Thursday, December 2, 2010

பாஸ்போர்ட், பல்செட், பாவம் ரமணன்

சமீபத்துல கடவுச் சீட்டு அலுவலகத்திற்கு போயிருந்தேன். அப்பப்பா, எத்தனை விதமான மனிதர்கள், எத்தனை விதமான பிரச்சனைகள். கடவுச்சீட்டு கிடைக்குமா, இன்னைக்கும் திருப்பி அனுப்பீருவாங்களா? தத்கால் முறைல வாங்கணும்னா எங்க நிக்கணும்? இந்த வரிசை எதுக்கு நிக்குது? நீங்களும் அமெரிக்கா போறதுக்குத்தான் பாஸ்போர்ட் வாங்கறீங்களா? இந்த ஃபார்முல எங்க கையெழுத்து போடணும்? இன்னைக்கு ஃபார்ம் வாங்கீட்டாங்கன்னா பாஸ்போர்ட் வர்றதுக்கு எவ்வளவு நாளாகும்? என்பது போன்ற எத்தனையோ கேள்விகளுடன் எத்தனையோ முகங்கள், ஜீன்ஸும், டி சர்ட்டும் அணிந்து ஒரு விதமான பார்வையுடன் “ அடச்சே, இந்த அறிவில்லாத கும்பலோடவெல்லாம் ஒரே வரிசைல நானும் நிக்க வேண்டியிருக்குதே” என்ற வெறுப்புடன் நிற்கும் அறிவு ஜீவி வேற்றுலக வாசிகள், ”நான் எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டேன், பிரசவத்தை நம்ம ஊர்ல பார்த்துக்கலாம்னு, ஆனா மாப்பிள்ளை ரொம்ப ஸ்ட்ரிக்டா சொல்லீட்டாராம், நமக்கு குழந்தை பிறந்தா அது அமெரிக்காவுல தான், அதனால உனக்கு ஊர்ல இருந்து யாரை கூப்புடணும்னு தோணுதோ, அவங்களை என்ன செலவானாலும் இங்க வரச் சொல்லுங்கறாராம், நமக்கு கடல் கடந்து போறதுல விருப்பமில்லைன்னாலும், புள்ளைக்கு இந்த சமயத்துல நாமதான கூட இருக்கணும்” போன்ற சந்தோஷ புலம்பல்களுடன் புதிதாய் பல்செட் கட்டிய மாமிகள், ”இந்த ஃபோட்டோ மேல கையெழுத்துப் போட்டா அது வழவழன்னு இருக்கறதால சரியா விழவே மாட்டேங்குது, அதனால ஒண்ணும் பிரச்சனை வராதில்லை” போன்ற பயம் நிறைந்த கேள்விக்கு, வரிசையில் நின்ற ஒருவர் வயிற்றைக் கலக்கும் பதிலளித்தார். “போட்டோ மேல கையெழுத்து போடறதுக்குன்னு தனியா ஒரு பேனா வருதேம்மா, நீங்க அந்த பேனால போடணும், பால் பாயிண்ட் பேனாவுல அது சரியா வராது” ன்னு சொன்னவுடனே அந்த அம்மா முகம் பேயறைந்தது போல் மாறியது. ”அந்த பேனா எங்க கிடைக்கும்”, ”வெளில கடைல கேளுங்க கிடைக்கும்” என்று சொல்லி அந்த அம்மாவை கலங்கடித்துக் கொண்டிருந்தார். எனக்கு முன்னால் நின்றிருந்த ஒரு இளவயதுப் பையன் தினமலர் படித்துக் கொண்டிருந்தான், திடீரென என்னிடம் திரும்பி, ”சார், நம்ம 47வது ஆளா நிக்கறோம், தத்கால்ல எத்தனை டோக்கன் குடுப்பாங்கன்னு தெரியாது, என் ஃபிரண்ட்ஸ் மூணு பேரு 4 வது, 5 வது இடத்துல எல்லாம் நிக்கறாங்க, உங்களுக்கு வேணும்னா ஒரு 100 ரூபா குடுங்க, அந்த இடத்துல நின்னுக்கோங்க, காலைல ஏழரை மணிக்கு வாட்ச்மேன் வர்றதுக்குள்ள இடம் மாறிக்கோங்க, இல்லைன்னா முடியாது” என்றான், நான் வேண்டாம்பா என்று சொல்லி முடிப்பதுக்குள் ஒருவர் அவசரமாக வந்து அவனுக்கு சிக்னல் கொடுக்கவே, விநாடிகளில் பணம் கைமாறி, அவர் எனக்கு முன்னால் வந்து விட்டார். இன்னும் சிறிது நேரத்தில் அவனின் மற்ற மூன்று நண்பர்களுக்கும் ஆட்கள் கிடைத்து விடவே விநாடிகளில் ஐநூறு ரூபாய் சம்பாதித்த சந்தோஷத்துடன் அந்த இளைஞர் கும்பல் பறந்தது.

அந்த வாலிபன் சொன்னது போலவே ஏழரை மணிக்கு ஒரு வாட்ச்மேன் வந்தார், கையில் விண்ணப்பம் இல்லாதவர்கள் எல்லாம் போய்விடுங்கள் என்றார், ஒரு பெரிய வாக்குவாதங்கள், கசமுசா சத்தங்களுக்கு பின் குறைந்தது பத்து பேராவது வரிசையிலிருந்து காணாமல் போனார்கள்.

தத்கால் கவுன்டர் திறந்ததும், ஒரு தடித்த கண்கண்ணாடி அணிந்தவர் வந்து அமர்ந்தார். மனிதர்களை கண்டால் நான் சிரிக்கவே மாட்டேன் என கற்பூரம் அணைத்து சத்தியம் பண்ணிக் கொண்டு வந்தாரோ என்னவோ, ஒரு கடுகடுத்த முகத்துடனேயே பேசினார். எனக்கு என் பாஸ்போர்ட்டில் உள்ள பக்கங்கள் தீர்ந்து போனதால் இன்னும் பக்கங்கள் வேண்டும் என விண்ணப்பித்தேன், எல்லா படிவங்களையும் அந்த தடித்த கண்கண்ணாடி வழியே பார்த்தவர், விண்ணப்பத்தில் இருக்கும் போட்டோவில் உள்ளவன்தான் எதிரே இருக்கிறானா என பார்ப்பது போல் பார்த்தார். ஆனால், அவர் என்ன பார்த்தார் என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. குறைந்தது ஒரு மூன்று முத்திரைகளை குத்தி விட்டு, எல்லா படிவங்களையும் என்னிடமே திருப்பி கொடுத்தார். இனி என்ன செய்ய வேண்டும் என நான் கேட்டதற்கு ஒரு வார்த்தை கூட சொல்லாமல் பக்கத்திலிருந்த ஒரு அறையை கை காட்டினார். (பேசுவதற்கு கூட காசு கேப்பாங்களோ!!!!). அந்த அறைக்குள் நுழைந்து மேலும் முத்திரைகள் குத்தப் பட்டு, மறுபடியும் இந்த கவுண்டர், அந்த கவுண்டர் என பல என்கவுண்டர்களுக்குப் பிறகு ஒரு வழியாக என் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

வெளியே வந்ததும் அப்பாடா என்றிருந்தது. இன்னும் பலர் பல வரிசைகளை தேடி கையில் கற்றை கற்றையான காகிதங்களுடன் அலைந்து கொண்டிருந்தார்கள்.

இந்த ஆபீசில் இடப்பற்றாக்குறை பல வருடங்களாக இருக்கிறது. எந்த வகையான வேலைக்கு எந்த வரிசையில் நிற்க வேண்டும், எந்த கவுண்டரில் என்ன செய்கிறார்கள், இந்த விதமான சந்தேகத்தை யாரிடம் விசாரிக்க வேண்டும் என எதுவும் தெளிவாக இல்லை. எங்கு திரும்பினாலும் வரிசைகள்தான். இதிலும் வெளியூர்காரர்களாயிருந்தால் அவர்கள் பாடு திண்டாட்டம்தான். வண்டி நிறுத்த போதிய இடமில்லை. மனிக்கணக்கில் ஒவ்வொரு வரிசையிலும் நிற்க வேண்டியுள்ளது, ஆத்திர அவசரத்துக்கு ஒரு கழிப்பறை இல்லை. இதிலும் கைக் குழந்தையுடன் வரும் தாய்மார்களின் பாடு பெரும்பாடாயிருக்கிறது.

நான் காலையில் ஆறரை மணிக்கெல்லாம் போய்விட்டதால், கார் நிறுத்துமிடத்தில் சொற்ப கார்களே இருந்தன. திரும்பி வரும்பொழுது எல்லாம் நிறைந்து போய்விட்டது. பார்க்கிங்கில் இருப்பவர் 15 ரூபாய்க்கு ரசீது கொடுத்து விட்டு “சார், காலைல இருந்து வண்டி இங்கதான் இருக்குது, எதோ கொஞ்சம் பாத்து போட்டு குடுங்க சார்” என்றார். இது எந்த கொள்கை அடிப்படையில் என தெரியவில்லை, எரிச்சலுடன் அவரிடம் சத்தம் போட்டு விட்டு வந்தேன்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
போன சனிக்கிழமை அரசாங்க பல் மருத்துவ மனைக்கு போயிருந்தோம். அரசாங்க மருத்துவமனைகள் என்றாலே இளக்காரமாக பார்த்து முகம் சுளிப்பவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். எல்லா மருத்துவ மனைகளும் அப்படியல்ல. அருமையான வரவேற்பு, கனிவான உபசரிப்பு. ”சீட்டு குடுக்கறவர் இப்ப வந்திருவார் சார், அந்த சேர்ல உக்காருங்க சார்” போன்ற அன்பான பேச்சு. சீட்டு குடுக்கறவர் வந்ததும், உடனடியாக சீட்டு கொடுக்கப்பட்டது. அந்த சேரில் அமரச் சொன்னவரேதான், மறுபடியும் டாக்டரிடம் கையைக் காட்டினார். டாக்டரும் கனிவுடன் அமரச் சொன்னார். பொறுமையாக எல்லா விவரமும் கேட்டு விட்டு புரியா மொழியில் அந்த சீட்டில் என்ன என்னவோ எழுதினார். ரூம் நம்பர் 14க்கு போங்க சார் என்றார். இரண்டு மாடி ஏறித்தான் 14 க்கு போக வேண்டி இருந்தது. 14 லிலும் அதே வரவேற்பு, அதே உபசரிப்பு, அதே அதே எல்லாம் அதே.

உபகரணங்கள் எல்லாம் சர்வ சுத்தம், ஒவ்வொரு அறையிலும் பளிச்சிடும் சுகாதாரம், வாய் கொப்பளிக்க கூட நவீன நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தால் சுத்திகரிக்கப்பட்ட நீர் என எல்லாம் அருமையாக இருந்தது.

ஆனால், 14ம் அறைக்கு போவதற்கு இரண்டு மாடி ஏறச் சொன்னதால் நானும் மகளும் சர்வ சாதாரணமாக படிகளில் ஏறி விட்டோம். பாவம் வயதான ஒரு அம்மா, நடப்பதற்கே சிரமப் படும் அவர்களால், நான்கு படி கூட ஏற முடியவில்லை. இங்கு வயதானவர்களுக்காக ஒரு மின்தூக்கி வைத்தால் அதிகம் உபயோகமாயிருக்கும். அந்த அம்மாவின் கஷ்டத்தைக் கண்டு, அங்கு பணியில் இருந்த ஒருவரிடம் ஒரு பிளாஸ்டிக் சேர் கொண்டு வாருங்கள் என்று சொன்னேன். அதில் அவர்களை அமர வைத்து, இரண்டு மாடி தூக்கிக் கொண்டு போய் விட்டோம். அதுக்கு அந்த அம்மா மன நெகிழ்ச்சியுடன் சொன்ன வார்த்தைகள் தான் என்னை துக்கி வாரிப் போட்டது. “நீ ராசாவாட்டம் இருக்கணும்ப்பா” என்றார்கள். ஏம்மா, இந்த பெயராலதான் நாடாளுமன்றமே 15 நாளா அமளிதுமளியாயிட்டு இருக்கு, உங்களுக்கு சொல்றதுக்கு வேற பெயரே கிடைக்கலையா!!!!!!!

இவ்வளவு அருமையாக இருக்கும் ஒரு மருத்துவமனையில் நம்ம திருவாளர் பொதுஜனம் செய்வதுதான் முகத்தை சுளிக்க வைக்கிறது. கேண்டீனிலிருந்து தின்பண்டம் வாங்கி வந்து சாப்பிட்டு விட்டு காகிதங்களை எல்லா இடங்களிலும் போட்டு வைப்பது, வண்டிகளை நிறுத்த அருமையான கூரை வேயப் பட்ட நிறுத்துமிடம் இருந்த போதிலும், வழியை மறைத்து, எல்லா இடங்களிலும் தாறுமாறாக நிறுத்துகிறார்கள்.

அரசாங்கத்தை மட்டும் குறை சொன்னால் போதாது பொது ஜனமே, ஒழுக்கம் என்பது நம்முள்ளேயும் இருக்க வேண்டும்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நேற்று இரவு முழுக்க பொழிந்த வானம், இன்று காலையிலும் தன் மிச்சத்தை பொழிந்து கொண்டிருந்தது. காலையில் எழுந்ததிலிருந்தே என் மறுபாதியும், மகளும் ஒரு எதிர்பார்ப்புடனேயே சுழன்று கொண்டிருந்தனர். மகள் அம்மாவிடம் “அந்த ரமணன் மாத்திரம் இன்னைக்கு பூரா மழை பெய்யும், பள்ளிக்கு லீவு விடுங்கன்னு சொல்லாம இருக்கட்டும், அப்புறம் இருக்குது அவுருக்கு” என சூளுரைத்துக் கொண்டிருக்கும் பொழுதே, கைபேசியில் குறுஞ்செய்தி “ ஹே, ஹே இன்னைக்கு லீவு” என அம்மாவும் மகளும் குதியாட்டம் போட்டனர். என் விதியை நொந்துகொண்டே அவர்களுக்கு லீவு கிடைத்த வயிற்றெரிச்சலில் ஆபீஸுக்கு கிளம்பிக் கொண்டிருந்த என்னைப் பார்த்து ஒரு கிண்டலுடன் “ஆமா, உங்க ஆபீஸ்ல எதோ பெரிய பஸ்ஸெல்லாம் விடறாங்க, மழை பெஞ்சா லீவு விடமாட்டாங்களா?” என்ற சொல்லம்புகள் என் மீது வீசப் பட்டன. அப்பவே சொன்னேன், ”இருங்கடி ரமணன் சொன்னது என்னைக்கு பலிச்சிருக்கு, உங்களுக்கு லீவு விட்டதும் வெயில் கொளுத்தப் போகுது பார்”னு சொல்லிட்டு ஆபீஸுக்கு வந்தேன். காலையிலிருந்து நல்ல வெயில். பாவம் ரமணன்.

5 comments:

எஸ்.கே said...

அனுபவங்கள் அருமை!

தராசு said...

வாங்க எஸ்.கே

டேங்சு

எம்.எம்.அப்துல்லா said...

என்றையும் விட இன்றைய இடுகை கொஞ்சம்கூட அருமை.

hhh said...

www.hismshi.blogspot.com

ஆதிமூலகிருஷ்ணன் said...

அவ்வ்.. எம்மாம் பெரிய இடுகை.

ஆனா படிச்சுட்டேம்பா. முதல் பாஸ்போர்ட் பகுதி கிட்டத்தட்ட அப்படியே 2 வாரங்களுக்கு முன்னால் வீயெஸ்வி எழுதி விகடனில் வந்த சிறுகதை. :-))