Monday, January 3, 2011

கிடா வெட்டி கிறிஸ்மஸு


அது என்னமோ தெரியல, எல்லாருக்கும் கிறிஸ்மஸுன்னாலே கேக் ஞாபகம்தான் வருது. எப்படி இஸ்லாமியர்களுக்கு மட்டுமே பிரியாணி செய்யத் தெரியும்னு ஒரு மூட நம்பிக்கை இருக்குதோ, அது மாதிரி கிறிஸ்தவங்க எல்லாருமே கேக் செஞ்சுதான் கிறிஸ்மஸ் கொண்டாடுவாங்கன்னு ஒரு அதி மூட நம்பிக்கை மக்கள் மனசுல இருக்குது. (தெரிந்தோ, தெரியாமலோ, புரிந்தோ புரியாமலோ, அறிந்தோ அறியாமலோ, நான் கொஞ்சம் கூட விரும்பாத பட்சத்திலும், எந்தையும் தாயும் எனக்கீந்த பெயர் காரணத்தினால் கிறிஸ்தவன் என்ற முத்திரை என்மீது குத்தப் பட்டிருப்பது ஒரு தவிர்க்க முடியாத வேதனையான விஷயமே). கிறிஸ்மஸ் வந்தாலும் வந்துச்சு, கேக் எங்க, கேக் எங்கன்னு எல்லாரும் பிச்சு குதறி எடுத்துட்டாங்க. ஆனா, நாங்க கேக் வெட்டற கிறிஸ்தவங்க இல்லை, கிடா வெட்டற கிறிஸ்தவங்கன்னு எத்தனை பேருக்கு சொல்லறது.....

இதுல இன்னொரு கொடுமை என்னான்னா, நம்ம தமிழ் கூறும் நல்லுலகத்தில், பண்டிகைன்னு ஒன்னு வந்துட்டா, பக்கத்து வீட்டுக்கு எல்லாம் பலகாரம் குடுக்கணுமாம். தீபாவளிக்கு, பொங்கலுக்கு எல்லாம் பக்கத்து வீடுகளில் இருந்து பலகாரம் வந்துருச்சு, நம்ம கிறிஸ்மஸுக்கு குடுக்கலைன்னா அவுங்க தப்பா நினைச்சுக்குவாங்க என்ற ஒரு நன்றி கலந்த கடமை உணர்ச்சி வேற நம்ம சகதர்மிணிக்கு பொங்கி வழிய, பலகாரம் போடற வேலைல ஏறக் குறைய எல்லா வேலையும் நம்ம தலைல விழுந்து தொலைத்தது.

இந்த வருடம் கிறிஸ்மஸுக்கு முறுக்கு சுடலாம் என்ற விபரீத ஆசை எங்க மேலிடத்துக்கு முறுக்கிக் கொண்டு வர, வீட்டுல இருக்கற அத்தனை பேரோட வாழ்க்கையும் எத்தனையோ முறுக்குகளை சந்திக்க வேண்டி இருந்தது. முதல்ல அதற்கான பால பாடங்கள் வீட்டில் இருக்கும் அத்தனை பேருக்கும் புகட்டப் பட்டு, அதற்கான ஆயத்தங்கள் எதோ அடுத்த ஏவுகணை ஏவப்போகும் விஞ்ஞானியின் கட்டளைகள் போல புறப்பட்டு வந்தது. யாரங்கே, வீட்டுக்கு வெளியே விறகு அடுப்பு மூட்டுங்கள் என விறகு சுமக்க வைத்தார்கள். முறுக்கு பிழிய தனியே ஒரு ஆசனம், அதை வாணலியில் எடுத்து இடுவதற்கென ஒரு தனி ஆயுதம், அடுப்பில் எரியும் விறகு சரியான முறையில் எரிகிறதா என பார்த்து அதை சரியாய் எரிய வைக்க ஒரு குழந்தை தொழிலாளி, முறுக்கு பிழிவதற்கென ஒரு அடிமை என சகல ஆயத்தங்களுடன் இந்த முறுக்கு பிழியும் படலம் ஆரம்பமாகியது. ஒன்றுக்குள் ஒன்றை நுழைந்து இடையில் இருக்கும் மாவை, அடியில் இருக்கும் அச்சின் வடிவத்தில் வெளிக்கொணர அசுர பலத்தில் அந்த முறுக்கு சுட்டியை அழுத்த வேண்டியதாயிற்று. இப்படி அழுத்தியபின் வெளிவரும் நூலிழை போன்ற மாவுக்கு ஒரு வடிவம் கொடுப்பதில் தான் பிரச்சனையே ஆரம்பமாகியது. முறுக்கு என்ற வஸ்து வட்ட வடிவத்தில் தான் இருக்க வேண்டும் என்பது எந்த நாட்டின் விதியோ தெரியவில்லை. இந்த அடிமை அழுத்திய முறுக்குகளெல்லாம் எம். எஃப். ஹுசேனின் மாடர்ன் ஆர்ட் போன்ற வடிவங்களில் வெளிவர, வட்டமாக சுற்றத் தெரியாத நீயெல்லாம்... ம்ஹூம்.... என்பது போன்ற ஏளனப் பார்வைகளை சகித்துக் கொள்ள வேண்டிய அவலநிலைக்கு அந்த அடிமை தள்ளப்பட்டான். (கடைசியில் அந்த ஏவுகணை விஞ்ஞானியும் பல முறை முயன்றும் முறுக்கை ஒரு முறை கூட வட்டமாக சுற்றவில்லை என்பது வேறு விஷயம்).

இப்படியாய் ஒரு நான்கு மணிநேர ரணகள போராட்டங்களுக்குப் பிறகு, முறுக்கு சுற்றும் படலம் இனிதே (ஹூக்கும்... இதுல இனிதே வேற) நிறைவுக்கு வந்தது. அடுத்தது பலரது வேண்டுகோளுக்கிணங்க, ரசிகப் பெருமக்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெறும் வண்ணமாக கேக் செய்யும் கோக்கு மாக்கான ஐடியா எதாவது மேலிடத்தாருக்கு உதித்து விடுமோ என பயந்து கொண்டிருந்தவனுக்கு, கேக்கை வெளியிலயே வாங்கிடலாம்னு சொன்னவுடனே வயிற்றில் பீர் வார்த்த்து,,,,, சாரி, பால் வார்த்தது மாதிரி இருந்தது.

அடுத்ததாக, கிறிஸ்மஸ் அன்று, பிரியாணி செஞ்சாத்தான் அது கிறிஸ்மஸ் மாதிரி இருக்குமாம். அதனால நல்ல கிடாக் கறியாக வாங்கி வருமாறு அடியேன் பணிக்கப் பட்டேன். இப்ப கறிக்கடைக்குப் போய் இதுல பெண்ணாட்டுக் கறி வேண்டாம், ஆணாட்டுக் கறி தான் வேண்டும் சொன்னால் உடனே என்னை ஆணாதிக்க வாதி என்று சொல்லி விடுவார்களோ என்ற பயம் வேறு தனியாய் வதைத்தது. அங்கு தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல், மற்ற எதுவும் இல்லாமல் தொங்கும் சதைப் பிண்டங்களில், ஆணாடு எது, பெண்ணாடு எது என எப்படி கண்டு பிடிப்பது என்பது ஒரு பெரும் போராட்டமாக இருந்தது. வாசகர்கள் விவகாரமாக எதையும் நினைக்க வேண்டாம், அந்த அங்க அடையாளங்களெல்லாம் முற்றிலும் அழித்தொழிக்கப்பட்டுத்தான் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் காதர் பாயின் கறிக் கடையில் ஆடுகளின் உடல்களை தொங்க விட்டிருப்பார்கள். எது எப்படியோ போகட்டும், வதைக்கப் படுவது எப்பொழுதுமே ஆணாடு தானே என்ற தைரியத்தில் கிடைத்த கறியை வாங்கி வந்தேன். இருந்தாலும், இது கிடாக் கறிதானே என வீட்டில் வீசப்பட்ட கேள்விக்கு பலியாடு போல தலையாட்டி வைத்தேன். ஒரு சில தர பரிசோதனைகளுக்குப் பிறகு அது கிடாக் கறிதான் என மேலிடம் சான்றிதழ் அளித்ததும் மறுபடியும் வயிற்றில் பீர்...., சாரி சாரி.....பால்.

மறுபடியும் பிரியாணி செய்யவும் அதே போன்ற ஏவுகணை ஆயத்தங்கள், சராமாரியான கட்டளைகள், சமையலறையே ஒரு போர்க்களம் போல் கோலம் கொண்டு, வீட்டில் இருக்கும் ஒரே ஒரு குழந்தை தொழிலாளியில் ஆரம்பித்து, இருக்கிற ஒரே ஒரு அடிமை வரை எல்லோருடைய முதுகெலும்பையும் முறித்தெடுத்து, கடைசியில் அந்த பிரியாணி என்ற வஸ்து தயாரானதை நினைத்துப் பார்த்தால், பாவிகளை ரட்சிக்க பூவுலகில் மனிதனாய் அவதரித்த கிறிஸ்துவே, ஒவ்வொரு வருடமும் எங்களை இந்த முறுக்குப் பிழியும் மற்றும் பிரியாணி செய்யும் கொடுமையில் இருந்து ரட்சிக்க இன்னொரு முறை பிறக்க மாட்டாயா என வேண்ட வேண்டும் போல இருந்தது.

11 comments:

♠ ராஜு ♠ said...

சுவாரஸியம்!

எம்.எம்.அப்துல்லா said...

இனிய கிருத்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்

தராசு said...

ராஜூ,

டேங்சுப்பா.

தராசு said...

அப்துல்லா அண்ணே,

டேங்சு

Cable Sankar said...

ஏது மீண்டும் உங்களுக்காக பிறக்க கடவதாக..

ஹுஸைனம்மா said...

//பால பாடங்கள் வீட்டில் இருக்கும் அத்தனை பேருக்கும் புகட்டப் பட்டு//

பரவால்லையே, மேடம் நல்ல திறமைசாலிதான். எங்க வீட்டுல நானே பாடம் படிச்சு, நானே பிராக்டிகலும் செஞ்சு... ஹூம்..

Anonymous said...

@ ஹுஸைனம்மா,
எப்டிக்கா? எப்டி? நீங்க மாமாவையும் படத்தற பாட்டுக்கு நீங்க தராசு சார் மேடம் மாதிரி புத்திசாலி இல்லையேன்னு பெருமூச்சு விடற லைனை மட்டும் மாமா படிச்சா, நல்ல வேலை இவ இன்னும் கொஞ்சம் புத்திசாலியா பிறக்கலயேன்னு அல்லாக்கிட்ட நன்றி சொல்லிட்டிருப்பார். பாவம் பிழைச்சுப் போகட்டும். நெஜமாவே பாவம் இந்த ரங்குசுங்க. அச்சோ. =))

kadar said...

ATHELLAM SARI MAAPPUU... muruku saapidaramathiri irunthuchaa??? biriyani epdi irunthichi??? atha sollavee illayee?? nalla irunthirukum... neengathan aanaathikavaathi aachee athan sollala....lolz.

Anonymous said...

புக் பேலஸ்-ல பாத்தேம்ல!

என்ன அண்ணாச்சி தொப்பை வரவுட்டுட்டீங்க ? தினம் தினம் ஒரு ரெண்டு கிலோமீட்டர் ஒடிக்கிட்டா என்னாங்க அண்ணாச்சி.

உருத்திரா said...

நகைச்சுவை கலந்த,உண்மை.

Anonymous said...

அண்ணாச்சி,
எங்க போய்கிட்டிங்க, எதனாச்சும் எழுதி இங்கிட்டு படிக்கப் போட்டுக்கிடக்கூட்டாதுங்களா ?