Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Monday, January 3, 2011

கிடா வெட்டி கிறிஸ்மஸு


அது என்னமோ தெரியல, எல்லாருக்கும் கிறிஸ்மஸுன்னாலே கேக் ஞாபகம்தான் வருது. எப்படி இஸ்லாமியர்களுக்கு மட்டுமே பிரியாணி செய்யத் தெரியும்னு ஒரு மூட நம்பிக்கை இருக்குதோ, அது மாதிரி கிறிஸ்தவங்க எல்லாருமே கேக் செஞ்சுதான் கிறிஸ்மஸ் கொண்டாடுவாங்கன்னு ஒரு அதி மூட நம்பிக்கை மக்கள் மனசுல இருக்குது. (தெரிந்தோ, தெரியாமலோ, புரிந்தோ புரியாமலோ, அறிந்தோ அறியாமலோ, நான் கொஞ்சம் கூட விரும்பாத பட்சத்திலும், எந்தையும் தாயும் எனக்கீந்த பெயர் காரணத்தினால் கிறிஸ்தவன் என்ற முத்திரை என்மீது குத்தப் பட்டிருப்பது ஒரு தவிர்க்க முடியாத வேதனையான விஷயமே). கிறிஸ்மஸ் வந்தாலும் வந்துச்சு, கேக் எங்க, கேக் எங்கன்னு எல்லாரும் பிச்சு குதறி எடுத்துட்டாங்க. ஆனா, நாங்க கேக் வெட்டற கிறிஸ்தவங்க இல்லை, கிடா வெட்டற கிறிஸ்தவங்கன்னு எத்தனை பேருக்கு சொல்லறது.....

இதுல இன்னொரு கொடுமை என்னான்னா, நம்ம தமிழ் கூறும் நல்லுலகத்தில், பண்டிகைன்னு ஒன்னு வந்துட்டா, பக்கத்து வீட்டுக்கு எல்லாம் பலகாரம் குடுக்கணுமாம். தீபாவளிக்கு, பொங்கலுக்கு எல்லாம் பக்கத்து வீடுகளில் இருந்து பலகாரம் வந்துருச்சு, நம்ம கிறிஸ்மஸுக்கு குடுக்கலைன்னா அவுங்க தப்பா நினைச்சுக்குவாங்க என்ற ஒரு நன்றி கலந்த கடமை உணர்ச்சி வேற நம்ம சகதர்மிணிக்கு பொங்கி வழிய, பலகாரம் போடற வேலைல ஏறக் குறைய எல்லா வேலையும் நம்ம தலைல விழுந்து தொலைத்தது.

இந்த வருடம் கிறிஸ்மஸுக்கு முறுக்கு சுடலாம் என்ற விபரீத ஆசை எங்க மேலிடத்துக்கு முறுக்கிக் கொண்டு வர, வீட்டுல இருக்கற அத்தனை பேரோட வாழ்க்கையும் எத்தனையோ முறுக்குகளை சந்திக்க வேண்டி இருந்தது. முதல்ல அதற்கான பால பாடங்கள் வீட்டில் இருக்கும் அத்தனை பேருக்கும் புகட்டப் பட்டு, அதற்கான ஆயத்தங்கள் எதோ அடுத்த ஏவுகணை ஏவப்போகும் விஞ்ஞானியின் கட்டளைகள் போல புறப்பட்டு வந்தது. யாரங்கே, வீட்டுக்கு வெளியே விறகு அடுப்பு மூட்டுங்கள் என விறகு சுமக்க வைத்தார்கள். முறுக்கு பிழிய தனியே ஒரு ஆசனம், அதை வாணலியில் எடுத்து இடுவதற்கென ஒரு தனி ஆயுதம், அடுப்பில் எரியும் விறகு சரியான முறையில் எரிகிறதா என பார்த்து அதை சரியாய் எரிய வைக்க ஒரு குழந்தை தொழிலாளி, முறுக்கு பிழிவதற்கென ஒரு அடிமை என சகல ஆயத்தங்களுடன் இந்த முறுக்கு பிழியும் படலம் ஆரம்பமாகியது. ஒன்றுக்குள் ஒன்றை நுழைந்து இடையில் இருக்கும் மாவை, அடியில் இருக்கும் அச்சின் வடிவத்தில் வெளிக்கொணர அசுர பலத்தில் அந்த முறுக்கு சுட்டியை அழுத்த வேண்டியதாயிற்று. இப்படி அழுத்தியபின் வெளிவரும் நூலிழை போன்ற மாவுக்கு ஒரு வடிவம் கொடுப்பதில் தான் பிரச்சனையே ஆரம்பமாகியது. முறுக்கு என்ற வஸ்து வட்ட வடிவத்தில் தான் இருக்க வேண்டும் என்பது எந்த நாட்டின் விதியோ தெரியவில்லை. இந்த அடிமை அழுத்திய முறுக்குகளெல்லாம் எம். எஃப். ஹுசேனின் மாடர்ன் ஆர்ட் போன்ற வடிவங்களில் வெளிவர, வட்டமாக சுற்றத் தெரியாத நீயெல்லாம்... ம்ஹூம்.... என்பது போன்ற ஏளனப் பார்வைகளை சகித்துக் கொள்ள வேண்டிய அவலநிலைக்கு அந்த அடிமை தள்ளப்பட்டான். (கடைசியில் அந்த ஏவுகணை விஞ்ஞானியும் பல முறை முயன்றும் முறுக்கை ஒரு முறை கூட வட்டமாக சுற்றவில்லை என்பது வேறு விஷயம்).

இப்படியாய் ஒரு நான்கு மணிநேர ரணகள போராட்டங்களுக்குப் பிறகு, முறுக்கு சுற்றும் படலம் இனிதே (ஹூக்கும்... இதுல இனிதே வேற) நிறைவுக்கு வந்தது. அடுத்தது பலரது வேண்டுகோளுக்கிணங்க, ரசிகப் பெருமக்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெறும் வண்ணமாக கேக் செய்யும் கோக்கு மாக்கான ஐடியா எதாவது மேலிடத்தாருக்கு உதித்து விடுமோ என பயந்து கொண்டிருந்தவனுக்கு, கேக்கை வெளியிலயே வாங்கிடலாம்னு சொன்னவுடனே வயிற்றில் பீர் வார்த்த்து,,,,, சாரி, பால் வார்த்தது மாதிரி இருந்தது.

அடுத்ததாக, கிறிஸ்மஸ் அன்று, பிரியாணி செஞ்சாத்தான் அது கிறிஸ்மஸ் மாதிரி இருக்குமாம். அதனால நல்ல கிடாக் கறியாக வாங்கி வருமாறு அடியேன் பணிக்கப் பட்டேன். இப்ப கறிக்கடைக்குப் போய் இதுல பெண்ணாட்டுக் கறி வேண்டாம், ஆணாட்டுக் கறி தான் வேண்டும் சொன்னால் உடனே என்னை ஆணாதிக்க வாதி என்று சொல்லி விடுவார்களோ என்ற பயம் வேறு தனியாய் வதைத்தது. அங்கு தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல், மற்ற எதுவும் இல்லாமல் தொங்கும் சதைப் பிண்டங்களில், ஆணாடு எது, பெண்ணாடு எது என எப்படி கண்டு பிடிப்பது என்பது ஒரு பெரும் போராட்டமாக இருந்தது. வாசகர்கள் விவகாரமாக எதையும் நினைக்க வேண்டாம், அந்த அங்க அடையாளங்களெல்லாம் முற்றிலும் அழித்தொழிக்கப்பட்டுத்தான் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் காதர் பாயின் கறிக் கடையில் ஆடுகளின் உடல்களை தொங்க விட்டிருப்பார்கள். எது எப்படியோ போகட்டும், வதைக்கப் படுவது எப்பொழுதுமே ஆணாடு தானே என்ற தைரியத்தில் கிடைத்த கறியை வாங்கி வந்தேன். இருந்தாலும், இது கிடாக் கறிதானே என வீட்டில் வீசப்பட்ட கேள்விக்கு பலியாடு போல தலையாட்டி வைத்தேன். ஒரு சில தர பரிசோதனைகளுக்குப் பிறகு அது கிடாக் கறிதான் என மேலிடம் சான்றிதழ் அளித்ததும் மறுபடியும் வயிற்றில் பீர்...., சாரி சாரி.....பால்.

மறுபடியும் பிரியாணி செய்யவும் அதே போன்ற ஏவுகணை ஆயத்தங்கள், சராமாரியான கட்டளைகள், சமையலறையே ஒரு போர்க்களம் போல் கோலம் கொண்டு, வீட்டில் இருக்கும் ஒரே ஒரு குழந்தை தொழிலாளியில் ஆரம்பித்து, இருக்கிற ஒரே ஒரு அடிமை வரை எல்லோருடைய முதுகெலும்பையும் முறித்தெடுத்து, கடைசியில் அந்த பிரியாணி என்ற வஸ்து தயாரானதை நினைத்துப் பார்த்தால், பாவிகளை ரட்சிக்க பூவுலகில் மனிதனாய் அவதரித்த கிறிஸ்துவே, ஒவ்வொரு வருடமும் எங்களை இந்த முறுக்குப் பிழியும் மற்றும் பிரியாணி செய்யும் கொடுமையில் இருந்து ரட்சிக்க இன்னொரு முறை பிறக்க மாட்டாயா என வேண்ட வேண்டும் போல இருந்தது.

Thursday, July 1, 2010

மல்லிகைப் பூவும், குல்ஃபி ஐஸும்

போன ஞயிற்றுக் கிழமை மதியம், லீவு நாளாச்சேன்னு கொஞ்சம் மெதுவா எந்திரிச்சு, மெதுவா சாப்பிட்டு, மத்தியானம் ஒரு குட்டித் தூக்கம் போட்டுட்டு இருந்தப்ப, திடீர்னு போன். நல்ல தூக்கத்துல யாராவது இப்படி போன் போட்டா நமக்கு ஒரு ஃபீலிங்க்ஸ் வரும் பாருங்க, அதே ஃபீலிங்ஸோட போனை எடுத்தேன்.

“ஹலோ, சார், மண்டையப் பிச்சுகிட்டிருக்கேன் சார்”

“ஏன், என்னாச்சு”

“சார், பொம்பளைங்க மல்லிகைப் பூ ஏன் சார் வைக்கறாங்க”

(ஆஹா, இந்தப் பாண்டிய மன்னனுக்கு இப்படி ஒரு சந்தேகமா, இனி நான் எந்த மடத்துக்கு போய், யாருகிட்ட பாட்டு எழுதி வாங்கிட்டு வர்றது??)

“ஏம்பா அது நல்ல வாசமாயிருக்கும், மேலும் கரிய அடர்ந்த நீள கூந்தல் இருக்கறவங்க வெள்ளையான இந்த மல்லிகைப் பூவை அடர்த்தியா கட்டி, கூந்தல்ல வெச்சுகிட்டாங்கன்னா, அது அவங்க கூந்தலுக்கே ஒரு தனி அழகு கூட்டும். அதுக்காகத்தான் வெச்சுக்கறாங்க”

“சார், அது இல்ல சார், வேற என்னவோ காரணம் இருக்குது சார்”

“ஏம்பா, உனக்கு இந்த விபரீத ஆராய்ச்சியெல்லாம்???”

“இல்ல சார், நான் தினமும் சென்னைல பார்க்கறேன், பூக்கார அம்மாவெல்லாம் கூடை கூடையா வெச்சு விக்கறாங்க, அது கொஞ்ச நேரத்துலயே தீர்ந்து போகுதே சார், அப்பிடி தினமும் வாங்கி தலைல வெச்சுட்டா, அதனால என்னதான் உபயோகம்??”

(டேய், இதெல்லாம் கொஞ்சம் ஓவரு)

“சரிப்பா, விடு, பூஜைக்கு வாங்கிட்டு போவாங்களா இருக்கும்”

“சார், அங்க பூ வாங்க வர்றவங்களையெல்லாம் பார்த்தா பூஜைக்கு வாங்கிட்டு போறவங்க மாதிரியா இருக்காங்க??”

“சரி, அப்ப நீயும் ஒரு முழம் வாங்கி வெச்சுட்டு, என்ன மாதிரி இருக்குன்னு சொல்லு”

“ சார் நானென்ன பொட்டப் புள்ளயா, என்ன மாதிரி தனிக் கட்டைங்கெல்லாம் பூ வாங்குனா வேற மாதிரி நெனச்சுக்குவாங்க சார், ஆமா நீங்க இந்த மாதிரி பூவெல்லாம் வாங்கிட்டு போனதில்லையா ??”

(டேய், நீ எங்க வ்ர்றேன்னு தெரியுது, சரி டாபிக்கை மாத்துவோம்)

“அப்புறம், எப்பிடிப்பா இருக்க, வேலையெல்லாம் எப்பிடி பரவால்லையா??”

“சார் அப்புறம், இன்னொண்ணு, ரொம்ப நாளா உங்க கிட்ட ஒண்ணு கேக்கணும்னுட்டு இருந்தேன்”

(டேய், நீ இன்னும் அடங்கலையா)

“இந்த குல்ஃபி ஐஸ் விக்கறவங்க நாள் முழுதும் எங்க இருக்காங்கன்னே தெரியல, ஆனா, ராத்திரி பத்துமணிக்கு மேல கிணிகிணி ன்னு மணி அடிச்சுட்டு விக்கறாங்களே அது ஏன் சார்??”

(டேய், உனக்கு ஏண்டா புத்தி இப்பிடியெல்லாம் வேலை செய்யுது)

“அது ராத்திரி சாப்பாட்டுக்கு அப்புறம் குல்ஃபி ஐஸ் சாப்பிட்டா நல்லா ஜீரணம் ஆகும் அப்பிடீங்கற ஒரு ஐதீகம் எதாவது இருக்கும், ஆமா, சென்னைல ஆராய்ச்சி பண்றதுக்கு எத்தனையோ விஷயம் இருக்கும் போது, நீ ஏண்டா இதையெல்லாம் ஆராய்ச்சி பண்ற??”

“அதில்ல சார், இந்த குல்ஃபி ஐஸுக்கு வேற எதோ பவர் இருக்குதாம்மே??”

(டேய், நான் உனக்கு என்ன துரோகம்டா பண்ணுனேன், தூங்கிட்டிருந்தவனை எழுப்பி ஏண்டா இப்பிடி ஆராய்ச்சி கட்டுரையெல்லாம் படிச்சு காமிக்கறீங்க)

“என்ன பவருப்பா?’

“பாருங்களே, எவனாவது என்னை மாதிரி தனியா திரியறவனுங்க அதை சாப்படறாங்களா, எல்லாம் ராத்திரி சாப்பாடு முடிஞ்சதுக்கப்புறம் காலார ஒரு ரவுண்டு நடந்துட்டு வருவோம்னு நடக்கற ஜோடிங்கதான் சாப்புடுது, அதையும் ராத்திரில ஏன் சாப்படறாங்க??”

(டேய், நல்லதா எதாவது சொல்லீரப் போறேன், இப்பவே தெரிச்சு ஓடிப் போயிரு)

“இல்ல சார், இன்னும் பாத்தீங்கன்னா குல்ஃபி ஐஸ் விக்கறதும் கூட இந்த பஸ்ஸ்டேண்டுல, மார்க்கெட்டுலெல்லாம் விக்க மாட்டேங்கறான், இந்த குடும்பங்க இருக்கற ஏரியாவா பாத்து விக்கறான், இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு என்ன தோணுதுன்னா…….”

“டேய், ங்கொய்யால போனை வெய்டா”

அடச்சே, நிம்மதியா தூங்கிட்டிருந்த மனுஷனை எப்பிடியெல்லாம் வறுத்தெடுக்கறானுகப்பா…..

அப்ப என்னவோ அவனை திட்டீட்டு போனை வெச்சுட்டாலும், ஒரு மூணு நாளா எனக்கும் இந்த சந்தேகம் வந்திடுச்சு, நெஜமாவே மல்லிகைப் பூவுக்கும் குல்ஃபி ஐஸுக்கும் எதாவது பவர் இருக்குதா???

ஹலோ, ஹலோ, அப்பிடி எல்லாம் பார்க்க கூடாது…, நோ, நோ பேட் வேர்ட்ஸ் பிளீஸ்………..

Thursday, June 10, 2010

தங்க மணிக்கு பத்து கேள்விகள்


உங்க கைப்பையில அப்படி என்ன குப்பையைத்தான் வெச்சிருப்பீங்க, அதுல இருக்கற அந்த 32 ஜிப்புகளை எப்ப திறந்தாலும், எது தேவையோ அதைத் தவிர மத்ததெல்லாம் எடுக்கறீங்களே?

ரூபா நோட்டை ரெண்டா மடிச்சு பிடிக்கத் தெரியாதா? அது ஏன் எல்லாத் தங்கமணியும் ஒவ்வொரு நோட்டையும் சுருட்டி உருட்டி 24 மடிப்பு மடிச்சு பிடிக்கறீங்க?

அரைச்ச சட்னில ரெண்டு மொளகாய ஜாஸ்தியா போட்டுட்டு, அவனவன் கண்ணுல தண்ணிவர அவஸ்தைப்பட்டா, “கொஞ்சம் காரமா இருந்தா விரும்பி சாப்பிடுவீங்களேன்னுதான் வெச்சேன்” னு எப்படி மனசாட்சி இல்லாம சொல்ல முடியுது? (ஆனா உண்மையில அளவு தெரியாம போட்டதை எங்க போய்ச் சொல்ல)

பேஸ்கெட்பால் விளையாடு, டிராயிங் கிளாஸ் போ, இன்டர்நெட் பழகு, ஹேரி பாட்டர் படி, பரத நாட்டியம் பழகுன்னு அந்த பச்ச மண்ண இந்தப் பாடு படுத்தறீங்களே, அவ வயசுல நீங்க அ,ஆ,இ, ஈ ஒழுக்கமா எழுத பழகீருப்பீங்களா?

குழந்தைக்கு யூனிஃபார்ம் தான் வாங்கப் போறோம், அப்பவும் எதுக்கு மத்த துணியெல்லாம் பாத்துட்டு அப்புறமா யூனிஃபார்ம் வாங்கறீங்க?

எங்க சொந்தக்காரங்க கிட்ட நாங்க ஃபோன்ல பேசும் போது மட்டுமே ஏன் நீங்க மிக்ஸில மசால் அரைக்கறீங்க?

உங்களுக்கு புடவை வாங்கணும்னா நீங்க ரெண்டு மணி நேரம் வேண்ணாலும் நின்னு வாங்கிக்கங்க, ஆனா நீங்க பாக்கற 237 புடவையையும் நானும் பாக்கணும்னா, இதெல்லாம் அராஜகமாத் தோணலயா?

எங்க வெளீல கெளம்புனாலும் நாங்க கிளம்பி ஒரு கால் மணி நேரம் கழிச்சுதான் நீங்க ரெடியாகணும்கறது ஒரு சடங்காவே வெச்சிருக்கீங்களா? (அந்த கால் மணி நேரத்துல கேஸ் ஆஃப் பண்ணு, சன்னலை சாத்து, சாம்பாரை ஃபிரிட்ஜுல வைன்னு ஒரு 34 வேலைகள லிஸ்ட் போட்டு செய்ய வெக்கறீங்களே அது ஏன்)

பாத்ரூம் ஷெல்ஃபுல போதை வஸ்துக்கள் மாதிரி ஒரு 25 டப்பால கலர் கலரா கடந்த ஒரு நூற்றாண்டா என்னென்னமோ இருக்குதே, இதுல ஒரு ஐட்டத்தையாவது கடந்த மூன்று மாதங்கள்ல ஒருதரமாவது யூஸ் பண்ணீருக்கீங்களா?

எந்த கடை முன்னால காரை நிறுத்த முடியாதோ, கண்டிப்பா அந்த கடைல தான் மளிகை சாமான் நல்லா இருக்கும்னு எப்படி கண்டு பிடிக்கறீங்க?

Tuesday, April 13, 2010

என்னை எல்லாரும் திட்டறாங்க.......



வீட்ல மனுஷன் நிம்மதியா உக்காந்து பேப்பர் படிச்சுட்டிருந்தா, அது அதிகார வர்க்கத்துக்கு பொறுக்காது. அப்பத்தான் கொஞ்சம் கொத்தமல்லி வாங்கிட்டு வா, கோழித்தலை வாங்கிட்டு வான்னு ஒரு 15 கிலோ மீட்டர் தள்ளி இருக்கற கடைல கிடைக்கற பொருளா சொல்லுவாங்க அல்லது இன்னும் நாலு வருஷம் கழிச்சு தேவைப்படும் பொருளை இப்பவே வாங்கிட்டு வரச் சொல்லுவாங்க. ஆனா, அன்னைக்கு இப்படி எதுவுமே ஆணைகள் வரவில்லையே, ஒருவேளை நாம இருக்கறதே மறந்துருச்சோ, எப்படியும் நம்ம இருப்பை காமிச்சுக்கணுமில்லன்னுட்டு அவுங்க பக்கம் திரும்பி, சூடா ஒரு லெமன் டீ குடுன்னு சொன்னேன். (நெசமாவே இப்படித்தான் சொன்னேன், நம்புங்க எசமான், நம்புங்க). கொஞ்ச நேரத்துல லெமன் டீ எந்த ஆரவாரங்களுமில்லாமல், அடக்க ஒடுக்கமாய், அமைதியாய் வந்து டீபாய் மீது அமர்ந்தது.(ஏ யப்பா, டீ, டீபாய் மீது அமர்ந்தது….. என்னா எதுகை மோனைடா சாமி) இது சரியில்லையே, இவ்வளவு அமைதி டேஞ்சராச்சே, சரி அங்கிருந்து ஏவுகணைகள் வந்தா சமாளிச்சுக்கலாம் என நினைத்தவாறே பேப்பரில் மூழ்கியிருப்பதாய் பாவ்லா செய்து கொண்டு, எந்த நேரமும் நிகழப் போகும் அந்த விபத்திற்காய் அமைதி காத்தேன்.

“கொஞ்சம் தள்ளி உக்காருங்க” (அதான கேட்டேன், நாங்க சோபாவுல உக்கார்ந்திருந்தா நீங்க எப்ப சேர்ல உக்கார்ந்திருக்கீங்க)……

கொஞ்சமாக தள்ளி உட்கார்ந்தேன். “இத்தனூண்டு இடத்துல எப்படி உக்கார்றது” என்ற சற்றே உயர்ந்த குரல் கேள்விக்கு, அமைதியாக பதிலளித்தேன்.

“அரசாங்கமே, மகளிருக்கு 33 சதவீதம்தான் இடம் குடுக்குது, ஆனா நான் 50 சதவீதம் குடுத்துருக்கறேன், இதுக்கு மேலயும் வேணும்னு அராஜகம் பண்ணுனா எப்படி” ன்னு ஒரு அறிவு பூர்வமான பதில் கொடுத்தேன். அப்புறம் என்ன ஸ்டார்ட் மீஜிக் தான். ஆனா லெமன் டீ சூப்பர்.

உண்மையை சொன்னா திட்டறாங்க.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

என் நண்பன் ஒருவன் அழிந்து கொண்டிருக்கும் புலிகளைப் பற்றி ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தான். 1411 தான் இருக்காம், அதைப் பாதுகாக்க நாம் என்னென்னவெல்லாம் செய்யணும்னு சொல்லீட்டு, இந்த மின்னஞ்சலை மத்தவங்களுக்கும் அனுப்புன்னு சொல்லீருந்தான்.

நான் அவனுக்கு பதில் அனுப்பினேன், 1410 டைகரைப் பத்தி கவலைப் படுங்கடா, மீதி ஒண்ணைப் பத்தி கவலைப்படாதன்னு சொன்னேன்.

அது என்ன அந்த ஒண்ணுன்னு கேட்டான்.

அந்த ஒரு டைகர்தாண்டா உனக்கு பதில் அனுப்பீட்டிருக்குன்னு சொன்னேன்.

அவனும் திட்டறான்.

Tuesday, March 30, 2010

கொலைகாரர்கள் உருவாவது எப்படி??????


கொசுத்தொல்லை தாங்க முடியாம இருந்த ஒருத்தரு எல்லா வழியிலயும் முயற்சி பண்ணி, மனுஷன் நிம்மதியா தூங்க ஒரு வழி கிடைக்குமான்னு இருந்த சமயத்துல, ஒரு விளம்பரத்தை பார்த்திருக்காரு. கொசுவை கொல்ல சுலப வழி,,,, 100 ரூபாய் அனுப்புங்கள். நாங்கள் உங்கள் வீட்டுக்கு உபகரணங்களையும் மற்றும் செய்முறை விளக்க புத்தகத்தையும் தபாலில் அனுப்புகிறோம். 100 ரூபாய் அனுப்பிவிட்டு, மனுஷன் வெயிட்டிங்ல இருந்திருக்காரு….., அந்த பார்சலும் வந்துச்சு. பிரிச்சுப் பார்த்தா, ஒரு ரெண்டங்குல கனத்துல மரக்கட்டை ஒண்ணு, ஒரு ஆணி, அப்புறம் ஒரு சுத்தியல். மனுஷனுக்கு ஒண்ணும் புரியாம செய்முறை விளக்கப் புத்தகம் எங்கடான்னு தேடுனா, ஒரு வெள்ளைப் பேப்பர்ல கையால் எழுதியிருந்துச்சாம்.

மரக் கட்டையை மேடுபள்ளமில்லாத சம தளத்தில் வைக்கவும்.


உங்களுக்கு வலது புறத்தில் சுத்தியலையும் இடது புறத்தில் ஆணியையும் வைக்கவும்.


ஒரு கொசுவை பிடித்து அந்த மரக் கட்டையின் மீது வைத்து விட்டு, பறந்து விடாமலிருக்க அதன் கால்களை உங்கள் வலது கை விரல்களால் அழுத்திக் கொள்ளவும்.


இப்பொழுது இடது கையால் ஆணியை எடுத்து சரியாக கொசுவின் தலைமீது வைத்து அழுத்திப் பிடித்துக் கொள்ளவும்.


இப்பொழுது மெதுவே உங்கள் வலது கையை கொசுவின் கால்களிலிருந்து விடுவித்து, சுத்தியலை எடுத்து, ஆணியின் மீது மெதுவே ஒரு தட்டு தட்டுங்கள்.


ஆணி கொசுவின் தலையில் ஆழமாக இறங்கி, கொசு இறந்து போயிருக்கும்.


இந்த உபகரணம் ஆபத்தான ரசாயன புகை எழுப்பும் மற்ற உபகரணங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதை இப்பொழுது புரிந்து கொண்டிருப்பீர்கள்.

இந்த உபகரணத்தை கண்டு பிடித்தவனை கணக்கு தீர்க்க ஒரு கொலைகாரன் ரெடி.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

சும்மா தட்டுல போட்டு வெச்சா அதை அப்பிடியே சாப்டறது தானா, எப்படி இருக்கு என்ன ஏதுன்னு ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா?

ம்.., நல்லாருக்கு.

இந்த ஒரு வார்த்தைதானா, இந்த கேரட் அல்வா கிண்டும்போது கொஞ்சம் நெய் ஊத்தலாம்னு நெனச்சு, நெய் டப்பாவைத் திறந்தா முழுசும் காலியாயிருக்கு, அப்பத்தான் புரிஞ்சுது இந்த மாசம் மளிகை லிஸ்ட்ல நெய் வாங்க சொல்லியிருந்தும் நீங்க மறந்துட்டு வந்தது, சரி அப்புறம் வாங்கிக்கலாம்னு நெனச்சு நானும் மறந்துட்டேன். உடனே அடுப்புல இருக்கற கேரட்டை எடுத்து கீழ வெச்சுட்டு, பக்கத்து கடையில போயி கொஞ்சமா நெய் வாங்கிட்டு வந்தேன். ஆனா அதுக்குள்ள சூடான சட்டியில இருந்ததுனால கேரட் கருகிடுச்சோன்னு ஒரு பயம் வந்துருச்சு. அப்பிடி ஏதும் இல்லதான?

ஓஹோ, அதான் கொஞ்சம் தீஞ்ச வாசனை வருதோ?

ஆமா, ஒருத்தி இவ்வளவு கஷ்டப்பட்டு நமக்காக இத செஞ்சு வெச்சுருக்காளே, பேசாம சாப்புடுவோம்னு எப்பவுமே தோணாதே, எதைச் செஞ்சாலும் அதுல இது நொட்டை, அது நொள்ளைன்னு சொல்லலைன்னா, அது வயித்துள்ளயே இறங்காதே, எல்லாம் நான் வாங்கிட்டு வந்த வரம் அப்பிடி, யாரைச்சொல்லி என்ன பண்றது… @#$%^&*!, @#$%%^^&&*

அந்த கல்யாண புரோக்கரை கொல்ல ஒரு கொலைகாரன் ரெடி……

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இப்படியா வழவழன்னு ஆறு பக்கத்துக்கு ஒரு ரிப்போர்ட் போடுவாங்க, “கண்டேன் சீதையை” ங்கற மாதிரி கச்சிதமா, சுருக்கி எழுதி கொண்டு வாப்பா,

ஆறு பக்க ரிப்போர்ட், ரெண்டு பக்கமானவுடன்,

“ஏம்ப்பா, வெச்சா குடுமி, செரச்சா மொட்டைன்னுதான் வேலை செய்வீங்களா, கொஞ்சம் சின்னது பண்ணுன்னா, உடனே எல்லாத்தயும் தூக்கீடுவயா, எதெது வேணுமோ அதெல்லாம் கண்டிப்பா இருக்கணும்பா, ரிப்போர்ட் எவ்வளவு பெருசானாலும் பரவால்ல, ஆரம்பத்துல இருந்து எல்லா டீடெய்லயும் எழுதி கொண்டுவா”

ரெண்டு பக்க ரிப்போர்ட் இப்பொழுது எட்டு பக்கமானவுடன்,

“எனக்கு இருக்கற டென்ஷன்ல, ஏம்ப்பா இப்படி படுத்தறீங்க, உனக்கு ரிப்போர்ட் எழுத சொல்லிக் குடுக்கறதுக்குள்ள எனக்கு நாக்கு தள்ளீரும்னு நெனைக்கறேன். ஆமா, நீ காலைல இருந்து எந்த ரிப்போர்டை கொண்டு வந்து காமிச்சுகிட்டு இருக்கே, நான் இதையவா சொன்னேன். மார்ச்சு மாசம் 30ம் தேதி ஆச்சு, இன்வாயஸ் டீடெய்ல் எல்லாம் இருக்குமே,,,, அதை எடுத்துட்டு………….!!!!!!!#######

இவனை பாஸ் ஆகும்படி புரமோஷன் கொடுத்தவனை கொலை பண்ண ஒரு கொலைகாரன் ரெடி…….



Wednesday, February 24, 2010

திரௌபதி சேலைய யார் இஸ்தா உனக்கு இன்னா??

நம்ம தம்ஸ் அப் தங்கம் ஒரு மீட்டிங் போட்டுனுக்கறாரு, இந்த தம்ஸ் அப் தங்கம் யாருன்னு கேக்கறியா, அப்டி கேளு, இன்னாத்துக்கு சொல்றேண்ணா, ஒரு தலீவரு அப்டீன்னு ஃபார்ம் ஆயிட்டாக்கா, நாளைக்கு வரலாறு எழுத சொல்ல மேட்டரே இல்லண்ணா எப்டி, அதான், கரீக்டா நோட் பண்ணிக்க,

நம்ம தங்கம் அண்ணன் பேரு தங்க ராசு, அண்ணன் ஒரு போர்ல வார் பண்ண சொல்ல, இடது கை பெரு விரலை ஒரு கபோதி கட் பண்ணி வுட்டுட்டான், ஆனா அண்ணன் அவன் தலை முடி முழுசையும் வாயாலயே கடிச்சு துப்பிட்டாருங்கறது தனி கதை. என்னிக்கு அண்ணனுக்கு பெருவிரல் போயிருச்சோ, அன்னீலெருந்து அண்ணன் பேரு தம்ஸ் அப் தங்கம். இப்ப வரலாறு புரிஞ்சுடுச்சா, கம்னு சைலண்டா மீட்டிங்க்கு வா.

தலீவரு மீட்டிங்ல ஒரு சோபாவுல இருக்க சொல்ல, லெப்டுல நம்ம பக்கெட் பாரதி, பலூன் பரமசிவம், கண்மை கரீம், பந்தல் பாபு, ஸ்டெம்ப் சிந்தாமணி, ஸ்பேனர் மகேஷ் அல்லாரும் குந்தினுக்கறாங்க, ரைட் சைட்ல நம்ம ஆத்துக்கடை அலமேலு, மல்லீப்பூ மரகதம், வண்டிக்கார சின்னான், கர்சீப் கதிர்வேலு, பைப் சேகர், பினாயில் பீட்டரு, சைலண்ட் சங்கரு, அண்டர்கட் ஆறுமுகம்னு அல்லாரும் குந்தினு இருக்க சொல்ல அவசரமா ஓடி வந்து மூச்சு வாங்க நின்னான் நம்ம காத்தாடி கந்தன். “இன்னா தல, அவசரமா மீட்டிங்னு சொன்னியே, எதுனா மேட்டர் பிகுருசலா ஆயிடுச்சா தல? யாருன்னு மாத்திரம் சொல்லு, முடிச்சுட்டு வந்து அப்புறம் பேசறேன்” னு வீரவுரை நிகழ்த்த, அவனை தன் கையசைவிலேயே அமரச் சொன்னார் தம்ஸ் அப். அவனும் ஜோதியில் ஐக்கியமாகிவிட, நீண்ட யோசனையில் இருக்கும் தம்ஸ் அப்பை பார்த்து எல்லோரும் பிரச்சனை ஒரு பெரிய லெவல்ல இருக்கும் போலன்னு ரோசனையில இருக்க, தம்ஸ் அப்பின் தொண்டை செருமல் அனைவரையும் நிமிர்ந்து பார்க்க வைத்தது.

“நான் இன்னாத்துக்கு அல்லாரையும் வர சொன்னேன்னா, இப்பல்லாம் நம்ப தொழில்ல ஒரு மஜாவே இல்லாம போயினுக்குது, வாரத்துக்கு ஒரு தபா எதாவது கேசு, கீசுன்னு போட்டு போலீஸ் உள்ள தள்றானுவ, அவனுங்க போதைக்கு நம்பள ஊறுகாய் ஆக்கறானுவ, இத்து ஒரு சைடுலன்னா, இந்த பப்ளிக் பண்ற அட்டூழியம் தாங்க முடியாம போயின்னுக்குது, A T M னு ஒரு மிசின் வெச்சுகினு, எத்தினி துட்டு வோணுமோ அத்தினி மாத்திரம் எட்த்துகுனு போய்னுக்கறாங்கோ, வூட்ல பணமே வைக்கலைன்னா நம்மாளுங்கெல்லாம் வேற இன்னா தொழில் செய்யறது, எத்தினி நாளைக்குத்தான் பார்க்கிங்ல இருந்து பைக் கண்ணாடி, ஸ்கூட்டர் கண்ணாடின்னு உஷார் பண்ணி சோறு துன்றது, அதனால நான் ஒரு முடிவு பண்ணீட்டேன்”.

இந்த முடிவைக் குறித்த ஆவல் தன் சகாக்களிடம் அதிகம் உருவாக வேண்டும் என்ற உள்நோக்கமோ என்னவோ, தம்ஸ் அப் பலூன் பரமசிவத்தை ஒரு பார்வை பார்க்க, அவனும் தயாராயிருந்த சோடாவை திறந்து கொடுக்கிறான், சோடாவை ஒரு மிடறு குடித்த தம்ஸ் அப், மறுபடியும் ஒரு முறை தொண்டையை கனைத்தார். கூட்டத்திலிருந்த சலசலப்பு அடங்கவும் எல்லோரையும் தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்து விட்டு, தன் முடிவை திட்ட வட்டமாக சொன்னார்.

“நாம அல்லாரும் சாமியார் ஆயிர்லாம்னு முடிவு பண்ணீட்டேன்”

இன்னாது என கோரஸாக எல்லோரிடமிருந்தும் ஒரு ஆச்சரியக் குரல் வர, அதை வெகுவாக எதிர்பார்த்திருந்த ஸ்வாமி தம்ஸ் அப் தங்கமானந்தா ஒரு புன்னைகையுடன் அதற்கு பதிலளித்தார்.

“இன்னான்னு கேக்கறவன் பாலு குடிக்கற கொயந்த, எப்டீன்னு கேக்கறவந்தான் வளரத்துடிக்கும் சீடன்” என்று தன் முதல் தத்துவத்தை உதிர்த்தார்.

எல்லோரும் ஆச்சரியமும் குழப்பமுமாய் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டும், பேசிக்கொண்டும் இருந்த வேளையில் தன் முகத்தில் ஒரு தெய்வீக தேஜஸை வரவழைத்துக் கொண்ட சுவாமி தம்ஸ் அப் தங்கமானந்தா எல்லோரையும் பார்த்து வலது கையை உயர்த்தி அமைதி என்பது போல சைகை செய்தார். சலசலப்பு அடங்கியவுடன் ஒரு புன்னைகையையும் நெற்றிச் சுருக்கங்களையும் வலிய வரவழைத்துக் கொண்ட சுவாமி, “நான் இன்னாத்துக்கு நம்ப லைனை மாத்திக்கலாம்னு சொல்றேண்ணா, நம்ப தொழில்லயும் சரி, சாமியார் தொழில்லயும் சரி, கடைசீல லாபம் இன்னாவோ ஒண்ணுதான். ஆனா இதுல இன்னான்னா ஒரு பாலீஸா துட்டு பார்க்க முடியும், போலீஸ் பேஜாரு இல்ல, இன்கம்டேக்ஸ் ரிஸ்க் எதுமே கடியாது. பப்ளிக் அவுனுங்களா வந்து துட்டு குடுத்துட்டு கும்புட்டுட்டு போவானுங்க, அப்படியே கொஞ்சம் கொஞ்சமா டெவலப் ஆயிகினே போனா, சீக்கிரமா பாலிடிக்ஸ்ல என்டிரி குடுக்கலாம். ஆனா, நாம இப்ப இருக்கறாப்ல இப்படியே இதே தொழில்ல இருந்தாக்கா, போலீஸ்கிட்ட பேர் வாங்கி, அப்பாலிக்கா கட்சியில பேர் வாங்கி எம். எல். ஏ ஆகாங்காட்டியும் வயசு முடிஞ்சு போகும். இந்த லைன்ல அந்த பேஜார் அல்லாம் கடியாது, துட்டுக்கு துட்டும் ஆச்சு, மரியாதைக்கு மரியாதையும் ஆச்சு, இன்னா நான் சொல்றது? என்று கேட்கவும் கூட்டத்திலிருந்தவர்கள் ஏதோ புரிந்தது போலவும், ஆனால் முழுமையாய் புரியாததை வெளிக் காட்டிக் கொள்ள விரும்பாமல் ஒரு குன்சாக தலையை ஆட்டி வைத்தனர்.

அடுத்ததாக சுவாமிகளின் கட்டளை மின்னல் வேகத்தில் பறந்தது, பந்தல் பாபு பந்தல் போட்டான். சைலண்ட் சங்கர் மைக்செட் கட்ட, அண்டர்கட் ஆறுமுகமும், பக்கெட் பாரதியும் போஸ்டர் அடித்து ஒட்டி மாநகரத்தையே களேபரப் படுத்தி விட்டார்கள். ஆத்துக்கடை அலமேலு, மல்லீப்பூ மரகதம் இருவரும் பான் பராக் போடுவதை ஒரு வாரமாக நிறுத்தி விட்டு, பியூட்டி பார்லர் போய் ஒரு எக்ஸ்ட்ரா மேக்கப்புடன் வந்து பந்தலில் தங்களது சக பரிவாரங்களுடன் வளைய வந்தார்கள். ஒரு வார விளம்பரத்துக்குப் பின் அந்த ஆன்மீக சொற்பொழிவு நாளும் வந்தது. வரிசையாக பிளாஸ்டிக் சேர்கள் இடப்பட்டு, சிஷ்ய கேடிகளான அனைவரும் திரு நீறும் சந்தனமும் பூசி, பக்த கோடிகளாக நிற்க, சொற்பொழிவின் ஒத்திகை நடந்தது.

"டாய், மைக் கரீக்டா இக்குதா, யார்ராது மைக்காரன், இட்னு வாங்கடா அவன, இதா பாருப்பா, நான் வாழ்க்கையில மொத வாட்டி மைக்ல பேசப் போறேன், அதும் ஆன்மீகம் பேசப் போறேன், இடையில எங்கனா உன் மைக்கு கீ, கூன்னுச்சு, அப்புறம் மவனே உம் மூஞ்சி லவுட் ஸ்பீக்கர் ஆயிரும் பாத்துக்க,


அப்புறம், டேய் பைப் சேகர், அந்த ஸ்கிரீன் கரீக்டா தொறந்து மூடுதா, நான் ஷ்டார்ட் பண்ணும்போது கரீக்டா தொறக்கணும், தெர்தா, இன்னா தெர்தா. ம்…….அப்புறம்"

"டேய் கரீம், மொத தபா பேசப் போறேன் நான், எதுனா பிரச்சனை ஆச்சுன்னா அதுக்கு இன்னா பண்ணப் போற?"



"அண்ணே, நீ பேஜார் ஆவாதண்ணே, நீ பாட்டுக்கு பேசிண்ணே இருண்ணே, நம்ம பசங்களை அல்லா எடத்துலயும் நிறுத்தீருக்கேன் அவுங்க பாத்துப்பாங்கண்ணே."

"டேய் பீட்டரு, சின்னான், நீங்க ரெண்டு பேரும் கையில ஒரு டார்ச் லைட் வெச்சுக்கோங்க, கூட்டத்துல இருந்து யாராவது கேள்வி கேட்டா அவுங்க முகத்துல டார்ச் அடிக்கணும் தெர்தா,"

"டேய் சிந்தாமணி, உண்டியல் எத்தினி வெச்சிருக்க, மவனே உண்டியல்ல எவனா துட்டு போடாம போனா, அவன் செவுளு பிகுலு ஊதணும் தெர்தா"

"ரைட் ஆளுங்க எல்லாம் வர்ற டைம் ஆயிருச்சு, எல்லாம் கரீக்டா அவுங்க அவுங்க எடத்துல நில்லுங்க, ஏ மரகதம், அலமேலு, லேடீஸ் சைடுல அல்லாம் கரீக்டா இக்குதா, ஒரு பிரச்சனையும் வரக் கூடாது இன்னா….. "

மக்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்து, சேர்கள் எல்லாம் நிரம்பி விட்டது. உடனே பந்தல் பாபு ஓடி வந்து "அண்ணே அல்லாம் கரீக்டா போயினிக்குதண்ணே, இப்ப ஷ்டார்ட் பண்ணுங்கண்ணே" என்றதும் நம் தம்ஸ் அப் சுவாமிகள் வந்து மேடையில் விரிக்கப் பட்டிருந்த மெத்தையில் அமர்ந்து விட்டு மைக்கை மூன்று தரம் தட்டி சரி பார்த்துக் கொண்டார்.

இடது பக்கத்தில் திரைக்கு பின்புறம் நின்ற பைப் சேகரைப் பார்த்து சுவாமிகள் கண் சாடை காட்ட, பைப் சேகரும் திரை கட்டியிருந்த கயிற்றைப் பிடித்து இழுக்க திரை மெதுவே விலகி சுவாமிகளின் மீது ஒரு ஒளி வட்டம் வரும்படி லைட் ஃபோகஸ் செய்யப் பட்டது. அதே சமயத்தில் பார்வையாளர்கள் பக்கத்தில் இருந்த விளக்குகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக அணைக்கப் பட்டன.

சுவாமி தனது பக்திப் பிரசங்கத்தை ஆரம்பித்தார்.

“எல்லாருக்கும் வணக்கம், நதியெல்லாம் ஓடி கடல்ல கலக்கறது கணக்கா, பூவெல்லாம் பூத்து ஒரு தோட்டத்துல மணக்கறது கணக்கா நீங்க எல்லாரும் இப்ப எங்கெங்கெயோ இருந்து வந்து இந்த ஒரு பந்தல்ல குந்தினுக்கறீங்கோ, மனுஷன் பாக்கற பார்வைல தான் வித்தியாசம் இக்குது, அது இன்னான்னா, இப்படித்தான் சீதா காட்டுக்குள்ளாற குட்சைல குந்தினுக்கறப்போ, ஒரு ஆட்டுக்குட்டி அப்டிக்கா வந்துக்குது, அத்த பாத்த சீதாம்மா, அத்து என்க்கு வேணுன்னு சொல்ல, ராம்ர் தம்பி லட்சுமணரு அத புட்சுணு வர போகங்காட்டியும், சைக்கிள் கேப்புல அங்க வந்த நராகாசுரன் இன்னா பண்ணான்னா, சீதாம்மாவை லவுட்டிகினு போயே போய்ட்டான்.”

இப்பொழுது பார்வையாளர் பகுதியிலிருந்து ஒருவர் எழுந்து,

“சாமி, நீங்க சொல்றது கொஞ்சம் வித்தியாசமா இருக்கு, அது ஆட்டுக்குட்டியல்ல மான்குட்டி, அப்புறம் சீதாவை அபகரிச்சது நரகாசுரன் அல்ல, இலங்கையின் மன்னன் ராவணன்……”

“யார்ராது, டேய் பீட்டரு, லைட் அடி,” என்றதும் பீட்டர் அவர் முகத்தில் லைட் அடிக்க, சுவாமிகள் அவரைப் பார்த்து, “நீயாப்பா அத்து, இன்னா வோணும் உன்க்கு, டேய், அவுர சைட்ல இட்னு போயி இன்னா வேணுன்னு கேட்டு குடுங்கடா,” மனதுக்குள் “(ங்கொய்யால நம்ம லைன மாத்திகினு வேற பிசினஸ் பண்லாம்னா வுடமாட்டானுங்க போலக்குதே)”

இப்பொழுது சுவாமிகள் மறுபடியும் கூட்டத்தைப் பார்த்து புன்னகை வழியும் முகத்துடன், “தடங்கலுக்கு வருந்துகிறோம், அத்து இன்னாண்ணா, மனுஷ வாழ்க்கைங்கறதே நிறைய வேஷம் நிறைஞ்சதா இக்குது. மனுஷன் திடீர் திடீர்னு வேஷம் கட்டறான், வேஷம் மாத்தறான், இப்ப நம்ம திரௌபதி அம்மாவ பார்த்தாக்கா, அவுங்க வாழ்க்கைல எத்தினி கஷ்டம், எத்தினி துன்பம், ஆனா அல்லாத்துக்கும் அவுங்க கிட்ட ஒரே பதில்தான் இருந்துச்சு, பொறுமை, இந்த பொறுமையாலதான் எல்லாத்தையும் சாதிச்சாங்க, ஒரு காட்டுப்பய வந்து அவுங்க சீலைய அவுத்து அவமானப் படுத்தறேன்னு வந்தான். அவன் பேரு சங்கமித்திரன், அவன் சேலைய உருவுரான் உருவுரான் அத்து மைல்கணக்கா வந்துகுனே இக்குது, திரௌபதி அம்மா சிரிச்சுகுனே இக்குறாங்க, அவுனும் உருவி உருவி பேஜாரகிப் போய் இது இன்னாடா மேட்டர்னு திரும்பி ஒரு லுக் வுட்டப்போ, அங்க கையில சுதர்ஸன சக்கரத்தை வெச்சுகுனு விநாயகர் சிரிச்சுகினே நின்னாரு, இன்னா கணபதி நீதானா அத்துன்னு அவன் கேக்க சொல்லோ ............”

இதற்குள் கூட்டத்திலிருந்து இன்னொருவர் எழுந்து, “சுவாமி, எங்கியோ தப்பு நடக்குது, திரௌபதியோட சேலையை அவுத்தது சங்கமித்திரன் இல்ல, அது துச்சாதனன், அப்புறம் அவுங்கள காப்பாத்தனது விநாயகர் இல்ல, கிருஷ்ண பரமாத்மா”

“இத்து யார்றா, புச்சாக்குது, டேய் பீட்டர் லைட் அடிடா”

லைட் கொஞ்சம் விலகி அடிக்க, சுவாமிகள் ஒருவரை பார்த்து "யாருப்பா அது, சந்தேகம் கேட்டது, நீயா ?" என ஒருவரை கேட்க, அவர் கோணலான வாயுடன், “நான் இல்ல ஷாமி, இந்தா இவுருதான் ஷாமி, நான் மொதல்லயே டவுட் கேட்டு எல்லாம் கிளியர் ஆயிருச்சு ஷாமி, இப்ப இவருக்கு பதில் சொல்லுங்க”

"டேய், பீட்டரு, அந்தாள மேடைக்கு இட்டுணு வா,"
என்றார் சுவாமிகள். அவரை மேடைக்கு தள்ளிக் கொண்டு வந்ததும், திரையை மூடச்சொல்லி மைக்கையும் ஆஃப் பண்ணிய சுவாமிஜியையும் அவரது சீடர்களையும் பார்த்து அவருக்கு ஏதோ ஒன்று புரிய, அவர் கையெடுத்து கும்பிட்டு, “சாமி, தெரியாம கேட்டுட்டேன் சாமி, என்னை விட்டுடுங்கோ” என அழுக, சுவாமிஜி அவரைப் பார்த்து,

“ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லு நான் உன்னை விட்டுடறேன்”,

“சுவாமி, கேளுங்கோ, நான் பதில் சொல்லிடறேன், ஆனா என்ன ஒண்ணும் பண்ணாதீங்கோ,”

“சரி இப்ப இதுக்கு பதில் சொல், சங்கமித்தரனோ இல்ல துச்சாதனனோ, திரௌபதி சேலைய யார் இஸ்த்தா உனக்கு இன்னா பிரச்சனை, இதுக்கு மாத்திரம் பதில் சொல்,”

இப்படி அரை மணி நேரமாக அந்த மனிதர் சிஷ்ய கோடிகளால் கவனிக்கப்பட, வெறுத்துப் போன பக்தர்கள் கூட்டம் திரையை திறந்து வந்து பார்த்தால் மேடையில் ஒருவரும் இல்லை. அப்பொழுது தான் ஒரு கேஸ் புக் பண்ண அந்த பக்கமாக வந்த போலீஸ் காரர்கள், தம்ஸ் அப் மற்றும் அவர் சகாக்கள் அனைவரையும் அள்ளி ஜீப்பில் போட்டுக்கொண்டு போனதும், தம்ஸ் அப் தங்கத்தின் சாமியார் கனவு அத்தோடு சமாதியானதும் அவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது?



பின் குறிப்பு : தம்ஸ் அப் தங்கம் அடுத்த வாரமும் வேறொரு அவதாரத்தில் தொடருவார்.

Thursday, October 15, 2009

அதாவது என்ன சொல்ல வ்ர்றேண்ணா.....

அதாவது என்ன சொல்ல வ்ர்றேண்ணா, ஒரு கோடு, அது நேரா இருக்குதாண்ணு சொல்றதுக்கு ஒரு கோணயான கோடு பக்கத்துல இருக்கணுமில்லையா, அதாவது கோணையான கோட்டைப் போல இல்லாததுனால இது நேரான கோடா தெரியுது. ஆனா உண்மையா அது நேரா இருக்குதா இல்லயாண்ணு எதை வெச்சு சொல்றது. எனக்கு நேரா தெரியறது உங்களுக்கு கோணலா தெரியுது.

இப்படித்தாங்க இருளும் வெளிச்சமும்னு ஒருத்தர் பேசுனாரு, அய்யா வெளிச்சம் எவ்வளவு இருக்குதுன்னு சொல்லீரலாம், ஆனா இருள் எவ்வளவு இருக்குதுன்னு சொல்ல முடியுமா, ஏன்னா இருள் என்னைக்குமே இருக்கறது, வெளிச்சம்தான் கொஞ்சங் கொஞ்சமா உருவாகி அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சு போகுது, ஆக, வெளிச்சம்னு ஒண்ணை சொல்லணும்னா, இருளின் இல்லாமைதான் வெளிச்சம்னு சொல்லலாமா???

அப்புறம் நல்லவன் கெட்டவன்னு சொல்றாங்க, எவன் நல்லவனோ அவன் முழுசா நல்லவனான்னு எப்படி சொல்றது, அதாவது ஒரு கெட்டவனப் போல இல்லாததுனால அவன் நல்லவனா தெரியறான், ஆனா நல்லவன்னா இன்னான்னா, யாரும் சொல்ல மாட்டேங்கறாங்க, ஆனா, இதுலயும் பாருங்க, ஒரு கெட்டவனப் போல அவன் இல்லாததால அவன் நல்லவனா, இல்ல நிஜமாவே நல்லவனா இருக்குறதுனால அவன் நல்லவனா?????

இதெல்லாம் எதுக்கு சொல்ல வர்றேண்ணா, அதாவது உலகத்துல, அதாங்க நாம வாழற பிரபஞ்சத்துல, தினமும் பாருங்க, அதுக்காக எங்கன்னு திரும்பி பாக்காதீங்க, நேராவே பாருங்க, ஆங், என்ன சொன்னேன், இதை எதுக்கு சொல்றேண்ணா, அதாவது…………………………………….

அட விடுங்க சாமி, போய் புள்ள குட்டிகளோட தீபாவளி கொண்டாடறதப் பாருங்க, நாந்தான் எதோ எழுதிகிட்டே போறேன்னா, நீங்களும் சும்மா வெட்டியா உக்காந்து இதையெல்லாம் படிச்சுகிட்டு……………..

தீபாவளி வாழ்த்துக்கள்.

Monday, September 7, 2009

புண்ணாக்கு, வெளக்கெண்ணை, பருப்பு, வெங்காயம்

போடா புண்ணாக்கு, டேய் வெளக்கெண்ணை, இன்னா, நீ பெரிய பருப்பா, போடா வெண்ணை, டேய் வெங்காயம், ஆமா இவுரு பெரிய பன்னு, சுத்த பழம் மாதிரி இருக்காண்டா, அவன் ஒரு தயிர் வடைடா,

இப்படி எல்லாம் ஒவ்வொருத்தருக்கும் ஒரு பெயர் வெச்சு கூப்பிடறதை கேட்டிருப்பீங்க, அதுக்கு உண்மையிலயே இன்னா மீனிங்னு மல்லாக்க படுத்து யோசிச்சப்ப……….,,,,,,,

புண்ணாக்கு : எல்லாமே தெரிஞ்ச மாதிரி பேசறவன், ஆனா உண்மையில ஒரு சரக்கும் இருக்காது. சந்திராயன் எரிபொருள் என்னாங்கறதுல இருந்து சந்திரமுகி படத்தின் கேமரா ஏங்கிள் வரை எல்லாத்தையும் மணிக்கணக்கா பேசுவான்.

வெளக்கெண்ணை : எதப் பத்தி பேசறமோ அதத் தவிர மத்ததெல்லாம் பேசறவன். கண்ணுல தூசி விழுந்துடுச்சுடான்னா கால் வலிக்கு மருந்து சொல்றவன்.

பருப்பு : எதுக்கெடுத்தாலும் ஓவரா சீன் காட்டறவன். எங்கிட்ட மட்டும் அவன் இந்த வார்த்தையை சொல்லீருந்தா, நடக்கறதே வேறன்னு டயலாக் உடறவன். ஆனா உண்மையிலயே இவருக்கு பேஸ்மெண்ட் வீக்.

வெண்ணை : எப்ப பார்த்தாலும் பெரிய நடுநிலைவாதி மாதிரி, நீதி, நேர்மை நியாயம்னு பேசறவன். என்ன இருந்தாலும் ஒசாமா பின் லேடனும் ஒரு மனிதன் தானே, அவரை எப்படி ஒரு ஓநாய் போலவெல்லாம் கார்ட்டூன் போடலாம்னு பேசுவான்.

பன்னு : ரொம்ப மென்மையானவனாகவும், இளகிய மனசுள்ளவனாகவும் காமிச்சுக்கறவன். ஏண்டா, ஒரு பொண்ண இப்பிடி எல்லாமா கலாய்ப்பாங்க, பாவண்டா, அது அழுதுறுமோன்னு பயந்துட்டேன்னு சொல்வான், ஆனா மனசுல மட்டும் என்னடா இதோட நிறுத்திட்டீங்களேன்னு சலிச்சுக்குவான்.

பழம் : வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் இருப்பது போல் காமிச்சுக்கறவன். டேய், அங்க பாரேன், காத்து அடிக்கும்போது அந்த குல்மோஹர் பூவெல்லாம் என்ன அருமையா தலை ஆட்டுதுன்னு பாரேன்னு சொல்லுவான், ஆனா, உண்மையில அந்த குல்மோஹர் பூவுக்கு பின்னால இருக்கற பால்கனியில துணி காயப் போடற ஆண்ட்டிய லுக் உட்டுட்டிருப்பான்.

தயிர்வடை : எப்பவுமே எதாவது ஒரு பிரச்சனையில இருப்பதாகவே கற்பனை பண்ணிக்கறவன். ரயில் டிரைவர் தூங்காம வண்டி ஓட்டி அவரு கண்ணு ஒரு மாதிரி இருக்கறத பார்த்துட்டு, டேய் எனக்கு இஞ்சினுக்கு அடுத்த கோச்சுடா, அந்தாளு கண்ணப் பாரேன், ஒரு ஃபுல் அடிச்ச மாதிரி இருக்காண்டா, ஒழுக்கமா ரயில ஓட்டுவானான்னு கவலைப் படுவான்.

ஆனா பாருங்க, இந்த எல்லா பட்டப் பெயர்களுமே ஒரு சாப்பிடற பொருளை மையமா வெச்சுத்தான் உருவாக்கியிருக்காய்ங்க, அது ஏன்னு தெரிஞ்சவங்க சொல்லுங்க.

Saturday, May 2, 2009

நாட்டாமை பாட்டைப் போடு

என் தம்பி சினிமாவுல பாடியிருக்கான்னு தென்றல் அக்கா ஒரு பதிவு போட்டு பூவெல்லாம் குடுத்தாக.

கேபிள் அண்ணன் வாழ்த்துச் சொன்னாக, அவுக வாழ்த்துனாக, இவுக வாழ்த்துனாக, இன்னும் பதிவுலகத்துல இருக்கற எல்லாரும் வாழ்த்துனாக.

அப்துல்லா அண்ணன்கிட்ட "அண்ணே, தொலைதூர தேசத்துல இருக்கற நாங்க எப்பண்ணே பாட்டு கேக்கறது"ன்னு கேட்டாக்க " நீ ஒண்ணியும் மெர்சலாவாத, தென்றல் அக்கா நாளைக்கு பாட்டை பதிவுல போடுவாங்க"ன்னு சொன்னாரு.

நானும் கடை கடையா ஏறி எறங்கி எங்கடா பாட்டுனு பாத்தா ம்ஹூம், ஒண்ணியும் காணோம்.


"நாட்டாமை பாட்டைப் போடு"

Sunday, March 22, 2009

எல்லாரும் என்னதான் நெனச்சுகிட்டிருக்கீங்க????

யோவ், எல்லாரும் என்னதான் நெனச்சுகிட்டிருக்கீங்க,

எங்க போனாலும் என்னை சீனியர் சிட்டிசன் ஆக்கி உக்கார வெக்கறீங்க??
இன்னா தான் பண்றது??

ஆதி எதோ ஒரு மோகம், தாகம்னு பதிவு போட்டார், அதுல நம்ம கருத்தைச் சொன்னோம், உடனே இந்த யூத்துக தொல்லை தாங்கலங்கறாங்க,

நாங்களும் யூத்துதான்யா!!!!

உடனே அந்த கார்க்கி வந்து அருமை அண்ணன் அனுஜன்யாவுடன் கோத்திவிட்டாரு. ஆனா அனுஜன்யா அண்ணன் அடிச்சாரு பாருங்க ஒரு அடி, நல்லா சொன்னேள் போங்கோ.

(கார்க்கி : தராசு, உங்களைவிட இரண்டு வருஷம் மூத்தவர் அனுஜன்யானு ஒருத்தர் இருக்கார்.

அனுஜன்யாவின் பதில்: அப்ப தராசுக்கு வயசு இருபத்தி மூணா)


சரி, இதயெல்லாம் போகட்டும்னு விட்டா, இப்ப அத்திரி ஒரு பதிவு போட்டாரு, அதுல போய் ஒரு பின்னூட்டமிட்டால், அவுரும் சீனியர் உங்களுக்கே இப்படின்னா, நாங்கெல்லம் எங்க போகன்னு புலம்பறார்.

எல்லாரும் என்னதான் நெனச்சுகிட்டிருக்கீங்க!!!!!

யோவ் எல்லாரும் பாத்துக்குங்க, நானும் யூத்து தான்யா, யேய் இங்க கவனி, நானும் யூத்து தான்யா!!!!

யேய், சைலன்ஸ், பேசிட்டிருக்கன்ல (கார்க்கி இல்லைங்கற தைரியத்துல தான் இந்த கடைசி வரி)

Friday, March 6, 2009

எனக்கு ஒரே இதுவா இருக்குதுங்க!!!!

முதல்முதலா தமிழ்மண வலைதிரட்டிக்கு வந்தப்பவே எனக்கு ஒரு இதுவாதான் இருந்துச்சு. அப்புறம் நிறைய பதிவர்களோட இதுவையெல்லாம் படிச்சதுக்கப்புறம், எனக்குத் தோணுன இதுவே போயிடுச்சுன்னு வெச்சுக்கோங்களேன். நான் என்னுடைய கடை தனியா தொறக்கணும்ங்கற ஒரு இதுவே ரொம்ப நாளா தோணல. தமிழ்மணத்துல வந்து சும்மா எல்லா கடைக்கும் போய் ஒரு இது பண்றதோட நிறுத்திகிட்டிருந்தேன். ஆனா நிறைய கடைகளையெல்லாம் பார்த்ததுக்கப்புறம் எப்படியும் ஒரு இது ஆரம்பிச்சே ஆகணும்கற ஒரு இது வந்துருச்சு. இந்த இது வந்ததுக்கப்புறம் நெறய நாள் ராத்திரி பகலா மனசுல ஒரு இதுவாவே இருந்துச்சு, அப்புறம் முடிவா ஒரு இது எடுத்ததுக்கப்புறம், ஒரு நல்ல நாளா பார்த்து ஒரு இது ஆரம்பிச்சுட்டேன்.

ஆனா பாருங்க, ஆரம்பத்துல நம்ம இது பக்கம் ஒருத்தர் கூட வரலீங்க. கொஞ்சம் கொஞ்சமா ஒவ்வொருத்தர் கடையிலயும் உள்ள புகுந்து ஒரு இது பண்ணதுக்கப்புறம்தான், நம்ம கடைப்பக்கமா ஒரு சிலர் இது பண்ண ஆரம்பிச்சாங்க.

திடீர் திடீர்னு நம்ம ஆபீஸ்ல வேற நம்மள நாடு கடத்தீற்ராங்களா, நம்மனால ஒரு இதுவாவே எழுத முடியறதில்லீங்க. இருந்தாலும் அப்பப்போ நேரம் கிடைக்கும் போதெல்லாம் இது பண்ணலாம்னு முயற்சி பண்ணீட்டுதான் இருக்கேன்.

ஆனா இதெயெல்லாம் உங்ககிட்ட சொல்லும்போது எனக்கு ஒரு இதுவாத்தான் இருக்கு. ஆனா நீங்க தயவு செஞ்சு எந்த இதுவும் நெனச்சுக்காதீங்க. ஆனா உங்களோட இதையெல்லாம் பார்க்கும் போது நான் இன்னும் இது பண்ண வேண்டிய நிறைய இது இருக்குதுங்க, நான் கொஞ்சம் கொஞ்சமா என்னை இது பண்ணிக்கறேன். நீங்க வழக்கம் போல என்னோட இதுக்கு வந்திட்டும் போயிட்டும் இருங்க.

ரொம்ப டேங்சுங்க, உங்களுக்கு டேங்சு சொல்லும்போது கூட எனக்கு ஒரே இதுவாதான் இருக்கு, இருந்தாலும் ரொம்ப ரொம்ப டேங்சுங்க.