Tuesday, May 25, 2010

வாந்தி வாந்தியா வருது.......

ஒரு எட்டோ அல்லது ஒன்பதோ வயதுப் பையன் ஒரு ஏழு வயதுப் பெண்ணின் தொடைகளுக்கு நடுவே கையைவிட்டு பிடித்து அலாக்காக தூக்குகிறான். தலைக்கு மேலே உயர்த்திப் பிடித்து விட்டு விட்டு அந்தப் பெண் குழந்தையை கீழே விடுகிறான். அவன் அணிந்திருக்கும் ஜீன்ஸ் பேண்ட் முழங்காலுக்கு கீழே கிழிந்திருக்கிறது. பட்டையான ஒரு பெல்ட் கட்டி, சட்டையின் மேல் பட்டன்களை திறந்து விட்டு சட்டையின் கீழ் முனைகளை முடிச்சு போட்டிருக்கிறான். தலையில் ஒரு கைக்குட்டையை பட்டையாக சுற்றிக் கட்டியிருக்கிறான். இடது முழங்காலுக்கு மேல் ஒரு கைக்குட்டையை சுருட்டிக் கட்டி, வலது மணிக்கட்டில் ஒரு கைக்குட்டையை கட்டி என ஒரு எட்டு வயது பையனில் ஒரு திரைப்பட நடிகனின் அத்தனை அலங்காரங்களையும் பார்க்க முடிகிறது.

அந்த ஏழு வயதுப் பெண்ணின் மார்பில் ஒரு துணி சுற்றியிருக்கிறது. தொப்புளை சுற்றிலும் ஜிகினா மாதிரி எதுவோ ஜொலிக்கிறது. ஒரு ஆறு அல்லது எட்டு அங்குலத்துணி இடுப்பில் சுற்றியிருக்க கறுப்பு நிறத்தில் ஒரு உள்ளாடை அணிந்து அம்மணம் மறைத்திருக்கிறாள். முகத்தில் மிதமிஞ்சிய பூச்சுகள், உதட்டுச்சாயம், காதில் புரியாத வடிவத்தில் தொங்கட்டான்கள்.

80 களில் வெளிவந்த ஒரு ஹிந்திப் பாடலுக்கு ஹெலன் என்னும் கவர்ச்சி நடிகை அரைகுறை ஆடையுடன் ஆடிய ஒரு நடனத்தை இந்த இருவரும் ஆடுகிறார்கள். அந்த நடனத்தை வடிவமைக்க இரு நடன கலைஞர்கள். அந்த நடனத்திற்கு மதிப்பெண் கொடுக்க ஒரு ஆணும் ஒரு பெண்ணுமாக இரண்டு நடுவர்கள், ஒரு காலத்தில் ஹிந்தி திரைப்பட உலகின் சிறந்த நடன இயக்குனராக இருந்த ஒரு வயதான பெண்மணி சிறப்பு விருந்தினர், இத்துடன் இந்தக் குழந்தைகளின் பெற்றோர் என ஆட்டம் களை கட்டுகிறது. ஒரு பிரபல ஹிந்தித் தொலைக்காட்சியில் இந்த நடனப் போட்டி.

அந்த இரண்டு பிஞ்சுகளும் பின்னணியில் ஒலிக்கும் பாடலுக்கு ஏற்றபடி உடலை நெளிக்கவும், கால்களை தூக்கவும், ஒருவரையொருவர் கட்டித் தழுவவும் செய்கிறார்கள். நடுவர்களும் கூட்டமும் பார்த்து ஆர்ப்பரிக்கிறது. பெற்றோர்கள் சிறப்பு நடுவரின் பாராட்டைக்கேட்டு எதோ பிறவிப் பயனை அடைந்துவிட்டது போல் கைகளை தட்டி குதூகலமடைகிறார்கள். சிறப்பு நடுவர் இந்த நடனத்தை சால்சா வகை நடனம் என்கிறார். பெற்றோருக்கு பெருமிதம் தாங்கவில்லை.

அடுத்ததாக ஒரு ஜோடி, வேறு ஒரு பாடல், இப்பொழுது பையன் ஒரு எட்டு வயதுப் பெண்ணின் மார்பை ஏடாகூடமாக தடவி கழுத்தில் முத்த மிடுகிறான். திடீரென்று அவன் கால்களை விரித்து நிற்க இந்தப் பெண் அவன் கால்களுக்கு நடுவே வழுக்கிப் போகிறாள். மேடையின் முழு அளவிற்கும் ஓடித்திரியும் இந்த ஜோடி, திடீரென்று ஒருவர் இடுப்பை ஒருவர் அணைத்தபடி உடலுறவு கொள்வது போல் அசைகின்றனர். உடனே நடுவர் ஒருவர் எழுந்து நின்று கையைத் தட்டுகிறார். முடிவில் அந்த Pelvic thrust was a perfect movement என்று சொல்கிறார். இங்கும் பெண்ணுக்குஅதே அங்குல அளவு உடைகளும், பையனுக்கு கைக்குட்டை கட்டுகளும் தவறாது இடம் பெறுகிறது. பெற்றோர்கள் கையைத் தட்டி குதூகலிக்கின்றனர். முடிவில் சிறப்பு நடுவர் இதை Contemporary dance என்கிறார்.

இதற்கு அடுத்த ஜோடி, இரண்டு பொடியன்கள், ஒரு ஏழோ அல்லது எட்டு வயதுப் பெண், இரண்டு பையன்களும் பாடல் ஆரம்பித்தவுடன் வந்து இந்த பெண்ணை தங்களது இடுப்பால், அவளது இடுப்பில் இடிக்கிறார்கள். அந்தப் பெண் கெக்க பிக்கவென சிரித்து விட்டு ஹூம், Crazy Boys என நடையை கட்டுகிறாள். கூட்டம் கையைத்தட்டி ஆரவாரிக்கிறது.


இருங்கள், இதை எழுதும் பொழுதே எனக்கு வாந்தி வரும்போல் இருக்கிறது. கொஞ்சம் வாந்தி எடுத்துவிட்டு பின்பு வருகிறேன்.


எந்த தொலைக்காட்சியை எடுத்தாலும் நடனப் போட்டிகள் அல்லது பாட்டுப் போட்டிகள் தான். அதுவும் பிஞ்சு குழந்தைகளின் Pelvic Thrust. இந்த வக்கிரங்களை தங்கள் குழந்தைகள் செய்வதைக் கண்டு மகிழ்ச்சியுறும் பெற்றோர்கள், அதற்கென அவர்கள் செலவழிக்கும் பணம், நேரம். அதற்கு மதிப்பெண் கொடுக்கும் நடுவர்கள், அதை பாராட்டிப் பேசும் சிறப்பு விருந்தினர்கள், இதை ஊக்குவிக்கும் தொலைக்காட்சி,

யோவ், ங்கொய்யால, எங்கய்யா போயிட்டிருக்கறோம் நம்ம என ஓங்கி தொண்டை கிழிய கத்தவேண்டும் போலுள்ளது.

90 களில் ஒவ்வொரு இந்திய தொலைக் காட்சிகளிலும் மாணவர்களுக்கென வினாடி வினா போட்டிகள் நடத்தப் பட்டது, ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து பள்ளி வாரியாக அவர்களிடத்தில் பொது அறிவு, விஞ்ஞானம், மற்றும் விளையாட்டு போன்றவற்றில் கேள்விகள் கேட்கப் பட்டு, மதிப்பெண்கள் கொடுக்கப் பட்டன, வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் அளித்தார்கள். சித்தார்த்த பாஸு நடத்திய அல்ஃபா ப்ளஸ் என்ற நிகழ்ச்சி அநேக பெற்றோரால் அவர்கள் குழந்தைகளுடன் விரும்பி பார்க்கப் பட்டது. நவ்ரோத்தம் பூரி என்ற மனிதரை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. விளையாட்டில் நடக்கிற ஒவ்வொரு நிகழ்வையும் மனிதர் விரல் நுனியில் வைத்திருப்பார். அவரின் விளையாட்டு கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கு பெற அன்றைய மாணவ மணிகள் கனவு கண்டு தவமே இருந்தார்கள் எனலாம். ஏன் இப்பொழுது எங்கு கிரிக்கெட் போட்டி நடந்தாலும் அங்கு தவறாது ஆஜராகி வர்ணனையில் கலக்கும் ஹர்ஷா போக்ளே கூட ஒரு காலத்தில் ESPN தொலைக்காட்சியில் விளையாட்டு கேள்வி பதில் போட்டிகள் நடத்தியவர்தான்.

இதனால் குழந்தைகளின் அறிவு தாகம் பெருகியது. பெற்றோர்களும் குழந்தைகளும் சரிசமமாக இந்த போட்டிகளிலும், தொலைக் காட்சி நிகழ்ச்சிகளிலும் ஆர்வம் காட்டினார்கள். இந்த நிகழ்ச்சிகளோ அல்லது இதன் முக்கியத்துவமோ எப்படி இவ்வளவு சீக்கிரம் ஒழிந்து போனது என தெரியவில்லை.

இன்று விஜய் தொலைக்காட்சியில் நடக்கும் ஒரு பாட்டு போட்டிக்காக அந்த குழந்தைகள் எத்தனை வகுப்புகளை தியாகம் செய்தார்களோ தெரியவில்லை, இன்னும் அவர்களுக்கு எத்தனை விதமான உடைகள் அணிவித்து பாடவைப்பார்களோ ஈஸ்வரா…. நிகழ்ச்சியை எவ்வளவு நீட்டி முழக்கி நாட்களை கடத்துகிறார்களோ அவ்வளவும் தொலைக் காட்சிக்கு லாபம் தான். ஆனால், அந்த பிஞ்சுகள் இந்த வயதில் எதைக் கற்க வேண்டுமோ, எதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமோ அதை விட்டு விட்டு “ அந்த ரெண்டாவது லைன்ல வர்ற மூணாவது வார்த்தைல ஒரு குட்டி ஜெர்க் வர்றது, அதை கரெக்ட் பண்ணுங்க, அடுத்ததா ஆலாப்ல கொஞ்சம் சுதி பிசிறடிக்குது, அதை சரி பண்ணிக்கோங்க” போன்ற அறிவுரைகளில் சீரழிகிறார்கள். பெற்றோர்களே தங்களது பிஞ்சுக் குழந்தைகளின் Pelvic thrust ஐ பார்த்து ஆனந்தத்தில் ஆர்ப்பரிக்கிறார்கள்.

ஒரு வருங்கால சமுதாயத்தின் முழுகவனத்தையும் சினிமா என்ற சமூக அவலத்தின் பால் திசை திருப்பி, முற்றிலும் சீரழிக்கிறோம் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இந்த சமூக வன்முறை கும்பலிடம் இல்லையா? பிஞ்சுகளின் மூளையை சினிமா ஆக்கிரமித்தால், வருங்கால சந்ததியில் மனித வளம் என்பது மருந்துக்கு கூட இருக்காது.

38 comments:

Robin said...

:(

தாஜூதீன் said...

ஐயா சூப்பர், ஒரு கரகாட்டம் ஆடி சினிமாவினால் ஏற்படும் விளைவுகளை நல்ல சூடு போட்ட மாதிரி சொல்லு இருக்கீங்க.

சினிமாவை சீண்டினால் நம்ம மக்களுக்கு கொஞ்சம் கோபம வரும் ஐயா, வேதனையான விசையம்.

புள்ளையும் மவனும் ஒன்னா சேர்ந்து தான் எல்லா கேடுகேட்ட சினிமாக்களை பார்க்கிறாங்க. என்னத்த சொல்றது ஐயா.

ஆதிமூலகிருஷ்ணன் said...

இது எங்கே வடக்கேயா? இங்க இப்பதான் பாட்டு, டான்ஸுன்னு முன்னேறிகிட்டிருக்கோம்.

இன்னும் கொஞ்ச நாள்ல டிரஸ்ஸெல்லாம் கழற்றிவிட்டு ஆடவைத்து குழந்தைங்க செக்ஸ் பார்க்கும் முதல் கண்ட்ரியா டெவலப் ஆகிவிடுவோம்னு நம்புகிறேன்.

ஃபிரெண்ட்ஸ் படத்துல வடிவேலு உச்சமாக டென்ஷனாவேரே.. அதுபோல, நடுவர்களின் பாராட்டைக்கேட்டு புளகாங்கிதம் அடையும் பெற்றோரைப் பார்த்து மண்டை மேலேயே குட்டி, 'பரதேசி, பரதேசி.. புள்ளையை முதல்ல படிக்கவையுடா'ன்னு சொல்லலாம் போலருக்கும் எனக்கு சமயங்களில்.

க‌ரிச‌ல்கார‌ன் said...

அய்யா இங்கேயும் ஆர‌ம்பிச்சுட்டாங்க‌...

கொஞ்ச‌ நாள் தான் அதையும் தாண்டுவாங்க‌

தராசு said...

ராபின்,

வாங்க டேங்சு, ஆனா ஏன் இப்படி???

தராசு said...

//தாஜூதீன் said

சினிமாவை சீண்டினால் நம்ம மக்களுக்கு கொஞ்சம் கோபம வரும் ஐயா, வேதனையான விசையம்.//

ஏன் இப்படி சினிமா மோகம் புடிச்சு அலையறாய்ங்களோ தெரியல தாஜூதீன்.

வந்ததுக்கு டேங்சு.

தராசு said...

ஆதி,

ஆமாம் தல, இங்க வடக்க தான், கலர்ஸ்னு ஒரு சேனல்ல தான் இந்த அசிங்கம்.

//இன்னும் கொஞ்ச நாள்ல டிரஸ்ஸெல்லாம் கழற்றிவிட்டு ஆடவைத்து குழந்தைங்க செக்ஸ் பார்க்கும் முதல் கண்ட்ரியா டெவலப் ஆகிவிடுவோம்னு நம்புகிறேன். //

கொஞ்ச நாள்ல கண்டிப்பா தமிழ்நாட்டுலயும் வந்துரும்.

தராசு said...

வாங்க கரிசல்காரன்,

வந்ததுக்கு டேங்சு.

~~Romeo~~ said...

அண்ணே நீங்க சொல்லி இருக்குற அதனையும் உண்மை. என்னதான் நாம காட்டு கத்து கத்தினாலும் அவங்க காது ஒன்னும் விழாது. ஏன் என்றால் அவர்கள் கண்களில் தெரிவது பணம் மட்டுமே .

Gerrard said...

boss, i do not have tamil font. Konjam poruthukolungal.

i do not see what is wrong in this?
culture is an evolution. India is evolving enjoy it and contribute :-)

but good observation, dont be another muthalik :-)

தராசு said...

வாங்க ரோமியோ,

//என்னதான் நாம காட்டு கத்து கத்தினாலும் அவங்க காது ஒன்னும் விழாது.//

யாராவது ஒருத்தர் மணி கட்டித்தான ஆகணும், நம்ம ஆரம்பிப்பமேங்கற ஆதங்கம்தான், வேறொன்றுமில்லை.

வந்ததுக்கு டேங்சு.

அகல்விளக்கு said...

இன்னொரு தமிழ் தொலைக்காட்கியில் love fort நடிகையும் இன்னொரு மூதேவிப்பயலும் நடத்துவாங்களே...

காரித்துப்ப வேண்டும் போல இருக்கிறது...

தராசு said...

ஜெரார்டு,

வந்ததுக்கு டேங்சு.

இந்த நிகழ்வுகள் கலாச்சாரத்தின் பரிமாண மாற்றங்களாயிருந்தால் முதன்முதலில் அதை வரவேற்பவன் அடியேன் தான்.

சக்கரத்துக்கு இயந்திரம் பொருத்தி வேகத்தை கூட்டுவது பரிணாம வளர்ச்சி.
சாங்கியங்களின் அநாவசியத்தை அறிந்து கொண்டு அறுத்தெறிவது பரிணாம வளர்ச்சி.
அந்நிய உயிரை நோகடிக்காது தனது சுகத்துக்கு நெறிகள் வகுப்பது பரிமாண வளர்ச்சி,

ஆனால்,

பிஞ்சுக் குழந்தைகளுக்கு அரைகுறை உடை அணிவித்து, சினிமா மோகம் கொள்ளச் செய்வது என்ன வளர்ச்சி???

தராசு said...

வாங்க அகல் விளக்கு,

வந்ததுக்கு டேங்சு.

நிறைய எழுதுங்கள், அப்பொழுதாவது இந்த சங்கொலி அந்த செவிடர்களின் காதிப் போகுதானு பார்ப்போம்.

Robin said...

//ராபின்,

வாங்க டேங்சு, ஆனா ஏன் இப்படி???//

நேரமின்மைதான் காரணம்.
இப்பதிவிலுள்ள உங்கள் கருத்துக்கு முற்றிலுமாக உடன்படுகிறேன்.

ஹுஸைனம்மா said...

இந்தப் பதிவை வனமையாகக் கண்டிக்கிறேன்!!

சிறுவர்கள், படிப்பு, பள்ளி, பாடம் என்று மட்டுமே இருக்கத் தூண்டும் ஒரு பிற்போக்குவாதியின் எண்ணங்களைக் கண்டு எனக்கு வாந்தி வாந்தியா வருது!!

ஒரு முற்போக்குச் சிந்தனை இல்லாததின் விளைவே இப்பதிவு!! அவர்களும் அதைத் தாண்டி வந்து, ஒரு கலையைக் கற்றுகொள்ள விழைவதை ஏன் இப்படி வன்மத்தோடு கண்டிக்கிறீர்கள்?

யாரும் செய்யாததைச் செய்தார்களா? அவர்கள் தினம்தினம் காணுவதிலிருந்து கற்றுக்கொண்டதைத்தானே, மேடை போட்டு செய்துகாண்பித்து மகிழ்விக்கிறார்கள்!! அவர்கள் பெற்றோரையும் “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கச்” செய்கிறார்களே, இதைவிட வேறென்ன வேண்டும்?

அதுமட்டுமின்றி, பள்ளிப்பாடங்களை மனப்பாடம் செய்து, பரிட்சையில் வாந்தி எடுக்க வைக்கும் கல்வியை மட்டும் நம்பியிராமல், சிறு வயதிலேயே தன் தனித்திறமையைக் கொண்டு, டிவி, மாடலிங், சினிமா என்று ஒரு வளமான வாழ்வைப் பெற வழிவகுக்கும் அவர்களின் உழைப்புத்திறனைக் கிண்டல் செய்வது போலுள்ளது உங்கள் பதிவு!!

இதையெல்லாம் கலாச்சாரச் சீரழிவு என்று சொல்லுவதன் மூலம், உங்களுக்குள்ளிருக்கும் ஒரு ஒசாமாவும், ஒரு முதாலிக்கும் வெளிவருகிறார்கள்!!

ஸ்.. ஸபா.. மூச்சு வாங்குது!! :-))

ஹுஸைனம்மா said...

/இந்த வக்கிரங்களை தங்கள் குழந்தைகள் செய்வதைக் கண்டு மகிழ்ச்சியுறும் பெற்றோர்கள், அதற்கென அவர்கள் செலவழிக்கும் பணம், நேரம். அதற்கு மதிப்பெண் கொடுக்கும் நடுவர்கள், அதை பாராட்டிப் பேசும் சிறப்பு விருந்தினர்கள், இதை ஊக்குவிக்கும் தொலைக்காட்சி,//

இதைப் பார்த்து ரசிச்ச மக்களையும், பாத்துட்டு விலாவாரியா விவரிச்சு பதிவெழுதுன உங்களை விட்டுட்டீங்களே!!

:-)))

தராசு said...

வாங்க ஹுஸைனம்மா,

சூப்பர், கலக்கிட்டீங்க போங்க,

//சிறுவர்கள், படிப்பு, பள்ளி, பாடம் என்று மட்டுமே இருக்கத் தூண்டும் ஒரு பிற்போக்குவாதியின் எண்ணங்களைக் கண்டு எனக்கு வாந்தி வாந்தியா வருது!!//

பிற்போக்கு வாதி, ஒசாமா, முத்தலிக் இன்னும் நிறைய சொல்லலாம். ஏன் இதோட நிறுத்திட்டீங்க.

பிள்ளைகளை படிப்பு, பாடம் என்ற வேலிகளுக்குள் கட்டிப் போடுங்கள் என நான் எங்கும் சொல்ல வில்லை. எந்த மைதானத்தில் என்ன விளையாட்டு விளையாட அனுமதிக்கிறோம் என்பதில் கவனமாயிருங்கள். ஏனெனில் "கண்ணாளனை கண்டபடி கட்டிப்புடிக்க" ஒரு குமரி அழைப்பதற்கும், குழந்தை அழைப்பதற்கும் இருக்கும் வித்தியாசம் விபரீதமானது என்பதை அறிவீர்கள் என நினைக்கிறேன்.

தராசு said...

//ஒரு முற்போக்குச் சிந்தனை இல்லாததின் விளைவே இப்பதிவு!! அவர்களும் அதைத் தாண்டி வந்து, ஒரு கலையைக் கற்றுகொள்ள விழைவதை ஏன் இப்படி வன்மத்தோடு கண்டிக்கிறீர்கள்?//

கலையைக் கற்றுக் கொண்டு கண்டிப்பாக நடனமாடுங்கள், அதை என்பதிவில் நான் எங்கும் தடுக்கவில்லை. ஆனால், சினிமாவின் கவர்ச்சி நடனங்களும், உடலுறுப்பை வக்கிரமாக வெளிக்காட்டும் அரைகுறை ஆடைகளுடன், காமத்தின் உச்சத்தை வெளிப்படுத்தும் விகார நடன அசைவுகளும் தான் கலை என்றும் அதை பிஞ்சு குழந்தைகளை செய்ய வைத்து பார்த்து கை கொட்டி சிரித்து மகிழ்வதுதான் முற்போக்கு சிந்தனைகளும் என்று சொல்வீர்களாயின், எனக்கு அந்த மாதிரி சிந்தனையே வேண்டாம் ஹுஸைனம்மா, நான் பிற்போக்கு வாதியாவே இருந்துக்கறேன்.

ஹுஸைனம்மா said...

//ஹுஸைனம்மா, நான் பிற்போக்கு வாதியாவே இருந்துக்கறேன்.//

அடக்கொடுமையே! நான் என்ன, ஏன் எழுதிருக்கேன்னு புரிஞ்சிகிட்டுத்தான் என் கமெண்டுக்கு மெனக்கெட்டு உக்காந்து பதில் எழுதிக்கிட்டிருக்கீங்களா?

உங்க கருத்துதாங்க என் கருத்தும்!!

ஹய்யோ.. ஹய்யோ.. நான் ஜோக் எழுதினாக்கூட, அதை ஜோக்குதான்னு நானே எடுத்துக் கொடுக்க வேண்டியிருக்கு!! :-((

ஸ்ரீமதன் said...

தராசு
இந்த பதிவில் உள்ள மிக பெரும்பான்மை கருத்துக்களுடன் உடன்படுகிறேன்.மிக சில ஆட்சேபனைகளும் உண்டு.

ஹுசைனம்மா

தராசு கலைகளை கற்று கொள்வதை வேண்டாம் என்றே சொல்லவில்லை என்றே நினைக்கிறேன் .திரைப்பட பாடல்களை பாடுவது,திரைப்பட பாடல்களுக்கு திரைப்பட நடனம் போலவே ஆடுவது என்பது கலை என்ற பகுப்பில் வருமா என்பதும் சந்தேகமே . குத்து பாட்டுக்கு ஆடுகிறேன் என்று குழந்தைகள் செய்யும் சில அசைவுகளை பார்க்கும் போது மிகவும் கஷ்டமாகத்தான் உள்ளது.அதற்காக பெறப்படும் பாராட்டுகளும் மேடை தாண்டி இல்ல விழாக்களிலும்,பொது வாழ்விலும் அது போன்ற அசைவுகளை,சைகைகளை கொண்டு வந்து விடுகின்றன.

பாட்டு,இசை , நடனம்,நாட்டியம் ,வாத்தியங்கள் எல்லாவற்றையும் முறையாக கற்று,பயிற்சி செய்து தாராளமாக மேடை ஏற்றட்டும்.அதுவே நிலைக்கும்.ஆனால் இது போன்ற அரைகுறை இசை,நடன நிகழ்ச்சிகள் 15 வினாடி புகழ் தவிர வேறு எதற்கும் பயன் படாது.

ஹுஸைனம்மா said...

//ஸ்ரீமதன் said...
ஹுசைனம்மா, தராசு கலைகளை கற்று கொள்வதை வேண்டாம் என்றே சொல்லவில்லை என்றே நினைக்கிறேன் //

அவ்வ்வ்வ்.... ஏங்க உங்க யாருக்குமே ‘வஞ்சப் புகழ்ச்சி’ன்னு ஒண்ணு இருக்கதே தெரியாதா??!!

தராசு said...

ஹூஸைனம்மா,

நீங்க ஜோக்குக்கு எழுதனீங்கன்னு நாந்தான் மர மண்டை புரிஞ்சுக்கலை, ஆனா பாருங்க அடுத்ததா ஒருத்தரு வந்திருக்காரு,

இப்ப பதில் சொல்லுங்க.

தராசு said...

வாங்க ஸ்ரீமதன்,

டேங்சு.

//இந்த பதிவில் உள்ள மிக பெரும்பான்மை கருத்துக்களுடன் உடன்படுகிறேன்.மிக சில ஆட்சேபனைகளும் உண்டு.//

சில ஆட்சேபணைகளை சொல்லலாமே

ஹுஸைனம்மா said...

// தராசு said...
ஹூஸைனம்மா,
... நாந்தான் மர மண்டை //

அப்பாடா, இதையாவது தெரிஞ்சு வச்சுருக்கீங்களே!! ;-)))

(ஆண்டவா, இதுக்கும் ‘நான் அப்படியே இருந்துட்டுப் போறேன்’னு பதிலெழுதாம இருக்கணுமே!! )

:-)))))))))))))))))))))))))
ஸ்மைலி நிறைய்ய்ய்ய போட்டுட்டேன், சரியா?!!

ஈரோடு கதிர் said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா...

சண்ட முடிஞ்சுங்குளா..

இங்க ஒரு பயபுள்ள இந்த லிங்க அனுப்பி... பயங்கர சண்டைங்க... நீங்களும் குதிங்கன்னு என்ன ரொம்ம்ம்ம்ப்ப்ப்ப்ப்ப்ப மோட்டிவேட் பண்ணுச்சு... என்னோட நல்ல நேரம் வேலை நிறைய இருந்ததால நான் தப்பிச்சேன்....

ஆதிமூலகிருஷ்ணன் said...

நானும் முதலில் அதிரவே செய்தேன். கடைசியில் ஒரு ஸ்மைலியை போட்டால் ஆயிற்றா.?

ஹுஸைனம்மா, நீங்கள் இன்னும் வஞ்சப்புகழ்ச்சியைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். :-)

ஹுஸைனம்மா said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
நானும் முதலில் அதிரவே செய்தேன்.//

ஆச்சர்யம்!! வேறென்ன சொல்லன்னு தெரியல!!

இந்த அளவு மோசமான நிகழ்ச்சியை நானும் ஆதரிப்பேன்னு எல்லாரும் எப்படி முடிவு பண்ணீங்கன்னு தெரியல!! ஒருவேளை, என் பதிவுகள் படித்திராரதால் அப்படி நினைத்திருக்கலாம்!!

இதை ஆதரிப்பேன் என்று நம்புமளவுக்கா பதிவுலகத்தில் என் இமேஜ் இருக்கீறது என்று அதிர்ச்சியடைகிறேன்!!

தராசு said...

வாங்க கதிர் அண்ணே,

இதெல்லாம் சகஜம்ணே,

வந்ததுக்கு டேங்சு.

தராசு said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
நானும் முதலில் அதிரவே செய்தேன். கடைசியில் ஒரு ஸ்மைலியை போட்டால் ஆயிற்றா.?//

சேம் பிளட்.

தராசு said...

//இதை ஆதரிப்பேன் என்று நம்புமளவுக்கா பதிவுலகத்தில் என் இமேஜ் இருக்கீறது என்று அதிர்ச்சியடைகிறேன்!!//

நானும் உங்க பின்னூட்டத்தைப் படிச்சு அப்படியே ஷாக் ஆயிட்டேன்.

ஹி, ஹி, கடைசியில இப்படி சின்னதா ஸ்மைலி போட்டா யாருக்குத் தெரியும்.

கார்க்கி said...

நடனப் போட்டி சரி.

பாட்டு போட்டியுமா? படிச்சிட்டா.. நீங்க வேலை வாங்கி தறீங்களா? எந்த எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டியும் இல்லாமல், படிப்பை மட்டுமே சுவாசித்து 90% வாங்கிய ஆடக்ள் 10 பேர் தருகிறேன். வேலை வாங்கி கொடுங்களேன் தல....

நடப்போட்டி குறித்த உங்கள் ஆதங்கம் சரியா ஐருக்கலாம். ஆனால் படிப்பை விட்டு பாடனுமா என்றது டூ மச்...

மேலும்,வட இந்தியர்கள் மேற்கத்திய கலாச்சாரத்தை 80% ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். நாம் இன்னும் 20% தான்.. அதுதான் காரணம்.. எல்லா நாடுஅக்ளிலும் இப்படித்தான். அடஹ்ற்காக அவர்கள் சீரழிந்துவிட்டார்களா என்ன? அவரவரக்ளுக்கான மதிப்பு (value) வேற.


நீங்க இவ்ளோ டென்ஷன் ஆக வேண்டாம். டிஸ்கவரி சேனலுக்கு தாவிடுங்க :)

ஆதிமூலகிருஷ்ணன் said...

எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடி என்பது வேறு, அரைகுறை துணிகளுடன் ஆபாச உடலசைவுகளுடன் ஆடுவது என்பது வேறு. தராசு பாடல் கற்பதை குறைகூறவில்லை. ஏதோ ஐஏஎஸ் ஹாலுக்குள் பிள்ளைகளை அனுப்புவதைப்போல 8 வயசுப்பிள்ளைகளை மேடையேற்றிவிட்டு அவர்கள் பாடும் 'என் உச்சி மண்டையில சுர்ர்ர்ருங்குது..' பாடலுக்காக பயபக்தியோடு நடுவர் தீர்ப்பை எதிர்பார்க்கும் பெற்றோர் குறித்துதான் தராசு வருந்தியிருக்கிறார்.

உனக்கு விளக்கஞ் சொல்லியே நான் ஓஞ்சுடுவேன் போலருக்கே..!!!

ஸ்ரீமதன் said...

@ தராசு
திரை இசை சார்ந்த நடன நிகழ்சிகள் வேறு ரகம்.ஆனால், கர்நாடக இசை ரசிக்கும் மிக சிலரை தவிர்த்து ,தமிழகத்தில் திரைப்பட பாடல்கள்தான் இசை என்ற நிலையில்தான் உள்ளது .குரல் வளம் இருந்தும் முறையாக இசை பயில வாய்பில்லாதவர்களுக்கு திரை இசை மேடைகள் மட்டுமே கிடைக்கின்றன.SPB நடத்தும் நிகழ்ச்சி போன்று ஆர்ப்பாட்டம் இல்லாமல் திறமை முன்வைக்கப்பட்டால் அதை நிச்சயம் ரசிக்கலாம் என்பது என் எண்ணம்.

@ஹுஸைனம்மா

தூக்குவது போல் தெரியணும் ஆனா கீழே இறக்கணும் அது வஞ்ச புகழ்ச்சி.தூக்கி நச்சுனு கீழே போட்டு பக்கத்துல ஸ்மைலி போட்டா அதுவும் வஞ்ச புகழ்ச்சியா? எனக்குதான் சரியாய் தெரியலையோ ?:-)

@ கார்க்கி

//அவரவரக்ளுக்கான மதிப்பு (value) வேற.//

அதேதான் சகா .நமது மதிப்புகளும் வேறே . நமக்கான மதிப்புகளை அவர்களை போல எதற்காக மாற்றி கொள்ள வேண்டும்?? நல்லதை மட்டும் வரவேற்போம்.

தராசு said...

கார்க்கி,

டேங்சு,

//உனக்கு விளக்கஞ் சொல்லியே நான் ஓஞ்சுடுவேன் போலருக்கே..!!!//

தல, ஆதி மீதியை சொல்லீட்டாரு.

கார்க்கி said...

//நடனப் போட்டி சரி.

பாட்டு போட்டியுமா? படிச்சிட்டா//

இதை படிக்காம துடிக்கிரார் ஆதியண்ணா..

//அவர்கள் பாடும் 'என் உச்சி மண்டையில சுர்ர்ர்ருங்குது./

ஓ அபப்டியா? அந்த மொக்கை பாடலை நீங்கதான் பாடுஙக்ளேன்.. எல்லோரும் என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்..

ஏர்டெல் சூப்பர் சிஙர் ஜூனியர் தொடர்ச்சியாக பார்க்கிறேன். அதில் குறை சொல்ல ஒன்னுமே இல்லை... என்பது என் கருத்து

இப்படி மொக்கையா கருத்து சொல்லிட்டே இருந்தா ஓஞ்சுதான் போவீங்க சகா :))

விக்னேஷ்வரி said...

உங்கள் பதிவு வளரும் தலைமுறை மீது உங்களுக்குள்ள அக்கறையையும், மீடியாக்கள் மீது உங்களுக்குள்ள ஆதங்கத்தையும் காட்டுவதாக நான் பார்க்கிறேன். இந்த ஆதங்கம் இல்லாமல் எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டியாக இதைப் பார்ப்பவர்கள் வளரும் தலைமுறை ஒழிந்து போக சாபமிடுகின்றனர். விடுங்கள் தராசு, புரிந்தவர்கள் புரிந்து கொள்ளட்டும். புரியாதவர்கள் பட்டுத் தெளிந்து கொள்ளட்டும்.

உங்கள் ஒவ்வொரு பதிவும் மேலோட்டமானதாய் இல்லாமல் ஆழ இருப்பதை எண்ணி மகிழ்கிறேன். தொடருங்கள்.

தராசு said...

டேங்ஸ் விக்கி