Wednesday, September 15, 2010

பெண்ணியம் பேசுவோம் வாருங்கள் – 2.


நேற்று நண்பரொருவர் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ஒரு பெண்ணின் திருமண கால மனநிலையை உருக்கமாக பிரதிபலிக்கும் வர்ணனைகள் நிறைந்த வரிகளுடன் ஆரம்பிக்கும் இந்த எழுத்துக் கோர்வை, பின் பாதியில் புதிதாக திருமண உறவில் ஈடுபடும் ஆணின் மனநிலையையும் தொட்டும் தொடாமலும் சென்று முடிகிறது.

இப்படியாக அந்த செய்தி ஆரம்பிக்கிறது, அந்தப் பெண்ணின் மனதில் ஒரு ஓயாத கூக்குரல் இருக்கிறது. அவள் தன் வேதனைகளை கத்தித் தீர்க்க வேண்டுமென்று தருணம் தேடுகிறாள். அம்மா, எனக்கு திருமணம் வேண்டாமென்று நான் சொல்லவில்லை. ஆனால், வெறும் ஒரு சில நிமிடங்களே பார்த்த முன்பின் தெரியாத ஒரு ஆணுடன் நான் எப்படி வாழ்நாள் முழுக்க வாழ்வேன்? என் உணர்வுகளை, ஆதங்கங்களை புரிந்து கொள்ள முடியாத ஒருவனாய் அவன் இருந்து விட்டால், என் வாழ்க்கை ஒரு நரகமாக மாறி விடாதா? நான் பெண்ணாய் பிறந்தது என் குற்றமா? ஏன், என்னை ஒரு வார்த்தை கூட கேட்காமல் இந்த உறவு முறைக்குள் திணிக்கிறீர்கள்? நல்ல குடும்பம், நல்ல ஜாதகம், நல்ல சம்பளம், நல்ல உயரம், நல்ல ஜாதி, நல்ல பழக்க வழக்கம் என்ற உங்களின் ஒரே ஒரு முக கோணத்தில் உருவகமெடுத்திருக்கும் தேடல் வாக்கியங்களான எல்லா “நல்ல” வைகளுக்குள்ளும் கச்சிதமாக பொருந்தும் இந்த ஆணுக்குள், என் மனதையும், என் தனித்துவத்தையும், என் பழக்க வழக்கங்களையும், என் விருப்பு வெறுப்புகளையும், குறிப்பாக என்னை மதிக்கிற அந்த “நல்ல” தன்மை எங்கே ஒழிந்திருக்கிறதென்று எப்படி கண்டு பிடித்தீர்கள்?

இப்படி மனதில் தோன்றும் ஆயிரம் கேள்விகளைக் கேட்டு ஓங்கிக் கத்த வேண்டும் போலுள்ள அந்தப் பெண்ணை அப்படியே கோழி அமுக்குவது போல் அமுக்கி, மணப்பெண் அலங்காரம் செய்வித்து, புது உடை உடுத்தி, நகை அணிவித்து, மணவறையில் அமரவைத்து, எல்லா சடங்குகளுக்கும் மறுப்புப் பேசாமல் தலையாட்டும் பொம்மையாய் நடிக்க வைத்து, நாளை முதல் இவன்தான் உன் உலகம், இவனுக்கு என்ன பிடிக்கிறதோ, அது உனக்கு பிடிக்காவிட்டாலும் பிடித்த மாதிரி வாழ பழகிக் கொள் என சொல்லாமல் சொல்வது பெண்ணினத்தின் மீது சமூக கட்டமைப்பால் ஏவி விடும் மிகப் பெரிய வன்முறை இல்லாமல் வேறென்ன என கேள்வி எழுப்புகிறது அந்த எழுத்து.

இந்த மின்னஞ்சல் என்று மட்டுமல்ல, எந்த ஒரு திருமண உறவின் விவரிப்புகளிலும் அந்தப் பெண்ணின் சம்மதம் இல்லாமலே பெண்ணை பெற்றோரிடமிருந்து பிரித்து, ஒரு புதிய சூழலில், புதியவர்களின் வாழ்விடத்தில், புதிய மனிதர்களின் அருகாமையில், புதிய பழக்க வழக்கங்களுக்கு மத்தியில், புதிய குடும்ப ஒழுங்குகளில் என அநேக ”புதிய”வைகளின் பட்டியல் பிரம்மாண்டமான வர்ணனை வார்த்தைகளால் விவரிக்கப்படுகிறது.

எனக்கு ஒரு சில சந்தேகங்கள் :

1. இன்றைய சூழ்நிலையில் கூட்டுக் குடும்பம் என்ற ஒன்றே அரிதாகி வரும் கால கட்டத்தில், இன்னுமா பெண்ணுக்கு இந்த பட்டியலிடப்பட்ட “புதிய” சூழலில் வாழ வேண்டிய அவசியம் ஏற்படுகிறது????

2. திருமணமானவுடன் முன்பின் சற்றும் அறிமுகமில்லாத ஆணுடன் ஒரு பெண் வாழும் படி நிர்பந்திக்கப் படுகிறாள் என்பதை இம்மியளவேனும் ஒரு அர்த்தமுள்ள கூற்றாக எடுத்துக் கொண்டோமென்றாலும், இதில் மண வாழ்வு என்பது வெறும் பெண் சம்பந்தப் பட்ட விஷயம் மாத்திரம் தானா, அந்த ஆணுக்கு ஒரு பெண்ணுடன் இணைந்து வாழ்வது என்பது ஒரு புதிய சூழலில்லையா????

3. பெற்றோரிடமிருந்து ஒரு பெண் பிரிந்து வருவது என்பதில் உள்ள பிரிவின் தாக்கம் பெண்மனதில் எவ்வளவு உள்ளதோ, அவ்வளவே ஆண் மனதையும் அதன் தாக்கம் ஆக்கிரமிக்கும் என்பதை ஏன் யாருமே உணர்வதில்லை????

4. அப்படியே ஒரு பெண் கூட்டுக் குடும்பத்தில் வாழும் நிலை ஏற்பட்டாலும், அங்கு எனது மன உணர்வுகள், என் பழக்க வழக்கங்கள், என் நியாயங்கள், என் சுதந்திரம் என ஒரு தனி ஆதிக்கப் போக்கை விட்டு, குடும்ப நலம், குடும்ப பழக்க வழக்கம், குடும்ப நியாயம் என்ற பரந்த நோக்குடன் இசைந்து வாழ்வது என்பது பெண்ணின் தன்மானத்துக்கு கேவலமான ஒன்றா????

5. பெண்ணை ஒரு முன்பின் அறிமுகமில்லாத ஆணுடன் இணைந்து வாழ வைப்பது என்பது பெண்ணின் சுய மரியாதையை குலைக்கும் ஒரு சமூக வன்முறை எனில், ஆண் அந்த வன்முறைக்கு இலக்காவதில்லையா????

தாம்பத்யத்தில் அன்பு, புரிந்துணர்வு, தனது துணையின் எண்ணங்கள் பால் மரியாதை இன்னும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத எத்தனையோ உணர்வு சார்ந்த சமாச்சாரங்கள் எல்லாம் இருபாலரிடத்தும் சரி விகித்த்தில் காணப்பட்டால் தான் அது தாம்பத்யம். இல்லையேல் பெண்ணின் உணர்வுகள், பெண்ணின் நியாயங்கள் (மட்டும்) மதிக்கப் பட வேண்டும் என போர்க்கொடி பிடிப்பது, மேடைக்கு அழகாய் இருக்கலாம், நான்கு சுவர்களுக்குள் அது அழுக்காய்த்தான் இருக்கும்.

19 comments:

♠ ராஜு ♠ said...

என் சார்பில் ஒரு சாபாஷ்ண்ணே உங்களுக்கு!

DHANS said...

அவ்வளவே ஆண் மனதையும் அதன் தாக்கம் ஆக்கிரமிக்கும் என்பதை ஏன் யாருமே உணர்வதில்லை????

super kelvi, ana pathil solla yaruke mun varuvathu illa...

super post :)

தராசு said...

ராஜு,

டேங்சு

தராசு said...

தன்ஸ்,

பதில் இல்லை, அதனால தான் நோ ஃப்ரண்ட் கம்மிங்.

Robin said...

//அந்த ஆணுக்கு ஒரு பெண்ணுடன் இணைந்து வாழ்வது என்பது ஒரு புதிய சூழலில்லையா????3. பெற்றோரிடமிருந்து ஒரு பெண் பிரிந்து வருவது என்பதில் உள்ள பிரிவின் தாக்கம் பெண்மனதில் எவ்வளவு உள்ளதோ, அவ்வளவே ஆண் மனதையும் அதன் தாக்கம் ஆக்கிரமிக்கும் என்பதை ஏன் யாருமே உணர்வதில்லை????//ஆணைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.

//4. அப்படியே ஒரு பெண் கூட்டுக் குடும்பத்தில் வாழும் நிலை ஏற்பட்டாலும், அங்கு எனது மன உணர்வுகள், என் பழக்க வழக்கங்கள், என் நியாயங்கள், என் சுதந்திரம் என ஒரு தனி ஆதிக்கப் போக்கை விட்டு, குடும்ப நலம், குடும்ப பழக்க வழக்கம், குடும்ப நியாயம் என்ற பரந்த நோக்குடன் இசைந்து வாழ்வது என்பது பெண்ணின் தன்மானத்துக்கு கேவலமான ஒன்றா????// தன் கணவன் குடும்பத்தாரை எதிரியாகத்தான் பல பெண்களும் நினைக்கிறார்கள்.


// பெண்ணை ஒரு முன்பின் அறிமுகமில்லாத ஆணுடன் இணைந்து வாழ வைப்பது என்பது பெண்ணின் சுய மரியாதையை குலைக்கும் ஒரு சமூக வன்முறை எனில், ஆண் அந்த வன்முறைக்கு இலக்காவதில்லையா????// இப்போதெல்லாம் பெண்களால் பாதிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம்.

தனி காட்டு ராஜா said...

//தாம்பத்யத்தில் அன்பு, புரிந்துணர்வு, தனது துணையின் எண்ணங்கள் பால் மரியாதை இன்னும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத எத்தனையோ உணர்வு சார்ந்த சமாச்சாரங்கள் எல்லாம் இருபாலரிடத்தும் சரி விகித்த்தில் காணப்பட்டால் தான் அது தாம்பத்யம்.//

இன்றைய சுழலில் தாம்பத்யம் என்பதே ஏறக்குறைய வியாபாரம் தான் ....தேவையின் அடிப்படையில் நாம் நமக்கு நம் ஈகோ -வுக்கு பொருத்தமானவரை தேர்ந்தெடுத்து கொள்கிறோம்.....இதில் ஆண் என்ன பெண் என்ன ?
அடிப்படையில் காதல் இல்லாதவரை ....தாம்பத்தியம் என்ற பெயரில் வியாபாரம் தான் நடக்கிறது ....சிலது வெளிப்படையாக தெரியும் ...சிலது மறைமுகமாக இருக்கும்.....
ஆணியம் ...பெண்ணியம் என்று பேசிக்கொண்டு இருப்பவர்கள் அனைவரும் தன் அடையாளத்தை ஆண் -பெண் என்பதற்கு அப்பாற்பட்டு...அன்பில் அடையாளபடுத்தி கொள்ளாதவரை இந்த முட்டாள் தனமான விவாதம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்....இதற்கு முடிவு இல்லை ...முடிவு நம் புரிதலில் தான் உள்ளது ....

இன்றைய உலகம் பொருளா தாரத்தை மையமாக கொண்டு தான் செயல் படுகிறது ......பொருளாதார தேடல் என்பது வியபாரத்தில் தான் மையம் கொண்டு இருக்கும்....அன்பில் மையம் கொண்டு இருக்காது......
நாங்கள் அன்பான தாம்பத்தியம் கொண்டு வாழ்கிறோம் என்பதெலாம் வெளி வேஷம் .....வியாபார மையமான அன்பு என்று வேண்டுமானால் சொல்லி கொள்ளுங்கள்............

1 ,2 ,3 ....எஸ்கேப்...

ஆதிமூலகிருஷ்ணன் said...

முதல் பாதி படித்திருந்த நிலையில், 'போய்யா யோவ்.. அதே பிரச்சினைதானே நமக்கும்.. வந்துட்டாரு பெண்ணியம் பேச.. :-))' என்று பின்னூட்டம் போட தோன்றியது.

ஆனால் அதையே சந்தேகங்கள் என்ற இரண்டாவது பகுதியில் நேர்மையாக, அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். செழுமை.

Vasanth said...

Nice argument!! Pls write more and frequently. All your writings are interesting and practical.

Anonymous said...

அருமையான பதிவு நண்பா. இதையும் படிங்க. வேறு கோணம்.
http://ilavarasanr.blogspot.com/2009/10/blog-post_6779.html

அத்திரி said...

kalakkal post

தராசு said...

ராபின்,

டேங்சு

தராசு said...

வாங்க தனிக்காட்டு ராஜா,

//இதற்கு முடிவு இல்லை ...முடிவு நம் புரிதலில் தான் உள்ளது ....//

நன்றாய் சொன்னீர்கள். வழிமொழிகிறேன்.

தராசு said...

வாங்க ஆதி,

டேங்சு.

தராசு said...

வாங்க வஸந்த்.

டேங்சு

தராசு said...

வாங்க இளவரசன்

டேங்சு

தராசு said...

அத்திரி அண்ணே,

வொய் ரொம்ப நாள நோ கம்மிங்?

டேங்சு.

ரிஷபன்Meena said...

கேட்க வேண்டிய சந்தேகங்கள் தான் கேட்டு வச்சுருக்கிங்க !!

Anonymous said...

ஆணாதிக்கம் ஆணாதிக்கம் என்று கூச்சல் போடுகிறார்கள். ஆனால் உண்மை நிலவரம் என்னவோ இப்போது வேறு திசையை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது. 'சபாபதி' காலத்திலேயே கணவனை அரட்டும் மனைவிகள் தான் அதிகம். படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

உண்மை என்னவென்றால் ஆணாதிக்கம் இருந்த காலங்களில் குடும்ப அமைப்பு சீராக இருந்தது. இப்போ நடக்கும் சம உரிமை வாழ்க்கையில் என்னவோ குடும்பங்கள் கோர்ட் கோர்ட் என்று அலைகிறது விவாகரத்து கேட்டு.

வெகு சிக்கிரம் ஆண் விடுதலை தேடி போரவேண்டும்.

வித்யா said...

தங்கள் இடுகையை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்
http://blogintamil.blogspot.com/2010/10/blog-post_07.html