Showing posts with label பயணக் கட்டுரை. Show all posts
Showing posts with label பயணக் கட்டுரை. Show all posts

Monday, August 1, 2011

படைப்பவனை பார்த்தோம்





புஷ்கர் என்றொரு நகரம், முறுக்கிய மீசைகளும், உருட்டிச் சுற்றிய தலைப்பாகைகளும், உறையில் உறங்கும் வாளும், நிமிர்த்திய நெஞ்சில் உறையும் வீரமும், உலர்ந்து கிடக்கும் மஞ்சள் நிற மண்ணின் ஒவ்வொரு துகளிலும் ஒவ்வொரு கதை புதைந்து கிடக்கிறது.

எந்த லக்கினத்தில், எந்த நட்சத்திரத்தில், எந்த சுபயோக சுப தினத்தில் என்று தெரியவில்லை, படைப்பின் தெய்வமான பிரம்மனுக்கு திடீரென ஒரு விபரீத ஆசை வந்ததாம். பூமியில் ஒரு யாகம் செய்ய வேண்டுமென தீராத ஒரு தாகம் ஏற்பட, எங்கு வைக்கலாம் யாகத்தை என ஒரு சர்வே நடத்திக் கொண்டிருந்தாராம். அப்பொழுதுதான் பூமியின் ஒரு மூலையில் இருந்து கடும் அபயக் கூக்குரல் எழ, என்ன விஷயமென அறிந்து வாருங்கள், என தன் துர, ரத, கஜ பதாதிகளை பணித்து விட்டார். அவர்களும் வந்து தீர விசாரித்து பார்த்ததில், இந்த மலைகளும் வனமும் சூழ்ந்த அழகிய இடத்தில் வஜ்ரநாசன் என்ற ஒரு அசுரன் மக்களை கொன்று குவித்து, அவர்களின் வளங்களையெல்லாம் சூறையாடிக் கொண்டிருக்கிறான் என்ற துக்க செய்தி கிடைத்தது. நான் படைத்த மனுக்குலத்திற்கொரு துன்பம் வர, நான் அமைதி காப்பதா என்ற ஒரு ஆதங்கம் அடக்க முடியாமல் எழ, பிரம்மன் போருக்கு கிளம்பினான். வஜ்ர நாசன் சுவடு தெரியாத படி வதம் செய்யப்பட்டான். இந்த யுத்தத்தில் கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று செய்குவோம் என்ற கொள்கை அடிப்படையில் மிக சுலபமாய் அசுரன் நசுக்கப்பட்டான்.
ஒரு தாமரை மலரில் வதம் செய்யும் மந்திரம் அடைக்கப்பட்டு, பூவுக்குள் இருக்கும் பூகம்பம் என்னவென தெரியாமலே அசுரனின் கரங்களில் மலரைக் கொடுத்துவிட, அவனும் தன் அசுரத்தனத்தில் பூவை பிரித்துப் பார்க்க, உள்ளே ஒளிந்திருந்த மந்திரம் வேலை செய்தது. அசுரன் அழிந்தான். (நம்புங்கள், இதுதான் தல புராணம், ஹலோ நான் சொல்றது அஜீத் புராணம் அல்ல, அந்த தலத்தின் புராணம்). எல்லாம் முடிந்து, பிரம்மன் யாகம் தொடங்கப் போகும் போது ஒரு சக்களத்தி சண்டை வேறு. (அதான கேட்டேன், ஒரு விஷயம் ஒழுக்கமா போயிகிட்டிருந்தா நடுவுல ஹீரோயின் புகுந்து அதைக் கெடுக்கலைன்னா கதை களை கட்டாதே).
பிரம்மனின் சகதர்மிணியான சரஸ்வதி, அன்றைய தினத்தில் அவசர வேலையாய் கலைச்சேவை செய்ய வெளிநாடு சென்றுவிட்ட காரணத்தால், யாகம் ஆரம்பிக்க வேண்டிய சுப தருணம் கைநழுவிப் போகிறதே என பிரம்மன் கவலை கொண்டான். எல்லாவற்றிற்கும் ஒரு பரிகாரம் உண்டல்லவா, அவள் இல்லையானால் என்ன இவளை வைத்து யாகம் நடத்து என ஒரு குர்ஜர் இனப் பெண்ணை பிரம்மன் முன் நிறுத்த, தனது படைப்பை கண்டு தானே வியந்து போய், பிரம்மனும் அந்த அழகிய அஸ்திரத்தால் விழுந்து போனான். அந்த அம்புதான் காயத்திரி. அவளை மணந்து, யாகம் முடித்து, நிம்மதிப் பெருமூச்சு விட்ட பிரம்மனுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. வெளிநாட்டில் கலைச்சேவை முடிந்து தன் நாதனைத் தேடி வந்த சரஸ்வதி, பிரம்மன் வேறொரு பெண்ணுடன் குடித்தனம் நடத்துவதைக் கண்டு, நெற்றிக்கண் திறந்தாள். ஒரு ரௌத்ர தாண்டவம் ஆடி விட்டு, பிரம்மனுக்கு ஒரு சாபமும் கொடுத்தாள். (பிரம்மனுக்கேவா….ஹூம், இந்த பொம்பளைங்க ஒரு ஆள விட்டு வைச்சாங்களா, என்னமோ போங்க). பிரம்மனைப் பார்த்து கடும் கோபத்தில் சொன்னாள் “ஏ பிரம்மா, நீ எனக்கு சக்களத்தி கொண்டு வந்த காரணத்தால், உனக்கு இந்த புஷ்கர் நகரைத்தவிர உலகில் எங்குமே கோவில்கள் இருக்காது, யாரும் உன்னை பூஜிக்க மாட்டார்கள்” என சபித்து விட்டாளாம். அதனால் தான் இந்தியாவில் புஷ்கரில் மாத்திரமே பிரம்மனுக்கு ஆலயம் உள்ளது.
ஆனால், இந்தோனேஷியாவின் பாலி தீவிலும், ஒரு பிரம்மன் கோவிலை கண்டிருக்கிறேன். அப்படியானால் பாலியில் இருக்கும் பிரம்மன் யார் என கேட்காதீர்கள். அவரது கதை இன்னும் கொஞ்சம் நீளமானது.
ராஜஸ்தானின் அஜ்மீர் நகரின் எல்லைக் கோடாய் விரிந்து நிமிர்ந்து நிற்கும் ஆரவல்லி மலைகளின் மீதேறி இறங்கினால், முதலில் நம்மை வரவேற்கிறது மானசரோவர் ஏரி. இந்த ஏரியில் உள்ள படித்துறைகளை மொத்தம் 52 பாகங்களாக பிரித்து ஒவ்வொரு சாதியினரும் தனது முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக கைங்கர்யம் செய்து கொள்ள வசதி செய்து பணம் பண்ணுகிறார்கள். குறைந்த பட்சம் 50 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கூட இங்கு ஆத்ம சாந்தி கிடைக்கிறது.


(ஆரவல்லி மலைத் தொடர்கள்)

மலைகளில் வளைந்து நெளிந்து செல்லும் பாதையெங்கும் புஷ்கர் நகரத்தின் ஹோட்டல் பெயர்கள் நம்மை வரவேற்கின்றன. மலைகளின் உச்சியில் ஒரு இடத்தில் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், உங்களை மக்காச்சோளம் சாப்பிட வைத்தே அனுப்புகிறார்கள். நீங்கள் செல்லும் காரை ஓட்டும் டிரைவருக்கு ஓசியில் மக்காச்சோளம் சாப்பிட வேண்டுமென்றால், நீங்கள் கண்டிப்பாக சாப்பிட்டாக வேண்டும்.




(மக்காச் சோளம், ரொம்ப முக்கியம்)


புஷ்கரின் உள்ளே நுழைந்தவுடன் நம்மை வலுக்கட்டாயமாக வரவேற்க சாலையில் திரியும் மாடுகள் காத்திருக்கின்றன. அவைகளுக்கு எல்லா வசதியும் செய்து கொடுக்கும் நகர நிர்வாகம், ஒரு இலவச கழிப்பிட வசதியும் செய்து கொடுத்தால் நலமாயிருக்கும். பல இடங்களில் ஹை ஜம்ப், லாங் ஜம்ப் – எல்லாம் செய்துதான் பிரம்மனை தரிசிக்க செல்ல வேண்டியுள்ளது. சற்றேரக் குறைய ஒரு கிலோமீட்டர் நீளத்துக்கு ராஜஸ்தானிய கைவினைப் பொருள்களின் கடைகளின் அணிவகுப்பை பார்வையிட்டபடி (மிக கவனமாய் எந்த பொருள்களையும் வாங்காதபடி) சென்றால், பரந்து விரிந்த மானசரோவர் ஏரி நம்மை வரவேற்கிறது.



(மானசரோவர் ஏரியும், பசுத்துறையும்)

நீங்கள் எந்த சாதி என எந்த மொழியில் வேண்டுமானாலும் சொல்லுங்கள், உங்கள் சாதிக்கென ஒரு பிராமணர் உங்கள் முன் உடனே தரிசனம் தருவார். உங்களை ஏரியின் பல துறைகளுக்கு அழைத்துச் செல்வார். இங்குதான் உங்கள் முன்னோர்களுக்கென நீங்கள் வேண்டுதல் செய்ய வேண்டும் என கண்டிப்பாய் கட்டளை இடுவதுடன், நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே ஒரு மக்கிப் போன மாவில் செய்த துர்நாற்றமடிக்கும் குருணை போன்ற வெள்ளை வஸ்துவை பிரசாதம் என்ற பெயரில் ஒரு பிளாஸ்டிக் பாக்கெட்டில் நிரப்பி, கூடவே ஒரு தேங்காய், கொஞ்சம் மஞ்சள், குங்குமம் என ஆத்ம சாந்திக்கான அனைத்து பொருள்களையும் குறைந்த விலையில் சிறந்த முறையில் உங்கள் கைகளில் திணித்திருப்பார். ஆயிரம் ரூபாயிலிருந்து ஆரம்பிக்கும் பேரம், உங்கள் திறமையை பொறுத்து ஏதாவது ஒரு ரூபாயில் வந்து நிற்கும். ஆனால், ஐம்பது ரூபாய்க்கு கீழே இங்கு ஆத்ம சாந்தி கிடைப்பதில்லை.

அதற்குப் பின் உங்களை அழைத்துச் செல்லும் பிராமணர், நீங்கள் எவ்வளவு ரூபாய் கொடுத்தீர்களோ அதற்கு தகுந்தாற்போல் சுலோகங்கள் சொல்லுகிறார். ஐம்பது ரூபாய்க்கு ஓரிரு நிமிடங்களில் முடிந்து விடும் சடங்கு, ஆயிரம் ரூபாய்க்கு அரை மணி நேரம் வரை கூட நீளுகிறது. நீங்கள் எந்த சாதி என உங்களுக்கே தெரியவில்லையென்றால், இருக்கவே இருக்கிறது பசுத்துறை. இதன் படிக்கட்டுகளில் அமர்ந்து அல்லது, உங்களுக்கு தைரியமிருந்தால், இந்த நீரில் முழுகி உங்கள் பாவங்களை போக்கிக் கொள்ளலாம். இந்த சடங்குக்கு இங்கிலாந்தின் ராணியும் விதிவிலக்கல்ல


இதற்குப்பின், பிரம்மனை தரிசிக்க நீங்கள் இன்னமும் விரும்பினால், அங்கு வேண்டுதல்கள் ஏறெடுத்து காவடி தூக்கி வரும் பக்த கோடிகளிடம் இருந்து தப்பித்து, எப்படியாவது கோவில் முகப்பிற்கு சென்று விடுங்கள்.




கோவில் முகப்பிலேயே நம்மை முகம் சுழிக்க வைக்க, அத்தனை வியாபாரிகளும் கடும் தவமிருக்கிறார்கள். கோவிலுக்குள் செருப்பு அணிந்து செல்லக் கூடாது. ஆமாம், நல்ல விஷயம்தான். ஆனால், கோவில் பிரகாரம் நாம் கால் வைக்குமளவு சுத்தமாயிருக்கிறதாவென்றால், அருவருப்புதான் மிஞ்சுகிறது. அத்தனை அசுத்தங்களுக்கு நடுவில்தான் பிரம்மனே வீற்றிருக்கிறார். அப்ப இந்த செருப்பை என்ன பண்ணலாம் என நீங்கள் யோசிக்கும்போதே, எங்க கடையில் விட்டுட்டுப் போங்க சார் என அன்பொழுக ஒரு சேர அழைக்கிறார்கள் பூஜை பொருள் வியாபாரிகள். அங்கு செருப்பை விட்டுவிட்டு நகர்ந்து போனால், நம்மை கெட்ட வார்த்தை சொல்லி திட்டுகிறார்கள். பூஜை பொருள்களை வாங்காமல் எதுக்குடா இங்க செருப்பை விட்ட, பன்னாடை, பரதேசி என இன்னும் அசிங்கமான வார்த்தை பிரயோகங்கள். ஒருவேளை எனக்கு ஹிந்தி தெரியாது என நினைத்தார்களோ தெரியவில்லை. ஒருவழியாய் அவர்களை சமாளித்து, பல படிகளை கடந்து மேலே ஏறிச் சென்றால், ஒரு சிறிய கர்ப்ப கிருகம். அதற்குள் காட்சி தருகிறார் இந்த படைப்பின் பிதா. அவரை காண்பதற்குள் பூசாரிகள் பிடித்து, நம்மை ஒரு தள்ளு தள்ள, அந்த படிக்கட்டுகளில் உருண்டு விழுந்து விடாமல், பத்திரமாக மீண்டும் இறங்கி விடுவது என்பது ஒரு இமாலய சாதனைதான். ஆனால், எல்லாருக்கும் முன்னால் வந்து நின்று கொண்டு ஒரு ஆயிரம் ரூபாய் தாளை மடித்து பூசாரி கையில் வைத்தால், பிரம்மனின் திவ்ய தரிசனம் நிச்சயமாகிறது.

ஆலயத்திற்குள் புகைப்படம் எடுக்கக் கூடாதாம், அதனால் ஏரிக்கரையில் பசுமாட்டின் துணையுடன் சும்மா அமர்ந்திருக்கும் இந்த பிரம்மனை கண்குளிர தரிசித்தோம்.






இது போக புஷ்கர் நகரத்தில் ஒட்டகசந்தை மிக பிரசித்தமாம். நாங்கள் சென்ற பொழுது ஒரு சில ஒட்டகங்களே அசை போட்டவண்ணம் படுத்திருந்தன.





(ஒட்டகங்களின் அருகில் நம் அமெரிக்க நண்பர்)

உணவு உண்ண ஒரு நல்ல ஹோட்டலாவது இருக்காதா என தேடி களைத்து விட்டு மறுபடியும் அஜ்மீர் வந்தே சாப்பிட்டோம்.

முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலோ அல்லது, நீங்கள் எப்பொழுதாவது வாழ்க்கையில் பாவம் செய்து விட்டோமோவென ஒரு சந்தேகம் வந்தாலோ, இந்த மானசரோவர் ஏரிக்கு வந்து ஒரு முறை பூஜை செய்து விட்டு வாருங்கள். உங்களுக்கு அருகிலேயே உங்களுடன் வாழ்ந்து வரும் பல வித உயிர்களின் படைப்பை பற்றிய சந்தேகங்கள் வரும் பொழுதெல்லாம், இங்கு வந்து இந்த பிரம்மனிடம் “ஏண்டாப்பா, நான் என்ன பாவம் பண்ணினேன், என்னை மாத்திரம் இந்த ஜென்மங்களுக்கு நடுவுல படைச்சுட்டயே” என முறையிட்டுச் செல்லுங்கள்.

Thursday, April 15, 2010

கஜுராஹோ - சிற்பங்களின் நகரம் - பயணக் குறிப்பு





பாகம் 1 – கந்தர்வ நாடகம்.

கஜுராஹோ என்றவுடன் எல்லாருக்கும் அந்த அதீத உடலுறவுச் சிற்பங்களே ஞாபகத்துக்கு வரும். ஆனால் இங்கு வந்து பார்ப்பவர்களுக்குத்தான் இந்த சிற்பங்கள் பேசும் வார்த்தைகள் புரியும். போருக்குச் செல்லும் வீரர்கள் கூட்டம், யானைப் படையின் அணிவரிசை, உள்ளங்கையில் தன் முகம் பார்த்து அலங்காரம் செய்யும் இந்திர லோகத்து சுந்தரிகள், விஷ்ணுவின் வெவ்வேறு அவதாரங்கள், சிவனின் தாண்டவ நர்த்தனங்கள், திமிறும் காளைகளை அடக்கியாளும் வீரர்கள், குளித்து முடித்து கூந்தலுலர்த்தும் அழகிகள், தனது நிர்வாணத்தை தானே ரசிக்கும் அதீத சுந்தரிகள், மனித உடலின் ஒவ்வொரு அணுவிலும் எதிர்பாலின தீண்டலால் கிளம்பும் காம இன்பத்தை மோகித்து அனுபவிக்கும் ஆணும் பெண்ணும் என உலகில் பிறந்த மாந்தர்கள் கண்ணில் படும் அனைத்து காட்சிகளையும் இந்த மணற்கற்களில் சிற்பங்களாக வடித்து விட்டான் ஒரு பெயர் தெரியா சிற்பி.













முதலில் இந்த சிற்பக் கோவில்களின் நகரம் உருவான கதை.

கல்தோன்றி மண்தோன்றா காலத்திற்கு முன், எத்தனையோ ஆண்டுகளுக்கு முன், லாங் லாங் எகோ, (டேய், போதுண்டா, ஓவரா பில்டப் குடுக்காத) ஒருநாள், ஹேமவதி என்ற பிராமண சுந்தரி, இன்றைய புனித நகரமான வாரணாசியில் வசித்திருந்தாள். நிலாக்காயும் ஒரு இரவில் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தாளாம். சொக்க வைக்கும் அவள் மேனியழகில் கலங்கிப் போனது குளத்தின் தண்ணீர் மாத்திரமல்ல. அங்கு மௌன சாட்சியாய் நின்றிருந்த அனனத்து ஜீவ ராசிகளும்தான். தன் மேனியழகின் மீதிருந்த கர்வத்தாலோ, அல்லது தன் அழகை கண்டு தானே வியந்திருந்தததலோ என்னவோ, ஹேமவதிக்கு நிர்வாணம் என்பது ஒரு இன்பம் தரும் யோகநிலையாயிருந்தது. குளத்தின் நீளமும் அகலமும் அவளது பிறந்த மேனிக் கோலத்தில் திளைத்து பேச்சு மூச்சு அற்றுப் போயிருக்க, ஹேமவதியும் ஒரு மோன நிலையிலேயே தண்ணீரை அணிந்திருந்தாள். ஆனால் தன்னை வேறு இரு கண்களும் கண்டு ரசிப்பதையோ, அந்த கண்களுக்குரியவர் தன் மீது மையல் கொள்வதையோ அறியாத பேதையாய், குளத்தில் பூத்த மலர்களை மங்கை, குறும்புப் பார்வையால் குசலம் விசாரித்துக் கொண்டிருந்தாள்.





வானத்தில் வலம் வந்த நிலவரசன் கண்களில் காண்பது நிஜம்தானா அல்லது தேவ லோகத்து கன்னிகைகள் இங்கு பூமியில் நீராட வந்தனரோ என குழம்பிப் போய், சிறிது நேரம் தன் பயணத்தை நிறுத்தி நின்ற இடத்திலிருந்தே பாவையின் அழகை பருகிக் கொண்டிருந்தான். பருகப் பருக, ரசனை காதலாகி, காதல் கலவியில் முடிந்தது. அன்று மாத்திரம் வான ஆராய்ச்சியாளர்கள் சரியாய் குறிப்பெடுத்திருந்தால், ஒரு நாள் இரவில் பௌர்ணமி தினத்தன்று ஒளிவீச வேண்டிய வட்ட நிலவு, வானத்தின் வீதிகளில் இல்லாமல் காணாமல் போயிற்று என எழுதி வைத்திருப்பார்கள். ஆம், அன்று இரவு முழுவதும் தன் பணியினை மறந்து, தன் மேன்மையை துறந்து, நிலவு, பூமியில் வாழும் ஒரு பெண்ணோடு மோகித்திருந்தது.

நிலவினைக் கண்டதும் பாவையும் மயங்க, அந்தக் குளம் இவர்கள் இருவரின் காமத்தைத் தீர்க்க தண்ணீராலே படுக்கை கட்டியது. குளத்தில் பூத்த மலர்களெல்லாம் சுகந்தம் வீச, சுற்றி நின்ற மரங்களெல்லாம் திரைகளாக, இருபது விரல்கள் தாளமிட, இரண்டே இரண்டு பேர் இணைந்து நடிக்க, அந்த கந்தர்வ நாடகம் களிப்புடன் அரங்கேறியது.

பிறகென்ன, நாடகம் முடிந்ததும், வான வீதியில் என்னைத் தேடுவார்களே, சாரதியில்லாமல் ரதம் தடுமாறும் எனச் சொல்லி நிலவரசன் சடுதியில் மறைந்தான். நிலவு பறந்து விட, பாவைக்கு பசலை நோய் கண்டது. நாட்கள் கடந்தது, பழுத்த பலாப்பழமும், இனித்த காமப் பொழுதும் எப்பொழுதும் ரகசியம் காத்ததில்லை. ஆம், ஹேமவதியின் கருவறைக்குள் புதிதாய் ஒருவன் புகுந்து கொண்டான். புதிய வரவு பூரிப்பை தந்தாலும், இந்த வரவுக்கு முகவரி தரும்படி நிலவினை வேண்டினாள் ஹேமவதி.

நிலவிடமிருந்து கட்டளை வந்தது, என் உயிரின் உயிரே, உலகம் தெரிய உன்னைக் கைபிடிக்கவில்லை நான், நமக்கு நாமே மாலை சூடினோம், நட்சத்திரங்களை சாட்சிக்கழைத்தோம், மரங்கள் கூடி அட்சதை தூவ, பட்சிகள் அனைத்தும் மந்திரம் ஓத, கண்களினாலே சம்மதம் சொல்லி கலந்திருந்தோம், நாம் இணைந்திருந்தோம், ஒருவருக்கொருவர் இனித்திருந்தோம். இனி நான் சொல்வதைக் கேள். உன்னிலிருப்பவன் வாளால் உலகை ஆள உதித்தவனல்ல. அவன் கலையால் ஆளப் போகிறவன். அவன் ரத்தம் சிந்தி வெற்றி காண மாட்டான். ஆனால், மொட்டைக் கற்களுக்கு உளியால் உயிர் கொடுத்து பிறர் மனம் வெல்வான். ஆகவே இந்த வாரணாசி என்னும் தேவர்களின் நகரத்தில் அவன் பிறக்க வேண்டாம். அவனை சோலைவனங்களில் பிறக்க வை. மலையும், மரங்களும் அவனுக்கு வீடாகட்டும். இப்பொழுதே கிளம்பி, சூரியன் உதிக்கும் திசைக்கு எதிரே செல். பேரீச்சம் பழ மரங்கள் நிறைந்த சோலையை காண்பாய். அங்கே என் மகன் பிறக்கட்டும். (பேரீச்சம் பழம் = கஜூர் (ஹிந்தியில்), கஜுராஹோவின் பெயர் காரணம்).

தலைவனின் பேச்சுக்கு மறு பேச்சேது. ஹேமவதி புறப்பட்டாள். வயிற்றில் புரண்ட நிலவின் வித்து, தரையை கண்டதும் சந்திர வர்மன் எனப் பெயர் கொண்டான். இன்றைய புந்தேல்கண்ட் பிரதேசத்தில் வலிமை கொண்ட ஆண்மகனாய் உருவெடுத்தான். தன் 16 வது வயதிலேயே, சிங்கத்தையும் புலியையும் வெறும் கரங்களால் கிழித்துப் போடும் கட்டிளம் காளையாய் வடிவெடுத்தான். அவனது கடின உழைப்பில் உருவானதுதான் புந்தேல்கண்ட் ராஜ்ஜியத்தின் கோட்டையான “கலிஞ்சர்” கோட்டை. நிலவுதேவனின் கட்டளைப் படி அவன் 85 கோவில்களையும் கட்டினான்.

அவன் கட்டிய கோவிலுக்குள் அடுத்த வாரம் செல்வோம்.