Thursday, May 27, 2010

ஜுகல்பந்தி – 27 – 05 -2010. – இந்தியனுக்கு செருப்படி.



நகரம் – அலகாபாத். – தெய்வத்தின் நகரம்.

கங்கைக் கரைப் பட்டினங்களில் சிறப்பு வாய்ந்த ஒரு பட்டினம். தேவர்களின் நகரம், முக்கூடல் நகரம், பிரம்மனின் நகரம், பிரதம மந்திரிகளின் நகரம் என பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது. கங்கை நதி என்ற ஒன்று மட்டும் இல்லாதிருந்திருந்தால், பல புலவர்களுக்கும், புராண இதிகாச ஆசிரியர்களுக்கும் பைத்தியமே பிடித்திருக்கும் என நினைக்கிறேன். ஆரம்பம் எதுவென்பதில் சூட்சுமம் நிறைந்து, வளைந்து, நெளிந்து, சுழன்று, சுழித்து, ஏறி, இறங்கி, ஆர்ப்பரித்து, அடங்கி நடந்து, அழுக்கை கழுவி, அழுக்குப் பட்டு என பல வடிவங்களில் பாயும் இந்நதியின் ஈரம் பட்ட ஒவ்வொரு இடத்திலும் எதாவது ஒரு சிறப்பு இருந்து கொண்டே இருக்கிறது.

இதே நதியின் கரையில் தான் தன் அழகுக்கு சாட்சியாய், அக்பரால் கட்டப்பட்ட முகலாய வடிவ கோட்டைகள், பல்கலைக்கழகங்கள், வெள்ளையரால் முழுதும் வெள்ளைக்கறகளைக் கொண்டு கட்டப்பட்ட கோத்திக் வடிவ கதீட்ரல், கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய கட்டிட கலைகளின் சங்கமத்துக்கு சாட்சி கூறும் தலைமை நீதிமன்ற கட்டிடம், மேற்கத்திய கோத்திக் மற்றும் இந்திய கட்டிடக் கலைகளின் மொத்த கலவையும், 200 அடி கோபுரமும் கொண்ட முயுர் கல்லூரி கட்டிடம், முற்றிலும் இந்தியர்களாலேயே வடிவமைக்கப்பட்டு இந்தியாவிலேயே முதன் முறையாக இரும்புக் கயிறுகளால் இணைத்து இழுத்துக் கட்டப்பட்ட யமுனை நதி பாலம் என திரும்பிய பக்கமெல்லாம் அழகு காட்டும் அற்புத நகரமிது.

பிரம்மன் தன் படைப்புகள் எல்லாவற்றையும் படைத்து விட்டு, இந்நகரத்தில் தான் வந்து ஓய்வெடுத்து யாகம் நடத்தினானாம். அதனால் இது கடவுளின் நகரம். யமுனையும் கங்கையும் இணைவதைக் கண்டு சரஸ்வதி என்னும் இன்னொரு மங்கை பூமிக்கு உள்ளிருந்து கிளம்பி வந்து யார் கண்ணுக்கும் தெரியாமல் தானாகவே நதி வடிவத்தில் இங்கு கூடி விடுகிறாளாம். அதனால் இது முக்கூடல் நகரம். ஹரித்துவார், உஜ்ஜைன், நாசிக் ஆகிய கும்ப மேளா நடைபெறும் மூன்று நகரங்களுக்கு அடுத்தபடியாக, நான்காவதாக கும்பமேளா இங்கும் நடைபெறுவதால் இது புனித நகரம். இந்தியப் பிரதமர்களில் ஏழு பேர் இங்கிருந்து வந்தவர்களாதலால் இது பிரதமர்களின் நகரம். 1857 – ல் நடந்த சிப்பாய் கலகத்தை அடக்க மெட்ராஸ் ரெஜிமெண்டின் அப்போதைய அதிகாரிகளான கர்னல் நீல், கேப்டன் ஆஷ்லி, கேப்டன் எட்வர்ட் மக்கின்ஸி ஆகியோரது தலைமையில், கிழக்கிந்திய கம்பெனியின் தொள்ளாயிரம் சிப்பாய்களின் வெறியாட்டத்திற்கு ஆளானதால் இது கறைகளின் நகரமும் கூட.

கனடாவின் ரவுடித்தனம் - செருப்படி வாங்கும் இந்தியா

ஃபதே சிங், எல்லைப் பாதுகாப்பு படை வீரர், பஹியா – ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி, எஸ்.எஸ். சித்து – ஓய்வு பெற்ற இந்திய உளவுத்துறை அதிகாரி, இவர்கள் எல்லாருக்கும் மாத்திரமல்ல, இன்னும் பலருக்கு கனடா நாட்டு விசா மறுக்கப்பட்டிருக்கிறது. ஒருவரை தன் நாட்டிற்குள் அனுமதிப்பதோ அல்லது அனுமதி மறுப்பதோ அவரவர் விருப்பு வெறுப்பு சார்ந்த சமாசாரம். ஆனால் அதற்கு சொல்லப்படும் காரணங்கள்தான் இங்கு செருப்பிலடிப்பது போல் உள்ளது. ஃபதே சிங் – எல்லை பாதுகாப்பு படையில் காஷ்மீரில் பணி புரிந்தவர் என்பதனால் அவர் ஒரு கிரிமினல் குற்றவாளியாம், காஷ்மீரில் பலரை சித்திரவதை செய்து மனித உரிமை மீறல் புரிந்திருக்கிறாரம். பஹியா – உளவுத்துறையில் இருந்ததனால், அவரால் கனடா நாட்டு இறையாண்மைக்கே ஆபத்தாம். அவர் கனடாவுக்குள் நுழைந்தால், உளவு வேலைகளில் ஈடுபடுவாராம். சித்து – இரண்டு முறை கனடாவில் வாழும் தன் மகனை பார்க்க சென்று அங்கு தங்கியிருந்து விட்டு வந்திருக்கிறார். ஆனால் இம்முறை அவரையும் ஒரு கேவலமான உளவாளி என முத்திரை குத்தி விசா தர மறுத்திருக்கிறார்கள். இத்தனை பேரை அவமானப் படுத்த்டிய போதிலும் நம் இந்திய அரசாங்கம் பொறுமை காத்திருக்கிறது. ஒரு வார்த்தை எவரும் பேசவில்லை. ஆனால், வரும் ஜூன் மாதத்தில் நடைபெறும் G20 மாநாட்டிற்காக பிரதமர் மன்மோகன் சிங்குடன் கனடா செல்ல இருந்த ஒரு அதிகாரிக்கு விசா வழங்க மறுத்து விட்டார்கள். காரணம் இந்திய உளவுத்துறை என்பது கனடாவின் புத்தகங்களில் ஒரு தீவிர வாத இயக்கமாகவும், அதன் அதிகாரிகள் எல்லாரும் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் தேடப்படும் குற்றவாளிகளும் என்ற காரணத்தை தைரியமாக எழுத்து மூலம் தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆனாலும், இந்திய அரசாங்கமோ அமைதியாக பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. ஜார்ஜ் பெர்னாண்டஸ் ராணுவ அமைச்சராக இருந்த பொழுது, அவர் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றால், அவர் ஒரு ஜனநாயக நாட்டின் ராணுவ அமைச்சர் என்ற மரியாதை கொஞ்சமும் இல்லாமல், பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் அவரது ஆடையை அவிழ்த்து அவமதிக்கலாம். ஜார்ஜ் புஷ் என்ற கோமாளி, உலகில் உணவுப் பஞ்சம் வருவதற்கு இந்தியர்கள் அதிகமாக சாப்பிடுவதே காரணம் என்று சொல்லி விட்டு சிரித்து விட்டு போகலாம். எங்கோ ஒரு நாட்டில் பன்றிக் காய்ச்சலோ, பிளேக் நோய்களோ வந்தால், இந்திய விமானங்களும், இந்திய கப்பல்களும் தங்கள் எல்லைக்குள் வராதவாறு வெள்ளைக்கார தேசங்கள் விரட்டியடிக்கலாம். தங்கள் உடல் பொருள் ஆவியை கொடுத்து பாதுகாப்பு பணிகளில் பாடுபடும் நம் இந்திய ராணுவ வீரர்களை ஒரு வெள்ளைக்காரன் சர்வ சாதாரணமாக தீவிரவாதி எனக் கூறி அவமானப்படுத்தலாம். நமது பாதுகாப்பு படைகளையே தீவிரவாத இயக்கங்கள் என எழுதிக் கொடுக்கலாம். நாங்கள் மறுபடியும் அவர்களுடன் சிரித்துக் கொண்டே பேசுவோம். அவர்கள் நாட்டு பிரஜைகளுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுப்போம். டேவிட் ஹெட்லி தீரவாதியாயிருந்தாலென்ன, வெள்ளைத் தோல்தானே, உள்ளே வாருங்கள் என கரம் கூப்பி வரவேற்போம்,

அழுக்குப் பிடித்த அரசியல் வாதிகளே, த்தூவென காறி உங்கள் மூஞ்சியில் துப்ப வேண்டும் போலுள்ளது.


ங்கொய்யால பக்கங்கள்

சார், பர்ஸனல் லோன் வேணுமா??

ஹலோ, நான் ரமேஷ் பேசறேன்!!!!!!!

அந்த ரிப்போர்ட் ரெடியாயிடுச்சா மேன்??

அப்பா, என்ன பண்ணீட்டு இருக்கீங்க???

டேய், மாப்ள, இன்னைக்கு சாய்ந்தரம் ஃபிரீயாடா?

இப்பத்தான் பார்த்தேன், பெருங்காய
டப்பா காலியாயிருக்கு,
வரும்போது வாங்கீட்டு வந்துருங்களேன்.

சார், உங்களுக்காகவே ஸ்பெஷலா ஒரு இன்ஷூரன்ஸ்
பேக்கேஜ் டிசைன் பண்ணீருக்கோம் சார்……

புத்தம் புது திரைப்பட பாடல்களை காலர் டோனா வைக்க…….

ங்கொய்யால,

உலகம் எவ்வளவு அமைதியா இருக்குது,

செல்போன் தொலைஞ்சு ரெண்டு நாளாச்சு.

8 comments:

மணிஜி said...

செல்போன் உண்மைதான்...இல்லையென்றால் நிம்மதிதான்

அகல்விளக்கு said...

இந்தியர்கள் என்றால் அவர்களுக்கு அப்படித்தான்...

ஆஸ்திரேலியாவில் அடிபடும் மாணவர்கள் பற்றித் தெரிந்தும் கைகுலுக்கி விட்டு பேசிக்கொண்டுதானே இருக்கிறோம்...

*****

//செல்போன் தொலைஞ்சு போச்சு...//

அப்படியா... வாழ்த்துக்கள் நண்பரே...

:-)

Paleo God said...

//ங்கொய்யால,

உலகம் எவ்வளவு அமைதியா இருக்குது//

கரென்டும் போகட்டும் இன்னும் அமைதிதான்!

போட்டு தாக்குங்க தல!! :-)

தராசு said...

வாங்க மணி அண்ணே,

டேங்சு

தராசு said...

வாங்க அகல் விளக்கு,

டேங்சு.

ஆஸ்திரேலிய விவகாரத்தை எழுத நினைத்தேன். ஆனால் பதிவின் நீளம் கருதி விட்டுவிட்டேன்.

ஞாபகப்படுத்தியதற்கு டேங்சு.

தராசு said...

வாங்க ஷங்கர்,

டேங்சு

என்னது கரண்ட்டும் போகட்டுமா, என்ன நல்ல எண்ணம் போங்க.

அத்திரி said...

ங்கொய்யால............உண்மைதான் அண்ணாச்சி

தராசு said...

அத்திரி அண்ணே,

டேங்சு.

எங்க ரொம்ப நாளா காணோம்????