Friday, January 8, 2010

நூற்றைம்பது ரூபாயில் சூனியம்

வருடத்தின் முதல் நாள். உருப்படியா எதாவது செய்யணும்னு நெனச்சு, என்ன பண்ணலாம்னு கிட்னிய கசக்கி, சே, மூளைய கசக்கி யோசிச்சு யோசிச்சே நேரம் போயிட்டிருந்தது. அதுக்குள்ள வீட்ல இருந்து அதிகார மையத்தார் ஒரு பெரிய லிஸ்டே போட ஆரம்பிச்சதுனால, அதுல இருக்கற வேலைகளை எல்லாம் செய்து முடிக்கறதுக்குள்ள 2012 ம் வருடம் வந்து உலகம் அழிந்து விடக் கூடிய சாத்தியங்கள் அதிகமிருப்பதால், எப்படியும் இந்த வன்முறைக்கு ஒரு முடிவு கட்டணும்டா முனியாண்டின்னு முடிவு எடுத்துட்டு, புத்தகக் கண்காட்சி போலாம்னு என் மசோதாவை தாக்கல் செய்தேன்.

அதிகார மையத்திடமிருந்து “கண்ணி வைக்காமலே வேங்கை வீழ்கிறதே, ஆச்சரியக்குறி” என்ற கவிதை கலந்த பார்வை வந்தவுடனேயே, ரூட்ட மாத்தியிருக்கலாம். ஆனா, நாம போன வருஷத்துல பண்ணுன பாவத்துக்கெல்லாம், இந்த வருஷ முதல் நாளிலிருந்தே தண்டனை அனுபவிக்கணும்னு எம்பெருமான் எழுதி வெச்சுட்டாரோ என்னவோ, விதி யாரை விட்டது.

புத்தாண்டு கொண்டாட்டங்களில் களைத்துப் போயிருந்த சென்னை நகரம் சற்றே துயிலெழுந்து கொட்டாவி விட்ட மாலை நேரம். சாலைகள் வெறித்திருக்காவிடினும், நெரித்துத்தள்ளவில்லை. ஒரு வழியா கண்காட்சி மைதானத்துக்கு போகும்போது மாலை 6 மணி. இந்த முறை கார் நிறுத்துவதற்கு நல்ல ஏற்பாடுகள் இருந்தது. அல்லது 1 ம் தேதி குறைவான கார்களே இருந்ததோ என்னவோ, சீக்கிரத்தில் நிறுத்தி விட்டு பிளக்ஸ் பேனர்களில் சிரித்துக் கொண்டிருந்த எழுத்தாளர்களை எல்லாம் வரிசையாக பார்த்துக் கொண்டே நடந்தோம். நுழை வாயிலிலேயே மகள் பாப் கார்ன் வாங்கிக் கொண்டாள். அனுமதிச்சீட்டு வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்ததும் எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதில் குழப்பம். நம்ம என்னைக்கு நேர் வழியில போயிருக்கறோம், வழக்கம் போல கடைசியில இருந்தே ஆரம்பிப்போம் என ஆரம்பித்தோம்.

என்ன புத்தகம் வாங்கவேண்டும் என ஒரு பட்டியலே போட்டுக் கொண்டு போனேன். ஆனால், நாம ஒண்ணு நினைக்க தெய்வம் வேற ஒண்ணுதான நினைக்கும். கடைசியில இருந்து அப்படியே ஊர்ந்துகிட்டே போய் நாம எதிர்பார்த்தது கிடைக்கல. சரி இருக்கறத எதிர்பார்ப்போம்னு இன்னும் நடந்துகிட்டே இருக்கும்போது தான் அந்தப் பதிப்பகம் கண்ணுல பட்டுது. இதுக்குள்ள போய் பார்க்கலாமேன்னு போனப்பதான் அதன் உரிமையாளர் கடைக்கு வெளியில சக்கர நாற்காலில அமர்ந்து கைபேசியில சிரித்து சிரித்து பேசிகிட்டிருந்தாரு. அடடே, அந்த பிரபல எழுத்தாளரோட புத்தகமெல்லாம் இருக்குதேன்னு பார்த்துட்டு இருக்கறப்போ, “இது யாரு இது, காதுல வளையமெல்லாம் போட்டுகிட்டு, இப்படி ஆம்பளைங்க ஒரு காதுல வளையம் போட்டுகிட்டா என்ன அர்த்தம் தெரியுமில்ல” னு என் மறுபாதி கேட்பதற்கும், அந்தக் குரல் கேட்டு அந்த காதுல வளையம் ஆசாமி திரும்பிப் பார்ப்பதற்கும் சரியாய் இருந்தது. அவருக்கு இவுங்க சொன்னது சரியா கேட்டுச்சோ இல்லையோ தெரியல, ஆனா அவுரு பார்த்த பார்வையிலயே கேட்டிருக்குமோன்னு ஒரு சந்தேகம் வந்துச்சு. சரி எதுக்கும் இருக்கட்டுமேன்னு “புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்”னு நான் கையை நீட்டிவிடவும். என்பக்கம் திரும்பினார் அவர். அப்பொழுது தான் கவனித்தேன் ஆஹா, அவரா, இவுருன்னு கிலியடிச்ச மாதிரி நின்னுட்டேன். கணப் பொழுதில் சுதாரித்துக் கொண்டு, நானும் ஒரு பதிவர் தான், உங்க எழுத்தையெல்லாம் படிச்சிருக்கேன்னு சொன்னேன். அப்படியான்னு முகத்தில் எந்த வித மாற்றமுமில்லாமல் உணர்ச்சியே இல்லாதவரைப் போல கேட்டாரு. வேற யாராவது பதிவர்களைப் பார்த்தீங்களான்னு கேட்டேன். ஆமாம், லக்கியும் டாக்டர் புரூனோவும் வந்திருக்காங்கன்னு சொன்னாரு. உடனே அவுருகிட்ட கையெழுத்து வாங்கறதுக்காக ஒருத்தர் வந்தாரு. அவருக்கு கையெழுத்து போட்டுகிட்டிருக்கும்போதே, நானும் இந்த பிரபலத்துகிட்ட கையெழுத்து வாங்கலாமேங்கற நப்பாசையில அவர் எழுதுன புத்தகம் எதாவது இருக்குதான்னு பார்த்தா, அந்த பூஜ்ஜியக் கோணம் இருந்துது. டக்குனு அதை எடுத்து, இதுல கையெழுத்து போட்டுக் குடுங்க சார்னு சொன்னவுடனே, உங்க பேரென்னன்னு கேட்டாரு, சொன்னதும் என் அன்பு நண்பர்…………… அவர்களுக்குன்னு எழுதி அவர் பெயரையும் எழுதி குடுத்தாரு.

மனுஷன் அநியாயத்துக்கு அன்பு பாராட்டறாரேன்னு பார்த்துட்டு, அந்த கடையிலயே இன்னமும் கொஞ்சம் தேடினப்பதான், அந்த ஆச்சரியம் காத்திருந்தது. இந்த காதுல வளையம் பார்ட்டி, யாரை பரம்பரை எதிரி மாதிரி திட்டுவாரோ அவர் எழுதின புத்தகங்கள் நேர் எதிர் வரிசையில் இருந்தது. இது என்னடா, “இம்மியளவு இடைவெளியில் இரண்டு துருவங்களா, ஆச்சரியக் குறி” (என்னமா கவிதை பாருங்க) அப்படீன்னு மனசுல நெனச்சுகிட்டு, அதுலயும் ஒண்ணை வாங்கிட்டு சரி போலாம் ரைட்னு இன்னும் தேடலை ஆரம்பித்தோம்.

கிழக்கு பக்கமா போயி அந்த அரசர்களெல்லாம் குஜால் பண்ணதப் பத்தி தலையணை சைஸ்ல ஒருத்தர் எழுதுன புத்தகம் இருக்கான்னு கேட்டா, இன்னும் வரலீங்க, வர்றதுக்கு ரெண்டு நாளாகும்னு சொல்லீட்டாங்க. ஒரே ஏமாற்றம். அதுக்காக விடுவமா, இன்னும் மூணு மாசம் கழிச்சுத்தான் தமிழ்நாட்டுப் பக்கமே வரப் போறோம், அதுவரைக்கும் தாக்குப் பிடிக்கணுமேன்னு, மூணு மாசத்துக்கான சரக்கை தேத்திக்கிட்டு, அப்படி இப்படீன்னு மகளுக்கு கொஞ்சம், அப்புறம் அதிகார மையத்துக்கு கொஞ்சம்னு கைநிறைய புத்தகங்களை வாங்கிகிட்டு வீட்டுக்கு வந்துட்டோம்.

வீட்டுல வந்து அந்த பூஜ்ஜியக் கோணத்தை திறந்து படிக்க உக்கார்ந்தா, ரெண்டு பக்கம்தான் படிச்சிருப்பேன், உவ்வே, வ்வே, வ்வ்வ்வ்வ்வ்வே, த்தூ, த்தூ. வாந்தி, வாந்தியா வருது. கஷ்டப்பட்டு வாந்தி எடுத்து முடிச்சிட்டு, அந்த அதிர்ச்சியிலிருந்து வெளியில வர்றதுக்கு ஆறு நாள் ஆச்சு. ஆறு நாளைக்கப்புறம் கணினியைத் திறந்தா, இன்னொரு மனிதனின் குமுறல் வேற.

மனசுக்குள்ள ஒரு குறுகுறுப்பு, இந்த வருட முதல் நாள்லயே கைக்காசை செலவு பண்ணி வாந்தியெடுக்கறதுக்காக ஒரு புத்தகம் வாங்கி, அதுல கையெழுத்து வேற வாங்கிட்டு வந்துட்டமே, இதைத்தான் சொந்த செலவுல சூனியம்ங்கறதா?????

20 comments:

கார்க்கிபவா said...

ஹிஹிஹி..அதுல என்ன டவுட்டு

சங்கர் said...

நண்பனிடம் ஒரு பிரதி இருக்கு, முன்னாடியே சொல்லியிருந்தீங்கன்னா அம்பது ரூபாய்க்கு வாங்கி குடுத்திருப்பேன் :))

Prabhu said...

ஒண்ணும் சொல்லுறதுக்கில்ல! :)

Unknown said...

:-)))))

Raju said...

வாழ்த்துக்கள்..இலக்கியவாதி ஆயிட்டீங்க...!

தராசு said...

கார்க்கி,

இதையெல்லாம் முன்னாடியே சொல்லக் கூடாதா???

தராசு said...

சங்கர்,

அப்ப அந்த குப்பை அம்பது ரூபாய்க்கு வொர்த் னு சொல்றீங்களா, சும்மா குடுத்தாக்கூட வேண்டாம் சாமி.

தராசு said...

பப்பு,

ஏய்யா, ஒரு மனுஷன் எவ்வளவு நொந்து போயிருக்கேன், நீங்க ஒண்ணுமே சொல்ல மாட்டீங்களா?
நல்லாயிருங்கப்பு.

தராசு said...

வாங்க பட்டிக் காட்டான்,

டேங்சு

தராசு said...

ராஜூ,

அந்த புத்தகத்தை தொட்டதுல இருந்து அவனவன் வியாதி வந்து கெடக்கான், இவனுக்கு இலக்கிய வியாதியாம், ஏம்பா வயித்தெரிச்சலை கிளப்பறீங்க....

பிரபாகர் said...

அண்ணே உங்களுக்கு ரொம்ப துணிச்சல்னே! இதுக்கப்புறம் உங்கள சமூக விரோதி ரேஞ்சுக்கு சில பேரு பாப்பாங்க, சொல்லிபுட்டேன், ஆமா!

பிரபாகர்.

Anonymous said...

ஹலோ,

அதப் படிச்சு பேதி ஆனவங்க நிறையப் பேரு. நல்ல வேளை உங்களுக்கு வாந்தியோட போச்சு.

சரி சரி இனி வாழ்க்கையில உங்களுக்கு எந்தக் கஷ்டமும் வராது.

தராசு said...

இதுக்கெல்லாம் பயந்தா முடியுங்களா பிரபாகர்.

தராசு said...

அண்ணாச்சி,

அப்ப இந்த புத்தகம் என்ன திருஷ்டி கழிக்கற தாயத்தா???

ஜோசப் பால்ராஜ் said...

//நண்பனிடம் ஒரு பிரதி இருக்கு, முன்னாடியே சொல்லியிருந்தீங்கன்னா அம்பது ரூபாய்க்கு வாங்கி குடுத்திருப்பேன் :)) //

என் நண்பணிடமும் ஒரு பிரதி இருக்கு. முன்னடியே சொல்லியிருந்தா சும்மாவே உங்க அட்ரஸ்க்கு பார்சல்ல அனுப்பியிருப்போம்.

தராசு said...

வாங்க ஜோசப் அண்ணே,

எனக்கு சூனியம் வைக்கறதுக்கு நிறைய பேர் கிளம்பீருக்கீங்க.

தேவன் மாயம் said...

நான் 10 ரூபாய்க்கு வாங்கினேன்!!

Romeoboy said...

தலைவரே அந்த புத்தகத்தை நான் 5 தடவைக்கு மேல படிச்சிட்டேன். முதல் தடவை வாசிக்கும் போது எனக்கும் பைசா வேஸ்ட் பணிட்டோம்ன்னு தான் நினைத்தேன். ஆனால் நல்லதான் இருந்துச்சு படிக்க படிக்க.

விக்னேஷ்வரி said...

பாவம்ங்க நீங்க. இந்த வருடம் ரொம்ப கொடுமையா ஆரம்பிச்சிருக்கு.

*இயற்கை ராஜி* said...

ஓ... இதுதான் சொந்த செலவில சூனியமோ:-0