Showing posts with label பள்ளிகள். Show all posts
Showing posts with label பள்ளிகள். Show all posts

Tuesday, April 12, 2011

ஜுகல் பந்தி 12–4-2011 - குண்டுக்கு தெரியுமோ குருதியின் நிறம்??

குண்டுக்கு தெரியுமோ குருதியின் நிறம்??

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரம், வசதி வாய்ந்தவர்கள் சொற்பமாயும், நடுத்தர வர்க்கத்தின் சொர்க்கமாகவும், தென் அமெரிக்க நாடுகளுக்கென ஒரு தனி முகவரி தாங்கிய கேளிக்கை நகரம். முற்றும் திறந்த குலுங்கும் மார்புகளும், இடுப்புக்கு கீழே ஒரு சாண் துணியும் அணிந்து, இந்நகரத்து வீதிகளில் நடக்கும் கார்னிவல் எனும் விழா ஊர்வலங்களில் குதித்துக் கும்மாளமிடும் தென் அமெரிக்க கோதுமை நிற அழகிகளை பல படங்களில் பார்த்திருப்பீர்கள். கால்பந்தாட்ட ரசிகர்களல்ல, வெறியர்கள் நிறைந்த நகரம்.

கடந்த 7ம் தேதி இந்நகரத்தில் சூரியன் சோம்பல் முறித்து கிரணம் பாய்ச்ச தலை நீட்டிய பொழுது, இந்நகரத்தின் உயர்ந்த மலையின் மீது தன் இரு கரங்களையும் விரித்து கால்கடுக்க நின்றபடியே உள்ள இயேசுகிறிஸ்துவை சூழ்ந்திருந்த பனிப்படலம் பின்னங்கால் பிடறியில் பட விலகி ஓடியது. சரியாய் காலை 8 மணிக்கு இந்நகரத்தின் மத்திய தர மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்த ஒரு பள்ளிக்கு அதன் முன்னாள் மாணவனான வெலிங்டன் மெனோசிஸ் வந்தான். பள்ளியின் 40 வது ஆண்டு விழாவை ஒட்டி முன்னாள் மாணவனான தான் அங்கு மாணவர்களுக்கென சிறப்புரையாற்றப் போவதாக பொய் சொல்லி விட்டு வாயில் காப்போனை கடந்து உள்ளே சென்றான்.

சென்றவன் உள்ளே நுழைந்து பாடம் கேட்பதில் ஆர்வமாயிருந்த மாணவர்களிடம், “கைகளை தூக்கி நில்லுங்கள்” என கத்தவும் மிரண்ட அந்த பச்சிளம் பாலகர்கள் நடப்பது என்ன என உணரும் முன்பே கண்மூடித்தனமாக சுட்டு விட்டான். நான் சுடப்பட்டேன் என உணரும் முன்பே அந்த மொட்டுகள் சுருண்டு விழுந்து கருகி விட்டன. ஒரு வகுப்பில் தன் கோரத்தனத்தை காட்டிய இவன், இன்னொரு வகுப்பிற்கும் சென்று இப்படி செய்திருக்கிறான். பக்கத்து வகுப்புகளில் கேட்ட துப்பாக்கி சத்தமும், குழந்தைகளின் மரண ஓலமும் அடுத்திருந்த வகுப்புகளின் ஆசிரியைகளுக்கு ஏதோ விபரீதம் நடப்பதை உணர்த்தவே அவர்கள் தங்கள் வகுப்புகளின் கதவுகளை பூட்டி விட்டனர். இப்பொழுது எங்கு நுழைவது என கொலைகாரன் குழம்பி நின்றிருந்த வேளையில் சடுதியில் அங்கு நுழைந்த போலீஸ் அதிகாரி மார்க்கோஸ் இந்த மனித மிருகத்தின் காலில் சுட்டு அவனை கீழே விழத் தள்ளியிருக்கிறார். தன்னால் இனி நகர முடியாது என்பதை உணர்ந்தவுடனே தன் கையிலிருந்த துப்பாக்கியால் தன்னையே சுட்டுக் கொண்டு அந்தக் குரூர ஆத்மா அடங்கியிருக்கிறது.

இறந்த 12 குழந்தைகளில் 10 பேர் மாணவிகள். இன்னும் இந்த அதிர்ச்சியிலிருந்து மொத்த பிரேசில் நாடே வெளிவரவில்லை. அதற்குள் நெதர் லாண்டிலும் இப்படிப்பட்ட ஒரு சம்பவம், அதே போல் துப்பாக்கி ஏந்திய இன்னொரு மனித மிருகம், ஒரு வணிக வளாகத்திற்குள் நுழைந்து 6 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்று விட்டு தன்னையும் சுட்டுக் கொண்டது. இந்த சம்பவங்கள் சொல்வது என்ன?
1. ஆயுதம் கிடைப்பது எளிதாகி விட்டதா???

2. மனித மனதில் வக்கிரங்கள் நிறைந்து விட்டதா???

3. சினிமாவில் நாயகன் ஒரே கைத்துப்பாக்கியை கொண்டு பல பேரை சுட்டு வீழ்த்துகிறானே, இத்தகைய சாகசங்களை இளைய தலைமுறை விரும்ப ஆரம்பித்து விட்டதா????

எதுவாயிருந்தாலும், தொலைக்காட்சியும் சினிமாவும் இந்தளவுக்கு மனித மனத்தில் தன் இனத்தையே வேரறுக்கும் விஷ விதைகளை தூவுகிறதோ என பயப்பட வேண்டியுள்ளது.

வருது வருது, அட விலகு விலகு

அட அவுங்களை விட இவுங்க பரவால்லப்பா, ஆமா இவிங்க மாத்திரம் என்ன கிழிச்சாங்க, அப்ப, அங்க குடும்பம் சொத்து சேர்த்தலைங்கறயா, சரி இங்க மட்டும் என்ன வாழுது, இங்கயும் ஒரு குடும்பம்தான் ஆட்டிப் படைக்குது, சரி அங்க கூட்டணி பலமா இருக்குன்றீங்க, அப்ப இங்க மட்டும் என்ன சொத்தையா போயிடுச்சா, போன தரம் அவிங்க ஜெயிச்சா, இந்த தரம் இவிங்க ஜெயிக்கணும்னு ரூல்ஸ் இருக்கா என்ன, ஆனா என்ன இருந்தாலும் இந்தப்பக்கம்தான் இள ரத்தமா இருக்குப்பா, ஆனா அங்கயும் நாங்க இளசுகளை இறக்கியிருக்கம்ல, நீங்க இலவசமா எதைக் குடுத்தாலும் நாங்களும் அதுக்கு டபுளா குடுக்கறம்ல, ஏ யப்பா டேய் நிறுத்துங்கடா, கேட்டுக் கேட்டு புளிச்சுப் போச்சுடா, நீங்கெல்லாம் எப்படா சாவீங்க, நாங்க கொஞ்சம் நிம்மதியா வாழணும்டா, தேர்தல் வருதாம், நாசமாப் போக.

ங்கொய்யால பக்கங்கள்.

வீதி முழுக்க விளம்பர தோரணம்,

காது கிழிய கொள்கை பாட்டு,

செவுத்துல எல்லாம் சிரிக்கற போஸ்டரு,

மேடைல ஏறி கெட்ட வார்த்தை

ராத்திரி முழுக்க தலைவர் கூட்டம்

வீட்டுக்கு வீடு இலவச லஞ்சம்,

எதுவுமேயில்ல, ஆனாலும் தேர்தலாம்

ங்கொய்யால,

இதுக்கு பேர்தான் எலெக்ஷன் கமிஷனா??

Friday, September 4, 2009

நவீன குருகுலங்கள்


என் மறுபாதி, சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் பணி புரிகிறார் என்பதினால், என் வாரிசையும் அதே பள்ளியில் சேர்க்க வேண்டிய கட்டாயத்திற்காளானேன். கடந்த சில நாட்களாக ஆணி புடுங்குவதிலிருந்து விடுப்பு என்பதால், இவர்கள் இருவரையும் பள்ளிக்கு அழைத்துச் செல்வதும், திரும்ப அழைத்து வருவதும் அடியேன் தலையில் விதிக்கப்பட்டது என்பதை விட திணிக்கப்பட்டது என்று சொல்லலாம். பள்ளி முடிவதற்கு சிறிது நேரம் முன்னாலேயே சென்று பள்ளியின் முன் காத்திருந்து நம்மவர்களை அழைத்து வரலாம் என ஒரு கால் மணி நேரம் முன்னாலேயே சென்றிருந்தேன். மிகவும் மேல்தட்டு ரக மக்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளியாதலால், பள்ளிக்கு அருகில் செல்லவே நமக்கு கூசுகிறது. எனது துணைவி அங்கு பணி புரிகிறாரே என்ற ஒரே காரணத்துக்காக என் குழந்தையையும் அங்கு சேர்க்க வேண்டிய கட்டாயத்திலிருப்பதால், இந்த கூச்சத்தையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. சென்னை நகரத்தை விட்டு சற்றே ஒதுக்குப் புறத்தில் பள்ளி வளாகம், கட்டிடப் பணி இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. அவசர கதியில் கட்டிய, இன்னும் ஒரு பள்ளிக்கான எந்த லட்சணங்களையும் கொண்டிராத நான்கு சுவர்களுக்குள் பத்தாம் வகுப்பு வரை பாடம் நடத்துகிறார்கள். மாதத்திற்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கிறார்கள். பள்ளி அமைந்திருப்பது ஒரு கிராமத்தில் என்பதால் போக வர சாலை வசதிகள் இன்னும் நூறு ஆண்டுகளுக்குள் எப்படியும் ஏற்படுத்தப் படும் என நம்புவோம்.

இந்தியாவின் அனைத்து விலையுயர்ந்த கார்களையும் அதன் பணக்காரத்தன முகங்களையும் பார்க்க முடிந்தது. சிறிய கார்களில் வந்திருக்கும் அப்பாக்கள், குழந்தைகளை அழைத்துப் போக வந்திருக்கும் அம்மாக்களை சைட் அடித்தபடியே ஒதுங்கி நின்று மொபைல் போனில் பேசுகிறார்கள். பணக்கார படகு கார்களை ஓட்டி வந்திருக்கும் டிரைவர்கள், இன்னும் பத்து நிமிஷம் இருக்கல்ல, ஒரு தம் போட்டு விட்டு வருவோம் என பள்ளிக்கு முன்னே இருக்கும் செடி கொடிகளின் பக்கத்தில் ஒதுங்குகிறார்கள். ஒரு படகு காரில் இருந்து இறங்கிய பெண்மணி, காவலாளியிடம் “ எத்தின் மன்க்கி ஸ்கூல் ஃபினிஷ் ஆகும்” என சுத்தத் தமிழில் கேட்டுக் கொண்டிருந்தார்.

பள்ளிக்கு உள்ளே சென்றேன். தோளில் தொங்கிய லேப்டாப்பை இறுகப் பிடித்த படியே பிரின்ஸிபால் போல் தோன்றிய ஒரு பெண்மணி அவசர கதியில் ஆணைகள் பிறப்பித்துக் கொண்டிருந்தார். குழந்தைகளின் வகுப்பு ஆசிரியரைக் காண வந்திருந்த பெற்றோர்களிடம் இருந்த பணக்காரத்தனம் எனக்கு ஒரு ஒவ்வாமையாய் தோன்றியது.

இன்று வாத்தியாரிடம் சென்று வாதிடும் பெற்றோர்கள் அதிகமாகி விட்டனர். என் மனைவியின் வகுப்பில் பெற்றோர் தினத்தன்று கேட்கப்படும் சில கேள்விகள் :

என் பையனுக்கு உங்க ஸ்கூல் சிலபஸ்ல ஒரு இன்ட்ரஸ்டே இல்ல, நீங்க இத மாத்தறதுக்கு முயற்சி எடுங்களேன்.

அவனை தமிழ் படிக்க சொல்லி அதிகம் கட்டாயப் படுத்தறீங்களாமே, அவன் தமிழ் படிச்சு என்ன பண்ணப் போறான்?

இந்த பெற்றோர்களை நினைத்தால் சிரிப்பும் வேதனையுமே வருகிறது.

முதலாவது எத்தனை பெற்றோர்கள் தங்கள் குழந்தையுடன் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது செலவு செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அப்படியே செலவு செய்தாலும் தன் மகனின் பேச்சைக் கேட்க எத்தனை பேருக்கு பொறுமை இருக்கிறது?

எல்லா பெற்றோருக்கும் தன் மகன் முதல் ரேங்க் வாங்க வேண்டும், அடுத்த சச்சின் டெண்டுல்கராய் திகழ வேண்டும், பெற்றோருக்கு பெருமை சேர்க்கிறவனாய் இருக்க வேண்டும் என விரும்பத் தோன்றுகிறதே தவிர, இப்படியெல்லாம் ஆவதற்கு பெற்றோராகிய நமது பங்களிப்பு அதிகம் தேவை என்ற அடிப்படை உண்மையை சௌகரியமாக மறந்து விட்டு, பணத்தை விசிறியடித்தவுடன் என் மகன் ஒரு சிறந்தவனாக மாற வேண்டும் என ஆசைப் படுகிறார்கள். அப்படி நடக்காத பட்சத்தில், கூசாமல் பள்ளிகளை குறை கூறவும் இவர்கள் தயங்குவதில்லை. வேணும்னா இன்னும் ஒரு தௌஸண்ட் ருப்பீஸ் ஃபீஸ் வாங்கிக்குங்க, ஆனா என் பையன் தான் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கணும் என்ற ஒரு அவுட் சோர்சிங் மனப் பான்மை பெற்றோர்களிடத்தில் அதிகம் வளர்ந்திருக்கிறது. குழந்தை வளர்ப்பிலும், படிப்பிலும் பெற்றோராகிய தங்களுக்கும் சம பங்கு உண்டு என்பது தெரிந்தாலும், அதை வேலைப்பளு என்ற பாசாங்குத்தனமான காரணம் சொல்லி தட்டிக் கழிக்கிறார்கள். ஆனால் தனது தோழியிடம் மணிக் கணக்கில் மொபைலில் பேச நேரம் இருக்கிறது.

பள்ளி விட்டு குழந்தைகள் வெளியே வருகிறார்கள். ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் அந்த பணக்கார திமிரை பார்க்க முடிகிறது. பெருவாரியானவர்கள் கையில் எதாவது ஒரு சிப்ஸ் பாக்கெட் இருக்கிறது. பள்ளிக்கு உள்ளேயே ஒரு கேண்டீன் வைத்திருக்கிறார்களாம். பிஸ்ஸாவிலிருந்து அனைத்து குளிரூட்டப் பட்ட பானங்கள் வரை விற்கிறார்கள். எல்லா வகையான ஜங்க் ஃபுட் எனப்படும் துரித வகை பண்டங்கள் கிடைக்கிறது. வெளியே வரும் குழந்தைகளை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். நிறைய குழந்தைகள் அளவுக்கு மீறிய உடல் எடை கொண்டுள்ளனர். ஊளைச்சதை உடம்பு எங்கும் பிதுங்கித் தொங்குகிறது. தன் பையை வாங்கும் கார் டிரைவரை ஒரு பத்து வயது பையனும் ஒரு முதலாளித்துவ திமிரிலேயே பார்க்கிறான். அங்க வெயிட் பண்ணு, நான் வரேன் என ஏதோ ஒரு பிஸியான முதலாளி ஆணையிடுவதுபோல் ஆணையிடுகிறான்.

எத்தனை ஆயிரம் செலவானாலும் சரி, ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம் போன்ற கல்வி நிறுவனங்களில் என் குழந்தைகள் படிக்கப் போக வேண்டும் என பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புகிறார்கள். அவர்களின் பண முடிப்புகளுக்கென கவர்ச்சிகரமான பாடத்திட்டங்களை காண்பித்தே பள்ளிகள் பணம் பண்ணுகின்றன. ஏழு வயது பெண்ணுக்கும் கூட பள்ளியில் பரத நாட்டியம் கற்றுத்தரப்பட்டு, அதற்கென தனி பணம் வசூலிக்கப் படுகிறது. தனி மனித ஒழுக்கம், பெரியவர்களிடத்தில் மரியாதை போன்றவை கிலோ என்ன விலை என இந்த மேல்தட்டு குழந்தைகள் கேட்கிறார்கள். ஏனெனில் இவை இந்த பள்ளிகளில் உள்ள பாடத்திட்டத்தில் கிடையாது. பாடங்களை மனப்பாடம் செய்து, தேர்வில் வாந்தியெடுக்கும் மனித இயந்திரங்கள்தான் இங்கு உருவாக்கப் படுகிறார்களே தவிர, நல்ல அறிவுச் செல்வங்களை இந்த நவீன குருகுலங்கள் உருவாக்குவதில்லை.