Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Tuesday, June 15, 2010

செவலக் காளை

பொழியில மொளை அடிச்சுக் கட்டியிருந்த கவுத்த அவுத்துகிட்டு, அடுத்த வயல்ல மேயப் போன செவலக் காளய பாத்து,

ஹோய், த்தா, த்தா, ஊச், போ அந்தள்ளைல என தூரத்துல நின்னே அதட்டுனா தாயம்மா கெளவி, அப்படியும் கேக்காம பக்கத்துக் காட்டுல வெளஞ்சிருந்த தட்டப் பயத்துச் செடிய மேயப் போனதும், வந்த கோவத்துல கையிலிருந்த அருவாளை வீசியூட்டா பாருங்க, அது காத்துல எதோ சங்குச் சக்கரம் சுத்தறாப்புல சுத்தீட்டு வந்து சரியா பின்னந்தொடைக்கு மேல ஒரு கீறு கீறீட்டு கீழ உளுந்துது. மாட்டுத் தோல் கிளிஞ்சு பொல பொலன்னு ரத்தம் வரவும், மாடு மிரண்டு போய் திரும்பி வந்து பொழி மேல நின்னுட்டு ரத்தம் வந்த இடத்துல வாலை சொழட்டி சொழட்டி அடிச்சுது. வால் மசுறுலெல்லாம் ரத்தம் பட ஆரம்பிச்சுது. தாயம்மா ஓடி வந்து, சனியனே, இங்க இத்தனை இருக்குதே இதைத் திண்ணேன், அடுத்தவிய வெள்ளாமைல போய் ஏன் வாய வெக்கறேன்னு திட்டி கிட்டே, மண்ணை எடுத்து காயத்துமேல அப்பியுட்டா, கொஞ்ச நேரத்துல ரத்தம் வர்றது நின்னு போச்சு, தாயம்மாளுக்கும் கொஞ்சம் மனசு நெகுந்தாப்புல இருந்துச்சு, பாவம் வாயில்லா சீவனுக்கு என்ன தெரியும், இப்புடி பண்ணிப் போட்டமேன்னு, மாட்டை கொஞ்சம் தடவிக்குடுத்தா, வெட்டுப்பட்ட காயம் தந்த வலி, தாயம்மாளோட இதமான தடவல்னு மாட்டுக்கு ஒண்ணும் புரியாம தலையை சிலுப்பீட்டு பொழி மேலயா நின்னுச்சு. மொளைல கட்டீருந்த கவுத்த அவுத்துட்டு மாட்டைக் கூட்டி வந்து சாளையோரமா இருந்த தென்னை மரத்துல கட்டி ,அதுக்கு தண்ணி வெச்சுட்டு, சாளைல இருந்த கயித்துக் கட்டல்ல உக்கார்ந்து, தான் செஞ்சத நினைச்சு வருத்தப் பட்டுகிட்டா, சுத்திக் கட்டீருந்த முந்தானையை அவுத்து வேர்வையை தொடச்சுகிட்டே செவலக் காளையவே பாத்துகிட்டு சித்த நேரம் உக்கார்ந்திருந்தா.

தாயம்மா—

அந்த கந்தம் பாளையத்துக்கு அவ கல்யாணமாயி வந்த நாள்ல இருந்து அவளை எல்லாரும் தாயம்மான்னு தான் கூப்புடறாங்க. அவிய அப்பனாத்தா வெச்ச கொழந்தைம்மாங்கற பேரு யாருக்குமே வாயில வர்றதில்லை. செங்கோட கவுண்டரு தாலி கட்டி கூட்டியாந்த நாள்ல இருந்து இன்னைக்கு வரைக்கும் தாயம்மா சீரும் செனத்தியுமாத்தான் வாழறா. செங்கோட கவுண்டருக்கு பாகத்துல வந்த எட்டு ஏக்கர் நெலம், அவுருக்கு வாழ்க்கைப் பட்டதுக்கு மூணு பொம்பளைப் புள்ளயும் ஒரு ஆம்பளையுமா நாலு கொழந்தைகன்னு நல்லாத்தான் போயிட்டிருந்தது.

கோடாலிக் கொண்டையும், கழுத்துல தொங்கற அட்டியும், அரை வெரல் மொந்தத்துல தாலிக் கொடியும் போட்டுட்டு, பின்னால கொசுவம் வெச்சு கட்டுன சீலையோட முந்தானைய சும்மாடு கட்டி, தலைல வெச்சு அதுல ஈர்க்கூடைல சாப்பாட்டுப் பாத்திரமும் வெச்சு தாயம்மா செங்கோட கவுண்டருக்கு சாப்பாடு கொண்டு போறதை பாக்கறதுக்கு ஊர்வழித் தோட்டத்தோரமா ஊர்ச்சனமே கூடி நிக்கும். இல்லைன்னு வந்த ஒருத்தரையும் வெறுங்கையோட அனுப்பவே மாட்டா, ஒரு வள்ளம் அரிசின்னாலும், ஒரு வேளை சோறுன்னாலும் அவிய போதும்னு சொல்ற வரைக்கும் குடுத்துத்தான் அனுப்புவா, தோட்டத்துல வேலை செய்யற கூலிக்காரங்க ஏழை பாழைக வீட்டுல விஷேஷம்னா எதோ இவிய ஊட்டு விசேஷமாட்ட அத்தனையும் செய்வா தாயம்மா. நெல்லு நாத்து நடவுக்கு சீலைய தூக்கி கட்டீட்டு சேத்துல இறங்குனா, மளமளன்னு நட்டுகிட்டே வருவா, நாலாளு வேலைய ஒரே ஆளா செஞ்சுபோட்டு சளைக்காம நடப்பா.

மொதல்ல பொறந்தவ கனகா, சாலைத்தோட்டத்து முருகையனுக்கு கட்டிக் குடுத்துறுக்குது. ரெண்டாவதா லட்சுமி, மிசுனுதறிக் கவுண்டர் பையனுக்கு குடுத்துது. மூணாவதா மரகதம், பழனிக் கவுண்டர் பையனுக்கு குடுத்தது. நாலாவதா பொறந்தவந்தான் தங்கவேலு. மகனுக்கு சீமையெல்லாம் பொண்ணு பாத்து கடைசியில பக்கத்தூரு வாரப்பட்டியிலயே பொண்ணெடுத்தாச்சு. மருமகளும் ஒரு யோக லட்சுமிதான். பொறுப்பா இருந்து பண்ணயம் பாத்து பழகீட்டா, அவுளுக்கு பொறந்தது ஒரு பையனும் புள்ளயும். புள்ள பெரீவளாயிட்டு, பன்னெண்டாவது படிக்கறா, பையன் இப்பத்தான் பத்தாவது படிக்கறான்.

நாளும் பொழுதுமா செங்கோட கவுண்டரும் போயிட்டாரு, தங்கவேலனுக்கு சீக்கு வந்து அவுனும் அவுங்கப்பன் போன எடத்துக்கே போயிட்டான். மாமியாரும் மருமகளும் வெள்ளைச் சேல கட்டீட்டு ஒரே ஊட்லதான் இருக்கறாங்க.

மாட்டுக்கு ரெண்டு கை வைக்கப்புல்ல அள்ளிப் போட்டுட்டு, தாயம்மாளும் மாட்டையே பாத்துட்டு உக்காந்துட்டா, ஒருபக்கம் இத்தன கோவம் எதுக்குத்தான் வருதோ கருமம்னு நெனச்சாலும், இன்னொரு பக்கம், ஒருக்கா போட்டாத்தான் இதுக்கெல்லாம் புத்திவரும்னு நெனச்சுகிட்டா. கவுண்டரு இருந்தப்ப அடிக்கடி சொல்வாரு, தாயம்மா, உன்ர மூக்குத்திய கழட்டு, அதுல மூக்கணாங்கவுறு போடறேன். அந்தக் கவுறு இருந்தாத்தேன் உண்ணய கையில புடிக்க முடியும்பாரு.

கவுண்டர் நெனப்பு வந்தொடனயே தாயம்மா கண்ணு லேசா நீர்கட்டுனாப்புல ஆயிருச்சு. எப்புடி இருந்த மனுஷன், மசையன்னா மசையந்தான். தூணு கணக்கா காலும், மைதானமாட்டா நெஞ்சும், வண்டி நொகமாட்ட கையும், கன்னம் நிறைய முறுக்கு மீசை வெச்சுட்டு, ஆளு உருமாலை கட்டீட்டு வந்தாருன்னா, காத்து கூட கொஞ்சம் தள்ளி நின்னுதான் போகும். ஒரு சூது வாது தெரியாது, ஒருத்தருகிட்ட ஒரு வம்பு தும்புக்கு போக மாட்டாரு. எந்நேரமும் தோட்டமுண்டு, தானுண்டுன்னுதான் இருப்பாரு. மனுஷன் ஏர்ப்புடிச்சா அந்தக் கொனைலிருந்து இந்தக் கொனைவரைக்கும் நூலு கட்டுனாப்புல ஒரே கோடாப் போகும். அதென்னமோ, செங்கோட கவுண்டரு சாமி கும்புட்டுட்டு ஒழவு ஓட்டுனாருன்னா, அந்த போகம் சும்மா வெள்ளாமை கிண்ணுன்னு வெளயும். பங்காளிக பசங்கெல்லாம் வந்து, ஒழவு ஓட்டறண்ணைக்கு அவிய தோட்டத்துல இவரத்தான் மொத ஏர் புடிக்கச் சொல்லுவானுக. இவுரும் சித்த நேரம் ஓட்டிக் குடுத்துட்டு, இனி நீங்க ஓட்டுங்கடான்னுட்டு வருவாரு.

கொஞ்ச நாளாவே கவுண்டரு ஒரு போக்காத்தான் போயிகிட்டிருந்தாரு, தாயம்மா கருவாடும், கத்திரிக்காயும் போட்டு கொளம்பு வெச்சா வட்டலைக் கூட சுத்தமா நக்கீட்டு திங்கற ஆளு, இப்பல்லாம் சோத்துக்கு நேரத்துக்கு வர்றதில்லை. வந்தாலும் பேருக்கு இத்தனே திண்ணுட்டு திண்ணைல படுக்கறாரு, எத்தனை சண்டை வந்தாலும் அதெல்லாம் பொழுது சாயற வரைக்குந்தான், ராத்திரிக்கு தாயம்மாளும் கவுண்டரும் தனிய படுத்தது கிடையாது. ஒரு சில நாளைக்கு தக்காளிச் செடிக்கோ, வெண்டைக்காய்க்கோ ராத்திரில தண்ணி உடோணுமின்னாலும், கவுண்டர் ராத்திரி சோத்துக்கப்புறம் போயிட்டு நடு ராத்திரின்னாலும் திரும்பி வந்து ஊட்லதான் தூங்குவாரு, இப்பல்லாம் தோட்டத்து சாளைல தூங்கறாரு. ரெண்டு மாசமா பால் சொசைட்டிலிருந்து பால் காசு வேற வர்ல, ஒரு நாளு தாயம்மா போயி கேட்டதுக்கு அதெல்லாம் கவுண்டர் வாங்கீட்டுப் போயிட்டாருன்னாங்க, கவுண்டர்கிட்ட கேட்டா செலவாயிடுச்சுன்னு சொன்னாரு, தாயம்மாளுக்கு பொறி தட்டீருச்சு. கள்ளுக் குடிக்கற பழக்கமிருக்குதுன்னாலும் அதெல்லாம் சோட்டுக் காரங்களோட, தென்னந்தோப்புலதான் குடிப்பாரு, கடைக்குப் போற வழக்கமில்லை. எங்கியாவது சீட்டாடப் பழகீட்டாரோன்னு தாயம்மாளுக்கு ஒரு கவலை வந்துது.

மாரியாத்தா கோயில்ல நோம்பி சாட்டி, கொடி மரம் கட்டீட்டாங்கோ. ஊரே திருவிழா கோலத்துல முசுவா இருக்குது. இன்னைக்கு ராத்திரி “பவளக் கொடி” நாடகம் போடறதுக்கு டவுனுல இருந்து ஆளுங்கெல்லாம் வந்துட்டாங்கம்மான்னு தங்கவேலான் சொல்லீட்டு ஓட்டமா ஓடறான். பெரிய புள்ள கனகாவும் மாப்பிள்ளயும் நோம்பிக்கி வந்துருக்கறாங்க. அப்ப அவுளுக்கு மட்டுந்தான் கலியாணம் ஆயிருக்குது. சின்னவுளுக ரெண்டு பேரும் அப்பத்தான் தாவணி போடற வயசு. தங்கவேலு ஆறாவது படிக்கறான். மாப்பளைக்கு புது வேட்டி சட்டை வாங்கியாறென்னுட்டு சிவாலிங்க செட்டியாரு கடைக்கு போனவரு ஆள இன்னமும் காணமேன்னு தாயம்மா தவிக்கறா. கனகா மாப்புளயும் கனகாவும், தங்கச்சிகளொட சேந்து நாடகம் பாக்கப் போயிட்டாங்க. தங்கவேலான் அவிய கூட்டுப் பசங்களோட போயிட்டான். தாயம்மா மாத்திரம் தனியா இருந்தா, திடீர்னு ஒரு நெனப்பு வந்து செட்டியார் கடைல போயி கேட்டா, செட்டியாரு சந்தனப் பொட்டு வெச்சுட்டு கடையில இருந்தவரு,

“என்ன தாயம்மா, பெரிய மகளும் மாப்பளயும் நோம்பிக்கு வந்தாங்களாக்கும்”

“ஆமாங்கையா, கவுண்டரு துணி எடுக்கறேன்னுட்டு வந்தாருங்களே”

“மருமகனுக்கு வேட்டி துண்டு எடுத்திருக்காரு, உங்களுக்கும் சீல வாங்கிட்டு அப்பளயே போனாரே”

சரின்னுட்டு வந்தவளுக்கு, மனசுக்குள்ள கருக்குன்னுச்சு, எனக்கு சீல வாங்கறத சொல்லவே இல்லயே, என்ன மனுஷன் இவுருன்னு ரோசன பண்ணீட்டு போகயில, நட்ராசு குறுக்க வந்தான். “என்ன தாயம்மா, கருக்கல்ல எங்க போறீங்க, ஊரே நோம்பி கும்புடுது, நீங்க எங்க இந்நேரத்துல”

“நட்ராசு, பெரீப்பன பாத்தியா”

“ஆமா, துணிக்கடை பைய கக்கத்துல இடுக்கீட்டு, கெழக்க போனாரு, சரி, காலைலயே சாணான் தென்னங்கள்ளு எறக்குனானே, செட்டுக்காரங்கெல்லாம் தென்னந்தோப்புல உக்காந்து இன்னைக்கு ரெண்டு பானையும் முடிச்சுட்டுதான் கோயலுக்கு வருவாங்களோன்னு நெனச்சேன்”

“அப்பிடியா செரி செரி நீ போ”ன்னுட்டு நேரா தோப்புக்கு போனா, அங்க அப்பிடி எதுவும் நடக்கல, அப்புறம் எங்க போனாருன்னுட்டு திலும்பனப்போ, தோட்டத்து சாளைல லேசா ஒரு வெளிச்சம். கதவு தெறந்து மூடுனாப்புல இருந்துது. தாயம்மாளுக்கு அது சரியாப்படுல. மெல்ல சத்தமில்லாம சாளைப் பக்கத்துல போனா, முன்னால வழியா போகாம, கெணத்தைச் சுத்தீட்டு பின்னால வழியா போனா, உள்ள ராந்தலு வெளிச்சம் இருக்கறது கண்ணுக்குத் தெரியுது. பேச்சுச் சத்தம் கேக்குது. கூடவே வளையல் சத்தமும். யாருன்னு பாக்கோணுமின்னு சத்தமில்லாம பின்னால வந்து செவுத்துல பாதி ஒசரத்துக்கு ரெண்டு கூடையப் போட்டு அதுமேல ஏறி, வெட்டுக்கை சந்துல பாத்தா.

கவுண்டரு கயித்துக் கட்டல்ல மல்லாக்க படுத்திருக்க, அவுரு நெஞ்சுமேல பால்கார சிவகாமி ஏடாகூடமா பரவிப் படுத்திருந்தா. பகீர்னுச்சு தாயம்மாளுக்கு, இப்பவே அவீயல ரெண்டு பேர்த்தையும் வகுந்தறலாமான்னு கோவம் வந்துச்சு. சத்தமில்லாம இறங்குனா, மனசுல ஒரு முடிவு எடுத்துட்டு, மறுபடியும் கெணத்தச் சுத்தி வந்து கூடை எங்க இருந்ததோ அங்கயே வெச்சுட்டு இருட்டுல உக்காந்திருந்தா. கொஞ்ச நேரங் கழிச்சு சிவகாமி மாத்திரம் முந்தானையை இழுத்துச் சொருகீட்டு போறதப் பாத்தா, அவ கையில புதுச் சேலை. அப்புறமா கவுண்டரு வந்தாரு…….

பவளக் கொடி நாடகம் படு தமாஷா நடந்துச்சு. பொம்பள வேஷம் போட்டவன் நெஞ்சுல ரெண்டு லப்பர் பந்தை வெச்சுட்டு வந்தான். ஊரே உக்காந்து சிரிக்குது. தாயம்மாளும் வந்து புள்ளைக பக்கத்துல உக்காந்துட்டா. நாடகம் பாக்கற முசுவுல அம்மா வந்ததயே புள்ளைக கவனிக்கல. அத்தன சிரிப்புக்கு நடுவுல திடீர்னு திரும்புன கனகா, தாயம்மாளப் பாத்து எப்பம்மா வந்தேன்னு கேக்க, நானு அப்பவே வந்துட்டேன், நீங்கதான் என்னை கவனிக்கலேன்னு சொன்னா, நாடக தமாஷுல மனசு ஒட்டி இருந்ததாலயும், அங்க மேடைல மட்டுந்தான் வெளிச்சம் இருந்ததாலயும், அந்த கொற வெளிச்சத்துல தாயம்மா மொகம் இறுகிப் போயிருந்ததை கனகா கவனிக்கல.கொஞ்ச நேரத்துல தாயம்மா கனகாகிட்ட, கனகு அய்யாவை பாத்தியான்னு கேட்டா, இல்லம்மா அய்யா எங்கியாவது உக்காந்திருப்பாரு பாருன்னு சொன்னா, அன்னைக்கு பொழுதன்னக்கும் நாடகம் நடந்துச்சி. கோழி கூப்படறதுக்கு சித்த முன்ன எல்லாரும் ஊட்டுக்கு போனாங்க. அப்பவும் கவுண்டரு ஊட்டுக்கு வரல. புள்ளைக எல்லாம் படுத்து தூங்கீட்டாங்க, தாயம்மாளும் தூங்கப் போனா, ஆனா மனசுக்குள்ள அந்த நெனப்பே வந்து தூக்கத்தை தொரத்துது….

காலைல வெளிச்சுனு ஆன ஒடனே, நடராசு ஓடியாந்தான், தாயம்மோவ், தாயம்மோவ்னு மூச்சு வாங்குனான்,

என்ன நட்ராசு, சொல்லு, சொல்லுப்பா

பெரீப்பன், பெரீப்பனங்கே கிணத்து மேட்டுலன்னுட்டு அழுதான்.

அய்யோ என்னாச்சு உங்க பெரீப்பனுக்குன்னுட்டு தாயம்மா, கனகா எல்லாரும் ஒரே பாய்ச்சலா ஓடுனாங்க, அங்க கெணத்து மேட்டுல குத்துக்கல்லுல தல பட்டு செங்கோட கவுண்டரு குப்புறக் கெடந்தாரு. அவுரு தலயிலிருந்து ரத்தம் வழிஞ்சு மண்ணை நனைச்சுருக்குது. கொஞ்ச தூரந்தள்ளி அந்தள்ளைல மருமகனுக்கு வாங்குன வேட்டியும் சட்டையும் மஞ்சப் பைக்குள்ள கெடந்தது.

அன்னைக்கு வெள்ளச் சீல கட்டுனவதான் தாயம்மா, இதா இப்பவும் அப்பிடியே அந்த கெணத்து மேட்டப் பாத்துட்டு உக்காந்திருக்கா,

பேரன் சின்னக் கண்ணான் வந்து “ஆத்தா, ஏன் மத்தியான சோத்துக்கு வல்லியாமா, அம்மா கேட்டுது”ன்னு சொல்லீட்டு, மாட்டைப் பாத்தான்.

“ஆத்தா, அதென்னாத்தா செவலக் காளைக்கு தொடையில வெட்டுக் காயம்??”

“அது பக்கத்து தோட்டத்துல வாய் வெச்சுது, அருவாள வீசிப் போட்டுட்டேன் சின்னக் கண்ணா, அத அவுத்துட்டு வா, ஊட்டுக்குப் போலாம்”னு சொல்லீட்டு, நாலு பருத்திமார எடுத்து ஒரு செமையாக் கட்டி தலைல வெச்சுட்டு முன்னால நடந்தா.

நடக்கைல மாட்டோட காயத்தைப் பாத்துட்டு மனசு கேக்காம பேரன் கேட்டான்.

“ஏனாத்தா, அது வாயில்லா சீவன், அதுக்கென்ன தெரியும், அதப் போயி அருவால்ல வெட்டீட்டியே, பாவம்”

தாயம்மா, நின்னு திரும்பி பாத்து நிதானமா சொன்னா “பேராண்டி, ஒண்ணு மாத்திரம் நல்லா கெவனம் வெச்சுக்கோ, அடுத்தவிய ஊட்டுல வாய வெச்சா, அது மாடாருந்தாலுஞ் செரி, மனுஷனாருந்தாலுஞ் செரி, அப்பவே தீத்துப் போடோணுமுடோய்”

செவலைக் காளைக்கு என்னமோ புரிந்தது போல் தலய தலய ஆட்டுது.




Monday, April 12, 2010

ஒண்ணாம் நம்பர் பிளாட்பாரம்



தலையை சுற்றுவது போல இருந்தது தமிழரசிக்கு, ரெண்டு நாளா என்ன தின்னாலும் ஒரே வாந்தியா வருது. மருந்துக்கடை தாமு அண்ணங்கிட்ட மாத்திரை வாங்கி சாபிட்டாலும் வாந்தி நிக்க மாட்டேங்குது. சோர்ந்து போயி அவளோட இடத்துல வந்து உக்கார்ந்துட்டா, அவ இடம்னா அது அவளுக்கே சொந்தமான ஒரு குட்டி ராஜ்ஜியம். ஒண்ணா நம்பர் பிளாட்பாரத்துல இருக்கற ஓவர் பிரிட்ஜ் படிக்கட்டுக்கு கீழ ஒரு துணி மூட்டை, கீழ படுக்கறதுக்குன்னு விரிச்ச அட்டைப்பெட்டிகள், இதுதான் அவளோட ராஜ்ஜியம். 12 வயசுல பாட்டி கையை பிடிச்சுகிட்டே இந்த பிளாட்பாரத்துக்கு வந்தது. இதா, பாட்டியும் போயி சேர்ந்துட்டா, கண்ணு ரெண்டும் தெரியலைன்னாலும் தமிழரசி வாயத்தொறந்து பாடுனா, அப்படியே கேட்டுட்டே இருக்கலாம் போல இருக்கும், ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்னு அவ பாடுனா, கையில பொல பொலன்னு காசு வந்து விழும். இதா அவுளும் வந்து 10 வருஷமாச்சு, இந்த பிளாட்பாரத்தை விட்டு எங்கயுமே போனதில்ல. தண்ணி பைப்புல தண்ணி புடிக்கவும், கக்கூஸுக்கு போகவும் அவ நடந்து போறதப் பாத்தா, அவளுக்கு கண் இல்லன்னு யாரும் சொல்ல மாட்டங்க. அவ வந்த புதுசுல ஒரு நாளைக்கு ஏழு ரயிலுத்தான் இங்க நிக்கும், இப்ப தினமும் இருவது ரயிலு நிக்குது, இவ பாட்டைக்கேட்டு காசும் நல்லா கிடைக்குது.

“என்ன தமிளு, உடம்ம்புக்கு சரியில்லையா” டீ விக்கற ரமேஷ் அண்ணன் கேட்டாரு,

“ஆமாண்ணா, ஒரே மயக்கமா வருது”.


“டீ குடிக்கறயா”


“வேண்டாண்ணா, எதை குடிச்சாலும் வாந்தியா வருது”


“சரி, சரி எதாவது மாத்திரை வாங்கிட்டு வரட்டா”


“இல்லண்ணா, தாமு அண்ணன் குடுத்தாரு, சாப்புடறேன்”

மாத்திரையை எடுத்து வாயில் போட்டு ஒரு வாய் தண்ணீர் குடித்தாள். இந்த ராமதாசு எப்ப வருவான், மூணு நாளாச்சு ஆளவே காணோம் என யோசித்தவளாக வலது கையை மடித்து தலைக்கு வைத்து படுத்துக் கொண்டாள்.

ராமதாசு – ஜங்ஷனில் போர்ட்டர். பேருக்குத்தான் போர்ட்டர். ஆனா அவன் தொழிலே பொட்டலம் விக்கறதுதான். ஜங்ஷன்ல பொட்டலம் கிடைக்கும்னு நிறைய பேருக்குத் தெரியும். அவுங்க வந்தா ராமதாசை தேடி, சரியா சிக்னல் குடுத்தாங்கன்னா, இவன் ரேட் பேசி, பொட்டலத்தை கை மாத்தறது மின்னல் வேகத்துல முடிஞ்சு போயிரும். அவன் சிவப்புச்சட்டையும், டவுசர் தெரிய மடிச்சுக் கட்டிய லுங்கியும், தலையில கட்டியிருக்கற துண்டும் பார்த்தா, இவனெல்லாம் ஒரு சின்னப் பையை கூட தூக்குவானாங்கறதே சந்தேகமாயிருக்கும். அவ்வளவு ஒடிசலான தேகம், பீடியும் கஞ்சாவும் இளுத்து உள்ள ஒடுங்குன கன்னம், ஈர்க்குச்சி மாதிரி கையும் காலும், பாதி நரைச்ச தலைமுடி, ஆணிக்காலை விந்தி விந்தி நடப்பான். அவன் எப்பவாச்சும் தான் பெட்டி தூக்குவான், மத்த நேரத்துல எல்லாம் பொட்டல வியாபாரம்தான். இந்த உடம்புக்குள்ள பொட்டலத்தை எங்க மறைச்சு வெச்சிருப்பான்னு தெரியாது, ஆனா கரக்டா கை மாத்துவான். பிளாட்பாரத்துல வண்டியில்லாம காலியா இருக்கற நேரத்துல நீங்க என்ன கோடி ரூவா குடுத்தாலும் அவங்கிட்ட இருந்து ஒண்ணும் பேராது. வண்டி வந்து நின்னு ஆளுங்க போகவும் வரவும் கூட்டமா இருந்தா நிமிஷத்துல வியாபாரத்த முடிச்சுட்டு, வேற வேலைக்கு போயிருவான். அவுனுக்கும் இந்த பிளாட்பாரத்தை விட்டா நாதியில்லை. அந்த காக்கிசட்டைக் காரரு கொண்டுவந்து குடுக்கற சரக்கை வித்துக் குடுக்கறதுல எதோ கொஞ்சம் துட்டு தேறுது. வெளியைல போயி அப்பப்ப சிக்கனு வருவல் புரோட்டான்னு சாப்டுட்டு வந்து பிளாட்பாரத்துலயே படுத்துக்குவான். போலீஸ்காரங்க எப்பவாச்சும் கேஸ் கிடைக்கலன்னா, வந்து இவனை இளுத்துட்டு போய் ஒரு மூணு நாள் உள்ள வெச்சு, அவுங்களே ஜாமீன்லயும் விட்டுருவாங்க. அவுங்க சொல்றபடி கேக்கணும் அவ்வளவுதான்.


மறுபடியும் வயித்தப் பொரட்டிகிட்டு வாந்தி வர்ற மாதிரி இருக்க தமிளு எந்திரிச்சி ஒக்கார்ந்து வாயை குவிக்க, வாந்தி வர்ற மாதிரி இருக்கு, ஆனா வர மாட்டேங்குது. ராமதாசு இருந்தாலாவது எதாவது பேசீட்டிருக்கலாம். எங்க போனானோ என நினச்சுகிட்டே மறுபடியும் படுத்துகிட்டா. ராமதாசு – நீ எங்க இருக்க………

பாட்டி செத்ததுக்கப்புறம், இவுளுக்குன்னு யாருமில்ல, குருட்டு பொண்ணா இருந்தாலும் லட்சணமாயிருப்பா, சிவப்புமில்லாம கருப்புமில்லாம ஒரு நிறம், காலைல மெட்ராஸ் போற வண்டி வந்ததும் 5 மணிக்கெல்லாம் எந்திரிச்சு, கக்கூசுக்குள்ள இருக்கற அந்த ரூம்ல போயி, குளிச்சுட்டு, கட்டியிருக்கற சீலை, ஜாக்கெட், பாவாடை எல்லாத்தையும் தொவச்சு எடுத்துட்டு வந்து காயப் போட்டுட்டு, தலை சீவி பொட்டு வெச்சுக்குவா. தினமும் குளிக்கறது பழகிப் போச்சு. குண்டா இல்லைன்னாலும் பூசுனாப்புல இருந்த உடம்பு அங்க இருந்த பலர் கண்ணுலயும் படத்தான் செய்தது. தனக்கு கண் இல்லைன்னாலும் தன்னைப் பாக்கறவங்க எப்படி பாக்கறாங்கங்கறது அவுளுக்கு எப்படித்தான் தெரியுமோ, கைத்தடியை எடுத்து ஒரு ஆட்டு ஆட்டுனான்னா, அவள பாக்கறவன் அவ்வளவுதான்.

ஒருநா, நல்ல மழை, பிளாட்பாரத்துல தண்ணியா கொட்டறப்போ, தமிழு படிக்கட்டுக்கு கீழ செவுத்துல சாஞ்சு உக்கார்ந்துட்டு இருந்தா, பக்கத்துல லொக்கு லொக்குனு இருமற சத்தம் கேட்டுது.

“என்ன தாசு, இப்படி இருமுற” ன்னு இவ கேக்க,


“என்னன்னு தெரியல தமிளு, ரெண்டு நாளாவே இருமலு குடலைப் பொரட்டுது” ன்னு சொல்லீட்டு பீடியை கடைசி இழுப்பு இழுத்துட்டு சுண்டி விட்டான்.


“அதான், இருமுறயில்ல, அப்புறம் எதுக்கு அந்த கிரகம் பீடிய குடிக்கற, அதத்தான் விட்டுத் தொலையேன்”


அவளை ஒரு தரம் திரும்பிப் பார்த்து விட்டு தலையை குனிந்து கொண்டான்.


“இந்தா, சூடா டீ இருக்குது குடிக்கறயா” என கேட்க, அந்த மழைக்கு டீயின் சூடும் சுவையும் அவனுக்கு இதமாயிருந்தது. இதற்கு முன் பலமுறை அவளை பார்த்தும், பேசியும் இருக்கிறானென்றாலும், இந்த உபசரிப்பு அவனை என்னவோ செய்தது.

“யேய், தமிளு, உன்னை இன்ஸ்பெக்டர் கூட்டியாரச் சொன்னாரு” ன்னு, கான்ஸ்டபிள் வந்து சொல்லவும், ராமதாசுக்கு புரிந்தது. இன்ஸ்பெக்டரு ஒரு வாரமா தமிழ் இருக்கற பக்கம் அடிக்கடி வந்து நிக்கறதும், அவளயே பாக்கறதுமா இருந்தப்பவே இவனுக்கு சந்தேகம் தட்டியது. ராமதாசு கேட்டான்.

“எதுக்கு?”

“டேய், நீ என்ன அவுளுக்கு வக்காலத்தா, வாயை மூடுறா”

“அவ வரமாட்டான்னு போய் சொல்லு போ”

“டேய், நீ என்னடா பெரிய பருப்பாட்டம் குறுக்க பேசுற, எத்துனன்னா மவனே ஒரேயடியா போயிருவ, எச்சக்கல நாயி” என அவனை கை வைக்க போனதும்,


“ஏய், செவப்பு சட்டை மேலயே கை வைக்கறயா” என இவன் சத்தம் போடவும், அங்கு நாலைந்து சிவப்பு சட்டைகள் வந்து “என்ன, என்ன பிரச்சனை, யோவ் அவன் சட்டைய விடுயா” என சொல்ல, நிலைமையை புரிந்து கொண்ட கான்ஸ்டபிள் பின் வாங்கினான். தமிழுக்கு எல்லாம் புரிந்தது, இன்ஸ்பெக்டர் எதுக்கு கூப்புடறான்னு புரிஞ்சது. நெஞ்சு திக்கு திக்குன்னு அடிச்சுகிச்சு.

ராமதாசு விரு விரு ன்னு ஸ்டேஷன் மாஸ்டர் கிட்ட போனான். ஒரு அரை மணி நேரத்துல திரும்பி வந்தான். “ஏய், தமிளு, ஒண்ணும் பயப்படாத, சொல்ல வேண்டிய இடத்துல சொல்லீட்டுத்தான் வந்திருக்கேன். யாருக்கும் பயப்படாத”ன்னு சொல்லவும், தமிழுக்கு அழுகை அழுகையா வந்தது. இதுவரை உணராத நேசம், தனக்குன்னு பரிஞ்சுகிட்டு வர ஒரு உயிர் உலகத்துல இருக்குன்னு நினைச்சப்ப வர்ற சந்தோஷம், இந்நேரம் இவன் மாத்திரம் இங்க இல்லன்னா என்ன நடந்திருக்கும்னு நெனச்சா பயம் எல்லாமா சேர்ந்து மனசை என்னவோ செய்ய, அத்தனை உணர்ச்சிகளையும் ஒரே மழைநேரத்தில் அழுது தீர்த்தாள். அவ அழுவறதைப் பார்த்து, ராமதாசு இன்னும் பக்கத்துல வந்து, “த்தே, எதுக்கு சும்மா அழுகற, அதான் நான் எல்லாம் சொல்லீட்டு வந்துட்டேங்கறன்ல”

“இல்ல, இப்ப நீ இருந்ததுனால தப்பிச்சேன், இல்லைன்னா ….”

“ஒண்ணும் ஆகாது, சும்மா பொலம்பாத”

“தாசு, நீ எங்கயும் போவாத” என அவன் குரல் வந்த திசையை நோக்கி அவன் கைகளை பிடிக்க காற்றில் தேடினாள். கையை பிடித்ததும் இருவருக்கும் அது முதல் ஸ்பரிசம். ஒரு ஆணின் கையை பிடித்திருக்கிறோம் என அவள் உணர்ந்ததும், ஒரு பெண் தன் கையை பிடித்திருக்கிறாள் என இவன் உணர்ந்ததும் இருவருக்குள்ளுமிருந்து ஒரு பெருமூச்சு ஒரே சமயத்தில் வெளிப்பட்டது. தமிழுக்கு அந்த ஸ்பரிசம் கொஞ்சம் வெட்கத்தையும் தந்தது. ராமதாசின் பார்வை தன்னை துளைப்பதை உணர்ந்ததும், வெட்கத்தில் தலை தானாக குனிந்தது. முதலில் சுதாரித்த ராமதாசு, “சரி, சரி, மழை ஜாஸ்தியா இருக்குது பேசாம படுத்துக்க, இதா நான் இந்த பெஞ்சுலதான் தூங்கறேன்”னு சொல்லிவிட்டு கைகளை விடுவித்தான்.

தமிழின் மனதுக்குள் மத்தாப்பு. இது சரியா, இதுதான் சரியா, அவசியமா, வேலியில்லாமல் பூச்செடி வளரவே முடியாதா, முள்ளாயிருந்தாலும் அந்த முள்தானே பாதுகாப்பு….. என்னென்னவோ நினைத்தாள், நினைத்தான். நினைத்தார்கள். இரண்டே நாளில் தமிழரசி கழுத்தில் மஞ்சள் கயிறுடன் தமிழரசி தாஸ் ஆகிவிட்டாள். ரயில்வே பிரிட்ஜின் படிக்கட்டிற்கு கீழே இப்பொழுதெல்லாம் இரவில் ஒரு கோணிப்பை தடுப்பு திரைச்சீலைபோல் தொங்குகிறது. தடுப்புக்கு உள்ளே, மல்லிகைப் பூ மணக்கிறது.

ஒரு பத்து நாள் போயிருக்கும், நடுநிசி. இன்ஸ்பெக்டர் வந்தார். கோணித் தடுப்பை விலக்கிப் பார்த்தார், பிளாட்பார லைட் வெளிச்சத்தில் அந்தக் காட்சியை கண்டு, கொஞ்சம் கிளு கிளு அதிர்ச்சி. பின்னி பிணைந்திருந்த இரு உடல்கள், அவசரமாக பிரிந்தன. அவசர கதியில் கோணித் தடுப்பையே சுருட்டி தமிழ் மறைத்துக் கொண்டாள்.

“எந்தர்றா, ………. மவனே, இது வேற கேக்குதா உனக்கு”

“ஏய், இந்தாரு, குருட்டு முண்டை உன்னை அப்புறம் வந்து கவனிக்கறேன், முதல்ல இவனை இழுத்துட்டு போங்கடா, பொட்டலம் விக்கறியா, பொட்டலம். மவனே பொலி போட்டுருவேன்”

“சார், ஒரு காலத்துல வித்துட்டிருந்தேன் சார், இப்ப அதெல்லாம் விட்டுட்டேன் சார்”

“அதாண்டா, கேக்குறேன், ஏன் நிறுத்துன, ஏண்டா உன்னை மாதிரி பொறுக்கி பரதேசிங்கெல்லாம் மகாத்மாவாயிட்டீங்கன்னா, நாங்க ஒவ்வொருதரமும் புது ஆள் தேடணுமா, ஒழுக்கமா நாளையிலிருந்து சரக்கு எடுத்துட்டு போயி வித்துட்டு வந்துரு, இல்ல மவனே உயிரோட இருக்க மாட்ட நீ”

"சார், முடியாது சார், இனிமே இதெல்லாம் நிறுத்திர்றதுன்னு முடிவு பண்ணீட்டேன் சார்”

நாற்காலியிலிருந்து எழுந்து வந்து தனது பூட்ஸ் காலால் எத்தி ஒரு உதை விட்டார், ஜெயில் அறையின் கம்பிகளில் தலை பாடரென மோத சுருண்டு கீழே விழுந்தான். மூக்கிலிருந்து லேசாக ரத்தம் வர ஆரம்பித்தது.

“யோவ், என்னாச்சுன்னு பாருங்கைய்யா”

“சார், முடிஞ்சது சார்”

“சரி, சரி, ஆம்புலன்ஸ்ல போட்டு ஆஸ்பத்திரிக்கி எடுத்துட்டு போங்க, நான் டாக்டர் கிட்ட பேசிக்கறேன்.”

ராமதாசு ஆம்புலன்ஸில் போனான்.

மாதம் நான்காகி விட்டது, இப்பொழுதும் அந்த ஒண்ணாம் நம்பர் பிளாட்பாரத்தில் மேடிட்ட வயிறுடன் கணீரென்ற குரல்

“என் தலைவன் அவனே அவனே என்று பாடும் ஒலி கேட்டேன்”

Tuesday, September 8, 2009

பூஜைக்கேத்த பூ இது!!!!!!!!!!



ஊன்று கோலுடன் நடக்கும் பத்து வயது கலைச் செல்வி, அவள் நடக்கும் பொழுது சூம்பிப் போன வலது கால் காற்றில் ஆடியது. இரண்டு கண் இமையும் ஒரு பள்ளத்தை மூடியிருக்க, கைகளை விரித்தபடி மெதுவாக அடியெடுத்து வைக்கும் தென்னரசு, இரண்டு கையுமில்லாததால் சட்டையில் தைக்கப்பட்ட கைகள் காற்றில் ஆடியபடி இன்னொரு பையன், சாடையில் பேசும் மகேஸ்வரி, துருத்திய பற்களின் நடுவே நீண்டிருந்த நாக்கை சுழற்றி வழியும் எச்சையை உள்ளுக்கிளுக்கும் முஸ்தஃபா, இப்படி திரும்பிய பக்கமெல்லாம் ஊனம், இயற்கை இவர்கள் வாழ்வில் எழுதிய சோக வரலாற்றின் கோர தாண்டவம்.

இவர்களிடம் என்ன பேசுவது, எப்படி பேசுவது என்ற குழப்பத்தில் மூவரும் அமர்ந்திருக்க சுரேஷ் தான் அமைதியை கலைத்தான். “பாப்பா, இங்க வா, உன் பேரென்ன?” என்று கேட்டதும் அங்கிருந்த பதினைந்து குழந்தைகளும் அவர்களின் தயக்கத்தை உதறிவிட்டு, ஒரு வேகத்துடன் வந்து இவர்களிடம் ஒட்டிக் கொண்டனர். “அண்ணா, உங்க பேரென்ன?” “இடு எண்ன, உங்க கலுதில டொங்கறது?” என அதிசயத்துடன் ஒரு குழந்தை அடையாள அட்டையை இழுக்க, “அண்ணா, நீங்க பெரிய ஆபீஸரா?” என கலைச் செல்வி கேட்டாள். குழந்தைகள் சகஜமாக பேச ஆரம்பித்ததும் அவர்களின் குறைகள் மறைய ஆரம்பித்து அவர்களுடன் விளையாட ஆரம்பித்தார்கள். எங்கும் சிரிப்பு, மனது நிறைய சந்தோஷம், அவர்களுக்கென வாங்கி வந்த சாக்லெட்டெல்லாம் கொடுத்து, மதியம் வரை அவர்கள் தோளில் ஏறியதையும் தொடையில் அமர்ந்ததையும் முழுதுமாக அனுபவித்து விட்டு, கேட்டரிங் சர்வீஸில் சொல்லியிருந்த சாப்பாடு வந்ததும் அவர்களுக்கு ஊட்டி விட்டார்கள். கொஞ்சம் சாப்பிட்டார்கள். அவர்களிடம் இருந்து விடைபெற்று வரும் பொழுது கையில் கொடுத்த செக்கை வாங்கிக் கொண்ட அந்த காப்பக கண்காளிப்பாளர் நிர்மலா ஒரு நன்றியுடைய புன்னகையுடன் வழியனுப்பி வைத்தார்.

கடற்கரையில் அமர்ந்திருக்கும் பொழுது மனது மிகவும் லேசானதைப் போல் உணர்ந்தார்கள். எதையோ சாதித்ததைப் போன்ற பெருமிதம் மனதில் நிறைந்திருந்தது.

“மாப்ள, இனிமே ஒவ்வொரு சண்டேயும் அங்க போரம்டா” என பீட்டர் கூற “ஆமாண்டா” என்றான் கதிர்.

அப்புறம் வாரா வாரம் அங்கு போக ஆரம்பித்ததும், கல்யாணம் செய்தால் ஒரு ஊனமுள்ள பெண்ணைத்தான் கல்யாணம் செய்வது என்று முடிவெடுத்ததும், அப்படியே மூன்று வருடங்களுக்கு முன் கண்ணில்லாத வளர்மதியை சுரேஷ் கல்யாணம் செய்ததுயும், வாய் பேச முடியாத மீனாவை கதிர் கல்யாணம் செய்ததும் இதோ இப்போது நடந்தது போல் இருக்கிறது. இன்று பீட்டருக்கு கல்யாணம்,

சுரேஷ்.வளர்மதியை கையைப் பிடித்து அழைத்து வந்து சர்ச்சின் முதல் வரிசையில் அமர வைத்து விட்டு, குழந்தையை அவள் கையில் கொடுத்து விட்டு கதிருக்காக காத்திருந்தான். சிலுவையில் தொங்கிய இயேசு கிறிஸ்துவின் சிலைக்கு கீழே கம்பங்களைப் போல் எழுந்திருந்த மெழுகு வர்த்திகளை வெள்ளை உடையணிந்த பாதிரி ஒருவர் வந்து கொளுத்தி வைத்து விட்டு, வந்திருக்கும் கூட்டத்தை ஒரு பார்வை பார்த்து விட்டு மறைந்து போனார்.

பீட்டர் நீல கலர் கோட் அணிந்து மகிழ்ச்சியில் சிரித்துக் கொண்டிருந்தான். பாடகர் குழுவினர் வந்து இசைக் கருவிகளை தட்டி சரி பார்க்க, இனி திருமணம் ஆரம்பிக்கிறது என்பது தெரிந்தும், கதிர் வராததால் சுரேஷ் பொறுமையிழந்து வாசலை பார்த்த படியே இருந்தான்.

“பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே உங்களுக்கு சந்தோஷமும் சமாதானமும் உண்டாவதாக. ஆமென்” என்ற குரலை கேட்டு முன்புறம் திரும்பினான். திருமணம் ஆரம்பித்திருந்தது, இன்னமும் இந்த கதிரையும் காணவில்லை, கல்யாண பெண்ணையும் காணவில்லை. கல்யாண பெண் எப்படி இருக்காங்கடா என்று போனில் கேட்டதுக்கு, “நீங்களே வந்து பார்த்துக்குங்க, அது வரைக்கும் சஸ்பென்ஸ்” என்று பீட்டர் போனில் சொல்லியிருந்தான்.

“நாமெல்லாரும் எழுந்திருந்து நமது கையிலிருக்கும் பாட்டுத்தாளில் உள்ள முதல் பாடலான ஏதேனில் ஆதி மணம் உண்டான நாளிலே எனற பாடலை பாடுவோம், அது சமயம் மண மகள் நம்மத்தியிலே வருவார்” என பாதிரி சொல்ல, மொத்த கூட்டமும் எழுந்து நிற்க இசைக்குழுவினர் பாட ஆரம்பித்தனர். மணப்பெண் வரும் பரபரப்பு வாசலில் தெரிந்தது. சுரேஷ் முழுவதும் திரும்பி மணப்பெண்ணை கண்கொட்டாமல் பார்த்தான். நல்ல சிவப்பாயில்லவிட்டாலும் எடுப்பான நிறம், இடது கையில் மணப்பெண்ணுக்குரிய மலர்கொத்தை பிடித்திருந்தாள். வலக்கையில் சுற்றி மடக்கிய கைக்குட்டை, பியூட்டி பார்லரில் அலங்கரிக்கப்பட்ட முகம், வசீகரிக்கும் கண்கள் என்று சொல்ல முடியாது, ஆனால் பழுதில்லாத கண்கள், இரண்டு கால்களும் சரியாக இருக்க நெற்றியில் இருந்து வழிந்தோடிய மெல்லிய வெள்ளை வலைத்துணி பின்னால் புரள, ரோஸ்கலர் பட்டுப் புடவையில் கம்பீரமாக வந்து கொண்டிருந்தாள் மணப்பெண். சுரேஷுக்குள் ஒரு சின்ன ஏமாற்றமும் குழப்பமும் வந்து வந்து போனது. பீட்டர் மாறி விட்டனோ, அல்லது கதிரைப்போல் வாய் பேசாத…..

“ஜெமிமா ராணியாகிய நீ, உன் அருகிலிருக்கும் சார்லஸ் பீட்டரை உன் வாழ்கைத் துணையாக ஏற்றுக் கொண்டு, இன்பத்திலும், துன்பத்திலும், வாழ்விலும், தாழ்விலும், மரணம் உங்களை பிரிக்கும் வரைக்கும் இவருக்கு மனைவியாயிருக்க, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் முன்னிலையிலும், இங்கு கூடியிருக்கும் அனைவரின் முன்னிலையிலும் வாக்கு கொடுக்கிறாயா?” என்று பாதிரியார் கேட்டதற்கு “வாக்குக் கொடுக்கிறேன்” என்று கணீரென பதில் சொன்ன ஜெமிமாவின் குரலை கேட்டதும் சே இப்படி மாறிப் போயிட்டானே, பேசாம எழுந்து போய்விடலாமா என சுரேஷ் கொதித்துக் கொண்டிருந்தான்.

தோளில் யாரோ தட்டவே, திரும்பினால் கதிர். “சாரிடா, டிராஃபிக்ல மாட்டிட்டோம்” என்று முன்னால் நடக்கும் திருமணத்தை பார்த்துக் கொண்டே சிரித்தான். அவங்க எங்கடா என கிசுகிசுப்பாய் கேட்க, அதோ என கண்ணாலேயே காண்பித்தான். சிநேகமாய் மீனா கைகளை குவித்து வாய் நிறைய புன்னகையுடன் வணக்கம் சொன்னாள். பதிலுக்கு வணக்கம் சொல்லும்போதுதான் கவனித்தான், என்னதான் பட்டு புடவையின் முந்தானையை இழுத்து தோள் வழியே போர்த்த முயற்சித்தாலும், மேடிட்டிருந்த வயிறு விஷேசம் என்று சொன்னது. அவன் பார்வை போன இடத்தை பார்த்த கதிர் சிரிக்க, விஷேசமா என புருவத்தை குவித்து கண்களாலேயே கேட்க, வெட்கத்துடன் கதிர் ஆமாம் என தலையசைத்தான். அவனை தோளோடு தோள் சேர்த்து அணைத்துக் கொண்டு முன்னால் பார்க்க, மணமக்கள் கையெழுத்திட்டுக் கொண்டிருந்தார்கள். மீனா வந்து, சுரேஷின் தோளை தட்டி, குழந்தை எங்கே என சைகையில் கேட்க, வளர்மதி அமர்ந்திருந்த இடத்தை கையால் காட்டினான். மீனா எழுந்து போய் அவள் அருகில் அமர்ந்து குழந்தையை தூக்க முயல, கைகளை தட்டி விட்டு குழந்தையை இறுக பற்றினாள் வளர்மதி. சுரேஷ் ஓடிவந்து மீனா என காதில் சொல்லவும், சிரித்துக் கொண்டே குழந்தையை நீட்டினாள். அவங்க விஷேசமா இருக்காங்க என்று காதில் சொன்னதும் முகம் முழுவதும் சந்தோஷத்துடன் மீனாவின் பக்கம் திரும்பி தடவி தடவி கரங்களை தேடி பற்றினாள்.

“தேவன் இணைத்த இவர்களை எந்த மனிதனும் பிரிக்காதிருப்பானாக, ஆமென்” என கடைசியாக பாதிரியார் ஆசீர்வதித்ததும், மணமக்கள் வெளியே வந்ததும், புல்வெளியில் இட்டிருந்த மேடையில் வரவேற்பு வைபவம் ஆரம்பமானது. எல்லோரும் சிரித்துக் கொண்டே வீடியோவுக்கு போஸ் கொடுத்து விட்டு போய் மிச்சம் ஒரு சிலரே இருந்த நேரத்தில், கடைசியாக பீட்டர் ஜெமிமாவை அழைத்துக் கொண்டு இவர்கள் இருவரிடமும் வந்தான். நண்பர்கள் இருவருக்கும் புது மனைவியை அறிமுகப் படுத்திவிட்டு அவர்களின் மனைவிகளையும் அறிமுகப் படுத்தினான். இருவர் முகத்திலும் இருந்த வெறுப்பை கண்டு கொள்ளாதவனாக, மீனாவிடத்தில் போய் அவளது வயிறை காட்டி, சிரித்துக் கொண்டே கை குலுக்கினான். வெட்கத்துடன் மீனாவும் கைகுலுக்க, பையனா, பொண்ணா என சைகையில் கேட்டு கலாய்த்தான்.

பிறகு நண்பர்கள் இருவரையும் பார்த்து புன்னகைத்து கொஞ்சம் தள்ளி அழைத்து வந்து, “தெரியும் நீங்க ரெண்டு பேரும் என்ன நினைக்கறீங்கன்னு தெரியும், ஒரு குறையும் இல்லாத ஒரு பொண்ணா ஜெமிமா இருக்காளேன்னு பாக்கறீங்களா, நான் நம்ம மூணு பேரும் எடுத்துகிட்ட உறுதி மொழிய மீறிட்டேன்னு நினைக்கறீங்களா”, ஒரு புன்னகை முகத்தில் தவழ சொன்னான் “வளர்மதினால பார்க்க முடியாது, மீனானால பேசவோ கேட்கவோ முடியாது, ஜெமிமானால எல்லாம் முடியும், ஆனா ...................”
பீட்டர் சொல்லச் சொல்ல நண்பர்கள் இருவரும் அவனை கட்டி அணைப்பதைப் பார்த்து ஜெமிமா தலைகுனிய, மீனா புரியாமல் பார்த்தாள். வளர்மதி கையிலிருந்த குழந்தை சிரித்தது.

Monday, June 15, 2009

அப்பா, நான் பாஸாயிட்டம்பா!!!!!

பத்தாவது வகுப்பு ரிசல்ட் வரும் நேரம். மணியண்ணன் டீக்கடையில் மத்தியானம் மூணு மணிக்கெல்லாம் மாலை முரசு பேப்பர் வந்துரும். கண்ணன், நானு, சண்முகம், கனகவல்லி, உமா மகேஸ்வரி எல்லாரும் பத்தாவது பரிட்சை எழுதீட்டு ரிசல்டுக்காக எதிர்பார்த்துகிட்டிருக்கோம். காலையிலிருந்தே மனசுக்குள்ள இன்னதுன்னு சொல்ல முடியாத ஒரு இதுவா இருக்குது. பெரியக்கா காலைலயே சொல்லிட்டாங்க, " எனக்குத் தெரியும். நீ, பாஸாயிருவ, எவ்வளவு மார்க்கு வாங்கறேங்கறது தான் முக்கியம்". சின்னக்கா சொன்னாங்க " மொதல்ல பாஸாகறானான்னு பாரு, ". அப்பா மாத்திரம் சேர்லயே உக்கார்ந்துகிட்டு ஒண்ணுமே சொல்லாம இருக்காரு, மனசுக்குள்ள என்னமோ சரியில்லைங்கற மாதிரி தோணுச்சு, ஆனா ரிசல்ட் ஆர்வத்துல அதையெல்லாம் கண்டுக்கல.

பத்து மணிக்கெல்லாம் மணியண்ணன் டீக்கடைக்கு ஒருதரம் போய் அவருகிட்ட சொல்லிட்டு வந்துட்டேன். " அண்ணா, பேப்பர் வந்தா, கொஞ்சம் எடுத்து வைங்கண்ணா, இன்னைக்கு ரிசல்ட் வருது", அவரும் சிரித்துக்கொண்டே "தெரியும்டா, உங்க பூளவாக்கெல்லாம் இன்னைக்குத் தெரிஞ்சுரும்"ன்னாரு.

ஒரு மணிக்கே மணியண்ணன் கடைக்கு போயிட்டோம். சண்முகம் மாத்திரம் கொஞ்சம் கவலைப்பட்ட மாதிரி இருந்தது. நானும் கண்ணனும் கவலையே இல்லாம இருந்தோம். இதா வருது, அதா வருதுன்னு, மூணரை மணிக்கு வர்ற பழனியப்பா பஸ்ஸில தான் பேப்பர்கட்டு வந்துது. பஸ் தூரத்துல வரும் போதே, நாங்க மூணு பேரும் ரோட்டை தாண்டி போய் நின்னுட்டோம். பஸ் வந்ததும், டிரைவர் அண்ணே பேப்பர் கட்ட எங்ககிட்ட குடுங்கன்னு பஸ்ஸை சுத்திவந்து, டிரைவரோட பக்கத்துல நின்னு கேட்டோம். டிரைவர் அங்கிருந்தே மணி அண்ணனை பார்த்தாரு, மணி அண்ணனும் கை காமிக்க, டிரைவர் பேப்பர் கட்ட குடுத்தாரு. காக்கி கலர்ல ஒரு கவர் பேப்பர் சுத்தி அதுக்கும் மேல ஒரு டொயின் கவுறு கட்டி, மேல மாலை முரசுன்னு எழுதுன ஒரு வெள்ளைப் பேப்பர் ஒட்டி, அதுல மணி டீ ஸ்டால்னு கையில எழுதியிருக்கற அந்த கட்ட வாங்குனப்ப, லேசா மனசுக்குள்ள ஒரு பயமும் வந்துச்சு.

பேப்பர் கட்ட கீழ வெக்கறதுக்கு முன்னாலயே சண்முகம் அதை கட்டியிருக்கற டொயின் கயிற இழுத்து அத்தற பாத்தான், மணியண்ணன் "பேப்பர கிழிச்சராதீங்கடா"ன்னு சொல்லிகிட்டு, அந்த கட்டிலிருந்த முடிச்ச நிதானமா அவுத்து அந்தக் டொயின் கவுத்த தினமும் சேத்தி ஒரு பந்து மாதிரி சுத்தி வெச்சிருப்பாரு, அதுல சுத்திகிட்டாரு. அப்புறமா ஒரே ஒரு பேப்பரை எடுத்து எங்க கிட்ட குடுத்து, "பேப்பர் கிழியாம பாக்கணும்"னு குடுத்தாரு. எல்லாருக்கும் அவசரம், டேய், மூணாவது பக்கத்துல பாருடா, இல்லடா நம்மளது அஞ்சாவது பக்கத்துல இருக்குண்டா. ஒரு வழியா நம்பரக் கண்டு பிடிச்சு, நம்ம நம்பரு இருக்குதுன்னு தெரிஞ்ச உடனே வந்த சந்தோஷம் இருக்குது பாருங்க, உடனே டேய், கண்ணா உன்னோடது சண்முகத்துது, எல்லாம் இருக்குதுடா,.கனகாவுதையும், உமாவுதையும் பார்த்து இருக்குதுன்னு சொன்னவுடனே, அப்படியே வானத்துல நடக்கற மாதிரி ஒரு நெனப்பு. நம்மூர்ல பத்தாவது எழுதுனவுங்க அத்தனை பேரும் பாஸுடான்னு கத்தீட்டு, மணியண்ணங்கிட்ட "இதைக்கொண்டு போய் எங்க அப்பாகிட்ட காமிச்சுட்டு வந்தர்றண்ணா"ன்னு மூணு பேரும் ஒண்ணா கேக்க, அவரும் சிரிச்சுகிட்டே, "சரி, சரி, கசங்காம கொண்டு வாங்கன்னு சொன்னாரு, உடனே புல்லட் வேகத்துல பேப்பர தூக்கிகிட்டு ஓடுனோம்."

வீட்டுல வாசப்படிய ஒரே தாவல்ல தாவி அப்பாகிட்ட " , நான் பாஸாயிட்டம்பா"ன்னு பெருமையா பேப்பரை குடுத்தா, அவுரு அந்த மரக்கலர் பிரேம் போட்ட கண்ணாடி வழியா தீர்க்கமா என்னை ஒரு பார்வை பாத்துட்டு, "அப்பிடியா, சரி" ன்னு மாத்திரம் சொன்னாரு. சப்புனு ஆயிருச்சு எனக்கு, அப்பா முதுகையாவது தட்டி குடுத்து, சந்தோஷமா என் நம்பரை பாப்பாருன்னு நெனச்சேன். ஆனா அவுரு இதையும் எதோ ஒரு காலாணாவுக்காகாத விசயத்தை கேக்கற மாதிரி கேட்டதும் எனக்கு என்னமோ போல இருந்துச்சு. அம்மாவுக்கு புரிஞ்சிருக்கும் போல, அவுங்க வந்து என்னை கட்டி புடிச்சுகிட்டு, " பாஸாயிட்டதை சந்தோஷமா சொல்றான், நீங்க என்னமோ எழவு சேதி கேட்ட மாதிரியில்ல மூஞ்சிய வெச்சுக்கறீங்கன்னு" திட்டுனாங்க, அப்பா அம்மாவையும் அதே பார்வை பாத்துட்டு கண்ணை திருப்பிகிட்டாரு. அம்மா முகத்துல ஒரு வினாடி என்னமோ தெரிஞ்சுது, கண்ணுல கூட தண்ணி கட்டுனாப்புல இருந்துது, ஆனா சமாளிச்சுகிட்டு “என் ராசா, எங்க போனாலும் ஜெயிட்டுத்தாண்டா வருவேன்”னு கட்டி புடுச்சுகிட்டாங்க. "இண்ணைக்கு அம்மா வடை சுட்டிருக்கேன் சாப்புடுறா ராசா"ன்னு சமையல் ரூமுக்கு கூட்டிகிட்டு போயிட்டாங்க, அப்பா என்னை ஒரு தரம் திரும்பி பாத்த மாதிரி இருந்திச்சு, பாத்தாரோ என்னவோ.

அதுக்கப்புறம், மார்க் ஷீட் குடுத்தாங்க, எங்கூர்ல அஞ்சு பேர்ல நாந்தான் 432 மார்க் வாங்கி பர்ஷ்ட்டா இருந்தேன். கோயமுத்தூர்ல தான் ஹைஸ்கூலு இருக்குது, இனிமே அங்க தான் பையன பதினொண்ணாப்பு சேர்த்தணும்னு கண்ணனோட அப்பா வந்து எங்க அப்பா கிட்ட பேசிகிட்டிருந்தப்போ, பொன்னையனை என்ன பண்ணப்போறீங்கன்னு கேட்டாரு, அப்பா அவரையும் அதே பார்வை பாத்துட்டு, கொஞ்ச நேரம் யோசிச்சுட்டு, "அவனையும் அங்க தான் சேத்தணும்"னு சொன்னாரு, இதைக் கேட்டதும் மனசு குஷியாயிருச்சு, அய், இனிமே பேண்ட் போட்டுட்டு போலாம் , தினமும் டவுனப் பாக்கலாம்னு என்னென்னமோ நெனப்பு மனசுல.

பழைய நோட்டுல இருந்த எழுதாத பக்கத்தையெல்லாம் கிழிச்சு ஒரு புது நோட்டு பண்ணி, அக்காவை தெச்சு குடுக்க சொல்லி, மணியண்ணங்கிட்டிருந்து பேப்பர்ல சுத்தி வர்ற காக்கி பேப்பர வாங்கிட்டு வந்து, அந்த நோட்டுக்கு அட்டை போட்டு, ஒரு வெள்ளை பேப்பரை லேபிள் மாதிரி கிழிச்சு, அரிசிச் சோறெடுத்து அதுல தடவி நோட்டுல ஒட்டி, அந்த லேபிள்ல பேர் எழுதி, வகுப்பு : XI Standard, அப்டீன்னு இங்கிலீஷுல எழுதி அதை நூறு தரமாவது வாசிச்சு பாத்து மனசுக்குள்ள பெருமை பட்டுகிட்டே பள்ளிக்கூடம் எண்ணைக்குத் திறக்கும்னு காத்திருந்தேன். ஸ்கூல் தெறக்க ரெண்டு நாள் இருக்கும்போது அப்பா கூப்பிட்டாரு, ஒவ்வொரு வருஷமும் ஸ்கூலு தெறக்கறதுக்கு மூணு நாளைக்கு முன்னால அப்பா இப்படித்தான் கூப்புட்டு " போய் சிவாலிங்க செட்டியாரு கடயில சட்டைக்கும் டவுசருக்கும் அளவு குடுத்துட்டு வாடா"ன்னு சொல்லுவாரு, இந்த தரம் நான் ஹைஸ்கூலுக்கு போறனல்லப்பா, எனக்கு பேண்ட்தான் வேணும்னு சொல்லலாம்னு நெனச்சுகிட்டே போனா, அப்பா தன்னோட கையை பாத்துகிட்டே சொன்னாரு " சாயந்திரமா போயி ரத்தினசாமி ஐயாவோட பையனை பாத்துட்டு வா, அவுரு என்னமோ உன்னய பாக்கணும்னு சொன்னாராமா".

ரத்தின சாமி ஐயாவோட மகன் கதிர்வேல் எங்கூர்ல இருந்த சிமெண்ட் கம்பெனில இஞ்ஜினீயரா இருக்கறாரு. ஜாவா பைக்குல தான் போவாரு வருவாரு, நல்ல அண்ணன், எப்ப பாத்தாலும் என்னப்பா நல்லா படிக்கறயான்னு கேப்பாரு, நாமுளும் ஒரு காலத்துல இன்ஞ்ஜினியராகி இந்த மாதிரி பைக்குல போகணும்னு நெறயதடவ நெனச்சிருக்கேன். ஆனா எதுக்கு அவுரப் போயி பாக்கச் சொல்றாருன்னு புரியல. ஆனா அப்பா கிட்ட எதுக்குப்பான்னு கேக்கற தைரியம் வர்ல, அந்த மாதிரி அப்பாகிட்ட எதிர் கேள்வி கேட்டு வழக்கமும் இல்ல, இதை எங்கிட்ட சொல்லும்போது அப்பாவோட குரல்ல வழக்கமா இருக்குற கம்பீரமும் கண்டிப்பும் இல்ல. என்னமோ வித்தியாசமா நடக்குதுன்னு தோணுது.

அப்புறமா கதிர்வேல் அண்ணனை பாத்தது, அவுரு என்னை சிமெண்ட் கம்பெனில வேலைக்கு வரச்சொன்னது, மத்திய பிரதேசத்துக்கு என்னை ட்ரையினிங்க்கு அனுப்பறேன்னு சொன்னதெல்லாம் என்னமோ ஒரு ஏராப்பிளான் போற மாதிரி வேகமா நடந்து முடிஞ்சு போச்சு, மத்தியப் பிரதேசத்துக்கு போறதுக்கு கோயமுத்தூர்ல இருந்து ரயிலேறணுமாம். ரயில்வே டேசனுக்கு வந்தாச்சு, அப்பா இப்பவும் எங்கூட சரியா முகங்குடுத்து பேச மாட்டேங்கறாரு, அம்மாவுக்கும் அக்காக்களுக்கும் எதோ புரிஞ்ச மாதிரி இருக்குது, அவுங்க நொடிக்கொரு தரம் என்னை மாத்தி மாத்தி ஆளாளுக்கு கட்டிப்புடிச்சுகிட்டு புத்தி சொல்றாங்க, அழுகறாங்க, எதுக்கு அழுகறாங்கன்னு தெரியல, கடைசியா ரயிலுக்கு விசில் ஊதுனதுக்கப்புறம் அப்பா என்கையில ஒரு பதினைஞ்சு ரூவா குடுத்துட்டு எங்கையப் புடுச்சுகிட்டு, "நீ நிறைய படிப்பயப்பா, எங்க போனாலும் நல்லா இருப்பியப்பா, பத்திரமா பாத்து போயிட்டு கடுதாசி போடுப்பா"ன்னு சொன்னாரு, ரயிலு நகந்தப்ப அப்பாவை பாத்தேன், தோள்ல கெடந்த துண்ட எடுத்து கண்ண தொடச்ச மாதிரி தெரிஞ்சுது. அக்காக்களும் அம்மாவும் முந்தானைய எடுத்து கண்ணை தொடச்சுகிட்டாங்க,பதினொண்ணாப்பு கனவெல்லாம் அதோட போயிருச்சு.

ட்ரெயினிங்கு முடிஞ்சு, சிமெண்ட் கம்பெனில வெல்டிங் வேலைக்கு வந்து, மாசாமாசம் அப்பாவுக்கு தவறாம சம்பளப் பணத்தை அனுப்புனேன், நான் வேலைக்கு வந்து ரெண்டு வருஷத்துல மொத அக்காவுக்கு கல்யாணம் நடந்துச்சு, அக்காவை கட்னூட்டுக்கு அனுப்பும் போது அப்பா கால்ல விழுந்து அழுதவ, என்ன கட்டி பிடுச்சுகிட்டு ரொம்ப நேரம் அழுதா, எனக்கும் அழுகையா வந்துச்சு, அப்புறமா மூணு வருஷங் கழிச்சு சின்னக்காவுக்கு கல்யாணம் நடந்துச்சு, அவள அனுப்பும்போதும் அதே மாதிரி கட்டிப்புடிச்சுட்டு அழுதா, அவ என்னைக் கட்டிப்புடுச்சுட்டு அழுகறதப் பாத்து எங்கப்பாவும் துண்டெடுத்து கண்ணை தொடச்சுகிட்டாரு.

அடுத்த வருஷம், கூட வேல செய்யற மகேஷ் " டேய், அஞ்சு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் ஆயிட்டா, அப்புறமா டவுனுக்கு போய், காலேஜுல டிப்ளமா படிக்கலாம்டா"ன்னு சொன்னான். அதுக்காக அலஞ்சு, எல்லா பார்ம்மும் குடுத்து, முதல் ஷிப்ட்டுல வேலைக்கு போய், தூங்கியும் தூங்காமலும், சாயந்திர நேரத்துல காலேஜுக்கு போய் டிப்ளமா மூணு வருஷம் கஷ்டப்பட்டு படிச்சாச்சு, இதா அந்த ரிசல்டும் வந்திருச்சு, நானு 73 பர்செண்ட் மார்க் வாங்கி பாஸாயிட்டேன், கோயமுத்தூர்ல டவுன்ல இருந்து ரிசல்ட பாத்துட்டு வரும்போது, நெல்லை லாலா ஸ்வீட் கடையில ஒரு கிலோ ஸ்வீட் வாங்கிட்டு மொத மொதல்ல அப்பாவுக்குத்தான் குடுக்கணும்னு ஆசையா வந்து ஸ்வீட்ட குடுத்தேன். அவுரு அப்பவும் அதே சேர்ல உக்காந்து அதே மரக்கலர் பிரேம்போட்ட கண்ணாடி போட்டுகிட்டு புத்தகம் படிச்சுகிட்டு இருந்தாரு.

அப்பா நான் பாஸாயிட்டம்பான்னு ஸ்வீட் பாக்கெட்ட தெறந்து அப்பா முன்னால நீட்டுனேன். என்கையிலெல்லாம் அஞ்சு வருஷமா வெல்டிங் பண்றப்ப பட்ட தீக்காயத்தோட தளும்பு. அப்பா ஸ்வீட்டைப் பாத்தாரு, அப்புறம் என்னைய அன்னைக்குப் பாத்த அதே பார்வை பாத்தாரு, கொஞ்சம் நேரம் பாத்துட்டு, கண்ணுல தண்ணி வர லேசா விசும்பிகிட்டே முகத்தை திருப்பிகிட்டாரு. என்னன்னே புரியல. மறுபடியும் சொன்னேன் " அப்பா, நான் பாஸாயிட்டம்பா". அவுரு அழுகைய நிறுத்தல.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.

Monday, April 13, 2009

நானும் அதத்தான் சொன்னேன்.

முதல்ல பாலாஜி தான் ஆரம்பித்தான். " மச்சி, நேத்து சேகர் இந்த நம்பர் குடுத்தாண்டா, நம்பகமான பார்ட்டியாம், செம கட்டயாம். ஒரு பிரச்சனையுமில்லைண்ணு சொன்னாண்டா".

குடித்துக் கொண்டிருந்த பியர் கிளாசை கீழே வைத்துவிட்டு பிரசன்னா கேட்டான் " அவன் போயிட்டு வந்தானான்னு விசாரிச்சயா?"

"ஆமாண்டா, அவன் அப்படித்தான் சொன்னான்".

ஒரு இனம்புரியா சங்கடத்துடன் பீட்டர் " டேய், இதெல்லாம் நமக்கு வேண்டாண்டா, கடைசியில கழுத்தறுத்துறுவாளுகடா, எனக்கென்னமோ இது சரின்னு படல"

"டேய், இவன் எப்பவுமே இப்படித்தாண்டா, எதுக்குடுத்தாலும் நெகட்டிவ்வாவே பேசிட்டிருப்பான். நாம என்னடா உடனே சரின்னு சொல்லிரப் போறமா, போனைப் போட்டுப் பாப்பமே, என்னதான் சொல்றான்னு" என்று சொல்லியபடியே பாலாஜி செல்போன் எடுத்து நம்பர் அழுத்தப் போனான்.

அவன் கையைப்பிடித்து தடுத்த பிரசன்னா " அறிவிருக்காடா உனக்கு, இந்த மேட்டரையெல்லாம் செல்லுலயா பேசுவாங்க, ஒரு ரூபா போன் எதுக்குடா இருக்கு?"

அதுவும் சரிதான் என்பதுபோல் மூவரும், பியரை உறிஞ்ச ஆரம்பித்தார்கள். முடிந்ததும், பில் செட்டில் பண்ணிவிட்டு, வெளியே வந்து அவனவன் பைக்கை எடுக்கப் போனபோது, சல்யூட் அடித்த செக்யூரிட்டிக்கு ஒரு ஐந்து ரூபாய் கொடுத்து விட்டு, " இங்க ஒரு ருபா போன் எங்க இருக்கு?" என்றான் பிரசன்னா. கையில செல்போன் வெச்சுகிட்டு ஒரு ரூபா போனா என விநோதமாக பார்த்த செக்யூரிட்டியும் வாங்கிய ஐந்து ரூபாய்க்கு விசுவாசமாக, "அதோ அந்த பொட்டிக்கடையில இருக்கு சார்" என்றார்.

"மச்சி, பைக் இங்கயே இருக்கட்டும், பேசிட்டு வந்துடலாம்" என்றவுடன் பாலாஜியும், பிரசன்னாவும் முன்னால் நடக்க வேண்டா வெறுப்பாய் பின்னால் பீட்டர் நடந்தான். அதைப் பார்த்து சூடான பாலாஜி
" டேய், மச்சி, உனக்கு இதுல விருப்பமில்லைனா நீ முதல்லயே கழண்டுக்க, சும்மா மூஞ்சிய தூக்கி வெச்சுட்டு வெறுப்பேத்தாத"

"டேய், ஏண்டா மச்சான் டென்ஷன் ஆகற, அவன் அப்படித்தான் விடு, இப்ப அவகிட்ட என்ன, எப்படி பேசப் போறேன்னு மட்டும் யோசி"

"என்னது, நாஆஆன் பேசப் போறேனாஆஆஅ"

"ஆமாம், நீ தாண்டா, இதெல்லாம் நல்லா செய்வே"

" ஆமாண்டா, இதுல எனக்கு பத்து வருஷ எக்ஸ்பீரியன்ஸூ இருக்கற மாதிரியல்ல சொல்ற"

" சரிடா, மச்சி பேசுடா"

அதற்குள் பெட்டிக்கடை வந்துவிடவே, "சார், ஒரு ரூபா காயின் இருக்குதா?,

பெட்டிக்கடைக்காரரும் "எத்தனை வேணும் சார்?"

"ஒரு அஞ்சு குடுங்க" என ஐந்து ரூபாயை நீட்டி, சில்லரை வாங்கி செல்போனில் நம்பர் பார்த்து டயல் செய்தவனை பெட்டிக்கடைக்காரரும் வினோதமாகத் தான் பார்த்தார்.

"ஹலோ",

"ஹலோ, சொல்லுங்க" குரலைக் கேட்டதும் பாலாஜிக்கு உடலில் ஒரு இனம் புரியா கிளர்ச்சியும் நடுக்கமும்.

"என் பிரண்டுதான் இந்த நம்பரைக் குடுத்தான். அ...அது...... அது வந்துங்க"

"சரி, எப்ப வர்றீங்க?" இதை சற்றும் எதிர்பாராததால் நிலை குலைந்து போய், ரிசீவரின் வாயைப் பொத்திக் கொண்டு " டேய், எப்ப வர்றீங்கன்னு கேக்கறாடா" என கிசுகிசுத்தான். அவனும் இதை எதிர்பார்க்காததால், ஒரு அரை விநாடி யோசித்து விட்டு, "நாளைக்குன்னு சொல்லு",

"அ, ஹ, ஹ, ஹலோ, நாளைக்கு வ்ர்றோம்"

"வர்றோம்னா, எவ்வளவு பேரு"

"மூணு பேரு" என்றவுடன், பீட்டர் சைகையில் நான் இல்லை என்க, அவனை பார்வையாலேயே அடக்கிய பிரசன்னா, "இரு, அவன் பேசட்டும்".

அங்கு மறு முனையிலிருந்து "மூணு பேரா, ஓ.கே, எத்தனை மணிக்கு"

"ஈவ்னிங் ஏழு மணிக்கு வர்றோம்"

"ஓ.கே, அப்ப அப்பாயிண்ட்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணீரட்டா"

"ஓ.கே. ஓ.கே"

" நாளைக்கு ஈவ்னிங் ஒரு அஞ்சு மணிக்கு கால் பண்ணுங்க"

"எதுக்குங்க?"

"மத்த விஷயத்தையெல்லாம் நாளைக்கு நீங்க கால் பண்ணும்போது சொல்றேன் டார்லிங்"

"ஓ,கே"

"ஓ,கே, பைய்ய்ய், சீ, யு டுமாரோ டார்லிங்"

போனை வைத்ததுமே எதோ ஒரு சாதனை நிகழ்த்தியது போல ஒரு மதப்பில்"சார், ஒரு கிங்ஸ் குடுங்க" என்று வாங்கி பற்ற வைத்தவனை, மற்ற இருவரும் ஆவலுடன் பார்த்தனர். புகையை உள்ளுக்கிழுத்தவாறே, பெட்டிக்கடையை விட்டு சற்று தள்ளி வந்து, " மச்சி, நான் சொன்னனில்லையாடா, இவ மத்தவுளுக மாதிரி இல்லடா, என்ன போல்டா பேசறா தெரியுமா, எடுத்த எடுப்புலயே எப்ப வர்றேன்னு கேக்கறாள்னா அவ எவ்வளவு ஓப்பன் மைண்ட்டடா இருக்காள்னு பாத்துக்கோயேன்"

"ம், சரி, இப்ப என்ன பண்றது?"

"என்ன பண்றதா, ஒரு கையால பூமியை சீக்கிரமா சுத்திவுட்டு நாளைக்கு அஞ்சு மணி ஆக்கிடு"

"கடிக்காதடா, என்ன ரேட்டு, எங்க வரணும்னு கேட்டுருக்கலாம்ல"

"ஆமாடா, இப்ப சொல்லு இதெல்லாம், அங்க ரிசீவரோட வாய பொத்திகினு கேட்டப்ப எல்லாம் பொத்திகினு இருந்தீங்க, சரி, சரி, விடு, அதான் நாளைக்கு கூப்படச் சொல்லீருக்காள்ல, அப்ப பேசிக்குவோம்"

"டேய், இவன் ஏண்டா, மந்திரிச்சு வுட்டவன மாதிரி மூஞ்சிய வெச்சுருக்கறான், பீட்டர் மச்சான், மறுபடியும் சொல்றேன், வேணான்னா நின்னுக்கோடா"

"அதில்ல, மச்சான், இதெல்லாம் தப்பில்லையா, கல்யாணத்துக்கு முன்னால இதெல்லாம்........"

"ஐயா, பாதிரியாரே, பைபிளை எடுத்துட்டு அப்படி ஓரமா போயிருங்களேன், எங்க வழியில ஏன் வர்றிங்க"

"டேய், விடுங்கடா, நாளைக்கு என்ன பண்ணப்போறோம்கறத யோசிங்கடா"

"நாளைக்கா, மச்சி நாளைக்குத்தான்...!!!! வேணாண்டா எனக்கு ஒரே வெக்கமா இருக்குது"

ஹெல்மெட்டை மாட்டிவிட்டு " பை டா" என்று ஹெல்மெட்டின் கண்ணாடிக்குள்ளேயே சொல்லிக்கொண்டு, கண்ணாடியை தூக்கிவிட்டு "மச்சான் பீட்டரு, கடவுள் கிட்ட இதெல்லாம் ஒளிவு மறைவில்லாம நாளைக்கு சொல்லீட்டு வா, ஏன்னா அடுத்த நாள் போய் மன்னிப்பு கேட்கணும் பாரு" ன்னவனை முறைத்தபடியே பீட்டர் வண்டியை கிளப்பினான்.

நாளைக்கு,,,,.....,,,,

காலையிலிருந்தே மூவருக்கும் ஒரு இனம் புரியா பரபரப்பு, மூணு மணிக்கே பிரசன்னா சொன்னான், " மச்சி, இப்பவே பேசலாண்டா"

"அடங்குடா, அதான் அவ அஞ்சு மணிக்குனு சொன்னாள்ல"

அந்த அஞ்சு மணிக்கு, இன்னொரு பெட்டிக்கடையிலிருந்து,

"ஹலோ"

தேனொழுகும் குரலில்"ஹலோ, சொல்லுங்க"

படபடப்புடன், மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு பாலாஜி "நாந்தாங்க, நேத்து பேசுனனே, நீங்க அஞ்சு மணிக்கு பேசச் சொன்னீங்க"

"ஓ, அந்த மூணு பேரு குரூப்பா?"

"ஆமா"

"உங்களுக்கு ஒரு பிரண்டு நம்பர் குடுத்தார்னு சொன்னீங்களே, அவர் எல்லா டீடைலும் சொன்னாரா?"

"இல்லீங்களே, போன் பண்ணி பேச சொன்னாரு, மத்த விஷயத்தையெல்லாம் உங்க கிட்ட பேசிக்க சொன்னாரு"

"அவர் பேர் என்ன சொன்னீங்க?"

"சேகர்"

""சரி, இப்ப எங்க இருக்கீங்க?"

"நான் இப்ப நுங்கம்பாக்கத்திலிருந்து பேசுறேன், இன்கம் டேக்ஸ் ஆபீசுக்கு பக்கத்துல இருக்கேன்"

"சரி, நான் சொல்றத கவனமா கேட்டுக்குங்க, நான் செலக்டட் கஸ்டமருக்குத்தான் சர்வீஸ் பண்றேன். நீங்க என்ன ஐ.டி.யா?

"இல்லீங்க, வேற ஒரு எம்.என்.சி" (மனதுக்குள் இதெல்லாம் அவசியமா)

"சரி, நான் சொல்ற இடத்துல பணத்தோட வந்து நில்லுங்க."

"................................................."

"என்ன சத்தத்தையே காணோம், ஏமாத்திருவனோன்னு பயமா, அப்படி நம்பிக்கை இல்லாம இருந்தா வேண்டாம்"

"அப்படி இல்லீங்க, அது ..... வந்து... எத்தனைன்னு சொல்லவே இல்லியே"

"பத்தாயிரம்"

"பத்தா, டூ மச்"

"நான் வந்து பேரம் பேசற ரோட் சைட் பார்ட்டி இல்லை, தேவையில்லன்னா போன கட் பண்ணுங்க"

"அதில்லைங்க, வந்து..... அது, ....ஒரு செகண்ட் ஹோல்ட் பண்ணுங்க"

ரிசீவரின் வாயை பொத்திக்கொண்டு, "மச்சி, பத்து கேக்கறாடா" பீட்டரின் வாய் பிளந்த படியே நின்று போக, பிரசன்னா ஒரு முடிவோடு சொன்னான், "சரி எங்க கொண்டு வர்றதுன்னு கேளு"

"சரி நாங்க வந்து பணத்தை குடுக்கறோம்"

"ஹா, ஹா, ஹா, பணத்தை நான் வாங்கறது இல்லை, எங்க மேனேஜர் வருவாரு அவுரு கிட்ட குடுங்க"

"அதில்லை, பணத்தை நாங்க உங்க இடத்துக்கு கொண்டு வந்து குடுத்தற்ரோம்"

"நம்பிக்கையில்லையா, அப்ப சரி, வெச்சுடறேன்.

" அதில்லைங்க, எப்படி இருந்தாலும் உங்க கிட்டதான வரப்போறோம், அங்கயே குடுத்தரலாம்னுட்டுத்தான்"

"சிஸ்டம் அப்படி இல்லைங்க, மேனேஜர் தான் பணத்தை வாங்குவாரு"

"சரிங்க"

"பணத்தோட நுங்கம்பாக்கம் பார்க் ஹோட்டலுக்கு பின்னால இருக்கற பார்சன் காம்ப்ளெக்ஸ்க்கு வந்துட்டு கால் பண்ணுங்க, பைய்ய்ய்"

அடுத்த பத்து நிமிடத்தில்,

"ஹலோ, பணத்தோட வந்துட்டங்க"

"சரி, காம்ப்ளெக்சுக்கு பின்னால பவித்ரானு ஒரு ஹோட்டல் இருக்கும். அங்க வெயிட் பண்ணுங்க ஒரு ஃபாஸ்ட் டிராக் கால் டேக்சி வரும், அந்த டிரைவர் கிட்ட பணத்த குடுத்துருங்க, பணம் அவர் கைக்கு போனதும் நான் கூப்பிடறேன்"

"ஹலோ, அவுரு தான் உங்க ஆளுன்னு நாங்க எப்படி நம்புறது?"

"பரவாயில்லையே, ரொம்ப உஷாரா இருக்கீங்க, கண்ணா, இந்த தொழில்ல நம்பிக்கை தான் முக்கியம். இருந்தாலும் உனக்கு ஒரு க்ளு குடுக்கறேன், அந்த டிரைவர் கிட்ட "டால்ஃபினுக்கு மீசை முளைச்சுருச்சான்னு கேளுங்க, அவரு கடல் தண்ணி இன்னும் வத்தலைன்னு" சொல்வாரு,அவுரு பதில் சொன்னா மாத்திரம் குடுங்க சரியா"

"சரி, அவர வரச் சொல்லுங்க "

பீட்டர் கலவரத்துடன் " மச்சி போதுண்டா, இதோட நிறுத்திக்கலாண்டா" என்றதும், அவனை கையெடுத்துக்கும்பிட்டு " பாதர், நீங்க சர்ச்சுக்கு போங்க பாதர்" என்று சொல்லிவிட்டு ஒரு கிங்ஸ் வாங்கி பாலாஜி பற்ற வைத்தான், மூவருக்கும் மனதுக்குள் ஒரு கிளுகிளுப்பாக இருந்தாலும் பயமாகவும் இருந்தது. யாரும் யாருடனும் பேசவில்லை, சிகரெட் முடிந்ததும் பாலாஜி அதை கீழே போட்டு மிதிக்கும் பொழுது அந்த பாஸ்ட் டிராக் எட்டிப் பார்த்...., பாலாஜி கேள்வி கேட்...... டிரைவர் பதில் சொல்......., பணம் கை மாற.............கார் கடந்து சென்றது.

"டேய், என்னடா, இன்னும் போனையே காணோம்", பீட்டர் கேட்க, அவனை கொலைவெறியோடு பார்த்த பாலாஜியின் செல் துடித்தது.

"ஹலோ"

"ஹலோ, என்ன கண்ணா, ரொம்ப நேரமா வெயிட் பண்ண வெச்சுட்டனா, சாரிமா, இந்த ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் இந்த தொழில்ல அவசியம்ப்பா, சரி, நான் சொல்றத கவனமா கேளு, எனக்கு கோல்ட் ஃப்ளேக் கிங்ஸ்தான் பிடிக்கும், ஒரு பாக்கெட் எனக்குனு வாங்கிட்டு வந்துரு"

"எங்க வரணும்?"

"கே.கே. நகர் தெரியுமில்ல, அங்க பாண்டிச்சேரி ஹவுஸ்னு ஒரு பில்டிங் இருக்கும் அதுக்கு எக்ஸாட்டா பின்னால ராஜேஷ்வரி அபார்ட்மெண்டுனு ஒரு அபார்ட்மெண்ட் இருக்கும், அதுல ஹவுஸ் நம்பர் 27, அதுல தான் இந்த ராணி அந்த ராஜாவுக்காக வெயிட் ப்ண்றேன், சீக்கிரம் வாங்கடா என் ராஜாக்களா"

"அங்க வாட்ச்மேன் தொந்தரவு எதாவது?????"

"ஒண்ணும் கவலைப்படாத, அங்க யாரும் இருக்க மாட்டாங்க, நீங்க தாராளமா வரலாம், இது டீசண்டான இடம் கண்ணா, யாரும் இருக்க மாட்டாங்க"

"சரி இன்னும் ஹாஃபனவர்ல அங்க இருப்போம்"

"சீ யூ, உம்ம்ம்ம்மாஆஆஆ"

அந்த உம்மாவில் அதிர்ச்சியடைந்தாலும், ஆவல் மிகுதியில் "மச்சி ரெண்டு பாக்கெட் கிங்ஸ் வாங்கிக்கோடா" என்று சொல்லி விட்டு, பைக்கை நோக்கி நடந்தான் பாலாஜி.

கே.கே. நகர், பாண்டிச்சேரி ஹவுஸ், ராஜலட்சுமி அபார்ட்மெண்ட், வாட்ச்மேன்.

"சார், யாருங்க"

"27 - ம் நம்பர் வீட்டுக்கு போகணும்"

வாட்ச்மேன் ஒரு புன்னகையுடன் மூவரையும் ஏற் இறங்க பார்த்துவிட்டு, "நம்மளை எதாவது கவனியுங்க சார்"

ஒரு தாளை கைமாற்றி விட்டு, பதட்டத்துடனும் அவசரத்துடனும் 27ம் வீட்டை அடைந்தால், வீடு பூட்டி இருக்கிறதா, திறந்திருக்கிறதான்னே தெரியாமல் அப்படி கதவிலேயே பதித்த ஒரு பூட்டு,
பாலாஜி கதவை லேசாக இரண்டு முறை தட்டினான், மனதுக்குள் மத்தாப்பு.முகத்தில் ஒரு புன்னகை. மற்ற இருவரும் யாராவது தங்களை கவனிக்கிறார்களா என்று பார்த்தார்கள்.

இரண்டாவது முறை சற்று பலமாக தட்டினான், முகத்தில் கலவரம், இன்னும் பலமாக தட்டி, அப்புறம் பலபலபலமாக தட்டி, முகத்தில் கொலைவெறியோடு, ஃபோனை எடுத்து "ஹலோ, என்ன விளையாடறீங்களா, 27 ம் நம்பர் வீட்டுல யாரும் இல்லையே"

" கூல் டவுன் கண்ணா, நானும் அதத்தான சொன்னேன் 27ம் நம்பர் வீட்டுக்கு வாங்க அங்க யாரும் இருக்க மாட்டாங்கன்னு, அங்க யாரும் இல்லையா, பெஸ்ட் ஆப் லக் நெக்ஸ்ட் டைம்"

"ஹலோ, ஹலோ, ஹலோ"

இப்பொழுது பீட்டரின் கண்ணில் கொலைவெறி.