கடந்த 25ம் தேதி, பங்களாதேஷுடன் டெஸ்ட் போட்டியில் ஆடிக் கொண்டிருந்த இந்திய அணியில், கொஞ்சம் உணர்ச்சி வசப்படும் வீரரான ஹர்பஜன் சிங்கின் ஒரு செய்கை உலக கிரிக்கெட் கவுன்சிலின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தது. ஹர்பஜன் சிங் மன்னிப்பு கேட்டார் என ஊடகங்கள் கத்தித் தீர்த்து நிம்மதியடைந்தது. இந்திய கிரிக்கெட் வீரர்களிலேயே கொஞ்சம் அதீத உணர்ச்சி வசப் படுபவர் இந்த ஹர்பஜன். அவர் ஒரு விக்கெட் வீழ்த்தியவுடன் செய்யும் ஆரவாரமாகட்டும், ஸ்ரீசாந்த்தை பளாரென அறைந்ததாகட்டும், 25ம் தேதி பங்களாதேஷில், தன்னைக் கடந்து பவுண்டரி லைனுக்கு போன பந்தைக் கண்டு வெறுப்புற்று, விளம்பரப் பலகையை எட்டி உதைத்ததாகட்டும், இவர் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதால் வம்பை விலைக்கு வாங்கும் நபராகவே திகழ்கிறார்.
சரி, கோபப்பட்டு, எட்டி உதைத்து, அது நடுவரின் கண்களில் பட்டு, அதற்காக மன்னிப்பும் கேட்டு விட்டார். ஆனால் ஊடகங்கள் அதை விடுவதாயில்லை, குறிப்பாக மேற்கத்திய வெள்ளைத்தோல் ஊடகங்கள் “இங்க பார்றா, இவுருக்கெல்லாம் கோபம் வருதாம், கோபம்” என்ற உள்குத்து நக்கலுடனேயே இதை வர்ணித்து வருகின்றன. புது விதமான ஆங்கில வார்த்தையில் “ Harbhajan reprimanded for kicking the board” என்ற ரீதியில் இதை எழுதி வருகிறர்கள்.
உலக கிரிக்கெட் வரலாற்றிலும் சரி, இன்னும் எந்த விளையாட்டு வடிவத்திலும் சரி, நிறவெறி என்பது இன்னும் முற்றிலும் ஒழிந்து விடவில்லை. இம்ரான் கான் பாகிஸ்தான் அணித்தலைவராயிருந்து 1992 – ல் உலகக் கோப்பை வென்ற போது, எதிரணியில் விளையாடி தோற்ற இங்கிலாந்து அணித்தலைவர் கிரகாம் கூச் ஒரு மரியாதைக்கு கூட இம்ரான் கானுடன் கைகுலுக்க வரவில்லை. கடைசியில் வேண்டா வெறுப்பாய் ஒரு முறை கையை தொட்டு விட்டு சென்றார். இதை போட்டியில் தோற்றதால் ஏற்படும் விரக்தியாக என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. இப்படியாக ஒவ்வொரு முறையும் வெள்ளையரல்லாத ஒரு வீரர் எந்த வெற்றிகளை அடைந்தாலும் அதை கறுப்பர்களுக்கு கிடைத்த வெற்றியாகத்தான் வெள்ளையர் உலகம் பார்க்கிறதே தவிர, தேர்ந்த விளையாட்டு வீரன் வெற்றி பெற்றான் என்ற மனப் பான்மை இன்னமும் வரவில்லை.
டென்னிஸில் ஜான் மெக்கென்ரோ விம்பிள்டன்னின் மைய அரங்கில் காறித்துப்பலாம். ஆண்ட்ரூ ஃபிளின்டாஃப், யுவராஜ் சிங்கை வெளிப்படையாக திட்டலாம். ஆண்டி ரோடிக் என்ற அமெரிக்க சுள்ளான், டென்னிஸ் மட்டையை ஓங்கி வீசிவிட்டு அந்த நான்கெழுத்து வார்த்தையை சொல்லி கத்தலாம். ஷேன் வார்ன் பந்தை எப்படி வேண்டுமானாலும் எறியலாம். இல்லிங்வொர்த் என்ற இங்கிலாந்து சுழல் பந்து வீச்சாளைரின் கையசைப்பிலேயே தெரியும் அவர் பந்தை வீசுகிறாரா அல்லது எறிகிறாரா என்று, இன்னும், தென் ஆப்பிரிக்க வெள்ளையரான பேட் சிம்காக்ஸ் சுழல் பந்து வீசுவது லகான் படத்தில் அமீர்கானின் அணி வீரர்கள் பந்தை எறிவார்களே அப்படித்தான் இருக்கும். ஆனால் இதைக் குறித்து விமரிசனங்கள் எழும் பொழுதெல்லாம் ஊடகங்கள், குறிப்பாக மேற்கத்திய ஊடகங்கள் அவர்களது முதுகு தடவி, சரி சரி லூசுல விடுப்பா என வேதம் ஓதும்.
அதே சமயத்தில் முத்தையா முரளிதரன் அதிக விக்கெட் எடுக்க ஆரம்பித்தவுடன், எல்லா வெள்ளைத் தோல்களும் ஒருசேரக் கத்தும், அது எப்படி ஒரு கறுப்பன் பந்து வீச்சில் பிரகாசிக்கலாம், பிடியுங்கள் அவனை. அவன் பந்தை எறிகிறான். சர்வதேச பந்து வீச்சு நிபுணர்கள் அவனை சோதிக்க வேண்டும் என்பார்கள். பாகிஸ்தானின் ஷாக்குலின் முஷ்தாக் “தூஸ்ரா” விசினார் என்றால், அவன் எப்படி புது முறையை கண்டுபிடிக்கலாம், அது முற்றிலும் தவறு, உடனே ஷாக்குலின் சோதிக்கப் படவேண்டும் என்பார்கள். ஹர்பஜன் சிங் சுழலில் சுழட்டி எடுத்தவுடன், ஹர்பஜனுக்கு பந்து வீசவே தெரியவில்லை, உடனே சோதியுங்கள் என கூக்குரல் எழுந்தது.
இந்திய வீரர்களை எந்த வெள்ளைத்தோல் வீரனும், முறைக்கலாம், காறித்துப்பலாம், திட்டலாம், என்ன வேண்டுமானலும் செய்யலாம், இதெல்லாம் விளையாட்டில் சகஜமப்பா என்பார்கள். ஆனால், ஸ்ரீசாந்த் ஒருமுறை மேத்யூ ஹெய்டனை முறைத்து விட்டால், இவன் எப்படி முறைக்கலாம் என புருவங்கள் உயரும்.
இந்த நிறவெறி கல்லும் மண்ணும், நீரும் நிலமும், காற்றும் வானும், நிறமும் உள்ளவரை அப்படியேதான் இருக்குமோ???
டிஸ்கி : இதற்காக ஹர்பஜனின் அச்சு பிச்சுகளையோ, ஸ்ரீசாந்தின் அதிகப் பிரசங்கத்தனத்தையோ அடியேன் ஆதரிக்கவில்லைங்கோ.......
I, Sharmi, Diamond. Ep 29
1 week ago