Monday, April 12, 2010

ஒண்ணாம் நம்பர் பிளாட்பாரம்



தலையை சுற்றுவது போல இருந்தது தமிழரசிக்கு, ரெண்டு நாளா என்ன தின்னாலும் ஒரே வாந்தியா வருது. மருந்துக்கடை தாமு அண்ணங்கிட்ட மாத்திரை வாங்கி சாபிட்டாலும் வாந்தி நிக்க மாட்டேங்குது. சோர்ந்து போயி அவளோட இடத்துல வந்து உக்கார்ந்துட்டா, அவ இடம்னா அது அவளுக்கே சொந்தமான ஒரு குட்டி ராஜ்ஜியம். ஒண்ணா நம்பர் பிளாட்பாரத்துல இருக்கற ஓவர் பிரிட்ஜ் படிக்கட்டுக்கு கீழ ஒரு துணி மூட்டை, கீழ படுக்கறதுக்குன்னு விரிச்ச அட்டைப்பெட்டிகள், இதுதான் அவளோட ராஜ்ஜியம். 12 வயசுல பாட்டி கையை பிடிச்சுகிட்டே இந்த பிளாட்பாரத்துக்கு வந்தது. இதா, பாட்டியும் போயி சேர்ந்துட்டா, கண்ணு ரெண்டும் தெரியலைன்னாலும் தமிழரசி வாயத்தொறந்து பாடுனா, அப்படியே கேட்டுட்டே இருக்கலாம் போல இருக்கும், ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்னு அவ பாடுனா, கையில பொல பொலன்னு காசு வந்து விழும். இதா அவுளும் வந்து 10 வருஷமாச்சு, இந்த பிளாட்பாரத்தை விட்டு எங்கயுமே போனதில்ல. தண்ணி பைப்புல தண்ணி புடிக்கவும், கக்கூஸுக்கு போகவும் அவ நடந்து போறதப் பாத்தா, அவளுக்கு கண் இல்லன்னு யாரும் சொல்ல மாட்டங்க. அவ வந்த புதுசுல ஒரு நாளைக்கு ஏழு ரயிலுத்தான் இங்க நிக்கும், இப்ப தினமும் இருவது ரயிலு நிக்குது, இவ பாட்டைக்கேட்டு காசும் நல்லா கிடைக்குது.

“என்ன தமிளு, உடம்ம்புக்கு சரியில்லையா” டீ விக்கற ரமேஷ் அண்ணன் கேட்டாரு,

“ஆமாண்ணா, ஒரே மயக்கமா வருது”.


“டீ குடிக்கறயா”


“வேண்டாண்ணா, எதை குடிச்சாலும் வாந்தியா வருது”


“சரி, சரி எதாவது மாத்திரை வாங்கிட்டு வரட்டா”


“இல்லண்ணா, தாமு அண்ணன் குடுத்தாரு, சாப்புடறேன்”

மாத்திரையை எடுத்து வாயில் போட்டு ஒரு வாய் தண்ணீர் குடித்தாள். இந்த ராமதாசு எப்ப வருவான், மூணு நாளாச்சு ஆளவே காணோம் என யோசித்தவளாக வலது கையை மடித்து தலைக்கு வைத்து படுத்துக் கொண்டாள்.

ராமதாசு – ஜங்ஷனில் போர்ட்டர். பேருக்குத்தான் போர்ட்டர். ஆனா அவன் தொழிலே பொட்டலம் விக்கறதுதான். ஜங்ஷன்ல பொட்டலம் கிடைக்கும்னு நிறைய பேருக்குத் தெரியும். அவுங்க வந்தா ராமதாசை தேடி, சரியா சிக்னல் குடுத்தாங்கன்னா, இவன் ரேட் பேசி, பொட்டலத்தை கை மாத்தறது மின்னல் வேகத்துல முடிஞ்சு போயிரும். அவன் சிவப்புச்சட்டையும், டவுசர் தெரிய மடிச்சுக் கட்டிய லுங்கியும், தலையில கட்டியிருக்கற துண்டும் பார்த்தா, இவனெல்லாம் ஒரு சின்னப் பையை கூட தூக்குவானாங்கறதே சந்தேகமாயிருக்கும். அவ்வளவு ஒடிசலான தேகம், பீடியும் கஞ்சாவும் இளுத்து உள்ள ஒடுங்குன கன்னம், ஈர்க்குச்சி மாதிரி கையும் காலும், பாதி நரைச்ச தலைமுடி, ஆணிக்காலை விந்தி விந்தி நடப்பான். அவன் எப்பவாச்சும் தான் பெட்டி தூக்குவான், மத்த நேரத்துல எல்லாம் பொட்டல வியாபாரம்தான். இந்த உடம்புக்குள்ள பொட்டலத்தை எங்க மறைச்சு வெச்சிருப்பான்னு தெரியாது, ஆனா கரக்டா கை மாத்துவான். பிளாட்பாரத்துல வண்டியில்லாம காலியா இருக்கற நேரத்துல நீங்க என்ன கோடி ரூவா குடுத்தாலும் அவங்கிட்ட இருந்து ஒண்ணும் பேராது. வண்டி வந்து நின்னு ஆளுங்க போகவும் வரவும் கூட்டமா இருந்தா நிமிஷத்துல வியாபாரத்த முடிச்சுட்டு, வேற வேலைக்கு போயிருவான். அவுனுக்கும் இந்த பிளாட்பாரத்தை விட்டா நாதியில்லை. அந்த காக்கிசட்டைக் காரரு கொண்டுவந்து குடுக்கற சரக்கை வித்துக் குடுக்கறதுல எதோ கொஞ்சம் துட்டு தேறுது. வெளியைல போயி அப்பப்ப சிக்கனு வருவல் புரோட்டான்னு சாப்டுட்டு வந்து பிளாட்பாரத்துலயே படுத்துக்குவான். போலீஸ்காரங்க எப்பவாச்சும் கேஸ் கிடைக்கலன்னா, வந்து இவனை இளுத்துட்டு போய் ஒரு மூணு நாள் உள்ள வெச்சு, அவுங்களே ஜாமீன்லயும் விட்டுருவாங்க. அவுங்க சொல்றபடி கேக்கணும் அவ்வளவுதான்.


மறுபடியும் வயித்தப் பொரட்டிகிட்டு வாந்தி வர்ற மாதிரி இருக்க தமிளு எந்திரிச்சி ஒக்கார்ந்து வாயை குவிக்க, வாந்தி வர்ற மாதிரி இருக்கு, ஆனா வர மாட்டேங்குது. ராமதாசு இருந்தாலாவது எதாவது பேசீட்டிருக்கலாம். எங்க போனானோ என நினச்சுகிட்டே மறுபடியும் படுத்துகிட்டா. ராமதாசு – நீ எங்க இருக்க………

பாட்டி செத்ததுக்கப்புறம், இவுளுக்குன்னு யாருமில்ல, குருட்டு பொண்ணா இருந்தாலும் லட்சணமாயிருப்பா, சிவப்புமில்லாம கருப்புமில்லாம ஒரு நிறம், காலைல மெட்ராஸ் போற வண்டி வந்ததும் 5 மணிக்கெல்லாம் எந்திரிச்சு, கக்கூசுக்குள்ள இருக்கற அந்த ரூம்ல போயி, குளிச்சுட்டு, கட்டியிருக்கற சீலை, ஜாக்கெட், பாவாடை எல்லாத்தையும் தொவச்சு எடுத்துட்டு வந்து காயப் போட்டுட்டு, தலை சீவி பொட்டு வெச்சுக்குவா. தினமும் குளிக்கறது பழகிப் போச்சு. குண்டா இல்லைன்னாலும் பூசுனாப்புல இருந்த உடம்பு அங்க இருந்த பலர் கண்ணுலயும் படத்தான் செய்தது. தனக்கு கண் இல்லைன்னாலும் தன்னைப் பாக்கறவங்க எப்படி பாக்கறாங்கங்கறது அவுளுக்கு எப்படித்தான் தெரியுமோ, கைத்தடியை எடுத்து ஒரு ஆட்டு ஆட்டுனான்னா, அவள பாக்கறவன் அவ்வளவுதான்.

ஒருநா, நல்ல மழை, பிளாட்பாரத்துல தண்ணியா கொட்டறப்போ, தமிழு படிக்கட்டுக்கு கீழ செவுத்துல சாஞ்சு உக்கார்ந்துட்டு இருந்தா, பக்கத்துல லொக்கு லொக்குனு இருமற சத்தம் கேட்டுது.

“என்ன தாசு, இப்படி இருமுற” ன்னு இவ கேக்க,


“என்னன்னு தெரியல தமிளு, ரெண்டு நாளாவே இருமலு குடலைப் பொரட்டுது” ன்னு சொல்லீட்டு பீடியை கடைசி இழுப்பு இழுத்துட்டு சுண்டி விட்டான்.


“அதான், இருமுறயில்ல, அப்புறம் எதுக்கு அந்த கிரகம் பீடிய குடிக்கற, அதத்தான் விட்டுத் தொலையேன்”


அவளை ஒரு தரம் திரும்பிப் பார்த்து விட்டு தலையை குனிந்து கொண்டான்.


“இந்தா, சூடா டீ இருக்குது குடிக்கறயா” என கேட்க, அந்த மழைக்கு டீயின் சூடும் சுவையும் அவனுக்கு இதமாயிருந்தது. இதற்கு முன் பலமுறை அவளை பார்த்தும், பேசியும் இருக்கிறானென்றாலும், இந்த உபசரிப்பு அவனை என்னவோ செய்தது.

“யேய், தமிளு, உன்னை இன்ஸ்பெக்டர் கூட்டியாரச் சொன்னாரு” ன்னு, கான்ஸ்டபிள் வந்து சொல்லவும், ராமதாசுக்கு புரிந்தது. இன்ஸ்பெக்டரு ஒரு வாரமா தமிழ் இருக்கற பக்கம் அடிக்கடி வந்து நிக்கறதும், அவளயே பாக்கறதுமா இருந்தப்பவே இவனுக்கு சந்தேகம் தட்டியது. ராமதாசு கேட்டான்.

“எதுக்கு?”

“டேய், நீ என்ன அவுளுக்கு வக்காலத்தா, வாயை மூடுறா”

“அவ வரமாட்டான்னு போய் சொல்லு போ”

“டேய், நீ என்னடா பெரிய பருப்பாட்டம் குறுக்க பேசுற, எத்துனன்னா மவனே ஒரேயடியா போயிருவ, எச்சக்கல நாயி” என அவனை கை வைக்க போனதும்,


“ஏய், செவப்பு சட்டை மேலயே கை வைக்கறயா” என இவன் சத்தம் போடவும், அங்கு நாலைந்து சிவப்பு சட்டைகள் வந்து “என்ன, என்ன பிரச்சனை, யோவ் அவன் சட்டைய விடுயா” என சொல்ல, நிலைமையை புரிந்து கொண்ட கான்ஸ்டபிள் பின் வாங்கினான். தமிழுக்கு எல்லாம் புரிந்தது, இன்ஸ்பெக்டர் எதுக்கு கூப்புடறான்னு புரிஞ்சது. நெஞ்சு திக்கு திக்குன்னு அடிச்சுகிச்சு.

ராமதாசு விரு விரு ன்னு ஸ்டேஷன் மாஸ்டர் கிட்ட போனான். ஒரு அரை மணி நேரத்துல திரும்பி வந்தான். “ஏய், தமிளு, ஒண்ணும் பயப்படாத, சொல்ல வேண்டிய இடத்துல சொல்லீட்டுத்தான் வந்திருக்கேன். யாருக்கும் பயப்படாத”ன்னு சொல்லவும், தமிழுக்கு அழுகை அழுகையா வந்தது. இதுவரை உணராத நேசம், தனக்குன்னு பரிஞ்சுகிட்டு வர ஒரு உயிர் உலகத்துல இருக்குன்னு நினைச்சப்ப வர்ற சந்தோஷம், இந்நேரம் இவன் மாத்திரம் இங்க இல்லன்னா என்ன நடந்திருக்கும்னு நெனச்சா பயம் எல்லாமா சேர்ந்து மனசை என்னவோ செய்ய, அத்தனை உணர்ச்சிகளையும் ஒரே மழைநேரத்தில் அழுது தீர்த்தாள். அவ அழுவறதைப் பார்த்து, ராமதாசு இன்னும் பக்கத்துல வந்து, “த்தே, எதுக்கு சும்மா அழுகற, அதான் நான் எல்லாம் சொல்லீட்டு வந்துட்டேங்கறன்ல”

“இல்ல, இப்ப நீ இருந்ததுனால தப்பிச்சேன், இல்லைன்னா ….”

“ஒண்ணும் ஆகாது, சும்மா பொலம்பாத”

“தாசு, நீ எங்கயும் போவாத” என அவன் குரல் வந்த திசையை நோக்கி அவன் கைகளை பிடிக்க காற்றில் தேடினாள். கையை பிடித்ததும் இருவருக்கும் அது முதல் ஸ்பரிசம். ஒரு ஆணின் கையை பிடித்திருக்கிறோம் என அவள் உணர்ந்ததும், ஒரு பெண் தன் கையை பிடித்திருக்கிறாள் என இவன் உணர்ந்ததும் இருவருக்குள்ளுமிருந்து ஒரு பெருமூச்சு ஒரே சமயத்தில் வெளிப்பட்டது. தமிழுக்கு அந்த ஸ்பரிசம் கொஞ்சம் வெட்கத்தையும் தந்தது. ராமதாசின் பார்வை தன்னை துளைப்பதை உணர்ந்ததும், வெட்கத்தில் தலை தானாக குனிந்தது. முதலில் சுதாரித்த ராமதாசு, “சரி, சரி, மழை ஜாஸ்தியா இருக்குது பேசாம படுத்துக்க, இதா நான் இந்த பெஞ்சுலதான் தூங்கறேன்”னு சொல்லிவிட்டு கைகளை விடுவித்தான்.

தமிழின் மனதுக்குள் மத்தாப்பு. இது சரியா, இதுதான் சரியா, அவசியமா, வேலியில்லாமல் பூச்செடி வளரவே முடியாதா, முள்ளாயிருந்தாலும் அந்த முள்தானே பாதுகாப்பு….. என்னென்னவோ நினைத்தாள், நினைத்தான். நினைத்தார்கள். இரண்டே நாளில் தமிழரசி கழுத்தில் மஞ்சள் கயிறுடன் தமிழரசி தாஸ் ஆகிவிட்டாள். ரயில்வே பிரிட்ஜின் படிக்கட்டிற்கு கீழே இப்பொழுதெல்லாம் இரவில் ஒரு கோணிப்பை தடுப்பு திரைச்சீலைபோல் தொங்குகிறது. தடுப்புக்கு உள்ளே, மல்லிகைப் பூ மணக்கிறது.

ஒரு பத்து நாள் போயிருக்கும், நடுநிசி. இன்ஸ்பெக்டர் வந்தார். கோணித் தடுப்பை விலக்கிப் பார்த்தார், பிளாட்பார லைட் வெளிச்சத்தில் அந்தக் காட்சியை கண்டு, கொஞ்சம் கிளு கிளு அதிர்ச்சி. பின்னி பிணைந்திருந்த இரு உடல்கள், அவசரமாக பிரிந்தன. அவசர கதியில் கோணித் தடுப்பையே சுருட்டி தமிழ் மறைத்துக் கொண்டாள்.

“எந்தர்றா, ………. மவனே, இது வேற கேக்குதா உனக்கு”

“ஏய், இந்தாரு, குருட்டு முண்டை உன்னை அப்புறம் வந்து கவனிக்கறேன், முதல்ல இவனை இழுத்துட்டு போங்கடா, பொட்டலம் விக்கறியா, பொட்டலம். மவனே பொலி போட்டுருவேன்”

“சார், ஒரு காலத்துல வித்துட்டிருந்தேன் சார், இப்ப அதெல்லாம் விட்டுட்டேன் சார்”

“அதாண்டா, கேக்குறேன், ஏன் நிறுத்துன, ஏண்டா உன்னை மாதிரி பொறுக்கி பரதேசிங்கெல்லாம் மகாத்மாவாயிட்டீங்கன்னா, நாங்க ஒவ்வொருதரமும் புது ஆள் தேடணுமா, ஒழுக்கமா நாளையிலிருந்து சரக்கு எடுத்துட்டு போயி வித்துட்டு வந்துரு, இல்ல மவனே உயிரோட இருக்க மாட்ட நீ”

"சார், முடியாது சார், இனிமே இதெல்லாம் நிறுத்திர்றதுன்னு முடிவு பண்ணீட்டேன் சார்”

நாற்காலியிலிருந்து எழுந்து வந்து தனது பூட்ஸ் காலால் எத்தி ஒரு உதை விட்டார், ஜெயில் அறையின் கம்பிகளில் தலை பாடரென மோத சுருண்டு கீழே விழுந்தான். மூக்கிலிருந்து லேசாக ரத்தம் வர ஆரம்பித்தது.

“யோவ், என்னாச்சுன்னு பாருங்கைய்யா”

“சார், முடிஞ்சது சார்”

“சரி, சரி, ஆம்புலன்ஸ்ல போட்டு ஆஸ்பத்திரிக்கி எடுத்துட்டு போங்க, நான் டாக்டர் கிட்ட பேசிக்கறேன்.”

ராமதாசு ஆம்புலன்ஸில் போனான்.

மாதம் நான்காகி விட்டது, இப்பொழுதும் அந்த ஒண்ணாம் நம்பர் பிளாட்பாரத்தில் மேடிட்ட வயிறுடன் கணீரென்ற குரல்

“என் தலைவன் அவனே அவனே என்று பாடும் ஒலி கேட்டேன்”

15 comments:

Anonymous said...

அண்ணே !! Really very nice.

Regards
Samikannan

Raju said...

:-(
டச்சிங் தல.

தராசு said...

ராஜூ,

டேங்சு.

Anonymous said...

ஆர் .கே நாராயணன் சாரின் "பிளைன்ட் டா'க்" கதையில கடைத்தெருவை விவரிச்ச மாதிரி பிளாட்பாரம் விவரணை, தூள் !! அமர்க்களம்.

தமிழை இன்ஸ்பெக்டர் கூப்பிடக்கிற இடம் வந்ததும் ஒரு நாடக வாசனை !! பட்ஜெட் படம் மாதிரி ஒரு முடிவு -இவைகளைத் தவிர்த்திருந்தால் இன்னும் நல்ல இருந்துருக்குமே !

வாழ்த்துக்கள் சார், நல்ல கதை சொல்லியாக வரக் கூடிய அத்தனை கூறுகளும் தெரிகிறது.

ரமேஷ் மதுசூதனன்

க ரா said...

ரொம்ப நல்லாருக்கு சார்.

தராசு said...

வாங்க இரா. கண்ணன்,

டேங்சு.

Anonymous said...

அண்ணே ! எம்பேரு இரா. கண்ணன் இல்ல சாமிகண்ணன்

Anonymous said...

எம்பேர தப்பா போட்டாவது தேங்க்சு சொன்னீங்க. அந்த இராமசாமி கண்ணனுக்கு ஒரு தேன்சு கூட இல்ல

பாவம் அண்ணா அவருக்கும் சொல்லுங்க ஒரு தேங்க்சு

சாமிகண்ணன்.

Anonymous said...

யாரேப்பா அது அண்ணனை வம்புக்கு இழுத்துகிட்டு இருக்கது,

எப்ப? யாருக்கு ? எப்படி தேங்க்சு சொல்லணும் நு அண்ணனுக்கு தெரியாதா ? சும்மா அநியாயம் பண்ணாத !! ஆமா சொல்லிட்டேன்

Santhappanசாந்தப்பன் said...

Really Very Nice Story!!

தராசு said...

வாங்க பிள்ளையாண்டான்,

டேங்சு.

ராஜ நடராஜன் said...

கொஞ்சம் ரிவர்ஸ் கியர்ல போயிட்டு வந்ததுல உங்களுக்கு ராசி பலன்.

1.மாதம் கணக்கா 4 இடுகை போடுவீங்க

(இநத மாத ராசி பலன் இனி மேல்தான் கணிக்கனும்)

2. ஓவியத்துல ஆர்வம்.

3. ஹுசைன் மாதிரி உங்களுக்கு இன்னும் எதிர்ப்பு கிளம்பல.

4. டேங்சுக்கு காப்புரிமையாளர்.

தராசு said...

வாங்க ராஜ நடராஜன்,

கலக்கறீங்க.

ஆணி அதிகம், அதனாலதான் 4 இடுகை. மற்றபடி ராசிபலனுக்கு டேங்சு.

Paleo God said...

சூப்பர் தல!

:))

Thamira said...

உண்மையில் கதையில் ஒரு ஃபீல் வந்திருக்கிறது. இயல்பாக இருக்கிறது.

இன்ஸ்பெக்டர் மாட்டிக்கிறாமாதிரி கொஞ்சம் சினிமாடிக்கா முடிச்சிருந்தா மகிழ்ச்சி எண்டிங்கா இருந்திருக்கும்.