Monday, October 26, 2009

நமக்கெதுக்குங்க இந்த வம்பு??????

ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தேன். மூன்று நடுவர்கள், ஒரு தொகுப்பாளினி என்ஆட்டம் நன்றாகத்தான் களை கட்டுகிறது. ஆனால், நிகழ்ச்சியில் பேசப் படும் மொழியை கேட்டால் அருவருப்பாக இருக்கிறது. தமிழ் பாடல்கள் பாடப் படுகின்றன. சித்ரா என்னும் நடுவர், முடிந்தவரை தமிழில் பேசுகிறார். அவர் வேறு மொழிக்காரர் என்பதால் அதை பொறுத்துக் கொள்ளலாம். மனோ என்பவர் தமிழில் பேசுகிறார், ஆனால் கொஞ்சமாவது ஆங்கில கலப்படம் இல்லாமல் பேச திணறுகிறார். மூன்றாவதாக ஒரு நடுவர், அவர் பேசுவது என்ன மொழியென்றெ தெரியவில்லை, ஒரு பாடல் என்றால் அதில் சரணம், அனுபல்லவி, பல்லவி என்பவை இருக்கும். ஆனால் இவர் ச்ச்சரணம் என்று கஷ்டப்பட்டு உச்சரிக்கிறார். அதிகமாக புரியாத ஒரு மொழியில் பேசுகிறார். “ நீங்க நன்னா பாடினேள், அந்த top ல போறச்சே, உங்க voice வந்து flatter ஆகாம, steady ஆ இருக்கறது, அந்த ச்ச்ச்சரணத்தோட third word ஐ pronounce பண்ணும் போது ஒரு குட்டி jerk வர்றது. You will have to take note of these குட்டி குட்டி things.” என்று ஒரு புரியாத மொழியில் பேசுகிறார். சீய் தூ என்று துப்ப வேண்டும் போல் உள்ளது.

ஒரு பெண்குழந்தை போட்டியில் தோற்று விட்டதாக நடுவர்கள் தீர்ப்பு சொன்னதும், குழந்தைக்கே உரிய ஏமாற்றங்களுடன் அந்தக் குழந்தை கண்ணீர் வடிக்க, தொகுப்பாளினி அந்தக் குழந்தைக்கு ஆறுதல் சொல்கிறாராம். “அய்யய்யோ இதுக்கெல்லாமா அழுவாங்க, பாருங்க உங்க beautiful cheeks ல tears எல்லாம் roll ஆகி உங்க make up எல்லாம் வந்து spoil ஆகுது பாருங்க” மறுபடியும் காறி தூ தூ தூ

எது எப்படியோ தொலைக்காட்சி காரங்களுக்கு பணம் வந்தா சரிதானே, நமக்கெதுக்குங்க வம்பு?????

***********************************************************************************
இன்று மறுபடியும் இந்திய ஊடகத்தின் மற்றொரு அதிகப் பிரசங்கித்தனமான லொள்ளு:

அமெரிக்க ராணுவத்துடன் ஒரு கூட்டுப் பயிற்சியில் இந்திய ராணுவத்தினர் ஈடு பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தின் புந்தேல்கண்ட் பிராந்தியத்தில் உள்ள ஜான்சி நகரின் வெளிப்புறங்களில் ஒரு காடும் மலையும் சார்ந்த பகுதியை தேடிப் பிடித்து பயிற்சி நடக்கிறது. இந்த பயிற்சியை நேரடியாக தொலைக் காட்சிகள் ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது. ஒரு இந்திய தலைவரையோ, அல்லது விருந்தினராக வந்துள்ள வெளிநாட்டு அரசாங்க முக்கிய மனிதரையோ, சீருந்தில் போகும் பொழுது, திடீரென தீவிர வாதிகள் தாக்கி விட்டால் அவர்களை எப்படி முறியடிப்பது என்பது இன்றைய நாளின் பயிற்சி. தொலைக்காட்சியின் நேர்முக வர்ணனை, இதோ முக்கிய விருந்தினர் வந்து கொண்டிருக்கிறார். அவரது சீருந்தை நோக்கி தீவிரவாதிகள் போகிறார்கள், தாக்குகிறார்கள், திடீரென ஒரு ஹெலிகாப்டர் வருகிறது, அதிலிருந்து அதிரடிப் படையினர் குதிக்கிறார்கள், அவர்கள் தீவிர வாதிகளை பதிலுக்கு தாக்க எப்படி வியூகம் அமைக்கிறார்கள் என நீங்கள் இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இதோ துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம், தீவிர வாதிகளை நோக்கி அலை அலையாக அதிரடிப் படையினர் முன்னேறுகின்றனர். கடைசியில் விருந்தினர் மீட்கப் பட்டார்.

அடேய் வெண்ணைகளா, மும்பை உல்லாச ஹோட்டலில் நீங்கள் நடத்திய அருவருப்பான நாடகத்தினால் எத்தனை வீரர்களை நாம் இழந்தோம் தெரியுமா, அதைப் பற்றிய குற்ற உணர்ச்சி ஒரு அணுவளவாவது இருக்கிறதா உங்களுக்கு? இப்பொழுது மறுபடியும் ஒரு ராணுவ நடவடிக்கையை படம் பிடித்து உங்கள் கஜானாவை நிரப்ப கிளம்பியிருக்கிறீர்களே, இந்தக் காட்சியை அந்த தீவிர வாதிகளும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றிய கவலை கொஞ்சமும் இல்லையா உங்களுக்கு??? ச்சீய், தூ தூ, தூ, எப்படா திருந்துவீங்க நீங்கெல்லாம். ??????

அதிகமா பேசுனா ஆட்டோ வந்துருமோ, நமக்கெதுக்குங்க இந்த வம்பு????

***********************************************************************************
சமீபத்தில் நடந்து முடிந்த மூன்று மாநில சட்ட சபை தேர்தல்களிலும் வித்தியாசமான செய்தியை மக்கள் அரசியல்வியாதிகளுக்கு சொல்லியிருக்கிறார்கள். எல்லா இடங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று மதர்ப்பில் திரிகிறார்ப் போல் தெரிகிறது. ராகுல் காந்தியின் இளமைக் கவர்ச்சி கொஞ்சம் கை கொடுக்கிறதோ, அல்லது உண்மையாலுமே மக்கள் காங்கிரஸ் கட்சியை நம்ப ஆரம்பித்து விட்டார்களோ தெரியவில்லை. ஆமாம், காங்கிரஸ் ஜெயித்துக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் சந்தடி சாக்கில், மகாராஷ்டிர மக்கள் ராஜ் தாக்கரே என்ற ஒரு பாம்புக்கும் பால் வார்த்திருக்கிறார்கள். எப்படி திராவிடம் பேசியே தங்கள் குடும்பத்தை வளர்க்க தென்னாட்டில் ஒரு கும்பல் உண்டோ, அப்படியே மண்ணின் மைந்தர்கள் என்ற ஒரு பிரிவினை வாதம் பேசி அரசியல் செய்ய ஒரு நச்சுப் பாம்பு கிளம்பியிருக்கிறது. இன உணர்வுகளை தூண்டி விட்டு தீப்பொறி பறக்க பேசி 15 இடங்களில் இந்தப் பாம்பு படமெடுத்திருக்கிறது. என்ன ஆகப் போகுதோ???????

அரசியல்னா அப்பிடி இப்படி இருக்கத்தானுங்க செய்யும். பாத்துட்டு ஒரு ரெண்டு நிமிஷம் புலம்பிட்டு போக வேண்டியது தான். நமக்கெதுக்குங்க இந்த வம்பு??????

************************************************************************************

Wednesday, October 21, 2009

ஜுகல்பந்தி – 21 – 10 – 2009 - விகாரங்களின் திருவிழா

நகரம் – புஷ்கர் – பிரம்மனின் நகரம்.

ராஜஸ்தானிய பாலைவன நகரங்களில் ஒன்று. ஜெய்ப்பூரிலிருந்து அஜ்மீர் சென்று அங்கிருந்து இன்னும் 11 கிலோமீட்டரில் இந்த மணல் பரப்பில் கால் பதித்து விடலாம். ஏரிகள், ஆலயங்கள், கடைகள், கலைகளின் வெவ்வேறு வடிவங்கள், இழுத்து சுருட்டப் பட்ட மீசை, ஒரு புடவையை விட நீளமான துணியில் தலைப் பாகை, அத்தனை வண்ணங்களையும் கலந்து ஒரே துணியில் தைத்து, மார்பை மட்டும் மறைத்து விட்டு முதுகு திறந்து நடமாடும் பெண்கள், மணல், மணல். மற்றும் மணல் என ஒரு குதூகலக் கலவை தான் இந்த நகரம்.

வருடத்திற்கு ஒரு முறை மாத்திரமே களைகட்டும் விலங்குச் சந்தையில் ஒட்டகங்கள் முக்கிய பங்கு வகிக்கும். ஆயிரக் கணக்கான ஒட்டகங்கள், கழுதைகள், ஆடு மாடுகள், பறவைகள் என எல்லாம் விற்பனைக்கே. இவை அனைத்தும் சேர்ந்து ஒரு சேர கத்துவதில் ஒரு ஜுகல் பந்தி உருவாகும் பாருங்கள், ஆஹா, கேட்க காது கோடி வேண்டும்.

பிரம்மனுக்கு என ஒரு கோவில் உண்டென்றால் அது இங்குதான். பிரம்மனுக்கு மற்றும் சில கோவில்கள் இந்தோனேசியாவின் பாலித்தீவிலும், இன்னும் உத்தரப் பிரதேசத்திலும் உண்டென்றாலும், புஷ்கரில் எழுந்தருளியிருக்கும் பிரம்மன் விஷேசமானவனே. பிரம்மன் ராதாகிருஷ்ணனின் தரிசனம் வேண்டி அறுபது ஆயிரம் வருடங்கள் இங்கு காத்திருந்ததாக கதை சொல்லப்படுகிறது.

விசுவாமித்திரர் தவமிருந்த இடமென்றும், தேவலோக அப்சராவான மேனகை குளித்த ஏரியென்றும், மகாபாரத அவதார புருஷனான தரும ராஜா, இந்த ஊர் வழியாகத்தான் சிந்து நதியின் சமவெளி பிரதேசத்துக்கு கடந்து போனாரென்றும், வாமன புராணத்து கதைகளின் படி, பிரகலாதன் இங்கு வாழ்ந்தானென்றும் இன்னும் எத்தனையோ கதைகள் உள்ளன.

இத்தனை புராதனங்கள் நாடி நரம்புகளிலெல்லாம் ஓடி ஊடுருவினாலும், இன்று இந்த நகரமும் நவீன மயமாக்கலின் தாக்கத்திலிருந்து விடுபடவில்லை. ஒருபுறம் வெள்ளி ஜரிகைகளாலும், வண்ண போர்வைகளாலும் அலங்கரிக்கப்பட்ட ஒட்டகங்களின் பவனி, திருவிழா நாட்களில் வெப்பக் காற்று பலூனில் ஆகாயத்தில் மனிதர்கள், நீண்ட மீசையை சுருட்டி முகமெங்கும் படரவிட்டு முண்டாசுகளுடன் பெருசுகள், நீண்ட மீசை யாருக்கு என போட்டிகள், ஒட்டகங்களின் ஓட்டப் பந்தயங்கள் என ஊரே ஒரு பதினைந்து நாட்களுக்கு திமிலோகப் பட்டுக் கொண்டிருக்கிறது. கிரிக்கெட் இந்த ஊரையும் விட்டு வைக்கவில்லை, பிராந்திய புஷ்கர் கிரிக்கெட் அணிக்கும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வெள்ளைத்தோல் அணிக்கும் இடையே இந்த மணற்பரப்பில் நடக்கும் கிரிக்கெட் போட்டி மிகவும் பிரபலம். (வா, ராசா, லலித் மோடி, எங்கப்பா போயிட்ட நீ, கிரிக்கெட்டை வைத்து பணம் பண்ண இதோ இன்னொரு ஐடியா தயார். அடுத்து பாலைவன கிரிக்கெட்னு ஒண்ணு ஆரம்பிச்சு, சந்தோஷமா வாழ்க்கை நடத்தற அரேபிய நாடுகளையும் வளைச்சுப் போட்டு, அவங்க நிம்மதியையும் கெடுத்துரு ராசா, இது இன்னும் உங்கண்ணுக்கு ஏன்தான் தெரியலயோ)

இந்த களேபரங்களுக்கு மத்தியில் வெளிநாட்டவரை கவர்வதற்கெனவே, இந்த மணற்பரப்பில், ஆடல் பாடல், கேளிக்கைகள், விபச்சாரம், போதை வஸ்து என எல்லா கண்றாவிகளும் இருள் கவிந்ததும் நடக்கும்.

கார்த்திகை மாதத்து பௌர்ணமிக்கு முன்னாலும் பின்னாலுமென ஒரு 15 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவை, ஒரு முறையேனும் பார்த்து விட்டு, பிரம்மனின் அருள் பெற்று, பௌர்ணமியன்று பிரம்மனின் கரம் பட்ட ஏரிகளில் குளித்து, உங்களுக்கு எந்த விளைவு ஏற்பட்டாலும் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.

ஹாலோவீன் – விகாரங்களின் திருவிழா.

ஐரோப்பிய தேசங்களில் கோடைகாலம் முடிந்து குளிர்கால தொடக்கத்திற்கு அறிகுறியாக, தங்கள் விளைநிலங்களின் பலன்களை முன்னோர்களுக்கு அர்ப்பணித்து மகிழ்ந்த விவசாயிகளுக்கு அசுத்த ஆவிகளின் பரிச்சயம் எங்கு ஏற்பட்டதோ தெரியவில்லை. கெட்ட ஆவிகளை விரட்டியடிக்க விகாரமான முக மூடிகளை அணிந்து கொண்டு விழாவெடுக்க ஆரம்பித்தனர். இதற்கிடையில் மதவாதிகள் உள்ளே புகுந்து முன்னோர்களின் ஆவிகளுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற ஒரு சடங்கை புகுத்தி, அதை இயேசு கிறிஸ்துவின் திருப் பெயரால் கட்டாயப் படுத்தி “All Saints Day” என்ற ஒரு தத்துவத்தை மக்களின் மீது திணித்து விட்டார்கள். இந்த புனிதர்களின் திருநாள் தான் பெயர் மருவி, நோக்கம் மருவி, குணம் மருவி, இன்னும் என்னென்னமெல்லாமோ மருவி விகாரங்களின் நாளாகி விட்டது.

1840களில், முற்றிலும் விவசாய தேசங்களான, அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து நாடுகளில் ஏற்பட்ட பஞ்சத்தில் அடிபட்ட விவசாயிகள், தங்கள் பரம்பரை பழக்கங்களோடு அமெரிக்க மண்ணில் பஞ்சம் பிழைக்க தஞ்சம் புக, இந்த ஆவிகளோடு பேசும், பழகும் பழக்கம் ஒரு புது பரிமாணம் எடுத்தது. சூனியக் காரர்கள், கண்கட்டு வித்தை செய்பவர்கள், மந்திரவாதிகள், எலுமிச்சைப் பழத்தில் ஊசி குத்தி ரத்தம் வரவழைக்கும் மோடி மஸ்தான்கள், ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள் என்னும் அறிவு ஜீவிகள் என எல்லோருக்கும் இந்த நாள் ஒரு விழா நாளாக மாறிவிட்டது. உடம்பில் விகார உருவங்களை பச்சை குத்திக் கொண்டு, எலும்பில்லாத இடங்களிலெல்லாம் துளையிட்டு வளையங்களை மாட்டிக் கொண்டு, ஆணும் பெண்ணும் மறைக்க வேண்டிய உடல் உறுப்புகளை திறந்து காட்டி, அசுத்த ஆவிகளை பயமுறுத்துகிறோம் என்ற போர்வையில் அருவருப்பான் முக மூடிகளுடன் ஊர்வலம் போகிறார்கள்.

அக்டோபர் மாதத்தின் கடைசி நாளில் நியூயார்க நகர வீதிகளில் இந்த விகார முகமூடி ஊர்வலங்கள் நாள் முழுவதும் நடக்கும்.

பதிவர் வட்ட தீபாவளி

எல்லாரும் எல்லாருக்கும் வாழ்த்துச் சொல்லி, நான் டவுசர் போட்டிருந்த பொழுது, நாங்கள் பாவாடை சட்டையில் உலாத்திய பொழுது தீபாவளி எப்படி நல்லா இருந்துச்சு தெரியுமா என காலச் சக்கரத்தை பின்னோக்கி இழுத்து, பதிவுலக வன்முறைகளுக்கு கண்டனம் சொல்லி, காயப் பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லி, காயப் படுத்தியவர்களுக்கு கொம்பு சீவி விட்டு, சினிமாக்களை பிரித்து மேய்ந்து, காமன் மேனை கவிழ்த்துப் போட்டு என பதிவுலகில் இந்த தீபாவளியிலும் பட்டாசு நன்றாகத்தான் வெடித்தது. என்ன ஒரே ஒரு குறை, வேட்டைக்காரன் வந்திருந்தான்னா, அவன வெச்சு கொஞ்சம் மத்தாப்பு கொளுத்தி இருப்போம், ஆனா அவுரு என்னமோ இப்பத்தான் அம்பு செதுக்காறாரு போல இருக்குது, ஏன்னா வில்லு தான் வெளங்காம போயிடுச்சே, இனி வேட்டைக்காரன் எதுல அம்பு விடுவாரோ தெரியல.

ங்கொய்யால பக்கங்கள்


அப்பாவுக்கு புதுக் கண்ணாடி,

அம்மாவுக்கு புது புடவை,

ஆத்துக்காரிக்கு புதுப் பட்டு,

தங்கச்சிக்கு தங்கச் செயினு,

தம்பிக்கு டிஜிட்டல் கேமரா,

வாரிசுகளுக்கு புதுத்துணி, பட்டாசு,

வந்தவங்களுக்கு வழிச்செலவு,

பக்கத்து வீட்டுக்கு ஒரு தட்டு பலகாரம்,

ஒரு வழியா தீவாளி முடிஞ்சுது,

ங்கொய்யால,

இப்போதைக்கு இதெ வெச்சு ஓட்டு,

அடுத்த தீவாளிக்கு புதுச்செருப்பு வாங்கலாம்.

Tuesday, October 20, 2009

மூச்சு முட்ட முப்பது நாட்கள்

பன்னாட்டு நிறுவனமாம்,
பல மொழிகள் பேசுவார்களாம்,
பளபளக்கும் மேசைகளும்,
உடல் சிறுத்த கணிணிகளும்,
கண்ணாடி அறைகளுக்குள்
கைதிகளாய் மனிதர்களும்.

வாடகைக்கு உடல்கள் இங்கு
வரிசையாய் நிற்பதுண்டு.
மூளையை முடக்கி வைத்த
முண்டங்கள் முக்கியங்கள்.
சொல்வதை செய்து விடு
சொல்ல நினைத்ததை மறந்து விடு.

சுயம்புகள் தூரப் போங்கள்,
சிந்திப்பவர் ஒழுக்கம் கெட்டவர்,
ஆமாம் சாமி தாரக மந்திரம்,
சாப்பிட மட்டும் வாயைத்திற,
குலுக்க மட்டுமே கையை உயர்த்து,
அவசியப்பட்டால் அசைந்து கொள்.

கைநாட்டு போட வேண்டாம்,
கழுத்திலொரு பட்டை தருவோம்.
புவியின் சுழற்சி முப்பது முடிந்தபின்
முடிந்து தருவோம் முடிப்பு ஒன்று,
மூச்சு விடாமல் வாங்கிக் கொள்.

Thursday, October 15, 2009

அதாவது என்ன சொல்ல வ்ர்றேண்ணா.....

அதாவது என்ன சொல்ல வ்ர்றேண்ணா, ஒரு கோடு, அது நேரா இருக்குதாண்ணு சொல்றதுக்கு ஒரு கோணயான கோடு பக்கத்துல இருக்கணுமில்லையா, அதாவது கோணையான கோட்டைப் போல இல்லாததுனால இது நேரான கோடா தெரியுது. ஆனா உண்மையா அது நேரா இருக்குதா இல்லயாண்ணு எதை வெச்சு சொல்றது. எனக்கு நேரா தெரியறது உங்களுக்கு கோணலா தெரியுது.

இப்படித்தாங்க இருளும் வெளிச்சமும்னு ஒருத்தர் பேசுனாரு, அய்யா வெளிச்சம் எவ்வளவு இருக்குதுன்னு சொல்லீரலாம், ஆனா இருள் எவ்வளவு இருக்குதுன்னு சொல்ல முடியுமா, ஏன்னா இருள் என்னைக்குமே இருக்கறது, வெளிச்சம்தான் கொஞ்சங் கொஞ்சமா உருவாகி அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சு போகுது, ஆக, வெளிச்சம்னு ஒண்ணை சொல்லணும்னா, இருளின் இல்லாமைதான் வெளிச்சம்னு சொல்லலாமா???

அப்புறம் நல்லவன் கெட்டவன்னு சொல்றாங்க, எவன் நல்லவனோ அவன் முழுசா நல்லவனான்னு எப்படி சொல்றது, அதாவது ஒரு கெட்டவனப் போல இல்லாததுனால அவன் நல்லவனா தெரியறான், ஆனா நல்லவன்னா இன்னான்னா, யாரும் சொல்ல மாட்டேங்கறாங்க, ஆனா, இதுலயும் பாருங்க, ஒரு கெட்டவனப் போல அவன் இல்லாததால அவன் நல்லவனா, இல்ல நிஜமாவே நல்லவனா இருக்குறதுனால அவன் நல்லவனா?????

இதெல்லாம் எதுக்கு சொல்ல வர்றேண்ணா, அதாவது உலகத்துல, அதாங்க நாம வாழற பிரபஞ்சத்துல, தினமும் பாருங்க, அதுக்காக எங்கன்னு திரும்பி பாக்காதீங்க, நேராவே பாருங்க, ஆங், என்ன சொன்னேன், இதை எதுக்கு சொல்றேண்ணா, அதாவது…………………………………….

அட விடுங்க சாமி, போய் புள்ள குட்டிகளோட தீபாவளி கொண்டாடறதப் பாருங்க, நாந்தான் எதோ எழுதிகிட்டே போறேன்னா, நீங்களும் சும்மா வெட்டியா உக்காந்து இதையெல்லாம் படிச்சுகிட்டு……………..

தீபாவளி வாழ்த்துக்கள்.

Wednesday, October 7, 2009

அப்பாவும், ஈ மெயிலும்

இந்தாப்பா, உனக்கு புதுசா நோட்டுப்புத்தகம் வாங்கி வந்திருக்கேன். பத்திரமா கிழியாம வெச்சுக்கணும்.

அப்பா உங்களுக்குன்னு ஒரு ஈ மெயில் ஐடி ஓப்பன் பண்ணீட்டம்பா, பாஸ்வேர்ட கரெக்டா மறக்காம ஞாபகம் வெச்சுக்கோங்க.

நோட்டுப் புத்தகத்துல முதல் பக்கத்துல உன் பேரையும், வகுப்பையும் எழுதுடா.

முதல்ல ஜி மெயில் டாட் காம்னு டைப் பண்ணி என்டர்னு ஒரு பட்டன் இருக்குமே அத தட்டுங்கப்பா.

வலது கையில பேனாவை பிடிச்சு, நிப்பை அழுத்தாம மெல்லமா தேய்ச்ச மாதிரி எழுதுடா.

அப்பா, வலது கையில மௌஸ பிடிச்சுகிட்டு, ஆள்காட்டி விரல் இடது பட்டன்லயும், நடு விரல வலது பட்டன் மேலயும் வெச்சுக்கங்கப்பா

நோட்ட நேரா திருப்பி உங்கைக்கு வாகா வசதியா வெச்சுகிட்டு எழுதுப்பா, நோட்டு மேல படுத்த மாதிரி உக்காரத.

அப்பா, மானிட்டர்ல இருக்கற ஒவ்வொரு பட்டனயும் நல்லா பாருங்கப்பா, உங்களுக்கு கிட்டப் பார்வை இருக்கறதுன்னால சரியா தெரியலண்ணா கொஞ்சம் பின்னால தள்ளி உக்கார்ந்து பாருங்க.

முதல்ல நீ என்ன எழுதப் போறீங்கறதுக்கான தலைப்பை முதல் பக்கத்துல நடுவுல எழுது.

அப்பா, இப்ப மௌஸ தள்ளினீங்கண்ணா மானிட்டர்ல ஒரு அம்புக்குறி தெரியுமே, அத கம்போஸ் மெயில்னு ஒரு பட்டன் இருக்கும் பாருங்க, அது மேல வெச்சு, மௌஸோட இடது பட்டனை ஒரு தரம் அமுத்துங்கப்பா.

அனுப்புனர்னு முதல் வரில எழுதீட்டு, இரண்டாவது வரியிலிருந்து உன்னோட முகவரிய எழுதுப்பா.

இப்ப உங்க முன்னால ஒரு மெயில் ஓப்பன் ஆயிருக்கும் பாருங்கப்பா.

அனுப்புனர் முகவரிய எழுதி முடிச்சதுக்கப்புறம் கீழ ஒரு வரிய விட்டுட்டு பெறுநர்னு எழுதி, நீ யாருக்கு இந்தக் கடிதத்தை எழுதறயோ அவுங்க முகவரிய எழுது. எழுத்துப் பிழை இல்லாம சரியா எழுது. முகவரியோட ஒவ்வொரு வரிக்கும் கடைசியில கமா போட்டுட்டு, கடைசி வரியில முற்றுப் புள்ளி வை.

இப்ப To ஒரு வரி இருக்குமே அதுல நான் உங்களுக்கு நோட்டு புத்தகத்துல அக்காவோட மெயில் ஐடிய எழுதிக்குடுத்துருக்கன்ல, அத அப்படியே அடிங்கப்பா. கீ போர்டுல இருக்கற ஒவ்வொரு பட்டனா பாத்து தப்பில்லாம அடிங்க. அந்த @ எழுத்த அடிக்கறதுக்கு Shift னு ஒரு பட்டன் இருக்கும் பாருங்க அதை அழுத்திகிட்டு 2 ம் நம்பர் பட்டனை அழுத்துங்க.

இப்ப ஒரு வரி விட்டுட்டு, இடது பக்கமிருந்து ஒரு வார்த்தையளவு இடைவெளி விட்டுட்டு பொருள் அப்படீன்னு எழுதி, ஒரு விகிதப் புள்ளி வெச்சுட்டு எங்கள் ஊர் திரு விழான்னு எழுதிட்டு பொருள்ல ஆரம்பிச்சு எல்லாத்துக்கும் சேர்த்து அடியில் ஒரு கோடு போடு.

இப்ப அந்த To ங்கற லைனுக்கு கீழ CC ன்னு ஒரு லைன் இருக்கும், அத விட்டுடுங்க, அதுக்கும் கீழ Sub னு எழுதி ஒரு காலியிடம் இருக்கும் பாருங்க, அந்த இடத்துக்கு மௌஸ மூவ் பண்ணி அம்புக் குறிய கொண்டு வாங்கப்பா, இப்ப மௌஸுல இருக்கற இடது பக்க பட்டன தட்டுனீங்கன்னா ஒரு கோடு வந்து வந்து போகும், அங்க அப்பாவின் கடிதம்னு டைப் அடிங்க.

நல்லா பிழை இல்லாம பொறுத்து நிதானமா எழுதுப்பா, ஒவ்வொரு எழுத்தா எழுது, அந்த சுழி, கூட்டெழுத்தெல்லாம் தெளிவா இருக்கணும்.

நீங்க எப்படி தமிழ்ல எழுதுவீங்களோ அப்படியே டைப் அடிங்கப்பா, கஷ்டமா இருந்துதுன்னா, நான் ஒவ்வொரு தமிழ் எழுத்துக்கும் சரியான ஆங்கில எழுத்தை எழுதி வெச்சிருக்கன்ல, அந்த நோட்டை பக்கத்துல வெச்சு பாத்து டைப் அடிங்க.

இப்ப அந்த பொருள்ங்கற வரிக்கு கீழ ஒரு வரி விட்டுட்டு, இப்ப உங்க ஆசிரியருக்கு நீ எழுதறீன்னா மதிப்பிற்குரிய வகுப்பாசிரியர் அவர்களுக்கு அப்படீன்னு எழுது. பேனாவை கொஞ்சம் சாச்சுப் பிடி, அதை ஏன் அப்பிடி நெட்டுக் குத்தலா ஆணி புடிச்ச மாதிரி புடிச்சிருக்க.

இப்ப அந்த வரிக்கும் கீழ ஒரு காலியிடம் கட்டம் போட்டு இருக்குமல்லப்பா, அங்க அம்புக்குறிய கொண்டு வந்து மறுபடியும் மௌஸோட இடது பக்க பட்டனை தட்டுங்க, இப்ப அந்த இடத்துலயும் ஒரு கோடு வந்து வந்து போகுதா, அங்க அன்புள்ள மகளுக்குன்னு டைப் அடிங்க, கீ போர்டுல இருக்கற பட்டனையெல்லாம் மெதுவா அழுத்துங்க, ஏன் இப்படி டக்கு டக்குனு டைப் ரைட்டராட்டம் அடிக்கறீங்க.

இப்ப உங்க வாத்தியாருக்கு நம்ம ஊர்ல நடந்த திரு விழாவுல நீ என்னெல்லாம் பார்த்தியோ, அத அப்படியே நிதானமா யோசிச்சு ஒரு கடிதம் மாதிரி எழுது. அவசரப் படாம நிதானமா எழுது.

இப்ப அக்காவுக்கு நம்ம ஊர் திரு விழாவுல நடந்த ஒவ்வொண்ணையும் ஒரு விஷயம் விடாமா, நிதானமா யோசிச்சு எழுதுங்க.

எழுதீட்டயா, எல்லாத்தையும் ஒரு தடவைக்கு ரெண்டு தரமா படிச்சு பாத்துக்க, எதும் தப்பு இருந்தா திருத்திக்க, கடைசில இப்படிக்கு தங்கள் கீழ்ப்படிதலுள்ள அப்படீன்னு எழுதீட்டு, அதுக்கு கீழ உன் பேர எழுது.

கடைசியில அன்புள்ள அப்பான்னு எழுதி முடிச்சிருப்பீங்களே, எதுக்கும் ஒரு தரம் நீங்க எழுதுனத படிச்சு பாத்துக்குங்க. இப்ப மறுபடியும் மௌஸ நகர்த்தி அம்புக்குறிய அந்த இடது மூலைல Send அப்படீன்னு ஒரு பட்டன் இருக்கும் பாருங்க, அதுக்கு நேரா வெச்சு, ஒரு தரம் இடது பட்டனை அமுக்குங்க

அவ்வளவுதாண்டா, சபாஷ், உங்க வாத்தியாருக்கு நீ ஒரு கடிதம் எழுதீட்ட பாத்தயா

அவ்வளவு தான்ப்பா, நீங்களும் அக்காவுக்கு ஈ மெயில் அனுப்பீட்டீங்க பாத்தீங்களா.


பின் குறிப்பு : இந்த பதிவுக்கான முன்னோடி நம்ம கார்ப்பரேட் கம்பர் எழுதுன இந்த பதிவு.

Wednesday, September 23, 2009

ஜுகல்பந்தி - 23 – 09 – 2009 , காமன் மேன்

நகரம் – அமிர்தசரஸ் - தங்க நகரம்

சீக்கியர்களின் புனித பூமி, பொற்கோவில், பாகிஸ்தானுக்கு அருகில் இருக்கும் நகரம், கால்ஸா பிரிவினரின் வீர விளையாட்டுகளுக்கு பெயர் போன பூமி, மண்ணிலும் நீரிலும் மாத்திரமல்லா; காற்றிலும் வீரம் உலவும் பூமி, பிரிவினையின் போது பிரிய மனமில்லாது பிரிந்தவர்களின் துயர வடுக்கள் துடைக்கப் படாமல் இன்னும் புண்களாய் உள்ளது என சிறப்பும், சிறுமையும் ஒருங்கே உள்ள முரண்பாடுகளின் மொத்த உருவமே அம்ரிஸ்டர் எனப்படும் அமிர்த சரஸ் நகரம்.

துங் என்ற பழங்குடியினர் வசித்து வந்த இந்த பூமியை குரு ராம்தாஸ் ஜி என்பவர் கி.பி.1574 ல் 700 ரூபாய்க்கு வாங்கினார். பிறகு இங்கு இருந்த வளங்களைப் பார்த்து குளங்கள் வெட்டவும் மரங்கள் நட்டவும் என திருப் பணிகள் தொடங்கி, வளம் கொழிக்கும் பூமியானவுடன் அதற்கே உரிய சண்டைகளும் சச்சரவுகளும், உரிமைப் பிரச்சனைகளும், உழைக்கும் வர்க்கத்தின் இருப்பியல் நிர்பந்தங்களும் என அரசியல் ஆரம்பித்தவுடன் இங்கிருக்கும் உழைக்கும் வர்க்கம் தனக்கென ஒரு அடையாளம் தேடிக் கொண்டதுதான் சீக்கிய மார்க்கம். அதன் இன்னொரு பரிமாணமே கால்ஸா பிரிவு என்ற வீரர்கள் படை. இந்திய திருநாட்டுக்குள் யார் நுழைந்தாலும் அவர்கள் இந்த நகரைக் கடந்துதான் வர வேண்டுமென்பதாலும், நுழைந்தவுடன் கண்ணில் காணும் வளங்கள் அவர்களது நாவில் நீர் ஊற வைப்பதாலும், எப்பொழுதும் ஒரு எல்லை பாதுகாப்பு படையை போலவே இந்த மண்ணின் மைந்தர்கள் வாழ வேண்டிய நிர்பந்தத்துக்குள்ளானார்கள். ராஜஸ்தானிய ராஜ புத்திரர்களை புரட்டியெடுத்த ஆப்கானிய போர் வீரன் அப்தாலி, தன் கண்களை இந்த மண்மீதும் பதிக்க தவறவில்லை. வளங்கள் ஒரு புறம் இருந்தாலும், கண்ணைப் பறித்தது இங்குள்ள மங்கையர்களும் கூடத்தான். கோதுமை நிறத்தில் கூரிய நாசியும், நெடிதுயர்ந்த வனப்பும், அகன்ற தோள்களும், இடுப்பு வரை கூந்தலுமென இருக்கும அழகுப் பதுமைகளை கண்டு மனதை பறி கொடுத்த வந்தேறிகள் அநேகர். இவர்களிடமிருந்து தங்களை பாதுகாக்கத்தானோ என்னவோ ஒவ்வொரு சீக்கிய பெண்ணும் கூட எப்பொழுதும் கத்தியும் கையுமாகவே இருந்திருக்கிறார்கள்.

ஏப்ரல் 13, 1939, எல்லோருக்கும் போலவே இந்நகரத்து வாசிகளுக்கும் ஒரு இனிய காலையாகத்தான் விடிந்தது. ஆனால் அன்று நிகழப் போகிற விபரீதம் தெரியாமலே, “வாஹே குரு”, என்ற கோஷங்களுடன் அமர்ந்திருந்த 1500 சொச்சம் பேரை தயவு தாட்சண்யமின்றி கொன்று குவிக்கும்படியாக தனது துப்பாகிகளை திருப்பிய ஜெனரல் டயர் இங்குதான் தனது திருவிளையாடலை நடத்தினார். துப்பாக்கிகள் ஓய்ந்த பின் எண்ணிப்பார்த்தால் 329 பேர் கடைசி முறையாக “வாஹே குரு” என அழைத்திருந்தார்கள்.

அடுத்ததாக சுதந்திரமடைந்தோம் என்ற சந்தோஷ கீதம் காதில் படுவதற்கு முன்னே, வந்த இந்திய பாகிஸ்தான் பிரிவினை தனது கோரக்கரங்களால் இன்னொரு முறை இந்நகர வீதிகளில் ரத்த ஆறை ஓடச்செய்து விட்டுப் போனது. டோம்னிக் லேப்பயர் மற்றும் லேரி காலின்ஸ் என்ற இருவர் எழுதிய Freedom at Midnight என்ற புத்தகத்தை வாசித்துப் பாருங்கள். பிரிவினையின் போது இந்நகரமும் லாஹூரும் சந்தித்த அனைத்து வேதனைகளையும் வார்த்தைகளில் அழுது கொண்டே சொல்லியிருப்பார்கள்.

இன்று இந்த நகரம் புதுப் பொலிவுடன், பொற்கோவில் மற்றும் ஏனைய புராதனச் சின்னங்களின் சிறப்புகளுடன், மனித நேயமிக்க சீக்கிய மக்களுடன், கால்ஸா பிரிவினரின் வீர விளையாட்டுகளுடன் என இன்னும் எத்தனையோ சிறப்புடன் தனது பெருமையை பறை சாற்றிக் கொண்டிருக்கிறது.

பதிவுலகம் – காமன் மேன்

உன்னைப் போல் ஒருவன் என கமலஹாசன் ஒரு படம் எடுத்து விட்டார். அப்பப்பா, பதிவுலகம் எனும் ரத்தபூமியிலும் விமர்சனங்களால் பதிவர்கள் விளாசித்தள்ளுவதை பார்த்தால் மூச்சு முட்டுகிறது. இந்துதுவா, காமன் மேன், பிராமண அகங்காரம், கட்டுடைத்தல், பின் நவீனத்துவம், இஸ்லாமிய தீவிரவாதம், குஜராத் மோடி, வாஜ்பாய், நஸ்ருத்தீன் ஷா, மோகன்லால், உயர்சாதி திமிர், காவி நிற வாடை, சிறுபான்மையினரின் இழிவு, கோவை குண்டு வெடிப்பு, ஆனா பாருங்க நிஜ காமன் மேன் யாருன்னு இன்னும் தெரியலீங்க.

ஸ்ஸ்ஸோ, ஆள விடுங்கடா சாமி, இப்ப இருக்கற நிலைமையில பதிவுலகத்துல இந்த படத்தைப் பத்தி ஒரு பதிவாவது போடலைன்னா, நீயெல்லாம் என்னத்த எழுதி, என்னத்த கிழிச்சேன்னு கேட்டுருவாங்க போலிருக்குது. ஆனா பாருங்க நிஜ காமன் மேன் யாருன்னு இன்னும் தெரியலீங்க.

அய்யா சாமிகளா, சிங்கைப்பதிவர் செந்தில்நாதனுக்கு ஒரு தேவைன்ன உடனே முகம் பார்த்தறியாத அந்த நண்பருக்கு வரிஞ்சு கட்டிட்டு முன்னால வந்து உதவி பண்ணுனீங்களே, பதிவுலகம்னா என்னான்னு பாருங்கடா, நட்புன்னா அதுக்காக மலைகளெல்லாம் எங்களுக்கு ஒரு தூசுடான்னு செஞ்சு காமிச்சீங்களே, அப்படியே இருங்கைய்யா, அதுதான்யா நல்லாருக்கு.

ங்கொய்யால பக்கங்கள் :


தீப்புடிச்சா ஓடி அணைக்கறவன் ஃபயர் மேன்,

லெட்டர் போட்டா தேடி குடுக்கறவன் போஸ்ட் மேன்,

ராவும் பகலுமா காவல் இருக்கறவன் வாட்ச் மேன்,

ங்கொய்யால,

கலவர பூமில கம்னு இருக்கறவன்தாண்டா காமன் மேன்.

Wednesday, September 16, 2009

ஜுகல்பந்தி – 16 – 09 – 2009 - நீளும் கம்யூனிச கரங்கள்

நகரம்

குவாலியர் – கோட்டைகளின் நகரம்

புழுதி பறக்க விரையும் குதிரைகளின் குழம்பொலி, உருவிய வாள், முறுக்கிய மீசை, நிமிர்ந்து நிற்கும் கோட்டைகள், வாரிசு சண்டைகள், உருண்டு ஓடிய தலைகளிலிருந்து பிரிந்து சிதறிய மகுடங்கள், பொன்னாசை பிடித்த ஆப்கானியர்களின் ஊடுருவல்கள் என எப்பொழுதும் ஒரு அரசியல் சூறாவளிகளுக்கு நடுவிலேயே வாழ்ந்த ஒரு நகரம். இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியிலும், முகலாயச் சக்கரவர்த்தியின் அவையை அலங்கரித்த நவரத்தினங்களில் ஒருவரான தான்சேன் இங்கு வந்தும் போவதுமாக இருந்ததால், இசையும், நாட்டியமும் இன்ன பிற கலைகளும் கூட அதன் போக்கில் தன் பல பரிமாணங்களை இந்த நகரத்தில் விட்டுச் சென்றிருக்கிறது.

முதன்முதலில் இந்த மலை நகரத்தை கண்ணெடுத்து பார்த்து அதை ஆக்ரமித்து தனதாக்க வேண்டும் என்ற வேட்கை கொண்டவர்கள், சூரியவம்சத்தை சேர்ந்த பத்குஜ்ஜர் ராஜபுத்திர வம்சத்தின் குல விளக்குகள் தான். எந்தப் போரிலும் முன்னணியில் நின்று நெஞ்சை நிமிர்த்தி போரிடும் வீரமும், துணிவும், பெருமையும் கொண்ட குஜ்ஜர் எனப்படும் இந்த ராஜபுத்திர வம்சம், அரசியல் சூழ்நிலையில் அடிபட்டு இன்று தங்களது இருப்பியல் வசதிகளுக்காக அரசியல்வாதிகளிடம் கையேந்தி நிற்பது வேதனைதான். இந்த வம்சத்து மக்கள் இங்கு கோட்டை கட்டப் போய், அதன் பிறகு வந்தவர்கள், இங்கு பல கோட்டைகளைக் கட்டி இந்த நகரத்துக்கு கோட்டைகளின் நகரம் என பெயர் கொடுக்கும் அளவிற்கு பெருமை சேர்த்து விட்டார்கள்.

தோமர் வம்சத்து மன்னர்கள் ஆண்ட காலத்தில் ராஜா மான்சிங் தோமர் என்பவரால் கட்டப்பட்ட குவாலியர் கோட்டையானது இன்றளவும் பிரசித்தமானது. இதை சுற்றிப் பார்ப்பதற்கே பல நாட்களாகும். இதற்குப் பின் இந்த நகரம், கச்வாஹா ராஜ புத்திரர்கள், அடிமை வம்சத்து அரசனான குத்புதின் ஐபெக், அதற்குப்பின் மராட்டிய வீரரான மாதவ்ராவ்ஜி ஷிண்டே என பலரது கைக்கு மாறி, சிப்பாக் கலகத்தில் பெரும்பங்கெடுத்து, பின் ஆங்கிலேயர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஆட்சி புரிந்த சிந்தியா மகாராஜாக்களின் கைகளில் இந்தியா சுதந்திரம் பெறும் வரை இருந்திருக்கிறது.

குவாலியர் கோட்டையின் அழகையும் பெருமையையும் கண்ட முகலாய மன்னர் பாபர், இதில் லயித்துப் போய் இந்தியர்களால் கட்டப்பட்ட மாளிகைச் சரங்களில் இது ஒரு விலைமதிக்க முடியாத முத்து என்றாராம்.

இன்னும் இந்நகரம் அமைந்திருக்கும் பிராந்தியமான புந்தேல்கண்ட் பகுதியில் பிரசித்தி பெற்ற நடனங்களான ஆஹிரி, பரேதி, சஹரியா, லூர், லாங்கி, துல் துல் கோரி போன்ற நடனங்களின் எச்சத்தையும் மிச்சத்தையும், திருமணங்களிலும் விழாக்களிலும் காணலாம்.

இசை மேதை தான்சேனுக்கு வருடத்திற்கொருமுறை தான்சேன் இசைவிழா நடத்தி பெருமை சேர்க்கிறார்கள்.

ஒரு முறையாவது இந்தக் கோட்டைகளை போய் பார்த்து விட்டு பெரு மூச்சு விட்டு விட்டு வாருங்கள்.

நாட்டு நடப்புகள் : நீளும் கம்யூனிச கரங்கள்

சீனா, அருணாசல பிரதேசத்தை ஆக்கிரமிக்க நினைக்கிறது, ராணுவ நடவடிக்கைகளை தீவிரப் படுத்தியுள்ளது, எப்பொழுதும் சீண்டிப் பார்க்கிறது, திபெத்தில் அழிச்சாட்டியம் பண்ணுகிறது என்றெல்லாம் பொழுது போகாத நேரத்தில், ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் ஜெனரல்களும், பியூட்டி பார்லரில் போய் முகம் முழுவதும் கண்ட கண்ராவிகளையெல்லாம் பூசிக்கொண்டு வந்து, தனது வயதை மறைக்க பிரம்மப் பிரயத்தனப் படும் ஊடக அம்மணிகளுமாக கத்தித் தொலைத்துக் கொண்டிருந்தார்கள், இருக்கிறார்கள். அதற்கெல்லாம் மேலாக நேற்று ஒரு புதிய விஷயம் கிடைத்திருக்கிறது, நேபாளத்தில் உள்ள இமயமலை அடிவாரங்களில் சீனா மூன்று குகைகளில் தனது ராணுவ நடவடிக்கையை ஆரம்பித்திருக்கிறதாம். மாவோ ஆட்சி நேபாளத்தில் அமைந்த நாளிலிருந்தே அங்கு சீனத்தின் சினேகப் பார்வை விழுந்து, அது காதலாகி கனிந்துருகி, இப்பொழுது இந்தியாவில் உளவு வேலை பார்க்க நிர்பந்திக்கும் அளவுக்கு நேபாளத்தில் சீனா காலூன்றியிருக்கிறது. நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் உள்ள நல்லுறவினால், எல்லையில் யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் வந்து போகலாம் என்ற மாமன், மச்சான் உறவு முறை இருக்கிற நேரத்தில், சப்பை மூக்கும், மஞ்சள் நிறமும், இடுங்கிய கண்களுமாக இருக்கும் நேப்பாளிகளோடு உருவத்தில் ஒத்துப் போகும் சீனர்கள், இந்த மாமன் மச்சான் வழியில் இந்தியாவுக்குள் ஊடுருவி நாசம் பண்ணாமலிருந்தால் சரி.

பதிவர் வட்டம் :

சிறுகதை பட்டறை நல்ல முறையில் நடந்து முடிந்திருக்கிறது. அண்ணன் சிவராமனுக்கும், குருஜிக்கும் நன்றிகள். பதிவர்கள் உற்சாகத்துடன் அதை வர்ணித்ததே அதற்கு சாட்சி. பதிவுலகம் போலித் தொந்தரவுகளிலிருந்து என்றுதான் மீண்டு வருமோ தெரியவில்லை. யாரோ ஒருவர் இந்த தேன்கூட்டில் கை வைக்கப் போய், இப்பொழுது நிறைய தேனீக்கள், வாளெடுத்துக்கொண்டு களம் புகுந்துள்ளன. தேனெடுக்கும் தேனீக்கள் வாளெடுக்கலாமா?????

ஆண்டாள் பாசுரங்களைப் பற்றி ஒரு எழுத்தர் பேசப் போக, கலாச்சாரக் காவலர்கள் அவரைப் பிடித்து பிழிந்து, கசக்கி, காயப் போட்டு விட்டார்கள். என்னமோ போங்க சாண்டில்யன் கூடத்தான் தான் எழுதிய ஜலதீபத்தில் ஆண்டாளைப் பற்றி எழுதினார். அப்பொழுதெல்லாம் ஏன்தான் இந்த பிரளயம் கிளம்ப வில்லையோ தெரியவில்லை.

எப்படி கேள்விகள் பத்து, பிடித்தது பத்து, படித்தது பத்து, உன்னைப் பற்றி 32, A to Z, ஆறு தன் வரலாறு கூறுதல், விருது கொடுத்தல் போன்ற தொடர்பதிவுகள் எப்பொழுதும் வலையுலகை ஆக்கிரமித்து நிற்கிறதோ, அப்படியே வகை வகையான போட்டிகளும், (புகைப் படப் போட்டி, கவிதைப் போட்டி, மொக்கைப் போட்டி, இன்னும் பல) பதிவுலகை ஆக்கிரமித்து இருக்க வேண்டும் என இந்த ஏழை அடியேன் விரும்புகிறேன்.

ங்கொய்யால பக்கங்கள்

சீறத் தெரியலைன்னா அது சிங்கமில்ல,

பாயத் தெரியலைன்னா அது புலியுமில்ல,

பாடத் தெரியலைன்னா அது குயிலுமில்ல,

ஆடத் தெரியலைன்னா அது மயிலுமில்ல,

நீந்தத் தெரியலைன்ன அது மீனுமில்ல,

ங்கொய்யால,

நல்ல நண்பன் இல்லைன்னா நீ மனுசனேயில்ல.

Monday, September 14, 2009

இது இன்னாண்ணா, A லிருந்து Z வரைக்கும்னு.....,

இப்பிடித்தான் சும்மா போலி விவகாரம், ஆண்டாள் என்ன பாடுனார்? ஈரத்துல தண்ணி எவ்வளவு ? பட்டறைல ஈ யாரு? இன்னைக்கு யாரு யார கும்முறாங்கன்னு படிச்சுகிட்டு நல்ல புள்ளையாட்டம் இருந்த என்னை, இந்த வம்புல நையாண்டி நைனா அண்ணன் மாட்டி விட்டுட்டாரு, ஆனா அதுக்குண்ணு நாங்க சும்மா விடுவமா, நாங்களும் நாலு பேர கோத்து விட்டிருக்கம்ல.....,

வாங்க வந்து படிச்சு தொலையுங்க.


சில விதிகள்:

1.அழைத்தவரை அறிமுகம் செய்தல்.

2.விதிகளைப் பதிவிலிட வேண்டும்.

3.எல்லா ஆங்கில எழுத்தில் உள்ள கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும்.

4.பதிவின் முடிவில் நான்கு பேரை மாட்டிவிட வேண்டும்.

5.அந்த நால்வருக்கும் ஓலை அனுப்பவேண்டும்.

6.அழைக்கப் பட்டவர்களையே அழைக்காமல் புதியவர்களை அழைக்க வேண்டும்..



இனி மேட்டருக்கு வருவோம்.


1. A – Avatar (Blogger) Name / Original Name : தராசு/ அட, பேருல என்னங்க ஒரிஜினலு அப்புறம் டூப்ளிகெட்டுன்னுட்டு,

2. B – Best friend? : நண்பர்கள் எல்லாருமே சிறந்தவர்கள் தான். அதுல பெஸ்ட் பிரண்டுன்னு ஒரு தனி அவார்டெல்லாம் எனக்கு புடிக்காது.

3. C – Cake or Pie? : இது அமெரிக்கா காரனுக்கான கேள்விங்கறது என்னோட ஐப்பிராயம், “பை” ன்னா அது இன்னா, நம்மூரு சமோசா மாதிரியானா ஐட்டமா?????, அப்ப நாங்க சமோசாகாரங்க தான்.

4. D – Drink of choice? : தண்ணி, ஹலோ குடிக்கற தண்ணீங்க, நீங்க பாட்டுக்கு கோக்கு மாக்கா எதையும் யோசிக்க கூடாது.

5. E – Essential item you use every day? : தேவையில்லாதத எதுக்காக பயன்படுத்தணும், அப்டீன்னா தேவையிருக்கும்போது தேவையில்லாத பயன் படுத்தறதும், தேவையில்லாத போது தேவையுள்ளத பயன் படுத்தறதும் முட்டாள் தனம் தான, ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா, இப்பவே கண்ண கட்டுதே……

6. F – Favorite color? வெள்ளை கலரு சிங்குச்சா, ஏன்னெல்லாம் கேக்கப் படாது, இருந்தாலும் சொல்லீற்றேன், ஏன்னா எனக்கு மனசுக்கு புடிச்ச கலர் வெள்ளை, ஏன்னா நம்ம மனசே வெள்ளை.

7. G – Gummy Bears Or Worm? : வேணாம் எனக்கு கோபம் வராது, இதெல்லாம் அசலூர்காரன கேக்க வேண்டிய கேள்வி. எங்கூர்ல கிடைக்கறத கேளுங்கப்பா.

8. H – Hometown? கொஞ்சும் தமிழ் பேசும் கொங்குநாடு.

9. I – Indulgence? படிக்கறது, எதுன்னாலும் படிக்கறது.

10. J – January or February? பிப்ரவரிதான், நாலு வருசத்துக்கு ஒரு தரம் சரியா மாறிகினே இருக்கற இந்த மாசம் எனக்கு புடிக்கும். ஏன்னாக்கா காதலுக்கு சிறப்பே இந்த மாசத்தில தான….

11. K – Kids & their names? இங்கு ஒருமைதான், பன்மை கிடையாது, பேருன்னு எடுத்துகிட்டா பிரியம்னு வெச்சுக்கோங்களேன்.

12. L – Life is incomplete without? கண்ணா நீ என்னதான் பெரிய ஆளாயிருந்தாலும், நீ ஒரு பாதிதான், மறுபாதியில்லனா நீ வெறும் பாதிதான்.

13. M – Marriage date? வாழ்க்கையில ஒரு மனுஷன் சந்தோஷமா இருந்த கடைசி நாளை தெரிஞ்சுக்கறதுல எவ்வளவு ஆசை பாரு.

14. N – Number of siblings? கண்ணே கண்ணு.

15. O – Oranges or Apples? ஒரு நாளைக்கு ஒண்ணை தின்னா டாக்டரே வேண்டாமாமே, அதான், அதான், அதேதான்.

16. P – Phobias/Fears? முதுகுல நச்சுனு ஒரு குத்துவாங்களே, அந்த ஆளுங்கள பாத்துத்தான் பயம்.

17. Q – Quote for today? உன்னை நீ நம்பு, உலகமே உன்னை நம்பும்.

18. R – Reason to smile? இதுக்கெல்லமா காரணம் சொல்லுவாங்க, புன்னகை என்னும் நகை எனக்கு எப்பொழுதுமே அழகு சேர்ப்பதால்.

19. S – Season? வசந்த காலம்.

20. T – Tag 4 People?-
அன்புத்தம்பி டக்ளஸூ என்கிற ராஜூ என்கிற ராமராஜூ,
சும்மா சும்மா ஒளிஞ்சு வெளையாடிகிட்டிருக்கற அன்பு அண்ணன் அப்துல்லா.
இது வரைக்கும் அதிகம் எழுதாமல் , அதிகம் வாசிக்கும் அண்ணன் நாஞ்சில் நாதம்,
நடந்தே சலிக்கற பாதசாரி என்கிற வெங்கிராஜா


21. U – Unknown fact about me?: நான் ஒரு டெரராக்கும்.

22. V – Vegetable you don't like? ஏட்டுச் சுரைக்காய்.

23. W – Worst habit? அப்பிடி எதுவும் இருக்கற மாதிரி தெரியலயே.

24. X – X-rays you've had? அதுக்கெல்லாம் அவசியம் இது வரைக்கும் வரல.

25. Y – Your favorite food? அசைவம்.

26. Z – Zodiac sign? புற்று நோய்.

Wednesday, September 9, 2009

ஜுகல்பந்தி - 09 - 09 - 09 - நாட்டு நடப்புகள்

 

ஜுகல் பந்தியில் எதாவது ஒரு நகரத்தை பற்றி எழுதி வந்ததால், ஒரு சிலர் எதுக்கு இப்ப வரலாற்று பாடம் எடுக்கறீங்கன்னு கேட்டதால், நகரங்களைப் பற்றிய குறிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் படுகிறது.

அதனால இந்த வாரம் நாட்டு நடப்புகள்:

கழுதையும் அஜிர்பைஜானும்

பதிவர்கள் பிரச்சனைல மாட்டிக்கறது நம்ம நாட்ல மட்டும் இல்ல. உலகத்தின் பல பாகத்துலயும் பதிவர்கள் எதையாவது பண்ணப் போக அங்கங்க மாட்டிக்கறாங்க. அஜீர்பைஜான் அப்டீன்னு ஒரு நாடு, அதிகமாக துருக்கிய இஸ்லாமியர்களான சியா பிரிவினர் வாழும் நாடு. ஐந்து முறை தொழுகையும், ரமலான் நோன்புகளும், கொஞ்சம் ஐரோப்பியத்தனங்களும், வயிற்றைக் குலுக்கி அரைகுறை ஆடையில் வெள்ளைத் தோல் அம்மணிகள் ஆடும் Belly Dance என்ற நடனம் நிறைந்த மது சாலைகளும் என ஒரு கலவையான தேசம். இஸ்லாமியர்கள் அதிகம் நிறைந்திருந்தாலும் இது ஒரு மத சார்பற்ற நாடாகத்தான் இன்று வரை இருக்கிறது. ஏன், அதிகம் இஸ்லாமியர்கள் நிறைந்திருந்த போதிலும் கூட, ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து ஒழுங்கு மரியாதையாக தேர்தல்கள் நடத்தி, ஆளுங்கட்சி, எதிர்கட்சி, மற்றும் 132 வது வட்டத்தின் இணை துணை பொது செயலாளருக்கெல்லாம் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி அஜீர்பெய்ஜானின் விடிவு காலமே, சரித்திரத்தின் சங்க நாதமே, தேசீயத்தின் அடையாளமே என ஃபிளெக்ஸ் பேனர் வைக்கும் ஒரு நாடாகத்தான் இருக்கிறது.

  அங்கு இருக்கும் அரசாங்கத்தை விமர்சித்து இரண்டு பதிவர்கள் ஒரு வீடியோ உருவக்கினார்கள். அதாவது அரசாங்கம் கழுதைகளுக்கு கொடுக்கும் மதிப்பை விட படித்த இளைஞர்களுக்கு கொடுக்கும் வேலை வாய்ப்பும் மரியாதையும் குறைவாய் இருக்கிறது என்பதை கிண்டலாக ஒரு வீடியோ எடுத்தார்கள். அதை You Tube ல போட்டுவிட்டு, ஹாய்யாக அமர்ந்து ஒரு அஜீர்பெய்ஜானின் டாஸ்மாக்கில் பீர் குடித்துக் கொண்டிருக்கும்பொழுது , திடீரென்று அரசாங்க அதிகாரிகளும் போலீஸாரும் வந்தார்கள், அவர்களை கைது செய்து 5 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்கள். இப்பொழுது இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கை என அநேக அமைப்புகள் கொடி பிடித்து வீதியில் தொண்டை கிழிய கத்திக் கொண்டிருக்கின்றன. ஆக பதிவர்களே, ஆட்டோ வீட்டுக்கு வருவது சென்னையில் மட்டுமல்ல, உலகமெங்கிலும் இப்படித்தான் போலுள்ளது.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

பதிவர் வட்டம்

பதிவர்கள் விமர்சனம் எழுதுவதால் சினிமாக்களின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப் படுகிறது என்ற ஒரு கருத்து பல இடங்களிலும் உலா வருவதாக செய்திகள் வருகின்றன. பதிவுலகிலும் இது பற்றிய விவாதம் சூடு பிடித்துள்ளது. படம் நல்லா இருந்தா எல்லாரும் நல்லாருக்குன்னு தான் சொல்லுவாங்க. அதாங்காட்டியும் நீ எப்படி சொல்லப் போச்சுன்னு கையை மடிச்சு விட்டா, எப்படிங்க??

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இப்படியும் மனிதர்கள்

பொய் வழக்குப் போடும் மனைவிகள்னு ஒரு தளம், அதுல இந்த போலி வரதட்சணை வழக்கு விவகாரங்களை ஒரு அன்பர் எழுதி வருகிறார். அவ்வப்பொழுது அதை வாசித்ததுண்டு. அப்பவெல்லாம் கொஞ்சம் மிகைப் படுத்தி எழுதறாரோன்னு தோணும். ஆனா, சமீபத்துல என்னுடைய ஒரு நண்பரும் இதற்கு பலியாகி போகவே, மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டேன். நண்பருக்கு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மேலாளர் வேலை. அரவிந்த சாமி மாதிரி ஒரு பர்சனாலிட்டி. கல்யாணம் ஆகி தாம்பத்யம் நல்லாத்தான் போயிட்டிருந்துச்சு. ஒரு ஐந்து மாதம் கழித்து ஆசை மனைவி, முகம் சிவக்க அந்த நல்ல விஷயத்தை சொல்ல, தலைவர் சந்தோஷத்தில் ஆகாயத்தில் மிதந்து கொண்டிருந்தார். ஆனா, கொஞ்ச நாள்லயே நொந்து நூலாகிப் போனார். ஏன்னா, மனைவிகிட்டேருந்து எந்நேரமும் புகார்தான், நான் வயத்துல புள்ளயோட இருக்கேன்ற கவலை உனக்கு கொஞ்சமாச்சும் இருக்கான்னு ஒரே டார்ச்சர். ஒரு நாள் வெளிநாட்டு பிரதிநிதிகளுடன், நம்மாளு ஒரு சீரியஸான மீட்டிங்ல இருக்கற நேரம், வீட்டிலிருந்து போன்.

இப்ப உடனே கிளம்பி வா,

இல்லம்மா, நான் மீட்டிங்ல இருக்கேன். ரொம்ப முக்கியமான மீட்டிங்.

அப்ப வயித்துல புள்ளயோட இருக்கற நான் முக்கியமில்லையா, உனக்கு மீட்டிங் தான் முக்கியமா?? இப்ப நீ வரலைன்னா, நான் மாடியில இருந்து குதிச்சுருவேன்.

விரக்தியின் எல்லையில் இருந்த நண்பர் " சரி அதை செய் முதல்ல" ன்னுட்டு லைனை கட் பண்ணிவிட்டு, மீட்டிங்கில் சொதப்பியதற்காக மேலிடத்திலும் வாங்கிக் கட்டிக் கொண்டார்.

மாலையில் மனதை சாந்தப் படுத்திக் கொண்டு வீட்டிற்கு போனால், வீட்டில் யாருமில்லை. மனைவியின் வீட்டிற்கு போனைப் போட்டால், மாமியார் மாத்திரம் போனை எடுத்து, அவ உங்க கூட பேச விரும்பலன்னு சொல்லீட்டாங்க.

இரண்டு மாதம் கழித்து இப்பொழுது எதிர் தரப்பு குழந்தை பிறந்ததும் இவர் மீது வரதட்சிணை வழக்கு பதிவதற்கான அனைத்து முயற்சிகளிலும் இறங்கியிருப்பதாக கேள்விப்பட்டு, இதற்கு முன் ஜாமீனாக எதாவது செய்ய முடியுமா என பல பணம் புடுங்கும் வக்கீல்களுக்கு சம்பளத்தை அழுது கொண்டிருக்கிறார்.

என்ன சட்டமோ, என்ன மக்களோ போங்க.

இந்த வாரம் ங்கொய்யால எழுதற மூடே இல்ல.

Tuesday, September 8, 2009

பூஜைக்கேத்த பூ இது!!!!!!!!!!



ஊன்று கோலுடன் நடக்கும் பத்து வயது கலைச் செல்வி, அவள் நடக்கும் பொழுது சூம்பிப் போன வலது கால் காற்றில் ஆடியது. இரண்டு கண் இமையும் ஒரு பள்ளத்தை மூடியிருக்க, கைகளை விரித்தபடி மெதுவாக அடியெடுத்து வைக்கும் தென்னரசு, இரண்டு கையுமில்லாததால் சட்டையில் தைக்கப்பட்ட கைகள் காற்றில் ஆடியபடி இன்னொரு பையன், சாடையில் பேசும் மகேஸ்வரி, துருத்திய பற்களின் நடுவே நீண்டிருந்த நாக்கை சுழற்றி வழியும் எச்சையை உள்ளுக்கிளுக்கும் முஸ்தஃபா, இப்படி திரும்பிய பக்கமெல்லாம் ஊனம், இயற்கை இவர்கள் வாழ்வில் எழுதிய சோக வரலாற்றின் கோர தாண்டவம்.

இவர்களிடம் என்ன பேசுவது, எப்படி பேசுவது என்ற குழப்பத்தில் மூவரும் அமர்ந்திருக்க சுரேஷ் தான் அமைதியை கலைத்தான். “பாப்பா, இங்க வா, உன் பேரென்ன?” என்று கேட்டதும் அங்கிருந்த பதினைந்து குழந்தைகளும் அவர்களின் தயக்கத்தை உதறிவிட்டு, ஒரு வேகத்துடன் வந்து இவர்களிடம் ஒட்டிக் கொண்டனர். “அண்ணா, உங்க பேரென்ன?” “இடு எண்ன, உங்க கலுதில டொங்கறது?” என அதிசயத்துடன் ஒரு குழந்தை அடையாள அட்டையை இழுக்க, “அண்ணா, நீங்க பெரிய ஆபீஸரா?” என கலைச் செல்வி கேட்டாள். குழந்தைகள் சகஜமாக பேச ஆரம்பித்ததும் அவர்களின் குறைகள் மறைய ஆரம்பித்து அவர்களுடன் விளையாட ஆரம்பித்தார்கள். எங்கும் சிரிப்பு, மனது நிறைய சந்தோஷம், அவர்களுக்கென வாங்கி வந்த சாக்லெட்டெல்லாம் கொடுத்து, மதியம் வரை அவர்கள் தோளில் ஏறியதையும் தொடையில் அமர்ந்ததையும் முழுதுமாக அனுபவித்து விட்டு, கேட்டரிங் சர்வீஸில் சொல்லியிருந்த சாப்பாடு வந்ததும் அவர்களுக்கு ஊட்டி விட்டார்கள். கொஞ்சம் சாப்பிட்டார்கள். அவர்களிடம் இருந்து விடைபெற்று வரும் பொழுது கையில் கொடுத்த செக்கை வாங்கிக் கொண்ட அந்த காப்பக கண்காளிப்பாளர் நிர்மலா ஒரு நன்றியுடைய புன்னகையுடன் வழியனுப்பி வைத்தார்.

கடற்கரையில் அமர்ந்திருக்கும் பொழுது மனது மிகவும் லேசானதைப் போல் உணர்ந்தார்கள். எதையோ சாதித்ததைப் போன்ற பெருமிதம் மனதில் நிறைந்திருந்தது.

“மாப்ள, இனிமே ஒவ்வொரு சண்டேயும் அங்க போரம்டா” என பீட்டர் கூற “ஆமாண்டா” என்றான் கதிர்.

அப்புறம் வாரா வாரம் அங்கு போக ஆரம்பித்ததும், கல்யாணம் செய்தால் ஒரு ஊனமுள்ள பெண்ணைத்தான் கல்யாணம் செய்வது என்று முடிவெடுத்ததும், அப்படியே மூன்று வருடங்களுக்கு முன் கண்ணில்லாத வளர்மதியை சுரேஷ் கல்யாணம் செய்ததுயும், வாய் பேச முடியாத மீனாவை கதிர் கல்யாணம் செய்ததும் இதோ இப்போது நடந்தது போல் இருக்கிறது. இன்று பீட்டருக்கு கல்யாணம்,

சுரேஷ்.வளர்மதியை கையைப் பிடித்து அழைத்து வந்து சர்ச்சின் முதல் வரிசையில் அமர வைத்து விட்டு, குழந்தையை அவள் கையில் கொடுத்து விட்டு கதிருக்காக காத்திருந்தான். சிலுவையில் தொங்கிய இயேசு கிறிஸ்துவின் சிலைக்கு கீழே கம்பங்களைப் போல் எழுந்திருந்த மெழுகு வர்த்திகளை வெள்ளை உடையணிந்த பாதிரி ஒருவர் வந்து கொளுத்தி வைத்து விட்டு, வந்திருக்கும் கூட்டத்தை ஒரு பார்வை பார்த்து விட்டு மறைந்து போனார்.

பீட்டர் நீல கலர் கோட் அணிந்து மகிழ்ச்சியில் சிரித்துக் கொண்டிருந்தான். பாடகர் குழுவினர் வந்து இசைக் கருவிகளை தட்டி சரி பார்க்க, இனி திருமணம் ஆரம்பிக்கிறது என்பது தெரிந்தும், கதிர் வராததால் சுரேஷ் பொறுமையிழந்து வாசலை பார்த்த படியே இருந்தான்.

“பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே உங்களுக்கு சந்தோஷமும் சமாதானமும் உண்டாவதாக. ஆமென்” என்ற குரலை கேட்டு முன்புறம் திரும்பினான். திருமணம் ஆரம்பித்திருந்தது, இன்னமும் இந்த கதிரையும் காணவில்லை, கல்யாண பெண்ணையும் காணவில்லை. கல்யாண பெண் எப்படி இருக்காங்கடா என்று போனில் கேட்டதுக்கு, “நீங்களே வந்து பார்த்துக்குங்க, அது வரைக்கும் சஸ்பென்ஸ்” என்று பீட்டர் போனில் சொல்லியிருந்தான்.

“நாமெல்லாரும் எழுந்திருந்து நமது கையிலிருக்கும் பாட்டுத்தாளில் உள்ள முதல் பாடலான ஏதேனில் ஆதி மணம் உண்டான நாளிலே எனற பாடலை பாடுவோம், அது சமயம் மண மகள் நம்மத்தியிலே வருவார்” என பாதிரி சொல்ல, மொத்த கூட்டமும் எழுந்து நிற்க இசைக்குழுவினர் பாட ஆரம்பித்தனர். மணப்பெண் வரும் பரபரப்பு வாசலில் தெரிந்தது. சுரேஷ் முழுவதும் திரும்பி மணப்பெண்ணை கண்கொட்டாமல் பார்த்தான். நல்ல சிவப்பாயில்லவிட்டாலும் எடுப்பான நிறம், இடது கையில் மணப்பெண்ணுக்குரிய மலர்கொத்தை பிடித்திருந்தாள். வலக்கையில் சுற்றி மடக்கிய கைக்குட்டை, பியூட்டி பார்லரில் அலங்கரிக்கப்பட்ட முகம், வசீகரிக்கும் கண்கள் என்று சொல்ல முடியாது, ஆனால் பழுதில்லாத கண்கள், இரண்டு கால்களும் சரியாக இருக்க நெற்றியில் இருந்து வழிந்தோடிய மெல்லிய வெள்ளை வலைத்துணி பின்னால் புரள, ரோஸ்கலர் பட்டுப் புடவையில் கம்பீரமாக வந்து கொண்டிருந்தாள் மணப்பெண். சுரேஷுக்குள் ஒரு சின்ன ஏமாற்றமும் குழப்பமும் வந்து வந்து போனது. பீட்டர் மாறி விட்டனோ, அல்லது கதிரைப்போல் வாய் பேசாத…..

“ஜெமிமா ராணியாகிய நீ, உன் அருகிலிருக்கும் சார்லஸ் பீட்டரை உன் வாழ்கைத் துணையாக ஏற்றுக் கொண்டு, இன்பத்திலும், துன்பத்திலும், வாழ்விலும், தாழ்விலும், மரணம் உங்களை பிரிக்கும் வரைக்கும் இவருக்கு மனைவியாயிருக்க, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் முன்னிலையிலும், இங்கு கூடியிருக்கும் அனைவரின் முன்னிலையிலும் வாக்கு கொடுக்கிறாயா?” என்று பாதிரியார் கேட்டதற்கு “வாக்குக் கொடுக்கிறேன்” என்று கணீரென பதில் சொன்ன ஜெமிமாவின் குரலை கேட்டதும் சே இப்படி மாறிப் போயிட்டானே, பேசாம எழுந்து போய்விடலாமா என சுரேஷ் கொதித்துக் கொண்டிருந்தான்.

தோளில் யாரோ தட்டவே, திரும்பினால் கதிர். “சாரிடா, டிராஃபிக்ல மாட்டிட்டோம்” என்று முன்னால் நடக்கும் திருமணத்தை பார்த்துக் கொண்டே சிரித்தான். அவங்க எங்கடா என கிசுகிசுப்பாய் கேட்க, அதோ என கண்ணாலேயே காண்பித்தான். சிநேகமாய் மீனா கைகளை குவித்து வாய் நிறைய புன்னகையுடன் வணக்கம் சொன்னாள். பதிலுக்கு வணக்கம் சொல்லும்போதுதான் கவனித்தான், என்னதான் பட்டு புடவையின் முந்தானையை இழுத்து தோள் வழியே போர்த்த முயற்சித்தாலும், மேடிட்டிருந்த வயிறு விஷேசம் என்று சொன்னது. அவன் பார்வை போன இடத்தை பார்த்த கதிர் சிரிக்க, விஷேசமா என புருவத்தை குவித்து கண்களாலேயே கேட்க, வெட்கத்துடன் கதிர் ஆமாம் என தலையசைத்தான். அவனை தோளோடு தோள் சேர்த்து அணைத்துக் கொண்டு முன்னால் பார்க்க, மணமக்கள் கையெழுத்திட்டுக் கொண்டிருந்தார்கள். மீனா வந்து, சுரேஷின் தோளை தட்டி, குழந்தை எங்கே என சைகையில் கேட்க, வளர்மதி அமர்ந்திருந்த இடத்தை கையால் காட்டினான். மீனா எழுந்து போய் அவள் அருகில் அமர்ந்து குழந்தையை தூக்க முயல, கைகளை தட்டி விட்டு குழந்தையை இறுக பற்றினாள் வளர்மதி. சுரேஷ் ஓடிவந்து மீனா என காதில் சொல்லவும், சிரித்துக் கொண்டே குழந்தையை நீட்டினாள். அவங்க விஷேசமா இருக்காங்க என்று காதில் சொன்னதும் முகம் முழுவதும் சந்தோஷத்துடன் மீனாவின் பக்கம் திரும்பி தடவி தடவி கரங்களை தேடி பற்றினாள்.

“தேவன் இணைத்த இவர்களை எந்த மனிதனும் பிரிக்காதிருப்பானாக, ஆமென்” என கடைசியாக பாதிரியார் ஆசீர்வதித்ததும், மணமக்கள் வெளியே வந்ததும், புல்வெளியில் இட்டிருந்த மேடையில் வரவேற்பு வைபவம் ஆரம்பமானது. எல்லோரும் சிரித்துக் கொண்டே வீடியோவுக்கு போஸ் கொடுத்து விட்டு போய் மிச்சம் ஒரு சிலரே இருந்த நேரத்தில், கடைசியாக பீட்டர் ஜெமிமாவை அழைத்துக் கொண்டு இவர்கள் இருவரிடமும் வந்தான். நண்பர்கள் இருவருக்கும் புது மனைவியை அறிமுகப் படுத்திவிட்டு அவர்களின் மனைவிகளையும் அறிமுகப் படுத்தினான். இருவர் முகத்திலும் இருந்த வெறுப்பை கண்டு கொள்ளாதவனாக, மீனாவிடத்தில் போய் அவளது வயிறை காட்டி, சிரித்துக் கொண்டே கை குலுக்கினான். வெட்கத்துடன் மீனாவும் கைகுலுக்க, பையனா, பொண்ணா என சைகையில் கேட்டு கலாய்த்தான்.

பிறகு நண்பர்கள் இருவரையும் பார்த்து புன்னகைத்து கொஞ்சம் தள்ளி அழைத்து வந்து, “தெரியும் நீங்க ரெண்டு பேரும் என்ன நினைக்கறீங்கன்னு தெரியும், ஒரு குறையும் இல்லாத ஒரு பொண்ணா ஜெமிமா இருக்காளேன்னு பாக்கறீங்களா, நான் நம்ம மூணு பேரும் எடுத்துகிட்ட உறுதி மொழிய மீறிட்டேன்னு நினைக்கறீங்களா”, ஒரு புன்னகை முகத்தில் தவழ சொன்னான் “வளர்மதினால பார்க்க முடியாது, மீனானால பேசவோ கேட்கவோ முடியாது, ஜெமிமானால எல்லாம் முடியும், ஆனா ...................”
பீட்டர் சொல்லச் சொல்ல நண்பர்கள் இருவரும் அவனை கட்டி அணைப்பதைப் பார்த்து ஜெமிமா தலைகுனிய, மீனா புரியாமல் பார்த்தாள். வளர்மதி கையிலிருந்த குழந்தை சிரித்தது.