Wednesday, February 9, 2011

ஜாதிகள் உள்ளதடி பாப்பா !!!!!! - (பாகம் 1)


ஒரு கல்லூரியில் என் மேற்படிப்புக்காக விண்ணப்பித்தேன். உங்களின் எல்லா சான்றிதழகளையும் பார்க்க வேண்டும் என்றார்கள். என் ஜாதகம் தவிர மற்ற அனைத்தையும் எடுத்துக் கொண்டு போனேன்.

“சார், எல்லாம் வெச்சிருக்கறீங்க, ஜாதி சர்டிபிகேட் இல்லையே சார்??”
“சார், ஜாதியெல்லாம் நான் பார்க்கறதில்லை சார்”
“அது சரிதான் சார், ஆனா, அரசாங்கம் கேக்குதே?”
“சார், என் பள்ளி மற்றுச் சான்றிதழ்ல ஜாதி போட்டிருக்குதே சார், அது போதாதா?”
இப்பொழுது, பேசிக் கொண்டிருந்த கல்லூரிப் பணியாளரின் குரல் கொஞ்சம் மாறுபடுகிறது...
“இங்க பாருங்க சார், ஜாதி சர்டிபிகேட் கொண்டு வந்தா, உங்களுக்கு அட்மிஷன் கிடைக்கும், இல்லைன்னா இல்லை, அவ்வளவுதான், இடத்தை காலி பண்ணுங்க”
ஒரு சமத்துவ விரும்பியை சோதித்துப் பார்ப்பதில் சமுதாயத்திற்கு இவ்வளவு ஆனந்தமா என யோசித்து விட்டு நடையைக் கட்டினேன். இனி ஜாதி சர்டிபிகேட் வாங்குவது எப்படி என்ற ஒரு பெரிய கேள்விக்கு யார் பதிலளிப்பார்கள் என்று கிட்னியை கசக்கி சாரி, சாரி, மூளையை கசக்கி யோசித்ததற்கு கை மேல் பலன் கிட்டியது. நமது மாண்புமிகு வார்டு கவுன்சிலரை கேட்கலாம் என நினைத்து அவருக்கு தொலை பேசியதும் மிகவும் கனிவாக பதிலளித்தார்.
“ஜாதி சர்டிபிகேட் தான சார், அது ஒண்ணும் பிரச்சனையில்லை சார். நீங்க உங்க ரேசன் கார்டு காப்பி ஒண்ணு, உங்க பள்ளி சான்றிதழ் காப்பி ஒண்ணு எடுத்துட்டு, கூடவே ஒரு விண்ணப்பமும் எழுதி எடுத்துகிட்டு, கிராம நிர்வாக அலுவலர் ஆபீஸூக்கு போய், அவர் கிட்ட ஒரு கையெழுத்து வாங்கிக்கிட்டு, அப்புறமா, ரெவின்யூ இன்ஸ்பெக்டர் கிட்ட ஒரு கையெழுத்து வாங்கிட்டு, அப்பிடியே தாலூக்கா ஆபீஸுக்கு போனீங்கன்னா அங்க அப்ளிகேஷனை வாங்கி வெச்சுட்டு என்னைக்கு வரணும்னு சொல்லுவாங்க, அப்ப போய் சர்டிபிகேட் வாங்கிக்கங்க” என ஒரே மூச்சில் சொல்லி முடித்தார். இப்படி சென்னை நகரம் முழுவதையும் கிரிவலம் வந்து இந்த மூன்று மூர்த்திகள் கையொப்பம் இட்டு நான் இன்ன ஜாதியை சேர்ந்தவன் என்று சொன்னால் தான் நான் மேல் படிப்பு படிக்க முடியும் என நினைத்தால் இந்த படிப்பு அவசியமாவென யோசிக்க தோன்றியது.
இருப்பினும் விதி வலியது அல்லவா? கொஞ்சம் கிரிவலம் வருவோமேவென கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் சென்றேன். ஒரு பத்துக்கு பத்து அறைக்கு இரண்டு ஜன்னல்கள் வைத்து, ஒரு பக்கத்தில் ஒரு இரும்பு கதவில் அரதப் பழசான ஒரு பூட்டுடன், கிராம நிர்வாக அலுவலகம் என்ற பெயர்ப் பலகையை தலையில் தாங்கியவண்ணம் இருந்த அந்த அலுவலக அறையை பார்த்தாலே கிராம நிர்வாகம் எப்படி இருக்கிறதென்று சொல்லி விடலாம். காலை ஒன்பது மணிக்கும் பூட்டு தொங்கிய அலுவலகத்தை பார்த்ததும் இன்னும் விடியவில்லையோ என சந்தேகம் வர, யாரிடமாவது கேட்கலாம் என நினைத்து அங்கு விசாரித்ததில் “ வழக்கமா 10 மணிக்கெல்லாம் திறந்துருவாங்க சார்” என பதில் கிடைத்தது. காத்திருந்து, காத்திருந்து, காத்திருந்......, ஆ யாரோ பூட்டைத் திறக்கிறார்கள். ஒரு 20 வயது மதிக்கத்தக்க வருங்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒன்று கதவைத் திறந்து விட்டு, உள்ளே இருந்த மேஜைகளில் இருந்த காகிதங்களை ஒழுங்காக அடுக்க ஆரம்பித்தார்.
”சார், வணக்கம்” என்றேன்.
தன் வேலையில் சற்றும் கவனம் பிசகாமல் எங்கும் திரும்பாமல், எனக்கு முதுகை காண்பித்தபடியே, “வோட்டர் ஐ.டி. யெல்லாம் இங்க பாக்கறதில்லை சார், எந்த டீச்சர் வந்து உங்க வீட்ல பேர் எழ்துனாங்களோ, அங்கியே போய் பேசுங்க”
“சார் அதில்லை சார், நான் வேற விஷயத்துக்காக வந்தேன்”
“அப்ப வீ.ஓ வரங்காட்டியும் வெளீல வெயிட் பண்ணுங்க”.
இன்னும் அவரது முக தரிசனமே கிடைக்காத ஏமாற்றத்தில் நான் வெளீல வெயிட்டினேன். சிரிது நேரத்தில் ஒரு ஒல்லியான தேகத்துடன் ஒருவர் சைக்கிளில் வந்து இறங்கி, அந்த சைக்கிளை அலுவலக சுவரோரம் நிறுத்தி விட்டு, கவனமாக பூட்டினார். ஒருவேளை இவர்தான் அவரோ என ஒரு வினாடி நினைத்துவிட்டு, சே, இவரா இருக்காதுப்பா, என நினைத்துக் கொண்டு, இவர் யார் என பார்த்தால் அவர் எழுத்தராம். என்ன எழுதுவாரோ தெரியவில்லை.
அவருக்கும் ஒரு வணக்கம் சொல்லிவிட்டு நான் வந்த நோக்கத்தை சொன்னவுடன், என்னை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, என் கையிலிருந்த காகிதங்களை வாங்கினார். முதல் பக்கத்தை பார்த்தவுடன் முகத்தில் அப்படி ஒரு கோபம் கொப்பளிக்க, “இது யார் எள்துனது???” என கேட்டார்.
”சார், நான் நா நானேதான் எழுதினேன்”
“உன்க்கு எள்த தெர்ஞ்சா, நீயே எள்தீர்வையா? இன்னா எள்தணும்னு உன்கு தெரிமா??, இதெல்லாம் வேலைக்காவாது, அதா அந்த பொட்டிக்கடைல, ஜாதி சர்டிபிகேட்டுக்குனு ஒரு ஃபார்ம் குடுப்பாங்க, அத்த வாங்கினு வா, நீயெல்லாம் எள்த கூடாது, அதுக்குதான் நாங்க இர்க்கறோம், தெர்தா”
நான் அந்த அதா,அந்த பொட்டிக்கடைக்கு போய் பத்து ரூபாய் கொடுத்து, ஒரு ஃபார்ம் வாங்கி, அதை அந்த எள்த தெரிஞ்சவரிடத்தில் கொடுத்து விட்டு அடுத்த கட்டளைக்காக கால் கடுக்க நின்றேன். என்னை நிமிர்ந்து பார்த்து விட்டு என் சான்றிதழ்களை கேட்டவர், ஃபார்ம்மில் என் பெயரை எழுதிவிட்டு
“இன்னா ஜாதி??” என்று கேட்டவுடன் தான் அந்த பயங்கரம் நிகழ்ந்தது. எங்கிருந்தோ பறந்து வந்த இரண்டு வாக்காளர் அட்டைகள் அவரது தலையில் மோதி மேஜையில் விழுந்தன. இந்த ஏவுகணைகளை ஏவியது யார் என அவர் நிமிர்ந்து பார்த்ததும், ரௌத்திரம் நிரம்பிய பார்வையுடன் ஒரு தாய்க்குலம்....
“நீ, இன்னா நென்ச்சுனுக்கற, இல்லா இன்னா நெனச்சுனுக்கறேன்னு கேக்கறேன்??”
”ஏம்மா, இன்னா பிரச்சனை உன்க்கு??”
“இன்னா பிரச்சனையா, பண்றதெல்லாம் பண்ணிட்டு இன்னா பிரச்சனைன்னா கேக்கற நீ, மருவாதி கெட்டுப் போயிரும், சொல்லீட்டன்” அவருக்கு வந்த கோபத்தில் மூச்சு வாங்கியது.
அட்டைகளை திருப்பி பார்த்தபடியே “ இந்தா, இன்னான்னு சொல்லு, சும்மா நீ பாட்டுக்கு பேசினே போனியானா, எனக்கு இன்னா தெர்யும்??”
”இன்னும் இன்னா தெரியணும் உனக்கு? அத்துல இன்னா பேர் போட்டுக்கற நீ ??”
”த்தாம்மா, இது உம் பேர்தான??”
“அத்தெல்லாம் எம் பேர்தான், அதுக்கு கீழ யார் பேரு போட்டுக்குது??”
“யேன், உன் ஊட்டுக்கார் பேர் போட்டுக்குது, அதுக்கு இன்னா இப்ப??”
“அத்து என் வூட்டு ஆம்பளை பேரா, உன்க்கு தெரிமா, என் வூட்டு ஆம்பள பேர் இன்னான்னு தெரிமா??’
”பின்ன இத்து யார் பேரு, இன்னா வோணும் உன்க்கு??”
“மேல எம்பேர் போட்டுனு, புருஷன் பேர்ல பக்கத்து வூட்டுக்காரன் பேர் போட்டுக்கறயே, முட்ச்சவிக்கி, நீயெல்லாம் நல்லார்ப்பயா நீ, முட்ச்சவிக்கி, என் வாய்ல நல்லா வர்து ஆமாம்”
இப்பொழுதுதான் பிரச்சனையின் முழு பரிமாணத்தையும் புரிந்து கொண்ட அவர், “ஏம்மா, இதுக்கு நான் இன்னா பண்றது??, யாரு உங்க வூட்டாண்ட வந்து பேர் எள்தினு போனாங்களோ அவுங்க கைல் போய் கேளுமா, எங்கிட்ட இன்னா வீரங்காட்டற நீ??”
”அவுங்கள இன்னா கேக்கறது, கார்டு நீதான் குட்க்கற, அப்ப யார் பேரு எங்க எள்தீக்குதுன்னு பாக்க வேண்டா நீ, உன்கெல்லாம் கவுர்மெண்ட்ல இன்னாத்துக்கு சம்பளம் குட்க்கறாங்க??”
“த்தா, அந்த பையன் கைல ஒரு கம்ப்ளெயிண்ட் எள்தி குட்த்துட்டு போ, அப்பாலிக்கா கரெக்‌ஷன் ஆகி வந்தா வந்து வாங்கிக்க”
“த்தா, அத்த எள்தறதெல்லாம் இருக்கட்டும், இப்ப என் வூட்டு ஆம்பள என்ன சந்தேகப் பட்டுனுக்கறான், அதுக்கு இன்னான்ற??”
“அதுக்கு நான் இன்னாம்மா பண்றது, யாரோ தப்பு பண்ணாக்கா, நீ இங்க வந்து சவுண்ட் உட்டுனுக்கற, எள்துனவுங்களை போய் கேளு போ”
பிரச்சனையின் தீவிரத்தை புரிந்து கொண்ட அந்த பூட்டைத் திறந்த பையன் அந்தப் பெண்மணியை சமாதானப் படுத்தி வேறு பக்கமாக நகர்த்திக் கொண்டு போனார்.
எழுத்தர் இந்த அதிர்ச்சியிலிருந்து விடுபட்டு, என்பக்கம் திரும்பி “ சார் நீங்க என்ன ஜாதின்னு சொன்னீ........”
“ஏம்பா, அந்த சேலை குடுக்கறேன்னு சொன்னாங்களே, எங்க குடுக்கறாங்க??” என்றபடி ஒரு வயதான அம்மாள் வந்தார்.
“அம்மா, சேலை எல்லாம் இப்ப குடுக்கறதில்லைமா, மத்தியானத்துக்கு மேல வா”
“யேன், இப்ப குட்தா இன்னாவாம், கவுர்மெண்ட் குடுக்கறதை எட்து குடுக்க உன்க்கு கஷ்டமாக்குதா”
“எனக்கு வேற வேலைக்குதும்மா, நீ மத்தியானம் வாம்மா”
“எத்தினி மணிக்கு வர்றது???”
“ஒரு மூணு மணிக்கா வாம்மா, இப்ப எட்த்த காலி பண்ணு”
“அப்ப மூணு மனி வரைக்கும் என்ன குளிக்காத இர்க்க சொல்றியா, நீ எப்ப சீலை குடுக்கறது, நான் எப்ப குளிச்சுகுனு கட்றது??”
என்னை பரிதாபமாக பார்த்தவர், “சார், நீங்க ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க சார்” என சொல்லி விட்டு அந்தம்மாவுக்கு சேலையை எடுத்து கொடுத்து விட்டு, கை ரேகையை பதிவு செய்து விட்டு, வந்து மறுபடியும் “சார், நீங்க என்னா ஜாதி...........??”
இப்பொழுது கோரஸாக ஒரு மூன்று பெண்களின் குரல், “இந்த எலெக்‌ஷன் கார்டு எங்க குடுக்கறாங்க” என கேட்க, இவர் என் பக்கம் திரும்பி “ சார் நீங்க என்ன ஜாதியானாலும் சரி, இதுல நீங்களே எள்தினு வந்திருங்க சார்” என்றார்.
“சார், நீங்கதான் இதுல யாரும் எளுத கூடாதுன்னு சொன்னீங்களே???”
”அதெல்லாம், எளுத படிக்க தெரியாதவங்களுக்கு சார், பட்ச்சவங்க நீங்க என் நிலைமைய புரிஞ்சுக்கங்க சார்” என என் கையில் மொத்த காகிதங்களையும் திணித்தார்.
(இன்னும் வரும்)


Monday, January 3, 2011

கிடா வெட்டி கிறிஸ்மஸு


அது என்னமோ தெரியல, எல்லாருக்கும் கிறிஸ்மஸுன்னாலே கேக் ஞாபகம்தான் வருது. எப்படி இஸ்லாமியர்களுக்கு மட்டுமே பிரியாணி செய்யத் தெரியும்னு ஒரு மூட நம்பிக்கை இருக்குதோ, அது மாதிரி கிறிஸ்தவங்க எல்லாருமே கேக் செஞ்சுதான் கிறிஸ்மஸ் கொண்டாடுவாங்கன்னு ஒரு அதி மூட நம்பிக்கை மக்கள் மனசுல இருக்குது. (தெரிந்தோ, தெரியாமலோ, புரிந்தோ புரியாமலோ, அறிந்தோ அறியாமலோ, நான் கொஞ்சம் கூட விரும்பாத பட்சத்திலும், எந்தையும் தாயும் எனக்கீந்த பெயர் காரணத்தினால் கிறிஸ்தவன் என்ற முத்திரை என்மீது குத்தப் பட்டிருப்பது ஒரு தவிர்க்க முடியாத வேதனையான விஷயமே). கிறிஸ்மஸ் வந்தாலும் வந்துச்சு, கேக் எங்க, கேக் எங்கன்னு எல்லாரும் பிச்சு குதறி எடுத்துட்டாங்க. ஆனா, நாங்க கேக் வெட்டற கிறிஸ்தவங்க இல்லை, கிடா வெட்டற கிறிஸ்தவங்கன்னு எத்தனை பேருக்கு சொல்லறது.....

இதுல இன்னொரு கொடுமை என்னான்னா, நம்ம தமிழ் கூறும் நல்லுலகத்தில், பண்டிகைன்னு ஒன்னு வந்துட்டா, பக்கத்து வீட்டுக்கு எல்லாம் பலகாரம் குடுக்கணுமாம். தீபாவளிக்கு, பொங்கலுக்கு எல்லாம் பக்கத்து வீடுகளில் இருந்து பலகாரம் வந்துருச்சு, நம்ம கிறிஸ்மஸுக்கு குடுக்கலைன்னா அவுங்க தப்பா நினைச்சுக்குவாங்க என்ற ஒரு நன்றி கலந்த கடமை உணர்ச்சி வேற நம்ம சகதர்மிணிக்கு பொங்கி வழிய, பலகாரம் போடற வேலைல ஏறக் குறைய எல்லா வேலையும் நம்ம தலைல விழுந்து தொலைத்தது.

இந்த வருடம் கிறிஸ்மஸுக்கு முறுக்கு சுடலாம் என்ற விபரீத ஆசை எங்க மேலிடத்துக்கு முறுக்கிக் கொண்டு வர, வீட்டுல இருக்கற அத்தனை பேரோட வாழ்க்கையும் எத்தனையோ முறுக்குகளை சந்திக்க வேண்டி இருந்தது. முதல்ல அதற்கான பால பாடங்கள் வீட்டில் இருக்கும் அத்தனை பேருக்கும் புகட்டப் பட்டு, அதற்கான ஆயத்தங்கள் எதோ அடுத்த ஏவுகணை ஏவப்போகும் விஞ்ஞானியின் கட்டளைகள் போல புறப்பட்டு வந்தது. யாரங்கே, வீட்டுக்கு வெளியே விறகு அடுப்பு மூட்டுங்கள் என விறகு சுமக்க வைத்தார்கள். முறுக்கு பிழிய தனியே ஒரு ஆசனம், அதை வாணலியில் எடுத்து இடுவதற்கென ஒரு தனி ஆயுதம், அடுப்பில் எரியும் விறகு சரியான முறையில் எரிகிறதா என பார்த்து அதை சரியாய் எரிய வைக்க ஒரு குழந்தை தொழிலாளி, முறுக்கு பிழிவதற்கென ஒரு அடிமை என சகல ஆயத்தங்களுடன் இந்த முறுக்கு பிழியும் படலம் ஆரம்பமாகியது. ஒன்றுக்குள் ஒன்றை நுழைந்து இடையில் இருக்கும் மாவை, அடியில் இருக்கும் அச்சின் வடிவத்தில் வெளிக்கொணர அசுர பலத்தில் அந்த முறுக்கு சுட்டியை அழுத்த வேண்டியதாயிற்று. இப்படி அழுத்தியபின் வெளிவரும் நூலிழை போன்ற மாவுக்கு ஒரு வடிவம் கொடுப்பதில் தான் பிரச்சனையே ஆரம்பமாகியது. முறுக்கு என்ற வஸ்து வட்ட வடிவத்தில் தான் இருக்க வேண்டும் என்பது எந்த நாட்டின் விதியோ தெரியவில்லை. இந்த அடிமை அழுத்திய முறுக்குகளெல்லாம் எம். எஃப். ஹுசேனின் மாடர்ன் ஆர்ட் போன்ற வடிவங்களில் வெளிவர, வட்டமாக சுற்றத் தெரியாத நீயெல்லாம்... ம்ஹூம்.... என்பது போன்ற ஏளனப் பார்வைகளை சகித்துக் கொள்ள வேண்டிய அவலநிலைக்கு அந்த அடிமை தள்ளப்பட்டான். (கடைசியில் அந்த ஏவுகணை விஞ்ஞானியும் பல முறை முயன்றும் முறுக்கை ஒரு முறை கூட வட்டமாக சுற்றவில்லை என்பது வேறு விஷயம்).

இப்படியாய் ஒரு நான்கு மணிநேர ரணகள போராட்டங்களுக்குப் பிறகு, முறுக்கு சுற்றும் படலம் இனிதே (ஹூக்கும்... இதுல இனிதே வேற) நிறைவுக்கு வந்தது. அடுத்தது பலரது வேண்டுகோளுக்கிணங்க, ரசிகப் பெருமக்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெறும் வண்ணமாக கேக் செய்யும் கோக்கு மாக்கான ஐடியா எதாவது மேலிடத்தாருக்கு உதித்து விடுமோ என பயந்து கொண்டிருந்தவனுக்கு, கேக்கை வெளியிலயே வாங்கிடலாம்னு சொன்னவுடனே வயிற்றில் பீர் வார்த்த்து,,,,, சாரி, பால் வார்த்தது மாதிரி இருந்தது.

அடுத்ததாக, கிறிஸ்மஸ் அன்று, பிரியாணி செஞ்சாத்தான் அது கிறிஸ்மஸ் மாதிரி இருக்குமாம். அதனால நல்ல கிடாக் கறியாக வாங்கி வருமாறு அடியேன் பணிக்கப் பட்டேன். இப்ப கறிக்கடைக்குப் போய் இதுல பெண்ணாட்டுக் கறி வேண்டாம், ஆணாட்டுக் கறி தான் வேண்டும் சொன்னால் உடனே என்னை ஆணாதிக்க வாதி என்று சொல்லி விடுவார்களோ என்ற பயம் வேறு தனியாய் வதைத்தது. அங்கு தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல், மற்ற எதுவும் இல்லாமல் தொங்கும் சதைப் பிண்டங்களில், ஆணாடு எது, பெண்ணாடு எது என எப்படி கண்டு பிடிப்பது என்பது ஒரு பெரும் போராட்டமாக இருந்தது. வாசகர்கள் விவகாரமாக எதையும் நினைக்க வேண்டாம், அந்த அங்க அடையாளங்களெல்லாம் முற்றிலும் அழித்தொழிக்கப்பட்டுத்தான் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் காதர் பாயின் கறிக் கடையில் ஆடுகளின் உடல்களை தொங்க விட்டிருப்பார்கள். எது எப்படியோ போகட்டும், வதைக்கப் படுவது எப்பொழுதுமே ஆணாடு தானே என்ற தைரியத்தில் கிடைத்த கறியை வாங்கி வந்தேன். இருந்தாலும், இது கிடாக் கறிதானே என வீட்டில் வீசப்பட்ட கேள்விக்கு பலியாடு போல தலையாட்டி வைத்தேன். ஒரு சில தர பரிசோதனைகளுக்குப் பிறகு அது கிடாக் கறிதான் என மேலிடம் சான்றிதழ் அளித்ததும் மறுபடியும் வயிற்றில் பீர்...., சாரி சாரி.....பால்.

மறுபடியும் பிரியாணி செய்யவும் அதே போன்ற ஏவுகணை ஆயத்தங்கள், சராமாரியான கட்டளைகள், சமையலறையே ஒரு போர்க்களம் போல் கோலம் கொண்டு, வீட்டில் இருக்கும் ஒரே ஒரு குழந்தை தொழிலாளியில் ஆரம்பித்து, இருக்கிற ஒரே ஒரு அடிமை வரை எல்லோருடைய முதுகெலும்பையும் முறித்தெடுத்து, கடைசியில் அந்த பிரியாணி என்ற வஸ்து தயாரானதை நினைத்துப் பார்த்தால், பாவிகளை ரட்சிக்க பூவுலகில் மனிதனாய் அவதரித்த கிறிஸ்துவே, ஒவ்வொரு வருடமும் எங்களை இந்த முறுக்குப் பிழியும் மற்றும் பிரியாணி செய்யும் கொடுமையில் இருந்து ரட்சிக்க இன்னொரு முறை பிறக்க மாட்டாயா என வேண்ட வேண்டும் போல இருந்தது.

Thursday, December 23, 2010

நிறங்கள் - ஏன் இப்படி????


நாம் பேசும் பொழுது எதாவது ஒரு விஷயத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வர்ணிப்பதற்கு பதிலாக, ஒரே வார்த்தையில் அதை புரிய வைக்க ஒரு நிறத்தை குறிப்பிடுகிறோம். இப்படி நிறங்களின் குறியீடு ஏன் வந்தது???

1. ஒரு குழுவாய் செயல்படும் மனிதர்கள் மத்தியில் நல்லவன் போல் நடித்து, ஆனால், குழுவுக்கு எதிராய் செயல்படுபவனை ”கறுப்பு ஆடு” என்கிறோமே, இதில் ஏன் கறுப்பு நிறம் சொல்லப் படுகிறது????

2. ஆபாசமாக எழுதி, வக்கிரங்களினால் வாசகர்களை கவர்ந்து தன் விற்பனையை பெருக்கிக் கொள்ளும் பத்திரிகைக்கு ”மஞ்சள் பத்திரிக்கை” என்ற பெயர் எப்படி வந்தது??? இந்த மஞ்சளுக்கும் ஆபாசத்துக்கும் என்ன சம்பந்தம்???

3. ஆண் பெண் உடல் உறவுக் காட்சிகளை படமெடுத்து, அவற்றை காட்சிப் பொருளாக்கி விற்பனை செய்யும் படங்களை “நீலப் படம்” என்கிறோமே, நீலமும் காமமும் எப்படி இணைந்தன???

4. ஒருவரை திட்டும் பொழுது அதீத கோபத்தால் அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட அந்தரங்க அல்லது ரகசிய விஷயங்களை வெளியிட்டு விடுவேன் என மிரட்டுவதற்காக அப்புறம் நான் உன்னைப் பத்தின மேட்டரெல்லாம் “பச்சை பச்சையா” சொல்லீருவேன் என மிரட்டுகிறோமே, பச்சைக்கும் ரகசியத்துக்கும் என்ன சம்பந்தம்???

5. ஒருவர் கையும் களவுமாக பிடிக்கப் பட்டார் என சொல்வதற்கு ஆங்கிலத்தில் “Caught by RED HAND” என்று சொல்கிறோமே, இந்த சிவப்பு நிறமும், களவும் எந்த கோணத்தில் இணைகிறது???

6. அவுருக்கென்னப்பா ”வெள்ளைக் காலர் வேலை” என அலுவலகங்களில் வேலை செய்யும் ஆபீசர்களைக் கூறுகிறோமே, வெள்ளை நிறமென்ன அவ்வளவு உசத்தியா???

7. ஒருவரை ஒரு நிறுவனம் பணியிலிருந்து நீக்கி, பணி நீக்க உத்தரவை வழங்குகிறதென்றால், ஏன் அதை “Pink Slip” என சொல்லுகிறோம். பின்க் நிறத்திற்கும் பணி நீக்கத்திற்கும் இன்னா கனிக்‌ஷன்???

தெரிந்தவர்கள் நிற வாரியாக பதில் சொல்லுங்கள்.

Wednesday, December 22, 2010

காக்கிச் சட்டையில் கண்ணியம்


சென்ற ஞாயிற்றுக் கிழமை, காலை அவசர அவசரமாக சர்ச்சுக்கு கிளம்பும் நேரம், வாசலில் இருக்கும் கிரில் கேட்டில் ஒரு காக்கிச் சட்டை, “ சார், கதவைத் திறங்க” என்ற கம்பீரக் குரலில் ஒரு அதட்டல் வேறு. அய்யய்யோ, இந்த ஏழை அடியேன் என்ன பாவம் செய்தேன், சத்தியமாக ஒசாமா பின் லேடனுக்கும் எனக்கும் எந்த சங்காத்தமும் கிடையாது. நான் என்றுமே வருமான வரி ஏய்ப்பு செய்ததில்லை. ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பினாமி பெயரிலென்ன, சொந்த பெயரிலேயே சொத்து வாங்கும் யோக்கிதையும் கிடையாது, மீறிப் போனால் நேற்று கத்திப்பாரா ஜங்ஷனில் கையை காண்பித்த போலீஸ்காரரை, சரியாகப் பார்க்காமல், கடைசி நிமிட்த்தில் சடன் பிரேக் அடித்ததற்கெல்லாம் வீடு புகுந்து கைது செய்வார்களா என குழம்பியபடியே சென்று கதவைத் திறந்தேன்.

ஒல்லியும் அல்ல, குண்டும் அல்ல அப்படி ஒரு தேகம், ஏறக் குறைய ஆறடி உயரம், கருப்பும் சிவப்பும் கலந்து செய்த கலவையாக ஒரு நிறம், கச்சிதமாய் கத்தரிக்கப்பட்டு டை அடிக்கப்பட்ட ஒரு மீசையுடன் காக்கிச் சட்டையில் விரைப்பாக நின்ற அவரைப் பார்த்து என்ன வேணும்னு கேக்கறதா, இல்லை உள்ள வாங்கன்னு சொல்றதான்னு திரு திருன்னு முழித்துக் கொண்டிருக்கும் போதே அவர் ஆரம்பித்தார் “ இந்த போட்டோவுல இருக்கறவர் இந்த வீட்ல தான் இருக்காரா?” , அப்பிடி அந்த போட்டோவுல எந்த பிரகஸ்பதி இருக்கறான்னு பார்த்தா சாட்சாத் அது ஞானேதான். என் போட்டோ எப்பிடி இவர் கிட்ட வந்துதுன்னு ஆச்சரியத்துல இருக்கும் பொழுது, ”பாஸ்போர்ட் வேணும்னு அப்ளை பண்ணிங்களா?” ன்னு கேட்டு எனது எல்லா வியப்புகளுக்கும் முற்றுப் புள்ளி வைத்தார்.

கொஞ்சம் அசடு வழிந்தபடியே (நம்புங்க, கொஞ்சமாகத்தான்) ஹி, ஹி, ஆ...ஆ...ஆஆமாம்... சார், உள்ளே வாங்க என அழைத்து அவரை அமர வைத்ததும், சைகையிலேயே சகதர்மிணி தேவையை புரிந்து கொண்டு அவருக்கென தேநீர் தயாரிப்பில் இறங்கி விட்டார். மிகவும் பொறுமையுடன் ஒரு விண்ணப்ப படிவத்தை கொடுத்து கையோடு கொண்டு வந்திருந்த கருப்பு மை பேனாவும் கொடுத்து, “இதுல கேட்டிருக்கற எல்லா விவரத்தையும் நிரப்புங்க” என்றார். நடப்பது எல்லாம் உண்மைதானா என்ற குழப்பத்திலேயே எல்லாவற்றையும் நிரப்பி அவரிடம் நீட்டினேன். அவரிடம் இருந்த படிவங்களில் இருந்த என்னைப்பற்றிய அனைத்து விவரங்களையும் ஒரு முறை சரி பார்த்தபின், என் கையிலிருந்த பேனாவை வாங்கி அதில் ஏதோ எழுதியவர், “இரண்டு பேரோட ரெபரன்ஸ் குடுத்திருக்கீங்களே, அவுங்க ரெண்டு பேரும் யார்?” என கேட்டார். என் நலம் விரும்பிகள்தான் சார் என சொல்லியவுடன் என் பதிலுக்கு சற்றே புன்முறுவலித்து விட்டு, “அவுங்க இப்ப வீட்ல இருப்பாங்களான்னு கொஞ்சம் விசாரித்து சொல்ல முடியுமா?” என கேட்டார். சார் அவுங்க இப்ப சர்ச்சுக்கு போயிருப்பாங்களேன்னு சொன்னவுடன், “அப்ப எனக்கு ஒரு உதவி பண்ணுவீங்களா, இவுங்க ரெண்டு பேர் கிட்டயும் உங்களைப் பத்தி விசாரிக்க வேண்டியது என் கடமை. ஆனா, எனக்கு கொஞ்சம் உடம்புக்கு சரியில்லை, உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்ன இவுங்க ரெண்டு பேர் கிட்டயும் நான் சொல்ற மாதிரி ஒரு லெட்டர் எழுதி கையெழுத்து போட்டு வாங்கிட்டு வந்திருவீங்களா?” என்றார். சரி சொல்லுங்க என்றபடி அவர் சொன்ன விவரத்தை ஒரு பேப்பரில் எழுதிக் கொண்டேன்.

இதற்குள் தேநீர் வந்தவுடன் அதை நாசூக்காக மறுத்தவர் “ சரி சார், ரொம்ப தேங்க்ஸ்” என்று சொல்லி கை குலுக்கினார். எனக்கு பூமி கீழே வழுக்கி செல்வது போல் இருந்தது. பாஸ்போர்ட் விசாரணைக்கு வரும் காக்கிசட்டைகள் எல்லாம் பணம் பிடுங்குவதிலேயே குறியாக இருப்பார்கள் என்றுதான் நான் கேள்விப் பட்டிருக்கிறேன், ஆனால் இவர் இப்படி ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதி போல நடந்து கொண்டதின் தாக்கம் ஒரு புறம் மனதுக்கு சந்தோஷமளித்தாலும், அன்று முழுவதும் சர்ச்சில் ஒரு பிரமை பிடித்தவனைப் போலத்தான் இருந்தேன்.

இன்று காலை அவர் சொன்ன அனைத்து படிவங்களையும் நிரப்பி எடுத்துக் கொண்டு அவரிடம் தருவதற்கு காவல் நிலையம் சென்றேன். அங்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. தயவு செய்து இதை நம்புங்கள், இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் இருக்கிறேன். காலையில் அலுவலகம் செல்லும் வழியில் ஏழு மணிக்கெல்லாம் அடியேன் காவல் நிலையத்தில் ஆஜரானானேன். காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு, உள்ளே சென்றால், கமகமவென ஊது பத்தி வாசனை. தலைமை எழுத்தர் என்ற அறிவிப்பு பலகையின் கீழே, காவலருக்கே உரிய காதோர நரையுடன் ஒருவர் அமர்ந்திருந்தார். என்னைக் கண்டதும் “வாங்க சார், என்ன வேணும்?”. நான் வந்த விஷயத்தை சொல்ல, “ சரி, உக்காருங்க” என்று தன் முன்னிருந்த நாற்காலியை காண்பித்தார். தனக்கு முன்னிருந்த தொலை பேசியில் அவர் எண்களை அழுத்தியதும், சரி யாருடனோ பேசுகிறார் என நினைத்த எனக்கு அடுத்த அதிர்ச்சி, என்னைப் பற்றித்தான் அவர் வேறு யாருடனோ பேசினார். பேசி முடித்து விட்டு, “ சார், அவர் பத்து நிமிஷத்துல வந்துருவாராம், உங்களை வெயிட் பண்ண சொன்னாரு” என்று சொல்லியவுடன் தலை சுற்ற ஆரம்பித்தது எனக்கு.

அந்த பத்து நிமிட்த்தில் காவல் நிலையத்தை ஒரு சுற்று சுற்றிப் பார்த்தேன் (கண்களால்தான்). சுத்தமாக துடைத்து பளபளக்கும் அலமாரிகள், எல்லாவற்றிலும் நேர்த்தியாக அடுக்கப்பட்ட கோப்புகள், சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றம் என்ற இரு பிரிவினர்களுக்கான இரண்டு ஆய்வாளர்களின் தனியறைகள், அதிலும் நேர்த்தியாய் நெகிழிப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மேஜைகள், உன்னால் முடியும் தம்பி போன்ற தன்னம்பிக்கையூட்டும் வாசகங்கள், முற்றிலும் நவீன கணினிகள் என ஒரு பன்னாட்டு வங்கிக்குள் இருப்பது போன்ற ஒரு தோற்றம். இதற்குள் தொலை பேசி அழைக்கவே, அதற்கு செவி மடுத்த தலைமை எழுத்தர், கண்களாலேயே என்னை அழைத்தார். நான் இங்கிருப்பது யாருக்குத் தெரியும் என்ற கேள்வியுடன் தொலை பேசியில் காதைக் கொடுத்தவுடன் “ சார், வணக்கம், ரொம்ப நேரமா காத்திட்டிருக்கறீங்களா, சாரி சார். சார் உங்க கிட ஒரு சின்ன ரெக்வெஸ்ட், நான் மாலை போட்டிருக்கேன், என் நண்பர்களா சேர்ந்து இன்னைக்கு காலைல கோவில்ல ஒரு விஷேஷ பூஜை பண்றோம். உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா ஒரு அரை மணி நேரம் வெயிட் பண்ணுவீங்களா, பூஜையை முடிச்சுட்டு நேரா ஸ்டேஷனுக்கு வந்துடறேன்” என சொல்லவும், உலகம் தலை கீழாக சுற்றுவது போலிருந்தது.

அடுத்த அரைமணி நேரம் காத்திருந்தேன். பல காவலர்கள் அன்றைய நாளின் வேலையை ஆரம்பிக்க வந்தவர்கள், மிகவும் தோழமையான பார்வையுடன் என்னை நோக்கி ஒரு புன்னகை புரிந்தபடி “ சார், என்ன வேணும், யாருக்காக வெயிட் பண்றீங்க, அவர் கிட்ட பேசீட்டீங்களா, வர்றேன்னு சொன்னாரா” என அக்கறையாக விசாரிக்கவே, இயேசுவே இதெல்லாம் உண்மைதானான்னு கேட்டுட்டு அமர்ந்திருந்தேன். அங்கு ஒரு ஐந்து காவலர்கள் அமர்ந்திருந்த போதிலும், சினிமாவில் சித்தரிக்கப்படுவது போல யாரும் யாரிடமும் தேவையற்ற அரட்டை அடிக்கவோ, சிகரெட் குடிக்கவோ, அல்லது அசிங்கமான வார்த்தைகள் பேசவோ செய்யவில்லை. அவரவர் வேலைகளில் மூழ்கியிருந்தார்கள். இடையில் வெள்ளை கோட் அணிந்து கொண்டு வந்த ஒரு மருத்துவ மாணவர், தனது பைக் காணாமல் போய்விட்டது என பதட்டத்துடன் சொல்லியதும், பொறுமையாக அவரது பதட்டம் தெளிவிக்கப் பட்டு, அவரிடமிருந்து புகார் பெறப் பட்டது.

அரை மணி நேரம் கழித்து வந்த மாலை போட்ட காவலர், முதலில் தாமதமாக வந்த்தற்கு மன்னிப்பு கேட்டார். பின் என் காகிதங்களை வாங்கி பார்த்து விட்டு, “சரி சார், அனுப்பி விடுகிறேன்” என சொல்லி கையை குலுக்கவும், என்னை யாராவது கைத்தாங்கலாய் அழைத்து செல்ல மாட்டார்களா என்ற நிலைக்கு தள்ளப் பட்டேன்.

இதையெல்லாம் தூக்கி சாப்பிடுவதுபோல், வரும் வழியில் கத்திப் பாராவில் பாலத்துக்கு மேலே, கீழே, வலது, இடது, முன்னால் பின்னால் என எங்கு பாத்தாலும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றிருந்தது. என் காரருகே வந்த ஒரு வெள்ளை சட்டை காவலர் “ சார், எங்க போறீங்க? “ என்றார். பழைய மகாபலிபுரம் சாலை என்றவுடன், “நந்தனம் காலேஜ் ஸ்ட்ரைக் சார், மவுண்ட் ரோட் ஜாம் அயிருச்சு, சிட்டிக்கு உள்ள போக முடியாது, இன்னும் ரெண்டு நிமிஷத்துல சிட்டிக்கு வெளிய போற வழி கிளியர் ஆயிரும். நீங்க பாலத்து மேல ஏறி தாம்பரம் போய் போங்க, இது எப்ப கிளியர் ஆகும்னு சொல்ல முடியாது” என்றவுடன், காருக்குள்ளேயே எனக்கு ஒரு ஹை வோல்டேஜ் ஷாக் அடித்தது.

எதோ ஒரு சில கருப்பு ஆடுகள் செய்யும் அராஜகத்தினால், ஒட்டு மொத்த காவல் துறையையும் நாம் எவ்வளவு கேவலமாக நினைத்து, அவர்களைப் பற்றிய ஒரு அருவருப்பான பிம்பத்தையே மனதில் வைத்திருக்கிறோமே என்ற வெட்கமும் என்னை பிடுங்கித் தின்றது. நம்புங்கள் நண்பர்களே, காக்கிச் சட்டைக்குள் இன்னமும் கண்ணியம் வாழ்கிறது.

Thursday, December 2, 2010

பாஸ்போர்ட், பல்செட், பாவம் ரமணன்

சமீபத்துல கடவுச் சீட்டு அலுவலகத்திற்கு போயிருந்தேன். அப்பப்பா, எத்தனை விதமான மனிதர்கள், எத்தனை விதமான பிரச்சனைகள். கடவுச்சீட்டு கிடைக்குமா, இன்னைக்கும் திருப்பி அனுப்பீருவாங்களா? தத்கால் முறைல வாங்கணும்னா எங்க நிக்கணும்? இந்த வரிசை எதுக்கு நிக்குது? நீங்களும் அமெரிக்கா போறதுக்குத்தான் பாஸ்போர்ட் வாங்கறீங்களா? இந்த ஃபார்முல எங்க கையெழுத்து போடணும்? இன்னைக்கு ஃபார்ம் வாங்கீட்டாங்கன்னா பாஸ்போர்ட் வர்றதுக்கு எவ்வளவு நாளாகும்? என்பது போன்ற எத்தனையோ கேள்விகளுடன் எத்தனையோ முகங்கள், ஜீன்ஸும், டி சர்ட்டும் அணிந்து ஒரு விதமான பார்வையுடன் “ அடச்சே, இந்த அறிவில்லாத கும்பலோடவெல்லாம் ஒரே வரிசைல நானும் நிக்க வேண்டியிருக்குதே” என்ற வெறுப்புடன் நிற்கும் அறிவு ஜீவி வேற்றுலக வாசிகள், ”நான் எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டேன், பிரசவத்தை நம்ம ஊர்ல பார்த்துக்கலாம்னு, ஆனா மாப்பிள்ளை ரொம்ப ஸ்ட்ரிக்டா சொல்லீட்டாராம், நமக்கு குழந்தை பிறந்தா அது அமெரிக்காவுல தான், அதனால உனக்கு ஊர்ல இருந்து யாரை கூப்புடணும்னு தோணுதோ, அவங்களை என்ன செலவானாலும் இங்க வரச் சொல்லுங்கறாராம், நமக்கு கடல் கடந்து போறதுல விருப்பமில்லைன்னாலும், புள்ளைக்கு இந்த சமயத்துல நாமதான கூட இருக்கணும்” போன்ற சந்தோஷ புலம்பல்களுடன் புதிதாய் பல்செட் கட்டிய மாமிகள், ”இந்த ஃபோட்டோ மேல கையெழுத்துப் போட்டா அது வழவழன்னு இருக்கறதால சரியா விழவே மாட்டேங்குது, அதனால ஒண்ணும் பிரச்சனை வராதில்லை” போன்ற பயம் நிறைந்த கேள்விக்கு, வரிசையில் நின்ற ஒருவர் வயிற்றைக் கலக்கும் பதிலளித்தார். “போட்டோ மேல கையெழுத்து போடறதுக்குன்னு தனியா ஒரு பேனா வருதேம்மா, நீங்க அந்த பேனால போடணும், பால் பாயிண்ட் பேனாவுல அது சரியா வராது” ன்னு சொன்னவுடனே அந்த அம்மா முகம் பேயறைந்தது போல் மாறியது. ”அந்த பேனா எங்க கிடைக்கும்”, ”வெளில கடைல கேளுங்க கிடைக்கும்” என்று சொல்லி அந்த அம்மாவை கலங்கடித்துக் கொண்டிருந்தார். எனக்கு முன்னால் நின்றிருந்த ஒரு இளவயதுப் பையன் தினமலர் படித்துக் கொண்டிருந்தான், திடீரென என்னிடம் திரும்பி, ”சார், நம்ம 47வது ஆளா நிக்கறோம், தத்கால்ல எத்தனை டோக்கன் குடுப்பாங்கன்னு தெரியாது, என் ஃபிரண்ட்ஸ் மூணு பேரு 4 வது, 5 வது இடத்துல எல்லாம் நிக்கறாங்க, உங்களுக்கு வேணும்னா ஒரு 100 ரூபா குடுங்க, அந்த இடத்துல நின்னுக்கோங்க, காலைல ஏழரை மணிக்கு வாட்ச்மேன் வர்றதுக்குள்ள இடம் மாறிக்கோங்க, இல்லைன்னா முடியாது” என்றான், நான் வேண்டாம்பா என்று சொல்லி முடிப்பதுக்குள் ஒருவர் அவசரமாக வந்து அவனுக்கு சிக்னல் கொடுக்கவே, விநாடிகளில் பணம் கைமாறி, அவர் எனக்கு முன்னால் வந்து விட்டார். இன்னும் சிறிது நேரத்தில் அவனின் மற்ற மூன்று நண்பர்களுக்கும் ஆட்கள் கிடைத்து விடவே விநாடிகளில் ஐநூறு ரூபாய் சம்பாதித்த சந்தோஷத்துடன் அந்த இளைஞர் கும்பல் பறந்தது.

அந்த வாலிபன் சொன்னது போலவே ஏழரை மணிக்கு ஒரு வாட்ச்மேன் வந்தார், கையில் விண்ணப்பம் இல்லாதவர்கள் எல்லாம் போய்விடுங்கள் என்றார், ஒரு பெரிய வாக்குவாதங்கள், கசமுசா சத்தங்களுக்கு பின் குறைந்தது பத்து பேராவது வரிசையிலிருந்து காணாமல் போனார்கள்.

தத்கால் கவுன்டர் திறந்ததும், ஒரு தடித்த கண்கண்ணாடி அணிந்தவர் வந்து அமர்ந்தார். மனிதர்களை கண்டால் நான் சிரிக்கவே மாட்டேன் என கற்பூரம் அணைத்து சத்தியம் பண்ணிக் கொண்டு வந்தாரோ என்னவோ, ஒரு கடுகடுத்த முகத்துடனேயே பேசினார். எனக்கு என் பாஸ்போர்ட்டில் உள்ள பக்கங்கள் தீர்ந்து போனதால் இன்னும் பக்கங்கள் வேண்டும் என விண்ணப்பித்தேன், எல்லா படிவங்களையும் அந்த தடித்த கண்கண்ணாடி வழியே பார்த்தவர், விண்ணப்பத்தில் இருக்கும் போட்டோவில் உள்ளவன்தான் எதிரே இருக்கிறானா என பார்ப்பது போல் பார்த்தார். ஆனால், அவர் என்ன பார்த்தார் என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. குறைந்தது ஒரு மூன்று முத்திரைகளை குத்தி விட்டு, எல்லா படிவங்களையும் என்னிடமே திருப்பி கொடுத்தார். இனி என்ன செய்ய வேண்டும் என நான் கேட்டதற்கு ஒரு வார்த்தை கூட சொல்லாமல் பக்கத்திலிருந்த ஒரு அறையை கை காட்டினார். (பேசுவதற்கு கூட காசு கேப்பாங்களோ!!!!). அந்த அறைக்குள் நுழைந்து மேலும் முத்திரைகள் குத்தப் பட்டு, மறுபடியும் இந்த கவுண்டர், அந்த கவுண்டர் என பல என்கவுண்டர்களுக்குப் பிறகு ஒரு வழியாக என் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

வெளியே வந்ததும் அப்பாடா என்றிருந்தது. இன்னும் பலர் பல வரிசைகளை தேடி கையில் கற்றை கற்றையான காகிதங்களுடன் அலைந்து கொண்டிருந்தார்கள்.

இந்த ஆபீசில் இடப்பற்றாக்குறை பல வருடங்களாக இருக்கிறது. எந்த வகையான வேலைக்கு எந்த வரிசையில் நிற்க வேண்டும், எந்த கவுண்டரில் என்ன செய்கிறார்கள், இந்த விதமான சந்தேகத்தை யாரிடம் விசாரிக்க வேண்டும் என எதுவும் தெளிவாக இல்லை. எங்கு திரும்பினாலும் வரிசைகள்தான். இதிலும் வெளியூர்காரர்களாயிருந்தால் அவர்கள் பாடு திண்டாட்டம்தான். வண்டி நிறுத்த போதிய இடமில்லை. மனிக்கணக்கில் ஒவ்வொரு வரிசையிலும் நிற்க வேண்டியுள்ளது, ஆத்திர அவசரத்துக்கு ஒரு கழிப்பறை இல்லை. இதிலும் கைக் குழந்தையுடன் வரும் தாய்மார்களின் பாடு பெரும்பாடாயிருக்கிறது.

நான் காலையில் ஆறரை மணிக்கெல்லாம் போய்விட்டதால், கார் நிறுத்துமிடத்தில் சொற்ப கார்களே இருந்தன. திரும்பி வரும்பொழுது எல்லாம் நிறைந்து போய்விட்டது. பார்க்கிங்கில் இருப்பவர் 15 ரூபாய்க்கு ரசீது கொடுத்து விட்டு “சார், காலைல இருந்து வண்டி இங்கதான் இருக்குது, எதோ கொஞ்சம் பாத்து போட்டு குடுங்க சார்” என்றார். இது எந்த கொள்கை அடிப்படையில் என தெரியவில்லை, எரிச்சலுடன் அவரிடம் சத்தம் போட்டு விட்டு வந்தேன்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
போன சனிக்கிழமை அரசாங்க பல் மருத்துவ மனைக்கு போயிருந்தோம். அரசாங்க மருத்துவமனைகள் என்றாலே இளக்காரமாக பார்த்து முகம் சுளிப்பவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். எல்லா மருத்துவ மனைகளும் அப்படியல்ல. அருமையான வரவேற்பு, கனிவான உபசரிப்பு. ”சீட்டு குடுக்கறவர் இப்ப வந்திருவார் சார், அந்த சேர்ல உக்காருங்க சார்” போன்ற அன்பான பேச்சு. சீட்டு குடுக்கறவர் வந்ததும், உடனடியாக சீட்டு கொடுக்கப்பட்டது. அந்த சேரில் அமரச் சொன்னவரேதான், மறுபடியும் டாக்டரிடம் கையைக் காட்டினார். டாக்டரும் கனிவுடன் அமரச் சொன்னார். பொறுமையாக எல்லா விவரமும் கேட்டு விட்டு புரியா மொழியில் அந்த சீட்டில் என்ன என்னவோ எழுதினார். ரூம் நம்பர் 14க்கு போங்க சார் என்றார். இரண்டு மாடி ஏறித்தான் 14 க்கு போக வேண்டி இருந்தது. 14 லிலும் அதே வரவேற்பு, அதே உபசரிப்பு, அதே அதே எல்லாம் அதே.

உபகரணங்கள் எல்லாம் சர்வ சுத்தம், ஒவ்வொரு அறையிலும் பளிச்சிடும் சுகாதாரம், வாய் கொப்பளிக்க கூட நவீன நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தால் சுத்திகரிக்கப்பட்ட நீர் என எல்லாம் அருமையாக இருந்தது.

ஆனால், 14ம் அறைக்கு போவதற்கு இரண்டு மாடி ஏறச் சொன்னதால் நானும் மகளும் சர்வ சாதாரணமாக படிகளில் ஏறி விட்டோம். பாவம் வயதான ஒரு அம்மா, நடப்பதற்கே சிரமப் படும் அவர்களால், நான்கு படி கூட ஏற முடியவில்லை. இங்கு வயதானவர்களுக்காக ஒரு மின்தூக்கி வைத்தால் அதிகம் உபயோகமாயிருக்கும். அந்த அம்மாவின் கஷ்டத்தைக் கண்டு, அங்கு பணியில் இருந்த ஒருவரிடம் ஒரு பிளாஸ்டிக் சேர் கொண்டு வாருங்கள் என்று சொன்னேன். அதில் அவர்களை அமர வைத்து, இரண்டு மாடி தூக்கிக் கொண்டு போய் விட்டோம். அதுக்கு அந்த அம்மா மன நெகிழ்ச்சியுடன் சொன்ன வார்த்தைகள் தான் என்னை துக்கி வாரிப் போட்டது. “நீ ராசாவாட்டம் இருக்கணும்ப்பா” என்றார்கள். ஏம்மா, இந்த பெயராலதான் நாடாளுமன்றமே 15 நாளா அமளிதுமளியாயிட்டு இருக்கு, உங்களுக்கு சொல்றதுக்கு வேற பெயரே கிடைக்கலையா!!!!!!!

இவ்வளவு அருமையாக இருக்கும் ஒரு மருத்துவமனையில் நம்ம திருவாளர் பொதுஜனம் செய்வதுதான் முகத்தை சுளிக்க வைக்கிறது. கேண்டீனிலிருந்து தின்பண்டம் வாங்கி வந்து சாப்பிட்டு விட்டு காகிதங்களை எல்லா இடங்களிலும் போட்டு வைப்பது, வண்டிகளை நிறுத்த அருமையான கூரை வேயப் பட்ட நிறுத்துமிடம் இருந்த போதிலும், வழியை மறைத்து, எல்லா இடங்களிலும் தாறுமாறாக நிறுத்துகிறார்கள்.

அரசாங்கத்தை மட்டும் குறை சொன்னால் போதாது பொது ஜனமே, ஒழுக்கம் என்பது நம்முள்ளேயும் இருக்க வேண்டும்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நேற்று இரவு முழுக்க பொழிந்த வானம், இன்று காலையிலும் தன் மிச்சத்தை பொழிந்து கொண்டிருந்தது. காலையில் எழுந்ததிலிருந்தே என் மறுபாதியும், மகளும் ஒரு எதிர்பார்ப்புடனேயே சுழன்று கொண்டிருந்தனர். மகள் அம்மாவிடம் “அந்த ரமணன் மாத்திரம் இன்னைக்கு பூரா மழை பெய்யும், பள்ளிக்கு லீவு விடுங்கன்னு சொல்லாம இருக்கட்டும், அப்புறம் இருக்குது அவுருக்கு” என சூளுரைத்துக் கொண்டிருக்கும் பொழுதே, கைபேசியில் குறுஞ்செய்தி “ ஹே, ஹே இன்னைக்கு லீவு” என அம்மாவும் மகளும் குதியாட்டம் போட்டனர். என் விதியை நொந்துகொண்டே அவர்களுக்கு லீவு கிடைத்த வயிற்றெரிச்சலில் ஆபீஸுக்கு கிளம்பிக் கொண்டிருந்த என்னைப் பார்த்து ஒரு கிண்டலுடன் “ஆமா, உங்க ஆபீஸ்ல எதோ பெரிய பஸ்ஸெல்லாம் விடறாங்க, மழை பெஞ்சா லீவு விடமாட்டாங்களா?” என்ற சொல்லம்புகள் என் மீது வீசப் பட்டன. அப்பவே சொன்னேன், ”இருங்கடி ரமணன் சொன்னது என்னைக்கு பலிச்சிருக்கு, உங்களுக்கு லீவு விட்டதும் வெயில் கொளுத்தப் போகுது பார்”னு சொல்லிட்டு ஆபீஸுக்கு வந்தேன். காலையிலிருந்து நல்ல வெயில். பாவம் ரமணன்.

Wednesday, November 17, 2010

யோவ், ஆதி.... என்ன ஆச்சு உனக்கு...???

யோவ், நல்லத்தானய்யா எழுதிகிட்டிருந்தீரு, துறை சார்ந்த பதிவு, தங்கமணி பதிவு, அப்புறம் விமர்சனம், அப்புறம் அது, அப்புறம் இதுன்னு எல்லாம் ஒழுக்கமாத்தானய்யா போயிகிட்டிருந்தது, இப்ப என்ன ஆச்சுன்னு இப்பிடி ஒரு வம்பு பண்ண வந்திருக்கீங்க? இப்பத்தானய்யா போட்டியெல்லாம் வெச்சு, அதுக்கு நீ பட்ட கஷ்டத்தையெல்லாம் பார்த்து மலைக்க வெச்சீகளே, என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன், இல்ல ஏன்னு கேக்குறேன்.

How do you feel if, I stop blogging?

திடு திப்புன்னு ஏன்யா புத்தி இப்பிடி வேலை செய்யுது? வேணாய்யா எதாவது சொல்லீரப்போறேன். வழக்கமா, ஒழுக்கமா கடையை தொறந்தமா, பதிவை போட்டமான்னு போயிகிட்டேயிரு, அதை வுட்டுட்டு சும்மா இப்பிடி கோக்கு மாக்கா எதாவது யோசனை பண்ணுனே, அப்புறம் தாம்பரம் முழுக்க உனக்கு பேனர் கட்டிருவோம், அண்ணி கிட்ட சொல்லி கொள்ளிக்கட்டைல சூடு வெக்க சொல்லீருவோம், ஆமா....., சர்வே எடுக்கறாராம் சர்வே, வாயில நல்லா வர்றதுக்குள்ள ஒழுக்கமா அந்த சர்வேவை தூக்குற நீ.... # கடுப்பு.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

அது என்னன்னே தெரியல, எங்க ஆபீஸ்ல எல்லார் கடையையும் படிக்க முடியுது, ஆனா தல நர்சிம் கடை, லக்கி லுக்கு கடை, வித்யாக்கா கடை எல்லாம் தொறந்தா அதை மாத்திரம் இந்த பொட்டி தட்டற கும்பல் தொறக்க வுட மாட்றாங்கோ, கடுப்பேத்தறாங்க மை லார்ட்.... # ஏமாற்றம்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

பதிவர் சந்திப்பு நடந்து பல நூற்றாண்டு ஆன மாதிரி இருக்கு, இப்ப கொஞ்ச நாளா ஊர்பக்கம் தலை காட்ட முடியுதே, சந்திப்பு எதாவது வைப்பாங்களான்னு நானும் பார்க்கிறேன், மூத்த பதிவர்கள் எல்லாம் ஒரே பிஸியா இருக்காங்க போல இருக்குது. கேபிள் அண்ணன்கிட்ட கூட சமீபத்துல கேட்டேன், பார்க்கலாம்னு சொன்னாரு. இந்த வருஷ கடைசிக்குள்ள ஒரு பதிவர் சந்திப்பு வைங்கப்பு....... # ஏக்கம்

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

பதிவுலகுல எல்லாம் பரபரப்பான விஷயங்களை மாத்திரம்தான் பேசறாய்ங்க, அதாவது வில்லங்கமான மேட்டர்னா அதை வெச்சு ஒரு நூறு பதிவாவது வருது, காமன்வெல்த், ஆதர்ஷ் அபார்ட்மெண்ட், ஒபாமா விஜயம், ராசா என்பார் மந்திரி என்பார்னு எல்லாமே ஒரு பரபரப்பான விஷயங்களைத்தான் எழுதறாய்ங்களே ஒழிய, காமன்வெல்த் போட்டில மெடல்களை அள்ளிக் குவிச்ச இந்தியா, ஆசிய விளையாட்டுப் போட்டிகள்ல மண்ணைக் கவ்வுதே அது ஏன்னு ஒரு வார்த்தை கேக்கறாங்களா???? இல்ல, நம்ம வீரர்கள் எல்லாம் நம்ம பேட்டைக்குள்ள மட்டும்தான் வீரர்களா??? இதைப் பத்தி யாருமே எழுத மாட்டேங்கறாய்ங்களே???? # கொளுத்தி போடல்

Tuesday, November 16, 2010

அத்திம்பேர் சொல்றார்....

ரத்தன் டாடா – ஊசியிலிருந்து உலோகத்துல செய்யற எந்தப் பொருளா இருந்தாலும் அதையெல்லாம் செஞ்சு சந்தைல விட்டு துட்டு பார்க்கற இந்த மனுஷனுக்கு, சமீபத்துல ஒரு சோதனை. “ஏண்டா அம்பி, எல்லாத் துறையிலையும் கால் பதிச்சிருக்கயே, இந்த விமான சேவையை மாத்திரம் ஏன் விட்டு வெச்சிருக்கே, அதுலயும் புகுந்து டாடா ஏர்வேஸ்னு ஒண்ணை ஆரம்பிச்சு, ஆகாசத்துலயும் கால் பதிக்க வேண்டியதுதானே” ன்னு கேக்க, டாடா சொன்னார், “நானும் அதுக்கெல்லாம் ரூட் போட்டேன் அத்திம்பேர், சிங்கப்பூர் ஏர்லைன்ஸோட கையை கோர்த்துண்டு வானத்துல வலம் வரலாம்னு மூணுதரம் நினைச்சேன், ஆனா அதுல பாருங்கோ, இந்தியாவுல விமானம் ஓட்டறேன், அனுமதி தாங்கோன்னு அரசாங்கத்து கதவை மூணு தரம் தட்டினேன், அப்பத்தான் உள்ளிருந்து குரல் வந்தது, 15 கோடி ரூபா இப்போதைக்கு தட்சணையா குடுத்துருங்கோ, அப்புறமா பூஜை போடறச்சே மீதியை சொல்றோம்னு சொன்னா, அதுனாலதான் வம்பே வேண்டாம்னு விட்டுட்டேன்” னு சொல்றார். இத்தனை இதை நாள் மனசுக்குள்ளயே வெச்சு புழுங்கிபோனாரோ என்னமோ, இப்ப வெளில சொல்லீருக்கார், இன்னும் என்னவெல்லாம் ஆகப் போகுதோ அந்த ஈஸ்வரன் தான் காப்பாத்தணும்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

அதுல பாருங்கோ, நம்ம மனுஷா எங்க இருந்தாலும் எப்ப இருந்தாலும் ஒரு “எக்ஸ்ட்ரீம் எண்ட்” ல தான் இருக்கா..., தலைல தூக்கி வெச்சு துதி பாடறதுன்னா பயங்கரமா பாடறா, இல்லைன்னா காலடில போட்டு ஒரே அடியா மிதிச்சுடறா. இப்பவும் பாருங்கோ, நம்ம நாட்டுக்கோட்டை செட்டியார் இருக்கறாரோன்னோ, என்ன திரு திருன்னு அம்மாஞ்சியாட்டம் முழிக்கறேள், நம்ம ப. சிதம்பரத்தைதான் சொன்னேன் ஓய், அவரு புள்ளையாண்டான் கார்த்திக் சிதம்பரம் இருக்கனோன்னோ, அவனுக்கு பிறந்த நாள் வந்துடுத்து. அவன் பின்னால சுத்தற கும்பல் ஒண்ணு, சென்னைல நுங்கம்பாக்கம் ஏரியால முழுவதும் அவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி ஒவ்வொரு பத்து அடி தூரத்துக்கும் ஃபிளக்ஸ் பேனர் கட்டியிருக்கா ஓய், வெறும் கண்ராவியா இருக்கு, அதுல இருக்கற வாசகமெல்லாம் பார்த்தா, குமட்டலா வர்றது... வருங்கால தமிழகமே, இளைஞர்களின் இதயத்துடிப்பே, காவிய புதல்வனே, சரித்திர நாயகனே, கலைமாமணியே, வாழும் வள்ளலே, அய்யோ கர்மம், கர்மம், இன்னும் என்னென்ன கருமாந்தரமெல்லாம் எழுதியிருக்காளோ, தெரியாமத்தான் கேக்கறேன், இந்த புள்ளையாண்டான் அப்படி நாட்டுக்கு என்னத்தை செஞ்சு கிழிச்சுட்டான்னு இவால்லாம் அவனுக்கு கூஜா தூக்கிண்டு ஜால்ரா அடிக்கறா....

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

கலி முத்திடுத்துன்னு சும்மாவா சொல்றா, அதுல பாருங்கோ, நேத்து நம்ம சேச்சு இல்லை, அவன் ஆபீஸ்ல அவனை பாக்க போயிருந்தேன். சேச்சு ஆள் பார்வைக்கு ஒரு மாதிரி இருந்தாலும், என்னா உலக ஞானம்கறேள்.., அவனோட பேசிண்டிருக்கறச்சே அனுமர் லங்காபுரிய வதம் பண்ண கதைய ரொம்ப அழகா வியாக்யானம் பண்ணிண்டிருந்தான், அப்பத்தான் அவன் பக்கத்து சீட்ல இருந்து ஒரு பிரகஸ்பதி வந்து “ சார் ஒரு டவுட்டு” ன்னு கேட்டான். இவனுக்கு என்ன டவுட்டுனு நான் யோஜனை பண்ணிண்டிருக்கறச்சே, சேச்சுவும் ரொம்ப பொறுமையா “ என்ன வேணும், சொல்லுப்பா” ன்னு சாந்த சொரூபியா அவனை கேட்டா, அந்த பிரகஸ்பதி என்ன கேட்டான் தெரியுமோ, “சார், இந்த கிருஷ்ணா நீ பேகனே பாரோ ங்கற பாட்டு, திரௌபதி வஸ்தாகரண சமயத்துல கிருஷ்ணா வேகமா வந்து என்னை காப்பாத்துன்னு திரௌபதி பாடற பாட்டா சார்” னு கேட்டான். அதுக்கு சேச்சு சொன்னான், ”ஏம்ப்பா, காவியங்கள்லயும், புராணங்கள்லயும் மனுஷாளுக்கு பிரயோஜனமா எத்தனையோ விஷயங்கள் இருக்கும்போது நேக்கு ஏம்பா இந்த மாதிரி டவுட்டு வர்றது” ன்னு கேட்டான். அதுக்கு அவன், ”இல்ல சார் ஒரு அகடமிக் இண்ட்ரஸ்டு”ன்னு சொன்னான். அவ்வளவுதான், எங்கே இருந்துதான் சேச்சுவுக்கு அவ்வளவு ரௌத்ரம் வந்ததோ தெரியல, “ஏண்டா அபிஷ்டூ, ராமாயணத்துல ராமன் என்ன சொன்னார், கீதைல கிருஷ்ண பரமாத்மா என்ன சொன்னார்னெல்லாம் நேக்கு டவுட் வராதோ, திரௌபதி வஸ்திராஹரணத்துலதான் டவுட் வருமோ” ன்னு ஒரு ஆட்டம் ஆடித் தீர்த்துட்டான்.

கர்மம், கர்மம், எல்லாம் வக்ரம் புடிச்ச வாலறுந்த வானரங்கள், எதுலயெல்லாம் டவுட் கேக்குது பாருங்கோ.....

Monday, October 18, 2010

ஜுகல்பந்தி 19 - 10 - 2010 , நாட்டு/வீட்டு நடப்புகள்


நாட்டு நடப்புகள் :


வெற்றிகரமாக காமன்வெல்த் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. உலக அரங்கில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்கும்படியாக ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. நூற்றியொரு பதக்கங்கள், 4 X 100 மீட்டர் தூர ஓட்டத்திலும் தட்டு எறிதலிலும் நம் இந்திய வீராங்கனைகள் நிகழ்த்திய சாதனைகள் எந்த இந்தியனது நெஞ்சையும் நிமிரச் செய்யும். குத்துச் சண்டையும், மல்யுத்தமும் இந்தியர்களுக்கெனவே எழுதப் பட்டதோ என்னவோ என நினைக்க வைக்கும் படியாய் பதக்கங்களை வாரிக் குவித்து விட்டனர். இந்தியாவின் தங்க பதக்கங்களில் கடைசி பதக்கத்தை போராடிப் பெற்ற சானியா நெய்ல்வாலின்ஒவ்வொரு அடியையும் ரசித்த ரசிகர்களின் கர கோஷத்தால் அரங்கமே அதிர்ந்தது. கடைசியில் இறுதி விழா நிகழ்ச்சிகளில் கண்ணைப் பறிக்கும் லேசர் விளக்குகளின் ஜாலம், இந்திய பாரம்பரிய வீர விளையாட்டுகளின் வீர சாகசங்கள், ராணுவ வீர்ர்களின் கட்டுக்கோப்பான இசை நிகழ்ச்சி என இறுதி விழா களைகட்டினாலும், குழப்பங்களின் நாயகனான சுரேஷ் கல்மாடி இறுதி உரையில் உளறித்தள்ளி ஒரு வழியாய் முடித்தார்.


ஊழல் குற்றச்சாட்டுகள், அதிகாரிகளின் திறமையின்மை, ஒப்பந்தக்காரர்களின் கையாலாகத்தனம், தெளிவான திட்டமிடாமை, கடைசி நிமிடம் வரை ஒருவரையொருவர் குற்றம் சொல்லி விரல் நீட்டி விளையாடியது, போட்டிகள் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்புவரை அடாமல் பெய்த மழையால் விழைந்த இயற்கையின் சதி, பொறுப்பானவர்களின் சோம்பேறித்தனம், எங்கு குற்றம் கண்டு பிடிக்கலாம் என கண்ணில், மூக்கில், வாயில் இன்னும் எல்லா இடத்திலும் விளக்கெண்ணய் ஊற்றிக்கொண்டு ஆராய்ந்து, பேனை பெருமாளாக்கி, அதை உலகம் முழுவதும் தம்பட்டம் அடித்து, தனது நிறவெறிக்கு தீனி போட்டு தனக்குத்தானே திருப்தியாகிக் கொண்ட மேற்கத்திய நிறவெறி ஊடகங்களின் பொய் பிரச்சாரம், அதற்கு துதி பாடிய வெட்கங்கெட்ட, மான ரோஷமில்லாத, உப்புப் போட்டு சோறு திங்காத இந்திய ஊடகங்களின் உள்நாட்டு சதி என எத்தனையோ எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், இந்தியா சாதித்துக் காட்டியிருக்கிறது. இந்த வெற்றிக்கு காரணமாய் இருந்த அந்த 21,000 தன்னார்வ சேவையாளர்களுக்கும், மற்றும் தனது கடைமையில் சற்றும் தளராது சர்வ தேச அரங்கில் இந்தியாவை தலை நிமிர்ந்து நிற்க வைத்த ஒவ்வொரு ஊழியனுக்கும் எங்களது நன்றிகலந்த வணக்கங்கள்.
ஆனால், அதே வேளையில் நாங்கள் இன்னும் பரிணாம வளர்ச்சியில் ஒரு படி பின் தங்கித்தான் இருக்கிறோம், நாங்கள் மனிதர்களாய் வளர்வதற்கு இன்னும் சில நூற்றாண்டுகள் ஆகும் என நிரூபித்து விட்ட ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்களின் அருவருப்பான நிறவெறியாட்டத்துக்காக அவர்களை செருப்பிலடித்து சிறையிலடைத்திருக்க வேண்டும். ஆனால் இந்திய போலீஸோ வழக்கம் போல வெள்ளைத்தோலின் முன் மண்டியிட்டிருக்கிறது. இதற்கு எங்கள் வன்மையான கண்டனங்கள்.


உலக நடப்பு :


சிலி நாட்டில் நடந்த சுரங்க விபத்தும், பின் சிறைப்பட்ட சுரங்கத் தொழிலாளர்களும், அவர்களை அதிசயமாய் மீட்ட கதையையும் கேள்விப் பட்டிருப்பீர்கள். அதில் நிறைய சுவராஸ்யமான சம்பவங்களும் நிகழ்ந்திருக்கிறது. எல்லாம் ”கில்மா” மேட்டர்தான்.
யோன்னி பாரியோஸ் என்ற இந்த சுரங்கத் தொழிலாளிக்கு 28 வருடங்களுக்கு முன் மார்த்தா சாலினாஸ் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்திருக்கிறது. சகதர்மிணியுடன் ஒழுக்கமாகத்தான் குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். என்னவாயிற்றோ ஏதோ தெரியவில்லை, திடீரென ஒருநாள் இருவருக்கும் பிணக்கு ஏற்பட 2009 ம் ஆண்டில் மனைவிக்கு தெரிவிக்காமலே, அவரை விவாகரத்து செய்யாமலே படத்தில் அவர் அணைத்திருக்கும் பெண்ணுடன் (சூசன்னா) தனியே வசித்து வந்திருக்கிறார்.


இவர் சுரங்கத்தினடியில் மாட்டிக் கொண்டதும் சக நண்பர்களுக்கு ஒரு மருத்துவரைப் போல இருந்து உதவிகள் செய்தும், அவ்வப்பொழுது எல்லோரையும் சிரிக்க வைத்தும் மனோதிடம் கெடாமல் பார்த்துக் கொண்ட இந்த நல்ல மனிதருக்கு இப்படி ஒரு மறுபக்கம் இருக்கிறதென எல்லாரும் அறிந்து கொண்டது இந்த சுரங்க அடைப்பு விவகாரத்துக்கு அப்புறம்தான்.
இவர்கள் உள்ளே இருக்கும்போதே, நீங்கள் வெளியே வந்த்தும் யாரைப் பார்க்க விரும்புகிறீர்கள் என்று கேட்க்கப்பட்ட கேள்விக்கு, நான் என் பெரிய வீட்டையும் சின்ன வீட்டையும் பார்க்க விரும்புகிறேன் என்று இவர் சொல்லிவிட, இரண்டு அம்மணிகளும் சுரங்கத்துக்கு வெளியே நேருக்கு நேர் சந்தித்ததில் குடுமி பிடி சண்டையாகிவிட, கஷ்டப்பட்டு விலக்கி வைத்திருக்கிறார்கள். இதை அறிந்து கொண்டதும் இவரது மனைவி இவர் வெளியே வருவதை நான் தொலைக்காட்சியில் கூட பார்க்க விரும்பவில்லை என வீம்பு பிடித்து கோபம் கொண்டு போய் விட்டார். ஆனால் இவரது இப்போதைய நாயகி மாத்திரம் கால்கடுக்க நின்று கண்ணீர் மல்க வரவேற்றிருக்கிறார்.


இப்படி உள்ளிருந்த இன்னும் நிறைய பேரின் ரகசிய சொந்தங்கள் சுரங்கத்துக்கு வெளியே அவர்கள் பெயர்கள் ஏந்திய பலகைகளுடன் குவிந்து விட, ஏகத்துக்கும் குடுமி பிடி சண்டைகள் நிகழும் அபாயம் இருப்பது கண்டு அரசாங்கம் இதை எப்படி சமாளிப்பது என திணறிப் போய் விட்டதாம்.


ங்கொய்யால பக்கம் : (கொஞ்சம் மீள்ஸ்)


அப்பா, அம்மாக்கு புது துணி


தங்கச்சிக்கு புது செல்போன்


தம்பிக்கு டிஜிட்டல் கேமரா


பொண்டாட்டிக்கு புது சங்கிலி


புள்ளைங்களுக்கு பட்டாசு


பக்கத்து வீட்டுக்கு பலகாரம்


ங்கொய்யால


விட்றா, விட்றா, அடுத்த தீவாளிக்கு


புதுச்செருப்பு வாங்கிக்கலாம்.

Monday, October 11, 2010

என்னத்தச் சொல்ல....

ஒரு உயிர் இனத்தை சினிமா என்ற ஒரு சமுதாய நோய் இந்த அளவுக்கா வசியப்படுத்தும்??? அப்பப்பா, எத்தனை விமர்சனம், எத்தனை அமர்க்களம். இந்திய நாட்டின் அனைத்து ஜீவராசிகளையும் தன் பக்கம் ஈர்க்கிற ஒரு சாராரின் வியாபார உத்திக்கு, ஒவ்வொரு இந்தியனும் தனது கணிசமான நேரத்தை எதாவது ஒரு வழியில் செலவிடுகிறான். சமீபத்தில் கொங்கு மண்டலம் வரை தரை வழியாக பயணம் செய்தேன். இதற்கு முன்பாக இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் ஊர் பெயர் தாங்கிய பலகை காணப் படுகிறதோ இல்லையோ, கொக்கோ கோலாவின் விளம்பர பெயர் தாங்கிய பலகைகள் கண்டிப்பாக காணப்படும். ஆனால், இப்பொழுது தங்கள் தங்கத் தலைவனின் புதுப்படம் வெற்றியடைய ஒவ்வொரு கிராமத்தானும் திரும்பிய பக்கமெல்லாம் விளம்பர பேனர் கட்டியிருக்கிறான்.

விளம்பர பேனர் கட்டுவதோடு விட்டிருந்தால் கூட பரவாயில்லை. அதில் இவனது தங்கத்தலைவன் நின்று, நடந்து, படுத்துக் கொண்டிருக்கும் இடத்திலெல்லாம் அவன் காலடியில் கை கூப்பி சிரித்த வண்ணம் இவன் தன் படத்தை போட்டிருக்கிறான். அட முட்டாள் தமிழர்களா, நீங்கள் இவ்வளவு கொண்டாடும் தங்கத்தலைவன் ஒரு முறையாவது உங்கள் அன்புக்கு ஊசிமுனையளவாவது மதிப்பு கொடுத்திருக்கிறானா??? ஹிந்தி திரையுலகிலும் இந்தப் படம் வசூலை அள்ள வேண்டுமென்பதற்காக, மெனக்கெட்டு மும்பை சென்று, அங்கு பால் தாக்கரேயை சந்தித்து குலாவிக் கொண்டிருக்கும் அவனுக்கு நீங்கள் பாலாபிஷேகம் செய்கிறீர்களே, எப்படா இந்த துதி பாடற வியாதில இருந்து வெளிய வருவீங்க.....

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
காமன்வெல்த் போட்டிகளின் குளறுபடிகள் ஒருபுறமிருந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை என் நிரூபிக்கும் வண்ணமாக ஒரு துவக்க விழா நடத்திக் காட்டி விட்டு, போட்டிகள் சுமுகமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், ஒரு சில நிறவெறியர்களின் தாகுதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. முன்பதாக முற்றிலும் நிறவெறி கொண்ட மேற்கத்திய ஊடகங்களான பி.பி.சி, மற்றும் இன்ன பிற ஊடகங்கள், எங்கோ மூலையில் தொங்கும் ஒரு மின்சார ஒயரையும், இன்னமும் கட்டி முடிக்கப்படாத பாதசரி நடை மேடைகளையும், தொடர்ந்து ஒளிபரப்பி இந்தியர்களின் மேலுள்ள நிறவெறியை அப்பட்டமாக பறை சாற்றின. அடுத்த்தாக குத்துச் சண்டை வீரர்களை போட்டிக்கு முன்பாக எடை பார்க்கப் போனால், அந்த எடை இயந்திரங்கள் தரம் தாழ்ந்தவை என ஒரு முறை கூவித் தீர்த்தார்கள். எந்த மின்னணு இயந்திரத்திலும் கோளாறுகள் நடப்பதி இயல்பு தானே ஒழிய, அது இந்தியாவில் நடந்தால் அதை மட்டுமே வைத்து கூவிக் கூவி ஒப்பாரி வைப்பதை நிறவெறி என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல முடியும்.

தென்னாப்பிரிக்க வீரர் ஒருவர் நீச்சல் போட்டியில் கலந்து கொள்ள போனாராம், அவர் நீந்தப் போகும் பொழுது இந்திய ரசிகர்கள் கூச்சலிட்டதால் அவரால் சரியாக நீந்த முடியவில்லையாம். அதனால் இந்தியர்கள் குரங்கு போல் கூச்சலிடுகிறார்கள் என திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் கால்பந்தானாலும் சரி, கிரிக்கெட்டானாலும் சரி, அங்கு அவர்கள் ஊதும் ஒலிப்பான்களால் காது கிழியும். ஆனால் அவருக்கு இங்கு இந்தியனின் சத்தம் குரங்கு சத்தமாய் கேட்கிறதாம், அதை நமது ஊடகங்கள் தவறாமல் ஒளிபரப்புகிறது. டேய், போய் முதல்ல உங்க முதுகுல இருக்கற அழுக்கை கழுவுங்கடா, அப்புறமா அடுத்தவனை பார்ப்பீங்களாம்.
ஆனால், இதில் வேதனை என்னவென்றால், இவர்களோடு சேர்ந்து கொண்டு நமது இந்திய ஊடகங்களும் இப்படி ஒப்பாரி வைப்பதுதான் வேதனையின் உச்சகட்டம்.... ம்.. என்னத்தைச் சொல்ல......

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கொஞ்ச நாட்களாகவே எங்கள் வீட்டில் ஆவின் பால் அட்டை வாங்க வேண்டும் என்ற குரல் எல்லா மூலைகளிலிருந்தும் ஒலிக்க ஆரம்பிக்க, கடைசியாக சென்ற வாரத்தில் ஒருநாள், அந்த அலுவலகம் நோக்கி அடியெடுத்து வைத்தேன். வழக்கம் போல வெளிச்சம் இல்லா இருட்டறையில், கைவைத்து தேய்ந்து போன மர மேஜைகளின் பின்னால், கட்டுக்கட்டான காகித மலைகளுக்கு நடுவில் அமர்ந்திருந்த ஒரு புண்ணியவான் என்னை ஏறெடுத்துப் பார்த்து விட்டு நான் வணக்கம் சொன்னவுடன் என்னை ஒரு வேற்று கிரக வாசி போல நினைத்தாரோ என்னவோ, ஒரு கேவலமான பார்வை பார்த்து விட்டு மறுபடியும் அந்த காகிதக் குவியலில் முகம் புதைத்துக் கொண்டார்.
“சார்”
“என்ன???”
“புது பால் கார்டு வாங்க என்ன செய்யணும்”
“புது கார்டு இப்பல்லாம் குடுக்கறதில்லை, ஒரு 5 மாசம் கழிச்சு வாங்கோ”
“சார், இப்பத்தான் கால் செண்டர்ல பேசினேன், அவுங்க உங்க கிட்ட விண்ணப்பம் குடுக்க சொன்னாங்க”
”அப்ப கால் செண்டர்லயே போய் விண்ணப்பம் குடுத்துருங்க, யார் சொன்னாங்களோ, அவுங்க கிட்ட போய் விண்ணப்பிக்கறதுதான முறை?”
“இல்ல சார், அவுங்க உங்க கிட்ட விண்ணப்பம் குடுக்க சொன்னாங்க”
“இங்க விண்ணப்பம் வாங்கறதில்லை, ஒரு 5 மாசம் கழிச்சு வாங்க”
“அப்ப விண்ணப்பம் வாங்குவீங்களா???”
“என்ன நீங்க கேள்வி மேல கேள்வி கேக்கறீங்க, ஒரு தரம் சொன்னா அதுக்கு மேல பேசக் கூடாது”
எனக்கு ஒண்ணு மாத்திரம் புரியல, இவுனுங்களுக்கெல்லாம் அரசாங்க சம்பளம் எதுக்கு குடுக்கறாங்களோ, ஒரு வாடிக்கையாளரிடம் எப்படி பேசணும்னு கூட தெரியாதா....., ம்.. என்னத்தைச் சொல்ல....

Wednesday, September 15, 2010

பெண்ணியம் பேசுவோம் வாருங்கள் – 2.


நேற்று நண்பரொருவர் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ஒரு பெண்ணின் திருமண கால மனநிலையை உருக்கமாக பிரதிபலிக்கும் வர்ணனைகள் நிறைந்த வரிகளுடன் ஆரம்பிக்கும் இந்த எழுத்துக் கோர்வை, பின் பாதியில் புதிதாக திருமண உறவில் ஈடுபடும் ஆணின் மனநிலையையும் தொட்டும் தொடாமலும் சென்று முடிகிறது.

இப்படியாக அந்த செய்தி ஆரம்பிக்கிறது, அந்தப் பெண்ணின் மனதில் ஒரு ஓயாத கூக்குரல் இருக்கிறது. அவள் தன் வேதனைகளை கத்தித் தீர்க்க வேண்டுமென்று தருணம் தேடுகிறாள். அம்மா, எனக்கு திருமணம் வேண்டாமென்று நான் சொல்லவில்லை. ஆனால், வெறும் ஒரு சில நிமிடங்களே பார்த்த முன்பின் தெரியாத ஒரு ஆணுடன் நான் எப்படி வாழ்நாள் முழுக்க வாழ்வேன்? என் உணர்வுகளை, ஆதங்கங்களை புரிந்து கொள்ள முடியாத ஒருவனாய் அவன் இருந்து விட்டால், என் வாழ்க்கை ஒரு நரகமாக மாறி விடாதா? நான் பெண்ணாய் பிறந்தது என் குற்றமா? ஏன், என்னை ஒரு வார்த்தை கூட கேட்காமல் இந்த உறவு முறைக்குள் திணிக்கிறீர்கள்? நல்ல குடும்பம், நல்ல ஜாதகம், நல்ல சம்பளம், நல்ல உயரம், நல்ல ஜாதி, நல்ல பழக்க வழக்கம் என்ற உங்களின் ஒரே ஒரு முக கோணத்தில் உருவகமெடுத்திருக்கும் தேடல் வாக்கியங்களான எல்லா “நல்ல” வைகளுக்குள்ளும் கச்சிதமாக பொருந்தும் இந்த ஆணுக்குள், என் மனதையும், என் தனித்துவத்தையும், என் பழக்க வழக்கங்களையும், என் விருப்பு வெறுப்புகளையும், குறிப்பாக என்னை மதிக்கிற அந்த “நல்ல” தன்மை எங்கே ஒழிந்திருக்கிறதென்று எப்படி கண்டு பிடித்தீர்கள்?

இப்படி மனதில் தோன்றும் ஆயிரம் கேள்விகளைக் கேட்டு ஓங்கிக் கத்த வேண்டும் போலுள்ள அந்தப் பெண்ணை அப்படியே கோழி அமுக்குவது போல் அமுக்கி, மணப்பெண் அலங்காரம் செய்வித்து, புது உடை உடுத்தி, நகை அணிவித்து, மணவறையில் அமரவைத்து, எல்லா சடங்குகளுக்கும் மறுப்புப் பேசாமல் தலையாட்டும் பொம்மையாய் நடிக்க வைத்து, நாளை முதல் இவன்தான் உன் உலகம், இவனுக்கு என்ன பிடிக்கிறதோ, அது உனக்கு பிடிக்காவிட்டாலும் பிடித்த மாதிரி வாழ பழகிக் கொள் என சொல்லாமல் சொல்வது பெண்ணினத்தின் மீது சமூக கட்டமைப்பால் ஏவி விடும் மிகப் பெரிய வன்முறை இல்லாமல் வேறென்ன என கேள்வி எழுப்புகிறது அந்த எழுத்து.

இந்த மின்னஞ்சல் என்று மட்டுமல்ல, எந்த ஒரு திருமண உறவின் விவரிப்புகளிலும் அந்தப் பெண்ணின் சம்மதம் இல்லாமலே பெண்ணை பெற்றோரிடமிருந்து பிரித்து, ஒரு புதிய சூழலில், புதியவர்களின் வாழ்விடத்தில், புதிய மனிதர்களின் அருகாமையில், புதிய பழக்க வழக்கங்களுக்கு மத்தியில், புதிய குடும்ப ஒழுங்குகளில் என அநேக ”புதிய”வைகளின் பட்டியல் பிரம்மாண்டமான வர்ணனை வார்த்தைகளால் விவரிக்கப்படுகிறது.

எனக்கு ஒரு சில சந்தேகங்கள் :

1. இன்றைய சூழ்நிலையில் கூட்டுக் குடும்பம் என்ற ஒன்றே அரிதாகி வரும் கால கட்டத்தில், இன்னுமா பெண்ணுக்கு இந்த பட்டியலிடப்பட்ட “புதிய” சூழலில் வாழ வேண்டிய அவசியம் ஏற்படுகிறது????

2. திருமணமானவுடன் முன்பின் சற்றும் அறிமுகமில்லாத ஆணுடன் ஒரு பெண் வாழும் படி நிர்பந்திக்கப் படுகிறாள் என்பதை இம்மியளவேனும் ஒரு அர்த்தமுள்ள கூற்றாக எடுத்துக் கொண்டோமென்றாலும், இதில் மண வாழ்வு என்பது வெறும் பெண் சம்பந்தப் பட்ட விஷயம் மாத்திரம் தானா, அந்த ஆணுக்கு ஒரு பெண்ணுடன் இணைந்து வாழ்வது என்பது ஒரு புதிய சூழலில்லையா????

3. பெற்றோரிடமிருந்து ஒரு பெண் பிரிந்து வருவது என்பதில் உள்ள பிரிவின் தாக்கம் பெண்மனதில் எவ்வளவு உள்ளதோ, அவ்வளவே ஆண் மனதையும் அதன் தாக்கம் ஆக்கிரமிக்கும் என்பதை ஏன் யாருமே உணர்வதில்லை????

4. அப்படியே ஒரு பெண் கூட்டுக் குடும்பத்தில் வாழும் நிலை ஏற்பட்டாலும், அங்கு எனது மன உணர்வுகள், என் பழக்க வழக்கங்கள், என் நியாயங்கள், என் சுதந்திரம் என ஒரு தனி ஆதிக்கப் போக்கை விட்டு, குடும்ப நலம், குடும்ப பழக்க வழக்கம், குடும்ப நியாயம் என்ற பரந்த நோக்குடன் இசைந்து வாழ்வது என்பது பெண்ணின் தன்மானத்துக்கு கேவலமான ஒன்றா????

5. பெண்ணை ஒரு முன்பின் அறிமுகமில்லாத ஆணுடன் இணைந்து வாழ வைப்பது என்பது பெண்ணின் சுய மரியாதையை குலைக்கும் ஒரு சமூக வன்முறை எனில், ஆண் அந்த வன்முறைக்கு இலக்காவதில்லையா????

தாம்பத்யத்தில் அன்பு, புரிந்துணர்வு, தனது துணையின் எண்ணங்கள் பால் மரியாதை இன்னும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத எத்தனையோ உணர்வு சார்ந்த சமாச்சாரங்கள் எல்லாம் இருபாலரிடத்தும் சரி விகித்த்தில் காணப்பட்டால் தான் அது தாம்பத்யம். இல்லையேல் பெண்ணின் உணர்வுகள், பெண்ணின் நியாயங்கள் (மட்டும்) மதிக்கப் பட வேண்டும் என போர்க்கொடி பிடிப்பது, மேடைக்கு அழகாய் இருக்கலாம், நான்கு சுவர்களுக்குள் அது அழுக்காய்த்தான் இருக்கும்.