Tuesday, May 24, 2011

பரமண்டலங்களிலிருக்கும் எங்கள் பிதாவே - 24 மே 2011

சமச்சீர் கல்வித்திட்டம் எதற்காக கொண்டு வரப் பட்டதோ தெரியவில்லை பிதாவே. மக்களின் ஆங்கில மோகத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு ஆங்கில வழியில் கல்வி கற்றுத் தருகிறோம் என கவர்ச்சி விளம்பரம் செய்து மக்களின் பணத்தை கொள்ளை அடிப்பதோடு, எங்கேயோ குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்து, நரைத்த தலையும் தடித்த கண்ணாடியும் அணிந்த அறிவு ஜீவிகள் என அறியப்பட்ட இரண்டு மூன்று பேர் தெரிவு செய்யும் பாடத்திட்டங்கள்தான் இந்தியாவின் தலை சிறந்த கல்விப் பாடம் என சொல்லி, விற்பனை செய்யும் மெட்ரிகுலேசன் பள்ளிகளிலிருந்து எங்கள் குழந்தைகளை காத்தருள்வீர் பிதாவே.
இதை ஒழித்து விட்டு பயனுள்ள பாடங்களை மக்கள் பயில வேண்டும் என்ற சீரிய நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வித்திட்டத்திலும் தங்களின் சுய புராணங்களை புகுத்தி, எந்த நோக்கத்திற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கத்தையே கேலி செய்யும் அரசியல் வாதிகள் என்னும் கேவலமான அற்பப் பதர்களின் கொடிய பிடியிலிருந்து கல்வியை மீட்டுத் தாருங்கள் பிதாவே.
ஆனால், அதற்கும் ஒரு படி மேலே போய், பழைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்ற ஒரே காரணத்துக்காக அந்த திட்டத்தில் ஆயிரம் நன்மைகள் இருந்தாலும் அதை அப்படியே அழித்தொழிப்போம், எங்களின் அழித்தொழிப்பு நடவடிக்கைகள் முடியும் வரை மாணவர்கள் காத்திருக்கவும் என ஆணையிட்டு, பல கோடி மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடும் அயோக்கிய அரசியல் வியாதிகளிடமிருந்தும் எங்களை காத்தருள்வீர் பிதாவே.

சென்னையின் சிறப்பு என்று சொல்வது போல் ஒரு அரிய பெரிய நூலகம் “அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்” என்ற பெயரில் போன ஆட்சியில் ஒரு அருமையான நூலகம் அமைத்தார்கள் பிதாவே. உலகில் காணப்படும் பல அரிய நூல்களை சேகரித்து, வாசக தளங்களை விரிவு படுத்தி, பட்டதாரி மாணவர்களுக்கென ஒரு பெரிய பொக்கிஷத்தை வைத்துப் போயிருக்கிறார்கள். குறிப்பாக மருத்துவம், மற்றும் பொறியியல் மாணவர்களின் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத பல சர்வதேச புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன. அங்கு வந்து போகும் ஒவ்வொரு மாணவனும், இந்த அரிய பெரிய இமாலய முயற்சிக்காகவும், அதை சாத்தியமாக்கி இளம் மாணவ சமுதாயத்தினரின் பயனுக்காக இலவசமாக அர்ப்பணித்ததையும் பாராட்டி பாராட்டி புகழாரம் சூட்டி விட்டு போகிறார்கள்.

ஆனால் வழக்கம் போல காழ்ப்புணர்ச்சி கொண்ட ஒரு புதிய அரசும் அதன் மக்கள் விரோத கொள்கைகளும், உழவர் சந்தைகளை மூடி, சட்டசபை கட்டிடத்தை வெறுத்து ஒதுக்கி என வெறுப்பை உமிழும் அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் இந்த அறிவுக்களஞ்சியமான நூலகத்தை அண்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள் பிதாவே.

இந்த நாசா விஞ்ஞானிகள் எனும் மனநிலை பிறழ்ந்த பைத்தியக்கார கும்பல்களின் பிதற்றல்களுக்கும் உளறல்களுக்கும் ஒரு முடிவு கட்டுங்கள் பிதாவே.
சில இந்திய புராணங்களிலும் இதிகாசங்களிலும் அவதார புருஷனாக சித்தரிக்கப்பட்டும், இந்தியாவில் அதிகமாகவும் இன்னும் உலகின் சில பாகங்களிலும் தெய்வமாக வணங்கப்பட்டும் வருகிற இராமன் கட்டிய பாலம் இதுதான் என திடீரென ஒரு புகைப்படத்தை நாசா விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளார்கள் என மின்னஞ்சல்கள் பறந்து பரபரப்பை ஏற்படுத்தின. அதற்கு அடுத்ததாக, சொர்க்கம் என்றால் இதுதான் என்பதை கூட இந்த விஞ்ஞானிகள் செயற்கை கோள்களின் மூலமும் வான ஆராய்ச்சி மூலமும் கண்டு பிடித்து விட்டதாக கதை விட்டார்கள். நல்லவேளை அவர்கள் அப்படி கண்டு பிடித்த சொர்க்கத்துக்கு நேரடி விமான சேவையை துவக்கவில்லை. இப்பொழுது புதிதாக ஒரு சூரியப் புயல் உலகத்தை 2012 ல் தாக்கப் போவதாகவும், இதன் தாக்கம் 100 மில்லியன் ஹைட்ரஜன் குண்டுகளை விட அதிகமாக இருக்குமாம். அதனால் 2012 ல் உலகத்தின் பெரும் பகுதியோ அல்லது உலகம் முழுவதுமோ அழிந்து விடும் என புதிதாக கதை கட்டுகிறார்கள்.

உலகத்தின் அழிவிலிருந்தல்ல, இந்த பைத்தியக் காரர்களின் உளறல்களிலிருந்து எங்களை பாதுகாத்தருளும் பிதாவே.

6 comments:

ஹுஸைனம்மா said...

//நாசா விஞ்ஞானிகள்//

யாரு, இந்த மே 21தான் Dooms dayனு கூடச் சொன்னாய்ங்களே, அவிங்களப் போலத்தானே? நல்லாருக்கட்டும், நல்லாருக்கட்டும்.

Anonymous said...

கர்த்தர் இராமர் எல்லாம் ஒன்று தான் அவர்கள் பெயரும் வழிபடும் முறையும் தான் வேறு என்பது புரியாமல் எதையாவது எழுதும் பூதங்களிடமிருந்தும் எங்களை காத்தருள்வீர்களாக.

பிற மத மக்களை இழிவு படுத்தி எழுதி அற்ப சுகம் கானும் கருப்பு ஆரோக்கியத்திடமிருந்தும் எங்களை காப்பாற்றித் தருவீர்களாக எங்கள் பிதாவே.

30 கடவுள் இருக்க முடியாது அவர் ஒருவாரகவே இருக்க முடியும். இந்தியாவில் இருப்பவை தத்துவ விளங்கங்கள்.

டென்ஷன் ஆவாதீங்க சும்மா தமாசு

சின்ன கண்ணன் said...

மிகவும் அருமை
இதை தாங்கள் வேறு வடிவில் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்

தராசு said...

ஹுஸைனம்மா,

அவிங்களேதான், டேங்சு.

தராசு said...

அனானி,

எதை சொல்வதானாலும் முழு முகவரியோடு வாருங்கள். உரையாடுவோம்.

இத்துடன் அனானிகளுக்கான வாசல் இங்கு அடைக்கப் படுகிறது.

தராசு said...

சின்ன கண்ணன்,

நன்றி, எந்த வடிவம் என்று சொன்னால் தன்யனாவேன்.