்தோஷமா சொல்றான், நீங்க என்னமோ எழவு சேதி கேட்ட மாதிரியில்ல மூஞ்சிய வெச்சுக்கறீங்கன்னு" திட்டுனாங்க, அப்பா அம்மாவையும் அதே பார்வை பாத்துட்டு கண்ணை திருப்பிகிட்டாரு. அம்மா முகத்துல ஒரு வினாடி என்னமோ தெரிஞ்சுது, கண்ணுல கூட தண்ணி கட்டுனாப்புல இருந்துது, ஆனா சமாளிச்சுகிட்டு “என் ராசா, எங்க போனாலும் ஜெயிட்டுத்தாண்டா வருவேன்”னு கட்டி புடுச்சுகிட்டாங்க. "இண்ணைக்கு அம்மா வடை சுட்டிருக்கேன் சாப்புடுறா ராசா"ன்னு சமையல் ரூமுக்கு கூட்டிகிட்டு போயிட்டாங்க, அப்பா என்னை ஒரு தரம் திரும்பி பாத்த மாதிரி இருந்திச்சு, பாத்தாரோ என்னவோ.

அதுக்கப்புறம், மார்க் ஷீட் குடுத்தாங்க, எங்கூர்ல அஞ்சு பேர்ல நாந்தான் 432 மார்க் வாங்கி பர்ஷ்ட்டா இருந்தேன். கோயமுத்தூர்ல தான் ஹைஸ்கூலு இருக்குது, இனிமே அங்க தான் பையன பதினொண்ணாப்பு சேர்த்தணும்னு கண்ணனோட அப்பா வந்து எங்க அப்பா கிட்ட பேசிகிட்டிருந்தப்போ, பொன்னையனை என்ன பண்ணப்போறீங்கன்னு கேட்டாரு, அப்பா அவரையும் அதே பார்வை பாத்துட்டு, கொஞ்ச நேரம் யோசிச்சுட்டு, "அவனையும் அங்க தான் சேத்தணும்"னு சொன்னாரு, இதைக் கேட்டதும் மனசு குஷியாயிருச்சு, அய், இனிமே பேண்ட் போட்டுட்டு போலாம் , தினமும் டவுனப் பாக்கலாம்னு என்னென்னமோ நெனப்பு மனசுல.

பழைய நோட்டுல இருந்த எழுதாத பக்கத்தையெல்லாம் கிழிச்சு ஒரு புது நோட்டு பண்ணி, அக்காவை தெச்சு குடுக்க சொல்லி, மணியண்ணங்கிட்டிருந்து பேப்பர்ல சுத்தி வர்ற காக்கி பேப்பர வாங்கிட்டு வந்து, அந்த நோட்டுக்கு அட்டை போட்டு, ஒரு வெள்ளை பேப்பரை லேபிள் மாதிரி கிழிச்சு, அரிசிச் சோறெடுத்து அதுல தடவி நோட்டுல ஒட்டி, அந்த லேபிள்ல பேர் எழுதி, வகுப்பு : XI Standard, அப்டீன்னு இங்கிலீஷுல எழுதி அதை நூறு தரமாவது வாசிச்சு பாத்து மனசுக்குள்ள பெருமை பட்டுகிட்டே பள்ளிக்கூடம் எண்ணைக்குத் திறக்கும்னு காத்திருந்தேன். ஸ்கூல் தெறக்க ரெண்டு நாள் இருக்கும்போது அப்பா கூப்பிட்டாரு, ஒவ்வொரு வருஷமும் ஸ்கூலு தெறக்கறதுக்கு மூணு நாளைக்கு முன்னால அப்பா இப்படித்தான் கூப்புட்டு " போய் சிவாலிங்க செட்டியாரு கடயில சட்டைக்கும் டவுசருக்கும் அளவு குடுத்துட்டு வாடா"ன்னு சொல்லுவாரு, இந்த தரம் நான் ஹைஸ்கூலுக்கு போறனல்லப்பா, எனக்கு பேண்ட்தான் வேணும்னு சொல்லலாம்னு நெனச்சுகிட்டே போனா, அப்பா தன்னோட கையை பாத்துகிட்டே சொன்னாரு " சாயந்திரமா போயி ரத்தினசாமி ஐயாவோட பையனை பாத்துட்டு வா, அவுரு என்னமோ உன்னய பாக்கணும்னு சொன்னாராமா".

ரத்தின சாமி ஐயாவோட மகன் கதிர்வேல் எங்கூர்ல இருந்த சிமெண்ட் கம்பெனில இஞ்ஜினீயரா இருக்கறாரு. ஜாவா பைக்குல தான் போவாரு வருவாரு, நல்ல அண்ணன், எப்ப பாத்தாலும் என்னப்பா நல்லா படிக்கறயான்னு கேப்பாரு, நாமுளும் ஒரு காலத்துல இன்ஞ்ஜினியராகி இந்த மாதிரி பைக்குல போகணும்னு நெறயதடவ நெனச்சிருக்கேன். ஆனா எதுக்கு அவுரப் போயி பாக்கச் சொல்றாருன்னு புரியல. ஆனா அப்பா கிட்ட எதுக்குப்பான்னு கேக்கற தைரியம் வர்ல, அந்த மாதிரி அப்பாகிட்ட எதிர் கேள்வி கேட்டு வழக்கமும் இல்ல, இதை எங்கிட்ட சொல்லும்போது அப்பாவோட குரல்ல வழக்கமா இருக்குற கம்பீரமும் கண்டிப்பும் இல்ல. என்னமோ வித்தியாசமா நடக்குதுன்னு தோணுது.

அப்புறமா கதிர்வேல் அண்ணனை பாத்தது, அவுரு என்னை சிமெண்ட் கம்பெனில வேலைக்கு வரச்சொன்னது, மத்திய பிரதேசத்துக்கு என்னை ட்ரையினிங்க்கு அனுப்பறேன்னு சொன்னதெல்லாம் என்னமோ ஒரு ஏராப்பிளான் போற மாதிரி வேகமா நடந்து முடிஞ்சு போச்சு, மத்தியப் பிரதேசத்துக்கு போறதுக்கு கோயமுத்தூர்ல இருந்து ரயிலேறணுமாம். ரயில்வே டேசனுக்கு வந்தாச்சு, அப்பா இப்பவும் எங்கூட சரியா முகங்குடுத்து பேச மாட்டேங்கறாரு, அம்மாவுக்கும் அக்காக்களுக்கும் எதோ புரிஞ்ச மாதிரி இருக்குது, அவுங்க நொடிக்கொரு தரம் என்னை மாத்தி மாத்தி ஆளாளுக்கு கட்டிப்புடிச்சுகிட்டு புத்தி சொல்றாங்க, அழுகறாங்க, எதுக்கு அழுகறாங்கன்னு தெரியல, கடைசியா ரயிலுக்கு விசில் ஊதுனதுக்கப்புறம் அப்பா என்கையில ஒரு பதினைஞ்சு ரூவா குடுத்துட்டு எங்கையப் புடுச்சுகிட்டு, "நீ நிறைய படிப்பயப்பா, எங்க போனாலும் நல்லா இருப்பியப்பா, பத்திரமா பாத்து போயிட்டு கடுதாசி போடுப்பா"ன்னு சொன்னாரு, ரயிலு நகந்தப்ப அப்பாவை பாத்தேன், தோள்ல கெடந்த துண்ட எடுத்து கண்ண தொடச்ச மாதிரி தெரிஞ்சுது. அக்காக்களும் அம்மாவும் முந்தானைய எடுத்து கண்ணை தொடச்சுகிட்டாங்க,பதினொண்ணாப்பு கனவெல்லாம் அதோட போயிருச்சு.

ட்ரெயினிங்கு முடிஞ்சு, சிமெண்ட் கம்பெனில வெல்டிங் வேலைக்கு வந்து, மாசாமாசம் அப்பாவுக்கு தவறாம சம்பளப் பணத்தை அனுப்புனேன், நான் வேலைக்கு வந்து ரெண்டு வருஷத்துல மொத அக்காவுக்கு கல்யாணம் நடந்துச்சு, அக்காவை கட்னூட்டுக்கு அனுப்பும் போது அப்பா கால்ல விழுந்து அழுதவ, என்ன கட்டி பிடுச்சுகிட்டு ரொம்ப நேரம் அழுதா, எனக்கும் அழுகையா வந்துச்சு, அப்புறமா மூணு வருஷங் கழிச்சு சின்னக்காவுக்கு கல்யாணம் நடந்துச்சு, அவள அனுப்பும்போதும் அதே மாதிரி கட்டிப்புடிச்சுட்டு அழுதா, அவ என்னைக் கட்டிப்புடுச்சுட்டு அழுகறதப் பாத்து எங்கப்பாவும் துண்டெடுத்து கண்ணை தொடச்சுகிட்டாரு.

அடுத்த வருஷம், கூட வேல செய்யற மகேஷ் " டேய், அஞ்சு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் ஆயிட்டா, அப்புறமா டவுனுக்கு போய், காலேஜுல டிப்ளமா படிக்கலாம்டா"ன்னு சொன்னான். அதுக்காக அலஞ்சு, எல்லா பார்ம்மும் குடுத்து, முதல் ஷிப்ட்டுல வேலைக்கு போய், தூங்கியும் தூங்காமலும், சாயந்திர நேரத்துல காலேஜுக்கு போய் டிப்ளமா மூணு வருஷம் கஷ்டப்பட்டு படிச்சாச்சு, இதா அந்த ரிசல்டும் வந்திருச்சு, நானு 73 பர்செண்ட் மார்க் வாங்கி பாஸாயிட்டேன், கோயமுத்தூர்ல டவுன்ல இருந்து ரிசல்ட பாத்துட்டு வரும்போது, நெல்லை லாலா ஸ்வீட் கடையில ஒரு கிலோ ஸ்வீட் வாங்கிட்டு மொத மொதல்ல அப்பாவுக்குத்தான் குடுக்கணும்னு ஆசையா வந்து ஸ்வீட்ட குடுத்தேன். அவுரு அப்பவும் அதே சேர்ல உக்காந்து அதே மரக்கலர் பிரேம்போட்ட கண்ணாடி போட்டுகிட்டு புத்தகம் படிச்சுகிட்டு இருந்தாரு.

அப்பா நான் பாஸாயிட்டம்பான்னு ஸ்வீட் பாக்கெட்ட தெறந்து அப்பா முன்னால நீட்டுனேன். என்கையிலெல்லாம் அஞ்சு வருஷமா வெல்டிங் பண்றப்ப பட்ட தீக்காயத்தோட தளும்பு. அப்பா ஸ்வீட்டைப் பாத்தாரு, அப்புறம் என்னைய அன்னைக்குப் பாத்த அதே பார்வை பாத்தாரு, கொஞ்சம் நேரம் பாத்துட்டு, கண்ணுல தண்ணி வர லேசா விசும்பிகிட்டே முகத்தை திருப்பிகிட்டாரு. என்னன்னே புரியல. மறுபடியும் சொன்னேன் " அப்பா, நான் பாஸாயிட்டம்பா". அவுரு அழுகைய நிறுத்தல.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.

14 comments:

டக்ளஸ்....... said...

அண்ணேணேணேணேணேணேணேணே.............!
சும்மா சூப்பரா ஆரம்பிச்சு நடுவுல மனச கனக்க வச்சு, கடைசியிலேயும் அதகளம் பண்ணீட்டீங்க.
அப்பாவோட இயலாமை, அழகான விவரிப்பு.
நீ பாஸாயிருவ அண்ணே...!

கார்க்கி said...

அருமையா வந்திருக்குங்க.. வாழ்த்துகள்..

தராசு said...

டக்ளசு,

டேங்சுப்பா.

தராசு said...

கார்க்கி,

ஒரு ஸ்பெஷல் டேங்சு.

நையாண்டி நைனா said...

அண்ணே... சூப்பர் அண்ணே... கலக்கல் கதை... இந்த ஒரு கதை ஆயிரம் வாக்கியம் சொல்கிறது....

Cable Sankar said...

அப்ப சரி.. நானெல்லாம் என்னத்தை கதை எழுதி.. போட்டிக்கு அனுப்பறது..?

தராசு said...

நைனா,

டேங்சு நைனா,

தராசு said...

//@ Cable Sankar said...
அப்ப சரி.. நானெல்லாம் என்னத்தை கதை எழுதி.. போட்டிக்கு அனுப்பறது..?//

அண்ணே, நீங்கெல்லம் களம் பல கண்டு, படை பல வென்றவங்க, நானெல்லாம் இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கேன்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

எத எழுதுனாலும் கொஞ்சம் சின்னதா எழுதக்கூடாதா? ஓ.. இப்பதான் கவுனிக்கிறேன். சிறுகதையா? அப்ப சரி.! அப்புறமா மொத்தமா 'சங்கமத்துல' படிச்சிக்கிடுதேன்.

தராசு said...

//@ஆதிமூலகிருஷ்ணன் said...
எத எழுதுனாலும் கொஞ்சம் சின்னதா எழுதக்கூடாதா//

நானும் எவ்வளவோ முயற்சி பண்றேன். ஆனா அது இவ்வளவு சின்னதாதான் வந்து நிக்குது.

சரி, சரி, கொஞ்சம் நேரம் செலவ்ய் பண்ணி படிச்சுட்டு சொல்லுங்க.

Anonymous said...

Tharasu

Intha pottikkaga pala perin kathaigal padikka mudinthathu. aanalum ithu pol onrum illai.Oru velai kathai migavum manthukku nerukkamaga iruppathaala?

Nanri
Radha Canada

Anonymous said...

emotionally gud touch

Rithu`s Dad said...

அருமையாக எழுதியுள்ளீர்கள்.. நல்ல கதைக்களம்.. அனைவரது ஆசையும் தனக்கென ஒரு கல்வி தகுதி தானே.. படிக்க வைச்சா படிக்க மாட்டான என்ன? வாழ்த்துக்கள்.

அழகன் said...

அருமை. கண் கலங்க வைத்துவிட்டீர்கள்.