Monday, February 27, 2012

அழித்து விடு அர்ஜுனா...

“”எதிரே நிற்பவர்கள் என் குடும்பத்தார், என் உறவினர்கள், நேற்று வரை ஒரே குடும்பத்தில் ஒரே உறைவிடத்தில் ஒன்றாய் வளர்ந்து, ஒன்றாய் உறங்கி, ஒன்றாய் உண்டு களித்தவர்கள் என்ற உறவின் உணர்வுகளை ஒட்டு மொத்தமாய் கொன்று விடு, அம்பராத்தூணியில் அயர்ந்துறங்கும் அம்பை எடு, வில்லில் பொருத்தி நிமிர்த்திப் பிடி, புருவத்துக்கு மத்தியில் புலன்களை அடக்கு, எதிரில் தெரிவது அதர்மம் எனும் எதிரி மட்டுமே, நாணை இழு, அம்பின் கூர்முனைக்கு அதர்மம் வாழும் இதயம் மட்டுமே இலக்காக்கட்டும். அர்ஜுனா, அழித்து விடு, விழுவது உறவானாலும், அழிவது அதர்மமாகட்டும்””

குருஷேத்திர என்கவுண்டர் நமக்கெல்லாம் ஒரு பால பாடம். எத்தனையோ யுகங்கள் கழிந்த பின்பும் இந்த என்கவுண்டர் நியதி இன்னும் நியாயப் படுத்தப்படுவது இந்திய மண்ணின் இயல்பாகிப் போனது.
குற்றங்கள் எவ்வகையாயினும், மனித சமூகத்தின் உச்ச பட்ச தண்டனைகளை விசாரணையில்லாமலே வாரி வழங்கிவிட, அதிகாரம் எனும் தர்மத்தின் செங்கோல், கேள்விகள் ஏதுமில்லாமல் அனுமதி அளிக்கிறது. பசு மேடையேறி மணியை அடித்தவுடன், விசாரணை ஏதுமில்லாமல் தன் மகனையும் பலி கொடுப்பவர்களின் செயல் இங்கு நீதியை நிலை நாட்ட செய்த தியாகமாகத்தான் சித்தரிக்கப்படுகிறதே ஒழிய, அது ஒரு விசாரணை இல்லா படுகொலை என்பதும் அரச அதிகாரத்தின் உச்ச பட்ச துஷ்பிரயோகம் என்பதும் சௌகரியமாக மறைக்கப்படுகிறது. ஒரு கல்லில் இரண்டு மாங்காயாக ஒரு தகப்பனின் தியாகம் எனவும், மன்னனின் நீதி வழுவாமை எனவும் புண்ணியச் செயல்களின் சாயம் பூசப் படுகிறது.

ஆமாய்யா, உன்னோட பணத்தை திருடிட்டு போயிருந்தா உனக்கு வலி தெரியும்...
உன்னோட வீட்டுக்கு பக்கத்துல ஒருத்தன் துப்பாக்கி எடுத்துட்டு சுட்டுகிட்டிருந்தா இந்த பாலபாடம், குருஷேத்திரம்கர புண்ணாக்கெல்லாம் பேசுவியா???
அவனை புடிக்கப் போன போலீஸ்ல உன்னோட அண்ணனோ தம்பியோ இருந்திருந்து அவனை வீட்டுக்குள்ள ஒழிஞ்சிருக்கறவன் துப்பாக்கியால சுட்டிருந்தா இப்பிடித்தான் கேள்வி கேப்பியா???
அது எப்பிடியா போலீஸ்காரன் மாத்திரம் கருணையின் மறு உருவமா இருக்கணும்னு சொல்லி சொம்பு தூக்கீட்டு கொஞ்சம் கூட கூசாம ஜால்ரா போடறீங்க???
ரோட்ல நீ வண்டி ஓட்டும் போது, உன்னை ஒருத்தன் முந்திகிட்டு போனாலே அவனை கெட்ட வார்த்தைல திட்டற நீ, உன்னை ஒருத்தன் அருவாளை எடுத்து வெட்ட வரும்போது, ஏ, கொஞ்சம் நில்லுப்பா, அதாவது அஹிம்சைங்கறது என்னான்னா........ அப்பிடின்னு நீதி போதனை பண்ணிகிட்டிருப்பயா????
வந்துட்டானுக சும்மா, மனித உரிமை, மண்ணாங்கட்டி பெருமைன்னு பேசிகிட்டு...போய்யா..., போய் பொழப்ப நடத்தற வழியைப் பாருய்யா....
எல்லாருடைய மனதிலும் மேற்கண்ட கேள்விகள் ஊற்றென பெருக்கெடுத்து வருவதும் இயல்புதான்.

இந்த அவசர யுகத்தில் உடனடி தீர்வுகளை நோக்கி மனித மனம் ஏங்கித் தவிப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. பொறுமை என்பது காட்சிப் பொருளாய் மாறி விட்ட இந்த யுகத்தில் உடனடி தீர்வுகள் மட்டுமே மனம் விரும்பும் மந்திரமாயிருக்கிறது. புண்ணை அறுத்து சீழ் பிதுக்கி, தீயால் சுட்டால், புண்ணை உருவாக்கும் கிருமி அழிந்து போவதோடு, இன்னொரு முறை புண் வருவதற்கான சாத்தியமே இல்லாது போகும். இது நிரந்தர தீர்வு. ஆனால், புண்ணுக்கு மேலே களிம்பு பூசி, சருமத்தை மட்டும் சரி செய்து விட்டால், பார்ப்பதற்கென்னவோ சருமம் அழகாகலாம். ஆனால், புண்ணும் புரையும் குணப்படுவதில்லை.

இப்படித்தான் இன்று எல்லா சமூகப் பிரச்சனைக்கும் உடனடி தீர்வு விரும்பப் படுகிறது. கடிக்கும் கொசுவிலிருந்து நம்மை பாதுகாக்க, கவச வளையங்களின் பாதுகாப்பை நம்பும் நாம், கொசு உற்பத்தியை தடுக்க விழைகிறோமா என்றால் இல்லை. எட்டு மணி நேரத்திற்கு கொசுத்தொல்லையிலிருந்து விடுதலை என்ற விளம்பரத்தில் மயங்கிப் போகும் நாம், கொசுவிலிருந்து நிரந்தர விடுதலை எப்படி என யோசிக்க மறுக்கிறோம்.

கொள்ளைக்கு கொலைதான் மருந்தென்பது புரையோடிய புண்ணை மூடி மறைத்து களிம்பு புசி சருமத்தை அழகு செய்யும் அலங்கார வைத்தியமே தவிர, புண்ணை புடமிட்டு குணப்படுத்தும் சரியான வைத்தியமல்ல.
கொள்ளை ஒரு சமுதாய வியாதி என்றால், இந்த கொலை செய்யும் வியாதிக்கு எது மருந்து???

மின்வெட்டால் உற்பத்தித் துறை முழுவதும் முடங்கிக் கிடக்கிறது. மதுரை, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இருக்கும் பஞ்சாலைத் தொழிலாளர்கள் இப்பொழுதே நகைகளையும், வாகனத்தையும் அடமானம் வைத்து சோறு தின்ன வேண்டிய அவல நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறார்கள். மின் வெட்டால் பொதுத் தேர்வு எழுத வேண்டிய மாணவர்கள் இருட்டில் படிக்க வேண்டிய கட்டாயம் வந்ததில், ஒரு சந்ததியின் எதிர்காலமே கேள்விக் குறியாகி நிற்கிறது. நெற்களஞ்சியமாம் தஞ்சையில் விவசாயிகள் ஈரத் துண்டுகளை தயார் நிலையில் வைத்துக் கொண்டுள்ளனர்.

மக்களின் கோபம் ஒட்டு மொத்தமாய் வெடித்துச் சிதறும் முன் எதையாவது செய்து மக்கள் கவனத்தை திசை திருப்ப வேண்டிய கட்டாயத்தில் ஆளும் வர்க்கம் உள்ளது. தொடர் கொள்ளைகளில் ஒரு துப்பும் கிடைக்காமல் திண்டாடிய காவல் துறையின் ஒட்டு மொத்த கோபத்தின் வெளிப்பாடாய் ஒரு கொலை நாடகம் அரங்கேறியுள்ளது.

மக்களும் இதை இரண்டு நாட்கள் விடிய விடிய, வாய் வலிக்க வலிக்க பேசுவார்கள். மனித உரிமை, மக்களின் பெருமை, மடிவது கொடுமை, மடிசார் அருமை, மறப்பது சிறுமை, முனியம்மா கண்மை என ஒரு சில அறிவு ஜீவிகள் டை கட்டிக்கொண்டு, தொலை காட்சியில் நுனி நாக்கு ஆங்கிலத்தில் மினரல் வாட்டர் குடித்துக் கொண்டு பேட்டி கொடுப்பார்கள். ஊடகங்களும் அடுத்த ஊழல் வெடிக்கும் வரை, அடுத்த நடிகை அம்மாவாகும் வரை, அடுத்த ஆசிரியர் கொல்லப்படும் வரை, ஐந்து மாநில தேர்தல் முடிவு வரை இதே மாவை அரைத்துக் கொண்டிருப்பார்கள்.

மக்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வை முன்வைக்காமல், தற்காலிகமாக களிம்பு பூசி அழகு பார்க்கும் குறுகிய நெஞ்சுடையோர் கைகளில் அதிகாரம் இருக்கும் வரை, அர்ஜுனா நீ சூதாடினாலும் அதுவும் தர்மமே, உன் வீட்டு பெண்ணை பணயம் வைத்து, பெண்ணும் ஒரு போகப் பொருள்தான் என சொல்லாமல் சொன்னாயே அதுவும் தர்மமே, நட்ட நடு சபையில் உன் பெண்ணின் உடல் தெரிய அவள் உடைகள் உரியப் பட்ட பொழுதும் சூதாட்ட விதிகளுக்கு முற்றும் கட்டுப்பட்டு முழுதும் மௌனம் காத்தாயே அதுவும் தர்மமே, அதர்மம் எதுவென்று அதிகாரம் படைத்த நான் அரிச்சுவடி சொல்லுகிறேன். ஆர்த்தெழு அர்ஜுனா, அம்பை வில்லில் பொருத்து, புருவத்துக்கு மத்தியில் புலன்களை அடக்கு, நாணை இழுத்து நன்றாக குறி பார், வில்லில் வீரனான உன் முன் நிற்கும் எதுவும் அதர்மமே... வில் வித்தை எனும் அதிகாரம் உன் கையில் இருக்கும் வரை உன் முன் நிற்கும் எதுவும் அதர்மமே... அழித்து விடு அர்ஜுனா.... அழித்து விடு.....

3 comments:

Raju said...

\\இந்த அவசர யுகத்தில் உடனடி தீர்வுகளை நோக்கி மனித மனம் ஏங்கித் தவிப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது\\

இதுதான் நிதர்சனம் அண்ணே!

Sundara Cholan said...

உங்களது பதிவுகள் நம்மைப் போன்று சிந்திக்கும் பலர் இருக்கிறார்கள் என்பதை அடையாளம் காட்டி ஆறுதல் படுத்துகிறது. அது சரி, ஏன் கொஞ்ச நாளாக உங்களிடம் இருந்து எந்தப் பதிவும் இல்லையே ஏன்?

ஸ்ரீராம். said...

பிரச்னைகளைத் தீர்க்க வழி தெரியாமல் திகைக்கும் அரசு... கவனத்தைத் திசை திருப்புவதால் என்ன பயன்? ம்..ஹூம்!