Wednesday, April 13, 2011

தேர்தல் ஆணையத்தின் தகிடுதத்தம்


இன்று வாக்களிக்க சென்றிருந்தேன். வாக்குச் சாவடிக்கு செல்வதற்கே பல தடைகளை தாண்டி செல்ல வேண்டியிருந்தது. வழியிலேயே தடுத்த கட்சிக்காரர்கள் மாம்பழத்தை கையில் வைத்திருந்தனர். சார், மாம்பழத்துக்கு ஓட்டுப் போட்டுட்டு வந்து மாம்பழம் வாங்கிக்கோங்க என்றனர். அதற்கு சற்றுப் பக்கத்தில், சுத்தியல் அரிவாள் சின்னத்தினர், நல்ல வேளை இவர்கள் அரிவாள் எதுவும் காண்பிக்கவில்லை, அல்லது ஓட்டுப் போட்டுவிட்டு வந்து அரிவாள் வாங்கிக் கொள் என சொல்லவில்லை.


ஓட்டுச்சாவடியில் நுழைய முடியவில்லை. எங்கு பார்த்தாலும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி மக்கள் செய்த அட்டூழியம் தாங்க முடியவில்லை. பணியிலிருந்த போலீஸாரின் நிலை பரிதாபமாயிருந்தது. கொளுத்தும் வெய்யிலில் அவர்கள் ஒரு வாய் தண்ணீருக்காக தவித்துக் கொண்டிருந்தார்கள்.


வாக்குச்சாவடி விவரங்கள், மற்றும் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னங்கள் ஆகியவை மிக மிக தெளிவாக மக்கள் பார்வையில் படும்படி வைக்கப் பட்டிருந்தன. மின்னணு வாக்கு இயந்திரத்தை எப்படி உபயோகிப்பது என்பதையும் தெளிவாகவே எழுதி அங்கங்கே ஒட்டி இருந்தனர். மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று.
பணியிலிருந்த தேர்தல் பணியாளர்கள் அனைவரும் மிகவும் கனிவாக பேசினார்கள். பாவம் முந்தைய நாள் இரவே அவர்களை அந்த பள்ளியில் தங்கச் சொல்லி விட்டார்களோ என்னவோ, இரவில் அவர்கள் பட்ட அவஸ்தைகளான கொசுக்கடியும், குளிக்க/குடிக்க தண்ணீர் இல்லாமை போன்ற குறைகளை ஒரு மேற்பார்வை அதிகாரியிடம் ஆவேசத்தோடு உரத்த குரலில் ஒருவர் கொட்டிக் கொண்டிருந்தார். ஆனால் வாக்களிக்க வந்த மக்களிடம் மிகவும் கனிவோடு நடந்து கொண்டனர்.


வாக்குச் சாவடியில் நுழைந்ததும் நம் அடையாள அட்டையை ஒருவர் சரி பார்க்கிறார். பின் அந்த அடையாள அட்டையுடன் தொடர்புடைய எதோ ஒரு கூறிப்பிட்ட எண்ணை உரத்துச் சொல்கிறார். இவர் இப்படி சொன்னவுடன் இந்த அலுவலர்களுக்கு பின்னே அமர்ந்திருக்கும் கட்சிப் பிரதிநிதிகள் அந்த எண்ணை குறித்து வைத்துக் கொள்கின்றனர், இன்னொரு அலுவலர் ஒரு குறியீட்டு எண்ணுடன் நமது பெயரை எழுதிக் கொண்டு, நம்மிடம் கையெழுத்து வாங்குகின்றனர். பிறகு கை விரலில் மை வைக்கின்றனர். மை வைத்து விட்டு அதே மை வைக்கும் நபர் ஒரு துண்டு சீட்டை நம் கையில் கொடுக்கிறார். அதில் என்ன எழுதி இருக்கிறது என பார்க்கும் முன்பே அதை நம் கையில் இருந்து ஒருவர் பிடுங்கிக் கொண்டு தன் முன்னே வைக்கப் பட்டிருக்கும் ஒரு இயந்திரத்தில் ஒரு பொத்தானை அழுத்துகிறார். அழுத்தி விட்டு அந்த மறைவிடத்தில் இருக்கும் இயந்திரத்தில் உங்கள் வாக்கை பதிவு செய்யுங்கள் என சொல்கிறார். இங்கு தான் வில்லங்கம் ஆரம்பமாகியது.


நான் எனக்கு 49 O வில் எனது வாக்கை பதிவு செய்ய வேண்டுமென்றும், இங்கு காண்பிக்கப்பட்டிருக்கும் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்றும் சொன்னேன். அங்கு அமர்ந்திருந்த அத்தனை பேருடைய முகமும் “பொன்னியின் செல்வனி”ல் குறிப்பிடப்பட்டிருக்கும் ”இடும்பன் காரி” யின் முகத்தைப் போல ஒரு விகார முகமாயிற்று. “டேய், வந்தமா, கையில மை வெச்சமா, எதாவது ஒரு பொத்தனை அழுத்தனமா, ஓட்டுப் போட்டமான்னு, போயிட்டே இருக்காம, அது என்னடா புதுசா 49 O, அது இதுன்னு எத்தனை பேர்டா இப்பிடி கிளம்பி இருக்கீங்க” என்பது போல் அந்த அலுவலர்கள் அனைவரும் பார்த்தனர். அதற்கும் மேலாக அந்த கட்சிப் பிரதிநிதிகள் அனைவரும் தங்களிடம் இருந்த பேப்பரில் என் புகைப்படம் முகவரி ஆகியவற்றை தனியாக வட்டமிட்டு வைத்துக் கொண்டனர். ”ஆஹா, 49 O வா, வாடா மகனே வா, நாளைக்கு ஜெயிக்கப் போறது எங்க அண்ணந்தான், அப்பறம் வருவயில்ல, சார் அது வேணும், சார் இது வேணும்னு வருவயில்ல, அப்ப வெச்சுக்கறம்டா, இப்ப 49 O போட்டுட்டு போ” என ஒரு ஏளனத்துடன் பார்த்தனர்.


அப்புறம் அந்த தேர்தல் அதிகாரி என் பெயரும் அதற்கு நேராக எழுதி இருந்த எதோ ஒரு குறியீட்டு எண்ணுக்கு பக்கத்திலேயே “ Refused to Vote” என ஆங்கிலத்தில் எழுதி இதில் கையெழுத்திடுங்கள் என்றார். ஆனால், நான் விதிகளின் படி நீங்கள் எனக்கு படிவம் 17 A தர வேண்டுமே, அதை தாருங்கள் என கேட்டாலும், “சார் இதுல கையெழுத்து போடறதுன்னா போடுங்க, இல்லைன்னா இப்பிடியே போயிட்டிருங்க” என்பது போல் பேசினர். வேறு வழியில்லாமல், அவர்களுடன் மேலும் வாதம் செய்ய விரும்பாமல் அதில் கையெழுத்திட்டு விட்டு வந்தேன்.


தேர்தல் ஆணையத்திற்கு என் கேள்விகள்:


1. வாக்குப் பதிவு எந்திரத்தில் வாக்கு எப்படி பதிவு செய்வது என்பதை சுவரொட்டியின் மூலமாக விளக்கும் நீங்கள், ஒருவேளை வாக்குப் பதிவு செய்ய விரும்பாத பட்சத்தில் ஒரு குடிமகன் என்ன செய்ய வேண்டும் என சொல்லாதது ஏன்?


2. இப்படி நீங்கள் சொல்லாமலிருப்பது மக்களுக்கு இந்த 49 O விதி பற்றிய விழிப்புணர்வு சிறிதும் ஏற்பட்டு விடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காகத்தானே? அப்படி இல்லாவிடில் தைரியமாக 49 O வைப் பற்றியும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தாதது ஏன்?3. தேர்தல் அலுவலர்கள் 49 O விற்கென விண்ணப்பிக்கும் ஒரு நபரிடம் அதற்கான படிவங்களை தர மறுப்பதுடன், அத்தகைய நபர்களை உடனே வாக்குச் சாவடியிலிருந்து வெளியேற்றுவதில் ஏன் அவசரம் காட்டுகிறார்கள்? அத்தோடு மட்டுமல்லாது எந்த விதத்திலும் ஆவணப்படுத்த முடியாத காகிதங்களில் ஏமாற்றி ஏன் கையெழுத்து வாங்குகிறார்கள்?


4. இப்படி செய்வதினால், எனது கூற்றுப்படி கொஞ்சமும் தகுதியில்லாத கறைபடிந்த வேட்பாளர்களுக்கு துணை போவதுடன், இந்திய இறையாண்மைக்கு எதிராக தனது அதிகாரத்தை பயன்படுத்தி குற்றம் செய்கிறீர்கள் என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா? அதாவது ஒரு குடிமகனுக்கு வாக்களிக்க விருப்பமின்மை என்னும் உரிமையை பல அர்த்தமற்ற காகிதங்களில் கையெழுத்து வாங்கி விட்டு பொய் சொல்வதன் மூலம் உங்களது அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு சராசரி குடிமகனது உரிமையை நிராகரிக்கிறீர்கள் என ஒத்துக் கொள்கிறீர்களா?


5. வாக்குச்சாவடியில் உங்களது நாற்காலிகளுக்குப் பின்னே கட்சிப் பிரதிநிதிகள் என்ற பெயரில் அமர வைக்கப் பட்டிருக்கும் நபர்களை அனுமதிப்பதும், யார் யார் வாக்களிக்கிறார்கள், அவர்கள் எந்த விதமான வாக்களிக்கிறார்கள் என அவர்களுக்கு தெரிய வைப்பதும், ஒரு தனி மனித உரிமைக்கு விரோதமான செயல் என்பதை தெரிந்தே தான் செய்கிறீர்களா?


இத்தனை கேள்விகளோடு நானும் வாக்குச்சாவடியிலிருந்து வெளியேறினேன்.


கடைசியில் கையில் கறை பட்டதுதான் மிச்சம். விளம்பரங்களில் வரும் கறை நல்லதோ கெட்டதோ, இந்த கறை ஏன் என் விரலில் பட்டதோ என இன்னும் நொந்து கொண்டிருக்கிறேன்.

13 comments:

♠ ராஜு ♠ said...

இது பரவாயில்லைண்ணே!
தேர்தல் அலுவலர்கள் சில‌ பேருக்கு 49ஓ என்றால் என்னவென்றே தெரியவில்லையாம்.

ஹுஸைனம்மா said...

நீங்க கையெழுத்து போட்ட பக்கத்தை, உங்க மொபைலில் ஒரு ஃபோட்டோ எடுத்திருக்கலாமே? ஆவண சாட்சிக்காக.

ஹுஸைனம்மா said...

//அத்தனை பேருடைய முகமும் “பொன்னியின் செல்வனி”ல் குறிப்பிடப்பட்டிருக்கும் ”இடும்பன் காரி” யின் முகத்தைப் போல ஒரு விகார முகமாயிற்று//

இதுக்கு ஏன் இலக்கியத்துக்கெல்லாம் போறீங்க? “ஜிஞ்சர் தின்ன மங்கி”ன்னு சிம்பிளாச் சொல்லிருக்கலாம். ;-)))))

தராசு said...

வாங்க ராஜூ,

ஆமாம், பல இடங்களில் என் நண்பர்கள் இந்த ஓட்டுப் போட போனால், அலுவலர்கள் 49 O வா??? அப்டீன்னா???? என்பது போன்ற கேள்வி கேட்டிருக்கிறார்கள்.

வந்ததுக்கு டேங்சு.

தராசு said...

ஹுஸைனம்மா,

அங்க இந்த மாதிரியெல்லாம் நடக்கும்னு யோசிச்சுதான் நான் என்னோட டிஜிட்டல் கேமராவையே கொண்டு போனேன். அதை வெச்சுத்தான் மற்ற படங்களையெல்லாம் எடுத்தேன். ஆனால், வாக்குச்சாவடியை நெருங்க நெருங்க, அங்கிருக்கும் காவலர்கள் மொபைல் போன்ல பேசாதீங்க, அது என்ன சார் கேமராவா, பேட்டரிய தனியா கழட்டிட்டு பக்கெட்ல வெச்சுக்கோங்கன்னு ஒரே கெடுபிடி பண்ணாங்க, அதான் உள்ள போட்டோ எடுக்க முடியல.

வந்ததுக்கு டேங்சு

தராசு said...

எதோ நாங்களும் நாலு எழுத்து படிச்சிருக்கோம்னு வெளிய சொல்றதுக்காக “பொன்னியின் செல்வன்”னு சொன்னோம்,

அதக் கூட இந்த பதிவுலகம் சொல்ல விட மாட்டேங்குதுப்பா, இன்னா அநியாயம்,, ச்சே

சங்கர் said...

தலைவரே நானும் 49 ஓ தான் போட்டேன்

49 ஓ போடுவது எப்படி? (how to cast 49 O)

1.வாக்குச்சாவடிக்கு சென்றவுடன், முதல் அதிகாரி உங்கள் பெயரை பட்டியலில் சரி பார்ப்பார்
2.பெயர் இருக்கும் பட்சத்தில் , இரண்டாவது அதிகாரி வைத்திருக்கும் நோட்டு புத்தகத்தில் கையொப்பம்/கைநாட்டு இடவேண்டும். இந்த நோட்டு புத்தகத்தின் பெயர் Form 17 A
3.இரண்டாவது அதிகாரியிடம் போட்டியிடும் வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்று கூறி, கையொப்பம் இட்டதற்கு அடுத்த Column ல் 49 O என்று எழுதி அதற்கு அடுத்த Column ல் மீண்டும் கையெழுத்திட வேண்டும்.
4.மூன்றாவது அதிகாரி நம் விரலில் மை வைப்பார்.

கிழக்கு மொட்டைமாடி கூட்டத்தில் ஞாநி

தராசு said...

வாங்க சங்கர்,

நான் கிழக்கு மொட்டை மாடி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

வந்ததுக்கு டேங்சு

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

தல இதுல கள்ள ஓட்டு போட்டுட்டா மறுபடியும் ஓட்டு போடலாம் அப்பட்டிங்கறத மட்டும் இங்கிலீஸுல ப்ரிண்ட் அடிச்சி வெச்சிருந்தாங்களே கவனிச்சீங்களா?

ஹும்ம்..

oicravi said...

இந்த காமெடிக்கு தீர்வு ஓட்டு இயந்திரத்தில் 49-O பட்டன் அமைப்பதுதான் ஆனால் நம்ம அரசியல்வாதிகள் விடுவார்களா? எலெக்சன் கமிசன் இருப்பதே நமக்கு சேஷன் மூலமாகத்தான் தெரிய வந்தது. அரசியல்வாதிகள் அவரையும் டம்மி ஆக்கினார்கள். ஏதோ இந்த அளவு செயல்படுகிறார்களே என்று சந்தோஷபடவேண்டியதுதான்.

Aanand said...

49 ஒ மிக சிறந்த ஆயுதம். ஒ பக்கங்களில் ஞானி மிகவும் வரவேற்று எழுதியுள்ளார். ஊழல் அற்ற ஆட்சி அமைய நல்ல வேட்பாளர்கள் வேண்டும்.வேட்பாளர்கள் சரியான ஆட்சியை கொடுக்க மாட்டார்கள் என்றுதான் 49 ஒ போடுகிறோம். இதை தேர்தல் கமிசன் வரவேற்க வேண்டும். ஆனால் ஒட்டளிக்க மறுக்கிறேன் என்று எழுதி கையெழுத்து வாங்குவது தவறு. 49 ஒ போட்ட அனைவரையும் வணங்குகிறேன்.

Anonymous said...

எங்கள் வாக்கு சாவடியில் 50A படிவம் மட்டும் இருக்கு வேனுமா என்றார்கள். போனதுக்கு அதாவது கிடைத்ததே என்று சரி என்றேன். எந்தந்த வகையில் தேர்தல் முறையை மேம்படுத்தாலாம் என்பது மாதிரியான கேள்விகள் இருந்தது. கஸ்டமர் சாட்டிஸ்பேக்சன் சர்வே போல, எழுதி முடிக்கவே 10 நிமிடம் ஆனது. பில் செய்து கொடுட்த்து விட்டு வந்தேன்.

கருனாசெவ்வகன்.

Aravinth Srinivasan said...

IT IS GOOD THAT YOU EXPRESSED YOUR VIEWS IN A PUBLIC FORUM. AT LEAST THIS POINT OF VIEW IS REGISTERED IN SOME SORT TO FORUM....