Tuesday, March 3, 2009

வாருங்கள், விஷத்தின் வேரறுப்போம்!!!

இலங்கை கிரிக்கெட் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, தீவிர வாதிகள் அட்டகாசம்.

மும்பையின் ரயில் நிலையத்தில் அப்பாவி மக்கள் மீது தீவிரவாதிகளீன் கண்மூடித்தனமான துப்பாக்கி சூடு.

சகோதரர்களே, மேற்சொன்ன செய்திகளெல்லாம் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன?தீவிரவாதம் எனும் நச்சு, நமது சமூகத்தை இன, மொழி, மத பாகுபாடின்றி எல்லோரையும் பாதித்திருக்கிறது.அமர்நாத் யாத்திரைக்கு சென்ற இந்துக்களுக்கு தங்க இடம் மறுக்கப்பட்டு, காஷ்மீரில் ரத்த ஆறு ஓடியவுடன், ஊடகங்களில் ஒரு சாரார் அநியாயத்தைப் பாருங்கள், இந்திய நாட்டில் இந்துக்களுக்கே உரிமை மறுக்கப்படுகிறது, இதுதான் மதச் சார்பின்மையா? என குமுறித் தீர்த்தார்கள்.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப்பிறகு, குஜராத்தில் நடந்தேறிய கலவரங்களைக் கண்டு இன்னொரு சாரார், சிறு பான்மையினர் நசுக்கப்படுகிறார்கள், அரசாங்கம் தன் அனைத்து இயந்திரங்களையும் பயன் படுத்தி வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது என ஊடகங்களில் கூக்குரலிட்டார்கள்.

ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டவுடனும், அந்த வன்முறைத் தீ நாட்டின் பல பாகங்களுக்கும் பரவி கிறிஸ்தவர்களின் வீடுகள், தேவாலயங்கள் ஆகியவை சேதப்படுத்தப்பட்ட பொழுதும் மதச் சார்பின்மைக்கு முழு விலாசம் சொல்லுவதாக பாசாங்கு செய்யும் ஒரு சாரார் அதை சர்வதேச ஊடகங்களின் கவனம் திரும்பும் அளவுக்கு ஊதிப் பெரிதாக்கினார்கள்.

இந்த கூக்குரலும், குமுறலும், பஞ்சாயத்தும், பேச்சு வார்த்தையும் அந்த எரியும் தணல் புகையும் வரை மட்டுமே. புகை அடங்கியவுடன், ஊடகங்கள் வழக்கம் போல யாருக்கு சிண்டு முடிந்து விட்டு பரபரப்பை உண்டாக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்து விடுகின்றன. இதன் மூலம் தங்களது வர்த்தகத்தை எவ்வளவு பெருக்கலாம் என்ற கேவலமும் அருவருப்புமான கணக்குப் போடுவதிலேயே நேரம் செலவிடுகின்றனர்.

போலி மதச் சார்பின்மை வாதிகள் அடுத்த கலவரம் எப்பொழுது உண்டாகும், நாம் விவாதம் செய்து பேட்டி கொடுத்து, நாமும் குழம்பி, அடுத்தவரையும் குழப்பி, பிரச்சனையின் வீரியத்தை எவ்வளவு திசை திருப்ப முடியுமோ, அவ்வளவு திசை திருப்பலாம் என காத்து காத்து தவம் கிடக்கிறார்கள்.மத வாதிகளோ, அடுத்து எங்கிருந்து தொடங்கலாம் என யோசிக்க ஆரம்பித்து, அடுத்த பிரச்சனைக்கான தொடக்கம் கிடைப்பதற்கு அரும்பாடு படுகிறார்கள். யோசித்துப் பாருங்கள், ஒரு கவர்ச்சி நடிகை நீதிமன்றத்துக்கு வரும் போது என்ன உடை அணியலாம் அல்லது அணியக் கூடாது என்பது கூட மதவாத கோட்பாடுகளால் நிர்ணயிக்கப்பட வேண்டிய விஷயமாகிறது என்றால், மதம் எனும் பித்து நம்மை எவ்வளவாக பீடித்து இருக்கிறது என்று பாருங்கள்.

ஆனால் இருவர் மட்டுமே தங்களது கொள்கையில் பிடிவாதமாக மற்றும் நிலையாக முன்னறிச் செல்கிறார்கள்.ஒருவர் திருவாளர் தீவிரவாதி, மற்றொருவர் திருவாளர் பொது ஜனம்.தீவிரவாதி அடுத்த தாக்குதலுக்கு ஏற்ற இடம் எது என முதலில் வெடித்த குண்டுச் சத்தம் அடங்குவதற்கு முன்பே யோசிக்க ஆரம்பித்து விடுகிறார். நமது இல்லத்தரசிகள் சொல்வார்களே " இந்த தீபாவளிக்கு லட்டு சுடும் பொழுது, பூந்தி இன்னும் கொஞ்சம் சின்னதா இருந்திருந்தா நல்லாயிருந்திருக்குமோ? எதுக்கும் அடுத்த தீபாவளிக்கு கொஞ்சம் சின்ன கண்ணு வெச்ச அரிகரண்டி வாங்கி பூந்தி செஞ்சு பாக்கணும்" என்பது போல, "அடுத்த முறை குண்டு வைக்கும் பொழுது கொஞ்சம் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள இடமா பாத்து வைக்கணும், பய புள்ளைக ஒரு முன்னூறு பேராவது சாவாங்கன்னு பாத்தா, வெறும் நூறு பேருதான் செத்திருக்காங்க, அடுத்த தரம் நம்ம பசங்க கிட்டச் சொல்லி கொஞ்சம் பவர் கூடுதலான குண்டா செய்யச் சொல்லணும்" என்பது போன்ற எதிர்காலத்திட்டத்தில் மூழ்கிப் போகின்றனர்.

திருவாளர் பொதுஜனமோ, யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன, எங்க வீட்ல அடுப்பு எரிஞ்சுதா, எங்க புள்ளைங்க பள்ளிக்கூடம் போயிட்டு சரியா திரும்பி வந்தாங்களா, சின்னத்திரை சீரியல ஒரு நாள் கூட விடாம பார்த்தாச்சா, சரி நாள் முடிஞ்சது, படுத்து தூங்கு. நாளைய பாட்டை நாளைக்கு காலைல பார்த்துக்கலாம் என்ற கடமையற்ற சுய நலத்துடன் அவரும் முன்னேறிச் செல்கிறார்.

நேற்று வரை பூக்கள் பூத்த இந்த நந்த வனங்களில் முட்களை விதைத்தது யார்?
நேற்று வரை தென்றல் வீசிய எங்கள் தெருக்களில் இன்று சூறாவளிகள் ஏன்?
அணைக்க மட்டுமே விரிந்த கரங்கள் இன்று அரிவாள் தூக்க துடிப்பது ஏன்?

ஏனைனில் நேற்று வரை எங்கள் நந்த வனங்களில் முட்களைக் கண்டவுடன் அதை இருவராய் இணைந்து வேரறுத்தோம். ஆனால் இன்று, அந்த முட்கள் என் பாதத்தை பதம் பார்க்காதவரை அது பூவனால் என்ன, முள்ளானால் என்னவென்று சுயநல கூட்டிற்குள் சுருங்கி விட்டோம். சமூகத்தை பீடிக்கும் நச்சுக்கள் என் இல்லத்து கதவை தட்டாதவரை எனக்கு அதனால் ஒரு தொல்லையுமில்லை என்று சுயநலத்தோடு முடிவெடுத்து விட்டோம். ஆனால், அன்பரே, சமூகம் என்பதே நாம் தானே. நம் சமூகத்தை தன் கோரப்பிடிக்குள் வைத்திருக்கும் தீவிரவாதத்திற்கு குண்டு வெடித்து கொலை செய்யும் ஒருமுகம்தான் உள்ளது என பொய்யாய் கற்பனை செய்யாதீர்கள். அதன் முகத்திற்கு சினிமா, சின்னத்திரை, சுயநலம், அரசியல், மிதமிஞ்சிய பண ஆசை, ஜாதி, லஞ்சம், போலியான ஆன்மீகம், வக்கிரம் என பல முகங்கள் உண்டு. இத்தனை முகங்களில் ஏதாவது ஒன்றினை முகமூடியாய் அணிந்து கொண்டுதான் நானும் நீங்களும் போலியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.அடாடாடா, ஒரு பெண்துறவி குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு விட்டார் என்றவுடன், இணைய ஊடகத்திலும் சரி, தொலைக்காட்சி ஊடகத்திலும் சரி, பதிவர் வட்டத்திலும் சரி எத்தனை கொக்கரிப்புகள், ஆகா, இதற்காகத்தானே காத்திருந்தேன் , வாருங்கள் துரியோதனர்களே, துச்சாதனர்களே, இன்று இந்த திரௌபதி உங்களை துகிலுரிக்க தருணம் வாய்த்தது என எத்தனை ஏளனங்கள், எத்தனை தீர்க்கதரிசனங்கள், எனக்கு இது எல்லாமும் முன்னாலேயே தெரியும் என்றும், இந்துத்துவாவின் கோர முகத்தைப் பாரீர் என்றும், யார் தீவிர வாதிகள் என்ற விவாதங்களும் அப்பப்பா, வாசிக்க வாசிக்க மூச்சு முட்டுகிறது.சகோதரர்களே!

ஒருவருக்கு நேராய் ஒருவர் விரல் நீட்டிவிட்டு ஒதுங்கி விடுவதால் இந்த தீவிரவாதம் எனும் துர்குணம் நம்மை விட்டு நீங்கி விடுவதில்லை. நான் மாற்றி நீ, நீ மாற்றி நான் என்று போட்டி போட்டுக்கொண்டு குற்றம் சுமத்துவதால், இந்த தீவிரவாதம் எனும் பீடை நம் சமூகத்தை விட்டு விலகிப் போய் விடுவதில்லை. முதலில் இதற்கு மதச்சாயம் பூசுவதை நிறுத்துங்கள். தீவிர வாதத்தில் அது என்ன இந்து தீவிர வாதம், கிறிஸ்தவ தீவிரவாதம் மற்றும் முஸ்லிம் தீவிரவாதம்? எல்லா வாதங்களும் நம்மை அழிவுக்கு இட்டுச் செல்பவையே. சுட்டிக்காட்ட நீட்டிய விரல்களை சுருக்கி மடக்குங்கள்.

எந்தக் கடலை கடைந்தெடுத்து இந்த விஷத்திற்கு மருந்திடுவோம் என சிந்திப்போம், அனுப்புங்கள் ஆயிரம் அனுமார்களை, இந்த வியாதிக்கான மூலிகை தளைப்பது ஆயிரம் மலைகளிலானாலும் அப்படியே பெயர்த்துவர ஆணையிடுங்கள். இந்த விஷத்தின் வேரை நாமே அறுத்தெறிவோம், நம் குழந்தைகளாவது வருங்காலத்தில் அமுதம் மட்டுமே விளையும் பூமியில் வாழட்டும்.

1 comment:

Anonymous said...

ஏன் நல்லாத்தானே எழுதியிருக்கீங்க? ஏன் ஒருத்தரும் கமெண்ட் போடலை?

நல்ல எழுத்துன்னு நானாவது சொல்லிக்கிறேன்.