Friday, July 9, 2010

பெண்ணியம் பேசுவோம் வாருங்கள்.



சகோதரி யமுனா ராகவன் எழுதிய இந்தப் பதிவை வாசித்துப் பார்த்தேன். ஒரு பெண்ணின் பிரச்சனைகளை மிக மிக துல்லியமாகவும் எதார்த்தம் நிறைந்த வார்த்தைகளாலும் எழுத்தில் வடித்து விட்டார்.

நேற்றைய நாளை தொலைத்து விட்டு, வரும் நாளைய நாளின் துன்பங்களை எதிர் நோக்கி நொந்து பயந்து, இதோ இப்பொழுது கடக்கும் இந்த விநாடியிலும் தான் சந்திக்கும் ஒவ்வொரு ஆணாலும் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் பெண்ணின் இழிநிலையை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் அற்புத காவியமிது. தன் வீட்டினுள் எந்தவொரு நொடிப் பொழுதிலும் அன்பு என்பதையே இம்மியளவும் அனுபவிக்காமல், சூரியன் உதித்து, சூரியன் மறையும் வரை, ஏன் சூரியன் மறைந்த பின்பும் கதறக் கதற சித்திரவதைப் படுத்தப் படுவதே வாழ்கை நியதியாகிவிட்ட நடுத்தர வர்க்க பெண் தெய்வங்களின் ஒட்டு மொத்த மனக் குமுறலையும் ஒரே மூச்சில் குமுறியிருக்கிறார்.

வாழ்த்துக்கள் சகோதரி.

ஒரு மானுட உயிருக்கான வாழ்க்கை எனும் பந்தயத்தில் முதலிடம் பெறுவது மட்டுமல்ல, முழு ஓட்டத்தையும் ஓடி முடிப்பதே ஒரு மாபெரும் சாதனைதான். இதில் பாலின பேதமின்றி எந்த ஒரு உயிரினத்திற்கும் தன்னம்பிக்கை என்ற ஒரு சக்தி இருந்தால் மாத்திரமே அது சாத்தியம். தடைகளை எளிதாய் தாண்டி முதலிடம் எனும் சிறப்பு பெற தைரியம்/துணிவு உள்ளிட்ட பல சிறப்புகளினால் நெஞ்சு நிறைந்த உயிரினம் மட்டுமே உயர்வை அடைய முடியும்.

ஆனால், எனக்கு முன்னே பாழ்நிலம் இருந்தது, என் பாதையெங்கும் முட்கள் முளைத்திருக்கிறது, என் ஓட்டப் பாதையில் சிகரங்களை செதுக்கி வைத்து விட்டார்கள் என பாசாங்குத் தனமான சாக்குப் போக்கு சொல்வோமெனில் நாமும் பத்தோடு பதினொன்றாய் தடம் மாறி ஓடிக்கொண்டிருக்கலாம்.

உங்கள் எண்ணங்களின் வெளிப்பாடுகளிலிருந்து நீங்கள் முன்வைக்கும் குற்றச் சாட்டுகள் :

உலகில் பிறந்த ஒவ்வொரு ஆண்மகனும் பெண்ணினத்தை மனதளவில் சிறுமைப் படுத்த கிடைக்கும் எந்தவொரு தருணத்தையும் தவறவிடாது உபயோகிக்கிறான்.
மூலைக் கடையில் சிகரெட் பிடித்து , பெண்ணைக் கண்டதும் முகத்தில் ஊதுகிறான்.
காலையில் எழுந்தவுடன் தன் மனைவியை தேடிப் பிடித்து அவளை வசவுகளால் கதறக் கதற குதறிவிட்டு, அவள் படும் வேதனைகளை பார்த்து உள்ளூர மகிழ்கிறான்.
பெண்கள் பயணிக்கும் ஒவ்வொரு பஸ்ஸிலும் இப்படி காலையில் சாட்டையால் அடிக்கப்பட்ட பெண்ணை தேடி வந்து அவர்களின் உடலில் தன் ஆணுறுப்பை உரசி மகிழவென்றே பயணிக்கிறான். அல்லது அப்படி உரசும் பொழுது அந்த பெண் படும் வேதனைகளை கண்டு மனம் மகிழ்கிறான்.
உங்கள் மொழியில் சொல்வதென்றால், பஸ்ஸிலிருந்து இறங்கியவுடன் “மாம்ஸ் இன்னைக்கு பஸ்ஸூல ஒரு Aunty செமயா Company குடுத்தாடா” என சொல்லி சந்தோஷமடைகிறான்.
நீங்கள் வெண்டைக்காயோ தக்காளியோ வாங்குவதில் முனைப்பாய் இருக்க, உங்களின் இடுப்பையோ, பிட்டத்தையோ அல்லது சேலைத் தலைப்பு விலகியிருக்கும் மார்பையோ பார்ப்பதில் இன்பம் கொள்கிறான்.
அலுவலகத்தில் நீங்கள் உங்கள் சுய திறமையினால் செய்யும் எந்தவொரு வேலையின் வெற்றியையும், நீங்கள் உடல்காட்டி ஜெயித்தீர்கள் என சொல்லியே உங்களை காயப் படுத்துகிறான்.
நீங்கள் சந்தித்த 90 % ஆண்கள் உங்கள் மார்பை பார்த்தே பேசியிருக்கிறார்கள். மீதி பத்து சதவீதம் பேர் பார்க்கவில்லை என நீங்கள் சொல்லவில்லை, ஆனால், அவர்கள் பார்த்ததை நீங்கள் பார்க்கவில்லை என சொல்கிறீர்கள், அப்படியானால் நீங்கள் சந்தித்த அல்லது உங்களை பார்த்த ஒரு ஆண்மகன் கூட யோக்கியன் இல்லை, எல்லாரும் உங்கள் ஆடையை அவிழ்த்து அம்மணமாக்கி, உங்கள் நிர்வாணத்தை அணு அணுவாய் ரசிக்கும் காமுக வக்கிரர்களாகவே இருக்கிறார்கள்.

புள்ளி விவரங்கள் தருகிறீர்கள், எத்தனை பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள் என்று. வாருங்கள், இன்னொரு புள்ளி விவரம் பார்ப்போம், இன்றைய தேதியில் தொடுக்கப்படும் பாதுகாப்பு கோரும் வழக்குகளில் 62 % வழக்குகள் ஆண்களால் தொடுக்கப்படுகிறது. (வாசியுங்கள்). இந்த வழக்குகள் எதற்காக தொடுக்கப்படுகிறது என்றால் தன் மனைவியிடமிருந்து தனக்கு பாதுகாப்பு கோரி தொடுக்கப்படுகிறது. பெண்களால் தொடுக்கப்படும் 97% வரதட்சணை வழக்குகள் பொய்யானவை என தினமும் ஒவ்வொரு நீதிமன்றத்தாலும் கண்டிக்கப்படுகிறது. இப்பொழுது சொல்லுங்கள், அல்லது உங்கள் மொழியிலே சொன்னால் எப்பொழுதும் உங்களை காமத் தினவெடுத்துப் பார்க்கும் உங்களைச் சுற்றியுள்ள ஆண்களில் 62 பேர் பெண்களைப் பற்றிய பயத்திலேயே வாழ்கிறார்கள். 97 பேர் பொய் வழக்குகளினால் தங்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டு, செய்யாத குற்றத்திற்காய் போலீசாலும் சமுதாயத்தாலும் அவமானப் படுத்தப் பட்டு, சிறுகி குறுகி, நடைபிணங்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்பொழுது நான் சொல்லட்டுமா, நான் சந்திக்கும் பெண்கள் அனைவருமே, பெண் எனும் போர்வையில் ஒழிந்துகொண்டு என்னை எப்படி எல்லாம் சித்திரவதைப் படுத்தலாம் என 24 மணி நேரம் கணக்குப் போடும் மனநிலை பிறழ்ந்த சைக்கோத் தனமானவர்கள் என்று.

அல்ல, அப்படியல்ல தோழி.

Physical Abuse and Verbal Abuse என தினமும் ஒவ்வொரு பெண்ணும் தன் சொந்தக் குடும்பத்திற்குள் கொடுமைப் படுத்தப் படுகிறாள் என குமுறி யிருக்கிறீர்கள். எனது பார்வையில் இந்த சுதந்திரத்திற்கு மாத்திரம் குடும்பம் எனும் அமைப்பில் ஒரு எல்லையே இருக்க முடியாது. (May be it sounds absurd, but practically this is the truth ). வாதத்திற்காக பல எதிர்மறை கருத்துகளை சொல்லி இதுதான் எல்லை என நீங்கள் வண்ணமும் தீட்டி விடலாம், ஆனால் எல்லைகள் வரைந்தபின் குடும்பம் என்ற ஒன்றை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

மனைவி மஞ்சள் கலர் புடவை கட்டியிருக்கும்பொழுது, கணவன் “அந்த ரோஸ் கலர் புடவைல தாம்மா நீ அம்சமா இருக்க” என சொன்னால், இதை உங்கள் கோணத்திலிருந்து பார்த்தால், ஆண் தன் விருப்பத்தை பெண்மீது திணிக்கிறான், அவளது உடை விஷயத்தில் கூட தனது ஆதிக்கத்தை நிலைப்படுத்துகிறான். ஆனால் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டுவது வெளித் தெரியாமலிருக்க மென்மையான வார்த்தைகளில் அன்பொழுக பேசி, ஒன்றும் அறியா அப்பாவி பெண் மனதை தன் வசப் படுத்துகிறான். உண்மைதானே சகோதரி, இதுதானே உங்கள் வாதம். இங்கு தானே எல்லை தேவைப் படுகிறது என்று உரக்கச் சொல்கிறீர்கள்?

இப்படியும் யோசித்துப் பாருங்கள், தன் உயிரில் பாதியான தன் மனைவியிடம் தன் விருப்பத்தை வெளிப்படுத்துவதும் கூட ஆதிக்க வெளிப்பாடா? விருப்பம் எனபது உடல், உள்ளம், உணர்வு இன்னும் எதையெல்லாம் சொல்ல முடியுமோ, அத்தனைமீதும் ஆண் தன் விருப்பத்தை வெளிப்படுத்தினால், அதுவும் Abuse தானா?

ஒவ்வொரு கணவனும் தன் துணையின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு தினமும் அவளை வன்புணர்கிறான். அந்த கலவி வேளையிலும் கூட பெண்ணின் ஒழுக்கத்தை கேலி செய்தே புணர்கிறான் என்கிறீர்களே, இது ஒரு அதீத கற்பனையாக தெரியவில்லையா தோழி? அல்லது எதாவது குற்றம் சொல்ல வேண்டுமே என்பதற்காக புனைந்து தெளிக்கிறீர்களா? தன் உடல் தேவையை தீர்த்துக் கொள்ள கணவன் யாரிடம் செல்வான்? அல்லது பெண்களுக்கு உடல் தேவையே என்றும் இருந்ததில்லையா?

மற்றபடி நீங்கள் சொல்லும் Financial Abuse மற்றும் Alpha Male ஐப் பற்றி என்னால் யோசிக்கவும் முடியவில்லை. ஏனெனில் உங்கள் உணர்வுகளின் வெளிப்பாடு என் கற்பனை எல்லைக்கு அப்பால் இருக்கிறது. இந்த தலைப்பில் நீங்கள் சொன்ன கருத்துக்கள் எல்லாம் என்னவோ ஒவ்வொரு ஆணும் தனது மனைவியின் உடலை விற்று சம்பாதிக்கும் மாமா பயல்கள் என்கிறீர்களோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. ஆமாம், வேசி உடலை விற்க கட்டாயப் படுத்தப் படுகிறாள், நீங்கள் சொல்லும் ஒவ்வொரு பெண்ணும் தன் திறமைகளை விற்க கணவனால் கட்டாயப் படுத்தப் படுகிறாள். பெரிதான வித்தியாசம் ஒன்றும் இல்லை. நான் ஏன் நான் மட்டும், கண்டிப்பாக நீங்களும் கூடத்தான் இத்தகைய ஒரு சமூகத்தில் வாழ்வதில்லையாதலால் என்னால் இதை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

வருகிற கோபத்தில், யாரையாவது கொல்ல வேண்டும் என்ற ஆத்திரத்தில், கண்ணை மூடிக் கொண்டு அம்பெய்கிறீர்கள் தோழி, உங்கள் மார்பை மட்டுமே பார்த்துப் பேசிய 100 சதவீத ஆண்களில் உங்கள் ரத்த உறவுகள் யாரும் இல்லையா? அல்லது அவர்களையும் சேர்த்துத்தான் சாட்டையால் அடிக்கிறீர்களா? உங்கள் நந்த வனத்தில் புகுந்த ஒரு சில ஓநாய்களுக்காக, ஒட்டு மொத்த விலங்குகளையும் பட்டயக் கருக்கில் வெட்டிக் கொல்லத் துணியாதீர்கள். அப்படிச் செய்தால் உங்கள் நந்தவனம் புள்ளிமான்களின் பிணக்காடாகி விடும்.

பஸ்ஸில் உங்களை உரசி நிறகும் மிருகப் பயலை ஏன் சகித்துக் கொள்கிறீர்கள்? அவன் தாடையைப் பெயர்த்து விடுங்கள். அலுவலகத்தில் புறம் பேசும் கையாலாகாத ஆண்சிங்கங்களுக்கு தக்க பதிலடி கொடுங்கள்.

பெண்மை என்பது வெறும் மென்மை மாத்திரமல்ல, அவசியப்பட்டால் அடித்து நொறுக்கும் வன்மையும் கூடத்தான் என புரிய வையுங்கள்.
பெண் என்பவள் சிரித்து நிற்பது மட்டுமல்ல, சிலிர்த்து சீறவும் வேண்டும் தோழி.

இதை விடுத்து கண்ணில் பட்ட ஆண்களுக்கெல்லாம் மிருக வேஷம் கட்டாதீர்கள். அப்படியானால் மிருகங்களுக்கு மத்தியில் வாழ்வது கிடக்கட்டும், மூச்சு விடுவதே சிரமமாகி விடும்.

பகிர்தலும், புரிதலும் கொண்டு உங்களை போலவே என்னையும் நடத்த வேண்டும் என்பதே நான் இறுதியில் முன்வைக்கும் ஒன்று என்று சொல்லுகிறீர்கள்

இங்கு நீங்கள் உன்னை முழுதும் பகிர்ந்து கொள், என்னை முழுதும் புரிந்து கொள் என சொல்லியிருந்தால் மிகவும் சந்தோஷப் பட்டிருப்பேன். ஆனால், இங்கு பகிர்தலுக்கும் புரிதலுக்கும் விகித அளவுகளை முன்வைக்கிறீர்களே, இது எவ்வகையில் சாத்தியம்?

எனக்கான சுதந்திரத்தை நீங்கள் கொடுக்கவேண்டாம். என்னிடம் இருந்து பிடுங்காது இருந்தால் போதும் என்கிறீர்கள்.

இந்தப் புரிதலில்தான் வாழ்வின் மொத்த சூட்சுமமும் அடங்கியிருக்கிறது. எனது சுதந்திரம் என எல்லை வகுக்காதீர்கள். நமது சுதந்திரம் என உரத்துச் சொல்லுங்கள். எங்கு எனது மறைந்து நமது வருகிறதோ அந்த உலகமே ஒரு உல்லாச புரியாயிருக்கும். வாழ்த்துக்கள். வளமையோடு, வல்லமையோடு வாழுங்கள்.

47 comments:

தனி காட்டு ராஜா said...

அருமையான எதிர் வினை தல ....
என் கருத்தும் ஏற குறைய இது தான் .......
ஆண் பாலியல் தேவை காரணமாக சில சமயம் வரம்பு மீறி நடந்து கொள்கிறான் என்பது மறுக்க முடியாத உண்மை தான் .......
ஆனால் அதையே பெண்கள் ஆயுதமாக எடுத்து கொண்டு ..பெண்கள் அனைவரும் உத்தமிகள் ..ஆண்கள் அனைவரும் அயோக்கியர்கள் என்ற ரீதியில் பினாத்துவது எரிச்சலை தான் ஏற்படுத்துகிறது ......
பெண்கள் யாரவது இது போல் எழுதி விட்டால் ...ஆமாம் ...உண்மை ..உண்மை என்று ஜல்லி யடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்......

pinkyrose said...

naanum oru pen thaan but tharaasu n raja sir enakum unga karuthu thaan aan pen apdingrathavida manitharhaloda iyalbu sila samayam ipdi thaan ...
ean, sigmund solran ellarum apdi thaan but samooham palakkavalakkam nammbikkai bayam ithu pondra kaaranangal thaan manithanai manithanaai irukka vaikuthu...

any hw penkal balaheenamanavarhal n unarchi poorvamaanavarkal (yaar eethukittalum illanaalum ithu unmainga sila per apdi oru karpanai pannikalaam but all r same its nature.n alsoithu iyalbu thappu kidaiyaathu )
athanala antha sahothari kumuri irukalaam..

soundr said...

என்னுடைய எதிர் வினை,
(அந்த இடுகையிடும் போது இருந்த மன நிலையிலேயே இப்போதும் அந்த பதிவை இருப்பாராயின்....)

pls. contact:
Dr. Shalini,
Consultant Psychiatrist or
atleast any clinical psychologist.

http://vaarththai.wordpress.com

எல் கே said...

aaanathikkavathi agiteenga.. vaalthukkal

அமுதா கிருஷ்ணா said...

ஆணோ, பெண்ணோ அடுத்தவர்களுக்கு எந்த விதத்திலும் தொந்தரவும் கஷ்டமும் தராமல் வாழணும்..இப்பொழுதெல்லாம் பெண்கள் ஆண்களை படுத்துவது தான் ஜாஸ்தியாய் கொண்டு இருக்கிறது.அதுவா பெண் சுதந்திரம்? ஒரு குழந்தை வைத்திருக்கிறோம் என்ற பெயரில் எந்த குழந்தையாக இருந்தாலும் செல்லம் என்ற பெயரில் அவர்களை கெட்டு சீரழிப்பது இன்றைய பெற்றோர்.வருங்கால சமுதாயம் நல்லாயிருக்கணும் என்றால் இப்பொழுதைய பெற்றோர் தான் முழுபொறுப்பு..இனியாவது எந்த குழந்தையானலும் பேதம் இன்றி வளர்ப்போமே.நல்ல ஆரோக்கிய சூழ்நிலை வருமே..

Robin said...

போடா நாயே என்று முகத்தில் அறைந்து சொன்னாலும் ஹி ஹி ஹி சரியாச் சொனீங்க என்று இளிக்கும் ஜொள்ளுவாயர்கள் இருக்கும்வரை இப்படி ஆண்கள் அனைவரையும் மிருகங்கள்போல சித்தரிக்கும் பதிவுகள் வரத்தான் செய்யும்.

ஆண்களில் சில அயோக்கியர்கள் உண்டு; ஆனால் பெண்கள் எல்லாரும் நல்லவர்களா?
மற்ற ஆண்கள் பார்க்கட்டும் என்று வேண்டுமென்றே அரைகுறை ஆடைகளை உடுத்துக்கொண்டு திரியும் பெண்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்.

தனி காட்டு ராஜா said...

//போடா நாயே என்று முகத்தில் அறைந்து சொன்னாலும் ஹி ஹி ஹி சரியாச் சொனீங்க என்று இளிக்கும் ஜொள்ளுவாயர்கள் இருக்கும்வரை இப்படி ஆண்கள் அனைவரையும் மிருகங்கள்போல சித்தரிக்கும் பதிவுகள் வரத்தான் செய்யும்.//

ஹா..ஹா ..ஹா....

தராசு said...

வாங்க தனிக் காட்டு ராஜா,

ஆணின் பாலியல் தேவை வரம்பு மீறியது என சொல்கிறீர்களே, உங்கள் மொழியில் எது வரம்பு?

தராசு said...

வாங்க பிங்க் ரோஸ்,

கருத்துக்கு நன்றி.

பலவீனத்தால் குமுறியிருக்கலாம் என்று சொல்லி ஒட்டு மொத்த ஆண் வர்க்கத்தின் மீதும் சேற்றை வாரி இறைத்ததை தயவு செய்து ஞாயப் படுத்தாதீர்கள்.

ஒரு பெண்ணின், தான் ஒரு பெண் என்னும் பால்நிலை, எந்த ஆணை வேண்டுமானாலும் குற்றம் சாட்ட எவ்வகையில் உரிமை அளிக்கிறது என சொல்லுங்களேன். அல்லது நான் ஒரு பெண், எந்த ஆணையும் எவ்வளவு தரக் குறைவாக பேச முடியுமோ, அவ்வளவு தூரம் பேசுவேன் என்பது தான் பெண்ணுரிமையா???

தராசு said...

சுந்தர்,

டேங்சு

தராசு said...

வாங்க LK,

பட்டத்திற்கு டேங்சு

தராசு said...

வாங்க அமுதா கிருஷ்ணா,

//இப்பொழுதெல்லாம் பெண்கள் ஆண்களை படுத்துவது தான் ஜாஸ்தியாய் கொண்டு இருக்கிறது.அதுவா பெண் சுதந்திரம்?//

சிந்திக்கத்தூண்டும் கேள்வி, பெண்ணிய வாதிகள் சிந்திக்கட்டும்.

தராசு said...

வாங்க ராபின்....

ஜொள்ளு வாயர்கள் ஒழிக.

விக்னேஷ்வரி said...

ஆண்கள் பக்கத்து நியாயவாதியாக நல்லதொரு எதிர்வினை கொடுத்துள்ளீர்கள் பெஞ்சு. ஆனால் ஒரு பெண்ணின் மன உளைச்சலை, அவள் தினமும் சந்திக்கும் பிரச்சனைகளை மனம் குமுறிக் கொட்டுகையில் எப்படி அவளை எதிர்த்துக் கேட்க முடிகிறது? அவளின் நிலையிலிருந்து அப்பிரச்சனையப் பார்க்க, எதிர்கொள்ள துணிவின்றி வெறும் வாதமாக இதை எடுத்துச் செல்ல எனக்கு விருப்பமில்லை பெஞ்சு. பதிவுலகிலிருக்கும் சில நல்ல ஆண்மகன்கள் போலவே உலகம் முழுக்க நல்லவர்களால் ஆனது எனும் உங்கள் மனநிலை கண்டு நகைப்பதா..

உங்கள் அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரு பெண்ணாய் நான் பதிலளிக்கிறேன் இங்கு. தொடுங்கள் உங்கள் அம்பை.

தராசு said...

வாங்க விக்கி,

//ஆனால் ஒரு பெண்ணின் மன உளைச்சலை, அவள் தினமும் சந்திக்கும் பிரச்சனைகளை மனம் குமுறிக் கொட்டுகையில் எப்படி அவளை எதிர்த்துக் கேட்க முடிகிறது?//

இங்கு பெண்ணுக்கு மன உளைச்சல் இல்லை என நான் சொல்லவில்லை. மேலும் மன உளைச்சலுக்கு மருந்தும் சொல்லியிருக்கிறேன்.
குமுறுங்கள், கொட்டுங்கள். யாரும் தடுக்கவில்லை. ஆனால், பொதுவெளியில் பேசும் பொழுது ஒட்டு மொத்த ஆண் வர்க்கத்தையும் ஒரே குடையின் கீஷ் கொண்டு வந்து காமுகர்கள் என தரம் தாழ்த்தி பேசினால், கேள்வி கேட்கக் கூடாதா விக்கி?

தனி காட்டு ராஜா said...

//ஆணின் பாலியல் தேவை வரம்பு மீறியது என சொல்கிறீர்களே, உங்கள் மொழியில் எது வரம்பு? //

ஆணின் பாலியல் தேவையும் பெண்ணின் பாலியல் தேவையும் வேறு வேறானவை ....
ஒரு ஆண் அழகான பெண்ணை பார்த்தவுடனே உணர்ச்சி வசப்படலாம்.....இயற்கையின் கட்டமைப்பு அப்படி ....
ஒரு பெண் குளிப்பதை திருட்டு தனமாக ரசிக்கும் ஆண்கள் உண்டு .....ஆனால் ஒரு ஆண் குளிப்பதை நாய் கூட கண்டு கொள்வதில்லை (இதுக்கு பேரு தான் same சைடு கோல்-நு சொல்லுவாங்க.........ஆமா ..நாய் எதுக்கு பார்க்கணும்னு கேள்வி கேக்க கூடாது... )
அந்த திருட்டு தனத்தை தான் வரம்பை மீறிய செயலாக சமுதாய மக்கள்(நாம்) பார்கிறார்கள் .....

தராசு said...

//அவளின் நிலையிலிருந்து அப்பிரச்சனையப் பார்க்க, எதிர்கொள்ள துணிவின்றி வெறும் வாதமாக இதை எடுத்துச் செல்ல எனக்கு விருப்பமில்லை பெஞ்சு.//

பிரச்சனையை எதிர் கொள்ள துணிவு கொள்ளுங்கள் என பதிவின் ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கிறேன். இதில் வாதத்திற்கே இடமில்லை.

தராசு said...

//பதிவுலகிலிருக்கும் சில நல்ல ஆண்மகன்கள் போலவே உலகம் முழுக்க நல்லவர்களால் ஆனது எனும் உங்கள் மனநிலை கண்டு நகைப்பதா..//

களைகளும், பதர்களும், முட்களும் இல்லாத கழனிகளை என்னாம் கற்பனை செய்ய முடியாது. ஆகவே நகைக்க வேண்டிய அவசியமில்லை விக்கி.

Robin said...

//ஒரு பெண் குளிப்பதை திருட்டு தனமாக ரசிக்கும் ஆண்கள் உண்டு .....ஆனால் ஒரு ஆண் குளிப்பதை நாய் கூட கண்டு கொள்வதில்லை (இதுக்கு பேரு தான் same சைடு கோல்-நு சொல்லுவாங்க.........ஆமா ..நாய் எதுக்கு பார்க்கணும்னு கேள்வி கேக்க கூடாது... )// இதுக்குப் பேரு அறியாமை. ஆண்கள் பெண்களை ரசிப்பதுபோல பெண்களும் ஆண்களை ரசிக்கிறார்கள்.

விக்னேஷ்வரி said...

ஒவ்வொரு ஆணாலும் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் பெண்ணின் இழிநிலையை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் அற்புத காவியமிது.//
இது சர்காஸமாக சொல்லப்பட்ட ஸ்டேட்மெண்ட்டா.. ஏன் இந்தக் கேள்வியெனில் பாராட்டி விட்டு எதிர்வினை புரிவதை சர்காஸம் என்று தானே சொல்வோம். இல்லையெனில் மகிழ்ச்சி.

எனக்கு முன்னே பாழ்நிலம் இருந்தது, என் பாதையெங்கும் முட்கள் முளைத்திருக்கிறது, என் ஓட்டப் பாதையில் சிகரங்களை செதுக்கி வைத்து விட்டார்கள் என பாசாங்குத் தனமான சாக்குப் போக்கு சொல்வோமெனில் நாமும் பத்தோடு பதினொன்றாய் தடம் மாறி ஓடிக்கொண்டிருக்கலாம்.//
இவை எதுவுமே என் பாதையில் வேண்டாம். என்னால் எதிர் கொள்ளப்படும் தினசரி வார்த்தைகளும், செயல்களுமே என்னை வதம் செய்வதாக இருக்கும் போது, என்னைச் சுற்றியுள்ளவர்கள் எனக்காக கைகள் தராத போது, குடும்பம் என்ற ஒன்றை உதறிவிட்டுப் போகும் திறனில்லாத போது என்ன செய்வேன் நான்?

உங்களைப் போல் அழகான வார்த்தைகளில் பத்திகளாய்த் தொகுத்து விடுதல் எளிது. ஆனால் வாழ்ந்து பார்ப்பவளுக்கே அதன் வீரியமும் அதனால் படும் துன்பங்களும் புரியும்.

இங்கு நான் எனக் குறிப்பது என்னையல்ல. என் பெண் சமூகத்தை. எந்தக் கஷ்டங்களுமின்றி அழகாக என் தனிப்பட்ட வாழ்க்கை சென்றாலும் நான் பார்க்கும் பெண்களின் வாழ்க்கைக்காகவே இங்கு தொடர்கிறது நம் ஆரோக்கியம் விவாதம்.

தராசு said...

வாங்க தனிக்காட்டு ராஜா,

எலும்பும் சதையுமாயுள்ள ஒவ்வொரு மானுடப் பிறவிக்கும் பாலியல் தேவை என்பது சம அளவே.
ஒரு பாலினம் தனது தேவையை தனது செய்கைகளினால் வெளிப்படுத்துகிறது, இன்னொரு பாலினம் வெளிப்படுத்துவதில் வேறு முறைகளை கடைப் பிடிக்கிறது.

அதற்காக அப்பட்டமாக வெளிப்படுத்தும் பாலினத்தை வெறி கொண்டதென்றும், அமைதியான வெளிப்படுத்தல் புனிதமானதென்றும் அர்த்தமில்லையே ராஜா.

சூழ்நிலைகள் ஒத்துழைத்தால் எல்லா பெண்களும் ஆணின் நிர்வாணத்தையும் அணுஅணுவாக ரசிக்க ஆசை கொண்டவர்களே....

தராசு said...

//ஏன் இந்தக் கேள்வியெனில் பாராட்டி விட்டு எதிர்வினை புரிவதை சர்காஸம் என்று தானே சொல்வோம்.//

To be honest, இது சர்காஸம் தான். ஒட்டு மொத்த ஆண்வர்க்கத்துக்கும் ஒரே முத்திரை குத்தும் இழிசெயலை வன்மையாக கண்டிக்கும் சர்க்காஸம்.

விக்னேஷ்வரி said...

ஒரு பெண் அவளின் எண்ணங்களாக, மன ஓட்டங்களாக, தினசரி எதிர்கொள்ளும் சவாலாக சொல்லும் விஷயங்கள் உங்கள் கண்களுக்குக் குற்றச்சாட்டுகளாய்த் தெரிவதேன்?

குற்றச்சாட்டுகளாய் நீங்கள் அடுக்கியிருக்கும் ஒரு பத்தி முழுவதுமே உங்களின் ஆணாதிக்க மனோபாவத்திற்கு ஒரு உதாரணம். ஒரு முறை அப்பெண்ணின் இவ்விஷயத்தைப் பற்றிய ஆதங்கப் பத்தியையும், உங்களின் குற்றச்சாட்டான இப்பத்தியையும் வாசித்துப் பாருங்கள். வித்தியாசம் புலப்படும். ஆண்களை குறை சொன்னால் ஓடி வரும் ஆணினமே, வரும்முன் உங்களினத்தால் பெண்களுக்கு நடந்த/நடக்கும் அநீதிகளை யோசித்துப் பாருங்கள். பெண்களால் ஆண்களுக்குக் கொடுமைகள் நடக்கவில்லை எனக் கூறவில்லை நான். ஆனால் ஆண்களால் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு முன்னால் அவை மிகக் குறைவே.

தராசு said...

//இவை எதுவுமே என் பாதையில் வேண்டாம். என்னால் எதிர் கொள்ளப்படும் தினசரி வார்த்தைகளும், செயல்களுமே என்னை வதம் செய்வதாக இருக்கும் போது, என்னைச் சுற்றியுள்ளவர்கள் எனக்காக கைகள் தராத போது, குடும்பம் என்ற ஒன்றை உதறிவிட்டுப் போகும் திறனில்லாத போது என்ன செய்வேன் நான்?//

நீங்கள் சொல்கிற தினசரி வார்த்தைகள், செயல்கள் இவைகளைத்தானே நான் முட்களும், குழிகளும், பாழ்நிலமும் என சொல்லியிருக்கிறேன். இவைகளை எதிர் கொள்ளத்தான் துணிவு வேண்டும் என சொல்கிறேன் விக்கி. மனோ வலிமை மட்டுமே இதற்கு மருந்தாகும். முதலில் நீங்கள் ஒரு பலவீன பாண்டம் என நினைப்பதை விட்டு விட்டு வெளியே வாருங்கள். பிறகு கைதூக்கி விட யாரும் இல்லையே என்ற ஆற்றாமையே உங்களுக்கு இருக்காது.

தராசு said...

//ஆண்களை குறை சொன்னால் ஓடி வரும் ஆணினமே, வரும்முன் உங்களினத்தால் பெண்களுக்கு நடந்த/நடக்கும் அநீதிகளை யோசித்துப் பாருங்கள். //

ஒரு விஷயத்தை தெளிவு படுத்திக் கொள்ளுங்கள் விக்கி. நான் ஒட்டு மொத்த ஆணினத்தின் பிரதி நிதி அல்ல. நான் என் பதிவில் ஒட்டு மொத்த ஆணினத்துக்கும் எங்கும் வக்காலத்து வாங்க வில்லை.
நீங்களும் ஒட்டு மொத்த பெண்ணினத்தின் பிரதி நிதி அல்ல என நினைக்கிறேன்.Correct me if I am wrong.
அல்லது அப்படி பிரதிநிதியாக முன்னிற்க முயல்வதால் பெண்ணினத்திற்கு இழைக்கப் படும் கொடுமைகளுக்கு குரல் கொடுக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு, பெண்ணினத்தின் எல்லா செயல்களுக்கும் பொறுப்பேற்கிறீர்களா???

விக்னேஷ்வரி said...

இன்றைய தேதியில் தொடுக்கப்படும் பாதுகாப்பு கோரும் வழக்குகளில் 62 % வழக்குகள் ஆண்களால் தொடுக்கப்படுகிறது. //
இந்த வழக்குகளின் புள்ளிவிவரங்களாலோ, சதவிகிதத்தாலோ தான் விவரமறிய வேண்டுமென நீங்கள் விரும்பினால், உங்களுக்கு நான் சொல்லும் ஒரு உண்மை நிச்சயம் உரைக்கும். பாதுகாப்பு கருதி வழக்குப் போட வேண்டுமெனில், அப்படி வழக்குப் போடுவது தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தால் அனுமதிக்கப்படுமெனில், அதற்கான அறிவு கிடைத்திருக்குமெனில், ஒரு குடும்பத்தின் எதிர்காலம் பற்றியும், போன இடத்தின் மரியாதை பற்றியும் பெண் அக்கறை கொள்ளாமல் இருக்க முடியுமெனில் பெண்கள் போட்ட வழக்குகளை எடுக்க காவல் நிலையங்களும், அதை விவாதிக்க நீதிமன்றங்களும் போதுமானதாய் இருந்திருக்காது. கிட்டத்தட்ட இருவரில் ஒரு பெண் வழக்குப் போட்டிருப்பாள்.

தராசு said...

இந்த புள்ளி விவரங்களால் எந்த புண்ணாக்கும் ஆகப் போவதில்லையென எனக்கும் தெரியும் விக்கி. மேலும் இந்த விவரங்களின் உண்மைத்தன்மையில் எனக்கு ஐயம் உள்ளது.

//புள்ளி விவரங்கள் தருகிறீர்கள், எத்தனை பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள் என்று. வாருங்கள், இன்னொரு புள்ளி விவரம் பார்ப்போம்,//

இவை என் பதிவின் வரிகள்.புள்ளி விவரங்களை யமுனாதான் முதலில் தந்தார்கள். அவர்களுக்கு பதில் சொல்லவே நானும் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டினேன்.

விக்னேஷ்வரி said...

எல்லைகள் வரைந்தபின் குடும்பம் என்ற ஒன்றை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. //
அது தான் பிரச்சனை பெஞ்சு. உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியாத கொடுமைகள், எல்லைகள், வரம்புகள், பிடிமானங்கள், அழுத்தங்கள் பெண்களுக்கிருக்கின்றன என்பது தான் நிதர்சனம். மெட்ரோ நகரத்தில் அமர்ந்து கொண்டு, மடிக்கணினியைத் தட்டிக் கொண்டும், சரள ஆங்கிலத்தில் நகைத்துக் கொண்டும், ஆடையைக் குறைத்துக் கொண்டு ஆணுக்கு சரிநிகர் சமானம் என வோட்காவை சியர்ஸ் சொல்லிப் பருகும் பெண்களைப் பற்றியதல்ல தோழியின் பதிவு. விடிந்தும் விடியாத துயிலில் எழுந்து குடும்பத்தில் அனைவருக்குமான பணிவிடைகள் செய்து, அனைவரும் தரும் ஏச்சுக்களை மட்டுமே காலை உணவாய்க் கொண்டு, ஓயாத வெயிலில் ஓடி, அலுவல் திறம்பட முடித்து, ஒரு வித பதற்றத்துடன் வீடடைந்து, மறுபடியும் அனைவருக்குமான சேவைகளை முடித்தும் முடிக்காமல் இருப்பவளை வலிய அழைத்துக் காமம் கழித்துப் புரண்டுறங்கும் கணவனின் காது வரை கம்பளி போர்த்தி, மீதியிருக்கும் வேலைகளை முடித்து விட்டு எல்லாருக்கும் கடைசியாய் உறங்கச் செல்லும் சராசரி இந்தியப் பெண்கள் பற்றியது. இப்படிப்பட்ட பெண்களை தென்னிந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் தொடங்கி வட இந்தியாவின் வளரும் நகரம் வரை பார்த்து விட்டுத் தான் சொல்கிறேன். போங்க சார், உங்களுக்குப் பதில் சொல்லியே வலுவிழந்துட்டோம்.

தனி காட்டு ராஜா said...

//அதற்காக அப்பட்டமாக வெளிப்படுத்தும் பாலினத்தை வெறி கொண்டதென்றும், அமைதியான வெளிப்படுத்தல் புனிதமானதென்றும் அர்த்தமில்லையே ராஜா.//

சரிதான் ...நானும் இதையே தான் சொல்ல வருகிறேன் ...ஆணின் பாலியல் தேவையும் பெண்ணின் பாலியல் தேவையும் வேறு வேறானவை ....என்று சொல்வதன் மூலம் ...

//சூழ்நிலைகள் ஒத்துழைத்தால் எல்லா பெண்களும் ஆணின் நிர்வாணத்தையும் அணுஅணுவாக ரசிக்க ஆசை கொண்டவர்களே.... //

செக்ஸ்-ன் போது பெரும்பாலும் பெண்கள்(பெண் தன்மை நிரம்பியவர்கள்) கண்ணை மூடி கொண்டு தனக்குள் ஏற்படும் உணர்வுகளை ரசிக்கிரார்கள்.....ஆணின் இயக்கம் ..அதன் மூலம் ஏற்படும் உணர்வுகளை தான் ரசிக்கிறாள் ....
ஒரு ஆண் பெரும்பாலும் செக்ஸ்-ன் போது light எரியட்டும் என்பான் ....பெண் பெரும்பாலும் light ஆப் செய்து விடலாம் என்பாள் ......[அணுஅணுவாக ரசிக்க ஆசை கொண்டவள் ஏன் லைட் -டை ஆப் செய்ய சொல்லுகிறாள் ]
ஒரு ஆணால் அன்பு என்னும் உணர்வு இல்லாமல் வெறும் செக்ஸ் மட்டுமே வைத்து கொள்ள முடியும் ...ஒரு பெண்ணின் நிர்வாணம் ஒன்றே ஆணுக்கு போதும் ....
ஆனால் ஒரு ஆணின் நிர்வாணம் மட்டும் பெண்ணை செக்ஸ் -க்கு துண்டுவதில்லை........
ஒரு பெண்ணை செக்ஸ்-கு தயார்படுத்த காதல் மொழிகள் அவசியம் ...
ஒரு ஆண் பெண்ணின் நிர்வாணத்தை ரசிக்ககும் அளவு, பெண் ஆணின் நிர்வாணத்தை அணுஅணுவாக ரசிக்க ஆசை கொண்டவர்களே என்பது ஏற்று கொள்ள தக்கதல்ல .....

-விதி விலக்ககாக சில ஆண் ,பெண் உண்டு ...

விக்னேஷ்வரி said...

ஏங்க, எனக்கொரு விஷயம் சொல்லுங்க, அந்தம்மா பதிவுல எல்லா ஆண்களுமே இப்படி. ஒட்டு மொத்த ஆணினமே எனக்கு எதிரின்னாங்களா?

ஒரு சமூகத்தில் இருக்கும் பெரும்பாலான பெண்களைப் பற்றிய கருத்துகளை ஒரு பெண் முன்வைத்தால் அதை ஏற்கும் திறனே இல்லாதவர்களிடம் என்னத்தப் பேசி... என்னத்தப் போங்க.

வாதம்ன்னு வந்தா பிடிச்சுத் தொங்குவாங்க ஆண்கள்ன்னு தெரியும். ஆனா எங்களுக்கு அப்படியில்லைங்க. அதான் சொன்னேனே, காலை முதல் இரவு வரை வேலைன்னு. நான் போறேன் சாமி. அப்புறமா வரேன்.

அறிவாளிகள் பேசி முடிவு செய்யுங்க.

தனி காட்டு ராஜா said...

@ Robin ...
//இதுக்குப் பேரு அறியாமை. ஆண்கள் பெண்களை ரசிப்பதுபோல பெண்களும் ஆண்களை ரசிக்கிறார்கள்.//
ரசிக்கலாம் ....ஆனால் ஆண்கள் அளவுக்கு உடலே பிரதானம் என்று அவர்கள் செல்வதில்லை என்பது என் கருத்து....
பஸ்சில் எந்த பெண்ணும் வழிய போய் ஆணை உரசுவதில்லை தானே?

நேசமித்ரன் said...

Feminist Ethics is an attempt to revise, reformulate, or rethink traditional ethics to the extent it depreciates or devalues women's moral experience

இதை சரியாக புரிந்து கொண்டிருகிறதா பெண்ணீயக் குரல்கள் ?

women's positive psychological trait of gentleness is quickly transformed into the negative psychological trait of obsequiousness “when it is the submissive demeanor of dependence, the support of weakness that loves, because it wants protection; and is forbearing because it must silently endure injuries; smiling under the lash at which it dare not snarl’’

’’purpose of educating women is simply to supply men with “rational fellowship;” that is, with “more observant daughters, more affectionate sisters, more faithful wives, more reasonable mothers”


- A Vindication of the Rights of Women

ஆனால் இன்றைய பெண்ணின் குரல்கள் தன்வயமான சுய பரிசீலனைக்கு மாறாக சுய முன்னேற்றதுக்கு பதிலாக சுமத்திக் கொண்டிருப்பதில் பொருளேதும் இல்லை என்றுத் தோன்றுகிறது

விழிப்புணர்வு தன்னிலிருந்து துவங்கத வரை சதவீதங்களால் சாதிக்கப் போவது ஏதும் இல்லை .

வலிக்கிறது என்பதை சொல்லிக் கொண்டிருப்பதை விட
எதிர்வினை சிறந்த தீர்வு

ஆடு தன்னை ஆடு என்று உணரும்போது மந்தையிலிருந்து விலகிவிடுகிறது என்றான் ஜிப்ரான்

தன்னை உணர்தல் ,போலி சடங்குகளில் நம்பிக்கைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளப் பயில்தல் அடிப்படை

கற்றுக் கொள் , பயிற்றுவி,குரல் அல்ல செயல்புரி

தராசு said...

ஏயப்பா, எவ்வளவு பெரிய வாக்கியம். ஒரு பெண்ணின் ஒரு நாள் வாழ்க்கையை ஒரே மூச்சில் சொல்லி விட்டீர்கள். கொஞ்சம் மூச்சு வாங்கி ஆசுவாசப் படுத்திக் கொள்ளுங்கள்.

//இப்படிப்பட்ட பெண்களை தென்னிந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் தொடங்கி வட இந்தியாவின் வளரும் நகரம் வரை பார்த்து விட்டுத் தான் சொல்கிறேன்//

இந்தப் பெண்களைத்தான் யமுனாவும் குறிப்பிடுகிறாரா விக்கி... சரி ஆம் என்றே எடுத்துக் கொள்ளுவோம்.
காலையில் எழுந்தவுடனேயே வசவு, இது ஒரு டெம்பிளேட் வாசகமாய்த் தெரியவில்லை. ஏன் இப்படி, இந்தியாவின் அநேக வீடுகளில் சைக்கோக்கள்தான் வாழ்கின்றனரா, கண் விழித்ததும் காரணமேயில்லாமல் ஒருவரை திட்டுபவன் சைக்கோவாயில்லாமல் வேறு யாராய் இருக்க முடியும். அல்லது காலையில் இறைவணக்கத்திலும் பூஜைகளிலும் ஈடுபடும் இந்தியக் குடும்பங்கள் திடீரென தங்கள் வாழ்க்கை முறையினை மாற்றிக் கொண்டனரா?

நேசமித்ரன் said...

மேலதிக தகவல்களுக்கு ....



http://books.google.com.ng/books?id=6_dBrwrS_HcC&dq=feminist&printsec=frontcover&source=in&hl=en&ei=d_U2TK3UOoTGlQes39XVBw&sa=X&oi=book_result&ct=result&resnum=21&ved=0CHEQ6AEwFA#v=onepage&q&f=false

:)

தராசு said...

இங்கு பிரச்சனை எப்பொழுது காம வயப் படவேண்டும் என்பதா, அல்லது பெண்ணுக்கு தோன்றும் பொழுது தான் உறவு கொள்ள வேண்டும் என்பதா,
ஏனெனில், இந்தியக் குடும்பங்கள் (நீங்கள் எந்த குடும்பங்களை பற்றி பேசுகிறீர்களோ அதே குடும்பத்தை பற்றித்தான் பேசுகிறேன்) எதிலுமே பெண்ணுக்கும் நிறைவுதரும் அல்லது பெண்ணும் இணைந்து இன்புறும் உடலுறவுகள் நிகழ்வதில்லை போன்ற ஒரு தோற்றமே சித்தரிக்கப்படுகிறது.
வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை ஆண் வலிய வந்து காமம் கொள்கிறான், பெண்ணுக்கு அதில் ஈடுபாடு உண்டா இல்லையா என்பதை அவன் சட்டை செய்வதே இல்லை என ஒரே அடியில் அடித்து விடுகிறீர்களே,
ஆண் மட்டுமே காம வெறி கொண்டவன் என்பதை ஒரு வாதத்துக்காகவே எடுத்துக் கொண்டாலும், பெண்ணுக்கு காமம் என்பது ஒரு அருவருக்கும் சமாச்சாரமா?? அல்லது அவள் விரும்பும் பொழுது மாத்திரம்தான் உறவு கொள்ள வேண்டுமென்றால், இது பெண்ணால் நிகழ்த்தப் படும் வன்கொடுமை இல்லையா?

தராசு said...

//வலிக்கிறது என்பதை சொல்லிக் கொண்டிருப்பதை விட
எதிர்வினை சிறந்த தீர்வு//

வாங்க நேசமித்திரன், இதைத்தான் நான் என் பதிவு முழுக்க சொல்லியிருக்கிறேன்.
சீறுங்கள் பெண்களே, அநியாயத்தைக் கண்டால் வன்மம் கொண்டு எரிமலையாய் வெடியுங்கள்.

Anonymous said...

பெண்களை பற்றி நாம் தவறாக பேச வேண்டாம் என பெண்ணைப் பற்றி விசாரிப்பவர்களிடம் நல்ல விதமாக சொல்பவர்கள் நாம்.ஒரு நல்ல பையன் வாழ்கை நரகமானதை தவறான வாழ்கை வாழும் உன்னுடன் வாழ முடியாது என சொன்ன ஒரே காரணத்திற்காகவே வரதட்சணை கொடுமை இன்ன பிற பொய்யான காரணங்களை அடுககி அவனையும் அவன் குடும்பத்தையும் நாசம் செய்ய முயன்ற பெண்ணை எனக்கு தெரியும்.அந்த குடும்பம் பட்ட கஷ்டம்.போதுமடா .இனியாவது வலைபதிவர்களே.உங்களிடம் யாராவது வந்து உங்களுக்கு தெரிந்த அல்லது பக்கத்தில் உள்ள பெண்களைப் பற்றி கேட்டால் உண்மைகளை கூறுங்கள்.இல்லாவிட்டால் எனக்கு தெரியாது என கூறுங்கள்.நானும் ஒரு பெண் தான்.பெண்களுக்கு கொடி பிடித்தவள் தான்.இன்று அனுபவத்தில் கூறுகிறேன் ஆண்கள் எவ்வளவோ நல்லவர்கள்

தராசு said...

அனானி,

நீங்கள் பெயரில்லாமல் வந்தது இனிக்கவில்லை. மேலும் ஒரு பெண் நாசப்படுத்தினாள் என்பதற்காக ஒட்டு மொத்த பெண்ணினத்தின் மீதும் முத்திரை குத்தாதீர்கள். இதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நல்ல பதிவுங்க... வாழ்த்துக்கள்

Romeoboy said...

அண்ணே அடுத்த சண்டைக்கு ரெடி பண்ணிடிங்க ..

தராசு said...

வாங்க அப்பாவி தங்க மணி,

வந்ததுக்கு டேங்சு.

(இதுக்கும் எதிர் பதிவு போடுவீங்களா...)

தராசு said...

வாங்க ரோமியோ,

நம்ம ஒரு பதில் சொல்லப் போனா, உடனே ஆணாதிக்க வாதின்னு சொல்லீற்றாங்கப்பா, அதுதான் மனசுக்கு குஷ்டமா ... ச்சீ கஷ்டமா இருக்கு.

pinkyrose said...

saththyama illa tharaasu!

but mannikavum marakkavum illana manitharhal vaalvu valiyum vethanayum nirainthathaa aahidum tharaasu!

yaarayum tharakkuraivaa vimarchikka yaarukkum urimaya illangrathayum naaan marukkala tharaasu

but forgive n forget..

enekkennamo ithu thonuthu avlothaan

Unknown said...

தராசுக்கு நன்றி

Anonymous said...

//கஜுராஹோ - சிற்பங்களின் நகரம் - பயணக் குறிப்பு //

எங்க சார் இதன் தொடர்ச்சி.

நாங்கள் உங்கள் ”டேங்சு”-க்கு ரசிகர்கள்:மன்றம் கூட வைத்திருந்தோம்.

நீங்கள் ஏப்ரல் 15 -மே 25 வரை கடைய திறக்காமல் விட்டதால், கோச்சுக்கிட்டு கடை அடைச்சிட்டீங்களோன்னு நினைச்சு மண்றத்தை கலைத்து விட்டோம்.

இப்ப வெறுமே பதிவை படிக்கறதோட சரி

Jey said...

உங்களின் இந்த பதிவை, இவ்வளவு லேட்டாகப் படித்ததால் என் கருத்து இல்லை.
உங்களின் பதிவின் ஒவ்வொரு வார்த்தையையும் வழிமொழிகிறேன் என்பதோடு முடிக்கிறேன்.

DHANS said...

fantastic post sir...