Wednesday, August 5, 2009

ஜுகல்பந்தி 5 ஆகஸ்ட் 2009 - இப்படியும் ஒரு வாரம்

பட்டியாலா - பிரபலங்களின் நகரம்.

வீரத்துக்கு பெயர் போன பஞ்சாப் மாநிலத்தின் பிரதான நகரங்களில் ஒன்று. நிலத்தின் மீது ஓடும் ஐந்து நதிகளினால் செழித்து வளர்ந்திருக்கும் பஞ்சாப் மாநிலத்தின் ராஜ குடும்பங்கள் இந்த ஊரிலிருந்துதான் தோன்றின. வெள்ளந்தி மனிதர்கள், உழைப்பை மட்டும் நம்புவர்கள், நட்புக்காக உயிரையும் கொடுப்பவர்கள், நாக்கில் நீர் சுரக்க வைக்கும் உணவு வகைகள், பசுமை நிறைந்திருக்கும் வயல் வெளிகள், இடுப்பில் கத்தியுடன் இன்றும் வாழும் சீக்கியர்கள், ஆணின் வீரத்திற்கு சற்றும் சளைக்காத பெண்கள் என இந்தப் பிராந்தியமே ஒரு மனமகிழ்ச்சியின் நிலப்பகுதி. பட்டியாலாவின் சீக்கியர்கள கட்டும் தலைப்பாகைக்கு என உலகெங்கிலும் ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. அந்த நேர்த்தியை பார்த்ததும் சொல்லி விடலாம் இவர் பட்டியாலா சர்தார்ஜி என்று. உதாரணத்திற்கு, மன்மோகன் சிங்கிற்கும், கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள். சித்து பட்டியாலாகாரர். அவரது தலைப்பாகையில் இருக்கும் நேர்த்தி, அந்த மடிப்புகளின் வரிசை, அந்த படகு வடிவ அமைப்பு ஆகியவை மன்மோகன் சிங்கிடம் இருக்காது. (கை காரர்கள், கை ஓங்க வேண்டாம், தலைப் பாகையை மட்டும் தான் சொன்னேன்).

இந்த ராஜ வம்சத்தின் துவக்கம் ஒன்றும் அவ்வளவு சுவராசியமானதாக இல்லை. சீக்கிய குருவான குரு ஹர்கோவிந்த் என்பவரது சீடர் மோகன் சிங் என்பவர் முதன் முதலாக 1627 ம் ஆண்டு இதற்கு அஸ்திவாரமிட்டதாக தெரிகிறது. இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்த ஒரே ஒரு தரை வழிப் பாதை என்பதால், சும்மா பொழுது போக்குவதற்காக அடித்துப் பிடுங்க வரும் ஆப்கானிய அரசர்கள் என்ற போர்வையில் திருடர்களின் தொல்லை ஒரு பக்கம், எப்பொழுதும் தங்களுக்குள் அடித்துக் கொண்டேயிருந்த ராஜபுத்திரர்கள் அண்டை வீட்டுக்காரர்களாகிப் போனது ஒரு பக்கம், இந்தியாவில் காலூன்ற நினைத்து வலுவாக அடித்தளம் அமைத்துக் கொண்டிருந்த முகலாய அரசர்கள் ஒருபக்கமென இருந்த பல்வேறு தொல்லைகளுக்கு மத்தியில், சீக்கியர்களுக்கென ஒரு தனி ராஜ்யத்தை நிறுவுவதற்க்கு மோகன் சிங் பெரும் பாடு பட வேண்டியதாயிற்று. முன்பொருமுறை ஜெய்சல்மீரில் இருந்த பட்டி இன ராஜ புத்திரர்களைப் பார்த்தோமே, அவர்கள் தான் அதிகம் தொல்லை கொடுத்தார்களாம்.

இதற்குப் பின் வந்து, மீசையை முறுக்கி தாடியை நீவி விட்டுக் கொண்ட எல்லா சர்தார்ஜிகளும், போர்க்களத்திலேயே தங்களது நாட்களை கழித்திருக்கிறார்கள். கடைசியாக, வடக்கிலிருந்து வந்த ஆப்கானியர்கள், உள்நாட்டிலேயே உள் குத்து வேலைகள் செய்யும் முகலாயர்கள், தெற்கிலிருந்து சீறி வரும் மராட்டியர்கள் ஆகிய மூவருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய சீக்கிய வீரர் பாபா அலா சிங் என்பவர்தான் இந்த சாம்ராஜயக் கனவை நனவாக்கும் பொருட்டு பர்னாலா என்ற நகருக்கு அடிக்கல் நாட்டினார். (பின்னாளில் இது பட்டியாலாவாக மாறியிருக்கக் கூடும்). மூன்றாவது பானிப்பட் யுத்தத்தில் வீரமுடன் போரிட்ட மராட்டியர்களை மண்ணைக் கவ்வ வைத்த ஆப்கானிய தளபதி அப்தாலி, இந்த சீக்கிய பாபா சிங்கை பாட்டியாலா சமஸ்தானத்திற்கு ராஜாவாக அபிஷேகித்து விட்டு சென்று விட்டார். இவர் கட்டியதுதான் 9 வரவேற்பு துவாரகங்களைக் கொண்ட கீலா முபாரக் என்ற கோட்டை.

இவருக்கு பின்பு வந்த ராஜ வம்சத்தில் ராஜா புபேந்தர் சிங் என்பவர், வாழ்க்கையின் ஒவ்வொரு நொடிகளையும் ஆனந்தத்தில் அனுபவித்தவர். இவரைப் பற்றி வாசிக்க அன்பர் முகில் எழுதும் அகம் - புறம் - அந்தப்புரம் வாசிக்கவும்., விளையாட்டில் அதிகம் பிரியம் கொண்டவர் இவர். ஆங்கிலேயர்களுடன் விருந்துகளில் சல்லாபிப்பது, விடுமுறைகளை கழிக்க வெளிநாடு செல்வது என உண்மையாகவே ராஜ வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்.

பட்டியாலாவிலிருந்து வந்த பிரபலங்கள் : விங் கமாண்டர் ராகேஷ் சர்மா, விண்வெளிக்கு சென்று வந்த முதல் இந்தியன், கிரிக்கெட் வீரர்கள் நவ்ஜோத் சிங் சித்து, மொகிந்தர் அமர்நாத், மற்றும் ஹிந்தி திரைப் பட உலகின் மார்க்கண்டேயன் ஓம் பூரி, ஜெட் ஏர் வேஸ் நிறுவன அதிபர் நரேஷ் கோயல், பஞ்சாபி பாப் பாடகர்கள் குருதாஸ் மான், தலேர் மெஹந்தி இன்னும் பலர்.

இன்றும் அதன் துணி தொழிற்சாலைகளின் சிறப்புகளோடு விளங்கும் இந்நகரில் பார்க்கவேண்டியவை : கீலா முபாரக், மோதி பாக் அரண்மனை, ராஜேந்திர கோதி போன்றவை.

நாட்டு நடப்புகள் - இப்படியும் ஒரு வாரம்

ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து எட்டாம் தேதி வரை தாய்ப்பால் வாரமாம். என்ன கொடுமை சார் இது????
பெத்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு ஒரு வாரம் கொண்டாட வேண்டுமா?? எல்லா தாய்மார்களிடமும் மருத்துவர்கள் கூறும் அறிவுரை, தயவு செய்து தாய்ப்பால் கொடுங்கள் என்பதுதான். ஆனால், உறவுகளை மறந்துவிட்ட மனித இனத்துக்கு அதன் முக்கியத்துவத்தை நினைவு படுத்தும் வகையில் ஒரு நாளை தாய்மார் தினம் எனவும், இன்னொரு நாளை தந்தையர் தினமெனவும், நண்பர்களுக்கு நட்பின் அவசியத்தை உணர்த்த நண்பர்கள் தினமெனவும், காதலர்களுக்கு காதலர் தினமெனவும் கொண்டாடுவதன் அவசியமிருக்கும்பொழுது, இயற்கையாக நிகழ வேண்டிய தாய்ப்பாலூட்டும் நிகழ்வை, அன்பின் வெளிப்பாட்டை, தாய்மையின் மேன்மையை, அமுதத்தின் சுரப்பை வலியுறுத்தி அதை ஒரு வாரமாக கொண்டாட வேண்டிய பரிதாபத்திற்கு இன்றைய பெண்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். மேனியழகின் பைத்தியம், அழகுச்சாதனங்களின் மோகம் ஆகியவை இன்றைய தாய்களுக்கு தனது தொப்புள் கொடியில் இணைந்து கிடந்த சிசுவுக்கு பாலூட்ட வேண்டும் என்பதை உணர்த்த ஒரு விழிப்புணர்வு வாரம் கொண்டாட வேண்டிய அவலத்திற்கு தள்ளிச் சென்றிருக்கிறது.

போதும்யா, இதுக்கு மேல பேசுனா பெண்ணிய வாதிகள் பின்னி பெடலெடுத்துருவாங்க.

பதிவர் வட்டம்

பதிவர்கள் கூட பேசி வெச்சுகிட்டு வாரம் கொண்டாடறாங்களோ என்னமோ தெரியல,

குருஜிக்கு இது குமார்ஜி வாரம், கார்க்கி, டக்ளஸ், பரிசலுக்கு இது கவிதை வாரம், புலம்பலுக்கு இது கருத்து கணிப்பு வாரம், அதிசயமா கார்ப்பரேட் கம்பருக்கு இது மொக்கை வாரம், நையாண்டி நைனாவுக்கு எதிர் பதிவு வாரம், அப்புறம் அப்துல்லாவுக்கு மற்றும் முரளி கண்ணனுக்கு காணாமல் போகும் வாரம்.

எது எப்படியோ நல்லா இருங்க சாமி, இந்த காணமல் போன ஆசாமிகள கொஞ்சம் பார்த்தா பதிவுலகம் தேடுதுன்னு சொல்லுங்க.

ங்கொய்யால பக்கம்:

கரிசனமா பாக்கறது பெத்தவங்கடா,

ஒரு ரத்தமா பாக்கறது கூடப் பொறந்தவண்டா,

கட்டுனவ பாக்குறது ரெண்டு உசிரு ஒரு உடல்றா

ஆனா, ங்கொய்யால,

உம்மனசுதான் எம்மனசுங்கறது நண்பன் மட்டும்தாண்டா.

4 comments:

கார்க்கிபவா said...

எனக்குத்தான் கவிதை வாரம்..

எங்க தல அனுஜன்யாவுக்கு கவிதை வரங்க

:))))

(தல பார்ப்பாரான்னு தெரியலையே)

Thamira said...

அனுஜன்யாவையும் தொலைந்தவர்கள் பட்டியலில் சேர்க்கவும்.

அப்புறம் ஏன் இப்படி புடிச்சு உக்கார வெச்சு ஹிஸ்டரி பாடம் எடுக்குறீங்க.. கடைக்கு கூட்டம் வரணும்னு நினைக்குறீங்களா? இல்லையா?

ங்கொய்யால.. பிரமாதம்.!

Raju said...

அண்ணே, பாட்டியாலா தகவலக்ள் கொஞ்சம் அதிகமா போயிடுச்சு மற்ற நகரங்களை விட..
ஆனால், சுவாரசியம்.

தாய்ப்பால் மேட்டர் கொடுமை...!

அய்.. அப்போ நான் எழுதுனது கவிதையா..? அப்போ நான் கவிஞனா.? ஜாலி.

"ங்கொய்யால" சூப்பர்..(வழக் கலக்)

நானும் அப்துல் அண்ணனையும், மு.க. அண்ணனையும் தேடிக்கிட்டுதானிருக்கேன்.

நாஞ்சில் நாதம் said...

\\ஏன் இப்படி புடிச்சு உக்கார வெச்சு ஹிஸ்டரி பாடம் எடுக்குறீங்க//

ஆதி சும்மா இருங்க. எதோ ஒவ்வொரு நகரமா சொல்லி தறாரு. கேட்டுப்போம்.

நல்லாயிருக்குண்ணே ஜுகல்பந்தி.

ங்கொய்யால பக்கம் இன்னும் கொஞ்சம் நல்லா கொடுக்கலாமே