Thursday, January 28, 2010

ஆமாடா, ரூல்ஸ் எல்லாம் எங்களுக்குத்தானா??????

கடந்த 25ம் தேதி, பங்களாதேஷுடன் டெஸ்ட் போட்டியில் ஆடிக் கொண்டிருந்த இந்திய அணியில், கொஞ்சம் உணர்ச்சி வசப்படும் வீரரான ஹர்பஜன் சிங்கின் ஒரு செய்கை உலக கிரிக்கெட் கவுன்சிலின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தது. ஹர்பஜன் சிங் மன்னிப்பு கேட்டார் என ஊடகங்கள் கத்தித் தீர்த்து நிம்மதியடைந்தது. இந்திய கிரிக்கெட் வீரர்களிலேயே கொஞ்சம் அதீத உணர்ச்சி வசப் படுபவர் இந்த ஹர்பஜன். அவர் ஒரு விக்கெட் வீழ்த்தியவுடன் செய்யும் ஆரவாரமாகட்டும், ஸ்ரீசாந்த்தை பளாரென அறைந்ததாகட்டும், 25ம் தேதி பங்களாதேஷில், தன்னைக் கடந்து பவுண்டரி லைனுக்கு போன பந்தைக் கண்டு வெறுப்புற்று, விளம்பரப் பலகையை எட்டி உதைத்ததாகட்டும், இவர் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதால் வம்பை விலைக்கு வாங்கும் நபராகவே திகழ்கிறார்.

சரி, கோபப்பட்டு, எட்டி உதைத்து, அது நடுவரின் கண்களில் பட்டு, அதற்காக மன்னிப்பும் கேட்டு விட்டார். ஆனால் ஊடகங்கள் அதை விடுவதாயில்லை, குறிப்பாக மேற்கத்திய வெள்ளைத்தோல் ஊடகங்கள் “இங்க பார்றா, இவுருக்கெல்லாம் கோபம் வருதாம், கோபம்” என்ற உள்குத்து நக்கலுடனேயே இதை வர்ணித்து வருகின்றன. புது விதமான ஆங்கில வார்த்தையில் “ Harbhajan reprimanded for kicking the board” என்ற ரீதியில் இதை எழுதி வருகிறர்கள்.

உலக கிரிக்கெட் வரலாற்றிலும் சரி, இன்னும் எந்த விளையாட்டு வடிவத்திலும் சரி, நிறவெறி என்பது இன்னும் முற்றிலும் ஒழிந்து விடவில்லை. இம்ரான் கான் பாகிஸ்தான் அணித்தலைவராயிருந்து 1992 – ல் உலகக் கோப்பை வென்ற போது, எதிரணியில் விளையாடி தோற்ற இங்கிலாந்து அணித்தலைவர் கிரகாம் கூச் ஒரு மரியாதைக்கு கூட இம்ரான் கானுடன் கைகுலுக்க வரவில்லை. கடைசியில் வேண்டா வெறுப்பாய் ஒரு முறை கையை தொட்டு விட்டு சென்றார். இதை போட்டியில் தோற்றதால் ஏற்படும் விரக்தியாக என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. இப்படியாக ஒவ்வொரு முறையும் வெள்ளையரல்லாத ஒரு வீரர் எந்த வெற்றிகளை அடைந்தாலும் அதை கறுப்பர்களுக்கு கிடைத்த வெற்றியாகத்தான் வெள்ளையர் உலகம் பார்க்கிறதே தவிர, தேர்ந்த விளையாட்டு வீரன் வெற்றி பெற்றான் என்ற மனப் பான்மை இன்னமும் வரவில்லை.

டென்னிஸில் ஜான் மெக்கென்ரோ விம்பிள்டன்னின் மைய அரங்கில் காறித்துப்பலாம். ஆண்ட்ரூ ஃபிளின்டாஃப், யுவராஜ் சிங்கை வெளிப்படையாக திட்டலாம். ஆண்டி ரோடிக் என்ற அமெரிக்க சுள்ளான், டென்னிஸ் மட்டையை ஓங்கி வீசிவிட்டு அந்த நான்கெழுத்து வார்த்தையை சொல்லி கத்தலாம். ஷேன் வார்ன் பந்தை எப்படி வேண்டுமானாலும் எறியலாம். இல்லிங்வொர்த் என்ற இங்கிலாந்து சுழல் பந்து வீச்சாளைரின் கையசைப்பிலேயே தெரியும் அவர் பந்தை வீசுகிறாரா அல்லது எறிகிறாரா என்று, இன்னும், தென் ஆப்பிரிக்க வெள்ளையரான பேட் சிம்காக்ஸ் சுழல் பந்து வீசுவது லகான் படத்தில் அமீர்கானின் அணி வீரர்கள் பந்தை எறிவார்களே அப்படித்தான் இருக்கும். ஆனால் இதைக் குறித்து விமரிசனங்கள் எழும் பொழுதெல்லாம் ஊடகங்கள், குறிப்பாக மேற்கத்திய ஊடகங்கள் அவர்களது முதுகு தடவி, சரி சரி லூசுல விடுப்பா என வேதம் ஓதும்.

அதே சமயத்தில் முத்தையா முரளிதரன் அதிக விக்கெட் எடுக்க ஆரம்பித்தவுடன், எல்லா வெள்ளைத் தோல்களும் ஒருசேரக் கத்தும், அது எப்படி ஒரு கறுப்பன் பந்து வீச்சில் பிரகாசிக்கலாம், பிடியுங்கள் அவனை. அவன் பந்தை எறிகிறான். சர்வதேச பந்து வீச்சு நிபுணர்கள் அவனை சோதிக்க வேண்டும் என்பார்கள். பாகிஸ்தானின் ஷாக்குலின் முஷ்தாக் “தூஸ்ரா” விசினார் என்றால், அவன் எப்படி புது முறையை கண்டுபிடிக்கலாம், அது முற்றிலும் தவறு, உடனே ஷாக்குலின் சோதிக்கப் படவேண்டும் என்பார்கள். ஹர்பஜன் சிங் சுழலில் சுழட்டி எடுத்தவுடன், ஹர்பஜனுக்கு பந்து வீசவே தெரியவில்லை, உடனே சோதியுங்கள் என கூக்குரல் எழுந்தது.

இந்திய வீரர்களை எந்த வெள்ளைத்தோல் வீரனும், முறைக்கலாம், காறித்துப்பலாம், திட்டலாம், என்ன வேண்டுமானலும் செய்யலாம், இதெல்லாம் விளையாட்டில் சகஜமப்பா என்பார்கள். ஆனால், ஸ்ரீசாந்த் ஒருமுறை மேத்யூ ஹெய்டனை முறைத்து விட்டால், இவன் எப்படி முறைக்கலாம் என புருவங்கள் உயரும்.

இந்த நிறவெறி கல்லும் மண்ணும், நீரும் நிலமும், காற்றும் வானும், நிறமும் உள்ளவரை அப்படியேதான் இருக்குமோ???

டிஸ்கி : இதற்காக ஹர்பஜனின் அச்சு பிச்சுகளையோ, ஸ்ரீசாந்தின் அதிகப் பிரசங்கத்தனத்தையோ அடியேன் ஆதரிக்கவில்லைங்கோ.......

Wednesday, January 20, 2010

மழை - கேபிள், தண்டோரா பார்வையில்

மழையைப் பற்றி பேசாத மனிதர்கள் இருப்பது அபூர்வம். எல்லா மொழிகளிலும் மழையை வர்ணித்து ஒரு கவிதையாவது கண்டிப்பாய் இருக்கும். இங்கு தமிழில் சில கவிஞர்கள் மழையை வர்ணித்தால் எப்படி இருக்கும் என ஒரு பார்வை:

சிலப்பதிகாரத்தில் மழை

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற் கவனளி போல்
மேனின்று தான் சுரத்தலான்

(மழை பொழிகையில் எல்லாருக்கும் பெய்யும். இரண்டு பேர் மழையில் இருந்தால் இருவருக்கும் ஒரே மழைதான். அதுபோல அரசனுடைய கொடையும், நீதி நியாயங்களும் அனைவருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது மறைபொருள்.)

வைரமுத்துவின் வார்த்தை விளையாட்டில் மழை :

யாரங்கே?
வாருங்கள்

விண்ணுக்கும் மண்ணுக்கும்
தண்ணீர்ப்பாலம் பாருங்கள்

திரவ முத்துக்கள்
தெறிப்பது பாருங்கள்

யாசித்த பூமிக்கு
அந்த வானம்
வைரக் காசுகள்
வீசுவது பாருங்கள்

மழை மழை
மழைமழை
மழை மழை

மண்ணின் அதிசயம் மழை


சேவியர் அண்ணாவின் செதுக்கிய வார்த்தைகளில் :

மழை

மழைத் துளியல்ல,

சோர்வின் வடுக்களை

அழுத்தித் துடைக்க

மேகப் பருத்தி நெய்து

இறக்கும்

மழைத் துணி

எங்கள் நிரந்தர யூத் கவிஞர் அனுஜன்யாவின் பார்வையில்:

நீ புறப்பட்டு விட்டது தெரிந்த
மனது சொல்லியது
அடுத்த சாலையில்
நீ வந்துகொண்டிருப்பதை ;
பரபரக்கும் அந்தக் கணங்கள்
மிகத் துல்லியமான தருணங்கள்.
புரியவில்லையா? இதைக் கேள்!
மழைக்கு முன் சோதனை முயற்சியாய்
இலேசான தூறல் விழும் -
மண்வாசனையைப் பூசிக் கொண்டு;
அதற்கு முந்தைய தருணத்தை
யோசித்திருக்கிறாயா கண்ணே !

இருளத் துவங்கும் முன் வானம்
கடைசியாய் ஒரு முறை பிரகாசிக்கும்
எங்கிருந்தோ தென்றலும் சேர்ந்து
ஓரிரு மின்னல்களுடனான இடியும் கலந்து
ஒரு அரிய இசைக் கச்சேரியின்
அனைத்து ஆயத்தங்களும்
அதில் புலப்படும்.
சொற்ப காலமே எனினும்
அரிய, துல்லிய தருணங்கள்.
தூரலில் நீ வேகமாய் வந்ததும்
பிறகு நாம் மழையை கொண்டாடியதும்
காதலின் உன்னதம் எனினும்
முன் சொல்லிய துல்லிய தருணங்களுக்கு
எதுவுமே ஈடாகாது -
பெருமழை மற்றும்
உன்னையும் சேர்த்து


இனி இதே மழையைப் பற்றி எங்கள் என்டர் மன்னன் கேபிள் அண்ணன் எழுதினால்:

வானத்தின் முலைகள்
வெள்ளை மேகங்கள்
விம்மிப் புடைத்தன
நிறம் மாறி கருத்தன

கசமுசா செய்ய
காற்று வந்தது.
கரங்களினாலே
கசக்கிப் பிழிந்தது.
பொழிந்தது மேகம்
தணிந்தது தாகம்
நிறம் மாறி நிலத்தில்
ஓடுது வெள்ளம்.

இதே மழையைப் பற்றி எங்கள் பின் நவீனத்துவ விமர்சகர் தண்டோரா எழுதினால்:

பூமியை வானம் புணர்ந்ததின் உச்சம்
உச்சத்தின் எச்சத்தில்
நிறமில்லா மச்சம்………
மழைத்துளி.

Friday, January 8, 2010

நூற்றைம்பது ரூபாயில் சூனியம்

வருடத்தின் முதல் நாள். உருப்படியா எதாவது செய்யணும்னு நெனச்சு, என்ன பண்ணலாம்னு கிட்னிய கசக்கி, சே, மூளைய கசக்கி யோசிச்சு யோசிச்சே நேரம் போயிட்டிருந்தது. அதுக்குள்ள வீட்ல இருந்து அதிகார மையத்தார் ஒரு பெரிய லிஸ்டே போட ஆரம்பிச்சதுனால, அதுல இருக்கற வேலைகளை எல்லாம் செய்து முடிக்கறதுக்குள்ள 2012 ம் வருடம் வந்து உலகம் அழிந்து விடக் கூடிய சாத்தியங்கள் அதிகமிருப்பதால், எப்படியும் இந்த வன்முறைக்கு ஒரு முடிவு கட்டணும்டா முனியாண்டின்னு முடிவு எடுத்துட்டு, புத்தகக் கண்காட்சி போலாம்னு என் மசோதாவை தாக்கல் செய்தேன்.

அதிகார மையத்திடமிருந்து “கண்ணி வைக்காமலே வேங்கை வீழ்கிறதே, ஆச்சரியக்குறி” என்ற கவிதை கலந்த பார்வை வந்தவுடனேயே, ரூட்ட மாத்தியிருக்கலாம். ஆனா, நாம போன வருஷத்துல பண்ணுன பாவத்துக்கெல்லாம், இந்த வருஷ முதல் நாளிலிருந்தே தண்டனை அனுபவிக்கணும்னு எம்பெருமான் எழுதி வெச்சுட்டாரோ என்னவோ, விதி யாரை விட்டது.

புத்தாண்டு கொண்டாட்டங்களில் களைத்துப் போயிருந்த சென்னை நகரம் சற்றே துயிலெழுந்து கொட்டாவி விட்ட மாலை நேரம். சாலைகள் வெறித்திருக்காவிடினும், நெரித்துத்தள்ளவில்லை. ஒரு வழியா கண்காட்சி மைதானத்துக்கு போகும்போது மாலை 6 மணி. இந்த முறை கார் நிறுத்துவதற்கு நல்ல ஏற்பாடுகள் இருந்தது. அல்லது 1 ம் தேதி குறைவான கார்களே இருந்ததோ என்னவோ, சீக்கிரத்தில் நிறுத்தி விட்டு பிளக்ஸ் பேனர்களில் சிரித்துக் கொண்டிருந்த எழுத்தாளர்களை எல்லாம் வரிசையாக பார்த்துக் கொண்டே நடந்தோம். நுழை வாயிலிலேயே மகள் பாப் கார்ன் வாங்கிக் கொண்டாள். அனுமதிச்சீட்டு வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்ததும் எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதில் குழப்பம். நம்ம என்னைக்கு நேர் வழியில போயிருக்கறோம், வழக்கம் போல கடைசியில இருந்தே ஆரம்பிப்போம் என ஆரம்பித்தோம்.

என்ன புத்தகம் வாங்கவேண்டும் என ஒரு பட்டியலே போட்டுக் கொண்டு போனேன். ஆனால், நாம ஒண்ணு நினைக்க தெய்வம் வேற ஒண்ணுதான நினைக்கும். கடைசியில இருந்து அப்படியே ஊர்ந்துகிட்டே போய் நாம எதிர்பார்த்தது கிடைக்கல. சரி இருக்கறத எதிர்பார்ப்போம்னு இன்னும் நடந்துகிட்டே இருக்கும்போது தான் அந்தப் பதிப்பகம் கண்ணுல பட்டுது. இதுக்குள்ள போய் பார்க்கலாமேன்னு போனப்பதான் அதன் உரிமையாளர் கடைக்கு வெளியில சக்கர நாற்காலில அமர்ந்து கைபேசியில சிரித்து சிரித்து பேசிகிட்டிருந்தாரு. அடடே, அந்த பிரபல எழுத்தாளரோட புத்தகமெல்லாம் இருக்குதேன்னு பார்த்துட்டு இருக்கறப்போ, “இது யாரு இது, காதுல வளையமெல்லாம் போட்டுகிட்டு, இப்படி ஆம்பளைங்க ஒரு காதுல வளையம் போட்டுகிட்டா என்ன அர்த்தம் தெரியுமில்ல” னு என் மறுபாதி கேட்பதற்கும், அந்தக் குரல் கேட்டு அந்த காதுல வளையம் ஆசாமி திரும்பிப் பார்ப்பதற்கும் சரியாய் இருந்தது. அவருக்கு இவுங்க சொன்னது சரியா கேட்டுச்சோ இல்லையோ தெரியல, ஆனா அவுரு பார்த்த பார்வையிலயே கேட்டிருக்குமோன்னு ஒரு சந்தேகம் வந்துச்சு. சரி எதுக்கும் இருக்கட்டுமேன்னு “புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்”னு நான் கையை நீட்டிவிடவும். என்பக்கம் திரும்பினார் அவர். அப்பொழுது தான் கவனித்தேன் ஆஹா, அவரா, இவுருன்னு கிலியடிச்ச மாதிரி நின்னுட்டேன். கணப் பொழுதில் சுதாரித்துக் கொண்டு, நானும் ஒரு பதிவர் தான், உங்க எழுத்தையெல்லாம் படிச்சிருக்கேன்னு சொன்னேன். அப்படியான்னு முகத்தில் எந்த வித மாற்றமுமில்லாமல் உணர்ச்சியே இல்லாதவரைப் போல கேட்டாரு. வேற யாராவது பதிவர்களைப் பார்த்தீங்களான்னு கேட்டேன். ஆமாம், லக்கியும் டாக்டர் புரூனோவும் வந்திருக்காங்கன்னு சொன்னாரு. உடனே அவுருகிட்ட கையெழுத்து வாங்கறதுக்காக ஒருத்தர் வந்தாரு. அவருக்கு கையெழுத்து போட்டுகிட்டிருக்கும்போதே, நானும் இந்த பிரபலத்துகிட்ட கையெழுத்து வாங்கலாமேங்கற நப்பாசையில அவர் எழுதுன புத்தகம் எதாவது இருக்குதான்னு பார்த்தா, அந்த பூஜ்ஜியக் கோணம் இருந்துது. டக்குனு அதை எடுத்து, இதுல கையெழுத்து போட்டுக் குடுங்க சார்னு சொன்னவுடனே, உங்க பேரென்னன்னு கேட்டாரு, சொன்னதும் என் அன்பு நண்பர்…………… அவர்களுக்குன்னு எழுதி அவர் பெயரையும் எழுதி குடுத்தாரு.

மனுஷன் அநியாயத்துக்கு அன்பு பாராட்டறாரேன்னு பார்த்துட்டு, அந்த கடையிலயே இன்னமும் கொஞ்சம் தேடினப்பதான், அந்த ஆச்சரியம் காத்திருந்தது. இந்த காதுல வளையம் பார்ட்டி, யாரை பரம்பரை எதிரி மாதிரி திட்டுவாரோ அவர் எழுதின புத்தகங்கள் நேர் எதிர் வரிசையில் இருந்தது. இது என்னடா, “இம்மியளவு இடைவெளியில் இரண்டு துருவங்களா, ஆச்சரியக் குறி” (என்னமா கவிதை பாருங்க) அப்படீன்னு மனசுல நெனச்சுகிட்டு, அதுலயும் ஒண்ணை வாங்கிட்டு சரி போலாம் ரைட்னு இன்னும் தேடலை ஆரம்பித்தோம்.

கிழக்கு பக்கமா போயி அந்த அரசர்களெல்லாம் குஜால் பண்ணதப் பத்தி தலையணை சைஸ்ல ஒருத்தர் எழுதுன புத்தகம் இருக்கான்னு கேட்டா, இன்னும் வரலீங்க, வர்றதுக்கு ரெண்டு நாளாகும்னு சொல்லீட்டாங்க. ஒரே ஏமாற்றம். அதுக்காக விடுவமா, இன்னும் மூணு மாசம் கழிச்சுத்தான் தமிழ்நாட்டுப் பக்கமே வரப் போறோம், அதுவரைக்கும் தாக்குப் பிடிக்கணுமேன்னு, மூணு மாசத்துக்கான சரக்கை தேத்திக்கிட்டு, அப்படி இப்படீன்னு மகளுக்கு கொஞ்சம், அப்புறம் அதிகார மையத்துக்கு கொஞ்சம்னு கைநிறைய புத்தகங்களை வாங்கிகிட்டு வீட்டுக்கு வந்துட்டோம்.

வீட்டுல வந்து அந்த பூஜ்ஜியக் கோணத்தை திறந்து படிக்க உக்கார்ந்தா, ரெண்டு பக்கம்தான் படிச்சிருப்பேன், உவ்வே, வ்வே, வ்வ்வ்வ்வ்வ்வே, த்தூ, த்தூ. வாந்தி, வாந்தியா வருது. கஷ்டப்பட்டு வாந்தி எடுத்து முடிச்சிட்டு, அந்த அதிர்ச்சியிலிருந்து வெளியில வர்றதுக்கு ஆறு நாள் ஆச்சு. ஆறு நாளைக்கப்புறம் கணினியைத் திறந்தா, இன்னொரு மனிதனின் குமுறல் வேற.

மனசுக்குள்ள ஒரு குறுகுறுப்பு, இந்த வருட முதல் நாள்லயே கைக்காசை செலவு பண்ணி வாந்தியெடுக்கறதுக்காக ஒரு புத்தகம் வாங்கி, அதுல கையெழுத்து வேற வாங்கிட்டு வந்துட்டமே, இதைத்தான் சொந்த செலவுல சூனியம்ங்கறதா?????

Wednesday, January 6, 2010

மறுபடியும் ஆணி புடுங்க ஆரம்பிச்சாச்சு

அய்யாமாருங்களே, அம்மாமாருங்களே, அண்ணன்களே, அவர்களே, இவர்களே எல்லாரும் நல்லாருக்கீங்களா? புதுவருஷம் பூத்து குலுங்குது, எல்லாரும் இந்த புது வருஷத்துல ஒரு இதுவா இருக்கணும்னு வேண்டிக்கறேன்.

அப்பப்பா, என்னா டென்ஷன், என்னா டென்ஷன்…, வேலை செய்யற இடத்துல கிறிஸ்மஸூக்கு லீவுல போறேன்னு சொன்னா, அது டிசம்பர் 25ம் தேதி தானே, நீ ஏன் 22ம் தேதியே போறேன்னு கழுத்தறுத்தாங்க. ங்கொய்யால, நீங்கெல்லாம் சாப்பாடு தொண்டைல விக்குனதுக்கு அப்புறம்தான் தண்ணிக்குடம் எடுத்து கிணத்துக்கு போவீங்களாடான்னு வாய்வரை வந்த கவிதையை ஒலி வடிவத்துல மாத்தாம, மனசுக்குள்ளயே மடிச்சு வெச்சுட்டு, லீவு சொல்லி, விமானம் பிடித்து, சென்னை விமான நிலைய ஓடுதளத்தை விமானம் தொட்டவுடனே ஒரு ஃபீலிங்கஸ் மனசுக்குள்ள வரும் பாருங்க, ஆஹா, அத்த இன்னான்னு சொல்றது.

இந்த வருஷம் நமக்கு அதிகம் வேலை வெக்காம, தங்கமணியே கிறிஸ்மஸ் மரம் வெச்சு, ஸ்டார் கட்டி, அப்படி இப்படின்னு எல்லா வேலையும் முடிச்சுட்டாங்க. அதனால நமக்கு கொஞ்சம் வேலை கம்மி. இல்லைன்னா ஒவ்வொரு வேலைக்கும் பல்பு வாங்கியே கிறிஸ்மஸ் மறந்து போயிருக்கும்.

இந்த லீவுல வண்டி எடுத்து என்ஜின் கதறக் கதற ஒரு 3240 கிலோ மீட்டர் சுத்துனோம். சொந்த மண்ணான கொங்குநாடு, அப்புறம் த்ங்கமணிக்காக கேரளா, அப்புறம் அங்க இங்கன்னு ஒரே யாத்திரைதான். நிறைய சபரிமலை பக்தர்களை பார்க்க முடிந்தது. அவுங்க போற வர்ற வழியிலெல்லாம், அவுங்களுக்குன்னு கவர்ச்சி விளம்பரம் கொடுத்து துட்டு பார்க்கற வியாபாரிகள் கலக்கறாங்க. அதுவும் கம்பம், குமுளி, தேக்கடியிலெல்லாம் கடைகள் இரவு பகல்னு பார்க்காம திறந்திருக்கு. குமுளி மசாலா பொருள்கள் விளையும் இடம்கறதால, மசாலாங்கற பேர்ல என்னத்த வெச்சாலும் சாமிகள் கூட்டம் அள்ளீட்டுப் போகுது. அந்த காட்டுல கிடைக்கற மஞ்சியையெல்லாம் அள்ளிகிட்டு வந்து, அதை கொண்டையில ஒரு பந்து வைப்பாங்களே அந்த சைஸ்ல தட்டையா உருட்டி, பிளாஸ்டிக் காகிதத்துல அடைச்சுட்டாங்கன்னா அதுதான் மூலிகை மஞ்சியாம். அதை உடம்புல தேச்சு குளிச்சா சருமத்துக்கு நல்லதுங்கறாங்க. குமுளில விளையறதென்னமோ மிளகு, ஏலக்காய், கிராம்பு, பட்டை இந்த மாதிரி பொருள்கள்தான். ஆனா சோம்பு, கொத்தமல்லின்னு மதுரையிலிருந்து வாங்கிட்டு வந்து பாக்கெட்டுல போட்டு, அதை மதுரையிலிருந்து வர்ற சாமிக்கே விக்கறாங்க. அதையும் மதுரைக்கார சாமி பேரம் பேசி ரொம்ப மலிவா இருக்குன்னு வாங்கிட்டு போறார்.

பெரிய பிரியாணி சட்டியில எவ்வளவு கொள்ளுமோ அந்த அளவுக்கு மைதா மாவு, அதுல தோராயமா சர்க்கரை சேர்த்து, கொஞ்சம் முந்திரியையும் திராட்ச்சையும் போட்டு, அடுப்புல வெச்சு, தீய நல்லா எரிய விட்டு கலக்கு கலக்குன்னு கலக்கறது.சர்க்கரைப் பாகு இளகி, மாவோட கலநது கெட்டியாகற நேரத்துல, பச்சையோ, மஞ்சளோ, சிவப்போ எதாவது ஒரு கலர்பொடிய போட்டு இறக்கி வெச்சா அதுதான் அல்வாவாம்.

நம்மளுக்கு வேண்டப்பட்டவங்களும் நேந்திரங்காய் சிப்ஸ் கடை போட்டிருந்ததால கொஞ்ச நேரம் இந்த கூத்தையெல்லாம் பார்க்க முடிஞ்சுது. இந்த தரம் அங்கிருக்கற மலையாள மக்கள் பண்ணுனதுதான் ரொம்ப சூப்பரா இருந்துது.

மலையிலிருந்து திரும்பி வர்ற ஒரு கர்நாடகா சாமிகள் கும்பல். குமுளியில நின்னு மசாலாவெல்லாம் வாங்கிகிட்டிருந்தாங்க. அப்ப அங்க ரோட்டோரக் கடை வெச்சிருக்கற ஒரு நாலைஞ்சு சேட்டன்கள் ஒரு கன்னட சாமியப் புடிச்சு உங்க உருவப் படம் வரைஞ்சு குடுக்கறேன்னு சொல்லி அதுக்கு நூறு ரூவா ஆகும்னு சொல்ல, அவரும் எதோ மகாராஜா ஸ்டைல்ல உக்கார்ந்துட்டாரு. ஒரு பென்சிலும் பேப்பரும் எடுத்த ஒரு சேட்டன் ஒரு பதினைஞ்சு நிமிசத்துல மனித உருவம் மாதிரியே தெரியற ஒரு படத்தை வரைஞ்சு, இதுதான் நீங்கன்னாங்க. கன்னட சாமி டென்ஷனாயிருச்சு. இதுக்கும் எனக்கும் சம்பந்தமேயில்லன்னு அவரு கன்னடத்துல கத்த, அதுக்கு இவுங்க சொன்ன பதிலைக்கேட்டு சாமி டரியலாயிட்டாரு. ஒரு சேட்டன் சொன்னாரு, “சாமி, இவட நோக்கு, ஈ படத்துல தாடியும் மீசையும் உண்டோ, இல்லல்லோ, பக்ஷே சாமி மலைக்கு போயதைக் கொண்டு தாடியும் மீசையும் வெச்சுட்டுண்டு, பெங்களூரில் போயி, சாமி ஷேவிங் கட்டிங் ஒக்க செய்துட்டு, பின்ன ஈ படத்த நோக்கு. ஷெரிக்கு இது போலத்தன்ன காணும்”னு சொன்னவுடனே சாமிக்கு திடீர்னு அட ஆமாம்ல, பய புள்ளக சரியாத்தான் சொல்லுதுகளோன்னு ஒரு சந்தேகம் வந்து, படத்தை எல்லா ஏங்கிள்லயும் பார்க்க, கடைசியில அம்பது ரூவாய்க்கு அந்த படத்த சாமிதலையில கட்டி விட்டுட்டாங்க. சாமியும் நூறு ரூவாய்னு சொல்லி அம்பதுக்கு வாங்கீட்டம்ல, எப்பூடீன்னு ஒரு வெற்றிக் களிப்போட போனாரு.

புது வருஷம் சூப்பரா இருந்துச்சு. நண்பர் அதிஷா கூப்பிட்டு வாழ்த்து சொன்னாரு. திண்டுக்கல் பக்கத்துல எதோ வேலையா போயிருக்காராம். அப்புறம் எல்லாருக்கும் குறுஞ்செய்தி அனுப்பி, எனக்கு அனுப்புனவுங்களுக்கு டேங்ஸ் சொல்லி அனுப்பின்னு புத்தாண்டு தினம் போயிருச்சு. குறுஞ்செய்திக்கு அண்ணன் ஆதி அனுப்புன பதில்தான் டெரரா இருந்துச்சு. “ Happy New Year, Be careful from other Duplicate wishers, I am tha only authorized ISO 9001 – 2009 certified distributor of New Year Wishes” னு பதில் அனுப்புனாரு. புது வருஷத்துல ஆரம்பமே இப்படியா நல்லா இருங்கப்பு.

அப்துல்லா அண்ணனும், கேபிள் அண்ணனும் சென்னைக்கு வந்தா கண்டிப்பா சந்திக்கணும்னு சொன்னாங்க. ஆனா முடியல. அதுக்காக அவுங்க ஆள் வெச்சு அடிப்பாங்களோன்னு பயமா இருக்கு.

அப்புறமா, புத்தக கண்காட்சி போயிருந்தேன். அங்க தாங்க வருஷத்தின் முதல் நாள்லயே டரியலாக்கும் அந்த மேட்டர் நடந்தது. என்னான்னு கேக்கறீங்களா, அடுத்த பதிவுல சொல்றேனே.

மறுபடியும் ஆணி புடுங்க மத்தியப் பிரதேசம் வந்தாச்சு.

Tuesday, December 15, 2009

முகவரி மாறும் முகங்கள்

சமீபத்தில் பதிவர் வெங்கிராஜாவின் பதிவான முகங்கள் படிக்க முடிந்தது. சென்னையின் இரவு நேர காட்சிகளை அழகான புகைப் படங்களுடன் பதிவு செய்திருந்தார். புகைப்படங்களில் வயதான முதியவர்கள், தாடி வைத்தவர்கள், காய் விற்கும் அம்மா, பூக்கட்டும் மூதாட்டி, காவித்துண்டை கழுத்தில் சுற்றிய ஒரு அய்யப்ப பக்தரோ அல்லது முருக பக்தரோ தெரியவில்லை, வெற்றுடம்புடன் குனிந்து நிற்கும் ஒரு வாலிபனும் முதியவரும் என காமிரா கவிதை பாடியிருக்கிறது. ஒரு விஷயம் மாத்திரம் புரியவில்லை, சென்னை என்றில்லை இந்தியாவின் எந்த நகரத்தையும் அதன் பரிமாணங்களை வெளிக்கொணர காமிரா பிடிப்பவர்களின் கண்களுக்கெல்லாம், வளர்ந்து நிற்கும் கட்டிடங்களோ, வழுக்கிச் செல்லும் சாலைகளோ, சாலைகளின் நடுவில் சுற்றிச் சுழலும் பாலங்களோ, மல்லிகைப் பூச்சூடி கொடியிடை கொண்ட எங்கள் மண்ணின் குமரிகளோ, மடிக்கணியை எதோ ஒரு விளையாட்டுப் பொருள் போல கழுத்தில் தொங்கவிட்டு அலுவலகம் விரைந்து வித்தை காட்டும் அறிவு ஜீவி இளைஞர்களோ, பரந்து விரிந்து நிற்கும் கடற்கரைகளோ (ஏ யப்பா மூச்சு முட்டுதய்யா) கண்ணிலேயே படுவதில்லை.

காமிராவில் தெரிவதெல்லாம் பிச்சைக்காரர்கள், வறுமையில் வாடுபவர்கள், முகத்தில் ஈ மொய்க்க அழுக்கு கரங்களில் ஒரு சோற்றுப் பருக்கையை வாய்க்குள் திணித்து, ஒழுகும் சளி மூக்குடன் உள்ள குழந்தைகள், திறந்து கிடக்கும் சாக்கடைகள், போஸ்டர் ஒட்டிய வெளிச்சுவர்கள், உடைந்த பின்னும் ஓடிக் கொண்டிருக்கும் அபாயநிலை வாகனங்கள், பெருநகரங்களில் உடல் விற்க காத்திருக்கும் விபச்சாரிகள், வயிறு பெருத்த காவல் துறையினர், மஞ்சள் கோட்டை தாண்டிச் செல்லும் வாகன ஓட்டிகள் என எதிர்மறைக் காட்சிகளாகவே ஏன் தெரிகிறதென்று தெரியவில்லை.

வெங்கி ராஜா என்ன நினைத்து இந்தப் படங்களை பிடித்தார் என தெரியவில்லை. ஆனால் இரவில் சென்னையில் படம் பிடிக்க எத்தனையோ சிறப்பான விஷயங்கள் இருக்கும்பொழுது வெறும் வயது முதிர்ந்த தாடிக்காரர்களும், தள்ளாத வயதிலும் பூக்கட்டும் பூக்காரம்மாவும் தானா கண்ணில் பட்டார்கள். அவர் சுற்றிய வழியான ராமாவரம் பாலத்திலிருந்து தோமையர் மலை போகும் வழியில் எதிர்படும் கத்திப் பாராவின் பாலம் இரவில் ஒரு தனி அழகுதான். ராடிசன் ஹோட்டல் வரை செல்லும் ஜி.எஸ்.டி சாலை இரவில் வண்ணமயமான விளக்குகளால் ஒளியூட்டப் பட்டு துடைத்து விட்டாற்போல் பளிச்சென்றிருக்கும். மனிதர்களைத்தான் படம் பிடிக்க வேண்டும் என நினைத்தால், எத்தனையோ மனிதர்கள் இந்த நாட்டின் செழிப்பை வெளிப்படுத்த கடிகார முட்களின் ஒவ்வொரு நகர்விற்கும் எங்கள் சாலைகளின் எல்லா மூலைகளிலும் தென்படுவார்கள். அவர்களை எல்லாம் விடுத்து ஏழ்மையை மாத்திரம் படம் பிடித்ததன் மூலம் என்ன சொல்ல வருகிறார் என தெரியவில்லை.

எனது பல ஆண்டுகால வெளிநாட்டு வாசத்தில், அங்கு அமர்ந்து தொலைகாட்சி நிகழ்ச்சிகளை காணும் பொழுதெல்லாம், இந்தியாவைப் பற்றிய ஏதாவது ஒரு நிகழ்ச்சியென்றால், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஊடகங்களுக்கு தெரிந்ததெல்லாம் விநாயகர் சிலைகளும், குப்பை நிறைந்த குறுக்குச் சந்துகளும், மும்பை, டெல்லி மற்றும் கல்கத்தாவின் சிவப்பு விளக்கு பகுதியின் மித மிஞ்சிய உதட்டுச் சாய மங்கைகளும், திறந்த சாக்கடைகளும், நாய்களுடன் கூட்டுச் சேர்ந்து எச்சிலையில் சாப்பிடும் பிச்சைக் காரர்களும், வாகன நெரிசலில் ஒலிப்பான் பிளிர சிக்கித் தவிக்கும் மாநகர சாலைகளும் என அலங்கோலங்கள் மாத்திரமே காண்பிக்கப் படும். இது இந்தியாவின் வளர்ச்சியைப் கண்டு வயிறெரியும் மேற்கத்திய மக்களின் வக்கிரப் பிரச்சாரம் என்றே நான் சொல்லுவேன்.

ஆனால் நாம், நம்மைப் பற்றி கூறும் பொழுது ஏன் இப்படி வறுமையையும், அவலங்களையும் மாத்திரம் கூற வேண்டும்? யதார்த்தத்தை காண்பிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு ஏன் நாம் நம்மை தாழ்த்திக் கொள்கிறோமோ தெரியவில்லை. நான் தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்த நாட்களில் அங்கிருக்கும் இந்தியர்களால் தயாரிக்கப் பட்ட Broken Promises என்ற ஒரு இந்திய திரைப் படத்தை காண முடிந்தது. குமாரன் நாயுடு என்ற இந்தியரால் இயக்கப் பட்டு முற்றிலும் இந்திய நடிகர்களே நடித்த படம். அதிலும் கூட தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர்களின் பழக்க வழக்கங்களை எள்ளி நகையாடியிருப்பார் இந்த நாயுடு. இந்தியப் பெண்கள் ரோட்டின் நடுவில் நின்று பூரிக் கட்டையை வைத்து சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். அதில் வரும் கதாநாயகர்களான இந்திய இளைஞர்கள் வேலை வெட்டியில்லாமல் ஊர் சுற்றுபவர்களாகவும், சரக்கடிக்க மற்றவர்களை ஏமாற்றி காசு பார்ப்பவர்களாகவும் சித்தரிக்கப் படுகிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் தென் ஆப்பிரிக்கா வாழ் மக்களிலேயே மூன்று வேளை சாப்பாடு சாப்பிட்டு, குடும்ப அமைப்பு சிதையாமல் வாழும் இனம் இந்திய இனம் தான். ஆனால், அவர்களை ஒரு இந்தியன் இப்படி இழிவாக சித்தரிப்பதையும், அதைப் பார்த்து இந்தியர்களே எள்ளி நகையாடுவதும் வேதனையாக உள்ளது. வெளி நாடுகளில் வசிக்கும் இந்தியர்களிடம் இந்த பழக்கத்தை அதிகமாக நான் கண்டிருக்கிறேன். சக இந்தியனின் இந்திய பழக்க வழக்கங்களுக்காக வெள்ளையர்களுடன் சேர்ந்து கொண்டு கிண்டல் செய்யும் இந்தியர்களை வெகுவாக கண்டிருக்கிறேன்.


இந்தியாவின் யதார்த்தங்கள் இன்னும் ஏழ்மைக் கோலத்தில் தானா இருக்கிறது? கடந்த சில வாரங்களுக்கு முன் மத்திய நிதியமைச்சரிலிருந்து மற்ற அமைச்சர்கள் வரை, பாராளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடரின் ஆரம்பத்திலேயே சொன்னார்களே, இந்தியா 7.2 சதவீத வளர்ச்சி கண்டிருக்கிறதென்று, இந்த நல்ல செய்திகள் நம்மவர்களின் மனங்களிலும் சரி, ஊடகங்களின் பார்வையிலும் சரி ஏன் ஒரு உப்புப் பெறாத விஷயமாகவே போய் விடுகிறதோ தெரியவில்லை. நண்பர்களே, நம்புங்கள். நாம் வளர்கிறோம். சிகரங்களை தொடுகிறோம். சராசரி இந்தியனின் வருமானம் உயர்ந்து கொண்டிருக்கிறது. உலகத் தரம் என்பது இந்தியாவிலும் பல துறைகளில் அடியெடுத்து வைத்துக் கொண்டிருக்கிறது. வெளி நாட்டவர்கள் இந்தியாவை நோக்கி சம்பளத்துக்காக வர ஆரம்பித்து விட்டார்கள். இந்தியர்களின் ஆளுமை உலகின் பல துறைகளிலும் கோலோச்சுகிறது. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் சுருக்கம் விழுந்த முகங்களையும், கடுக்கன் தொங்கும் காதுகளையும், கோவணமணிந்த உடல்களையும் எதார்த்தம் என்ற பெயரில் காண்பித்துக் கொண்டிருப்பீர்கள்?

Tuesday, December 8, 2009

எங்க அய்யாமாருக பெருமைப் பட்டாக!!!!!

நிலாவுல நீர் இருக்குதாம். இந்தியந்தான் கண்டு பிடிச்சானாம்

எங்க அய்யா மாருக பெருமைப் பட்டாக

அய்யா, ராசா, எங்கூருக்கு

எப்பய்யா தண்ணி கண்டு பிடிப்பீக.?



பங்குச்சந்தைல பதினேழாயிரம் புள்ளியாம்,

எங்க அய்யா மாருக பெருமைப் பட்டாக.

அய்யா, ராசா, பருப்பு தின்னு பல மாசம்

ஆச்சய்யா, பங்குச் சந்தைல பருப்பு விப்பீகளா?



எல்லாரும் எல்லாம் படிக்க சமச்சீர் கல்வி வருதாம்

எங்க அய்யா மாருக பெருமைப் பட்டாக,

அய்யா ராசா, சமச்சீரோ, சமையாத சீரோ

படிக்க மொதல்ல பள்ளிக் கூடம் குடுங்கைய்யா?



கிரிக்கெட் போட்டியில மொத இடமாம்

எங்க அய்யா மாருக பெருமைப் பட்டாக

அய்யா ராசா, விளையாட்டெல்லாம் சரிதான்யா

எங்க வாழ்கைக்கு ஒரு வழி சொல்லுங்கைய்யா

Friday, December 4, 2009

என்னத்தைச் சொல்ல.......



பெங்களூருவிலிருக்கும் நாராயணா ஹ்ருதயாலயாவின் சிறப்பு மருத்துவரான தேவி ஷெட்டி, விப்ரோ தொழிலாளர்களின் சிறப்பு அழைப்பின் பேரில் ஒரு கலந்துரையாடலுக்கு சென்றிருந்தார். நவீன உலகின் இளைஞர், இளைஞிகளுக்கு வரும் இருதய நோய்களைப் பற்றிய கலந்துரையாடலில், மாரடைப்பை தடுப்பது எப்படி என்பது பற்றிய கேள்விகளுக்கு பெரும்பாலான பதில்களில், உடற்பயிற்சி செய்யுங்கள், சிரித்துக் கொண்டிருங்கள், பழ வகைகளை அதிகம் உண்ணுங்கள், ஒவ்வொரு மூன்று மணி நேரத்துக்கும் குறைந்த அளவில் எதையாவது சாப்பிடுங்கள், எண்ணையை தவிர்த்து விடுங்கள் என பதிலளித்துக் கொண்டே வந்தவரிடம் திடீரென கேட்கப் பட்ட ஒரு கேள்வி:

கேள்வி : பெண்களைவிட ஆண்களுக்கே அதிகம் மாரடைப்பு வருகிறதே ஏன்?

பதில் : 45 வயது வரை பெண்களை இயற்கையே பாதுகாக்கிறது.

அய்யா, டாக்டரய்யா இந்த 45 வயசுக்குள்ள இவுங்க படுத்தற படுத்துல தான் ஆம்பளைங்களுக்கு எல்லாம் மாரடைப்பு வருதுன்னு சொல்லாம சொல்றீங்களா? இல்ல, 45 வயசு வரைக்கும் பெண்களுக்கெல்லாம் பில்டிங் ஸ்ட்ராங்கு, மொட்டைமாடிதான் எப்பவுமே காலின்னு சொல்ல வர்றீங்களா? தெளிவா சொல்லாம இப்படி குழப்பறீங்களே….. என்னத்தச் சொல்ல…..

****************************************************************************
அகில இந்திய வானொலியின் பண்பலை சேவையில் தமிழ் பண்பலை வரிசையில் நிகழ்ச்சிகளை கேட்டுக் கொண்டிருந்தேன். வழக்கமாக காட்டுக் கத்து கத்திக் கொண்டு, உங்கள் மனதுக்கு பிடித்த பாடலின் பிடித்த வரியில் வரும் பிடித்த வார்த்தையின் பிடித்த எழுத்தை எங்களுக்கு போன் பண்ணி சொல்லுங்க, நாங்க அந்த எழுத்தில் ஆரம்பிக்கற வேற ஒரு பாட்டை உங்களுக்காக் ஒலி பரப்புகிறோம் என்ற அருவருப்பான பண்பலை வானொலி நிகழ்ச்சிகளை விட, அனைத்திந்திய வானொலி நிலையத்தார் நிகழ்ச்சிகளை கதம்பமாக கோர்த்திருந்த விதம் சிறப்பாக இருக்கிறது.

ஆனால் இடையில் இப்படி ஒரு விளம்பரம்:

அண்ணே, ஒரு சந்தோஷமான விஷயம். நான் அம்மாவாகப் போறேன். தினமும் கோயிலுக்குப் போயி சுக பிரசவம் வேணும்னு ஒண்ணே கால் ரூபாய் காணிக்கை போட்டுட்டு வர்றேன்.

அப்படியா தங்கச்சி, சுக பிரசவம் வேணும்னா, அயோடின் உப்பு சேர்த்துக்க, அதுதான் உடம்புக்கு நல்லது.. கோவில்ல போடுற ஒண்ணேகால் ரூவாயை அயோடின் உப்பு வாங்கறதுக்கு செலவு பண்ணேன்னா, உனக்கு மட்டுமல்ல, உன் வயத்துல இருக்கற குழந்தைக்கும் நல்லது

அய்யா, வானொலி நிலையத்தாரே, நீங்க என்ன சொல்றீங்கன்னு தெரிஞ்சுதான் சொல்றீங்களா, இதை எங்கயாவது இந்த கோக்கு மாக்கா பக்தி பரவசத்திலாழ்ந்திருக்கும் பக்த கோடிகள் கேட்டுட்டாங்கன்னா, அப்புறம் நாலு பஸ் எரியும், ஆட்டோ ஓடாது, கடை கண்ணிக பத்தி எரியும், ரெண்டு மூணு வழிபாட்டுத்தலங்கள் தரை மட்டமாகும், பள்ளிக்கூடம் லீவு, ஆபீசு லீவு, ஒவ்வொரு தெரு முனையிலும் கூட்டம், சட்டசபையில வெளிநடப்பு செய்யறவங்கெல்லாம், திடீர்னு உள்நடப்பு செஞ்சு கேள்வி கேட்க ஆரம்பிச்சுருவாங்க, கடல் தண்ணி இருந்தாதான் உப்பு விளையுது, உப்பு விளைஞ்சாத்தான அயோடின் சேர்ப்பீங்க, அதனால கடலையே அழித்து விட அணி திரண்டு வாரீர்னு டிஜிட்டல் பேனர் கட்டுவாங்க, இது நாட்டை சீர்குலைக்க வந்த வெளிநாட்டு சதின்னு உளவுத்துறை ரிப்போட்டு வரும், ஏய்ய்ய்யப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா, ஆளை விடுங்க சாமி, ஒரு உப்புப் பெறாத உப்பு மேட்டர்ல எவ்வளவு வில்லங்கம் இருக்கு பாருங்க,,,,,, என்னத்தச் சொல்ல.

********************************************************************************

அது என்னன்னே தெரியலீங்க, நம்மளுக்குத்தான் இந்த மாதிரி நடக்குதா, இல்ல எல்லாருக்குமே நடக்குதான்னு தெரியல. டோல் கேட்ல நம்ம கார் எந்த வரிசையில நிக்குதோ, அந்த வரிசையில மாத்திரம், முன்னால இருக்கற கார்காரர், காசு வாங்கறவன் கிட்ட சண்டை போடுவார், இல்லைன்னா 500 ரூபாய் நோட்டை தேடி எடுத்துக் குடுத்து, சில்லறை வாங்கி சரி பார்த்து நிதானமா பர்ஸுல வெச்சுட்டு, அப்புறமா கிளம்புவாரு, இல்லைண்ணா நமக்கு முன்னால ரெண்டு கார் இருக்கும்போது அங்க மெஷின் கெட்டுப் போயிரும், இப்பிடி எதாவது ஒண்ணு நடந்து, நம்ம பொறுமையின் அளவை சோதிச்சுட்டே இருக்கும்.


பெட்ரோல் நிரப்ப போனா, நமக்கு முன்னால இருக்கற கார்காரர், சாவகாசமா கிரெடிட் கார்டை எடுத்துக் குடுத்து, அது வேலை செய்யாமப் போய், அப்புறம் இன்னொரு கார்டை எடுத்து குடுத்து, நிதானமா ரசீதுல கையெழுத்துப் போட்டு, ஏன், இல்ல, ஏன் இப்படி எனக்கு மாத்திரம் நடக்குது. என்னத்த சொல்ல…….
***********************************************************************************
சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில், தினமும் மாலையில் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு போகும் பொழுது, நிறைய மாடுகள் ரோட்டில் படுத்துக் கொண்டிருப்பதை பார்க்கிறேன். அவைகளை ஒதுங்கச்சொல்லி ஹாரன் அடித்து விட்டு ஓரிருமுறை சென்றிருக்கிறேன். ஒருமுறை ஒரு இளம் கன்னுக்குட்டி நடு சாலையில் நின்று கொண்டிருக்க, நான் ஹாரன் அடிக்க, அந்த கன்றுக்குட்டி மிரண்டு ஓடாமல் சாவகாசமாக திரும்பி என்னை நெடு நேரம் பார்த்தது. அதன் பார்வையில் அது என்னிடம் ஆயிரம் வார்த்தைகள் பேசியது போல் தோன்றியது. வீட்டுக்கு போகும் வரை அது பேசியிருந்தால் என்ன பேசியிருக்கும் என யோசித்துக் கொண்டே போனேன். அது பேசியிருந்தால்……..

“டேய், வெண்ணை, பெருசா காருக்குள்ள உக்காந்துட்டு என்னைப் பார்த்து ஒதுங்கிப் போகச்சொல்லி ஹாரன் அடிக்கறயே, நீயும் உன் காரும் எங்க நிக்கறீங்க தெரியுமாடா, மவனே, இந்த இடம் நாங்க ஓடி விளையாட, நின்னு மூத்திரம் பேய, குனிஞ்சு புல்லு திங்கன்னு எங்களுக்காகவே உதிச்ச இடம்டா, அதுல ஒரு கான்கிரீட் சதுரத்தை வெச்சுட்டு ஆபீஸூங்கறீங்க, ஒரு வண்டி தாரைக்கொட்டி ரோடுங்கறீங்க, அதுக்கும் மேல என்னைப் பார்த்தே தள்ளி நில்லுன்னு ஹாரன் அடிக்கறயா, கசுமாலம், உன் இடத்துல நான் நிக்கலடா, என் இடத்துல தாண்டா நீ நிக்கற, சீ, தூரமாப் போடா”

இதை நினைத்த போது அந்த கன்னுக் குட்டியிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன். இப்பொழுதெல்லாம் இந்த சாலையில் நான் மாடுகளைப் பார்த்து ஹாரன் அடிப்பதில்லை. என்னத்தைச் சொல்ல……


Tuesday, November 17, 2009

தங்கமணிக்கு பத்து விதிகள்

ஆதி மாத்திரம் தான் தங்கமணி ரங்கமணி பதிவு போடுவாரா என்ன, இதா நாங்களும் போடறம்ல,

பரிசல் மாத்திரம் தான் பத்து பத்தா எழுதுவாரா என்ன, நாங்களும் எழுதறம்ல.

தங்கமணிக்கு பத்து விதிகள் :

உனக்கு என்ன வேணுமோ அதை நேரடியா கேளு, இந்த குறிப்பாலுணர்த்துதல், பார்வையிலயே பேசறது, அடைமொழியில பேசறது, சங்கேத வார்த்தைகள், சமையல்ல மறதிகள்ங்கற விளையாட்டே வேணாம். எதுன்னாலும் நேரா சொல்லித் தொலை.

கடந்த 17 மாசமா உனக்கு அடிக்கடி தலைவலின்னு சொல்லிகிட்டிருக்கியே, அதுக்கு ஒரே மருந்து உடனே போய் டாக்டர பார்க்கறதுதான். அதுக்காக பரிதாபப் படுவது கூட மருந்துதான் அப்டீன்னு நெனச்சியானா, அந்த மருந்து உன் ஃபிரண்ட்ஸ் கிட்டதான் கிடைக்கும்.


வீட்ல என்ன வேலை செய்யணும்னு மாத்திரம் சொல்லு, அதை எப்படி செய்யணும்னு உனக்குத் தெரியும்னா, அதை நீயே செஞ்சிடேன். அல்லது நான் செய்யும்போது அமைதியாவாவது இரேன். ஏன்னா, நாங்கெல்லாம் கொலம்பஸ் பரம்பரை, எங்க போகணும்கறதை மாத்திரம் சொல்லுங்க, எப்படி போகணும்கறதை நாங்க பாத்துக்குவோம்.


எல்லா ஆம்பளைக்கும் கண்ணு வந்து Windows default setting மாதிரித்தான். 16 கலரைத்தான் புரிஞ்சுக்கும். மயில் கழுத்து நீலம்னா அதுல ரெண்டு மேட்டர் இருக்கு, ஒண்ணு ஒரு பறவையோட கழுத்து, இன்னொண்ணு கலர், இதுல உனக்கு புடவை எந்த மாதிரி வேணும்??? காஃபி ப்ரௌன்னுன்னா ஆமா, காஃபி எப்பவுமே ப்ரௌன்தான். வெங்காயத் தோல் கலர்னா, நீ எந்த வெங்காயத்தை சொல்ற, சாம்பார் வெங்காயமா, பெரிய வெங்காயமா?????


6 மாசத்துக்கு முன்னால எதாவது சொல்லீருந்தா, அதையெல்லாம் இன்னைக்கு உதாரணமா சொல்லக் கூடாது. உண்மையிலயே, நாங்க சொல்ற கருத்துகள் எல்லாம் 7 நாளைக்குத்தான். அதுக்கப்புறம் சிந்தனைச் சிற்பிகளாகிய எங்களுக்குள்ளதான் புதுக் கருத்து வந்துரும்ல.


நான் சொல்ற ஒவ்வொரு கருத்துக்கும் ரெண்டு அர்த்தமிருக்கும். இதுல ஒரு அர்த்தம் உனக்கு புடிக்கலைன்னா, நான் எப்பவுமே அந்த அடுத்த அர்த்தத்தைதான் சொன்னேன்னு அர்த்தம்...


நீ குண்டா இருக்கியோன்னு உனக்கு தோணிச்சுன்னா, ஆமா, நீ குண்டா தான் இருக்கே. அத என் வாயால சொல்ல வெச்சு ஒரு புது பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட வேண்டாம்.


நான் என்னைக்குமே ஒரு நல்ல ஷேப்புலதான் இருக்கேன். ரவுண்டா இருக்கறது கூட ஒரு ஷேப் தான. அதையெல்லாம் அடிக்கடி சொல்லிக் காமிக்க கூடாது.


நீ விளம்பர இடைவேளைகளில் பேசற ஒவ்வொரு மேட்டரும் எவ்வளவு சூப்பரா இருக்குது தெரியுமா…. மத்த நேரங்கள்ல நீ எதையாவது சொல்லீட்டு, அடுத்த சண்டைல அத ஆதாரமா காமிக்க கூடாது.


என்னம்மா பிரச்சனைன்னு நான் கேட்டா, நீ ஒண்ணும் இல்லன்னு சும்மா சொல்லீட்டேன்னா, நாங்க அத ஒண்ணும் இல்லன்னுதான் எடுத்துக்குவோம். எங்களுக்குத் தெரியும் நீ பொய் சொல்றேண்ணு, ஆனா இந்த ஒண்ணும் இல்லைங்கற பதில் எவ்வளவு தெளிவா இருக்கு தெரியுமா……

Monday, November 16, 2009

கேபிள் சங்கரின் தந்தையும் நண்பனும்

கேபிள் அண்ணன் இழந்தது தன் தகப்பனை மாத்திரமல்ல, ஒரு நல்ல நண்பனையும்தான் என்று அறியும் பொழுது மனது நெகிழ்கிறது. ஜாக்கி சேகர் தன் பதிவில் இதை சொல்லியிருந்தார்.

இறப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றானாலும், தந்தையின் இழப்பு என்பது விட்டுச் செல்லும் வெற்றிடம் நிரப்ப முடியாததாகி விடுகிறது. உலகின் எந்த ஒரு மன்னனாகட்டும், மாமேதையாகட்டும், அவரின் தந்தையின் இழப்பு என்பது துக்கம் தருவது தான். இதே கட்டத்தை அடியேனும் கடந்து வந்திருக்கிறேன்.

இன்றும் என் அப்பா உபயோகித்த கைத்தடி, அவரின் கண்ணாடி, அவர் வாசித்த பைபிள், அவர் படுத்திருந்த படுக்கை, அவரது ஷேவிங் செட், அவரது வேஷ்டிகள் என இவற்றில் ஒன்றைக் கண்டாலும் தந்தையின் இழப்பு கண்ணை நிறைக்கும்.

கேபிள் அண்ணன் ஆறுதல் அடைய கொஞ்ச நாட்கள் பிடிக்கும். அவரது தேவையின் சமயத்தில் உண்மையாலுமே தோள் கொடுக்க பதிவுலகம் திரண்டு வந்திருக்கிறது என்பதை கேட்கும் பொழுது, பதிவுலகம் மூலம் உருவாகியிருக்கும் நட்பு வளையம் எவ்வளவு உறுதியும் நேயமும் மிக்கது என்பது தெரிகிறது. நர்சிம் தல, உங்கள் செயல்களால் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே போகிறீர்கள். வணங்குகிறேன்.

இதே ஒற்றுமை, இதே நட்பு, ஆக்க பூர்வமான செயல்களில் வரிந்து கட்டிக் கொண்டு முதலில் களம் இறங்கும் குணம் ஆகியவை பதிவர்களுக்குள் என்றும் நிலைத்திருக்க வேண்டுகிறேன்.

கேபிள் அண்ணே, தொலை தூரத்திலிருப்பதால் எழுத்தால் மட்டுமே, உங்கள் துக்கத்தில் பங்கெடுக்கவும், உங்களுக்கு ஆறுதல் சொல்லவும் முடியும். சென்னை வந்ததும் கண்டிப்பாக சந்திக்கிறேன்.

Wednesday, November 11, 2009

ஜுகல்பந்தி – 11 – 11 – 2009 – அமெரிக்க பொங்கல்.

அமெரிக்காவில் பொங்கல் விழா

17 ம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் பல பகுதிகளில் கிளம்பிய பகுத்தறிவு வாதிகள், மத குருமார்களை கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள். பாரம்பரியங்கள், சடங்குகள், மூட நம்பிக்கைகள் என சர்ச்சின் குருக்களால் போதிக்கப்பட்ட எல்லாமுமே கேள்விக்குள்ளாக்கப் பட்டன. இப்படியே கருத்து வேருபாடுகள் தொடர்ந்து, நீயா, நானா வரை வந்த இந்த பகுத்தறிவு வாதம், சர்ச்களில் பிரிவினைக்கு வித்திட்டது. அதே சமயத்தில் அமெரிக்க கண்டத்தையும் சில முதலாளிகள் புரட்டிப் பார்க்க ஆரம்பித்த காரணத்தால் அமெரிக்காவில் வேலை வாய்ப்புகள் பெருகிக் கொண்டிருந்தது. இங்கிலாந்தில் சர்ச் எழுதும் கவிதைக்கு எதிர்கவிதை எழுதி யாரும் உயிரோடு இருக்க முடியாது என்ற காரணத்தினாலும், அமெரிக்காவின் நிலத்திலிருக்கும் சிறப்புகளைப் பற்றி அவ்வப்பொழுது அங்கு சென்று வரும் கப்பல்கள் கதை கதையாய் சொல்வதாலும், இங்கிலாந்தின் ஒரு கூட்டம், அலை கடலென ஆர்த்தெழுந்து அமெரிக்கா கிளம்பியது. இங்கிலாந்திலிருந்து கிளம்பியதின் உண்மை நோக்கமென்னவோ சர்ச் உடனான பிணக்கு தான் காரணமென்றாலும், அமெரிக்க கனவும் (ஹூக்கும், அப்பயுமா) சம அளவில் வசீகரித்ததென்னவோ உண்மைதான்.

1620 ஆம் ஆண்டு, செப்டெம்பர் 6 ம் தேதியோ அல்லது 16 ம் தேதியோ,(சரியான தேதியைக் குறித்த குழப்பங்கள் வரலாற்றுப் பக்கங்களில் இன்னும் இருக்கிறது) இங்கிலாந்திலிருந்து கிளம்பிய “மே ஃபிளவர்” என்ற கப்பலில் ஏறிய 102 பயணிகள் தங்கள் பயணத்தை துவக்கினர். கடும் பனிப் பொழிவு, கப்பலை புரட்டிப் போட துடிக்கும் கடல் காற்று என எல்லா சிரமங்களுக்கு மத்தியிலும் 66 நாட்கள் பயணித்து, அமெரிக்காவின் கிழக்கு பகுதியிலிருக்கும் பிளை மவுத் என்ற ஊருக்கு இவர்கள் வந்து சேர்ந்தனர். இந்த 66 நாட்களில் கப்பலிலேயே இருந்த ஒரு நிறைமாத கர்ப்பிணி ஒரு குழந்தையையும் பெற்றிருந்தாள்.

தரை இறங்கியதும், அங்கு உறைந்து கிடந்த பனியும், வெற்றிடமும் மட்டுமே அவர்களை வ்ரவேற்றது. உண்ண உணவு இல்லை, குவியலாக வைக்கப் பட்டிருந்த மணற்குன்றுகளின் மீது படிந்திருந்த பனிக்கட்டிகளை எப்படியோ உடைத்தெடுத்து, மண்ணைக் கிளறி பார்த்தால், அதனுள் மக்காச்சோள கதிர்கள் புதைத்து வைக்கப் பட்டிருந்தன. அடித்ததடா லாட்டரி என குதூகலித்தவர்களுக்கு ஒரு சில குன்றுகளிலிருந்து எலும்புக் கூடுகளும் கிடைத்தன. எப்படியோ, உண்ணக் கிடைத்ததை எண்ணி சந்தோஷப் பட்டு உண்டு களித்து, பசியின் தாக்கம் போன பின் தான் அந்த பயங்கரம் அவர்களுக்கு உறைத்தது. மண்ணுக்குள் புதைக்க வேண்டுமென்றால், அதை புதைத்தவர்கள் இங்குதான் இருக்க வேண்டும். ஆஹா, பசி மயக்கத்தில் அடுத்தவன் சோத்தை ஆட்டையப் போட்டுட்டமா, இனி என்னவெல்லம் நடக்கப் போகுதோ என பயந்திருந்தவர்கள் மீது, அந்த மண்ணின் மைந்தர்களான வெள்ளந்தி மனிதர்கள் அன்பையே பொழிந்தனர். ஒரு வழியாக அவர்களின் தயவில் உயிர் பிழைத்த ஆங்கிலேயர்கள், அந்த பயணத்தின் வெற்றிக்காகவும், உள்ளூர் ஆசாமிகளின் கண்களில் கிடைத்த தயவிற்காகவும், இறைவனுக்கு நன்றி சொல்லி ஆரம்பித்ததுதான் ‘நன்றி சொல்லும் பண்டிகை”. பின்னாளில் இவர்களுக்கு சோறு போட்டு கட்டி அணைத்த அந்த வெள்ளை மனசுக் காரர்களை, குத்தி வகுந்தெடுத்து விட்டு, ஆங்கிலேயர்களுக்கே உரிய அந்த குரூர புத்தியுடன் எல்லாவற்றையும் கபளீகரம் செய்தது வேறு கதை.

இப்படியாய் ஆரம்பித்த “Thanks Giving Day” கொண்டாட்டங்கள் பின்னாளில் ஒரு அறுவடைப் பண்டிகையாக மாறிப் போனது. விளை நிலத்தின் பலன்களை கடவுளுக்கு படைப்பது என்பது ஒரு சம்பிரதாயமாகிவிட்டது. மே ஃபிளவர் கப்பல் வந்து இங்கு கரை சேர்ந்தது ஒரு நவம்பர் மாதத்து வியாழக் கிழமையாயிருந்ததோ என்னவோ, ஒவ்வொரு நவம்பர் மாதத்தின் கடைசி வியாழக் கிழமைகளிலும் இந்தப் பண்டிகை கொண்டாடப் படுகிறது.

முழு வான்கோழியை அப்படியே தீயில் வாட்டி எடுத்து, வீட்டில் உள்ள அனைவரும் குடும்பமாக குளிருக்கு இதமாயிருக்க இரவில் தீமூட்டி ஒரு வட்டத்தில் அமர்ந்து, பழங்கள், காய்கறிகள், மதுவகைகள் என எல்லாவற்றையும் புசிப்பதும் குடிப்பதும் மட்டுமே இன்று நிலைத்திருக்கிறது.

புசிப்பதற்கும், குடிப்பதற்கும் இது ஒரு காரணமும் தருணமுமாயிருப்பதினால், நம்மூர் பொங்கலைப் போலவே நிலத்தில் அறுவடை செய்தவனும் சரி, செய்யாதவனும் சரி எல்லாரும் கொண்டாடுகிறார்கள்.

பாகிஸ்தானா- பட்டாசுக்கடையா

எதோ தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கறமாதிரி, குண்டு வெடிச்சுகிட்டிருக்காங்க. பெஷாவர் நகரில் நகர மேயரே சிவலோக பிராப்தி அடைந்திருக்கிறார். இங்குதான் என்பது இல்லை, இதில்தான் என்பது இல்லை. காரில், பஸ்ஸில், சைக்கிளில், ராணுவ முகாமுக்கு அருகில், இன்னும் மக்கள் கூடும் இடங்கள் எல்லாவற்றிலும் குண்டுகள் வெடிக்கின்றன. மரணமும், ஓலங்களும், அறிக்கைகளும் த்தூ…..,

அங்குள்ள அரசியல் வியாதிகள் மக்கள் கவனத்தை திசை திருப்ப, இந்தியா தீவிரவாதிகளுக்கு துணை நின்று பாகிஸ்தானில் குண்டு வைக்கிறார்கள் என்று கத்திப் பார்த்தார்கள். ஆனால் எதுவும் எடுபடவில்லை. குண்டுகள் வெடிக்கத்தான் செய்கிறது, காமன் மேன் கதறத்தான் செய்கிறான்.

இதைத்தான் அய்யன் வள்ளுவன் சொன்னானோ::

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் – தமக்கின்னா
பிற்பகல் தாமே விளையும்.
சாப்பாடு

கேபிள் அண்ணன் மாத்திரம் கொத்துப் புரோட்டாவுல எப்பப் பார்த்தாலும் சாப்பாடு சாப்பாடுன்னு ஒரு ஐட்டம் போட்டற்ராரு, இதா நாங்களும் எழுதுவம்ல….,

இங்க வட நாட்ல நொந்துகிட்டிருக்கறததான் எழுத முடியும். கடவுள் மாத்திரம் உருளைக்கிழங்கை படைக்காம இருந்திருந்தார்னா, வட இந்தியாவுல முக்காவாசிப்பேர் பசியிலயே செத்துப் போயிருப்பான். அய்யய்யோ, எதுக்கெடுத்தாலும் ஆலு, ஆலு, ஆலு, ச்சே, ரம்மி ஆட்டத்துல ஜோக்கர் சொருகுறமாதிரி, எதுல வேண்ணாலும் உருளைகிழங்கை சொருகி விட்டற்ராய்ங்க. எத்தனை நாளைக்குத்தான் மனுஷன் இந்த ஒரே ஐட்டத்த சாப்பிட முடியும். ம்ஹூம், கார்க்கிய மாதிரி கூடிய சீக்கிரம் எஸ்கேப்பாகலாம்னு பார்க்கிறேன்.

ங்கொய்யால பக்கங்கள்

நாலுகாசு கையில இருந்தா பணக்காரங்கறான்,
நாலு வார்த்தை பேசிப்புட்டா மேதாவிங்கறான்,
நாலு எழுத்து சேர்த்து எழுதுனா எழுத்தாளர்ங்கறான்,
நாலு பேரு கூட நடந்தா தலைவருங்கறான்,
ங்கொய்யால
மொபைலு எத்தனை பெருசா இருந்தாலும்
சிம்கார்டு ஒரே சைசுதாண்டா.