Wednesday, December 22, 2010

காக்கிச் சட்டையில் கண்ணியம்


சென்ற ஞாயிற்றுக் கிழமை, காலை அவசர அவசரமாக சர்ச்சுக்கு கிளம்பும் நேரம், வாசலில் இருக்கும் கிரில் கேட்டில் ஒரு காக்கிச் சட்டை, “ சார், கதவைத் திறங்க” என்ற கம்பீரக் குரலில் ஒரு அதட்டல் வேறு. அய்யய்யோ, இந்த ஏழை அடியேன் என்ன பாவம் செய்தேன், சத்தியமாக ஒசாமா பின் லேடனுக்கும் எனக்கும் எந்த சங்காத்தமும் கிடையாது. நான் என்றுமே வருமான வரி ஏய்ப்பு செய்ததில்லை. ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பினாமி பெயரிலென்ன, சொந்த பெயரிலேயே சொத்து வாங்கும் யோக்கிதையும் கிடையாது, மீறிப் போனால் நேற்று கத்திப்பாரா ஜங்ஷனில் கையை காண்பித்த போலீஸ்காரரை, சரியாகப் பார்க்காமல், கடைசி நிமிட்த்தில் சடன் பிரேக் அடித்ததற்கெல்லாம் வீடு புகுந்து கைது செய்வார்களா என குழம்பியபடியே சென்று கதவைத் திறந்தேன்.

ஒல்லியும் அல்ல, குண்டும் அல்ல அப்படி ஒரு தேகம், ஏறக் குறைய ஆறடி உயரம், கருப்பும் சிவப்பும் கலந்து செய்த கலவையாக ஒரு நிறம், கச்சிதமாய் கத்தரிக்கப்பட்டு டை அடிக்கப்பட்ட ஒரு மீசையுடன் காக்கிச் சட்டையில் விரைப்பாக நின்ற அவரைப் பார்த்து என்ன வேணும்னு கேக்கறதா, இல்லை உள்ள வாங்கன்னு சொல்றதான்னு திரு திருன்னு முழித்துக் கொண்டிருக்கும் போதே அவர் ஆரம்பித்தார் “ இந்த போட்டோவுல இருக்கறவர் இந்த வீட்ல தான் இருக்காரா?” , அப்பிடி அந்த போட்டோவுல எந்த பிரகஸ்பதி இருக்கறான்னு பார்த்தா சாட்சாத் அது ஞானேதான். என் போட்டோ எப்பிடி இவர் கிட்ட வந்துதுன்னு ஆச்சரியத்துல இருக்கும் பொழுது, ”பாஸ்போர்ட் வேணும்னு அப்ளை பண்ணிங்களா?” ன்னு கேட்டு எனது எல்லா வியப்புகளுக்கும் முற்றுப் புள்ளி வைத்தார்.

கொஞ்சம் அசடு வழிந்தபடியே (நம்புங்க, கொஞ்சமாகத்தான்) ஹி, ஹி, ஆ...ஆ...ஆஆமாம்... சார், உள்ளே வாங்க என அழைத்து அவரை அமர வைத்ததும், சைகையிலேயே சகதர்மிணி தேவையை புரிந்து கொண்டு அவருக்கென தேநீர் தயாரிப்பில் இறங்கி விட்டார். மிகவும் பொறுமையுடன் ஒரு விண்ணப்ப படிவத்தை கொடுத்து கையோடு கொண்டு வந்திருந்த கருப்பு மை பேனாவும் கொடுத்து, “இதுல கேட்டிருக்கற எல்லா விவரத்தையும் நிரப்புங்க” என்றார். நடப்பது எல்லாம் உண்மைதானா என்ற குழப்பத்திலேயே எல்லாவற்றையும் நிரப்பி அவரிடம் நீட்டினேன். அவரிடம் இருந்த படிவங்களில் இருந்த என்னைப்பற்றிய அனைத்து விவரங்களையும் ஒரு முறை சரி பார்த்தபின், என் கையிலிருந்த பேனாவை வாங்கி அதில் ஏதோ எழுதியவர், “இரண்டு பேரோட ரெபரன்ஸ் குடுத்திருக்கீங்களே, அவுங்க ரெண்டு பேரும் யார்?” என கேட்டார். என் நலம் விரும்பிகள்தான் சார் என சொல்லியவுடன் என் பதிலுக்கு சற்றே புன்முறுவலித்து விட்டு, “அவுங்க இப்ப வீட்ல இருப்பாங்களான்னு கொஞ்சம் விசாரித்து சொல்ல முடியுமா?” என கேட்டார். சார் அவுங்க இப்ப சர்ச்சுக்கு போயிருப்பாங்களேன்னு சொன்னவுடன், “அப்ப எனக்கு ஒரு உதவி பண்ணுவீங்களா, இவுங்க ரெண்டு பேர் கிட்டயும் உங்களைப் பத்தி விசாரிக்க வேண்டியது என் கடமை. ஆனா, எனக்கு கொஞ்சம் உடம்புக்கு சரியில்லை, உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்ன இவுங்க ரெண்டு பேர் கிட்டயும் நான் சொல்ற மாதிரி ஒரு லெட்டர் எழுதி கையெழுத்து போட்டு வாங்கிட்டு வந்திருவீங்களா?” என்றார். சரி சொல்லுங்க என்றபடி அவர் சொன்ன விவரத்தை ஒரு பேப்பரில் எழுதிக் கொண்டேன்.

இதற்குள் தேநீர் வந்தவுடன் அதை நாசூக்காக மறுத்தவர் “ சரி சார், ரொம்ப தேங்க்ஸ்” என்று சொல்லி கை குலுக்கினார். எனக்கு பூமி கீழே வழுக்கி செல்வது போல் இருந்தது. பாஸ்போர்ட் விசாரணைக்கு வரும் காக்கிசட்டைகள் எல்லாம் பணம் பிடுங்குவதிலேயே குறியாக இருப்பார்கள் என்றுதான் நான் கேள்விப் பட்டிருக்கிறேன், ஆனால் இவர் இப்படி ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதி போல நடந்து கொண்டதின் தாக்கம் ஒரு புறம் மனதுக்கு சந்தோஷமளித்தாலும், அன்று முழுவதும் சர்ச்சில் ஒரு பிரமை பிடித்தவனைப் போலத்தான் இருந்தேன்.

இன்று காலை அவர் சொன்ன அனைத்து படிவங்களையும் நிரப்பி எடுத்துக் கொண்டு அவரிடம் தருவதற்கு காவல் நிலையம் சென்றேன். அங்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. தயவு செய்து இதை நம்புங்கள், இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் இருக்கிறேன். காலையில் அலுவலகம் செல்லும் வழியில் ஏழு மணிக்கெல்லாம் அடியேன் காவல் நிலையத்தில் ஆஜரானானேன். காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு, உள்ளே சென்றால், கமகமவென ஊது பத்தி வாசனை. தலைமை எழுத்தர் என்ற அறிவிப்பு பலகையின் கீழே, காவலருக்கே உரிய காதோர நரையுடன் ஒருவர் அமர்ந்திருந்தார். என்னைக் கண்டதும் “வாங்க சார், என்ன வேணும்?”. நான் வந்த விஷயத்தை சொல்ல, “ சரி, உக்காருங்க” என்று தன் முன்னிருந்த நாற்காலியை காண்பித்தார். தனக்கு முன்னிருந்த தொலை பேசியில் அவர் எண்களை அழுத்தியதும், சரி யாருடனோ பேசுகிறார் என நினைத்த எனக்கு அடுத்த அதிர்ச்சி, என்னைப் பற்றித்தான் அவர் வேறு யாருடனோ பேசினார். பேசி முடித்து விட்டு, “ சார், அவர் பத்து நிமிஷத்துல வந்துருவாராம், உங்களை வெயிட் பண்ண சொன்னாரு” என்று சொல்லியவுடன் தலை சுற்ற ஆரம்பித்தது எனக்கு.

அந்த பத்து நிமிட்த்தில் காவல் நிலையத்தை ஒரு சுற்று சுற்றிப் பார்த்தேன் (கண்களால்தான்). சுத்தமாக துடைத்து பளபளக்கும் அலமாரிகள், எல்லாவற்றிலும் நேர்த்தியாக அடுக்கப்பட்ட கோப்புகள், சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றம் என்ற இரு பிரிவினர்களுக்கான இரண்டு ஆய்வாளர்களின் தனியறைகள், அதிலும் நேர்த்தியாய் நெகிழிப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மேஜைகள், உன்னால் முடியும் தம்பி போன்ற தன்னம்பிக்கையூட்டும் வாசகங்கள், முற்றிலும் நவீன கணினிகள் என ஒரு பன்னாட்டு வங்கிக்குள் இருப்பது போன்ற ஒரு தோற்றம். இதற்குள் தொலை பேசி அழைக்கவே, அதற்கு செவி மடுத்த தலைமை எழுத்தர், கண்களாலேயே என்னை அழைத்தார். நான் இங்கிருப்பது யாருக்குத் தெரியும் என்ற கேள்வியுடன் தொலை பேசியில் காதைக் கொடுத்தவுடன் “ சார், வணக்கம், ரொம்ப நேரமா காத்திட்டிருக்கறீங்களா, சாரி சார். சார் உங்க கிட ஒரு சின்ன ரெக்வெஸ்ட், நான் மாலை போட்டிருக்கேன், என் நண்பர்களா சேர்ந்து இன்னைக்கு காலைல கோவில்ல ஒரு விஷேஷ பூஜை பண்றோம். உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா ஒரு அரை மணி நேரம் வெயிட் பண்ணுவீங்களா, பூஜையை முடிச்சுட்டு நேரா ஸ்டேஷனுக்கு வந்துடறேன்” என சொல்லவும், உலகம் தலை கீழாக சுற்றுவது போலிருந்தது.

அடுத்த அரைமணி நேரம் காத்திருந்தேன். பல காவலர்கள் அன்றைய நாளின் வேலையை ஆரம்பிக்க வந்தவர்கள், மிகவும் தோழமையான பார்வையுடன் என்னை நோக்கி ஒரு புன்னகை புரிந்தபடி “ சார், என்ன வேணும், யாருக்காக வெயிட் பண்றீங்க, அவர் கிட்ட பேசீட்டீங்களா, வர்றேன்னு சொன்னாரா” என அக்கறையாக விசாரிக்கவே, இயேசுவே இதெல்லாம் உண்மைதானான்னு கேட்டுட்டு அமர்ந்திருந்தேன். அங்கு ஒரு ஐந்து காவலர்கள் அமர்ந்திருந்த போதிலும், சினிமாவில் சித்தரிக்கப்படுவது போல யாரும் யாரிடமும் தேவையற்ற அரட்டை அடிக்கவோ, சிகரெட் குடிக்கவோ, அல்லது அசிங்கமான வார்த்தைகள் பேசவோ செய்யவில்லை. அவரவர் வேலைகளில் மூழ்கியிருந்தார்கள். இடையில் வெள்ளை கோட் அணிந்து கொண்டு வந்த ஒரு மருத்துவ மாணவர், தனது பைக் காணாமல் போய்விட்டது என பதட்டத்துடன் சொல்லியதும், பொறுமையாக அவரது பதட்டம் தெளிவிக்கப் பட்டு, அவரிடமிருந்து புகார் பெறப் பட்டது.

அரை மணி நேரம் கழித்து வந்த மாலை போட்ட காவலர், முதலில் தாமதமாக வந்த்தற்கு மன்னிப்பு கேட்டார். பின் என் காகிதங்களை வாங்கி பார்த்து விட்டு, “சரி சார், அனுப்பி விடுகிறேன்” என சொல்லி கையை குலுக்கவும், என்னை யாராவது கைத்தாங்கலாய் அழைத்து செல்ல மாட்டார்களா என்ற நிலைக்கு தள்ளப் பட்டேன்.

இதையெல்லாம் தூக்கி சாப்பிடுவதுபோல், வரும் வழியில் கத்திப் பாராவில் பாலத்துக்கு மேலே, கீழே, வலது, இடது, முன்னால் பின்னால் என எங்கு பாத்தாலும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றிருந்தது. என் காரருகே வந்த ஒரு வெள்ளை சட்டை காவலர் “ சார், எங்க போறீங்க? “ என்றார். பழைய மகாபலிபுரம் சாலை என்றவுடன், “நந்தனம் காலேஜ் ஸ்ட்ரைக் சார், மவுண்ட் ரோட் ஜாம் அயிருச்சு, சிட்டிக்கு உள்ள போக முடியாது, இன்னும் ரெண்டு நிமிஷத்துல சிட்டிக்கு வெளிய போற வழி கிளியர் ஆயிரும். நீங்க பாலத்து மேல ஏறி தாம்பரம் போய் போங்க, இது எப்ப கிளியர் ஆகும்னு சொல்ல முடியாது” என்றவுடன், காருக்குள்ளேயே எனக்கு ஒரு ஹை வோல்டேஜ் ஷாக் அடித்தது.

எதோ ஒரு சில கருப்பு ஆடுகள் செய்யும் அராஜகத்தினால், ஒட்டு மொத்த காவல் துறையையும் நாம் எவ்வளவு கேவலமாக நினைத்து, அவர்களைப் பற்றிய ஒரு அருவருப்பான பிம்பத்தையே மனதில் வைத்திருக்கிறோமே என்ற வெட்கமும் என்னை பிடுங்கித் தின்றது. நம்புங்கள் நண்பர்களே, காக்கிச் சட்டைக்குள் இன்னமும் கண்ணியம் வாழ்கிறது.

21 comments:

Katz said...

neenga periya pulliyaa?

Thamira said...

படிக்கிறதுக்கு சந்தோஷமா இருக்கு. ஆனா எனக்கென்னமோ நீங்க சொன்னது வைஸ்வெர்ஸாவாக இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு.

/எதோ ஒரு சில கருப்பு ஆடுகள் செய்யும் அராஜகத்தினால், ஒட்டு மொத்த காவல் துறையையும் நாம் எவ்வளவு கேவலமாக நினைத்து,//

ஏதோ ஒரு சிலர் இப்படி நல்லபடியாக இருப்பதால், நாம் ஒட்டுமொத்த காவல்துறையையும் கேவலமாக நினைக்காமல் விடுவது தவறாகிவிடுமோ என்று நான் நினைப்பதை நான் சொன்னால் அதை நீங்கள் ஏற்பீர்களா இல்லையா என்று தெரியவில்லையாயினும் அது மிகையாகாது என்று யாராவது வழிமொழிந்தாலாவது நான் சொல்வது..

சே.. போதும் முடிச்சுக்கிறேன்.!

விக்னேஷ்வரி said...

இப்போல்லாம் நார்மலா நல்லவங்களா இருந்தாலே வியப்பா இருக்கு. என்ன கொடுமை சார் இது...

Raju said...

நம்பவே முடியலையே!

DHANS said...

//இதெல்லாம் நடந்துகொண்டு இருக்கும்போதே உங்க வீட்டுக்காரம்மா உங்கள ஆபிசுக்கு நேரமாகுதுன்னு எழுபிநாத ஏன் எழுதல???//

சேக்காளி said...

அருமையான கதை.

ஹுஸைனம்மா said...

படிக்க சந்தோஷமாத்தான் இருக்கு; ஆனா, இதை நம்பி வேற ஒரு ‘நிஜமான’ போலீஸ்காரர்கிட்ட உதார் விட்டு உதை வாங்காம இருந்தாச் சரி!!

தராசு said...

வாங்க katz,

நான் ஒரு புள்ளியுமில்லை, வட்டமுமில்லை. நானும் இந்நாட்டு குடிமகன் தாங்க.

வந்ததுக்கு டேங்சு

தராசு said...

வாங்க ஆதி,

என்னாலயும் நம்ப முடியாமத் தாங்க இந்த பதிவே எழுதியிருக்கேன். எப்படியோ, காவல்ர்கள் இப்படியெ இருக்க எம்பெருமான் துணை செய்யட்டும்.

தராசு said...

வாங்க விக்கி,

சௌக்யமா???

ஆமாம், இயல்பு என்பது முரணாகிப் போனது.

வந்ததுக்கு டேங்சு.

தராசு said...

வாங்க ராஜு,

என்னாலயும் முடியல. ஆனா, இதெல்லாம் சத்தியமா நடந்தது.

தராசு said...

யோவ் தன்ஸ்,

ப்ளீஸ், நம்புங்கப்பா, இது உண்மைதான்யா.

தராசு said...

வாங்க sekkali,

ப்ளீஸ், நம்புங்க சார், இது உண்மைதான்.

தராசு said...

வாங்க ஹுஸைனம்மா,

நல்லா அறிவுரை சொன்னீங்கம்மா,

டேங்சு.

DHANS said...

நீங்க சொன்ன நம்பித்தான ஆகனும் பாவம் அந்த போலீஸ்காரர் மாலை போடிருந்ததால அப்படி இருந்து இருக்கலாம் எதுக்கும் பார்த்து இருங்க பிஸ்தா படத்துல வரும் கார்த்திக் மாதிரி ஆகிடப்போகுது

Cable சங்கர் said...

பல பேர் இருக்கத்தான் செய்கிறார்கள் அண்ணே.. ஆனா இதைப் போல பகிர்ந்து கொள்வதுஇல்லை..

VIKNESHWARAN ADAKKALAM said...

உங்க கனவை பற்றி எழுதி இருக்கிங்களா இல்லை சிறுகதையா?

தராசு said...

தன்ஸ்,

ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கீங்களோ, நம்பவே மாட்டீங்கறீங்க....

தராசு said...

வாங்க கேபிள் அண்ணே,

டேங்சு

தராசு said...

வாங்க விக்கி,

நம்புங்க, இதெல்லாம் எங்க ஊர்லதான் நடக்குது.

Rathnavel Natarajan said...

இப்போது நிலைமை நிறைய மாறி விட்டது. நல்ல மனிதர்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள்.
வாழ்த்துக்கள்.