Thursday, May 27, 2010

ஜுகல்பந்தி – 27 – 05 -2010. – இந்தியனுக்கு செருப்படி.



நகரம் – அலகாபாத். – தெய்வத்தின் நகரம்.

கங்கைக் கரைப் பட்டினங்களில் சிறப்பு வாய்ந்த ஒரு பட்டினம். தேவர்களின் நகரம், முக்கூடல் நகரம், பிரம்மனின் நகரம், பிரதம மந்திரிகளின் நகரம் என பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது. கங்கை நதி என்ற ஒன்று மட்டும் இல்லாதிருந்திருந்தால், பல புலவர்களுக்கும், புராண இதிகாச ஆசிரியர்களுக்கும் பைத்தியமே பிடித்திருக்கும் என நினைக்கிறேன். ஆரம்பம் எதுவென்பதில் சூட்சுமம் நிறைந்து, வளைந்து, நெளிந்து, சுழன்று, சுழித்து, ஏறி, இறங்கி, ஆர்ப்பரித்து, அடங்கி நடந்து, அழுக்கை கழுவி, அழுக்குப் பட்டு என பல வடிவங்களில் பாயும் இந்நதியின் ஈரம் பட்ட ஒவ்வொரு இடத்திலும் எதாவது ஒரு சிறப்பு இருந்து கொண்டே இருக்கிறது.

இதே நதியின் கரையில் தான் தன் அழகுக்கு சாட்சியாய், அக்பரால் கட்டப்பட்ட முகலாய வடிவ கோட்டைகள், பல்கலைக்கழகங்கள், வெள்ளையரால் முழுதும் வெள்ளைக்கறகளைக் கொண்டு கட்டப்பட்ட கோத்திக் வடிவ கதீட்ரல், கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய கட்டிட கலைகளின் சங்கமத்துக்கு சாட்சி கூறும் தலைமை நீதிமன்ற கட்டிடம், மேற்கத்திய கோத்திக் மற்றும் இந்திய கட்டிடக் கலைகளின் மொத்த கலவையும், 200 அடி கோபுரமும் கொண்ட முயுர் கல்லூரி கட்டிடம், முற்றிலும் இந்தியர்களாலேயே வடிவமைக்கப்பட்டு இந்தியாவிலேயே முதன் முறையாக இரும்புக் கயிறுகளால் இணைத்து இழுத்துக் கட்டப்பட்ட யமுனை நதி பாலம் என திரும்பிய பக்கமெல்லாம் அழகு காட்டும் அற்புத நகரமிது.

பிரம்மன் தன் படைப்புகள் எல்லாவற்றையும் படைத்து விட்டு, இந்நகரத்தில் தான் வந்து ஓய்வெடுத்து யாகம் நடத்தினானாம். அதனால் இது கடவுளின் நகரம். யமுனையும் கங்கையும் இணைவதைக் கண்டு சரஸ்வதி என்னும் இன்னொரு மங்கை பூமிக்கு உள்ளிருந்து கிளம்பி வந்து யார் கண்ணுக்கும் தெரியாமல் தானாகவே நதி வடிவத்தில் இங்கு கூடி விடுகிறாளாம். அதனால் இது முக்கூடல் நகரம். ஹரித்துவார், உஜ்ஜைன், நாசிக் ஆகிய கும்ப மேளா நடைபெறும் மூன்று நகரங்களுக்கு அடுத்தபடியாக, நான்காவதாக கும்பமேளா இங்கும் நடைபெறுவதால் இது புனித நகரம். இந்தியப் பிரதமர்களில் ஏழு பேர் இங்கிருந்து வந்தவர்களாதலால் இது பிரதமர்களின் நகரம். 1857 – ல் நடந்த சிப்பாய் கலகத்தை அடக்க மெட்ராஸ் ரெஜிமெண்டின் அப்போதைய அதிகாரிகளான கர்னல் நீல், கேப்டன் ஆஷ்லி, கேப்டன் எட்வர்ட் மக்கின்ஸி ஆகியோரது தலைமையில், கிழக்கிந்திய கம்பெனியின் தொள்ளாயிரம் சிப்பாய்களின் வெறியாட்டத்திற்கு ஆளானதால் இது கறைகளின் நகரமும் கூட.

கனடாவின் ரவுடித்தனம் - செருப்படி வாங்கும் இந்தியா

ஃபதே சிங், எல்லைப் பாதுகாப்பு படை வீரர், பஹியா – ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி, எஸ்.எஸ். சித்து – ஓய்வு பெற்ற இந்திய உளவுத்துறை அதிகாரி, இவர்கள் எல்லாருக்கும் மாத்திரமல்ல, இன்னும் பலருக்கு கனடா நாட்டு விசா மறுக்கப்பட்டிருக்கிறது. ஒருவரை தன் நாட்டிற்குள் அனுமதிப்பதோ அல்லது அனுமதி மறுப்பதோ அவரவர் விருப்பு வெறுப்பு சார்ந்த சமாசாரம். ஆனால் அதற்கு சொல்லப்படும் காரணங்கள்தான் இங்கு செருப்பிலடிப்பது போல் உள்ளது. ஃபதே சிங் – எல்லை பாதுகாப்பு படையில் காஷ்மீரில் பணி புரிந்தவர் என்பதனால் அவர் ஒரு கிரிமினல் குற்றவாளியாம், காஷ்மீரில் பலரை சித்திரவதை செய்து மனித உரிமை மீறல் புரிந்திருக்கிறாரம். பஹியா – உளவுத்துறையில் இருந்ததனால், அவரால் கனடா நாட்டு இறையாண்மைக்கே ஆபத்தாம். அவர் கனடாவுக்குள் நுழைந்தால், உளவு வேலைகளில் ஈடுபடுவாராம். சித்து – இரண்டு முறை கனடாவில் வாழும் தன் மகனை பார்க்க சென்று அங்கு தங்கியிருந்து விட்டு வந்திருக்கிறார். ஆனால் இம்முறை அவரையும் ஒரு கேவலமான உளவாளி என முத்திரை குத்தி விசா தர மறுத்திருக்கிறார்கள். இத்தனை பேரை அவமானப் படுத்த்டிய போதிலும் நம் இந்திய அரசாங்கம் பொறுமை காத்திருக்கிறது. ஒரு வார்த்தை எவரும் பேசவில்லை. ஆனால், வரும் ஜூன் மாதத்தில் நடைபெறும் G20 மாநாட்டிற்காக பிரதமர் மன்மோகன் சிங்குடன் கனடா செல்ல இருந்த ஒரு அதிகாரிக்கு விசா வழங்க மறுத்து விட்டார்கள். காரணம் இந்திய உளவுத்துறை என்பது கனடாவின் புத்தகங்களில் ஒரு தீவிர வாத இயக்கமாகவும், அதன் அதிகாரிகள் எல்லாரும் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் தேடப்படும் குற்றவாளிகளும் என்ற காரணத்தை தைரியமாக எழுத்து மூலம் தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆனாலும், இந்திய அரசாங்கமோ அமைதியாக பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. ஜார்ஜ் பெர்னாண்டஸ் ராணுவ அமைச்சராக இருந்த பொழுது, அவர் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றால், அவர் ஒரு ஜனநாயக நாட்டின் ராணுவ அமைச்சர் என்ற மரியாதை கொஞ்சமும் இல்லாமல், பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் அவரது ஆடையை அவிழ்த்து அவமதிக்கலாம். ஜார்ஜ் புஷ் என்ற கோமாளி, உலகில் உணவுப் பஞ்சம் வருவதற்கு இந்தியர்கள் அதிகமாக சாப்பிடுவதே காரணம் என்று சொல்லி விட்டு சிரித்து விட்டு போகலாம். எங்கோ ஒரு நாட்டில் பன்றிக் காய்ச்சலோ, பிளேக் நோய்களோ வந்தால், இந்திய விமானங்களும், இந்திய கப்பல்களும் தங்கள் எல்லைக்குள் வராதவாறு வெள்ளைக்கார தேசங்கள் விரட்டியடிக்கலாம். தங்கள் உடல் பொருள் ஆவியை கொடுத்து பாதுகாப்பு பணிகளில் பாடுபடும் நம் இந்திய ராணுவ வீரர்களை ஒரு வெள்ளைக்காரன் சர்வ சாதாரணமாக தீவிரவாதி எனக் கூறி அவமானப்படுத்தலாம். நமது பாதுகாப்பு படைகளையே தீவிரவாத இயக்கங்கள் என எழுதிக் கொடுக்கலாம். நாங்கள் மறுபடியும் அவர்களுடன் சிரித்துக் கொண்டே பேசுவோம். அவர்கள் நாட்டு பிரஜைகளுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுப்போம். டேவிட் ஹெட்லி தீரவாதியாயிருந்தாலென்ன, வெள்ளைத் தோல்தானே, உள்ளே வாருங்கள் என கரம் கூப்பி வரவேற்போம்,

அழுக்குப் பிடித்த அரசியல் வாதிகளே, த்தூவென காறி உங்கள் மூஞ்சியில் துப்ப வேண்டும் போலுள்ளது.


ங்கொய்யால பக்கங்கள்

சார், பர்ஸனல் லோன் வேணுமா??

ஹலோ, நான் ரமேஷ் பேசறேன்!!!!!!!

அந்த ரிப்போர்ட் ரெடியாயிடுச்சா மேன்??

அப்பா, என்ன பண்ணீட்டு இருக்கீங்க???

டேய், மாப்ள, இன்னைக்கு சாய்ந்தரம் ஃபிரீயாடா?

இப்பத்தான் பார்த்தேன், பெருங்காய
டப்பா காலியாயிருக்கு,
வரும்போது வாங்கீட்டு வந்துருங்களேன்.

சார், உங்களுக்காகவே ஸ்பெஷலா ஒரு இன்ஷூரன்ஸ்
பேக்கேஜ் டிசைன் பண்ணீருக்கோம் சார்……

புத்தம் புது திரைப்பட பாடல்களை காலர் டோனா வைக்க…….

ங்கொய்யால,

உலகம் எவ்வளவு அமைதியா இருக்குது,

செல்போன் தொலைஞ்சு ரெண்டு நாளாச்சு.

Tuesday, May 25, 2010

வாந்தி வாந்தியா வருது.......

ஒரு எட்டோ அல்லது ஒன்பதோ வயதுப் பையன் ஒரு ஏழு வயதுப் பெண்ணின் தொடைகளுக்கு நடுவே கையைவிட்டு பிடித்து அலாக்காக தூக்குகிறான். தலைக்கு மேலே உயர்த்திப் பிடித்து விட்டு விட்டு அந்தப் பெண் குழந்தையை கீழே விடுகிறான். அவன் அணிந்திருக்கும் ஜீன்ஸ் பேண்ட் முழங்காலுக்கு கீழே கிழிந்திருக்கிறது. பட்டையான ஒரு பெல்ட் கட்டி, சட்டையின் மேல் பட்டன்களை திறந்து விட்டு சட்டையின் கீழ் முனைகளை முடிச்சு போட்டிருக்கிறான். தலையில் ஒரு கைக்குட்டையை பட்டையாக சுற்றிக் கட்டியிருக்கிறான். இடது முழங்காலுக்கு மேல் ஒரு கைக்குட்டையை சுருட்டிக் கட்டி, வலது மணிக்கட்டில் ஒரு கைக்குட்டையை கட்டி என ஒரு எட்டு வயது பையனில் ஒரு திரைப்பட நடிகனின் அத்தனை அலங்காரங்களையும் பார்க்க முடிகிறது.

அந்த ஏழு வயதுப் பெண்ணின் மார்பில் ஒரு துணி சுற்றியிருக்கிறது. தொப்புளை சுற்றிலும் ஜிகினா மாதிரி எதுவோ ஜொலிக்கிறது. ஒரு ஆறு அல்லது எட்டு அங்குலத்துணி இடுப்பில் சுற்றியிருக்க கறுப்பு நிறத்தில் ஒரு உள்ளாடை அணிந்து அம்மணம் மறைத்திருக்கிறாள். முகத்தில் மிதமிஞ்சிய பூச்சுகள், உதட்டுச்சாயம், காதில் புரியாத வடிவத்தில் தொங்கட்டான்கள்.

80 களில் வெளிவந்த ஒரு ஹிந்திப் பாடலுக்கு ஹெலன் என்னும் கவர்ச்சி நடிகை அரைகுறை ஆடையுடன் ஆடிய ஒரு நடனத்தை இந்த இருவரும் ஆடுகிறார்கள். அந்த நடனத்தை வடிவமைக்க இரு நடன கலைஞர்கள். அந்த நடனத்திற்கு மதிப்பெண் கொடுக்க ஒரு ஆணும் ஒரு பெண்ணுமாக இரண்டு நடுவர்கள், ஒரு காலத்தில் ஹிந்தி திரைப்பட உலகின் சிறந்த நடன இயக்குனராக இருந்த ஒரு வயதான பெண்மணி சிறப்பு விருந்தினர், இத்துடன் இந்தக் குழந்தைகளின் பெற்றோர் என ஆட்டம் களை கட்டுகிறது. ஒரு பிரபல ஹிந்தித் தொலைக்காட்சியில் இந்த நடனப் போட்டி.

அந்த இரண்டு பிஞ்சுகளும் பின்னணியில் ஒலிக்கும் பாடலுக்கு ஏற்றபடி உடலை நெளிக்கவும், கால்களை தூக்கவும், ஒருவரையொருவர் கட்டித் தழுவவும் செய்கிறார்கள். நடுவர்களும் கூட்டமும் பார்த்து ஆர்ப்பரிக்கிறது. பெற்றோர்கள் சிறப்பு நடுவரின் பாராட்டைக்கேட்டு எதோ பிறவிப் பயனை அடைந்துவிட்டது போல் கைகளை தட்டி குதூகலமடைகிறார்கள். சிறப்பு நடுவர் இந்த நடனத்தை சால்சா வகை நடனம் என்கிறார். பெற்றோருக்கு பெருமிதம் தாங்கவில்லை.

அடுத்ததாக ஒரு ஜோடி, வேறு ஒரு பாடல், இப்பொழுது பையன் ஒரு எட்டு வயதுப் பெண்ணின் மார்பை ஏடாகூடமாக தடவி கழுத்தில் முத்த மிடுகிறான். திடீரென்று அவன் கால்களை விரித்து நிற்க இந்தப் பெண் அவன் கால்களுக்கு நடுவே வழுக்கிப் போகிறாள். மேடையின் முழு அளவிற்கும் ஓடித்திரியும் இந்த ஜோடி, திடீரென்று ஒருவர் இடுப்பை ஒருவர் அணைத்தபடி உடலுறவு கொள்வது போல் அசைகின்றனர். உடனே நடுவர் ஒருவர் எழுந்து நின்று கையைத் தட்டுகிறார். முடிவில் அந்த Pelvic thrust was a perfect movement என்று சொல்கிறார். இங்கும் பெண்ணுக்குஅதே அங்குல அளவு உடைகளும், பையனுக்கு கைக்குட்டை கட்டுகளும் தவறாது இடம் பெறுகிறது. பெற்றோர்கள் கையைத் தட்டி குதூகலிக்கின்றனர். முடிவில் சிறப்பு நடுவர் இதை Contemporary dance என்கிறார்.

இதற்கு அடுத்த ஜோடி, இரண்டு பொடியன்கள், ஒரு ஏழோ அல்லது எட்டு வயதுப் பெண், இரண்டு பையன்களும் பாடல் ஆரம்பித்தவுடன் வந்து இந்த பெண்ணை தங்களது இடுப்பால், அவளது இடுப்பில் இடிக்கிறார்கள். அந்தப் பெண் கெக்க பிக்கவென சிரித்து விட்டு ஹூம், Crazy Boys என நடையை கட்டுகிறாள். கூட்டம் கையைத்தட்டி ஆரவாரிக்கிறது.


இருங்கள், இதை எழுதும் பொழுதே எனக்கு வாந்தி வரும்போல் இருக்கிறது. கொஞ்சம் வாந்தி எடுத்துவிட்டு பின்பு வருகிறேன்.


எந்த தொலைக்காட்சியை எடுத்தாலும் நடனப் போட்டிகள் அல்லது பாட்டுப் போட்டிகள் தான். அதுவும் பிஞ்சு குழந்தைகளின் Pelvic Thrust. இந்த வக்கிரங்களை தங்கள் குழந்தைகள் செய்வதைக் கண்டு மகிழ்ச்சியுறும் பெற்றோர்கள், அதற்கென அவர்கள் செலவழிக்கும் பணம், நேரம். அதற்கு மதிப்பெண் கொடுக்கும் நடுவர்கள், அதை பாராட்டிப் பேசும் சிறப்பு விருந்தினர்கள், இதை ஊக்குவிக்கும் தொலைக்காட்சி,

யோவ், ங்கொய்யால, எங்கய்யா போயிட்டிருக்கறோம் நம்ம என ஓங்கி தொண்டை கிழிய கத்தவேண்டும் போலுள்ளது.

90 களில் ஒவ்வொரு இந்திய தொலைக் காட்சிகளிலும் மாணவர்களுக்கென வினாடி வினா போட்டிகள் நடத்தப் பட்டது, ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து பள்ளி வாரியாக அவர்களிடத்தில் பொது அறிவு, விஞ்ஞானம், மற்றும் விளையாட்டு போன்றவற்றில் கேள்விகள் கேட்கப் பட்டு, மதிப்பெண்கள் கொடுக்கப் பட்டன, வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் அளித்தார்கள். சித்தார்த்த பாஸு நடத்திய அல்ஃபா ப்ளஸ் என்ற நிகழ்ச்சி அநேக பெற்றோரால் அவர்கள் குழந்தைகளுடன் விரும்பி பார்க்கப் பட்டது. நவ்ரோத்தம் பூரி என்ற மனிதரை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. விளையாட்டில் நடக்கிற ஒவ்வொரு நிகழ்வையும் மனிதர் விரல் நுனியில் வைத்திருப்பார். அவரின் விளையாட்டு கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கு பெற அன்றைய மாணவ மணிகள் கனவு கண்டு தவமே இருந்தார்கள் எனலாம். ஏன் இப்பொழுது எங்கு கிரிக்கெட் போட்டி நடந்தாலும் அங்கு தவறாது ஆஜராகி வர்ணனையில் கலக்கும் ஹர்ஷா போக்ளே கூட ஒரு காலத்தில் ESPN தொலைக்காட்சியில் விளையாட்டு கேள்வி பதில் போட்டிகள் நடத்தியவர்தான்.

இதனால் குழந்தைகளின் அறிவு தாகம் பெருகியது. பெற்றோர்களும் குழந்தைகளும் சரிசமமாக இந்த போட்டிகளிலும், தொலைக் காட்சி நிகழ்ச்சிகளிலும் ஆர்வம் காட்டினார்கள். இந்த நிகழ்ச்சிகளோ அல்லது இதன் முக்கியத்துவமோ எப்படி இவ்வளவு சீக்கிரம் ஒழிந்து போனது என தெரியவில்லை.

இன்று விஜய் தொலைக்காட்சியில் நடக்கும் ஒரு பாட்டு போட்டிக்காக அந்த குழந்தைகள் எத்தனை வகுப்புகளை தியாகம் செய்தார்களோ தெரியவில்லை, இன்னும் அவர்களுக்கு எத்தனை விதமான உடைகள் அணிவித்து பாடவைப்பார்களோ ஈஸ்வரா…. நிகழ்ச்சியை எவ்வளவு நீட்டி முழக்கி நாட்களை கடத்துகிறார்களோ அவ்வளவும் தொலைக் காட்சிக்கு லாபம் தான். ஆனால், அந்த பிஞ்சுகள் இந்த வயதில் எதைக் கற்க வேண்டுமோ, எதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமோ அதை விட்டு விட்டு “ அந்த ரெண்டாவது லைன்ல வர்ற மூணாவது வார்த்தைல ஒரு குட்டி ஜெர்க் வர்றது, அதை கரெக்ட் பண்ணுங்க, அடுத்ததா ஆலாப்ல கொஞ்சம் சுதி பிசிறடிக்குது, அதை சரி பண்ணிக்கோங்க” போன்ற அறிவுரைகளில் சீரழிகிறார்கள். பெற்றோர்களே தங்களது பிஞ்சுக் குழந்தைகளின் Pelvic thrust ஐ பார்த்து ஆனந்தத்தில் ஆர்ப்பரிக்கிறார்கள்.

ஒரு வருங்கால சமுதாயத்தின் முழுகவனத்தையும் சினிமா என்ற சமூக அவலத்தின் பால் திசை திருப்பி, முற்றிலும் சீரழிக்கிறோம் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இந்த சமூக வன்முறை கும்பலிடம் இல்லையா? பிஞ்சுகளின் மூளையை சினிமா ஆக்கிரமித்தால், வருங்கால சந்ததியில் மனித வளம் என்பது மருந்துக்கு கூட இருக்காது.

Thursday, April 15, 2010

கஜுராஹோ - சிற்பங்களின் நகரம் - பயணக் குறிப்பு





பாகம் 1 – கந்தர்வ நாடகம்.

கஜுராஹோ என்றவுடன் எல்லாருக்கும் அந்த அதீத உடலுறவுச் சிற்பங்களே ஞாபகத்துக்கு வரும். ஆனால் இங்கு வந்து பார்ப்பவர்களுக்குத்தான் இந்த சிற்பங்கள் பேசும் வார்த்தைகள் புரியும். போருக்குச் செல்லும் வீரர்கள் கூட்டம், யானைப் படையின் அணிவரிசை, உள்ளங்கையில் தன் முகம் பார்த்து அலங்காரம் செய்யும் இந்திர லோகத்து சுந்தரிகள், விஷ்ணுவின் வெவ்வேறு அவதாரங்கள், சிவனின் தாண்டவ நர்த்தனங்கள், திமிறும் காளைகளை அடக்கியாளும் வீரர்கள், குளித்து முடித்து கூந்தலுலர்த்தும் அழகிகள், தனது நிர்வாணத்தை தானே ரசிக்கும் அதீத சுந்தரிகள், மனித உடலின் ஒவ்வொரு அணுவிலும் எதிர்பாலின தீண்டலால் கிளம்பும் காம இன்பத்தை மோகித்து அனுபவிக்கும் ஆணும் பெண்ணும் என உலகில் பிறந்த மாந்தர்கள் கண்ணில் படும் அனைத்து காட்சிகளையும் இந்த மணற்கற்களில் சிற்பங்களாக வடித்து விட்டான் ஒரு பெயர் தெரியா சிற்பி.













முதலில் இந்த சிற்பக் கோவில்களின் நகரம் உருவான கதை.

கல்தோன்றி மண்தோன்றா காலத்திற்கு முன், எத்தனையோ ஆண்டுகளுக்கு முன், லாங் லாங் எகோ, (டேய், போதுண்டா, ஓவரா பில்டப் குடுக்காத) ஒருநாள், ஹேமவதி என்ற பிராமண சுந்தரி, இன்றைய புனித நகரமான வாரணாசியில் வசித்திருந்தாள். நிலாக்காயும் ஒரு இரவில் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தாளாம். சொக்க வைக்கும் அவள் மேனியழகில் கலங்கிப் போனது குளத்தின் தண்ணீர் மாத்திரமல்ல. அங்கு மௌன சாட்சியாய் நின்றிருந்த அனனத்து ஜீவ ராசிகளும்தான். தன் மேனியழகின் மீதிருந்த கர்வத்தாலோ, அல்லது தன் அழகை கண்டு தானே வியந்திருந்தததலோ என்னவோ, ஹேமவதிக்கு நிர்வாணம் என்பது ஒரு இன்பம் தரும் யோகநிலையாயிருந்தது. குளத்தின் நீளமும் அகலமும் அவளது பிறந்த மேனிக் கோலத்தில் திளைத்து பேச்சு மூச்சு அற்றுப் போயிருக்க, ஹேமவதியும் ஒரு மோன நிலையிலேயே தண்ணீரை அணிந்திருந்தாள். ஆனால் தன்னை வேறு இரு கண்களும் கண்டு ரசிப்பதையோ, அந்த கண்களுக்குரியவர் தன் மீது மையல் கொள்வதையோ அறியாத பேதையாய், குளத்தில் பூத்த மலர்களை மங்கை, குறும்புப் பார்வையால் குசலம் விசாரித்துக் கொண்டிருந்தாள்.





வானத்தில் வலம் வந்த நிலவரசன் கண்களில் காண்பது நிஜம்தானா அல்லது தேவ லோகத்து கன்னிகைகள் இங்கு பூமியில் நீராட வந்தனரோ என குழம்பிப் போய், சிறிது நேரம் தன் பயணத்தை நிறுத்தி நின்ற இடத்திலிருந்தே பாவையின் அழகை பருகிக் கொண்டிருந்தான். பருகப் பருக, ரசனை காதலாகி, காதல் கலவியில் முடிந்தது. அன்று மாத்திரம் வான ஆராய்ச்சியாளர்கள் சரியாய் குறிப்பெடுத்திருந்தால், ஒரு நாள் இரவில் பௌர்ணமி தினத்தன்று ஒளிவீச வேண்டிய வட்ட நிலவு, வானத்தின் வீதிகளில் இல்லாமல் காணாமல் போயிற்று என எழுதி வைத்திருப்பார்கள். ஆம், அன்று இரவு முழுவதும் தன் பணியினை மறந்து, தன் மேன்மையை துறந்து, நிலவு, பூமியில் வாழும் ஒரு பெண்ணோடு மோகித்திருந்தது.

நிலவினைக் கண்டதும் பாவையும் மயங்க, அந்தக் குளம் இவர்கள் இருவரின் காமத்தைத் தீர்க்க தண்ணீராலே படுக்கை கட்டியது. குளத்தில் பூத்த மலர்களெல்லாம் சுகந்தம் வீச, சுற்றி நின்ற மரங்களெல்லாம் திரைகளாக, இருபது விரல்கள் தாளமிட, இரண்டே இரண்டு பேர் இணைந்து நடிக்க, அந்த கந்தர்வ நாடகம் களிப்புடன் அரங்கேறியது.

பிறகென்ன, நாடகம் முடிந்ததும், வான வீதியில் என்னைத் தேடுவார்களே, சாரதியில்லாமல் ரதம் தடுமாறும் எனச் சொல்லி நிலவரசன் சடுதியில் மறைந்தான். நிலவு பறந்து விட, பாவைக்கு பசலை நோய் கண்டது. நாட்கள் கடந்தது, பழுத்த பலாப்பழமும், இனித்த காமப் பொழுதும் எப்பொழுதும் ரகசியம் காத்ததில்லை. ஆம், ஹேமவதியின் கருவறைக்குள் புதிதாய் ஒருவன் புகுந்து கொண்டான். புதிய வரவு பூரிப்பை தந்தாலும், இந்த வரவுக்கு முகவரி தரும்படி நிலவினை வேண்டினாள் ஹேமவதி.

நிலவிடமிருந்து கட்டளை வந்தது, என் உயிரின் உயிரே, உலகம் தெரிய உன்னைக் கைபிடிக்கவில்லை நான், நமக்கு நாமே மாலை சூடினோம், நட்சத்திரங்களை சாட்சிக்கழைத்தோம், மரங்கள் கூடி அட்சதை தூவ, பட்சிகள் அனைத்தும் மந்திரம் ஓத, கண்களினாலே சம்மதம் சொல்லி கலந்திருந்தோம், நாம் இணைந்திருந்தோம், ஒருவருக்கொருவர் இனித்திருந்தோம். இனி நான் சொல்வதைக் கேள். உன்னிலிருப்பவன் வாளால் உலகை ஆள உதித்தவனல்ல. அவன் கலையால் ஆளப் போகிறவன். அவன் ரத்தம் சிந்தி வெற்றி காண மாட்டான். ஆனால், மொட்டைக் கற்களுக்கு உளியால் உயிர் கொடுத்து பிறர் மனம் வெல்வான். ஆகவே இந்த வாரணாசி என்னும் தேவர்களின் நகரத்தில் அவன் பிறக்க வேண்டாம். அவனை சோலைவனங்களில் பிறக்க வை. மலையும், மரங்களும் அவனுக்கு வீடாகட்டும். இப்பொழுதே கிளம்பி, சூரியன் உதிக்கும் திசைக்கு எதிரே செல். பேரீச்சம் பழ மரங்கள் நிறைந்த சோலையை காண்பாய். அங்கே என் மகன் பிறக்கட்டும். (பேரீச்சம் பழம் = கஜூர் (ஹிந்தியில்), கஜுராஹோவின் பெயர் காரணம்).

தலைவனின் பேச்சுக்கு மறு பேச்சேது. ஹேமவதி புறப்பட்டாள். வயிற்றில் புரண்ட நிலவின் வித்து, தரையை கண்டதும் சந்திர வர்மன் எனப் பெயர் கொண்டான். இன்றைய புந்தேல்கண்ட் பிரதேசத்தில் வலிமை கொண்ட ஆண்மகனாய் உருவெடுத்தான். தன் 16 வது வயதிலேயே, சிங்கத்தையும் புலியையும் வெறும் கரங்களால் கிழித்துப் போடும் கட்டிளம் காளையாய் வடிவெடுத்தான். அவனது கடின உழைப்பில் உருவானதுதான் புந்தேல்கண்ட் ராஜ்ஜியத்தின் கோட்டையான “கலிஞ்சர்” கோட்டை. நிலவுதேவனின் கட்டளைப் படி அவன் 85 கோவில்களையும் கட்டினான்.

அவன் கட்டிய கோவிலுக்குள் அடுத்த வாரம் செல்வோம்.

Tuesday, April 13, 2010

என்னை எல்லாரும் திட்டறாங்க.......



வீட்ல மனுஷன் நிம்மதியா உக்காந்து பேப்பர் படிச்சுட்டிருந்தா, அது அதிகார வர்க்கத்துக்கு பொறுக்காது. அப்பத்தான் கொஞ்சம் கொத்தமல்லி வாங்கிட்டு வா, கோழித்தலை வாங்கிட்டு வான்னு ஒரு 15 கிலோ மீட்டர் தள்ளி இருக்கற கடைல கிடைக்கற பொருளா சொல்லுவாங்க அல்லது இன்னும் நாலு வருஷம் கழிச்சு தேவைப்படும் பொருளை இப்பவே வாங்கிட்டு வரச் சொல்லுவாங்க. ஆனா, அன்னைக்கு இப்படி எதுவுமே ஆணைகள் வரவில்லையே, ஒருவேளை நாம இருக்கறதே மறந்துருச்சோ, எப்படியும் நம்ம இருப்பை காமிச்சுக்கணுமில்லன்னுட்டு அவுங்க பக்கம் திரும்பி, சூடா ஒரு லெமன் டீ குடுன்னு சொன்னேன். (நெசமாவே இப்படித்தான் சொன்னேன், நம்புங்க எசமான், நம்புங்க). கொஞ்ச நேரத்துல லெமன் டீ எந்த ஆரவாரங்களுமில்லாமல், அடக்க ஒடுக்கமாய், அமைதியாய் வந்து டீபாய் மீது அமர்ந்தது.(ஏ யப்பா, டீ, டீபாய் மீது அமர்ந்தது….. என்னா எதுகை மோனைடா சாமி) இது சரியில்லையே, இவ்வளவு அமைதி டேஞ்சராச்சே, சரி அங்கிருந்து ஏவுகணைகள் வந்தா சமாளிச்சுக்கலாம் என நினைத்தவாறே பேப்பரில் மூழ்கியிருப்பதாய் பாவ்லா செய்து கொண்டு, எந்த நேரமும் நிகழப் போகும் அந்த விபத்திற்காய் அமைதி காத்தேன்.

“கொஞ்சம் தள்ளி உக்காருங்க” (அதான கேட்டேன், நாங்க சோபாவுல உக்கார்ந்திருந்தா நீங்க எப்ப சேர்ல உக்கார்ந்திருக்கீங்க)……

கொஞ்சமாக தள்ளி உட்கார்ந்தேன். “இத்தனூண்டு இடத்துல எப்படி உக்கார்றது” என்ற சற்றே உயர்ந்த குரல் கேள்விக்கு, அமைதியாக பதிலளித்தேன்.

“அரசாங்கமே, மகளிருக்கு 33 சதவீதம்தான் இடம் குடுக்குது, ஆனா நான் 50 சதவீதம் குடுத்துருக்கறேன், இதுக்கு மேலயும் வேணும்னு அராஜகம் பண்ணுனா எப்படி” ன்னு ஒரு அறிவு பூர்வமான பதில் கொடுத்தேன். அப்புறம் என்ன ஸ்டார்ட் மீஜிக் தான். ஆனா லெமன் டீ சூப்பர்.

உண்மையை சொன்னா திட்டறாங்க.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

என் நண்பன் ஒருவன் அழிந்து கொண்டிருக்கும் புலிகளைப் பற்றி ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தான். 1411 தான் இருக்காம், அதைப் பாதுகாக்க நாம் என்னென்னவெல்லாம் செய்யணும்னு சொல்லீட்டு, இந்த மின்னஞ்சலை மத்தவங்களுக்கும் அனுப்புன்னு சொல்லீருந்தான்.

நான் அவனுக்கு பதில் அனுப்பினேன், 1410 டைகரைப் பத்தி கவலைப் படுங்கடா, மீதி ஒண்ணைப் பத்தி கவலைப்படாதன்னு சொன்னேன்.

அது என்ன அந்த ஒண்ணுன்னு கேட்டான்.

அந்த ஒரு டைகர்தாண்டா உனக்கு பதில் அனுப்பீட்டிருக்குன்னு சொன்னேன்.

அவனும் திட்டறான்.

Monday, April 12, 2010

ஒண்ணாம் நம்பர் பிளாட்பாரம்



தலையை சுற்றுவது போல இருந்தது தமிழரசிக்கு, ரெண்டு நாளா என்ன தின்னாலும் ஒரே வாந்தியா வருது. மருந்துக்கடை தாமு அண்ணங்கிட்ட மாத்திரை வாங்கி சாபிட்டாலும் வாந்தி நிக்க மாட்டேங்குது. சோர்ந்து போயி அவளோட இடத்துல வந்து உக்கார்ந்துட்டா, அவ இடம்னா அது அவளுக்கே சொந்தமான ஒரு குட்டி ராஜ்ஜியம். ஒண்ணா நம்பர் பிளாட்பாரத்துல இருக்கற ஓவர் பிரிட்ஜ் படிக்கட்டுக்கு கீழ ஒரு துணி மூட்டை, கீழ படுக்கறதுக்குன்னு விரிச்ச அட்டைப்பெட்டிகள், இதுதான் அவளோட ராஜ்ஜியம். 12 வயசுல பாட்டி கையை பிடிச்சுகிட்டே இந்த பிளாட்பாரத்துக்கு வந்தது. இதா, பாட்டியும் போயி சேர்ந்துட்டா, கண்ணு ரெண்டும் தெரியலைன்னாலும் தமிழரசி வாயத்தொறந்து பாடுனா, அப்படியே கேட்டுட்டே இருக்கலாம் போல இருக்கும், ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்னு அவ பாடுனா, கையில பொல பொலன்னு காசு வந்து விழும். இதா அவுளும் வந்து 10 வருஷமாச்சு, இந்த பிளாட்பாரத்தை விட்டு எங்கயுமே போனதில்ல. தண்ணி பைப்புல தண்ணி புடிக்கவும், கக்கூஸுக்கு போகவும் அவ நடந்து போறதப் பாத்தா, அவளுக்கு கண் இல்லன்னு யாரும் சொல்ல மாட்டங்க. அவ வந்த புதுசுல ஒரு நாளைக்கு ஏழு ரயிலுத்தான் இங்க நிக்கும், இப்ப தினமும் இருவது ரயிலு நிக்குது, இவ பாட்டைக்கேட்டு காசும் நல்லா கிடைக்குது.

“என்ன தமிளு, உடம்ம்புக்கு சரியில்லையா” டீ விக்கற ரமேஷ் அண்ணன் கேட்டாரு,

“ஆமாண்ணா, ஒரே மயக்கமா வருது”.


“டீ குடிக்கறயா”


“வேண்டாண்ணா, எதை குடிச்சாலும் வாந்தியா வருது”


“சரி, சரி எதாவது மாத்திரை வாங்கிட்டு வரட்டா”


“இல்லண்ணா, தாமு அண்ணன் குடுத்தாரு, சாப்புடறேன்”

மாத்திரையை எடுத்து வாயில் போட்டு ஒரு வாய் தண்ணீர் குடித்தாள். இந்த ராமதாசு எப்ப வருவான், மூணு நாளாச்சு ஆளவே காணோம் என யோசித்தவளாக வலது கையை மடித்து தலைக்கு வைத்து படுத்துக் கொண்டாள்.

ராமதாசு – ஜங்ஷனில் போர்ட்டர். பேருக்குத்தான் போர்ட்டர். ஆனா அவன் தொழிலே பொட்டலம் விக்கறதுதான். ஜங்ஷன்ல பொட்டலம் கிடைக்கும்னு நிறைய பேருக்குத் தெரியும். அவுங்க வந்தா ராமதாசை தேடி, சரியா சிக்னல் குடுத்தாங்கன்னா, இவன் ரேட் பேசி, பொட்டலத்தை கை மாத்தறது மின்னல் வேகத்துல முடிஞ்சு போயிரும். அவன் சிவப்புச்சட்டையும், டவுசர் தெரிய மடிச்சுக் கட்டிய லுங்கியும், தலையில கட்டியிருக்கற துண்டும் பார்த்தா, இவனெல்லாம் ஒரு சின்னப் பையை கூட தூக்குவானாங்கறதே சந்தேகமாயிருக்கும். அவ்வளவு ஒடிசலான தேகம், பீடியும் கஞ்சாவும் இளுத்து உள்ள ஒடுங்குன கன்னம், ஈர்க்குச்சி மாதிரி கையும் காலும், பாதி நரைச்ச தலைமுடி, ஆணிக்காலை விந்தி விந்தி நடப்பான். அவன் எப்பவாச்சும் தான் பெட்டி தூக்குவான், மத்த நேரத்துல எல்லாம் பொட்டல வியாபாரம்தான். இந்த உடம்புக்குள்ள பொட்டலத்தை எங்க மறைச்சு வெச்சிருப்பான்னு தெரியாது, ஆனா கரக்டா கை மாத்துவான். பிளாட்பாரத்துல வண்டியில்லாம காலியா இருக்கற நேரத்துல நீங்க என்ன கோடி ரூவா குடுத்தாலும் அவங்கிட்ட இருந்து ஒண்ணும் பேராது. வண்டி வந்து நின்னு ஆளுங்க போகவும் வரவும் கூட்டமா இருந்தா நிமிஷத்துல வியாபாரத்த முடிச்சுட்டு, வேற வேலைக்கு போயிருவான். அவுனுக்கும் இந்த பிளாட்பாரத்தை விட்டா நாதியில்லை. அந்த காக்கிசட்டைக் காரரு கொண்டுவந்து குடுக்கற சரக்கை வித்துக் குடுக்கறதுல எதோ கொஞ்சம் துட்டு தேறுது. வெளியைல போயி அப்பப்ப சிக்கனு வருவல் புரோட்டான்னு சாப்டுட்டு வந்து பிளாட்பாரத்துலயே படுத்துக்குவான். போலீஸ்காரங்க எப்பவாச்சும் கேஸ் கிடைக்கலன்னா, வந்து இவனை இளுத்துட்டு போய் ஒரு மூணு நாள் உள்ள வெச்சு, அவுங்களே ஜாமீன்லயும் விட்டுருவாங்க. அவுங்க சொல்றபடி கேக்கணும் அவ்வளவுதான்.


மறுபடியும் வயித்தப் பொரட்டிகிட்டு வாந்தி வர்ற மாதிரி இருக்க தமிளு எந்திரிச்சி ஒக்கார்ந்து வாயை குவிக்க, வாந்தி வர்ற மாதிரி இருக்கு, ஆனா வர மாட்டேங்குது. ராமதாசு இருந்தாலாவது எதாவது பேசீட்டிருக்கலாம். எங்க போனானோ என நினச்சுகிட்டே மறுபடியும் படுத்துகிட்டா. ராமதாசு – நீ எங்க இருக்க………

பாட்டி செத்ததுக்கப்புறம், இவுளுக்குன்னு யாருமில்ல, குருட்டு பொண்ணா இருந்தாலும் லட்சணமாயிருப்பா, சிவப்புமில்லாம கருப்புமில்லாம ஒரு நிறம், காலைல மெட்ராஸ் போற வண்டி வந்ததும் 5 மணிக்கெல்லாம் எந்திரிச்சு, கக்கூசுக்குள்ள இருக்கற அந்த ரூம்ல போயி, குளிச்சுட்டு, கட்டியிருக்கற சீலை, ஜாக்கெட், பாவாடை எல்லாத்தையும் தொவச்சு எடுத்துட்டு வந்து காயப் போட்டுட்டு, தலை சீவி பொட்டு வெச்சுக்குவா. தினமும் குளிக்கறது பழகிப் போச்சு. குண்டா இல்லைன்னாலும் பூசுனாப்புல இருந்த உடம்பு அங்க இருந்த பலர் கண்ணுலயும் படத்தான் செய்தது. தனக்கு கண் இல்லைன்னாலும் தன்னைப் பாக்கறவங்க எப்படி பாக்கறாங்கங்கறது அவுளுக்கு எப்படித்தான் தெரியுமோ, கைத்தடியை எடுத்து ஒரு ஆட்டு ஆட்டுனான்னா, அவள பாக்கறவன் அவ்வளவுதான்.

ஒருநா, நல்ல மழை, பிளாட்பாரத்துல தண்ணியா கொட்டறப்போ, தமிழு படிக்கட்டுக்கு கீழ செவுத்துல சாஞ்சு உக்கார்ந்துட்டு இருந்தா, பக்கத்துல லொக்கு லொக்குனு இருமற சத்தம் கேட்டுது.

“என்ன தாசு, இப்படி இருமுற” ன்னு இவ கேக்க,


“என்னன்னு தெரியல தமிளு, ரெண்டு நாளாவே இருமலு குடலைப் பொரட்டுது” ன்னு சொல்லீட்டு பீடியை கடைசி இழுப்பு இழுத்துட்டு சுண்டி விட்டான்.


“அதான், இருமுறயில்ல, அப்புறம் எதுக்கு அந்த கிரகம் பீடிய குடிக்கற, அதத்தான் விட்டுத் தொலையேன்”


அவளை ஒரு தரம் திரும்பிப் பார்த்து விட்டு தலையை குனிந்து கொண்டான்.


“இந்தா, சூடா டீ இருக்குது குடிக்கறயா” என கேட்க, அந்த மழைக்கு டீயின் சூடும் சுவையும் அவனுக்கு இதமாயிருந்தது. இதற்கு முன் பலமுறை அவளை பார்த்தும், பேசியும் இருக்கிறானென்றாலும், இந்த உபசரிப்பு அவனை என்னவோ செய்தது.

“யேய், தமிளு, உன்னை இன்ஸ்பெக்டர் கூட்டியாரச் சொன்னாரு” ன்னு, கான்ஸ்டபிள் வந்து சொல்லவும், ராமதாசுக்கு புரிந்தது. இன்ஸ்பெக்டரு ஒரு வாரமா தமிழ் இருக்கற பக்கம் அடிக்கடி வந்து நிக்கறதும், அவளயே பாக்கறதுமா இருந்தப்பவே இவனுக்கு சந்தேகம் தட்டியது. ராமதாசு கேட்டான்.

“எதுக்கு?”

“டேய், நீ என்ன அவுளுக்கு வக்காலத்தா, வாயை மூடுறா”

“அவ வரமாட்டான்னு போய் சொல்லு போ”

“டேய், நீ என்னடா பெரிய பருப்பாட்டம் குறுக்க பேசுற, எத்துனன்னா மவனே ஒரேயடியா போயிருவ, எச்சக்கல நாயி” என அவனை கை வைக்க போனதும்,


“ஏய், செவப்பு சட்டை மேலயே கை வைக்கறயா” என இவன் சத்தம் போடவும், அங்கு நாலைந்து சிவப்பு சட்டைகள் வந்து “என்ன, என்ன பிரச்சனை, யோவ் அவன் சட்டைய விடுயா” என சொல்ல, நிலைமையை புரிந்து கொண்ட கான்ஸ்டபிள் பின் வாங்கினான். தமிழுக்கு எல்லாம் புரிந்தது, இன்ஸ்பெக்டர் எதுக்கு கூப்புடறான்னு புரிஞ்சது. நெஞ்சு திக்கு திக்குன்னு அடிச்சுகிச்சு.

ராமதாசு விரு விரு ன்னு ஸ்டேஷன் மாஸ்டர் கிட்ட போனான். ஒரு அரை மணி நேரத்துல திரும்பி வந்தான். “ஏய், தமிளு, ஒண்ணும் பயப்படாத, சொல்ல வேண்டிய இடத்துல சொல்லீட்டுத்தான் வந்திருக்கேன். யாருக்கும் பயப்படாத”ன்னு சொல்லவும், தமிழுக்கு அழுகை அழுகையா வந்தது. இதுவரை உணராத நேசம், தனக்குன்னு பரிஞ்சுகிட்டு வர ஒரு உயிர் உலகத்துல இருக்குன்னு நினைச்சப்ப வர்ற சந்தோஷம், இந்நேரம் இவன் மாத்திரம் இங்க இல்லன்னா என்ன நடந்திருக்கும்னு நெனச்சா பயம் எல்லாமா சேர்ந்து மனசை என்னவோ செய்ய, அத்தனை உணர்ச்சிகளையும் ஒரே மழைநேரத்தில் அழுது தீர்த்தாள். அவ அழுவறதைப் பார்த்து, ராமதாசு இன்னும் பக்கத்துல வந்து, “த்தே, எதுக்கு சும்மா அழுகற, அதான் நான் எல்லாம் சொல்லீட்டு வந்துட்டேங்கறன்ல”

“இல்ல, இப்ப நீ இருந்ததுனால தப்பிச்சேன், இல்லைன்னா ….”

“ஒண்ணும் ஆகாது, சும்மா பொலம்பாத”

“தாசு, நீ எங்கயும் போவாத” என அவன் குரல் வந்த திசையை நோக்கி அவன் கைகளை பிடிக்க காற்றில் தேடினாள். கையை பிடித்ததும் இருவருக்கும் அது முதல் ஸ்பரிசம். ஒரு ஆணின் கையை பிடித்திருக்கிறோம் என அவள் உணர்ந்ததும், ஒரு பெண் தன் கையை பிடித்திருக்கிறாள் என இவன் உணர்ந்ததும் இருவருக்குள்ளுமிருந்து ஒரு பெருமூச்சு ஒரே சமயத்தில் வெளிப்பட்டது. தமிழுக்கு அந்த ஸ்பரிசம் கொஞ்சம் வெட்கத்தையும் தந்தது. ராமதாசின் பார்வை தன்னை துளைப்பதை உணர்ந்ததும், வெட்கத்தில் தலை தானாக குனிந்தது. முதலில் சுதாரித்த ராமதாசு, “சரி, சரி, மழை ஜாஸ்தியா இருக்குது பேசாம படுத்துக்க, இதா நான் இந்த பெஞ்சுலதான் தூங்கறேன்”னு சொல்லிவிட்டு கைகளை விடுவித்தான்.

தமிழின் மனதுக்குள் மத்தாப்பு. இது சரியா, இதுதான் சரியா, அவசியமா, வேலியில்லாமல் பூச்செடி வளரவே முடியாதா, முள்ளாயிருந்தாலும் அந்த முள்தானே பாதுகாப்பு….. என்னென்னவோ நினைத்தாள், நினைத்தான். நினைத்தார்கள். இரண்டே நாளில் தமிழரசி கழுத்தில் மஞ்சள் கயிறுடன் தமிழரசி தாஸ் ஆகிவிட்டாள். ரயில்வே பிரிட்ஜின் படிக்கட்டிற்கு கீழே இப்பொழுதெல்லாம் இரவில் ஒரு கோணிப்பை தடுப்பு திரைச்சீலைபோல் தொங்குகிறது. தடுப்புக்கு உள்ளே, மல்லிகைப் பூ மணக்கிறது.

ஒரு பத்து நாள் போயிருக்கும், நடுநிசி. இன்ஸ்பெக்டர் வந்தார். கோணித் தடுப்பை விலக்கிப் பார்த்தார், பிளாட்பார லைட் வெளிச்சத்தில் அந்தக் காட்சியை கண்டு, கொஞ்சம் கிளு கிளு அதிர்ச்சி. பின்னி பிணைந்திருந்த இரு உடல்கள், அவசரமாக பிரிந்தன. அவசர கதியில் கோணித் தடுப்பையே சுருட்டி தமிழ் மறைத்துக் கொண்டாள்.

“எந்தர்றா, ………. மவனே, இது வேற கேக்குதா உனக்கு”

“ஏய், இந்தாரு, குருட்டு முண்டை உன்னை அப்புறம் வந்து கவனிக்கறேன், முதல்ல இவனை இழுத்துட்டு போங்கடா, பொட்டலம் விக்கறியா, பொட்டலம். மவனே பொலி போட்டுருவேன்”

“சார், ஒரு காலத்துல வித்துட்டிருந்தேன் சார், இப்ப அதெல்லாம் விட்டுட்டேன் சார்”

“அதாண்டா, கேக்குறேன், ஏன் நிறுத்துன, ஏண்டா உன்னை மாதிரி பொறுக்கி பரதேசிங்கெல்லாம் மகாத்மாவாயிட்டீங்கன்னா, நாங்க ஒவ்வொருதரமும் புது ஆள் தேடணுமா, ஒழுக்கமா நாளையிலிருந்து சரக்கு எடுத்துட்டு போயி வித்துட்டு வந்துரு, இல்ல மவனே உயிரோட இருக்க மாட்ட நீ”

"சார், முடியாது சார், இனிமே இதெல்லாம் நிறுத்திர்றதுன்னு முடிவு பண்ணீட்டேன் சார்”

நாற்காலியிலிருந்து எழுந்து வந்து தனது பூட்ஸ் காலால் எத்தி ஒரு உதை விட்டார், ஜெயில் அறையின் கம்பிகளில் தலை பாடரென மோத சுருண்டு கீழே விழுந்தான். மூக்கிலிருந்து லேசாக ரத்தம் வர ஆரம்பித்தது.

“யோவ், என்னாச்சுன்னு பாருங்கைய்யா”

“சார், முடிஞ்சது சார்”

“சரி, சரி, ஆம்புலன்ஸ்ல போட்டு ஆஸ்பத்திரிக்கி எடுத்துட்டு போங்க, நான் டாக்டர் கிட்ட பேசிக்கறேன்.”

ராமதாசு ஆம்புலன்ஸில் போனான்.

மாதம் நான்காகி விட்டது, இப்பொழுதும் அந்த ஒண்ணாம் நம்பர் பிளாட்பாரத்தில் மேடிட்ட வயிறுடன் கணீரென்ற குரல்

“என் தலைவன் அவனே அவனே என்று பாடும் ஒலி கேட்டேன்”

Wednesday, April 7, 2010

ஜுகல்பந்தி – 7 -4 – 2010 - அமெரிக்கா காட்டிய பெப்பே


நகரம் – அஹமதாபாத்.

பெர்ஸிய பிராந்தியத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த முஜாஃபரி சமஸ்தானத்தின் வாரிசுகளில் ஒருவரான அகமது ஷா தான் இந்த நகரத்தை நிர்மாணிக்க அஸ்திவாரமிட்டவர். இவர் இந்த நகரத்தை கட்டுவதற்கு ஏவுதலாக ஒரு கதை இன்றளவும் நாட்டுப் புறங்களில் பேசப்படுகிறது. எங்கு கூடாரம் போடலாம் என யோசித்தவாறே அலைந்த அகமது ஷா, கர்ணாவதி நதியின் கரையில் ஒரு முயல், நாயை துரத்தியதை கண்டாராம். கண்டதும் இந்த மண்ணின் வீரத்தில் மனதைப் பறி கொடுத்த மன்னர், இங்கு யாம் நகரம் கட்டுவோம் என சொல்ல, அவரது நினைவாகவே இது இன்றுவரை அஹமதாபாத் என அழைக்கப்படுகிறது. இதற்கு முன் இந்த பிராந்தியம் ராஜபுத்திரர்களின் வசம் இருந்த பொழுதும் இருந்த ராஜபுத்திரர்களான வகேலா பரம்பரையும், சோலங்கி பரம்பரையும், “ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம், சுகம், சுகம்” என சுகித்து விட்டு போய் விட்டார்களே ஒழிய மக்கள் நலன் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவுக்குத்தான் அவர்களின் ஆட்சியின் லட்சணம் இருந்தது.


அகமது ஷாவின் பேரனான மஹமூத் பேகாடா, 1487 ஆம் ஆண்டு இந்நகரைச்சுற்றி 10 கி.மீ சுற்றளவில் பெரிய கோட்டை மதில் கட்டி அதில், பீரங்கி தாக்குதலுக்கென 189 பீரங்கித் தளங்கள், கோட்டை முற்றுகையிடப்பட்டால், மதில் மேலிருந்து எதிர் தாக்குதல் நடத்த 6000 பதுங்குமிடங்கள் என ஒரு வலிமையான அரணை இந்த நகரைச் சுற்றி எழுப்பியுள்ளார். அதில் இவர் கட்டிய அலங்கார வளைவுகளுடன் கூடிய 12 வாயில்கள் (பாரா தர்வாஜா) மிகவும் பிரசித்தி பெற்றவை.
முக்கிய வியாபார கேந்திரமாக இந்தியாவின் மேற்குக் கோடியில் உருவெடுத்த இந்த நகரம், இன்றுவரை வியாபாரத்தில் செழித்து, கொழித்து, குளித்து வருகிறது. கொஞ்சநாள் முகலாயர்களிடம், பின் மராட்டிய பேஷ்வாக்களின் மேற்பார்வையில், அதற்குப் பின் பரோடா சமஸ்தானத்து கெய்க்வாட் பரம்பரையின் கீழ், இறுதியாக ஆங்கிலேயர்களிடம் என பல முறை இந்ந்கரம் கைமாறியிருக்கிறது.

இந்திய தேசப்பிதாவின் பாதங்கள் பட்ட இந்த நகரம், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பல நிகழ்வுகளுக்கு சாட்சியம் அளிக்கிறது. 1919 – ல் ரௌலத் சட்டத்திற்கான எதிர்ப்பு போராட்டங்களின் துவக்கப் புள்ளி இந்த நகரம் தான். 1930 – ல் நடந்த உப்பு சத்தியாகிரகத்தின் முக்கிய நிகழ்வான தண்டி யாத்திரை இங்கிருந்துதான் தொடங்கியது. 1942 ல் நடந்த வெள்ளையனே வெளியேறு என்ற போராட்டத்தின் குரல் முதல் முதலாக ஒலிக்கத் தொடங்கியது இந்நகரத்து வீதிகளில் தான்.

2001 – ல் நடந்த பூகம்பத்தால் பெரும் அழிவு, அதைத் தொடர்ந்து வந்த கோத்ரா கலவரத்தல் ஓடிய ரத்த ஆறு என வரிசையாக அழிவுகள் வந்தாலும், தனக்கே உரிய தொழிற்சாலைகள், துணி உற்பத்தி ஆலைகள், பால்பண்ணைகள், தகவல் தொழில் நுட்ப பூங்காக்கள் என முன்னேற்றப் பாதையில் வீறுநடை போடும் ஒரு நகரமிது. பட்டம் விடும் பண்டிகை, தாண்டியா நடனங்கள், விதவிதமான இனிப்புகள், தங்கநிற மங்கைகள் என கலாச்சாரத்தில் இனிக்கும் இன்னொரு இடமிது.

அமெரிக்காவின் பெப்பே

டேவிட் ஹெட்லி – அமெரிக்காவின் கைப்பாவை, உளவாளி, தீவிரவாதி, மும்மை குண்டு வெடிப்புக்கு திட்டம் தீட்டியவர், லஷ்கர் – ஏ – தொய்பா வுக்காக உளவு பார்த்தவர், இன்றைய மனம் திருந்திய மைந்தன் என பல வர்ணனைகள் கொடுக்கலாம் இவருக்கு. பாகிஸ்தானிய அப்பனுக்கும், அமெரிக்க அம்மாவுக்கும் பிறந்த இவருக்கு நேர்வழியில் யோசிப்பதென்றால் கொஞ்சம் அலர்ஜிதான். அப்பவுக்கும் அம்மாவுக்கும் சண்டை வர, அப்பா தன் அருமை புதல்வனை பாகிஸ்தானுக்கு அழைத்துப்போய் சீராட்டி பாராட்டி படிக்க வைத்திருக்கிறார். படித்ததின் விளைவு புனிதப் போரில் நாட்டம். புனிதப் போர் என்பதே மற்றவர்களை குறிப்பாக இந்தியர்களை கொல்வதுதானே, ஆகவே தனது வெள்ளைத்தோல் முகவரியை வைத்துக் கொண்டு, இந்தியாவில் சர்வ சுதந்திரமாக சுற்றித் திரிந்து உளவு பார்த்திருக்கிறான். நம்மவர்களும் வெள்ளைத் தோலை கண்டவுடன் வாய்விரிய, முகம்மலர, சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு அளித்து, அவனை இந்தியாவின் எல்லா இடங்களிலும் உலவ விட்டிருக்கிறார்கள். ஆனால், இதில் மிகப் பெரும் கூத்து என்னவெனில், அமெரிக்க உளவு நிறுவனத்துக்கு வேலை பார்ப்பதாக கூறிக் கொண்டு, இவன் லஷ்கருக்கு கையாளாக வேலை பார்த்திருக்கிறான். அந்த மாபெரும் உளவு நிறுவனத்தின் மூக்குக்கு அடியிலேயே ஒரு கறுப்பு ஆடு உலவுகிறது என்பதை கடைசி வரை கண்டு பிடிக்க முடியாத தத்திகளாகத்தான் அமெரிக்க உளவுத்துறை இன்றும் இருக்கிறது.

எல்லாம் முடிந்து, வெடிக்க வேண்டியதெல்லாம் வெடித்து, இந்திய ஊடகங்களின் நாடகங்கள் முடிந்து, அவர்கள் இனி அடுத்த நாடக மேடைக்கு சென்றவுடன், இந்திய துப்பு துலக்கிகள் இவனை கையைக்காட்ட, அமெரிக்காவின் வயிற்றில் சேர்ந்தாற்போல் ஆயிரம் தீப்பந்தம் பற்றிக் கொண்டது. தீவிரவாதத்துக்கு எதிராக போராடும் ஒரே நாடு என மார்தட்டிக் கொண்டிருக்கும் அமெரிக்காவிலேயே, ஒருவன் தீவிரவாதத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறானென்றும், அவனை விசாரிக்க இந்தியா விரும்புகிறதென்றும் தெரிந்ததும், அமெரிக்காவின் இளிச்சவாய்த்தனத்தைப் பார்த்து மற்ற நாடுகள் தலையிலடித்துக் கொண்டன.

உடனே அவனை அவசர அவசரமாக விசாரணைக்குட்படுத்தி, அதில் தீர்ப்பும் வழங்கிவிட்டார்கள். அந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற தீர்ப்புக்கு பிறகு அமெரிக்கா அள்ளித்தெளித்த அறிக்கைகள்தான் உலக மகா காமெடி – “எங்கூட்டுப் பையன் எதோ தப்பு பண்ணீட்டானாம், அதையெல்லாம் அவன் தப்புன்னு ஒத்துகிட்டான், நாங்களும் அவனை நிக்க வெச்சு கையை நீட்டச்சொல்லி, நல்லா காயவெச்ச புளியங்குச்சிய எடுத்து, பளார், பளார்னு அடிச்சுட்டோம். அப்படியே அவன் கையெல்லாம் கன்னிப்போச்சு, அவன் இனிமே இந்த மாதிரியெல்லலம் செய்ய மாட்டேன்னு சொல்லீட்டான். அதனால சும்மா அவன விசாரணை அது இதுன்னு தொந்தரவு பண்ணாதீங்க, நீங்க போயி உங்க பொழப்பை பாருங்க என்னா, உங்களுக்கு வேற எதாவது வேணும்னா எங்கிட்ட கேளுங்க, என்ன சரியா, போயிட்டு வாங்க, ஆனா அதுல பாருங்க இப்பவும் தீவிர வாதத்துக்கு எதிரா கோடி கோடியா செலவழிச்சு போராடற நாடுன்னு ஒன்னு இந்த பூமியில இருந்துச்சுன்னா, அது அமெரிக்க ஒண்ணுதான். இதை மட்டும் மனசுல வெச்சுக்கங்க ” என்று இந்திய அரசுக்கு பெப்பே காட்டி விட்டது.

நமது அரசாங்க மாண்புமிகுக்களும், சரி, சரி லூசுல விடுறா, மண்ணைத் தொடச்சுட்டு போயிட்டே இருப்போம்னு திரும்பி வந்து விட்டார்கள். அவர்கள் நாட்டில் இருக்கும் ஒரு தீவிர வாதி நமது மண்ணில் வந்து, ரத்தத்தில் கோலம் போட்டு விட்டு போகிறான், இரட்டை வேடமிடும் அவன் நாட்டுக்காரர்களே அவனை அடைகாக்கிறார்கள். அப்புறம் என்ன மண்ணாங்கட்டிக்கடா அவுனுகளோடு கூட்டு சேர்ந்துகிட்டு, நாங்களும் போராடறோம்னு எங்க வரிப்பணத்தையெல்லாம் வீணாக்கறீங்க…..

நா(வீ)ட்டு நடப்புகள் :

ஹோட்டல்ல போய் உக்கார்ந்து மெனு கார்டை எடுத்து பார்த்து விட்டு, தேனொழுகும் குரலில்….

என்ன சாப்டலாம் கண்மணி,

எதாவது நல்லதா பாத்து நீங்களே சொல்லுங்க…

புரோட்டா சொல்லட்டா…

அய்யோ, அதுவே வெந்தும் வேகாம இருக்கும், அதுக்கு இவங்க வெக்கற குருமா வேற என்னமோ நேத்தத்த பழைய குழம்பு மாதிரி இருக்கும், வேற எதாவது சொல்லுங்க…

சரி பூரி….

அய்யோ எண்ணைல முக்கி அப்படியே வழியும்…

அப்ப, வெஜிடபிள் புலாவ்….

சே, அவுனுங்க அந்த காய்கறியையெல்லாம் வெட்டி இருக்கறத பார்த்தாலே சாப்பிட பிடிக்காது.

அப்ப பட்டர் நான்…

அது ஜவ்வு மாதிரி இழுத்துகிட்டே இருக்கும்,

இங்க சிக்கன் பிரியாணி ரொம்ப நல்லா இருக்குமாம், அது சொல்லட்டா,

வேணாம், ரொம்ப ஹெவியா ஆயிரும். எனக்கு ஏற்கனவே வயிறு ஒரு மாதிரி இருக்கு….

அப்ப சும்மா ஆர்டினரி மீல்ஸ் சொல்லட்டா, சாம்பார், ரசம், கூட்டு பொரியலோட….

ஏந்தான் உங்களுக்கு புத்தி இப்படி போகுதோ, இதைத்தான தினமும் வீட்டுல சாப்பிடறீங்க, இங்க வந்தும் அதே தானா……

அடியேன் கொஞ்சம் கடுப்புடன், அப்ப என்ன தான் சாப்டலாங்கற,

என்னையவே கேட்டுட்டு இருந்தா எப்படி, வேற எதாவது சாப்டறமாதிரி நல்ல ஐட்டமா பார்த்து சொல்லுங்க,

அடியேன் (முகத்தை வேறு பக்கம் திருப்பி) இந்த தொல்லைக்குத்தான் நான் வீட்லயே ரசம் சாதம் சாப்டுட்டு தூங்கிறலாம்னு நெனச்சேன்.

ஹோட்டலுக்குன்னு கூட்டிட்டு வந்துட்டு ஒரு நல்ல ஐட்டம் பாத்து ஆர்டர் பண்ணத் தெரியல, அங்க என்ன முணு முணுப்பு வேண்டிக் கெடக்கு

Tuesday, March 30, 2010

கொலைகாரர்கள் உருவாவது எப்படி??????


கொசுத்தொல்லை தாங்க முடியாம இருந்த ஒருத்தரு எல்லா வழியிலயும் முயற்சி பண்ணி, மனுஷன் நிம்மதியா தூங்க ஒரு வழி கிடைக்குமான்னு இருந்த சமயத்துல, ஒரு விளம்பரத்தை பார்த்திருக்காரு. கொசுவை கொல்ல சுலப வழி,,,, 100 ரூபாய் அனுப்புங்கள். நாங்கள் உங்கள் வீட்டுக்கு உபகரணங்களையும் மற்றும் செய்முறை விளக்க புத்தகத்தையும் தபாலில் அனுப்புகிறோம். 100 ரூபாய் அனுப்பிவிட்டு, மனுஷன் வெயிட்டிங்ல இருந்திருக்காரு….., அந்த பார்சலும் வந்துச்சு. பிரிச்சுப் பார்த்தா, ஒரு ரெண்டங்குல கனத்துல மரக்கட்டை ஒண்ணு, ஒரு ஆணி, அப்புறம் ஒரு சுத்தியல். மனுஷனுக்கு ஒண்ணும் புரியாம செய்முறை விளக்கப் புத்தகம் எங்கடான்னு தேடுனா, ஒரு வெள்ளைப் பேப்பர்ல கையால் எழுதியிருந்துச்சாம்.

மரக் கட்டையை மேடுபள்ளமில்லாத சம தளத்தில் வைக்கவும்.


உங்களுக்கு வலது புறத்தில் சுத்தியலையும் இடது புறத்தில் ஆணியையும் வைக்கவும்.


ஒரு கொசுவை பிடித்து அந்த மரக் கட்டையின் மீது வைத்து விட்டு, பறந்து விடாமலிருக்க அதன் கால்களை உங்கள் வலது கை விரல்களால் அழுத்திக் கொள்ளவும்.


இப்பொழுது இடது கையால் ஆணியை எடுத்து சரியாக கொசுவின் தலைமீது வைத்து அழுத்திப் பிடித்துக் கொள்ளவும்.


இப்பொழுது மெதுவே உங்கள் வலது கையை கொசுவின் கால்களிலிருந்து விடுவித்து, சுத்தியலை எடுத்து, ஆணியின் மீது மெதுவே ஒரு தட்டு தட்டுங்கள்.


ஆணி கொசுவின் தலையில் ஆழமாக இறங்கி, கொசு இறந்து போயிருக்கும்.


இந்த உபகரணம் ஆபத்தான ரசாயன புகை எழுப்பும் மற்ற உபகரணங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதை இப்பொழுது புரிந்து கொண்டிருப்பீர்கள்.

இந்த உபகரணத்தை கண்டு பிடித்தவனை கணக்கு தீர்க்க ஒரு கொலைகாரன் ரெடி.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

சும்மா தட்டுல போட்டு வெச்சா அதை அப்பிடியே சாப்டறது தானா, எப்படி இருக்கு என்ன ஏதுன்னு ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா?

ம்.., நல்லாருக்கு.

இந்த ஒரு வார்த்தைதானா, இந்த கேரட் அல்வா கிண்டும்போது கொஞ்சம் நெய் ஊத்தலாம்னு நெனச்சு, நெய் டப்பாவைத் திறந்தா முழுசும் காலியாயிருக்கு, அப்பத்தான் புரிஞ்சுது இந்த மாசம் மளிகை லிஸ்ட்ல நெய் வாங்க சொல்லியிருந்தும் நீங்க மறந்துட்டு வந்தது, சரி அப்புறம் வாங்கிக்கலாம்னு நெனச்சு நானும் மறந்துட்டேன். உடனே அடுப்புல இருக்கற கேரட்டை எடுத்து கீழ வெச்சுட்டு, பக்கத்து கடையில போயி கொஞ்சமா நெய் வாங்கிட்டு வந்தேன். ஆனா அதுக்குள்ள சூடான சட்டியில இருந்ததுனால கேரட் கருகிடுச்சோன்னு ஒரு பயம் வந்துருச்சு. அப்பிடி ஏதும் இல்லதான?

ஓஹோ, அதான் கொஞ்சம் தீஞ்ச வாசனை வருதோ?

ஆமா, ஒருத்தி இவ்வளவு கஷ்டப்பட்டு நமக்காக இத செஞ்சு வெச்சுருக்காளே, பேசாம சாப்புடுவோம்னு எப்பவுமே தோணாதே, எதைச் செஞ்சாலும் அதுல இது நொட்டை, அது நொள்ளைன்னு சொல்லலைன்னா, அது வயித்துள்ளயே இறங்காதே, எல்லாம் நான் வாங்கிட்டு வந்த வரம் அப்பிடி, யாரைச்சொல்லி என்ன பண்றது… @#$%^&*!, @#$%%^^&&*

அந்த கல்யாண புரோக்கரை கொல்ல ஒரு கொலைகாரன் ரெடி……

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இப்படியா வழவழன்னு ஆறு பக்கத்துக்கு ஒரு ரிப்போர்ட் போடுவாங்க, “கண்டேன் சீதையை” ங்கற மாதிரி கச்சிதமா, சுருக்கி எழுதி கொண்டு வாப்பா,

ஆறு பக்க ரிப்போர்ட், ரெண்டு பக்கமானவுடன்,

“ஏம்ப்பா, வெச்சா குடுமி, செரச்சா மொட்டைன்னுதான் வேலை செய்வீங்களா, கொஞ்சம் சின்னது பண்ணுன்னா, உடனே எல்லாத்தயும் தூக்கீடுவயா, எதெது வேணுமோ அதெல்லாம் கண்டிப்பா இருக்கணும்பா, ரிப்போர்ட் எவ்வளவு பெருசானாலும் பரவால்ல, ஆரம்பத்துல இருந்து எல்லா டீடெய்லயும் எழுதி கொண்டுவா”

ரெண்டு பக்க ரிப்போர்ட் இப்பொழுது எட்டு பக்கமானவுடன்,

“எனக்கு இருக்கற டென்ஷன்ல, ஏம்ப்பா இப்படி படுத்தறீங்க, உனக்கு ரிப்போர்ட் எழுத சொல்லிக் குடுக்கறதுக்குள்ள எனக்கு நாக்கு தள்ளீரும்னு நெனைக்கறேன். ஆமா, நீ காலைல இருந்து எந்த ரிப்போர்டை கொண்டு வந்து காமிச்சுகிட்டு இருக்கே, நான் இதையவா சொன்னேன். மார்ச்சு மாசம் 30ம் தேதி ஆச்சு, இன்வாயஸ் டீடெய்ல் எல்லாம் இருக்குமே,,,, அதை எடுத்துட்டு………….!!!!!!!#######

இவனை பாஸ் ஆகும்படி புரமோஷன் கொடுத்தவனை கொலை பண்ண ஒரு கொலைகாரன் ரெடி…….



Wednesday, March 24, 2010

வா, என் கண்மணி மறுபடி போவோம்.




பேருந்தில் பயணம்,
ஒரே இருக்கை,
என் தோளில் நீ,
உன் மடியில் நான்
நெருக்கம் இனித்தது.

பேருந்து பயணம்,
நேர விரயம்,
தனிமையின் காவு,
பயணம் கசந்தது.

பைக்கில் பயணம்,
முதுகில் முட்டல்கள்,
காதருகே சுவாசங்கள்,
செல்ல சீண்டல்கள்,
வாழ்க்கை இனித்தது.

இனித்தது இயங்கியது,
இன்னொரு உயிராய்,
இருவரின் இடையில்,
அதே பைக்கில்
அங்குலத்தில் இடைவெளி.

பைக்கும் மாறியது.
காருக்குள் மூவர்.
அதே சாலை, அதே பூமரம்
அதே காலை, அதே சூரியன்
ஆனால் அங்குலம் அடிகளாகிவிட்டதடி.
நீ அருகிலிருந்தும் துருவ தூரத்தில்.

இந்த வசதிகள் நமக்குள்
வரப்புகள் வரைந்தது,
சொகுசுகள் எல்லாம்
சுகங்களின் விலையில்.
வீணைகள் வாங்க
விரலையா விற்பது?

வா, என் கண்மணி
மறுபடி போவோம்,
பைக்கில் பயணம்,
முதுகில் முட்டல்கள்,
காதருகே சுவாசங்கள்,
செல்ல சீண்டல்கள்,
இனிக்கும் வாழ்க்கை
இன்னொரு முறை வாழ்வோம்.

Wednesday, March 17, 2010

என்னத்தச் சொல்ல.....



இந்த மின்னஞ்சல் அனுப்பறது ரொம்ப சௌகரியமா இருந்தாலும், சுகங்கள் என்றுமே ஆபத்தானவைதானே. எங்கள் நட்பு வட்டாரத்தில், மகாபாரதத்தைப் பற்றி சுற்றில் விடப்பட்ட ஒரு மின்னஞ்சலை எனக்கு ஒரு நண்பர் ஃபார்வேர்டு (இதற்கு யாராவது சரியான தமிழ் வார்த்தை சொல்லுங்களேன்) செய்ய, அதை நான் மற்றவர்களுக்கு அனுப்ப, மற்றவர்கள் அவர்களுக்கு தெரிந்தவர்கள் என அனுப்ப, அந்த சங்கிலி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறதோ அல்லது முடிந்து விட்டதோ தெரியவில்லை. ஆனால், வில்லங்கமே இந்த மாதிரி தொடர் மின்னஞ்சல்களில்தான் ஆரம்பிக்கிறது. நமக்கு அனுப்பியவர்களின் முகவரியோடு கூட நாம் அதை மற்றவர்களுக்கு அனுப்பி விடுகிறோம். அது நமது நண்பர்கள் வட்டத்தை விட்டு, பல வட்டங்களில் போய், பல நாடுகளில் சுற்றும் பொழுது, எத்தனையோ முகவரிகள் இணைந்து விடுகிறது. இப்படி பல முகவரிகளை பார்த்த ஒரு வக்கிர மனிதன், அதிலிருக்கும் பெண்முகவரிகளை பொறுக்கிஎடுத்து, அவர்களுக்கு வக்கிர மெயில்களை அனுப்ப ஆரம்பித்தவுடன், அவர்களுக்கெல்லாம் அதிர்ச்சி. இந்த இம்சை தொடர்ந்து நடைபெறவே, ஒரு சில மென்பொருள் துறை பெண்கள், எங்கிருந்து இது ஆரம்பித்தது என துப்புத்துலக்கி அவனை பிடித்தும் விட்டார்கள். அதற்கு முன் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பும் அனைத்து ஆண்களையும் அவர்கள் சந்தேகப்பட்டது தான் மனதை நோகடித்து விட்டது. அவன் ஐரோப்பாவில் இருக்குமொரு தமிழன்.(வெட்கக் கேடு). பிறகு என்ன, பொது மன்னிப்பு, நான் இதை விளையாட்டுக்குத்தான் செய்தேன். இதை பெருந்தன்மையுடன் எடுத்துக் கொள்வார்கள் என நினைத்தேன்.(ங்கொய்யால கையில கிடைச்சா உனக்கு இருக்குடி) இவ்வளவு வீரியமடையும் என நான் நினைக்கவில்லை என்பது போன்ற வழக்கமான வழிதல்களுடன் அவன் நண்பர்கள் வட்டத்திற்கு வெளியே தூக்கி எறியப் பட்டிருக்கிறான். இப்பொழுதெல்லாம் பொது மின்னஞ்சல்களை முகவரிகளையெல்லாம் அழித்து விட்டு, BCC ல் முகவரி இட்டு அனுப்புகிறேன். ஆனால் இதையும் கண்டு பிடிக்க உத்திகள் இருக்கிறதோ என்னவோ, என்னைப் போன்ற ஞான சூன்யங்களுக்கு தெரியவில்லை. அவன் எங்கள் நட்பு வட்டத்தில் இல்லவே இல்லை. ஆனால் இந்த மின்னஞ்சல் என்பது எவ்வளவு ஒரு சக்தி வாய்ந்த தகவல் தொடர்பு சாதனமாயிருக்கிறதோ, அதிலும் நம்மை அறியாமலே நாம் ஒரு சில வக்கிர ஆசாமிகளின் வலைக்குள் இழுக்கப்படுகிறோம் என்பதை அறியும் போது என்னத்தைச் சொல்ல.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஒரு வழியாக நித்தியானந்தாக்கள் சகாப்தம் அமைதியாகி, மக்கள் வேறு பிரச்சனைகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள். இனி அடுத்த சாமியாரோ, பாஸ்டரோ அல்லது மௌலாவோ கிடைக்கும் வரை அமைதி காக்க வேண்டியதுதான். ஊடகங்களும் அலைந்து திரிந்து, எப்படியாவது அடுத்தவரை வெகு சீக்கிரத்தில் நம்முன் கொண்டு வந்து நிறுத்தி விடும். அப்புறமென்ன கொஞ்சம் அடித்துக்கொள்ளுவோம், அடுத்தவன் சுதந்திரம், அப்பள மந்திரம், ஊடக தந்திரம் என்று பலரும் குமுறுவோம். அமைதியாகிவிடுவோம். இந்த சாமியார்களுடன் தொடர்புகொண்ட நமக்குத்தெரிந்த நபர் இருப்பின் அவரை பார்த்து கொஞ்சமும் கூசாமல் விரல்களை நீட்டி, “சே, இவுரு ரொம்ப நல்லவர்னு நினைச்சேன். இவுருமா அப்படி, என்னால நம்பவே முடியல” ன்னு சொல்லி நமது நடுநிலைமையை நிலை நாட்டிக் கொள்வோம். என்னத்தச் சொல்ல…..

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

பகுஜன் சமாஜ் கட்சி என்ற ஒரு அரசியல் கட்சி, தனதி 25வது பிறந்த நாளை கொண்டாடியது. அதற்காக லக்னௌ நகரமே நீல வர்ணம் பூசிக் கொண்டு விழாக் கோலம் பூண்டது. தனது ஆடம்பரங்களுக்கு பெயர் போன இன்றைய உத்தர பிரதேச முதலமைச்சரான மாண்புமிகு (ஹூக்கும்), மாயாவதி அவர்களுக்கு, அவரது கட்சியின் ஏழைத் தொண்டர்கள் எல்லாம் தங்களது எளிய வருமானத்திலிருந்து ஒரு மாலையை உருவாக்கி பரிசளித்தார்கள். கர்நாடகாவிலிருந்து இதற்கெனவே சிறப்பாக அழைத்துச் செல்லப்பட்ட மாலை தயாரிப்பாளர்களின் மூன்று மாத கடின உழைப்பில் உருவானதுதான் இந்த சர்ச்சைக்குரிய மாலை. என்னன்னு கேக்கறீங்களா, பூவைக் கோத்து மாலை போட்ட எவன்யா கேக்கப்போறான், இவுங்க கோத்ததெல்லாம் 1000 ரூவா நோட்டு, மொத்தம் எத்தனை நோட்டு தெரியுமா, இருவத்தி ரெண்டரை கோடி ரூபாயாம். இந்த கட்சியின் ஏழைத்தொண்டர்கள் கொடுத்த பணத்திலிருந்து 200 கோடி ரூபாய் செலவு பண்ணி ஒரு விழா, அதுல கட்சியின் தலைவிக்கு இருவத்திரெண்டரை கோடியில ஒரு மாலை, யப்பா, தலைவருங்களா, எங்கியோ போயிட்டீங்க, என்னத்தச் சொல்ல….

Tuesday, March 2, 2010

சச்சினின் சாதனை விரைவில் முறியடிக்கப்படும்.

வரலாற்று ஆதாரங்கள் எத்தனையோ கொடுக்க முடியும். கிரிக்கெட் அங்கு தோன்றியது, இங்கு வளர்ந்தது, இப்படி நிமிர்ந்தது, அப்படி நடந்தது, அழகாய் அமர்ந்தது, ஜோதியாய் ஜொலிக்கிறது என வர்ணிக்கவும் முடியும். ஆனால், ஒரு சில வெள்ளைக்கார வாலிபர்களுக்கு இளவேனிற்காலத்தில் வெய்யிலின் கதகதப்பில் நாள் முழுதும் நின்று, தங்களது தோல் நிறத்தை மாற்றி மெருகேற்ற தேவைப்பட்ட பொழுது போக்கின் பரிணாம வளர்ச்சிதான் இந்த விளையாட்டு என்பதுதான் உண்மை.

இந்தியா கிரிக்கெட்டில் உலகக்கோப்பை வென்று வரும் வரை ஹாக்கியும், மல்யுத்தமும் இந்தியா முழுக்க பரவலாகவும், கால்பந்து என்பது மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும், மற்றும் போர்ச்சுகீசிய தடயம் இன்னும் மிச்சமிருக்கும் கோவா பிராந்தியத்திலும் விளையாடப் பட்டது என்றாலும், இந்த விளையாட்டுகள் கிரிக்கெட்டுக்கு முன்பாக தனது முக்கியத்துவத்தை இழந்து இன்று பரிதாபமாக நிற்கிறதே, அந்த நிலைக்கு முழுமையாக தள்ளப் படவில்லை.

ஆனால் குறுகிய காலத்திற்குள், இந்த எல்லா விளையாட்டுகளையும் பின்தள்ளி விட்டு, கிரிக்கெட் என்பது மாத்திரம் எப்படி இவ்வளவு தூரம் ஒவ்வொரு இந்தியனையும் ஆக்கிரமித்திருக்கிறது என்பது ஒரு விந்தையாக தோன்றினாலும், இந்த ஆளுமைக்குப் பின் இருக்கும் உலகளாவிய தில்லாலங்கடிகள் மலைக்க வைக்கிறது.

முக்கியமாக தொலைக்காட்சி என்னும் ஊடகம் இந்த விளையாட்டை வளர்த்தெடுத்து நிலை நிறுத்தியதில் முக்கிய பங்காற்றியது. கால்பந்து, ஹாக்கி, கைப்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கும், கிரிக்கெட்டுக்கும் அதன் இயல்பிலுள்ள ஒரு மிகப் பெரிய வித்தியாசமே கிரிக்கெட்டை மாத்திரம் தூக்கி நிறுத்த ஒரு மிகப் பெரிய காரணமாகி விட்டது.

கால்பந்தில் போட்டி ஆரம்பிக்கும் நொடி முதல் 45 நிமிடங்களுக்கு கேமராவை வேறு எங்கும் திருப்ப முடியாது, பந்து போகும் இடங்களையும், ஆட்டக் காரர்களின் கால்களின் லாவகத்தையும் மட்டுமே காட்ட வேண்டியிருக்கும். ஹாக்கியும், கைப்பந்தும், கூடைப் பந்தும் கூட இப்படித்தான், ஆட்டத்தின் துவக்கத்திலிருந்து இறுதி வரை விளையாட்டைத்தவிர வேறு எதையுமே உங்களால் தொலைக் காட்சியில் காட்ட முடியாது. ஆனால் கிரிக்கெட் அப்படியல்ல, ஒரு ஓவருக்கும் இன்னொரு ஓவருக்குமான இடைவெளியில் குறைந்த பட்சம் மூன்று விளம்பரங்களை காட்டலாம். தொலைக்காட்சியின் கணக்குப் படி பார்த்தீர்களானால், ஒவ்வொரு ஐந்து அல்லது ஆறு நிமிடத்திற்கொருமுறை, குறைந்த பட்சம் இரண்டு நிமிடங்கள் விளம்பரங்களுக்கான நேரம் கிடைக்கும். இதில் ஆட்டக்காரருக்கு அதிகம் வியர்த்து வடிந்தால், அவர் தண்ணீர் குடித்தால், அவரது பேண்ட் கிழிந்தால், அவருக்கு கால் வலித்தால், தும்மல் வந்தால், பந்து பழையதானால் என எத்தனையோ காரணங்களுக்காக முழு ஆட்டத்தையும் நிறுத்தி விட்டு, விளம்பரம் காண்பிக்க முடியும். அவர் நான்கு ரன்களோ, ஆறு ரன்னோ அடித்தால், பந்து பவுண்டரி லைனை தொட்டால் அந்த கோட்டில் கூட ஒரு விளம்பரம், விளம்பரத் தட்டிகள் வைத்து இந்த தட்டியின் மீது அடித்தால் இத்தனை ரூபாய் என சொல்ல முடியும். ஸ்டம்பில் படும் பந்தை காண்பித்தால் ஸ்டம்பிலும் விளம்பரம், பேட்ஸ்மேனின் பேட்டில், அவரது சட்டையில் என் திரும்பிய பக்கமெல்லாம் விளம்பரப்படுத்த முடியும். ஆனால் கால்பந்திலே 45 நிமிடங்களுக்கு விளையாட்டைத்தவிர தவிர வேறு எதுவும் காட்ட முடியாது என்பதாலேயே, எந்த தொலைக்காட்சியும் அந்த விளையாட்டுகளில் விருப்பம் கொள்வதில்லை.

மேலும் கால்பந்தாகட்டும், மற்ற விளையாட்டுகளாகட்டும், வெறும் ஒன்றரை அல்லது இரண்டு மணி நேரங்களில் முடிந்து விடும். அப்படியே விளம்பரம் காட்டப்பட்டாலும் இந்த இரண்டு மணி நேரத்தில் இரண்டு முறைதான் காட்ட முடியும். ஆனால் கிரிக்கெட்டில் அப்படியல்ல, ஒவ்வொரு 7 நிமிடத்திற்கொரு முறையும், தொடர்ந்து 8 லிருந்து 9 மணி நேரம் வரை உங்களால் விளம்பரம் செய்ய முடியும். அப்படியானால் இந்த விளம்பர வருமானத்தை கணக்கெடுத்துப் பாருங்கள். இந்த விளம்பர உத்தியை சரியாக பயன் படுத்திக் கொண்ட விளம்பரதாரர்கள், தொலைக்காட்சி நிறுவனத்தார்களை மொய்த்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். இதில் வரும் பிரம்மாண்ட வருமானத்தின் வண்ணக் கனவுகள், தொலைக்காட்சி நிறுவனங்களை கிரிக்கெட் விளையாட்டை மட்டும் காதலிக்க நிர்பந்தித்தது.

இவர்களும் இந்திய கிரிக்கெட் வாரியத்தை நோக்கி படையெடுக்க, வாரியம் ஒரு பணம் காய்க்கும் மரமாகிப் போனது. ஜக்மோகன் டால்மியாக்களும், சரத்பவாரும் வாரியத்தலைவர் பதவிக்கென குடுமிபிடி சண்டை போட காரணம், இந்த விளையாட்டில் விளம்பரங்கள் மூலமாக வரும் அளவிட முடியா பணம் மாத்திரமே. ஆக வாரியமும் வீரர்களை அதிக போட்டிகளில் விளையாட நிர்பந்திக்க ஆரம்பித்தது. அதிக போட்டிகள் – அதிக விளம்பரம் – வீரர்களுக்கு அதிக சம்பளம் – வாரியத்துக்கு அதிக பணம் என எனக்கு உனக்கு என அனைவரும் அள்ள ஆரம்பித்தனர். இன்னமும் அள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த களேபரத்தில், ஐரோப்பிய கால்பந்தாட்ட வீரர்களுக்கு சற்றும் குறைவில்லாத திறமை கொண்டிருந்த கேரள போலீஸ்காரரான விஜயனாகட்டும், கண்ணிமைக்கும் நேரத்தில் பந்தை பல மட்டைகளுக்கு நடுவிலிருந்து அன்னப் பறவை பாலைப் பிரித்தெடுக்கும் லாவகத்துடன் பிரித்தெடுத்து, கோல் அடிக்கும் தன்ராஜ் பிள்ளையாகட்டும், புள்ளிமானாய் துள்ளி ஓடி ஹாக்கியில் முன் வரிசை ஆட்டக்காரராக இருந்த பர்கத் சிங் ஆகட்டும் இந்த திருவிழா கூட்டத்தில் சந்தடியில்லாமல் காணாமல் போய்விட்டார்கள். ஏனெனில் அவர்கள் விளையாடிய விளையாட்டுகளை நேசிக்க விளம்பரதாரர்கள் யாருமில்லை.

இப்படி கிரிக்கெட் தன் இயல்பிலேயே விளம்பரங்களுக்கென பிறந்த விளையாட்டாகிப் போனதால், அதில் ஆடும் வீரர்களும் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தார்கள். இங்கிலாந்தில் ஒரு அரங்கத்தில் அமர்ந்து ஒரு போட்டியை ரசித்துக் கொண்டிருந்த சர் சோபர்ஸ் தனது கால கிரிக்கெட் விளையாட்டை நினைவு கூறும் பொழுது இப்படியாக கூறினார். “ எங்களுக்கெல்லாம் கிரிக்கெட்டில் அதிக பட்சமாக கிடைத்த பரிசு ஒரு சைக்கிள்தான்” என்றார். ஆனால், இன்றைய வீரர்களை விலையுயர்ந்த ஆடம்பர கார், மற்றும் லட்சக்கணக்கான ரூபாய்களை பரிசளித்து களத்தில் நிறுத்தி வைக்க வேண்டியுள்ளது. இவர்கள் இல்லையேல் கிரிக்கெட் உலகமும் இல்லை, விளம்பரங்களும் இல்லை என ஆகிவிடும்.

வரும் காலத்தில் விளம்பரங்களுக்கு வளைந்து கொடுக்கும் வண்ணமாக இந்த பணம் காய்க்கும் விளையாட்டுக்கு புதிய பரிமாணங்கள் கொடுக்கப்படும். இப்பொழுது T 20 என்ற புதிய வடிவம் எல்லோரையும் கவர்ந்து வருகிறது. இனி வரும் காலங்களில் இதையும் சுருக்கியோ, நீட்டியோ வேறொரு வடிவம் தரப்படலாம். இப்பொழுதே இந்தியாவில் நடக்கிற ஹாக்கி உலகக் கோப்பையாகட்டும், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளாகட்டும், இந்தியாவுக்கு சர்வதேச விளையாட்டு அரங்கில் ஒரு முக்கியத்துவம் தர சகல தகுதிகளையும் கொண்ட இந்த போட்டிகளுக்கான விளம்பரங்கள், பண பலம் படைத்த IPL 20 போட்டிகளின் விளம்பரங்களுக்கு முன் நிற்க முடியாமல் தவிடு பொடியாகி விட்டது.

இப்படிப்பட்ட பண வலைகள் விரிக்கப் படும்வரை, கிரிக்கெட் என்னும் விளையாட்டு பணம் தரும் இயந்திரமாக இருக்கும்வரை சச்சினைப் போன்றவர்கள் தினம் தினம் புதிய சாதனைகளை நிகழ்த்த நிர்பந்திக்கப் படுவார்கள். பண பலத்தால் நிறைய வாய்ப்புகள் அவர்களுக்கு அளிக்கப்படும். அவர்கள் நிகழ்த்தும் சாதனைகளை முறியடிக்க இன்னும் நிறைய சச்சின்கள் பிறப்பார்கள்.

சாதனை படைத்த சச்சினுக்கு வாழ்த்துக்கள். அவரது தனிப்பட்ட விளையாட்டுத்திறமை பாராட்டப்பட வேண்டிய ஒன்று என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது. ஆனால் இந்த சாதனையும் சீக்கிரத்தில் முறியடிக்கப்படும். விளையாட்டுத் திறமை அந்த சாதனையை முன்னெடுத்துச் செல்வதை விட, சாதனையை வைத்து பணம் பண்ணும் வித்தைகள் தான் சாதனையாளர்களை உருவாக்கும்.