Monday, November 16, 2009

கேபிள் சங்கரின் தந்தையும் நண்பனும்

கேபிள் அண்ணன் இழந்தது தன் தகப்பனை மாத்திரமல்ல, ஒரு நல்ல நண்பனையும்தான் என்று அறியும் பொழுது மனது நெகிழ்கிறது. ஜாக்கி சேகர் தன் பதிவில் இதை சொல்லியிருந்தார்.

இறப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றானாலும், தந்தையின் இழப்பு என்பது விட்டுச் செல்லும் வெற்றிடம் நிரப்ப முடியாததாகி விடுகிறது. உலகின் எந்த ஒரு மன்னனாகட்டும், மாமேதையாகட்டும், அவரின் தந்தையின் இழப்பு என்பது துக்கம் தருவது தான். இதே கட்டத்தை அடியேனும் கடந்து வந்திருக்கிறேன்.

இன்றும் என் அப்பா உபயோகித்த கைத்தடி, அவரின் கண்ணாடி, அவர் வாசித்த பைபிள், அவர் படுத்திருந்த படுக்கை, அவரது ஷேவிங் செட், அவரது வேஷ்டிகள் என இவற்றில் ஒன்றைக் கண்டாலும் தந்தையின் இழப்பு கண்ணை நிறைக்கும்.

கேபிள் அண்ணன் ஆறுதல் அடைய கொஞ்ச நாட்கள் பிடிக்கும். அவரது தேவையின் சமயத்தில் உண்மையாலுமே தோள் கொடுக்க பதிவுலகம் திரண்டு வந்திருக்கிறது என்பதை கேட்கும் பொழுது, பதிவுலகம் மூலம் உருவாகியிருக்கும் நட்பு வளையம் எவ்வளவு உறுதியும் நேயமும் மிக்கது என்பது தெரிகிறது. நர்சிம் தல, உங்கள் செயல்களால் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே போகிறீர்கள். வணங்குகிறேன்.

இதே ஒற்றுமை, இதே நட்பு, ஆக்க பூர்வமான செயல்களில் வரிந்து கட்டிக் கொண்டு முதலில் களம் இறங்கும் குணம் ஆகியவை பதிவர்களுக்குள் என்றும் நிலைத்திருக்க வேண்டுகிறேன்.

கேபிள் அண்ணே, தொலை தூரத்திலிருப்பதால் எழுத்தால் மட்டுமே, உங்கள் துக்கத்தில் பங்கெடுக்கவும், உங்களுக்கு ஆறுதல் சொல்லவும் முடியும். சென்னை வந்ததும் கண்டிப்பாக சந்திக்கிறேன்.

2 comments:

Ganesan said...

சனிக்கிழமை மதியம் கேபிள் வீட்டுக்கு சென்றேன்.மொத்தம் 15 பதிவர்கள் கூட இருந்தோம்.தம்பி நர்சிம் மதியம் 12.54 க்கு கேபிளின் தந்தை இறப்பு பதிவு போட்டார்.நான் மதியம் 1.05 க்கு நர்சிமுக்கு போன் போட்டேன், எங்க இருக்குகீங்க என்று, கேபிள் வீட்டில் இருப்பதாக தெரிவித்தார்.10 நிமிட கால அவகாசத்தில் வீட்டுக்கு போய்விட்டார்.அதே போல் உண்மை தமிழன் பதிவும் போட்டு வீட்டு முகவரியை தெளிவாக போட்டார்.மரணமடைந்தவர்களை வைக்கும் குளிர்சாதன பெட்டியை முரளிகண்ணனும், நர்சிமும், வெண்பூ முதல் மாடிக்கு தூக்கி சென்றனர்.ரொம்பவே நெகிழ வைத்த சம்பவம்.இரவு 10 மணிக்கு வீட்டுக்கு வந்தவுடன் மனைவியிடம் சொன்ன வார்த்தை, நல்லதோ, கெட்டதோ உறவினர் வரானோ இல்லையோ எங்க பதிவர்கள் 10 வது நிமிசம் வீட்டுக்கு வந்துருவாங்க, அது தான் நான் சம்பாத்தித்தது என்று.

Raju said...

மேல இருக்குற காவேரி கணேஷ் அண்ணனோட பின்னூட்டம் படிக்கும்
போது, உடம்பு புல்லரிக்கிது அண்ணே..!

மீண்டு வாருங்கள் சங்கர் அண்ணே..!